Books / பத்துப்பாட்டு நூல்கள்


குறிஞ்சிப் பாட்டு


அன்னாய் வாழிவேண் டன்னை யொண்ணுத
லொலிமென் கூந்தலென் றோழி மேனி
விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோ
யகலு ளாங்க ணறியுநர் வினாயும்
பரவியுந் தொழுதும் விரவுமலர் தூயும்  5

வேறுபல் லுருவிற் கடவுட் பேணி
நறையும் விரயு மோச்சியு மலவுற்
றெய்யா மையலை நீயும் வருந்துதி
நற்கவின் தொலையவு நறுந்தோ ணெகிழவும்
புட்பிற ரறியவும் புலம்புவந் தலைப்பவு  10

முட்கரந் துறையு முய்யா வரும்படர்
செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின்  
முத்தினு மணியினும் பொன்னினு மத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடிற் புணருஞ்
சால்பும் வியப்பு மியல்புங் குன்றின்  15

மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்த
லாசறு காட்சி யையர்க்கு மந்நிலை
யெளிய வென்னார் தொன்மருங் கறிஞர்
மாதரு மடனு மோராங்குத் தணப்ப
நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி  20

யிருவே மாய்ந்த மன்ற லிதுவென
நாமறி வுறாலிற் பழியு முண்டோ
வாற்றின் வாரா ராயினு மாற்ற
வேனையுல கத்து மியைவதா னமக்கென
மானமர் நோக்கங் கலக்கிக் கையற்  25

றானாச் சிறுமைய ளிவளுந் தேம்பு  
மிகன்மீக் கடவு மிருபெரு வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல
விருபே ரச்சமோ டியானு மாற்றலேன்
கொடுப்பினன் குடைமையுங் குடிநிர லுடைமையும் 30

வண்ணமுந் துணையும் பொரீஇ யெண்ணா
தெமியேந் துணிந்த வேமஞ்சா லருவினை
நிகழ்ந்த வண்ண நீநனி யுணரச்
செப்ப லான்றிசிற் சினவா தீமோ  
நெற்கொ ணெடுவெதிர்க் கணந்த யானை  35

முத்தார் மருப்பி னிறங்குகை கடுப்பத்
துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குர
னற்கோட் சிறுதினைப் படுபு ளோப்பி
யெற்பட வருதிய ரென நீ விடுத்தலிற்
கலிகெழு மரமிசைச் சேணோ னிழைத்த  40

புலியஞ் சிதண மேறி யவண
சாரற் சூரற் றகைபெற வலத்த
தழலுந் தட்டையுங் குளிரும் பிறவுங்
கிளிகடி மரபின வூழூழ் வாங்கி
யுரவுக்கதிர் தெறூஉ முருப்பவி ரமயத்து  45

விசும்பாடு பறவை வீழ்பதிப் படர
நிறையிரும் பெளவங் குறைபட முகந்துகொண்
டகலிரு வானத்து வீசுவளி கலாவலின்
முரசதிர்ந் தன்ன வின்குர லேற்றொடு
நிரைசெல னிவப்பிற் கொண்மூ மயங்கி  50

யின்னிசை முரசிற் சுடர்ப்பூட் சேஎ
யொன்னார்க் கேந்திய விலங்கிலை யெஃகின்
மின்மயங்கு கருவிய கன்மிசைப் பொழிந்தென
வண்ண னெடுங்கோட் டிழிதரு தெண்ணீ
ரவிர்துகில் புரையு மவ்வெள் ளருவித்  55

தவிர்வில் வேட்கையேந் தண்டா தாடிப்
பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவுழி
நளிபடு சிலம்பிற் பாயம் பாடிப்
பொன்னெறி மணியிற் சிறுபுறந் தாழ்ந்தவெம்
பின்னிருங் கூந்தல் பிழிவனந் துவர  60

யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித
ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை
யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள  65

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வான்பூங் குடச
மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லிணர்க் குரவம்
பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா  70

விரிமல ராவிரை வேரல் சூரல்
குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி
குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி
செருத்தி யதிரல் பெருந்தண் சண்பகங்  75

கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீணறு நெய்த
றாழை தளவ முட்டாட் டாமரை  80

ஞாழன் மெளவ னறுந்தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங் குரலி
கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்
பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க     85

மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை
யடும்பம ராத்திரி நெடுங்கொடி யவரை
பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந் துவாரம்
தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி  90

நந்தி நறவ நறும்புன் னாகம்
பாரம் பீரம் பைங்குருக் கத்தி
யாரங் காழ்வை கடியிரும் புன்னை
நரந்த நாக நள்ளிரு ணாறி
மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு  95

மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன்
மாலங் குடைய மலிவன மறுகி
வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப்  
புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின்
வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக  100

கிள்ளை யோப்பியுங் கிளையிதழ் பறியாப்
பைவரி யல்குற் கொய்தழை தைஇப்
பல்வே றுருவின் வனப்பமை கோதையெம்
மெல்லிரு முச்சிக் கவின்பெறக் கட்டி
யெரியவி ருருவி னங்குழைச் செயலைத்  105

தாதுபடு தண்ணிழ லிருந்தன மாக  
வெண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த்
தண்ணறுந் தகரங் கமழ மண்ணி
யீரம் புலர விரலுளர்ப் பவிழாக்
காழகி லம்புகை கொளீஇ யாழிசை  110

யணிமிகு வரமிஞி றார்ப்பத் தேங்கலந்து
மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின்
மலையவு நிலத்தவுஞ் சினையவுஞ் சுனையவும்
வண்ண வண்ணத்த மலராய்பு விரைஇய
தண்ணறுத் தொடையல் வெண்போழ்க் கண்ணி  115

நலம்பெறு சென்னி நாமுற மிலைச்சிப்
பைங்காற் பித்தகத் தாயித ழலரி
யத்தொடை யொருகாழ் வளைஇச் செந்தீ
யொண்பூம் பிண்டி யொருகாது செரீஇ
யந்தளிர்க் குவவுமொய்ம் பலைப்பச் சாந்தருந்த  120

மைந்திறை கொண்ட மலர்ந்தேந் தகலத்துத்
தொன்றுபடு நறுத்தார் பூணொடு பொலியச்
செம்பொறிக் கேற்ற வீங்கிறைத் தடக்கையின்
வண்ண வரிவில் லேந்தி யம்புதெரிந்து
நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி  125

யியலணிப் பொலிந்த வீகை வான்கழ
றுயல்வருந் தோறுந் திருந்தடிக் கலாவ  
முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பிற்
பகைபுறங்க் கண்ட பல்வே லிளைஞரி
னுரவுச்சினஞ் செருக்கித் துன்னுதொறும் வெகுளு 130

முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலி
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர
நடுங்குவன மெழுந்து நல்லடி தளர்ந்தியா
மிடும்பைகூர் மனத்தே மருண்டுபுலம் படர  
மாறுபொரு தோட்டிய புகல்வின் வேறுபுலத்  135

தாகாண் விடையி னணிபெற வந்தெ
மலமர லாயிடை வெரூஉத லஞ்சி
மெல்லிய வினிய மேவரக் கிளந்தெ
மைம்பா லாய்கவி னேத்தி யொண்டொடி
யசைமென் சாய லவ்வாங் குந்த  140

மடமதர் மழைக்க ணிளையீ ரிறந்த
கெடுதியு முடையே னென்றென னதனெதிர்
சொல்லே மாதலி னல்லாந்து கலங்கிக்
கெடுதியும் விடீஇ ராயி னெம்மொடு
சொல்லலும் பழியோ மெல்லிய வீரென  145

நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கைகவர் நரம்பி னிம்மென விமிரு
மாதர் வண்டொடு சுரும்புநயந் திறுத்த
தாதவி ழலரித் தாசினை பிளந்து
தாறடு களிற்றின் வீறுபெற வோச்சிக்  150

கல்லென் சுற்றக் கடுங்குர லவித்தெஞ்
சொல்லற் பாணி நின்றன னாக  
விருவி வேய்ந்த குறுங்காற் குரம்பைப்
பிணையேர் நோக்கின் மனையோண் மடுப்பத்
தேம்பிழி தேறன் மாந்தி மகிழ்சிறந்து  155

சேம மடிந்த பொழுதின் வாய்மடுத்
திரும்புன நிழத்தலிற் சிறுமை நோனா
தரவுற ழஞ்சிலை கொளீஇ நோய்மிக்
குரவுச்சின முன்பா லுடற்சினஞ் செருக்கிக்
கணைவிடு புடையூக் கானங் கல்லென  160

மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிரக்
கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக
விரும்பிணர்த் தடக்கை யுருநிலஞ் சேர்த்திச்
சினந்திகழ் கடாஅஞ் செருக்கி மரங்கொல்பு
மையல் வேழ மடங்கலி னெதிர்தர  165

வுய்விட மறியே மாகி யொய்யெனத்
திருத்துகோ லெல்வளை தெழிப்ப நாணுமறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருத்திச்
சூருறு மஞ்ஞையி னடுங்க வார்கோ
லுடுவுறும் பகழி வாங்கிக் கடுவிச  170

யண்ணல் யானை யணிமுகத் தழுத்தலிற்
புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப்
புள்ளி வரிநுதல் சிதைய நில்லா
தயர்ந்துபுறங் கொடுத்த பின்னர் நெடுவே
ளணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத்  175

திணிநிலைக் கடம்பின் றிரளரை வளைஇய
துணையறை மாலையிற் கைபிணி விடேஎ
நுரையுடைக் கலுழி பாய்தலி னுரவுத்திரை
யடுங்கரை வாழையி னடுங்கப் பெருந்தகை
யஞ்சி லோதி யசையல் யாவது   180

மஞ்ச லோம்புநின் னணிநல நுகர்கென
மாசறு சுடர்நுத னீவி நீடுநினைந்
தென்முக நோக்கி நக்கன னந்நிலை
நாணு முட்கு நண்ணுவழி யடைதர
வொய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ  185

யாக மடைய முயங்கலி னவ்வழிப்
பழுமிள குக்க பாறை நெடுஞ்சுனை
முழுமுதற் கொக்கின் றீங்கனி யுதிர்ந்தெனப்
புள்ளெறி பிரசமொ டீண்டிப் பலவி
னெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேற.  190

னீர்செத் தயின்ற தோகை வியலூர்ச்
சாறுகொ ளாங்கண் விழவுக்கள நந்தி
யரிக்கூட் டின்னியங் கறங்க வாடுமகள்
கயிறூர் பாணியிற் றளருஞ் சாரல்
வரையர மகளிரிற் சாஅய் விழைதக  195

விண்பொருஞ் சென்னிக் கிளைஇய காந்தட்
டண்கம ழலரி தாஅய் நன்பல
வம்புவிரி களித்திற் கவின்பெறப் பொலிந்த
குன்றுகெழு நாடனெம் விழைதரு பெருவிற  
லுள்ளத் தன்மை யுள்ளினன் கொண்டு  200

சாறயர்த் தன்ன மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப
மலரத் திறந்த வாயில் பலருணப்
பைந்நிண மொழுகிய நெய்ம்மலி யடிசில்
வசையில் வான்றிணைப் புரையோர் கடும்பொடு  205

விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோ டுண்டலும் புரைவ தென்றாங்
கறம்புணை யாகத் தேற்றிப் பிறங்குமலை
மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழு
தேமுறு வஞ்சினம் வாய்மையிற் றேற்றி  210

யந்தீந் தெண்ணீர் குடித்தலி னெஞ்சமர்ந்
தருவிட ரமைந்த களிறுதரு புணர்ச்சி
வானுரி யுறையுள் வயங்கியோ ரவாவும்
பூமலி சோலை யப்பகல் கழிப்பி
யெல்லை செல்ல வேழூர் பிறைஞ்சிப்  215

பல்கதிர் மண்டிலங் கல்சேர்பு மறைய  
மான்கண மரமுதற் றெவிட்ட வான்கணங்
கன்றுபயிர் குரல மன்னுநிறை புகுதர
வேங்குவயி ரிசைய கொடுவா யன்றி
லோங்கிரும் பெண்ணை யகமட லகவப்  220

பாம்புமணி யுமிழப் பல்வயிற் கோவல
ராம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற
வாம்ப லாயிதழ் கூம்புவிட வளமனைப்
பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி
யந்தி யந்தண ரயரக் கானவர்   225

விண்டோய் பணவை மிசைஞெகிழி பொத்த
வானமாமலை வாய்சூழ்பு கறுப்பக் கானங்
கல்லென் றிரட்டப் புள்ளின மொலிப்பச்
சினைஇய வேந்தன் செல்சமங் கடுப்பத்
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ  230

நேரிறை முன்கை பற்றி நுமர்தர
நாடறி நன்மண மயர்கஞ் சின்னாட்
கலங்க லோம்புமி னிலங்கிழை யீரென
வீர நன்மொழி தீரக் கூறித்
துணைபுண ரேற்றி னெம்மோடு வந்து  235

துஞ்சா முழவின் மூதூர் வாயி
லுண்டுறை நிறுத்தப் பெயர்ந்தன னதற்கொண்
டன்றை யன்ன விருப்போ டென்று
மிரவரன் மாலைய னேவரு தோறுங்
காவலர் கடுகினுங் கதநாய் குரைப்பினு  240

நீதுயி லெழினு நிலவுவெளிப் படினும்
வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும்
பெறாஅன் பெயரனு முனிய லுறாஅ
னிளமையி னிகந்தன்று மிலனே வளமையிற்
றன்னிலை தீர்ந்தன்று மிலனே கொன்னூர்  245

மாய வரவி னியல்புநினைஇத் தேற்றி
நீரெறி மலரிற் சாஅயிதழ் சோரா
வீரிய கலுழுமிவள் பெருமதர் மழைக்க
ணாகத் தரிப்பனி யுறைப்ப நாளும்
வலைப்படு மஞ்சையி னலஞ்செலச் சாஅய்  250

நினைத்தொறுங் கலுழுமா லிவளே கங்கு
லளைச்செறி யுழுவையு மாளியு முளியமும்
புகற்கோட் டாமான் புகல்வியுங் களிரும்
வலியிற் றப்பும் வன்கண் வெஞ்சினத்
துருமுஞ் சூரு மிரைதே ரரவமு   255

மொடுங்கிருங் குட்டத் தருஞ்சுழி வழங்குங்
கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமு
நூழிலு மிழுக்கு மூழடி முட்டமும்
பழுவும் பாந்தளு முளப்படப் பிறவும்
வழுவின் வழாஅ விழுமமவர்  260

குழுமலை விடரக முடையவா லெனவே.  

உரை

திணை : அகத்திணை
கைகோள் : (களவு) புணர்தலும், புணர்தனிமித்தமும்
கூற்று : தோழி கூற்று
கேட்போர் : செவிலி
களன் : மலையும் மலைசார்ந்த இடமும்

1 - அன்னாய் என்பது தொடங்கி 34 - சினவாதீமோ, என்பது வரையில் ஒரு தொடர், இதன்கண்,

தலைவியின் உடன் மெலிவு கண்டாற்றாது அந் நோய்க்குக் காரணங்காணச் செவிலி முயலலும், செவிலியின் துயர்நிலையும், தலைவியின் உடனிலை, உளநிலைகளும், இருவர்க்கு மிடைநின்று வருந்தும் தன்னிலையும், தோழி செவிலிக்குக் கூறி, இவற்றிற் கெல்லாம் தீர்வாகத் தான் வெளியிடப்போகும் மறையினைக் கேட்டு வெகுளற்க எனச் செவிலியை வேண்டி மறை வெளிப்படுத்தற்குத் தோற்றுவாய் செய்கின்றாள் என்க.

1-8 : அன்னாய் .......................... வருந்துதி

பொருள் : அன்னாய் - தாயே, வாழி - நீ வாழ்வாயாக, வேண்டு-யான் கூறுவதனை விரும்பிக்கேள், அன்னை - தானே, ஒள் நுதல் - ஒளிபொருந்திய நெற்றியினையும், ஒலி மெல் கூந்தல் - தழையாநின்ற மெல்லிய கூந்தலையும் உடைய, என் தோழி - என் தோழியினுடைய, மேனி - உடலின்கண் அணிந்துள்ள, விறல்-வெற்றிமிக்க, இழை-ஆடை அணிகலன்களை, நெகிழ்த்த - நழுவச்செய்த, வீவு அரு கடு நோய் - மருந்துகளாற் கெடுத்தற் கரிய கொடிய நோயின் பொருட்டு, அகல் உள் ஆங்கண் - அகன்ற உள்ளிடத்தையுடைய ஊரின்கண்ணுள்ள, அறியுநர்-பிறர் அறியவியலாதவற்றைக் குறியானுணரும் கட்டுவித்தி வேலன் முதலிய அறிவோரை, வினாயும் - என் மகள் உற்ற நோய்க்குக் காரணம் யாதெனக் கேட்டும் அவர் இது தெய்வத்தானிகழ்ந்ததென்றலின், பல்வேறு உருவில் - பலவாகிய ஒன்றனை ஒன்றொவ்வாது வேறுபட்ட வடிவங்களில் எல்லாம் உள்ளுறையும், கடவுள் - இறைவனை, பேணி - போற்றி, பரவியும் - வாயான் வாழ்த்தியும், தொழுதும் - உடலான் வணங்கியும், விரவு மலர் தூவியும் - பன்னிற மலர்களைக் கலந்து சிதறியும், நறையும் - அகில் முதலியவற்றாலாய நறுமணப் புகையினையும், விரையும் -சந்தனமுதலிய மணப்பொருள்களையும், ஓச்சியும் - செலுத்தியும், அலவுற்று - அவற்றான் நோய் தணியாமை கண்டு மனஞ்சுழன்று, எய்யா - அதன் காரணமறியாமல், மையலை - மயக்கமுடையையாய், நீயும் - என் தோழியே யன்றி நீதானும், வருந்துதி - பெரிதும் வருந்தா நின்றனை,

கருத்துரை : தாயே! யான் கூறுவதனைக் கேள். என்தோழியின் இழைநெகிழ்த்த நோயின் பொருட்டு அறிந்தோரை வினவி, அவர் இது தெய்வத்தான் வந்ததென்றலின், இறைவனைப் போற்றி வாழ்த்தியும், வணங்கியும், மலர் சிதறியும், நறை விரைகள் செலுத்தியும் அந்நோய் தணியாமை கண்டு, மனஞ்சுழன்று காரணம் அறியாது மயங்கி நீயும் வருந்தாநின்றனை என்பதாம். இது செவிலியின் நிலை கூறியது.

அகலவுரை : வேறொன்றில் உள்ளம் போக்கியிருந்த செவிலியை முன்னிலையாக்கும் பொருட்டு, அன்னாய்! என விளித்த தோழி அவள் கருத்தைத் தன்பால் திருப்பினமை கண்டு, வாழி என வாழ்த்துவாளாயினள். இவ்வாறு மூத்தோரை வாழ்த்துதல் வணங்குதற் பொருட்டென்க. வேண்டு என்னுஞ் சொல் யான் கூறப்போகும் செய்தி உன்நோய்க்கும், தலைவியின் வருத்தத்திற்கும் கழுவாயாக அமையற்பாலது, அதனை விரும்பிக்கேள் என்னும் பொருளை யாப்புறுத்தி நின்றது. இவ்வாற்றால் தான் கூறப் போவதனைச் செவிலி கேட்கச் சமைந்தமை கண்டு, மீண்டும் அன்னை என அண்மையான் விளித்தாள். இரண்டாவதாக விளித்தது தன் கூற்றிற்குத் தோற்றுவாய் செய்தற் பொருட்டாம். என்னை? உலகியலில் ஒன்றன்பால் மனம் போக்கியிருப்பாரை, மற்றொன்றன்பால் மனஞ் செலுத்துமாறு செய்ய முயலுங்கால், அம் மாற்றுப்பொருளில் அவர் மனம் திருப்புமிடத்து முன்னர்ப் பொதுக்காட்சி எய்துதலும், பின்னர், எம்மை விளித்தார் இவர், இவர் கூறுவதனை யாம் கேட்டல் வேண்டும்; வேண்டா என்னும் சிறப்புக்காட்சி எய்துதலும், அதன் பின்னர் இவர் கூறுவதனை யாம் கேட்குவம்; கேளேம் என முனைப்புறுதலும் முறையே நிகழ்தல் இயற்கையாம். இவை, விரைந்து நிகழ்வன வேனும், இவை நிகழ்தற்குரிய காலம் இடையே வேண்டுமன்றே! அக் காலவிடை யீட்டின்கண், விளித்தவர், தாம் கூறப்போவதனைக் கூறுவாராயின், விளிக்கப்பட்டோர் உள்ளம் சிறப்புக்காட்சியுற்று முனைப்புறாமையால், அக்கூற்றினைக் கூர்ந்து கேட்குமாறில்லை; ஆகலின், விளித்தோர், தம்மால் விளிக்கப்பட்டோர் தம் கூற்றைக் கேட்க முனைப்புற்றுச் சமைந்தமை கண்டே கூறத் தொடங்குவர். அவ்வாறு கூறத்தொடங்குவோர் மீண்டும் விளித்தே தொடங்குதலை உலகியலில் யாண்டுங் காணலாம். மேலும், தாம் கூறப்போகும் செய்தியின் சிறுமை பெருமைகட் கேற்ப விளியும் ஒன்றும், பலவுமாதலும் காணலாம். அவையிடத்தே சொற்பொழிவாற்றுவோர், அவையோரைப் பன்முறை விளித்துத் தொடங்கலும், பல மக்களின் உள்ளமும் தம் கூற்றினைக் கேட்டற்கு முனைப்புறற் பொருட்டேயாம் என்க.

இவ்வாறு உணர்தலை அளவை நூலோர் நிருவிகற்பக்காட்சி என்றும், சவிகற்பக் காட்சி என்றும், தன்வேதனைக் காட்சி என்றும், நுண்ணிதின் வகுத்தோதுப. இவ்வியற்கைக் கேற்பவே, பாடல் சான்ற புலனெறி வழக்கினும் பன்முறை விளித்தலைக் காண்கின்றோம். பல்சான்றீரே ! பல்சான்றீரே என்றும், சான்றவிர் வாழியோ! சான்றவிர் என்றும், வாயிலோயே! வாயிலோயே! என்றும் விளித்தல் காண்க. விறல்-வெற்றி; அஃதாவது வேறொன்றற்கில்லாத சிறப்புடைமை. ஈண்டுத் தலைவியின் ஆடையணிகளின் சிறப்பை உணர்த்தி நின்றது. இதனை, ஆசிரியர் நச்சினார்க்கினியர் வாளா பிரித்து மேனிக்கு அடையாக்குவர். இழைக்கப்படுதலால் இச்சொல் ஆடை அணி இரண்டற்கும் ஆகுபெயராய்ப் பொதுவுற நின்றது. பிரிவாற்றாமையான் மெலிந்தோர்க்கு ஆடை அணி இரண்டுமே நெகிழ்தலுண்மையின், அவ்விரண்டற்கும் பொதுவாய இச்சொல்லைப் பெய்துரைத்தார் சொற்றிறம் வல்ல ஆசிரியர் என்க. வீவருங் கடுநோய் என்றது தலைவன் மார்பினையன்றி, பிறமருந்தானும், நீ கொண்டாடும் வெறியாட்டானும் தீர்தலில்லாத காமநோய் என்றபடி,

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து  (குறள் - 1102)

எனச் சிறப்புடைய தலைமகன் கூற்றாகக் கூறப்படினும் காமநோய் இருவர்க்கும் ஒத்தலின், தலைவியின் நோய்க்குத் தலைவன் மார்பே மருந்தாம் என்பதூஉம் இக்குறளானே கொள்ளப்படும். அல்லதூஉம் மருந்துபிறிதின்மைநற் கறிந்தனை சென்மே (நற்-247), மருந்து பிறி தில்லையவர் மணந்த மார்பே, (குறுந்-18) மருந்திற் றீராது நீதரவந்த நிறையழி துயரம் (நம்பியக. 167.மேற்) எனப் பிறரும் கூறுதல் காண்க.

அறியுநர் என்றது இகழ்ச்சி. என்னை? என் தோழியின் நோய்க்குக் காரணம் தலைவன் மார்பே யாகவும், அதனை அறியாது தெய்வத்தான் வந்த தென்னும் மடவோர் என்றல் தோழியின் கருத்தாகலின் என்க. வேலன் மடவன் அவனினுந் தான் மடவன் ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின் (சிலப். குன்றக்கு-13) என்றஞ்சா தியம்பிய செஞ்சொற் றோழி ஒருத்தியும், நந்தமிழிலக்கிய வுலகிலே உளன் என்க. கட்டினும் கழங்கினும் குறிபார்த்தல் இன்றும் தமிழ்நாட்டில் காணப்படுகின்ற ஒரு பழமையான வழக்கமாம்.

கட்டுவிச்சி கட்டேறி
சீரார் சுளகின் சிலநெல் பிடித்தெறியா
வேரா விதிர்விதிரா மெய்சிலிராக் கைம்மோவா
பேரா யிரமுடையான் என்றாள்  (சிறிய திருமடல்-20-22)

என்னும் திருமங்கையாழ்வார் திருவாக்குக் கட்டுவிச்சியையும், அவள் கட்டேறிக் குறிகூறும் முறையையும் நன்கு நம் மனக்கண்முன் தோற்றுவித்தல் காண்க. பரவுதல்-வாயாற் புகழ்பாடி வாழ்த்துதல். என்னை? பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள என்றது சூத்திரமாகலான் என்க. வேறுபல் உருவிற் கடவுள் என்பது உலகில் சமயங்கள் தோறும், காலங்கள்தோறும், நாடுகள்தோறும், ஒன்றை ஒன்று ஒவ்வாத பலவேறு வடிவங்களினும் பலவேறு முறைகளில் வணங்கப்படினும் அவ் வேறுபட்ட வடிவங்கள்தோறும் தான் ஒன்றேயாய், உள்ளுறையும் ஒரே முழுமுதலாகிய கடவுள் என்றபடி. இனி நானிலத்திற்கும், சேயோன், மாயோன், இந்திரன், வருணன் என வெவ்வேறு வடிவமாக வகுத்து விளம்பினும் அவ்வேறுபட்ட வடிவங்களில் எல்லாம் உள்ளுறையும் ஒரே முழுமுதலாகிய கடவுள் எனினுமாம். இவ்வாறு தமிழ்மக்கள் கொண்ட கடவுட் கொள்கையை,

மணிவிளங்கு திருமார்பின் மாமலராள் வீற்றிருப்பப்
பணிதயங்கு நேமியும் பானிறத்த சுரிசங்கும்
இருசுடர்போல் இருகரத்தில் ஏந்தியமர் மாயோனும்
பங்கயத்தில் உறைவோனும் பாகத்தோர் பசுங்கொடிசேர்
செந்தழற்கண் நுதலோனுந் தேறுங்கால் நீயென்பார்க்கு
அவரவர்தம் உள்ளத்துள் அவ்வுருவாய் அல்லாத
பிறவுருவு நீயென்னிற் பிறவுருவு நீயேயாய்
அளப்பரிய நான்மறையான் உணர்த்துதற் கரியோனே  (தொல்.செய். 146. உரை.மேற்.)

எனவும்,

ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்
கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரின்
எவ்வயி னோயும் நீயே  (பரிபாடல்)

எனவும்,

யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்  (சிவஞான-சித். 115)

என்றும்,

ஆறுசம யங்கடொறும் வேறுவே றாகிவிளை
யாடுமுனை யாவர் அறிவார்  (தாயுமானார்)

என்றும் வரும் ஆன்றோர் மெய்ம்மொழிகளானும் நன்குணர்க. இவ்வாறு சிறந்த கடவுட் கொள்கையைத் தன்னகத்தே குறுகத் தறித்துநின்ற இச்சொற்றொடர்க்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் வேறுபல் உருவிற் கடவுள் என்ற தொடரின்கண் உள்ள பல் என்னும் சொல்லைப் பிரித்து வேறு உருவிற் பல்கடவுள் எனக் கடவுளோ டியைத்துப் பல தெய்வங்கள் என்பாராயினர். அலவுறுதல்-சுழலுதல். எய்யாமை-அறியாமை. இவற்றை முறையே,

அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி
எய்யா மையே அறியா மையே

என்னும் ஒத்துக்களானும் உணர்க. இனி, இவ்வாறு சொற்கிடந்த முறையானே பொருள் காண்டல் இனிதாகவும், எளிதாகவும் இருக்க, ஆசிரியர் நச்சினார்க்கினியர், சொற்களையும், அடிகளையும், வரையறையின்றித் தமக்குவேண்டியவாறே பிரித்தும் இயைத்தும் தாங்கருதிய பொருளையே கூறுவாராய், நூலாசிரியரின் கருத்துப் பயில்வார்க்குப் புலனாகாதபடி மறைத்தொழித்தனர். நூலாசிரியரின் கருத்தை நுண்ணிதின் விளக்குவதே உரையாசிரியரின் கடமையாவதன்றித் தங் கருத்தைப் புகுத்துதல் அன்று. ஒரோவழி நூலாசிரியரின் கருத்தினும், உரையாசிரியர் கருத்து உயர்ந்தனவாயினும், நூலாசிரியரின் கருத்தை மறைத்தலால் வரும் ஏதமும் எளிதன்று. ஆதலின் நச்சினார்க்கினியர் போலாது, நூலாசிரியரின் சொற்கிடந்த முறையானே அவ்வாசிரியரின் கருத்தினைக் கண்டுணர்த்த முயலுதலே இவ்வுரையின் நோக்கம் என்க. அன்னாய்! வாழி! என் தோழி கடுநோய் வினாயும், பேணியும், தூயும், தொழுதும், ஓச்சியும், எய்யா மையலை, வருந்துதி, என வினை முடிவு செய்க. இனி, தோழி தலைவியின் நோய்க்குற்ற காரணத்தைத் தான் அறிந்தபடி இதுவெனக் கூறத் தொடங்குகின்றாள்.

9-12 : நற்கவின் ........................ கடவலின்

பொருள் : நல்கவின் றொலையவும் - என் தோழியின் நன்மை மிக்க அழகு கெடவும், நறுதோள் நெகிழவும் - நறிய தோள்கள் மெலியாநிற்பவும், புள் பிறர் அறியவும் - வளை நெகிழ்தலை ஏதிலார் அறியாநிற்பவும், புலம்பு வந்து அலைப்பவும் - தனிமைத் தன்மை அடிக்கடி அவளுளத்தே தோன்றி வருத்தாநிற்பவும், உள் கரந்து உறையும் - அவள் நெஞ்சினுள்ளே இவையிற்றிற்கெல்லாம் காரணமாய் மறைந்திருக்கின்ற, உய்யா அருபடர் - உயிர் கொண்டு பிழைத்தற்கரிய நோயை, செப்பல் வன்மையில் - எனது சொல்வன்மையானே, செறித்து - அவள் நெஞ்சினை நெருக்கி, யான் கடவலின் - யான் ஒரு சூழ்ச்சியான் அவளே கூறுமாறு ஏவுதலாலே;

கருத்துரை : என் தோழியின் அழகு கெடவும், தோள் நெகிழவும், அணிநெகிழ்தலை அயலார் அறியவும் காரணமாய் அவள் நெஞ்சினுள்ளே மறைந்துறையும் நோயை, அவளே கூறும்படி யான் ஒரு சூழ்ச்சியான் நெருக்கி ஏவுதலாலே என்பதாம்.

அகலவுரை : இதன்கண், புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல் என்னும் இரண்டு மெய்ப்பாடுகள் தலைவி எய்தினமை கூறினாள். என்னை?

தானுற்ற நோயைத் தாய் முதலிய தமர் அறிவுறாவண்ணம் மறைத்தொழுகும் பொருட்டுத் தலைவி மாற்றமின்றித் தான் பண்டுபோல் இருப்பதாக அவருணருமாறு பூவானும், சாந்தானும், பூணானும், துகிலானும் புறத்தே (பொய்க்) கோலம் புனைவாளன்றோ! அங்ஙனம் புனைந்த கோலமும்,

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை யிட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று  (நாலடி - 393)

என்றாங்குத் துணையொடு கழியப் பெறாமையால், துணையில்லேற்கு இக்கோலம் என்செய்வதென்று எண்ணி ஏங்கியவழி, அகத்தே சிதைவுண்டாய்ப் புற்கென்று புறத்தேயும் நலஞ்சிதைந்து வருந்தாநிற்பள். அவ்வழி, உடல்மெலிந்து வளைமுதலியன பிறர் அறியுமாறு நெகிழுமாதலின் நற்கவின் தொலையவும், நறுந்தோள் நெகிழவும், புட்பிறர் அறியவும் என்பன, புறஞ்செயச் சிதைதல் என்னும் மெய்ப்பாடு கூறியவாயின. இனி, அவ்வாறு தலைவி தன் கண்ணன்ன கேளிரை நினைத்தவழித்தான் தன் தாய் முதலிய சுற்றஞ்சூழ அவர் நடுவண் இருந்தேயும், தனித்திருப்பாளாய் உணர்வாள். அத்தனிமை உணர்ச்சியே அவள் நெஞ்சில் அடிக்கடி நிகழ்ந்து பெரிதும் வருத்தாநிற்கும். இந்நிலையினையே புலம்புவந் தலைப்பவும் என்னுஞ் சொல்லாற் குறித்துரைத்தாள் என்க. இது புலம்பித்தோன்றல் என்னும் மெய்ப்பாடாம். இம்மெய்ப்பாடுகள், இயற்கைப் புணர்ச்சியின் முன்னும் பின்னும் நிகழும் மரபின எனத் தொல்காப்பியனார், மெய்ப்பாட்டியலுள் வகுத்தோதிய அறுகூற்றிருபானான்கு மெய்ப்பாடுகளுள் இறுதியாகிய ஆறாங்கூற்றின் ஓதப்பட்ட மெய்ப்பாடுகள் என்க.

புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல்
கலங்கி மொழிதல் கையற வுரைத்தலொடு
புலம்பிய நான்கே ஆறென மொழிப  (தொல்-மெய்ப்-18)

என்பது சூத்திரம். இவை, அகனைந்திணைக்கண் இறுதியாகக் கூறிய மெய்ப்பாடுகள். இவற்றின்மேல் மெய்ப்பாடு கூறுதல் அகனைந்திணைக்காகா என்ப. இவற்றின் நுணுக்கமெல்லாம் தொல்காப்பியத்திற் காண்க. ஈண்டுக் காட்டிய நான்கனுள் எஞ்சிய கலங்கி மொழிதல் கையற வுரைத்தல் என்னும் இரண்டனையும் முன்னர்க் காட்டுதும். ஆசிரியர் நச்சினார்க்கினியர் இந் நுணுக்கங்களை எடுத்துக்காட்டிற்றிலர். இனி, உட்கரந் துறையும் உய்யா அரும்படர் எனக் கரந்துறைதற்கு வினைமுதல் அரும்படர்போன்று கூறினாளேனும், உய்தற்கரிய இத்தகைய அரும்படரையும் உசாத்துணையாகிய யானும் அறியாதவாறு தன்னுள்ளே மறைத்தொழுகினாள் தலைவி என, அவள் செறிவைப் பாராட்டுதல் தோழியின் கருத்தாகக்கொள்க. தோழி,தலைவியின் செறிவினைப் பாராட்டுதலை இவ்வாசிரியரே கலி (44) யில்,

தன்னெவ்வங் கூரினும் நீசெய்த அருளின்மை
என்னையு மறைத்தாள் என்றோழி
கூருநோய் சிறப்பவும் நீசெய்த அருளின்மை
சேரியும் மறைத்தாள் என்றோழி
நோய்அட வருந்தியும் நீசெய்த அருளின்மை
ஆயமும் மறைத்தாள் என்றோழி

என நயம்படக் கூறுதலானும் உணர்க. தனது செறிவுடைமையால் தன்னோயைத் தன்னகத்தே மறைத்தொழுகலின் யான் செப்பல் வன்மையால் நெருக்கி அவள் கூறுமாறு செய்தேன் என்று ஈண்டுத் தோழி கூறும் நுணக்கம் பெரிதும் இன்புறற் பாலதாம். பகைவர் நாட்டில் ஒற்றின்மேற் செல்வோர், ஆண்டுத் தம் மெதிர்ப்பட்டோர் தம்மையறியாதபடி பேச்சான் மறைத்து, அவரறியாதபடி அவருளக்கருத்தை வெளிப்படுத்துமாறு சூழ்ச்சியாற் பேசி மறை கொள்வர் என்ப. இவ்வொற்றர் திறமே இத்தோழியின்றிறம் போலும்! செப்பல்வன்மை என்பது சொல்வண்மை; இங்ஙனம் எண்மையிற் செம்பொருள் காணக்கிடக்கும் இச்சொல்லைப் பிரித்துப் பொருந்தாவிடத்தே பொருத்திப் பொருந்தாப் பொருளும் வலிந்து கூறாநிற்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். கடவல்-செலுத்துதல். ஈண்டுத் தலைவியைக் கூறுவித்தல் என்க. இனி, அங்ஙனம் நெருக்கிக் கூறுவித்தலால், தலைவி இவ்வாறு கூறினள் என, தலைவி கூற்றைத் தோழிகொண்டு கூறுகின்றாள் என்க. 13-முத்தினும் என்பது தொடங்கி, 24-நமக்கென என்னுந் துணையும் தலைவி கூற்றாம்.

13-18 : முத்தினும் ........................ அறிஞர்

பொருள் : முத்தினும் - முத்துக்களைக் கொண்டும், மணியினும் - மாணிக்கங்களைக் கொண்டும், பொன்னினும் -பொன்னைக் கொண்டும், அத்துணை - அவ்வவற்றின் அளவிற்கேற்ப, நேர் வரும் குரைய - தாமே வந்து கிடைத்தற்கரியவாகிய, கலம் கெடின் - அணிகலன் யாதானும் ஒரு காரணத்தாற் கெடுமாயின், புணரும் - அத் தொழில் வல்லுநர் சீர்திருத்த மீண்டும் பண்டுபோற் கூடித் திகழும், (அங்ஙனமின்றி) சால்பும் - சான்றாண்மையும், வியப்பும்-பெருமையும், இயல்பும்-ஒழுக்கமும், குன்றின் - யாதானுமொரு காரணத்தால் இடையே கெடுமாயின், மாசுஅற கழீஇ-அவ்வழித் தோன்றிய அழுக்கைப் போம்படி கழுவி, வயங்கு புகழ் - விளங்குகின்ற புகழை, அந்நிலை - பழைய நிலை யுண்டாக, நிறுத்தல்-நிற்கச்செய்தல், ஆசு அறு காட்சி - மயக்கந் தீர்ந்த மெய்க்காட்சியையுடைய, ஐயர்க்கும் - அறிவுத் தலைமையினை உடையோர்க்கும், எளிய என்னார் - அரிய செயல் என்பதல்லது எளிய செயலாம் என்று சொல்லார், தொல்மருங்கு - பழைய நூற்கூறுபாட்டினை, அறிஞர் - உணர்ந்த பெரியோர்;

கருத்துரை : முத்து முதலியவற்றால் இயற்றிய அணிகலன் இடையே கெடுமாயின், சீர்திருத்திப் பண்டுபோற் செய்துவிடக் கூடும். அதுபோலாது, சால்பு முதலிய மக்கட் பண்புகள் இடையே கெட்ட விடத்து, மீண்டும் அப்பழி துடைத்துப் பண்டுபோல் புகழ்நிறுவுதல் மெய்க்காட்சியாளர்க்கும் இயலாதாம் என நூலுணர்ந்தோர் இயம்புவர் என்பதாம்.

அகலவுரை : தான் தலைமைசெய் தொழுகியது ஒருகால் தனது ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடிக்கு இழுக்கந் தருங்கொல் என்னும் கழிவிரக்கத்தால் தலைவி இவ்வாறு கூறுவாளாயினள் என்க.

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்  (குறள்-159)

என்னும் மெய்ம்மொழிக்கேற்பத் தலைவியின் கழிவிரக்கத்தாற் பிறந்த இவ்வினிய சொற்கள், குடிப்பிறந்து பழிநாணும் அவளுடைய பெருந்தகைமையை நமக்கு நன்கு விளக்குவனவாயின. ஆரிய அரசன் பிரகத்தன் என்பான், கசடறச் சொற்றெரிதல் வல்லவனாயின், முத்தும் மணியும் கோத்தன்ன இவ்வினிய சொற்றொடரைக் கேட்புழிச் செந்தமிழ்ச் சுவையையும், தமிழ்மக்களின் சீரிய பண்புடைமையையும் ஒருங்கே உணர்ந்து பெரிதும் இன்புற்றிருத்தல் வேண்டும்.

இனி இத்தலைவி கூற்றின்கண்,

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்  (குறள்-130)

என்னும் மெய்ம்மொழியின் நலனும், மேலும்,

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது  (குறள்-248)

என்றும்,

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை  (குறள்-132)

என்றும்,

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் öடும்  (குறள்-134)

என்றும்,

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.  (குறள்-133)

என்றும் எழுந்த பொய்யா மொழிகளின்கண் அமைந்த நலனெல்லாம் அமைந்து கிடத்தல் உய்த்துணர்வார்க்குப் புலனாகும். அவ்வத்துணை எனற்பாலது, அத்துணை என இடை குறைந்து நின்றது. முத்து முதலியவற்றின் அளவினை அவற்றின் தன்மைக்கேற்ப ஆராய்ந்துகோடல் நேர்வு அரியவாகிய கலன் என்க. என்றவாறு. அத்துணை-முத்து முதலியவற்றிற்குக் கூறிய இலக்கணங்கள் என்பர் நச்சினார்க்கினியர். அருங்குரைய என்பது அரிய என்னும் ஒரு சொல் நீர்மைத்து. சால்பு : அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என்னும் நற்குணங்களான் நிறைந்து அவற்றை ஆளுந் தன்மை. வியப்பு - மிகுதியென்னும் பொருட்டாய்ப் பெருமை குறித்து நின்றது; அஃதாவது : செயற்கரிய செய்தல், தருக்கின்மை, பிறர் குற்றங் கூறாமை, தன்னைத் தான் கொண்டொழுகுதல், பணிவுடைமை, பெருமிதமின்மை, அற்ற மறைத்தல் என்னும் குணங்களான் நிறைந்து பெரியராந் தன்மை. ஒழுக்கம்-தன் குடிப்பிறப்பிற்கும் நிலைக்குந்தக ஒழுகுதல்.

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு  (குறள் - 951)

என்பவாகலின், ஒழுக்கத்தை இயல்பென் றோதினாள் என்க. ஆசு - (காம வெகுளி மயக்கம் என்னும் மூன்றனுள் ஒன்றாகிய) மயக்கம். எனவே, ஆசறு காட்சி யென்றது, மயக்கந் தீர்ந்த மெய்க்காட்சியை என்க. ஐயர் - அம் மெய்க்காட்சியாளராகிய அறிவுத் தலைமையோர். அவர்க்கும் இயலாதென்றலின் ஏனையோர்க்கியலாதென்றல் கூறவேண்டா என்று இயலாமையை நன்கு விளக்கி வற்புறுத்தவாறாதல் காண்க. தொல்மருங்கு-என்றது பழையபகுதி என நின்று ஆகுபெயரால் நூலை உணர்த்தியது. நூல்-வரலாற்று நூல் எனினுமாம். இனி, இவ்வாறு கழிவிரக்கத்தாற் கூறிய தலைவி பின்னரும் தான் மறைவெளிப்படுத்துங் கருத்தினை இவ்வாறு கூறினள் எனத் தோழி கூறுகின்றாள் என்க.

19-24 : மாதரும் .......................... நமக்கென

பொருள் : மாதரும்-இருமுது குரவரும் தமக்கியைந் தோர்க்குக் கொடுப்பே மென்றிருந்த காதலும், மடனும் - என் மடனும், ஒராங்குத் தணப்ப - ஒருசேரக் கெட்டொழிய, நெடுந்தேர் எந்தை - நெடிய தேரினையுடைய என் தந்தையின், அருங்கடி நீவி - கடத்தற்கரிய காவலைக் கடந்து சென்று, இருவேம் - யானும் தலைவனுமே, ஆய்ந்த - தேர்ந்து கொண்ட, மன்றல் - களவு மணம், இது என - இஃதாமென்று, நாம் அறிவுறாலின் - யாமே யாய்க்குக் கூறி அறிவுறுத்துமிடத்தே, பழியும் உண்டோ-நமக்குப் புகழே ஆவதன்றிப் பழியுண்டாதற்கும் இடனுளதோ, ஆற்றின் வாராராயினும் - அவ்வாறு யாம் அறிவுறுத்திய பின்னர் யாய் முதலியோர் நெறிப்பட இயைந்து வாரா தொழியினும் ஆற்ற - யாம் இவ்வருத்தத்தை எம்முயிர் போமளவும் பொறுத்திருப்பேமாக, ஏனை உலகத்தும் - அவ்வாறு இருந்த விடத்தே இம்மை மாறி மறுமை எய்திய பொழுதும், இயைவதால் நமக்கு என - இக்கூட்டம் நமக்கு எய்துவதொன்றாயிருந்தது என்று கூறி, (கூறித் தேம்பும் என 26 ஆம் அடிக்கட் சென்று முடியும்.)

கருத்துரை : யாம் நுங்காதலும் எம்மடனும் ஒருங்கே அகலக் காவல்கடந்து சென்று, நும்மையன்றி யாமே தேர்ந்துகொண்ட களவு மணமாம் இது, என்று யாமே தாய்க்கு அறிவுறுத்தின், அது நமக்குப் புகழன்றிப் பழியும் தருங்கொல்! அவ்வாறு யாம் அறிவுறுத்திய பின்னர், அவர் நெறிப்பட்டு வாராதொழியினும், எம்முயிர் போமளவும் ஆற்றியிருக்கக் கடவேம். ஆற்றியிருப்பின், இம்மை மாறி மறுமையாகிய விடத்தேனும், இக்கூட்டம் நமக்கு எய்துவது உறுதி எனக்கூறி என்பதாம்.

அகலவுரை : தலைவியின் கூற்றில் கலங்கி மொழிதல் கையற வுரைத்தல் என்னும் இரு மெய்ப்பாடுகளும் அவளெய்தினமை தோன்றுதல் காண்க. என்னை?, காவல் கடந்து யாங்களே நும்மையன்றித் தேர்ந்து கொண்டதிம் மணம் என்று கூறுவேம் என்பதன்கண், அவ்வாறு தான் தலைமை செய்தமை தவறெனல் போதரவே கூறி, இதனை யாய்க் கறிவுறுத்தல் பழியோ? புகழோ! எனக் கலங்கிக் கூறுதலான், இதன்கட் கலங்கி மொழிதல் என்னும் மெய்ப்பாடுற்றமை தோன்றிற் றென்க. இனி, ஆற்றின் வாராதவிடத்தே, ஆற்றியிருப்பதல்லால் யாம் செய்யற்பால தொன்றுமின் றென்றல் கையறவுரைத்தல் என்க.

மாதர் - காதல்; மாதர் காதல் என்பது தொல்காப்பியச் சூத்திரம். மடன் -கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்னுமொரு பெண்மைப் பண்பு. நெடுந்தேர் எந்தை என்றாள், குடியாண்மை யாளனாகிய தந்தையிருப்ப யான் தலைமை செய்தேனே! என்னும் கழி விரக்கந் தோன்ற. அருங்கடி என்றது - அக்குடியின் ஒழுக்கச் சிறப்பைக் குறித்து நின்ற தென்க. எனவே, நீவி என்ற சொல், கடக்க லாகாத தொன்றனைக் கடந்து என்னும் பொருளை யாப்புறுத்தியமை காண்க. ஆற்றின் வாராராயினும் என்றது, ஆற்றின் வருதலே அவர்க்கும் அறனாம். அவ்வற நெறிப்பட்டு வாராராயினும் என்றபடி. ஆற்றின் வருதல், நாடறி நன்மணம் நிகழ்த்த உடன்பட்டொழுகுதல். நாடறி நன்மணம் களவு மணத்தின் வழித்தாகலின் அதனை ஆகுபெயரான் ஆறென்றாள். ஆய்தல் - ஈண்டுத் தெளிதல் என்னும் பொருட்டு. இனி ஆய்ந்த மன்றல் என்பதற்கு பெருமையும் உரனும் அச்சமும் நாணமும் நுணுகிய நிலையாற் பிறந்த கந்தருவ மணம் என நச்சினார்க்கினியர் பொருள் விரித்தனர். தலைவன் பெருமையும் அறிவும் கெட்டான், எனத் தலைவி கூறுதல் பொருந்துமென்பார் அவ்வழகிய உரையும் கொள்க. இனி,

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்  (குறள்-666)

என்னும் உறுதிபற்றி, ஏனையுலகத்தும் இயைவதால் நமக் கென்றாள் என்க. இவ்வுறுதி, அவள் தன்மழைதரும் கற்பின் மாண்பினை உணர்த்தி நின்றது. இத்தகைய அன்பினைத் தலையன்பென்றோதுவர் சான்றோர்.

இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியர்என் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே  (குறுந்-49)

என்னும் குறுந்தொகையானும் இவ் வுழுவலன்பின் மாண்பினை ஓர்க. இனி, ஆற்ற என்றது, உயிர்போமளவும் என்னும் குறிப்பினின்றமை, ஏனையுலகத்தும் என்பதனாற் கொள்ளப்படும். உயிர் போவதும் அண்மையிலேயாம் என்பதும், உய்யா அரும்படருடன் தலைவனை எய்தலாம் என்னும் நம்பிக்கையுமின்றிச் செயலற்றபின்னர் நீடுவாழ்தல் இயலாதபடியால் அண்மையிலேயே எம்முயிர்போம் அது காறும் ஆற்ற என்னும் கருத்திற் கூறினளாதலிற் கொள்க. இதனை,

எள்ளற வியற்றிய நிழல்காண் மண்டிலத்து
உள்ளூ தாவியிற் பைப்பைய நுணுகி
மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந்து
இதுகொல் வாழி தோழி என்னுயிர்
விலங்குவெங் கடுவளி எடுப்பத்
துலங்குமாப் புள்ளிற் றுறக்கும் பொழுதே  (அகம்-71)

என்பதனானும் உணர்க.

இதுகாறும் கூறியது தலைவி கூற்றைக் கொண்டு கூறியதாம். இனித் தோழி தன் கூற்றாகக் கூறுகின்றாள்.

25-26 : மானமர் ............................. தேம்பும்

பொருள் : மான் அமர் நோக்கம் - மான்பிணைகளும் விரும்புதற்குக் காரணமான அழகையுடைய தன் விழிகள், கலங்கி - கலங்கா நிற்ப, கையற்று - செயலறவுடையளாய், ஆனா சிறுமையள - ஆற்றுதற்கரிய நோயுடையளாய், இவளும் - என் தோழியும், தேம்பும்-மெலியாநின்றாள்.

கருத்துரை : என் தோழியும் கண்கலங்கிச் செயலற்றுத் தேம்பா நின்றாள், என்பதாம். யான் கடவலின், கலங்கி, கெடிற்புணரும். சால்பு முதலியன குன்றின் கழீஇப் புகழ் நிறுத்தல் ஐயர்க்கும் அரிது என்ப அறிஞர். தணப்ப, நீவி, ஆய்ந்த, மன்றல், என யாம் அறிவுறாலின் பழியும் உண்டோ! வாராராயினும், ஆற்ற இயைவதால் நமக்கெனக் கூறிக் கலங்கிக் கையற்று இவளும் தேம்பும், என்று இயைத்துக் கொள்க.

அகலவுரை : இதுகாறும் தலைவி கூற்றைக் கொண்டு கூறிய பகுதியானே, தலைவனும் தலைவியும், தாமே தலைப்பட்டார்; யான் அறிந்திலேன் என்பது போதரக் கூறலின் தோழி தலைப்பாடு கூறினளாதல் உணர்க. மான் அமர் நோக்கம் என்றற்கு மான்நோக்கு அமர்ந்த நோக்கம் என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். கலங்கிக் கையற்று என்றதனால் தலைவி கலங்கி மொழிதல் கையறவுரைத்தல் என்னும் இறுதி மெய்ப்பாடுகள் எய்தினள் என்பதனைத் தோழி செவிலிக்கு எடுத்தியம்பினாள் என்க. எனவே, இந் நிலையில் நீ யான் கூறுவதனைக் கேட்டு நாடறிமணம் நயவாயெனில், தலைவி இனி இறந்துபாடெய்தல் ஒருதலை என்றாளாயிற்றென்க. ஆனா - அமையாதபடி. சிறுமை-ஈண்டு நோய் என்னும் பொருட்டு. இவளும் என்ற உம்மை இறந்தது தழீஇ நின்றது. தேம்புதல்-ஆகுபெயராய்த் தேம்புதற்குக் காரணமான வருத்தத்தைக் குறிக்கும்.

இதுகாறும் செவிலியின் நிலையும் தலைவியின் நிலையும் கூறிய தோழி 27-இகல் என்பது தொடங்கி 29 ஆற்றலேன் என்னுந் துணையும் அவ் விருவர்க்கும் இடைநின்ற தன்னிலை இஃதெனச் செவிலிக் கியம்புகின்றாள் என்க.

27-29 : இகல் ..................... ஆற்றலேன்

பொருள் : இகல் மீ கடவும் - பகைமையை மேற்கொண்டு செலுத்தாநின்ற, இருபெரு வேந்தர் - இரண்டு பேரரசர்கட்கு, வினை இடைநின்ற - அவரைக் கூட்டுந்தொழிலை மேற்கொண்டு இடையே நின்ற, சான்றோர் - அறிவுடையோரை, போல - போன்று இரு பேர் அச்சமொடு - உனக்கும் இவள் நோய்க்கும் அஞ்சும் இரண்டாகிய பெரிய அச்சத்தோடே, யானும் ஆற்றலேன் - யானும் வருந்தாநின்றேன்.

கருத்துரை : பகைவேந்தராகிய இரண்டு பேரரசர்க்கிடையே நின்று அவரைக் கூட்டுந்தொழிலை மேற்கொண்ட சான்றோர் வருந்துமாறு போல, யானும் நுங்கள் இருவர்க்கும் இடையே நின்று பெரிதும் வருந்துகின்றேன் என்பதாம்.

அகலவுரை : தலைவியும், செவிலியும் ஒருவர்க்கொருவர் முரண்பட்ட கருத்துடையராய் நின்று வருந்துதலாலே, இகல் மீக்கொண்ட வேந்தரை உவமை கூறினாள். கலக்கமும் கையறவுமுடைய தலைவிக்கு இறந்துபாடு நேரும் என்னும் அச்சமும் இம் மறையினை வெளிப்படுத்துரைப்பின் செவிலி சினப்பாள் கொல் என்னும் அச்சமும் உடையேன் என்பாள் இருபேரச்சமோடென்றாள். இவ்வாறு ஒருவர் ஒரே காலத்தில் இரு பேரச்சமுடையராதலை இவ்வாசிரியரே நற்றிணையில் குன்றநாடன் உடுக்குந்தழை தந்தனனே - யாமஃதுடுப்பின் தாயஞ்சுதுமே கொடுப்பிற் கேளுடைக் கேடஞ்சுதுமே (359) என அழகாக விரித்தோதுதல் அறிக. இனி யான் வாளா அமையின் என் பாதுகாவற் கடமையில் இழுக்கியவள் ஆவேன் ஆதலின் கூறச்சமைந்தேன் என்றாளாயிற்று. என்னை?

அறத்தொடு நிற்கும் காலத் தன்றி
அறத்தியல் மரபிலள் தோழி என்ப  (தொல்-பொரு-12)

என்னும் விதியான், தோழி அறத்தொடு நிற்றற்குரிய காலம் தான் பெற்றமையை நாமறிவுறாலிற் பழியுமுண்டோ என்னும் தலைவி கூற்றானே உணர்த்தி, தலைவி மறைவெளிப்படுத்துங் கருத்துடையளாதல் கண்டு வைத்து அவள் நோய்க்கும் அஞ்சி, அவளைப் பாதுகாத்தற்பொருட்டு அம் மறையினை நினக்குக் கூற எண்ணுங்கால் நின் சினத்திற்கும் அஞ்சி, இவ்வாற்றாற் பெரிதும் வருந்தாநின்றேன் என்றாள் என்க. இகல்-இருவர் தம்முட் பொருது வலிதொலைதற்கு ஏதுவாகிய மாறுபாடு. மீக்கடவுதல்-மேற்கொண்டு செலுத்துதல். பெருவேந்தர் என்றது, சேர சோழ பாண்டியர் போன்ற முடிவேந்தர் என்றவாறு. வினை-ஈண்டுக் கூட்டுந்தொழில். வலிமிகு வெகுளியான் வாளுற்ற மன்னரை நயனாடி நட்பாக்கும் வினைவர் என்றார் கலியினும். வடநூலோர் இதனைச் சந்தி என்பர். மாறுபட்ட மன்னர் இருவரிடை நயனாடி நட்பாக்குந் தொழிலினின்ற சான்றோர் அவ்விருவர் வெகுளிக்கும் பெரிதும் அஞ்சி ஒழுகவேண்டுதலால் அச் சான்றோரைத் தன்னோடு உவமித்துக்கொண்டாள் தோழி என்க. என்னை?

அங்கொளி விசும்பிற் றோன்றி அந்திவா னகட்டுக் கொண்ட
திங்களங் குழவி பால்வாய்த் தீங்கதிர் முறுவ னோக்கித்
தங்கொளி விரிந்த ஆம்பல் தாமரை குவிந்த ஆங்கே
எங்குளர் உலகுக் கெல்லாம் ஒருவராய் இனிய நீரார்.  (சூளாமணி)

(குளிர்ந்த சுடரோடே திங்கள் மண்டிலம் பால் ஒளிவீசி நகைத்தெழுங்கால், ஒரே பொய்கையின்கண் உள்ள ஆம்பல் மலர்ந்து மகிழவும், தாமரை குவிந்து வாடவும் கண்டாமன்றோ! ஆதலின், எல்லோர்க்கும் இனியராய் யாரே ஒழுகவல்லார் என்றவாறு) என்னும் இதனானும், சான்றோராயினும் இருமன்னர்க்கும் இனியராய் ஒழுகவியலாமை உணர்க. யானும் என்றதன்கண் உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை ஆற்றலேன் என்றது, ஆற்றாமையாற் கூற முன்வந்தேன் என்றவாறு. இனி, இவ்வாறு தலைவி, செவிலி, தான் என்னும் மூவருடைய நிலையினையும் மொழிந்த தோழி, நின் வருத்தத்திற்கும் இவள் தேம்புதற்கும், என் ஆற்றாமைக்கும், தீர்வாகவுள்ளதொரு செய்தியைக் கூறப் போகின்றேன், ஆதலின் நீ என்னைச் சினவாதே! என்று வேண்டுபவள், தான் கூறப்போகும் செய்தியின் கருக்களமைந்த முன்னுரை ஒன்றனை 30. கொடுப்பின் என்பது தொடங்கி, 34. சினவாதீமோ என்னும் துணையும் கூறுகின்றாள் என்க.

30-34 : கொடுப்பின் ............................. சினவாதீமோ

பொருள் : கொடுப்பின் -(மகட்கொடை நேர்வோர் தம் மகளை ஒரு தலைவனுக்குக்) கொடுக்க நேர்ந்தவிடத்தே, நன்கு உடைமையும் - கொடுத்தபின்னர் எல்லாவற்றானும் நன்மையாகவே முடியும் என்பதனையும், குடி - தலைமகன் குடியும் தங்குடியும், நிரல் உடைமையும் - ஒத்த தன்மையுடையவாதலையும் அறிந்து, வண்ணமும் - தலைமகன் பண்புகளையும், துணையும் - அவனுடைய சுற்றமுதலிய துணையின் அமைதியினையும், பொரீஇ - தலைவியின் பண்பு துணையமைதிகளோடு ஒப்பிட்டு, எண்ணாத - (எண்ணுவர் யாம் அவ்வாறு) எண்ணாமல், எமியேம் - நும்மை யின்றித் தமியேமாய், துணிந்த -துணிந்து மேற்கொண்ட, ஏமம் சால் அருவினை - உயிர்க்குப் பாதுகாவலாக அமைந்த நிகழ்தற்கரிய இக் களவுமணம், நிகழ்ந்த வண்ணம் - முன்னர் நிகழ்ந்தபடியை, நீ நனி உணர - நீ நன்றாக உணர்ந்து கொள்ளுமாறு, செப்பல் ஆன்றிசின் - கூறுதற்கமைந்தேன், சினவாதீமோ-அதுகேட்டு நீ என்னை வெகுளாதே கொள்.

கருத்துரை : ஒரு தலைமகனுக்கு மகட்கொடுக்க எண்ணுவோர் கொடுத்தால் நன்மையே உண்டாம் என்பது முதலியவற்றை ஆராய்ந்து அறிந்து, வண்ணமுதலியவற்றை ஒப்புநோக்கி எண்ணித் துணிதல் இயல்பாகவும், யாங்கள் அவ்வாறு எண்ணாது துணிந்து மேற்கொண்ட இக் களவுமணம் முன்னர் நிகழ்ந்தபடியை யான் கூறுகின்றேன் அது கேட்டு வெகுளேல், என்பதாம்.

அகலவுரை : தலைமகனுக்கும், தலைமகளுக்கும் பொருந்த அமையற் பாலன : பிறப்பும், ஒழுக்கமும், குடியாண்மையும், பருவமும், உருவமும், அன்புடைமையும், நிறையுடைமையும், அருளுடைமையும், அறிவுடைமையும், திருவுடைமையும் ஆகிய இப் பத்தும் என்க. என்னை?

பிறப்பே குடிமை ஆண்மை யாண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே  (தொல்.மெய்-25)

என்பது ஒத்தாகலின் என்க.

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்  (குறள்-522)

என்பவாகலின் சுற்றத்தைத் துணை என்றாள். வண்ணம்-ஆடவர்க்குரிய பெருமை உரன் முதலிய பண்புகளும், பெண்டிர்க்குரிய செறிவும் நிறையும் செம்மையும் செப்பும் அருமையு மாகிய பண்புகளும் ஆம். ஏமம்-காவல். ஏமம் சால் அருவினை என்றது உயிர்க்குப் பாதுகாவலாக அமைந்த வினை என்றபடி. எனவே அவ்வினை நிகழாதிருப்பீன் தலைவிக்கு இறந்துபாடு நிகழ்ந்திருக்கும் என்றாளாயிற்று. உயிர்க்குப் பாதுகாவலமைந்த வினை என்றலால், கற்பு நாண் குடிப்பிறப்பு முதலியவற்றிற்கும் அவ்வினை பாதுகாவலாக அமைந்தமையும் போதரும். என்னை?

உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று, (தொல். 13-22)

என ஓத்தினும்,

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்டுறவார் நாணாள் பவர்  (குறள்-1017)

என்றும்,

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்  (குறள்-969)

என்றும் தமிழ் மறையினும் ஓதியாங்குக் குலப்பிறப் பாட்டியாகிய தலைவி உயிர்காவல் கொள்வது, கற்பும் நாணும் குடிப்பிறப்பும் காக்கப்பட்டவழியே நிகழ்வதல்லது, இவையிற்றை ஒழிய அவள் உயிர் காவல் கொள்ளாள் என்று செவிலி உய்த்துணருமாகலின் என்க. இனி, அருவினை என்றது கொடுப்பின் நன்குடைமை முதலியவற்றை ஆராய்ந்தறிந்து, வண்ணம் முதலியவற்றைப் பொரீஇ எண்ணி, நம்மனோர் நிகழ்த்திய வழியும் இத்தகைய சிறந்த தலைவனோடே நந்தலைவியைக் கூட்டுதல் அரிதென்னும் குறிப்புடையதாம். என்னை? வேட்டைமேல் திரிவான் ஒரு தலைமகன், காண்டற்கரியளாய குடிப்பிறப்பாட்டியாந் தலைமகள் ஒருத்தியைத் தமியளாய் ஒரு பொழிலிடத்தே தலைப்படலும், தலைப்பட்ட விடத்தும் அச்சமும் நாணும் மடனுமிக்க தலைவியின் உள்ளமும், பெருமையும் உரனுமிக்க தலைவன் உள்ளமும் அக்காட்சி மாத்திரையானே கலத்தலும், பிறவும் பாலதாணையின் நிகழ்ந்த அருவினையாதலன்றி, யாம் எண்ணித் துணிந்து நிகழ்தற்கியலாதென்ற படியாம். இனி, இங்ஙனம் கூறவே, நந்தலைவியின் நல்வினை எனப்படும் ஆகூழே அவளை எத்துணையும் சிறந்த தலைமகனோடே மணம் கூட்டிற்று; இம் மணத்திற்கு யாங்கள் அவ்வூழினது கருவி மாத்திரையே ஆதலன்றி அதனை நிகழ்த்திய வினைமுதலல்லேம். ஆதலின் எம்மை நீ வெகுளாதே கொள் என்றாளுமாம்.

செப்பல் ஆன்றிசின் என்பதன்கண், சின் என்பது மூவிடத்தும் வரும் ஓரசைச் சொல். சிவனாதீமோ என்பதன்கண், ஈயும் ஓவும் முன்னிலைக்கண் வந்த அசைகள் என்க. ஈண்டுக் கூறிய தோழியின் கூற்றில் பின்னர்க் கூறப்போகும் செய்திக்குரிய கருக்கள் அமைந்து கிடந்தமை காண்க. இவ்வாற்றாற் கூறித் தான் இனிக் கூறப் போவதனை அறியும் ஆவலைச் செவிலியின் உளத்தே தோழி தூண்டினாள் என்க. இத்தகைய சொல்வன்மையையே முன்னர்ச் செப்பல் வன்மை என அவள் செப்பினள் போலும். இனி, இத்தொடரின்கண் : அன்னாய்! நீயும் வருந்துதி; இயைவதானமக்கென இவளுந் தேம்பும்; யானும் ஆற்றலேன், எண்ணாது எமியேந்துணிந்த ஏமஞ்சாலருவினை நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச் செப்பலான்றிசின், சினவாதீமோ, என அகன்று கிடந்த பொருளை அணுக வைத்துணர்க. உணருங்கால் இழுமென் மொழியான் விழுமியது நுவலிப் பேரியாற்றின் நீரொழுக்குப் போன்று, இடையறவின்றி நீரும் அதன் தட்பமும் போன்று, சொல்லும் பொருளும் ஒத்தியைந்து இனிதாக இயங்கி முடிதல் காண்க. பின் வருந்தொடர்கட்கும் இஃதொக்கும். இனி, 35-நெற்கொள் நெடுவெதிர் என்பது தொடங்கி 106-தண்ணிழல் இருந்தனமாக என்னுந் துணையும் ஒருதொடர். இதன் கண் : செவிலியின் ஏவலாலே தோழியும், தலைவியும் தினைப் புனம் சென்று கிளியோப்பலும், அவர் தெண்ணீர் அருவியாடலும், சுனைகுடைதலும், பாயம் பாடலும், மலர் கொய்தலுங் கோலங் கோடலும், செயலை நீழற் கண் வீற்றிருத்தலும் பிறவும் அழகாகக் கூறப்படும் என்க.

35-39 : நெற்கொள் ..................... விடுத்தலில்

பொருள் : நெல் கொள் - நெல்லைத் தன்னிடத்தே கொண்டுள்ள, நெடுவெதிர்க்கு - நெடிதாக வளர்ந்த மூங்கிலைத் தின்றற்கு, அணந்த - மேனோக்கி நின்ற, யானை - களிறு, அவ்வருத்தந் தீர்தற்பொருட்டு, முத்து ஆர் மருப்பின் - முத்துக்கள் நிறைந்த தன் கொம்பினிடத்தே, இறங்கு கை கடுப்ப - இறக்கிப் போகட்ட வளைந்த துதிக்கையைப் போன்று, துய் தலை - துய்யினைத் தலையிடத்தே கொண்ட, வாங்கிய-வளைந்த, புனிறு தீர் -ஈன்றணிமை தீர்ந்த, பெருகுரல் - பெரிய கதிர்களை, நல் கோள் -நன்றாகத் தன்னிடத்தே கொண்டுள்ள, சிறுதினை - சிறிய தினையிடத்தே, படுபுள் - வீழ்கின்ற பறவைகளை ஓப்பி - ஓட்டி, எல்பட-ஞாயிறு மறையும் பொழுதில், வருதியர்-நீயிர் வருவீராக, என - என்று கூறி, நீ விடுத்தலின் - நீ எம்மைப் போகவிடுகையாலே யாங்களும் சென்று;

கருத்துரை : யானையின் மருப்பிலே கிடந்த வளைந்த துதிக்கையைப் போன்று, வளைந்து முதிர்ந்த கதிர்களையுடைய தினையிடத்தே வீழும் பறவைகளை ஓட்டி, ஞாயிறு மறையும்போது மீண்டும் வருவீராக என, நீ எம்மைப் போக விடுகையாலே யாங்களும் சென்று, என்பதாம்.

