Books / மஹா புராணங்கள்


கருட புராணம்

விஷ்ணுவுக்கு கருடன் தந்த வரம்!

ஆணவமும், அகங்காரமும் கர்வமும் ஒருவன் புகழையும் பெருமையையும் அழித்து, அவனை மிகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளிவிடும் என்பது தர்மநியாயம். ஆனால், தன் ஆணவத்தாலும் கர்வத்தாலும் விஷ்ணுவுக்கே சவால் விட்டு, அவரோடு போரிட்டுத் தோற்றுப் போனாலும், பெறற்கரிய பேற்றைப் பெற்றான் ஒருவன். அவன்தான், பகவான் விஷ்ணுவின் வாகனமாகப் பூஜிக்கப்படும் கருடன்.

யார் இந்தக் கருடன்?

சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யப முனிவரின் மனைவிகளில் இருவர் கத்ரு, வினதை என்பவர்கள். இவர்கள் இருவரும் சகோதரிகள் என்றாலும், ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டிருந்தனர். ஒருமுறை, அவர்கள் இருவரும் கஸ்யப முனிவரிடம் குழந்தைகள் பெற வேண்டி வரம் கேட்டனர். கத்ரு, தனக்கு எல்லோரும் கண்டு பயப்படத்தக்க வலிமைமிக்க ஆயிரம் குழந்தைகள் வேண்டும் என வரம் கேட்டாள். கஸ்யபரும் வரத்தைத் தந்தார்.

வினதையும் தன் பங்குக்கு வரம் கேட்டாள். எனது சகோதரிக்குப் பிறக்கும் குழந்தைகளைவிட வலிமையும் தேஜஸும் ஆற்றலும் மிக்க ஓரிரண்டு குழந்தைகள் பெற, வரம் வேண்டும் என்று கேட்டாள் அவள். அவளுக்கும், அவள் விரும்பியது கிடைக்க வரமளித்தார் கஸ்யப முனிவர்.

சில காலம் கழித்து, கத்ருவுக்கு ஆயிரம் நாகங்கள் குழந்தைகளாகப் பிறந்தன. வினதை கர்ப்பத்தில் இரண்டு முட்டைகள் தோன்றின. அவற்றில் ஒன்றை அவசரமாக உடைத்தாள் வினதை. அதிலிருந்து இடுப்புக்கு கீழே வளர்ச்சி இல்லாத ஒரு குழந்தை பிறந்தது. பிறக்கும்போதே தன் அவசரத்தால் தன்னை ஊனமாக்கிய தாயை, அவள் கத்ருவின் அடிமையாக வாழ்வாள் எனச் சாபமிட்டது குழந்தை. அந்தக் குழந்தைதான் அருணன் எனப் பெயர் பெற்று, சூரிய பகவானின் தேரோட்டியாகி இன்றும் வணங்கப்படுகிறார்.

சிறிது காலம் கழித்து, இரண்டாவது முட்டையிலிருந்து மனித உடலுடனும். கழுகின் தலையுடனும் ஓர் அபூர்வ குழந்தை பிறந்தது. கோடி சூர்யப் பிரகாசத்துடனும். எவராலும் வெல்லமுடியாத உடல் பலத்துடனும் தோன்றிய அந்தக் குழந்தைதான் கருடன். அண்ணன் தந்த சாபத்தால் அடிமையான தாயை விடுதலை செய்யப் பிறந்த மகன் இவன்.

ஒருமுறை, கத்ருவுக்கும் வினதைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் வானத்தில் பார்த்த உச்சைசிரவஸ் என்ற தேவலோகக் குதிரையைப் பற்றிய விவாதம் அது. உச்சைசிரவஸ் முழுவதுமாக வெள்ளை நிறமானது என்றாள் வினதை. இல்லை இல்லை.... அதன் உடல்தான் வெள்ளை நிறம், ஆனால் வால் கறுப்பானது என்று வேண்டுமென்றே கூறினாள் கத்ரு.

இருவரில் யார் சொன்னது சரியோ, அவர்களே ஜெயிப்பார்கள்; மற்றவளும் அவள் குழந்தைகளும் ஜெயித்தவளுக்கு அடிமையாக வேண்டும் என்பது பந்தயம்! கத்ருவுக்கு தான் சொன்னது பொய் என்று தெரிந்தும், பந்தயத்துக்கு ஒப்புக்கொண்டாள். எப்படியும் வினதையை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தன் பிள்ளைகளான நாகங்களில் கருமை நிறம் கொண்டவற்றை அழைத்து, உச்சைசிரவஸின் வாலைச் சுற்றிக்கொள்ளும்படிக் கட்டளையிட்டாள். அவர்களும் அதன்படியே செய்தார்கள். பிறகு கத்ருவும் வினதையும் உச்சைசிரஸ் குதிரையை உற்றுநோக்கினார்கள். அதன் வால் கறுப்பாகத் தெரிந்தது. தான் தோற்றுவிட்டதாகக் கருதி, தோல்வியை ஒப்புக்கொண்டாள் வினதை. தோல்வியை ஒப்புக்கொண்டதால், வினதையும் அவள் குழந்தைகளான அருணன், கருடன் ஆகியோரும், கத்ருவுக்கும் அவள் பெற்ற நாகங்களுக்கும் அடிமையாயினர்.

