Books / எட்டுத் தொகை நூல்கள்


ஐங்குறு நூறு

1. வேட்கைப் பத்து


'வேட்கை' என்பது விருப்பம் ஆகும்; புறத்தொழுக்கிலே நெடுநாள் ஒழுகிய தலைவனின் உடனுறைவின்பம் பெற்றிலாத காலத்திலே, தலைவியின் மனவேட்கை எவ்வாறு பொறுப்புணர்வோடு சென்றது என்பதும், அவள் நலத்தையே கருதியவரான தோழியரின் மனவேட்கை எவ்வாறு நிகழ்ந்தது என்பதும், இதன் கண் விரிவாக உரைக்கப்படுகின்றன.

தானிழந்த கூட்டத்தின் இன்பம் பற்றிய மனக்குறையும், தன்னை ஒதுக்கிச் சேரிப் பரத்தையரை நச்சித்திரியும் தலைவனின் போற்றா ஒழுக்கத்தின் அவலநினைவும் உடையவளேனும், தலைவி, தன்னுடைய இல்லறக் கடமைகளிலே தன் மனத்தை முற்றச் செலுத்தியிருக்கும் மனையறமாண்பினையும் இப்பகுதியிற் காணலாம். அவள் தோழியரோ, 'இத்தகு பண்பினாளின் பிரிவுத்துயரம் தீரும் நாள் வாராதோ?' என்று, அவளைப் பற்றியே நினைத்தவராக, அவள் நலத்தையே விரும்பி வேண்டுகின்றனர். இவ்வேட்டலை, இறையருளை விரும்பி வழிபட்டு வேட்டலாகவே கொள்க.

1. நெற்பல பொலிக!
துறை: புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, 'இது தகாது' எனத் தெளிந்த மனத்தனாய், மீண்டும் தலைவியோடு கூடி ஒழுகா நின்று தலைமகன், தோழியோடு சொல்லாடி, 'யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?' என்றாற்கு, அவள் சொல்லியது.

(துறை விளக்கம்) 'இது தகாது' எனத் தெளிந்த மனத்தினனாகத் தலைவன் தன்னில்லம் மீண்டான். தலைவியோடும் கூடி இன்புற்றும் ஒழுகி வருகின்றான். அக்காலத்து, அவன் உள்ளம், 'அந்நாட்களிலே தன்னைப் பற்றி இவர்கள் எவ்வாறு நினைத்திருப்பார்கள்?' என்று அறிகின்றதிலேயும் சற்று வேட்கை கொள்ளுகின்றது. அவன், தலைவியில்லாத இடத்தே, அதுப்பற்றித் தோழியிடம் உசாவுகின்றான். அவள், அவனுக்குத் தலைவியின் உயர்வைக் காட்டிச் சொல்வதாக அமைந்த செய்யு இது.

'வாழி ஆதன்; வாழி அவினி!
நெற்பல பொலிக; பொன் பெரிது சிறக்க!'
எனவேட் டோளே யாயே; யாமே,
'நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன். வாழ்க!
பாணனும் வாழ்க!' என வேட்டேமே!
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! நெல் பலவாக விளைவதாக; பொன்வளம் பெரிதாகிச் சிறப்பதாக' எனத் தலைமகள் வேண்டினால். 'பூவரும்புகள் கொண்ட காஞ்சி மரத்தையும், சினைகளைக் கொண்ட சிறுமீன்களையும் மிகுதியாகவுடைய ஊருக்குரியவனாகிய தலைவன் வாழ்க; அவன் ஏவலனாகிய பாணனும் வாழ்க!' என, யாங்கள் வேண்டினோம்.'

கருத்து: 'தன் இல்லறக் கடமைகள் சிறப்பதற்காவன வற்றைத் தலைவி விரும்பி வேண்டினாள்; யாங்களோ, அவள் நலன் பெருகுவதற்காக, நின் நலனை வேண்டினோம்.'