அகலவுரை : ஈண்டுக் கூறப்பட்ட நெல்லும், வெதிரும், யானையும். புள்ளும், (கிளி) புள்ளோப்பலும், நிரலே குறிஞ்சித் திணைக்குரிய உணவும், மரமும், விலங்கும், புள்ளும், செய்தியும் ஆகிய கருப்பொருள்கள் ஆதல் உணர்க. முதலும், சினையும் வேறு வேறன்றென்னும் கருத்தால் நெற்கொள் நெடுவெதிர் என்றாரேனும், நெடுவெதிர் கொள் நெல் என்னல் கருத்தாகக் கொள்க. இச் செய்தியை இவர் வாங்குகோல் நெல்லொடு வாங்கி வருவைகல் மூங்கில் மிசைந்த முழந்தாளிரும்பிடி எனக் கலியினும் கூறுதலுணர்க. ஈண்டு யானையின் வளைந்த கை, பரியதாய் முதிர்ந்து வளைந்த தினைக் குரலுக்குவமை. அணத்தல்-மேனோக்கி நிற்றல். யானை அணத்தலாவது பின்கால்களான் நின்று முன்கால்களை உயரத் தூக்கி மேனோக்குதல். எட்டாத உயரத்துள்ள மூங்கில் நெல்லை உருவியுண்டற் பொருட்டு அணந்து தன் துதிக்கையை நீட்டி அக் கதிரினைப் பற்றற்கு முயலுங்கால் அது தன் கைக் கெட்டமையால் கை சோர்ந்து விடுமன்றே! அச் சோர் வினை ஆற்றிக் கோடற் பொருட்டு யானை தன் துதிக்கையை மருப்பிலே இறக்கிப்போகட்ட தென்க. பரிய தினைக் குரலுக்கு இவ்வாறே யானையின் கையினை உவமம் கூறும் வழக்கத்தினை பொய்பொரு கயமுனி முயங்கு கை கடுப்பக் கொய்பத முற்றன குவவுக்குரல் ஏனல், என்னும் மலைபடு கடாத்து அடிகளானும், பூம்பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்பத் தோடுதலை வாங்கிய நீடுகுரற் பைந்தினை, எனவும், ஏனல் இரும்பிடித் தடக்கையிற் றடைஇய இறைஞ்சிய குரல பைந்தாட் செந்தினை, என்றும் வரும் நற்றிணையானும், பிடிக்கை யன்ன பெருங்குரல் ஏனல், என்னும் குறுந்தொகை யானும் உணர்க. கடுப்ப : உவம உருபு. கடுப்ப வாங்கிய குரல் என இயைத்துக் கொள்க. துய்-பஞ்சு. ஈண்டுத் தினைக்கதிரின் நுனியிலமைந்த பஞ்சு போன்ற ஓர் உறுப்பென்க. புனிறு - ஈன்றணிமை. என்னை? புனிறென் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே என்பது ஒத்தென்க. புனிறு தீர்தல்-நன்கு முதிர்தல். குரல்-கதிர். நற்கோள் என்பதனை, கோள் நல் என மாறிக் கொய்து கோடற் கியைந்த நன்மையுடைய எனினுமாம். புள்-ஈண்டுக் கிளி என்க. எல்பட - ஞாயிறு மறைய என்றவாறு. எல்பட என்னுமித் தொடர் ஞாயிறு தோன்ற என்ற பொருளினும் வரும். வருதியர் : வியங்கோள் வினைமுற்று.

இனித் தினைக் குரலுக்கு உவமை கூறப்புக்க தோழி, பிடிக்கை யன்ன பெருங்குரல் ஏனல், என்றாற் போன்று, சுருங்கக் கூறலே அமையும். நெற்கொள் நெடுவெதிர்க்கு அணந்த யானை முத்தார் மருப்பின் இறங்குகை கடுப்ப, எனப் பெருகக் கூறியது மிகைபடக் கூறலாம் பிறவெனின்? அற்றன்று, அத் தொடர் தினைக் கதிர்க்கு உவமை கூறு மாத்திரைக்கே கூறியதன்று. கருப்பொருளை நிலைக்களனாகக் கொண்டு கூறும் உள்ளுறை உவமம் கூறலே தோழியின் கருத்தாகலின் மிகைபடக் கூறுவாள் போன்று அத் தொடரின்கண் சிறந்த உள்ளுறை வைத்துரைக்கின்றாளாகலின் மிகைபடக் கூறியதாகாதென்க. இனி, அத் தொடரின்கண் உள்ளுறுத்துக் கூறிய பொருள் என்னை? எனிற் காட்டுதும்.

அறத்தொடு நிற்குந் தோழியாற் கூறப்படுகின்றவர்,

செவிலியும் தலைவியும் தலைவனும் தானும் என்னுமிந் நால்வருமே ஆவர் என்பதனை,

நின்குற்ற மில்லை நிரைதொடியும் பண்புடையள்
என்குற்றம் யானும் உணர்கலேன் - பொன்குற்று
அருவி கொழிக்கும் அணிமலை நாடன்
தெரியுங்காற் றீய திலன்

என்னும் அடக்கியல் வெண்பாவானும் அறியலாம். இந் நால்வருள் வைத்து, நீயும் வருந்துதி எனச் செவிலியின் நிலையையும், இவளுந் தேம்பும் எனத் தலைவியின் நிலையையும் யானும் ஆற்றலேன் எனத்  தன்னிலையையும் கிளந்து கூறி இவற்றிற்கெல்லாம் காரணமாய் முன்னர் நிகழ்ந்த களவுமணம் நிகழ்ந்தபடியைக் கேள் எனக் கூறினதோழியின் கூற்றினைக்கேட்ட செவிலி, அவ்வாறாயின் தலைமகளை மணந்தான் ஒரு தலைவன் உளன் என்றும், தலைவி இவ்வாறு வருந்தும் படி அவன் ஒரு கால் இவளை மறந்து மாறினனோ என்றும், மேலும் அவன் எத்தகையனோ என்றும், அவன் நிலை இப்போது என்னை என்றும், அறிந்துகொள்ள அவாவுவள் அல்லளோ! அவ்வாறு அவாவும் செவிலிக்குத் தலைவன் நிலையினை வெளிப்படக்கிளவாது நம் மூவரையும் போன்றே அத் தலைவனும் பெரிதும் வருந்தாநின்றான் என்னும் செய்தியை இத்தொடரின் கண் தோழி உள்ளுறுத்துக் கூறுகின்றாள்; அது வருமாறு :

மலையிடத்தே ஓங்கி வளர்ந்த வெதிர் தலைவியின் உயரிய குடியாகவும், அவ்வெதிர் ஈன்ற நெல் அக்குடியிற் பிறந்த தலைவியாகவும், பசி கொண்ட யானை. வேட்கைமிக்க தலைவனாகவும், அவ் வியானை வெதிர் நெற்கு அணந்து நின்று முயலுதல், தலைவியை எய்தத் தலைவன் இரவுக்குறிக்கண் வந்து முயலுதலாகவும், அதன் கைக்கு அகப்படாத உயரத்தே அந்நெல் இருத்தல், தலைவி இற்செறிக்கப்பட்டிருத்தலாகவும், யானை தன் துதிக்கையைத் தன் கொம்பினிடத்தே இறக்கிப் போகடுதல், தலைவியைக் காணப் பெறாது மீள்தலாகவும், முத்தார் மருப்பு தலைவனுடைய நற்குணங்கள் நிறைந்த உறுதிப்பாடாகவும், அதன்கண் கையின் சோர்வினை அகற்றிக்கோடல், தன் அறிவானே தன் வருத்தத்தைத் தலைவன் ஆற்றிக் கோடலாகவும் உள்ளுறை உவமம் காண்க.

இவ்வுள்ளுறை,

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலன்எனக்
கொள்ளும் என்ப குறியறிந் தோரே  (தொல்-அகத். 47)

என ஒத்திற் கூறியாங்குத் தெய்வம் ஒழிந்த குறிஞ்சிக்கருப்பொருளானே பிறந்தமை உணர்க. உள்ளுறையுள்ளும் இஃது, இனிதுறு கிளவி துனியுறு கிளவியென்னும் இரண்டனுள் தலைவன் வருத்த நுதலி வந்தமையின் துனியுறு கிளவியின்பாற்படும் என்க. இனி இவ்வுள்ளுறைக்கண் தலைவனுக்கு முத்தார் மருப்பினையுடைய யானையை உவமையாக்கியது ஏத்தல் கூறுதலாகவும், யானை அந்நெற்குக் கைநீட்டி வருந்தியது எளித்தலாகவும், பசிகொண்ட யானை உணவின் பொருட்டு முயலுதல் வேட்கை உரைத்தலாகவும் நுண்ணிதின் ஓர்ந்துணர்க. இவ்வாற்றான் இவ்வுள்ளுறை திணையுணர் வகையைத் தள்ளாதாயிற்றென்க. இவ் வுள்ளுறையை ஆசிரியர் நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டினாரிலர்.

இனி, எற்பட வருதியர் என, என்னுந் துணையும் எடுத்தோதி, நின் ஏவலே எமக்கு வாய்ப்புள்ளும் ஆயிற்றெனத் தோழி குறிப்பினுரைத்தாளுமாம். என்னை? எற்பட வருதியர் எனச் செவிலி கூறியது, ஞாயிறு மறைய வருக! என்னும் பொருள்படவே அவளாற் கூறப்பட்டதாயினும், விளக்கமுண்டாக மீண்டு வருக! எனவும் பொருள் பட்டுத் தலைவி விளக்கமடைதற்குக் காரணமான மன்றலிற்கு வாய்ப் புள்ளாக நின்றமையும் காண்க. எல்-விளக்கம், பட - உண்டாக, வருதியர்-மீண்டும் வருவீராக எனவும் அத்தொடர் பொருள் தருதல் காண்க. இனி நீ விடுத்தலின் என்பதனையும் அவ்வாறு எடுத்துக் கூறவே, இம் மன்றற்கு நீயும் ஓர் ஏவுதற்கருத்தாவாகின்றாய்; இம் மணத்திற்கு முதன்முதலாகக் கால்கோள் செய்தவளும் நீயே என்னும் குறிப்புப் பொருளும் காண்க. இக் கருத்தானன்றே முன்னர்க் காட்டிய வெண்பாவில் நீயுந் தவறிலை என்றதூஉம் என்க.

40-45 : கலிகெழு ........................... அமயத்து

பொருள் : கலி கெழு - ஆரவாரம் மிக்க, மரம் மிசை - மரத்தின் உச்சியிலே, சேணோன் - வானிடத்திருப்போன், இழைத்த - இயற்றிய, புலியஞ்சு இதணம் - புலிக்கஞ்சித் தற்காத்தற் கமைத்த பரணிடத்தே, ஏறி - ஏறியிருந்து, அவண சாரல்-அம் மலைச் சாரலின்கண் உள்ள, சூரல் - பிரம்பினாலே, தகைபெற - அழகுண்டாக, வலந்த - பின்னிய, தழலும் - தழல் என்னுங் கருவியும், தட்டையும்-தட்டை என்னுங் கருவியும், குளிரும் - குளிர் என்னுங் கருவியும், பிறவும்-இவைபோல்வன பிறகருவிகளும் ஆகிய, கிளிகடி மரபின - கிளியை ஓட்டும் முறைமையினையுடையவற்றை, ஊழ் ஊழ் - முறை முறையாக, வாங்கி - கையிலே கொண்டு ஓட்டி, உரவுகதிர் - மிகுந்த ஞாயிற்றின் சுடர்கள், தெறூஉம் - சுடாநின்ற, உருப்பு - வெப்பம், அவிர் - விளங்கும், அமயத்து - உச்சிப்போதின் கண்ணே;

கருத்துரை : ஆரவாரமிக்க மரத்தின் மிசைச் சேணோன் இயற்றித் தந்த பரணின்கண் ஏறியிருந்து, தழல் முதலிய கிளிகடி கருவிகளை முறைமுறையாகக் கையிலே கொண்டு கிளிகளை ஓட்டி வெப்பமிக்க உச்சிப்போதிலே, என்பதாம்.

அகலவுரை : கலிகெழு மரம் என்றது - பயன்படு பழுமரம் என்றவாறு. என்னை? உணவினை நாடிவரும் பல்வேறு பறவைகளின் ஆரவாரமும் பழுமரத்திற்கல்லது இல்லையாதலின் என்க. இனி, கலித்தல்-தழைத்தலுமாகலின் தழைத்துக் கெழுமிய மரம் என்றலுமாம். சேணோன் - வானத்திலிருப்போன்; அஃதாவது உயர்ந்த மரங்களின் உச்சியிலாதல், பரணிடத்தாதல் இருப்போன் என்பது கருத்து. சிலப்பதிகார உரையாசிரியர் சேண் என்பதற்குப் பரண் என்றே பொருள்கொண்டு சேணோன் - பரணின் மேலோன் என்று கூறுவர். சேணோர் ஒரு சாதியினர் என்றும், மரம் ஏறுதற்றொழிலுடையோர் என்றும் எண்ணுதற்கு இடனுளது. இவரைக் கொண்டு பரணியற்றிக் கோடலின் சேணோன் இழைத்த இதணம் எனப்பட்டது. புலியஞ்சிதணம் - என்னுந்தொடர், புலியை அஞ்சியுறைதற்குரிய இதணம் என்றும், புலி அஞ்சுதற்குக் காரணமான இதணம் என்றும் இரு வேற்றுமைப் பொருளினும் விரியும். இவ்விருவேறு பொருட்கும் இதணம் பொருந்துதலால் இருபொருளும் கொள்க. அவண : பலவறிசொல் - அவ்விடத்தன என்னும் பொருட்டு. சாரற் சூரல் - என்னுந் தொடரைச் சாரலின்கண் உள்ள சூரல் என ஏழாவதன் உருபுகொடுத்து விரித்திடுக. சூரற்றகைபெற வலந்ததழல் என்றலால் தழல் என்னும் கருவி பிரம்பாலே பின்னப்பட்டதென்றறியலாம். சூரலை இதணத்தோடியைத்து வேறு பொருள்கூறினர் நச்சினார்க்கினியர். தழல், தட்டை, குளிர் என்ற மூன்றும் கிளிகடி கருவிகள் என்க. பிற என்றது கவண்முதலிய பிற கிளிகடி கருவிகளை. தழல்-கையாற் சுற்றியவிடத்தே ஓசைபிறக்கும் கருவி என்ப. தட்டை - மூங்கிலைப் பிளந்து ஒன்றிலே தட்டி ஓசை எழுப்பும் கருவி என்ப. குளிர்-மூங்கிலை விணைபோற் கட்டித் தெரித்து ஓசை யெழுப்பும் கருவி என்ப. இவையிற்றாற் கிளிகடியும் மரபினைத் தழலுந் தட்டையும் முறியுந் தந்து என்னும் குறுந்தொகையானும் தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும் என்னும் அகத்தானும், ஒலிகழைத் தட்டை புடையுநர் என்ற மலைபடு கடாத்தானும் கண்விடு புடையூத் தட்டை கவினழிந்து என்னும் மதுரைக்காஞ்சியானும்,

கட்டு வரிவிற் கருங்குறவர் கைத்தொழிலால்
இட்ட இதணத் திருந்தெம் பெருமாட்டி
தட்டை குளிர்தழலைத் தாங்கித் தினைப்புனத்தைக்
கிட்ட லுறாவண்ணம் கிளிமுதற்புள் ஓட்டினளே

எனவரும் கந்தபுராணச் செய்யுளானும் உணர்க. ஊழ்-முறை. முறை பிறழ்ந்து வாராமையால் நியதியினையும் ஊழ் எனலறிக. இனி வெப்பமிக்க உச்சிப்போதிலே அருவியாடுதல் கூறுவாள் அவ்வருவியின் வரலாறு கூறுகின்றாள் தோழி என்க.

46-53 : விசும்பாடு .......................... பொழிந்தென

பொருள் : விசும்பு ஆடு பறவை - விண்ணிற் பறக்கும் பறவைகள் எல்லாம், வீழ்பதி படர-தாம் விரும்பியுறையும் குடம்பைகளிலே சென்று அடங்குமாறு, நிறை இரு பவ்வம் - நீரான் நிறைந்த கரிய கடல், குறைபட முகந்து கொண்டு - குறைந்து போம்படி அதன்கண் நீரை அள்ளிக்கொண்டு, அகலிருவானத்து - ஏனைப் பூதங்கள் விரிதற்குக் காரணமான பெரிய விண்ணிடத்தே, வீசு வளி கலாவலின் - வீசாநின்ற காற்றுத் தம்மிடத்தே கூடுகையினாலே, முரசு அதிர்ந்தன்ன - முரசம் முழங்கினாற்போன்று, இன் குரல் ஏற்றொடு - இனிய குரலையுடைய உருமேற்றோடே, நிரைசெலல் நிவப்பின் - நிரலாக இயங்கும் எழுச்சியையுடைய, கொண்மூ - முகில், மயங்கி-கலங்கி, இன் இசைமுரசின் - இனிய ஓசையையுடைய முரசினையும், சுடர்பூண் - ஒளியுடைய அணிகலன்களையும் உடைய, சேய் - முருகக்கடவுள், ஒன்னார்க்கு - தன் பகைவரைக் கொல்லும் பொருட்டு, ஏந்திய - தன் கையிலே கொண்ட இலங்கு இலை எஃகின் - விளங்கும் இலைத்தொழிலை யுடைய வேற்படைபோன்று, மின் மயங்கு கருவிய - மின்னல் பொருந்திய தொகுதிகளையுடையவாய், கல்மிசை பொழிந்தென - மலையின்மேலே பொழிந்தனவாக;

கருத்துரை : பறவைகள் தத்தம் சேக்கைகளிலே புக்கொடுங்குமாறு கடல் குறைபடும்படி நீரை முகந்துகொண்டு, வானத்தே குழுமிய முகில்கள், தம்மோடு காற்றுவீசப் பெறுதலாலே, கலங்கி முரசம் போன்றினிதே முழங்கும் உருமேற்றோடே, முருகன் வேற்படைபோல் மின்னும் மின்னல் முதலிய தொகுதியவாய், எம்பெருமான் மலைமேலே பொழிந்தமையாலே என்பதாம்.

அகலவுரை : அண்ணல் மலைமேலே மழை பொழிந்தமையாலே உண்டாகிய அருவியின்கண் ஆடினேம் என்பாள், ஈண்டு அருவியின் வரலாறே கூறுகின்றாள் என்பதறியாதே, அப்பொழுது ஆண்டு மழை பொழிந்ததென மயங்கிக் கூறுவாருமுளர். உருப்பவிரமயத்து மழை பொழிந்தபின்னர், அருவியாடற்கும், சுனைகுடைதற்கும், விருப்பம் நிகழ்தல் இயல்பன்மையானும், உருப்பவிர் அமயம் என ஆசிரியர் அருவியாடற்கும் சுனைகுடதற்கும் விருப்பமுண்டாக்கும் கால அமைதி கூறி வைத்தமையானும் இக் கருத்தை உணராதே அப்பொழுது ஆண்டு மழை பொழிந்ததெனல் பொருந்தாதென்க. ஈண்டுக் குறிஞ்சி நிலத்திற்கேற்ப முருகப் பிரானின் வேன் மின்னி மழை பொழிந்ததென்றாற்போன்று, முல்லை நிலத்தெய்வமாகிய திருமாலின் மேலிட்டு, ஆண்டாள் ஆயர் மகளிர் கூற்றாகக் கூறிய,

ஆழிமழைக் கண்ணா ஒன்றும் நீ கைகரவேல்
ஆழியுட் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோன் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினிற் பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்  (திருப்பாவை-1)

என்னும் இனிமை கெழுமிய செய்யுளை இதனோடு ஒப்பிட்டு நோக்கி மகிழ்க. ஈண்டுத் தோழி மழைபெய்யும் நிகழ்ச்சியினைத் தன்மை நவிற்சி யணியாகக் கூறிக் கேட்போர் மனக்கண்முன், ஞெரேலென வானத்தே பெரிய கரிய மேகங்கள் வந்து குழுமுதலையும், பெருங் காற்றொன்று சுழன்று வீசுதலையும், அப்போது பறவைகள் அஞ்சித் தத்தங் கூட்டிலேபுக்குப் பதுங்குதலையும், பளீர் பளீர் என மின்னுதலையும், முரசம் போன்று கேட்டற்கு இனிதாக முழங்குதலையும் மலையிலே பெருந்தாரைகள் வீசிப் பெய்தலையும் தோற்றுவித்தலுணர்க. இவ்வாறு பயில்வோருளத்தே பொருள் புலப்படச் செய்யுள் யாத்தல் கபிலர் அனைய நல்லிசைப் புலவர்க்கன்றிப் பிறருக்கியலாதாம்.

இனி, களிறு கண்ட அச்சத்தாலே நடுங்கிய தம் முன்றோன்றி மெல்லிய இனிய மொழிகளைக் கூறிப் புன்முறுவல் பூத்துத் தலையளி செய்த தலைவனின் பேரருட் பெருமழையையும், அவ் வருளிலே விருப்பத்தோடே துளைந்தாடிய தம் வேட்கையையும், உருவகத்தானே இவ்வாறு முகில் மேலிட்டுரைத்தாள் எனவும் கொண்டு, அதற்கேற்பவும் மொழிந்து கொள்க. ஈண்டுக் குறிஞ்சிக் கடவுளாகிய முருகப்பிரான், இன்னிசை முரசம் முழங்க, ஒளியுடைய அணிகலன் பல பூண்டு, தம் மடியார் திறத்தே இடுக்கண் இயற்றும் அசுரர் முதலிய தீயோரை ஒறுத்து, நல்லோரை ஓம்பும் மேற்கோளோடே, மின்னெனத் திகழும் ஒளி வேலேந்திப் பயில்வோருளத்தே தோன்றிக் காட்சி தரும் இன்பத்தையும் நுகர்க. நிறையிரும் பவ்வம் குறைபட முகந்துகொண்டு என்னும் அடி, நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகிவிடின் என்னும் அருமைத் திருக்குறளையும், கடல்குறை படுத்தநீர் என்னும் இனிய பரிபாடலடியினையும், சுடர்ப் பூட்சேய் என்னுந் தொடர் பொலம்பூட்சேய் என்னும் திருமுருகாற்றுப்படைத் தொடரினையும், இலங்கிலை எஃகின் மின் என்னுந் தொடர் செல்வக் கடம்பமர்ந்தான் வேன் மின்னி என்னும் ஐந்திணை ஐம்பதின்கட் டொடரையும் நினைவூட்டி இன்புறுத்துவனவாம்.

54-61 : அண்ணல் ...................... கண்ணேம்

பொருள் : அண்ணல் - தலைவனுடைய, நெடுகோடு இழிதரு-நெடிய மலையுச்சியினின்றும் குதிக்கின்ற, தெள்நீர்-தெளிந்த நீரையுடைய, அவிர் துகில் புரையும் - விளங்குகின்ற வெள்ளிய துகிலைப் போன்ற, அ வெள் அருவி - அழகிய வெள்ளிய அருவியிலே, தவிர்வு இல் வேட்கையேம் - நீங்காத விருப்பமுடையேமாய், தண்டாது - ஒழிவின்றி, ஆடி - விளையாடி, பளிங்கு சொரிவு அன்ன - பளிங்கினைக் கரைத்துச் சொரிந்து வைத்தாற் போன்ற, பாய்சுனை - பரந்த சுனையை, குடைவுழி - குடைந்தாடும் பொழுது, நளிபடு சிலம்பில் - செறிவுடைய மலையிடத்தே, பாயம் - எம்மனம் விரும்பியவற்றை, பாடி-பாடுதலைச் செய்து, பொன் எறி மணியின் - பொன்னிலே அழுத்திய நீல மணிபோல சிறுபுறம் தாழ்ந்த - சிறிய முதுகிடத்தே தாழ்ந்து கிடந்த, எம்பின் இரு கூந்தல் - எம்முடைய பின்னிவிடப்பட்ட குழலை, பிழிவனம் -நீரைப் பிழிந்தேமாய், துவரி - ஈரம் உலர்த்தி, உள் அகம் சிவந்த - உள்ளிடம் எல்லாம் சிவந்த, கண்ணேம் - கண்களை உடையேமாய்;

கருத்துரை : தலைவனுடைய மலையுச்சியினின்றும் குதியாநின்ற தெளிந்த நீரையுடைய தூய ஆடைபோன்ற வெளிய அருவியின் கண்ணே, மிக்க விருப்பத்தோடே விளையாடி, பளிங்குபோன்ற நீரையுடைய சுனையிலே குடைந்தாடி, சிலம்பிற் பாயம்பாடிப் பொன்னிலே பதித்த நீலமணிபோலே எம்முதுகிடத்தே வீழ்ந்துகிடந்த கரிய குழலினை நீரைப் பிழிந்து ஈரம் உலர்த்தி, சிவந்த கண்ணையுடையோமாய், என்பதாம்.

அகலவுரை : அண்ணல் - எல்லாநலனும் அண்மிய மேன்மையுடைமை; ஈண்டு, ஒப்புயர்வற்ற தலைவனைக் குறித்து நின்றது. அண்ணல் மலையின் அருவி என்றது இடமணித் தென்றற் பொருட்டு. இனி அண்ணல் நெடுங்கோடென மலைக்காக்கி உரைப்பினுமாம். தெளிந்த நீருக்குக் கரைத்துச் சொரிந்த பளிங்கு இல்பொருளுவமையாய் நின்றதென்க. தலைவியின் பொன்நிறம் பொருந்திய முதுகிடத்தே பின்னிக் கிடந்த கரிய கூந்தல், பொன்னிற் பதித்த நீலமணி போன்ற தென்க. பொன்னெறி மணியிற் சிறுபுறந் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல் என்னும் இச் சிறிய உவமையமைந்த சொற்றொடரே, தலைவியின் ஒப்பிலா முழு எழிலையும் நம் மனக்கண் முன்னர்த் தோற்றுவித்தல் உணர்க. பிற்றைநாட் புலவர்கள். ஒரு மடந்தையின் எழிலைப் புலப்படுத்த எண்ணுமிடத்தே அவள்தன் கூந்தல் முதல், உள்ளடிகாறும் உள்ள உறுப்புக்களை நிரல்படக் கொண்டு பல்வேறு உவமைகளாலே பற்பல செய்யுள் யாத்தவழியும், கற்போருளத்தே வெறும் சொல்லார வாரமே எஞ்சுதலன்றி, இவ்வாறு பொருள் புலப்படுத்த மாட்டாவாதலும், பண்டைநாட் சான்றோர், ஒருசிறு சொற்றொடர் கொண்டு தாம் கூறக்கருதிய பொருள் ஓதுவோருளத்தே முழுமையுற்றுத் திகழும்படி உயிர் ஓவியமாக வரைந்துவிடும் கலைத்திறனுடையராதலும் காண்க. இச் சிறப்பு நம் பண்டை இலக்கியங்கட்குப் பொதுவுறப் பொருந்துவதாம்.

இனி, நளிபடு சிலம்பு என்ற குறிப்பால் அடுக்கங்களாக அமைந்து எதிரொலி செய்யும் மலை என்பது பெற்றாம். சிலம்பு என்பது ஓசை என்னும் பொருட்டாதலின் எதிரொலி செய்யும் மலையடுக்கங்கட்கு ஆகுபெயர் என்க. ஈண்டுத் தோழியும் தலைவியும் சுனைகுடையுங்கால் பாடுதல், அச் சிலம்பின் எதிரொலி எழீஇ மகிழ்தற் பொருட்டாம் எனவே, அவ்வெதிரொலி கேட்கும் விருப்பத்தோடே எம் மனத்தே நிகழ்ந்த பாட்டெல்லாம் பாடினேம் என்பாள் நளிபடு சிலம்பிற் பாயம்பாடி என்றாள். பாயம்-மனவிருப்பம். பாயம் பாடுதற்குக் காரணம் இன்னதாதலைக் கருதாது நச்சினார்க்கினியர் நளிபடு சிலம்பைப் பிரித்துப் பிறிதோரிடத்தே இயைப்பாராயினர். பிழிவனம் : தன்மைப் பன்மை. துவரி - உலர்த்தி. கண் சிவத்தல் மிகையான ஆடலைக் குறிக்கும். நீர் நீடாடிற் கண்ணும் சிவக்கும் என்றார் பிறரும். இவ்வாறு உருப்பவிர் அமையத்து அருவியாடியும், சுனை குடைந்தும், பாயம் பாடியும், ஆடிய யாங்கள், மலர் கொய்தேம் என இனித்தோழி கூறுகின்றாள்.

61-97 :  வள்ளிதழ் ...................... மறுகி

பொருள் : வள் இதழ் ஒள்செங்காந்தள் - பெரிய இதழ்களை யுடைய ஒள்ளிய சிவந்த கோடற் பூவும், ஆம்பல் - ஆம்பற்பூவும், அனிச்சம் - அனிச்சப் பூவும், தண் கயம் குவளை - குளிர்ந்த குளத்திலே மலர்ந்த செங்கழு நீர்ப்பூவும், குறிஞ்சி - குறிஞ்சிப் பூவும், வெட்சி - வெட்சிப் பூவும், செங்கோடு வேரி - செங்கொடு வேரிப்பூவும், தேமா - தேமாம் பூவும், மணிச்சிகை - செம்மணிப் பூவும், உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் - தனக்கு உரித்தாக நாறும் விரிந்த கொத்தினையுடைய பெரு மூங்கிற் பூவும், கூவிளம் - வில்வப் பூவும், எரிபுரை எறுழம் - நெருப்பை ஒத்த எறுழம் பூவும், சுள்ளி - மராமரப் பூவும், கூவிரம் - கூவிரம் பூவும், வடவனம் - வடவனப் பூவும், வாகை - வாகைப் பூவும், வால் பூ குடசம் - வெள்ளிய பூவினையுடைய வெட்பாலைப் பூவும், எருவை - பஞ்சாய்க் கோரையும், செருவிளை - வெண் காக்கணம் பூவும், பயினி - பயினிப் பூவும், வானி - வானிப் பூவும், பல் இணர்குரவம் - பல இதழ்களையுடைய குரவம் பூவும், பசும்பிடி - பச்சிலைப் பூவும், வகுளம் - மகிழம் பூவும், பல் இணர் காயா - பல கொத்துக்களையுடைய காயாம் பூவும், விரி மலர் ஆவிரை - விரிந்த பூக்களையுடைய ஆவிரம் பூவும், வேரல் - சிறுமூங்கிற் பூவும், சூரல்-சூரைப் பூவும், குரீஇப் பூளை - சிறு பூளையும், குறுநறுங் கண்ணி - குன்றிப் பூவும் குருகிலை -முருக்கிலையும், மருதம் - மருதம்-பூவும், விரி பூ கோங்கம்-விரிந்த பூக்களையுடைய கோங்கம் பூவும், போங்கம்-மஞ்சாடிப் பூவும், திலகம் -மஞ்சாடி மரத்தின் பூவும், தேன் கமழ் பாதிரி - தேன் நாறும் பாதிரிப் பூவும், செருந்தி - செருந்திப் பூவும், அதிரல் - புனலிப் பூவும், பெருந் தண் சண்பகம் - பெரிய குளிர்ந்த சண்பகப்பூவும், கரந்தை - நாறு கரந்தையும், குளவி - காட்டுமல்லிகைப் பூவும், கடிகமழ் கலி மா -மணங்கமழும் தழைத்த மாம் பூவும் தில்லை - தில்லைப் பூவும், பாலை - பாலைப் பூவும், கல் இவர் முல்லை - கல்லிலே படர்ந்த முல்லைப் பூவும்,  குல்லை - கஞ்சங் குல்லைப் பூவும், பிடவம் - பிடவம் பூவும், சிறுமாரோடம்- செங் கருங்காலிப் பூவும், வாழை - வாழைப் பூவும், வள்ளி - வள்ளிப் பூவும், நீள் நறுநெய்தல் - நீண்ட நறிய நெய்தற் பூவும், தாழை - தென்னம் பாளையும், தளவம் - செம்முலைப் பூவும், முள் தாள் தாமரை-முள்ளையுடைய நாளம் பொருந்திய தாமரைப் பூவும், ஞாழல் - ஞாழற் பூவும், மௌவல்-மௌவற் பூவும், நறுந்தண் கொகுடி-நறிய குளிர்ந்த கொகுடிப் பூவும், சேடல்-பவழக் கான் மல்லிகைப் பூவும், செம்மல்-சாதிப் பூவும், சிறுசெம் குரலி - கருந்தாமக் கொடிப் பூவும், கோடல் -வெண் கோடற் பூவும், கைதை - தாழம் பூவும், கோங்குமுதிர் நறுவழை - தாது முதிர்ந்த நறிய சுரபுன்னைப் பூவும், காஞ்சி காஞ்சிப் பூவும், மணி குலைகள் கமழ் நெய்தல் - நீலமணிபோலும் கொத்துக்களையுடைய தேனாறும் கருங்குவளைப் பூவும், பாங்கர் - பாங்கர்ப் பூவும்; மராஅம் - மரவம் பூவும், பல் பூ தணக்கம் - பல பூக்களையுடைய தணக்கம் பூவும், ஈங்கை - இண்டம் பூவும், இலவம் - இலவம் பூவும், தூங்கு இணர் கொன்றை - தூங்குகின்ற பூங்கொத்துக்களையுடைய கொன்றைப்பூவும், அடும்பு - அடும்பம் பூவும், அமர் ஆத்தி - பொருந்திய ஆத்திப்பூவும், நெடு கொடி அவரை - நெடிய கொடியினையுடைய அவரைப்பூவும், பகன்றை - பகன்றைப்பூவும், பலாசம் - பலாசம்பூவும், பல் பூ பிண்டி - பல பூக்களையுடைய அசோகம் பூவும், வஞ்சி - வஞ்சிப்பூவும், பித்திகம் - பிச்சிப்பூவும், சிந்து வாரம் - கருநொச்சிப்பூவும், தும்பை தும்பைப்பூவும், துழாய் - திருத்துழாய்ப்பூவும், சுடர் பூ தோன்றி - விளக்குப்போலும் பூவினையுடைய தோன்றிப் பூவும், நந்தி - நந்தியா வட்டப் பூவும், நறவம் -நறைக்கொடியும், நறு புன்னாகம் - நறிய புன்னாகப் பூவும், பாரம் - பருத்திப்பூவும், பீரம்-பீர்க்கம் பூவும், பைங்குருக்கத்தி - பசிய குருக்கத்திப் பூவும், ஆரம் சந்தனப்பூவும், காழ்வை - அகிற்பூவும், கடி இரு புன்னை - மணமுடைய பெரிய புன்னைப்பூவும், நரந்தம் - நாரத்தம் பூவும், நாகம் - நாகப்பூவும், நள்ளிருணாறி - இருள்வாசிப்பூவும், மா இரு குருந்தம் - கரிய பெரிய குருந்தம் பூவும், வேங்கையும் - வேங்கைப் பூவும், பிறவும் - பிற பூக்களும், அரக்கு விரித்தன்ன - சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற, பரேரம் புழகுடன் - பரிய அழகுடைய புழகுப் பூவினோடே இம் மலர்களை, மால் அங்கு உடையம் - அவையிற்றின் அழகானும் மணத்தானும் மயங்கினேமாய், மலிவனம் - அவாமிக்கு, மறுகி - பலகாலுந்திரிந்து பறித்து.

கருத்துரை : செங்காந்தட் பூமுதல் புழகீறாகக் கூறப்பட்ட மலரின்கண் மயங்கினேமாய், அவா மிக்கு அவையிற்றைத் திரிந்து பறித்து என்பதாம்.

