Books / மஹா புராணங்கள்


கூர்ம புராணம்

(பகுதி-1)


1. தோற்றுவாய்: பதினென் புராணங்களில் கூர்ம புராணமும் ஒன்று. 17,000 ஸ்லோகங்கள் கொண்டது. இது பகவான் விஷ்ணு அமிர்த மதனத்தின்போது மந்தரமலை கடலில் அமிழ்ந்து போகாமல் நிலையாக நிறுத்த எடுத்த ஆமை வடிவம் பற்றிய வரலாறு. இது ஒரு சராசரி அளவுள்ள புராணம். மூல கூர்ம புராணத்தில் பிரம்மி சம்ஹிதை, பாகவதி சம்ஹிதை, கவுரி சம்ஹிதை, வைஷ்ணவி சம்ஹிதை என்று நான்கு பெரும் பிரிவுகள் இருந்தன. பிரம்மி சம்ஹிதை என்ற பிரிவு மட்டுமே கிடைத்துள்ளது. இதை வைத்தே இதற்குக் கூர்ம புராணம் என்ற பெயர் ஏற்பட்டது. பிரம்மி சம்ஹிதை முதல் பாகம் பூர்வபாகம் என்றும், கூடுதல் பகுதி உபரி பாகம் என்றும் கூறப்படுகிறது. முன்னதில் 52 அத்தியாயங்களும், பின்னதில் 44 அத்தியாயங்களும் உள்ளன.

புராண இலக்கணங்களாகக் கூறப்பட்டுள்ள ஐந்தும் இதில் கூறப்பட்டுள்ளதால் இது மகாபுராணம் எனப்படுகிறது. கூர்ம புராணத்தின் ஒரு பகுதியாக ஈச்வர கீதை உள்ளது. இது யோகத்தைப் பற்றி விவரிக்கிறது. கூர்ம புராணம் ஒரு தாமசிக புராணம் ஆகும். பகவான் விஷ்ணு கூர்ம (அ) ஆமை வடிவில் இதை உரைத்ததால் இது கூர்ம புராணம் எனப்படுகிறது. இதனை இந்திரத்ம்யுனனுக்குக் கூறினார். பதினெட்டுப் புராணங்களின் பட்டியலில் சிவபுராணம் உண்டு என்பர். வேறு சிலர் சிவ புராணத்துக்குப் பதிலாக வாயுபுராணத்தைச் சேர்த்து கூறுவர். சிலர் சிவபுராணம், வாயுபுராணம் இரண்டையும் சேர்த்து பட்டியிலில் 19 புராணப் பெயர்களைக் கூறுவதும் வழக்கத்தில் உள்ளது.

2. இந்திரத்யும்மன்

முன்னர் ஸ்ரீ கல்பத்தில் இந்திரத்யும்மன் என்றொரு பிராமணன் இருந்தான். அவன் முற்பிறவியில் ஓர் அரசன். அவன் விஷ்ணுவைப் பூசித்து அவர் மூலம் கூர்ம புராணத்தைக் கேட்டான். அதன் பலனாக இந்த ஜன்மத்தில் அந்தணனாகப் பிறந்தான். அவன் சதா சர்வகாலமும் மஹா விஷ்ணுவையே தியானித்து வந்ததால் மஹாலக்ஷ்மி அவன் எதிரே பிரத்தியட்சமானாள். அவன் ஸ்ரீதேவியைப் பார்த்து அவள் யார்? என்று கேட்க, மகாலக்ஷ்மி நான் விஷ்ணு பத்தினி, விஷ்ணுமாயை என்றும், நான் வேறு; பகவான் வேறல்ல. விஷ்ணு, பிரம்மா, சிவபெருமான்களுடைய ஆன்மா. அவரைப் பூசித்தால் மோக்ஷம் கிட்டும். நீயும் அவ்வாறே செய் என்று கூறி மறைந்து விட்டாள். அந்தணன் இந்திரத்யும்மன் ஸ்ரீநாதனைக் குறித்துப் பூசை செய்ய விஷ்ணு காட்சி அளிக்க அவரை வணங்கி நிற்க, அவனை இருகரங்களால் தொட, அந்தணன் பிரம்ம தத்துவம் அறியலானான். உடனே அந்தப் பிராமணர், தான் என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுமாறு கூற, பகவான் சிருஷ்டிக்கெல்லாம் மூல காரணம் நான் ஒருவனே. இந்தப் பரம ஞானத்துடன் காரியங்களைச் செய்வாயாக என்று சிருஷ்டி முறை அனைத்தையும் போதித்தார். அன்று முதல் பிராம்மணன் சர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்று அனைத்திலும் பரமாத்மாவைக் கண்டு ஆனந்த பரவசமானான்.