சொற்பொருள்: வேட்டல் - வேண்டுதல். யாய் - தாய்; தலைவியை அவளின் சால்புமிகுதியால் சிறப்பித்துக் கூறியது; அவன் புதல்வனைப் பெற்ற தாய் என்பதும் ஆம்: தன்னைத் தலைவன் துறந்தமைக்கு நோவாது, தன் இல்லத்தைத் தாயாகித் தாங்கும் அறநெறிக் கடனிலேயே மனஞ்செலுத்தின உயர்வை நினைந்து கூறியதாகவும் கொள்ளலாம். நனை - பூவரும்பு. சினை - முட்டை. சிறுமீன் - சிறிய உருவுள்ள மீன். ஊரன் - ஊரே தன்னுரிமையாகக் கொண்ட தலைவன்.

விளக்கம்: 'ஆதன் என்றது குடியினையும், 'அவினி' என்றது அக்குடியினனாகத் தம் நாட்டினைக் காத்துவந்த அரசனையும் குறிப்பதாம். காவலன் நெறியோடே காவாதவிடத்து அறமும் நிலைகுன்றுமாதலின், 'அவன் வாழ்க' என முதற்கண் வாழ்த்தினள். 'நெற்பல பொலிக' என்றது. உயிர்களின் அழிபசி தீர்த்தலான பேரறத்திற்கு உதவியாகும் பொருட்டு; 'பொன் பெரிது சிறக்க' என்றது. நாடிவந்து இரவலர்க்கு வழங்கி உதவுதற்கு. தலைமகளின் வேட்கை அறம்பேணும் கடமைச் செறிவிலே சென்றதால், அத்தகைய அவள் வாழ்வு சிறக்கத் தலைவனின் நலத்தைத் தோழியர் வேண்டுகின்றனர். பாணனும் வாழ வேட்டது, அத்தகு பெருங் கற்பினாளுக்குத் தலைவன் துயர்விளைத்தற்குக் காரணமாகிய பரத்தையைக் கூட்டுவித்த அவன், அத்தீச்செயலின் விளைவாலே துயருறாதபடிக்கு இறையருளை விரும்பி வேட்டதாம். இது, அவன் தலைவனின் ஏவலால் இயங்கிவனேயன்றித் தன்னளவில் தலைவிக்கு ஊறு செயநினைந்து எயற்பட்டிலன் என்பதனை நினைந்த அருளினாலும் ஆம். ஆகவே, தலைவனும் ஊறின்றி வாழ வேண்டினதும் கொள்க.

உள்ளுறை: 'நாளைய காஞ்சியும் சினைய சிறுமீனும் முகுதியாகவுடைய ஊரன்' என்றது, முகுதியென்ற நிலையில் உயர்ந்த ஒன்றையும் இழிந்த ஒன்றையும் ஒருசேர இணைத்துக் கூறுதலேபோலத், தலைவியையும் பரத்தையையும் காம நுகர்வு பற்றிய மட்டிலே ஒன்று போலவே நினைத்த பேதையாளனாயினாள் என்றதாம்.

மேற்கோள்: 'இது வாழ்த்தல் என்னும் மெய்ப்பாட்டில் வந்தது' என இளம்பூரணனார் காட்டுவர். (தொல் - மெய்ப் பாட்டியல், சூ. 12 உரை).

குறிப்பு: 'வாழி ஆதன்' என்பதனை, 'வாழியாதன்' எனவே கொண்டால், சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குறிப்பதும் ஆகலாம். அப்போது, அவனுக்கு உட்பட்ட குறுநிலத் தலைவனாக 'அவினி'யைக் கொள்க. கொங்கு நாட்டு 'அவினாசி' என்னும் ஊர்ப் பெயர் அவினியை நினைவுபடுத்தும். மதுரைப் பக்கத்து 'அவனியா புரம்' அவினி அப்பகுதித் தலைவனாகப் பாண்டியனுக்கு உட்பட்டிருந்தவன் என்று நினைக்கவே நம்மைத் தூண்டும்.