அகலவுரை : மலையும், மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தின் கண்ணே மாலங்குடையராய், மனவேட்கைமிக்குப் பலகாலும் திரிந்து திரிந்து, கண்டு நுகர்ந்த தம்மின்பத்தைப் பிறரும் நுகரும்படி, கபிலர் பெருமான் தோழியின் கூற்றில் யாத்துத்தந்த கலைச்செல்வமே இப் பகுதியாம் என்னும் உண்மையை உணர்வுடையோர் உணர்வர். ஓரறிவாகியுழக்கும் உயிர்களைப் பேர் அறிவாரும் பிறரில்லை, இன்னவை யாரறிவார் என்று, மரமும் கொடியும் செடியும் புல்லும் பூண்டும் புதலுமாய் அடர்ந்து, தம் வண்ண வண்ணத்த மலரானும், மணத்தானும் மண்ணுலகினை ஒப்பனைசெய்து திகழும் இயற்கைப் பூம்பொழிலின் பெருமையினை வியந்து நின்றார், நல்லிசைப் புலவர் ஆகிய தோலா மொழித்தேவர்; நங் கபிலர்பெருமானோ இவையிற்றின் பெயரெலாம் யாம் அறிகுவம்! என்பார் போன்று, செவ்விய தீவிய வீறுடைய தமிழ்ப்பெயரானே, ஓதுவார் உளம் இனிக்க இனிக்க யாத்தமைப்பாராயினர். இவர், தனித்தனி மலர்களையும் அழகுக்கழகு செய்வாராய்த் தகுதியும், அழகும் இயைந்த அடைமொழியோ டியைத்து, இனிமை நல்கும்படி கூறும் அழகினை ஒண் செங்காந்தள், தண் கயக்குவளை செங்கொடுவேரி, எரிபுரை எறுழம், வான்பூங்குடசம், மணிப் பூங்கருவிளை தூங்கிணர்க் கொன்றை, என இன்னோரன்ன சொற்களைத் தனித்தெடுத்துப் பன்முறை ஓதிஓதி அவைதரும் இன்பத்தை உணர்மின்.

இனி, இம் மலர்களை இவ்விரண்டாய்ப் பிணைக்கும் அழகினை யாம் என்னென்று புகழ்வேம்! ஆம்பல் அனிச்சம் வடவனம் வாகை பயினி வானி தில்லை பாலை நந்தி நறவம் பாரம் பீரம் என இவ்விரண்டாய் இணைத்த இன்சொன்மலர்ப் பிணையலைப் பன்முறை ஓதி அவ்வின்பம் உணர்க. இனி, அடி அடியாய் எடுத்து ஓதுமிடத்தும், வடவனம் வாகை வான்பூங் குடசம் என்றும், குரீஇப் பூனை குறுநறுங் கண்ணி என்றும், விரிமலர் ஆவிரை வேரல் சூரல் என்றும், தில்லை பாலை கல்லிவர் முல்லை என்றும், சேடல் செம்மல் சிறு செங்குரலி என்றும், நிகழும் இன்னோரன்ன அடிகளை மீண்டும் மீண்டும் ஓதி அவைதரும் இன்பத்தை உணர்க.

இனி, மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும் - வண்ண வண்ணத்த மலராய்பு விரைஇய - தண்ணறுந் தொடையல் வெண் போழ்க் கண்ணி -நலம்பெறு சென்னி நாமுற மிலைச்சி எனப் பின்னர்த் தலைவன் கோலம் செய்தமை கூறியாங்குச் சொற் சுருங்கச் செய்யுள் யாத்தலே அமையும்; இருநூற்றறுபத்தோரடிகளே கொண்ட இச்சிறு நூலினகத்தே, மலர்ப்பெயர்களையே அடுக்கி முப்பத்தைந்து அடிகள் யாத்தல் மிகைபடக் கூறலும் வெற்றெனத் தொடுத்தலும் ஆகிய குற்றமாம். பிறவெனில் அற்றன்று; இலக்கணங்கூறும் நூற்பாவினைப் போன்று, சொற்சுருங்கப் பொருள் செறித்தியாத்தல் இலக்கியங்களின் கருத்தன்று; புலவன் பயில்வோருளத்தே நகை முதலிய எண்வகைச் சுவையினையும் எழீஇ இன்புறுத்தும் குறிக்கோளேடே இலக்கியங்களை யாத்தமைத்தல் வேண்டும். எனவே, அதற்கேற்பச் செய்கை செய்யுங்கால், தான் குறித்த சுவையினை எழுப்புதற்குத் தகுந்த சொற்பொருள்களை வேண்டும் அளவு பயில வழங்குதல் இன்றியமையாது வேண்டப்படும். இக்குறிஞ்சிப்பாட்டில், அன்னாய் வாழி என்னும் தொடக்க முதல், சினவா தீமோ என்னும் துணையும் அவலச்சுவையே மிக்குப்பயின்று வருதலின், அதற்கியைபான சொற்களால் செய்யுள் யாத்த கபிலர், இனித் தாம் கருதிய காமச்சுவையினைப் பயில்வோருளத்தே எழுப்புதல் வேண்டி, அதற்கினமாய அழகுணர்ச்சியைத் தூண்டுமாற்றால் இந்நீண்ட அழகுடைய இனிய அடிகளை யாப்பவரானார். ஒரு சுவையிற் பயின்ற மனம், அதனினின்றும் மாறிப் படிப்படியாய், அதனை முரணிய மற்றோர் சுவையின்கட் பயில்தற்கு இத்துணை அழகுடைய அடிகளும் வேண்டும், என்று உணர்ந்தே மனவியல்புணர்ந்த கபிலர் இவ்வாறு புனைந்தோதினர் என்க. இவ்வாற்றானே, அழகுணர்ச்சியின் மாறியமைந்த உளத்திற்கு, மீண்டும் ஒரு முறை இவ்வாறு நீளிதின் ஓதுதல் மிகையெனத் தோன்ற அவ்வழ குணர்ச்சி பதனழிந்து கெடும் என உணர்ந்தேயன்றோ, பின்னர் மலையவும் சுனையவும் என்ற சுருங்கிய அடிகளால் இச் செய்தியையே தலைவன் கோலம் கூறுங்காற் புனைந்ததூஉம் என்க. நல்லிசைப்புலவராகிய கம்பநாடரும், தம் பெருங்காப்பியத்தின்கண்ணே, கடிமணப் படலங்கூறுமுன் எழுச்சிப் படலம், வரைக் காட்சிப்படலம், பூக்கொய் படலம், நீர்விளையாட்டுப்படலம், உண்டாட்டுப்படலம், எதிர்கோட்படலம், உலாவியற்படலம், கோலங்காண் படலம் எனப் பற்பல படலங்களை வகுத்துக்கொண்டு, அவையிற்றில் எங்கும் அழகுணர்ச்சியையும், காமச்சுவையையுமே தூண்டுதற்குரிய செய்யுட்களை மிகுதியாக இயற்றிப்போந்ததூஉம் இக்கருத்தான் என்க. கம்பநாடர், பரந்து பட்டுச் செல்லும் தம் பெருங்காப்பியத்தை நோக்க இத்துணையும் மிகையெனலாகாது வேண்டப்படுவன என்றுணர்ந்து, செய்கை செய்தாற் போன்றே, கபிலருடைய இச்சிறு நூலினும் களவு மணம் நிகழ்தற்கு முன்னர், மழை பொழிதலும், அருவியாடலும், சுனை குடைதலும், மலர் கொய்தலும், கோலங்கோடலும் ஆகிய அழகுணர்ச்சியைத் தூண்டும் செய்திகள் செய்கை செய்யப்பட்டிருத்தலும்; அவை இச்சிறு நூலின் அளவிற்கேற்பவே சுவை பதனழியாத அளவானே அமைந்திருத்தலும் நுண்ணிதின் உணர்ந்து கொள்க.

அஃதொக்கும்; ஈண்டுத் தோழி, தலைவி இருவரும் மாலங்குடையராய்ப் பலகாலும் திரிந்து கொய்து குவிக்கும் மலர்களிற் பெரும்பாலும் சூடும்பூக்காண்டல் அரிதாம்! என்னை?, மாம்பூவும், தெங்கம்பாளையும், எருக்கம்பூவும், இண்டம்பூவும், சூரைப்பூவும், மூங்கிற்பூவும், வாழைப்பூவும், பிறவும் இவ்வுலகிற் பித்தரும் சூடக் காண்கிலேமே! சூடுமரபில்லா இம்மலர்களைக் கொய்து குவித்ததூஉமன்றி, அவையிற்றைப் பல்வேறுருவின் வனப்பமை கோதை யாகப் புனைந்தனம் என்றும், அக்கோதைகளை மெல்லிரு முச்சி கவின்பெறக் கட்டி னேம் என்றும், தோழி கூறுதல் இயற்கைக்கு முரணாய குற்றமாம் பிறவெனின் அற்றன்று, இவ்வாறு கூறியவாற்றால் உலகவழக்கிற்கும் பாடல் சான்ற புலனெறி வழக்கிற்கும் உள்ள வேற்றுமை புலனாம். என்னை? ஐவாய வேட்கை அவாவினால் நுகர்தற்குரிய உண்டி முதலிய பொருள்களையே பொருளாக மதித்தும், தம் சிறுகை முதலிய உறுப்புக்களானும், கருவிகளானும், இயற்றுதற்குரிய சிறு செயல்களையே செயல்களாகப் போற்றியும் வாழும் சிறுமை மாக்கட்குரியது அல்லால், இறைவனாற் படைக்கப்ட்ட எப்பொருளையும், தமக்குரிய பொருளாகக் கொண்டு, அவையிற்றின் அழகினை மனவுணர்ச்சியானே, அமுதுண்ணும் அமரர்போல் ஆரப்பருகி இன்புறும் இயல்புடைய கலைவாணர்க்குரித்தன்று. வேண்டும்பொருள், வேண்டாப்பொருள், இயலுந்தொழில், இயலாத்தொழில் என்பன அவர் திறந்து வேண்டாவாம். அக்கலைவாணர் போன்றே அவர் படைத்த கலையுலகின் வாழும் மாந்தரும் அழகுணர்ச்சி மிக்கவராகுவர். அங்ஙனமாதலானன்றோ அக்குறிஞ்சிக்காட்டின்கண் மலர்ந்த அம்மலரழகிலே மனமயங்கித் திரிந்து திரிந்து சூடத்தகும் சூடத்தகாதென்னும் வேற்றுமையின்றி அழகுமிக்க மலரனைத்தும் கொய்வாராயினர் அம்மகளிர் என்க. அவர் கொய்த அம்மலர்களை, தொடுக்கத்தகும், தொடுக்கத்தகாதென்னும் வேற்றுமையின்றி, இனிய அகவலோசையென்னும் நாரிலே, என்றென்றும் வாடாத நறுமாலையாகத் தொடுத்து, அம்மகளிர் முச்சி கவின்பெறக் கட்டிவிடும் ஆற்றலும், கலைப்பண்பு மிக்க நல்லிசைப் புலவர்க்கே சிறந்துரிமையுடைய இயல்பாகலின், இச் செயல் உலகியற்கை மாத்திரைக்கே முரணென்றும், பாடல்சான்ற புலனெறி வழக்கம் என்னும் கலையுலகிற்கு இயற்கையே என்றும் கொள்க. இங்ஙனம் சிற்சில செய்திகளில் உலக வழக்கொடு ஒத்து நடவாமையானன்றோ வழக்கும் உலகவழக்கும் பாடல்சான்ற புலனெறி வழக்கும் என இரண்டாயினதூஉம் என்க. இனி இவ்வளவானன்றி,

நீள்அர வச்சரி தாழ்கைநி ரைத்தாள்
ஆளர வப்புலி ஆரம ணைத்தாள்
யாளியி னைப்பல தாலியி சைத்தாள்
கோள ரியைக்கொடு தாழ்குழை யிட்டாள்

எனக் கூறும் இலக்கியங்களும் உள; நீண்ட பாம்புகளைச் சிலம்பாகவும், கையின்கண் வளையலாகவும் அணிந்தும் முழங்குகின்ற புலிகளை மலைப்பாம்பாகிய கயிற்றிலே தொடுத்து மாலையாக அணிந்தும், யாளியைத் தாலியாக அணிந்தும், கொலைத்தொழில் வல்ல சிங்கங்களைத் தோடாகச் செவியிடைப் பெய்தும் வாழ்கின்ற மகளிரும் கலையுலகத்தே காணப்படுதல் அறிக. இனி ஈண்டுக் குறிஞ்சித்திணைக்கு உரியவல்லாத பிற திணைப் பூக்களும் இதன்கண் வந்து மயங்கினவாலோவெனின்,

எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த வாகும்

என்னும் புறனடை விதியுண்மையால், அங்ஙனம் மயங்குதலமையும் என்க. மாலங்குடையம் - மயக்கமுடையேம்: தன்மைப்பன்மை. இங்ஙனம் அன்றி ஆசிரியர் நச்சினார்க்கினியர், இதனை மாலங்குடைய எனப் பலவறிசொல்லாகக் கொண்டு மலரோடு இயைத்தனர். பரேரம் புழகு என்பதனை -பருஏர் அம்புழகு எனக் கண்ணழித்துப் பரியதாய் எழுச்சியும், அழகுமுடைய புழகுப்பூ எனப் பொருள் காண்க. புழகு - மலை எருக்கம்பூஎன்றும், செம்பூவும், புனமுருங்கைப் பூவுமாம் என்றும், நச்சினார்க்கினியர் பொருள் விரித்தனர். இனி, கோலம்புனைந்து தலைவியும், தானும் அசோகின் அணி நிழலிலே வீற்றிருந்தமை தோழி விளம்புகின்றாள்.

98-106 : வான்கண் ................ இருந்தனமாக

பொருள் : வான்கண் கழீஇய-மழைபெய்து தன்னிடத்தைத் தூய்தாக்கின, அகல்அறை குவைஇ - அகன்ற பாறையிலே அம் மலர்களைக் குவித்து, புள் ஆர் இயத்த -பறவைகளின் ஓசையாகிய நிறைந்த இசைக் கருவிகளையுடையவாகிய, விலங்கு மலைச் சிலம்பின் - ஒன்றற்கொன்று குறுக்கிட்டுக் கிடக்கின்ற மலைப் பக்கத்துப் புனத்தே, வள் உயிர் தெள் விளி - பெரிய ஓசையினை உடைய தெளிந்த சொற்களை, இடைஇடை பயிற்றி -நடுவே நடுவே கூறி, கிள்ளை ஓப்பியும்-கிளிகளை ஓட்டியும், கிளையிதழ் பறியா - புறவிதழ்களைக் களைந்து, பை விரி அல்குல் - பாம்பின் படத்தைப் போன்று விரிந்த அல்குலுக்கு, கொய்தழை தைஇ - கொய்த தழையினைக் கட்டி உடுத்து, பல்வேறு உருவின் - பலவாக வேறுபட்ட நிறத்தையுடைய, வனப்பு அமைகோதை - அழகமைந்த மலர்மாலைகளை, எம் மெல் இரு முச்சி - எம்முடைய மெல்லிய கரிய முடியிலே, கவின்பெற கட்டி - அழகுண்டாகக் கட்டி, எரி அவிர் உருவின் - நெருப்புப்போல விளங்கும் நிறத்தையுடைய, அம் குழைச் செயலை - அழகிய தளிரையுடைய அசோகினது, தாதுபடு தண் நிழல் - பூந்தாது விழுகின்ற குளிர்ந்த நீழலின்கண்ணே, இருந்தனம் ஆக - யாங்கள் இருந்தேமாக.

கருத்துரை : மழையாலே தூய்தாக்கப்பட்ட பாறையின்கண், யாங்கள் பறித்த மலரைக் குவித்து, பறவைகளின் ஓசையாகிய இன்னிசைக் கருவிகளையுடைய தினைப்புனத்தின்கண், ஒலிமிக்க சொல்லாலே இடையிடையே கூவிக் கிளிகளையோட்டி, அல்குலிடத்தே தழை கட்டியுடுத்து, பன்னிறமலர்க் கோதைகளையும் எம்முடியிலே அழகுண்டாகக் கட்டி, அசோகந் தண்ணிழலிலே இனிதே வீற்றிருந்தனமாக; அப்பொழுது, என்பதாம்.

இனி, 35. நெற்கொள் என்பது தொடங்கி, 106-இருந்தனமாக என்னுந் துணையும் அகன்றுகிடந்த பொருளை, அணுகிய நிலையில் கொண்டு காணுமாறு: சிறுதினைப் படுபுள்ளோப்பி வருக என நீ விடுத்தலால் யாங்களும்போய், இதணம் ஏறி, கிளிகடி மரபின வாங்கி, ஓட்டி, உருப்பவிர் அமயத்து, அருவியாடிச் சுனைகுடைவுழிச் சிலம்பிற் பாயம்பாடி, கூந்தல் துவரிச் சிவந்த கண்ணேம், செங்காந்தள் முதல் புழகீறாக உள்ள மலர்பறித்து, அகலறையிற் குவித்துப் புனத்திலே இடைஇடையே கிளி ஓப்பியும் அல்குலுக்குத் தழைகட்டியுடுத்தும், கோதை உச்சியிலே கட்டியும் அசோக நீழலிலே இருந்தனம்; அவ்வமயத்தே என்க. அவ்வமயத்தே என்றது அடுத்துவரும் நிகழ்ச்சிகளைக் கூறத் தோற்றுவாய் செய்தபடியாம்.

அகலவுரை : வான்-ஈண்டு மழைக்கு ஆகுபெயர். அறை - பாறை; அகல் அறை: வினைத்தொகை. முன்னரே மழைபெய்த காலத்தே தூய்தாய்க் கழுவப்பட்ட பாறைக்கல் என்க. இங்ஙனமே பெரும்பாணாற்றுப்படையினும், புனல்கால் கழீஇய பொழில் என்று வருதல் காண்க. அதற்கு நீர் பெருகிய காலத்தே ஏறிய இடத்தைத் தூய்தாக்கிப்போன பொழில்கள் என்று நச்சினார்க்கினியர் உரைவிரித்தலும் உணர்க. குறுந்தொகையினும், மாசறக் கழீஇய யானை போலப் பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல் என வருதல் காண்க. குவைஇ-குவித்து. ஆர்தல்-நிறைதல். இயம்-இசைக்கருவி. இயத்த : பலவறிசொல். விலங்குதல்-குறுக்கிடுதல். சிலம்பு - ஈண்டுப் புனத்திற்கு ஆகுபெயர். உயிர் தெள் விளி - உயிர்த்தலால் உண்டாகும் தெளிந்த ஓசை எனப் பொருள் காண்க. அஃதாவது, ஆயோ என்னும் சொல். ஆயோ என்னும் சொல் கிளிகடியும் சொல்லெனப் பலரும் அறியும் சொல் என்பாள், தெள்விளி என்றாள். புனங்காவல் கொண்டு ஆயோ என மொழியும் அம்மழலை இன்னிசையால் என வரும் சூளாமணியானும், ஆயோ எனுஞ்சொல் அந்தோ புனத்தை அழிக்கின்றதே என்னும் அரங்கக்கோவையானும் இச்சொல் அன்னதாதலறிக. பை -பாம்பின் படம்; இஃது அல்குலுக்கு உவமை. பல்வேறு உரு- என்றதன்கண் உரு ஈண்டு நிறத்தைக் குறிக்கும்; என்னை? வினை பயன் மெய்உரு என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தின்கண், உரு என்பது, நிறப் பொருட்டாதல் காண்க. அதற்குப் பேராசிரியரும், தொழிலும், பயனும், வடிவும் வண்ணமும் எனப் பொருள் கூறினர். இக்குறிஞ்சிப்பாட்டின்கண் வந்த வேறுபல் உருவில் என்ற தொடரே சிறிது மாற்றத்துடன் பல்வேறுருவில் என ஈண்டு வந்தமை காண்க. ஆண்டு உருவென்றது வடிவத்தை உணர்த்தியது. முச்சி - உச்சி, முடி - எரி-நெருப்பு, அசோகம்பூவிற்கு வண்ணவுவமை. செந்தீ ஒண்பூம் பிண்டி என மதுரைக்காஞ்சியினும்; இக் குறிஞ்சிப்பாட்டிற் பின்னோர் இடத்தினும் இத் தொடர் வருதல் காண்க.

இனி, அசோகமரம் கலைவாணர் கருத்தினைக் கவரும் எழில்மிக்கதொரு மரமே போலும்! அமண் சமயத்தோர் தம் இறையை இத் தருநிழலிலேயே கண்டு போற்றுவாராயினர் ஆதிகவி என்று வடமொழி வாணர் போற்றும் வான்மீகியும் பேரழகியாகிய சீதையை, அரக்கன் பூம்பொழிலில் அசோகின் அணிநிழலிலேயே அமர்த்தினார். ஈண்டுக் கபிலரும், தலைவியை அருவியாட்டி, அணிசெய்து அசோக நீழலிலேயே வீற்றிருக்கச் செய்தனர். அவ்வசோகும்,

எரி அவிர்உருவின் அங்குழைச்
செயலைத் தாதுபடு தண்ணிழல்

என்னுமளவில், அழகு வீற்றிருத்தற்குத் தகுதியாய தண்ணிழல் விரித்துத் தீப்பிழம்புகள் தொகுத்தாற்போன்று எழிலுற மலர்ந்து, அழகிய தளிர்களோடே, தன் நிழலிலே வீற்றிருக்கும் அவ் வழகிய மகளிரின்மேல், பொற்சுண்ணம் தூவினாற்போன்று, தன் மலர்சொரியும் பூந்துகளை வீழ்த்து விளங்குதல் நம் மனக்கண்முன் தோன்றுகின்றதன்றோ! கபிலருடைய உளத்தை அசோகமரம் பெரிதும் கவர்ந்ததெனற்கு அவர் நற்றிணையினும் செயலைத் தோன்றும் நற்றார் மார்பன் என அசோகந் தண்ணீழலிலேயே தலைவனைக் காட்டுதலும் சான்றாம் என்க. 107. எண்ணெய் என்பது முதல், 142. என்றனன் என்னுந் துணையும், ஒரு தொடர். இதன்கண், தலைவன் கோலம்பூண்டு வருகின்ற காட்சியும், அவனைத் தொடர்ந்துவரும் வேட்டைநாய்களின் இயல்பும், அவை தோழி, தலைவி இருவரையும் வளைத்துக்கோடலும், அவர்கள் அஞ்சி ஓடுதலும், தலைவன் அவர்கள்பால் விருப்பத்தோடே அணுகி நாய்களை அடித்து ஓட்டி, அவருடன் உரை நிகழ்த்தலும், தலைவியின் எழிலினைப் பாராட்டுதலும், பிறவும் கூறப்படும்.

107-116 : எண்ணெய் ...................... மிலைச்சி

பொருள் : எண்ணெய் நீவி - பலகாலும் எண்ணெய் பெய்யப்பெற்ற, சுரிவளர் -கடைகுழன்று வளர்ந்து, நறுகாழ் - நல்ல கருநிறமமைந்த, தண் நறு தகரம்-குளிர்ந்த நறிய மயிர்ச் சந்தனத்தை, கமழ-மணக்குமாறு, மண்ணி-பூசி முழுகி, ஈரம் புலர-அந்த ஈரம் உலருமாறு, விரல் உளர்பு விரலாலே அலைத்து, அவிழா-சிக்குவிடுத்து, காழ்அகில் அம்புகை-வயிரத்தினை யுடைய அகிலினது அழகிய புகையை, கொளீஇ - ஊட்டுதலாலே, யாழ் இசை - யாழ் ஓசையைப் போன்று, அணி மிகுவரி-அழகு மிகுகின்ற பாட்டினையுடைய, மிஞிறு-வண்டுகள் ஆர்ப்ப - ஆரவாரிக்கும்படி, தேம் கலந்து - அகிலின் நெய்ப்புக் கலக்கப் பெற்று, மணிநிறம் கொண்ட - நீலமணியின் நிறத்தைத் தன்னிடத்தே கொண்டுள்ள, மா இரு குஞ்சியின் -கரிய பெரிய மயிரினையுடைய, நலம்பெறு சென்னி -நன்மையைப் பெற்ற தலையினிடத்தே, மலையவும் - மலையிடத்துள்ளனவும், நிலத்தவும் - நிலத்தின்கண் உள்ளனவும், சினையவும்-கொம்புகளிடத்தே பூத்தனவும், சுனையவும் - சுனைகளிற் பூத்தனவும் ஆகிய, வண்ண வண்ணத்த மலர்-பல்வேறு வண்ணம் வடிவம் மணங்களையுடைய மலர்களை, ஆய்பு-ஆராய்ந்து, விரைஇய - தொடுத்த தண் நறு தொடையல்-குளிர்ந்த நறிய தொடையலினையும், வெள் போழ் கண்ணி - வெண்டாழை மடலாலே இயன்ற கண்ணியினையும், நாம் உற - முருகனோ என்று கண்டோர் அச்சமுறும்படி, மிலைச்சி-சூடி.

கருத்துரை : பலகாலும் எண்ணெய் பெய்யப்பெற்றமையாலே, சுரிந்து வளர்ந்து, நல்ல கருநிறம் அமையப்பெற்றதும், நறிய மயிர்ச் சந்தனம் பூசப்பெற்று முழுகி, அந்த ஈரம் புலரும்படி விரலால் அலைத்துப் பிணிப்பு விடுத்ததும், அகிற்புகையானே நெய்ப்பூட்டப் பெற்றதும், நீலமணி போன்ற நிறமுடையதும் ஆகிய, கரிய பெரிய குஞ்சியுடைமையாலே நலமுடைய தலையிடத்தே, தொடையலையும், கண்ணியையும் கண்டோர் முருகன் என்று அஞ்சும்படி சூட்டி, என்பதாம்.

அகலவுரை : சுரிந்து வளர்தற்குப் பலகாலும் எண்ணெய் நீவுதலை ஏதுவாகக் கூறினர் என்க. இவ்வாறே சிந்தாமணியினும் தலைமயிர் வளம்படுதற்கு,

எண்ணெயும் நானமும் இவைமூழ்கி இருள் திருக்கிட்டு
ஒண்ணறுந் துகிற்கிழி பொதிந்துறை கழித்தன போற்
கண்ணிருண்டு நெறிமல்கிக் கடைகுழன்ற கருங்குழல்கள்
வண்ணப்போ தருச்சித்து மகிழ்வானாத் தகையவே

எனத் தேவர் கூறியதூஉம் காண்க. சுரிதல்-சுருளுடையதாதல். குழலுதல் என்றும் கூறுப. நறுங்காழ் - நல்ல கருநிறம். இது மயிர்ச் சந்தனத்திற்கு அடைமொழி. மயிர்ச்சந்தனம் கருநிறமாயிருத்தல் இன்றியமையாமையின் ஆசிரியர் இவ் வடைமொழி தந்து கூறியதறியாது நறுங்காழ் என்னுமிதனைப் பிரித்து அகில் என்பதனோடே கூட்டினர் நச்சினார்க்கினியர். நறுங்காழ்த் தண்ணறுந் தகரம் மண்ணி ஈரம் புலர விரல் உளர்பு அவிழா என்றது, மயிர்ச்சாந்தம் பூசி நீரின் முழுகி அந்த ஈரம் உலர விரலாலே அலைத்து அதன்கண் சிக்குகளையும் பிரித்து என்றவாறு. அங்ஙனம் சிக்கறுத்த பின்னர் அகிற் புகையூட்டி மணமேற்றினர் என்க. தேம் கலந்து அகிற்புகையாலாய நெய்ப்புக் கலந்தென்க. மணமிகுதி கூறுவார், மிஞிறார்ப்ப என்றார். அந்த மணத்தை விரும்பி வண்டுகள் ஆரவாரித்து மொய்த்தன என்றபடி. ஞிமிறு என்றே இப்பெயர்ச்சொல் இலக்கியங்களிற் பயில வழங்குவதாம்; மிஞிறு என்றல் எழுத்துநிலை மாறுதல் என்ப. சிவிறி விசிறி எனப்படுமாறு போல என்க. மணி-ஈண்டு மரகதமணி. தலைமயிரின் நிறத்திற்கு இஃது உருவுவமை. நீலமாய்ச் சுரிந்த குஞ்சி எனவும், இந்திர நீலமொத்திருண்ட குஞ்சி எனவும் பிறரும் கூறுதல் காண்க. இவ்வாறு, பண்டைக் காலத்துத் தண்டமிழ் நாட்டு மாந்தர் தம் தலைமயிரினைப் பேணிய செயல் அவர் நாகரிகத்திற்குச் சான்றாதலறிக. இதனை,

பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத் திருவகை ஓமா லிகையினும்
ஊறிரு நன்னீர் உரைத்த நெய் வாசம்
நாறிருப் கூந்தல் நலம்பெற ஆட்டி
கயி லர்த்திய பூமென் கூந்தலை  (சிலப்-கடலா : 76-80)

என்னும் சிலப்பதிகாரப் குறள்களானும், அப் பகுதிக்கு அடியார்க்கு நல்லார் விரித்த உரையானும் நன்குணர்க. மண்ணுதல் - நீராடல். உளர்பு : செய்பு என்னும் எச்சம் வாய்பாட்டு வினை எச்சம். உளர்தல் தலை மயிரின் ஊடே விரல்களைச் செலுத்தி அலைத்து வார்தல் என்க. அவிழ்த்தல் சிக்குவிடுத்தல், மா இரு குஞ்சி என்றதன்கண் மா-கருமை என்றும், இரு -பெருமை என்றும் பொருள் கொள்க. வரி ஞிமிறு என்புழி வரி - இசைப் பாட்டென்னும் பொருட்டு ஆற்றுவரி, கானல்வரி, என்னுமிடத்தே வரி இப் பொருட்டாதல் காண்க. மலைய நிலத்த சுனைய சினைய - என்பன பலவறி சொற்கள். அவ்வவ்விடத்துள்ள மலர்களைக் குறித்து நின்றன என்க. வண்ண வண்ணத்த என்றது பல்வேறு நிறம் வடிவம் மணம் முதலிய பண்பு வேறுபாடுகளை உணர்த்தியவாறு. தொடையல், கண்ணி என்பன மாலையின் கண் வேற்றுமை குறித்தன. போழ் - மடல். நாம் - அச்சம்; பே நாம் உரும் என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும் அச்சக் கிளவி என்பது சூத்திரம். தொடையலும், கண்ணியும் சூட்டி ஒப்பனை செய்யப்பட்ட தலைவன் முருகக் கடவுளைப் போன்று தோன்றுதலால் கண்டோர் தெய்வம் என்று அஞ்சினர் என்க. இதனானே தலைவன் எழில் நலங்கூறலின் ஏத்தல் கூறினள் ஆயிற்று. முருகு முரண் கொள்ளும் தேம்பாய் கண்ணி என்றார் பிறரும். கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி மடந்தை பொருட்டால் வருவ திவ்வூர், அறுமுகமில்லை அணிமயிலில்லை குறமக ளில்லை செறிதோ ளில்லை கடம்பூண் தெய்வமாக நேரார் மடவர் மன்றஇச் சிறுகுடி யோரே (சிலப்-24:18) என்னுமிடத்தும் தலைவன் முருகனைப் போன்று உளன் என்றும் முருகன் என்றுணராமைக்குச் சிறு குடியோரை மடவர் என்றமையும் இக்கருத்தை வலியுறுத்தும். இதுவும் தலைவன்றிறம் கூறுவதேயாம்.

117-122 : பைங்கால் ............................. பொலிய

பொருள் : பைங்கால் பித்திகத்து - பசிய காம்பினையுடைய பிச்சியினுடைய, ஆய் இதழ் அலரி - நுணுகிய இதழ்களையுடைய பூவானே தொடுக்கப்பெற்ற, அம் தொடை - அழகிய தொடையலாகிய, ஒருகாழ் - ஒரு மாலையை, வளைஇ-தலைமயிரின்கண் சுற்றி, செந்தீ - செவ்விய நெருப்புப் போன்ற, ஒள் பூ பிண்டி -ஒள்ளிய பூக்களையுடைய அசோகினது, அம் தளிர் - அழகிய தளிரினை, ஒரு காது செரீஇ-ஒரு காதிலே செருகி, குவவு மொய்ம்பு அலைப்ப - அத்தளிர் திரண்ட தோளின்கட் கிடந்து அலைப்ப, சாந்து அருந்தி - சந்தனத்தை மிகப் பூசி, மைந்து இறை கொண்ட-ஆற்றல் தங்கிக் கிடந்த, மலர்ந்து ஏந்து அகலத்து - அகன்று விரிந்த மார்பினிடத்தே, தொன்றுபடு நறுதார் - தொன்று தொட்டணியும் மரபினவாகிய நறிய மாலை, பூணொடு - அணிகலன்களோடே, பொலிய-கிடந்து பொலிவு பெற;

கருத்துரை : தலைமயிரின்கண்ணே பிச்சிப் பூவானியன்றதொரு மாலையினைச் சுற்றி, தீப்பிழம்பு போன்ற அசோகந் தளிரினைத் தோளிலே கிடந்து அலைக்கும்படி ஒரு காதிலே செருகி, சந்தனம் மிகுதியாகப் பூசிய அகன்று விரிந்து ஆற்றல் தங்கிய மார்பிடத்தே நறிய மலர்மாலையும் அணிகலனும் கிடந்து திகழ, என்பதாம்.

அகலவுரை : ஆய் இதழ் - ஆராய்ந்த இதழ் எனினுமாம். காழ் - மலர் வடம்; இதனைச் சரம் என்ப வடநூலோர். ஒருகாழ் விரன்முறை சுற்றி மோக்கலும் என்னும் கலியினும் காழ் இப்பொருட்டாதல் காண்க. பித்திகம்-அந்திப் போதில் மலரும் பூ வென்பர் நச்சினார்க்கினியர். இனி அந்தளிர்க் குவவு மொய்ம் பலைப்ப எனச் சொற்கிடந்தவாறே அழகிய படலைமாலை தோளிற் கிடந்து அலைப்ப எனினுமாம். தாமரைக் கொழு முறியினையும், அதன் மலரினையும், குவளையையும், கழுநீரையும், உடைய மாலையினைத் தளிர்ப் படலை என்பவாகலின். இதனை,

தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க்
காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப்
பைந்தளிர்ப் படலை  (சிலப்-4 : 39-41)

எனவரும் சிலப்பதிகாரத்தான் உணர்க. பிண்டியந் தளிரைக் காதிற் செருகுதல் வண்காது நிறைந்த பிண்டி ஒண்டளிர் என்னும் திருமுருகாற்றுப்படையான் உணர்க. சாந்து அருந்திய தென்றது சந்தனத்தை மிகுதியாகப் பூசிய என்றபடி. மையுண்கண் என்புழிப் போத ஈண்டு அருந்துதல் பூசுந் தொழிற்காயிற்று. தொன்றுபடு நறுந்தார் என்றது, தொன்றுதொட்டு அணியும் மரபிற்றாய உரிமையுடைய மலர்மாலை என்க. என்னை?

படையும் கொடியும் குடையும் முரசும்
நடைநவில் புரவியும் களிறுந் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசற் குரிய  (தொல்.மர-71)

என ஓத்தின்கண் உரிமை கூறியாங்கு, இன்னார்க்குரிய எனத் தொன்று தொட்டு வழங்கும் உரிமையையுடைய தார் என்றவாறு. நச்சினார்க்கினியர் தொன்றுபடு என்னும் சொல்லைப் பிரித்துப் பூணொடு பொருத்துவாராயினர், மைந்து - ஆற்றல்; அழகுமாம். ஆதலின் அழகு இறைகொண்ட மார்பெனவும் இரட்டுற மொழிந்துகொள்க. என்னை? சிலப்பதிகாரத்தில்,

செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்தொழுக
மைந்தா ரசோகம் மடலவிழ  (சிலப்.வேனில்: வெண்பா-1)

என்றவிடத்து மைந்து அழகென்னும் பொருட்டாதலறிக. இறை - தங்குதல். எப்பொருளினும் தங்கும் கடவுளை இறை எனல் இப்பொருள் பற்றியே என்க.

