Books / எட்டுத் தொகை நூல்கள்


ஐங்குறு நூறு

6. தோழி கூற்றுப் பத்து
தோழி செல்லும் சொற்களேயாக அமைந்த செய்யுட்கள் பத்துக் கொண்ட பகுதியாதலால், இது 'தோழி கூற்றுப் பத்து' என்றாயிற்று.

தோழியாவாள் தலைவியோடு கூடவே வளர்ந்தவள்; செவிலித்தாயின் மகளுமாவாள் எனவும், அன்பும் அறிவாற்றலும் உலகியல் தெளிவும் உள்ளத் துணிவும் பெற்றவள் எனவும், எப்போதும் தலைவியின் நலமே தன் கருத்தாக, அவட்கு எவ்வாற்றானும் உதவி நிற்றலே தன் கடனாகப் பேணி வாழ்பவள் எனவும் அறிவோம்.

ஆகவே, தலைவியினுங் காட்டில், தோழியின் பேச்சு சற்றே அழுத்தமும், உறுதியும், தெளிவும் அமைந்து, நன்மையே உள்நோக்காக விளங்கி நயமுடன் வெளிப்படும் எனலாம். இந்தச் செறிவையும் செம்மையையும் இச் செய்யுட்களிலே நாமும் காணலாம். பேச்சிலே நயத்தை இழைத்துச் சொல்லும் பெண்மைத் திறத்தினையும் இவற்றுள்ளே காணலாம்.

51. புளிங்காய் வேட்கைத்து!


துறை: வாயில் பெற்றுப் புகுந்துபோய்ப் புறத்தொழுக்கம் ஒழுகி, பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது.

(து.வி: பரத்தமையாலே பிரிந்திருந்தவன், அதனைக் கைவிட்டுத் தன்வீடு மீண்டு, தலைவியின் ஊடல் தீர்த்துச் சிலகாலம் அவளோடும் கூடி மகிழ்வித்து இன்புற்றிருந்தனன். மீண்டும் அவன் அவளைப் பிரிந்து பரத்தையரை நாடிப் போகத், தலைவியின் உள்ளத்திலே மேண்டிம் துயரம் மிகுந்தது; சில நாட்கள் சென்ற பின்னே அவன் மீளவும் வீடு திரும்ப, அவள் அவனோடு புலவியுற்று ஊடி, அவனை அறவே ஒதுக்கி நின்றாள். அவன் மீண்டும் பணிமொழி பலகூறி வாயில் வேண்டத், தோழி வாயில் மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

நீருறை கோழி நீலச் சேவல்
கூருகிர்ப் பேடை வயாஅம் ஊர!
புளிங்காய் வேட்கைத் தன்று, நின்
மலர்ந்த மார்பு - இவள் வயாஅ நோய்க்கே.


தெளிவுரை: நீரிலே வாழும் நீர்க் கோழியின் நீலநிறச் சேவலை, கூரிய நகங்களையுடைய அதன் பேடையானது, தன் வேட்கைமிகுதியாலே நினைந்திருக்கும் ஊரனே! இவளது வயாஅ நோய்க்கு, நின் மலர்ந்த மார்பானது, 'புளியங்காயின் வேட்கை போல' இராநின்றது.

கருத்து: இவள் நின்பால் எப்போதும் பெருங்காதலை உடையவளாவாள் என்பதாம்.

சொற்பொருள்: நீருறை கோழி - நீர்க்கோழி; இதனைச் சம்பங்கோழி என்றும் கூறுவர். வயாஅ - கருப்பமுற்றார் கொள்ளும் வேட்கைப் பெருக்கம்; சாம்பரைத் தின்னபதும் புளியங்காய அல்லது புளி தின்பதும் போல்வது; இதனைப் பிறர் தடுத்தாலும் அவரறியா வேளைபார்த்து மீண்டும் உண்ணற்கு விழைவதே இவர் அடங்கா வேட்கையின் இயல்பு ஆகும். உகிர் - நகம். புளிங்காய் - புளியங்காய்.

விளக்கம்: 'பசும்புள் வேட்கைக் கடுஞ்சூல் மகளிர்' எனக் குறுந்தொகை (287) மகளிர் கொள்ளும் இவ் வேட்கையையும், 'வீழ்பிடிக்கு உற்ற கடுஞ்சூல் வயா' எனக் கலி (40) பிற உயிரினம் இவ் வேட்கைகொள்ளலையும் காட்டும். 'மலர்ந்த மார்பு' என்றது, விரிந்தகன்ற மார்பு என்றற்காம். மலர்ந்த மலர் பலருக்கும் மணத்தையளித்து இன்புறுத்துதலேபோலப் பலருக்கும் தழுவக் கொடுத்தலால் இனிமை தரும் மார்பு என்று உள்வைத்துக் கூறியதுமாம்.

உள்ளுறை: ''நீர்க் கோழிப் பேடையும் தான் தன் வயா நோயால் துன்புறும் ஊரன்'' என்றது, 'கருவுற்றிருக்கும் நின் மனைவியும் அவ்வாறு துயர்படுதலை உடையாள்; நீதான் அதனை அறியாத மடமையாளன் ஆயினை' என்று மனைவி கருவுற்றிருத்தலைக் கூறி, அவன் உடனிராது பரத்தமை பேணித் திரிதற்கு இடித்துரைத்ததுமாம்.

பிறர் தடுப்பவும் அடங்காது, வயாவுற்ற மகளிர் புளியங்காயையே தின்பதற்கு வேட்கை மிக்கவராய்த், துடிப்போடு விளங்குதல் போல, நின் போற்றா ஒழுக்கத்தால் நின்னை வெறுத்து ஒதுக்குமாறு எம்போல்வார் பலப்பல சொல்லியும், அவள்தான், என்றும் நின் மார்பையே நினைத்துச் சோரும் விருப்பினளாயினாள் என்று, அவளின் மாறாக்காதலின் கற்புச் செவ்வியை உணர்த்தியதும் ஆம்.

'புளிங்காய் வேட்கைத்து' என்றற்கு, அடையா விடத்தும், அதனைப் பற்றிய நினைவே நாவில் நூர்ஊறச் செய்து, அச்சுவை யுண்டாற்போலும் மயக்கம் விளைப்பது போல, நின் மார்பும், இவள் அடையாத இப்போதும், நினையநினைய இன்ப நினைவாலே இவளை வாட்டி மயக்குவதாயிற்று என்றதாகவும் கொள்க.

மேற்கோள்: 'புளிங்காய்' என, அம்முச்சாரியை பெறாது மெல்லெழுத்துப் பெற்று முடிந்தது'' எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல், உயிர்மயங்கு, 44.)

நீருறை கோழி நீலச்சேவலை, அதன் கூருகிர்ப் பேடை நினைந்து கடுஞ்சூலான் வந்த வயாத் தீர்தற் பயத்தவாகும். அதுபோல, நின் மார்பை நினைந்து தன் வயவுநோய் தீரும் இவளும் என்றவாறு. 'புளிங்காய் வேட்கைத்து' என்பது நின் மார்புதான் இவளை நயவாதாயினும், இவள் தானே நின் மார்பை நயந்து, பயன் பெற்றாற்போலச் சுவைகொண்டு, சிறுது வேட்கை தணிதற்பயத்தள் ஆகும். புளியங்காய் நினைய வாய்நீர் ஊறுமாபோல' என எடுத்துக்காட்டி, விளக்கமும் தருவர் பேராசிரியர் - (தொல், உவம. 25).

52. நின் தேர் எங்கே போகிறது?


துறை: வாயில் பெற்றுக் கூடியிருந்த தலைமகற்குத் தோழி நகையாடிச் சொல்லியது.

(து.வி: புலவியால் ஊடியிருந்த தலைவியின் மனத்தைத் தெளிவித்து, உறுதி பல கூறி, அவளுடன் மீண்டும் சேர்ந்திருந்தான் தலைவன். அவனுக்குத் தலைவியின் தோழி, அவனுடைய பழைய போற்றா ஒழுக்கத்தைக் குறித்துச் சொல்லி நகையாடுவாள் போல, அவன் வீடகன்று புறப்படும் போது சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச்
செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண்
செவ்வாய்க் குறுமகள் இனைய;
எவ்வாய் முன்னின்று - மகிழ்ந! - நின் தேரே?


தெளிவுரை: மகிழ்நனே! வயலையின் சிவந்த கொடியின் பிணையலைத் தொடுத்தலாலே, தன் சிவந்த விரல்கள் மேலும் ஞிவப்புற்றவளும், செவ்வரிகளையும் குளிர்ச்சியையும் உடைய கண்களையும், சிவந்த வாயினையும் உடையவளுமான இவ்விளமையோள், அழுதழுது வாடி வருந்துமாறு, நின் தேர்தான் எவ்விடத்து நோக்கிச் செல்லக் கருதியதோ?

கருத்து: 'வெளியே புறப்பட்டாயிற்றோ' என்றதாம்.

சொற்பொருள்: பிணையல் தைஇ - மாலை புனைந்து; பிணைத்துப் பிணைத்துக் கட்டும் மாலையினைப் 'பிணையல்' என்றனர். செவ்விரல் சிவந்த - இயல்பாகவே சிவப்பான விரல்கள் செம்பசலைக் கொடியின் சாறுபட்டு மேலும் சிவப்படைய; 'செவ்விரல் சிவப்பூர' எனக் கலித்தொகையும் இதனைக் கூறும் - (கலி. 76). இனைய - தொடர்ந்து வருந்த; தொடர்ந்து அழுகைப் புலப்பம் இது. குறுமகள் - இளையோள்; என்றது தலைவியை. எவ்வாய் - எவ்விடம். முன்னின்று - கருதியது. 'தேர் எவ்வாய் கருதியது?' என்றது, 'நீ எவ்விடம் போகக் கருதினை?' என்றதாம்.

விளக்கம்: வயலைக் கொடியை மாலையாகப் பிணைத்துக் கட்டி அணியும் மகளிரது பழைய வழக்கத்தை இச்செய்யுள் ஆகட்டும். 'செவ்விரல் சிவந்த' என்றது, மென்மையான அக்கொடியைப் பிணைக்கும் அம்மெல்லினைக்கே நோவுற்றுச் சிவந்த என்பதுமாம்; இது, தலைவியின் மென்மைச் செவ்வியை வியந்ததாம்; அதற்கே, கண்கலங்கி அழுத மென்மையள் என்பதும் உணர்த்தியதாம். 'சேயரி மழைக்கண்' இயல்பான அவள் கண்களின் எழிலார் தோற்றம்; அதுதான் இதுபோது செவ்விரல் சிவப்ப இனைதலால், நீதான் மீளப் பிரிந்தனையாயின் இனியும் கெட்டழியும் என்பதாம். செவ்வாய் - சிவந்த வாய்; செவ்வையான பேச்சன்றிப் பிற பேசுதலறியாத பண்புமிக்க வாயும் ஆம்; உளம் மறைத்து இன்சொல் பேசும் பரத்தையர் செவ்வாயினர் ஆகார் என்பது குறிப்பு. முன்னின்று - கருதியது; நினைவில் முன்னாகத் தோன்றுவது என்பது பொருளாக வந்த சொல். 'முன்னியது' என்பது மனுவுறுதியும் செய்கைத் துணிவும் காட்டவது.

அவன் தேரேறி வெளியே செல்வதைக் காண்பவள், அவன் பழைய ஒழுக்கத்தை நினைத்தாளாக, மீண்டும் அவன் மனம் அதிற் செல்லாவாறு தடுப்பாள், இவ்வாறு சொல்லுகின்றனள் என்றும் கொள்க.

53. துறை எவன் அணங்கும்?


துறை: தலைவி தன்னுடன் போய்ப் புனலாடிய வழி, 'இது பரத்தையருடன் ஆடிய துறை' என நினைந்து பிறந்த மெலிவை மறைத்தமையை உணர்ந்த தலைமகன், மனைவயின் புகுந்துழி, 'தெய்வங்கள் உறையும் துளைக் கண்ணே நாம் ஆடினவதனால் பிறந்தது கொல், நினக்கு இவ்வேறுபாடு?' என்று வினையினாற்கு, அவள் சொல்லியது.

(து.வி: தலைவனோடு சென்று புனலாடியபோது, அத்துறை, முன்பு பரத்தையோடு கூடிக்களித்தானாக அவன் ஆடியதென்ற நினைவு மேலெழத், தலைவி அந் நினைவாலே வாடி மெலிந்தாள். 'தெய்வங்கள் வாழும் துறை என்பதால் நீ அஞ்சினாயோ?' எனத் தலைவன், அவளிடம் அதுகுறித்துக் கேட்கிறான், அவள் நினைவை மாற்றுதல் கருதி. அப்போது தலைவி, அவனுக்குச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

துறை எவன் அணங்கும், யாமுற்ற நோயே?
சிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
கழனித் தாமரை மலரும்
பழன ஊர! - நீயுற்ற சூளே!


தெளிவுரை: அணைய அழித்துக் கொண்டு வேகமாக வருகின்ற புதுப்புனலாது, கழனியிடத்தே வந்தும் பாய்ந்த தென்று கலங்கித், தாமரைப் பூக்கள் மலர்கின்ற, பழனங்களையுடைய ஊரனே! நீ என்பால் உரைத்தது போன்ற சூளுரையினையே நின் பரத்தைக்கும் உரைத்திருப்பாய் என்று நினைத்து, அது பொய்த்த நின்னைத் தெய்வம் வருத்துமோ எனக் கலங்கி, யான் கொண்டதே இந்த மனநோய். துறையிடத்துத் தெய்வம் என்னை எதன் பொருட்டு வருத்தி நோய் செய்யுமோ?

கருத்து: 'சூள்பொய்க்கும் நின்னைத் தெய்வம் வருத்தாதிருக்க வேண்டும்' என்றதாம்.

சொற்பொருள்: துறை - துறைத் தெய்வம்; நீர்த்துறைக் கண் தெய்வங்கள் உறையும் என்பது மக்களின் நம்பிக்கை. எவன் அணங்கும் - எவ்வாறு வருத்தும். சிறை - அணை. சூள் - சூள் உரையாகிய உறுதிச் சொற்கள். பழனம் - ஊர்ப் பொது நிலம்.

விளக்கம்: 'நீயுற்ற சூள்' என்றது, அவன் புதியளான பரத்தை ஒருத்தியை விரும்பித், தலைவிக்குச் சொல்லிய உறுதி மொழிகளை மறந்து, மாறாக நடக்க நினைப்பதைக் குறித்ததும் ஆகலாம். இதனால், 'முன்னிறுத்திச் சூளுரைத்த தெய்வம் நின்னை அணங்கும்' எனவும், அதுதான் 'நின் நலமே நினையும் எம்போல்வர்க்குக் கவலைதரும்' எனவும் குறிப்பாக உரைப்பாள், 'யார் உற்ற நோய்' என்கின்றாளும் ஆம்.

உள்ளுறை: சிறையழி புதுப்புனல் கழனித் தாமரைகளைக் கலக்கி மலர்வித்தலே போல, இல்லறக் கடமையாகிய ஒழுக்கத்தையும், நின் உறுதிமொழிகளையும், பெருகிய காமத்தாலே மீறிச் செல்லும் நின் பொருந்தாச் செலவால், பரத்தையர் பலரும் மகிழ்வார்கள்; யாம் துன்புறுவோம் என்று கூறியதாகவும் கொள்க. துறைத் தெய்வம் அவனை அணங்கல் குறித்துக் கவலையுற்று நோய்ப்படுவதும் கொள்ளப்படும்; அதுவே சான்றாக அமைந்திருந்த வதனால்.

54. அஞ்சுவல் அம்ம!


துறை: வாயில் வேண்டி வந்த தலைமகற்குத், தலைமகள் குறிப்பு அறிந்த தோழி, அவன் கொடுமை கூறி, வாயில் மறுத்தது.

(து.வி: பரத்தையிற் பிரிந்த தலைவன் தன் வீட்டிற்கு மீண்டும் வருகின்றான். தன் குற்றவுணர்வின் அழுத்தத்தால், தலைமகளின் முன் செல்லற்கே அஞ்சியவனாகத், தோழியைத் தனக்கு உதவ வேண்டுகின்றான். அவள் அவனுக்கு உதவ மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

திண்தேர்த் தென்னவன் நன்னாட் டுள்ளதை
வேனி லாயினும் தண்புனல் ஒழுகும்
தேனூர் அன்னவிவள் தெரிவளை நெகிழ,
ஊரின் ஊரனை நீதர, வந்த
பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு
அஞ்சுவல் அம்ம! அம்முறை வரினே!


தெளிவுரை: திண்மையான தேர்களை உடையவன் தென்னவனாகிய பாண்டியன், அவன் நல்ல நாட்டின் கண்ணே உள்ளது தேனூர். அது, வேனிற்காலமே யானாலும் குளிர்ந்த நீர் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றுவளமுடையது. அத் தேனூரினைப் போன்ற, ஆய்ந்தமைத்த வளைகள் நெகிழ்ந்தோடுமாறு. செழுமையான இவள் தோள்கள் மெலிய, நீதான் பிரிந்தனை, பரத்தையர் வீதியிலே நீ செல்லுங்கால், நின்பால் அப்போது சூழ்ந்து வந்த பஞ்சாய்க் கோதை மகரிக்க்கும், அம்முறை - அதாவது வளைதநெகிழும் நிலை - வருவதனை நினைந்து, யானும் அஞ்சுவனே!

கருத்து: 'நீதான் நிலைத்த காதலன் பினை இல்லாதவன்' என்றதாம்.

சொற்பொருள்: திண்தேர் - திண்மையான தேர்; தேரின் திண்மை உரைத்தது, தேருக்கு உடையானின் ஆட்சித் திறத்தின் திண்மை காட்டற்காம். நன்னாடு - நலம் செறிந்த நாடு. வேனில் - வேனிலாகிய வறட்சிக் காலம். தேனூர் - பாண்டி நாட்டுள். வையைப் பாய்ச்சலில், மதுரைக்கு அருகிலே உள்ள ஓர் ஊர்; 'தேர்வண் கோமான் தேனூர்' என்றும் கூறுவர்; தேனாறு எனவும் பாடம். பஞ்சாய்க் கோதை மகளிர் - பஞ்சாய்க் கோரை போலும் தலைமயிர் நீண்டிருக்கும் மகளிர் முறை - பிரிவால் பரத்தையரும் வளைநெகிழ மெலியும் அவல நிலை; முறை என்றது, 'அவரும் நின்னைப் பிரிந்து வாடுகின்ற வாடற்காலம்' என்பதனையாம்.

விளக்கம்: 'வேனிலாயினும் தண்புனல் ஒழுங்கும் தேனூர் அன்ன இவள்' என்றது, அவ்வாறே பிரிவாற்றாமையாலே தோள் மெலிந்து வாடுதல் பெறினும், நின்பால் தான் கொண்டிருக்கும் அன்பு மாறாதவளான தலைமகள் என்றற்காம். தெரிவளை - தோளிற்கு அமையும் அளவு தெரிந்தெடுத்து அணியும் வளை; உடல் மெலியமெலிய மெலிவு புறந்தோன்றாதவாறு மறைக்கும் பொருட்டுப் பின்னும் பின்னும் சிறியவாகத் தேர்ந்து எடுத்து அணியும் வளை; நெகிழ - அதுவும் நெகிழ்தல்; அதனினும் சிறிது தேடிப்பெற இயலாவாறு தோள் மிகமெலிவுற்றதால் என்பதாம். 'பஞ்சாய்க் கோதை மகளிர்' என்றது. நெடுங் கூந்தலுடைய இளம்பரத்தையரை; நீ தரவந்த மகளிர்' என்று, அவரைக் கொணர்ந்த தலைவனின் செயலைத் தான் அறிந்தமை கூறினாள், அவனை அடித்துக்கூறித் திருந்துமாறு முயல்தற்கு.

'தேனூர்' அன்ன இவளை, வாடிமெலியும் வகை வெறுத்து, பஞ்சாய்க் கோதை மகளிர் பின்னால் மயங்கிச் செல்லும் போக்கினன் நீ என்றும், அவரும் நின்னால் கைவிடப்பட நேர்ந்து நீ புதியரை நாடிப் போகும் கொடுமனம் உடையை எனவும் கூறுகின்றாளும் ஆம். 'முறைவரின்' என்றது 'அம்முறை வந்தாற்போலும் நீ இவண் வந்தது' எனக் கூறி, அவனை ஒதுக்கிப் போக்கியதுமாம்.

55. துரத்தலின் நுதல் பசந்தது!


துறை: வரைவு அணிமைக் கண்ணே, புறத்தொழுக்கம் ஒழுகி, வாயில் வேண்டி வந்து தன் மெலிவு கூறிய தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது.

(து.வி: வரைவு விரைய வாய்க்கும் பொழுதிலே, புறத்தொழுக்கம் ஒழுகியவனாகி, மீண்டும் வாயில் வேண்டி வந்து நிற்கின்றான் தலைவன். அவன் தன் மெலிவுகூறித் தனக்கு உதவ வேண்டும்போது, தோஇ, அவனுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

கரும்பின் எந்திரம் களிற்றுறெதிர் பிளிற்றும்
தேர்வண் கோமான் தேனூர் அன்ன விவள்
நல்லணி நயந்து நீ துறத்தலின்,
பல்லோர் அறியப் பசந்தன்று, நுதலே!


தெளிவுரை: கரும்பினைப் பிழியும் எந்திரமானது, களிற்றின் பிளிற்றுக் குரலுக்கு எதிராக ஒலித்தபடியிருப்பது தேரினையும் வண்மையினையுமுடைய மதுரையார் கோமானின் தேனூர் அதனைப் போன்றதான இவள் நல்லழகினை விரும்பி, இவளை வரைந்து கொண்டு, அடுத்து நீதான் துறத்தலையும் மேற்கொள்ளுதலாலே, இவளது நுதலானது, பலரும் நின் கொடுமை அறியுமாறு பசலை நோய் கொண்டதே!

கருத்து: நீதான், இதுபோது நின் மெலிவுகூறி நயத்தல், எம்மால் வெறுக்கவே தக்கது என்றதாம்.

சொற்பொருள்: கரும்பின் எந்திரம் - கரும்பை நசுக்கிச் சாறுபிழியும் எந்திரம்; கரும்பின் எந்திரத்தைப் புறமும் காட்டும் (புறம் 320). நல்லணி - நல்ல அழகு. 'தேர்வண் கோமான்' என்றது பாண்டியனை.

விளக்கம்: எதிர் பிளிற்றல் - எதிரெதிர் தொடர்ந்து ஒலி செய்தல்; இதனால் கரும்பாலை மிகுதியும் களிற்று மிகுதியும் கூறினர். 'நல்லணி' என்றது, திருமண நிகழ்வை. மணம் பெற்றுச் சிலகாலமே யானவன், தலைவியைப் பிரிந்து பரத்தையை நாடிப் போதலாற் பல்லோரும் பழிப்பாராயினர் என்க. தலைவியைக் களவுக்காலத்தே பலப்பல கூறித் தெளிவித்துக் கூடியும், பின் விரும்பி வரைந்து மணந்தும் கொண்டவன், விரைவிலேயே அவளை விட்டுப் பிரிதலைத் தாங்காமல், தலைவியின் நெற்றியிற் பசலை படர்ந்தது; அது பல்லோரும் அவன் கொடுமையை அறியக் காட்டுவது மாயிற்று.

உள்ளுறை: 'களிற்றெதிர் சிலம்பின் எந்திரம் பிளிற்றும்' என்றது, 'நின் மெலிவு பற்றிய நின் பேச்சுக்கு எதிரே இவள்தன் நெற்றிப் பசப்பு மிகுதியாகத் தோன்றி, இவள் மெலிவு பற்றி ஊருக்கெல்லாம் உரைத்துப் பழிக்குமே' என்றதாம்.

மேற்கோள்: தலைவி அவனூர் அனையாள் என வந்தது எனப் பேராசிரியரும் (தொல். உவம. 25); தலைவன் அறம் செய்தற்கும், பொருள் செய்தற்கும், இசையும் கூத்துமாகிய இன்பம் நுகர்தற்கும், தலைவியை மறந்து ஒழுகுதற்கும், தோழி அலர் கூறுதற்கும் இதனை மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். கற்பு. 9, 21)

'பெருமை காட்டிய இரக்கம்' எனக் கூட்டுக; இதனாற் சொல்லியது, வாளாதே இரங்குதலின்றி, பண்டு இவ்வாறு செய்தனை, இப்போது இவ்வாறு செய்யா நின்றனை எனத் தலைவி உயர்ச்சியும், தலைமகனது நிலையின்மையும் தோன்ற இரங்குதலாயிற்று என்பர், இளம்பூரணர் - (தொல். பொருள். 150).

56. என் பயன் செய்யும்?


துறை: புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழி, 'அக்து இல்லை' என்று தேற்றும் தலைமகற்குத், தோழி சொல்லியது.

(து.வி: தலைவன் புறத்தொழுக்கம் உடையவன் என்று அறிந்த தலைமகள், அது குறித்த கவலையாலே வாடி மெலிந்துனள். அப்போது தலைவன், 'அவள் அறிந்தவாறு தான் தவறியவன் அல்லன்' என்று உறுதிகூறித், தலைமகளைத் தேற்றுவதற்கு முயல்கின்றான். அவனுக்குத் தலைவியின் தோழி சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா,
வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள்
நலம்பெறு சுடர்நுதல் தேம்ப,
எவன்பயம் செய்யும், நீ தேற்றிய மொழியே?


தெளிவுரை: பகற்காலத்தின் ஒளியைக் கொள்ளும் விளக்குகளாலே, இரவுக் காலத்தின் உண்மையே தெரியாத படி ஒளியோடும் விளங்குவது, வெல்லுகின்ற போராற்றலிலே மிகுந்த சோழர்களுக்குரிய ஆமூர். அதனைப் போலும் ஒளியுடைய, இவளது அழகு பெற்ற ஒளிசுடரும் நெற்றியானது, இப்போதிலே பசலையால் தன் ஒளி கெட்டது. அவளைத் தேற்றும் பொருட்டாக நீ சொல்லும் வாய்மையற்ற சொற்கள், இனி என்ன பயனைத்தான் செய்யுமோ?

கருத்து: 'பொய்யான இந்தத் தேறுதல் உரைகளாலே மட்டும் பயனில்லை' என்றதாம்.

சொற்பொருள்: பகல் கொள் விளக்கு - ஒளிமிக்கவும் பலவாகப் பெருகியவுமான விளக்குகளாலே, இரவின் இருக் முற்றமறைந்து, இரவே பகலின் ஒளியைப் பெற்றுப் பகலே போல விளங்கிற்று என்பதாம; 'இன்கள்ளின் ஆமூர்' எனச் சிறுபாணும் இதனைக் காட்டும் (சிறுபாண் 188). தேம்ப - அழகழிந்து வருந்த. பயம் - பயன். தேற்றிய மொழி - தேற்றிக் கூறிய உறுதிச் சொற்கள்.

விளக்கம்: தேறுதல் உரைகள் பயன் செய்யாமை, முன்னும் பலகால் உறுதிகூறித் தேற்றிப், பின்னர் சொற் பிழைத்து ஒழுகித் தலைவிக்கு வருத்தம் செய்தவன் தலைவன் என்பதனாலே. 'ஆமூர்' இரவிலும் விளக்கொளிகள் இரவையோட்டிப் பகலாகச் செய்ய, ஆரவாரத்துடன் விளங்கும் செல்வவேளமுடையது என்பதாம். அஃதாவது என்றும் குன்றா வளமை; அத்தகு எழில்குன்றாத் தலைவியின் சுடர் நுதலின் ஒளியும் நின்னாலே இப்போது ஒளியற்றுக் கெட்டது என்கின்றனள். 'எவன் பயன் செய்யும்?' என்றது, 'இனியும் நின் பேச்சை வாய்ம்மை எனக்கொள்ளும் மயக்கத்தேம் யாமல்லோம்' என்று இடித்துரைத்ததாம்.

உண்மையிலேயே இரவு நேரத்தில் இருள்தான் உளதான போதிலும், அதனை மக்கள் ஒளிவிளக்குகள் பலவாக அமைத்தலாலே மாற்றிக் கொள்ளலைப் போல, பரத்தைமையாகிய புறத்தொழுக்கம் கொண்ட தலைவனும், தன் ஒளியான சொற்களாலே அதனைப் பொய்யாக்கிக் காட்டுவதற்கு முயல்கின்றான் என்பதுமாம்.

'ஆமூர் அன்ன நலம்பெறு சுடர்நுதல்' என்றது, என்றும் எதனாலும் ஒளிகுன்றா நுதல் என்றதாம்; அதுவும் ஒளிகெட்டது; எனவே, இனித் தேற்றித் தெளிவித்தல் அரிது என்றும் உணர்த்தினளாம்.

'தேற்றிய மொழி முன்பும். நிலையான பயன் தந்ததின்று; அதனை நீ பொய்த்தே ஒழுகினாய்; இனியும் எமக்குப் பயன் தருவதனின்று; நின் இயல்பறிந்த யாம், அதனை நம்புதலிலோம் என்பதும் ஆம்.

மேற்கோள்: 'இதனுள், இவள் நுதல் தேம்பும்படி நீ தேற்றிய சொல் எனவே, சோர்வுகண்டு அழிந்தாள் என்பது உணர்ந்தும், இப் பொய்ச்சூள் நினக்கு என்ன பயனைத் தரும்? எனத் தோழி, தலைவனை நோக்கிக் கூறியவாறு காண்க' என இச்செய்யுளை, 'சூள் நயத்திறத்தாற் சோர்வுகண்ட டழியினும்' என்பதனுரையில் நச்சினார்க்கினியர் காட்டுவர் (தொல். கற்பு. 9).

57. நயம் உடையாளோ அவள்?


துறை: தலைமகற்குப் புறத் தொழுக்கம் உளதாயிற்று என்பது கேட்டுத், தோழி அவனை வினாவியது.

(து.வி: 'தலைவன் புறத்தொழுக்கம் உடையனாயின்' எனக் கேட்ட தோழி, அவனையே அதுபற்றிக் கேட்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

பகலில் தோன்றும் பல்கதிர்த் தீயின்
ஆம்பலஞ் செறுவின் தேனூர் அன்ன
இவள் நலம் புலம்பப் பிரிய,
அனைநலம் உடையோளோ - மகிழ்ந! நின் பெண்டே?


தெளிவுரை: ஆம்பற்பூக்கள் நிறைந்திருக்கும் வயல் களையுடையது தேனூர் ஆகும். அதனைப் போன்ற சிறப்புடையதான இவளின் (தலைவியின்) அழகெல்லாம், பகற்போதிலே தோன்றுகின்ற பலவான சுடர்களையுடைய தீயிட்டதே சிக்கினாற் போன்று முற்றவும் வெந்தழியுமாறு, நீயும் இவளைப் பிரிந்தனை. மகிழ்நனே! அப்படிப் பிரிதற்கு நின்னைத் தூண்டிச் செலுத்தும் அத்துணைப் பேரழகு உடையவளோ நின் பெண்டு?' (பரத்தை). அதையேனும் எனக்குக் கூறுவாயாக!

கருத்து: 'தலைவியை விடவும் அப்பரத்தை அழகானவளோ?' என்றதாம்.

சொற்பொருள்: பகலில் - பகற்போதில், பல்கதிர்த் தீ - பலவான நாக்குகளோடு சுடரிட்டு எழுந்து எரியும் பெருந்தீ. தேனூர் - பாண்டியநாட்டுத் தேனூர். நலம் - அழகு; புலம்ப - வருத்தமுற்றதாற் கெட. அனைநலம் - அத்துணை நலம்; அனநலம் என்றும் பாடம். பெண்டு - நின் காதற் பரத்தை.

விளக்கம்: 'பகலிலே தோன்றும் பல்கதிர்த் தீயானது அளவுகடந்த வெம்மையுடையதாயிருக்கும்; எதிரிட்டதை எல்லாம் எரித்தழிக்கும்; அதுபோலவே நின் பிரிவாகிய தீயின் வாய்ப்பட்ட இவள் மிகப் பெருநலனும் கெட்டழிந்தது' என்றதாம். பிரிவாற்றாமையின் வெம்மை மிகுதிக்கு இது நல்ல உவமையென்று கொள்க. 'பகலெரி சுடரின் மேனி சாயவும்' என நற்றிணையும் கூறும். (நற். 128). வயல்களிலும் ஆம்பல் பூத்திருக்கும் வளமான தேனூர் போன்றது தலைவியின் வளமான அழகு என்றது, அதன் குன்றலில்லாச் சிறப்பை வியந்து கூறியதாம்.

