Books / மஹா புராணங்கள்


கந்தபுராணம்

(பகுதி-3)


போர்க்களத்தில் சூரபத்மன்!

வேறு வழியே இல்லாததால் சூரபத்மன் களத்தில் இறங்கினான். அவன் இறங்கிய உடனேயே அசுரர்கள் ஆரவாரம் செய்தனர். ஒட்டுமொத்த அசுர வம்சத்துக்கே தலைவனான சூரபத்மன் களத்தில் இறங்கியதால் ஆரவாரத்துடன் முருகனின் படையினர் மீது அசுரர்கள் பாய்ந்தனர். சூரன் ஒரே நேரத்தில் லட்சம் பாணங்களை எய்யும் சக்தி படைத்தவன். தன் ஒரு வில்லில் இருந்து லட்சம் பாணங்களை எய்தான். ரத்னகாளி என்ற சக்தியின் வியர்வையிலிருந்து அந்த பாணங்கள் செய்யப்பட்டவை. பாய்ந்து சென்ற அந்த பாணங்கள் முருகனின் படையைச் சேர்ந்த லட்சம் வீரர்களை தாக்கின. அவர்கள் மயக்கமடைந்து விழுந்தார்கள். இதற்கெல்லாம் கலங்காத நவவீரர்களில் ஒருவரான வீரமார்த்தாண்டன், சூரபத்மன் மீது ஏராளமான பாணங்களை அடித்தான். சூரபத்மன் அவற்றை ஒற்றைக்கையால் நொறுக்கி தள்ளிவிட்டான். மற்றொரு நவவீரனான வீரராட்சஷன், பத்மாசுரன் மீது அம்புகளை எய்தான். அவனுடைய காலைப்பிடித்து தூக்கிய சூரன், விண்ணில் தூக்கி எறிந்தான். அவன் மேலே சென்று வானத்தின் சுவர் வரையில் சென்று முட்டி அதே வேகத்தில் கீழே விழுந்து மயக்கமடைந்தான். வீரகேந்திரன், வீரதீரன், வீரமகேஸ்வரன், வீரகேசரி, வீரபுரூஹுதன், வீராந்தகன் ஆகிய அனைவருமே பத்மாசுரனால் தோற்கடிக்கப்பட்டனர். இந்நேரத்தில் வீரபாகு கலங்காத உள்ளத்துடன் சூரபத்மன் முன்னால் வந்து நின்றான். வீரபாகுவைக் கண்டதும் பத்மாசுரன் அகோரமாக சிரித்தான்.

அடேய் ! நீயா ! அன்று நீ தானே எனது அவைக்கு தூதனாக வந்தவன் ! அன்றே உன்னைக் கொன்றிருப்பேன். நீயோ மாய வடிவில் தப்பி விட்டாய். இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. அன்று அந்த சிறுவனுக்கு தூதனாக வந்தாய். இப்போது எனக்கு தூதனாக மாறிவிடு ! அந்த சிறுவனை என்னிடம் சரணடையச் சொல். என் தகுதிக்கு நீ என்னோடு போட்டியிட லாயக்கில்லாதவன். அப்படியே ஓடிப்போய் விடடா ! என்றான். வீரபாகு எக்காளமாகச் சிரித்தான். அடேய் அசுரா ! நான் நினைத்தால் இக்கணமே உன் தலையைக் கொய்து விடுவேன். அன்று முருகன் என்னைத் தூதனாக அனுப்பினார். இன்று உன்னோடு போர்புரிய அனுப்பியுள்ளார். உம் எடு வில்லை ! முடிந்தால் தோற்கடித்துப் பார், என சொல்லி விட்டு வில்லை எடுத்தான். சூரன் வீரபாகுவை மிகச் சாதாரண கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியமாக நின்றான். வீரபாகு பல அம்புகளை அவன் மீது எய்தான். அவை சூரனின் இரும்பு உடல்மீது பட்டு வளைந்து நொறுங்கியதே தவிர சிறு சிராய்ப்புக் காயத்தைக் கூட ஏற்படுத்தவில்லை. எனவே யமாஸ்திரம், சூரியாஸ்திரம், நாராயணாஸ்திரம் என சக்தி மிக்க அஸ்திரங்களை எய்து பார்த்தான். அவற்றை சூரன் தன் கையாலேயே தடுத்து நொறுக்கி விட்டான்.

