Books / எட்டுத் தொகை நூல்கள்


ஐங்குறு நூறு

2. தோழிக்கு உரைத்த பத்து

தலைமகள், தன் தோழிக்குத் தன் உள்ளத்தின் போக்கைச் சொல்வதாக அமைந்த இப்பத்துச் செய்யுட்களும். ஆதலின் இத்தலைப்பின்கீழ் தொகுத்துள்ளனர். தலைமகளின் ஆர்வமும் பண்பும், பேசும் பேச்சின் சால்பும், இவற்றுட் காணப்படும்.

111. பிரிந்தும் வாழ்ய்துமோ!


துறை: 'இற்செறிப்பார்' எனக் கேட்ட தலைமகள், வரையாது வந்து ஒழுகும் தலைவன் சிறப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லியது.

(து.வி: தலைவியை வரைந்து மணத்து கொள்வதற்கு முயலாது, களவின்பத்தையே பெரிதும் நாடுபவனாகத் தலைவன் தொடர்ந்து வருகின்றனன். தன் களவுறவைப் பெற்றோர் அறிந்தனராதலின் இற்செறிப்பு நிகழும் எனவும், அவனுக்கு ஊறு விளையும் எனவும், அவனைக் காணல் இயலாது எனவும் பெரிதும் அஞ்சுகின்றாள் தலைவி. குறித்த இடத்தே வந்து, செவ்வி நோக்கித் தலைவியைத் தழுவுதற்குக் காத்திருப்பவனாக, ஒரசார் மறைந்திருந்து, தான் வந்துள்ள குறிப்பைஉம் தலைவன் உணர்த்துகின்றான். அதனைக் கேட்டு, அவன் வரவு அறிந்த தலைவி, அவன் மனம் வரைதலில் விர்வுறுமாறு, தன்னுடன் இருக்கும் தன் தோழிக்குச் சொல்வாள் போல, அவனும் கேட்டறியச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

அம்ம வாழி, தோழி! பாணன்
சூழ்கழி மருங்கில் நாணிரை கொளீச்
சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே -
அருந்தவம் முயறல் ஆற்றா தேமே?


தெளிவுரை: தோழி, இதனைக் கேட்பாயாக! பாண்மகன், கழிகள் சூழ்ந்த இடத்தே சென்று, தூண்டிற் கயிற்றிலே இரையை மாட்டி வைத்து, அதனைப் பற்றவரும் சினைப்பட்ட கயல்மீன்களை அகப்படுத்திக் கொல்லும் துறையையுடையவனின் உறவினைப் பிரிந்தும் நாம் உயிருடன் வாழ்வோமோ! அங்ஙனம் பிரிந்தும் உயிர்வாழ் வதற்கேற்ற மனவலுவைத் தரும் அரிய தவத்தினை மேற்கொள்ளவும், நாம் இயலேம் அல்லம் அன்றோ!

கருத்து: 'நம் இத்தகு அவலநிலையினை அவன் உணர மாட்டானோ?' என்பதாம்.

சொற்பொருள்: கழி சூழ் மருங்கு - கழிகள் சூழ்ந்துள்ள கடற்கரைப் பாங்கர். நான் இரை கொளீஇ - நாணிலே இரையினைக் கொழுவி வைத்து. முயலல் - செய்தல். ஆற்றாதேம் - இயலாதேம். ஆசையை அடக்குதலே தவம்; அதுவே மிக்கெழுதலால் 'அருந்தவன் ஆற்றாதேம்' என்கின்றனள்.

விளக்கம்: 'நாணிலே மீனுக்குரிய இரையை மாட்டி வைத்து, அதனைப் பற்றும் சினைகயல் தூண்டில் முள்ளிலே மாட்டிக் கொள்ளத், தான் அதனைப் பற்றிக் கொல்லும் பாணன்' என்றது, அவ்வாறே பொய்ச்சூள் பலவும் நமக்கு நம்பிக்கையுண்டாகுமாறு சொல்லி, நம்மைத் தெளிவித்துத் தன்னோடும் சேர்த்துக் கொண்ட நம் காதலன், நம்மை மணப்பதற்கு முயலாதே போவதால், நாம் இற்செறிப்பால் நலிந்து, பிரிவினாற் பெருகும் காமநோயால் இறந்து படுதலையையும் செய்யும் அருளில்லாக் கொடியனாயினான் என்பதாம்.

இதனைக் கேட்கும் தலைவன், தலைவியை மணந்து கொள்ளும் வரைவு முயற்சியினை விரையச் செய்தலிலே மனஞ் செலுத்துவான் என்பதாம்.

'நாளிரை' என்பதும் பாடம்; இதற்குப் பாணன் தன் நாளுணவை கொண்டபின், சினைக்கயலைச் சென்று மாய்க்கும் என்றும் பொருள் கொள்ளலாம். கூடியின்புற்று மகிழ்ந்த தலைவன், நம்மை முறையாக மணந்து வாழ்விக்க நினையாதே, மீளவும் களவுக்கூட்டமே கருதி வருவானாய், நம்மை இன்பம் காட்டிப் பற்றிப், பின் மாய்க்கும் துயருட் செலுத்துகின்றான் என, அதற்கேற்பப் பொருள் கொள்க. 'அருந்தவம் முயலல் ஆற்றாதேம்' என்றது, அவனை விரைந்து வரைவொடும் வருமாறு செய்தற்கும், அது பிழைத்த வழி பிரிவுத்துயர் பொறுத்திருந்து உயிரைப் போகாதே தடுத்துக் காத்தற்கும், 'இரண்டு ஆற்றாதேம்' எனத் தம் ஏலாமை கூறினாள் என்க.

உள்ளுறை: 'சூழ்கழி மருங்கில், பாணன், நாண் இரை கொளீஇச் சினைக்கயல் மாய்க்கும் துறைவன்' என்றது, தன் பேச்சிலே நமக்கு நிலையான இன்பமே கருதினான் போல உறுதி காட்டி, அதனை வாய்மையாகக் கொண்டு நாம் பற்றிக் கொள்ளவும், நம்மை அருளின்றி அழியச் செய்யும் இயல்பினன் ஆயினான் அவனும் என்பதை உள்ளுறுத்துக் கூறியதும் ஆம்.

112. வரக் காண்குவோமே!


துறை: களவு நீடுவழி, 'வரையலன் கொல்' என்று அஞ்சிய தொழிக்கு, தலைமகன் வரையும் திறம் தெளிக்கத், தெளிந்த தலைமகள் சொல்லியது.

(து.வி: தலைவன் தலைவியரிடையே களவுறவே தொடர்ந்து நீடிக்கின்றதனைக் கண்ட தொழி, 'இவன் இவளை வரைவான் அல்லன் போலும்!' என்று நினைத்து அஞ்சுகின்றாள். குறிப்பால் அதனை அறிந்த தலைவன், தான் தலைவியை வரைவதற்கான முயற்சிகளைச் செய்து வருதல் பற்றிக் கூறித் தலைவியைத் தெளிவுபடுத்துகின்றான். அவள், தன் தோழியின் அச்சம் நீங்கக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

அம்ம வாழி, தோழி! பாசிலைச்
செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன்
தான்வரக் காண்குவம் நாமே
மறந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே!


தெளிவுரை: கேட்பாயாக தொழி! பசிய இலைகளையுடைய செருந்தி மரமானது பரந்து கிளைத்திருக்கும் பெரிய கழியினையுடைய சேர்ப்பன், நம்மைத் தெளிவித்தபோது சொல்லிய உறுதிமொழிகளை எல்லாம், நாணத்தையுடைய நெஞ்சினேமாதலின், நாம் போற்றாதே மறந்தேமாய், அவன் வரைவொடும் விரைய வராமை பற்றியே அஞ்சிக் கலங்கினோம். அவன், தான் சொன்னவாறே வரைவொடு வருதலையும், இனி நாமே விரைவிற் காண்போம்!

கருத்து: ''அவன் சொற் பிழையானாய் வந்து நம்மை மணப்பான்'' என்றதாம்.

சொற்பொருள்: பாசிலை - பசுமையான இலை. செருந்தி - நெய்தற் பாங்கிலே செழித்து வளரும் மரவகையுள் ஒன்று. இருங்கழி - கரிய வழி.

விளக்கம்: 'நெருந்தி தாய' என்பதற்கு, செருந்தி மலர்கள் உதிர்ந்து கிடைத்தலையுடைய எனவும், செருந்தி கிளைத்துப் படர்ந்து தாழ்ந்து நிழல் செய்ய எனவும் பொருள் கூறலாம். கருங்கழியிலே நெருந்தியின் மலர்கள் உதிர்ந்து கிடத்தலைப் போல, இவள் கூந்தலில் மலர்சூட்டிக் கொள்வள் என்பதும் கொள்க. 'மறந்தேம்' என்றது, அவன் அது மறந்திலன் என்பதை வலியுறுத்தற்காம். 'நாணுடை நெஞ்சு' என்றது, அவனைக் களவிற் கூடும்போதும், 'விரைய வேட்டு வந்து என்னை மணங்கொள்க' என்று வலியுறுத்தற்கு மாட்டாது, வாயடைத்துவிட்ட நாணம் கவிந்த நெஞ்சம் என்றதாம்.

உள்ளுறை: இருங்கழியிடத்தும், பாசிலைச் செருந்தி தாய அழகினைக் கொண்ட சேர்ப்பன் அவனாதலின், அவனும் தானாகவே வந்து நமக்கு நலன் விளைக்கும் பெருந்தன்மை உடையவனாவான் என்பதாம்.

113. எம்மை என்றனென்!


துறை: வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, 'நெருநல் இல்லத்து நிகழ்ந்தது இது' எனத் தலைமகள் தொழிக்குச் சொல்லியது.

(து.வி: வரைவினை வேட்கும் தலைவி, மறைவாக நிற்கும் தலைவன் கேட்டு உணருமாறு, தன் தோழிக்குச் சொல்வது போல அமைந்ததே இச் செய்யுளும். நடந்ததாக நிகழ்ச்சி யொன்றைப் படைத்து நயம்படவும் அத்தலைவி கூறு கின்றனள்.)

அம்ம வாழி, தோழி! நென்னல்
ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார், 'பெண்டு'டென மொழிய, என்னை
அதுகேட்டு 'அன்னாய்' என்றனள், அன்னை;
பைபய 'எம்மை' என்றனென், யானே!


தெளிவுரை: தோழி வாழ்க! இதனையும் நீ கேட்பாயாக; நேற்று, ''உயர்ந்த அலைகள் வெண்மணலிடத்தை வந்து அலைக்கும் துறைவனுக்கு இவள்தான் பெண்டாயினாள்'' என்று, என்னைச் சுட்டி ஊரார்கள் அலர் கூறினர். அதனைக் கேட்டுச் சினந்தாளான செவிலித்தாய். என்னை நோக்கி, 'அன்னாய்'! என்றனள். யானும் மெல்ல மெல்ல, 'எம்மை' என்ற சொல்லைக் கூறினேன்.

கருத்து: 'அவள் நற்றாயிடம் உரைக்க, இனி நாம் இற்செறிக்கப்படுதல் உறுதியாகும்' என்றதாம்.

சொற்பொருள்: ஓங்குதிரை - ஓங்கி உயர்ந்தெழும் கடலலை உடைக்கும் - அலைத்துச் சிதறச் செய்யும். ஊரார் - அலருரைக்கும் இயல்பினரான ஊர்ப்பெண்டிர். பெண்டு - மனையாள். அன்னாய் - அன்னையே; இஃது அலர் சொல்வது மெய்யோ என வினவிய சினத்தால் எழுந்த ஒரு குறிப்புச் சொல்.

விளக்கம்: ஓங்கு திரை வந்து மோதிமோதி வெண் மணலை அலைத்து வருத்தலேபோல, அலருரைக்கும் பெண்டிர்கள் தம் பழி பேச்சால் நம்மை மிகவும் அலைத்து வருத்துவாராயினர் என்பதாம். 'எம்மை' என்றது கேள்வியின் விடையாக, 'எம்மையோ பழித்தனர், அதனை நீயும் நம்புகதியோ?' எனச் சொல்லித் தெளிவித்ததாகவும் கொள்க; 'எம்.ஐ' எனப் பிரிந்து, 'ஆம், அவனே எம் தலைவன்' எனக் குறிப்பாற் புலப்படுத்தியதெனலும் பொருந்தும்.

மேற்கோள்: ஈண்டு பெண்டென் கிளவி என்றே பாடங் கொள்ள வேண்டும். 'ஊரார் பெண்டென மொழிய' எனச் சான்றோர் கூறலின் என நச்சினார்க்கினியரும் - (தொல். பெயர், 9) உரைப்பர். பெண்டென்றதனைக் கேட்டு, 'அன்னாயென்றள் அன்னை' என அலர் தூற்றினமை கண்டு செவிலி கூறிய கூற்றினைத் தலைவி கொண்டு கூறியவாறு இதுவெறும் அவரே களவியலுள்ளும் காட்டுவர் - (தொல். களவு, 24).

உள்ளுறை: 'ஓங்கு திரை வெண்மணல் உடைக்கும் துறைவன்' என்றது, அவனும் தான் வரைவொடு வந்து நம்மை மணத்து கோடலினாலே, அலர்வாய்ப் பெண்டிரின் வாயடங்கச் செய்வான் என்பதனை உள்ளூறுத்துக் கூறியதாம்.

114. நாம் செல்குவமோ?


துறை: இடைவிட்டு ஓழுகும் தலைமகன், வந்து, சிறைப்புறத்தானாயினமை அறிந்த தலைமகள், அவன் கேட்கு மாற்றால் தொழிக்குச் சொல்லியது.

(து.வி: தலைவன் தலைவியரின் களவுக் காதற் சந்திப்புகள் தொடர்ந்து நிகழவில்லை. இடையிடையே பல நாட்கள் அவன் வாராதானாக, இவர்கள் ஏமாற்றத்தோடு வீடு திரும்பலும், அது குறித்து வருந்தி வாடுதலும் நிகழ்ந்தன. ஒரு நாள, குறித்தவிடத்தே வந்து, தலைவியும் தோழியும் இருப்பதைக் கண்டவன், தோழியை விலகச் செய்யும் குறிப்பொலியை அருகே ஒருசார் மறைந்திருந்து எழுப்புகின்றான். அப்போது தலைவி, அவனும் கேட்டுத் தம்முடைய துயரநிலையை உணரும்படியாகத், தான் தன் தோழியிடம் சொல்வது போலச் சொல்லும் செய்யுள் இது.)

அம்ம வாழி, தோழி! கொண்கன்
நேரேம் ஆயினும் செல்குவங் கொல்லோ
கடலின் நாரை இரற்றும்
மடலம் பெண்ணை அவனுடை நாட்டே?


தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனையும் நீ கேட்பாயாக; நம் காதலை நம்பால் வரைந்து வருவதற்குக் காணப் பெறாதேம் நாம் ஆயினேம்; அதனால், கடல்நாரை தங்கியிருந்து ஒலித்தபடியே யிருக்கும். மடல் பொருந்திய பனைகளைக் கொண்டு அவனுடைய நாட்டிற்கு, நாமே சென்று அவனைக் கண்டு நம் துயரைச் சொல்லி வருவோமோ?

கருத்து: 'அவன் நம்மை வரைதற்கு நினைத்திலனே' என்பதாம்.

சொற்பொருள்: நேரேம் - நேராக வருதலைக் காணப் பெற்றிலேம். கடலின் நாரை - கடற் பாங்கிலே வாழும் நாரை. இரற்றும் - பெரிதாகக் குரலெடுத்து ஒலிக்கும் பெண்ணை - பனை. செல்குவம் கொல்லே - செல்வோமா?

விளக்கம்: 'நாமே செல்குவம் கொல்லோ?' என்றது, நம்மால் அவனைப் பிரிந்து உயிர்வாழ்தல் என்பது இயலாமையினால், அவன் நம்மை மறந்திருந்தானாயினும், அவனை மறவாதே, வாடி நலனழிந்து நலியும் நாமாவது, அவனைப் போய்க் காண்பேமா என்றதாம். இதனால் தலைவியின் ஏக்கத்தையும் காதல் மிகுதியையும் உணரும் தலைவன் அவளை வரைதற்கு விரைவிற் கருத்துக் கொள்வான் என்பதாம்.

'கடலினாரை யிரற்றும்' என்பதற்குக் கடல் முழக்கினைப் போன்று நாரைகள் குரலெழுப்பும் என்று பொருள் கூறலும் பொருந்தும். 'நேரேமாயினும்' என்பதற்கு, ஊரலரும் காவன் மிகுதியும் பிறவான குறுக்கீடுகளுமே அவனைச் சந்திக்க வியலாமல் செய்து வருகின்றன; அதனாற் காணேம் ஆயினேம் என்று கூறுவதாகவும் கொள்க.

உள்ளுறை: 'இரையுண்ட நாரையானது பெண்ணையின் மடலிடத்தேயிருந்து தன் துணையை விரும்பிக் கூவியழைக்கும் நாடன்' என்பதற்கு, ஊரலரும் காவன் மிகுதியும் பிறவான குறுக்கீடுகளுமே அவனைச் சந்திக்க வியலாமல் செய்து வருகின்றன; அதனாற் காணேம் ஆயினேம் என்று கூறுவதாகவும் கொள்க.

உள்ளுறை: 'இரையுண்ட நாரையானது பெண்ணையின் மடலிடத்தேயிருந்து தன் துணையை விரும்பிக் கூவியழைக்கும் நாடன்' என்று சொன்னது, அவ்வாறே தன் செயலால் நம்மை இடையிற் பலநாட்கள் மறந்திருந்த தலைவன், அது முடிந்ததும், இப்போது வந்து, நம்மை யழைத்தானாகக் குரலெழுப்புகின்றான்'' என்பதாம்.

பாடபேதங்கள்: கொண்கனை, நேரேனாயினும், பெண்ணையவருடை.

115. அன்னை அருங்கடி வந்தோன்!


துறை: இற்செறிப்புண்ட பின்னும், வரைந்துகொள்ள நினையாது, தலைமகன் வந்தானாக, அதனை அறிந்த தலைமகள், அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது.

(து.வி: தலைவியின் களவு பற்றிய ஊரலரும், அவள் அழகழிந்த நிலையும், அவளை ஐயுற்று இற்செறிப்புக்குத் தாயை உட்படுத்தச் செய்தன. தோழி மூலம் இஃதறிந்தும், வரைந்து வராதே காலம் கடத்தி வந்தான் தலைவன். அவன் ஒரு நாள் இரவு, தலைவியின் வீட்டுப் பக்கம் வந்து நின்று, தன் வருகையை அறிவிக்கும் குறிப் பொலியைச் செய்ய, தோழியுடன் அவ்விரவுக் குறியிடத்தே வந்திருந்த தலைவி, தலைவன் உள்ளத்திலே நம் துயரம் பற்றிய தெளிவு ஏற்படுமாறு, தான் தன் தோழிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

அம்ம வாழி தோழி! பன்மாண்
நுண்மணல் அடைகரை நம்மோ டாடிய
தண்ணந் துறைவன் மறைஇ,
அன்னை அருங்கடி வந்துநின் றோனே!


தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனையும் கேட்பாயாக; பலவான காட்சிகளையுடைய, நுண்மணல் செறிந்த கடற்கரையிடத்தே, நம்மோடும் கூடியாடினவனாகிய, குளிர்ந்த துறைவனான தலைவன், அன்னையின் அரிய காவலமைந்த நம் இல்லின் புறத்தேயும் வந்து நின்றனனே!

கருத்து: 'அவன் ஊன்றிச் செல்லவேண்துமே என்றதாம்.'

சொற்பொருள்: பன் மாண் - பலமான மாட்சிகள்; இவை புன்னை நிழலும் பிறவும் போன்றவை; 'பன்மாண் நம்மோடாடிய' எனச் சேர்த்தும் பொருள் கொள்ளலாம். அடைகரை - கடற்கரைப் பாங்கர். அருங்கடி - அரிய காவல்; அதையுடைய தம் வீட்டைக் குறித்தது; ஆகு பெயர்.

விளக்கம்: 'அன்னை அருங்கடி வந்து, மறைஇநின்றோன் என்பதனால், 'அவன் வருகையைத் தான் அறிந்த போதிலும் அவனை அவ்விடம் சென்று சேரற்கு விரும்பிய போதிலும் அன்னையின் அருங்காவலால் அதுதான் இயலாதே போகப் பெரிதும் ஏக்கமுற்று வாடினதும் உணர்த்துகின்றாள். இதனால் வரைந்து மணங்கொண்டாலன்றி தலைவன் தன்னைப் பெறவியலாது என்பதை உணர்த்தி, அதனில் மனம் விரையத் தூண்டியதாம். 'பன்மாண் நம்மோடு ஆடிய தண்ணந் துறைவன்' என்றது, அத்தகு காதன்மை காட்டிக் களவிலே துய்த்து மகிழ்ந்தவன் முறையாக மணம் பேசிக் கொள்ளற்கு மறைந்தனனே' என்ற ஏக்கத்தாற் கூறியதாம். இதனை உணரும் தலைவன் வரைந்து கோடலே இனி அவளை அடையும் ஒரே வழியென்று, அதன்பால் கொள்வான் என்க.

உள்ளுறை: 'பன்மாண் நுண்மணல் அடைகரை நம்மோடு ஆடிய துறைவனை' என்றது, இவன் முன்பு நம்பாற் காட்டிய அந்த அன்பினை மறந்தான் என்றும், அவ்வாறு ஆடிய அவனைப் பலரும் அறிவாராதலின், மறைந்து நிற்பதனைக் காணின் ஐயுற்று ஊறிழைப்பர் என்பதை ஊணரானாயினான் என்றும் உட்பொருள் புலப்படக் கூறியதாம்.

மேற்கோள்: 'பெற்ற வழி மலியின் தலைவிக்குக் கூற்று நிகழும்' என்பதற்கு, இச்செய்யுளை இளம்பூரணனாரும், நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர் - (தொல். களவு, 21, உரை)

116. மாலை வந்தன்று மன்ற!


துறை: ஏற்பாட்டின்கண் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்பத், தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

(து.வி.: பகலெல்லாம் தலைவனைக் குறியிடத்தே எதிர்பார்த்து, அவன் வராமையால் சோர்ந்து வாடிய தலைமகள், அவன் மாலைப்போதிலே வந்து, சிறைப்புறத்தே செவ்வி நோக்கி நிற்பதறிந்து, தோழிக்குச் சொல்வாள் போல, அவனும் கேட்டுணருமாறு, தன்னுடைய துயரநிலையைத் தெறிவுபடுத்துவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

அம்ம வாழி தோழி! நாம் அழ
நீல இருங்கழி நீலம் கூம்பும்
மாலை வந்தன்று, மன்ற -
காலை யன்ன காலைமுந் துறுத்தே.


தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனையும் நீ கேட்பாயாக. எம்மைப் போன்ற கொடிய தென்ற்றஃகாற்றை முற்பட விட்டுக் கொண்டதாக, நான் அவன் பிரிவுக்கு ஏங்கி அழும்படியாகச் செய்வதும் கருமையான பெரிய கழியிடத்து நீலமலரைக் குவியச் செய்வதுமான, மாலைப்போதும் வந்ததே!

கருத்து: 'எவ்வாறு தாங்கியிருப்பேனோ?' என்றதாம்.

சொற்பொருள்: நீலம் - நீல மலர்கள்; 'அவை கூம்பும்' என்றது இதழ் குவிந்து ஒடுங்கும் என்றதாம்; அவ்வாறே தலைவியும் தன் ஊக்கமிழந்து ஒடுங்கிச் சோர்வாளாயினள் என்பதாம்; காலையன்ன - காலனைப் போன்ற காலை முந்துறத்து - தென்றற் காற்றை முன்னாக வரவிட்டு.

விளக்கம்: 'நாம் அழ' என்றது, மாலையின் குறும்புக்கும் பிரிவென்னும் படர் நோய்க்கும் ஆற்றாதே துயருட்படுவதைக் குறித்ததாம். 'நீல இருங்கழி நீலம் கூம்பும் மாலை' என்றது. அவ்வாறே பகற்போதெல்லாம் தோழியருடன் பேசியும் ஆடியும் மறந்திருந்த பிரிவின் வெம்மை, மாலைப்போதில் மேலெழுந்து வாட்டித் துயருறச் செய்வதைக் கூறியதாம். மாலை - மாலை நேரம்; மயக்கத்தையும் குறிக்கும்; அதுவே பிரிந்தாரைப் பெரிதும் துயர்ப்படச் செய்தலால். 'தென்றலை முன்னாக விட்டுத் தொடர்ந்து வரும் மாலை 'காலன் போன்றது' என்பது, இவளை விரைவில் மணந்து கொண்டாலன்றி, இவளை இழக்கவே நேரும்' என்பதைத் தலைவனுக்கு உணர்த்தற்காம்.

117. சேர்ப்பனை மறவாதீம்!


துறை: வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

(து.வி.: இதுவும் வரைதல் நினையாதே களவுறவிலேயே நாட்டம் மிகுந்தவனாகிய தலைவனுக்குத், தன் நிலைமை புலப்படுத்துவாள், தலைவி, தோழிக்குக் கூறுவாள் போற் கூறியதே யாகும்.)

அம்ம வாழி, தோழி! நலனே
இன்ன தாகுதல் கொடிதே - புன்னை
அணிமலர் துறைதொறும் வரிக்கும்
மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே.


தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனைக் கேட்பாயாக! புன்னையின் அழகான மலர்கள் ஒழுங்குபட உதிர்ந்தவாய்த் துறைதோறும் கோலஞ் செய்யும், கருநீலக் கடல் நீரையுடையனாகிய தலைவனை, மறவாதே எப்போதும் நினைத்திருப்போமாகிய நமக்கும், நம் நலன் இத்தன்மைத்தாகிக் கெடுதல்தான் மிகக் கொடியதேயன்றோ!

கருத்து: 'எம் நிலைதான் இனி யாதாகுமோ?' என்றதாம்.

சொற்பொருள்: நலன் - பெண்மை நலனாகிய பெருங்கவின்! 'இன்னதாகுதல்' என்றது, பசலையால் உண்ணப் பெற்றுக் கெட்டழிந்ததனைக் காட்டிக் கூறியதாம். கொடிதே - ஒழுங்குபட உதிர்க்கும். மணிநீர் - நீலமணிபோலும் நீர்: தெளிநீர் என்றும் பாடம் கொள்வர்; அதுவாயின் 'கழிவுநீர்' என்று கொள்க.

விளக்கம்: 'சேர்ப்பனை மறவாதோர்' என்றது, சேர்ப்பன் தந்த இன்பத்தினையும், அவன் நினைவையும். இவ்வாறு, அவனை நாம் நம் மனத்தகத்தேயே மறவாதே கொண்டிருக்கும் போதும் அவன் பிரிந்தான் என நம் நலன் அழிந்தே கெடுவதேன்? அது கொடிது அலவோ! என்கின்றனள். இதனால் தன் காதல் மிகுதியும் ஆற்றினும் அடங்காத் துயரமிகுதியும் புலப்படுத்தி, விரைய வரைதற்குத் தலைவனைத் தூண்டினளாம்.

உள்ளுறை: 'புன்னையின் அணிமலர் துறைதோறும் வரிக்கும் மணிநீர்ச் சேர்ப்பன்' என்றது. அதனைக் காண்பவன் உள்ளத்திலே தன் திருமணத்தைப் பற்றிய நினைவு தோன்றிற்றில்லையே என்பதை உள்ளுறுத்துக் கூறியதாம். புன்னை மலர்வது நெய்தல் நிலத்தார் மணங்கொள்ளும் காலம். ஆதலால் இவ்வாறு சொல்லியதும் பெருந்தும் என்க.

மேற்கோள்: காம மிக்கவழித் தலைவி கூறுதல் என இச்செய்யுளை இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் - (தொல். களவு, 21).

118. பின் நினைந்து பெரய்த்தேன்!


துறை: சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி வாயின் மறுத்த தலைமகள், பின்பு தலைமகன் வந்துழி நிகழ்ந்ததனை அவட்குக் கூறியதூ உமாம்.

(து.வி.: தலைவன் வரையாது, களவே மேற்கோள்ளலால் வருந்தித் தோழி வாயின் மறுத்தனள். மறுநாளும் தலைமகள் வரத், தலைமகள், தோழி தடுக்கவும் நில்லாதே அவன்பாற் சென்றனள். பின் அவள் வந்து, தோழிக்குச் சமாதானம் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

அம்ம வாழி, தோழி! யானின்று
அறனி லாளற் கண்ட பொழுதில்,
சினவுவென் தகைக்குவென் சென்ற னென்,
பின்நினைந்து திரங்கிப் பெயர்தந் தேனே!


தெளிவுரை: தோழி வாழ்வாயாக! இதனைக் கேட்பாயாக. இன்று, அறனில்லாதவனாகிய தலைவனைக் கண்ட பொழுதிலே 'அவன்பாற் சினங்கொள்வேன்; இனி அவன் இவண் வராதிருக்க என்று அவன் வரவையும் தடுப்பேன்'' என்றே நினைத்துச் சென்றேன். பின்னர், அது செய்தலால் பெருந்துயரமாம் என்று இரக்கமுற்றவளாய், யாதும் அவன்பாற் சொல்லாதேயே மீண்டேன்!

கருத்து: 'அவனை மறத்தல் நமக்கும் இயல்வதில்லையே' என்றதாம்.

சொற்பொருள்: அறநிலாளன் - அறமே அறியாதவன். தலைவனைச் சுட்டியது; அறமாவது களவிற் கலந்தானை அலராகா முன்பே மணங்கொண்டு, இல்லத் தலைவியாக்கிக் கொள்வது. தகைக்குவேன் - என்று எண்ணி; தகைத்தல் அவன் வரவை மறுத்தல். பின் நினைந்து - பின் விளைவை நினைந்து.

விளக்கம்: 'பின் நினைந்து இரங்கிப் பெயர்ந்தேன்' என்றது, ''அவனை வெறுத்து ஒதுக்கின், உயிர் வாழாமையே நம்முடைய நிலையாதலின், அவனை வெறுக்கவும் தடுக்கவும் முயலாதே, அவனுடன் இசைந்து ஒழுகி மீண்டேன்; இதனை நீயும் அறிவாய்; ஆதலின் என்னைப் பொறுப்பாய்'' என்பதாம். தொழியும், தலைவியின் கற்புச் செவ்வி நோக்கி, அவள் செயலையே சரியாகக் கொள்வாய் என்பதாம்.

119. பெரிதே அன்பிலன்!


துறை: 'வரைதற்கு வேண்டுவன முயல்வோம்' எனச் சொல்லி, வரையாது ஒழுகுகின்ற தலைமகன் சிறப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

(து.வி: 'வரைதலுக்கு முயல்வேன்' என்று உறுதிகூறிச் சென்றவன், அது செய்யாது, மீண்டும் களவையே விரும்பி வந்து, சிறைப்புறத்தானாகியது அறிந்த தலைவி, அவனும் கேட்டு அறியுமாறு, தோழிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

அம்ம வாழி, தோழி! நன்றும்
எய்யா மையின் ஏதில பற்றி,
அன்பிலன் மன்ற பெரிதே -
மென்புலக் கொண்கன் வாராதோனே!


தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனையும், நீ கேட்பாயாக. நெய்தல் நிலத்தானாகிய தலைவன், நம்மை வரைதலான நல்ல மரபினை அறியாதேயே உள்ளனன்; அதனாலே, அயலானவைகளைப் பற்றியே செல்லுகின்றனன். அவன் நம்மீது பெரிதும் அன்பிலாதான் என்றே நாமும் அறிகின்றோம். (என் செய்வேம்.)

கருத்து: 'அவனை நம்பி நம்மைத் தந்த நாமே தவறினோம்' என்பதாம்.

சொற்பொருள்: மென்புலம் - நெய்தல் நிலம். நன்றும் - நன்மை தருவனவான ஒழுக்கங்களையும். எய்யாமை - அறியாமை. ஏதில - அயலான ஒழுக்கங்கள்; களவே நாடிப் பொறுப்பை உதுக்கிவரும் செயலும், நினைவும்.

விளக்கம்: அவன் வரைந்து வாராமை பிறவற்றால் அன்று; நமக்கு நன்மையாவது மணவாழ்வே என அறியாதவனாதலின், களவே நமக்கு இன்பமாவது என எண்ணி, அதுவே பற்றி நடந்து வருகின்றனன். ஆதலால், அவன் அன்பில்லாதவன் என்பதும் தெரிந்தோம். இனி நம் நிலை துயரேதான் போலும் என்று வருந்திக் கூறுவதுபோலக் கூறியதாகக் கொள்க. இதனைக் கேட்டவன், அவள்மேல் பேரன்பின்னாதலின் மேலும் காலம் நீட்டிக்காது வரைதற்கு முயல்வன் என்பதாம்.

120. நல்லவாயின தோளே!


துறை: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன், வந்து சிறைப்புறத்தானாகத், தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

(து.வி: வரைவுக்குக் குறித்த காலம் கழிந்தும், வரைவொடு வராதவன், களவுறவை நாடியவனாக வந்து, குறியிடத்தே இருப்பதறிந்த தலைவி, பெருகிய மனத்துயரோடு, அவனும் கேட்டுணருமாறு, தோழிக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

அம்ம வாழி, தோழி! நலமிக
நல்ல வாயின, அளிய மென் தோளே -
மல்லல் இருங்கழி மல்கும்
மெல்லம் புலம்பன் வந்த மாறே!


தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனையும் நீ கேட்பாயாக; வளம் பெற்ற கரிய கழியினத்தே, நீர்வளம் மிகுந்து விளங்கும் நெய்தல் நிலத்தானாகிய நம் தலைவனும் வந்தனன். அதனாலே, நலம்கெட்டு அளிக்கத்தக்கவாயிருந்த எம் மெல்லிய தோள்களும், நலம் மிகுந்தவாய்ப், பண்டேபோல் நல்லெழில் உடையவாயினவே!

கருத்து: 'இனி, அவன் வரைவொடு இனி வருவான்' என்பதாம்.

விளக்கம்: 'மணப்பின் மாணலம் எய்திக் தணப்பின் நெகிழ்ப தடமென் தோளே' என்று குறுந்தொகையும் (299) கூறும், செவ்வியலே எழில் பெற்றன தலைவியின் தோள்கள் என்க. : 'மாறு'; ஏதுப் பொருள்படும் ஓர் இடைச்சொல். 'கழி நீர் அறல் விரியும்' எனப் பாடங்கொண்டு, 'கழிநீர் பெருகிப் பரந்து பலவிடமும் படர்தலாலே அறல்பட்டு அவ்விடங்களும் விளங்கும் என்றும் உரைக்கலாம். அவ்வாறே, அவன் வரைவொடும் வருதலாலே தலைவியும் புதிதான அழகு பெறுவாள் என்க.

'மல்லல் இருங்கழி மல்கும் மெல்லம் புலம்பன்' அவன் ஆதலின், அவனும் மிகத் தண்மையுடையான்; நமக்கு வெம்மை மிகுக்கானாய் இனி வரைந்து வருவான் என்று சொன்னதாம்.

மேற்கோள்: : ''பெற்றவழி மலியின் தலைவிக்குக் கூற்று நிகழும் என்று இளம்பூரணனாரும். (தொல். களவு, 21); தலைவி இடையீடின்றித் தலைவனை எதிர்ப்படப் பெற்ற ஞான்று புதுவது மலியின், அவளுக்குக் கூற்று நிகழும்'' என நச்சினார்க்கினியரும். (தொல். களவு, 20), இச் செய்யுளைக் காட்டிக் கூறுவார்கள்.

இப் பத்துச் செய்யுட்களும், பழந்தமிழ்க் காதல் வாழ்வில், தோழியின் சிறப்பான இடத்தை உணரச் செய்வனவாகும். உயர்குடிப் பிறந்து, குடித் தகுதியும் மரபும் பிறழாதே வாழும் தலைவி, பெரும்பாலும், இல்லத்துப் புறம் போந்து உலகநடையும் பிறவும் அறிந்து தெளிதற்கு வாய்ப்பற்றவளாகவே இருப்பள். இந்நிலையிலே அக்கட்டுப்பாட்டு வேலை தடை செய்யாதே எங்கும் செல்லவும் எவருடனும் பேசிப் பழகும் உரிமையும், அதற்கேற்ற மனவுறனும் பெற்றவளாகத் திகழும் தோழி, தலைவியினும் எதையும் முடிவு செய்யும் அறிவாற்றல் உள்ளவளும் ஆகின்றாள். மேலும், பாசத்தாலே அறிவின் நிதானத்தைத் தவறவிடும் நிலைமையும் அவள்பால் இல்லை. இத்துடன், தலைவியின் நல்வாழ்விலே அவள் மிகவும் அக்கறையும் பொறுப்புணர்வும் மிக்கவள். அவள் இன்ப துன்பங்களைத் தனதாகவே கருதிப் பேசும் பாங்கினள். எனவே, அவள் உடன்பாடு தலைவன் தலைவர்க்கு மிகவும் தேவையாகின்றது. இல்லத்தாரும் தலைவியின் உறுதுணையாகத் திகழும் அவளிடமே, தலைவியின் நினைவகம் செயலும் பற்றிய பலவற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதிருக்கின்றது.