2. விளைக வயலே!
துறை: மேற்செய்யுளின் துறையே யாகும்.

'வாழி ஆதன்; வாழி அவினி!
விளைக வயலே; வருக இரவலர்!'
எனவேட் டோளே! யாயே; யாமே,
'பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண்துறை யூரன் கேண்மை
வழிவழிச் சிறக்க!' எனவேட் டேமே!
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! வயல் விளைக; இரவலர் வருக' எனத் தலைமகள் விரும்பி வேண்டினாள். 'பலவான இதழ்களைக் கொண்ட நீலத்தோடு நெய்தலும் நிகராக மலர்ந்திருக்கும், குளிர்ந்த நீர்த்துறையை உடைய ஊருக்கு உரியவனான தலைவனின் நட்பானது, தலைவியோடே வழிவழிச் சிறப்பதாக' என, யாங்கள் வேண்டினோம்.

கருத்து: தலைமகளோ, 'தன் இல்லறம் செழிக்க அறநெறி காக்கும் அரசன் நன்கு வாழ்தலையும், வயல்கள் பெருக விளைதலையும், வரும் இரவலர் உதவி பெற்று மகிழ்ந்து போதலையுமே' வேண்டினாள். யாமோ, 'நின் நட்பு வழிவழி அவள்பாற் சிறப்பதனையே வேண்டினோம்' என்பதாம்.

சொற்பொருள்: நீலம் - கருங்குவளை; மருதத்து நீர் நிலைகளில் பூப்பது. நெய்தல் - நெய்தல் நிலத்து நீர்நிலைகளிலே பூப்பது. கேண்மை - நட்பு; கேளிராக அமையும் உறவு. வழிவழி - பிறவிதோறும் புதல்வன், அவன் புதல்வன் எனத் தொடர்ந்து, குடிபெருகி வழிவழிச் சிறத்தலைக் குறிப்பதும் ஆம்; 'வழிவழிச் சிறக்க நின் வலம்படு கொள்ளம்' என மதுரைக் காஞ்சியிலே குறித்தாற் போன்று கொற்றம்' என மதுரைக் காஞ்சியிலே குறித்தாற் போன்று (194), நாள்தோறும் சிறக்க எனப் பொருள் கொள்வதும் பொருந்தும்.

விளக்கம்: வயல் விளைக என்றது விருந்தாற்றுதற்கும், இரவலர் வருக என்றது எளியோரைப் பேணுதற்கும் மனங்கொண்ட அறக்கட்டமை உணர்வே மேலோங்கி, தலைவியிடம் நின்றதெனக் காட்டுவதாம். தொழியரோ, அவள்தன் இன்ப நலமும் வழிவழிச் செழிப்பதன் பொருட்டு வேண்டினர்; அவர்கள் கேண்மை வழிவழி சிறப்பதனையும் விரும்புகின்றனர். பிறவி தோறும் நீங்கள் இப்படியே தலைவன் தலைவியராகி இன்புற்று மகிழ்க என்பது தோழியர் வேண்டுதற் கருத்தாகும்.

உள்ளுறை: மருதத்திற்கு உரிமையோடு கூடிய நிலத்துக்கு நிகராக, உரிமையற்ற நெய்தலும் செயித்து மலர்ந்திருக்கும் ஊரன் என்றது, உரிமையாட்டியான தலைவிக்கு நிகராக உரிமையற்ற பரத்தையையும் ஒப்பக் கருதி விரும்பித் திரியும் தலைவனின் இழுக்கத்தைச் சுட்டி காட்டுதற்கு.

3. பால் பல ஊறுக.


துறை: இதுவும் மேற்சொல்லிய துறையினதே.