இப்படியே சில காலம் கழிந்தது. தாங்கள் ஏன் நாகங்களுக்கு அடிமையாக வாழ்கிறோம் என்பதைத் தாயிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட கருடன், அதிலிருந்து விடுபட வழி உண்டா என்றும் யோசித்தான். தன் சகோதரர்களான நாகங்களை அழைத்து, என்ன செய்தால் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று கேட்டான். மரணமில்லாமல் வாழ வேண்டுமென விரும்பிய கத்ருவும் நாகங்களும் தேவலோக அமிர்தத்தை எடுத்து வந்து எங்களுக்குக் கொடுத்தால்தான் நீங்கள் எல்லோரும் அடிமைத்தளையில் இருந்து விடுபட முடியும் என்று கூறினர்.

அதையடுத்து தேவலோகம் சென்றான் கருடன். இந்திரனைச் சந்தித்து தன் விருப்பத்தைக் கூறி, தேவலோக அமிர்தத்தைத் தருமாறு கேட்டான். நாகங்கள் மரணமில்லா வாழ்வு பெற்றால் உலகம் என்னாவது என்று யோசித்த இந்திரன். அமிர்தத்தைத் தர மறுத்தான்.

தன் பலத்தில் நம்பிக்கை கொண்டிருந்த கருடன், இந்திரனுடன் யுத்தம் செய்து, அவனை வென்று அமிர்த கலசத்தை அடைய விரும்பினான். அதையடுத்து, இருவரும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். கருடனுக்கும் இந்திரனுக்கும் நடந்த யுத்தத்தில் கருடனே வென்றான். தேவலோகத்தில் இருந்து அமிர்த கலசத்தை எடுத்துக்கொண்டு நாகங்களுக்குக் கொடுக்கப் புறப்பட்டான்.

இத்தனை சம்பவங்களையும் பார்த்துக்கொண்டிருந்த மகாவிஷ்ணு, அதன்பின்னரும் சும்மா இருக்க விரும்பவில்லை. அமிர்த கலசத்துடன் விண்வெளியில் பறந்து கொண்டிருந்த கருடனை வழிமறித்தார். விஷ நாகங்களுக்கு அமிர்தம் தந்தால், அவை மரணமில்லாமல் வாழ்ந்து, மனித இனத்தையும் தேவர்களையும் அழித்துவிடும். இது வேண்டாம் என அறிவுரை கூறினார்.

ஆனால், கருடனோ எதற்கும் செவி சாய்க்கவில்லை. அடிமைத் தளையிலிருந்து விடுபடவேண்டும் என்ற வெறியில் அவன் விஷ்ணுவையே துச்சமாகக் கருதினான். இந்திரனை வென்ற ஆணவத்தில், துணிவிருந்தால் என்னோடு போர் புரிந்து ஜெயித்து, அதன்பின்பு அமிர்த கலசத்தை நீங்களே தேவலோகத்தில் கொடுத்துவிடுங்கள் என்று விஷ்ணுவுக்கே சவால் விட்டான்.

சற்று நேரம் விஷ்ணு யோசித்தார். தன் தாயின்மீது கொண்ட பக்தியால் தேவேந்திரனையே எதிர்க்கத் துணிந்த கருடனின் வீரத்தை எண்ணி வியந்தார். அதோடு, அமிர்த கலசம் கையில் இருந்தும், அந்த அமிர்தத்தை தான் அருந்தி அழியாநிலை பெற விரும்பாமல் சென்றுகொண்டிருக்கும் அவனின் தன்னலமற்ற தன்மையை மனத்தால் பாராட்டினார். கருடனுக்குள் ஆணவமும் அகங்காரமும் இருந்தாலும் அவனுக்குள் இருந்த உயர்ந்த பண்புகளையும், அவனது விடுதலை வேட்கையையும் கண்டு வியந்த விஷ்ணு அவனோடு போரிடுவதைப் பெருமையாகக் கருதினார்.

விஷ்ணுவுக்கும் கருடனுக்கும் யுத்தம் ஆரம்பமானது. கஸ்யப முனிவரிடம் தான் கற்ற வித்தைகளையும் மாயா ஜாலங்களையும் காட்டிக் கடும் போர் புரிந்தான் கருடன். ஒரு தாய் தன் குழந்தையோடு விளையாடும்போது, தான் தோற்றுப்போவதுபோல நடிப்பாள். இது குழந்தையைச் சந்தோஷப்படுத்துவதற்காக! அது போல விஷ்ணுவும் கருடனை ஜெயிக்க வைப்பதுபோல நடித்துக்கொண்டு, அவனுடன் போர் செய்துகொண்டிருந்தார். வெற்றி தோல்வி நிர்ணயமாகாமல் 21 நாட்கள் போர் தொடர்ந்தது. அப்போது பகவான் விஷ்ணு கருடனுக்கு நல்வழிகாட்ட மீண்டும் முயற்சி செய்தார்.