நாணமும் மடமும் குடிப்பண்பும் தலைவியின் பேச்சைத் தடை செய்வன போலத் தோழியின் பேச்சைத் தடுப்பவனல்ல. அவள் பேச்சிலும் செயலிலும் தெளிவும் துணிவும் உடையவள். இப்படி ஒரு துணையை வகுத்துள்ள இலக்கியப் பாங்கும், அதற்குள்ள பொறுப்பான நிலையும் மிகவும் வியக்கற்பாலனவாம்.

3. கிழவற்கு உரைத்த பத்து


தலைமகனுக்குச் சொல்லிய பத்துச் செய்யுட்களின் தொகுப்பு இப்பகுதி. 'தலைமகன்', 'தலைவன்' என்னும் பெயர்களே, அவர்கள் குடிநெறி பிறழாத் தலைமை வாழ்வினரென்றும், தம்முடைய தலைமைப்பாட்டையும் அறநெறிகளையும் பேணுதற்கு உரியர் என்றும் காட்டும். இத்தகு தலைமையினைப் பிறப்பால் உடையாரும் தவறும்போது, அவர்க்குப் பிறர் அதனை உணர்த்திச் சொல்வன, ஆழமான உணர்வுநயச் சொற்களாகும். 'தலைவன்', 'கிழவன்' என்னும் உரிமைப் பெயரோடும் சுட்டுப்படுதலின், 'கிழவற்கு உரைத்த பத்து' என்றனர்.

121. நின் கேளைக் கண்டோம்!


துறை: பரத்தை தலைமகற்குச் சொல்லிது. (1) 'பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையோடு கூடி மறைந்து ஒழுகா நின்றான்' என்பது அறிந்து தலைவி புலந்துழி, 'இத்தவறு என் மாட்டு இலை; நீ இப் புலவியை நீக்க வேண்டும்' என்று தோழிக்குத் தலைமகன் கூற, புலவியை நீக்கக் கருதிய தோழி, அவள் இளமை கூறி நகையாடிச் சொல்லியதூஉம் ஆகும். (2).

(து.வி.: தலைவன் தன்னை மறந்தானாய்க் கைவிட்டுத், தன் மனைவியிடத்தே போதற்கு நினைகின்றான் என்பதனைக் குறிப்பால் உணர்ந்தாள், பரத்தை. அவள், அவனுக்கு அது பற்றிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது. (1).

தலைவன் பரத்தையுறவினன் என்று அறிந்து, அவனோடு புலந்து ஒதுங்குகின்றாள் தலைவி. அதனை நீக்கிக் கூடியின் புறவும், அவளைத் தெளிவிக்கவும் கருதிய தலைவன், 'தான் ஏதும் பிழை பாடாக நடத்திலன்' என்று தோழிக்கு உறுதிகூறி, அவள் உதவியை நாடுகின்றான். அவள் தலைவியின் இளமைப் பற்றிச் சொல்லி, அவளை மறந்து பரத்தைமை நாடித் திரியும் அவன் இழுக்கம் பற்றியும் நகையாடிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது. (2).

இப்பகுதிச் செய்யுள்கள் அனைத்திற்குமே இத்துறைகளுள் ஒன்றே பொருத்திப் பொருள் கொள்ளல் வேண்டும். ஒரே துறையமைதியுடனும் அமைந்த பத்துச் செய்யுட்கள் இவை. 29, 30ஆம் செய்யுட்கள் காணப்பெறவில்லை; அதனை அறிந்து வருந்த வேண்டும்.)

கண்டிகும் அல்லமோ, கொண்க நின் கேளே!
முண்டகக் கோதை நனையத்
தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் றோளே!


தெளிவுரை: கொண்கனே! கழிமுள்ளிப் பூவாலே தொடுத்தணிந்த தன் தலைக்கோதை நனையுமாறு, தெளிந்த அலைகளையுடைய கடலின் கண்ணே பாய்ந்து, தான் தனியாக நீராடி நின்றவளான, நினக்கு உறவுடையாளை, யாமும் அன்று கண்டனம் அல்லமோ!

கருத்து: 'யாம் கண்டதை மறைத்துப் பொய்கூறேம்' என்பதாம்.

சொற்பொருள்: கண்டிகும் அல்லமோ - கண்டேம் அல்லமோ; தலைவனும் தானும் கண்டிருந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்திக் கூறியது; 'இகும்' என்னும் இடைச்சொல் தன்மைக் கண்ணும் வந்தது இது. (தொல். இடை, 27. இளம், நச், சேனா.) முண்டகம் - கழிமுள்ளி; முண்டகப் பூவைக் கோதையாகக் கட்டிச் சூடிக் கடலாட்டயர்வது நெய்தன் மகளிரின் இயல்பாதலை இதனால் அறியலாம். பௌவம் - கடல். நின்றோள் - நீராட்டயராதே நின்னை இன்னொருத்தியுடன் கண்டதும் செயலற்றுக் கோதை நனைய நின்றவள். கேள் - உரிமை கொண்டவள்.

விளக்கம்: நீராடி நின்னோடும் மகிழ்தற்குத் தன்னைப் புனைந்தவள், நீதான் வேறொருத்தியோடும் நீராட்டயர்தலைக் கண்டதும், தான் தனியளாகக் கடலிற் பாய்ந்து, நின் செயலாலே மனம்வருந்தித் தன் முண்டகக் கோதை நனையத் தான் நீராடாமற் செயலற்று நின்றனளே! அவளை யாமும் கண்டேம் அல்லமோ! ஆதலின் மறைத்துப் பயனில்லை; தலைவியை இரந்து வேண்டித் தெளிவித்து, அவள் இளமை வேகமும், அவள் நினக்கு உறவாட்டியென்னும் உண்மையும் உணர்ந்தாயாய் நடப்பாயாக என்றதாம். "பரத்தை சொன்னதாகக் கொள்ளின், 'நின்கேள் அவ்வாறு நின்றது கண்ட நீ, அவள்பால் நெஞ்சம் தாவிச் செல்ல, என்னையும் மறந்து அன்று மயங்கினையல்லையோ?" என்றதாகக் கொள்க.

தோழி கூற்றாயின், 'அவளைத் தனித்து நீராடும் துயரிலே வீழ்த்திவிட்டு, நீ இன்னொருத்தியோடு சென்று கடலாடலை, யாம் எம் கண்ணாரக் கண்டேமாயிருந்தும், நீதான் பொய்யுரைத்தல் எதற்கோ? இனியேனும், அவள் இளமை நெஞ்சறிந்து, அவள் நின் கேளென்ற நினைவின் உணர்வோடு, அவளைப் பிரிந்து வாடி நலனழியவிட்டுப் கூடியின்புற்று புறம் போகாவாறு, வாய்வாயாக' என்றதாகவும் கொள்க!

122. குருகை வினவுவோள்!


துறை: மேற்செய்யுளின் துறையே இதுவும்.

கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவு வோளே!


தெளிவுரை: கொண்கனே! தன் ஒள்ளிய இழையானது மணல் மேட்டிலே வீழ்ந்ததென்று, மிகவும் வருந்தியவளாக, அருகே காணப்பெற்ற வெள்ளாங்குருகினை விளித்து, 'நீ கண்டனையோ?' என்று வினவுகின்ற நின் உரிமையாட்டியை யாமும் கண்டேம் அல்லமோ!

கருத்து: 'அவள் நின் கேள் அல்லவோ!' என்றதாம்.

சொற்பொருள்: உயர் மணல் - மணல்மேடு. ஒள்ளிழை - ஒளி மிகுந்த இழை; எளிதாகவே கண்ணிற் படக்கூடியது என்பது கருத்து. வெள்ளாங் குருகு - கடற்பறவை இனத்துள் ஒன்று.

விளக்கம்: 'அத்தகு முதிரா அறிவினளின் நெஞ்சை நைந்து நோகச் செய்தல் நினக்குத் தகாது' என்பதாம்.

இது தலைவனிடமிருந்து உண்மையினை அறிவதற்காகச் சொல்லப்படும் குற்றச் சாட்டாகலாம். காமஞ்சாலா இளமையோளையும் நாடிப் பின்செல்லும் நீ, மடமையுற்றாய் என்றதாம்.

மேற்கோள்: காமக்கிழத்தி நலத்தினைப் பாராட்டிய தீமையில் முடிக்கும் பொருளின்கண் தலைவிக்குக் கூற்று நிகழும், (தொல். கற்பு, 6) எனவும், தலைவி மற்றொருத்தி குணம் இத்தன்மையள் எனச் சொல்லித் தலைமகனது குறிப்பினை அறிதற்கும் உரியள். (தொல். பொருள். 38) எனவும், இளம்பூரணனார், தலைவி கூற்றாகவே இச் செய்யுளைக் காட்டுவர்.

திணைமயக்குறுதலுள் இப்பத்தும் நெய்தற்கண் மருதம்; இவை பெதும்பை பருவத்தாள் ஒரு தலைவியொடு வேட்கை நிகழ்ந்தமையைத் தலைவி கூறித், தலைவன் குறிப்புணர்ந்து - (தொல். அகத், 12) எனவும்; தலைவன் வரையக் கருதினாளோர் தலைவியை, 'இனையள்' எனக்கூறி, அவன் குறிப்பறியக் கருதுதலின் வழுவாய் அமைந்தது. (தொல். பொருள், 40) எனவும் நச்சினார்க்கினியர் கூறுவர். முதலில் தலைவி கூற்றாகவும், பின் தோழி கூற்றாகவும் அவள் கொள்வதும் ஓர்க.

உள்ளுறை: வெள்ளாங்குருகு ஒள்ளிழை தேடித் தராதவாறு போல, அவளை நாடும் நின் நாட்டமும் என் வழியாக நினக்குப் பயன்தராது என்று கொள்க.

123. ஆயம் ஆர்ப்பத் திரை பாய்வோள்!


கண்டிகும் அல்லமோ, கொண்க! நின்கேளே?
ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத்
தண்ணென் பெருங்கடல் திரைபாய் வோளே!


தெளிவுரை: கொண்கனே! ஒளியமைந்த நெற்றியையுடைய ஆயமகளிர்கள் பலரும் ஆரவாரம் செய்ய, தண்ணென விளங்கும் பெருங்கடலிலே, அலையிற் பாய்ந்து கடல் நீர் ஆடுவாளான, நின் உறவாட்டியை, யாமும் கண்டேமல்லமோ?

கருத்து: ''ஏன் பொய்யுரை புகல்கின்றனை?'' என்றதாம்.

சொற்பொருள்: ஆயம் - ஆயமகளிர்; விளையாட்டுத் தோழியர். ஆர்ப்ப - ஆரவாரித்து ஒலி எழுப்ப.

விளக்கம்: அலையிலே பாய்ந்தாடுவாளை ஊக்கப்படுத்தும் மகிழ்ச்சினாலே, கரையிலுள்ள தோழியர் ஆரவார ஒலி எழுப்புவர் என்பதாம். அந்த ஒலியால் எம் கவனம் ஈர்ப்புற, அவளை, அங்கே யாமும் காண நேர்ந்தது என்றதாம்.

பரத்தை கூற்றாயின், 'திரைபாய்வோளைத் தலைவியெனவும், தோழி கூற்றாயின் பரத்தையாகவும் கொள்க அவளையே சென்று இப்போதும் இன்புறுத்துக என்றதாம்.

124. கடல் தூர்ப்பாள்!


கண்டிகும் அல்லமோ, கொண்க! நின்கேளே?
வண்டற் பாவை வௌவலின்
நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே!


தெளிவுரை: கொண்களே! தானிழைத்து விளையாடிய வண்டற்பாலையைக், கடலலை மேலிவர்ந்து வந்து அழித்தனாலே சினங்கொண்டு, நுண்ணிய பொடிமணலை வாரி எறிந்து கடலையே தூர்க்கா நின்றவளான, நின் உரிமை யாட்டியை யாமும் கண்டுள்ளேம் அல்லமோ!

கருத்து: ''ஏன் மறைத்துப் பொய் புகல்வாய்?'' என்றதாம்.

சொற்பொருள்: வண்டற்பாவை - மணற்பாவை. வௌவல் - கவர்ந்து போதல். நுண்பொடி - நுண்ணிய பொடி மணல். அளைஇ - அள்ளித் தூற்றி.

விளக்கம்: தன் மணற்பாவையைக் கடலலை அழித்ததற்கே அவ்வாறு சினந்து ஆத்திரப்பட்டவள், நீயும் கொடுமை செய்தால் ஏற்றுப் பொறுமையாயிருப்பாளோ? ஆதலின் அவள் பாலே செல்க என்று தோழி கூறியதாகக் கொள்க.

பரத்தை கூற்றாயின், நுண்பொடி யளைஇக் கடலைத் தூர்த்தல் இயலாதவாறுபோல, நின்னை அலர் கூறி என்னிடமிருந்து மீட்டுக்கொள்ளவும், அவளால் ஒருபோதும் இயலாது என்றதாம்.

125. அழுது நின்றோள்!


கண்டிகும் அல்லமோ, கொண்க! - நின் கேளே?
தெண்டிரை பாவை வௌவ
உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே!


தெளிவுரை: கொண்கனே! தெளிந்த கடலலையானது தானிழைத்து வண்டற் பாவையினைக் கவர்ந்து போகக்கண்டு, தன் மையுண்ட கண்கள் சிவப்ப அழுது நின்றோளான, நின் உரிமையாட்டியை நாமும் கண்டுள்ளேம் அல்லமோ!

கருத்து: 'அவள் உறவை மறைப்பதேன்?' என்றதாம்.

விளக்கம்: திரை மணற்பாவையை அழித்தற்கே வருந்தி, உண் கண் சிவப்ப அழுதவள், நீ அவள் வாழ்வையே அழிக்க முயலின் என்னாகுவளோ? என்பது தோழி கூற்றாகும்.

பரத்தை கூற்றாயின், 'காமவுறவுக்குப் பொருந்தாத அத்தகு இளையோளையோ நீயும் விரும்பினை' என்றதாகக் கொள்க.

126. திரை மூழ்குவோள்!


கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
உண்கண் வண்டினம் மாய்ப்பத்
தெண்கடற் பெருந்திரை மூழ்கு வோளே!


தெளிவுரை: கொண்கனே! மைதீற்றிய தன் கண்ணிலே, வண்டினம் மலரென மயங்கி வந்து மொய்க்கவும், அதனைப் பொறாதே, தெளிந்த கடலின் பெரிய அலையிடையே மூங்குவோளான, நின் உறவாட்டியை, யாமும் கண்டேம் அல்லமோ!

கருத்து: ''அவள் நிலைதான் இனி என்னாகுமோ?'' என்றதாம்.

சொற்பொருள்: உண்கண் - மையுண்ட கண். நீலமலர் போலத் தோற்றலால் வண்டு மொப்ப்பவாயின. இது அவளது கண்ணெழில் வியந்ததும், முதிரா இளமைச் செவ்வி சுட்டிக் கூறியதுமாம். ''வண்டு மொய்ப்பத் திரை மூழ்குவோள், துயர் எழின் உயிர் வாழாள்'' என்றதாம்.

127. மாலை விலக்குவாள்!


கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
தும்பை மாலை இளமுலை
நுண்பூண் ஆகம் விலங்கு வோளே!


தெளிவுரை: கொண்கனே! தும்பை மாலையணிந்ததும், இளமுலைகள் பொருந்தியதும், நுண்ணிய பூண் அணிந்ததுமாகிய தன் மார்பினை, நீ தழுவாவகையிலே விலக்கிச் சொல்வோளான, நின் உரிமையாட்டியை, யாமும் கண்டேம் அல்லமோ!

கருத்து: ''அவள் புலவியை நீக்கி அவளையே போய் இன்புறுத்துக'' என்றதாம்.

விளக்கம்: தும்பைமாலை - தும்பைப் பூவாற் கட்டிய மாலை. 'இளமுலை' என்றது பருவம் முதிராதாள் என்றற்கு; இது பழமை சுட்டியது. அன்று நின்னை விலக்கினாள், இன்றும் நின்னை விலக்காளோ என்பதும் தோழி கூற்றாகும்.

128. பாவை ஊட்டுவோள்!


கண்டிகும் அல்லமோ, கொண்க! நின்கேளே?
உறாஅ வறுமுலை மடாஅ,
உண்ணாப் பாவை யூட்டு வோளே!


தெளிவுரை: கொண்கனே! உண்ணுதல் செய்யாத தன் மரப்பாவைக்கு, பாலூறிச் சுரக்கும் நிலையெய்தாத தன் வறிய முலையை வாயிலிட்டுப் பாலூட்டி மகிழ்வாளான, நின் உரிமையாட்டியை, யாமும் கண்டுள்ளேம் அல்லமோ!

கருத்து: 'அவள் ஆர்வத்தைச் சிதைத்தனையே?' என்றதாம்.

சொற்பொருள்: உறாஅ வறுமுலை - பால்சுரத்தலைப் பெறாத முலைகள்; உறா வறுமுலை எனவும் பாடம். மடாஅ-வாயிலிட்டு ஊட்டுவாளாக. உண்ணாப் பாவை - மரப்பாவை.

விளக்கம்: மனைவாழ்விலே அத்துணை ஆர்வத்தை அன்றே உடையாளை மறந்து, பரத்தைபாற் செல்வதேன் என்ற தோழி கூறியதாகக் கொள்க. பரத்தை கூற்றாகக் கொள்ளின், தலைவியைச் சிறுமியென நகையாடிக் கூறியதாகக் கொள்க.

129. ***


130. ***


இப்பகுதி பொதுவாக இளமையின் அறியாமைச் செயல்களையே சுட்டியவாய் அமைந்துள்ளன. பரத்தை கூற்றாயின், அத்தகு சிறுமித்தன்மை மாறாதவள் தலைவி என்று குறித்ததாகவும், தோழி கூற்றாயின், அத்தகு மெல்லுணர்வுகளைச் சிறுபோதிலேயே கொண்டவளாதலை அறிந்தும், தலைவன் அவளை வருந்தச் செய்வதன் கொடுமையைச் சுட்டிக் கூறியதாகவும் கொள்க.

4. பாணற்கு உரைத்த பத்து


பாணன் தலைவனின் வாயில்கள் (ஏவலர்கள்) பலருள் முதன்மையான ஒருவன். இவனே தலைவனைப் பரத்தையருடன் சேர்த்துவைப்பவன். கலைஞனாயினும், தலைவனின் சபல உணர்வுகளுக்குத் துணைநின்று பலரின் தூற்றலையும் பெற்று வருபவன். அவற்றை அதிகமாகப் பாராட்டாதே தலைவனின் ஏவலை நிறைவேற்ற முயலும் இயல்பும் கொண்டவன். இவன் தலைவன் பொருட்டாகத் தலைவிபாற் சென்று, தலைவன் சொன்னதைச் சொல்லும் வாயில் உரிமையும் பெற்றவன். தலைவனின் புறத்தொழுக்கத்ததால் வருந்தி வாடியிருந்த தலைவியிடம், பாணன் சென்று, 'தலைவனின் காதன்மை பற்றிக் கூறி, அவனை வெறுக்காது ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றான். அவனுக்குத் தலைவி விடை சொல்லுவதாக அமைந்தவையே இந்தப் பத்துச் செய்யுட்களும் ஆம்.