ஆம்பலுக்கு உவமையாகப் பகலில் தோன்றும் பல்கதிர்ப் பெருந்தீயினைக் கொண்டால், அழகான மெல்லியலாராகத் தோன்றும் பரத்தையர், அவரைச் சார்ந்தாரைப் பகலெரி தீப்போல் தவறாதே எரித்தழிக்கும் கொடிய இயல்பினர் என்று உள்ளுறை பொருள் புலப்படுத்துக் கூறியவாறாகக் கொள்க.

மேற்கோள்: 'பிழைத்து வந்திருந்த தலைமகனை நெருங்கித் தலையளிக்குமாறு கூறித் தலைமகள் மாட்டாக்கிக் கொடுத்தற் கண்ணும் தலைவிக்குக் கூற்று நிகழும் எனக் கூறி இச்செய்யுளை இளம்பூரணம் கற்பியலுட் காட்டுவர் - (தொல். கற்பு. 9).

'வணங்கியன் மொழியால் வணங்கற்கண் தோழிகூற்று நிகழ்வதற்கு' நச்சினார்க்கினியரும் இதனைக் காட்டுவர். (தொல். கற்பு. 9).

58. பிறர்க்கும் அனையாயால்!


துறை: உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் புலந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.

(து.வி: தலைவன் பலவறாகத் தெளிவிக்கவும் தெளியாளாய், மேலும் பலவியே மேற்கொண்ட தலைவியின் செயலால், தலைவன் மனவருத்தம் கொண்டனன். அதனைத் துய்ப்பதற்குக் கருதிய தலைவியின் தோழி, அவன் போக்கைக் காட்டி அவனுணருமாறு இவ்வாறு கூறிகின்றனள். இதனால் தலைவியும் தன் புலவி தீர்வாளாவது பயனாகும்.)

விண்டு அன்ன வெண்ணெற் போர்வின்
கைவண் விராஅன், இருப்பை யன்ன
இவள் அணங் குற்றனை போறி:
பிறர்க்கும் அனையையால்; வாழி நீயே!


தெளிவுரை: 'மலை போலத் தோன்றும் வெண்ணெல்லின் போர்களையும், வரையாதே வழங்கி மகிழும் கைவண்மையினையும் கொண்டவன் விரா அன் என்பவன். அவனது 'இ,உம்மை' நகரைப் போன்ற பேரெழில் வளம் பெற்றாள் இவள்.' இவளாலே, நீயும் வருத்தமுற்றாய் போலத் தோன்றுதி! பிற மகளிர்பாலும் நீ இத்தன்மையனே ஆதலால், நின் வருத்தம் தீர்ந்து அமைவாயாக!

கருத்து: 'நின் வருத்தமும் எம்மை மயக்கச் செய்யும் ஒரு நடிப்பே' என்றதாம்.

சொற்பொருள்: விண்டு - மலை; 'விண்டு அனைய விண்தோய் பிறங்கல்' என்பது புறம் - (புறம் 391); 'விண்' என்னும் சொல்லடியாகத் தோன்றிய தமிழ்ச்சொல்; வான் நோக்கி உயர்ந்தது என்பது பொருள். போர்வு - பெருங்குவியல்; நெற்போர், வைக்கோற்போர் என அதற்கும் வழங்குவர். கைவண் - கைவண்மை; இடையறாது வழங்கி மகிழும் கொடைக்குணம் உடைமை. விரா அன் - பாண்டி நாட்டுக் குறுநிலத் தலைவன்; விராலிமலைக்கு உரியவன்; இவன் தலைநகர் 'இருப்பை' என்பர்; 'தேர்வண் கோமான் விரா அன் இருப்பை' என்பது பரணர் வாக்கு (நற். 350). 'இலுப்பைக் குடி' 'இருப்பைக் குளம்' என்று இன்றும் இருப்பையின் பேரால் ஊர்கள் சில பாண்டிய நாட்டில் உள்ளன. அணங்குறல் - துன்புறல். போறி - போன்றிருந்தனை

விளக்கம்: விரா அன் தற்போது விராலிமலை என வழங்கும் இடத்திருந்த ஒரு வள்ளல்; அவன் வயல் வளத்தாற் சிறந்தவன் என்பது 'விண்டு அன்ன வெண்நெற் போர்வின்' என்பதாலும், அவன் வண்மையிற் சிறந்தான் என்பது 'கைவண்' என்பதாலும் கூறினார். அவனுக்கு உரிய ஊர் 'இருப்பை' என்பது; அது பல்வகை வளத்தாலும் உயர்ந்தது. அதுபோல் அழகுடையாள் தலைவி என்பது, அவ்வூரைச் சேர்ந்தார் அதனைவிட்டு நீங்குதலை நினையாராய் ஒன்றி யிருப்பது போல, அவளைச் சேர்ந்த தலைவனும் விட்டுப் பிரியானாய் ஒன்றியிருப்பதற்குரிய பேரழகினள் என்பதற்காம். 'இவள் அணங்கு உற்றனை போறி' என்றது, இவ்வாறு எவரொருவர் அழகியராக எதிர்ப்படினும், அவரைக் காமுறும் பரத்தமை இயல்புடையாய் என்று குறித்து அவனை பழித்ததும் ஆம். 'வாழி நீயே' என்றது, தான் நம்மை நலிவித்தல் மறந்தானாய், தான் நலிவதாகப் புனைந்து கூறிய நிலையை நோக்கி, தம் பெருந்தகு கற்பினால், அவன் பிழைமறந்து, அவன் உறவை ஏற்று வாழ்த்தியதுமாம்.

59. இவட்கு மருந்து ஆகிலேன்!


துறை: தலைமகள் ஆற்றாளாம் வண்ணம் மனைக்கண் வரவு சுருங்கிய தலைமகற்குப், புறத்தொழுக்கம் உளதாகிய வழி, ஆற்றாளாகிய தோழி சொல்லியது; 'தலைமகற்குத் தேற்றத் தேறாது ஆற்றாளாகிய' என்பதும் பாடம்.

(து.வி: தலைமகன் வீட்டிற்கு வருவது படிப்படியாகக் குறைகின்றது. தலைவி பிரிவாற்றாமையால் பெரிதும் நலிவெய்துகின்றாள். 'அவன் வராமைக்குக் காரணம் அவனுடைய பரத்தைமை ஒழுக்கமே' என்று அறிந்தாள் தோழி. அதனைப் பொறாதாளான அவள், அவனிடம் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

கேட்டிசின் வாழியோ, மகிழ்ந! ஆற்றுற
மையல் நெஞ்சிற் கெவ்வம் தீர
நினக்கு மருந்தாகிய யான், இனி,
இவட்கு மருந்தன்மை நோம், என் நெஞ்சே!


தெளிவுரை: மகிழ்நனே! நீ வாழ்க! இதனையும் கேட்பாயாக. இவளைக் கண்டு மையலுற்ற நின் நெஞ்சிடத்து வருத்தமானது தீருமாறு, இவளை நினக்குக் கூட்டுவித்து உதவி, நீயுற்ற நோய்க்கு மருந்தாக முன்னர் யான் விளங்கினேன். இப்பொழுது, நின் கொடுமையால் இவள் படும் துயர நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் அமைவதற்கு இயலாமல், நெஞ்சம் வருந்தா நின்றேன்!

கருத்து: 'நீதான் அன்புடையார் பேச்சிற்கு அகம் நிலைகொள்ளும் மனநிலை இழந்தனை' என்பதாம்.

சொற்பொருள்: கேட்டிசின் - கேட்பாயாக; 'சின், முன்னிலை அசை. ஆற்று உற - ஆறுதல் அடைய. நேரம் - வாடுதும்.'

விளக்கம்: முன்னர்த் தலைவனின் காமநோய்க்குத் தோழி மருந்தாகியது, களவுக் காலத்தே. அன்று என் பேச்சால் தலைவி நினக்கு மகிழ்ச்சி தந்தனள்; இன்று நீயோ அவளை ஒதுக்கியதுடன் என் பேச்சையும் ஏற்றுக் கேளாயாயினை என்று தோழி குறைப்படுகின்றாள்.

மேற்கோள்: பரத்தையர் மனைக்கண் தங்கி வந்திருந்த தலைமகனை நெருங்கித் தலையளிக்குமாறு கூறித், தலைமகள் மாட்டாக்கிக் கொடுத்தற்கண் தோழிக்குக் கூற்று நிகழும் என இளம்பூரணனாரும், நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர் - (தொல். கற்பு. 9)

60. வேல் அஞ்சாயோ?


துறை: வரையாது ஒழுகும் தலைமகன் இரவுக்குறி வழிந்துழித் தோழி சொல்லியது.

(து.வி: சூளுரைத்தபடி தலைமகளை வரைந்து வராமல், அவள் உறவை விரும்பி மட்டும் ஒருநாள் இரவு தலைமகன் வருகின்றான். இரவுக் குறியிடத்தே அவனைச் சந்தித்த தோழி சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்
கழனியூர! நின் மொழிவல்! என்றும்
துஞ்சுமனை நெடுநகர் வருதி;
அஞ்சாயோ, இவள் தந்தைகை வேலே?


தெளிவுரை: பழனங்களிலே வாழ்கின்ற, சதா ஒலி செய்தபடியிருக்கும் சம்பங்கோழியானது, பிரிந்து சென்றுள்ள தன் சேவலைத் தன்னருகே வருமாறு கூவிக்கூவி அழைக்கும் கனிகளையுடைய ஊரனே! உள்ளிருப்பார் அனைவரும் அயர்ந்துறங்கும் பெருமனையிடத்தே, இரவு நேரத்தே, அஞ்சாமல் துணிந்து வருகின்றனையே! இவள் தந்தையின் கையில் உள்ள வேலுக்கு நீதான் அஞ்சமாட்டாயோ?

கருத்து: 'நினக்கு ஊறு நேருமோ?' என்றே யாம் அஞ்சுவேம் என்றதாம்.

சொற்பொருள்: கம்புள் - சம்பங் கோழி. பயிர்ப்பெடை - துணையை வேட்டுப் புலம்பற்குரல் எழுப்பியிருக்கும் பெட்டை; பயிற்பெடை எனவும் பாடம். துஞ்சு மனை - இருப்பார் உறங்கியிருக்கும் மனை. நெடுநகர் - பெரிய மாளிகை. மருதத்தே குறிஞ்சியாகிய இரவுக்குறி மறுத்தல் வந்தது இச் செய்யுளில்.

விளக்கம்: இரவுக்குறி மறுத்து வரைவு கடாயது இது. இவள் தந்தை கைவேற்கு நீ அஞ்சாயாய் வரினும், யாம் நினக்கது ஊறுசெய்யுமோ என எண்ணித் துன்புறுவோம்; ஆதலின், இனிப் பலரறிய மணதந்து கூடிவாழ்தலே செயத்தக்கது என்று தோழி கூறுகின்றனள். தன்னருகே சேவலைக் காணாத பெடை, அதற்கு, யாது துன்பமோ என நினைந்து அதனை அழைத்தழைத்துக் கூவுதல்போல, தலைவியும் நின்னைக் காணாதே நினக்கென்னவோ ஏதோ என்று புலம்பியிருப்பாள் எனத், தலைவியது காதற்செவ்வி உரைத்ததும் ஆகும். அந்த அழைப்பைக் கேட்டுச் சேவல் அதனருகே விரைவது போல, நீயும் இவளை மணந்து கோடற்கு விரைவாயாக என்பதாம்.

''துஞ்சுமனை நெடுநகர் அஞ்சாதே வருது; ஆயின் வரைவொடு வந்து தமரின் இசைவோடு மணந்து கொள்ள, விரைந்திலை; எம் தந்தை கைவேலுக்கும் அஞ்சினாய் இல்லை; என் கருதினையோ?' என்பதாம். இதனால் இரவுக்குறி மறுத்து வரைவு வேட்டனள் என்பதும் ஆயிற்று.

மேற்கோள்: திணை மயக்குறுதலுள்; மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது என இச்செய்யுளை நச்சினார்க்கினியர் காட்டுவர், (தொல். அகத். 12).

7. கிழத்தி கூற்றுப் பத்து


இதன்கண் வரும் பத்துச் செய்யுள்களும், தலைவியின் பேச்சாகவே அமைந்தவை; ஆதலின், இப்பகுதி இப் பெயர் பெற்றது. இவற்றால், உயர்பண்பும், கற்புச்சால்பும், குடிப்பிறப்பும் உடையாளான தலைவியின், செறிவான பெருமிதம் நிரம்பிய உள்ளப்போக்கும், தகுதி மேம்பாடும் நன்கு காணலாம்.

61. நல்லோர் வதுவை விரும்புதி!


துறை: 'வதுவை அயர்ந்தாள் ஒரு பரத்தையை விட்டு, சின்னாளில் மற்றொரு பரத்தையை வதுவை அயர்ந்தான்' என்பது அறிந்த தலைமகள், அவன் மனைவியின் புக்குழிப் புலந்தாளாக, 'இது மறைத்தற்கு அரிது' என உடன்பட்டு, 'இனி என்னிடத்து இவ்வாறு நிகழாது' என்றாற்கு, அவள் சொல்லியது.

(து.வி: தன்னைப் பிரிந்து போய்ப் பரத்தையொருத்தியின் மையலிலே தலைவன் சிக்கிக் கிடந்ததால், தன் மனம் தாங்கொணா வேதனையுற்றிருந்தவள் தலைவி. அவள், அவன், அந்தப் பரத்தையைக் கைவிட்டு வேறொரு பரத்தையை நாடி வதுவை செய்தான் என்றும் கேட்டாள். அப்போது, தலைவனும் தன் வீட்டிற்கு வருகின்றான். தலைவியோ முகத்தைத் திருப்பிக் கொள்ளுகின்றாள். தலைவன் 'நடந்தது நடந்துவிட்டது; இனி அவ்வாறி நிகழாது; என்னை மறாதே இவ்வேளை ஏற்றுக்கொள்' என்று பணிவோடு வேண்டுகின்றான். அவனுக்குத், தலைவி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்ழம்
நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்,
கைவண் மத்தி, கழாஅர் அன்ன
நல்லோர் நல்லோர் நாடி
வதுவை யயர விரும்புதி நீயே!


தெளிவுரை: மணமிகுந்த வடுக்களையுடைய மாமரத்திலே, நன்கு விளைந்து கனிந்து, கீழே விழுகின்ற இனிய பழமானது, ஆழ்ந்த நீரையுடைய பொழ்கையிடத்தே, 'துடும்' என்னும் ஓசையுடன் விழுகின்ற, கொடை வண்மையுடைய மத்தியின், 'கழா அர்' என்னும் ஊரைப் போன்ற, நல்ல பெண்களையே நாடிச் சென்று, நீயும் வதுவை செய்து கொள்ள விரும்புகின்றாய்!

கருத்து: ஆகவே, 'என்னிடத்து நீ அன்பாற்றாய்; ஆதலின் விலகிப்போக' என்றதாம்.

சொற்பொருள்: நறுவடி - நறுமணமுள்ள மாவடுக்கள்; வடுக்கள் - பிஞ்சுகள்; 'நறுவடிமா' என்று நற்றிணையும் கூறும் - (நற். 243). நெடுநீர்ப் பொய்கை - நிறைந்த நீர் நிலையாக இருத்தலையுடைய பொய்கை. 'மத்தி' என்பவன் கழாஅர்க் கீரன் எயிற்றியார். வதுவை - மணம். பரத்தையோடு முதல் தொடர்பு கொள்வார் அதனையே வதுவைபோலக் கொண்டாடுதல் என்பதும் மரபு. 'வதுவை அயர்ந்தனை என்ப' என, அகநானூற்றும் இவ்வாறு வரும். (அகம். 36).

விளக்கம்: நீர் வற்றாதிருக்கும் பொய்கைக் கரையிலேயுள்ள மாமரத்தின், மரத்திலேயே முதிர்ந்து கனிந்த அதன் பழம், துடுமென்னும் ஒலியோடே நீரில் விழும் என்றது, கழா அரின் வளமை பற்றிக் கூறியதாம். நல்லோர் நல்லோர் என்று பரத்தையரைக் குறிப்பிட்டதும், அவரோடு அவன் வதுவை அயர்ந்தான் என்றதும், தன்னுள்ளத்தே தோன்றிய எள்ளல் புலப்படக் கூறியதாம்.

உள்ளுறை: மாவின் முதிர்ந்த கனி தானாகவே குளத்து நீரில் துடுமென விழூஉம் என்றது. அவ்வாறே பரத்தையர் சேரியிலே பக்குவமான இளங்கன்னியர் தலைவனின் வலையிலே தாமாகவே வந்து ஆரவாரத்துடன் விழுவாராயினர் என்று, உள்ளுறையால், அவன் புறத்து ஒழுக்கம் சேரிப்பெண்டிரெல்லாரும் அறிந்ததாயிற்றென்று கூறினளாம். இல்லறமாற்றி இன்புற்றிருந்த தலைவன், அப்பிடிப் பினின்றும் விலகிப் பரத்தையர் வலையிலே போய் வீழ்ந்தான் என்பது, மாவின் நறுங்கனி பொய்கைக்கண் வீழ்ந்து அழிவது போலாகும் என்று உள்ளுறை கொள்வது பொருந்தும். மாங்கனி பயனின்றி நீரிலே துடுமென வீழ்தலே போலத், தலைவனும் ஆரவாரத்துடன் வதுவை மேவிப் பரத்தையருடன் திரிவான் என்பதும் ஆம்.

62. எவ்வூர் நின்றது தேர்?


துறை: மேற் செய்யுளின் துறையே.

இந்திர விழவிற் பூவின் அன்ன
புன்றலைப் பேடை வரிநிழல் அகவும்
இவ்வூர் மங்கையர்த் தொகுத்து, இனி
எவ்வூர் நின்றன்று - மகிழ்ந! - நின் தேரே?


தெளிவுரை: மகிழ்நனே! இந்த விழவினிடத்தே கலந்து மகிழ வருவார் பலரும் சூடியிருக்கும், வேறுவேறு வகையான பூக்களைப் போன்ற அழகுடைய, இவ்வூர்ப் பரத்தையரை எல்லாம் ஓரிடத்தே கொண்டு தொகுத்ததன் பின்னால், புல்லிய குயிற்பேடையானது வரிப்பட்ட நிழற்கண் இருந்து அகவும் இவ்வுரைவிட்டு, வேற்றூர் மகளிரையும் கொணர்தலின் பொருட்டுச் சென்று, இப்போது நின் தேர் எவ்வூரிடத்தே நிற்கின்றதோ?

கருத்து: 'நின் பரத்தையர் உறவுதான் வரை கடந்த்தாயிற்று' என்பதாம்.

சொற்பொருள்: இந்திர விழா - மருத நிலத்தார் இந்திரனுக்கு எடுக்கும் பெருவிழா. புன்றலை - புல்லிய தலை. பேடை - குயிற் பேடை; இளவேனிற் காலத்தே ஓயாது அகவும் இயல்பினது.

விளக்கம்: 'நின்தேர் எவ்வூர் நின்றன்று?' என்றது, நீதான் இவ்வூர்ப் பரத்தையரை எல்லாம் நுகர்ந்து முடிந்தபின், இப்போது எவ்வூரவளோடு போய்த் தொடர்புடைய்யோ என்றதாம்; பரத்தமை பூண்டாரின் மனவியல்பு இவ்வாறு ஒன்றுவிட்டொன்றாகப் பற்றித் திரிந்து களிக்க நினைப்பதாகும். இந்திரவிழா, அரசு ஆதரவில் நடக்கும் பெருவிழா என்பதைச் சிலப்பதிகாரம் காட்டும்; அவ்விழாக் காண வருவார், வேற்றூர் மகளிரும் ஆடவரும் பலராயிருப்பர் என்பதால், 'இந்திரவிழவிற் பூவின் அன்ன' என்று, அவர் சூடிய பலப்பல பூவகைகளையும் குறித்தனர். பல பூக்கள் என்றது, அவரவர் நிலத் தன்மைக்கு ஏற்பப் பூச்சூடும் மரபினையும் குறித்ததாகும். அவ்விழாவில் நடனமாடவரும் பலவூர்ப் பரத்தையரின் ஒப்பனைகளை இது சுட்டுவதும் ஆகலாம்.

'இவ்வூர் மங்கையர்த் தொகுத்து' என்பது, இந்திர விழாவில் ஆடலும் பாடலும் நிகழ்த்தற்பொருட்டு, ஊர்த் தலைவனான அவன், அவ்வூர்ப் பரத்தையரை எல்லாம் தன் தேரிலே ஏற்றிக் கொண்டு ஒருங்கு சேர்த்தலைக் கண்டும் கேட்டும், தலைவி அவன்பால் ஐயமுற்று, மனவுளைச்சலுற்றனள் என்பதும் பொருந்தும்.

63. பிறர் தோய்ந்த மார்பு!


துறை: பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறியது.

(து.வி: பரத்தையோடு மகிழ்ந்திருந்தபின் வீடு திரும்புகின்ற தலைவன், ஆர்வத்தோடு தலைவியை அணைப்பதற்கு நெருக்க, அவள் புலந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது. தலைவியின் உள்ளக்கொதிப்பை நன்கு காட்டுவதும் இதுவாகும்.)

பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉம் ஊர!
எந்நலம் தொலைவது ஆயினும்,
துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே!


தெளிவுரை: பெருமானே! பொய்கையாகிய இடத்திலே வாழ்கின்றதும், புலவு நாற்றத்தைக் கொண்டதுமான நீர்நாயானது, வாளைமீனைத் தன் அன்றைய இரையாகப் பெறுகின்ற ஊரின் தலைவனே! எம் அழகெல்லாம் அழிவுற்று முற்றத் தொலைந்து போவதேயானாலும், பிறரைத் தழுவிய எச்சிலுற்ற நின்மார்பினை யாம் பெருந்தவே மாட்டோம்!

கருத்து: 'பிற மகளிராலே எச்சிற்பட்ட நின் மார்பினை யார் அணையோம்' என்றனதாம்.

சொற்பொருள்: பள்ளி - வாழும் இடம் என்னும் பொதுப் பொருளில் வந்தது. நாளிரை - அந்நாளுக்கான இரை. துன்னல் - பொருந்தத் தழுவல். பிறர் - உரிமையற்ற வரான பரத்தையர்.

விளக்கம்: நாய் போலத் தோன்றி நீரிடத்தே வாழும் உயிர்வகை நீர் நாய் ஆகும். அந்நாளைத் தமிழகத்தே பெருகக் காணப்பட்ட இதனை, இப்போது உயிர்க் காட்சிச் சாலைகளில் மட்டுமே காணமுடிகின்றது. வாளைமீன் இதற்கு விருப்புணவு என்பதனை, 'வாளை நாளிரை பெறூஉம் ஊரன்' எனக் குறுந்தொகை கூறுவதாலும் அறியலாம் - (குறுந். 364). 'எந்நலம் தொலைவது ஆயினும்' என்றது, அவன் உரிமை மனையாளாதலின், அவள் அழகெல்லாம் அழிவது பற்றி ஏதும் கவலைப்படுதலும் இல்லை என்று கூறியதாம். களவுக் காலத்தே தம் நலம் பெரிது பேணும் மகளிர், ஒருவனின் உரிமை மனைவியராயினபின் அதன்பாற் பெரிதும் கருத்துக் காட்டார்; கடமையே பெரிதாக நினைப்பர் என்பதும், இதனாற் கொள்ளப்படும்.

உள்ளுறை: 'நீர்நாய் அன்றன்றைக்கான இரைதேடிச் சென்று வாளைமீனைப் பற்றியுண்டல் போல, ஊரனாகிய நீயும், அன்றன்றைக்கு எழும் நின் ஆசை தீரும்பொருட்டுப் புதிய புதிய பரத்தையரைத் தேடிச் சென்று துய்த்து மகிழும் இயல்பினை' என்று, பழித்து உதுக்கினள் என்க.

மேற்கோள்: ''இது பிறப்பு உவமப் போலி; நல்ல குலத்திற் பிறந்தும், இழிந்தாரைத் தேடிப்போய்த் தோய்ந்தமையான் அவர் நாற்றமே நாறியது; அவரையே பாதுகாவாய்; மேற்குலத்துப் பிறந்த எம்மைத் தீண்டல்'' என்பாள், அஃது எல்லாம் விளங்கக் கூறாது, 'பொய்கைப் பள்ளிப் பிறந்த நீர்நாய் முன்னாள் தின்ற வாளைமீன் புலவு நாற்றத்தோடும், பின்னாளும் அதனையே வேண்டும் ஊரன்' என்றமையின், பரத்தையர் பிறப்பு இழிந்தமையும், தலைவி பிறப்பு உயர்ந்தமையும் கூறி, அவன் பிறப்பின் உயர்வும் கூறினமையின், இது பிறப்புவமப் போலியாயிற்று. இவையெல்லாம் கருதிக் கூறின், செய்யுட்குச் சிறப்பாம் எனவும், 'வாளாது நீர்நாய் வாளை பெறூஉம் ஊர' என்றதனான் ஒரு பயனின்று எனவும் கொள்க'' என்பர் பேராசிரியர் - (தொல். உவம. 25).

இவ் விளக்கத்தால், 'புலவுநாறு' என்பதற்கு, முதல்நாள் கூடிய பரத்தையின் சுவடு கலையாமலே என்றும், 'நாள் இரை' என்றற்கு, அன்றைக்கு அவளைவிட்டு மற்றொருத்தியை நாடின என்றும், குறிப்புப் பொருள் கொள்ளலாம்.

64. எம்மை மறையாதே!


துறை: தலைமகன் பரத்தையரோடு புனலாடினான் என்பது அறிந்த தலைமகள், அவன் மறைத்துழிச் சொல்லியது.

(து.வி: தலைவன் பரத்தையரோடு புதுப்புனலாடி மகிழ்ந்தான் என்று கேட்டதும், தலைவியின் நெஞ்சம் கொதிப்புற்று வெதும்புகின்றது. அவன், இல்லந் திரும்பியவன், ஆர்வத்தோடு தலைவியை நெருங்க, அவள் அதனைச் சொல்லிப் புலக்கின்றாள். அவன், அச்செய்தி பொய்யென மறுக்க, அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

அலமரல் ஆயமொடு அமர்துணை தழீஇ
நலமிகு புதுப்புனல்ஆடக் கண்டோர்
ஒருவரும் இருவரும் அல்லர்;
பலரே தெய்ய; மறையா தீமே.


தெளிவுரை: எப்போதும் சுற்றிச் சூழ்ந்தவராக வந்து கொண்டிருக்கும் ஆயமகளிரோடும் கூடிய, நின்னால் விரும்பப்படும் பரத்தையைத் தழுவிக் கொண்டவனாக, நீதான், நலத்தை மிகுவிக்கும் புதுப்புனலிலே நேற்று ஆடினை; அதனைக் கண்டோர் ஒருவரோ இருவரோ அல்லர்; அவர் மிகப்பலராவர்; ஆதலின், எம்பால் அதனை மறைத்து ஏதும் நீ கூறுதல் வேண்டா!

கருத்து: 'அவர்பாலே இனியும் செல்வாயாக' என்றதாம்.

சொற்பொருள்: அலமரல் ஆயம் - சுற்றிச் சூழ்ந்தவராக வரும் ஆயமகளிர். அமர்துணை - விரும்பிய பரத்தை. 'தெய்ய': அசைச் சொல். மறையா தீமே - மறையா திருப்பாயாக.

விளக்கம்: தம் தலைவி செல்லுமிடமெங்கணும் பாதுகாவலாகவும், ஏவுபணி செய்யவும் சுற்றிச் சூழ்ந்து வருபவராதலின், 'அலமரல் ஆயமகளிர்' என்றனள். 'ஆயமகளிர் அலமர நீ பரத்தையுடன் கூடிப் புனலாடினை' என, அவர் அவ்வுறவின் நிலையாமை பற்றிக் கலங்கி வருந்தியதாகவும், கொள்ளலாம். நலமிகு புதுப்புனல் - உ0ல் மன நலத்தை மிகவாக்கும் புதுப்புனல்; அழகுமிகுந்த புதுப்புனலும் ஆம். 'அமர்துணை' என்றது பரத்தைமை; 'நீ அமர்துணை யாமல்லேம், அவளே' என்று கூறியதும் ஆம். கண்டார் பலர் என்றது, அதனால் ஊரில் எழுந்த பழிச்சொல்லும் மிகுதியெனக் கூறியதாம். இவ்வாறு, தலைவர்கள் பரத்தையரோடு புதுப்புனலாடலையும், அதுகேட்டு மனைவியர் சினந்து ஊடலையும், அயர்ந்தனை என்ப' என அகநானூற்றும் இயம்பக் காணலாம். (அகம். 116).

65. புதல்வனை ஈன்ற மேனி!


துறை: ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகற்குத், தலைமகள் சொல்லியது.

(து.வி: புதல்வனைப் பெற்ற வாலாமை நாளில், திதலை படரவும் தீம்பால் கமழவும் தலைவி விளங்குகின்றாள். அவ்வேளை அவளைத் தழுவுதற்கு முற்பட்ட தலைவனுக்குத், தலைவி கூறித் தடுப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

கரும்புநடு பாத்தியிற் கலித்த ஆம்பல்
சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊர!
புதல்வனை ஈன்றவெம் மேனி
முயங்கன்மோ தெய்ய; நின் மார்பு சிதைப்பதுவே.


தெளிவுரை: கரும்பு நடுவதற்கேனச் செப்பஞ்செய்த பாத்தியிலே, தானாகவே தழைத்த நீராம்பலானது, வண்டினத்தின் பசியைப் போக்குகின்ற, பெரும்புனல் வளமுடைய ஊரனே! புதல்வனை ஈன்ற எம் மேனியைத் தழுவாதேகொள்! அதுதான் நின் மார்பின் அழகுப் புனைவுகளைச் சிதைத்துவிடும்!

கருத்து: 'அதனால், நின் பரத்தையும் நின்னை ஒதுக்குவாள்' என்றதாம்.

சொற்பொருள்: பாத்தி - பகுத்துப் பகுத்து பகுதி பகுதியாக அமைத்துள்ள நிலப்பகுப்பு. கலித்த - செழித்துத் தழைத்த. மார்பு சிதைப்பதுவே - மார்பின் எழிலைச் சிதைப்பதாகும்.

உள்ளுறை: 'கரும்பை நடுவதற்கென்று ஒழுங்குசெய்த பாத்தியில், ஆம்பல் கலித்துச் சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊரன்' என்றது. இல்லறம் செவ்வையுற நடத்தற்காக அமைத்த வளமனைக் கண்ணே வந்து சேர்ந்தாளான பரத்தையும், தலைவனுக்கு இன்பம் தருவாளாயினள் என்றதாம். தலைவன் தன்னைத் தழுவ முயலும்போது, அவன் மார்பின் பூச்சுப் புனைவுகளைக் கண்டு, அவன் பரத்தைபாற் செல்வதாக நினைத்து, 'எம்மைத் தழுவின் எம் மார்பின் பால்பட்டு அவ்வழகு சிதையும்; பரத்தையும் அதுகண்டு நின்னை வெறுப்பாள்' என்று தலைவி மறுத்துக் கூறினள் என்பதும் பொருந்தும்.

விளக்கம்: 'புதல்வனை ஈன்ற எம்மேனி' என்றது, அந்த உரிமை இல்லாதவள் பரத்தை என்று தன் சிறப்புரை கூறிக் காட்டற்காம். கரும்பு நடு பாத்தியில் ஆம்பல் கலித்தாற் போலத், தானிருந்து இல்லறமாற்றற்குரிய வளமனையில், தலைவன் பரத்தையைக் கொணர்ந்து கூடியிருந்தான் என்று கேட்ட செய்தியால் மனமிடிந்து, தலைவி கூறியதாகவும் கொள்க. பெரும்பாலுன் தமிழின மரபு முதற் பிள்ளைப்பேறு தாய்மனைக்கண்டே நிகழ்வதே ஆதலின், தலைவன், இவ்வாறு பரத்தையைத் தன் வீட்டிடத்தேயே கொணர்ந்து கூடியிருத்தலும் நிகழக்கூடியதே யாகும்.