பத்மாசுரனின் இந்த அபரிமித சக்தியை எண்ணி வீரபாகு வியப்படைந்தான். சிவனின் அருள் பெற்றவனை அழிப்பது என்றால் சாதாரண காரியமா ? அது மட்டுமல்ல ! அவனை அழிக்கும் சக்தியாகவும் சிவனே முருகனாக அவதாரமெடுத்துள்ள போது, வேறு யாரால் அவனைச் சாய்க்க முடியும். வீரபாகு மனம் தளரவில்லை. தன்னிடமிருந்த ஒரே அஸ்திரமான பாசுபத அஸ்திரத்தை எய்தான். பாசுபதாஸ்திரம் பல பாம்புகளை உள்ளடக்கியது. அது விஷத்தைக் கக்கிக் கொண்டு பாய்ந்தது. சூரனும் அதே போன்ற அஸ்திரத்தை எய்யவே ஒன்றையொன்று கடித்துக் கொண்ட பாம்புகள் மாய்ந்தன. அந்த அஸ்திரங்கள் அவரவரிடமே திரும்பி வந்தன. இதைப் பயன்படுத்திக் கொண்ட சூரபத்மன் பல பாணங்களை அனுப்பி வீரபாகுவின் வில்லை ஒடித்து விட்டான். வீரபாகு மீதுபட்ட அம்புகள் அவனை மயக்கமடையச் செய்தன. வீரபாகு களத்தில் விழுந்த பிறகு பூதகணங்கள் அசுரர்களுடன் கடுமையாக மோதினர். எதற்கும் நேரம் வர வேண்டும். பூவுலகில் பிறந்தவன் மனிதனாயினும் சரி ! அசுரனாயினும் சரி அவனது மரணத்துக்கு எந்த நேரம் குறிக்கப்பட்டிருக்கிறதோ அதுவரையில் அவனை யாராலும் வெல்ல இயலாது. இங்கே சிவனின் அம்சமான முருகன். பத்மாசுரனின் முன் எமனாக வந்து நின்றான்.

பத்மாசுரன் தோல்வி அடைதல்

பத்மாசுரா ! என் வீரர்களை வெற்றி கண்டுவிட்டதாக மமதை கொள்ளாதே. இதோ! நான் இருக்கிறேன். உன் படையைச் சந்திக்க இதோ எனது பெரும் படை இருக்கிறது. வீணாக அழிந்து விடாதே. என்னிடம் சரணடைந்து விடு, என முழக்கமிட்டார் முருகன். சூரன் சிரித்தான். இங்கே வந்து உன் படை தவிடு பொடியாகி விட்டது. கிரவுஞ்சன் என்ற சிறுவனையும், தாரகன் என்ற எனது தம்பியான கோழையையும் ஜெயித்து விட்ட ஆணவத்தில் என்னையும் சாதரணமாக கருதாதே. நான் உன்னை ஒரே பாணத்தில் கொன்று விடுவேன். சிறுவன் என்பதால் உயிர்ப்பிச்சை தருகிறேன். ஓடிப் போய் விடு என முருகனை எச்சரித்தான். முருகப்பெருமான் அவனுக்கு புத்தி கற்பிக்க நினைத்தார். பல்வேறு ஆயுதங்கள் இருதரப்பிலும் பரிமாறப்பட்டன. உக்கிரமான போர் நடந்தது, முருகனை வெல்லார் யாருண்டு ? முருகப்பெருமான் தன் ஆயுதங்களால் பத்மாசுரனை நிராயுதபாணியாக்கி விட்டார். ஒரு சிறுவனிடம் ஆயுதங்களை இழந்தோமே என சூரன் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றான். இந்நிலையில் அவனது வெண்கொற்றக்குடை, கிரீடம் ஆகியவற்றை கீழே விழச்செய்தார் முருகன், அவனை அவமானம் பிடுங்கித் தின்றது. சூரனின் நிலை கண்டு அவனது படைகள் சற்றும் தளராமல் முருகனின் படையினருடன் போரிட்டனர். போர்க்களத்தில் நின்றபடி சூரன் யோசித்தான். இவன் சிறுவனாயினும் சாதாரணமானவன் அல்ல ! இவனை அழிப்பதென்றால் சற்று கடினமானது தான். ஆனால், முடியாதது ஒன்றல்ல ! மீண்டும் நம் ஊருக்குள் சென்று பல்வேறு அஸ்திரங்களுடன் வர வேண்டும், என்றபடியே, அங்கிருந்து மறைந்து விட்டான் சூரன். சூரன் ஓடிப்போனதை அறிந்து தேவர்கள் முருகனைக் கொண்டாடினர்.

முருகா ! தாங்கள் நினைத்திருந்தால் வேலாயுதத்தை எறிந்து அந்த சூரனை நொடியில் அழித்திருக்க முடியும். ஆனாலும், தாங்கள் எங்கள்மீது கிருபை செய்யவில்லை. சூரனால் நாங்கள் இன்னும் வேதனைப்பட வேண்டும் என்பது விதிபோலும் ! சூரன் மாயத்தால் மறைந்திருந்தாலும் தாங்கள் இந்த வேலை அனுப்பினால் அவன் எங்கிருந்தாலும் தாக்கி அழித்து விடும். எங்களைக் காப்பாற்றுங்கள் மகாபிரபு ! எனக் கருதினர். கருணைக் கடவுளான முருகன் அவர்களிடம், எதிரியாயினும் ஆயுதமற்றவனைக் கொன்றோம் என்ற அவச்சொல் நமக்கு வரக்கூடாது. அது மட்டுமல்ல ! அவன் மீது கொண்ட கருணையால் தான் அவனை நான் அனுப்பி விட்டேன். எதிரிகள் திருந்த வாய்ப்பு கொடுக்க வேண்டும். திருந்தாமல் திரும்பிவந்தால், அவனை அழிப்பதில் தவறில்லை. சூரன் திருந்த மாட்டான் என்பது நானும் அறிந்ததே ! மீண்டும் அவன் வருவான். அப்போது அவனை நிச்சயம் நான் விடமாட்டேன். நீங்கள் அமைதியாய் இருங்கள், என்றார். தேவர்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர். இந்த நேரத்தில் வடிவேல் முருகன் போர்க்களத்தில் மயங்கியும், இறந்தும் கிடந்த வீரபாகு மற்றும் நவவீரர்கள், படையினரை தனது கருணையால் எழச்செய்தார். அவர்கள் ஆராவாரம் செய்து முருகனை வணங்கினர். அரண்மனைக்குள் புகுந்த பத்மாசுரன் மீண்டும் முருகனை அழிப்பது பற்றிய ஆலோசனையில் ஆழ்ந்தான்.