ஒருநாள் அந்தப் பிராமணன் சூரியன் கட்டளைப்படி பிரம்மலோகம் சென்று பார்க்க நினைக்க அவன் முன் ஒரு விமானம் வந்து நின்றது. அதில் ஏறிச் செல்லுகையில் தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் அவ்விமானத்தின் பின் கூட்டம், கூட்டமாகச் சென்றனர். அவர்கள் முன்னே ஆயிரம் சூரியன் ஒளியைக் கண்டனர். அதில் பிரம்மாவைக் கண்டனர். இந்திரத்யும்மன் முன்னால் சென்று பிரம்மாவின் கால்களில் வீழ்ந்து வணங்கினான். அவனைப் பிரம்மா தூக்கி நிறுத்தி ஆலிங்கனம் செய்து கொண்டார். அப்போது அவன் உடலிலிருந்து பேரொளி ஒன்று தோன்றி சூர்ய மண்டலத்தில் பிரவேசித்தது. எந்த புண்ணியாத்துமா பிரம்ம ஞானியாகி உத்தராயணத்தில் மரணம் அடைவானோ, அவன் தேவதைக்குச் சமமான மகிமை பெற்றுச் சூரிய ஒளியுடன் கலந்துவிடுவான் என்கிறது வேதம். அதுவே ஜன்ம சாபல்யம் அல்லவா!

3. பாற்கடலைக் கடைய ஆயத்தம்

பிரம்மா சிருஷ்டியை ஆரம்பித்த பிறகு தேவேந்திரன் ஒருநாள் கொலுவில் வீற்றிருக்க தேவர்கள், கந்தர்வர்கள், மும்மூர்த்திகள், கிம்புருடர்கள் நடனமாடி, அப்சரஸுகளின் ஆடல் பாடல் நடைபெற்றது. சிவதாண்டமும் கூடியது. அவ்வமயம் குபேரன் எழுந்து, எனக்கு நவநிதிகள், ரத்தினங்கள் யாவும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்திரன் பதவி ஏற்றிட அவை யாவும் செலவழிந்து விட்டன. மகேச்வரர் இந்திராதி தேவர்களுக்கும், சூரியன், சந்திரன் ஆகியோருக்கும் என்னிடமிருந்து நிதியை எல்லாம் எடுத்துச் செலவழித்தார் என்று கூறினான். அப்போது விஷ்ணு குபேரனின் கூற்றை ஆமோதித்து, இனி பாற்கடலைக் கடைந்தால் அகண்ட ரத்தினங்களும், மற்றும் அபூர்வ பொருள்களும் கிடைக்கும். எனவே அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள் என்று கூறினார். உடனே அனைவரும் பாற்கடல் உள்ள இடத்தில் ஒன்று கூடினர். அரக்கர் கூட்டத்தையும் அனுப்பி வைக்குமாறு பாதாள லோக பலிச்சக்கரவர்த்திக்குச் செய்தி அனுப்பினார். அப்போது அசரீரி கூறியவாறு மந்தர மலைக்கெதிரில் விசித்திர நிறங்களுடைய ஆமை உள்ளது. அதனைக் கொண்டுவந்து கடலில் விட்டனர். உடனே அது மிகப்பெரிய உருவெடுத்து மந்திர மலையைச் சுற்றிக் கொள்ளுமாறு விஷ்ணு கூற, அது தான் தூள் தூளாகி விடுவேன் என அஞ்சிக் கூறிட, பகவான் உலகையே தாங்கும் உனக்கு இது ஒரு பொருட்டல்ல என்று கூறினார். உனக்கோர் ஆபத்துமின்றி நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இவ்வாறு பாற்கடல் கடைவதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற, வாசுகி மந்திர மலையைச் சுற்றிக் கொள்ள அதன் தலைபக்கம் ராக்ஷசர்களும், வால்பக்கம் தேவர்களும் இருந்து பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர்.