'வாழி ஆதன் வாழி அவினி!
பால்பல ஊறுக; பகடு பல சிறக்க!
என வேட்டோளே' யாயே; யாமே,
'வித்திய உழவர் நெல்லொடு பெயரும்
பூக்கஞல் ஊரன் தன்மனை
வாழ்க்கை பொலிக' என வேட்டேமே!
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! பசுக்களிடத்திலே பாற்பயன் மிகுதியாகச் சுரப்பதாக; பகடுகள் பலவாகப் பெருகுக' என வேண்டினள் தலைமகள். யாமோ, வயல்களிலே விதைவிதைத்துத் திரும்பும் உழவர்கள், அவ்வடிடியிலே நெல்லைக் கொண்டவராகத் தம் வீடுநோக்கிச் செல்லும், பூக்கள் நிரம்பிய ஊரனான, தலைவனின் மனையற வாழ்க்கை என்றும் சிறப்பதாக' என வேண்டினோம்.

கருத்து: தலைவியோ இல்லறக் கடனாற்றுவதில் முட்டுப் பாடற்ற வளமை முகுதியையே வேண்டினாள்; யாங்களோ நுங்கள் மனைவாழ்க்கை சிறப்படைவதையே விரும்பி வேண்டினோம்.

சொற்பொருள்: ஊறுக - சுரக்க, பகடு - எருமை வித்திய - விதைத்த. கஞல் - முகுதியாகவுடைய, மனைவாழ்க்கை - மனையாளோடு கூடிவாழும் இன்ப இல்லற வாழ்க்கை.

விளக்கம்: குடும்ப நல்வாழ்வுக்குப் பாற்பயன் முகுதியும், வயல்வளம் செழித்தற்குப் பகடுகளின் பெருக்கமும் தலைவி வேண்டினாள், அவளது இல்லறக் கடனைச் செழுமையாக நிகழ்த்தலின் பொருட்டு என்க. 'வித்திய உழவர் நெல்லோடு பெயரும்' என்றது, முன் வித்தி விளைந்ததன் பயனைக் கைக்கொண்டு மீள்வர் என்பதாம். இஃது பயிர்த் தொழில் இடையறாது தொடரும் நீர்வளமிக்க ஊரன் என்பதற்காம். 'பூக்கஞல் ஊரன்' என்றது மணமலர் மிகுந்த ஊர் என்றற்காம்.

உள்ளுறை: தானடைதற்கு விரும்பிய பரத்தைக்கு வேண்டுவன தந்து, அவளோடு துய்ப்பதற்கான கலாச் செவ்வியை எதிர்நோக்கும் தலைவன், முன்னர் அவ்வாறு தந்து கூடுதற்கு முயன்ற மற்றொருத்தி, அப்போதிலே இசைவாகிவர, அவளோடுஞ் சென்று கூடி இன்புறுவானாயினான் என்பதைக் குறிப்பாகச் சுட்டி உணர்த்த, 'வித்திய உவார் நெல்லொடு பெயரும்' என்று கூறினளுமாம்.

2. 'பூக்கஞல் ஊரன்' என்றது, மலர்கள் மிகுதியாகி மணம் பரப்பி மகிழ்வூட்டுதலே போன்று, பரத்தையரும் பலராயிருந்து, நாள்நாளும் இன்பமூட்ட, அதிலேயே மகிழ்பவன் தலைவன் என்பதை உணர்த்துவதாம்.

3. 'பால் பல ஊறுக' என்றது, தலைவி மகப் பெற்ற தாயாகி மாண்படைந்தவள் என்னும் சிறப்பைக் குறிப்பாகச் சுட்டும்.

இறைச்சி: 'ஊரன் தன் மனைவாழ்க்கை பொலிக' என வேட்டேம்' என்றது, அதனைக் கைவிட்டுப் புறம்போன செயலால் அவளடைந்த துயரம் இனியேனும் நிகழாதிருப்பதாக என்று தெய்வத்தை வேண்டியதாம். தலைவனுடனிருந்து இயற்றுவதே மனைவாழ்க்கையிற் பொலிவான சிறப்புத் தருவது என்பது கருதி, அதற்கருளத் தெய்வத்தை வேண்டியதுதாம்.