கருடா! உன் தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காபாற்ற நீ எடுத்துக்கொண்ட இந்த விடாமுயற்சியைப் பாராட்டுகிறேன். இருந்தாலும், எல்லா சாஸ்திரங்களும் கற்ற உனக்கு, தேவலோக அமிர்தத்தை எடுத்து நாகங்களுக்குக் கொடுப்பது தர்மமாகாது என்பது மட்டும் ஏன் தெரியவில்லை? நாம் வீணாகப் போர் புரிவதில் இருவருக்கும் லாபமில்லை. நீ வேண்டும் வரங்களைக் கேள். தருகிறேன்! என்றார்.

இப்போது என் கையில் உள்ள அமிர்த கலசத்தைத் திருப்பித் தரவேண்டும் என்றால், என் தாயும், சகோதரனும், நானும் அடிமைத்தளையில் இருந்து விடுபட வழிசெய்யுங்கள் என்று வரம் கேட்டிருக்கலாம் கருடன். ஆனால் கர்வம் தலைக்கேறியிருந்த கருடனுக்கு அப்படிக் கேட்கத் தோன்றவில்லை.

நீ யார் எனக்கு வரம் தர? வேண்டுமானால் நீ ஏதாவது வரம் கேள். நான் தருகிறேன் அதன்பிறகாவது நான் சொல்ல வழிவிடு! என்றான் கருடன், அகம்பாவமாக.

மகாவிஷ்ணு அப்போதும் விட்டுப் பிடித்தார். என்ன வரம் கேட்டாலும் தருவாயா? அப்புறம் வாக்குத் தவறமாட்டாயே? என்று கேட்டார்.  நான் வாக்குத் தவறமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத்தான் உங்களையே எதிர்த்து நிற்கிறேன். என்ன வரமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றான் கருடன். அப்படியானால், நீயே எனக்கு வாகனமாகிப் பணிபுரியும் பாக்கியத்தை வரத்தைத் தா! என்றார் விஷ்ணு.

மகாவிஷ்ணுவின் இந்தப் பதிலால் கருடனின் கர்வம் வேரோடு அழிந்தது. அவனின் அகக் கண்கள் திறந்தன. அவன் விஷ்ணுவின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவரை எதிர்த்துப் போரிட்டதற்காக மன்னிப்புக் கோரினான். தொடர்ந்து அமிர்த கலசத்தை விஷ்ணுவின் பாதத்தில் வைத்து நமஸ்கரித்தான். அமிர்தம் அருந்தாமலேயே, நீ மரணமில்லாமல் சிரஞ்சீவியாக என்னுடன் இருப்பாய் என்று விஷ்ணு ஆசி கூறினார்.

தொடர்ந்து, தான் கொண்டு சென்ற அமிர்த கலசத்தை தர்ப்பைகள் பரப்பி அதன்மீது வைத்தான் கருடன். அதை அவன் தேவேந்திரனிடம் திருப்பி அளித்த பிறகு, அமிர்த குடம் இருந்த தர்ப்பைகளை நாகங்கள் நக்கின. அப்போது அவற்றின் நாக்குகள் பிளவுபட்டன! ஸ்ரீமகாவிஷ்ணு கருணைகூர்ந்து விஷமில்லா நாகங்கள் பல காலம் வாழும். விஷமுள்ள நாகங்கள் சில காலம் வாழும். நல்ல நாங்களை மனிதர்கள் பூஜித்து வழிபடுவார்கள் என்று அருளினார். தொடர்ந்து.... வினதையும் கருடனும், அவனது சகோதரனும் கத்ரு மற்றும் நாகங்களின் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டனர். கருடன் தன் தாய் வினதை மற்றும் கத்ரு ஆகியோரை வணங்கி ஆசிபெற்று விஷ்ணு சேவையில் தொடர்ந்து ஈடுபட்டான்.

எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் சந்நிதியை நோக்கி வணங்கியபடி நிற்கும் கருடனை நாம் கருடாழ்வார் என்றே அழைத்து பூஜிக்கிறோம். நாகங்களுக்கும் கருடனுக்கும் பகை என்றாலும், விஷ்ணுவின் சந்நிதியில் ஆதிசேஷன் எனும் நாகமும், கருடாழ்வாரும் நட்பு கொண்டே விஷ்ணு சேவை செய்கின்றனர்.


© Om Namasivaya. All Rights Reserved.