மாயையின் ஆசிபெற்ற பானுகோபன்

சூரபத்மன் போர் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த வேளையில், அவனது மனைவி பத்மகோமளாவும், மகன் பானுகோபனும் வந்தனர். தந்தையின் மனநிலையை அறிந்த பானுகோபன், அப்பா ! நீங்கள் செய்தது கொஞ்சம் கூட முறையல்ல. ஏற்கனவே ஒருமுறை நான் அந்த முருகனிடம் ஆயுதங்களை இழந்து  திரும்பினேன் என்பதற்காக என் வீரத்தை நீங்கள் குறைத்து எடை போட்டு விட்டீர்கள் போலும் ! நானும் சிறுவன், அந்த முருகனும் சிறுவன். நாங்கள் போட்டியிட்டு யார் தோற்றாலும் அவமானம் வரப்போவதில்லை. அங்கே வீரம் மட்டுமே பேசப்படும். நீங்கள் அப்படியா ?அண்டசராசரத்தை அடக்கிய õளும் சக்கரவர்த்தியான நீங்கள், அந்த முருகனை வென்றால், ஒரு சிறுவனை வென்று விட்டதாக சூரன் கொக்கரிக்கிறான் என்றும், தோற்றுப்போனால், கேவலம், ஒரு சிறுவனிடம் போய் சூரன் தோற்றானே என்றும் தான் உலகம் பழிக்கும். எப்படிப்பார்த்தாலும் அது உங்களுக்கு அவமானத்தையே தேடித் தரும். கவலைப்படாதீர்கள். மீண்டும் நான் போகிறேன். அந்தச் சிறுவனை தூக்கி வந்து உங்கள் காலடியில் போடுகிறேன். அவனை ஒழித்து விடுங்கள். அந்த முருகன் இருக்கும் தைரியத்தில் திமிர்பிடித்து அலையும் பிரம்மாவையும், விஷ்ணுவையும் சிறையில் தள்ளுங்கள், என்று சொல்லிவிட்டு ஆவேசமாக சிரித்தான். பத்மாசுரன் அவனது வீரம் பொங்கிய பேச்சால் மகிழ்ந்தாலும், அன்புச் செல்வமே ! பானுகோபா ! நீ நினைப்பது போல் அந்த வடிவேலனை ஜெயிப்பது அவ்வளவு சுலபமல்ல. அவனை நான் பார்த்துக் கொள்ளுகிறேன். வேண்டுமானால் அவனுக்கு வலது கையாக இருக்கிறானே, ஒரு தூதன்... வீரபாகு... அவனைப் பிடித்துக் கொண்டு வா, என்றான் வீராப்புடன்.

பானுகோபன் தலையசைத்தான். ஒரு நொடியில் வருகிறேன் தந்தையே, என்றவன் தாய் கோமளாவிடம் ஆசி பெற்று புறப்பட்டான். வீரபாகுவும் சாதாரணமானவன் அல்ல என்பது பானுகோபனுக்கு தெரியும். அவனை வெற்றி கொள்ள சாதாரண அஸ்திரங்கள் போதாது. அவனை மயங்க வைத்து விட்டால் கட்டி வைத்து தந்தை முன் கொண்டு வந்து போடலாம் என்று எண்ணத்தில், தன் பாட்டி மாயையை நினைத்தான். இவள் காஷ்யப முனிவரின் மனைவியாக இருந்து அசுரகுலத்தை உருவாக்கியவள். சூரபத்மனின் தாய். பானுகோபன் நினைத்த மாத்திரத்தில் பாட்டி மாயை அவன் முன்னால் வந்தாள். பானுகோபா ! என் செல்லப் பேரனே ! வீரத்திருமகனே ! எதற்காக என்னை அழைத்தாய். என் அன்பு பேரனுக்காக எதையும் தருவேன், என்றாள். பானுகோபன் அவளிடம், எங்கள் குலத் தலைவியே ! என்னருமை மூதாட்டியே அசுரர் குலத்துக்கு முருகன் என்பவனால் ஆபத்து வந்துள்ளது. அவனது தூதனாக வந்த வீரபாகுவை கட்டியிழுத்து வரும்படி தந்தை கட்டளை இட்டிருக்கிறார். நீங்கள் தான் அசுர குலத்திற்கு வித்திட்டவர்கள். அந்த தேவர் படையை வெல்லும் ஆலோசனையும், ஆயுதமும் தந்தால், அவனைப் பிடித்து விடுவேன், என்றாள். பானுகோபா ! உங்களால் தேவர்களை வெல்ல முடியாமல் போனதற்கு காரணம் உண்டு. பிரம்மாவையும், விஷ்ணுவையும் அதிகமாக கொடுமைப்படுத்தி இருக்கிறீர்கள். அப்படியான நிலையில், அவர்களை வெல்வது என்பது சாத்தியமல்ல இருந்தாலும். முயற்சியுள்ளவன் வெற்றி பெறுவான் என்ற விதிகளின் அடிப்படையில், உனக்கு ஒரு அபூர்வமான ஆயுதத்தை தருகிறேன். இந்த மோகனாஸ்திரத்தை எய்தால் யாராக இருந்தாலும் மயங்கி விடுவார்கள். அந்த நிலையில் அவர்களை கட்டி இழுத்துப் போக வசதியாய் இருக்கும். வெற்றி உனதே, என்று வாழ்த்தி, பேரனை உச்சிமுகர்ந்து அஸ்திரத்தை கொடுத்து விட்டு மறைந்து விட்டாள். பானுகோபன் மகிழ்ச்சியுடன் சென்றான். முருகப்பெருமான் வீரபாகுவை அழைத்தார்.