131. கௌவை எழாதேல் நன்று!


துறை: வாயில் வேண்டி வந்த பாணன், தலைமகனது காதன்மை கூறினானாகத், தலைமகள் வாயில் மறுப்பாள் அவற்குக் கூறியது.

(து.வி.: தலைவனைத் தலைவி உவந்தேற்று இன்புறுத்த வேண்டும் என்று கேட்கின்ற பாணன், தலைமகன் அவள்மீது கொண்டுள்ள காதலன்பைப் போற்றிக் கூறுகின்றான். அதற்கு இசைய மறுப்பவள், அவனுக்குச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

நன்றே, பாண! கொண்கனது நட்பே -
ததில்லை வேலி யிவ்வூர்க்
கல்லென் கௌவை எழாக் காலே!


தெளிவுரை: பாணனே, கேளாய்! தில்லை மரங்களையே வேலியாகப் பெற்றுள்ள இவ்வூரின் கண்ணே, கல்லென்னும் படி அலரானது எழுந்து பரவாதாயின், தலைவனது நட்பும் பெரிதும் நன்றே யாகும்!

கருத்து: 'ஆனாற் கௌவைதான் எழுந்து, எங்கும் பரவி, அலராகின்றதே' என்றதாம்.

சொற்பொருள்: தில்லை - ஒருவகை மருந்துமரம்; தில்லைப் பால் மேனியிற் பட்டால் புண்ணாகும் என்பார்கள். ஊரைச் சுற்றித் தில்லை மரங்கள் அடர்ந்திருந்தமையின் 'தில்லை வேலி இவ்வூர்' என்றனள். நெய்தற் பாங்கில் இம்மரம் மிகுதி.

விளக்கம்: 'கௌவை எழா அக்கால் நட்பு நன்று' என்றது, 'எழுந்து விட்டமையின், அதுதான் நன்றாகாதாயிற்று; எனவே, நின் வேண்டுதலை யாம் ஏற்கோம்' என்றதாம். தில்லையைத் தழுவுவார் உடற்புண் உறுதலைபோலத் தலைவனைத் தழுவுமாறும் மனப்புண்ணும் உடல் நலிவும் உறுவர் என்றதுமாம்.

132. அலராகின்றது அருளும் நிலை!


துறை: வாயில் வேண்டி வந்த பாணன், ''நீர் கொடுமை கூறல் வேண்டா; நும்மேல் அருளடையர்'' என்றாற்குத் தலைமகள் சொல்லியது.

(து.வி.: ''அவர்மீது கொடுமை சொல்லாதீர்; அவர் நும்மீது என்றும் பேரருளுடையவர்'' என்று தலைவிக்குப் பாணன் கூற, அதுகேட்டு, அவள் விடையிறுப்பதாக அமைந்த செய்யுள் இது.)

அம்ம வாழி, பாண! புன்னை
அரும்புமலி கானல் இவ்வூர்
அலரா கின்றுவ ரருளு மாறே!


தெளிவுரை: பாணனே, வாழ்க நீ! புன்னையின் பூவரும்புகள் மலிந்து கிடக்கின்ற கான்றஃசோலையினையுடைய இவ்வூரிடத்தே, அவர் நமக்கு அருளுந்திறந்தான், பலராலும் பழித்துப் பேசும் அலராக உள்ளதே!

கருத்து: 'அவர் அருள் மறந்தார்' என்றதாம்.

சொற்பொருள்: கானல் - கானற்சோலை. அருளுமாறு அருளும் திறம்.

விளக்கம்: அரும்புமலி கானலைக் கொண்ட இவ்வூரும் அவரைக் குறித்தெழுந்த அலரினாலே மலிந்ததாயிற்று; ஆதலின் அருள்மறந்த அவரை யாம் அடைதலை இனியும் விரும்பேம் என்றதாம். மேலாகப் புன்னை அரும்பால் மலியினும், உண்மையிற் கானலே இவ்வூர்; அவ்வாறே பேச்சில் நயமுடையராயினும், உளத்தே நயமற்றார் காதலர் என்றதுமாம்.

133. புல்லென்றன தோள்!


துறை: வாயிலாய்ப் புகுந்த பாணன், தலைமகள் தோள் மெலிவு கண்டு, ''மனைப்புறத்துப் போய் வந்த துணையானே நீ இவ்வாறு வேறுபடுதல் தகாது,'' என்றாற்கு, அவள் சொல்லியது.

(து.வி.: தலைவனுக்குத் தூதாக வந்தவனான பாணன், தலைவியின் தோள் மெலிவைக் கண்டு, 'தலைவன் மனைப் புறத்துப் போய் வந்ததற்காக நீ இவ்வாறு வருந்தித் தோள்மெலிதல் தகாது' என்று கூறித் தேறுதல் கூறித் தெளிவிக்க முயல்கின்றான். அவனுக்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுத் இது.)

யானெவன் செய்கோ, பாண! - ஆனாது
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
புல்லென் றனவென் புரிவளைத் தோளே!


தெளிவுரை: பாணனே! மெல்லிதான நெய்தல் நிலத்தானான நம் தலைவன், என்னை மறந்தானாகிப் பிரிந்து போயினான் என்பதாக, என் முறுக்குண்ட வளைகளணிந்த தோள்கள் ஆற்றாதே, தாமே மெலிவுற்றனவே! யான் யாது செய்வேன்?

கருத்து: ''அவன் பிரிவைத் தாங்காதேனான என்னையும் அவன் பிரிந்தானே'' என்றதாம்.

சொற்பொருள்: மெல்லம் புலம்பன் - மென்னிலமாகிய நெய்தல் நிலத்தான்; நெய்தல் மென்னிலமாவது மணற்பாங்கே மிகுதியாகி, வனைமையற்று விளங்கலின். புரி - முறுக்கமைந்த. வளை - தோள்வளை.

விளக்கம்: தோள் மெலியச் செய்தானை இடித்துக் கூறித்திருத்த முயலாது, 'மெலிந்தேன்' என்று மட்டும் இவண் வந்து கேட்கின்றனையோ?' என்று சொல்லி வாயில் மறுத்தனள் என்க. 'அப்படிப் பிரிதற்கு உதவியாக நின்றவனான நீயோ வந்து இப்படிச் சொல்வது?' என்று பாணனைச் சுட்டிச் சினந்து கூறியதும் ஆகும்.

மேற்கோள்: இது நெய்தற்கண் மருதம். தலைவன் புறத்துப்போன அத்துணைக்கு ஆற்றாயாகுதல் தகாதென்ற பாணற்குத் தலைவி கூறியது என்பர் நச்சினார்க்கினியர் - (தொல். அகத், 12).

134. கொண்கனோடு கவினும் வந்தது!


துறை: பிரிவின்கண், தலைமகள் கவின்தொலைவு கண்டு வெறுத்து ஒழுகுகின்ற பாணற்குத், தலைமகன் வந்துழிக் கவின் எய்திய தலைமகள் சொல்லியது.

(து.வி: தலைமகன் பிரிவாலே தலைவி கவின் இழந்தாள். அதனைக் கண்டு, அது தகாதென்று ஒதுங்கிச் சென்றனன் பாணன். தலைமகன் வந்துசேர அவள் கவினும் மீண்டும் வந்து விடுகின்றது. அப்போது, அவள் பாணனுக்குத் தன்னுடைய உளநிலையைக் காட்டிக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.)

காண்மதி, பாண! இருங்கழிப்
பாய்பரி நெடுந்தேர்க் கொண்கனொடு
தான்வந் தன்றென் மாமைக் கவினே!


தெளிவுரை: பாணனே, காண்பாயாக! பெரிய கழியிடத்தே பாய்ந்து செல்லும் குதிரைகளைக் கொண்ட நெடிய தேருக்குரியவனான தலைவனின் வருகையோடு, என் மாந்தளிர் போலும் மேனிக்கவின், தானும் என்பால் வந்ததே!

கருத்து: 'இனியேனும் அவன் பிரிவுக்குத் துணை செய்யாதே' என்றதாம்.

சொற்பொருள்: பாய்பரி - பாய்ந்து செல்லும் குதிரைகள். நெடுந்தேர் - பெரிய தேர். மாமை - மாந்தளிரின் தன்மை.

விளக்கம்: 'இருங்கழியிலும் பாய்ந்துவரும் குதிரைகள் பூட்டிய நெடுந்தேர்க் கொண்கன்' எனவே, அவன் வளமலிந்த பெருநிலை பெற்ற தலைமையோன் என்பதும் அறியப்படும். 'அவனொடு கவின் வந்தது' எனவே, அவனொடு கவினும் போயிற்றென்பதும், இனியும் போகும் என்பதும் உணர்த்தினள்.

135. யாம் வருந்தேம்!


துறை: பரத்தை ஒருத்தியைத் தலைப்பெய்வான் வேண்டி, அதனைத் தலைமகன் மறைத்து ஒழுகுகின்றதறிந்த தலைமகள், அவன் கேட்குமாற்றாற் பாணற்குச் சொல்லியது.

(து.வி: பரத்தை ஒருத்தியைத் தனக்கு உரியவளாக்கிக் கொள்ள முயல்கின்ற தலைவன், அதனை மறைத்தபடியே நடந்து வருக்கின்றான். இதனை அறிந்தாள் தலைமகள். அவன் கேட்குமாறு, அவன் பாணனுக்குச் சொல்வாள்போலச் சொல்லுகின்றாள்.)

பைதலம் அல்லேம், பாண! பணைத் தோள்
ஐதமைந் தகன்ற வல்குல்
நெய்தலம் கண்ணியை நேர்தல்நாம் பெறினே!


தெளிவுரை: பாணனே! மூங்கிலனைய தோள்களையும், மெல்லியதாய் அமைந்து அகன்ற அல்குல் தடத்தினையும், நெய்தலின் மலர்போலும் அழகிய கண்களையும் உடையாளை, யாம் எம் எதிரேயே காணப்பெறுவேமாயினும், அது குறித்து யாதும் யாம் வருத்தம் அடைவோம் அல்லேம்!

கருத்து: 'அது அவன் விருப்பிற்கு உட்பட்டது' என்றதாம்.

சொற்பொருள்: பாணை - மூங்கில். ஐது - மெல்லிது. 'நெய்தல் மலர் போலும் அழகிய கண்ணி' என்பதும், பிறவும் இகழ்ச்சிக் குறிப்பாகச் சொன்னதாகக் கருதலே பொருந்தும்.

விளக்கம்: இதனைக் கேட்கும் தலைவன், தலைவி தன்னுடைய பரத்தைமை இழக்கக் கேட்டை அறிந்தாள் என்பது தெளிதலின், மேலும் அதனைத் தொடராது திருந்துவன் என்பதாம். 'நேர்தல் பெறினே' என்றது, அது பெறாததனைக் கூறியதாம். இது தலைமகன் பாகனிடம் சொல்வது போலப் படைத்துத் தலைவி நகையாடிக் கூறியதெனக் கொள்ளுல் இன்னும் சிறப்பாகும்.

136. நாணில நீயே!


துறை: வாயிலாய்ப் புகுந்து, தலைமகன் குணம் கூறிய பாணற்கு, வாயின் மறுக்கும் தலைமகள் சொல்லியது.

(து.வி: தலைவனுக்கு ஆதரவாகத் தலைவியிடம் சென்று வேண்டுவானான பாணன். தலைவனின் உயர்குண நலன்களை எடுத்துக்கூறித், தலைவியிடம் மனமாற்றத்தை உருவாக்க முயல்கின்றான். அவனுக்கு, அவள் கூறும் பதிலுரையாக அமைந்த செய்யுத் இது.)

நாணிஇலை மன்ற, பாண! - நீயே
கோணோர் இலங்குவளை நெகிழ்த்த
கானலம் துறைவற்குச் சொல்லுகுப்போயே!


தெளிவுரை: பாணனே! நீயோர் நாணமில்லாதவனாயினையே! கொள்ளுதல் அமைந்த அழகிய வளைகள் நெகிழுமாறு, பிரிவு நோயைச் செய்தவனாகிய கடற்கான்றஃ சோலைத் தலைவனின் பொருட்டாக வந்து, சொற்களை வீணாகவே உதிர்த்தபடி நிற்கின்றனையே!

கருத்து: 'நின் பேச்சுப் பயனற்றது' என்றதாம்.

சொற்பொருள்: கோள் நேர் இலங்குவளை - கொள்ளுதல் அமைந்த அழகான வளைகள்; 'கொள்ளுதலாவது' செறிவாகப் பொருந்தி அமைதல். சொல் உகத்தல் - பயனின்றிச் சொற்களைச் சொல்லிப் பொழுதை வீணடித்தல்.

விளக்கம்: 'அவன் பொருந்தாத மனப்போக்கால வளைநெகிழ வாடியிருக்கும் என்முன்னே நின்று, அவன் குண நலன்களைப் போற்றிப் பலவாறு பேசுதலால், நீயோர் வெட்கங்கெட்டவன்' என்று சொல்லி, அவன் பேச்சை மறுக்கின்றாள் தலைவி. பொய்யெனத் தெளிந்தும் சொல்லலால் 'நாணிழந்தான்' ஆயினன். 'கான்றஃசோலைத் துறைவன்' இவ்வெம்மை விளைத்தல் இயல்பே என்னும் நுட்பமும் காண்க. வளை, கடற்கரைக்குரியதாகலின், அது நெகிழ்த்தல் அவன் தொழில் என்பதுமாயிற்று.

137. தம் நலம் பெறுவரோ?


துறை: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும், அவன் முன்பு செய்து தீங்கு நினைந்து தலைமகள் வேறுபட்டிருந்தாளாக, இனி 'இந்த வேறுபாடு ஏன்?' என்று வினவிய பாணற்கு, அவள் சொல்லியது.

(து.வி.: பிரிந்து சென்ற தலைவன், மீண்டும் வந்து தலைவியின் புலவி நீக்கி இன்புற்றவனாகி, அவளைப் பிரிந்தும் எங்கோ போயிருந்தனன். அவன் முன்பு செய்த தீமையையே நினைந்து வாடியிருந்தாளே அல்லாமல், அவன் வந்து செய்த தண்ணளியால் அவள் சிறிதேனும் களிப்படைந்திலள். அதுகுறித்து வினாவிய பாணனுக்கு, அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

நின்னொன்று வினவுவல், பாண! - நும்ஊர்த்
திண்தேர்க் கொண்கனை நயந்தோர்
பண்டைத் தம் நலம் பெறுபவோ மற்றே?


தெளிவுரை: பாணனே! நின்னை ஒன்று கேட்பேன். அதற்கு நேரான விடையாகச் சொல்வாயாக. திண்மையான தேரினியுடைய நம் தலைவனை விரும்பியவரான பெண்களுக்கே, யாரேனும், தம் பழைய அழகினை, நும் ஊரிடத்தே இதுகாறும் அழியாதே பெற்றுள்ளார்களோ?

கருத்து: 'அவனை விரும்பினார் நலன் கெடுதலே இயல்பல்லவோ' என்றதாம்.

விளக்கம்: 'திண்தேர்க் கொண்கன்' ஆதலின், அவன் பிறர் தம் வருத்தம் நோக்காது தன் போக்கிலேயே செல்லும் வன்மனமும் உடையன் என்கின்றான். 'நும் ஊர்' என்றது, தன்னை அவன் ஊரின் உறவினின்றும் பிரித்துக் கூறியது; அவனை மணந்து அவன் மனையாட்டியாகியவள் அவனூரைத் தன்னூர் என்றே கொள்ளல் இயல்பேனும், மனம் நொந்ததால் 'நும் ஊர்' என்றனள். 'பண்டைத் தம் நலம்' என்றது. அவனை நயந்து கூடுதற்கு முன்பு பெற்றிருந்த கன்னிமைப் பெருநலம். 'எவரும் தம் பண்டைநலம் பெறாதபோது, யான்மட்டும் பெறுதல் என்பது கூடுமோ?' என்பாள், அவன் செயலால், தானடைந்திருக்கும் வேதனையை உணர்த்துகின்றாள். 'நயந்தோர் பெறுபவோ' என்று, அவன் பெண்டிர் பலரென்பதும் உரைத்தாள்.

138. பண்பிலை பாண!


துறை: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது.

(து.வி.: தலைமன், தூது அனுப்பித் தலைவியின் இசைவு பெற்று வந்து, தலைமகளோடேயும் கூடியிருக்கின்றான். அஃதறியாதே வந்து, அவனுக்காகப் பரிந்து தலைவியிடம் வேண்டுகின்றான் பாணன். அவனுக்கு, அவள் நகையாடிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

பண்பிஇலை மன்ற, பாண! - இவ்வூர்
அன்பில கடிய கழறி,
மென்புலக் கொண்கனைத் தாரா தோயே!


தெளிவுரை: பாணனே! மென்புலத் தலைவனாகிய கொண்கனைக் கண்டு, அன்பில்லாதனவும் கடியத்தக்கனவுமான சொற்களைச் சொல்லியேனும், அவன் பொருந்தாத போக்கை மாற்றி, இவ்வூரிடத்தே எம்மனைக்கண் கொண்டு தராதிருக்கின்றவனாகிய பொறுப்பற்ற நீயும், மக்கட் பண்பான இரக்கம் என்பதே இல்லாதவன் ஆவாய் காண்!

கருத்து: 'அவனைத் திருத்தும் நற்பண்பில்லாதவன் நீ' என்றதாம்.

சொற்பொருள்: பண்பு - பாடறிந்து ஒழுகும் இயல்பு. அன்பில கடிய - அன்பற்றவும் கடியவுமான சொற்கள்.

விளக்கம்: 'தலைவன் தவறான போக்கினனாகும் போதிலே, அவனை இடித்துப் பேசித் திருத்தி நடக்கச் செய்யுப் பண்பில்லாதவன் பாணன்' என்று கடிந்து சொல்கின்றாள் தலைவி. அவன் தவற்றொழுக்கினும் அவனையே சார்ந்து நின்று, அவன் பொருட்டு வாயிலாகவும் செயற்படும் பாணனின் போக்கைக் கடிந்து சொன்னது இதுவாகும்.

139. நின்னின் பாணன் கொடியன்!