4. பாற்கடலில் தோன்றியவை

தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் விண்ணிலிருந்து பாற்கடலைக் கடைவதைக் காணலுற்றனர். இடையில் கடைவதில் ஈடுபட்டவர்கள் களைப்புற்றனர். அவர்களுக்கு இயலாமை ஏற்பட்டது. எல்லோரும் தேவையான பலம் தந்து இந்தக் கடைவதை வெற்றிகரமாக்குமாறு ஸ்ரீஹரியை வேண்டினர். அப்போது மகாவிஷ்ணு, தேவர்களே, தானவர்களே, இதற்குப் போய் அலுத்துக் கொள்ளலாமா? இது மிக அற்பப்பணி. சமுத்திரம் உள்ளது; மத்து உள்ளது; கயிறு உள்ளது; நானிருக்கிறேன். மேலும் முயற்சி செய்யுங்கள் என்றார். அவர்கள் மறுபடியும் புது உற்சாகம், பலம் கொண்டு கடைய ஆரம்பித்தனர். அப்போது மலை பலவிதமாக அசைய ஆரம்பித்தது. அப்போது மகாவிஷ்ணு மலையைக் காலால் அழுத்தினார். பின்னர் முழுமனதுடன், முழுமூச்சாய் மதனம் நடைபெற்றது. சிலநேரம் வரை ஒன்றுமே பலன் கிடைக்காததால் பிரம்மா ஜாம்பவானை ஓஷதிகளைக் கடலில் சேர்க்குமாறு கூறினார். பிறகு கடலிலிருந்து ஒரு வெள்ளை ரசம் வெளிவர அதனை பிரம்மா ஒரு தங்கக் கலசத்தில் போட்டு வைத்துக் கொண்டார்.

மேலும் கடைந்திட அதிலிருந்து ஐராவதம் என்னும் யானை தோன்றியது. பிறகு மதுரசம் தோன்றியது. அதன் நாற்றம் பொறுக்க முடியாமல் அதனை வெறுத்தனர். அடுத்து சந்திரன் தோன்றினான். உடனே மகாலக்ஷ்மி பிறந்தாள். அவளுக்குப் பின்னால் ரம்பை, மேனகை, திலோத்தமை, கிருதாசி, ஸகேசி, மஞ்சுகோஷ், சித்திரலேகை முதலிய தேவலோக நடன மாதர்கள் தோன்றினர். பிறகு நிதிகள் தோன்றின. தினமும் ரத்தினங்கள் சிந்தும் உடலுள்ள இரண்டு திவ்விய புருஷர்கள் வெளிப்பட்டனர். பிரம்மா அவர்களிருவரையும் லக்ஷ்மி சந்ததியில் இருக்கச் செய்தார். அவர்கள் குபேரனுக்கு நவநிதிகள் முழுவதும் கிடைக்கச் செய்தனர். பின்னர் உச்சைச்சிரவம் என்னும் வெண்குதிரை தோன்றியது. அதன் பின் ஒரு தாமரை மொட்டு குடைபோல் தோன்றியது. அதிலிருந்து ரத்தினங்கள் கொட்ட ஆரம்பித்தன. அது தான் பிரம்ம தண்டலம். அடுத்து பிரம்மாவுக்கேற்ற கமண்டலம் வெளிப்பட்டது. பின்னர் கல்பதரு, காமதேனு, சூரியமணி, சமந்தகமணி, கவுஸ்துபமணி, தேவதத்த சங்கு, புஷ்பகவிமானம், நந்தி கோஷ ரதம் ஆகியவை தோன்றின.

5. ஆலகால விஷமும், நீலகண்டனும்

வெளிப்பட்ட பொருள்கள் மீது ஒவ்வொருவரும் உரிமை கொண்டாட வாதம் செய்யலாயினர். அப்போது சிவபெருமான் இவற்றை எல்லாம் ஓரிடத்தில் பத்திரப்படுத்தி மேலும் கடையுங்கள் என்று கூறினார். கடைசியில் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்றார். இதுகேட்ட அனைவரும் செயல் வீரர்களாகி வேகவேகமாகக் கடைய ஆரம்பித்தனர். அப்போது பயங்கரமான, தாளமுடியாத, அதிக வெப்பம் பரவிற்று. அதிலிருந்து விண்ணை முட்டுமளவு சுவாலை எழும்பியது. எவராலும் அதைச் சமாளிக்க இயலவில்லை. அவ்வாறு ஆலகால விஷம் தோன்ற அதன் கொடுமையைத் தவிர்க்கும் வழி பற்றி யோசிக்கலாயினர். இந்த விஷத்தைச் சமாளிப்பது எப்படி? மதனத்தை நிறுத்தி விடலாமா? அப்போது அவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. எங்களால் சகிக்க முடியவில்லை என்றனர். தேவாசுரர்களின் தீன நிலை கண்டு மகாவிஷ்ணு தயை கொண்டு பெருமழை பொழியச் செய்து வெப்பத்தைத் தணித்தார். விஷ்ணு வெப்பத்தைத் தாங்கி நிற்க அவர் உடல் நீலநிறம் ஆகியது. இனி என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் பிரம்மனிடம் சென்று வேண்ட, அவரும் அவர்களுடன் திருமாலிருப்பிடம் சேர்ந்தார்கள்.