4. பகைவர் புல் ஆர்க!
துறை: இதுவும் மேற்செய்யுளின் துறையே ஆகும்.

'வாழி ஆதன்; வாழி அவினி!
பகைவர் புல்லார்க; பார்ப்பார் ஓதுக!
என வேட்டோளே யாயே; யாமே,
'பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற்
கழனி யூரன் மார்பு
பழன மாகற்க' எனவேட் டேமே!
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! பகைவர், தம் பெருமிதமிழந்து தோற்றாராய்ச் சிறைப்பட்டுப் புல்லரிசிச் சோற்றை உண்பாராக! பார்ப்பார், தமக்கான கடமையினை மறவாதவராக, தமக்குரிய மறைகளை ஓதிக்கொண்டே இருப்பாராக' என விரும்பி வேண்டினள் தலைமகள். யாமோ, 'பூத்த கரும்புப் பயிரையும், காய்த்த நெற்பயிரையும் கொண்ட கழனிகளையுடைய ஊரனின் மார்பானது, பலருக்கும் பொதுவான பழனமாகாதிருப்பதாக' என வேண்டினேம்.

கருத்து: தலைவியோ, நாடு பகை யொழிந்து வாழ்கவெனவும், மாந்தர் அவரவர் கடமைகளைத் தவறாது செய்திருக்க எனவும், பொதுநலனே என்றும் செழிக்க வேண்டினாள். யாமோ, தலைவன் புறவொழுக்கம் இல்லாதானாக, அவளுக்கே என்றும் உரிமையாளனாக, அவளுடனேயே பிரியாது இன்புற்று இருக்குமாறு அருளுதலை வேண்டினோம்.

சொற்பொருள்: புல் ஆர்க - பகைத்தெழுந்தவன் தோற்றுச் சிறைப்பட்டாராய்த் தம் பழைய செழுமையிழந்து புல்லரிசிச் சோறே உண்பவர் ஆகுக; பகையொழிக என்பதாம் பார்ப்பார் - ஓதலும் ஓதுவித்தலுமே கடனாகக் கொண்டு அறம்பேணி வருவார்; அவர், அவர் தம் கடனே தவறாது செய்வாராகுக. பழனும் - ஊர்ப் பொதுநிலம்; யாருக்கும் பயன்படுதற்கு உரிமையாகியும், எவருக்கும் தனியுரிமையற்றும் இருக்கும் நிலம்.

விளக்கம்: நாடு பகையற்றிருப்பதனையும், மாந்தர் அவரவர் கொண்ட கடன்களைச் சரிவரச் செய்து வருதலையும் வேண்டினாள், அவ்வாறே தன் இல்லறக் கடன்களையும் தான் செவ்விதே செய்தற்கு விரும்பும் விருப்பினாள் என்பதனால், 'பழன மாகற்க நின் மார்பு' என்று தோழியர் வேண்டியது, அத்தகு கற்பினாளுக்கே உரிமையுடைய இன்பத்தை, உரிமையில்லார் பலரும் விரும்பியவாறு அடைந்து களிக்கும் நிலை தொடராதிருக்க வேண்டியதாம். 'பார்ப்பார் ஓதுக' என்றது, அதனால் நாட்டிலே நன்மை நிலைக்கும் என்னும் அவரது நம்பிக்கையினை மேற்கொண்டு கூறியதாம்.

உள்ளுறை: பூத்துப் பயன்படாது ஒழியும் கரும்பையும் காத்துப் பயன்தரும் நெல்லையும் ஒருசேரச் சுட்டிக் கூறியது, அவ்வாறே பயனுடைய அறத்தினைத் தெரிந்து பேணா தானாகிக் குடிநலன் காக்கும் தலைவியையும், பொருளே கருதும் பரத்தையரையும் ஒப்பக் கருதி இன்பம்காணும் போக்கினன் தலைவன் என்று கூட்டி, அவன் பிழை காட்டுதற்காம்.