துறை: ஆற்றாமை வாயிலாகப் புகுந்திருந்த தலைமகற்குப் பாணன் வந்துழித் தலைமகள் சொல்லியது.

(து.வி.: தலைவியின் உறவை மறக்கவியலாத ஆற்றாமை நெஞ்சமே வாயிலாகத், தலைவனும் தன் மனைக்கு வந்து சேர்ந்தான். அப்போது, அவனைத் தேடியவனாகப் பாணனும் அங்கே வந்து சேர்கின்றான். அவனுக்குத் தலைமகள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

அம்ம வாழி, கொண்க! எம்வயின்
மாணலம் மருட்டும் நின்னினும்
பாணன் நல்லோர் நலஞ்சிதைக் கும்மே.


தெளிவுரை: கொண்கனே! எம்மிடத்தே பொருந்தியிருந்த சிறந்த நலத்தை எல்லாம் அலைக்கழிக்கும் நின்னைக் காட்டினும், நின் பாணன், தன் பேச்சாற் பிற பெண்டிரை மயக்கி நினக்குக் கூட்டிவைக்கும் அந்தச் செயலினாலே, பல பெண்களின் அழகு நலங்களை மிகவும் சிதைத்து வருகின்றான்! அவன் வாழ்க!

கருத்து: 'அவன் என்று திருந்துவானோ' என்றதாம்.

சொற்பொருள்: மாண்நலம் - மாட்சி பொருந்திய அழகு நலம். மருட்டும் - அலைக்கழிக்கும்; சிதைக்கும். நல்லோர் - பெண்டிர்; பரத்தையரைக் குறித்தது; நல்லழகியர் என்பதாம்; இகழ்ச்சிக் குறிப்பு.

விளக்கம்: 'என் நலன் ஒன்றே கெடுக்கும் நின்னினும், நினக்காகப் பல பெண்டிரை மயக்கி இசைவிக்கும் நின் வாயிலான இந்தப் பாணன் மிகவும் கொடியவன்' என்பதாம். 'நல்லவர் நலம் சிதைப்பவன் எவ்வளவு கொடியவன்?' என்று உலக வறத்தின்பால் இணைத்துக் கூறியதாகவும் கொள்க.

140. நீ சொல்லுதற்கு உரியை!


துறை: பாணன் தூதாகச் செல்ல வேண்டும் கெறிப்பினளாகிய தலைமகள், அவற்குத் தன் மெலிவு காட்டிக் கூறியது.

(து.வி.: தலைமகனை அடைய வேண்டும் என்னும் ஆசை வேகம் மிகுதியாகின்றது தலைவிக்கு. தலைவனைத் தேடியவனாக வீட்டின்பால் வந்த பாணனிடம், தன் மெலிவைக் காட்டி, தலைவனைத் தன்பால் வரத் தூண்டித் திருத்துமாறு இப்படிக் கூறுகின்றாள்.

காண்மதி, பாண! - நீ உரைத்தற் குரியை -
துறைகெழு கொண்கன் பிரிந்தென
இறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே!


தெளிவுரை: பாணனே! துறை பொருந்திய கொண்கன் பிரிந்தனனாக, சந்து பொருந்தி விளங்கும் எம் ஒளிவளைகள் நெகிழ்ந்து நீங்கிப் போயினதான இந்த அவல நிலைமையினைக் காண்பாயாக. எம் இந்நிலையினைத் தலைவனிடம் சென்று நீதான் சொல்லுதற்கு உரியை யாவாய்!

கருத்து: 'என் மெலிவைச் சொல்லி அவரை வரச் செய்க' என்பதாம்.

சொற்பொருள்: துறை - கடற்றுறை. இறை - சந்து, கேழ் - பொருந்திய. எல்வளை - ஒளிவளை.

விளக்கம்: தலைவன் சார்பினனே பாணன் எனினும், தன் மெலிவை நோக்கியாவது, தலைவனிடம் சென்று, தன் நலிவைப் பற்றிச் சொல்லி, அவனை இல்லத்திற்குத் திரும்புமாறு செய்வதற்கு வேண்டுகின்றாள் தலைவி.

பரத்தையிற் பிரிந்தவழித் தலைவன் பாணனின் பேச்சையே பெரிதும் கேட்பவனாகிய மயக்கத்தோடு விளங்குவான்; ஆதலால், இவ்வாறு, அவனையே தனக்காக அவனிடத்தே தூது செல்ல வேண்டுகின்றாள் தலைவி. தலைவிபாலும் மதிப்பும் அன்பும் மிகவுடையனாதலின், பாணனும், அவள் நலமழியாது விளங்கத் தலைவனிடம் சென்று பரிந்துரைப்பான் என்றும் கொள்க. 'அவன் பிரிய இறைகேழ் எல்வளையும் பிரிந்தது' என்ற சொல்லிலே சோகம் அளவிறந்து புலப்படுதலையும் நினைக்க!

பரத்தைமை உறவிலே தலைவனுக்கு வேண்டியவே செய்யும் வாயிலாகச் செயற்படுபவன் பாணனே! ஆகவே; அவன் செயலால் புண்பட்ட தலைவியேனும், தலைவனை அடைய விரும்பும் ஏக்கத்தின் மிகுதியினால், அந்தப் பாணனையே இப்படி உதவுதற்கு வேண்டும் அவலத்தையும் காண்கின்றோம். கலைக் குடிப் பாணன், குலமகளிரின் இல்லற அமைதியைக் கலைத்துக் கெடுக்கும் கொடியவனாகவும், தன் சுயநலத்தால் பண்பிழந்து நடக்கும் அவலத்தையும் காண்கின்றோம். அவனுக்கு ஒரு முதன்மையும் சில சமயம் இப்படி ஏற்பட்டு விடுவதனையும் பார்க்கின்றோம்.

5. ஞாழற் பத்து


'ஞாழல்' என்பது கொன்றை மர வகையுள் ஒன்று. கடற் கானற் கழிப்பகுதிகளிலே, மிகுதியாகக் காணப் பெறுவது. 'புலிநகக் கொன்றை' இது வென்பர். நெய்தல் நிலத்து மகளிர், இதன் நிழலிலே ஆடியும் பாடியும் இன்புறும் வழக்கத்தினர். இப்பத்துச் செய்யுட்களும் ஞாழல் தொடர்புள்ளனவாக அமைந்துள்ளன. ஆதலின், இதனை ஞாழற்பத்து என்று தொகுத்து அமைத்துள்ளனர் எனலாம்.

141. பயலை செய்தன துறை!


துறை: வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகின்ற தலைமகள், 'அவன் வரைதற்குப் பிரியவும், நீ ஆற்றாயாகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது.

(து.வி.: வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்து போயின காலத்திலே, அந்தப் பிரிவையும் தாங்கமாட்டாது வருந்தி நலிகின்றாள் தலைமகள். அது குறித்து அவளைக் கேட்கும் தோழிக்கு, அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண்துளி வீசிப்
பயலை செய்தன பனிபடு துறையே!


தெளிவுரை: நீர் கொண்டு வந்து இட்டதான மணல் மேட்டினிடத்தே, ஞாழலோடு செருந்தியின் பூக்களும் ஒருசேர மணங்கமழ்ந்திருக்க, குளிர்ந்த நீர்த்துறையானது தண்ணிய திவலையான நீர்த்துளிகளை எம்மேல் வீசிப், பயலை நோயினையும் செய்தது காண்!

கருத்து: 'இயற்கையும் இன்ப வேட்கையை மிகுவித்தலால் ஏக்கமுற்று வாடலானேன்' என்றதாம்.

சொற்பொருள்: எக்கர் - நீர் கொண்டு இட்ட மணல்மேடு பயலை - பசலை நோய். பனிபடுதுறை - குளிர்ச்சியமைந்த நீர்த் துறை; கடற்கரையிடம்.

விளக்கம்: வரைவிடை வைத்த பிரிவென்று கொண்டு யான் ஆற்றியிருப்பேன். ஆயின், ஞாழலும் செருத்தியும் பூத்துப் பரந்த புதுமணமும், குளிர்ந்த நீர்த்துறையிலே அலைகள் என் மீது எறியும் நீர்த்துளிகளும், என் இன்ப நினைவை எழுப்பி, என்னைப் பெரிதும் வாட்டுகின்றனவே என்கின்றாள் தலைவி. ஞாழல் செருந்தியோடு கமழ்கின்றது, யான் அவரோடு சேர்ந்து மணக்கவில்லையே என்றதும் ஆம்.

மேற்கோள்: வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்கு, துறை இன்பமுடைத்தாகலன் வருத்திற்கு எனத் தலைவி கூறியது; சுரத்தருமை முதலியனவன்றி நெய்தற்குள் பாலை வந்தது (தொல். அகத், 9) என்பர் நச்சினார்க்கினியர்.

142. என் கண் உறங்காவே!


துறை: வரையாது வந்தெழுகும் தலைமகன், இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, 'நின் கண் துயில்தல் பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

(து.வி.: தோழியும் தலைவியும் வரைந்து கொள்ளலை வற்புறுத்திப் பல நாட் கூறியும், களவுறவையே வேட்டு, இரவுக் குறியிடத்தேயும் வந்து, தோழி அகன்று போவதற்குரிய ஒலிக்குறிப்பையும் செய்கின்றான் தலைவன். அதனைக் கேட்டாலும் கேளாதுபோல், தோழி, 'இப்படி உறக்கம் கெட்டால் நின்கதி யாதாகும்? நின் நலன் கெடுமே?; அதற்காகவேனும் அவனை மறந்து விடுவாய்' என்கிறாள் தலைவியிடம். அவள், தன் தோழிக்கு, அதற்கு விடையிறுப்பதாக அமைந்த செய்யுள் இது. இதனைக் கேட்பவள் வரைதலுக்கு விரைபவனாவான் என்பது தேற்றம்.)

எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூரும் துறைவனை
உள்ளேன் - தோழி! - படீஇயர் என் கண்ணே!


தெளிவுரை: தோழி! மணல்மேட்டிலுள்ள ஞாழலின் தாழ்வான கிளைகளிலேயுள்ள பூங்கொத்துக்களிடையே, கடற்புட்கள் வந்து தங்கும் துறையினையுடைய நம் தலைவனை, நீ கூறியவாறே இனி நினையேன்! என் கண்களும் இனி உறங்குவனவாக!

கருத்து: 'மறக்கவும் ஆற்றேன்; உறக்கமும் இழந்தேன்' என்றதாம்.

விளக்கம்: 'உள்ளேன்' எனவும் 'படீஇயர்' எனவும் சொன்ன சொற்கள், தன்னால் அவை இயலாமை குறித்தும், அதனால் கண்படுதல் வாயாமை சுட்டியும் சொன்னவாம். 'புள் இறை கூரல்'த்தம் இணையுடன் என்றும் கொள்க.

உள்ளுறை: ஞாழலின் தாழ்ந்த பூச்சினைகள் புள்ளினம் வந்தமரத் தாம் வருந்திக் கெடுதலுறுமாறு போல, பிரிவென்னும் துயரம் என்பதால் வந்து தங்குதலாலே, யானும் படர்மிகுந்து வருந்தி நலிவேன் என்றதாம்.

புள்ளினமும் உரிய நேரத்தில் வந்து தங்குதலை அறிந்திருக்கத், தலைவன் நம்மை மணந்து நம்மோடு இல்லிருந்து வாழ்தலை அறியாதே போயினனே என்பதுமாம்.

143. இனிய செய்து பின் முனிவு செய்தல்


துறை: புறத்துத் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.

(து.வி.: தலைவியைப் பிரிந்து பரத்தையில்லிலே சிலநாள் தங்கியிருந்தபின், மீண்டும், தன்மனைக்கு வந்த தலைவனுக்குத், தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

எக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்துறை,
இனிய செய்து! நின்று, பின்
முனிவு செய்த - இவள் தடமென் தோளே!


தெளிவுரை: எக்கரின் கண்ணுள்ள ஞாழலிடத்தே, புள்ளினம் ஆரவாரித்தபடியிருக்கும் அகன்ற துறையிமத்தே, இவளுடைய பெரியவான மென்தோள்கள், முன் களவுக் காலத்தே நினக்கு இனிமையைச் செய்து, பின்னர் இப்போதெல்லாம் நினக்கு வெறுப்பையும் செய்துள்ளனவே!

கருத்து: 'நீதான் இவள்பால் இப்போது அன்பற்றவனாயினாய்' என்றதாம்.

சொற்பொருள்: புள்ளிமிழ் - புட்கள் ஆரவாரிக்கும். முனிவு - வெறுப்பு; அது பிரிவாற்றாமையினாலே அழகு கெட்டு மெலிந்ததனால் விளைந்தது.

விளக்கம்: களவுக் காலத்தே, எக்கரிடத்து ஞாழற்சோலையிலே போற்றிக் கூடி மகிழ்ந்த நிகழ்ச்சியையும், அவன் இப்போது அவளை வருத்தி நலியச் செய்யும் கொடுமையையும், தலைவியின் தோள் நலத்தின்மீது சார்த்தித், தோழி இவ்வாறு வெறுப்புற்றுக் கூறுகின்றனள். 'தடமென் தோள்' பற்றிக் கூறியது, முன் அவனே வியந்து பாராட்டியதனைச் சொல்லிக் காட்டியதுமாம்.

உள்ளுறை: 'ஞாழலின் பூச்சினை வருந்தப் புள்ளினம் தங்கி ஆரவாரிக்கும்' என்றது, இவள் நின் பிரிவால் வருந்தி நலிய, நீயோ பரத்தையரோடு களித்திருப்பவனாவாய் என்றதாம். வரைவிடைப் பிரிவாயின், நீ நின் செயலிலேயே மனஞ்செலுத்தி இவளை மறந்திருப்பாய் என்றதாகக் கொள்க.

பிறபாடம்: நின் துயில் துணிவு செய்த - இப்பாடத்திற்கு, முன் இவட்கு இனிய செய்த நின் முயக்கம், நீ புறத்துத் தங்கிவந்தாய் என்னும் நின் வேற்றுறவின் நினைவால், இதுகாலை வெறுப்பினைப் பயப்பதாயிற்றுப் போலும் என்று கூறினளாகக் கொள்க.

144. இனிப் பசலை படராது!


துறை: 'தலைமகன் வரைந்து கோடல் நினையாது, களவொருக்கமே விரும்பி ஒழுகா நின்றான்' என்பது அறிந்து வேறுபட்ட தலைமகள், 'அவன் கூறியவற்றால் இனிக் கடிதின் வரைவன்; ஆற்றாயாகாதது ஒழிய வேண்டும்' என்று தோழிக்குச் சொல்லியது.

(து.வி.: தலைவன் சொல்லிச் சென்றவாறு வரைந்து வந்திலன் என்று வருந்தியிருக்கின்றாள் தலைவி. அவளுக்கு, அவன் சொற்பிழையானாய் வந்து, நின்னை முறையே மணப்பான் என்று தோழி சொல்லித் தேற்ற முயல்கின்றாள்.)

எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்
தனிக்குரு குறங்கும் துறைவற்கு
இனிப்பசந் தன்று - என் மாமைக் கவினே!


தெளிவுரை: எக்கரிடத்தே, ஞாழலின் பூங்கொத்துக்கள் பொருந்திய சோலைக் கண்ணே, துணை பிரிந்து தனிமைப்பட்ட குருகானது உறக்கங்கொள்ளும் துறைவனின் பொருட்டாக, என் மாமைக்கவின், இப்போது பசப்பெய்துவதாயிற்றே!

கருத்து: 'இதுகாறும் சொற்பேணாதவன் இனியுமோ பேணுவான்?' என்றதாம்.

சொற்பொருள்: பொதும்பர் - சோலை. தனிக்குருகு - துணைபிரிந்து தனித்திருக்கும் குருகு. உறங்கும் - தூங்கும். மாமைக் கவின் - மாந்தளிரனையை கவின்.

விளக்கம்: 'எக்கர் ஞாழல்இணர்படு பொதும்பர்த் தனிக்குருகு உறங்கும்' துறைவனாதலின், நம்மையும், நாம் அளித்த இன்பத்தையும், அன்பையும் அறவே மறந்தானாய்த், தனித்து வாழ்தல் அவனுக்கு எளிதுதான். ஆயின், அவனை நினைந்து நினைந்து என் மாமைக்கவினும் இப்போது பசந்து போயிற்றே! இதற்கு யாது செய்வாம்? என்பதாம்.

'இப்போது பசந்தது' என்றது, முன்னர், அவன் சொல்லை வாய்மையாகக் கொண்டு ஏமாந்திருப்பேமாகிய நம்நிலை அறியாமல், 'அவன் புதுவதாகச் சொன்ன உறுதியை நம்பி வந்து நீ கூறுதலால்' என்று கொள்ளலாம்.

உள்ளுறை: 'எக்கர் ஞாழல் குருகு தனித்து உறங்கும்' என்றது, காலம் வாய்த்தவிடத்தும் வரைந்து கொண்டு ஒன்றுபட்டு வாழ்தலை நினையாதே, தனித்துறைதலையே விரும்பும் இயல்பினன் தலைவன் என்றதாம்.

145. பசலை நீக்கினன் இனியே!


துறை: வரைவு மறுத்த தமர் உடம்படுமாற்றல், சான்றோரைத் தலைமகன் விடுத்ததறிந்த தோழி, தலைமகள் கேட்குமாற்றால் சொல்லியது.

(து.வி.: தலைவன் வரைந்து வந்தபோது, தலைவியின் தமர் இசைவளிக்காதே மறுத்துப் போக்கினர். அவன், அதன் பின், அவர் உடம்படுமாறு சான்றோரை அவர்பால் விடுக்கின்றான். அவர் வரத் தமரும், உடம்படுகின்றனர். இஃதறிந்த தோழி, தலைமகள் கேட்க, அச்செய்தியைக் கூறுகின்றாள்.)

எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை
ஓதம் வாங்கும் துறைவன்
மாயோள் பசலை நீக்கினன், இனியே!


தெளிவுரை: எக்கரிடத்தேயுள்ள ஞாழலின் சிறிய இலைகளையுடைய பெரிய கிளையைக் கடல்நீர் வளைக்கும் துறைவன், இப்போது, மாமை நிறத்தாளான இவளின் பசலை நோயினையும் நீங்கிச் செய்தனனே!

கருத்து: 'இவள் இனி இன்பமே காண்பாள்' என்றதாம்.

சொற்பொருள்: ஓதம் - கடல்நீர் - வளைத்துக் கொள்ளும். மாயோள் - மாமைக் கவினுடையாளான தலைவி. நீக்கினன் - நீங்கச் செய்தனன்.