பானுகோபன் மாயம், வீரபாகு சபதம்

வீரபாகு ! உன்னைத் தேடி சூரனின் மகன் பானுகோபன் வருகிறான். அவனை வெற்றி கொள்வது உனது கடமை. அவனிடம் உன்னை மயக்கிப் பிடிக்கும் மோகனாஸ்திரம் இருக்கிறது. நீ அதற்கு கட்டுப்பட்டால், அதையும் விட சக்தி வாய்ந்த வேலாயுதம் என்னிடம் இருக்கிறது. பார்த்துக் கொள்ளலாம். போய் வா ! இம்முறை வெற்றிக்கனி உனக்குத்தான், என வாழ்த்தி வழியனுப்பினார். முருகனின் வாயாலேயே வெற்றி என சொன்னபிறகு வீரபாகுவிற்கு என்ன கவலை ? அவன் அவரது தாழ்பணிந்து வணங்கி புறப்பட்டான். சேனைகள் அணிவகுத்துச் சென்றன. பானுகோபனும், வீரபாகுவும் பல்வேறு அஸ்திரங்களுடன் போராடினர். வீரபாகு சாதாரணப்பட்டவன் அல்ல என்பது பானுகோபனுக்கு புரிந்து விட்டது. எனவே பாசுபதாஸ்திரத்தை எய்தான், அதிபயங்கர யுத்தம் நடந்தது. எங்கும் நெருப்பு பிடித்தது. அந்த அஸ்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதும்போது ஏற்பட்ட சப்தம் அகில உலகத்தையும் நடுங்கச் செய்தது. வெப்பத்தின் உக்கிரத்தில் கடலே வற்றிவிடும் போல் தோன்றவே, சமுத்திரராஜன் கலங்கி நின்றான். இந்த உலகத்தை அழிவில் இருந்து காக்க வேண்டும் என தேவர்களெல்லாம் முருகனிடம் சென்று வேண்டினர். அவர் நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார்.

இதே நிலை தான் சூரபத்மனுக்கும். இந்த அதிபயங்கர நெருப்பு உலகத்தையே அழித்து விட்டால், அதில் சிக்கி எல்லோருமே இறந்து விடுவோம். என்னாகப் போகிறதோ ? என நடப்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான். இந்த நேரத்தில் அந்த அஸ்திரங்கள் ஒன்றையொன்று அழிக்க முடியாத காரணத்தால், எய்தவர்களிடமே வந்து விட்டன. வீரபாகுவை எந்த வகையிலும் ஜெயிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட பானுகோபன், வேறு வழியே இல்லாமல் வான்வெளியில் தன்னை மறைத்து நின்றான். அங்கிருந்து பாட்டி கொடுத்த மோகனாஸ்திரத்தை எய்தான். அது அதிவேகமாகப் பாய்ந்து வந்தது. அந்த அஸ்திரம் வீரபாகு உள்ளிட்ட அனைவரையும் மூர்ச்சையடையச் செய்யவே, ஆரவாரம் செய்த பானுகோபன் அவர்களின் கை, கால்களைக் கட்டி கடலுக்குள் தூக்கி வீசிவிட்டான். இந்த விபரம் முருகனுக்கு தெரிய வரவே, அவர் கோபத்துடன் தன் வேலாயுதத்தை கடல் மீது வீசி எறிந்தார். அது கண்டு கடலரசன் நடுங்கினான். அந்த வேல், மோகனாஸ்திரத்தின் பிடிக்கு அகப்பட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த எல்லாரையும் விடுவித்தது. கடலின் மேல்மட்டத்திற்கு வந்த பூதகணங்களும், வீரபாகுவும் முருகனை வாழ்த்தினர். தன்னை மடக்கிப்பிடித்த பானுகோபனை அழிப்பேன். அல்லது தீக்குளித்து இறப்பேன் என வீரபாகு சபதம் செய்தான்.