மேற்கோள்: இது வினையுவமப் போலி; என்னை? தாமரையினை விளைப்பதற்கன்றிக் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியுள் தானே விளைந்த தாமரை, சுரும்பின் பசி தீர்க்கும் ஊரன் என்றாள். இதன் கருத்து. அது காதற் பரத்தையர்க்கும் இற்பரத்தையர்கும் என்று அமைக்கப்பட்ட கொயிலுள்யாமும் உளமாகி, இல்லறம் பூண்டு விருந்து ஓம்புகின்றனம்; அதுபோல என்பதாகலான், உவமைக்குப் பிரிதொரு பொருள் எதிர்த்து உவமம் செய்யாது, ஆண்டுப் பிறந்தனவற்றோடு நோக்கிக் கருத்தினாற் கொள்ள வைத்தலின், இஃது உள்ளுறை உவமம் ஆயிற்று. அவற்றுள்ளும், இது சுரும்பு பசிகளையும் தொழிலோடு, விருந்தோம்புதல் தொழில் உவமங்கொள்ள நின்றமையின், வினையுவம்பஃ போலியாயிற்று. இங்ஙனம் கூறவே, இதனை இப்பொருண்மைத்து என்பதெல்லாம் உணருமாறு என்னை? எனின், முன்னர், 'துணிவோடு வரூஉம் துணிவினோர் கொளினே' எனல் வேண்டியது, இதன் அருமை நோக்கியன்றே என்பது. அல்லாக்கால், கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை, சுரும்பு பசிகளையும் பெரும்புனல் ஊர என்பது பயமில வென்பது கூறலாம் என்பது'' என, இச் செய்யுளை, நன்கு விளக்குவர் பேராசிரியர் - (தொல். உவமம். 25).

புதல்வன் தோன்றிய நெய்யணி நயந்த கிழவனை, நெஞ்சு புண்ணுறுமாறு பண்ணிச் செறிவு நீக்கிய இளிவந்த நிலையின் கண், தலைவிக்குக் கூற்று நிகழும் எனக் காட்டுவர், இளம் பூரணர் - (தொல். கற்பு. 6).

புதல்வற் பயந்த காலத்துப் பிரிவு பற்றித் தலைவி கூறியது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு - 6).

பரத்தையினது இல்லிலிருந்து தலைவனது வரவைப் பாங்கிகூற, அதையுணர்த்த தலைவி, தலைவனோடு புலந்தது எனக் காட்டுவர் நம்பியகப் பொருள் உரைகாரர் - (கற்பு, 7).

66. யார் அவள் உரைமோ?


துறை: புதல்வனைப் பிரியாதவன் பிரிந்து, புறத்துத் தங்கி வந்தானாக, அவனோடு புலந்து தலைமகள் சொல்லியது.

(து.வி: புதல்வனைப் பிரியாதவனாக இருந்த தலைவன், ஒரு சமயம் அவனையும் பிரிந்துபோய், பரத்தையோடு உறவாடி விட்டு இரவினும் அங்கே தங்கியிருந்து காலையிலே வந்தான் என்றறிந்த தலைவி, அவனோடு மனமாறுபட்டுக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

உடலினென் அல்லேன்; பொய்யாது மோ;
யார் அவள், மகிழ்ந! தானே - தேரொடு, நின்
தளர்நடைப் புதல்வனை யுள்ளி, நின்
வளமனை வருதலும் வௌவி யோளே?


தெளிவுரை: மகிழ்நனே! உருட்டி விளையாடும் சிறுதேரின் பின்னாகத் தளர்நடை நடந்தவனாக வருகின்ற நம் புதல்வனைக் காணவிரும்பி, நின் வளமனைக்கு நீதான் வந்தடைந்தும், நின் பின்னாலேயே தொடர்ந்துவந்து, நின்னைப் பற்றிக் கொண்டு போனவள்தான், யாவள் என்று எனக்குக் கூறுவாயாக. யான் நிற்பாற் சினந்தேன் அல்லேன்; ஆதலின், உண்மைதான் ஈதென்று, நீயே சொல்வாயாக.

கருத்து: 'நின் வேற்றுறவு வீடுவரைக்கும் வந்துவிட்டதே' என்றதாம்.

சொற்பொருள்: உடலல் - சினத்தல். தேர் - சிறுதேர். தளர்நடை - அசைந்து நடக்கும் சிறுநடை; கால் வலுப் பெறாததால் தள்ளாடும் நடை. வளமனை - வளமான இல்லம். வௌவல் - கவர்ந்து கொண்டு போதல்.

விளக்கம்: புதல்வன் தெருவில் சிறு தேருருட்டிச் செல்லக் கண்ட தலைவன், அவன்பாற் பேரன்பினன் ஆதலின், தான் ஏகக்கருதிப் புறப்பட்ட பரத்தையின் இல்லம் நோக்கிப் போதலையும் மறந்து, புதல்வனைப் பின்பற்றி, மீளவும் வீட்டைநோக்கி வருகின்றான். அப்போது, அவனைக் காணாதே தேடிவந்த பரத்தையானவள், அவனைப் பற்றிக் கொண்டு தன்னிலம் நோக்கி அழைத்தேகினள். இதனைக் கண்ட தலைவி, பின்னர் வந்த தலைவனிடம் கூறியது இது.

பரத்தையே தலைவனின் புதல்வனைத் தெருவிடைக் கண்டதும், அவன்பால் ஆசைகொண்டாளாகத், தூக்கியணைத்தபடியே, தலைவனில்லத்துப் புகுந்தனள். புகுந்தவள், அங்கு எதிர்பட்ட தலைவனைத் தன்னில்லத்திற்குப் பற்றிச் சென்றனள் என்பதும் பொருந்தும். அதுகண்டு தலைவி ஊடினள் என்றும் அப்போது சொல்க.

'உடலினேன் அல்லேன்' என்றது, அவள் தன் கற்புச் செவ்வி தோன்றக் கூறியதாம்; 'பொய்யாது உரைமோ' என்றது, பொய்த்தலே தலைவனின் இயல்பாதலைச் சொட்டிக் கூறியதாம்.

மேற்கோள்: புதல்வனை நீங்கிய வழித் தலைவி கூறியதற்கு இதனை எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு, 6).

67. அவள் மடவள்!


துறை: தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை, புறனுரைத்தாள் எனக் கேட்ட தலைவி, தலைமகன் வந்துழி, அவள் திறத்தாராய் நின்று ஒழுகும் வாயில்கள் கேட்பச் சொல்லியது.

(து.வி: பரத்தை தன்னைப் பற்றி இழிவாக ஏதோ கூறினாள் எனக் கேட்டாள் தலைவி; தலைமகன் வீடு வந்துவிடத்து, அப் பரத்தைக்கு வேண்டியவர்கள் கேட்குமாறு, அவனிடத்தே ஊடிச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

மடவள் அம்ம, நீ இனிக் கொண் டோளே -
'தன்னொடு நிகரா என்னொடு நிகரிப்
பெருநலம் தருக்கும்' என்ப; விரிமலர்த்
தாதுண் வண்டினும் பலரே,
ஓதி யொண்ணுதல் பசப்பித் தோரே!


தெளிவுரை: தலைவனே! நீ இப்போது தலைக்கொண்டு ஒழுகும் பரத்தையானவள், தன்னை என்னோடும் நிகரினளாகக் கருதித், தன் பெருநலத்தைத் தருக்கடன் வியந்து கூறினாள் என்பர். நின்னாலே முன்பு நலனுண்ணப்பட்டு, ஓதியடுத்த ஒளிநுதல் பசப்பிக் கொண்டோரான மகளிர்கள், இதழ்விரிந்த மலர்களிலே தாதுண்டு பின் அதனை மறந்துவிடும் வண்டினாற் கழிக்கப்பட்ட மலர்களினும் பலராவரே! இதனை அவள் அறிந்திராத மடமையாட்டியே போலும்!

கருத்து: 'அவள் நின்னைப் பற்றிய உண்மையினை அறியாள் போலும்' என்றதாம்.

சொற்பொருள்: மடவள் - மடமையுடையவள். இனி - இப்பொழுது. கொண்டோள் - தன்பாற் பிணித்துக் கொண்டவள். நிகரி - நிகராகக் கருதி மாறுபட்டு, தருக்கும் - செருக்குக் கொள்ளும். விரிமலர் - மொட்டவிழ்ந்த புதுமலர்.

விளக்கம்: 'தலைவனின் காதற் பரத்தை, தலைவியோடு தன்னையும் ஒருசேரக் கருதினளாக ஒப்பிட்டுக் கொண்ட, தான் தலைவியினும் பலவாகச் சிறந்தவள் என்றும் கூறினாள்' எனக்கேட்டுப் புலந்திருந்தவள் தலைவி. தலைமகன் தன்னை நாடிவந்தபோது, அப்பரத்தையின் தொழியர் கேட்பத் தலைவனுக்குச் சொல்வது போல இப்படிக் கூறுகின்றாள். தன்னை இழிந்தாளான பரத்தை ஒருத்தி பழித்தற்குக் காரணமாஇனவன் தலைவனே என்று, அவன் செயலைப் பழித்ததும் ஆம். 'அவளையும் தலைவன் விரைவிற் கைவிட்டு வேறொருத்தியை நாடுவான்' என்று, அவன் நிலைமை கூறிப் பரத்தையின் செருக்கழிதற்கு உண்மையுணர்த்திக் காட்டியதுமாம்.

'விரிமலர்த் தாதுண் வண்டினும் பலரே ஓதி ஒண்ணுதல் பசப்பித்தோரே' என்பதற்கு, 'அவளைத் தழுவி யின்புற்றுப் பிரிந்து போயின ஆடவரும் மிகப் பலராவர்' என்று பொருள் காணலும் பொருந்தும்; தன் கற்புச்சால்பும் பரத்தையின் இழிவும் கூறியதாகவும் அது அமையும்.

உள்ளுறை: வண்டொன்று பலப்பல மலரினும் சென்று சென்று தேனுண்டு, பின் அப் பூக்களை நாடாது வாடியுதிர விட்டுக் கழித்தல்போலத், தலைவனும் புதியரான பரத்தையரை நாடிச் சென்று கூடி இன்புற்று, அவரைக் கைவிட்டு விடும் இயல்பினன், என்று உவமைப்படுத்தினள்.

மேற்கோள்: காமக் கிழத்தியர் நலம்பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின்கண், தலைவி கூற்று நிகழும். இதனுள் இப்பொழுது கிடையாதது கிடைத்தாக வரைந்து கொண்ட பரத்தை, தன்னொடு இளமைச் செவ்வோ ஒவ்வா என்னையும் தன்னொடு ஒப்பித்துத், தன் பெரிய நலத்தாலே மாறுபடும் என்பவென, அவள் நலத்தைப் பாராட்டியவாறும், நீ பசப்பித்தோர் வண்டு தாதுண்ட மலரினும் பலரெனத் தீமையின் முடித்தவறானும் காண்க என, இச்செய்யுளைக் கற்பியற் சூத்திர உரையிற் காட்டிப் பொருள்விளக்கம் தருவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு, 6) இதனையும் நினைத்து பொருள் கொண்டு மகிழ்க.

68. அடக்கவும் அடங்காள்!


துறை: பரத்தை, தான் தலைமகளைப் புறங்கூறி வைத்துத், தன்னைத் தலைமகள் புறங்கூறினாளாகப் பிறர்க்குக் கூறினமை கேட்ட தலைவி, தலைமகற்குச் சொல்லியது.

(து.வி: தலைமகளைப் பழித்துப் பேசின பரத்தை, தலை மகள் தன்னைப் பழித்ததாகப் புறங்கூறித் திரிகின்றாள். அதனைக் கேள்வியுற்ற தலைவி, தலைவினிடம் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

கன்னி விடியல், கணைக்கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர!
பேணாளோ நின் பெண்டே
யான்தன் அடக்கவும், தான் அடங்கலளே?


தெளிவுரை: திரண்ட தண்டையுடைய ஆம்பலானது, கன்னி விடியற்போதிலே, தாமரையைப் போலவே இதழ் விரித்து மலர்ந்திருக்கும் ஊரனே! யான் நின் போற்றா ஒழுக்கம் தெரிந்தும், என் வேதனையை அடக்கிக் கொண்டிருப்பவும், நின் பரத்தையானவள், தான் அடக்கமிலாது நடக்கின்றனளே! நின் பெண்டானவள் எப்போதுமே அடக்கத்தைப் பேண மாட்டாளோ?

கருத்து: 'அத்தகையாளையே நச்சிச் செல்லும் நின் தகைமைதான் யாதோ?' என்றதாம்.

சொற்பொருள்: கன்னி விடியல் - கதிரவன் உதயத்துக்கு முற்பட்ட இளங்காலைப் பொழுது; இதற்கு முந்திய இரவுப் போதைக் 'கன்னி இருட்டு' என்பார்கள். ஆம்பல் - செவ்வாம்பல். பேணாளோ - அடக்கத்தைக் காத்துப் பேணமாட்டாளோ? 'பெண்டு' என்றது காதற் பரத்தையை. யான் தன் அடக்கவும் - யான் என் சினத்தைத் தகுதியால் அடக்கியிருக்கவும்; அவள் பழித்தலைப் பாராட்டாதிருக்கவும், அடங்கலள் - அடங்காதே, என்னையே பழித்துப் புறங்கூறித் திரிவாளாயினள்.

விளக்கம்: தலைவியின் உயர்குடிப் பண்பும், பரத்தையின் குடிப்பண்பும் அவர்தம் அடக்கமுடைமை இன்மை பொருளாக இச் செய்யுளில் காட்டப் பெற்றன. தனக்குரியாளைக் கொண்ட பரத்தையைத் தலைவி பழித்தல் இயல்பேனும், அவள், தன் குடித்தகுதியால் அடக்கம் பேணுகின்றனள்; பரத்தையோ தன் இளமைச் செவ்வியும் தலைவியின் புதல்வற்பெற்ற தளர்ச்சி நலிவும் ஒப்பிட்டுத் தலைவியைப் பழித்தனள். இதற்குக் காரணமானவன் தலைவனே என்று தலைவி மனம் நொந்து கூறியதுமாம்.

உள்ளுறை: சிறப்பில்லாத சேதாம்பல் தாமரை போல மலரும் ஊரன் என்றது, சிறப்பற்ற பரத்தையும் தான் தலைவனுக்கு உரிமையாட்டி போலத் தருக்கிப் பேசுவாளாவள் என்பதைச் சுட்டிக் கூறியதாம்.

69. கண்டனம் அல்லமோ!


துறை: தலைமகன், பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையைக் களவில் மணந்து ஒழுகுகின்றதனை அறிந்த தலைமகள், தனக்கில்லை என்று அவன் மறைத்துழிச் சொல்லியது.

(து.வி: தலைவனின் பரத்தைமையுறவை அறிந்தாள் தலைவி. அவள் கேட்கவும், தலைவன் 'அவ்வொழுக்கம் தனக்கில்லை' என்று உறுதிபேசி மறுக்கின்றான். அப்போது தலைவி அவனுக்குச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

கண்டனெம் அல்லமோ, மகிழ்ந! நின்பெண்டே?
பலராடு பெருந்துறை, மலரொடு வந்த
தண்புனல் வண்டல் உய்த்தென
உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே!


தெளிவுரை: மகிழ்நனே! பலரும் கூடியாடுகின்ற ஆற்றுப் பெருந்துறையினிடத்தே, மலரோடும் பெருகி வந்த தண்ணிய புனலானது தான் அமைத்த வண்டலை அடித்துக் கொண்டு போயிற்றென, தன் மையுண்ட கண்கள் சிவப்படையுமாறு அழுது நின்றாளே, அவள் நின் பெண்டே அன்றோ! அவளை யாமும் அந்நாட் கண்டேம் அல்லமோ?

கருத்து: 'நின் பெண்டு யாரென்பதை யாம் அறிவோம்' என்றதாம்.

சொற்பொருள்: வண்டல் - மணலாற் கட்டிய சிற்றில். உய்த்தென - கொண்டு போயிற்று என. 'மலரொடு வந்த தண்புனல்'. எனவே புதுப்புனல் என்க. பலராடு பெருந்துறை - பலரும் சேர்ந்து நீராடியபடி இருக்கும் பெரிய நீர்த்துறை.

விளக்கம்: பலராடு பெருந்துறையிலே, வண்டல் இழைத்திருந்த பெண், அது நீரால் அடித்துப் போகப்பட, அது குறித்து உண்கண் சிவப்ப அழுதாள் என்பது, அவளது அறிய இளமைப் பருவத்தினைக் காட்டிக் கூறியதாம். மணல் வீடு அழிதற்கே அவ்வாறு தாங்காதே அழுதவள், நீ மறந்து கைவிட்டால் தாங்குவதிலள்; அதனால் நீயும் அவளிடமே செல்வாயாக என்று புலந்து ஒதுக்கியதுமாம். 'கண்டனெம்' என்றது' முன் நேரிற் கண்டதனை நினைவுபடுத்தியது.

மேற்கோள்: காமஞ்சாலா இளமையோளைக் களவின்கண் மணந்தமை அறிந்தேன் எனத் தலைமகனை நோக்கித் தலைவி கூறியது இது எனக் கற்பியலிற் காட்டுவர் நச்சினார்க்கினியர் - தொல். கற்பு, 6).

70. யாம் பேய் அனையம்!


துறை: பரத்தையரோடு பொழுது போக்கி, நெடிது துய்த்து வந்த தலைமகனோடு, தலைமகள் புலந்து சொல்லியது.

(து.வி: பரத்தையரோடு நெடுநேரம் கலந்திருந்து களித்தபின், தன் வீடு திரும்புகின்றான் தலைவன். அவனிடம், அத்தகவல் அறிந்தாளான தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

பழனப் பன்மீன் அருந்த நாரை
கழனி மருதின் சென்னிச் சேக்கும்
மாநீர்ப் பொய்கை யாணர் ஊர!
தூயர்; நறியர் - நின் பெண்டிர்;
பேஎய் அனையம், யாம் : சேய் பயந்தனமே!


தெளிவுரை: பழனத்தேயுள்ள பலவான மீன்களையும் பற்றியுண்ட நாரையானது, கழனியிடத்தேயுள்ள மருத மரத்தின் உச்சியிலே சென்று தங்குகின்ற, மிக்க நீர் நிறைந்த பொய்கையினையும், புதுவருவாய்ப் பெருக்கினையும் கொண்ட ஊரனே! யாம் சேயினைப் பெற்றுள்ளேமாதலின், நின் பார்வைக்குப் பேயினைப் போன்றவரே யாவோம்; நின் பெண்டிரான பரத்தையரோ தூய்மையும் நறுமணமும் உடையவராவர்!

கருத்து: 'அதுபற்றியே போலும் நீயும் அவரை நாடிச் சுற்றுவாய்' என்றதாம்.

சொற்பொருள்: பழனம் - ஊர்ப் பொது நிலம்; எப்போதும் நீர்ப்பெருக்கு உடையதாகிப் பலவகை மீன்கள் செழித்திருக்கும் வளம் பெற்றது ஆகும். அருந்த - அருந்திய. சேக்கும் - சென்று தங்கியிருக்கும். கழனி - வயல். சென்னி - உச்சி. மாநீர் - மிகுநீர். கருமையான நீரும் ஆம். தூயர் - மகப் பெற்றாரிடம் எழும் பால்நாற்றம் இல்லாதவர். நறியர் - நறுமணப் பொருள்களால் தம்மைப் புனைந்துடையோர். பேஎய் - வெறுக்க வைக்கும் உருவம் உடையதாகச் சொல்லப்படுவது: மெலிந்த மேனியும், குழிந்த கண்களும், ஒப்பனையிழந்து, பால்முடை நாறும் மார்பமும் கொண்டவள் தான் என்பது தோன்றக் கூறியது.

விளக்கம்: 'நின் கண்ணுக்கு யாம் பேய் அனையம்' எனினும், நின்குடிக்கு விளக்கம் தரும் புதல்வனைப் பெற்றுத் தந்த தகுதியும் உடையோம்' எனத் தன் தாய்மைப் பெருமிதம் தோன்றக் கூறியதாம். 'தூயர் நறியர்' என்றது, உடலால் தூயரேனும் மனத்தால் தூயரல்லர்; புனைவுகளால் நறியரேனும் பண்பால் நறியரல்லர் என்றதாம்.

உள்ளுறை: பழனப் பன்மீனுண்ட புலவு நாற்றத்தையுடைய நாரையானது. கழனி மருதின் சென்னிடத்தே சென்று தங்குமாறு போல, பரத்தையரோடு கலந்துறவாடிக் களித்த நீதானும், இப்போது சிறிதே இளைப்பாறுதலின் பொருட்டாக, எம் இல்லத்திற்கும் வந்தனை போலும் என உள்ளுறையாற் கூறினள்.

இழிந்த புலால் உண்ணும் நாரைக்கு, உயர்ந்த மருதின் சென்னி தங்குமிடம் ஆயினாற்போல, பரத்தையருறவே விரும்பிச் செல்லும் நினக்கும், மகப்பயந்து உயர்ச்சிகண்ட எம்மனைதான் தங்கிப் போகும் இடமாயிற்றோ என்பதும் ஆம்.

காதல் மனைவியோடு கலந்தின்புற்றுக் களித்த தலைவன், அவள் மகப் பெற்றுள்ள நிலையிலே, இன்ப நாட்டம் தன்பால் மீதூறலினாலே தளர்ந்த மனத்தினனாகி, இவ்வாறு பரத்தையர்பாற் செல்வதும், பின்னர் திருந்துவம் இயல்பாகக் கொள்க.

8. புனலாட்டுப் பத்து


இப்பகுதியில் அமைந்துள்ள பத்துச் செய்யுட்களும், மருத நிலத்தாரின் புனலாட்டும், அதன் கண்ணே நிகழும் செய்திகளும் கொண்டிருப்பன. தலைமகன் பரத்தையரோடு கூடிப் புனலாடினான் எனக் கேட்டுத் தலைமகள் புலந்து கூறுவதும், அவள் பொருட்டுத் தோழி கூறுவதும் மிகவும் நுட்பமான பொருட்செறிவு கொண்டனவாகும். அதனால், இதனைப் புனலாட்டுப் பத்து என்றனர்.

71. ஞாயிற்றொளியை மறைக்க முடியுமோ?


துறை: 'பரத்தையரோடு புனலாடினான்' எனக் கேட்டுப் புலந்த தலைமகள், தலைமகன் அதனை இல்லை என்று மறைத்துழிச் சொல்லியது.

(து.வி: 'பரத்தையரோடு நேற்று நின் தலைவன் புதுப்புனலாடி இன்புற்றான்' என்று, தலைவியிடம் கண்டார் பலரும் வந்து கூறிப் போகின்றனர். அதனால், அவள் உள்ளம் நொந்து மிகவும் வாடியிருந்தாள். அப்போது, அவள்பால் வந்த தலைவனிடம் அதுபற்றிக் கேட்க, அவன் இல்லவே இல்லை என மறைத்துப் பேசுகின்றான். அப்போது, தலைவி சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

சூதார் குறுந்தொடிச் சூர் அமை நுடக்கத்து
நின்வெங் காதலி தழீஇ, நெருநை
ஆடினை என்ப, புனலே; அலரே
மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந?
புதைத்தல் ஒல்லுமோ, ஞாயிற்ற தொளியே!


தெளிவுரை: மகிழ்நனே! உள்ளே துளைபொருந்திய குறியவான தொடிகளையும், அச்சம் பொருந்திய அசை வினையுமுடைய, நின் விருப்பத்திற்குரிய காதலியைத் 'தழுவினவனாக, நீயும் நேற்றைப் போதிலே புதுப்புனலாடினை என்பார்கள். ஞாயிற்றினது விரிந்து பரவும் ஒளியினை எவராலும் யாதாலும் மறைத்தல் முடியுமோ? அதுபோலவே, நீ புனலாடியதாலே எழுந்த பெரும் பழியினையும், நின் மாயப் பேச்சுக்களாலே நின்னால் மறைத்தற்கு இயலுமோ?'

கருத்து: 'நின் பொய்யுரை வேண்டா! யாம் உண்மை அறிவேம்' என்றதாம்.

சொற்பொருள்: சூதார் குறுந்தொடி - உள்ளே துறையுடையதாகச் செய்யப் பெற்ற குறுந்தொடி; சூதான சிந்தையோடு ஒலிக்கும் குறுந்தொடிகளும் ஆம். சூர் - அச்சம், சூர் அமை நுடக்கம் - துவண்டு நடக்கும் நடையழகால் ஆடவரைத் தம் வலைப்படுத்து அழித்தலால், இவ்வாறு அச்சம் அமைந்த அசைவு என்றனர். புதைத்தல் - மூடி மறைத்தல்.

விளக்கம்: ஞாயிற்றின் ஒளியை எவராலுமே மறைக்க வியலாதே போல, அதுதான் எங்கும் பரவி நிறைவதேபோல, நீ பரத்தையருடனே புனலாடினதால் எழுந்த பழிப்பேச்சும் எவராலும் மறைத்தற்கியலாததாய் எங்கும் பரவிப் பெரும்பழி ஆயிற்று; அதனை நின் மாயப் பேச்சால் மறைத்து மாற்ற வியலாத் என்கிறாள் தலைவி. 'ஞாயிற்று ஒளியை மறைத்தல் ஒல்லுமோ?' என்றது, நீ கலந்து புனலாடினையாதலின், நின்னை ஊரவர் யாவரும் அறிவாராதலின், அதனை நின்னால் மூடி மறைக்க இயலாது என்றதும் ஆம். அலர் அஞ்சியேனும் அவன் அவ்வாறு நடந்திருக்க வேண்டாம் என்பது அவள் சொல்வது; இது, அவன் புறத்தொழுக்கத்தோடு, ஊரறிந்த பழிப்பேச்சும் உள்ளத்தை வருத்தக் கூறியதாம்.

72. எமக்குப் புணர்துணை ஆயினள்!


துறை: தலைமகள் புலவி நீக்கித் தன்னோடு புதுப்புனல் ஆட வேண்டிய தலைமகன், களவுக் காலத்துப் புனலாட்டு நிகழ்ந்ததனை அவள் கேட்பத் தோழிக்குச் சொல்லியது.

(து.வி: தலைவன் பரத்தையரோடு புனலாடினான் எனக் கேட்டு, அவனுடன் ஊடியிருந்தாள் தலைவி. தலைவன் அஃதறிந்து வந்து, அவளைத் தன்னோடு புனலாட, வருமாறு அழைக்க, அவள் மறுக்கின்றாள். அப்போது அவன், தோழிக்குச் சொல்வதுபோல, தலைவியும் கேட்டு மனங் கொள்ளுமாறு, முன்னர்க் களவுக்காலத்தே, தான் அவளோடு புதுப்புனல் ஆடியது பற்றிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

வயன்மலர் ஆம்பல் கயிலமை நுடங்குதழைத்
திதலை அல்குல், துயல்வரும் கூந்தல்,
குவளை உண்கண், ஏஎர் மெல்லியல்
மலரார் மலிர்நிறை வந்தெனப்
புனலாடு புணர்துணை யாயினள், எமக்கே.


தெளிவுரை: வயலிடத்தே மலர்ந்த ஆம்பலாலே தொடுக்கப் பெற்றதும், மூட்டுவாய் கொண்டதுமான, அசைகின்ற தழையுடையினையும், திதலை படர்ந்த அல்குலையும், அசைந்தாடும் கூந்தலையும், குவளை மலர் போன்ற மையுண்ட கண்களையும் கொண்ட, அழகிய மெல்லியலாளான இவள், மலர் மிகுந்த புதுவெள்ளம் ஆற்றிலே பெருகி வந்ததாக, அதன் கண்ணே புனலாட்டயர்தற்கு, என்னோடும் இணைந்திருக்கும் துணையாகப் பண்டு விளங்கினவளே காண்!

கருத்து: அவள், 'இப்போதும் மறுக்கமாட்டாள்' என்றதாம்.

சொற்பொருள்: வயன் மலர் ஆம்பல் - வயலிடத்தே செழித்து மலர்ந்திருந்த ஆம்பல்; கயில் - மூட்டுவாய்; தழையுடையை இடுப்பில் இணைத்துக் கட்டுதற்கு உதவும் பகுதி. நுடங்கல் - அசைதல். ஏஎர் - அழகு. மெல்லியல் - மென்மைத் தன்மை கொண்டவள்; என்றது தலைவியை. மலரார் - மலர்கள் மிகுதியான. மலர்நிறை - புதுவெள்ளம். புணர்துணை - உடன் துணை.

விளக்கம்: பலரறி மணம் பெறுமுன்பே அவ்வாறு என் மேலுள்ள காதலன்பாற் புனலாட வந்தவள், அலரினைப் பற்றியும் நினையாதவள், இப்போது என் உரிமை மனையாளான பின் வராதிருப்பாளோ என்றதாம். அவள் அழகுநலம் எல்லாம் கூறினான், இன்றும், தான் அவற்றையே அவளிடம் காண்பதாகக் கூறி, தான் பிறரைச் சற்றும் நினையாதவன் எனத் தெளிவித்தற்காம்.

மேற்கோள்: 'இது தலைவி புலவி நீங்கித் தன்னோடு புனலாட வேண்டிய தலைவன், முன்பு புனலாடியதனை அவள் கேட்பத் தோழிக்கு உரைத்தது' என, இச் செய்யுளை எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல். பொ, 191).

73. குவளை நாறிய புனல்!


துறை: மேற்பாட்டின் துறையாகவே கொள்க.

வண்ண ஒண்தழை நுடங்க, வாலிழை
ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக்,
கண்ணறுங் குவளை நாறித்
தண்ணென் றிசினே - பெருந்துறைப் புனலே!


தெளிவுரை: அழகிய ஒளிகொண்ட தழையுடையானது அசைந்தாட, தூய அணிகளையும் ஒள்ளிய நுதலையும் கொண்ட அரிவையானவள், புனல் விளையாட்டிடத்தே பெருந்துறைப் புனலிலே பாய்ந்தாளாக, அந்நீரும் இவள் கண்ணென்னும் நறிய குவளை மலரின் மணத்தை உடையதாகித், தண்ணிதாகியும் குளிர்ந்து விட்டதே!

கருத்து: 'அவள் இப்போதும் என்னுடன் வர மறுப்பதிலள்' என்றதாம்.

சொற்பொருள்: வண்ணம் - அழகு; பல வண்ணமும் ஆம். ஒண்தழை - ஒளி செய்யும் தழையுடை; ஒளி செய்தல், பெரும்பாலும் தளிராலே தொடுக்கப்படலால்; வெண்தழை என்றும் பாடம். வாலிமை - தூய்மை. பண்ணை - விளையாட்டு.

விளக்கம்: இவள் புனலாட நீரிற் குதித்தபோது, நீரும் இவள் குவளைக் கண்ணின் சேர்க்கையால் குவளைநாறி, இவள் மேனியின் தொடர்பால் தண்ணென்றாயிற்று எனப் போற்றிப் புகழ்ந்து உரைக்கின்றனன். இதனால் மனம் பழைய நினைவிலே தாவிச் சென்று மகிழத், தலைவியும் தன் புலவி நீங்கித் தலைவனோடு புனலாடச் செல்வாள் என்பதாம்.

மேற்கோள்: இஃது உருவுவமப் போலி; நீ புனலாடிய ஞான்று பரத்தை பாய்ந்தாடிய புனலெல்லாம் தண்ணென்ற தெனக் கூறியவழி, அத்தடம்போல, இவள் உறக்கலங்கித் தெளிந்து தண்ணென்றாள் என்பது கருதி உணரப்பட்டது. அவளோடு புனல்பாய்ந் தாடிய இன்பச் சிறப்புக் கேட்டு நிலையாற்றாள் என்பது கருத்து என்பர் பேராசிரியர். (தொல். உவம, 25)

74. விசும்பிழி தோகை!


துறை: மேற்சொய்யுளின் துறையே இதுவும்.

விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே
பசும்பொன் அவிரிழை பைய நிழற்றக்
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே!


தெளிவுரை: பசும் பொன்னாலான ஒளியணிகள் விட்டு விட்டு ஒளிசெய்ய, கரையைச் சேர்ந்திருந்த மருத மரத்திலே ஏறி, நீர் விளையாட்டயரும் இடத்தே மேலிருந்தே பாய்பவளின் - அஃதாவது இத்தலைவியின் - குளிர்ந்த நறிய கூந்தலானது, விசும்பிலிருந்து இழியும் தோகை மயிலது சீரைப் போன்று இருந்ததே!