விளக்கம்: கடல்நீர் பொங்கியெழுந்து மோதுதலால், ஞாழலின் பெருஞ்சினையும் வளைந்து தாழும் என்றது, அடிமண் அரிப்புறலால் என்று கொள்க. இவ்வாறே தலைவியின் தருமம் சான்றோரின் பேச்சுக்களால் தம் உறுதியினைத் தளர்த்தினராக, வரைவுக்கு உடன்பட்டனர் என்றும் கொள்க. 'நீக்கினன்' என்று இறந்தகாலத்தாற் கூறினாள், நீங்குதல் விரைவிலே நிகழும் என்னும் உறுதி பற்றியதாகும். 'இறந்தகாலம் குறிப்பொடு கிளத்தல், விரைந்த பொருள் எம்னமனார் புலவர்' என்ற விதியைக் காண்க. (தொல். சொல், 243).

உள்ளுறை: ஞாழற் சினையை ஓதம் வளைக்கும் துறைவன் என்றது, தன் வழி வராத தலைவியின் சுற்றத்தாரைச் சாற்றோர் மூலம் தன் வழியாக்கும் உறதியினன் தலைவன் என்று கூறி, அவன் உறுதிக்கு வியந்ததாகும். இதனைக் கேட்கும் தலைவியும், தன் மனக்கலக்கம் நீங்கி மகிழ்வடைவாள் என்பதாம்.

146. கவின் இனிதாயிற்று!


துறை: வரைவு கடாவவும் வரையாது ஒழுகுகின்றுழி, 'நம்மை எவ்வளை நினைத்தார் கொல்லோ' என்று ஐயுற்றிருந்த தலைமகள், வரைவு தலைவந்துழித் தோழிக்குச் சொல்லியது.

(து.வி.: வரைவினைத் தலைவி பலகால் வேண்டியும், தலைவன் வரையாதே ஒழுகிவர, அதனால் 'அவன் நினைவுதான் என்னவோ?' என்று வேதனைப்பட்டிருந்தாள் தலைவி. ஒருநாள், அவன் வரைவொடு தன் மனைக்கண் வரக்கண்டவள், தோழிக்கு மகிழ்வோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர்
நறிய கமழும் துறைவற்கு
இனிய மன்ற - எம் மாமைக் கவினே.


தெளிவுரை: எக்கரிடத்து ஞாழலின் அரும்பு முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துக்கள், நறுமணம் கமழ்கின்ற துறைவனுக்கு, எம் மாமைக்கவின் இனிமையானதே காண்!

கருத்து: 'அவன் என்னை விரும்புவோனே' என்பதாம்.

விளக்கம்: ஞாழல் அரும்பு மலர்ந்து மணம் வீசும் தறைவன் ஆதலின், அவன் மனமும் நம்மை மணந்து கொள்வதை மறந்திலது என்கின்றனள்.

உள்ளுறை: ஞாழல் அரும்பு முதிர்ந்து அவிழ் இணர் நறிய கமழுமாறுபோல, அவன் அன்பும் முறையாக நிரம்பி வெளிப்பட்டு, இப்போது மணமாகவும் உறுதிப்பட்டது என்பதாம். அரும்பு முதிர்ந்து அவிழ்ந்த இணர் நறுமணத்தைத் துறையிடமெல்லாம் பரப்பல்போல, அவன் முயற்சி நிறைவுற்று மணம் வாய்த்தலால், அனைவரும் மகிழ்வெய் தினம் என்பதுமாம்.

147. நாடே நல்கினன்!


துறை: சுற்றத்தார் வேண்டிய கொடுத்துத் தலைமகன் வரைவு மாட்சிமைப் படுத்தமை அறிந்த தோழி, உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குச் சொல்லியது.

(து.வி.: தலைமகன் தன் காதலியின் பெற்றோரை வரைவொடு வந்த சான்றோருடன் அணுகுகின்றான். பெற்றோரும் அவந்து வரவேற்று அவளை மணத்தால் தருவதாயின், இன்னின்ன எல்லாம் வரைபொருளாகத் கருதல் வேண்டும் என்கின்றனர். அவற்றை அளித்துர, அதன்மேலும் தந்து அவரை மகிழ்விக்க, அவர்கள் அவன் மாச்டி போற்றி உவகையோடு இசைகின்றனர். இதனைக் கண்ட தோழி, உள்வீட்டில் இருக்கும் தலைவியிடம் சென்று, உவகை ததும்பக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

எக்கர் ஞாழல் மலரின் மகளிர்
ஒண்தழை அயரும் துறைவன்
தண் தழை விலையென நல்கினன் நாடே.


தெளிவுரை: மகளிர்கள், எக்கரிடத்து ஞாழலின் மலர்களைக் காணாமையாலே, அதன் ஒள்ளிய தழைகளைக் கொய்து தொடுத்த தழையுடையினை அணிந்தவராக விளையாட்டயரும் துறைவனான நம் தலைவன், நினக்குரிய தண்ணிய தழையுடையின் விலையாகத், தனக்குரிமையான ஒரு நாட்டையே நல்கினானடீ!

கருத்து: 'நினக்காக அவன் எதனையும் தருபவன்' என்ற தாம்.

சொற்பொருள்: அயர்தல் - வினையாடி மகிழ்தல் தழைவிலை - மணப் பெண்ணுக்குத் தருகின்ற வரைபொருள்; முலைவிலை என்றும் உரைப்பர். நாடு - அவன் வென்று கொண்ட நாடுகளுள் ஒன்றென்க; அவன் உயர்வும் இதனால் விளங்கும்.

விளக்கம்: தலைவியின் தமர் கேட்பவெல்லாம் தந்து களிப்பித்தவன், 'இந்நாடும் கொள்க' என்று அளிக்கவும், அவன் மாட்சியறிந்த அவர், அவனைப் போற்றி மகளைத் தர உடனேயே இசைந்தனர் என்பதாம். அத்துடன், அவன் அத்தகு வளமான பெருங்குடியினன் என்பதும், தலைவி மாட்டுப் பெருங்காதலினன் என்பதும் அறிந்து போற்றினர் என்பதுமாம்.

உள்ளுறை: ஞாழலிலே மலரில்லாமை கண்ட மகளிர் அதன் பசுந்தழையைக் கொய்து தழையுடையாக்கிக் கொண்டாற்போல, நினக்கு முலைவிலையாக உலகையே தருதற்கான உள்ளத்தானெனினும், அஃதில்லாமையாலே, தன்பாலிருந்த நாட்டை மட்டும் நல்கினன் என்று கொள்க.

148. நீ இனிது முயங்குவாய்!


துறை: களவொழுக்கத்தின் விளைவறியாது அஞ்சிய வருத்தம் நீங்கக், கரணவகையான் வதுவை முடித்த பின்பு, தலைமகளைப் பள்ளியிடத்து உய்க்கும் தோழி, சொல்லியது.

(து.வி.: 'தான் கொண்ட வதுவையில் முடியுமோ?' என்று கவலையுற்று வாடிய வருத்தம் நீங்கக், கரணவகையால் ஊரும் உறவும் களிகொள்ளத் தலைவியின் வதுவையும் நிறைவு செய்தியது. அதன்பின், தலைமகளைத் தலைவனுடன் இன்புற்று தோழி, உவகையோடு, அவளை வாழ்த்திச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை
வீயினிது கமழும் துறைவனை
நீயினிது முயங்குமதி காத லோயே!


தெளிவுரை: அன்புடையாளே! எக்கர் ஞாழலினிடத்தே, வரம்பு கடந்து ஓங்கும் பெரிய சினையிடத்தே பூத்த பூக்கள், இனிதாக நாற்புறமும் மணம் கமழும் துறைவனை, இனி, நீதான் இனிதாகத் தழுவி இன்புறுவாயாக!

கருத்து: 'இனி ஏதும் துனி இடைப்படுதல் இல்லை' என்பதால், 'இனிது முயங்குமதி' என்கின்றனள், களிப்பால்.

சொற்பொருள்: வீ - பூ. இகந்து படல் - வரம்பு கடந்து உயரமாக விளங்கல், பெருஞ்சினை - பெரிய கிளை. முயங்கல் - தழுவி இன்புறல்.

விளக்கம்: தாழ்ந்துபடு சினைகளின் மலர்களை மகளிர் தம் துழையுடையில் தொடுத்தற்கும், கூந்தலிற் சூடற்கும் கொய்து போயினபோதும், பெருஞ்சினையிலுள்ள பூக்கள் மணம் பரப்பி நிற்கும் துறைக்குரியான் என்கின்றாள். அதன் மணம் இனிது எங்கணும் மகழ்தல் போல, நின் மணவாழ்வும் இனிதாகப் பலரும் வியக்க அமைக என்றதாம். 'காதலோய்' என்றது, தன் அன்புத் தோழியாதலாற் கூறியது; அல்லது, 'தலைவன் மாட்டு ஆராக் காதலுடையாளே! நீ, அவனை இனிது முயங்கி இனி இன்புறுவாயாக!' என்று வாழ்த்தியதுமாம்.

உள்ளுறை: நிலைகடந்த பெருஞ்சினை வீ இனிது கமழும் துறைவன் என்றது, அவனும் நம் தமர் விரும்பிய வெல்லாம் தந்து களிப்பித்து, நின்னை முறையாக வதுவை செய்து கொண்ட வரம்பிலாப் பெருங்காதலன் என்றதாம். முன் செய்யுளின் 'நல்கினன் நாடே' என்பதனோடு சேர்த்துப் பொருள்நயம் காண்க. பெருஞ்சினை வீ இனிது கமழுதல் போலப் பெருங்குடியினனான அவனும் இனிதே நடந்தனன் என்றுதுமாம்.

149. அணங்கு வளர்த்து அகலாதீம்!


துறை: வரைந்து எய்திய தலைமகன், தலைவியோடு பள்ளியிடத்து இருந்துழித் தோழி வாழ்த்தியது.

(து.வி.: வரைந்து மணந்து கொண்டபின், தலைமகனும் தலைமகளும் பள்ளியிடத்து இருந்துவிடத்தே, அவர்களின் களவுக் காலத்துக்கு உறுதுணையாயிருந்த தோழி, தலைவனை வேண்டி வாழ்த்துவதாக அமைந்த செய்யுள் இது.)

எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்குவளர் இளமுலை மடந்தைக்கு
அணங்கு வளர்த் தகறல் வல்லா தீ மோ!


தெளிவுரை: எக்கரிடத்து ஞாழலின் பூவைப்போலச் சுணங்குகள் படர்ந்துள்ள, இளைய முலைகளுடைய மடந்தையான இவளுக்கு, வருத்தத்தை வளரச் செய்து, இவனைப் பிரிதலை ஒருபோதும் மேற்கொள்ளாதிருப்பீராகுக!

கருத்து: 'என்றும் பிரியாது இவளை இன்பமாக வைப்பீராக' என்றதாம்.

சொற்பொருள்: சுணங்கு - அழகுத்தேமல்; ஞாழற்பூவின் அன்ன சுணங்கு என்றதால், இளமஞ்சள் நிறத்துப் பொட்டுப் பொட்டாகப் படர்ந்து அழகு செய்வது என்க. இளமுலை - இளமைக் கவின் கொண்ட முலை. அணங்கு வளர்த்தல் - வருத்தம் வளரச் செய்தல். வல்லாதீமோ - வன்மையுறாதிருப்பீராகுக.

விளக்கம்: 'வல்லாதீமோ' என்றது, அத்தகு வன்கண்மை என்றும் பேணாது ஒழிவீராக என்றதாம். 'சுணங்குவளர்' இளமுலை மடந்தைக்கு அணங்கு வளர்த்தலைச் செய்யாதீராகுக என்று சொல்லும் சொல் நயத்தோடு, மனமுவந்து வாழ்த்தும் மனத்தையும் காண்க. அருமையான திருமண வாழ்த்துக்கள் இவை.

மேற்கோள்: தலைவனைப் பாங்கி வாழ்த்துதலுக்கு எடுத்துக் காட்டுவார் நம்பியுரைகாரர் - (கற்பு - 4).

150. புணர்வின் இன்னான்!


துறை: முன்பொருகால் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பிரிந்துழி, அவனை முயங்காளாக, தோழி, 'நீ இவ்வாறு செய்ததற்குக் காரணம் என்ன?' என்று வினவிய தோழிக்குத் தலைமகன் கேட்பச் சொல்லியது.

(து.வி.: முன்பொருகாலத்துத் தலைவி வருந்துமாறு பிரிந்து சென்ற தலைவன், மீண்டும் வந்து அவளைத் தெளிவித்துக் கூடியின்புற்றிருந்தான். அவளும், அவன் தன் சபலத்தை மறந்தான் என்று மனநிம்மதி பெற்றாள். மீண்டும் அவள் வாடப் பிரிந்து போய்த் திரும்பவும் வந்து அவளை முயங்க விரும்பினான் தலைவன். அவள் அவன் முயக்கிற்கு விரும்பாது ஒதுங்கினாள். 'ஏன் இவ்வாறு செய்தனை?' எனத் தோழி வினவ, அவளுக்குத் தலவி, தலைமகனும் கேட்டுத் தெளியுமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்
புணரி திளைக்கும் துறைவன்
புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே!


தெளிவுரை: எக்கரிடத்தேயுள்ள ஞாழலின் நறியமலர் களையுடைய பெருங்கிளையானது கடல்லைகளைச் சென்று தழுவி இன்புறுகின்ற துறைவன் நம் தலைவன். அவன் நம்மைப் புணரினும், அதனால் இன்பமளித்தலாயமையாது, தொடரும் பிரிவின் நினைவாலே எமக்குத் துன்பந் தருபவனாகவே இருப்பான்; மேலும், எப்போதோ நம்மை அருமையாக வந்து கூடிச் செல்பவன் அவன்; தழுவலை இன்றும் பெறாததால் யாதும் எமக்கு வருத்தமில்லை காண்!

கருத்து: 'அவன் அணைப்பிலே இன்பம் கொள்ளேன்' என்றதாம்.

சொற்பொருள்: புணரி - கடல் அலை. திளைக்கும் - அலையைத் தழுவித் தழுவி மகிழ்ந்தாடும். புணர்வின் - புணர்ச்சிக் காலத்தில், அரும்புணர்வினன் - அருமையாக எப்போதோ வந்து சேர்பவன்.

விளக்கம்: இதனால், அவன் நாட்டமெல்லாம், பரத்தையர் பாலேயாக, அவன் ஊர்ப்பழி கருதியே எம்மையும் நாடி வளருவானேயன்றி, எம்மை முற்றவும் மறந்துவிட்ட அன்பிலாளனே காண் என்றனளாம்.

உள்ளுறை: எக்கர் ஞாழல் நறுமலரப் பெருஞ்சினையானது புணரியால் மோதுண்டு திளைக்கும் துறைவன் என்றது, அவ்வாறே நிலைஆன மனையற வாழ்விலே நில்லாது, பரத்தையரால் தழுவப் பெற்றுத் தன் பெருமையும் பொருளும் சிதைப்பதிலே ஈடுபடும் இயல்பினன் தலைவன் என்றதாம்.

நறுமலர்ப் பெருஞ்சினையை அலைகள் வந்து மோதி மோதிச் செல்வதுபோல, அவனும் நம்பால் நிலையாகத் தங்கி வாழானாய், வந்து வந்து பிரிந்து போகும் வாழ்க்கையன் என்றும் கொள்ளலாம்.

பிறபாடம்: புணர்வின் அன்னான்.

குறிப்பு: இச்செய்யுட்களுள், 48, 49ஆம் செய்யுட்கள் தோழியர் திருமண மக்களை உவந்து வாழ்ந்தும் சிறந்த வாழ்த்தியல் உரைகளாகவும் விளங்குகின்றன. அவை,

'நீ இனிது முயங்குமதி காத லோயோ'


எனத் தலைவியை வாழ்த்துவதும்,

'அணங்கு வளர்த்து அகறல் வல்லா தீமே'


எனத் தலைவனை வாழ்த்துவதும் ஆகும். இவை நல்ல அறவுரைகளும் ஆகும்.

'தலைவனோடு இனிதாகக் கலந்திருந்து வாழ்க' என்பதில், அவனை இன்புறுத்தியும் அதிலே நீயும் இன்புற்றும், அவனைப் புறம்போக நினையாவாறு காத்தும் இனிது வாழ்க' என்னும் கருத்தும் காணப்படும்.

'பிற ஆடவர் போல நயும் இவளைப் பிரிவால் நலியச் செய்து வருத்தமுற வாட்டாதே, என்றும் கூடியிருந்து மகிழ்விப்பாயாக' என்னும் கருத்து, தலைவனை வாழ்த்தும், 'அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமே' என்பதால் புலப்படும்.

அன்புத் தோழியரின் இந்த நெருக்கமான அன்புடைமை இல்லாதபோதும், இன்றும் மணமனையில், 'தோழியர்தாம் மணப்பெண்ணுக்கு உறுதுணையாக நின்று நிகழ்ச்சிகட்கு உதவுகின்றனர். இது இந்தப் பழமையிலேயிருந்து வந்த எச்சமேயெனலாம்.

6. வெள்ளாங் குருகுப் பத்து


வெள்ளாங் குருகின் செய்திகள் வந்துள்ள பத்துச் செய்யுட்களைக் கொண்டமையால், இப்பகுதி இப் பெயரினைப் பெற்றுள்ளது.

'துறைபோது அறுவைத் தூமடியன்ன நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங்குருகு' என, நற்றிணை இக்குருகினை நமக்கு அறிமுகப்படுத்தும். கடற்கரைகளில் மிகுதியாகக் காணப்பெறும் கடற்பறவை வகைகளுள் இவையும் ஒன்று.

''வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை'' என்னும் இரண்டு அடிகளும் பத்துச் செய்யுட்களினும் தொடர்ந்து வருகின்றன.

வெள்ளாங் குருகு என்றது பரத்தையாகவும், பிள்ளை என்றது, அவளோடு தலைமகனுக்கு உளதாகிய ஒழுக்க மாகவும், காணிய சென்ற மடநடை நாரை என்றது வாயில்களாகவும், செத்தென என்றது அவ்வொழுக்கம் இடையிலே நின்றதாக எனவும் பொதுவாகக் கொண்டு-

தலைமகன் ஒரு பரத்தையோடு மேற்கொண்டிருந்த ஒழுக்கமானது இடையிலே நின்றுவிட்டதாக, மீண்டும் அவள் உறவை நாடிய தலைவன் வாயில்கள், அவளிடம் சென்று பேசி, அவளது நெஞ்சம் நெகிழ்த்த தலைவன்பாற் செல்லுமாறு நயமாகச் சொல்லுவதாகவும் உள்ளுறை பொருள் கொள்ளல் வேண்டும்.

இவ்வாறு பழைய உரையாளர் விளக்கி, இதற்கேற்பவே பொருள் கொள்வர். உரைப் பெருகும் பேராசிரியரான சித்தாந்தச் செம்மல் ஔவை துரைசாமிப் பிள்ளையவர்களோ, 'செத்தென' என்பதற்குப் 'போலும்' என்று பொருள்கொள்வர்.