சூரபத்மனின் மைந்தர்களைக் கொன்ற வீரபாகு

பானுகோபன் வெற்றிக்களிப்பில் தந்தையிடம் விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஒரு தூதுவன் வேகமாக வந்து வீரபாகு மீண்டும் தப்பி விட்டதைச் சொன்னான். அப்போது சூரனின் மகன் இரண்யன் வந்தான். தந்தைக்கு நல்ல புத்தி சொன்னான். சிவனால் தான் நாம் இவ்வளவு பாக்கியம் அடைந்தோம். அந்த சிவ மைந்தனையே அழிக்க துடிப்பது எவ்வகையிலும் நியாயமல்ல. மேலும், அவனை அழிக்கவும் முடியாது. இந்த முயற்சியில் நம் அசுரகுலம் அழிந்து விடும், என எச்சரித்தான். பத்மாசுரனோ பெற்ற மகன் மீதே எரிச்சல்பட்டான். இப்படியெல்லாம் பேசினால் அவனை விழுங்கி விடுவதாகச் சொன்னான். இரண்யன் வேறு வழியின்றி வீரபாகுவை எதிர்த்துச் சென்றான். ஆவேசமாகப் போரிட்டான். ஆனால், தாக்கு பிடிக்க முடியாமல் கடலுக்கு அடியில் மீன் வடிவில் ஒளிந்து கொண்டான். அடுத்து சூரனின் இன்னொரு மகனும், பத்ரகாளியின் பக்தனுமான அக்னிமுகன் போருக்கு கிளம்பினான். அவனுக்கே வெற்றி கிடைக்குமென அருள்பாலித்தாள் காளி. காளியே சொன்னபிறகு மாற்றாக என்ன நடந்து விடும் ? பராசக்தியின் அம்சமல்லாவா அவள் ! ஆனால், காளியின் வாக்கு இந்த இடத்திலே பொய்த்துப் போனது. வீரபாகு அக்னிமுகனை பந்தாடி விட்டான். தன் பக்தனைக் காப்பாற்ற காளியே சிங்கவாகனத்தில் வந்து வானில் நின்றபடி சூலத்துடன் வீரபாகுவை தாக்கினாள். தேவியே தன்னை எதிர்த்த நேரத்திலும் கூட வீரபாகு தயங்காமல் அவளுடன் போரிட்டான். பெண் என்பதால் அவளைக் கொல்லாமல் விண்ணில் பறந்து அவளது மார்பில் அடித்து கீழே தள்ளினான். காளிதேவி தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, சிங்கவாகனத்தில் ஏறி தன் இடத்திற்கு போய்விட்டாள். காளி பின் வாங்கினாலும் அதுகண்டு கலங்காத அக்னிமுகன் வீரபாகுவுடன் கடுமையாக மோதினான். முடிவில் அவனும் விண்ணுலகையே அடைந்தான். தன் பிள்ளைகளையெல்லாம் பறிகொடுத்த பிறகு, தம்பி சிங்கமுகனை போருக்கு அனுப்பினான் சூரபத்மன்.

சிங்கமுகனை வதைத்த ஆறுமுகன்

சிங்கமுகன் கொடூரமானவன். கந்தபுராண யுத்த காண்டத்தில் சிங்கமுகன் முருகனுடன் மோதிய காட்சியைப் படிப்பவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிங்கமுகன் ஆயிரம் சிங்கத்தலைகளை உடையவன். அவனுடைய மார்பைத் தகர்க்கவே முடியாத அளவுக்கு பலமைல் நீளமுள்ளதாக இருக்குமாம். முருகப்பெருமான் நேரில் களத்துக்கு வந்து விட்டார். இருவருக்கும் கடும் போர் நடந்தது. அவனது தலைகளை வெட்ட வெட்ட புதிது புதிதாக முளைத்தது. சிவனிடம் வரம் வாங்கும் போது, இவன் தன் தலைகளை வெட்டி யாகத்தில் போட்டவன். அதன் காரணமாக எத்தனை முறை வெட்டுப்பட்டாலும் மீண்டும் முளைக்கும் வரம் பெற்றவன். ஆனால், தன் சக்தியின் முன்னால் இந்த வரம் எடுபடாது என நிபந்தனை விதித்திருந்ததால், சிங்கமுகன் தன் தலைகளை இழக்க வேண்டியதாயிற்று. முருகப்பெருமான் புதிது புதிதாக முளைத்த தலைகளைப் பார்த்து, இனி முளைக்காதே என அதட்டினார். அதற்குப் பயந்து அந்த தலைகள் மீண்டும் முளைக்கவில்லை. இப்படியாக 999 தலைகளை வெட்டிச் சாய்த்த பிறகு ஒரே ஒரு தலையுடன் போரிட்டான் சிங்கமுகன். தன் வேலாயுதத்தால் அந்த தலையைச் சீவி விட்டார் சிங்காரவேலன். சிங்கமுகனின் சரித்திரம் முடிந்தது. சிங்கமுகனின் மனைவியர்கள் எல்லாம் தீயில் மூழ்கி இறந்து விட்டனர்.