விஷ்ணு அவர்களிடம் இப்போது அனைவரையும் காப்பாற்றக் கூடியவர் சிவபெருமானே என்று கூறி அவர்களைச் சிவனிடம் அனுப்பிவைத்தார். அனைவரும் கைலாயம் அடைந்து உமாமகேச்வரர்களிடம் வந்துள்ள ஆபத்தைப் பற்றி, அதாவது ஆலகால விஷத்தைப் பற்றிக் கூறித் தங்களைக் காத்தருளுமாறு வேண்டி துதி செய்தனர். என் பக்தர்களுக்கு அபாயமென்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா! எவ்வளவு கஷ்டமானாலும், ஆபத்து ஏற்படுவதானாலும் சரி என்று கூறி ஆலகால விஷத்தை ஏந்தி உட்கொண்டார். அவ்வாறு உட்கொள்ளும் முன் பார்வதியிடம் கூற அவள் பரமன் உட்கொள்வது விஷமல்ல, அமுதமாகும் என்று கூறினாள். அருந்திய ஆலகால விஷத்தை வயிற்றில் போக வொட்டாமல் நெஞ்சிலேயே நிறுத்த அது அவர் கழுத்தை நீலமாக்கி விட்டது. அவரும் அதனால் நீலகண்டன் எனப்பெயர் பெற்றார். எனினும் சிவனார் உடல் முழுவதும் பயங்கர வெப்பம் வீசிட பிரம்மதேவன் சந்திரனைச் சிவனார் தலையில் நின்று அவன் அமுத கிரணங்களால் குளிரச் செய்யுமாறு கூறினார்.

மேலும் பிரம்மா கங்கையைச் சிவனார் தலையில் இருந்து உனது பிரவாகத்தால் நனைத்துக் கொண்டிரு. உனது அபிஷேகத்தால் பரமனுக்குச் சாந்தி ஏற்படுத்து என்று கூறினார். இதனால் சிவபெருமானுக்குச் சந்திரசூடன், சந்திரசேகரன், கங்காதரன், சந்திரகலாதரன் என்ற பெயர்கள் ஏற்பட்டன. இவ்வாறு பரமசிவன் ஆலகால விஷத்தை உட்கொண்டு லோக÷க்ஷமார்த்தத்திற்கு உதவினார். இந்த நீலகண்டன் வரலாற்றினைச் சொல்வோர், கேட்போர், படிப்போர் சிவசாயுஜ்ய பதவி பெறுவர் என்று சூதமுனிவர் கூறி முடித்தார். இனி பாற்கடலில் தோன்றிய பொருள்களைப் பங்கு போட்டுக் கொள்வதில் அனைவரும் கவனம் செலுத்தினர்.

6. பாற்கடலில் தோன்றியவை பங்கீடு

கைலாயத்தைச் சுற்றிலும் ஒரு ரம்மியமான ருத்திரவனம் எனப்பட்ட புஷ்பவனம் இருந்தது. பார்வதி, பரமேச்வரர் அதில் உலாவி வந்து சுகம் அனுபவிப்பது வழக்கம். ஒருநாள் சிவபெருமான் அங்கு ஒரு கரடியைக் கண்டு தானும் ஓர் ஆண் கரடியாகி, பார்வதி பெண் கரடியாக இருவரும் ரதி, மன்மத சுகம் அனுபவித்தனர். அவர்களுக்கு கரடி முகம் கூடிய மனித உடல் உடைய ஓர் உருவம் தோன்றியது. அந்தக் கரடி உருவத்தைப் பார்த்து பரமன் நீ சிவாம்சத்துடன் பிறந்தாய். நீ சர்வ சாஸ்திரப் பண்டிதனாய் அச்சமென்பதே அறியாமல் விளங்குவாய் என்று கூறி ஆசிர்வதித்து வரங்கள் அளித்தார். அவனே ஜாம்பவந்தன். அவனைக் கொண்டே சமுத்திரத்தில் ஓஷதிகள் சேர்க்கப்பட்டு அமிர்தம் கடையப்பட்டது. பின்னர் அசுரர்கள் கலகம் செய்ய பொருள்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. ஸ்ரீ ஹரி கூர்ம வடிவை மாற்றிக் கொண்டார்.