123-127 : செம்பொறி .............. கலாவ

பொருள் : செம்பொறிக்கு ஏற்ற - செவ்விய இலக்கணமுடைய கோடுகளொடு பொருந்திய, வீங்கு இறை தட கையின் - பூண் இறுகின முன் கையையுடய, பெரிய கையிலே, வண்ணம் வரி வில் ஏந்தி - வண்ணத்தையுடைய வரிந்த வில்லை எடுத்து, அம்பு தெரிந்து - அம்புகளை ஆராய்ந்து பிடித்து, நுண் வினை கச்சை-நுணுகிய தொழிற் றிறனமைந்த கச்சைக் கட்டின சேலையினை, தயக்கு அற கட்டி - துளக்கமில்லாதபடி கட்டி, இயல் அணி பொலிந்த - இயற்கையான அழகாலே பொலிவு பெற்ற, ஈகை வான் கழல் - பொன்னாலாய உயர்ந்த வீரக்கழல், துயல் வரும் தோறும் -அடிபுடை பெயர்த்திட்டு இயங்குந்தோறும், திருந்து அடி - பிறக்கிடாத அடியிலே, கலாவ - உயர்ந்துந் தாழ்ந்தும் அசையா நிற்ப;

கருத்துரை : சிறந்த இலக்கண மமைந்த கோடுகளோடே பொருந்திய பெரிய கையிலே, வண்ண வரிவில்லை எடுத்துச் சிறந்த அம்புகளை ஆராய்ந்து பிடித்து, நுண்வினைக் கச்சையை வரிந்து கட்டி, அடியிடுந்தோறும் வீரக்கழல் ஏறியிறங்கி அசைய, என்பதாம்.

அகலவுரை : செம்பொறி என்பதன்கண் உள்ள செம்மை ஈண்டுத் தலைமைத் தன்மை குறித்து நின்றது. எனவே உயரிய இலக்கண மமைந்த கோடு என்பதாம். இனி, பொறி - அடையாளம் எனக் கொண்டு சிறந்த அடையாளமுடைய கை யெனினுமாம்; அஃதாவது முழந்தாளளவு நீண்டு தூங்குதல் முதலிய அடையாளமுடைய கை என்க. இறை-முன்கை. செம்பொறி ஈண்டு இறைக்கு அடையாக நின்றது. இவ்வாறு கூறாது ஆசிரியர் நச்சினார்க்கினியர், 123 ஆம் அடிக்கட் பயின்ற செம்பொறி என்னுமிச் சொல்லைப் பிரித்தெடுத்து 121ஆம் அடிக்கட்போந்த அகலத்திற்கு அடையாக்குவர். செம்பொறி, அகலத்திற்கு அடையாதல் வேண்டும் என்னும் கருத்து நூலாசிரியர்க்குளதாயின் செம்பொறியகலம் என ஆண்டே கூறியிருப்பரன்றே! அகலத்திற்கு அடைமொழியாக்கக் கருதிய நூலாசிரியர் செம்பொறிக்கேற்ற வீங்கிறை எனக் கூறினர் என்றல் எவ்வாறு பொருந்தும்? இவ்வாறு கொண்டு கூட்டுதல் நூலாசிரியர் கருத்தைத் தவிர்த்துத் தம் கருத்தையே கூறுதலன்றிப் பிறிதென்னாம்? வண்ணம்-அழகு. வண்ணம் நிறம் எனக் கொண்டு வண்ணந் தீற்றிய வில்லெனினுமாம். வரி வில் : வினைத் தொகை. வரிந்து கட்டப்பட்ட வில்லென்க. தெரிதல் - ஆராய்ந்து எடுத்தல். நுண்வினை - நுணுக்கமான தொழிற்றிறமுடைமை. தொழில் - ஈண்டுக் காருகத் தொழில்.

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினைக் காருகர்  (சிலப். 5: 16-17)

என்றார் ஆசிரியர் இளங்கோவடிகளாரும். தயக்கு - அசைவு. இயல் அணி - இயற்கையழகு. ஈகை - பொன். ஈகைவான் கொடியன்னார் என்னும் சிலப்பதிகார அடிக்கு அடியார்க்கு நல்லார் பொன்மெய் வானவல்லி என்று பொருள் கூறியமையும் உணர்க. அணி நகையிடை யிட்ட ஈகையங் கண்ணி என்ற கலியினும் ஈகை, பொன் என்னும் பொருட்டு. துயல்-இயங்குதல். வருதல் : பகுதிப் பொருளது. கலாவல் - அசைதல்.

128-132 : முனைபாழ் .................... நெரிதர

பொருள் : முனை பாழ் படுக்கும் - பகைப்புலத்தைப் பாழ் செய்யும், துன் அரும் துப்பின் - கிட்டுதற்கரிய பேராற்றலுடைய, பகை புறம் கண்ட-பகைவர்களை முதுகு கண்ட, பல்வேல் இளைஞரின் - பலவாகிய வேலினையுடைய இளமையுடைய மறவர் போன்று, உரவு சினம் செருக்கி - மிகுகின்ற சினத்தாலே செருக்குற்று, துன்னுதொறும் - நெருங்குந்தோறும், வெகுளும் - சினக்கும் இயல்புடைய, முளை வாள் எயிற்ற - மூங்கில் முளை போன்ற ஒளியுடைய பற்களையுடையவாகிய, வள் உகிர் - பெரிய நகங்களையுடைய, ஞமலி - நாய்கள், திளையா கண்ண - இமைத்தலில்லாத கண்ணையுடையவாய், வளைகுபு நெரிதர - எம்மை வளைத்துக்கொண்டு நெருங்கி வருகையாலே;

கருத்துரை : பகைப்புலம் பாழ்படுத்தும் பேராற்றலுடைய பகைவரையெல்லாம் முதுகு கண்ட வேன்மறவர் போன்று, நெருங்குந் தோறும் வெகுளும் இயல்புடைய முளைவாள் எயிற்று வள்ளுகிர் நாய்கள் இமையாத கண்ணையுடையவாய் எம்மை வளைத்துக்கொண்டு நெருங்கி வருகையினாலே, என்பதாம்.

அகலவுரை : முனை - பகைவர்கள் போர்முனை, போர்க்களம். துன்னுதல் - நெருங்குதல். பல்வேல் என்றது பல்வேறு வடிவங்களிலே அமைக்கப்பட்ட வேல் என்றபடி. இனி, பலராகிய வேலிளைஞர் என இளைஞர்க் கேற்றினுமாம். துப்பு-ஆற்றல்; இதனைச் சிலப்பதிகாரத்தில் வேதினத் துப்பவும் என்னுமிடத்துக் கருவி எனப் பொருள் கூறலின், அங்ஙனம் கொள்ளினும் அமையும். பல் வேலிளைஞர் போல வெகுளும் ஞமலி என வினையுவமமாக்குக. ஆற்றல்மிக்க பகைவர்களையும் புறங்கண்ட வேலிளைஞர் செருக்குமிக்குடையராய்ச் சினத்தல் உடையராதலின் இங்ஙனம் கூறினர் என்க. துன்னுதொறும் என்றது தம்மைப் பிற நெருங்குந்தோறும் என்றும், தாம் பிறவற்றை நெருங்குந்தோறும் என்றும் இருவகையானும் விரித்தற்கு ஏதுவாய் நிற்றலின் அவ் விருவகையானும் விரித்துரைத்துக் கொள்க. வில் வீரர் சினக்குமிடத்து வில்லை நாணேற்றலும், வாள் வீரர் சினக்குமிடத்து வாளினை உறை கழித்தலும் வேண்டும்; வேல் வீரர் சினந்தவுடன் ஞெரேலெனக் குத்துவராகலின், ஞெரேலெனச் சினந்தவுடன் கடிக்கும் நாய்க்கு வேல்வீரர் தக்க உவமையாயினர் என்க.

திளையாக் கண்ண துன்னுதொறும் வெகுளும் முளைவாள் எயிற்ற வள்ளுகிர் ஞமலி என்னும் சொற்றொடர் ஓதுவோருளக்கண் முன்னர், அச்சுறுத்தும் கொடிய தோற்றமுடைய சினமிக்க பெரிய வேட்டை நாய்க் குழுவினைக் கண்கூடாக உருவாக்கிவிடுதலும், அதனால் அச்சச்சுவை தோன்றலும் உணர்க. இங்ஙனம் பொருள் புலப்படுத்தும் தன்மையை மெய்ப்பாடென்னும் செய்யுள் உறுப்பெனத் தொல்காப்பியனார் நுண்ணிதின் ஆராய்ந்து கூறினர். தேவருலகங் கூறினும் அதனைக் கண்டாங்கு அறியச் செய்தலே மெய்ப்பாடென்னும் உறுப்பாம் என்றும், இக் கருத்தினாற் கவி கண் காட்டும் எனவும் சொல்லுப என்றும் பேராசிரியரும் கூறிப்போந்தனர் என்க. வேட்டைநாய்கள் ஒன்றனைப் பற்ற முயல்வுழி, அது தப்பிவிடாதவாறு நாற்புறமும் வளைத்துக்கொள்ளும் இயல்புடையன; ஒருகால் தோழியையும் தலைவியையும் அசோகந் தண்ணிழலிற் கண்ட அஞ்ஞமலிகள், இரண்டு மான்பிணைகள் உளவெனக் கருதி வளைத்தனபோலும். இங்ஙனம் ஞமலியால் வளைப்புண்டேம் என்று தோழி கூறியவுடன், செவிலி தன் தலையை உயர்த்து ஆ! அப்படியா! பின்னர் நுங்கள் நிலை என்னாயிற்று! விரைந்து சொல்க! என்னும் குறிப்போடே தோழியை நோக்கியிருப்பள் அன்றோ? அங்ஙனம் நோக்கிய செவிலிக்கு இனி, ஞமலி கண்டஞ்சிய தங்கள் நிலையினையும், அவ்வழித் தலைவன் தோன்றித் தமக்குப் புகலாய்க் காத்துத் தலையளி செய்தமையையும் தோழி கூறுகின்றாள்.

133-142 : நடுங்குவனம் .......................... என்றனன்

பொருள் : நடுங்குவனம் - அந்நாய்கள் நெருங்கி வருதலாலே பெரிதும் அஞ்சினேமாய் நடுங்கி, எழுந்து - அசோகந் தண்ணிழற் கீழிருந்த எம் இருக்கை குலைந்து எழுந்து, நல்லடி தளர்ந்து - விரைந்து செல்லுதற்கியலாதபடி அடி தளர்தலாலே, இடும்பை கூர் மனத்தேம்-வருத்தமிக்க நெஞ்சினேமாய், மருண்டு - மயங்கி, புலம்படர-வேறிடம் நோக்கி விரையாநிற்ப, மாறுபொருது ஓட்டிய - தனக்கு மாறாகிய விடைகளை எல்லாம் போர் செய்து தொலைத்தமையாலே, புகல்வின் - மனச்செருக்கு மிக்க வேறு புலத்து ஆகாண் விடையின் - தான் முன்னர் அறிந்திராத புதியவிடத்தே புதுவதாகிய ஆவினைக் கண்ட ஏற்றினைப்போன்று, அணிபெற - அழகுமிக, வந்து -எம்பால் எய்தி, எம் அலமரல்-எங்கள் மனச் சுழற்சியாலே, ஆயிடை - அவ்வமயத்தே, வெரூஉதல்-யாங்கள் அஞ்சுதற்கு, அஞ்சி - தான் அஞ்சி, மெல்லிய இனிய - மென்மையும் இனிமையுமுடைய சொல்லை, மேவர - எமக்குப் பொருந்துமாற்றானே, கிளந்து - இயம்பி, எம் ஐம்பால் - எம்முடைய ஐந்து வகைத்தாய கூந்தலின், ஆய் கவின் ஏத்தி - பலரும் ஆராய்ந்த அழகினைப் புகழ்ந்து பாராட்டி, ஒண்தொடி - ஒளியுடைய வளையலினையும், அசை மென் சாயல் - அசைந்த மெல்லிய சாயலினையும், அ வாங்கு உந்தி - அழகிதாய் வளைந்த கொப்பூழினையும், மடம் மதர் மழைக்கண் - மடப்பத்தையுடைய மதர்த்த குளிர்ந்த கண்ணினையும் உடைய, இளையீர்-இளையீரே, இறந்த கெடுதியும் - இவ்விடத்தே தப்பிப் போந்த கெடுதியும், உடையேன் - உடையேன், என்றனன் - என்று கூறினான்.

கருத்துரை : அவ்வாறு அந்த ஞமலிகள் எம்மை வளைத்து நெருங்கி வருகையால், யாங்கள் பெரிதும் அஞ்சினேமாய் நடுங்கி, அடிதளர்ந்து, வருத்தமிக்கு, எழுந்து வேற்றிடம் நோக்கி ஓடா நிற்ப; தன் பகை விடைகளை அடர்த்தோட்டிய செருக்குடன், அயலிடத்துப் பசுவினைக் கண்ட ஏறுபோல அழகுமிக, எம்பால் வந்து, யாம் அஞ்சியதற்குத் தான் அஞ்சியவனாய், இன்சொல் எமக்குப் பொருந்த இயம்பி, எம் அழகைப் பாராட்டி, இளையீர் ! இறந்த கெடுதியும் உடையேன், என்று கூறினான், என்பதாம்.

107. எண்ணெய் நீவி என்பது தொடங்கி, 142, என்றனன் என்னுந் துணையும் அகன்று கிடந்த இத் தொடரின் பொருளை அணுக வைத்துக் காணுமாறு : எண்ணெய் நீவி, தகரம் மண்ணி, அவிழா, புகை கொளீஇ; தேங்கலந்து, மணிநிறம் கொண்ட குஞ்சியின் நலம்பெறு சென்னியிடத்து, மலர் ஆய்வு விரைஇய, தொடையலும் கண்ணியும் மிலைச்சி, பித்திகத்து ஒரு தொடை சுற்றி, தளிர் ஒரு காது செருகி, அகலத்தில் தாரும் பூணும் பொலிய, வில்லேந்தி, அம்பு தெரிந்து, கச்சைக்கட்டி, திருந்தடி கலாவ, ஞமலி வளைதர மருண்டு புலம் படரும் எம்பால், ஆகாண் விடையின் வந்து, இன்சொல் இயம்பி, அணிநலம் புகழ்ந்து, இளையீர்! இறந்த கெடுதியும் உடையேன் என்றனன், என்க.

அகலவுரை : நடுங்குவனம் : தன்மைப்பன்மை; ஈண்டு முற்றெச்சமாய் நின்றது. அடிதளர்தல் - மனம் அச்சத்தாற் சுழலலாலே ஏற்பட்ட மெய்ப்பாடென்க. நடுங்குவனம் எழுந்து நல்லடி தளர்ந்து யாம் இடும்பைகூர் மனத்தேம் மருண்டுபுலம் படர என்னும் அடிகள் அச்ச மெய்ப்பாடு கூறின. இவற்றுடன் அச்ச அவிநயம் ஆயுங்காலை, ஒடுங்கிய வுடம்பும் நடுங்கிய நிலையும், அலங்கிய கண்ணும் கலங்கிய உளனும், கரந்துவர லுடைமையும் கையெதிர் மறுத்தலும், பரந்த நோக்கமும் இசைபண் பினவே, (சிலப்.அரங்.உரை) என்னும் அச்சமெய்ப்பாடுகளை ஒப்புக் காண்க.

அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே  (தொல்.மெய்-8)

என்றதன்கண், ஈண்டு விலங்கு பற்றி அச்சம் பிறந்தது. ஆனேறு, தன்னினமாகிய வேறு ஏற்றினைக் கண்டவுடன் சினங்கொண்டு போராற்றும் இயல்புடையது. போரிடத்தே வெற்றியுற்ற விடை செருக்குடன் பீடுநடை கொள்ளலும், அழகுறத் தோன்றலும் இயல்பு. ஆகலின் மாறுபொரு தோட்டிய விடை என்றாள். மேலும், தான் பயிலும் நிரையின்கண் உள்ள ஆன்களிடத்தில் வேட்கை கொள்ளுதலினும் பார்க்கப் புதுவதாகக் கண்ட அயற்புலத்து ஆனிடத்தே அளவிலா வேட்கைகொள்ளலும் ஆனேறுகட்கு இயல்பாம். இதனைத் தலைவன் வேட்கையுரைத்தற்குத் தோழி கூறினாள் என்க. இவ்வாறு ஆனேறு முதலியவற்றின் இயல்பினை ஓர்ந்து, அவையிற்றை உவமையாகக்கொண்டு செய்யுள் யாக்கும் கபிலர் திறமும் ஈண்டுப் போற்றற்பாலதாம். வெரூஉதல் அஞ்சி என்றது யாங்கள் அஞ்சியதற்குத் தான் அஞ்சி என்றபடியாம். என்னை? தன் ஞமலிகள் இம்மகளிரை அஞ்சுவித்தலால், அவர்கள் அங்ஙனம் அலமந்து ஓடநேர்ந்தமைக்குத் தானே காரணமாதல் கருதித் தலைவன் அஞ்சினன் என்க. மகளிரை அச்சுறுத்தல் பெருமையும் உரனும் உடைய ஆடவர்க்குப் பழிதரும் என்றே தலைவன் அஞ்சினமையால் இவ்வச்சம் அவனுக்கு இழுக்காமல் பெருமையே தருவதாயிற்று என்க.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில் (குறள்-428)

என்பவாகலின் அச்சம் தலைவன் அறிவுடைமையைச் சிறப்பித்து அவனுக்குப் புகழே தந்தது.

இனி, புதியராகிய மகளிர்பால் அயலானாகிய தான் செல்லுமிடத்தே அவர் அஞ்சுவரே எனத் தான் அஞ்சி, அவ்வாறு அஞ்சாமைக்கு மெல்லிய இனிய மேவரக் கூறி என இயைப்பினுமாம். இதன்கண் மெல்லிய இனிய மேவரக் கிளந்து என்றது ஏதீடு கூறியபடியாம். என்னை? எம்மிடுக்கட்போதின் எம்மைத் தலைப்பட்டு எம் அச்சந் தவிர்த்து இனிய கூறித் தலையளி செய்தான் தலைவன் என்றல் தோழியின் கருத்தாகலின் என்க. எண்ணெய் நீவி என்பது முதல் விடையின் வந்து என்னுந் துணையும், ஏத்தல் கூறியவாறாம். மெல்லிய இனிய என்பன பலவறி சொற்கள். மென்மை - மெல்லோசையுடையவாதல்; இனிமை கேட்டார்க்கு ஓசையானும் பொருளானும் பயனானும் இனிமையுடைத்தாதல்; அவையிற்றை :

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்  (திருக்-91)

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்  (திருக்-93)

நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல்  (திருக்-97)

என்னும் அருமைத் திருக்குறட் பாக்களான் நன்குணர்க. புதியராகிய யாங்கள் ஐயுற்றஞ்சாதபடி எம்முளத்திற்குப் பொருந்தக் கூறினான் என்பாள், மேவரக்கிளந்து என்றாள். அவை அஞ்சலோம்புமின் என்றாற்போன்ற அருண்மொழி கிளத்தல் என்க. குழல் அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என்னும் ஐந்து பகுதியானே ஒப்பனை செய்யப்படுதல்பற்றிக் கூந்தல்-ஐம்பால் எனப்படும். கவினேத்தி என்றது எங்கள் நலத்தைப் பாராட்டி என்றபடி. நலம் பாராட்டுதல் ஒரு துறை என்ப. அதனை,

நில்என நிறுத்தான் நிறுத்தே வந்து
நுதலும் முகனும் தோளும் கண்ணும்
இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ
ஐதேய்ந் தன்று  பிறையும் அன்று
மைதீர்ந் தன்று மதியும் அன்று
வேயமன் றன்று மலையும் அன்று
பூவமன் றன்று சுனையும் அன்று
மெல்ல வியலும் மயிலும் அன்று
சொல்லத் தளரும் கிளியும் அன்று
என வாங்கு
அனையன பல பாராட்டி  (கலித்-55)

எனவரும் கலியானுணர்க. அசைமென் சாயல் - ஆடிய மெல்லிய சாயல் என்க. ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள் என்றார் இளங்கோவடிகளாரும். ஆடிய சாயல் என்ற தொடர்க்கு அசைந்த சாயல் என்றே பொருள் கூறினர் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர். இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர் அசை என்றதனைப் பிரித்து இளையீர் என்றதனோடு இணைத்து, அசைகின்ற இளையீர் என ஏதும் சிறப்பின்றி உரைப்பாராயினர். சாயல் -மென்மை; அஃதாவது மெய்வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐந்து பொறிகளானும் நுகர்தற்குரியதாய் மகளிர்பாற் கிடந்ததொரு மென்மைப் பண்பென்க. இம் மென்மையினைத் தந்து காட்டலாகாதென்றும், மனனுணர்ச்சியானே நுகர்தற்பாலதென்றும் தொல்காப்பியனார் கூறினர். இறந்த கெடுதி - தன்னின் அகன்று போயது என்னும் பொருட்டு. கெடுதிவினாதல் என்பது ஒரு துறை என்ப. கெடுதியாவன யானை புலி மான்மரை முதலியனவும், நெஞ்சும் உணர்வும் இழந்தேன் அவை கண்டீரோ? என வினவுவன பலவுமாம். இவையிற்றை,

நறைபரந்த சாந்தம் அறவெறிந்து நாளால்
உறையெதிர்ந்து வித்தியவூழ் ஏனல்-பிறை எதிர்ந்த
தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
ஏமரை போந்தன ஈண்டு  (இது மரை வினாயது, திணைமாலை நூற்-1)

என்றும்,

தங்குறிப்பி னோரும் தலைச்சென்று கண்டக்கால்
எங்குறிப்பி னோமென் றிகழ்ந்திரார் - நுங்குறிப்பின்
வென்றி படர்நெடுங்கண் வேய்த்தோளீர் கூறீரோ
வன்றி படர்ந்த வழி  (இது பன்றி வினாயது, தொல்.கள-மேற்.)

என்றும்,

தண்டு புரைகதிர் தாழ்குரற் செந்தினை
மண்டுபு கவரு மாண்ட கிளிமாற்றும்
ஒண்டொடிப் பணைத்தோள் ஒண்ணுதல் இளையீர்
கண்டனிர் ஆயிற் கரவா துரைமின்
கொண்டன குழுவி னீங்கி மண்டிய
உள்ளழி பகழியோ டுயங்கியோர்
புள்ளி மான்கலை போகிய நெறியே  (இது மான்வினாயது, தொல்,கள-மேற்.)

என்றும் வரும் இலக்கியங்களான் உணர்க. 142. அதனெதிர் என்பது தொடங்கி, 152. நின்றனனாக என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண் : தலைவன் நாய்காத்துத் தலையளி செய்தமை கூறப்படுகின்றது.

142-152 : அதனெதிர் .................... நின்றனனாக

பொருள் : அதன் எதிர் - அவன் கூற்றிற்கு மாற்றமாக, சொல்லேம் ஆதலின் - யாங்கள் யாதொன்றும், கூறாமையான், அல்லாந்து - அவன் ஏமாற்றத்தானே வருந்தி, கலங்கி - நெஞ்சழிந்து, மெல்லியலீர் - மென்மைமிக்க சாயலுடையீரே, கெடுதியும் விடீஇராயின் - கெட்டவற்றைக் காட்டித் தாரீராயினும், எம்மொடு - எம்முடனே, சொல்லலும்-பேசுதலும், பழியோ - நுமக்குப் பழியாகுமோ, என்-என்று கூறி, நைவளம் பழுநிய- நட்டராகம் முற்றுப்பெற்ற, பாலைவல்லோன - பாலையாழினை இயக்கவல்லான், கைகவர் நரம்பின் - தன்கையாலே தெறித்த நரம்புபோலே, இம் என - இம் என்னும் இசையுண்டாக, இவரும் - ஒலிக்கும், மாதர் வண்டொடு - காதன்மிக்க பெடைவண்டினோடே, சுரும்பு -ஆண் வண்டு, நயந்து - புணர்ச்சியை விரும்பித் தங்காநின்ற, தாதுஅவிழ் - பூந்தாதுகள் விரிந்த, அலரி - பூக்களையுடைய, தாசினை தழைத்து விரிந்ததொரு பூங்கொம்பை, பிளந்து - முறித்து, தாறுஅடு களிற்றின் - பரிக்கோலைக் கைகடந்த களிறுபோல, வீறுபெற ஓச்சி - வெற்றியுண்டாக வீசி, கல் என் சுற்றம் - கல் என்னும் ஓசையுண்டாகக் குரைத்தலையுடைய தன் வேட்டைநாய்களின், கடு குரல் அவித்து - கடிய குரலை மாற்றி, எம் சொல்லல் பாணி - எம்முடைய விடையிறுக்கும் காலத்தை எதிர்பார்த்து, நின்றனனாக - நிற்குமளவிலே;

கருத்துரை : அவன் கூற்றிற்கு யாங்கள் மாற்றங்கூறாது இருந்தனம் ஆதலாலே, மயங்கி நெஞ்சழிந்தவனாய், மெல்லியலீர்! கெட்டன காட்டித் தாரீராயினும், எம்மொடுபேசுதலும் நுமக்குப் பழியாகுமோ! என்று கூறி, யாழ்வல்லோன் வருடிய நரம்புபோலே இசைபாடும் பெடை வண்டோடே, ஆண்வண்டு புணர்ச்சியை விரும்பி வதியாநின்ற பூங்கொம்பொன்றனை முறித்து ஓச்சித் தன் நாய்களின் குரலை மாற்றி, எம் விடையை எதிர்பார்த்து அது பிறத்தற்குரிய காலத்தளவு நின்றனன்; அப்பொழுது, என்பதாம்.

அகலவுரை : அதன் எதிர் என்றது, தலைவன் கெடுதிவினாயதன் எதிர் என்றவாறு. சொல்லேம் - என்றது, சொல்லுதலே பண்புடைமையாகவும் யாம் அப் பண்பின்றிச் சொல்லாது நின்றேம் என்னும் பொருளை யாப்புறுத்தி நின்றது. என்னை தங்குறிப்பினோரும் தலைச் சென்று கண்டக்கால் எங்குறிப்பினோமென்று இகழ்ந்திராது பேணிக் கூறலே உலகியற்கையாகவும், யாங்கள் அவன் வினாவைப் பொருள்படுத்து எதிர்மாற்றம் கொடாது. நின்றேம் என்றல் அவள் கருத்தாகலான் என்க. அங்ஙனம் யாம் நிற்பவும், எம்மை மீண்டும் விளித்துப் பேசலானான் என்றது, எளித்தல் கூறியவாறாம் என்க. அல்லாத்தல் என்னும் சொல், ஒன்றனை எதிர்பார்த்தவழி அஃது எய்தப்பெறாது ஏமாற்றம் அடைந்து வருந்தும் வருத்தத்தைக் குறிக்கும் ஒரு சொல். இது தையலாய், சொல்லியவாறெல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் (கலி-111) என்னும் கலியினும், எல்லாரும் காண இலக்கணையோ டாடினாய் அல்லாந்து அவள் நடுங்க அன்பி னகல்வாயோ, என்னுந் சிந்தாமணியினும் ஏமாற்றவலம் என்னும் பொருட்டாதல் உணர்க.

இனி, அதனெதிர் சொல்லேம் ஆதலின் அல்லாந்து கலங்கி என ஆசிரியர் கபிலர் அல்லாத்தலைத் தலைவற்கே கூறி, அல்லாத்தற்குச் சொல்லாமையை ஏதுவாக்கி வெளிப்படையாக ஓதியிருப்பவும் 143 ஆம் அடிக்கண்ணுள்ள அல்லாந்து என்னும் சொல்லை அல்லாந்து (142 ஆம் அதனெதிர் சொல்லேம் என மகளிர்க்கேற்றினர் நச்சினார்க்கினியர். அவ்விடத்தும் இச்சொற்கு மகிழ்ந்து என்று பொருள் கூறப்பட்டதாகக் காணப்படுகின்றது. அல்லாந்து என்னும் இச்சொற்கு மகிழ்ந்து என்னும் பொருள் உளதாக யாம் யாண்டும் கண்டிலம். ஆசிரியர் நச்சினார்க்கினியர் மகிழ்ந்து என்று பொருள் கூறினர் என்று கொள்ளலும் பிழை; ஆதலின், இச்சொல் நிற்குமிடத்தே மயங்கி என்றாற்போன்று பிறிது சொல்கிடந்து, ஏடெழுதுவோர் பிழையான் மகிழ்ந்தென மாறியதாகலாம், என்று கருதுகின்றோம்; இதனை அறிஞர் ஆராய்க. விடீர்-விடை தாரீர். கெடுதியும் விடீராயின் என்னுமிதனானே, தலைவன் கெடுதி வினாயினமையும், அவர் விடைகொடாமையும் பெற்றாம். சொல்லலும், என்றது விருந்தினர்க்குக் கூறும் முகமன் மொழிகளைக் கூறுதலும் என்றவாறு. சொல்லலும் பழியோ என்றதன்கண் உம்மை சொல்லாமையே பழி என்னும் எதிர்மறைப் பொருள்தந்து நின்றது. சொல்லலும் பழியோ என வினாயதும் மொழியாமை வினாதல் என்னும் ஒரு துறை என்க. இதனை, விரதமுடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேற் - சரதமுடையர் மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே (57) என்னும் திருக்கோவையா னுணர்க. சொல்லலும் பழியோ என்றதன்கண் ஓகாரம் எதிர்மறை; எனவே, சொல்லல் பழியன்று சொல்லுமின் என்றபடி. நைவளம் - ஒருபண்; இதனை நட்டராகம், நட்டபாடை என்றும் வழங்குப. நிகண்டில் இது குறிஞ்சியாழ்த்திறம் என்று கூறப்பட்டுள்ளது. இது வண்டின் இன்னிசைக்கு உவமை. நைவளம் பழுநிய பாலை என்னும் இதனுடன்,

பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
இன்குரற் சீறியாழ் இடவயிற் றழீஇ
நைவளம் பழுநிய நயந்தெரி பாலை

என்னும் சிறுபாணாற்றுப் படையடிகளை ஒப்புநோக்குக. மாதர்-காதல். இக்குறிப்பால் மாதர் வண்டென்றதற்குப் பெடை வண்டு எனப் பொருள் கூறப்பட்டது. சுரும்பு - ஆண்வண்டு. வண்டொடு என்றதனானும் வண்டு பெடைவண்டாதல் அறிக. அத்தழைத்த மலர்க் கொம்பினும் மாதர் வண்டொடு சுரும்பு நயத்திறுத்த இயற்கை மணம் கூறி இவ்வுள்ளுறையானே தலைவன் தலைவியர் உளம் ஒன்றுபட்டமை செவிலியைக் கருதி யுணரவைத்தாள் தோழி என்க. இவ்வினிமையையும் ஆசிரியர் கருத்தையும் நோக்காராய், நச்சினார்க்கினியர் பொருந்தாப் பொருள்கூறி இடர்ப்படுவாராயினர். தாதவிழ் அலரித் தாசினை பிளந்து என்றது தலைவன் தன் ஞமலிகளின் பால் வைத்த அருளுடைமையைக் குறித்ததாம். என்னை? தழையும் மலரும் நிறைந்த பூங்கொம்போச்சுதல் அச்சுறுத்தன் மாத்திரைக்கே யன்றித் துன்புறுத்தற்கன்றாகலின் என்க. ஞமலியின் கடுங்குரலை மாற்றும் குறிப்போடே பூங்கொம்போச்சினன்; ஞமலிகளும் தலைவன் குறிப்பறிந்து தங் கடுங்குரல் மாற்றுவன வாயின என்க. துன்புறுத்தாதே அச்சுறுத்தற்குப் பூங் கொம்பாற் புடைத்தலை,

பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப்
புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென்று ஓக்குபு புடைப்ப  (நற்-110)

என்னும் நற்றிணையான் உணர்க. தாறு அடுகளிறு என்றதற்குத் தனக்குக் காவலாகிய பெருமையினையும் உரனையும் கை கடந்து வேட்கை மீதூர்ந்து நிற்றலால் தாறடு களிற்றை உவமை கூறினார் என நச்சினார்க்கினியர் விளக்கம் கூறியதும், இவ்வாறே கழை காண்டலும் சுளியும் களியானை யன்னான் என்னும் திருச்சிற்றம்பலக்கோவை யடிக்கும் குத்துக் கோல் வரைத்தன்றி யானை களிவரைத்தாயினாற் போலக் கழறுவார் சொல்வயத்தானன்றி வேட்கை வயத்தனாயினன் என்று பேராசிரியர் கூறியதும் உணரற்பாலன. கல் என்றது ஒலிக்குறிப்பு. சுற்றம், ஈண்டு நாய்கள்; சுற்றுதல் என்னும் தொழிலடியாகப் பிறந்த இப் பெயர் உறவினரைக் சூறித்தலே பெரும்பான்மை வழக்காயினும், பொருட்பொருத்தத்தான் நோக்குழி நாய்கட்கே சாலப் பொருந்துமென்க. என்னை? சுற்றத்தாருள் உறின் நட்டு அறின் ஒரூஉவு வாரும் பலர் இருப்பர். நாய்களோ தம் தலைவன் செல்வனாய காலையும், நல்கூர்ந்தானாய காலையும், தம்மை மகிழ்ந்த காலையும், சினந்த காலையும் ஒரு சிறிதும் வேற்றுமையுறாத விருப்பறாச் சுற்றமாம் என்க. இதனை,

யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை தழீஇக் கொளல் வேண்டும் -யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்  (நாலடி - 213)

என்பதனானும் உணர்க. கடுங்குரல் - கேட்டார்க்கு இன்னாதாய் அச்சந்தரும் ஒலி. எம் சொல்லல் பாணி என்றது, யாங்கள் விடையிறுத்தற்கு வேண்டிய கால எல்லை யளவும் என்றவாறு. யாங்கள் சொல்லேமாக, அதனால் ஏமாற்றமடைந்து விடீராயின் எம்மொடு சொல்லலும் பழியோ எனக் கூறிச் சினை பிளந்து ஓச்சிக் கடுங்குரல் அவித்துச் சொல்லல் பாணி நின்றனனாக என இத்தொடரின் பொருளியைபை அணுகக் கொண்டு காண்க.

இனி, 153. இருவி வேய்ந்த என்பது தொடங்கி, 183. என்முகம் நோக்கி நக்கனன் என்னுந் துணையும் ஒருதொடர். இத்தொடரின் கண், அவ்வமயம் மற்றொரு புறத்தே தினைப்புனத்தை அழித்த களிற்றைக் கானவர் ஆரவாரஞ்செய்து துரத்துதலும், அக் களிறு மரம் பறித்தெறிந்து, கண்டோர் அஞ்சும்படி பிளிறித் தலைவி முதலியோர் நின்ற இடம் நோக்கி விரைந்து வருதலும் அதன் வருகையால் அம் மகளிர் பெரிதும் அஞ்சித் தலைவன்பாற் றம்மை யறியாதே புகல் புகுதலும், தலைவன் அக்களிற்றின் நுதலிலே கணையேவி அதனைப் புண்படுத்து ஓட்டுதலும், தலைவியின் மனநிலையைக் குறிப்பான் உணர்ந்து அறங்கூறித் தேற்றுதலும் தோழியை நோக்கிப் புன்முறுவல் கொள்ளலும் பிறவும் கூறப்படும்.