சூரபத்மன் வதம்

இறுதியாக சூரபத்மன் முருகனுடன் போருக்கு வந்தான். நான்கு நாட்கள் உலகமே நடுங்கும்படியான யுத்தம் நடந்தது. அப்போது கருணைக்கடவுளான கந்தன் விஸ்வரூபம் எடுத்தார். அவரது காலடியில் இந்த உலகம் கிடந்தது. எல்லாமே தனக்குள் அடக்கம் என்பதை அவர் அவனுக்கும், இந்த உலகத்துக்கும் காட்டினார். அந்தக் காட்சியால் சூரன் ஞானம் பெற்றான். அவனது துர்க்குணங்கள் மறைந்தன. கந்தனைக் கண்கொட்டாமல் பார்த்து வணங்கினான். பின்னர் கந்தன் தன் உருவைச் சுருக்குவே, தான் பார்த்த காட்சி அவனுக்கு மறந்து துர்க்குணம் தலை தூக்கியது. மீண்டும் போரிட்டான். கந்தன் வேலை எறியவே, அவன் மாமரமாக மாறி நின்றான். அந்த வேல் மரத்தை இரண்டாகக் கிழித்தது. அப்போது சூரன் ஒரு பகுதி மயிலாகவும், ஒரு பகுதி சேவலாகவும் மாறினான். மயிலை அடக்கி அதன் மீது ஏறி உலகமெல்லாம் வலம் வந்த முருகன். சேவலை தன் கொடியில் இடம் பெறச் செய்து விட்டார். தன் கணவரின் ஆயுள் முடிந்தது என்பதைத் தெரிந்து கொண்ட சூரபத்மனின் பட்டத்தரசி பத்மகோமளாவும் மற்ற மூவாயிரம் மனைவியரும் இறந்து போனார்கள். சூரபத்மன் முழு ஞானம் பெற்று முருகனுக்கே காலமெல்லாம் சேவகம் செய்தான்.

தெய்வானை திருமணம்

முருகப்பெருமான் போருக்கு பிறகு திருச்செந்தூர் விட்டு, திருப்பரங்குன்றம் வந்தடைந்தார். பிரம்மாதி தேவர்களுடன் இந்திரன் முருகப்பெருமானிடம் வந்து தன் மகள் தெய்வானையை மணந்து கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார். முருகப்பெருமான் சம்மதம் தத்தார். இந்திரன் விடைபெற்றுச் சென்று இந்திராணி, மகள் தெய்வயானை ஆகியோரைக் கண்டு முருகன் அரக்கர்களை அழித்த விவரம் கூறி, தெய்வயானை-திருமுருகன் திருமணம் பற்றி எடுத்துரைக்க எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர். அடுத்தநாளே திருமணம் என்ற விவரம் அறிந்து அனைவரும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய முனைந்தனர். சகலருக்கும் திருமணச் செய்தி அனுப்பப்பட்டது. பிரும்மா முகூர்த்தம் நிச்சயிக்க, பார்வதி பரமேசுவரர்களும் மற்ற தேவர்களும் வந்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு இந்திரன் தன் மகள் தெய்வயானையைக் கன்னிகாதானம் செய்து வைத்தான்.

சாஸ்திரப்படி திருமாங்கல்ய தாரணம், அம்மி மிதித்து அருந்ததி காணல் போன்ற சகல வைபவமும் சிறப்பாக நடந்தேறின. மணமக்கள் தாய் தந்தையரை வணங்கி ஆசிபெற்றனர். மணம் முடிந்து அனைவரும் தத்தம் இருப்பிடம் சென்றனர். அடுத்து முருகப்பெருமான் விசுவகர்மாவை அழைத்த அமராவதி நகரை நேர்த்தியாக உருவாக்கித் தரப் பணித்தார். அவ்வாறே நகரம் புதுப்பொலிவு பெற்றுவிட்டது. முருகப்பெருமான் பிரும்மனிடம் இந்திரனுக்கு முடிசூட்டு விழா நடத்தக் கூறினார். இந்திரன் இந்திராணியரை அரியாசனத்தில் அமரச்செய்து பிரும்மா பட்டாபிஷேகம் செய்துவைத்தார். சொர்க்கத்தில் சிலகாலம் தெய்வயானையுடன் தங்கியிருந்து முருகன் வீரபாகுவை சாரதியாக அமர்த்திக் கொண்டு கயிலாயத்துக்குப் பயணமாகி தன் மாளிகைக்குள் அரியாசனத்தில் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

வள்ளித் திருமணம்

வள்ளி மலையில் சிவன் என்ற முனிவர் ஒருவர் தவமியற்றி வந்தார். அவரெதிரில் வந்த அழகியதோர் மானைக் கண்டு முனிவர் மோகம் கொள்ள, அந்த மான் கருவுற்று ஒரு பெண் மகவை ஈன்றது. காட்டில் வள்ளிக் கொடிகளுக்கிடையே தோன்றிய அப்பெண் குழந்தையை அங்கு வந்த வேடர் தலைவர் மகிழ்ச்சியுடன் வாரி எடுத்து மகிழ்ச்சியுடன் தன் மனைவியிடம் கொடுக்க அப்புண்ணிய தம்பதிகள் இருவரும் அப்பெண் குழந்தையைச் சீரும் சிறப்புமாய் வளர்த்து வந்தனர். தக்கவயது வந்ததும் அவளை வேடர் குல மரபுப்படி தினைப்புனம் காவல் காக்க தோழியருடன் அனுப்பி வைத்தான் மன்னன். ஒருநாள் நாரத முனிவர் தினைப்புனத்தில் வள்ளியைக் கண்டு, உடனே முருகனிடம் சென்று அவள் அழகை வர்ணித்து, முருகன் வள்ளி திருமணத்துக்கான நற்காரியத்தைத் துவக்கி வைத்தார்.