'வெள்ளாங்குருகின் பிள்ளையைத் தன் பிள்ளையென்று கருதியதாய்க் காணச் சென்ற மட நடை நாரை' என்பது அவர்கள் கொண்டது. இதற்கேற்பவே அவர்கள் விரிவான பொருளையும் இயைபுபடுத்திக் கூறுவார்கள்.

'வெள்ளாங்குருகின் பிள்ளையே போலும் என்று காணச் சென்ற மடநட நாரை' என்று நேராகவே பொருள் கண்டு இத்தெளிவுரையானது செல்கின்றது.

தலைவன் ஊர்த்தலைவன் என்னும் பெருநிலையினன் ஆதலின், அவன் உறவாலே அடையும் பயன்களை நாடும் பரத்தையர், அவனை எவ்வாறு தமக்கு வசமாக்க முயல்கின்றனர். அவன் கலையார்வம் மிகுந்தவனாதலின், பாணன் ஒருவனும் அவனோடு பழகி வருகின்றான். அவன் பரத்தையர் குடியிற் பிறந்தவனே. அவனும், தலைவனின் பரத்தமை உறவாலே தானும் பயனடையலாம் என்று நினைத்து வருகின்றவனே!

ஊர் விழாக்களிலும், கடலாடு விழாக்களிலும் பரத்தையர்கள் ஆடியும் பாடியும் மக்களை மகிழ்விப்பர். ஊர்த்தலைவன் என்ற முறையில், தலைவனும் அவ்விழாக்களில் அவர்களோடு கலந்து கொள்வான். அவ்வேளையிலே இளையாள் ஒருத்தியைச் சுட்டிக்காட்டி,அ வள் தன் உறவினள் எனவும், தலைவனை அடைவதையே நாடி நோற்பவள் எனவும் அறிமுகப்படுத்துகின்றான் பாணன்.

பின்னொரு சமயம், தலைவனின் இன்ப நுகர்ச்சியார்வம் அடங்காமல் மேலெழவும், அவன் மனம் பரத்தையர் உறவை நாடுகின்றது. அவ்வேளை பாணன் காட்டிய பெண்ணின் நினைவும் மேலெழுகின்றது. அவனைப் பாணன் உதவியோடு காணச் செல்லுகின்றான். சேரிப்பெண்டிர் பலர் அவனைக் கவர்கின்றனர். ஒருவரை மாற்றி ஒருவர் என்ற நிலையில் அவன் தாவிக் கொண்டிருக்கின்றான்.

இந்நிலையில், முன் நுகர்ந்து கைவிட்ட ஒருத்தியின் நினைவு ஒரு நாள் மிகுதியாக, அவளிடம் வாயில்களை அனுப்புகின்றான். இவன் செயல் ஊரே பழிப்பதாகின்றது.

மீண்டும் தலைவியை நாடுகின்ற மனமும் ஏற்படுகின்றது. அவளும் அவள் தோழியும், அவன் உறவை ஏற்க மறுத்து வெறுத்து உரைப்பதாக அமைந்த செய்யுட்கள் இவை எனலாம்.

151. நெக்க நெஞ்சம் நேர்கல்லேன்


துறை: வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் வாயில் மறுப்பாள் சொல்லியது.

(து.வி.: தலைவனை ஏற்றுக்கொள்வாய் என்று தன்னை வந்து வேண்டிய தன் தோழிக்குத், தலைவியானவள் அதற்கு இசைய மறுப்பாளாகச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
மிதிப்ப, நக்க கண்போல் நெய்தல்
கட்கமழ்ந் தானாத் துறைவற்கு
நெக்க நெஞ்சம் நேர்கல் லேனே!


தெளிவுரை: வெள்ளாங் குருகின் பிள்ளையே போலும் என்று காணச் சென்ற மடநடையினையுடைய நாரையானது மிதிப்பவும், அதன் மடச்செயலைக் கண்டு நகைப்பதுபோல மலர்ந்த கண் போன்ற நெய்தலின் தேன்மணம் இடைவிடாதே கமழும் துறைவனுக்கு, நெகிழ்ந்து நெகிழ்ந்து வலியிழந்து போன நெஞ்சத்தினையுடையளான நான், அவரை ஏற்றலாகிய அதற்கு இனியும் இசையேன்!

கருத்து: 'அவரை இனியும் ஏற்பதில்லேன்' என்பதாம்.

சொற்பொருள்: மடநடை - மடமையோடு கூடிய நடை; கால் மடங்கி நடக்கும் நடையும் ஆகும். நக்க - நகையாடிய, கள் - தேன். நெக்க - நெகிழ்ந்து சிதைந்த. நேர்கல்லேன் - இசையேன். பிள்ளை - பறவைக்குஞ்சின் பெயர். நாரை - நீர்ப் பறவை வகை; நாரம் (நீர்) வாழ் பறவை நாரையாயிற்று; நாரணன் என வருவதும் காண்க.

விளக்கம்: செத்தென - போலும் என்று; செத்ததென்று எனலும் பொருந்தும். அப்போது, மரத்திலே உடன்வாழ் உறவு நெருக்கத்தால் சாவு விசாரிக்கச் சென்றதென்று கொள்க. மடநடை - நடைவகையுள் ஒன்று; கடுநடை தளர்நடை போல்வது; இது கால் மடங்கி நடக்கும் நடை. நக்க - நகைத்த; இது நெய்தல் இதழ்விரிந்து மலர்ந்திருத்தலைச் சுட்டியது; அது மலர்தல், நாரையின் செயல்கண்டு நகைப்பது போலும் என்க. கள் - தேன்; தேனே பண்டு கள்ளின் மூலப்பொருளாயிருந்தது.

'நெக்க நெஞ்சம் நேர் கல்லேன்' என்பதற்கு, 'நெகிழ்ந்து வலியற்றுப் போயின நெஞ்சினளான யான், இனியும் அவனை விரும்பி ஏற்கும் ஆர்வநிலையினள் அல்லேன்' என்பதாகக் கொள்க.

உள்ளுறை: வெள்ளாங்குருகின் பிள்ளைபோலும் என்று அருளோடும் காணச்சென்ற நாரையின் மடச் செயலைக் குறித்தும் கண்போல் நெய்தல் நகையாடி மலர்ந்தாற்போல, இன்னார் உறவல்லோ என்னும் அருளாற் சென்ற தலைவன், அப்பரத்தைபால் மயங்கி நடந்துகொண்ட நிகழ்ச்சியைக் குறித்து ஊர்ப்பெண்டிர் நகையாடினார் என்பதும், மலர்ந்த நெய்தலின் தேன்மணம் துறையிடமெங்கும் கமழ்தலே போல, அவர் கூறும் பழிச் சொற்களும் ஊர் எங்கும் பரவி நிறைந்தன என்பதும் உள்ளுறுத்துக்கூறி, அதனால் தலைவனைத் தான் ஏற்க மறுப்பதாகத் தலைவி கூறினதாகக் கொள்க.

மேற்கோள்: வாயில் வேண்டிய தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது; திணை மயக்குறுதலுள் இப்பத்தும், நெய்தற்கண் மருதம் என்பர் நச்சினார்க்கினியர் - (தொல். அகத், 12).

152. அறவன் போலும்


துறை: தலைமகள் வாயில் மறுத்துழி, 'இவன் நின்மேல் தொடர்ச்சியில் குறைவிலன்; அருளும் உடையன்; ஆதலால், நீ இவனோடு புலத்தல் தகாது' என நெருங்கி வாயில் நேர்விக்கும் தோழிக்கு, அவள் சொல்லியது.

(து.வி.: பரத்தையாளனான தலைவனின் பொருட்டாக வந்த வாயில்களிடம் தலைவி இசைவுமறுத்துப் போக்கி விடுகின்றனள். அது கண்ட தோழி, அவன் பிழையாதாயினும், அவன் நின்பால் அன்பும் உடையவன்; நின் உறவையும் விடாதே தொடர்பவன்; ஆகவே ஒதுக்காது ஏற்றின்புறுத்தலே தக்கது என்கின்றாள். அவளுக்குத் தலைவி சொல்லும் விடையாக அமைந்த செய்யுள் இது.)

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கையறுபு இரற்று கானலம் புலம்பந்
துறைவன் வரையும் என்ப;
அறவன் போலும்; அருளுமார் அதுவே!


தெளிவுரை: வெள்ளாங்குருகின் பிள்ளை போலும் என்று காணச் சென்ற மடநடையினையுடைய நாரையானது, அது அதன் பிள்ளையில்லாமை நோக்கிச் செயலற்று ஒலித்தபடி இருக்கும் கானலைச் சேர்ந்த கடற்றுறை நாட்டின் தலைவன், அவனையும் போய் வரைந்து கொள்வான் என்பார்கள் அவன் என்றாப் கொண்டுள்ள அருளுடைமையும் அச்செயலே! அவன் துணையற்ற பரத்தையர்க்குத் துணையாகி உதவும் அறவாளன் போலும்!

கருத்து: 'அன்பும் அறமும் மறந்தானுக்கு அகம் கொள்ளேன்' என்றதாம்.

சொற்பொருள்: கையறுபு இரற்று - செயலற்றுத் துயரக் கூப்பீடு செய்யும் இரற்று கானலம் புலம்பு - அவ்வொலி கேட்டபடியே இருக்கும் கான்றஃசோலையைக் கண்ட கடற்கரை நிலப்பாங்கு புலம்பு கடல் நிலம். அறவன் - அறநெறி பேணுவோன்; அருள் - அனைத்துயிர்க்கும் இரங்கி உதவும் மன நெகிழ்ச்சி.

விளக்கம்: குருகின் பிள்ளைபோலும் எனக் கருதிக் காணச் சென்ற நாரையானது, அவ்விடத்தே துயருற்று அரற்றும் குரலொலி கேட்டபடியே இருக்கும் கானற்சோலை என்க. 'வரையும்' என்ப என்றது. தான் விரும்பிய பரத்தையை வரைந்து இற்பரத்தையாக்கிக் கொள்ளப் போகின்றான் எனப் பிறர் கூறிய செய்தியாகும். அவனோ அறவன், அவன் அருளும் அதுவே அன்றோ? எனவே, அவனை இனி யான் விரும்பேன் என்கின்றனள்.

உள்ளுறை: தான்றிந்தாளின் உறவல்லளோவென்று அருளோடு காணச் சென்ற தலைவன், அவள் மையலிலே சிக்கி மீளவகையின்றி அரற்ற, அக்குரல் ஊரெல்லாம் ஒலிக்கும் அலராயிற்று என்று உள்ளுறுத்துக் கூறுவாள், 'காணிய சென்ற மடநடைநாரை கையறுபு இரற்று கானல் அம் புலம்பு அந்துறைவன்' என்கின்றனள்.

மேலும் அவன், அவளை வரைந்து உரிமையாக்கிக் கொள்ளப் போவதையும் சொல்லி, அவன் தன்பால் அருளற்றவனானதையும், கொண்ட மனையாளை நலிவிக்கும் அறமிலாளன் ஆயினமையும் சொல்லித், தான் அவனை ஏற்க விரும்பாத மனநிலையையும் விளக்குகின்றாள் தலைவி என்று கொள்க.

153. நாடுமோ மற்றே!


துறை: பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிய தலைமகன் கேட்குமாற்றல், வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி கூறியது. வாடி இருக்கின்றான் தலைவன். அவன் அவளைச் சினந்தணிவித்துத் தன்னை ஏற்குமாறு விட்ட வாயில்களையும் மறுத்துப் போக்கினாள். தன் குறையுணர்ந்த தலைவன். அவற் விருப்பம் மேலெழ, தன் வாயிலோரை முன்போக இல்லததுள் போக்கித், தான் அங்கு நிகழ்வதை அறியும் விருப்போடு புறத்தே ஒதுங்கி நிற்கின்றான். வாயிலோரை எதிர்வந்து தடுத்த தோழி, அத் தலைவனும் கேட்டு உணருமாறு சொல்வதாக அமைந்த செய்யுத் இது.)

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
கணிய சென்ற மடநடை நாரை
உளர வொழிந்த தூவி குவவுமணற்
போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை
நன்னெடுங் கூந்தல் நாடுமோ மன்றே!


தெளிவுரை: வெள்ளாங் குருகின் பிள்ளையோ எனக் காணச் சென்ற மடநடை நாரையானது, அங்கே அதனைக் காணாத துயரத்தாலே கோதிக் கழித்து தூவிகள் , உயர்ந்த மணல் மேட்டிடத்தே நெற்போர்போலக் குவிந்திருக்கும் கடற்றுறைக்கு உரியவனான தலைவனின் கேண்மையினை, நல்லநெடிய கூந்தலை உடையவளான தலைவி தான், இனியும் நாடுவாளோ?

கருத்து: 'அவள் நாடாள் ஆதலின், நாடுவார்பாலே செல்லச் செல்லுக' என்பதாம்.

சொற்பொருள்: உளர - கோத; ஒழிந்த - கழித்து வீழ்ந்த, குவவு மணல் - காற்றால் குவிக்கப் பெற்று உயர்ந்த மணல்மேடு. போர்வில் பெறூஉம் - நெற்போர் போலக் குவிந்து கிடக்கும். நன்னெடுங் கூந்தல்; தலைவியைச் சுட்டியது. நாடுமோ - விரும்புமோ?

விளக்கம்: வெள்ளாங் குருகின் குஞ்சோவெனக் காணச் சென்ற நாரை தன் இறகைக் கோதிக் கழிக்க. அதுதான் போர் போல மணல் மேட்டிற் குவிந்து கிடக்கும் என்பது, அதன் துயர் மிகுதி கூறியதாம். கேண்மை - கேளாம் தன்மை; உறவாகும் உரிமை.

உள்ளுறை: 'நாரை உளர வொழிந்த தூவி போர்வில் பெறூஉம் துறைவன்' என்றது, பரத்தைபால் அருளோடு சென்ற தலைவன், அவள் மையலிலே சிக்கி வாரியிறைத்த பொன்னும் பொருளும் அளவில என்பதாம்.

குறிப்பு: 'நாணுமோ மற்றே' எனவும் பாடம்.

154. இவ்வூரே பொய்க்கும்!


துறை: தோழி வாயில்வேண்டி நெருங்கிய வழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது.

(து.வி.: பரத்தையிற் பிரிந்து வந்தானை, நின்பால் வரவிடுக என்று தலைவியிடம் சொல்லுகின்றாள் தோழி. 'அவனை வரவிடேன்' என்று மறுக்கும் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானற் சேக்கும் துறைவனோடு
யானஎவன் செய்கோ? பொய்கும் இவ்ஊரே?


தெளிவுரை: 'வெள்ளாங் குருகின் பிள்ளையோ' எனக் கருதிக் காணச் சென்ற மடநடை நாரையானது, கானலிடத்தே தங்கியிருக்கும் துறைவனோடு, யான் என்னதான் செய்வேனோ? இவ்ஊரும் அவனைக் குறித்துப் பொய்த்துப் பேசுகின்றதே!

கருத்து: 'அவன்பால் எவ்வாறு மனம் பொருந்துவேன்' என்றதாம்.

சொற்பொருள்: கானல் - கானற் சோலை. சேக்கும் - தங்கும். பொய்க்கும் - பொய்யாகப் பலவும் கூறும்.

விளக்கம்: 'யான் எவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே' என்றது, இவ்வூரனைத்தும் கூடிப் பொய் சொல்லுமோ? அதனை நம்பி நோவாதே யானும் யாது செய்வேனோ? அத்தகையானிடத்தே என் மனமும் இனிச் செல்லுமோ? என்பதாம்.

உள்ளுறை: வெள்ளாங் குருகின் பிள்ளையோவெனக் காணச் சென்ற மடநடை நாரையானது கானலிடத்தேயே தங்கிவிட்டாற் போல், தானறிந்தாள் ஒருத்தியின் மகளோ வென்று கருதிச் சென்ற தலைவன், அச்சேரியிடத்தேயே மயங்கிக் கிடப்பானாயினான் என்று உள்ளுறுத்துக் கூறுகின்றனள். இதனால், அவன் நம் மீது அன்பாற்றான் என்கின்றனள்; உறவும் பழமை என்கின்றனள்.

155. பாவை ஈன்றெனன்!


துறை: பலவழியாலும் வாயில்நேராளாகிய தலைமகள், 'மகப்பேற்றிற்கு உரித்தாகிய காலம் கழிய ஒழுகுகின்றாய்' என நெருங்கிய தோழிக்குச் சொல்லியது.

(து.வி.: தோழியும் பலவாறு சொல்லிப் பார்க்கின்றாள். தலைவியோ தன் மனம் இசையாதேயே இருக்கின்றாள். முடிவாக 'மகப்பேற்றிற்கு உரிய காலம் கழிந்து போகும் படியாக, நீதான் பிடிவாதமாக நடக்கின்றாயே' என்று, அவளது மனையறக் கடனைச் சுட்டிக்காட்டித் தலைவனுக்கு இசையுமாறு வேண்டுகின்றாள். அவளுக்குத் தலைவி சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.)

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடு பெயரும் துறைவற்குப்
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யான!


தெளிவுரை: வெள்ளாங் குருகின் பிள்ளை போலுமெனப் பார்க்கச் சென்ற மடநடை நாரையானது, சிறகடித்தபடியே அங்குமிங்கும் அசைதலினாலே, நெருங்கிய நெய்தல்கள் கழியிடத்தே மோதிச் செல்லும் அலைகளோடே சேர்ந்து போகும் துறைவனுக்கு, யான் பைஞ்சாய்ப் பாவையினைப் பெற்றுள்ளேனே!

கருத்து: 'அதுவே எனக்கு இப்போதும் போதும்' என்றதாகும்.

சொற்பொருள்: பதைப்ப - அசைய. ததைந்த - நெருங்கிய. ஓதம் - கடல் அலை. பைஞ்சாய்ப் பாவை - சிறுமியாயிருந்த போது வைத்தாடிய கோரைப் பாவை.

விளக்கம்: 'தலைவனை ஏற்றுக் கொள்வது பற்றியே மீண்டும் மீண்டும் சொல்லுகின்றாயே; அவன் நம்மேல் சற்றும் அருள் அற்றவன்; பரத்தையர்பால் அன்புகாட்டுபவன்; பழிக்கஞ்சி இங்கு வரும்போதும், வாயில்கள் வந்து பரத்தை வாடி நலிவதாகக் கூறவும், அப்படியே அவர் பின்னாற்போய் விட்டவன்' என்று கூறித் தலைவி மறுத்து உரைக்கின்றாள் என்று கொள்க. மகப்பேற்றுக்கு உரிய காலமாயினும், உரிமையுடையவளும் யானே என்பது அறிந்தானாயினும், அவன் என்னை அறவே மறந்து பரத்தையர் சேரியிடத்தேயே வாழ்பவனாயினானே! இனி, நாம் முன் சிறுபோதிலே வைத்தாடிய பஞ்சாய்ப் பாவையினைப் பிள்ளையாகக் கொள்ள வேண்டியது தான்போலும் என்று வாழ்வே கசந்தவளாகத் தலைவி கூறுகின்றாள்.