கருத்து: 'அத்துணை அழகியாளை மறப்பேனோ' என்றதாம்.

சொற்பொருள்: விசும்பு - வானம். இழிதல் - மேலிருந்து கீழாக இறங்கல். 'தோகை' என்றது, தோகையுடைய ஆண் மயிலை. சீர் - சிறந்த அழகு. 'பசும்பொன்' - மாற்றுயர்ந்த பொன். அவிரிழை - ஒளிசிதறும் அணிவகைகள். பைய - மெல்ல. நிழற்ற - ஒளி செய்ய. கரைசேர் மருதம் - கரையிடத்தே வளர்ந்துள்ள மருத மரம். பண்ணை - மகளிர் நீர் விளையாட்டு நிகழ்த்தும் இடம். பாய்தல் - மேலிருந்து குதித்தல். கதப்பு - கூந்தல்.

விளக்கம்: களவுக் காலத்தே அவளுடன் மகிழ்ந்தாடிய நீர் விளையாடலை நினைப்பித்து, அவள் மணத்தைத் தன்னிடத்தே அன்பு கனிந்து நெகிழுமாறு திருப்ப முயல்கின்றான் தலைவன். இளம் பெண்கள் இவ்வாறு மரமேறிக் குதித்து நீர் விளையாட்டயர்தலை, இக்காலத்தும் ஆற்றங்கரைப் பக்கத்து ஊர்களிற் காணலாம். சுனைகளிலும் கிணறு குளங்களிலும் கூட இவ்வாறு குதித்து நீராடுவர். பெண்கள் கூந்தலை மயிலின் தோகைக்கு ஒப்பிடல் மரபு என்பதனை, 'கலிமயிற் கலாவத்தன்ன இவள் ஒலிமென் கூந்தல்' என்னும் குறுந்தொகையிலும் காணலாம். (குறுந். 225) கூந்தலை வியந்தது அதுவே பாயலாகக் கூடியின் புற்றதும், அதனைத் தடவியும் கோதியும் மகிழ்ந்ததுமாகிய பண்டை நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தி, தன் பெருங் காதலை அவளுக்கு உணர்த்தியதுமாம்.

மேற்கோள்: தலைவி புலவி நீங்கித் தன்னோடு புனலாடல் வேண்டிய தலைவன், முன் புனலாடியதனை, அவள் கேட்பத் தோழிக்கு உரைத்தது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல். கற்பு, 50).

75. இவண் பலர் ஒவ்வாய்!


துறை: பரத்தையோடு புனலாடி வந்த தலைமகன், அதனை மறைத்து கூறிய வழித் தோழி கூறியது.

(து.வி: பரத்தையோடு புனலாடினான் தலைவன் என்பது கேட்டுத் தலைமகள் புலந்திருக்கின்றாள். அதனை உணர்ந்த தலைவன், அவ்வாறு அவர்கள் நினைப்பது பொய்யானது என்று கூறுகின்றான். அப்போது தோழி, அவனுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

பலரிவண் ஒவ்வாய், மகிழ்ந! அதனால்,
அலர் தொடங்கின்றால் ஊரே; மலர
தொன்னிலை மருதத்துப் பெருந்துறை,
நின்னோடு டாடினள், தண்புனல லதுவே.


தெளிவுரை: மகிழ்நனே! மலர்களைக் கொண்டவும், பழமையான நிலைமைத்தாகியவுமான மருத மரங்கள் நிறைந்த பெருத்துறையினிடத்தே, ஒருத்தி நின்னோடும் கூடிக் குளிர்ந்த புதுப்புனலிலே புனலாட்டயர்ந்தனள். அதனாலே அவளையும் நின்னையும் சேர்த்து ஊரிடத்தே அலர் எழுதலும் தொடங்கி விட்டது. ஆகவே, இவ்வூர் ஆடவர் பலருடமும், நீதான் நின் புறத்தொழுக்கத்தாலே தாழ்வுற்று, அவர்க்கு ஒவ்வாதாய் ஆயினை - அஃதாவது பழியுடையாய் ஆயினை!

கருத்து: 'ஆதலின் நின்னுடன் புனலாடத் தலைவி வருதல் இலள்' என்றதாம்.

சொற்பொருள்: பலர் - பலரான ஆடவர். ஒவ்வாய் - ஒப்பாகாய்; அவரெல்லாம் தத்தம் மனைவியரையன்றி, நின்போற் காமத்தால் அறியாமைப் பட்டுப் பரத்தையருடன் ஆடி மகிழும் பண்பற்றவர் அல்லராதலின், பின் மறுத்துப் பொய்யுரை பகர்வோரும் அல்லர். ஆகவே, நீ அவர்க்கு ஒப்பாகாய் என்றனள். தொன்னிலை மருதம் - நெடுங் காலமாகவே ஆற்றங்கரையில் நின்று நிழல் செய்யும் மருத மரங்கள்.

விளக்கம்: 'பரத்தையோடு புனலாடினை' எனத் தோழி சொல்ல, அது உண்மையேயாயினும், அதனை மறுத்துப் பேசிச் சாதிக்க முயல்கின்றான் தலைவன். அவன் பொய்ம்மையை மறுத்துத் தோழி இவ்வாறு கூறுகின்றனள். கண்டாரும் பலர்; ஊரிடத்தே அலரும் எழுந்து பரவுகின்றது; இனியும் மறைப்பது பயனில்லை என்றது இது. ''தொன்னிலை மருதத்து பெருந்துறை'' என்றது, வையையின் திருமருத முன்துறையைச் சுட்டுவதுமாகலாம். செயலும் பழிபட்டது. அதனை ஏற்று வருந்தித் திருந்தும் தெளிவின்றிப் பொய்யும் உரைப்பாய்; நீ நாணிலி; எம்மால் ஏற்கப்படாய் என்பது கருத்து.

76. அந்தர மகளிரின் தெய்வம்!


துறை: மேற்செய்யுளின் துறையே.

பைச்ஞாய்க் கூந்தல், பசுமலர்ச் சுணங்கின்
தண்புன லாடித், தன் னலமேம் பட்டனள்
ஒண்தொடி மடவரல், நின்னோடு,
அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே.


தெளிவுரை: பஞ்சாயக் கோரை போன்ற கூந்தலோடும் பசுமலர் போலும் சுணங்கினையும் கொண்டவள் ஒருத்தி. ஒள்ளிய தொடியணிந்த மடவரலான அவள், நின்னோடும் குளிர் புனலிலே நீராட்டயர்ந்து, அந்தர மகளிர்க்குத் தெய்வமே போன்ற கவினையும் செற்றுத், தன் நலத்திலேயும் மேம்பட்டவளாயினளே!

கருத்து: 'ஊரறிந்த இதனையுமோ மறைக்க முயல்கின்றனை' என்றதாம்.

சொற்பொருள்: பஞ்சாய்க் கோரை ஒருவகை நெடுங்கோரை; பசுமையான தண்டுள்ளது. பசுமலர்ச் சுணங்கு - புதுமலர் போலும் தேமற்புள்ளிகள்; பசு - பசும்பொன்னைக் குறித்துச் சுணங்கின் பொன்னிறத்தைச் சுடக்கும். அந்தர மகளிர் - வானமகளிர். என்றது தேவலோகத்து மகளிரை. தெய்வம் - அவர் போற்றும் தெய்வம்.

விளக்கம்: தலைமகனோடு புனலடிய களிப்பால் பேரழகு பெற்றுச் சிறந்தாளின் வனப்பைக் கண்டு, அந்தர மகளிரும் மயங்கி, அவளை நீருறை தெய்வமோ எனக் கொண்டு போற்று வாராயினர் என்பது, பரத்தையைப் புகழ்வதே போல இகழ்ந்து கூறியதாம். பரத்தை தலைவனோடு புனலாடி நலத்தால் மேம்பட்டுத் தெய்வமாயினாள் என்றது. அவன் காதற் பரத்தையாகியதால், பிறரால் மதித்துப் போற்றப் பெறும் நிலைக்கு உயர்ந்தாள் என்றதுமாம். ஆகவே, அவளுள்ள போதிலே, நீதான் இங்கு வந்து வேண்டுதல் எதற்கோ என்று மறுப்புக் கூறியதுமாம்.

77. செல்லல் நின் மனையே!


துறை: முன்னொரு ஞான்று தலைவியோடு புனலாடினாள் எனக் கேட்டு, 'இவனுடன் இனி ஆடேன்' என உட்கொண்ட பரத்தை, புதுப்புனல் ஆடப்போது என்ற தலைமகற்குச் சொல்லியது.

(து.வி: ஊடுதலும் ஒதுக்குதலும் பரத்தையர்க்கும் உள்ளனவே. 'தலைமகன் தன் மனைவியோடு கூடிப் புனலாடினான்' என்று கேட்டு, அதனால் மனமாறுபட்டிருந்த அவன் பரத்தை, 'அவன் நீராடிவரப் புறப்படுவாய்' என்று அவளை அழைக்கவும், மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

அம்ம வாழியோ, மகிழ்ந! நின் மொழிவல்;
பேரூர் அலரெழ நீரலைக் கலங்கி,
நின்னொடு தண்புனல் ஆடுதும்;
எம்மொடு சென்மோ; செல்லல்நின் மனையே!


தெளிவுரை: மகிழ்நனே! நீதான் வாழ்வாயாக. நினக்கு யாம் சொல்லும் இதனையும் கேட்பாயாக. இப் பேரூர் முற்றவும் அலருரை எழுமாறு, நீர் அலைத்தலாலே சுலங்கி, நின்னோடு கூடியவராக யாமும் குளிர் புனல் ஆடுவோம்; நின் மனைக்கு மட்டும் இனிச் செல்லாதே; எம்மோடு எம்மனைக்கே வருவாயாக!

கருத்து: 'எம்மை விரும்பின், நின் மனைக்குப் போதலைக் கைவிட வேண்டும்' என்றதாம்.

சொற்பொருள்: மொழிவல் - சொல்வேன். நீரலைக் கலங்கி - நீரலைத்தலாற் கலங்கி, சென்மோ - செல்வாயாக; மோ : முன்னிலை அசை.

விளக்கம்: இது பரத்தைக்குத் தலைவன் மீதுள்ள பற்றுக் கோட்டு மிகுதியைக் காட்டுவதாகும். 'செல்லல் நின் மனை' என்று சொல்லுமளவு அவள் பிடிப்பு வலுத்து விட்டது. 'நீரலைப்பக் கலங்கி வருந்துவோமாயினும், நீ எம்மோடு துணையாகவரின், நின்னோடு தண்புனல் ஆடுதும்' என்கின்றாள். 'நினக்காக ஆடுதும்' என்பது கருத்து. 'செல்லல் நின் மனையே' எனப் பரத்தை சொல்லக் கேட்கும் தலைவன், அதுதான் தன் பெருந்தகுதிக்கு ஏலாமையின், அப்பரத்தையின் உறவை மறந்து, அவளைக் கைவிட்டு அகலுவான் என்பதும், இதனால் சிலசமயம் நிகழக் கூடியதாகும்.

78. எம்மொடு கொண்மோ!


துறை: இச் செய்யுளும் மேற்செய்யுளின் துறையையே கொண்டதாகும்.

கதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி
மதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த,
சிறையழி புதுப்புனல் ஆடுகம்;
எம்மொடு கொண்மோ, எம் தோள்புரை புணையே.


தெளிவுரை: ஒளிவீசும் இலையையுடைய நெடுவேலையும், கடிதாகச் செல்லும் குதிரையையும் கொண்டவன் கிள்ளி. அவனது பகைவரின் ஊர்மதிலை மோதியழிக்கும் போர்க்களிறே போலத், தான் விரையச் செல்லும் வழியிடையே குறக்கிடும் தடையை மோதி அழித்துச் செல்லும் வேகமுடைய புதுப் புனலிலே, எம் தோள்களை நிகர்க்கும் புணையைப் பற்றி, எம்மோடு புதுப்புனலாடுலையும் நீ மேற்கொள்வாயாக!

கருத்து: 'எம்முடன் புனலாட வருக' என்றதாம்.

சொற்பொருள்: இலை - இலைவடிவான வேல் முனை; கதிரிலை - ஒளிவீசும் வேல்முனை. கடுமான் - கடிதாகச் செல்லும் விரிவுடைய குதிரை; 'கடுமான் கிள்ளி' - ஒருவனது பெயரும் ஆம். கதழ்பு - விரைவு. இறை - தடை; அணை போல்வது. கொண்மோ - எம்மோடு புணை கொள்வாயாக.

விளக்கம்: 'கடுமான் கிள்ளி', சோழர்குல வேந்தன் ஒருவனின் இயற்பெயர் எனவும், அவன் வேற்போரிலே ஆற்றல் மிக்கானாதலின், 'கதிரிலை நெடுவேற் கிள்ளி' என்று போற்றப் பெற்றான் எனவும் கருதலாம். இவன் பகைவர் கோட்டைகள் பலவற்றைக் கைப்பற்றியவன்; அதற்கு உதவியது இவனுடைய வலிமுகுந்த யானைப்படை; அது சீற்றத்தோடு செல்லும் வேகத்திற்குச் சிறையழி புதுப்புனலை இங்கே உவமித்துள்ளனள். 'சிறை' - அணை; நிரைத் தடுத்து நெறிப்படுத்தும் அமைப்பு; இதை உடைத்துச் செல்லும் வேகமிக்கது புதுப்புனல் என்பது கருத்து.

உள்ளுறை: மதிலழிக்கும் களிறு போன்ற சினத்தோடு, குறுக்கிடும் சிறையழித்துச் செல்லும் புதுப்புனல் என்றது, சூளுரைத்துத் தன்னைக் கூடிய தலைவன், அதனையழித்துப் புதுக் காமத்தோடு தலைவியை நாடிச் சென்ற தன்மையை உள்ளுறத்துக் கூறியதாகும். கட்டுமீறித் தன்போக்கிற் செல்லும் இயல்பினன் அவன் என்று பழித்துக் கூறியதாம். அதனை விலக்க நினைப்பவள், 'புதுப்புனலாடலை எம்மோடுங் கூடிக் கொள்க' என்கின்றனள்.

மேற்கோள்: 'காமக் கிழத்தி, நின் மனைவியோடன்றி எம்மொடு புணைகொள்ளின் யாம் ஆடுதும் என்று புனலாட்டிற்கு இயைந்தாள் போல மறுத்தது' என்று காட்டுவர், ஆசிரியர் நச்சினார்க்கினியர். (தொல். கற்பு, 50).

79. யார் மகள் ஆயினும் அறியாய்!


துறை: தன்னொடு கூடாது தனித்துப் புனலாடுகின்றான் எனக் கேட்டு, தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை, தானும் தனியே போய்ப் புனலாடினாளாக, அவளை ஊடல் தீர்த்தற் பொருட்டாகத் தலைமகன் சென்று, தான் அறியான் போல நகையாடிக் கூறிக் கைப்பற்றிய வழி, அவள் தோழி சொல்லியது.

(து.வி: தலைவன் தனியாகப் புனலாடியனான்; அதுகண்டு ஊடிய பரத்தை, தானும் தனியாகவே ஒருபுறமாகப் புனலாடினாள். அதனைப் பார்த்தவன். அவள் ஊடலைத் தீர்த்தற் பொருட்டு, தான் ஏதும் அற்யான்போல அவள் கைப்பற்றிப் புனலாடுதற்கு வருமாறு அழைக்கின்றான். அப்போது அவள் தோழி சொல்லியதாக அமைந்தது இது.)

'புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள்,
யார் மகள் இவள்?' எனப் பற்றிய மகிழ்ந!
யார் மகள் ஆயினும் அறியாய்;
நீ யார் மகனை, எம் பற்றி யோயே?


தெளிவுரை: 'புதுப்புனலிலே ஆடிச் சிவந்த கண்களை உடையவளான இவள் யார் மகள்?' என்று சொல்லியபடியே கைப்பற்றிய தலைவனே! இவள் யார்மகள் ஆயினும், நீதான் அறியமாட்டாய்; ஆயின், எம்மை வந்து பற்றியவனே, நீதான் யாவர் மகனோ?' என்பதாம்.

கருத்து: 'நீ எமக்கு அயலானே போல்வாய்' என்று கூறி ஒதுக்க முயன்றதாம்.

சொற்பொருள்: அமர்ந்த கண் - சிவந்த கண். அறியாய் - அறிய மாட்டாய். 'எம்' என்றது பரத்தையை உளப்படுத்திக் கூறியது.

விளக்கம்: 'யார் மகள் இவள்?' எனக் கேட்டவாறு கைப்பற்றியவன் ஆதலின், முன்பே தொடர்புடையவன் என்பதும், 'யார் மகள்?' என்றது அறியான் போல வினாவியது என்பதும், அது அவளிடம் பழைய உறவை நினைவுறுத்தித் தெளிவித்தற் பொருட்டு என்பதும் உணரப்படும். 'நீ யார் மகன்?' என்று தோழி வினாயது, அறிந்தும் அறியான் போல வினாவுகிற நீதான், நின்னை மறைத்துப் பேசுதலின், 'யாவர் மகனோ?' எனக் கேட்டதாம். 'பண்பாட்டி பெற்ற மனகல்லை' என்றதாகக் கருதுக.

'புதுப்புனலாடி அர்த்த கண்ணள்' என்றது, 'முன் கலவிக்களியாலே சிவந்த கண்ணளாகியவள்' என்று, பழைய களவுக் காலத்து உறவை நினைப்பித்ததுமாம்.

80. நின் கண் சிவந்தன!


துறை: ஒழியப் புதுப்புனலாடித் தாழ்ந்துவந்த தலைமகனோடு, தலைமகள் புலந்து சொல்லியது.

(து.வி: தன்னை உடனழைத்துப் போய்த் தன்னுடன் புனலாடி மகிழாமல், தான் மட்டுமே தனியனாகச் சென்று, அங்கு நீராடிய பரத்தையருடன் நெடுநேரம் கூடிப் புனலாடி வீடு திரும்புகின்றான் தலைவன். அவனின் சிவந்த கண்களையும், அவன் நீராடிவந்துள்ள நிலையையும் கண்டு, புலவி கொண்ட தலைமகள் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

புலக்குவேம் அல்லேம்; பொய்யாது உரைமோ;
நலத்தகை மகளிர்க்குத் தோள்துணை யாகித்,
தலைப்பெயற் செழும்புனல் ஆடித்
தவநனி சிவந்தன, மகிழ்ந! நின் கண்ணே.


தெளிவுரை: மகிழ்நனே! யாம் நின்பாற் புலவி கொள்ளவே மாட்டேம். அதனால், பொய்யாக மறைக்காது உண்மையையே உரைப்பாயாக. அழகு நலத்திலே சிறந்தாரான மகளிர்க்கு, அவரைத் தாங்கும் தோள்தரும் துணையாக அமைந்து, முதற்பெயலாலே பெருகி வந்த புதுப்புனலிலே நீராடினதால், நின் கண்கள் இப்போதில் மிகமிகச் சிவந்துள்ளனவே!

கருத்து: 'நீதான் பரத்தையரோடு கூடிப் புதுப்புனலாடிக் களித்தனையாய் வருகின்றனை' என்றதாம்.

சொற்பொருள்: புலக்குவேம் - புலவி கொள்வேம். நலத்தகை - அழகு நலங்களின் சிறப்பு; இயல்பான எழிலும், புனைவாலே பெற்ற எழிலும் சிறப்பாக அமைந்த தகுதிப்பாடு; யாம் மகப் பயந்தேமாக, அஃதற்றேம் என்று, தன் குடிமைப் பெருமிதம் உள்ளுறுத்திக் கூறியதுமாம். தோள் துணையாகி - தோள்கள் தெப்பமாக அவரைத் தாங்கும் துணையாக விளங்க. தலைப்பெயல் - முதல் மழை. தவநனி - மிக மிக.

விளக்கம்: நீரிடத்தே நெடுநேரம் ஆடிக் களிப்பின் கண்கள் சிவப்படையும் என்பதை, அகம் 278, 312, குறுந்தொகை 354 செய்யுட்களுள்ளும் கூறப்படுவதாலும், அநுபவத்தாலும் அறியலாம். இயல்பாகவே நெடுநேரம் புதுப்புனலாடிக் கண் சிவக்க வீடு வந்திருந்த தலைவனிடம், தலைவி, இவ்வாறு பதைத்துக் கூறிப் புலவி கொண்டனள் என்பதும் பொருந்தும். 'தலைப் பெயல்' என்பது 'கன்னி மழை' என்னும் காலத்தின் முதல் மழையைக் கூறிக்கும். 'செழும்புனல்' என்பதற்குச் 'செம்புனல்' என்றும் பாடபேதம் கொள்வர்; அது சிவந்த புனல் என்றும், பெரும்புனல் என்றும் பொருள் தரும். இனிக் கூடலிலே பரத்தையோடு இன்புற்று, அப்புணர்குறிகளோடு வீடு வந்தானிடம் ஊடிய தலைவி, அவன் புனலாடிக் கண்சிவந்தேன் எனப் பொய்ம்மைகூற, அவள் தான்றிந்தமை கூறிப் பொய்த்தல் வேண்டாவெனக் கூறியதாகவும் கொள்ளலாம். அவனை வெறுத்தற்கு இயலா மனத்தள் தலைவியாதலின்.

இப் புதுப்புனலாடல், பழைய நாளிலே ஒரு விழாவாகவே கொள்ளப் பெற்றது. கணவனும் மனைவியும் கைகோர்த்தே புனலாடல் இன்றும் மரபாகத் தென்னாட்டில் விளங்கி வருகின்றது. ஆகவே, மனைவியோடு சேர்ந்து புனலாடற்குரியவன், பரத்தையோடு கூடிக் களித்தாடின், அது பழியாகக் கொள்ளப்பட்டது என்க.

9. புலவி விராய பத்து


இத் தலைப்பின் கூழ் வருவன பத்துச் செய்யுட்களும் புலவி பொருளாகத் தலைவியும் தோழியும் பரத்தையும் கூறுவனவாக அமைந்துள்ளன. புலந்து கூறி வாயில் மறுத்தலும் இவ்வற்றுட் காணப்படும். ஆகவே, புலவி விராய பத்து எனப் பெற்றது.

81. மனையோள் வருந்துவள்!


துறை: 'தன்னைக் கொடுமை கூறினாள் தலைமகள்' என்பது கேட்ட பரத்தை, தலைமகன் வந்து தன்மேல் அன்புடைமை கூறினானாக, அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

(து.வி: 'தன்னைப் பற்றித் தலைவி கொடுமை கூறினாள்' என்று கேட்ட பரத்தைக்குத் தலைவியின் மீது சினம் உண்டாகின்றது. எனினும், தலைவியைப் போலத் தனக்கு உரிமைப் பிடிப்பு இல்லாததனையும் அவள் மறந்தளில்லை, உள்ளம் பதறித் துடித்தவாறிருக்கின்றாள். அவ்வமயம், தலைவன் வந்து, அவள் முகம் கொடாமை கண்டு, அவள்பால் தான் கொண்டுள்ள அன்புடைமை பற்றிச் சொல்லி, அவளைத் தெளிவிக்க முயல்கின்றான். அப்போது, அவனுக்குச் சொல்வாள் போலத் தலைவியின் பாங்காயினாரும் கேட்டுணருமாறு, அப்பரத்தை சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை
அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்,
மலர் அணி வாயில் பொய்கை, ஊர! நீ
என்னை 'நயந்தனென்' என்றி; நின்
மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே!


தெளிவுரை: குருகுகள் உடைத்து உண்டு கழித்த வெள்ளிய வயிற்றையுடைய யாமையது இறைச்சியினை, அரிப்பறையை முழக்கும் தொழிலுடையோரான உழவர்கள், தம் மிக்க உணவோடு சேர்த்து உண்ணும், மலர்களால் அழகு பெற்ற நீர்த்துறைகளைக் கொண்ட, பொய்கைகள் விளங்கும் ஊரனே! நீதான் இங்கே வந்தனையாய், 'என்னையும் விரும்பினேன்' என்றும் கூறுகின்றனை. இதனை நின் மனையோள் கேட்டனளாயின், மனம் பொறாதாளாய் மிகவும் வருந்துவள் காண்!

கருத்து: ஆகவே, 'நீயும் என்னை மறத்தலே நன்று' என்றதாம்.

சொற்பொருள்: குருகு - நீர்ப்பறவை. அகடு - வயிறு. அரிப்பறை - அரித்தெழுகின்ற ஓசையுடைய உழவர் முழக்கும் பறை; அறுவடைக்கு முன்னர், வயலை வாழிடமாகக் கொண்ட புள்ளும் பிறவும் அவ்விடம் விட்டு அகன்று போதற் பொருட்டு, உழவர் பறை முழக்குதல் என்பது அருள்மிகுந்த தமிழ் மரபாகும். வினைஞர் - தொழிலர்; உழவர். அல்குமிசை - மிக்க உணவு: இட்டுவைத்து உண்ணும் கட்டுணவும் ஆம். வாயில் - நீர்த்துறை, மனையோள் - மனையாட்டி.

விளக்கம்: குருதினம் உண்டு கழித்த யாமையின் இறைச்சியை உழவர் தம் கட்டுச் சோற்றோடும் கூட்டியுண்பர் என்றது. அவ்வயல்கள் வயலாமைகள் மிக்குவாழும் நீர்வளம் மலிந்தன வென்பதாம். அரிப்பறை ஒலிகேட்டு அவை அகல, உழவர் குருகினம் விட்டுச் சென்ற மிச்சிலைத் தம் உணவோடு கூட்டி உண்பர் என்க. 'மலரணி வாயில் பொய்கை' என்றது, மலரால் அழகு பெற்று விளங்கும் பொய்கை என்றதாம். 'என்னை நீ விரும்பினேன் என்று கூறியதைக் கேட்டால், நின் மனைவி பெரிதும் மனம் வருந்துவாள்' என்றது. 'அவளினும் நீயே எனக்கு மிகவும் விருப்பினள்' என்று கூறுவான் என்பதறிந்து கூறியதாம். அதனைக் கேட்கும் தலைவியின் பாங்கியர் தலைவியிடம் கூற, அவள், தலைவனைத் தன்னாற் கட்டுப்படுத்த இயலாமைக்கு நெஞ்சழிந்து மேலும் நலிவாள் என்பதாம்.

உள்ளுறை: குருகுகள் உண்டுகழித்த யாமையின் இறைச்சியை, உழவர்கள் தம் சோற்றோடு சேர்த்து உண்பது போல, யாம் நுகர்ந்துகழித்த தலைவனைத் தலைவியும் விரும்பி நுகர்வாள் என்று, உள்ளுறைப் பொருள் தோன்றக் கூறியதாம்.

பாடபேதம்: 'வினைஞர் நல்குமிசை' எனவும் பாடம். நல்கு மிசை என்பது, பலர்க்கும் நல்கித் தாமும் உண்ணும் கட்டுணவு. இதற்கு, நின் மார்பினைத் தான் துய்த்தலன்றி, யாமும் துய்த்தற்கு உரிமையுடையோம் என்பதைத் தலைவி அறியாது போயினள் என்றதாம்.

82. வெகுண்டனள் என்ப!


துறை: மனைவயிற் புகுந்த பாணற்கும் தலைமகன் கேட்கு மாற்றல் தலைமகள் சொல்லியது.

(து.வி: பரத்தையுறவினனான தலைமகன், தன் பாணனோடும் தன் வீட்டிற்கு வருகின்றான். வந்தவன், ஆர்வத்தோடு தன் மனைவியை அணுக, அவள், பாணனுக்குக் கூறுவாள் போலத், தலைவனும் கேட்டுணருமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

வெகுண்டனள் என்ப, பாண! நின் தலைமகள்
'மகிழ்நன் மார்பின் அவிழிணர் நறுந்தார்த்
தாதுண் பறவை வந்து, எம்
போதார் கூந்தல் இருந்தன' வெனவே!


தெளிவுரை: பாணனே! மகிழ்நனது மார்பிடத்தேயுள்ள கட்டவிழ்ந்த பூங்கொத்துக்களோடும் கூடிய நறுமண மாலையிடத்தே மொய்த்துத் தேனுண்ட வண்டினம், எம்முடைய மலரணிந்த கூந்தலிலேயும் பின்னர் வந்து இருந்தன என்பதற்கே, நின் தலைவியாகிய பரத்தை வெகுண்டனள் என்று கூறுகின்றனரே!

கருத்து: 'அதற்கே வெகுள்பவள், தலைமகன் என்னைத் தழுவினனாயின் பொறுப்பாளோ?' என்றதாம்.

சொற்பொருள்: அவிழிணர் - இதழவிழ்ந்த மலர்க் கொத்து. நறுந்தார் - நறுமணம் கமழும் மாலை. தாதுண் பறவை - தேன் அருந்தும் வண்டினம். போதார் கூந்தல் - மலரணிந்த கூந்தல்.

விளக்கம்: மலர்தொறும் சென்று தேனுண்ணத் தாவும் வண்டினம் ஆதலின், அவன் மார்பிடத்துத் தாரில் மொய்த்தது தலைவியின் கூந்தலிற் சூடிய மலரிடத்தும் பின்னர்ச் சென்று மொய்த்தது என்க. இதனைக் கேட்கும் பரத்தை, அவர்கள் அத்துணை நெருங்கியிருந்தனர். அது தழுவல் குறித்ததே எனக் கொண்டு, தலைவன் மீது வெகுண்டாள் என்பதாம்.

'தாதுண் பறவை' போன்று, பெண்களை நாடித் திருபவன் தலைவன்' என உட்பொருள் தோன்றக் கூறி, அவன் அப் பரத்தையையும் ஒரு நாள் கைவிட்டு, இன்னொருத்திபாற் செல்வான் என்று சொன்னதும் ஆம்.

தலைமகன் மார்பின் மாலையினை 'அவிழ் இணர் நறுந்தார்' எனவும், தன் கூந்தல் மலர்களைப் 'போது' எனவும் குறிப்பிட்ட சிறப்பும் காண வேண்டும். தேனுண்ணற்கான அவன் மார்பின் மாலை மலர்களைவிட்டு எழுந்து. போதாக மலரும் செவ்வி நோக்கி இருக்கும் தன் கூந்தல் மலர்களில் மொய்த்தது பற்றிக் கூறியது. அதுதான் தான் விரும்பும் இனிய நுகர்வை அடையாது போகும் பேதைமை பற்றிக் கூறியதாம். இது மணம் பெற்று என்னோடும் கூடியின் புற்றிருந்த தலைவன், தன் பேதைமையாலே, இன்ப நுகர்வுக்குரிய பக்குவமும் பெறாத இளையாளான பரத்தையை நச்சித் திரிவானாயினனே என்று தலைவனின் அறியாமை சுட்டிக் கூறியதுமாகும்.

83. பையப் பிரிந்து வாழ்க!


துறை: வரைந்து அணிமைக் கண்ணே, தலைமகற்குப் புறத்தொழுக்கம் உண்டாகிய வழி, அதனை அறிந்த தலைவி, அவனோடு புலந்து சொல்லியது.

(து.வி: தலைவியை மணந்து மனையறம் தொடங்கி நெடுங்காலங்கூடக் கழியவில்லை. அதற்குள்ளேயே அவளை விட்டுப் பரத்தையுறைவை நாடிச் செல்வானானான் தலைவன். அதனைப் பலரும் சொல்லக் கேட்ட தலைவி, அவன் தன்னை அணுகும்போது புலந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

மணந்தனை அருளாய் ஆயினும், பைபயத்
தணந்தனை யாகி, உய்ம்மோ - நும்மூர்
ஒண்தொடி முன்கை ஆயமும்
தண்துறை ஊரன் பெண்டெனப் படற்கே.


தெளிவுரை: எம்மை விரும்பி மணந்து கொண்டோனாகிய நீதான், எமக்கு அருள் செய்தலைக் கைவிடுவாய் ஆயினும், நின் ஊரிடத்தேயுள்ள ஒள்ளிய தொடிவிளங்கும் முன் கையினரான பரத்தையர் மகளிர் பலரும், 'தண்ணிய துறை கொண்ட ஊருக்குரிய நின் பெண்டு' எனச் சொல்லப் படுவதற்கு உரியளாகுமாறு மெல்லமெல்ல எம்மை நீங்கினையாகிச் சென்று ஒழுகுவாயாக!