ஆறுமுகன் வேட்டைக்கு வந்த வேடுவனாக வள்ளி முன் தோன்றி அவளைப் பற்றிய விவரங்களைக் கேட்டு அவளிடம் தன் தாகத்தைத் தணிக்குமாறு வேண்டி நின்றபோது வேடன் தலைவன் அங்கு வர வள்ளி அச்சமுற்றாள். அப்போது முருகன் வேங்கை மரமாக நின்றான். அங்கு வந்த வேடுவர்கள் புதிதாகத் தோன்றியுள்ள வேங்கை மரத்தை வெட்டி விட எண்ணினர். ஆனால், வேடர் தலைவன் அவர்களைத் தடுத்து குளுமையான நிழல் தரும் அம்மரத்தை வெட்டாமல் விட்டுவிடுமாறு கூறினான். காடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு வேடர் மன்னன் திரும்பி வருவது கண்ட முருகன் ஒரு கிழவர் வடிவில் அவன் முன் தோன்றினார். நரைத்த தாடி மீசைகளுடன் சிவப்பழமாய்த் தோன்றிய முருகனை வேடத்தலைவன் வணங்கிட அவனுக்கு விபூதி அளித்து ஆசி கூறினார் கிழவராக வந்த முருகன். கிழவர் வருகைக்குக் காரணம் கேட்க, அவர் வேடர் தலைவனிடம், தான் அவ்வேடனுக்குச் சொந்தமான அந்த மலையிலுள்ள குமரித்தீர்த்தத்தில் நீராட வந்திருப்பதாகக் கூறினான் குமரன்.

அப்போது வேடர் தலைவன் கிழவரிடம், அவர் விருப்பப்படி தீர்த்தத்தில் நீராடி தினைப்புனத்தில் காவல்புரியும் தன் பெண் வள்ளிக்குத் துணையாக இருக்கும்படி கூறிச் சென்று விட்டான். பின்னர் வள்ளியிடமிருந்து தேன், தினைமாவு பெற்று உண்ட முருகன் நீர்வேட்கை தணிய தண்ணீர் கேட்டார் வள்ளியிடம். அவள் கிழவரிடம் அங்கிருந்து ஏழுமலை கடந்துசென்றால் குடிநீர் கிடைக்கும் என்று கூற, கிழவர் வள்ளியை வழித்துணையாக வருமாறு வேண்டிட, அவளும் உடன் சென்றான். நீரைக் காட்டித் தாகம் தீரும்வரை பருகுமாறு கூறி கரையிலேயே அமர்ந்து விட்டாள் வள்ளி. சிறிதுநேரம் கழித்து கிழவராக வந்த முருகன் நீர்வேட்கை தீர்ந்ததென்றும், ஆனால், அப்போது ஏற்பட்ட மோக தாகத்தைத் தணிக்குமாறும் வள்ளியை வேண்டினார். வள்ளி அதற்கு இசையாமல் மறுத்து, வேடுவர் காணில் உமக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி எச்சரித்து தன் இருப்பிடம் செல்லப் புறப்பட்டாள்.

அப்போது கந்தன் அண்ணன் கணபதியை நினைக்க, அவர் முரட்டு யானையாக வள்ளி முன் தோன்ற, அவள் அஞ்சி ஓடிவந்து கிழவர் வடிவில் இருந்த குமரனைக் கட்டிக்கொண்டு தன்னை யானையிடமிருந்து காப்பாற்ற வேண்டினாள். மேலும், அவர் சொன்னபடி நடந்துகொள்வதாகவும் கூறினாள். முருகன் அண்ணனை மனதில் வேண்டிக்கொள்ள யானை மறைந்தது. இவ்வாறு கணபதி அருளால் கந்தன் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டார். இறுதியில் வள்ளிக்கு வேங்கை மரம், வேடன், கிழவன் என்று வந்த முருகன் தன் சுயவடிவில் காட்சி தர ஏன் இந்த விளையாட்டு என்று வள்ளி கேட்டாள். அப்போது முருகன் வள்ளியின் முற்பிறப்பில் விஷ்ணு மகளாகித் தன்னை அடைய தவம் புரிந்ததையும் எடுத்துக் கூறி, அன்று அவளுக்குத் தந்த வரத்தின் படியும், அவள் மீது கொண்ட மையலாலுமே இந்த விளையாட்டு என்றான் முருகன். மேலும் அவளை முன்னே செல்லும்படியும், தான் பின்னால் வருவதாகவும் கூறி அவளை அனுப்பி வைத்தார்.

வள்ளியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட தோழியர் காரணம் கேட்டு சர்ச்சை செய்து கொண்டிருந்தபோது வேலன் வேடன் வடிவில் அங்கு வந்து அந்தப் பக்கம் தன் அம்பால் அடிபட்ட யானையைக் கண்டீர்களா என்று கேட்கையில் வள்ளியில் கண்களும், அவ்வேடன் கண்களும் ஒன்றியதை தோழி கண்டு கொண்டாள். அவள் பக்கத்தில் இருந்த வயலுக்குச் சென்றாள். அவளிடம் வேடன் வள்ளியைத் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டினார். அவளும் வேடர்கள் கண்ணில் பட்டால் ஆபத்து என்றும் எச்சரித்தாள். சோலையில் முருகனும், வள்ளியும் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தனர். சிறிது நேரம் கழித்து அங்கு திரும்பி வந்த தோழி வள்ளியை முருகனிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றாள். தினைகள் நன்கு முற்றிவிட தினைப்புனக் காவலும் முடிவுபெற்றது. வள்ளியும், தோழியும் வீட்டை அடைந்தனர். வள்ளியின் உடல், உள்ள மாற்றங்களையும், அவள் சதாசர்வகாலமும் முருகனையே எண்ணி எண்ணி ஏங்குவதையும் கண்ட பெற்றோர்கள் வள்ளிக்கும் முருகனுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி அறிந்து கொண்டனர்.