153-161 : இருவிவேய்ந்த ............... எதிர

பொருள் : இருவி வேய்ந்த - தினையரிந்த தாளாலே வேயப்பட்ட, குறு கால் குரம்பை - குறிய கால்களையுடைய குடிலின்கண் வதியும், பிணை ஏர் நோக்கின் - மான்பிணையின் அழகிய நோக்கினை ஒத்த நோக்கினையுடைய, மனையோள் மடுப்ப - மனைவி வாக்கிக் கொடுப்ப, தேம்பிழி தேறல் மாந்தி - தேனாற் சமைத்த கள்ளையுண்டு, மகிழ்சிறந்து - மகிழ்ச்சி மிக்கு, சேமம் மடிந்த பொழுதில் - கானவன் காவற்றொழிலை மறந்த காலத்தே, வாய்மடுத்து -யானை தன் கையாலே தினையை உருவி வாயிற் புகுத்துமாற்றான், நிழத்தலின் - அழித்துவிடுகையாலே, சிறுமை நோனாது-எஞ்சி நின்றது விளையும் சிறுமையைப் பொறாராய் வருந்தி, அரவு உறழ் அம்சிலை - பாம்பை ஒத்த அழகினையுடைய வில்லினை, கொளீஇ - நாண் ஏற்றி, நோயமிக்கு - தினை அழிந்த வருத்தமிகுதியால், உரவு சினம் முன்பால் - பரக்கின்ற சினத்தின் வலியோடே, உடல் சினம் செருக்கி - உடலிடத்தே சினத்திற் குரிய மெய்ப்பாடுகள் தோன்ற மயங்கி, கணை விடுபு - அம்பை எய்து, புடையூ - தட்டை முதலியவற்றைப் புடைத்து, கானம் கல் என - காடெல்லாம் கல்லென்னும் ஓசை பிறக்கும்படி, மடி விடு வீளையர் - வாயை மடித்து விடுகின்ற சீழ்க்கையராய், வெடிபடுத்து எதிர - மிக்க ஓசையை உண்டாக்கி அவ் வேழத்தை ஓட்டுகையாலே;

கருத்துரை : தினைத்தாளால் வேயப்பட்ட குறுங்காற் குடிலில் வதியும் மான் நோக்குடைய தம் மனைவி வாக்கிக்கொடுத்த கள்ளை யுண்டு கானவன் தினைகாத்தற் றொழிலைக் களிப்புமிகுதியால் மறந்தொழிய, அவ்வழி அப்புனத்தின்கண் யானை புகுந்து தின்று பெரிதும் அழித்தமையாற் றினை குறைந்து போனமை பொறாராய், இளைஞர் சினம் மிகுந்து, வில்லை நாணேற்றிக் கணைவிடுத்தும், சீழ்க்கைவிட்டும், தட்டை முதலியன புடைத்தும், கானம் கல்லென்னும்படி ஆரவாரம் செய்து அவ்வியானையை ஓட்டுகையாலே என்பதாம்.

அகலவுரை : குரல்கள் கொய்யப்பட்டு வறிதே நிற்கும் தினைத் தாளை இருவி என்ப; இத்தாளால் கானவர் தம் குடிலினை வேய்ந்து கோடல் வழக்கம் என்க. குறுங்கால் - சிறிய கால். குரம்பை-குடில், இருவி வேய்ந்த என்பது தொடங்கி, மகிழ் சிறந்து என்னும் துணையும் கானவர் வாழ்க்கையின் இயல் நன்கு தெரித்தோதியவாறு காண்க. சேமம் - காவல். கள்ளுண்ட களிப்பாலே கானவன் தன் கடமையாகிய காவற்றொழிலைக் கைவிட்டான் என்க.

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்  (குறள் - 125)

என்னுந் திருக்குறளானும்,

செற்றதும் பகைவர் நட்டார் செய்தபே ருதவி தானும்
கற்றதும் கண்கூ டாகக் கண்டதும் கலைவ லாளர்
சொற்றதும் மானம் வந்து தொடர்ந்ததும் படர்ந்த துன்பம்
உற்றதும் உணரா ராயின் இறுதிவே றிதனின் உண்டோ  (கம்ப-கிட்கிந்-94)

என்னும் இராமாவதாரச் செய்யுளானும் கள்ளுண்டு சோர்ந்தார் தம்மை மறத்தல்; கடமை மறத்தல்; அவர்க் குளதாம் கேடு இவையிற்றை உணர்க. நிழத்தல்-அழித்தல் : விளைபுனம் நிழத்தலில் கேழலஞ்சிப், புழைதொறு மாட்டிய இருங்கல் அரும்பொறி, என்னும் மலைபடு கடாத்தினும் நிழத்தல் அழித்தற் பொருட்டாதலறிக. யானை புக்குழக்கும் பயிர்கள் பெரிதும் அழியுமாற்றினை,

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
...... ............. ... ......... ......... ...... ........
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே  (புறம்-284)

என்பதனான் அறிக. அரவு ஈண்டு வடிவினானும், கொலைத்தொழிலானும் வில்லுக்கு உவமையாயிற்று. உறழ் : உவம உருபு. அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த உரவுவில் என்ற கலியின்கண் இவ்விரு பொதுத்தன்மைகளையும் தெரித் தோதியவாறு காண்க. வீளை-உதட்டை மடித்தெழுப்பும் ஒருவகை ஒலி. மடிவாய்க் கோவலர் எனப் பெரும்பாணாற்றுப் படையினும் வருதல் காண்க. 160 - கானங் கல்லென என்றவாறே இந்நூலிற் பின்னரும் கானம் கல்லென்றிரட்ட என, 227-8- அடிகளில் வருதல் காண்க. சின மிக்கவுடன் உடற் குருதி கொதித்து உடல்வலி மிகுதலால் உரவுச் சின முன்பு என்றோதினார். உடற்சினம் செருக்கி என்றது உடலின்கண் வெகுளிக்குரிய மெய்ப்பாடுகள் தொன்றி என்றவாறு. அவையாவன :

மடித்த வாயும் மலர்ந்த மார்பும்
துடித்த புருவமும் சுட்டிய விரலும்
கன்றின வுள்ளமொடு கைபுடைத் திடுதலும்  (சிலப்-அரங்-உரை)

கண் சிவத்தன் முதலியனவுமாம் என்க. உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெகுளி பிறத்தற்குரிய நிலைக்களன் நான்கனுள் ஈண்டுக் கானவர்க்குக் குடிகோள் பற்றி வெகுளி தோன்றியதாம். விடுபு புடையூ எனற்பாலது விடுபு என்னும் எச்சத் திறுதி கெட்டு விடுபுடையூ என நின்ற தென்க. விடுபு : செய்பு என்னெச்சம்; புடையூ : செய்யூ என்னெச்சம்.

162-169 : கார்ப்பெயல் ........................... நடுங்க

பொருள் : கார் பெயல் உருமில் - கார் காலத்து மழையின் உருமேறு போல, பிளிறி - முழக்கத்தை யுண்டாக்கி, சீர் தக - தன் தலைமைக்குத் தக்கதாக, இரு பிணர் தட கை - கரிய சருச்சரை யுடைத்தாகிய பெரிய கையைச் சுருட்டி, இரு நிலம் சேர்த்தி - பெரிய நிலத்தே எறிந்து, சினந் திகழ் கடாம்-வெகுளி விளங்குதற்குக் காரணமான மதத்தாலே, செருக்கி -மனஞ் செருக்கி, மரங்கொல்பு -மரங்களை முறித்து, மையல் வேழம் - மதக்களிப்புடைய அக்களிறு, மடங்கலின் - கூற்றுவனைப் போல எதிர்தர - எங்கள் மேலே வருகையாலே, உய்விடம் அறியேம் ஆகி - உயிர்கொண்டு பிழைத்தற்குரியதோ ரிடத்தை யாண்டும் அறியேமாய், ஒய்என - ஞெரேலென, திருந்து கோல் எல்வளை தெழிப்ப - திருந்திய திரட்சியுடைய ஒளி பொருந்திய வளையல்கள் ஒலிக்குமாறு, நாணுமறந்து - நாண்காத்தலையும் மறந்து, விதுப்பு உறு மனத்தேம்-நடுக்கமுற்ற மனத்தையுடைய யாங்கள், விரைந்து அவற் பொருந்தி - விரைந்து ஓடி அவனை அணுகி, சூர் உறு மஞ்ஞையின் நடுங்க - தெய்வ மேறின மயிலைப்போல நடுங்கா நிற்ப;

கருத்துரை : அக்களிறு கார்காலத்து முகில்போலே முழங்கித் தனது பெரிய கையைச் சுருட்டி நிலத்திலே எறிந்து, மதச் செருக்கோடே மரங்களை முறித்து, மறலிபோல எங்கள்மேல் வருகையாலே, யாங்கள், அதற்குத் தப்பி உயிர்கொண்டு உய்தற்கு யாண்டும் இடமறியேமாய், நாண்மறந்து விரைந்தோடித் தலைவனைப் பொருந்தி நின்று மிகவும் நடுங்கா நின்றோம் என்பதாம்.

அகலவுரை : ஏனைப்பருவப் புயல்களினும், கார்பருவப் புயல் மிக்கு முழங்குதலுண்மையின் கார்ப்பெயல் உருமின் என்றார். உரும் களிற்றின் பிளிற்றொலிக்கு உவமை. களிறு என்னும் தனது சிறப்புடைமைக்கு ஏற்ப என்பார் சீர்த்தக என்றார். மதமிகுதி சினத்திற்கு ஏதுவாகலின், சினந்திகழ்கடாம் என்றார். சினந்திகழ்தற்குக் காரணமான கடாம் என்க. மரங்கள் மீண்டும் உயிராவகை முறித்துப் பாழ்படுத்தியது என்பது தோன்றக் கொல்பு எனக் கொலைவினை கொடுத்தோதினார். அஞ்சுதகு வடிவம், கருநிறம், கொலைத்தொழில், ஆற்றலுடைமை என்னும் நான்கு பொதுத்தன்மையானும் கூற்றுவன் யானைக்கு உவமையாயினான் என்க. செருக்கு - தனக்கு நிகரில்லாமை கருதி எழும் ஏக்கழுத்தம். கூற்றுவன் என்ற குறிப்பால், தலைவன் எம்மைக் காத்தோம்பான் எனின், அஃது எங்கள் உயிர்கொள்ளுங் கூற்றுவனே ஆகிவிடும் என்றாளுமாம். உய்விட மறியேம் என்றது: அப்பொழுதும் அக்களிற்றிற்குத் தப்பி உயிருய்யப் புகலிடம் வேறு கண்டிருந்தேமேல் அவனை எய்தியிரேம்; அவனையன்றிப் புகலிடம் வேறில்லையாதலின், அவனை எய்தினோம் என்னும் பொருளை யாப்புறுத்தியது. ஒய்யென என்றது விரைவுக்குறிப்பு; நாணுமறந்து என்றது, மறக்கலாகாப் பெருமையுடைய நாணத்தையும் மறந்து என்றவாறு. உயிரினும் சிறந்தன்று நாண் என்பவாகலின் அவ்வாறு கூறினள். ஞெரேல் என ஏற்பட்ட இடும்பையால் அறிவானே ஓம்பப்படும் நாண் மறக்கப்பட்டது. என்னை? நாண் முதலியன அறிவின் றுணையானே ஓம்பப்படுவன. திடீரென உண்டாகும் இடும்பையினின்றும் உயிர் ஓம்பப் படுதற்குரிய தொழில் அறிவின்றுணையின்றியே இயற்கைத் தூண்டுதலான் நிகழ்வதாம். இருள் நெறிப்படரும் ஒருவன், தன்னெதிரே கிடந்ததொன்றனைப் பாம்போ? பழுதையோ? என ஐயுற்றவழியும், பாம்பென்னும் அச்சமே மிக்குத் தூண்டாநிற்ப, அவ்விடத்தினின்றும் ஓடி உய்தலையே ஞெரேல் என மேற்கோடல் காண்டுமன்றே! அங்ஙனம், ஓடிஉய்தற்குத் தூண்டுவது அறிவின் செயலாகாதே, அச்சத்தின் செயலே ஆதல் ஆராய்வார்க்குப் புலனாம். ஆருயிர்க்கு இனித் தீங்கேது மின்றென்றறிந்த பின்னரே ஆராய்ச்சி அறிவு மேலெழா நிற்கும்; ஆதலால், ஒய்யெனக் களிற்றினைக் கண்ட அச்சந் தூண்டுதலாலே, அயலான் ஒருவன்பாற் புகல்புகுதல் குடிப்பிறப்புடைய மகளிர்க்கு நாண் அழிவாம், என எண்ணியறிதற்கும், இடையின்றி நாணத்தை அவ்வழி உற்ற அவலத்தால் மறந்தொழிந்தேம் என்றாள் என்க. சூர்-தீண்டிவருத்தும் தெய்வம். தெய்வம் ஏறிய மயில் அதன் அறிவு வழி நில்லாது, தீண்டிய தெய்வம் இயக்கு வழியே இயங்குதல் போன்று யாங்களும் எம் அறிவின் வழியாகவன்றி அச்சத்தின் வழியே இயங்கினேம் என்பாள், சூர் உறு மஞ்ஞையை உவமை எடுத்தோதினாள்; தெய்வம் ஏறிய மயில் நடுங்குதலுண்மையின் நடுக்கத்திற்கும் அஃது உவமையாயிற்றென்க.

169-174 : வார்கோல் .................... பின்னர்

பொருள் : வார்கோல் - நெடிய கோலையுடைய, உடுஉறும் பகழி - உடுச்சேர்ந்த கணையினை, வாங்கி - வலிந்திழுத்து, கடுவிசை - கடியச் செல்லும்படி ஏவி, அண்ணல் - தலைமையினையுடைய, யானை-யானையினது, அணிமுகத்து அழுத்தலின் - அழகிய முகத்திடத்தே புகுத்துகையினாலே, புண்உமிழ் குருதி - அப்புண் உமிழ்ந்த செந்நீர், முகம் பாய்ந்து - அதன் முகத்திலே பரவி, இழிதர - வழியாநிற்ப, புள்ளி வரிநுதல் சிதைய - புகர்களையும் வரிகளையுமுடைய நெற்றியினது அழகு அழிந்து, நில்லாது - அக்களிறு அவ்விடத்தே நிற்றலாற்றாது, அயர்ந்து தன்னை மறந்து, புறம் கொடுத்த பின்னர் - முதுகிட்டு ஓடியபின்னர்;

கருத்துரை : நெடிய கோலையும், உடுவினையுமுடைய கணையினை நாண் கொளீஇ வலிந்திழுத்து ஏவி அச்சிறந்த களிற்றின் நெற்றியிலே புகப் பாய்ச்சுகையாலே, அக் கணைபட்ட புண்வழிச் செந்நீர் பெருகி அதன் நுதலின் அழகழிய ஒழுகாநிற்ப, அக்களிறு அக்கணையேறுண்டமையாற் றன்னைமறந்து அவ்விடத்தே நிற்றலாற்றாது முதுகிட்டோடியதாக; அதன் பின்பு என்பதாம்.

அகலவுரை : வார்கோல் - கணையின் காம்பு. இது நீண்ட மூங்கிற்கோலால் ஆயது, ஆகலின் வார்கோல் என்றார். உடு - நாணைக்கொள்ளும் பொருட்டுக் கணையிலே அமைந்த இடம். அண்ணல் என்றதனைத் தலைவனுக்கேற்றி, அண்ணல் ஏவினானாக எனினுமாம். கடுவிசை என்பதனை யானைக்கேற்றிக் கடிய விசையுடனே எம்மேல் வந்த யானை எனினுமாம். புள்ளி யானைமுகத்தின்கண் அமைந்த புகர்கள். வரி - யானை முகத்தேயுள்ள நெடிய கோடுகள். ஒரே கணையானே களிறு தன்னை மறந்ததென்றது, தலைவனுடைய ஆற்றல் கூறி ஏத்தல் கூறியவாறாம். இதன்கண் களிற்றான் வரும் ஏதம் காத்துத் தலையளி செய்தமை கூறப்பட்டமையான் ஏதீடு கூறியதாதலுணர்க. இனி, தலைவன் களிறு காத்தோம்பிய பின்னர்த் தாமுற்ற நிலையினைத் தோழி கூறுகின்றாள்.

174-183 : நெடுவேள் ..................... நக்கனன்

பொருள் : நெடுவேள் - முருகக்கடவுளுக்கு, அணங்குஉறு மகளிர் -தெய்வந்தீண்டி வருத்தமுற்ற மகளிர் அவ்வருத்தந்தீர்தற் பொருட்டு, ஆடுகளம் கடுப்ப - மறியறுத்து வெறியாட்டயரும் களத்தைப்போன்று அவ்விடம் தோன்றிற்றாக, திணி நிலை கடம்பின் - அக்களத்தின்கண்ணே நிற்கும் திண்ணிய கடப்பமரத்தினது, திரள் அரை வளைஇய -திரண்ட அடிப்பகுதியை வளையச் சூட்டிய, துணை அறை மாலையில் - மகளிர் ஒழுங்குக்கு ஒப்புச்சாற்றுதலுடைய மாலையைப் போன்று, கைபிணிவிடேம் - யாங்கள் கைகோத்தலை விடேமாய், நுரையுடை கலுழி பாய்தலின் - நுரையினையுடைய புதுவெள்ளம் பாய்தலாலே, உரவு திரை அடுகரை - பரவுகின்ற அலைகள் மோதும் இடிகரையின் நின்ற; வாழையின் -வாழை நடுங்கினாற்போன்று, நடுங்க - அச்சத்தாலே நடுங்கினேமாக, பெருந்தகை - அப்பொழுது பெரிய தகுதிப்பாடுடைய தலைவன், அம் சில்ஓதி - அழகிய சிலவாகிய கூந்தலினை யுடையாய், அசையல் - தடுமாறாதேகொள், யாவதும் - எத்துணையும், அஞ்சல் ஓம்பு - அஞ்சாதொழிக, நின் அணிநலம் நுகர்கு என - யான் உன் அழகினது நலத்தை நுகருவேன் என்று இயம்பி, மாசு அறு சுடர்நுதல் நீவி - குற்றமற்ற ஒளியினையுடைய தலைவியின் நுதலினைத் துடைத்து, நீடு நினைந்து - நெடிது சிந்தனை செய்த பின்னர், என்முகம் நோக்கி - என் முகத்தைப் பார்த்து, நக்கனன் - முறுவல் பூத்தான்.

கருத்துரை : அப்பொழுது, அப்பொழிலிடம் முருகவேளுக்கு மகளிர் வெறியாட்டயரும் களம்போலத் தோன்றாநிற்ப, அக்களத்திற் றிண்ணிதின் நின்ற கடம்பமரத்தினை மாலை சுற்றி வளைத்தாற் போன்று, யாங்கள் கைகோத்தலை விடேமாய்த் தலைவனைச் சூழ்ந்து நின்று, புதிய வெள்ளத்தாலேற்பட்ட அலைகள் மோதி இடிக்கும் கரையினின்ற வாழைமரம் போன்று நடுங்கினேம். அப்பொழுது, அவன் தலைவியை நோக்கி, கூந்தலுடையாய்! தடுமாற்றவலந் தவிர்; ஒரு சிறிதும் அஞ்சவேண்டா; யான் உன் அழகின் நலத்தினை நுகர்வேன் என்று கூறி அவள் ஒளி நுதலின் வியர்வையைத் துடைத்தவனாய், நீள எண்ணமிட்டபின்னர் என்முகம் நோக்கிப் புன்முறுவல் பூத்தான் என்பதாம்.

அகலவுரை : நெடுவேள் - குறிஞ்சிக் கடவுளாகிய முருகன்; புகழால் நெடிய வேள் என்க. அணங்கு - தீண்டி வருத்தும் தெய்வம்; அத்தெய்வத்தாற்றீண்டப்பட்ட மகளிர் நெடுவேளுக்குக் களனிழைத்து வெறியாடுதன் மரபென்க. யானையின் குருதியான் நனைந்த அவ்விடம், மறியின் குருதியான் நனைந்த களத்தை ஒத்துத் தோன்றிற் றென்க. அக்களத்தே திண்ணிதின் நின்ற தெய்வக்கடம்பு, தலைவனுக்குவமை, அம்மரத்தினை வளையச்சுற்றிய மாலை தலைவி தோழியாகிய மகளிர்க்குவமை, எனக் காண்க. கடம்பினை முருகனாகக் கருதி அதற்கு மாலை சூடுதல் மரபு. இதனை,

கடம்பு சூடிய கன்னி மாலைபோல்
தொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடும்

என்னும் சிந்தாமணியானும் உணர்க. கலுழி - கலங்கனீர். ஈண்டுப் புதிய வெள்ளம் என்றவாறு. புதிய வெள்ளத்தே தோன்றிய அலையால் இடிகரையின் நின்று நடுங்கும் வாழைபோல நடுங்கினேமென்றது, களிற்றானே உண்டாய அச்சம் தலைவனாற் றவிர்க்கப்பட்ட பின்னர்த் தலைவியின் உளத்தே புதிதாகத் தோன்றி அவளை வருந்திய எண்ண அலைகளானே மோதுண்டு நடுங்கியதற்கு உவமை என்க. அப்புதிய எண்ணங்கள் தன்னுள்ளம் நிறையழிந்து தலைவன்பாற் சென்று பட்டமை கண்ட தலைவி, இவ்வாறு என்னுள்ளம் கவர் கள்வன் யாவனோ? எவ்வூரின் உள்ளவனோ? இவன் என்னைப் பிரிந்தகல்வானோ? பிரிவான் எனின் யான் ஆற்றி உயிருய்வேன்கொல்! என்றெழுந்த எண்ணங்களாம். இவ்வெண்ணத்தால் நடுங்குகின்றாள் என்பதனைத் தன் கூர்த்த அறிவானே உணர்ந்தமையானன்றோ! பெருமையும், உரனும் உடைய தலைவன், அவளைத் தலையளி செய்வான், நுதல்நீவி, அஞ்சேல்! உன் அணிநலம் நுகரும் தவமுடையேன் யானே! யான் உண்குவேன்; என அருண்மொழி கூறுவானாயினன் என்க. இக் கருத்துடையள் எனத் தலைவன் அறியாதவனாய்க் களிறு கண்டஞ்சிய துணையானே நடுங்குவாள் ஒரு மடந்தையை, ஒய்யென நுதல் நீவி, நின் அணிநலம் உண்குவேன்; அஞ்சற்க என்றவிடத்தும், அல்லதூஉம், ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியாங்கு, வெள்ளத்துட் பாய்ந்து கால் தளர்ந்து அவ்வெள்ளத்தோடே ஒழுகும் நடுக்கமுடைய வேன் என்றவிடத்தும், அத்தகையன் தலைவனுக்கோதிய நலனேதும் இல்லாத புல்லன் ஆகி, மைத்துனர் பல்கி மருந்திற் றணியாத பித்தன் என்று எள்ளப்படுதல், ஒருதலை என்க. களிற்றச்சந்தீர்ந்த பின்னர்த் தலைவி நடுங்கியதற்குக் காரணம், இவன் என்னைப் பிரிவானோ என்னும் புதிய எண்ணத்தாற்றோன்றிய பிரிவச்சம் என்றுணர்த்தற்கன்றே! விளங்கு புகழ்க் கபிலர் நுரையுடைக்கலுழி எனப் புதிதாகப் பெருகிய கலங்கனீரை உவமை கூறியதூஉம் என்க. தலைவி இத்தகைய எண்ணங்களாலேயே நடுங்கினாள் என்பதை அவ்வச்சந்தீர்க்கும் தலைவன் கூற்றானே ஓதுவார் ஊகித்து உணர்வர் ஆகலின், யாம் வெளிப்படுத்தோதுதல் மிகையாய்ச் செய்யுளின் செறிவைக் கெடுக்கும் என்றறிந்தே ஆசிரியர் அதனை ஓதிற்றிலர் என்க.

இனி, உரவுக்கதிர் தெறூஉம் உருப்பவிர் அமயத்து, அருவியும், சுனையும் நீண்டபொழுதாடிக் கண்சிவந்து கரையேறி, வண்ண வண்ண மலர்பல கொய்து, கோலங்கொண்ட மகளிர், களிறு கண்டஞ்சி உய்விடமறியாது தலைவன்பாற் புகல் புக்கனராக, அக்களிறு கணையேறுண்டு அஞ்சி ஓடிய அக் கணத்தேயே, தம்மின்னுயிர் காத்த வள்ளற் பெருமான் நிற்கவே! நுரையுடைக் கலுழியிற் பாய்ந்தனர் என்றலும் பாய்ந்தோர், கால் தளர்ந்து ஒழுகினர் என்றலும், நீரிற் பாய்ந்து உயிர்க்கு மன்றாடும் மகளிரை எடுத்து, நின் அணிநலம் நுகர்வேன் என்றலும், பொருந்தாதன என்றே யாம் கருதுகின்றோம்.

இனி, நீடு நினைந்து என்றது, தமர்க்கு அறிவித்து இவளை நாடறி நன்மணம் செய்துகோடல் எவ்வாறென நீண்டநேரம் ஆராய்ந்து என்னும் குறிப்புடையதென்க. அங்ஙனம், நெடிது சிந்தித்த தலைவன் இச்செயற்கு இத்தோழியின் உதவி இன்றியமையாதெனக் கண்டு அவள் முகம் நோக்கி அக்குறிப்பினை அவள் உணருமாற்றாற் புன்முறுவல் பூத்தான். இப் புன்முறுவலும் தோழியைக் குறையுறும் பகுதி எனும் ஒரு துறையின் பாற்படும் என்க. இங்ஙனம் தலைமகன் நகைப்பிற்கும் ஒருதுறை வகுத்துக்கொள்ளும்படி செய்யுள் செய்யும் நலனானன்றோ செறுத்த செய்யுள், செய் செந்நாப் புலவர் எனக் கபிலர் போற்றப்படுதலும் என்க. இது களிறு காத்துக் கைக்கொண்டமை கூறலின் ஏதீடும் ஏத்தலும் கூறிற்றென்க.

இனி, 153 இருவி என்பது தொடங்கி, 183. நக்கனன் என்னுந்துணையும், அகன்று கிடந்த பொருளை, குறுங்காற் குரம்பையின் கண் வதியும் மனைவி வாக்கிக் கொடுப்பக் கள்ளுண்டு களித்துக் கானவன், காவல் கைவிட்டமையால், களிறு உழக்கிய சிறுமை நோனாது, வீளையர், சிலை நாண் கொளீஇ, கணைவிட்டு, வெடிபட ஆர்த்து, எதிர, அக்களிறு, பிளிறி, மரமுறித்து, எம்மேல் வர, யாங்கள் அஞ்சி உய்விட மறியாது தலைவனைப் பொருந்தி நடுங்கினே மாக, அவன், கணையை அக் களிற்றின் முகத்திலே அழுத்தி ஓட்டியபின், வாழைபோல் நடுங்கினேம்; அதுகண்டு, அவன் றலைவியை அஞ்சல் ஓம்பு! நின் அணி நலன் நுகர்வேன், என நுதல்நீவி, நீடு நினைந்து, என் முகம் நோக்கி நக்கனன் என இயைத்துக் காண்க. 183-அந்நிலை என்பது தொடங்கி, 214-அப்பகல் கழிப்பி என்னுந்துணையும் ஒருதொடர்; இதன்கண், தலைவியைத் தலைவன் வேட்கை மீதூர்ந்து தழீஇ முயங்குதலும், அவள் நாணமீக்கூர்ந்து, அதைத் தவிர்க்க முயலலும், தலைவியின் கருத்தை உணர்ந்து அவட்கு அறங்கூறித் தேற்றலும் பிறவும் கூறப்படும்.

183-186 : அந்நிலை ................. முயங்கலின்

பொருள் : அந்நிலை - அவ்வாறு தலைவனாற் றலையளி செய்யப்பட்ட நிலையிலே, நாணும் உட்கும் - தனக்கு இயல்பாகிய நாணமும் அச்சமும், நண்ணும் வழி - எய்துதற்குரிய இடம் பெற்று அவ்வழி, அடைதர - வந்து தோன்றுகையாலே, ஒய்யென - விரைந்து, பிரியவும் விடான் - அவன் முயக்கினின்றும் அகல முயல்வாளை அகலவும் விடாதவனாய், கவைஇ - தன் கையாலே அணைத்து, ஆகம் அடைய - இவள் மார்பு தன் மார்பிலே ஒடுங்குமாறு, முயங்கலின் - தழுவுகையாலே;

கருத்துரை : தலைவனாற் றலையளி செய்யப் பட்டவுடன், அவட்கு இயற்கையாகவுள்ள நாணமும், அச்சமும் அவளை வந்தெய்தினவாக விரைந்து பிரியமுயல்வாளைப் பிரியவிடாதே, தன் மார்போடே இவள் மார்பு பொருந்தக் கையான் அணைத்து, ஆர்வத்தோடே முயங்குதலாலே என்பதாம்.

அகலவுரை : தலையளி செய்தவுடன் தலைவன் அவள் அழகைக் கூர்ந்து நோக்கலின், அவட்கு இயற்கையாய நாணும் உட்கும் தோன்றின என்க. அவ்வழி அவள் நுதல் வியர்த்தல் இயல்பாகலின் இதனைப் பொறிநுதல் வியர்த்தல் என்னும் மெய்ப்பாடென்ப. மாசறு சுடர்நீவி என்றமையால் அதன்கண் வியர்வை துடைத்தெனப் பொருள் தந்து, தலைவி அம்மெய்ப்பாடெய்தினமை உணர்த்தியவாறறிக. இதனானே மெய்தொட்டுப் பயிறல் என்னும் துறையும் கூறினாராயிற்று. நாண் - காமக்குறிப்பு நிகழ்ந்தவழி உண்டாகும் உள்ளவொடுக்கம். அச்சம் ஈண்டு அன்பு காரணமாகத் தோன்றிய உட்கு. இம்மெய்ப்பாடுகள், மெய்யுறு புணர்ச்சியை விலக்குவனவாகலின் பிரியமுயல்வாளைப் பிரியவும் விடான் என்றவாறு. பிரியவும் விடான் என்றது வேட்கை யுரைத்தலுமாயிற்று.

அச்சமும் நாணமும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப

எனத் தொல்காப்பியனார் வகுத்தோதிய இப்பண்புகள் மெய்யுறு புணர்ச்சியை விலக்குதற் கேதுவாயினும், இவ்விலக்கணத்திற் றிரியாது நின்றே, தலைவி புணர்ச்சிக் குரியளாமென்றற்கே புகுமுகம் புரிதன் முதலிய பன்னிரு மெய்ப்பாடுகளும் வகுத்துரைத்ததென்ப. என்னை? நாணும் அச்சமும் நண்ணிய வழியும், பிரியும் கருத்துடையளாய வழியும் இவற்றினும் வலிதாகிய வேட்கை இவையிற்றின் வலிகெடுத்துத் தலைவியை மெய்யுறு புணர்ச்சிக்கு உடம்படுவிக்கும் என்க. நாணானும், உட்கானும் தலைவன் முயக்கத்தைத் தவிர்ந்தகலத் தலைவி முயல்வாளேனும், அம்முயற்சி முற்றமுயல்வாளுமகலள்; ஆதலின், தலைவன் முயங்குந் தோறும், அதற்கியைந்தே ஒழுகுவாள் என்க. கவைஇ ஆகம் அடைய முயங்கினான் என்றது, இருகையும் எடுத்தல் என்னும் மெய்ப்பாடும் தலைவி எய்தி அம்முயக்கத்திற்கு இயைந்தொழுகினாள் என்பதனையும் குறிப்பான் உணர்த்தும் என்க.

186-199 : அவ்வழி ........................... நாடன்

பொருள் : அவ்வழி - அப்பொழுது, பழுமிளகு உக்க பாறை - பழுத்த மிளகுகள் உதிர்ந்து கிடக்கின்ற கற்பாறையிடத்தேயுள்ள, நெடுசுனை - நீண்ட சுனையின்கண், முழுமுதல் கொக்கின் -பெரிய அடியினையுடைய மாவினது, தீ கனி - இனிய பழங்கள் உதிர்ந்தென - உதிர்ந்தனவாக அப்பழத்தானும், புள் எறி பிரசமொடு - வண்டுகள் சிதறிய தேனோடே, ஈண்டி - கூடி, பலவின் - பலாமரத்தின், நெகிழ்ந்துகு நறு பழம் - விரிந்து தேன் துளிக்கின்ற நறிய பழத்தானும், விளைந்த தேறல்-உண்டான கள்ளினது தெளிவினை, நீர் செத்து அயின்ற தோகை - நீரென்று கருதிப் பருகிய மயில், வியல் ஊர் - அகன்ற ஊர்களிடத்தே, சாறுகொள் ஆங்கண் - விழாக்கொள்ளுதற்குரிய அவ்விடங்களிலே, விழவு களம் நந்தி - விழாக் கொள்ளும் களத்திலே மிகுதியாக, அரிகூட்டு இன் இயம் கறங்க - அரித்தெழுகின்ற ஓசையைக் கூட்டுதலுடைய இனிய இசைக்கருவிகள் ஒலிப்ப, ஆடு மகள்-ஆடுகின்ற மகள், களிறு ஊர் பாணியின் - கழாய்க்கயிற்றிலே ஏறி ஆடுகின்ற தாளத்தில், தளரும் ஆற்றாது தளருமாறுபோல் தளரும், சாரல் - சாரலையுடையதும், வரையர மகளிரில் - வரையர மகளிர் ஆடுதலாலே, சாஅய் - தன்னலம் சிறிது கெட்டு, விழைதக - கண்டோர் விரும்பும்படி, விண்பொரு சென்னி - விசும்பைத் தீண்டுகின்ற சிகரங்களிலே, கிளைஇய காந்தள் - கிளைத்த செங்காந்தளினுடைய, தண் கமழ் அலரி - குளிர்ந்த மணங்கமழ்கின்ற பூக்கள், தாஅய் - உதிர்ந்து பரவி, நன்பல - நன்றாகிய பற்பல, வம்பு விரி களத்தின் - கச்சை விரித்த களம்போல, கவின்பெற பொலிந்த - அழகுமிக்குப் பொலிவுற்ற, குன்றுகெழு நாடன் - மலைபொருந்தியதுமாகிய நாட்டையுடைய தலைவன்;

கருத்துரை : அப்பொழுது, பழுத்த மிளகுகள் உதிர்ந்த பாறையின் கண் உள்ள சுனையின்கண், வீழ்ந்த மாங்கனியானும், வண்டுகள் சிதறிய தேனானும், பலவின் தீம்பழத்தானும் விளைந்த கள்ளினை, கள்ளென்று அறியாதே நீர் என்று கருதிப் பருகிய மயில், ஊர்களிலே விழாக்களத்தில், கழாய்க் கயிற்றில் ஏறி ஆடுகின்றவள், தாளம் தவற ஆடித்தளருமாறுபோலத் தளரும் சாரலையும், வரையர மகளிர் ஆடுதலாலே தம் நலஞ்சிறிது கெட்டு மலைச்சிகரங்களிலே மலர்ந்த செங்காந்தள் விழாக் களத்திலே பற்பல கச்சுக்களை விரித்தாற்போல உதிர்ந்து அழகுறப் பரவிக்கிடக்கும் மலையினையும் உடைய நாட்டின் தலைவன் என்பதாம்.