பிரம்மா ஸ்ரீமகாலக்ஷ்மியிடம் ரத்தின மாலையைக் கொடுத்து அவளுக்கு இஷ்டமானவர் கழுத்தில் போடுமாறு கூற, அவள் மகாவிஷ்ணுவின் கழுத்தில் அம்மாலையைச் சூடி அவனருகில் சென்று சேர்ந்தாள். இந்திரன் ஐராவதமும், அப்சரசுகளும், ரத்னகுடையும் பெற்றான். குபேரன் நவநிதிகளைப் பெற்றான். கிடைத்த ஏழு குதிரைகள் சூரியன் தேருக்கு அளிக்கப்பட்டன. சமந்தக மணியையும், குண்டலங்களையும் இந்திரனே பெற்றான். கவுஸ்துபமணியை மஹா விஷ்ணுவுக்கு அளித்தனர். வருணன் புஷ்பக விமானத்தைப் பெற்றான். சிவபெருமான் சங்கை எடுத்துக் கொண்டார். கருடக்கொடி உள்ள தேரை ஸ்ரீஹரிக்குச் சமர்ப்பித்தனர். மகாசக்கரவர்த்திகளுக்குக் கிரீடங்கள், புஜகீர்த்தி, ரத்ன ஹாரங்களைப் பங்கிட்டளித்தனர். பிரம்மா ஒரு மணியை மட்டும் ஏற்று அணிந்தார். அரக்கர்கள் தங்களுக்கு எதுவும் அளிக்காமல் தேவர்களே பங்கிட்டு கொள்வதைக் கண்டு எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லையே என, பிரம்மா உங்களுக்குத்தான் அமிர்தம் இருக்கிறதல்லவா அதைப் பெற்றுச் சிரஞ்சீவிகளாக இருங்கள் என்றார். இவ்வாறு பிரம்மா சொன்னதும் ராக்ஷசர்கள் அமிர்த கலசத்தைக் கொடுக்குமாறு வற்புறுத்தலாயினர். ஆனால், பிரம்மா அமிர்தம் தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் என்று பலருக்கும் சமமாகப் பங்கிட வேண்டும் என்று கூறினார். இவ்வாறு தகராறு முற்றுவதைக் கண்ட பிரம்மாதி தேவர்கள் ஸ்ரீஹரியிடம் சென்று தங்களுக்கு உதவுமாறு வேண்டினர்.

எல்லோரும் கடற்கரையில் கூடி அமிர்தம் பெறக் காத்திருந்தனர். அப்போது அவர்கள் காதில் ஓர் இனிய கானம் வந்து விழுந்தது. கானம் வந்த திசையில் எல்லோரும் வியப்பபுற்று பார்க்க ஓர் அழகு சுந்தரி தங்கள் இருக்குமிடத்திற்கு வருவதைக் கண்டனர். இவ்வாறு மகாவிஷ்ணு ஜகன் மோஹினி வடிவில் வந்து கொண்டிருந்தார். அவள் அழகில் ஈடுபட்டு மெய்மறந்த சிலர் அவள் காலில் வணங்கி வீழ்ந்தனர். அனைவரையும் மோகினி கவர்ந்து இழுத்துத் தன் மாயவலையில் சிக்க வைத்தாள். பின்னர் அவர்கள் முன் உள்ள பிரச்சினை என்ன என்று கேட்க, அவர்கள் அமிர்தப் பங்கீடு பற்றி உரைத்தனர். அப்போது மோகினி தேவர்களைப் பார்த்து நீங்கள் இப்படி அநியாயம் செய்யலாமா? இது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது! என்று தேவர்களை வெறுப்பது போலும், அசுரர்கள் பக்கம் சார்ந்து பேசுவது போலும் நடிக்க, அதை நம்பிய அசுரர்கள் மோகினியிடம் அவளையே அனைவர்க்கும் அமிர்தத்தைப் பங்கிட்டளிக்குமாறு வேண்டினர். தேவர்களும் அதனை ஆமோதித்தனர்.

பிறகு மோகினி பிரம்மனிடமிருந்து அமிர்த கலசத்தையும், சுரா பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டாள். பின்னர் தேவர்களை ஒரு பக்கமும், அசுரர்களை மற்றொரு பக்கமும் வரிசையாக உட்காரச் செய்தாள். பின்னர் அசுரர்களைத் தன் மோகனச் சிரிப்பால் வசப்படுத்திக்கொண்டே அவர்களுக்கு சுராபானத்தையும், தேவர்களுக்கு அமிர்தத்தையும் பங்கிட ஆரம்பித்தாள். மோகினியின் மாயத்தால் அசுரர்களுக்குச் சுராபானத்திற்கும் அமிர்தத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை. ஆனால் அரக்கர்களில் ஒருவன் மட்டும் தனக்கு அமிர்தம் கிடைக்காதென உணர்ந்து தேவர்கள் உருவில் அவர்கள் வரிசையில் அமர்ந்தான். இதை யாரும் கவனிக்கவில்லை. ஆனால், விண்ணிலிருந்து பார்த்து விட்ட சூரியனும், சந்திரனும் இதுபற்றி மகாவிஷ்ணுவிடம் கூற அவர் சக்கராயுதத்தை ஏவி அவன் தலையை வெட்டச் செய்தார். அவன் மரணமடையவில்லை. தலையும், முண்டமும் வெவ்வேறாக ககனவீதியில் உயிருடன் திரிய பின்னர் அவையே ராகு, கேதுக்களாக மாறி நவக்கிரகங்களில் இரண்டாயின. இதனால் கோபம் கொண்ட அசுரர்களைப் பகவான் அடக்கி பாதாளத்திற்கு அனுப்பினார். தேவர்களுக்கு தேவராஜ்ஜியம் கிடைத்தது.