அன்றிரவு வள்ளியின் வீட்டின் பின்புறம் வந்து காத்திருந்த முருகனிடம், வள்ளியின் தோழி அவளை அழைத்து வந்து ஒப்படைத்தாள். இரவு முழுவதும் இருவரும் மனமகிழ்ச்சியுடன் கழித்தனர். விடியற்காலையில் வள்ளியைக் காணாமல் எல்லோரும் பல இடங்களிலும் தேடி அலைந்தனர். கடைசியில் வள்ளி முருகனுடன் இருப்பதைக் கண்டுகொண்டு அவன் மீது பாணங்கள் எய்தனர். வள்ளி மிகவும் பயம் கொண்டாள். ஆறுமுகன் சேவலை நினைக்க அது வந்து பயங்கரமாய் கத்த அனைவரும் அஞ்சி ஓடினர். பலர் தரையில் சாய்ந்தனர். வள்ளியின் தந்தையும் வீழ்ந்து கிடந்தார். அப்போது அங்கு வந்த நாரதர் இறந்து கிடக்கும் வள்ளியின் தந்தையையும், மற்றோர்களையும் உயிர்ப்பித்து வள்ளியை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு பிரார்த்தித்தார். உடனே வள்ளியுடன் முருகன் இறந்தவர்களிடையே சென்று, வள்ளியிடம் அவர்களைக் கண்களால் நோக்கி எழுந்திருக்குமாறு கூறச்செய்ய அனைவரும் விழித்து எழுந்தனர். அப்போது முருகன் சண்முகனாக ஆறுதலைகளும், பன்னிரண்டு கண்கள் கூடிய முகத்துடனும் காட்சி அளித்தார். அப்போது அவ்விடம் நாரதர் வந்தார். வள்ளியுடன் புலித்தோல் இருக்கையில் அமர்ந்தார். வேலன் தன் சுயஉருவத்தில் தோன்றினார்.

நாரதர் அக்கினி வளர்த்துத் திருமணச் சடங்குகள் செய்து வைத்தார். வள்ளியின் தந்தை கையில் அவன் மனைவி நீர்வார்க்க முறைப்படி முருகன்-வள்ளி திருமணம் நடந்தேறியது. அங்கு அப்போது பார்வதி பரமேசுவரர்களும் தோன்றி வள்ளித் திருமணம் கண்டுகளித்து ஆசி கூறினர். இந்திராதி தேவர்களும் மலர்மாரி பொழிந்து வாழ்த்தினர். பிறகு கந்தன்-வள்ளியுடன் ஸ்ரீபரிபூர்ண கிரியை அடைந்து அந்தக் கிரியின் சிறப்புகளை எல்லாம் வள்ளிக்கு எடுத்துரைத்தார். மற்றும் அங்கு இந்திரன் பூஜித்து வரங்கள் பெற்ற விவரமும் கூறிட இவற்றைக் கேட்ட வள்ளி மனமகிழ்ச்சி அடைந்தாள். அந்த மலை மீது முருகன் லிங்கப்பிரதிஷ்டை செய்து பரமனை வழிபட்டு அவர் அருளைப் பெற்றார். பின்னர் வள்ளியுடன் விமானத்தில் ஏறி கந்தகிரியை அடைந்தார். தெய்வயானை, வள்ளியையும், முருகனையும் இன்முகம் காட்டி வரவேற்று அகமகிழ்ந்தாள். தனக்கு ஒரு துணை வந்திருப்பதாகக் கூறி மகிழ்ச்சி உற்றாள். பின்னர் முருகப்பெருமான் பற்றிய விவரங்களை எடுத்துரைத்தார். இறுதியில் முன்பு திருமாலின் புதல்விகளாகிய தன்னைக் குறித்து தவம் செய்து வேண்டியவாறு இப்போது தெய்வயானை வள்ளியாகத் தோன்றிய அவர்களைத் தான் மணந்ததாகவும் கூறி முடித்தார்.

நவரத்தின சிம்மாசனத்தில் வள்ளி, தெய்வயானை சமேதராய் அமர்ந்து முருகன் அனைவருக்கும் காட்சி தந்தருளினார். அவர் கட்டளைப்படி மயில், சேவல், ஆடு, வேல், விமானம் ஆகியவை வந்து சேர்ந்தன. அந்த அரியகாட்சியை இந்திராதி தேவர்களும் எல்லையில்லா ஆனந்தம் கொண்டு அவன் அருளைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

ஸ்ரீவள்ளி, தெய்வயானை சமேத சுப்ரமணிய சுவாமியே நம:

ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க வெற்றியைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க,
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்சை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்கசீர் அடியார் எல்லாம்.

கஷ்டங்கள் வரும் போது அழைத்தால் நம்மை தேடி வருவான் வடிவேலன்.

கந்தபுராணம் முற்றிற்று.


© Om Namasivaya. All Rights Reserved.