கருத்து: 'இதனையாவது அருளிப் பேணுவாயாக' என்ற தாம்.

சொற்பொருள்: பைபய-மெல்லமெல்ல. தணந்தனையாகி - நீங்கினையாகி. 'ஆயம்' பரத்தையர் மகளிரைக் குறித்தது. 'ஊரன் பெண்டு' என்றது, 'ஊரனுக்கு உரியவளான பெண் இவள்' எனப் பேர் பெறுவது.

விளக்கம்: தலைவனின் பிரிவால் மனம் வருந்திய தலைவி. இவ்வாறு பதைத்து மொழிந்தனள் எனவும் கொள்ளலாம். 'ஆயம்' என்பது, பொதுவாக மகளிரது உடன் விளையாட்டுத் தோழியரையே குறிக்கும்; எனினும், இங்கே தலைவனுக்குச் சார்த்திச் சொன்னது, அவன் பரத்தையரோடு புதுப்புனலாடியும் பிறவாறும் ஆடிக்களிக்கும் இயல்பினன் என்பதனால் ஆகும். எனக்கு, 'நின் பெண்டு' எனப்படும் தன்மையை மணத்தால் தந்துவிட்ட நீதான், அவர்க்கும் அப் பெருமையைத் தருதற்கு நினைப்பினும்,அ தனை மெல்லமெல்லச் செய்வாயாக' என்றனளாம். 'நின் பெண்டு' என்னும் பெயர் மட்டுமே தந்து, அதற்குரிய இன்ப வாழ்வைத் தருதற்கு மறந்து, புறத்தொழுகுவோன் எனப் பழித்து ஊடினள் எனவும் கொள்க. 'தண்துறையூரன்' என்றது, அவன் அவருடன் கூடி நீர்விளையாட்டயர்ந்து மகிழ்ந்ததனைத் தான் அறிந்தமை உணர்த்தினதும் ஆகும்.

84. கண்டால் என்னாகுவளோ?


துறை: பரத்தையர் மனைக்கண் தங்கிப், புணர்ச்சிக் குறியோடு வாயில் வேண்டி வந்த தலைமகற்குத், தோழி சொல்லியது.

(து.வி: தலைவன் பரத்தையுடன் மகிழ்ந்துவிட்டு, அடுத்துத் தன் வீட்டிற்கும் விரைந்து வருகின்றான். யாதும் அறியானே போல அவன் தலைவியை அணுக, அவள் ஊடி ஒதுங்குகின்றாள். அப்போது தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

செவியின் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்,
கண்ணிற் காணின், என்னாகுவள் கொல் -
நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போலப்,
பலர்படிந் துண்ணும் நின் பரத்தை மார்பே?


தெளிவுரை: மகிழ்நனே! நறுமண மலர்கள் அணிந்த கூந்தலையுடைய மகளிர்கள் படிந்தாடும், தைத்திங்கள் நாளிலே விளங்கும் குளிர்நீர்க் குளத்தைப் போல, பலரும் தழுவிக் கிடந்து நுகரும் நின் பரத்தைமை கொண்ட மார்பினைப், பிற மகளிர் சிறப்பித்துக் கூறுவதைச் செவியாற் கேட்டாலும், சொல்லுதற்கரிய கடுஞ்சினம் கொள்வோளான நின் தலைவி, நின் மார்பிற் காணும் இப்புணர்குறிகளைக் கண்ணாற் கண்டனளாயின், என்ன நிலைமையள் ஆவாளோ?

கருத்து: 'அவள் துடிதுடித்துப் போவாளே' என்றதாம்.

சொற்பொருள்: சொல் இறந்து - சொல்லும் அடங்காமற்படிக்கு. வெகுள்வோள் - சினங்கொள்வோள்; என்றது தலைவியை. ஐம்பால் - கூந்தல்; ஐம்பகுதியாகப் பகுத்து முடித்தலையுடையது. பரத்தை மார்பு - பரத்தையுடைய மார்பு; என்றது தலைவனின் மார்பினை உண்ணல் - நுகர்தல்; மார்பை உண்ணலாவது, அணைத்துத் தழுவி மகிழ்தல்.

விளக்கம்: பிற மாதரோடு நீ தொடர்புடையை எனக் கேட்டாலே சொல்ல முடியாத சினம் கொள்பவள். நீ புணர் குறியோடும் வருகின்ற இந்நிலையையும் கண்டால் என்னாகுவளோ? ஆதலின், இவ்விடம் விட்டு அகன்று போவாயாக என்பதாம். 'மகளிர் நீராடும் தண்கயம்' என்று உவமித்தது, அவர் கழித்த மலரும் சாந்தும் கொண்டு அது விளங்கும் தன்மைபோல, அவன் மார்பும் அவற்றோடு சேர்ந்ததாக விளங்கிற்று என்றற்காம். மகளிர் தைத்திங்கள் தண்கயம் ஆடி நோன்பு பூணல் தமக்கேற்ற துணைவரைப் பெருதற் பொருட்டாதலின், அவன், நின் மார்பினையும் 'விரும்பியாடி நின்னைத் தம் புகலாகப் பெற்றனர் என்பதுமாம். 'என்னாகுவள் கொல்?' என்றது, உயிர் நீப்பள் என்று எச்சரித்தாம்.

இவராடிய குளம் எனப் பிறர் ஒதுக்காது, தாமும் புகுந்து நீராடலே போல, நின் மார்பைப் பரத்தையர் பலர் முன் தழுவினர் என்பதறிந்தும், புதியரும் நீ தரும் இன்பத்திற்கும் பொருளுக்குமாக நின்னை வெறாது விரும்பித் தழுவி இன்புறுத்துவர்; ஆயின், அது தலைவியின் மாட்டும் கருதினை யாயின் பொருந்தாது என்கின்றனள். இதனால், தோழி வாயில் மறுத்தாள் என்பதும் அறியப்படும்.

85. நின்னைக் காண்பவர் சிரியாரோ?


துறை: தலைமகன் பரத்தையர் மேற் காதல் கூர்ந்து நெடித்துச் செல்வழி மனையகம் புகுந்தானாகத் தலைவி கூறியது.

(து.வி: தலைமகன் பரத்தையரை நாடிச் செல்வதற்குப் புறப்பட்டவன், சிறிது காலம் தாழ்த்துப் போகவேண்டியதாகவே, தன் மனையினுள்ளே சென்று புகுந்தான். அவன் ஒப்பனையும் பிறவுமறிந்த தலைவி, வருந்திக் கூறி, அவனைப் போக்கு விலக்கியதாக அமைந்த செய்யுள் இது.)

வெண்ணுதற் கம்புள் அரிக்குரற் பேடை
தண்ணறும் பழனத்துக் கிளையோ டாலும்
மறுவில் யாணர் மலிகேழ் ஊர! நீ
சிறுவரின் இனைய செய்தி;
நகாரோ பெரும! நிற் கண்டிசி னோரே?


தெளிவுரை: வெண்மையான தலையையுடைய சம்பங் கோழியின், அரித்த குரலையுடைய பேடையானது, தன் சேவல் பிரிந்ததென்று, கெளிர்ந்த நறுவிய பழனங்களிலுள்ள, தன் கிளைகளோடு சொல்லிச் சொல்லிக் கூவியபடியிருக்கும், குற்ற மற்ற மிகுதியான புதுவருவாயினைடைய ஊரனே! நீதான் சிறுவரைப் போல பின்விளைவு கருதாயாய் இத்தகைய செயலைச் செய்கின்றாயோ! நின்னைக் கண்டோர், நின் செயலைப் பற்றி எள்ளி நகையாட மாட்டார்களோ?

கருத்து: 'குடிப்பழி மிகுதலை நினைத்தாயினும், நின் பொருந்தாப் போக்கைக் கைவிடுக' என்றதாம்.

சொற்பொருள்: 'நுதல்' என்றது தலையின் மேற் பகுதியை; சம்பங்கோழியின் தலையின் மேற்பக்கம் வெள்ளையாயிருக்கும் என்பது இது. கம்புள் - சம்பங்கோழி. அரிக்குரல் - அரித்தரித்தெழும் குரல். கிளை - தன்னினப் பிற கோழிகள். ஆலும் - கூவும். மறுவில் - குற்றமற்ற; மறிவில் எனவும் பாடம்; தடையற்ற என்பது பொருள். 'நறும் பழனம்' என்றது, அதிலுள்ள பூக்களால். செய்தி - செய்வாய்.

விளக்கம்: சேவலைப் பிரிந்த கோழி, தன் துயரைச் சொல்லித் தன் இனத்தோடு கூவியபடியிருக்கும் பழனம்' என்றது, தானும் அவ்வாறே புலம்ப வேண்டியிருந்தும், குடிநலன் கருதித் தன் துயரை அடக்கியிருக்கும் தன் பெருந்தகைமை தோன்றக் கூறியதாம். சிறுவர், செய்வதன் பின் விளைவு அறியாதே செய்து, பின் பலராலும் நகையாடப் படுவர் என்பாள், 'சிறுவரின் இனைய செய்தி' என்றனள்; 'நீதான் பொறுப்புடைய குடித்தலைவன் ஆயிற்றே, அதனை மறந்தனையோ?' என்றனளுமாம். 'கண்டோர் நகாரோ' என்றது, 'ஊர் பழிக்கும் செயல் பரத்தமை' என்றும் சொல்லித், தாய் போல அறிவுறுத்தியதாம்.

'தாய்போற் கழறித் தழீஇக் கோடல் ஆய்மனைக் கிழத்திக்கு உரித்தென மொழிப' என்னும் கற்பியல் சூத்திரத்தின் விளக்கம்போல அமைந்தது இச்செய்யுளாகும். (தொல். கற்பு, 32).

'நின் சிறுவரின்' என்பது பாடமாயின், 'அவன் புதல்வன், அழைக்கும் மாதரிடமெல்லாம் தாவிச் சென்று, அவர் அணைத்து முத்தமிடக் களிக்கும் அத் தன்மைபோல' என்றதாம். 'அவன் சிறுவன்; காமம் அறியான்; நீயும் அவ்வாறே செய்யின் நின் எண்ணத்தைக் குறித்து ஊர் பழியாதோ என்றதாம்.'

மேற்கோள்: இவ்வாறு கடிபவள், தலைவனை வெறுக்காது மீண்டும் ஏற்றுக் கொள்வாள் என்பதாம். மகனும் ஆற்றாமை வாயிலாகத் தலைமகன் வந்தபோது, தலைமகள் எதிர்கொண்டு சொல்லியது என்பர் நம்பியகப் பொருள் உரைகாரர்; அப்போது, புறம்போகப் புறப்பட்டவன் தன் மகனைக் கண்டதும், அவனை எடுத்துணைத்தவாறே மனைபுகத், தலைவி எதிர்கொண்டு சொல்வதாகக் கொள்க.

86. நின் மனையாளோடும் வாழ்க!


துறை: 'புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்' என்பது அறிந்த பரத்தை, அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.

(து.வி: தன் புதல்வன் சொல்லிய செய்தியைத் தலைவியின் பாங்கியர் வந்து சொல்ல, அப்படியே கேட்டு நடந்தான் தலைவன், அவன்பால் பேரன்புடையவன் ஆதலால். இதனையறிந்த பரத்தை, 'நின் மகன்மேல் நின் அன்பு அத்தகையதாயின், நீ இனி நின் மனைவியோடேயே இன்புற்றனையாகி, நின் இல்லிடத்தே இருப்பாயாக; இவண் வாரற்க' என்று சொல்லி ஊடுகின்றனள் எனக் காட்டுவது இச்செய்யுள்.)

வெண்தலைக் குருகின் மென்பறை விளிக்குரல்
நீள்வயல் நண்ணி இமிழும் ஊர!
எம்மிவண் நல்குதல் அரிது!
நும்மனை மடந்தையொடு தலைப்பெய் தீமே.


தெளிவுரை: வெண்மையான தலையையுடைய குருகினது மெல்லப் பறத்தைலையுடைய பார்ப்புக்களின் கூப்பீடு குரலானது. நெடிய வயற்புறங்களையும் அடைந்து ஒலிக்கின்ற ஊரனே! இனி, நீதான் இவ்விடம் வந்து எமக்கு இன்பம் நல்குதல் என்பதும் அரிதாகும். நின் மனையிடத்தாளான மனையாட்டியோடும் கூடியிருந்து, அவளுக்கே என்றும் இன்பந் தந்தனையாய் வாழ்வாயாக!

கருத்து: 'நின் நினைவெல்லாம் நின் மகன் மீதே' என்றதாம்.

சொற்பொருள்: மென்பறை - பார்ப்புகள். விளிக்குரல் - அழைக்கும் குரல். இமிழும் - ஒலித்தபடி இருக்கும். 'மடந்தை' என்றது தலைவியை; அவள் மகப்பெற்று நலிவெய்தித் தன் அழகிழந்து முதுமையுற்றாள் என்றற்காம். நல்குதல் - இன்பம் தரல். தலைப்பெய்தல் - அருள் செய்தல்; கூடி மகிழல்.

விளக்கம்: 'குருகுப் பார்ப்புகள் தம் கூட்டிலேயிருந்தபடி கூவி அழைக்கும் குரலானது, வயலிடமெல்லாம் ஒலிக்கும் என்றது, அவ்வாறே நின் புதல்வனும் நின்னை அழைத்துக் கூப்பிடும் செய்தியானது, பரத்தையர் சேரிமுற்றவும் வந்து பரவுதலுற்றது' என்பதாம். 'அவனை மறக்கவியலாதவன் நீயாதலின், இனி இவண் வாராதிருக்க' என்கின்றாள். 'எம்' என்று தன்னோடும் பிற பரத்தையரையும் உளப்படுத்திக் கூறினாள் எனலாம். 'நும் மனை' என்றது. அதனிடத்தே தமக்கேதும் உரிமையில்லை என்பதனையும், அது முற்றவும் தலைவிக்கே உரிமையுளதென்பதையும் நினைந்து கூறியதாம். 'குருகும் பார்ப்புக்குரல் கேட்டதும் பாசத்தோடு திரும்பிவரும்' ஊரனாதலின், அவன் தன் மகன் பேச்சைக் கேட்டதும், பிறவற்றை மறந்து, அவன்பாற் செல்ல முந்துவானாயினான்' என்றதாம்.

87. மனையோள் யாரையும் புலக்கும்!


துறை: 'தலைமகள் தன்னைப் புறங்கூறினாள்' எனக் கேட்ட காதற் பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்பத், தலைமகனோடு புலந்து சொல்லியது.

(து.வி: தன்னைத் தலைமகள் பழித்தாள் என்று கேட்டாள், தலைமகனின் காதற் பரத்தை. தலைவன் அவளிடம் வந்தபோது, தலைமகனின் பாங்கியர் கேட்டுணருமாறு, அவள் தலைமகனோடு ஊடிப் பேசுவதாக அமைந்த செய்யுள் இது.)

பகன்றைக் கண்ணி பல்லான் கோவலர்
கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்
யாணர் ஊர! நின் மனையோள்
யாரையும் புலக்கும்; எம்மை மற் றுவனோ?


தெளிவுரை: பகன்றைப் பூக்களைத் தொகுத்துத் தலைக்கண்ணியாகச் சூடியவரும், பலவான ஆனிரைகளை உடையவருமான கோவலர்கள், கரும்பைக் கையின் குறுந்தடியாகக் கொண்டு எறிந்து மாங்கனிகளை உதிர்க்கின்ற, புதுவருவாயினை உடைய ஊரனே! நின் மனையாள் யாவரையும் புலந்து பேசுபவளாதலின், அவ்வாறே எம்மையும் புலந்து கூறினாள் என்பது என்ன முதன்மைத்தோ?

கருத்து: 'நின் தலைவி பழித்துப் பேசுவது எதற்கோ?' என்றதாம்.

சொற்பொருள்: பகன்றை - வெண்ணிறப் பூப்பூக்கும் ஒருவகைச் செடி; பூக்கள் பெரிதாகக் கிண்ணம்போல் பனிநீர் நிறைந்து காலையில் தோன்றும் என்பர்! சிவதைச் செடி என்றும் கூறுவர். கண்ணி - தலைக்கண்ணி. கோவலர் - பசுமந்தை உடையோர். குணில்- குறுந்தடி.

விளக்கம்: 'மனையோள்' என்றது, மனைக்குரியோளான தலைவியை, 'யாரையும்' என்றது. தலைவனோடு உறவுடைய பிற பெண்டிரையும் என்றதாம். அன்றி, அவன் எவரொடும் மகிழ்ந்து உரையாடினாலே அதுபற்றிப் புலந்து கூறும் இயல்பினள் என்பதும், 'யாரையும் புலக்கும்' என்றதாற் கொள்ளப்படும்.

உள்ளுறை: கரும்பைக் கைக்கொண்ட கோவலர், அதனைச் சுவைத்து இன்புற்றதோடும் அமையாராய், அதனையே குறுந்தடியாகக் கொண்டு எறிந்து மாங்கனியையும் உதிர்க்கும் வளமுடைய ஊரன் என்றனள். இவ்வாறே, தலைவனும் பரத்தையரை நுகர்ந்து இன்புற்றபின், அவரையே இகழ்ந்து கூறித் தலைவியைத் தெளிவித்து, அவளையும் அடையும் இயல்பினன் என்று கூறுகின்றனள்.

'கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும் ஊர' என்றது. யாங்கள் பழித்தேமென்று அவட்கு இனிய சொல் கூறி, அவள் எங்களைப் பழித்துக் கூறும் சொற்களை, நினக்கு இனியதாகப் பெறுவாய்' என்றவாறு என்பது பழையவுரை.

88. யாம் அது வேண்டுதும்!


துறை: தலைமகனை நயப்பித்துக் கொள்கையில் விருப்பில்லாதாள் போல, அவ்வாறு கோடலையே விரும்புவாள், 'அது தனக்கு முடியாது' எனத் தலைமகள் புறனுரைத்தாள் எனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார்க்குச் சொல்லியது.

(து.வி: 'தன்னிடமிருந்து தலைவனை முற்றவும் பரத்தையால் பிரித்துக் கொள்ள முடியாது' என்றும், 'அவள் விருப்பம் என்றும் நிறைவேறாது இடையிற் கெடும்' என்றும் தலைமகள் சொன்னாள். அதனைக் கேட்ட பரத்தை, தன்பாற் சொல்லிய தன் பாங்காயினார்க்குத் தன்னுடைய மேம்பாட்டைச் சொல்லுவதாக அமைந்த, செய்யுள் இது.)

வண்டுறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்
தண்டுறை யூரனை, எவ்வை எம்வயின்
வருதல் வேண்டுது மென்பது
ஒல்லேம் போல், யாம் அது வேண் டுதுமே.


தெளிவுரை: வளமான நீர்த்துறைகளிடத்தே எல்லாரும் விருப்போடே வேண்டியவளவு கொய்த்து கொள்ளுமாறு, வளவிய மலர்கள் மிகுதியாகப் பூத்திருக்கும் பொய்கையின், தண்ணிய நீர்த்துறையினையுடைய ஊரன் தலைவன். ''அவனை எம்மிடத்தேயே வருதலை வேண்டுகின்றோம்' என்று, தன் தங்கை புறங்கூறினாள்'' என்பர். யாம் அதற்கு விரும்பாதேம்போலப் புறத்தே காட்டிக் கொள்ளினும், உள்ளத்தே, அதனை நிகழ்தலையே வேண்டுகின்றோம்! கருத்து: 'அவனை எம்மிற் பிரியாதிருக்கச் செய்தலையே' யாமும் வேண்டுகின்றேம் என்றதாம்.

சொற்பொருள்: வண்டுறை - வளவிய துறை; வளமை நீர் என்றும் வற்றாதிருக்கும் தன்மை. 'வண்டு உறை நயவரும்' எனக்கொண்டு, வண்டினம் நிலையாகத் தங்குதலை விரும்பும் என்பது பொருளாதல் கொளக்கூடும். 'வளமலர்' என்றது, செழுமையும் செறிவும் மிகுதியாகி அழகோடு மலர்ந்திருக்கும் நாளின் புதுமலர்களை. எவ்வை: 'எம் அவ்வை' எவ்வை என்று ஆயிற்று. தலைவனைத் தானும் அடைந்துள்ள முறை பற்றித் தலைவியைத் தன் மூத்தாளாகக் கொண்டு கூறியதாம். 'எவ்வை' என்றதற்கு, எவ்வகையினும் எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும்; தங்கை எனவும் கூறுவர். ஒல்லேம்போல் - பொருந்தேம் என்பது போலவே. வேண்டுதும் - விரும்புவோம்.

விளக்கம்: 'இவ்வாறு என்மேற் பழிகூறுதலைத் தலைவி இனி நிறுத்திலளாயின், அதனை அவ்வாறே முடியாது யானும் செய்து விடுகின்றேன்' என்று கூறுகின்றனள். எவ்வைக்குத் தங்கையென்பது, தலைமகன் எப்போதும் தன் மனைவியினும் இளமை வனப்புடையவளையே பரத்தமைக்கு உரியாளாக நாடுதலின் பொருந்தாதென்க. புதல்வனைப் பெற்றுத் தளர்ந்தவள் தலைவி என்பதும் இதனாற் பெறப்படும்.

உள்ளுறை: வள்ளிய துறையிடத்தே பூத்துக் கிடக்கும் வளவிய புதுமலர்களைக் கொண்ட பொய்கையுடைய ஊரன் என்றது, காண்பார் யாரும் விருப்போடே தாம் வேண்டுமட்டும் கொய்து கொள்ளுதலைப் போலத், தலைவனும், அவனை விரும்பும் மகளிரெல்லாம் எளிதாக அடைந்து இன்புறுதற்குரிய பொதுநிலைத் தன்மை கொண்டவன் என்றதற்காம்.

89. எவன் பெரிது அளிக்கும் என்ப!


துறை: தலைமகன், 'தலைமகளைப் போற்றி ஒழுகா நின்றான்' என்பது கேட்ட காதற் பரத்தை, அவன் பாணனுக்குச் சொல்லுவாளாய், அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

(து.வி: 'தலைமகன் இப்போதெல்லாம் தலைவியின் பாலேயே அன்புற்றுப் பெரிதும் களித்திருக்கின்றான்' என்று தன் தோழியர் மூலம் கேள்விப்பட்ட பரத்தை, அவன் பாணனுக்குச் சொல்லுவாள்போலத், தலைவியின் தோழியரும் கேட்டறியச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.)

அம்ம வாழி, பாண! எவ்வைக்கு
எவன்பெரி தளிக்கும் என்ப - பழனத்து
வண்டு தாதூதும் ஊரன்
பெண்டென விரும்பின்று, அவள்தன் பண்பே.


தெளிவுரை: பாணனே, நீ வாழ்க! பழனங்களிலே, வண்டினங்கள் மலர்களில் மொய்த்துத் தேனுண்டபடியே இருக்கும் ஊரன் நம் தலைவன். 'அவன் தலைவிக்குப் பெரிதும் தலையளி செய்திருக்கின்றான்' என்று நீ சொல்வது என்னையோ? அவளைத் தனக்கேற்ற காதன்மைக்குரிய பெண்டு என்று எண்ணி அவன் அவ்வாறு அவளிடத்தே ஒழுகுகின்றான் அல்லன். அவள் தன் மனைவியாக (மனைப் பாங்கின் தலைவியாக) ஒழுகும் அந்தப் பண்பினைக் கருதியே, அவளுக்குத் தலையளி செய்து, தன் கடமையாற்றுகின்றான்!

கருத்து: 'அவன் என்னிடத்தேயே பெருங் காதலுடையான்' என்றதாம்.

சொற்பொருள்: 'எவ்வை' தலைவியைக் குறித்தது. அளித்தல் - கூடியின்புறுதலாலே அவளுக்கு இன்பமும் மனநிறைவும் அளித்து உதவுதல். பெண்டு - காதற்பெண்டு. பண்பு - மனைவியாம் இல்லறத் தலைமைப் பண்பு.

விளக்கம்: தலைவிபால் காதலன்பு ஏதும் பெற்றிலன் எனினும், தன் மனையறம் செவ்வியதாக நிகழும் பொருட்டாகவும், ஊரவர் பழியாதிருக்கவும், அவள் தன்பாற் கொண்டுள்ள பற்றுதல் நீளவும், அவளுக்கும் தலைவன் தலையளி செய்வான் என்பதாம். ஆகவே, மீளவும் தன்பால் வருவான்; தலைவி அதுபற்றிய நினைவோடிருப்பாளாக என்று எச்சரித்ததாம்.

உள்ளுறை: 'பழனத்து வண்டு தாதூரம் ஊரன்' என்றது, அவ்வாறே பொதுமகளிர் சேரியிடத்தேயுள்ள இளம் பரத்தையரை ஒருவர் ஒருவராக நாடிச் சென்று இன்புறும், காமங் கட்டவிழ்ந்த இயல்பின்ன தலைவன் என்று கூறியதாம்.

பாட பேதம்: 'வேண்டென விரும்பின்று' எனவும் பாடம்; இப்பாடத்திற்கு, அவளை விரும்பியொழுகு என்று வாயில்கள் வேண்ட, அவன் அவளைச் சென்றுகூடித் தலையளி செய்தனன் என்று பொருள் கொள்ளுக.

90. யார் குணம், எவர் கொண்டது?


துறை: தலைமகன், தன் மனைக்கண் செல்லாமல் தான் விலக்குகின்றாளாகத் தலைமகள் கூறினாள் என்பது கேட்ட காதற்பரத்தை, தலைமகன் கேட்குமாற்றால், அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

(து.வி: 'தலைமகன், தன்னை விரும்பி வராமற்படிக்குத் தடுப்பவள் காதற் பரத்தையே' என்று, தலைமகள், ஒருநாள் பழித்துக் கூறினாள் என்று கேள்வியுற்றவள். அத்தலை மகட்குத் தோழியர் கேட்குமாறும், தலைமகனும் கேட்டுணருமாறும் கூறுவதாக அமைந்த, செய்யுள் இது.)

மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்?
வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்?
அன்ன தாகலும் அறியாள்
எம்மொடு புலக்கும், அவன் புதல்வன் தாயே.


தெளிவுரை: மகிழ்நனின் மாண்பமைந்த குணங்களை வண்டுகள் கைப்பற்றிக் கொண்டனவோ? அன்றி, வண்டுகளின் மாண்புள்ள குணங்களை நம் மகிழ்நன்தான் கைப்பற்றிக் கொண்டானோ? அன்னது எங்ஙனம் ஆகலுற்றதெனவும், அவன் புதல்வனின் தாயான தலைவியானவள் அறிந்திலள். எம்முடனே வீணே புலக்கின்றனளே!

கருத்து: 'அவள் தலைவனை அறியாமல் என்னைப் பழிப்பது அறியாமையாகும்' என்றதாம்.

சொற்பொருள்: மாண்குணம் - மாண்புற்ற குணம்; 'இல்லவள் மாண்பானால்' எனக் கூறும் குணவமைதி. வண்டினம் புதுமலரையே தேடிக் கொண்டு பறத்தலே போலத், தலைவனும் புதியரான பரத்தையரையே நாடித் திரிபவனாவான் என்றதாம். இதனால் என்னைக் குறித்து மட்டும் பழிப்பது எதற்காகவோ என்கின்றனள். 'அவன் புதல்வன் தாய்' என்றது. மனைவியை; அவள் புதல்வனைப் பெற்றுத் தளர்ந்து மெலிந்தமை தோன்றவும், அவளின் குடிகாக்கும் உரிமையினை எவரும் எதனாலும் பறித்தல் இயலாதென்பது விளங்கவும் சொல்லியதாம்.

விளக்கம்: 'அவன் புதல்வன் தாய்' என்று தலைவியைக் குறித்தது, அவ்வுரிமை பெற்றாள் அவள்; யான் அது பெற்றிலேன் என்றதுமாம். வண்டின் மாண்குணம் புது மலரைத் தேர்ந்தே சென்று சென்று தேனுகர்தலும், அதன்பின் அவற்றை முறையே கழித்து விடுதலும் ஆம்; இக் குணத்தை நம் தலைவனிடமிருந்தே வண்டினம் பெற்றுள்ளன. ஆயின், முன் நுகர்ந்து கழித்த மகளிரையே ஓரொருகால் மீளவும் நாடிச் சென்று இன்புறுத்தலையும் நம் தலைவன் செய்வான்; இக்குணத்தை மட்டும் வண்டினத்தினும் மேலாக அவன் உடையன் என்றும் குறித்ததாம். ஆகவே, வண்டினத்தினம் ஒரோவகையில் தலைவனே நல்லவன் என்றதுமாம். இப்போது, என்னையும் பிரிந்து பிறள்பாற் செல்லும் அவனை நினைந்து, யானும் அதுகுறித்து மெலிவுற்று வாடியிருப்பதறியாத தலைமகள் என்னையே அவனைத் தடுப்பதாகக் கூறிப் பழிப்பது சற்றும் பொருந்தாது என்றனளுமாம்.

அவட்காவது 'புதல்வனின் தாய்' என்னும் உரிமையும், அப் புதல்வனின் முகமும் செயலும் கண்டு மனந்தேறும் வாய்ப்புகள் உள்ளன; யானோ அதுவும் தானும் பெற்றிலேன் என்று மனம் நொந்து உரைத்தனளும் ஆம்.

இதனைக் கேட்கும் தலைமகன், தன் நிலைக்கு நாணி, தன் காதற் பரத்தைக்குத் தலையளி செய்தற்கு மனங்கொள்வான் எனவும், தன் புதல்வன் நினைவே மேலெழுத் தன் மனையகம் சென்று, தலைவியைப் புலவி நீக்கி இன்புறுத்தி மகிழ்வான் என்பதும் கொள்க.

குறிப்பு: பரத்தையர் இவ்வாறு தலைவியைக் குறிக்கப் 'புதல்வன் தாய்' என்ற மரபை அடிக்கடி பேணுதல், அன்றைய சமுதாயம் அவர்க்கு அவ்வுரிமையை வழங்காததனை எண்ணிப் பொருமும் ஏமாற்றத்தாலேயே எனலாம்.

தலைவனுக்கே பிறந்தாரேனும், பரத்தையர்க்குப் பிறந்த புதல்வரும் புதல்வியரும், மனைவிக்குப் பிறந்தாரைப் போலக் குலப் பெருமைக்கும், குடியுரிமைச் சொத்துகளுக்கும், குடிப் புகழுக்கும் உரிமையாளர் ஆகமாட்டார் என்பதே அன்றைய சமுதாய நிலை. அவர் மீண்டும் தத்தம் குலத்தொழிலே செய்து வரலே அன்றைய ஒழுக்கமாயிருந்தது. இதற்கெல்லாம் மேற்குலத்தாரின் மேலாண்மை பிறப்புரிமை என்னும் நம்பிக்கையே காரணமாகவும் நின்றது.

10. எருமைப் பத்து


இப்பகுதியிடத்தே வரும் செய்யுட்கள் பத்திலும் எருமை பற்றிய செய்திகள் வருவதனால், இவ்வாறு தலைப்புத் தந்தனர். நீர் வளத்தையும் பசும்புல்லையும் விரும்பி வாழும் எருமையினம் மருதத்தாரின் உறுதுணைச் செல்வமாகவும், பாற்பயன் அளிக்கும் பெருமையுடையதாகவும் விளங்குகின்றன. பெருவலிமையும், கடும் உழைப்பிற்கேற்ற பாங்கும் கொண்டுள்ளமையால், எருமைகள் உழுதொழிலாளரால் விருப்போடு இன்றும் பேணப்பெற்று வருகின்றன.

எருமையின் செயல்கள் பலவும் இச் செயுட்களிலே மாந்தரின் செயலோடு உவமை பெற்றுச் சிறக்கின்றன. இது, புலவர் நாடோறும் கண்டின்புற்ற மனத்தோய்விலே நின்றும் எழுந்த சுவைமிகுந்த காட்சிகளே!

91. கருப்பம்பூ மாலையள் இவள்!


துறை: குறைவேண்டிப் பின்னின்று வந்த தலைமகற்குத் தோழி, 'இவள் இளையள்; விளைவு இலள்' எனச் சேட் படுத்தது.