7. கவுதம முனிவர் அனுபவம்

முன்பொரு சமயம் எங்கும் பசி, பட்டினி, உணவின்மை, பஞ்சத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டனர். காட்டில் வாழ்ந்த முனிவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கவுதம முனிவர் என்னும் சக்திவாய்ந்த ரிஷி காட்டில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். அவருடைய ஆசிரமப் பகுதியில் மட்டும் மழை பொய்க்காமல் பெய்து செழிப்பாக இருந்தது. அங்கு பஞ்சம் தலைகாட்டவில்லை. எனவே, மற்ற முனிவர்கள் கவுதம முனிவரை வேண்டிட அவரும் அவர்களுக்கு உண்ண உணவும், உறைவிடமும் தந்து உதவினார். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தன. மழை பெய்து பஞ்சம் பறந்தோடியது. எனவே முனிவர்கள் தங்களுக்கு விடை அளித்து அனுப்புமாறு வேண்டினர். கவுதமன் இன்னும் சில நாட்கள் இருந்து செல்லுமாறு பணித்தார். அவ்வமயம் முனிவர்கள் கவுதமரின் பெருமையைக் கண்டு பொறாமை கொண்டனர். அவர்கள் மாயையால் ஒரு கரிய கன்றுக்குட்டியை உருவாக்கி கவுதமரிடம் அனுப்ப அதை அவர் தொட்டவுடனேயே கீழே விழுந்து உயிர்விட்டது. அதைக் கண்டு முனிவர்கள் கவுதமரிடம் அவர் பசுவைக் கொன்று, மகாபாவி ஆகிவிட்டதால் அவருடைய விருந்தாளியாக இருக்கமுடியாது என்று கூறிச்சென்றனர். பின்னர் கன்று குட்டியின் விவகாரம் மாயை என அறிந்தார். உடனே முனிவர்களைப் பார்த்து அவர்கள் வேத நெறி பிசகியதால் நரகத்தில் உழன்று, பலமுறை பிறந்து, இறந்து அவர்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ளுமாறு சபித்தார்.

அச்சம் கொண்ட முனிவர்கள் அரனையும், அரியையும் துதித்து தங்களுக்கு பாவ விமோசனம் அருள வேண்டினர். வேத நெறியைப் பின்பற்றாதவர்கள் நரகத்தில் உழல வேண்டியதே. வேறு வழியில்லை. எனவே, வேறு சில சாஸ்திரங்களை அவர்கள் பின்பற்ற உண்டாக்கினர். அவர்கள் நரகில் பல காலம் உழன்று, பல பிறவிகள் எடுத்துப் பாவத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதுவே அவர்கள் செய்யக்கூடிய தவம் என்றார். காபாலம், நாகுலம், வாமம், பைரவம், பாஞ்சராத்திரம், பாசுபதம் முதலிய சாஸ்திரங்களை ஹரிகேசவர்கள் தோற்றுவித்தனர். சிவனும் காபாலிகனாக உலகில் திரிய ஆரம்பித்தார். அப்போது பார்வதிதேவி விஷ்ணுவின் உறைவிடத்தில் இருக்க, அவரும் பெண் வடிவில் பார்வதிக்கு உதவியாக இருந்தார்.