அகலவுரை : பழுமிளகு : வினைத்தொகை. முழுமுதல் - பரிய அடிமரம். கொக்கு - மாமரம். புள் - ஈண்டு வண்டு; வண்டுகளை அறுகாற் சிறுபறவை என்பவாகலின், புள் என்றார். நீர் செத்து - நீர் என்று நினைத்து என்க. வியல் - அகலம்; வியலென் கிளவி அகலப் பொருட்டே என்பது தொல்காப்பியம். சாறு - விழா. நந்துதல் - மிகுதல். அரி ஒருவகை ஓசை; அன்றிற் பேடை அரிக்குரல் என்னும் மணிமேகலையானும், அரிக்குரற்கோழி என்னும் சிந்தாமணியானும் அவ்வோசையிற் றென்றறிக. பழுமிளகு என்பது தொடங்கி, பொலிந்த என்னுந் துணையும் குன்றைச் சிறப்பித்துக் கூறியதென்க. இதன்கட்போந்த உள்ளுறையை ஆசிரியர் நச்சினார்க்கினியர் பின்வருமாறு கூறுவர் :

மிளகு உக்க பாறை அந்நிலத்து மாக்கள் உறைகின்ற ஊராகவும், நெடுஞ்சுனை தலைவன் குடியாகவும், மாம்பழத்தாலும், பலாப் பழத்தாலும் விளைந்த தேறல், தந்தையாலும், தாயாலும் உளனாகிய தலைவனாகவும், பிரசம், இவரைக் கூட்டின பால்வரை தெய்வமாகவும், அதனை உண்ட மயில், உயர்ந்த தலைவனைத் தன் குலத்திற்கு ஒத்தானாகக் கருதி நுகர்ந்த தலைவியாகவும், அத் தேறலிற் பிறந்த களிப்பு, களவொழுக்கத்திற் பிறந்த பேரின்பமாகவும், மயில் ஆடவாற்றாத்தன்மை வருந்திக் குறைந்த தன்மையாகவும், உள்ளுறை உவமம் கொள்க என்பதாம். மேலும், உயர்ந்த நிலத்தே நின்று மணக்கின்ற காந்தள் வரையற மகளிராற் கீழ்நிலத்தே பரந்து, அவ்விடத்தைக் கச்சு விரித்தாற் போல அழகு பெறுத்தும் என்றதனால், நம்மில் உயர்ச்சியையுடைய தலைவன் நமது நல்வினையால் தனது பெருமைதானும் ஒழிந்து இவ்விடத்தே வந்து கூடி, நமக்கும் உயர்ச்சியுளதாக்கி நம்மை அழகு பெறுத்துகின்றானென்று, உள்ளுறை உவமம் எய்திற்று என்றும் இயம்புவார். இவ்வுள்ளுறையின் இனிமையை உணர்ந்து மகிழ்க.

199-208 : எம் விழைதரு ................. தேற்றி

பொருள் : எம் விழைதரு பெருவிறல் - எம்மை எப்பொழுதும் விரும்புகின்ற பெரிய வெற்றியையுடையவன், உள்ளத்தன்மை உள்ளினன் கொண்டு - தான் முயங்குங்கால் இவளது உள்ளத்து நிகழும் தன்மை மேல் வரைந்து கொண்டு இல்லறம் நிகழ்த்து தலாயிருக்கும் என்று நினைந்தனனாய் அதனை உட்கொண்டு, சாறு அயர்ந்தன்ன - விழாக் கொண்டாடினாற் போன்று, மிடா சொன்றி - மிடாவின்கட் சோற்றை, வருநர்க்கு -வருவார்க்கெல்லாம், வரையா - வரைவில்லாதே ஆர்த்துகின்ற, வளநகர் - செல்வத்தையுடைய இல்லம், பொற்ப - பொலிவுறுமாறு, மலரத்திறந்த - அகலத்திறந்து கிடக்கின்ற, வாயில் - வாயிலிடத்தே வந்து, பலர்உண - பலரும் உண்ணும்படி, பைநிணம் ஒழுகிய - பசிய நிணம் ஒழுகாநின்ற, நெய் மலி அடிசில் - நெய்மிக்க சோற்றை நீ இடுகையினாலே, வசையில் வான்திணை புரையோர் - குற்றமில்லாத உயர்குடிப் பிறந்த உயர்ந்தோர், கடும்பொடு - தம் சுற்றத்தோடே, விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் - விருந்தினராக உண்டு மிக்க அடிசிலை, பெருந்தகை - பெரிய தகுதிப்பாடுடைய நங்காய், நின்னோடு உண்டலும் - நீ இடுகையால் யான் உண்பதும், புரைவது - உயர்ந்ததேயாம், என்று ஆங்கு - என்று கூறி அப்பொழுது, அறம் புணையாக தேற்றி - அவ்வில்லறம் தங்களைக் கரையேற்றுவதாகத் தெளிவித்து;

கருத்துரை : எம்மை எப்பொழுதும் விரும்புகின்ற பெருமான் தான் முயங்கும்பொழுது இவள் நெஞ்சத் துள்ளியதனை வரைந்து கொண்டு இல்லறம் நிகழ்த்துதலாயிருக்குமென்று குறிப்பான் ஆராய்ந்து எண்ணி, விழாக்காலத்து மிடாவின்கண்ணுள்ள சோற்றை இடுமாறு போல, பலரும் வந்துண்ணத் திறந்துகிடக்கும் வாயிலின் வருவார்க் கெல்லாம் வரையாதே நெய்மலி சோற்றை நீ இடுகையாலே, சிறந்த விருந்தினர்தம், சுற்றத்தோடே உண்டெஞ்சிய அடிசிலை நீயிட யான் உண்ணுதலும் உயரியதேயாம், என்று கூறி, அவ்வாறு செய்யும் இல்லறம் நம்மைக் கரையேற்றுவதாக எனத் தெளிவித்து என்பதாம்.

அகலவுரை : பெருவிறல் : அன்மொழித்தொகை. ஒருதலையான் இன்னாது காமம் காப்போல - இருதலையானும் இனிது என்பவாகலான் எம் விழைதரு பெருவிறல் என்னுந் தொடர் - எம்மைப் பெரிதும் விழைகின்ற பெருவிறலுடையான் என்று இரண்டாவதன் உருபு விரித்துப் பொருள் கொள்வழி, தலைவன் வேட்கையுரைத்தல் என்பதன் பாற்பட்டு அறத்தொடு நிலைக்கு ஆக்கந்தருவதாய், அச்சொற்றொடரே மீண்டும் எம்மாற் பெரிதும் விழையப்படும் பெருவிறல் என்று மூன்றாவதன் உருபு விரித்துப் பொருள் கொள்ளுங்கால் தலைவியின் வேட்கைப் பெருக்கும் கூறுவதாய், இருதலையானும் விரும்பப்படும் காமம் என்றாதல் காண்க. இனி, சாறு மிடாச் சொன்றி அயர்ந்தன்ன என மாறி, திருவிழாக் களத்திலே மிடாவின்கட் சோற்றை வழங்கினாற் போன்று நெய்மலி அடிசிலை வருநர்க்கு வரையாது வழங்கும் வளநகர் என்று கொள்ளிற் பின்னும் பொருட் சிறப்புடைத் தாதலறிக. பண்டை நாளில் தமிழகத்தே விழாக் களங்களில் அவ்வாறு சோறு வழங்கும் வழக்கமுண்மையை அறாஅ யாணர் அகன்றலைப் பேரூர்ச் சாறுகழி வழிநாள் சோறு நசையுறாது எனவரும் பொருநராற்றுப் படையானும் உணர்க. மலரத் திறந்த வாயில் என்றது அவ் வறஞ்செய்தற்கண் அக்குடியினர்க்குள்ள ஆர்வ மிகுதியையும், நெய்ம்மலி அடிசில் என்றது அவர் விருந்தினரைப் போற்றும் சிறப்பையும், பலருண என்றது அவர்தம் செல்வச் சிறப்பையும் உணர்த்தி நின்றன. இவ்வாற்றால் தலைவன் குடிப்பெருமை, ஒழுக்கப் பெருமைகள் போதரத்தோழி கூறலின், ஏத்தல் கூறியவாறாம். இவையிற்றால் ஆரிய அரசன் பிரகத்தனுக்குக் கபிலர் பெருமான் தமிழ் மக்களின் வாழ்க்கைக் குறிக்கோள் உணர்த்தினாருமாதல் அறிக.

ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உயிர்க்கொடை பூண்ட உரவோ யாகிக்
கயக்கறு நல்லறங் கண்டனை  (மணி-பாத்தி: 92-8)

என்றும்,

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலிற் பின்  (குறள்-225)

என்றும்,

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு  (குறள்-81)

என்றும் வரும் இன்னோரன்ன மெய்ம்மொழிகளான், தமிழ்ச் சான்றோர் யாண்டும் இவ்வறத்தையே பெரிதும் கிளந்தெடுத்து ஓதுதலானும் வரலாற்று நூல்களானும் உணர்க. இனி வசையில் வான் திணைப் புரையோர் என்றது விருந்தினரின் சிறப்புணர்த்தியது; என்னை?

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்  (குறள்-87)

என்றும்,

உறக்குந் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங்கு - அறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்  (நாலடி-38)

என்றும், வரும் மெய்மொழிகளான் விருந்தினரின் சிறப்புடைமை, அவரை ஓம்பும் இல்வாழ்வார்க் கெய்துவிக்கும் சிறப்பினையும், நன்குணர்க. திணை-ஈண்டு உயர்குடியினைக் குறித்துநின்றது. புரை - உயர்வு; உருவுட்காகும் புரையுயர் வாகும் என்பர் தொல்காப்பியனார். புரைவது - ஒன்றறி சொல் உயர்ந்தது என்னும் பொருட்டாய் அறத்தைக் குறித்து நின்றது. உண்டொழி மிச்சில் என்பது,

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்  (குறள்-85)

என்னும் திருக்குறளை நினைவூட்டுதலறிக. வான்றிணைப் புரையோர் ஆவார் அறவோர், அந்தணர், துறவோர் முதலிய மேன்மக்கள்.

அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும்  (சிலப்-கொலை-71-3)

என்னும் கண்ணகியார் கூற்றானும் விருந்தோம்பற் சிறப்புணர்க. பெருந்தகை: அண்மை விளி. நாடறி நன்மணம் செய்துகொண்டு இல்லறம் நிகழ்த்தல் வேண்டும் என்று கருதிய தலைவியின் கருத்தினைக் குறிப்பான் உணர்ந்த தலைவன் அவளைப் பாராட்டுவானாய்ப் பெருந்தகை! என விளித்தான் என்க. இவ்வாறே கண்ணகியாரின் சிறப்புணர்ந்த மதுராபதி என்னுந் தெய்வமும் அவரைப் பெருந்தகைப்பெண்! ஒன்று கேளாய், என விளித்தமை அறிக. இக் கருத்தறியாது பெருந்தகை என்பதனைத் தலைவனுக் காக்கியுரைத்தனர், ஆசிரியர் நச்சினார்க்கினியர். அறம் புணையாதலாவது இல்லறமே பிறவியை யறுத்துயர்தற்கு ஏதுவாதல்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்  (குறள்-46)

என்றும்,

இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாந் தலை  (குறள்-46)

என்றும்,

சிவஞானச் செயலுடையோர் கையிற் றானம்
திலமளவெ செய்திடினும் நிலமலைபோற் றிகழ்ந்து
பவமாயக் கடலினழுந் தாதவகை எடுத்துப்
பரபோகந் துய்ப்பித்துப் பாசத்தை அறுக்கத்
தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச்
சரியைகிரி யாயோகந் தன்னினும்சா ராமே
நவமாகுந் தத்துவஞா னத்தை நல்கி
நாதனடிக் கமலங்கள் நணுகுவிக்குந் தானே  (சிவஞானசித்-278)

என்றும் எழுந்த மெய்ம்மொழிகளானே அறம்புணையாம் வகையுணர்க. எனவே, நங்காய்! யானும் நீ கருதியது போன்றே நின்னோடு விருந்துண்டெஞ்சிய மிச்சில் உண்டல் உயர்ந்ததென்று கருதுகின்றேன் எனக் கூறித் தேற்றினன் என்றவாறு. நின்னொடு உண்டல் என்றது, யாமிருவரும் உடன்பட்டு அறஞ் செய்து உண்டல் என்னும் பொருளை யாப்புறுத்தியது. வேறாகாத அன்புடையிருவர் கூடியல்லது இல்லறம் செய்யப்படாமையின், நின்னோடுண்டலும் புரைவதென்றான் என்க. ஒடு உருபை ஆல் உருபாக்கி நின்னால் இடப்பட்டு யானுண்டல் என்றும் கொள்க. என்னை? தற்கொண்டாற் பேணுதல் தலைவி கடமையாகலின். ஆற்றல்சால் கேள்வி அறம் பொருள் இன்பத்தைப், போற்றிப் புனைந்த பொருளிற்று என்று சான்றோர் போற்றிய இக்குறிஞ்சிப் பாட்டில் அறம் போற்றிப் புனைந்த அருமையான பகுதி இப்பகுதி என்க.

208-214 : பிறங்குமலை ........................ கழிப்பி

பொருள் : பிறங்கு மலை மீ மிசை கடவுள்- பெரிய மலையின் கண் மிக உயர்ந்த இடத்தே உறைகின்ற இறையாகிய முருகனை, வாழ்த்தி - வாயானே வாழ்த்துதலைச் செய்து, கைதொழுது - அத்திசை நோக்கிக் கைகளைக் குவித்துத் தொழுது, ஏம் உறு வஞ்சினம் - இவள் இன்ப முறுதற்குக் காரணமான சூளுறவினை, வாய்மையில் தேற்றி - உண்மையானே தெளிவித்து, அம் தீம் தெள் நீர் - அம் மலைக்கண்ணதாகிய அழகிய இனிய தெளிந்த அருவி நீரை, குடித்தலின் -அவன் குடித்தமையானே, நெஞ்சு அமர்ந்து - இவள் நெஞ்சு அவன் சூளுறவிலே பொருந்தி, அருவிடர் அமைந்த - அரிய காட்டினிடத்தே பொருந்திய, களிறு தருபுணர்ச்சி-களிற்றாலே கூட்டப்பட்ட அக்கூட்டத்தை, வான் உரி உறையுள் - விசும்பின்கண் தமக்குரிய இருப்பினை உடைய, வயங்கியோர் - தேவர்களும், அவாவும் - தம்முறையுளை வெறுத்து விழைதற்குக் காரணமான, பூ மலி சோலை - பூக்கள் நிறைந்ததொரு பொழிலினூடே, அப்பகல் - அன்றெஞ்சிய பகற்பொழுதெல்லாம், கழிப்பி - உறைந்து கழித்து;

கருத்துரை : மலையுச்சியின்மேல் உறையும் முருகனை வாழ்த்திக் கைதொழுது, அம் மலையின் அருவி நீரையும் குடித்துச் சூளுற்றுத் தெளிவித்தலாலே, இவள் நெஞ்சம் அவன் சூளுறவிலே பொருந்திற்றாக; இவ்வாறு காட்டகத்தே வாழும் களிறொன்று கூட்டிவைத்த அக் கூட்டத்தைத் தேவர்களும் தம்முறையுளை வெறுத்து உறைதற்கு விழையும் அழகுமிக்க மலர்நிறை சோலையினூடே, அற்றைநாள் எஞ்சிய பொழுது முழுதும் அவனோடு உடனுறைந்து கழித்து என்பதாம்.

அகலவுரை : பிறங்குமலை என்பதனை விளங்கும் மலையெனக் கொண்டு, தெய்வம் வீற்றிருத்தலாலே விளங்குகின்ற மலை என இரட்டுறவும் மொழிந்து கொள்க. மலைமிசை விரும்பியுறையும் கடவுள் - முருகன்; சேயோன் மேய மைவரை யுலகமும் என்றதனானும் இதனை உணர்க. செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் என்பர் இளங்கோவடிகளார். வாழ்த்துதல்

மலைமகள் மகனே! மாற்றார் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி!
வானோர் வணங்குவிற் றானைத் தலைவ!
மாலை மார்ப! நூலறி புலவ!  (திருமுருகாற்றுப்.)

என்றற் றொடக்கத்து அவ்விறைவன் புகழ்பாடிப் பரவுதல். வஞ்சினம்-நின்னிற் பிரியேன் பிரியின் அறனல்லது செய்தேன் ஆகுவன், என்று உறுதிமொழி கூறல். இவ்வுறுதி மொழியால் தலைவி தேறி இன்னாமை யொழிதலின் ஏம் உறு வஞ்சினம் என்றார். நீர் குடித்தலும் ஒரு வஞ்சினம் என்க. நீர் குடித்தலாலே தலைவியின் மனக் கலக்கம் நீங்கிப் பெரிதும் இன்புற்றுத் தெளிதலால் அந்நீரினை அந்தீந் தெண்ணீர் எனச் சிறப்பித் தோதினர் என்க. விடர்-காடு, இதற்கு நச்சினார்க்கினியர் வேறுபொருள் கூறினர். அமர்தல் - பொருந்துதல். நெஞ்சமர்ந்து என்றதற்கு நெஞ்சானே விரும்புதலுற்று எனினுமாம். களிறு தரு புணர்ச்சி - களிறு ஏதுவாக நிகழ்ந்த கூட்டம் என்றபடி. உரிய என்னும் எச்சத்தீறு கெட்டு உரி என நின்றது. வான் உரிய உறையுள் - வானிடத்தே தமக்குரிய இருக்கை என்க. அஃதாவது கற்பகச் சோலை. எனவே, கற்பகச் சோலையில் உறைவாரும் அதனை வெறுத்து இதன் கண் உறைதலை விரும்புதற்கியன்ற தென அப்பூமலி சோலையின் சிறப்புணர்த்தியவாறென்க. வயங்குதல்-ஒளிர்தல்; வானோர் உடல், ஒளி உடைத்தாய்த் திகழ்தலின் வயங்கியோர் என்றார். அப்பகல்-அற்றை நாளில் எஞ்சிய பகல் என்க. இது மெய்யுறுபுணர்ச்சியைக் குறிப்பாற்றோழி செவிலிக்குக் கூறியவாறு.

இனி, வானோரும் அவாவும் அப் பூமலி சோலைக்கண்ணே அப்பகல் கழித்தமை கூறியதன்றி, மெய்யுறு புணர்ச்சி முதலியவற்றைத் தோழி கூறிற்றிலள் எனில், அவள் செவிலிக்குக் குறிப்பானன்றிக் கூறுதல் நாகரிக மன்மையிற் கூறிற்றிலள் என்க. கூறிற்றிலளேனும், அப் பூமலி சோலைக்கண் புக்கவுடன் தோழி தலைவியை நோக்கி, உதோகாண்!

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட் டியானை
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே  (குறுந்-1)

எனச் சேய்மைக் கண்ணின்ற சேய்குன்றத்தின்கண் மிக்கு மலர்ந்த செங்காந்தண் மலர்காட்டி, அவற்றை நினக்குச் சூட்ட யான் கொய்து வருவல் எனக் கூறி, அவளை அவ்விடத் துய்த்து, அகன்று போயிருப்பள் என்றும், அவ்வாறு தலைவி தன்னோடு தமியளாயவழி தலைவியின் தலையின்கண் மொய்த்த வண்டினை ஓச்சித் தலைவன் ................. என்றும், பின்னர்,

குவளை நாறும் குவையிருங் கூந்தல்
ஆம்பல் நாறும் தேம்பொதி துவர்வாய்க்
குண்டுநீர்த் தாமரைக் கோங்கி னன்ன
நுண்பஃ றுத்தி மாஅ யோயே!
நீயே, அஞ்சல் என்றஎன் சொல் அஞ் சலையே!
யானே, குறுங்கா லன்னங் குவவுமணற் சேக்கும்
கடல்சூழ் மண்டிலம் பெறினும்
விடல்சூழ லன்யா னின்னுடை நட்பே  (குறுந்-300)

என, நயப்பும், பிரிவச்சமும், வன்புறையும் கூறியிருப்பன் என்றும், இனி,

அம்மெல் லோதி விம்முற் றழுங்கல்
எம்மலை வாழ்ந ரிரும்புனம் படுக்கிய
அரந்தி னவியறுத் துறுத்த சாந்தநும்
பரந்தேந் தல்குல் திருந்துதழை யுதவும்
பண்பிற் றென்ப வண்மை யதனாற்
பல்கால் வந்துநம் பருவரல் தீர
அல்கலும் பொருந்துவ மாகலின்
ஒல்கா வாழ்க்கைத் தாகுமென் உயிரே  (தொல்-கள-மேற்.)

என இடமணிமை இயம்பியிருப்பன் என்றும்,

பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மைநாம் உயற்கே  (குறுந்-57)

எனத் தன்னிலை யுரைத்துப் பிரிவச்சமுணர்த்தலும், பிறவும் நிகழ்ந்திருக்கும் என்றும்,

பூமலி சோலை அப்பகல் கழிப்பி

என்னும் குறிப்பாற் கொள்க. இனி, 183. அந்நிலை என்பது தொடங்கி, 214. கழிப்பி என்னும் துணையும் அகன்று கிடந்த பொருளை : அப்பொழுது, நாணும் உட்கும் அடைதரப் பிரியவும் விடான் முயங்கலின், அவ்வழி குன்றுகெழு நாடன் எம் உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு, பெருந்தகாய்:எம் வளநகரில் நெய்மலியடிசில் நீயிட விருந்துண்டெஞ்சிய மிச்சில், நின்னோடு உண்டலும் உயர்ந்ததென்று அறம் புணையாகத் தேற்றிக் கடவுட் டொழுது வஞ்சினங் கூறி நீர் குடித்தலின், இவள் நெஞ்சமர்ந்து களிறுதரும் அப் புணர்ச்சியைப் பூமலி சோலையில் எஞ்சிய பகல் எலாம் அவனொடு உடனுறைந்து கழித்து, என அணுகக் கொண்டு காண்க. 215. எல்லை செல்ல என்பது தொடங்கி, 247. பெயர்ந்தனன் என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண், பூமலி சோலைக்கண் வதிந்த பொழுது அந்திமாலை வந்தமையும், தலைவன் ஈரநன்மொழி இயம்பி, மூதூர் வாயில் உண்டுறை காறும் துணை புணர் ஏறு போலே தலைவியுடன் வந்து ஆண்டு நிறுத்திப் பெயர்ந்தமையும் கூறப்படும்.

215-230: எல்லைசெல்ல ...................... காணூஉ

பொருள் : எல்லை செல்ல - பகற் பொழுது போம்படி, ஏழ் ஊர்பு இறைஞ்சி-ஏழு குதிரை பூண்ட தேரைச் செலுத்தி, பல் கதிர் மண்டிலம் - பல கதிர்களையுøடைய ஞாயிறு, கல் சேர்பு மறைய - மேலை மலையை எய்தி மறைதலாலே, மான்கணம் - மான் கூட்டம், மரம் முதல் மரத்தடிகளிலே வந்து, தெவிட்ட - கூடாநிற்பவும், ஆன்கணம் - பசுவினுடைய கூட்டம், கன்று பயிர் குரல - தம் கன்றுகளை அழைக்கும் குரலையுடையவாய், மன்று நிறை புகுதர - மன்றுகள் நிறையுமாறு புகுதா நிற்பவும், ஏங்கு வயிர் இசைய - ஊதுகின்ற கொம்பு போன்ற ஓசையை உடைய, கொடுவாய் -வளைந்த வாயையுடைய, அன்றில் - அன்றிற் பறவை, ஓங்கு இரு பெண்ணை - உயரும் பெரிய பனையின்கண் உளள, அகமடல் - உள்மடலிலே இருந்து, அகவ-தம் பெடையை அழையாநிற்பவும், பாம்பு மணி உமிழ -பாம்பு தாம் மேய்தற் பொருட்டுத் தம் பால் உள்ள மாணிக்கத்தை உமிழாநிற்பவும், பல் வயின் - பலவாகிய இடங்கள்தோறும், கோவலர் - இடையர்கள், ஆம்பல் தீங்குழல்-ஆம்பல் என்னும் பண்ணினையுடைய இனிய குழலிடத்தே, தெள்விளி பயிற்ற - தெளிந்த இசையைப் பல காலும் எழுப்பவும், ஆம்பல் ஆய்இதழ் கூம்புவிட-ஆம்பல் மலரின் அழகிய இதழ்கள் தளையவிழவும், வளமனை - செல்வம் நிறைந்த இல்லங்களில், பூந்தொடி மகளிர் - பொலிவுபெற்ற வளையலணிந்த மகளிர்கள், சுடர்தலை கொளுவி - விளக்கை அவ்விடத்தே ஏற்றி, அந்தி அயர - தம் அந்திக்கடனை யாற்றவும், கானவர் - அக்காட்டிடத்தே வாழ்வோர், விண் தோய் பணவை மிசை வானத்தைத் தீண்டுகின்ற தம் பரணிடத்தே, ஞெகிழி பொத்த - தீக்கடை கோலாலே நெருப்பினைத் தோற்றாநிற்பவும், வானம்-முகில்கள், மாமலைவாய் - பெரிய மலையிடத்தே, சூழ்பு - சூழ்ந்து, கறுப்ப - கறுப்பவும், கானம் - காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம், கல்லென்று - கல்லென்னும் ஓசை யுண்டாகுமாறு, இரட்ட - ஒன்றற்கொன்று மாறிக் கூப்பிடவும், புள்இனம் ஒலிப்ப - பறவையினங்கள் ஆரவாரிக்கையாலே, சினைஇய வேந்தன் - மாற்றாரைச் சினந்த அரசன், செல்சமம் கடுப்ப - போர்மேற் சேறலை ஒப்ப, துனைஇய - விரைதலையுடைய, மாலை அந்திப்பொழுது, துன்னுதல் - நெருங்கிவருதலை, காணூஉ-கண்டு;

கருத்துரை : பகற்பொழுது கழியும்படி ஞாயிறு மறைதலால், மான்கள் மரத்தடியிலே கூடவும், ஆன்கள் தம் கன்றை அழைத்தனவாய் மன்றங்களிலே வந்து நிறையவும், அன்றிற் பறவைகள் பனையின் அகமடலிலே இருந்து தந்துணைப் பறவையை அழைப்பவும், பாம்புகள் மாணிக்கத்தை உமிழவும், கோவலர் இடந்தோறும் தம் குழலிடத்தே ஆம்பற் பண்ணைப் பன்முறை எழுப்பவும், மகளிர் மனையிடத்தே சுடர்விளக்கம் ஏற்றித் தொழவும், பார்ப்பனர் மாலைக்கடனியற்றா நிற்பவும், கானவர் பரண்மேல் தீக்கடை கோலாலே நெருப்பினைத் தோற்றுவிக்கவும், முகில்கள் மலையினைச் சூழ்ந்து கறுப்பவும், விலங்குகள் ஒன்றற்கொன்று கூப்பிடவும், பறவைகள் ஆரவாரிக்கையாலே, அந்திமாலை போர்மேற் செல்லும் சினமிக்க வேந்தனைப் போன்று உலகிலே விரைந்து வருதலைக் கண்டு என்பதாம்.

அகலவுரை : எல்லை-பகல், எல்லை-பகற்பொழுதின் வரை எனினுமாம். ஏழ்: எண்ணுப்பெயர், ஞாயிற்றின் குதிரைகட்கு ஆகுபெயராய் நின்றது; ஞாயிறு ஏழு குதிரை பூட்டிய தேரில் ஊர்வான் என்றல் மரபு. கல் - குடக்கிலுள்ள மலை. இறைஞ்சி -தாழ்ந்து. தெவிட்டல்-திரளுதல்; அசையிடுதலுமாம். பயிர்தல்-அழைத்தல். வயிர் - ஒருவகைத் துளைக்கருவி; இதனைக் கொம்பு என்ப; இதன் ஒலி அன்றிலின் குரலுக்கு உவமை. கொடுவாய்-வளைந்த அலகு. அகவுதல்-அழைத்தல். நல்ல பாம்பு தன் வாயிலுள்ள மாணிக்கத்தை உமிழ்ந்து அதன் ஒளியின் உதவியால் இருளில் இரை தேரும் என்பவாகலின், பாம்பு மணி உமிழ என்றார். இதனை அரா உமிழ்ந்த மேய்மணி விளக்கின் என்னும் அகத்தானும் உணர்க. ஆம்பலந்தீங்குழல் என்பதற்கு, ஆம்பல்-கருவி; ஒருபண்ணுமாம் என்று சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் கூறினர். அடியார்க்கு நல்லார், ஆம்பல்-குழல் என்று கூறிக் கஞ்சத்தாற் குமுதவடிவாக அணைசு பண்ணிச் செறித்தலின் ஆம்பற்குழலாயிற்றென்றும் கூறுவர். பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி என்பதனோடும் அந்தி அயர என்பதனைக் கூட்டுக. மகளிர் மனையில் விளக்கேற்றி அந்தி அயர்தலை,

மடவரன் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்காற் பித்திகத்து
அவ்விதழ் அவிழ்பதங் கமழப் பொழுதறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர

என்னும் நெடுநல்வாடையானும்,

அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகன்மாய்ந்த
மாலை

என்னும் சிலப்பதிகாரத்தானும் உணர்க. அந்தி அந்தணர் அயர என்றதற்கு அந்திக்காலத்தே சான்றோர்கள் இறைவழிபாடு செய்ய எனினுமாம். அந்தி அந்தணர் செந்தீப் பேண என்றார் பிறரும். பணவை - பரண். ஞெகிழி-தீக்கடைகோல். பொத்துதல்-தீமூட்டல். வானம் ஈண்டு முகிலுக்கு ஆகுபெயர். கானம்-விலங்குகட்கு ஆகுபெயர். இரட்டுதல்-மாறிமாறிக் கத்துதல். சமம்-போர்; இது வடமொழி. கடுப்ப: உவம உருபு. காணூஉ : செய்யூ என்னெச்சம் அளபெடுத்தது. இனி, பூமலி சோலைக்கண் உறையும் காதலரைப் பிரித்து ஏதஞ் செய்ய இவ்வந்திமாலை வருதலின், அக்கொடுமை கருதிச் சினைஇய வேந்தன் செல்சமம் கடுப்ப என உவமை எடுத்தோதினர் என்க. திருவள்ளுவனாரும்.

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்  (குறள் - 1224)

என்றமை காண்க. இனி, ஈண்டுக் கபிலர் காட்டிய அந்திமாலையோடே பெரும்பான்மை ஒற்றுமையுடைய தண்டமி ழாசான் சாத்தன் உரைத்த அந்திமாலையினை உடன்வைத் தோதுவார்க்கு இறப்பவும் இன்ப நல்குமாகலின் அதனை ஈண்டுத் தருதும்:

அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய
தன்னுறு பெடையைத் தாமரை அடக்கப்
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு
ஓங்கிருந் தெங்கின் உயர்மடல் ஏற
அன்றிற் பேடை அரிக்குரல் அழைஇச்
சென்றுவீழ் பொழுது சேவற்கு இசைப்பப்
பவளச் செங்காற் பறவைக் கானத்துக்
குவளை மேய்ந்த குடக்கட் சேதா
முலைபொழி தீம்பால் எழுதுகள் அவிப்பக்
கன்றுநினை குரல மன்றுவழிப் படர
அந்தி அந்தணர் செந்தீப் பேண
பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப
யாழோர் மருதத் தின்னரம் புளரக்
கோவலர் முல்லைக் குழல்மேற் கொள்ள
அமரக மருங்கிற் கணவனை இழந்து
தமரகம் புகூஉம் ஒருமகள் போலக்
கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமொடு
அந்தி என்னும் பசலைமெய் யாட்டி
வந்திறுத் தனளால் மாநகர் மருங்கென்  (மணி-5 : 123-41)

எனவரும்.

231-237 : நேரிறைமுன்கை ................ பெயர்ந்தனன்

பொருள் : நேர் இறை முன்கைபற்றி - நுமது நேரிய இறையினையுடைய முன்கையைப் பிடித்து, நுமர்தர - நும்முடைய சுற்றத்தார் எமக்குத் தர, நாடுஅறி நன்மணம் - நாட்டின் உள்ளார் எல்லாம் அறியும் நன்மையுடைய மணத்தினை, அயர்கம் - பின்னர் நிகழ்த்துவேம், சில்நாள் - அது நிகழ்தற்கிடையே உளவாம் ஒரு சில நாள்களினகத்தே, கலங்கல் ஓம்புமின் - நும்நெஞ்சு கலங்குதலைப் பாதுகாப்பீராக, இலங்கு இழையீர் - விளங்குகின்ற பூணினையுடையீர், என - என்று, நன்மொழி - அருள் உடைத்தாகிய நல்ல மொழியினை, தீரக் கூறி - எம் வருத்தந் தீருமாறு சொல்லி, துணை புணர் ஏற்றின் - ஆனினைப் புணர்ந்த விடையினைப் போன்று, எம்மொடு வந்து - விடாமல் எம்முடனே கூடிவந்து, துஞ்சா முழவின் மூதூர் வாயில் - ஒருகாலும் முழவினது ஓசையறாத பழைதாகிய நம் ஊர் வாயிலிலே, உண்துறை - பலரும் நீருண்ணும் துறையிலே, நிறுத்து - எம்மை நிறுத்தி, பெயர்ந்தனன் - மீண்டு சென்றான்.

கருத்துரை : இலங்கிழையீர்! நும் சுற்றத்தார் நும் கையைப்பற்றி எம்கையிற் றருதலாகிய நாடறி நன்மணம் யாம் செய்து கோடும்; அது நிகழ்தற்கு இடையே நிகழும் ஒரு சில நாட்களில் நீயிர் நெஞ்சுகலங்குதல் வேண்டா என்று தன் அருள் கெழுமிய நல்ல மொழிகளால் எம் வருத்தம்போக்கி, ஆனினைப்புணர்ந்த விடைபோன்று எம்மைவிடாமற்றொடர்ந்துவந்து நம் மூதூர் வாயிலில், நீருண்ணுந் துறையிலே எம்மை நிறுத்தி மீண்டுபோயினன் என்பதாம்.