(து.வி: தலைமகளைக் கொண்டு காமுற்றுக் கருந்தழிந்தவன். பலகால் முயன்றும் அவள் இசைந்து இணங்காளாக, அவள் தோழியிடம் தன் குறை தீர்க்க வேண்டிக் கேட்டு நிற்கின்றான். அவனுக்கு, அவள், 'தலைவி இன்னமும் காதலிக்கும் பருவத்தை அடையாத இளையள்' என்று கூறி, அவனை விலக்குதற் பொருட்டுச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது. குறிஞ்சித் திணைத் துறையேனும், 'எருமை' என்னும் கருப் பொருள் வந்து, மருதத்திணையிற் கொளப்படுதலைப் பெற்றது.)

நெறிமருப் பெருமை நீல விரும்போத்து
வெறிமலர்ப் பொய்கை யாம்பல் மயக்கும்
கழனி யூரன் மகள்இவள்;
பழன வெதிரின் கொடிப்பிணை யலளே.


தெளிவுரை: நெறித்த கொம்பையுடைய எருமையின் கருமையான பெரிய கடாவானது, மணமுள்ள மலர்கள் நிறைந்த பொய்கையிலே சென்று, அதனிடத்தேயுள்ள ஆம்பலைச் சிதைக்கும். அத் தன்மையதும், கழனிகளை உடையதுமான ஊரனுக்கு இவள்தான் மகளாவாள். இவள், பழனங்களிலுள்ள கரும்பிடத்தே பூத்த மணமற்ற பூவால் தொடுத்து விளங்கும் மாலையினையும் உடையவள் காண்பாயாக!

கருத்து: 'அத்தகு மடமை கொண்டவளை விரும்பிச் சுற்றாதே போய்வருவாயாக' என்றதாம்.

சொற்பொருள்: நெறிமருப்பு - நெறித்தலுடைய கொம்பு; நெறித்தல் - வளைதல்; முறுக்குடன் தோன்றுதல். 'நீலம்', கருமை குறித்தது. போத்து - எருமையின் ஆண்; எருமைக் கடா. வெறி - மணம். மயக்கும் - சிதைத்து அழிக்கும். கழனி - விளைவயல்கள். வெதிர் - கரும்பு; 'பழன வெதிர்' எனவே, தானே கிளைத்து வளர்ந்துள்ள கரும்பு என்க; இது உண்ணற்காக வேழக் கரும்பும் பேய்க்கரும்பும் போல்வன. கொடிப் பிணையல் - பிணைத்துக் கொடி போலக் கட்டிய மாலை.

விளக்கம்: வெறிமலர் அருமையும் ஆம்பலின் மென்மையும் அறியமாட்டாத எருமைப் போத்தானது. பொய்கையுட் புகுந்து தான் நீராடிக் களிக்கும் வகையால், அவற்றைச் சிதைக்கும் ஊரன் மகள் என்றனள், இதனால், அவள் தந்தை தன் செயலிலே ஈடுபடுங்கால், பிறருக்கு நேரும் அழிவைப் பற்றி எல்லாம் நினைத்து ஒதுங்கும் தன்மையற்ற மடமையோன் என்றதாம். இதனால், இவள் தந்தையும் ஐயன்மாரும் நின் செயலறியின் நினக்கு ஊறு செய்வதிலே தப்பார் என்றும் சொல்லி எச்சரிக்கின்றனள்.

சிறப்பற்ற பழனவெதிரின் பூவைக் கொய்து, மாலை தொடுத்திருக்கம் தன்மையள் எனவே, அதுதான் சூடற்காக என்பதும் அறியா நனிபேதையள் அவள்; அவளை நீ விரும்புதல் யாதும் பயனின்று என்பதாம்.

மேற்கோள்: திணை மயக்குறுதலுள் மருதத்துள் குறிஞ்சி நிகழ்ந்தது; இஃது இளையள் விளைவிலள் என்றது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல். அகத், 12).

92. நும் ஊர் வருதும்!


துறை: 'நினக்கு வரைந்து தருதற்குக் குறை, நின் தமர் அங்கு வந்து கூறாமையே' எனத் தோழி கூறினாளாக, தலைமகள் முகம் நோக்கி, 'இவள் குறிப்பினாற் கூறினாள்' என்பது அறிந்த தலைமகன், 'வரைவு மாட்சிமைப்படின் நானே வருவல்' எனத் தலைமகட்குச் சொல்லியது.

(து.வி: 'இவள் இந்நாள்வரை மணம் பெறாமல் வாடி நலிவது, நின் தமர் வந்து வரையாததன் குறையே' என்று தலைவனிடம் தோழி கூறுகின்றாள். தலைவியின் குறிப்பும் அதுவே யாதலை அறிந்த தலைமகன், 'வரைவதற்குரிய நிலைமை சிறப்பின் யானே வரைவொடு வருவேன்' எனத், தன் உள்ளவுறுதி தோன்றக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

கருங்கோட் டெருமைச் செங்கண் புனிற்றாக்
காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும்
நுந்தை, நும்மூர் வருதும்
ஒண்தொடி மடந்தை! நின்னையாம் பெறினே.


தெளிவுரை: கரும் கொம்புகளையுடைய எருமையின், சிவந்த கண்களையுடைய புனிற்றாவானது, தன் அன்புக் கன்றுக்குச் சுரக்கும் முலையினைத் தந்து பாலூட்டும் நின் தந்தைக்குரிய நினது ஊருக்கு, ஒள்ளிய தொடியணிந்த படந்தையே! நின்னை யான் மனையாட்டியாகப் பெறுதல் கூடுமாயின், யானே வரைவொடு வருவேன!

கருத்து: 'தமர் வரவு தாழ்த்தவிடத்தும், தான் தாழாதே வரைந்து வருவேன்' என்று கூறியதாம்.

சொற்பொருள்: கருங்கோடு - கரிய கொம்பு. செங்கண் புனிற்றா - ஈன்றதன் அணிமையும், சிவந்த கண்களையுடைய தாய் எருமை. ஊறுமுலை - பால் ஊறுகின்ற முலை; பால் ஊறுதல் ஈன்றதன் பின்னரே என்பது குறிக்க, 'ஊறுமுலை' என்றனர். மடுக்கும் - உண்பிக்கும்; அதுதானே உண்ணாமையான், தான் அதன் வாயிலே பால்முறை சேர்த்து அதனை உண்பிக்கும் என்றதாம். நுந்தை நும்மூர் - நின் தந்தையதாகிய நுமது ஊர். பெரின் - பெற்றனமானால்; பலகாலமும் அடையப் பெறாதே ஏங்கித் திரும்பும் தன் ஏக்கம்புலப்படக் கூறியது. தான் வரைந்துவரின், தமது மறுப்பினும் தலைவி அறத்தொடு நின்றேனும், அவளைத் தான் பெறற்காவன செயல் வேண்டும் என்றதும் இதுவாகலாம்.

உள்ளுறை: 'தலைவியின் தாய் தன் மகள் மீதுள்ள பேரன்பால், தமர் மறுத்தவிடத்தும், அறத்தொடுநின்று மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவள்' என்னும் உறுதியைப் புலப்படுத்தவே, அவ்வூர்க் கன்றீன்ற எருமையும், தன் கன்றுக்கு ஊறுமுலை மடுக்கும் அன்பு மிகுதியைச் சுட்டிக் கூறினன் எனலாம். 'பெறினே வருதும்' 'என்றது, ''பெறுவதனால் வரைவொடு வருவோம்'' எனவுரைத்து, தோழியது ஒத்துழைப்பையும் விரும்பியதாம்.

மேற்கோள்: 'கிழவோன் சொல்லும் உள்ளுறையவுமம் தன்னுடைமை தோன்றச் சொல்லப்படும்; 'கருங்கோட்டு... பெறினே' என்றவழி, தாய் போன்று நும்மைத் தலையளிப்பலெனத் தலைமகன் தலைமை தோன்ற உரனொடு கிளந்தவாறு காண்க'' எனக் காட்டுவர் பேராசிரியர். (தொல். உவம, 27).

துணைமயக்குறுதலுள் இது மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது என நச்சினார்க்கினியரும். (தொல். அகத், 12); திணை மயக்குறுதலுள் குறிஞ்சிக்குரிய புணர்தல் மருதத் திணையோடு மயங்கி வந்தது என இலக்கண விளக்க உரைகாரரும். (இ.வி. 394); இச் செய்யுளை எடுத்துக்காட்டிக் கூறுவர்.

93. தாதுண்ணலை வெறுத்த வண்டு!


துறை: முயக்கம் பெற்றவழிப் பிறந்த வெறிநாற்றத்தால், பண்டையளவு அன்றி வண்டுகள் மொய்த்தனவாக, இதற்குக் காரணம் ஏன்?' என்று வினாவிய செவிலித்தாய்க்குக் கூறுவாள் போன்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

(து.வி: களவிற் கலந்து இன்புற்று தலைவியின் மேனியிலே எழுந்த நறுமணத்தால் வண்டினம் மிகுதியாக வந்து மொய்க்கின்றன. அதுகண்டு ஐயுற்று வினாவிய செவிலித்தாய்க்குத் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது. சிறப்புறத்தானாகிச் செவ்வி பார்த்திருக்கும் தலைவனும் கேட்டு, இனித் தலைவி இச்செறிக்கப்படுதலும் நேரும்; ஆகவே விரைந்து வரைந்து கொள்ளலே செயத்தக்கது என்று துணிவான் என்பதாம்.)

எருமைநல் லேற்றினம் மேயல் அருந்தென
பசுமோ ரோடமோ டாம்பல் ஒல்லா
செய்த வினைய மன்ற பல்பொழில்
தாதுண் வெறுக்கைய வாகி, இவள்
போதுவிழ் முச்சி யூதும் வண்டே.


தெளிவுரை: பலவான பொழில்களிலும் உள்ளவான மலர்களிலே சென்று தேனுண்ணல் வெறுத்தனவாகிய வண்ணினம், இவளது இதழ்விரி புதுமலர் விளங்கும் கூந்தலிலே வந்து மொய்த்தன. அதுதான் எருமையின் நல்ல ஏற்றினம் மேய்ந்துவிட்டதாலே, பசிய செங்கருங்காலியும் ஆம்பலும் பொருந்தாவாயினமை கண்டு, செய்தவோர் ஓர் வினையும் ஆகும்.

கருத்து: 'வண்டினம், புதுமைதேடி இவள் பூவிரி கூந்தலில் மொய்த்தனவன்றிப், பிற காரணம் ஏதுமன்று' என்றதாம்.

சொற்பொருள்: மேயல் அருந்தென - மேய்ந்து அருந்தி விட்டதாக பசுமோரோடம் - பசிய செங்கருங்காலி; இதன் பூ மிக்க நறுமணமுடையது; நறுமோரோடம் என்று நன்றிணை கூறும் (337). சிறுமாரோடம் என்பது குறிஞ்சிப் பாட்டு (78). மகளிர் கூந்தலின் இயல்பான நறுமணத்திற்கு மோரோடப் பூவின் மணத்தையும் ஆம்பலின் மணத்தையும் உவமிப்பது மரபு. செய்த வினைய - செய்ததான செயலாகும். வெறுக்கைய - வெறுத்தனவாக; செறிவுடையனவாகியும் ஆம். போதவிழ்முச்சி - இதழ்விரிந்த மலரணிந்த கூந்தல்.

விளக்கம்: புணர்ச்சியிலே திளைத்த மகளிர் மேனியிலேயிருந்து மாம்பூவின் நறுமணம் போன்றவொரு நறிய மணம் எழும் என்பதும், அஃதுணர்ந்த செவிலி ஐயுற்று வினவினள் என்பதும், அவள் ஐயத்தைத் தெளிவிக்கத் தோழி இவ்வோதம் புனைந்து கூறியதாகவும் கொள்க. மகளிர் கூந்தலின் மணத்தாற் கவரப் பெற்று, பூநாடிப் போகும் வண்டினம் மொய்க்கும் என்றது, பலரானும் காட்டப்பெறும் நிகழ்வாகும். இதனால், செவிலி ஐயுற்றனள் என்பதும், இனித் தலைவிக்குக் காவல் மிகவே, களவு கைகூடல் அரிதென்பதும், தலைவனுக்கு உணர வைத்தனள். மோரோடம் நிலத்தின் மரம்; ஆம்பல் நீர்க்கண் உள்ளது; இரண்டையும் எருமையேறு தின்று அழிக்கவே, அவை நாடிப் போகாமல், தலைவியின் போதவிழ் முச்சியை நாடின என்கின்றனள்; வண்டினத்து அறியாமையன்றிப் பிறிதல்ல அது என்பதாம். ஊரலர் எழும் என்றதும் ஆம் எப்போதும் தேனையே தேடிச் சென்று உண்ணலே தொழிலாக வுடைய வண்டினம், அதனை மறந்து, வாளாதே கூந்தலில் சென்று மொய்த்து முரலுதல், அவை அவ்வினை முடித்ததனாலே எனவும், கூந்தன் மலர்களை நாடி எனவும் கொள்க.

94. ஊர் இலஞ்சிப் பழனத்தது!


துறை: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன், மீள்கின்றான் சொல்லியது. (து.வி: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன், மீண்டு வரும்போது, அவளூரைத் தன் பாகனுக்குச் சுட்டிக்காட்டி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.)

மள்ளர் அன்ன தடங்கோட் டெருமை
மகளிர் அன்ன துணையொடு வதியும்
நிழன்முதிர் இலஞ்சிப் பழனத் ததுவே
கழனித் தாமரை மலரும்
கவின்பெறு சுடர்நுதல் தந்தை யூரே.


தெளிவுரை: கவின் பெற்று ஒளிசுடர்கின்ற நுதலுடையாளின் தந்தையது கழனிக்கண்ணே, தாமரை மிகுதியாக மலர்ந்திருக்கும் ஊரானது, மள்ளரைப் போன்ற பெரிய கொம்புகளையுடைய எருமையேறுகள், அவர்தம் மகளிரைப் போலும் தத்தம் துணைகளோடே சேர்ந்தவாய்த் தங்கியிருக்கும், நிழல் செறிந்த நீர்நிலையோடு கூடிய பழனத்திடத்தது ஆகும்!

கருத்து: 'அவ்வூரை நோக்கித் தேரினை விரையச் செலுத்துக' என்றதாம்.

சொற்பொருள்: மள்ளர் - போர் மறவர்; மகளிர் - அவர் தம் காதலியர். தடங்கோடு - பெரிய கொம்பு. இலஞ்சி - நீர் நிலை. நிழல் முதிர் - நிழல் செறிந்து அடர்ந்த. பழனம் - ஊர்ப் பொது நிலம். கவின் - எழில்; 'கவின் பெறு சுடர் நுதல்' என்றது, கவினைப் பெற்றுச் சுடரெரிக்கும் எழில் நுதல் உடையாளான தலைவியை நினைந்து கூறியதாம்.

விளக்கம்: 'எருமைகள் தத்தம் துணையோடும் சேர்ந்தவாக நிழன்முதிர் இலஞ்சிப் பழனத்து வதியும் ஊர்' என்றதும் அதனை மள்ளரும் அவர் மகளிரும் சேர்ந்து வதிதல் போல என்று உவமித்ததும், தான் தலைவியோடு கூடிச் சேர்ந்திருப்பதனை நினைவிற் கொண்டு கூறியதாகும். 'நிழல் முதிர் இலஞ்சி' என்றது, மரங்கள் அடர்ந்து நிழல் செய்தபடி களவிற்கூடியின்புற்ற இடம் அதுவெனலால், அதனைச் சுட்டிக் கூறியதாகவும் கொள்க. 'கழனித்தாமரை மலரும்' என்றது. தான் அவளை வரைந்து மணங்கொள்ள ஊரவர் அனைவரும் களிப்படைந்தாராய் மகிழ்வர் என்பதாம். 'கழனித்தாமரை மலரும் கவினைப் பெற்றுச் சுடர்கின்ற நுதல்' என்று தலைவியின் நுதலழகை வியந்ததாகக் கொள்ளுதலும் உணரப்படும். 'மள்ளர்' என்னும் சொல்லே 'மல்லர்' என்றாகிப், பொதுவாக மற்போரிடும் தன்மையரைக் குறிப்பதாயிற்று.

95. பகலும் நோய் செய்தனள்!


துறை: உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கிப், பரத்தையிடத்தனாய்த் தலைமகன் ஒழுகியவழி, அவற்கு வாயிலாய் வந்தார்க்குத் தலைமகள் சொல்லியது.

(து.வி: பரத்தையின் உறவுடையோன், தன் உணவுக்கு மட்டும் மனைநாடி வந்து போயினதால், அவனைக் காணுதலும் பேணுலுமாகிய அவற்றாலேனும் சிறிதளவுக்கு மன அமைதி பெற்று வந்தாள் தலைவி. அதனையும் கைவிட்டு, அவன் பரத்தையின் வீடே தங்குமிடமாகவும் அமைத்துக் கொள்ள, அந்தச் சிறிய மனவமைதியையும் இழந்தாள் அவள். அக்காலத்து ஒருநாள், தலைவன் வருகை தெரிவித்து வந்தாரான ஏவலர்களுக்கு அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

கருங்கோட் டெருமை கயிறுபரிந் தசைஇ,
நெடுங்கதிர் நெல்லின் நாள்மேயல் ஆரும்
புனன்முற் றூரன் பகலும்
படர்மலி யருநோய் செய்தனன் எமக்கே.


தெளிவுரை: கரிய கொம்புகளையுடைய எருமையானது, தன்னைக் கட்டியிருக்கும் கயிற்றை அறுத்துக் கொண்டு சென்று, நீண்ட கதிர்களையுடைய நெற்பயிரினைத் தன் நாளுணவாக மேய்ந்திருக்கும், நீர்வளம் சூழ்ந்துள்ள ஊரன் தலைவன். அவன்தான், எமக்குப் பகற்போதிலும் படர்ந்து பெருகும் தீராத பெருநோயினைச் செய்தனனே!

கருத்து: 'அவன் எம்மை முற்றவும் மறந்தனன்' என்ற தாம்.

சொற்பொருள்: பரிந்தசைஇ - அறுத்துச் சென்று. நாள் மேயல் - அற்றை நாளுக்கு உண்ணற்கான உணவு. புனல் - நீர். முற்றுதல் - சூழ்ந்திருத்தல் - நிரம்பியவும் ஆம். படர் மலி நோய் - படர்ந்து பெருகும் நோய்; காமநோய். 'அருநோய்' என்றது, செய்தானையன்றிப் பிறவற்றால் தீராத அரிய தன்மையுடைய நோய் என்றதால்.

விளக்கம்: 'பகலும்' என்பதிலுள்ள உம்மை இரவின் கண்ணும், அவனைப் பிரிந்துறையும் துயரினால் நோயுற்றக் கண்ணும் படாதே நலிபவன், பகற் போதிலும் அவன் செயலின் கொடுமை பற்றிய நினைவாலும், அறிந்து வந்து பழிப்பாரின் பேச்சாலும், மனையறத்தின்கண் அவனில்லாதே விளையும் குறைகளாலும், மேலும் மனம் புண்பட்டு வருந்துவள் என்பதாம்.

ஆகவே, ''பொறுத்துப் பொறுத்துப் பழகிய இத்துயரோடேயே யான் அமைவேன்; மீளவும் என்பதால் மறைந்த உணர்வுகளை எழுப்பிவிட்டு என்னை வருத்தல் வேண்டா'' என்று வாயில் மறுத்ததாகக் கொள்க.

உள்ளுறை: 'எருமை தன்மைக் கட்டிய கயிற்றை அறுத்துப் போய், நெற்பயிரைச் சென்று மேயும் ஊரன்' என்றது, அவ்வாறே தலைவனும் தன் குடிப் பெருமையும், காதன் மனைவிக்குச் செய்யும் கடமையுமாகிய கட்டுப்பாடுகளை விட்டு நீங்கிச் சென்று, பரத்தையோடு உறவாடிக் களிப்பானாயினான் என்றதாம்.

உழவரின் சினத்துக்கும் ஒறுப்புக்கும் சிறிதும் அஞ்சாதே தன் நாச்சுவையே கருதிச் செல்லும் எருமைபோல, ஊராரின் பழிக்கும் உறவினரின் வெறுப்புக்கும் கவலையற்றுத், தன்னின்பமே நச்சித்திரியும் மடவோனாயினன் தலைவன் என்பதும், அவனைத் தகைப்பாரிலரே என்பதும் ஆம்.

இனி, எருமை, கட்டிய கயிறறுத்துப்போய் விளைவயலை மேய்ந்து களித்தாற்போலப், பரத்தையும், தன் தாயின் கட்டுக் காவலை மீறிச் சென்று தலைவனோடு உறவாடி இன்புறுவதன் மூலம், விளைவயல்போலப் பெரும் பயன் தருதற்குரிய தலைவியின் மனையற வாழ்க்கையைச் சிதைப்பாளாயினள் என்றலும் பொருந்தும்.

96. கழனி யூரன் மகள்!


துறை: பரத்தையர் பலரோடும் ஒழுகுதல் கண்டு, பொறாதிருந்த தலைமகள், தலைமகன் மனைக்கண் புகுந்துழி, உடன்படுதல் கண்ட வாயில்கள், தம்முள்ளே சொல்லியது.

(து.வி: தன்னைப் பிரிவாலும், ஊரவரின் அலர்ச் சொற்களாலும் நலியச் செய்தனவாகப், பரத்தையர் பலரோடும் களித்துத் திரிந்த தலைவனின் கொடுமையைப் பொறாதே வருந்தியிருந்தாள் ஒரு தலைவி. ஆனால் அவன், ஒரு சமயம் தன் மனையிடத்தேயும் புகுந்தபோது, அவள் தன்னுடைய வேதனையை எல்லாம் மறந்து, அவனோடும் இசைந்துகூடி அவனை இன்புறுத்தினள். அவளது, அந்தக் கற்புச் செவ்வியைக் கண்ட அவ்வீட்டு வேலையாட்கள், தமக்குள்ளே வியந்து, பெருமையோடு பாராட்டிச் சொல்லிக் கொள்வதாக அமைந்த செய்யுள் இது.)

அணிநடை எருமை ஆடிய அள்ளல்,
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும்
கழனி யூரன் மகள், இவள்;
பழன ஊரன் பாயலின் துணையே!


தெளிவுரை: அழகான நடையையுடைய எருமையானது புகுந்து கலக்கிய சேற்றினிடத்தே, நீலமணியின் நிறத்தைக் கொண்ட நெய்தலோடு, ஆம்பலும் தழைக்கின்ற கழனிகளையுடைய ஊரனின் மகள் இவள்! இவள்தான் பழனங்களையுடைய ஊரனாகிய தலைவனின் பாயலிடத்தே பொருந்தி விளங்கும் இனிதான துணையாகவும் ஆயினளே!

கருத்து: 'இவள் கற்பின் மாண்புதான் என்னே!' என்றதாம்.

சொற்பொருள்: அணிநடை - அசைந்தசைந்து பெருமிதம் தோன்ற நடக்கும் நடை; 'அணிநிறம்' எனவும் பாடம். ஆடிய அள்ளல் - உழக்கிய சேறு. கலிக்கும் - முளைத்துச் செழித்து வளர்ந்திருக்கும். கழனி - வயல். பாயல் இன்துணை - பள்ளியிடத்தே இனிதான துணையாக விளங்கும் உயிர்த்துணை. பழனவூரன் - பொதுநிலம் உள்ள ஊரன்; இது அவன் பரத்தை பலருக்கும் உவப்பளிப்பானாக விளங்கிய பொதுத் தன்மை சுட்டியது.

விளக்கம்: தாம் செழித்து வளர்தற்குரிய இடமான கழனியிடத்தே புகுந்து, தம் நிலைக்க ஆதாரமான சேற்றிலே நடந்தும் புரண்டும் அதனை உழக்கி அழிவு செய்த எருமையின் மீது ஆத்திரப்படாமல், தான் மீண்டும் கலித்துச் செழித்து அதற்கே உணவாகிப் பலனளிக்கும் நெய்தலையும் ஆம்பலையும் கொண்ட கழனிகளுக்கு உரியவன் இவளின் தகப்பன்! அவன் மகளாதலின், இவளும், தனக்கே துயரிழைத்த தலைவனுக்கும் அத்துயர் மறந்து தண்ணருள் செய்வாளாய்ப், பாயலின் இன்துணையாக இன்புறுத்தும் செவ்வியளாயினள் என்பதாம். இக்கறுப்புச் சால்பு அவள் பிறந்து வளர்ந்த குடிமரபிலே வந்து படிந்து வலுப்பெற்ற பெருந்தகைமை என்றும் வியந்தனராம்!

உள்ளுறை: தலைவன் ஊர்ப் பொது நிலம் போலப் பரத்தையர் பருக்கும் இன்பளிக்கும் தன்மையனாயினும் அவள் உரிமையுடைய கழனியைக் காத்துப் பயன்கொள்ளும் ஊரனின் மகளாதலின், அவன் தனக்கேயுரியவன் என்னும் மணம் பெற்று உரிமையால், அவனை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு மகிழ்ச்சி தந்து உதவும் செவ்வியளாயினள் என்றதாம்.

மேற்கோள்: வாயில்கள் தலைவியது கற்புக் கூறியது என்று இச்செய்யுளைக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு, 11).

97. பொய்கைப் பூவினும் தண்ணியள்!


துறை: புறத்தொழுக்கம் இன்றியே இருக்கவும், உளதென்று அஃது உடையான் என நினைத்து ஊடியிருந்த போதில், அவ்வூடலைத் தன் தெளிவுரைகளாலும் பிறபிற அன்புச் செயல்களாலும் நீக்கித் தெளிவித்து, அவளோடு கூடி இன்புற்று மகிழ்ந்தான். அவன், அக் கூடலின் இறுதிக்கண், தலைவியின் தன்மையைத் தன்னுள்ளே நினைந்து வியந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

பகன்றை வாற்மலர் மிடைந்த கோட்டைக்
கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்
பொய்கை யூரன் மகள் இவள்
பொய்கைப் பூவினும் நறுந்தண் ணியளே.


தெளிவுரை: பகன்றையது வெண்மையான மலர்கள் சுற்றியிருந்த தன் தாயது கொம்பைக் கண்டு, கருங்கால்களையுடைய அதன் கன்றானது அஞ்சும் தன்மையுடைய, பொய்கை விளங்கும் ஊரனின் மகள், இவள்! இவள்தான், அப்பொய்கையிடத்தே பூக்கின்ற ஆம்பற் பூவினும் மிகவும் குளிர்ச்சியான அன்புள்ளவள் ஆவாளே!

கருத்து: 'இவள் என்றும் என்பாற் குளிர்ந்த அன்பினளே' என்று வியந்ததாம்.

சொற்பொருள்: வான்மலர் - வெண்ணிறப் பூ. வெரூஉம் - அஞ்சும். பொய்கைப் பூ - பொய்கையிடத்தே பூத்திருக்கும் ஆம்பற் பூ. தண்ணியள் - தண்மையானவள்; தண்மை அன்பின் நெகிழ்வு குறித்தது; இதன் எதிர் சினத்தின் வெம்மை.

விளக்கம்: சேற்றையாடி வரும் எருமைக் கொம்புகளிலே சில சமயம் பூக்களோடு விளங்கும் பகன்றைக் கொடி சுற்றிக் கொண்டிருப்பதும் உண்டு, இதனை, 'குரூஉக் கொடிப் பகன்றை சூடி மூதூர்ப் போர்ச்செறி மள்ளரிற் புகுதரும்' என்று, அகநானூற்றினும் காட்டுவர் - (அகம், 316). 'பொய்கைப் பூவினும் தண்ணியள்' என்றது. இயல்பாகவே தண்மையுடைய மலரினும், பொய்கை நீரிடத்தேயே பூத்திருக்கும் பூவிடத்தே தண்மை மிகுதியாயிருக்கும் என்பதறிந்து கூறியதாகும். இதனால், தன் மனைவியின் செவ்வியைப் பெரிதும் எண்ணி வியந்து போற்றினனாம்.

'பொய்கை' அணுகும் போதெல்லாம் தண்மையே தந்து இன்புறுத்தலேபோலப், பொய்கையூரனின் மகளான இவளும் எனக்கு என்றும் இனியவே செய்யும் இயல்பினளாயினள்' என்கின்றான்.

உள்ளுறை: தாயெருமையின் கோட்டிற் கிடந்த பகன்றை மலரைக் கண்டு, அதனை வேறாக நினைத்து அதன் கன்று வெருவினாற் போலத், தன் மார்பிடத்து மாலையினைக் கண்டு, பிறர் சூட்டியது எனப் பிறழக்கொண்டு, தன்னை வேறுபட்டானாக நினைத்துத் தலைவியும் வெறுவி அஞ்சினள் என்றதாம்.

கன்று அஞ்சினும், அதனை நெருங்கி அதன் அச்சம் தீர்த்துப் பாலூட்டி இன்புறுத்தும் தாயொருமையின் செவ்வி போல, அவள் தன்னைப் புறத்தொழுக்கத்தானென மயங்கிப் புலப்பினும், தான் அப்புலவி நீக்கி அவளை இன்புறுத்தும் அன்புச் செவ்வியின் எனத் தலைவன் சொல்வதாகவும், உவமையால் உய்த்து உணரப்படும்.

பொய்கைப் பூவானது நீரிடையுள்ளதன் வரையுமே அழகும் தண்மையும் பெற்று விளங்கி, நீரற்றபோதில் வாடியழிவதே போலத், தலைவியும் தன் காதலன்பிலே திளைக்கும் வரையும் அழகும் தண்மையும் உடையளாகி, அதிற் குறையுறின் வாடி நலனழியும் மென்மையள் என்று போற்றுவான், 'பொய்கைப் பூவினும் நறுந்தண்ணியள்' எனப் புகழ்ந்தான் என்பதும் ஆம்.

98. இவளின் கடியரோ?


துறை: புறத்தொழுக்கம் உளதாகிய துணையானே புலந்து, வாயில் நேராத தலைமகள் கொடுமை, தலைமகன் கூறக் கேட்ட தொழி, அவற்குச் சொல்லியது.

(து.வி: தலைவன் புறத்தொழுக்கம் உடையவனாகவே, தலைவி புலந்து ஊடியிருந்தாள். தலைவன் அஃதறிந்து, அவள் ஊடலைத் தீர்த்துத் தலையளி செய்ய, வாயில்கள் மூலம் முயன்றான். தலைவியோ இசைய மறுத்துக் கடுஞ்சொற் கூறி அவரைப் போக்கி விடுகின்றாள். இதனைப் பற்றித் தலைவன், தலைவியின் தோழியிடம் கூற, அவள் அவனுக்குப் பதிலுரைப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

தண்புன லாடும் தடங்கோட் டெருமை
திண்பிணி அம்பியின் தோன்றும் ஊர!
ஒண்தொடி மடமகள் இவளினும்
நுந்தையும் ஞாயும் கடியரோ, நின்னே!


தெளிவுரை: தண்ணிய புனலின் கண்ணே நீராடியபடியிருக்கும், பெரிய கொம்பினையுடைய எருமையானது, திண்ணிதாகப் பிணிக்கப்படுதலையுடைய அம்பிபோலத் தோன்றும், ஊரனே! நின்பாற் குறை காணும் போதிலே, அது குறித்து நின்னைக் கடிவதிலே, நின் தந்தையும் தாயும், ஒள்ளிய கொடியணிந்த மடமகளான இவளினும் காட்டில் கடுமையானவர்களோ?

கருத்து: 'நின்னைக் கடிந்து கூறித் திருத்தும் உரிமையுடையவள் நின் தலைவி' என்றதாம்.

சொற்பொருள்: அம்பி - படகு. திண்பினி - திண்மையாகச் சேர்த்துக் கட்டப் பெற்ற; அம்பியின் அமைப்புக் குறித்தது இது! பல மரங்களைச் சேர்த்துத் திண்மையாகக் கட்டியிருப்பது. மடமகள் - மடப்பம் பொருந்திய தலைவி.

விளக்கம்: நீரிலே திளைத்தாடும் எருமையின் முதுகிலே சிறார்கள் பலரும் அமர்ந்து வருகின்ற தோற்றத்தை, மக்களை ஏற்றியபடி நீரில் மிதந்துவரும் அம்பிக்கு (படகுக்கு) நிகராகக் கண்டனர். இஃது தலைவனும் அவ்வாறே பரத்தையர் பலருக்கும் களித்தற்கு உரியனாக விளங்கும் இயல்பினனாவான் என்று சுட்டிப் புலந்ததாம். தனக்குரியனாகிய நீதான் அவ்வாறு பிறர்க்கும் உரியனாகி ஒழுகும் தன்மை பெறாதாளான தலைவி, நின்னைக் கடிதலும் பொறுந்துவதே, செயவேண்டுவதே, என்கின்றாள் தோழி!