உள்ளுறை: 'நாரை பதைப்பத் தகைந்த நெய்தல், கழிய ஓதமொடும் பெயரும் தறைவன்' என்றது, பெரியோர் இடித்துக் கூறுதலாலே எம்மை நோக்கி வருகின்றானான தலைவன், வாயில்கள் வந்து பரத்தையின் வருத்தம் பற்றிக் கூறவும், அவள்மேற்கொண்ட மருளால், அவர் பின்னேயே போவானாயினான் என்பதாம்.

156. எனக்கோ காதலன்!


துறை: பரத்தையிடத்து வாயில்விட்டு ஒழுகுகின்ற தலைமகனது, வாயிலாய் வர்த்தார்க்குத் தோழி வாயில் மறுத்தது.

(து.வி.: ஊடியிருந்தாளான பரத்தையிடம் தூதுவிட்டு, போயினவர் சாதகமான பதிலோடு வராமையாலே வருந்தி, தன் மனைவியிடமாவது செல்லலாம் என்று வீட்டிற்குத் தன் வாயில்களைத் தாதனுப்புகின்றான். அவர்களுக்குத் தலைவியின் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி
தெண்கழிப் பரக்கும் துறைவன்
எனக்கோ காதலன்; அனைக்கோ வேறே!


தெளிவுரை: வெள்ளாங்குருகின் பிள்ளை போலுமென்று காணச் சென்ற மடநடை நாரை, தன் இறகுகளைக் கோதுதலாலே கழித்த செவ்விய புள்ளிகளையுடைய தூவிகள் தெளிந்த கழியின் கண்ணே பரக்கும் துறைவன், என்னளவிலே தலைவிபால் காதலனாகவே தோன்றுகின்றான்; ஆனால், தலைவிக்கோ வேறாகத் தோன்றுகின்றனனே! அதற்கு யான் யாது செய்வேன்?

கருத்து: 'அவள் அவனைத் தானும் வெறுத்தனள்' என்றதாம்.

சொற்பொருள்: 'அன்னை' என்றது தலைமகளை; அவளின் மனைமாண்புச் செவ்வியறிந்து போற்றிக் கூறியதாகும். 'பதைப்ப' என்றது, தன் குஞ்சாகாமை நோக்கிப் பதைப்புற்று என்றதும் ஆம். மறு - புள்ளிகள்.

'எனக்கோ காதலன் அனைக்கோ வேறே' என்றது, எனக்கு அவன் தலைவிபால் அன்புடையவன் என்பது கருத்தேயானாலும், அன்னையான தலைவியின் மீதோ அன்பு மறந்து கொடுமை செய்தவனாயிற்றே' என்பதாம். இதனால் அவள் ஏற்க இசையாள் என்று மறுத்துப் போக்கினள்.

உள்ளுறை: 'நாரை பதைப்ப வொழிந்த செம்மறுத் தூவி தெண்கழிப் பரக்கும்' என்றது, தலைவன் உறவாடிக் கழிக்க வாடிவருந்தும் பரத்தையரின் துயரமும் வருத்தமும் ஊரெல்லாம் பரவி அலராயிற்று என்பதாம்.

மேற்கோள்: பல்லாற்றானும் வாயில் நேராத தலைவியை மகப்பேற்றிற்கு உரிய காலம் கழிய ஒழுகா நின்றாய் என நெருங்கிய தோழிக்கு, 'யான் களவின்கண் மகப்பெற்றேன்' எனக் காய்ந்து கூறியது இது வென்பர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு,6).

157. என் காதலோன் வந்தனன்!


துறை: பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டி ஒழுஙுகுகின்ற தலைமகள், புதல்வன் வாயிலாக வரும் எனக் கேட்டு அஞ்சிய தலைமகள், புதல்வன் விளையாடித் தனித்து வந்துழிச் சொல்லியது.

(து.வி.: பரத்தையிற் பிரிந்துபோன தலைவன் மீண்டும் தலைவியை மனந்தெளிவித்து அடைய விரும்பிப் பலரைத் தூதனுப்பி முயன்றும், அவள் தன் உறுதி தளராதிருக்கின்றாள். அப்போது, தெருவிலே விளையாடியிருக்கும் புதல்வனைத் தூக்கியபடி அவன் வருவான் என்று கேட்டு, அப்படி வரும் அவனை வெறுத்துப் போக்க முடியாதே என அஞ்சுகிறாள். அவ்வேளையிற் புதல்வன் மட்டுமே விளையாடிவிட்டுத் தனியே வரக்கண்டவள், நிம்மதி பெற்றுச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
காலை யிருந்து மாலை சேக்கும்
தெண்கடற் சேர்ப்பனொடு வாரான்
தான்வந் தனனெங் காத லோனே!


தெளிவுரை: வெள்ளாங்குருகின் பிள்ளையோ என்று காணச் சென்ற மடநடை நாரையானது, காலையிலேயிருந்து மாலை வரை அக்கான்றஃ சோலையிலேயே தங்கும் குளிர்ந்த கடற்சேர்ப்பான தலைவனோடும் சேர்ந்து, எம். காதன் மகன் வரவில்லை; அவன் மட்டுமே தான் தனியாக வந்தனன்!

கருத்து: 'ஒரு இக்கட்டிலே இருந்து விடுபட்டேன்' என்றதாம்.

சொற்பொருள்: சேக்கும் - தங்கும். 'காதலோன்' என்றது புதல்வனை. 'சேர்ப்பன்' என்றது தலைவனை. 'காலையிலிருந்து மாலை' என்றது, எப்போதும் என்னும் குறிப்பினதாம்.

விளக்கம்: புதல்வனை எடுத்துக்கொண்டு தலைவன் வீட்டினுள் வந்தால், தலைவியால் அவனைச் சினந்து பேசி ஒதுக்க முடியாதென்பதும், புதல்வன் தகப்பனிடம் விளையாடிக் களிப்பதைத் தடுக்க இயலாது என்பதும், சூழ்நிலையுணராத புதல்வன் இருவரிடமும் கலந்து விளையாடி மகிழத் தொடங்கின் அதனால் தானும் தலைவனுடன் நகைமுகம் காட்டிப்பேச நேரும் என்பதும் கருதி, தலைவி இவ்வாறு கூறி, மனநிம்மதி பெற்றனள் என்று கொள்க.

உள்ளுறை: காலையிலே சென்ற நாரையானது, மாலை வந்தும் கூட்டுக்குத் திரும்ப நினையாது தன் மடமையால் கழிக்கரை மரத்திலேயே தங்கிவிடும் தெண்கடற் சேர்ப்பன் அவன் ஆதலால், அவனும் நிலையாகப் பரத்தையர் இல்லிலேயே தங்கியிருப்பவனாகிவிட்டான் என்று உள்ளுறை பொருள் தோன்றக் கூறுகின்றாள்.

பரத்தையிடத்தே இவன் காலையில் போகவிட்ட வாயில்கள், அவள் இசைவினை மாலைவரையும் பெறாதே வருந்தி, இரவிலும் இசைவுவேண்டி அங்கேயே துயல்வாராயினர் என்றதாகவும் கொள்க.

மேற்கோள்: வாயில்வேண்டி ஒழுகுகின்றான், புதல்வன் வாயிலாக வரும் எனக் கேட்டு அஞ்சிய தலைவி, அவன் விளையாடித் தனித்து வந்துழிக் கூறியது இது என்பர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு, 6).

158. எம் தோழி துயரைக் காண்பாயாக!


துறை: பரத்தை புலந்துழிப் புலவி நீக்குவானாய், அஃது இடமாக வந்தமை அறிந்த தோழி, தலைமகற்கு வயில் மறுத்தது.

(து.வி.: பரத்தை புலந்த போதிலே, தான் தன் மனைக்குப் போவது போலக் காட்டினால், அவள் புலவி தீர்வாள் என்று நினைத்து வந்தான் தலைவன். அவன் வந்த குறிப்பறிந்த தோழி, வாயில் மறுப்பாளாகக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.)

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்
தண்ணந் துறைவன் கண்டிகும்
அம்மா மேனியெந் தோழியது துயரே!


தெளிவுரை: வெள்ளாங் குருகின் பிள்ளை போலுமென்று காணச் சென்ற மடநடை நாரையானது, அதை மறந்து, கானலின் பெருந்துறையிடத்தே தன் துணையோடு திரியும் குளிர்ந்த கடற்றுறைத் தலைவன், அழகிய மாமைநிறங் கொண்ட மேனியளான எம் தோழியது துயரத்தைத் தீர்க்கும் பொருட்டு வந்துள்ளதைக் கண்டனமே! இஃது என்னே வியப்பு!

கருத்து: 'நின் பரத்தை இல்லிற்கே சென்று, அவள் புலவியை நீக்கி இன்புற்றிருப்பாயாக' என்றதாம்.

சொற்பொருள்: கண்டிகும் - கண்டோம். அம் மாமேனி - அழகிய மாமை நிறம் அமைந்த மேனி. கொட்டும் - திரியும்.

விளக்கம்: வெள்ளாங் குருகின் பிள்ளையோ என்று போன நாரை, அதை மறந்து துணையோடு திரியும் கானலம் துறைவன் என்றனள், அவன் புதல்வனிடத்தும் அன்புற்றவனாகிப் பரத்தை மயக்கிலேயே திரிவானாயினன் என்றற்கு துறைவன் கண்டிகும் என்பது எள்ளி நகையாடிக் கூறியதாம். அம்மாமேனி எம் தோழியது துயருக்கே காரணமாயின இவன், அது தீர்க்கும் உணர்வோடு வாரானாய்த், தன் பரத்தையின் புலவி தீர்க்கக் கருதி இல்லந்திருப்புவான் போல வருகின்றான் என்று, தான் அறிந்ததை உட்கொண்டு கூறியதாம்.

'கண்டிகும் அம் மாமேனி எம்தோழியது துயரே' என்றது. நின் பரத்தையின் பிரிவுத் துயரையும் யான் கண்டேன். ஆதலின், நீதான் அவள் பாற் சென்று அவள் புலவி தீர்த்து இன்புறுத்துவாயாக என்று மறுத்துப் போக்கியதுமாம்.

உள்ளுறை: பிள்ளை காணச் சென்ற நாரை, அதனை மறந்து தன் துணையொடு சுற்றித் திரியும் கானலம் பெருந்துறைத் துறைவன் என்றது, அவனும், தன் புதல்வனைக் காணும் ஆர்வத்தனாகக் காட்டியபடி இல்லம் வந்து, தலைவியுடன் இன்புற்றிருத்தலை நாடியவனாயுள்ளான் என்றதாம்.

மேற்கோள்: தண்ணம் துறைவன் என்பது விரிக்கும் வழி விரித்தல் எனக் காட்டுவர் இளம்பூரணரும் சேனாவரையரும் - (தொல். எச்ச, 7).

159. நலன் தந்து போவாய்!


துறை: மறாமற் பொருட்டு, உண்டிக் காலத்தே வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி கூறியது.

(து.வி.: உணவு நேரத்திற்கு வீடு சென்றால், தலைவி தன்னை மறுத்துப் போகுமாறு சொல்லமாட்டாள் என்று, அவள் குடும்பப்பாங்கினை நின்கறிந்த தலைவன், அந்த நேரமாக வீட்டிற்கு வருகின்றான். அப்படி வந்தவனைத் தோழி கண்டு உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.)

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பசிதின அலகும் பனிநீர்ச் சேர்ப்ப!
நின்னொன்று இரக்குவென் அல்லேன்;
தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே!


தெளிவுரை: வெள்ளாங்குருகின் பிள்ளைபோலுமெனக் கருதிக் காணச் சென்ற மடநடை நாரையானது, பசியானது வருத்த வருந்தியபடி இருக்கும் குளிர்ந்த நீர் வளமுடைய சேர்ப்பனே! நின்னிடைத்தே யான் யாதொன்றும் தருகவென இருக்கின்றேன் அல்லேன். நீதான் கவர்ந்து போயினையே இவளுடைய அழகு, அதனை மட்டுமேனும் மீண்டும் இவளுக்குத் தந்துவிட்டுச் செல்வாயாக!

கருத்து: ''நின் கொடுமையால் இவள் நலினழந்தாள்'' என்றதாம்.

சொற்பொருள்: பசிதின - பசி பெரிதும் வருத்த. பனிநீர் - குளிர்ச்சியான நீர். அல்கும் - தங்கியிருக்கும்.

விளக்கம்: 'உன்னிடம் யாதும் இரக்கவில்லை அன்பனே! இவளிடமிருந்து பறித்துப் போயின நலத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போவாய்' என்கிறாள் தோழி. 'வஞ்சியன்ன என் நலம் தந்து சென்மே' என அகநானுற்றும் இப்படிக் கூறுவதாக வரும் - (அகம், 376) கலி 128-இலும் இவ்வாறு சொல்வதாக வரும் நின்பால் நினக்குரியதான் ஒன்றை இரப்பின் நீ தரலாம், தராது மறுக்கலாம்; ஆயினும், எம்மிடமிருந்து கவர்ந்து போயினதைத் தந்துவிட்டுப் போவதுதான் நின் ஆண்மைக்கு அழகு என்பதும் புலப்பட வைக்கின்றனள்.

உண்டி காலத்துத் தலைவி மறாமைப் பொருட்டு விருந்தோடு கூடியவனாகத் தலைவன் தன் வீட்டிற்கு வந்தான் என்று கொள்ளலும் பொருந்தும். விருந்தாற்றற் கடமையும், அவர்முன் தலைவனிடம் சினத்து கொள்ளாத அடக்கமும் தலைவியின் பண்பாதலை அறிந்தவன், அவள் சினத்தைத் தணிவிக்க இவ்வாறு வந்தனன் என்க.

உள்ளுறை: 'நாரை பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப' என்றது, பரத்தை நாட்டமேயுடைய நீயும், மிக்க பசி எழுந்தமையாலே வீட்டுப் பக்கம் உணவுக்காக வந்தனை போலும் என்று உள்ளுறுத்துக் கூறியதாம். நின் வயிற்றுப் பசிக்கு உணவு நாடி வந்தாயன்றி, நீ கவர்ந்து சென்ற தலைவியின் அழகை மீட்டும் தருதற்குரிய அருளோடு வந்தாயல்லை என்று வாயில் மறுத்ததும் ஆம்.

160. முயங்குமதி பெரும!


துறை: புலந்த காதற்பரத்தை, புலவி தீராது தலைமகன் வாயில் வேண்டி வந்தான் என்றது அறிந்த தலைமகள் வாயில் மறுத்தது.

(து.வி.: காதற்பரத்தையானவள், புலந்து தலைவனை ஒதுக்கியிருந்தாள். அவன் அவளைத் தனக்கு இசைவிக்கச் செய்தவனான முயற்சிகள் ப லனளிக்காது போகவே, அவன், தான் தன் மனைவியிடம் போயினால், அவள் தன்னை முற்றவும் மறப்பானோ என்று அஞ்சித் தனக்கு இசைவாள் என்று கருதினான். ஆகவே, மனைவியை நாடியும் வீட்டிற்கு வருகின்றான். அவன் குறிப்பறிந்த தலைமகள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
நொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவ!
பண்டையின் மிகப்பெரிது இனைஇ
முயங்குமதி பெரும! மயங்கினள் பெரிதே!


தெளிவுரை: வெள்ளாங்குருகின் பிள்ளை போலுமென்று நினைத்துக் காணச்சென்ற மடநடை நாரையானது, நொந்து வருந்தியதன் மேலும் மிகுதியாகவும் வருந்தும் துறைக்கு உரியவனே! நின் காதற்பரத்தை நீதான் இங்கே வருவதறிந்து பெரிதும் வருந்தி மயங்கினள். ஆதலின், அவன்பாற் சென்று முன்னையினும் மிகப் பெரிது அன்புகாட்டி, அவளைத் தழுவி இன்புறுத்துவாயாக!

கருத்து: 'நின் காதற் பரத்தையையே சென்று இன்புறுத்துக' என்றதாம். சொற்பொருள்: இனைஇ - வருந்தி, முயங்குமதி - தழுவுவாயாக.

விளக்கம்: முன்னும் அவள் ஊடுதலும், நீ அது தீர்த்துக் கூடுதலும் உண்டே! இப்போது அவள் முன்னிலும் மிகப் பெரிதாக வருந்தினள், பெரிதும் மயங்கவும் செய்தனள்.

ஆகவே, அவளைத் தெளிவித்துப் பண்டையினும் பெரிதாக அன்புகாட்டி மகிழ்விப்பாயாக! என்று தலைவி கூறுகின்றனள். அவன் தன்பால் வருதலையே உள்ளம் நாடினும், அவன் பரத்தைமையால் மனம் வெதும்பிக் கூறியது இது.

உள்ளுறை: நாரை நொந்ததன் தலையும் நோய் மிகும் என்றது, நினக்கு வாயிலாகச் சென்றவர்கள், அவள் வருத்தங்கண்டு தாமும் வருந்தி நலிந்தாராய், அவள் பாலே அவளைத் தேற்றுவாராய்த் தங்கி விட்டனர். என்றதாம் இது, வாயிலாக சென்றவரும் அவள் ஊடலின் துயரம் நியாயமானதென்று கொண்டு மேலும் வருந்துவாராயினர் என்பதாம்.

நாரையும் குருகும் கடற்புட்களாயினும், இனத்தால் வேறானவை எனினும், உடன்வாழ் உறவினைக் கருதி அன்பு காட்டல்மேற் சென்றது நாரை. எனினும் அது சென்ற அவ்விடத்தே, தன் பழைய உள்ளக்கசிவை விட்டு, வேறுவேறு நிலைகளில் இயங்கலாயிற்று.

இவ்வாறே ஊர்த் தலைவனும் உயர்குடியினனுமாகிய தலைவன், பரத்தையர் மாட்டும் தன் ஊரவர் என்று விழவிற்கலந்து களித்தாடற் பொருட்டுச் சென்றவன், அதனை மறந்து, அவர்பாலே இன்பந்துய்ப்பானாகவும், அவர்க்கு வாரிவழங்கி மனையை மறந்தானாகவும் ஆயினன் என்க. அன்றி, இவ்வாறு கற்பித்து ஊடியதாகவும் நினைக்க.

© Om Namasivaya. All Rights Reserved.