8. அந்தகன் என்னும் அரக்கன்

அந்தகன் என்னும் அரக்கன் மந்தர மலையின் மீது ஒருநாள் உலாவிக் கொண்டிருந்தான். அதேசமயம் அங்கு உலாவிக் கொண்டிருந்த பார்வதியைக் கண்டு மோகம் கொண்டான். சிவன் இல்லாததை அறிந்து பார்வதியைக் கைப்பற்ற எண்ணி பார்வதியின் இருப்பிடம் சென்று அங்கு நந்தி காவல் இருப்பதைக் கண்டான். நந்தி வழி மறிக்க இருவருக்கும் சண்டை ஏற்பட அசுரன், அசுரர்படையை நந்தியின் மீது ஏவிட, நந்தி விஷ்ணுவிடம் முறையிட்டார். அவர் பல சக்திகளை உருவாக்க அசுரர்களிடம் அவை போரிட்டன. அந்தகன் தோற்று ஓடினான். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துச் சிவபெருமான் திரும்பி வந்தார். நிகழ்ந்ததனைத்தையும் அறிந்தார். அந்தகன் புதுப்பலத்துடன் சிவகேசவர்களை எதிர்த்துப் போரிட வந்தான். சிவனும், விஷ்ணுவும் இணைந்து போர் செய்தனர். அந்தகனை உன்னால்தான் கொல்ல முடியும். அவனைக் கொன்று விடு என்று சிவனிடம் ஹரி கூறினார். சிவபெருமான் அரக்கனை சூலத்தால் குத்தி எடுத்துத் தாண்டவம் புரிந்தார். சூலத்தின் மகிமையால் அரக்கன் மனத்தூய்மை பெற்று சிவத்துதி செய்ய ஆரம்பித்தான். அதனால் மகிழ்ச்சியுற்ற சிவபெருமான் அந்த அரக்கனைக் கீழே இறக்கி தன்னிடம் ஒரு கணநாயகனாக வைத்துக் கொண்டார். அவன் நந்திக்குத் தோழனானான்.

9. சப்த சாரஸ்வத தீர்த்தம் மங்கணன் கதை

ஒருவன் சப்த சாரஸ்வத தீர்த்தத்தினுள் தவம் செய்வதால் ஞானம் ஏற்பட்டு, தவமும் பலிக்கும். மங்கணன் என்பவன் மஹரிஷிகளிடம் இந்தத் தீர்த்த மகிமையைக் கேட்டறிந்து, அத்தீர்த்தத்தில் நீராடி சிவபக்தனானான். அவன் சிவனைக் குறித்து தவம் செய்யலானான். அவன் மேனி பேரொளி பெற்றது. பக்தி பரவசத்தால் அவன் பரமனைப் போலவே தாண்டவம் ஆட ஆரம்பித்தான். அவன் முன் சிவபெருமான் காட்சியளித்தும் அவன் தாண்டவத்தை நிறுத்தவில்லை. அப்போது பரமசிவனார் ஆயிரம் சிரங்கள், ஆயிரம் கரங்கள் கொண்டு பயங்கரமான விசுவரூபம் கொண்டார். அவர் அருகில் ஒளிமிக்க ஒரு தேவதையும் இருந்தாள். இவ்வடிவில் அவர் செய்த மகாதாண்டவம் கண்ட மங்கணன் சிவபெருமானை வணங்கி ருத்ர அத்தியாயத்தில் துதி செய்தான். அது கேட்டு மகிழ்ந்து சிவனார் விசுவரூபத்தை மாற்றி முன் உருவுடன் தோன்றினார். அருகில் இருந்த தேவதையும் மறைந்து விட்டாள். அப்போது மங்கணன் சிவபெருமானை வணங்கி, விசுவரூபம் ஏன்! அருகிலிருந்த அழகிய தேவதை யார்? என்று கேட்டான். அதற்குப் பரமன் இது பரமேசுவரரின் திவ்யரூபம். நானே அது. என்னருகில் இருந்தது பிரகிருதி ரூபிணி. நானே பிரம்மாவாகி இருபத்தைந்து தத்துவங்களுடன் சிருஷ்டிக்கிறேன். விஷ்ணு வடிவில் அனைத்தையும் போஷிக்கிறேன். கால சொரூபனாய் அழிக்கிறேன். என்னுள் எல்லாம் ஐக்கியமாகி விடுகின்றன. எல்லா ஜீவராசிகளிலும் நானே ஜீவாத்மாவாக விளங்குகிறேன். என்னைக் காட்டிலும் வேறொன்றுமில்லை. இந்தத் தத்துவத்தை அறிந்து பக்தியுடன் என்னை உபாசனை செய்து சாயுச்சிய பதவியை அடைவாயாக என்று கூறி மறைந்தார். மங்கணனும் அவ்வாறே செய்து சாயுச்சிய பதவி பெற்றான்.