அகலவுரை : தமர் நேரிறை முன்கைபற்றித் தருதல் பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்த கரணம் என்றுணர்க. நாடறி நன்மணம் என்றது சுற்றத்தார் சூழ்ந்திருக்கும் அவையின்கண் அவர் கரியாகத் தலைவியின் இருமுதுகுரவரும் அவள் கையைப்பற்றித் தலைவன் கையிற்கொடுத்து ஓம்படை செய்தல் என்க. இதனைப் பலரறி மணம் என்றும் கூறுப. மாமுது பார்ப்பான் மறைவழி காட்டல் தீவலஞ் செய்தல், அம்மி மிதித்தல் முதலிய கரணங்கள் பண்டைநாள் தமிழ்மக்கள் மணவிழாவில் நிகழ்ந்தனவாகத் தோன்றவில்லை. இவை தமிழகத்தே இடையிலே வந்து புகுந்த ஆரியவழக்கங்ளாம். இவ்வழக்கம் கலத்தற்கு முன்னர்த் தமிழ்மக்களின் நாடறி நன்மணம் நிகழ்ந்தமுறையினைக் கூறுதும்:

மணநாளில் உறவினர்க்கும் பிறர்க்கும் உண்டி வழங்குவர். மண நிகழ்தற்குரிய இல்லத்தில் பந்தலிட்டுப் புதிய மணல்பரப்பிச் சுடர் விளக்குகளை ஏற்றி, மலர்மாலைகளால் ஒப்பனை செய்வர். கோள், நாள் முதலியவற்றால் நன்மை அமைந்த நாட்காலையிலே, முதுமகளிரும், மகப்பேறுடையாரும், மங்கல நாண் உடையாரும் ஆகிய மகளிர் புதிய குடங்களிலே கொண்டுவந்த நன்னீரால் மணமகளை நீராட்டி மலரோடு நெல் கலந்து தலையிலே தூவி வாழ்த்துவர். பின்னர், மணமகளின் இருமுது குரவரும் அவள் கையைப்பற்றிப் பலர்முன்னர் மணமகன் கையிற் கொடுத்து ஓம்படை செய்வர். இவ்வாறு நிகழ்ந்த நாடறி நன்மண நிகழ்ச்சியை,

உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவைப்
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகாற்
றண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெமிரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவு முறைமுறை தரத்தரப்
புதல்வர்ப் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுந்து
பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர
வோரிற் கூடிய உடன்புணர் கங்குல்  (அகம்-86)

எனவரும் அகப்பாட்டான் நன்குணர்க. அயர்கம் : தன்மைப்பன்மை. ஈரநன்மொழி, அருளொடு அளைஇய மொழி; இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம், செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் என்னும் தமிழ்மறையானும் ஈரமொழியின் இயலுணர்க. தீரக்கூறி என்பதற்கு, நன்கு தெளியுமாறு விளங்கவுரைத்தெனினுமாம். நாடறி நன்மணம் செய்து கோடற்கு யாய் முதலியோர்க்கு அறிவுறுத்து அவர் உடம்பாடு பெறலும், சுற்றத்தார்க் கறிவுறுத்தலும் பிறவும் நிகழ்தற்கு இடையே சில நாட்கள் வேண்டுமன்றே, அந்நாட்களில் நீயிர் கலங்கற்க என்பான், சின்னாட் கலங்கல் ஓம்புமின் என்றான். முன்னர், ஆகாண் விடையின் அணிபெற வந்தான் என்ற தோழி ஈண்டும், துணைபுணர் ஏற்றின் எம்மொடு வந்தென அவ்வுவமையை எடுத்தாளுதலும், முன்னர், காண் விடை என்றவள் ஈண்டுப் புணர்ச்சியுண்மையும் குறிப்பாற் புலப்படுத்துப் புணர் ஏறு என்று கூறுதலும் உணர்ந்து மகிழற்பாலதாம்.

இனி,

மெல்லிய லரிவைநின் னல்லகம் புலம்ப
நிற்றுறந்து அமைகுவ னாயின் எற்றுறந்து
இரவலர் வாரா வைகல்
பலவா குகயான் செலவுறு தகவே  (குறுந்-137)

என்றார் போல்வன கூறலும்,

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெய்ந்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே  (குறுந்-40)

என்றாற் போல்வன கூறித் தெளிவகப் படுத்தலும் ஈரநன்மொழி தீரக் கூறலாம் என்க. துணைபுணர் ஏற்றின் என்றது வேட்கையுரைத்தலாம். எம்மொடு வந்து என்றது எளித்தலாம், என்க. துஞ்சாமுழவின் மூதூர் வாயில் உண்டுறை என்னுந்துணையும் பலரும் வழங்குதலுண்மையின் அவ்விடத்தே தலைவன் தன்னைப் பிறர் அறிவுறாமைப்பொருட்டு நிறுத்தி மீண்டான் என்னும் பொருள் தந்து குறிப்பேதுவாய் நிற்றல் உணர்க. பெயர்ந்தனன் என்னும் சொல்லை எடுத்தோதிப் பெயரலாற்றாது பெயர்ந்தான் எனவும் பொருள் காண்க. 215. முதல் 237. வரையிற்கிடந்த தொடரின் பொருளை, ஞாயிறு மறைய, மான் கணம் திரள, ஆன் கணம் புகுதர, அன்றில் அகவ, கோவலர் விளிபயிற்ற, கானவர் ஞெகிழிபொத்த, முகில் கறுப்ப, பாம்பு உமிழ, கானம் இரட்ட, புள் ஒலிக்கையாலே, வேந்தன் சமம்போல, மாலை துன்னுதலைக் கண்டு, இழையீர்! நுமர்தர, நாடறி நன்மணம் அயர்கம்; சின்னாட் கலங்கன்மின் எனத் தீரக்கூறி உடன் வந்து உண்டுறை நிறுத்துப் பெயர்ந்தனன் என அணுகக் கொண்டு காண்க. இனி, 237. அதற்கொண்டு என்பது தொடங்கி, 245. இலனே என்னுந்துணையும் ஒருதொடர்; இதன்கண், தலைவன் இரவுக்குறி வருதலும், அவனுக்கு நேரும் இடையூறுகளும், அவன் பெருந்தன்மையும் பிறவும் கூறப்படும்.

237-245 : அதற்கொண்டு .................. இலன்

பொருள் : அதன் கொண்டு - அப்புணர்ச்சி தொடங்கி, அன்றை அன்ன - அம் முதனாள் போன்ற, விருப்பொடு - வேட்கையோடே, என்றும்- எந்நாளும், இரவரல் மாலையன் - இரவுக்குறியிலே வருதலைத் தனக்கு இயல்பாக உடையன், வருதோறும் - அங்ஙனம் வரும்பொழுதெல்லாம், காவலர் கடுகினும் - ஊர்காப்பாளர் கடுகிக் காவல் செய்தாராயினும், கதம் நாய் குரைப்பினும் - சினமிக்க நாய்கள் குரைத்தனவாயினும், நீ துயில் எழினும் - நீ உறக்கந்தீர்ந்து விழித்தனையாயினும், நிலவு வெளிப்படினும் - திங்கள் வெளியாக ஒளிபரப்பினும், வேய்புரை மென்றோள் - மூங்கிலை ஒத்த மெல்லிய தோளிடத்தே பெறும், இன் துயில் பெறாஅன் - இனிய துயிலைப் பெறாது, பெயரினும் - வறிதே மீள்வான்; அங்ஙனம் மீள்வான் எனினும், முனியல் உறாஅன்-அதனால் வெறுத்தலையும் செய்யான், இளமையில் இகந்தன்றும் இலன் - அவன்றான் இளமைப்பருவத்தைக் கடந்ததுமிலன், வளமையில் - தான் பெற்றுள்ள செல்வத்தின் செருக்கானே, தன் நிலை - உயர் குடிப்பிறந்த தனக்குரித்தாகிய நற்குண நற்செயல்களிற் பொருந்தி நிற்றலை, தீர்ந்தன்றும் இலன் - நீங்கியதும் இலன்.

கருத்துரை : அவ்வியற்கைப் புணர்ச்சி தொடங்கி, குறையாத வேட்கையோடே, இவளை நாடி இரவுக்குறியிடத்தே ஒவ்வொரு நாளும் தவிராதே வருகின்ற இயல்புடையனாயினான்; அவ்வாறு வரும்போதெல்லாம் காவலர் கடுகுதலானும், நாய் குரைத்தலானும், நீ விழித்தலானும், நிலவெறித்தலானும் இடையூறுற்று, இவளது மென்றோளில் பெறும் இன்றுயில் பெறானாய், வறிதே மீள்வன்; மீள்வானேனும், வெறுத்தலுஞ் செய்யான், இவ்வாறு எளிவந்தொழுகுவான் இளம்பருவம் நீங்கியவனும் அல்லன்; செல்வம் மிக்குடையனேனும், அதனாற் செருக்குற்றுத் தன்னிலையிற் றவறியவனுமல்லன் என்பதாம்.

அகலவுரை : அற்றை அன்ன விருப்போடு என்றது, வேட்கை குறைதலின்றி என்றபடி. இவ்வேட்கையை ஒருதலை வேட்கை என்ப; என்னை? ஒரு பொருளை விழைந்து அது பெற்று நுகர்வோர்க்கு, நுகர்ந்த பின்னர் அதன்கட் சென்ற வேட்கை குறையுமன்றே! அவ்வாறு புணர்ச்சிக்கு முன்பிருந்த வேட்கை புணர்ந்த பின்னரும் குறையாததாய் நிலைத்திருத்தல் ஒருதலை வேட்கையாம். அங்ஙனம் எப்பொழுதும் ஒருபடித்தாய் வேட்கை நிலைபெறுதற்குக் காரணமாவது, காமம் அன்று, அன்பே என்க. இதனாலன்றோ, காமத்துச் சிறந்தது காதற் காமம் எனத் தொல்லாசிரியர் ஓதியதூஉம் என்க. இரா - இறுதியினின்ற ஆகாரம் குறுகி இர என நின்றது. என்னை? குறியதன் கீழ்அக் குறுகலும் உரித்தே என்பதோத்தாகலின் என்க. மாலை-இயல்பு. இரவரல் - இரவுக்குறியின்கண் வருதல்.

குறியெனப் படுவது இரவினும் பகலினும்
அறியத் தோன்றும் ஆற்ற தென்ப  (தொல்-கள-38)

என்னும் ஓத்தினுள், குறியிரண்டனுள்ளும் இரவுக்குறியே சிறப்புடையதென்பது கருதி முன்வைத்தனர் என்ப. கபிலரும் அச்சிறப்புடைமை கருதியே. இரவுக்குறி ஒன்றனையே இந்நூலுட் கூறுவாராயினர் என்க. அவ்விரவுக் குறிதானும், இல்லத்தின் உள்ளும், அல்லாதவிடத்து, மனையிலுள்ளோர் சொல் கேட்கும் எல்லைக்கண்ணதாகிய மனைப்படப்பையும் என்ப. பண்டைநாள் மூதூரில் இராப்பொழுதின்கண் காவலர் தெருக்களிலே சுற்றிச்சுற்றிக் காவல் புரியும் வழக்கம் உண்டு. இரவுக்குறியிற் செல்லும் தலைவனுக்கு இக்காவலர் வருகையும் இடையூறாயிற்றென்க.

இக்காவலர் தன்மையை,

கண்மா றாடவர் ஒடுக்கம் ஒற்றி
வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த
நூல்வழிப் பிழையா நுணங்குநுண் டேர்ச்சி
ஊர்காப் பாளர் ஊக்கருங் கணையினர்
தேர்வழங்கு தெருவி னீர்திரண் டொழுக
மழையமைந் துற்ற அரைநாள் அமயமும்
அசைவிலர் எழுந்து நயம்வந்து வழங்கலின்

என்னும் மதுரைக்காஞ்சியானும், நன்குணர்க. இனி, இவ்விரவுக் குறிக்கண் நிகழும் ஏதம் பலவற்றையும்,

இரும்பிழி மகாஅரிவ் வழுங்கன் மூதூர்
விழவின் றாயினும் துஞ்சா தாகும்
மல்லல் ஆவண மறுகுடன் மடியின்
வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்
பிணிக்கோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்குவேல் இளையர் துஞ்சின் வையெயிற்று
வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்
அரவவாய் ஞமலி குரையாது மடியின்
பகலுரு வுறழ நிலவுக்கான்று விசும்பின்
அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே
திங்கள்கல் சேர்பு கனையிருள் மடியின்
இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை
கழுதுவழங்கு யாமத்து அழிதகக் குழறும்
வளைக்கட் சேவல் வாளாது மடியின்
மனைச்செறி கோழி மாண்குர லியம்பும்  (அகம். 122)

என்னும் அகப்பாட்டான் அறிக. வேய்புரை மென்றோள் இன்றுயில் பெறான் என்னுந்தொடர்,

தாம்வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு  (குறள்-1103)

என்னுந் திருக்குறளை நினைவூட்டுதலறிக. இளமை-ஈண்டுப் பதினாறாண்டகவை. பதினையாண்டும் பத்துத்திங்களும் புக்க பருவம் என்றும் கூறுப. வளமையிற் றன்னிலை தீர்ந்தன்று மிலனே என்றமையால் திருவும் கூறியவாறாயிற்று. திருப்பெற்றார் செருக்குற்றுத் தம் நிலை கெடல் பெரும்பான்மையாகலின் வளமையைத் தன்னிலை தீர்தற்கு ஏதுவாகக் கூறினார்.

அறநிரம்பிய அருளுடை அருந்தவர்க் கேனும்
பெறலருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்  (கம்ப-மந்த-70)

எனச் செல்வத்தின் தீமையினைச் சான்றோர் கூறினரேனும், அஃது உயர்குடிப் பிறந்தாரைக் கெடுத்தற்கியலாமையும்,

சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலும் சொல்லார் மிகுதிச் சொல்  (நாலடி-346)

என்பதனால் கூறுபவாதலின், அவ்வளமையானும் செருக்குறா விழுக்குடிப்பிறந்தோன் எனத் தோழி ஏத்தல் கூறுவாள் வளமையிற் றீர்ந்தன்றும் இலனே என்றாள் என்க. உயர்குடிப் பிறவார் வளமையிற் றன்னிலை தீர்ந்து கெடுமாற்றினை,

செல்வம்வந் துற்ற காலைத் தெய்வமும் சிறிது பேணார்
சொல்வன அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் நோக்கார்
வெல்வதே நினைவ தல்லால் வெம்பகை வலிதென் றெண்ணார்
வல்வினை விளைவு மோரார் மண்ணின்மேல் வாழும் மாந்தர்  (வி-பா-கிருட்டி-143)

என்னும் வில்லி செய்யுளான் உணர்க. இதன்கண் அன்றையன்ன விருப்பொடு என்பது தொடங்கி, முனியலுறான் என்னுந் துணையும் வேட்கையுரைத்தலும், எளித்தலும், கூறியவாறாம். இளமையினிகந்தன்றுமிலன், வளமையிற் றீர்ந்தன்றுமிலன் என்பன ஏத்தல் கூறியவாறாம் என்க. ஏகாரங்கள் அசை. 237-245 : இத்தொடரின்கட் கிடந்த பொருளை, அதற்கொண்டு விருப்பொடு, என்றும் இரவரன் மாலையன்; வருதோறும், கடுகினும், குரைப்பினும், வெளிப்படினும், துயிலெழினும், துயில் பெறான் பெயரும்; பெயரினும், முனியலுறான்; இளமை தீர்ந்திலன்; வளமையாற் றன்னிலை தீர்ந்திலன் என அணுகக்கொண்டு காண்க. இனி 245. கொன்னூர் என்பது தொடங்கி, 261. எனவே, என நூன்முடியுந் துணையும் ஒரு தொடர். இதன்கண், இரவுக் குறியின்கண் வரும் தலைவனுக்கு நிகழ்தற்குரிய இடும்பைகளும் அவற்றை எண்ணித் தலைவி ஆற்றாது வருந்துதலும் பிறவும் கூறப்படும்.

245-251 : கொன்னூர் .................. இவளே

பொருள் : கொன்ஊர் - அச்சந்தரும் இவ்வூரின் கண்ணே, மாயம் - தனக்குப் பொய்யாயிருக்கின்ற, வரவின் - இரவுக்குறியிலே கூடுதற்கு வருகின்ற வருகையினது, இயல்பு - தன்மையை, நினைஇ - இஃது ஒழுக்க மன்றென்று நினைத்து, தேற்றி - அவன் வரைந்து கொள்ள அவனோடு கூடி இல்லறம் நிகத்துதலே நல்லொழுக்கம் என்று துணிகையாலே, நீர் எறி மலரின் -பெரிய மழைத் துளிகளாலே தாக்கப்பெற்ற மலர் போலே, சாஅய்-அழகழிந்து, இதழ் சோரா - இமை சோர்ந்து, ஈரிய - ஈரத்தை உடையவாய், கலுழும்-கலங்காநின்றன, இவள் - என் தோழியினுடைய, பெரு மதர் மழை கண் - பெரிய மதர்த்த குளிர்ந்த கண்கள், அகத்து- மார்பினிடத்தே, அரிபனி உறைப்ப - அவ்வாறு கலங்கும் கண்களினின்றும் அரித்து வீழும் நீர் துளியா நிற்ப, நாளும் - நாள்தோறும், வலைப்படு மஞ்ஞையின் - வலையின் கண் அகப்பட்ட மயில் போலே, நலம் செல - தன்னலம் போம்படி சாஅய்-நுணுகி, நினைத்தொறும் - அவர் வருகின்ற மலை இடும்பையுடையவாயிருக்கும் என்று எண்ணுந் தோறும், இவள் கலுழும் - இவளும் கலங்கா நிற்பள்;

கருத்துரை : அச்சந்தரும் இவ்வூரின்கண், தனக்குப் பொய்யாயிருக்கின்ற இரவுக் குறியிடத்தே தலைவன் வந்தொழுகும் ஒழுக்கம் நல்லொழுக்க மன்றென்றும், நாடறி நன்மணம் நிகழ்த்தி அவனோடு கூடி இல்லறம் நிகழ்த்துதலே நல்லொழுக்கமாம் என்றும் தெளிந்து, அது கூடாமையானே, மழைப் பெருந்துளியால் தாக்கப்பட்டு அழகழிந்த மலர் போலே தன்கண்கள் இமை சோர்ந்து கலங்காநிற்ப, அக்கண்கள் உகுக்கும் நீரானே மார்புநனைய, வலையிற்பட்ட மயில்போலே தன்னலம் கெடத் தலைவன் இரவுக் குறியிடத்தே வரும் நெறியின்கண் உள்ள இடும்பைகளை எண்ணுந் தோறும் ஆற்றாது இவளும் கலங்காநிற்பள் என்பதாம்.

அகலவுரை : கொன்-அச்சம்; கொன் செய் வாளி என்னும் நைடதத்தினும் அஃது இப்பொருட்டாதல் அறிக. சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச் சுட்டுவிரற் சேர்த்தி அம்பல் தூற்றும் வம்ப மகளிரை உடைமையின் ஊர் அச்சந்தருவ தாயிற்றென்க. மாயம்-உள்ளதுபோற் றோன்றி இல்லையாகும் பொய். இரவுக் குறியிற்றலைவன் வருகை இருவர்க்கும் பயனின்றாகலின் அவ் வருகையினை மாய வரவு என்றாள். வந்த கிழவினை மாயம் செப்பி என வரூஉம் ஓத்தின்கண்ணும் மாயம் இப்பொருட்டாதல் காண்க. நினைஇத் தேற்றி-என்றது நீடு நினைந்து தெளிந்து என்றவாறு. இவ்வாறு ஒழுகும் ஒழுக்கம் பயனிலதாய், அறஞ்செய்தற்கும் இடனாகாது ஏதம் வருதற்கே இடனாதலின் இது நல்லொழுக்கம் அன்றென்றும், வரைந்து கொண்ட வழி அறம் பொருள் இன்பம் மூன்றும் எய்தக்கூடும் என்பதுபற்றி அதனை நல்லொழுக்கம் என்றும் தெளிந்து, அது கூடாமையின் கண்கலங்கி வருந்தினாள் என்க. இவ் வருத்தத்தினைக் கண்கள் மேலேற்றியும் தலைவன் வரும் நெறி இடும்பை நினைந்து வருந்தும் வருத்தத்தை அவள் மேலேற்றியும் இரு வேறு வருத்த முண்மையையும் இனிது விளக்கும் பொருட்டுக் கூறினர் என்க. தலைவியினது அழகழிந்த கண்கட்கு, மழைத் துளியானேறுண்டு அழகழிந்த மலரினை நுண்ணிதின் எடுத்து உவமை கூறிய நலத்தினை உணர்ந்து மகிழ்க. இற்செறிக்கப்பட்டமையான் இல்லத்துள்ளேயே கிடந்து தன் கேளிரைக் காணப்பெறாது வருந்தும் தலைவிக்கு வலைப்பட்ட மயில் உவமை. சாஅய் - நுணுகி: தேய்ந்து. ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்றார் தொல்காப்பியனாரும். நினைத்தல் - தலைவனுக்குளதாம் இடும்பைகளை எண்ணுதல். ஈண்டுத் தலைவி வருந்தற்குக் காரணம் தலைவனுக்கு ஏதம் உளவாம் என்னும் எண்ணமே என்று தோழி கூறுதல் அன்பின் சிறப்பினைக் குறித்து நின்றது.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்  (குறள்-71)

என்பவாகலின் இவ் வன்பான் எழுந்த துன்பம் அவள் கரந்தொழுகற் பாலதன்றாகலின் கலுழாநின்றாள் எனத் தலைவியின் கற்புக் கடம்பூண் டொழுகும் அன்பின் பெருமையையே தோழி கூறி முடித்தல் காண்க. தன்னலம் பேணாது தன்னால் அன்பு செய்யப்பட்டோர் நலத்தையே பேணுதலும், தன் வருத்தம் நோக்காது தன்னாலன்பு செய்யப்பட்டார் வருத்தத்திற்கே தான் வருந்துதலுமே அன்பின் இயல்பென்க. இனி, இவ்வாறு தோழி கூறியபோது, அவ்வாறு அத் தலைவன் வரும் நெறி ஏதம் மிக உடைத்தோ! என அறியலுறும் செவிலி, தோழியின் முகத்தைக் கூர்ந்து நோக்கியவழி, அவள் அவ் வழியின் உளவாம் ஏதம் இவை என்று அவட்கு விரித்தோதுகின்றாள் என்க.

251-261 : கங்குல் .................. எனவே

பொருள் : கங்குல்  -இரவின்கண், அளைசெறி உழுவையும் - முழைஞ்சிடத்தே உறையும் புலிகளும், ஆளியும் - யாளிகளும், உளியமும் - கரடிகளும், புழல்கோடு ஆமான் புகல்வியும் - உட்டுளை பொருந்திய கொம்பையுடைய ஆமான் ஏறும், களிறும் - யானையும், வலியின் தப்பும் - வலியினாற் கெடுக்கும், வன்கண் வெஞ்சினத்து - தறுகண்மையோடே வெவ்விய சினத்தையுடைய, உருமும் - உருமேறும், சூரும் - தீண்டி வருத்தும் தெய்வமும், இரைதேர் அரவமும்-இரை தேடித்திரியும் பாம்பும், ஒடுங்கு இரு குட்டத்து - புடைபட்ட கரிய ஆழத்தையுடைய, நீர்நிலையிலே, அருஞ்சுழி வழங்கும்-போதற்கரிய சுழியிடத்தே திரிகின்ற, கொடுதாள் - வளைந்த கால்களையுடைய, முதலையும் இடங்கரும் கராமும் - முதலைகளும் இடங்கர்களும் காரங்களும், நூழிலும் - வழிபறிப்போர் கொன்று குவிக்கும் இடங்களும், இழுக்கும் வழுக்கு நிலமும், ஊழ் அடிமுட்டமும் - முறையடிப்பாடாய்ப் பின்பு வழிமுட்டாயிருக்கும் இடங்களும், பழுவும் - பேயும், பாந்தளும் -மலைப்பாம்பும், உளப்பட - இவையிற்றை உள்ளிட்ட, பிறவும் - இன்னோரன்ன பிறவுமாகிய, வழுவின் வழா விழுமம் - கொலைத்தொழிலிற் றப்பாது இடும்பை தருவனவற்றை, அவர் - தலைவருடைய, குழு மலை விடர் அகம் - கூட்டமாகிய மலைகளிடத்தே உள்ள முழைஞ்சுகள் உடைய (ஆல்) உடையவாயிருக்கும், என (ஏ) என்று.

கருத்துரை : அவர் மலையின் முழைஞ்சிடம் இராக் காலத்தே புலியும், யாளியும், கரடியும், ஆமானேறும், யானையும், உருமேறும், தெய்வமும், பாம்பும், முதலையும், இடங்கரும், கராமும், நூழிலும், நெறி மூட்டும், பேயும், மலைப்பாம்பும், இன்னோரன்ன பிறவுமாகிய கொலைத் தொழிலிற்றப்பாத இடும்பை பலவற்றையும் உடையவாம் என்று, என்பதாம். உடையவாம் என்று நினைத்தொறும் இவள் கலுழும் என இயைத்துக் கொள்க.

அகலவுரை : அளை - குகை. உளியம்-கரடி, பரல்வெங் கானத்துக் கோள்வல் உளியம் என்பர் இளங்கோவடிகள். திருமுருகாற்றுப் படையினும் குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம் என வருதல் காண்க. உழுவை-புலி. புழல் கோடு - உள்ளே துளையமைந்த கொம்பு. புகல்வி - ஆமாவில் ஏறு. வலியிற்றப்பும் - தம் வலிமை காரணமாகப் பிறவுயிரைக் கொல்லுகின்ற என்றவாறு. தப்புதல் - கொல்லுதல். சூர்-கொடிய தெய்வங்கள். பாம்புகளில் தமக்குரிய இரையைத் தேடித் தாமே பெறுவனவும், தம்மிடத்தே வந்துற்ற இரையை மட்டும் பற்றி விழுங்குவனவும் என, இருவகையுள்ளன. நாகப்பாம்பு முதலியன இரைதேர்வன; மலைப் பாம்புகள் தம்பால் வந்தவற்றைப் பற்றி விழுங்குவன ஆதலின், இரைதேர் அரவம் என்று ஒருவகையை அடைமொழியாற் பிரித்தும், மற்றொரு வகையைப் பாந்தள் என்று வாளா கூறுவாருமாயினர் என்க. பாந்தள் என்றது மலைப்பாம்புகளை என்க. ஒடுங்குதல் - வாய்குறுகுதல். குட்டம் - நீர்நிலை. முதலை, இடங்கர், கராம் என்பன முதலையின் வகைகள். நூழில்-கொன்று குவித்தல்; அச் செயல் நிகழும் இடத்திற்கு ஆகுபெயர். காட்டினுள் நடைபாதைபோற் றோன்றிச் செல்லச் செல்லத் தேய்ந்து பின்னர் நெறியே காணப்படாது மாறிவிடும் நெறியை, ஊழ் அடி முட்டம் என்றார். இதனை,

நல்லதோர் வழிபோற் றோன்றும்
நடந்திடின் நன்றி தேராப்
புல்லர்தம் நட்பே போலப்
போய்அறத் தேய்வ தாகும்

என்னும் வண்ணக் களஞ்சியப் புலவர் செய்யுளானும் உணர்க. இழுக்கு-வழுக்கு நிலம். இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே, ஒழுக்கமுடையார் வாய்ச் சொல் என்ற குறளினும் இதனைக் காண்க. பழு-பேய். இவ்வடிகளுடன் இவ்வாசிரியரே கூறும்,

கான மானதர் யானையும் வழங்கும்
வான மீமிசை உருமுநனி உரரும்
அரவும் புலியும் அஞ்சுதக உடைய
இரவழங்கு சிறுநெறி தமியை வருதி  (அகம்-318)

எனவரும் அகப்பாட்டையும்,

கொடுவரி வேங்கை பிழைத்துக் கோட்பட்டு
மடிசெவி வேழம் வெரீஇ - அடியோசை
அஞ்சி ஒதுங்கும் அதருள்ளி ஆரிருட்
டுஞ்சா சுடர்த்தொடி கண்  (ஐந்.ஐம்-16)

என்னும் வெண்பாவினையும், தலைமகன் இரவுக்குறி வந்தொழுகா நின்ற நிலைமைக்கண், எம்பெருமான் வரும்வழி எண்கும், வெண்கோட்டியானையும், அரவும், உருமும், புலியும், வரையர மகளிரும் உடைத்து; மற்றுத் தெய்வங்கள் வெளவும் வண்ணத்தன; ஏதம் நிகழ்வது கொல்லோவென வேறுபடும் எனவரும் களவியலுரையினையும் ஒப்புக் காண்க.

254. கொன்னூர் என்பது தொடங்கி, 261. எனவே என்னுந் துணையும் கிடந்த இத்தொடரின்கண் அகன்று கிடந்த பொருளை, அச்சந்தரும் ஊரின்கண், மாயவரவின் இயல்பு தேற்றிக் கலுழும் இவள் கண்; இவள், அவர் மலை விடரகம் உழுவை முதலிய விழுமம் உடைய என நினைத்தொறும் வலைப்படு மஞ்ஞையின் நலம் செலக் கலுழும் என அணுகக் கொண்டு காண்க. இனி இக் குறிஞ்சிப் பாட்டின்கண் 261 அடிகளிலும் அகன்று கிடந்த பொருளை அணுகவைத்துக் காணுமாறு: அன்னாய் வாழி! நீயும் வருந்துதி! யான் கடவலின் ஏனையுலகத்தும் இயைவதால் நமக்கெனக் கூறி இவளும் தேம்பும்; யானும் ஆற்றலேன்; எண்ணாது, எமியேந் துணிந்த அருவினை நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச் செப்பலான்றிசின் சினவாதே கேள்.

தினையிற் படுபுள் ஓப்பி, ஏற்பட வருதியர் என நீ விடுத்தலின் யாம் போய், இதணம் ஏறி, கிளிகடி மரபின கொண்டு ஓட்டி, உருப்பவிர் அமயத்து, அருவியாடி, சுனை குடைவுழிப் பாயம்பாடி, கூந்தல் துவரி, சிவந்த கண்ணேமாய், காந்தள் முதல், புழகீறாகவுள்ள மலர்களை மலிவனம் பறித்து, பாறையிற் குவித்து, விளி பயிற்றி, ஓப்பியும், தழை கட்டி உடுத்தும், கோதை முச்சி கட்டியும், செயலை நிழலில் இருந்தனமாக, ஞமலி வளைதர எழுந்து வேறுபுலம்படர, குன்று கெழு நாடன், ஆகாண் விடையின் வந்து, இனியன கூறி, கெடுதியும் உடையேன் என்றனன்; அதனெதிர் சொல்லேமாகலின் மயங்கி, பூங் கொம்போச்சி ஞமலியின் குரலவித்து எம்சொல்லற்பாணி நின்றனன். அவ்வழி, மையல் வேழம் எதிர்தர, யாம் அவற் பொருந்தி நடுங்க, பகழி வாங்கி முகத்தழுத்தலின், அக்களிறு நில்லாது பெயர, குருதியான் நனைந்து வெறியாடு களம் போன்ற அவ்விடத்தே, கடம்பு போனின்ற தலைவனை யாங்கள் மாலைபோல வளைந்து வாழை போலே நடுங்கினேமாக, பெருந்தகை! அஞ்சல் ஓம்பெனத் தலைவியின் நுதல் நீவி. ஆகம் அடைய முயங்கினன். அந்நிலை, இவள் உள்ளத் தன்மை உட்கொண்டு, பெருந்தகாய்! விருந்துண் டெஞ்சிய மிச்சிலை, நீயிட யான் உண்டல் உயர்ந்ததாம் என்று தேற்றி, நெடுவேள் வாழ்த்தி, வஞ்சினம் தேற்றி, நீர் குடித்தலில், இவள் நெஞ்சு பொருந்தி, அக்களிறு தருபுணர்ச்சியை, அப் பூமலி சோலையில், அப் பகல் அவனொடு கழிப்பி, ஞாயிறு மறைய மாலை வருதல் கண்டு, அவன் இலங்கிழையீர் நாடறி நன்மணம் அயர்கம் சின்னாட் கலங்கலோம்புமின் என்று நன்மொழிகூறி எம்முடன் வந்து உண்டுறை நிறுத்துப் பெயர்ந்தனன்.

அப்புணர்ச்சி, தொடங்கி, விரும்பினனாய், இரவரும் மாலையன்; வருதோறும், கடுகினும், குரைப்பினும், துயிலெழினும், வெளிப்படினும் இன்றுயில் பெறான் பெயரும், பெயரினும், முனியலுறான்; இளமை இகந்திலன்; வளமையிற் றீர்ந்திலன்; மாய வரவின் இயல் நினைந்து தேற்றி, இவள் கண் கலுழும்; அவர் விடரகம் விழுமம் உடைய என நினைத்தொறும், நலம் செலச் சாஅய் இவள் கலுழும், இதுகாண்! ஏமஞ்சால் அருவினை நிகழ்ந்த வண்ணமும் இவள் நிலையும் என்றாள் என்க.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.  (குறள்-71)

தனிப் பாடல்கள்

வெண்பா

நின் குற்றம் இல்லை; நிரை தொடியும் பண்பு உடையள்;
என் குற்றம் யானும் உணர்கலேன்;  பொன் குற்று
அருவி கொழிக்கும் அணி மலை நாடன்
தெரியுங்கால், தீயது இலன்.  1

இவ்வினிய வெண்பா, இக்குறிஞ்சிப்பாட்டின்கண் அகன்று கிடக்கும்பொருளை, அணுகிய நிலையிற் கொண்டு கூறுகின்றது. இதன் பொழிப்பு வருமாறு : அன்னாய் ! நின் உயிரன்ன தலைவியின் வருத்தநிலை கண்டாற்றாது வெறியாட்டயர்கின்ற நீயும் அன்புடைமையாலே இற்பிறந்தார்க்கேலாதன செய்கின்றனையாகலின் தவறுடையை யல்லை; இனித் தலைவிதானும், அவள் பெருந்தகைமைக் கேற்பவே கற்புக் கடம் பூண்டொழுகுவாள் தலைவனைக் காணப்பெறாது அன்புடைமையால் மெலிகின்றாள் ஆதலின், அவளும் தவறுடையள் அல்லள். நுங்கள் நிலையினைக் கண்டு வருந்தும் யானும், என் பாதுகாவலில் தவறு செய்தேனல்லன். இனித் தலைவியைக் களிறுகாத்துத் தலையளிசெய்து அவளுடன் உளங்கலந்த தலைவனும் ஆராய்ந்து காணுமிடத்துத் தன் பெருந்தகவிற்குத் தகாத தீமை செய்தானும் ஆகான் என்பதாம். எனவே, தலைவன் தலைவியரிருவரையும் நல்வினை கூட்டிற்று. இனி யாம் இவர்க்கு நாடறி நன்மணம் நிகழ்வித்தலே அறத்தாறாம் என்பது குறிப்பெச்சமாய் நின்றது.

ஆற்றல் சால் கேள்வி அறம் பொருள் இன்பத்தைப்
போற்றிப் புனைந்த பொருளிற்றே தேற்ற
மறையோர் மணம் எட்டின் ஐந்தாம் மணத்தின்
குறையாக் குறிஞ்சிக் குணம்.  2

குறிஞ்சிப்பாட்டு முற்றிற்று.

குறிஞ்சிப்பாட்டுக்குப் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய உரை முற்றும்.


© Om Namasivaya. All Rights Reserved.