தம் குலமரபிற்குப் பழியென்று கருதி நின் தந்தையும் தாயும் நின்னைக் கடிவதினும், நின்னையே துணையாகக் கொண்டு மனையறம் பூண்டவள், நீதான் அது சிதைப்பக் கண்டு, நின்னை அவரினும் பெரிதாகக் கடிதலும் வேண்டுவதே, என்பதுமாம்.

ஒண்தொடியும் மடப்பமும் கொண்ட இவளும் கடிந்து உரைக்கும்படியான இழிவுடைய நடத்தை மேற்கொண்டது, அத் தலைவியால் மட்டுமின்றி, எம்போல்வாராலும் கண்டித்தற்குரியது என்கின்றனளும் ஆம்.

உள்ளுறை: ஆம்பி தன்மேற் கொண்டாரையெல்லாம் கரை சேர்த்து இன்புறுத்துவது; அதுவே தொழிலாக உடையது; நீராடும் எருமையோ தன் மேல் ஏறியிருக்கும் சிறுவர் பற்றி எதுவும் கருதாமல், தான் நீராடும் இன்பிலேயே முற்றத் திளைத்து இன்புறுவது. இவை தலைவனின் வரை கடந்த பரத்தைமைக்கு நல்ல உவமைகளாயின. அவன் பரத்தையர் தரும் இன்பமன்றி, அவர் வாழ்வு நலம் பற்றி யாதும் அக்கறையற்றவன் என்பதும் கூறினளாம்.

99. நோய்க்கு மருந்தாகியவள்!


துறை:தோழி முதலாயினோர், தலைமகன் கொடுமை கூறி விலக்கவும், தலைமகள் வாயில் நேர்ந்துழி, அவன் உவந்து சொல்லியது.

(து.வி: தலைமகன், தலைவியைப் பிரிவு நோயாலே வாடச் செய்து, பலநாளும் பரத்தையர் சேரியே தன் வாழிடமாகக் கொண்டு விளங்கினதால், அவள் தோழியரும் பிறரும் அவன்பால் வெறுப்பும் சினமும் மிக்கவராயினர். ஒருநாள் அவன் தன் மனைக்கு வர, அவனோடு உறவு வேண்டாதே அவனை விலக்குக என அவரெல்லாம் தலைவிக்கு உரைத்தவராக, இடைப்புகுந்து அவளை விளக்குகின்றனர். தலைவியோ, அவனை வெறாதே ஏற்று, மனைக்குள்ளேயும் அழைத்துச் சென்று, அவன் விரும்பியவாறு எல்லாம் நடந்து அவனை மகிழ்விக்கின்றனள். அவள் பண்பினைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்த தலைமகன், தன்னுள் உவந்தானாகச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை
கழனி எருமை கதிரொடு மயக்கும்
பூக்கஞ லூரன் மகள், இவள்;
நோய்க்குமருந் தாகிய பணைத்தோ ளோளே!


தெளிவுரை: பழனத்துப் பாகலிலேயுள்ள முயிறுகள் மொய்த்து உறைகின்ற கூடுகளை, கழனியிடத்தே மேய்கின்ற எருமையானது நெற் கதிரோடும் சேர்த்துச் சிதைக்கும் தன்மை கொண்ட, பூக்கள் நிறைந்த ஊரனின் மகளான இவள்தான், யான் கொண்ட காமமாகிய நோய்க்கு மருந்தாக விளங்கி, அதனைத் தீர்த்த பணைத்த தோள்களையும்

உடையவளாவாள்! கருத்து: 'நோய்க்கு மருந்தாகும் தோளாள் இவள்' என்றதாம்.

சொற்பொருள்: முயிறு மூசு குடம்பை - முயிறுகள் மொய்த்த படியிருக்கும் கூடு; முயிறுகள் மரத்தின் இலைகளைப் பிணைத்துத் தாம் முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பெற்று வளர்த்தற்கான கூடுகளை அமைப்பதை இன்றும் காணலாம். 'பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை கழனி நாரை உறைத்தலின், நெந்நெல், விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்' என அகநானூறும் காட்டும். (அகம், 255). மயக்கும் - சிதைக்கும். நோய் - காமநோய்.

விளக்கம்: உழவர்க்கே கழனியிடத்துப் பயன்காணலிலே உதவி நின்று சிறத்தற்குரிய எருமையானது, அக் கழனியிடத்தே பயன் நிரம்பிய நெற்கதிரைச் சிதைத்தலோடு, புறத்தே பழனத்திடத்தே பாகலில் விளங்கும் முயிறுகளின் கூடுகளையும் சிதைக்கின்ற கொடுமையினையுடைய ஊரனின் மகள் என்றது. ஆங்கதுதான் நெருக்கித் திருவாரின் இயல்பென உணர்ந்த வளாதலின், யான் எருமை விளைவயற்கதிர் சிதைத்தாற் போல அவளின் இல்லறத்தைச் சிதைவித்ததும், எருமை புறத்தே பழனப்பாகல் முயிறுமூசு குடம்பையை அழித்தாற் போல, பரத்தையர் சேரியிலே தாயரின் கட்டுக்காவலைக் கடந்துவரச் செய்து பரத்தையர் பலரை மயக்கி இன்பம் நுகர்ந்தபின் கைவிட்டதும் பற்றியெல்லாம், என்னைச் சினந்து வெறுத்தொதுக்காது, பூக்கஞல் ஊரனின் மகள், ஆதலின், தான் தன் நறும் பண்பிலேயே மேம்பட்டு நின்றாளாய், என் நோய்க்கும் மருந்தாகி, என்னையும் வாழ்வித்தனள் என்றனன்.

உள்ளுறை: இனித் தோழியரும் உறவோரும் என் கொடுமையினை எடுத்துரைத்து? அவள்பாலுள்ள அன்பின் மிகுதியாலே, அவளுக்குக் கொடுமை செய்த என்னை ஏற்காதபடி விலக்கவும், அவள் என்னை வெறுத்துப் போக்காளாகித், தன் கற்பின் பெருமிதத்தால் என் நோய்க்கு மருந்தாகி, எனக் கிசைந்து, யான் இன்பம் எய்துவதற்குத் தன்னை தந்து உதவியும் சிறந்தனள் என்று உள்ளுறையால் கூறினதும் ஆம்.

இவ்வாறு கொள்ளின் முயிறுமூசு குடம்பையை நெற்கதிரோடு எருமை மயக்கும் என்றதனை, யான் செய்த கொடுமையையும், அவர்கள் என்மேல் சினமுற்றுக் கூறியவற்றையும் சிதைத்து, என்பக்கலேயே அவள் நின்றாள் என்று, வியந்து போன்றி உரைத்ததாகக் கொள்க.

100. நரம்பினுன் இன கிளவியள்!


துறை: வாயில் நேர்தற் பொருட்டு, முகம்புகுவான் வேண்டி இயற்பழித்துழித், தலைமகள் இயற்பட மொழிந்த திறம், தலைமகற்குத் தோழி சொல்லியது.

(து.வி: பரத்தைமை பூண்டிருந்த தலைவன், தன் மனைவியின் நினைவெழத், தான் மனைக்கு வருவதான செய்தியை ஏவலர் மூலம் சொல்லி விடுகின்றான். அவர் வந்து கூறத், தலைவியின் உடனிருந்தாளான தோழி, தலைவி அவனை ஏற்றலே செயத்தக்கது என்னும் கருத்தினளாயினும், தலைவனின் கொடுமை கூறிப் பழித்து, அவள் இசையாள் என மறுத்து அவரைப் போக்க முற்படுகின்றாள். அப்போது, தலைமகள், தான் இசைவதாகச் சொல்லியனுப்புகின்றாள். அவள் சொவ்வியை வியந்து போற்றிய தோழி, தலைவன் வந்தபோது, அவனுள்ளத்தில் படுமாறு, அதனைப் பற்ற உரைக்கின்றதாக அமைந்த செய்யுள் இது.)

புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை,
மணலாடு சிமையத் தெருமை கிளைக்கும்
யாணர் ஊரன் மகள், இவள்;
பாணர் நரம்பினு மின்கிள வியளே.


தெளிவுரை: புனலாடச் செல்வாரான பெண்கள் இட்டுச் சென்ற ஒள்ளிய அணிகலன்களை, அம் மணற் குன்றின் மேலிருந்து எருமைகள் கிளைத்து வெளிப்படுத்தும், புதுவரு வாயினையுடைய ஊரனின் மகள் இவள்! இவள்தான், பாணரது இசைழெயுப்பும் யாழினது நரம்பினுங்காட்டில் இனியவான சொற்களையும் உடையவள்காண்!

கருத்து: 'என்றும் இனியவே பேசுபவள் என் தலைவி' என்று போற்றியதாம்.

சொற்பொருள்: சிமையம் - உச்சி. கிளைக்கும் - காற்குளம்பாலும் கொம்பாலும் கிளைத்து வெளிப்படுத்தும். பாணர் நரம்பு - யாழ் நரம்பு; அதில் இசைத்தெழும் இன்னிசை சுட்டிற்று. கிளவி - பேச்சு.

விளக்கம்: 'புனலாடப் போவாரான மகளிர்கள், தாம் மணற் குன்றின்மேலே புதைத்துவைத்து, பின் மறந்து போயின ஒள்ளிய இழைகளைத், தான் மணலைக் கிளைத்து ஆடி மகிழ்ந்திருக்கும் எருமையானது, கிளைத்து வெளிப்படுத்தும் யாணர் ஊரனின் மகள்' என்றனள். இஃது எருமைகளும் கூடப் பெண்டிர்க்குத் தம்மையறியாதேயே உதவுகின்ற இயல்புடைய ஊரனின் மகள் தலைவி என்றதாம். ஆகவே, அம்மகளிர் தம் ஒள்ளிழைகளைச் சிலகாலம் இழைந்தாற்போல் கவலையுறினும், மீளவும் அவற்றைப் பெறுவர் என்பதாம். அவ்வாறே, சிலநாள் நின்னைப் பிரிந்து வருந்தினும் மீளவும் பெறுவோம் என்ற நம்பிக்கையிலே உறுதி கொண்டாளாதலின், நின் வரவை உவந்தேற்று இன்சொற் கூறினள் என்று, தலைவியின் குடிமரபின் வந்த சால்பைப் போற்றியதாம்.

புனலாடு மகளிர்தம் ஒள்ளிழைகள் புனலிடத்தே வீழ்ந்து போகாமற்படிக்கு, அவற்றைத் தாம் எளிதாக அடையாளங் கண்டு எடுத்துக் கொள்வதற்கு வசதியாக, மணல் மேட்டு உச்சியிலே வைத்துவிட்டுச் சென்று நீராடுவர். அப்படி வைத்தவற்றைக் காற்றாலும் பிறகாணத்தாலும் மேல் விழுந்து மணல் கிளைத்தாடும் எருமை அதனைக் கிளைத்து வெளிப்படுத்தி, அவருக்கு மகிழ்வூட்டும் என்று கொள்க.

உள்ளுறை: 'மகளிரது மறைந்த இழையை எருமை கிளைக்கும் ஊரன் மகள்' என்றது, இப்போது வாயில் நேர்ந்தலேயன்றிக் களவுக் காலத்து நீ செய்த நன்மை மறைந்தனவும் எடுத்துக் கூறினாள்' என்பதாம், என்னும் பழைய உரைக் கருத்தும் கொள்க.

மாறா அன்பிலே கனுந்து வரும் இனிய சொற்களாதலின், அதன் இனிமைக்குப் பாணர் மீட்டி எழுப்பும் யாழ் நரம்பிலிருந்தெழும் இசை நயத்தினை உவமிக்க எண்ணி, அதுவும் செவ்வியால் பொருந்தாமை கண்டு, 'அதனினும் இனிய சொல்லினள்' என்றனன்.

இவ்வாறு, மருதத்திணையின் நுட்பங்களை எல்லாம் உணரக் காட்டுவனவாக அமைந்த, ஓரம்போகியாரின் செய்யுட்கள் நூறும் அறிந்தனம். இந்நூறு பாட்டுகளையும் பத்துக் குறுந் தலைப்புகளின் கீழ், அவ்வத் தலைப்புகளோடு இசைந்து வரத் தொகுத்திருக்கும் சிறப்பினையும் கண்டோம்.

மருதம் நாகரிகச் செவ்வியாலே சிறப்பது. மன உணர்வுகள் கலைநயத்தோடு செயற்படுத்தப்படும். விரைவிலே, கடமையுணர்வுகள் வலுவற்றுப் பின் தங்கிப் போதலும் நிகழ்கின்றன. இந்த இழுக்கத்தின் விளைவே பரத்தைமையும் பிறவுமாகும். இவ்வாறு இலக்கியத்திலேயும் ஏறுதல் பெற்ற இழுக்கம் பரவலான மக்கட்பண்பு என்பது தவறு. துறைநயம் காட்டலின் பொருட்டாகப் புலமையாளர் கற்பித்துக் கொண்டனவும் பல என்னும் நினைவோடேயே இதனைக் கற்று இன்புறல் வேண்டும். மனைத் தலைவியின் வருத்தத்தை மிகுவிப்பது, மணந்தானின் பரத்தைமைப் பிரிவே எனினும், அதனையும் தன் பொருந்தகையால் அடக்கிக் கொண்ட, குடிமாண்பு போற்றும் பெண்மைச் சால்பினை வியந்து காட்டலே நோக்கமாகப், புலவர்கள் பலப்பல நிகழ்ச்சிகளைப் படைத்துக் காட்டியுள்ளனர். இதுவே நிலையாகும். அன்றிக் கட்டவிழ்ந்த காமத்தளர்ச்சியர் பண்டைத் தமிழரெனக் கொள்ளல் கூடவே கூடாது. அது தமிழ்ப் பண்பும் அன்று; மரபும் அன்று.

அம்மூவனார் செய்தருளிய


நெய்தல்


தொல் தமிழ்ப் பழங்குடியினரின் வாழ்வமைதிகள், பெருப்பாலுன் அவரவர்தம் வாழ்விடத்தின் நிலப்பாங்கையும், அந்நிலப்பாங்கிலே வாழ்வியல் நடாத்திய உயிரினங்களையும், செழித்தோங்கிய மரஞ்செடி கொடிகளையும், மற்றும் அமைந்த பலவான வளங்களையும் தழுவிச் செல்வனாவாகவே அமைந்திருந்தன.

அறிவொளி எழுந்து வளர்ந்து, மக்கள் தம்முள்ளே ஒன்றுகூடி, ஊரும் சேரியுமாகச் சேருந்து இருந்து வாழத் தொடங்கிச், சமுதாய நெறிமுறைகளும் வகுக்கப்பெற்று, வாழ்வியல் செம்மை பெற்றுச் செழுத்தபோதும், மேற்கூறிய நிலந்தழுவிய, சுற்றுச் சூழல்களைத் தழுவிய வாழ்வுப்போக்கே, அனைத்துக்கும் உள்ளீடாக நிற்கும் உணர்வாக அமையலாயின.

இந்நிலையிலே, 'நெய்தல்' என்பது, கடலும் கடல் சார்ந்த இடமும் தனக்குரிய நிலமாக அமைய, அங்கு வாழ்வியல் கண்டாரான மீன்பிடிப்பாரும், உப்பு விளைப்பாருமாகிய மக்களின் வாழ்வியலைத் தழுவிச் செல்லும், வாழ்வியல் ஒழுக்கமாக அமைந்ததாகும்.

காலப்போக்கில், ஒவ்வொரு நிலத்துவாழ் மக்களிடமும், பிறபிற நிலத்துப் பொருள்களிலே செல்லுகின்ற ஆர்வமும் தோன்றி, அதுவே தேவையாகவும் மலர்ந்து வளர்ந்தபோது, ஒருவருக்கொருவர் கொண்டும் கொடுத்தும் வாழத் தொடங்கினர். அப்படி வாழ்ந்துவந்த மக்களிடையே, கருத்துப் பரிமாற்றங்களும் வழக்கம் பரிமாறல்களும் ஏற்படலாயின. இவ்வாறு கொள்வதும் கொடுப்பதுமாகிய தொழிலையே சிலர் வாழ்வியல் தொழிலாக மேற்கொண்டு, அதனால் பெரும் பயனையும் கண்டபோது, இதற்கெனவே வாணிக மக்களும் உருவாயினர். தாமே தனித்தும், தமக்கு உதவப் பலரையும் துணை அமைத்தும், இவர்கள் பெருவளமையோடு தம் தொழிலாற்றி வாழலாயினர்.

இந்தப் பண்டமாற்றமும், இதன் பயனாகக் குவிந்த பெருவளனும், மக்களிடையே தத்தம் விளைவுகளை 'விலைப்படுத்தி' அதற்கீடாகத் தத்தம் தேவைப் பொருள்களைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பண்டமாற்றல் மனப்பாங்கை உருவாக்கின. ஆகவே, மிகு பொருள் குவிக்கக் கருதிய மனவன்மையாளர்களும் தோன்றினர். தம் உரிமைகளை வலியுறுத்திப், பிறர் நலத்தைத் தமதாகக் கவரலாயினர். இதுவே சமுதாய நெறி மரபாக, அவர்தம் வலிமைக்கு எதிர் நிற்கவியலாத பிற மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பெற்ற போது, சமுதாய மக்கள் மேற்குடியினரும் கீழ்க்குடியினருமாக இருவகையாற் பிளவுற்றனர். பிறர் பணிகொண்டு தாம் இனிது மனம்போல் வாழும் உயர் குடியினரும், அவர்க்குப் பணிசெய்தே தம் வாழ்வியலை நடத்தும் ஏவல் உழைப்பாளருமாகத் தமிழினமும் இருவேறு ந்நிலையினதாகிப் பிளவு பட்டது. உயர்குடியினரும் வளமாகவும், வசதிகளோடும், பலர் உவந்து பணிசெய்யத் தம் மனம் விரும்பியவாறு களிப்போடே வாழ்ந்தனர். பொதுநெறிகள் அவர்களைச் சாராதே அன்றும் ஒதுங்கி நின்றனர். ஒன்றி வாழும் உரிமையினராக வாழ்ந்த மகளிருட் சிலர் அவர்களாற் காமப் பொருளாகவும் மதிக்கப்பட்டு நிலை தாழ்த்தனர்.

இத்தகைய நிலையிலே, நாகரிகமென்னும் பெயரோடு தமிழ்ச் சமுதாயம் நிலவிய நாளில், இலக்கியம் படைத்த தமிழ்ச்சான்றோரும், அத்தகைய சமுதாய ஒழுக்க நிலைகளின் வழிநின்றே, தம்முடைய சொல்லோவியங்களை உருவப்படுத்திச் சென்றனர்.

அம்முறையிலே, 'பெருமணல் உலகம்' என்னும் நெய்தல் நில மக்களின் அகவொழுக்கச் செல்வங்களைக் காட்டிச் செல்லும், நூறு குறுஞ்செய்யுட்களைக் கொண்ட நுட்பமான பகுதி இதுவாகும்.

இரங்கலும், இரங்கல் நிமித்தமும் உணர்வெழுப்பும் உணர்வுகளாக, நெய்தல் மகளிரும் மாந்தரும், தாம்தாம் கொண்ட நினைவுகளின் போக்கை, பேசிய பேச்சுக்களின் பாங்கை இலக்கிய நயம்படச் சொல்லும் சொல்லாற்றல் நளினத்தை இச் செய்யுட்களிலே சொல்தோறும் மிளிரக் காணலாம்.

உணர்வுடையோருக்கு, எல்லாப் பொருளமே உயிர்ப்புடன் உளத்தோடே கலந்து உறவாடுகின்றன. உயிருள்ளனவும் உயிரற்றனவும் என்ற பேதம் இல்லாமல், எல்லாமே அவர்தம் சிந்தனைக்கு வித்தாகின்றன. கழிழயும் கானலும், கடலும் கலனும், மீனும் உப்பும், நாரையும் குருகும், புன்னையும் தாழையும், நெய்தலும் அடும்பும், அன்றிலும் அலவனும், இவைபோலும் பிறவும், இலக்கிய நிலையிலே சான்றோரால் எடுத்துக் காட்டப் பெறும்போது, தத்தம் இயற்கையினும் பலவாகச் சிறப்புற்று விளங்கும் உயர்வினையும், நாம் இச்செயுட்களாற் காணலாம்; உணர்ந்து மகிழ்ந்து உவகையுறலாம்.

ஆசிரியர் அம்மூவனார்


ஐங்குறு நூற்றின், நெய்தல் சார்ந்த இந்த ஒரு நூறு குறுஞ் ஞெய்யுட்களையும், செய்தருளிய சான்றோர் அம்மூவனார் என்பார் ஆவார். இவர், தாம் கடற்கரைப் பாங்கிலேயே தோன்றி வளர்ந்தவராதலால், இவர் செய்யுட்கள் உயிரோவியங்களாக, உயிர்ப்பாற்றலுடன் விளங்குகின்றன. மேலும், பாடுபொருளும் 'இரங்கலாகிய' நினைந்துநினைந்து சோரும் உளவேதனையாதலால், கற்பாரின் உள்ளங்களிலும் கசிவை விளைவித்து, நிலைத்து நிழலாடி நிற்கும் பாங்கினையும் பெறுகின்றது.

இவறை, 'மூவன்' என்னும் இயற்பெயருடையார் எனவும், 'அம்' என்னும் சிறப்புப் பெயர் உடன்சேர 'அம்மூவன்' என்று அழைக்கப் பெற்றவர் எனவும் கருதுவர். தொன்மை சுட்டும் 'மூ' என்னும் சொல்லிலிருந்து தோன்றிய பழந்தமிழ்ப் பெயர்களுள் இஃதும் ஒன்றாகும். மூவன், மூதில், மூதூர், மூதுரை, மூப்பு, மூப்பன், மூத்தாள், மூத்தான், மூவேந்தர் என்றெல்லாம் வழங்கும் மூ முதற்பெயர்களும் தொன்மையையே சுட்டுவதைக் காணலாம். இனி, இவரை, 'அம்மூ' என்னும் அன்னைப் பழந்தெய்வத்தின் பெயரோடு, ஆண்பால் விகுதி பெற்றமைந்த 'அம்மூவன்' என்னும் பெயரினர் என்றும் சொல்லுவர் சிலர். இதுவும் பொருந்துவதே!

இந்நெய்தலுக்குரிய சிறுபொழுது எப்பாடு ஆகுத். அதனை ஓர் அழகோவியமாகவே வடித்துக் காட்டுவர், உரையாசிரியர் நச்சினார்க்கியனார். அவர் உரைப்பதனை அப்படியே அறிந்து இன்புறல் நன்று. அவ்வளவு நயமலிந்த சொற்சித்திரங்கள் அவை.

''செஞ்சுடர் வெப்பம் தீரத், தண் நறுஞ்சோலை தாழ்ந்து நீழல் செய்யவும்.''

''தண்பதம் பட்ட தெண்கழி மேய்ந்து, பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாம், குடம்பை நோக்கி உடங்கு பெயரவும்.''

''புன்னை முதலிய பூவின் நாற்றம் முன்னின்று கஞற்றவும்''

''நெடுந்திரை அழுவத்து நிலாக்கதிர் பரப்பவும்''

''காதன் மிக்குக், கடற்கானும் கானத்தானும் நிறை கடந்து, வேட்கை புலப்பட உரைத்தலின்''

''ஆண்டுக் காமக் குறிப்பு வெளிப்பட்டு இரங்கற் பொருள் சிறத்தலின்''

''ஏற்பாடு நெய்தற்கு வந்தது'' என்பன அவர்தம் சொற்கள்.

உணர்வெழுச்சிகளுக்குக் காலவமைதியும், நிலவமைதியும், பிறபிற வமைதிகளும் எவ்வளவு காரணமாகின்றன என்னும் மனவியல் நுட்பத்தை, நாமும் எதனைக் கொண்டு உளம் நிறுத்துவோமாகி, இச்செயுட்களைக் கருத்துடன் கற்போமாக.

1. தாய்க்கு உரைத்த பத்து


இதன்கண் அமைந்தனவாம் பத்துச் செய்யுட்களும், 'தாய்க்கு உரைத்த'லாகிய ஒன்றே பொருளாக அமைந்துள்ளன. ஆதலின், இப்பெயர் தந்துள்ளனர். செவிலியும் தாய்போலவே ஆன்பும், உரிமையும், பொறுப்புணர்வும் மிக்கவள்; பழந்தமிழ் உயர்குடியினரின் குடும்பங்களில், குடும்பத் தலைவிக்கு உயிர்த் தோழியாகவும், அவர்களுக்கு அடுத்த நிலையிலே அனைவராலும் மதிக்கப் பெற்றவளாகவும் விளங்கினவள். அவளிடத்தே சொல்பவளும், அவள் மகளும், தலைவியின் உயிர்த் தோழியும் ஆகியவளே! செவிலியிம் தோழியுமான இவ்விருவரும் தலைவியின் நலத்திலே எத்துணை மனங்கலந்த ஈடுபாட்டினர் என்பதையும் உணர்தல் வேண்டும். தன்னலம் அறவே விட்டுத், தான் அன்பு செய்யும் தலைவியின் நலனே கருதும் இந்தத் தொழியும், தலைவியும், தமிழ் அகவிலக்கியங்களில் காணும் அருமையான தியாக நிகரங்களாகும். தலைவியின் களவுக் காதலைக் குறிப்பாகத் தன் தாய்க்கு உணர்த்தி, அத்தலைவனையே அவளுக்கு எப்படியும் மணம் புணர்க்க வேண்டும் என்னும் தோழியின் பேச்சாக அமைந்த இச்செயுட்களிலும், தன்னலமற்ற அந்த அன்புக் கசிவின் அருமையைக் காணலாம்; அகங்கலந்த நட்பின் உயர்வை உணரலாம்.

101. வந்தன்று தேரே!


துறை: அறத்தொடு நின்ற பின்னர், வரை பொருட்குப் பிரிந்த தலைமகன், வரைவொடு புகுந்தவழி, தோழி, செவிலிக்குக் காட்டிச் சொல்லியது.

(து.வி: களவிலே தலைவியோடு கூடிக் கலந்து ஒன்று பட்ட தலைவன், அவளை வரைந்து முறையாக மணத்தாற் கொள்வதற்குத், தமர்க்குத் தரவேண்டிய பொருளிடைத் தேடி வரும் பொருட்டாகப் பிரிந்து, பிற புலம் சென்றான். அவன் பிரிவினாலே உளத்திற்படர்ந்த நோயும், பெற்றோர் வேற்று மணம் நாடுதலாலே பற்றிய துயரமும் பெரிதும் வருத்தத், தலைவி மிகச் சோர்ந்து மெலிகின்றாள். இந்நிலையிலே. அவன் தேர் வருதலைக் கண்டாள் தோழி. வரைவொடு அவன் வருதலாலே, இனித் தலைவியின் துயரமெல்லாம் அகலும் என்னும் களிப்போடே, அவனுக்கே அவளை மணமுடிக்கத் தன் தாயான செவிலியின் துணையையும் நாடியவளாக, அத் தேர் வரவைக் காட்டி, தலைவியுன் தளவுறைவையும், அவனையே அவள் மணத்தற்கு உரியவள் என்னும் கற்பறத்தையும் சொல்லி வலியுறுத்திகின்றாள்.)

அன்னை வாழி! வேண்டு அன்னை! உதுக்காண் -
ஏர்கொடிப் பாசடும்பு பரியவூர் பிழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று, நின்மகள்
பூப்போல் உண்கண் மரீஇய
நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே!


தெளிவுரை: வாழ்க அன்னையே! யான் நின்பாற் சொல்லும் இதனையும் விருப்போடே கேட்பாயாக. அதோபாராய்! அழகிய கொடிகளையுடைய பசுமையான அடும்புகள் வருந்துமாறு ஏறியும் இறங்கியும், நெய்தலைச் சிதைத்தும், விரைவோடே வருகின்றது. இவளுக்குரியவனான தலைவனின் தேர்! நின் மகளின், நீலப்பூம்போலும் மையுண்ட கண்களிலே பொருந்தியிருந்த ஏக்கமென்னும் நோய்க்கு மருந்தாகித் திகழக்கூடியவன், அவனேதான்!

கருத்து: 'அவனை இல்லத்தார் விரும்பி வரைவுக்கு உடன்படுமாறும் செய்வாயாக' என்றதாம்.

சொற்பொருள்: உதுக்காண் - அங்கே அதோ பாராய். ஏர்கொடி பாசடும்பு - அழகிய கொடியோடே பசுமையாக விளங்கும் அடும்பு; இதனைக் குதிரைக் குளம்புக் கொடி என, இதன் இலையமைதி நோக்கி, இந்நாளிற் பலரும் கூறுவர். ஊர்பு இழிவு - ஏறியநும் இறங்கியும்; தேர்ச் சக்கரம் ஏறியிறங்கக் கொடிகள் உறுதுபட்டு சிதைபட்டுப் போகும் என்பதாம்; மயக்கி - சிதைத்து; இது கழியைக் கடக்கும்போது நெய்தற்கு நிகழ்வது. கொண்கன் - நெய்தல் நிலத் தலைமகன். 'கொண்கன் தேர்' என்றது, அவனது செல்வப் பெருமிதம் தோன்றக் கூறியதாம்.

விளக்கம்: 'நோய்க்கு மருந்தாகிய 'கொண்கன்' என்றது, அவன் நினைவே தலைவிக்கு நோய் தந்தது' என்னும் அவர்கள் களவுக் காதலையும் சுட்டி, 'அது தீர மருந்தும் அவனே' எனக் கற்பினையும் காட்டி வலியுறுத்தி, அறத்தொடு நின்றதாம். 'பூப்போல உண்கண் மரீஇய நோய்' என்றது, அவன் வரவு நோக்கி நோக்கிப் பலநாளும் ஏங்கித் துயருற்று, ஒளியிழந்து நோய்ப்பட்ட கண்கள் என்றதாம். 'நின் மகள்' எனத் தலைவியைக் குறித்தது, அன்புரிமை மிகுதி பற்றியாம்.

உள்ளுறை: 'அடும்பு பரியவும் நெய்தல் மயங்கவும் தேர் விரைய வந்தது' என்றது, அலருரைத்துக் களித்தாரின் வாயடங்கவும், உரியவர் தம் அறியமையினை எண்ணி வருந்தவும், தலைவன் வரைவொடு, ஊரறிய, வெளிப்படையாகத் தன் பெருமிதம் தோன்ற வந்தனன் என்றதாம்.

மேற்கோள்: 'திணை மயக்குறுதலுள், நெய்தற்கண் குறிஞ்சி மயங்கி வந்தது' என்று நச்சினர்க்கினியர், இச் செய்யுளைக் காட்டுவர் - (தொல். அகத், 12 உரை).

குறிப்பு: தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றலான குறிஞ்சித்திணை ஒழுக்கம், இங்கே நெய்தற்கு ஆகிவந்தது. 'உதுக்காண்' என்னும் சொல்லிலே தோன்றும் களிப் புணர்வும் எண்ணி மகிழ்க.

102. தேர் மணிக் குரல்!


துறை: மேற்சொய்யுளின் துறையே இதுவும்.

அன்னை வாழி! வேண்டு அன்னை! நம்மூர்
நீனிறப் பெருங்கடற் புள்ளின் ஆனாது,
துன்புறு துயரம் நீங்க,
இன்புற இசைக்கு மவர் தேர்மணிக் குரலே!


தெளிவுரை: வாழ்க அன்னையே! இதனையும் விரும்பிக் கேட்பாயாக. நம் ஊரிலுள்ள நீலநிறப் பெருங்கடலிடத்துப் புள்ளினைப் போல, நின் மகள் இடைவிடாதே வருத்தித் துன்புறும் அந்தத் துயரமானது நீங்கவும், நாம் அனைவரும் இன்புறவும், அவர் தேர்மணியின் குரல் அதோ இசைப்பதனை நீயும் நன்கு கேட்பாயாக!

கருத்து: ''அவனோடு இவளை மணப்படுத்தற்கு அவன செய்க'' என்றதாம்.

சொற்பொருள்: புள் - கடற்புள்; நாரையும் கடற் காகமும் குருகும் போல்வன. ஆனூது - இடைவிடாது; ஒழிவில்லாமல்.