10. ஐயத்துவஜன் ஐவரின் ஐயமும் சப்தரிஷிகள் தீர்ப்பும்

கார்த்தவீர்யார்ச்சுனனுக்கு சூரன், சூரசேனன், திருஷ்ணன், கிருஷ்ணன், ஐயத்துவஜன் என்று ஐந்து புதல்வர்கள். அவர்களில் ஐயத்துவஜன் சிறுவயது முதலே ஞானசம்பன்னனாக, நாராயண பக்தனாக இருந்தான். ஆனால், மற்ற நால்வரும் முன்னோர்கள் போல் சிவபக்தர்கள். ஒருநாள் மற்ற நால்வரும் இளைய சகோதரனைப் பார்த்து நம் முன்னோர்களும் சிவபக்தர்களாயிருக்க, நீ மாத்திரம் ஏன் விஷ்ணு பக்தனானாய்? என்று வினவ, ஐயத்துவஜன் அரசர்களுக்கெல்லாம் நாராயணனே தெய்வம். அவரே பிரம்மா படைத்த உலகைப் பரிபாலனம் செய்கிறார். சுருதிகள் பகவான் விஷ்ணுவம்சத் தோன்றல்களே மன்னர்கள் என்றான் அவனது சகோதரர்கள் சிவன், சத்துருசங்காரம் செய்திடும் நம்முடைய ஆராதனைக்கு உரியவர். நமக்கு ஞானமும், மோக்ஷமும் அருள்வார் என்றனர். அப்போது ஐயத்துவஜன் ஒருவன் செய்யும் தர்ம ஆசரணமே முக்திகளுக்கு காரணம் பரதர்மங்கள் எவ்வளவு சிறந்தவையானாலும் ஆசரணத்துக்கு உதவாதவை என்று பகவானே சொல்லி இருக்கிறார்.

இவர்கள் வாதத்திற்கு முடிவேற்படாத நிலையில் சப்தரிஷிகளை அணுகி தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு அளிக்குமாறு வேண்டினர். யாருக்கு எந்தத் தெய்வத்தின் மீது இஷ்டம் உள்ளதோ அதுவே அவருடைய பர தெய்வம் ஆவார். ஆனால், காரண, காரியங்களுக்கேற்ப மற்ற தெய்வங்களைப் பூசிப்பது தற்காலிகமான பலனைக் கோரியே. அந்தப் பூஜைகள் நியதங்கள் ஆகா. மன்னர்களுக்கு விஷ்ணுவும், இந்திரனும் தெய்வங்கள். பிராம்மணர்களுக்கு அக்கினி, சூரியன், பிரம்மா, சிவன் ஆகியன தெய்வங்களாகும். தேவர்களுக்கு விஷ்ணுவும், ராக்ஷசர்களுக்கு சிவனும், யக்ஷ, கந்தர்வர்களுக்கு சோமனும் (சந்திரன்) தெய்வங்கள் என்று பிரம்மதேவன் சிருஷ்டியின் துவக்கத்திலேயே உறுதிப்படுத்தி உள்ளார். இவ்வாறு சப்தரிஷிகள் கூறியதைக் கேட்டு சகோதரர்கள் ஐவரும் தம் இடம் சேர்ந்து அவரவர் இஷ்ட தெய்வத்தைப் பூசித்து வந்தனர்.

ஒருநாள் விதேஹன் என்ற தானவன் அவர்கள் நகரத்தின் மீது போர் தொடுத்தான். கண்டவர்களை எல்லாம் கொன்றான். அனைவரும் அச்சமுறும் வகையில் மகாநாதம் (அ) பேரொலி செய்து கர்ச்சித்தான். சூர சேனாதிகள் ஐவரும் அவனைக் கொல்ல முற்பட்டனர். அவர்கள் தொடுத்த பாணங்கள், விடுத்த ஆயுதங்கள் எதுவும் அவனிடம் பலிக்கவில்லை. ஐயத்துவஜன் தவிர மற்றவர்கள் ஓடி விட்டனர். ஐயத்துவஜன் தன் இஷ்டதெய்வமான ஸ்ரீவிஷ்ணுவைத் தியானித்தான். அப்போது பகவான் அவன் முன் தோன்றி தன் கையிலிருந்த சக்கராயுதத்தை அவனுக்கு அளித்தார். உடனே ஐயத்துவஜன் ஸ்ரீஹரியைத் தியானித்து அந்தச் சக்கரத்தைச் செலுத்த அது விதேஹன் தலையை வெட்டி வீழ்த்தியது. ஐயத்துவஜனின் சகோதரர்கள் அவனைப் புகழ்ந்தனர். விசுவாமித்திரர் வந்து அவனைப் பாராட்டிச் சென்றார். தமையன் நால்வரும் ருத்திரயாகம் செய்ய, அதனை வசிஷ்டாதி முனிவர்கள் நடத்தி வைத்தனர். ஐயத்துவஜன் விஷ்ணுயாகம் செய்ய அதற்கு விசுவாமித்திரர் வந்திருந்து சாங்கோ பாங்கமாய் நிர்வகித்து அவனைக் கிருதார்த்தன் ஆக்கி அருளினார்.


© Om Namasivaya. All Rights Reserved.