விளக்கம்: தான் விரும்பும் மீனைப் பற்றுவதற்கு, இடையறாது முயன்று, உயரவும் தாழவுமாகப் பறந்து வருந்தும் கடற் பறவைகள் போலத், தலைவியும் தலைவனின் வரவை எதிர் பார்த்துக் கானற் சோலைக்குப் பலநாள் சென்றும், அவனைக் காணமாட்டாதே துன்புற்று வருந்துவாளாயினள் என்கின்றாள். அது நீங்க, 'அவன் தேர் வந்தது' என்றும், அவள் உள்ளமும், அவளுக்காக வருந்தும் தன்னுள்ளமும், அவள் நலனே நாடும் பிறர் உள்ளமும் இன்புறத் தேர்மணிக்குரல் கேட்பதாயிற்று எனவும், தோழி சொல்லுகின்றாள்.

'புள்ளின் ஆனது இசைக்கும் குரல்' என்று கொண்டால், பொருள் சிறவாது. அவ்வாறாயின் அவன் இரவுப் போதிலே வருவதாகவும், அவன் தேர் வரவாற் கானற்சோலையிலே அடங்கியிருந்த புள்ளினம் அஞ்சிக் குரலெழுப்பும் எனவும் பொருள் கொள்ள வேண்டும். முன்னர்க் களவுக் காலத்தே இரவுக் குறியிடத்திலே அவன் வந்து போயினபோது நிகழ்ந்ததனைக் கண்ட தலைவி, பின்னரும் இரவுப் பொழுதெல்லாம் கண்ணுறங்காளாய்ப், புட்குரல் கேட்கும் போதெல்லாம், தலைவன் வந்தனன் எனவே மயங்கி எதிர்பார்த்து, வராமையாலே வருந்தித் துன்புற்றுத் துயரடைவாளாயினள் என்றும் கொள்ளல் வேண்டும். 'வரைதற்கு வருபவன் பலரும் அறியப் பகற்போதிலேயே வருவன்' என்பதால், இது பொருந்தாது, என்க.

'அவன் தேர்வராவால் அஞ்சியெழுந்து ஒலிக்கும் புட்களின் அந்தத் துயரம் நீங்குமாறு' என்னின், முன்னர் அலரஞ்சி மணிநா தகைத்துவிடுதலாற் பறவையினம் துயருற்றன; இனி மணிக்குரல் கேட்கவே அவை துயரற்றன எனவும் கொள்ளலும் பொருந்தும்.

உள்ளுறை: 'கடற்புள்ளின் துயரம் நீங்க, அவன் தேரின் மணிக்குரல் இசைத்தது' என்பதற்கு, இடையறாதே அலருரை கூறிக்கூறித் திரிந்த அலவற் பெண்டிர்களின் வாயடங்க, அவன் வரைவொடு, ஊரறியத், தன் பெருமிதம் தோன்ற வந்தனன் என்பதும் உள்ளுறை பொருளாகக் கொள்க.

103. தானே அமைந்த கவின்!


துறை: அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழா நின்றுழி, தாய்க்குக் காட்டி, உவந்து சொல்லியது.

(து.வி: தோழி அறத்தோடு நின்றனள். உண்மையுணர்ந்த செவியும், பிறரை அறிவுறுத்தி வரைவுடம்படச் செய்தனள். திருமணமும் நிகழ்கின்றது. அப்போது, மகிழ்ச்சிப் பூரிப்புடன் தன் காதலனருகே அமர்ந்திருக்கும் தலைவியைத் தன் தாய்க்குக் காட்டித், தோழி, பொங்கும் உவகையோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

அன்னை வாழி! வேண்டு அன்னை - புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்கமைந் தனனால் தானே
தனக்கமைந் தன்றிவள் மாமைக் கவினே!


தெளிவுரை: வாழ்க அன்னையே! இதனையும் விருப்போடே காண்பாயாக. புன்னையோடு ஞாழலும் பூத்து மலர்ந்திருக்கும் குளிர்ந்த அழகிய கடற்றுறைக்கு உரியவன் தலைவன். அவன் இவளுக்கே உரியவனாக, இப்போது இவ்வதுவையாலே பொருந்தி அமைந்துவிட்டனன். அதனாலே, இதுவரையும் இவளையகன்று மறைந்திருந்த இவளது மாமைக்கவினும், இப்போதில், தானாகவே வந்து இவள் மேனியிலே பொருந்தி அமைந்து விட்டதே!

கருத்து: 'தலைவியின் களிப்பைக் காண்க' என்பதாம்.

சொற்பொருள்: ஞாழல் - புலிநகக் கொன்றை. அமைந்தனன் - மணவாகனாகிப் பொருந்தினன். மாமைக்கவின் - மாந்தளிரன்ன மேனியழகு.

விளக்கம்: 'புன்னையொடு ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்' என்றது, இவள் தன் இல்லறத்திலும் பலவகை நலனும் ஒருங்கே சேர்ந்து அமைந்து களிப்பூட்டும் என்றதாம். 'இவட்டு அமைந்தனனால் தானே' என்பதற்கு, 'இவளுக்கு எல்லாவகையானும் பொருத்தமான துணைவனாக அமைந்தனன் அல்லனோ?' எனக் கேட்பதாகவும் கருதுக.

உள்ளுறை: 'புன்னையொடு ஞாழல் பூக்கும்' துறைவனுடன், மணத்தால், உவந்து பலரும் வாழ்த்துரைக்க ஒன்றுபட்டதனால், இனி இரண்டு குடும்பத்தின் பெருமையும் உயர்ந்து ஓங்கி, உலகிற் புகழ்பறும் என்பதாம்.

மேற்கோள்: ''இது வதுவை நிகழா நின்றுழி, தாய்க்குக் காட்டித் தோழி கூறியது'' என்று நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர் - (தொல். களவு, 24).

104. கொண்கன் செல்வன் ஊர்!


துறை: புதல்வன் பெற்றுழித் தலைமகன் மனைக்கண் சென்று செவிலிக்கு, முன்பு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவன் நன்மை காட்டிச் சொல்லியது.

(து.வி: தலைவியின் இல்லறவாழ்விலே, அவள் புதல்வனைப் பெற்றிருக்கும் மங்கலநாளில், அவளைக் காணச் சென்றனள் செவிலி. அவளுக்கு, அவன் ஊரைக் காட்டித், தோழி போற்றிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

அன்னை வாழி! வேண்டு அன்னை! - நம்மூர்ப்
பலர்மடி பொழுதின் நலமிகச் சாஅய்
நள்ளென வந்த இயல்தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வனஃ தூரே!


தெளிவுரை: வாழ்வாயாக அன்னையே! இதனையும் விருப்போட நீ காண்பாயாக. நம் ஊரிடத்தே, பலரும் அயர்ந்து உறங்கும் நள்ளிரவுப் பொழுதிலேயும், தன் சிறப்பெல்லாம் மிகவும் குன்றியவனைப் போல, நள்ளென்னும் ஒலியோடே, யாருமறியாத வகையிலே தேரூர்ந்து வந்தானாகிய, செல்வப் பெருக்குடைய தலைவனின் புதல்வனது ஊர் இதுவே! இதன் செவ்வியை உவப்போடு காண்பாயாக!

கருத்து: 'இவள் மனையறமாற்றும் ஊர்ச் சிறப்பைக் காண்பாயாக' என்றதாம்.

சொற்பொருள்: பலர் மடி பொழுது - பலரும் அயர்ந்துறங்கும் இரவின் நடுச்சாமப் பொழுது. சாஅய் - தளர்ந்து. நலம் - சிறப்பு. நள்ளென - நள்ளென - நள்ளெனும் ஒலியோடே. இயல் தேர் - இயலும்தேர். கொண்கன் - தலைவன். செல்வன் - மகன்; புத்திரப்பேறே மிகச் சிறந்த குடிச் செல்வமாதலின், மகனைச் 'செல்வன்' என்றல் பழந்தமிழ் மரபு; இப்படியே மகளைச் 'செல்வி' என்பதும் வழக்கு. இரு குடும்பத்தார்க்கும் அவர் உரியவர் என்பதும் நினைக்க.

விளக்கம்: 'அன்று இவன் தோன்றிய தளர்ச்சி நோக்கி, இவன் வளமையை யாதும் அறியாதே, 'தலைவிக்குப் பொருந்துவனோ?' என நீயும் ஐயுற்றனையே? இதோ பார், அவன் மகனின் ஊர் வளமையை'' என்று தன் தாய்க்குக் காட்டுகின்றாள்' என்றதால், அவன் பிறந்ததும் கொண்கனூரை அவனுரிமையாக்கி நயமுடன் தோழி கூறினாள். இன்றும், தமிழகச் சிற்றூர்ப் புறங்களிலே மகவு பிறந்ததும், அதைக் குறித்தே, 'இன்னானின் தந்தை, இன்னானின் தாய், இன்னானின் வீடு' எனவெல்லாம் வாழங்கும் உரிமைச் சால்பும் நினைக்க. பலர்மடி கங்குற்போதிலும், தான் தலைவிமேற் கொண்ட அன்புக் காதன் மிகுதியாலே தளர்ந்து வந்து இரந்து நின்றான் தலைவன். யாமும் அவன் வரவை நோக்கித் தளர்ந்திருந்தேம் எனத் தலைவன் தலைவியரின் ஒன்றுபட்ட இசைவான காதன்ம்யையும் நினைவுபடுத்தினள்.

இச்செய்யுள் பெரும்பாலும் மகப்பெறுதல் நிகழ்ச்சி, தலைப்பிள்ளை எனினும் கூட, கணவனின் இல்லத்தேயே நிகழ்வது தான் நம் பழைய தமிழ்மரபு என்பதைக் காட்டும். மகன் பிறக்கும் வீடு, அம்மகனுக்கே உரித்தான வீடாகவே இருத்தல் தானே, மிகவும் பொருத்தமும் ஆகும்.

மேற்கோள்: புதல்வற் பெற்றுழித் தலைவன் மனைக் கண் சென்று செவிலிக்கு, அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவனூர் காட்டிக் கூறியது எனக் காட்டி விளக்குவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு. 9)

இந்நாளைக்கு ஏற்பக் கொள்வதானால், மகப்பேற்றுக்குப் பின் தாயையும் மகனையும் தலைவனின் ஊரிற் கொண்டு சேர்த்த போதிலே, உடன் சென்று செவிலித்தாய்க்கு, தோழி அவனூரின் சிறப்புக் காட்டிக் கூறியது என்று கொள்க.

105. நுதல் சிவந்தது!


துறை: அறத்தொடு நின்றபின், வேண்டுவன தருதற்குப் பிரிந்த தலைமகன், வரைவொடு வந்துழி, தலைமகள் நுதற்கண் முன்புள்ள பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக் காட்டி, செவிலிக்குத் தோழி சொல்லியது.

(து.வி: தலைவனுக்கு தலைவியைத் தருவதற்கு இசைந்த அவள் பெற்றோர், வரைபொருள் பற்றியும் வலியுறுத்தத், தலைவன் அது தேடிக்கொண்டு வருமாறு வெளியூர் நோக்கிப் போகின்றனன். அவன் சந்திப்பைப் பலநாள் இழந்த தலைவி சோர்ந்து தளர, அவள் நெற்றியும் பசலை படர்ந்தது. அவன் தமர் குறித்த வரைபொருளோடு, வந்து அதனைக் குவித்துப் பெருமிதமாக நின்றபோது, தலைவியின் பெற்றோரும் மகிழ்ந்து, வரைவுக்கும் உடன் பட்டுவிட்டனர். இஃதறிந்ததும், தலைவியின் உள்ளப் பூரிப்பால் அவள் நெற்றியின் பசலையும் மாறிப் பொன்னிற் சிறந்த ஒளியோடே அழகுற்று விளங்கிய தனை வியந்து, தோழி, செவிலித் தாய்க்குக் காட்டிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

அன்னை வாழி! வேண்டு அன்னை - முழங்குகடல்
திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்தெனப்
பொன்னினும் சிறந்தன்று; கண்டிசின் நுதலே!


தெளிவுரை: வாழ்வாயாக அன்னையே! இதனையும் விரும்பிக் காண்பாயாக! முழக்கமிடும் கடலலைகள் கொண்டு தந்த முத்துக்கள், வெண்மணலிடையே எடுப்பாரற்றுக் கிடந்து ஒளி செய்யும், குளிர்ந்த அழகிய துறைக்கு உரியவன் வந்தனன். அவன் வந்தான் என்றதும், இவள் நுதலானது பொன்னினும் சிறந்தவோர் புதிய ஒளிபெற்றதனை நீயும் காண்பாயாக.

கருத்து: ''அவள் களிப்பும் காதலும் அத்தகையது'' என்றதாம்.

சொற்பொருள்: முழங்கு கடல் திரை - முழக்கோடே வரும் கடல் அலை. திரைதரு முத்தம் - அலைகள் தாமே கொண்டு போட்டுச் செல்லும் முத்தம். பொன் - செம்பொன். 'சின்'; முன்னிலை அசை.

விளக்கம்: 'அவன் வரவே அவள் நுதலில் அழகுபடரச் செய்யின், அவர்களின் பிரிவற்றதாக உடனுறையும் இல்வாழ்வுதான் எத்துணை இன்பம் மிகுக்கும்' என்றதுமாம். திரைகள் முத்தைத் தாமே கொண்டு வெண்மல் சேர்ப்பதை, 'இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்' (அகம் - 130) எனப் பிறரும் காட்டுவர். தமிழ்க் கடல் வளமை, அத்தகையது.

உள்ளுறை: 'முழங்கு கடல் திரை தருகின்ற முத்தம், வெண்மணலிடையே கிடந்து இமைக்கும் துறைவன்' என்றது அவன் பெருமுயற்சியின்றியே, தலைவியின் பெற்றோர்கள் விரும்பிய பொருளைத் தேடிவந்து குவித்துத், தலைவியை மணத்தோடு அடைந்தனன் என்பதைக் கூறியதாம். அவன் உயர்வு வியந்ததும் இது.

மேற்கோள்: 'தோழி கூற்று; நொதுமலர் வரவு பற்றி வந்து முன்னிலைக் கிளவி' என்று காட்டுவர், இளம்பூரணர். (தொல். களவு, 24). தலைவன் வரவறிந்தே ஒளிபெறும் இவள் நுதற்கவின், நொதுமலர் வரைவுநேரின் மீண்டும் கெட்டழியும் எனக் கூறித், தோழி அறத்தொடு நின்றதாக, இத்துறைக்கு ஏற்பப் பொருள் காணவேண்டும். அப்போது வரைவுக்குத் தமர் இசைதலை வலியுறுத்தியதாகவும் கருதுக.

106. அம் கலிழ் ஆகம்!


துறை: அறத்தொடு நின்ற தோழி, அது வற்புறுப்பான் வேண்டிச், செவிலிக்குச் சொல்லியது.

(து.வி: தலைவியின் களவுறவைக் குறிப்பாகப் புலப்படுத்தி, அத்தலைவனுக்கே அவளை எவ்வாறும் மணமுடிக்க வேண்டும் என அறத்தொடுநின்ற தோழி, மீண்டும் அதனை வலியுறுத்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

அன்னை, வாழி! வேண்டு, அன்னை! - அவர் நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும்
தண்டகல் வளையினும் இலங்குமிவள்
அம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே!


தெளிவுரை: வாழ்வாயாக அன்னையே! இதனையும் விரும்பிக் கேட்பாயாக; அவர் நாட்டிடத்தேயுள்ள தோலடிப் பாதங்களையுடைய அன்னமானது, தன் துணையாகக் கருதி மிதிக்கும் குளிர்ந்த கடற்சங்கினும் காட்டில், வெண்மை பெற்று விளங்கும் இவளின் அழகொழுகும் மேனியையும் கண்டனை. இதனை நினைவிற் கொண்டேனும், நீதான் அவன செய்வாயாக.

கருத்து: 'அவனையன்றி இவள் நலமுறல் அரிது' என்பதாம்.

சொற்பொருள்: துதி - தோல்உறை. துதிக்கால் - தோல் அடி. துணை செத்து - துணைபோலும் எனக் கருதி. வளை - வெண்சங்கு. ஆகம் - மேனி; மிதித்தல் - மேலேறி மிதித்தல்; இது புணர்ச்சிக் குறிப்பும் ஆகலாம் எனினும், அது அறியா மயக்கமெனக் கொள்க.

விளக்கம்: 'மாமைக் கவின் பெற்ற இவள் மேனி, அவன் பிரிவாலே வளையினும் காட்டில் வெண்மை பெற்றதே! இனியும் இவளை அவனொடு மணம்புணர்ப்பதற்குத் தாழ்க்கின், இவள் இறந்தே படுதலும் கூடுமோ!'' என்கின்றனள் தோழி, இதனால் வேற்றுவரைவும் விலக்கினள்; அறத்தொடும் நின்றனள்.

உள்ளுறை: 'அன்னம் வெண்சங்கைத் தன் துணையாகக் கருதிச் சென்று மிதிக்கும் நாட்டினன் தலைவன்' என்றது. ''அவன் இவள்பாற் பெருங்காதலுடையவன் எனினும், இவளை உடனே வரைந்து கொள்வதற்கு முயலாது, வேறுவேறு செயல்களிலே ஈடுபட்டு மயங்கி உழல்வான்'' என்றதாம்.

குறிப்பு: வெண்மையொன்றே கருதி உன்னம் துணையென மயங்கினாற்போல, நீவிரும் இவள் மெலிவொன்றே நோக்கி, இஃது வேறு பிறவற்றால் (தெய்வம் அணங்கியதால்) ஆயிற்றெனக் கொண்டு மயங்குவீர் ஆயினீர்; அதனைக் கைவிடுக என்றதும்மாம். நறுநீர்ப் பறவையான அன்னத்தைக் கூறியது.

107. யானே நோவேன்!


துறை: தோழி, செவிலிக்கு, அறத்தொடு நிலை குறித்துக் கூறியது.

(து.வி: அறத்தொடு நின்று, 'தலைவியை, அவள் களவுக் காதலனாகிய தலைவனுடன் மணம்புணர்த்தலே மேற்கொள்ளத்தக்கது' என்று தோழி செவிலிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவும் ஆகும்.)

அன்னை வாழி! வேண்டு அன்னை! - என் தோழி
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப், படர்மெலிந்து,
தண்கடற் படுதிரை கேட்டொறும்
துஞ்சாள் ஆகுதல், நோகோ யானே!


தெளிவுரை: வாழ்க அன்னையே! இதனையும் விரும்பிக் கேட்பாயாக. என் தோழியான தலைவியானவள். தன் ஒளி சுடரும் நுதல் பசலை நோயடைந்தளர்வுற்றனள்; மென்மேற் படரும் காமநோயாலும் மெலிவடைந்தனள்; குளிர் கடலிலடத்தே மோதியெழும் அலைகளின் ஒலியை இரவிடையே கேட்கும்போதெல்லாம் கண் உறங்காதாளும் ஆயினள்! அது குறித்தே யானும் வருந்துவேன்!

கருத்து: 'அவள் நலனை நினைத்தேனும் பொருந்துவன உடனே செய்க' என்றதாம்.

சொற்பொருள்: சாஅய் - வருந்தித் தளர்ந்து. படர் - காமநோய். படுதிரை - மோதி ஒலிக்கும் அலை

விளக்கம்: இரவெல்லாம் அவன் நினைவாலேயே வாடி வருந்துதலன்றி, கண் உறங்காதும் துயருற்று நலிகின்றனள் தலைவி; நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்தும் போயினவள், உறக்கமும் பற்றாதே இருந்தால், இனி நெடுநாள் உயிர் வாழாள்; அது நினைந்தே யான் பெரிதும் நோவேன். அவள் சாவைத் தவிர்க்க வேனும், அவனோடு அவளை மணத்தால் விரைவிற் கூட்டுக என்றதாம். யான்தான் நோவேன்; நீயும் தமரும் அறியார்போல் வாளாவிருத்தல் முறையாமோ என்று நொந்ததுமாம்.

108. நயத்த தோள் எவன்கொல்?


துறை: அறந்தொடுநிலை பிறந்த பின்னும், வரைவு நீடிற்றாக, 'மற்றொரு தலைமகளை வரையுங்கொல்?' என்று ஐயுற்ற செவிலி குறிப்பறிந்த தோழி, அவட்குச் சொல்லியது.

(து.வி: தோழி அறத்தோடு நின்று செவிலியும், பிறரும் அவளை அவனுக்கே தருவதெனவும் மனம் இசைந்து விட்டனர். அதன் பின்னரும் அவன் அவளை வரைந்து வருதலிலே மனம் பற்றாதானாய்க் காலம் தாழ்க்கச், செவிலியின் உள்ளத்தே கவலை படர்கிறது. 'வேறொருத்தியை அவன் வரைவான் போலும்' என்ற ஐயமும் எழுகின்றது. அதனைக் குறிப்பாலறிந்த தோழி, அதனை மாற்றக் கருதிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

அன்னை வாழி! வேண்டு, அன்னை - கழிய
முண்டகம் மலரும் தண்கடற் சேர்ப்பன்
எந்தோள் துறந்தனன் ஆயின்
எவன்கொல் மற்றவன் நயந்த தோளே?


தெளிவுரை: வாழ்க அன்னையே! இதனையும் விரும்பிக் கேட்பாயாக. கழியிடத்தேயுள்ள நீர்முள்ளிகள் மலர்ந்து மணம் பரப்பியபடியிருக்கும் குளிர்ந்த கடற்கரைக் குரியவன் சேர்ப்பன். அவன், எம் தோள் நலத்தையே துறந்து கைவிட்டனனாயின், அவனால் விரும்பப்பட்ட பிற மகளிர்களிர் தோள்கள் தாம், என்னாகுமோ?

கருத்து: ''அவன் எம்மையன்றிப் பிறரை நாடான்'' என்றதாம்.

சொற்பொருள்: முண்டகம் - நீர் முள்ளி. 'எம்தோள்' தலைவியின் தோள் நலத்தைச் சுட்டியது; 'ஒன்றித் தோன்றும் தோழி மேன' என்னும் விதியையொட்டி வந்தது. துறந்தனன் - கைவிட்டனன்.

விளக்கம்: வரைவு நீடிக்கவே, செவிலி பலவாறாக எண்ணி ஐயங்கொள்கின்றாள்; அவள் ஐயம் அனைத்தும் பொருந்தாதெனத் தோழி மறுப்பவள், இவ்வாறு கூறுகின்றாள் என்று கொள்க. 'எம்மையே அவன் மறந்தான் என்றால், அவன் விரும்பிய பிறரின் கதிதான் யாதோ?' என்னும் கூற்றிலே, அவன் எம்மை மறக்கவே மாட்டான் என்ற உறுதிப்பாடே புலப்படக் காணலாம். 'உழுவலன்பாலே உன்றுபட்டார் இடையே வேற்றுவரைவுகள் நிகழா' என்பதும் நினைக்க.

மேற்கோள்: 'இதனுள் கழிய முண்டக மலரும்' என முள்ளுடையதனைப் பூ மலருமென்று உள்ளுறுத்ததனால், இருவர் காமத்துறைக் கண்ணும் ஒருதலை இன்னா, ஒருதலை இனிது என்றாள் என்பது. 'என் தோள் துறந்தனன்' என்பது முள் உடைமையோடு ஒக்க, 'என்னாங்கொல் அவன் நயந்த தோள்' என்றவழி அவன் அன்பில் திரியாமை கூறினமையின், முண்டக மலர்ச்சியோடு ஒப்பிக்கப்படும் என்பர் பேராசிரியர் - (தொல். உவம, 59).

'அறத்தொடு நின்றபின் வரைவுநீட மற்றொரு குலமகளை வரையுங்கொல்?' என்று ஐயுற்ற செவிலி குறிப்பறிந்த தொழி, அவட்குக் கூறியது என்று காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல். களவு, 23).

109. பல நாளும் வரும்!


துறை: அறத்தொடு நின்ற பின்பு, வரைவான் பிரிந்த தலைமகன், கடிதின் வாராதவழி ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான் போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?' என்றாட்கு, தோழி சொல்லியது.

(து.வி: வரைந்து வருவதாகத் தலைவன் குறித்த காலம் கடந்து, மேலும் பல நாட்களும் கழிந்தும், அவனை வரக்காணாத செவிலியின் உளத்திலே, கவலையலைகள் எழுந்து மோதுகின்றன. 'அவன் உங்களை உதுக்கிவிட்டான் போலும்? அவன் உங்களிடம் என்னதான் சொல்லிப் போனான்?' என்று தோழியை நோக்கிக் கேட்கிறாள். அவட்குத் தோழி உறுதியோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

அன்னை வாழி! வேண்டு அன்னை! - நெய்தல்
நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
எம்தோள் துறந்த காலை, எவன்கொல்
பன்னாள் வரும் அவன் அளித்த பொழுதே?


தெளிவுரை: வாழ்வாயாக அன்னையே! இதனையும் விருப்போடே கேட்பாயாக. நீரிடத்தே படரும் நெய்தலது உட்டுளை கொண்ட கொடிகளிலே, மிகுதியான பூக்கள் மலர்ந்திருக்கும் துறைவனாகிய தலைவன், எம் தோளைத் தழுவிப் பிரிந்த அந்தக் காலத்திலே, அவன் எமக்குத் தலையளி செய்து மகிழ்வித்த அந்தப் பொழுதின் நினைவே, மீளவும் பல நாட்களும் எம்மிடத்தே வந்தபடி யுள்ளனவே! இதுதான் எதனாலோ அன்னாய்?

கருத்து: ''காலந்தாழ்ப்பினும், அவனே சொன்னபடி வந்து மணப்பான்'' என்பதாம்.

சொற்பொருள்: நீர்ப்படர் - நீரிலே படரும். தூம்ப - உள்ளே துளையுடைய தன்மை. அத்தன்மையுடைய நெய்தற் கொடிக்கு ஆயிற்று. பூக்கெழு - பூக்கள் பொருந்தியுள்ள 'தும்பின் பூ' என்று கொண்டு, துளையமைந்த பூவென்று உரைப்பினும் பொருந்தும். அளித்த பொழுது - தலையளி செய்து இன்புறுத்திய பொழுது.

விளக்கம்: அவன் குறித்த அந்த நாள் எல்லை கடந்தாலும் அவன் எம்மைத் தழுவிக்கூடியதான அந்தப் பொழுதின் நினைவு எம்மிடம் பல நாளும் மாறாதிருக்கின்றன; ஆதலின், அவன் வந்து எம்மை வரைந்து மணப்பான் என்னும் உறுதியுடையோம் என்கின்றனள். தலைவியின் காதன்மை மிகுதியும் ஆற்றியிருக்கும் திறனும் காட்டுவது இது. இதுவே பிரிந்தார் இயல்பாகும் என்பதைப் பிறரும் கூறக் காணலாம். (குறு. 326)

உள்ளுறை: 'நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்' என்றது, நீருள்ளேயே படர்ந்து வெளித் தோன்றாவாறு மறைந்து விளங்கினும், நெய்தற் கொடியானது பூக்கெழுமிய தன் தன்மையிற் குன்றாதாய்ப் புறத்தே பலர் கண்டு மகிழுமாறு போலத், தலவனும், தன் நிலைமை பற்றியாதும் நமக்கு உணர்த்தாதேயும், சொன்னபடி வாராதேயும் காலம் தாழ்த்தவனாக விளங்கினும், மணத்தோடு ஊரறிய வருதலில் ஒருபோதும் தவறமாட்டான் என்பதாம்.

நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன் ஆதலின், நிருள்ளவரைக்குமே, அதுவும் செழித்துப் பூத்திருக்கும் என்பதும் உணர்வான். அவ்வாறே அவனோடு உடனுறையும் போதிலேதான் தலைவியும் மகிழ்ந்திருப்பாள் என்பதையும் அறிந்து, தன் சொற்பிழையானாய் விரைந்து வருவான், அவள்மேற் பெருங்காதலன் அவன் ஆதலின், என்பதுதாம்.

'அவன் எம்தோள் துறந்து காலையில், அவன் அளித்த பொழுதே. பன்னாள் எவன்கொல் வரும்?' என்று கூட்டி, 'அவனே எம்மைக் கைவிட்ட பொய்ம்மையாளன் ஆயினால், அவன் அருளிச் செய்த மாலைப்பொழுதும், பொய்யாதே எதனால் வருமோ?' என, காலம் பொய்யாதே போல அவனும் பொய்யான் என்றதுமாம்.

மேற்கோள்: இத்துறையை இவ்வாறே காட்டி, இச்செய்யுளை சந்நினார்க்கினியரும் களவியல் உரையுள் காட்டுவர் - (தொல். களவு, 23).

110. வாழிய பாலே!


துறை: நொதுமலர் வரைவின்கண், தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

(து.வி: களவிலே கலந்து இன்புற்று, அவனையே தன் கணவனாகவும் வரித்து, அவன் வரைவொடு வந்து தன்னைத் தமரிசைவோடே மணத்தலையும் எதிர்பார்த்திருக்கின்றாள் தலைவி. அவ்வேளையிலே, அவளை மணம்பேச நொதுமலர் (அயலார்) வருகின்றனர். அது கண்டு, செவிலிக்கு அறத்தொடு நின்று உண்மையைச் சுட்டியுரைப்பாளான தோழி, சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

அன்னை வாழி! வேண்டு அன்னை! - புன்னை
பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை
என்னை என்றும் யாமே - இவ்வூர்
பிறிதொன் றாகக் கூறும்
ஆங்கும் ஆக்குமோ? வாழியே பாலே!


தெளிவுரை: வாழிய அன்னையே! யான் கூறும் இதனையும் நீ விரும்பிக் கேட்பாயாக. பொன்னின் நிறத்தைக் கொண்டவாக இதழ்விரிந்து மலர்ந்திருக்கும் புன்னைப் பூக்கள் மலிந்த துறைவனான தலைவனையே, யாம் 'எமக்குரியனாகிய தலைவன்' என்று கொள்வோம். ஆயின், இவ்வூரில் உள்ளவரோ, மற்றொன்றாகச் சுட்டிக் கூறாநிற்பர். ஊழ்தான் அவ்வண்ணமும் ஆகச் செய்யுமோ? செய்யாதாகலின், அதுதான் வாழ்க!

கருத்து: 'ஊழே கூட்டிய உறவாதலின், அது எதனாலும் மாறுதல் அன்று' என்றதாம்.

சொற்பொருள்: பொன்னிறம் விரியும் - பொன்னிறத்தோடே இதழ் விரியும். என்னை - என் ஐ; என் தலைவன். பால் - ஊழ். ஆங்கும் - அவ்வாறும். ஆக்குமோ - செய்யுமோ?

விளக்கம்: ''ஊழ் கூட்டிய உறவே தலைவனோடு பெற்று களவுறவாதலால், அதுதான் கடினமணமாகி நிறைவுறவும் அவ்வூழே துணை நிற்கும்; அதனின் மாறுபடக் கூறுவார் கூற்றெல்லாம் பொய்ப்படும்'' என்றதாம். 'புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவன்' என்றது, அதனைக் காணும் அவன், தலைவியை வரைவொடு சென்று மணத்தலிலேயும் மனம் செலுத்துகிறவனாவான் என்பதாம்.

உள்ளுறை: துறையும் புன்னையின் பொன்னிறம் விரிந்த பூக்களின் மிகுதியினாலே அழகும் மணமும் பெறுகின்ற தனைச் செய்யும் விதியே, அத்துறைவனையும் எம்மோடு மணத்தால் இணைத்து எமக்கு அழகும் மணமும் கூடிய நல்வாழ்வு வாய்க்கச் செய்யும் என்பதாம்.

மேற்கோள்: வேற்று வரைவுவரின் அது மாற்றுதற்குத் தலைவி கூறல் இது என்பர் இளம்பூரணனார் - (தொல். களவு, 20). இறந்துபாடு பயக்குமாற்றால், தன் திறத்து அயலார் வரையக் கருதிய ஞான்று, அதனை மாற்றுதற்குத் தலைவி கூற்று நிகழும் எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். களவு, 20). இவர்கள் கருத்து, இது தலைவி கூற்று என்பதாம். அவ்வாறு கொள்வதும் பொருந்தும்; அவளும் அறத்தொடும் நிற்றல் இயல்பாதலின்.

© Om Namasivaya. All Rights Reserved.