பரத்தையர் தம் குடிமரபு தழைக்கப் புதல்வர்ப் பெற்று உதவுகின்ற தகுதியற்ற நிலையை, 'அவரும் பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, நன்றிசான்ற கற்பொடு எம்பாடாதல் அதனினும் அரிதே' எனும் நற்றிணையால் உணர்க (நற். 330).

5. பிணி சேன் நீங்குக!
துறை: இதுவும் மேற்குறித்த துறை சார்ந்ததே.

'வாழி ஆதன்; வாழி அவினி!
பசியில் லாகுக; பிணிசேண் நீங்குக!
என வேட்டோளே யாயே; யாமே
'முதலைப் போத்து முழுமீன் ஆரும்
தண்துறை யூரன் தேர் எம்
முன்கடை நிற்க' என வேட்டேமே!
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! நாட் பசியில்லாதாகுக; பிணிகள் நெருக்காதே நெடுந்தொலைவு நீங்கிப் போவனவாகுக' என விரும்பி வேண்டினள் தலைமகள். யாமோ, 'முதலையின் இளம்போத்தும் முதிர்ந்த மீனைப் பற்றி உண்கின்ற, குளிர்ந்த நீர்த்துறை அமைந்த ஊருக்கு உரியவனான தலைவனின் தேரானது, எம் வீட்டின் தலைவாயிலிலேயே எப்போதும் நீங்காதே நிற்பதாகுக' என வேண்டினோம்.

கருத்து: தலைமகள் நாடெல்லாம் நன்கு செழித்து வாழ்தலையே வேண்டினாள்; யாமோ, அவள் தலைவனோடு என்றும் கூடியின்புற்றுக் களிப்புடன் வாழ்தலையே விரும்பி வேண்டினேம்.

சொற்பொருள்: சேண் - நெடுந்தொலைவு. போத்து - இளம் பருவத்துள்ளது. முழுமீன் - முற்ற வளர்ந்த மீன். ஆர்தல் - நிறையத்தின்றல். முன்கடை - தலைவாயில்; 'முன்', 'கடை' என இரண்டையும் இணைத்துச் சொன்னது, வீட்டின் பின்பகுதியிலேயே கடைவாயிலாகத் தோன்றும் என்பது பற்றி என்க; இது பெண்டிர் தம் பேச்சு மரபு.

விளக்கம்: 'உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேராதியல்வதே (குறள் 734)' சிறந்த நாடாதலின், அத்தகைய நாட்டிடத்தேயே இல்லற நல்வாழ்வும் நிலையாகச் சிறக்குமாதலின், அறக்கடைமையே நினைவாளாயினாள், அதனையே வேண்டினள் என்க. தோழியரோ, அவனும் அவளுடனிருந்து அவளை இன்புறுத்தித் துணை நிற்றலையே நினைவாராக, 'அவன் தேர் எப்போதும் தம் வீட்டுத் தலைவாயிலிலேயே நிற்பதாகுக' என வேண்டுவாராயினர். தலைவன் தேர் முன்கடை நீங்காதே நிற்பதாயின், அவனும் இல்லிலேயே தலைவியுடன் பிரியாதிருப்பவன் ஆவான் என்பதாம்.

உள்ளுறை: முதலைப் போத்தானது, தன் பசி தீர்த்தலொன்றே கருத்தாக முழு மீன்களையும் பற்றியுண்டு திரிதலே போலத், தலைமகனும் தன்னிச்சை நிறைவேறலே பெரிதாகப் பரத்தையரைத் துயுத்துத் திரிவானாயினன் என்பதாம், இதனால் துயருறும் தலைமகள், மற்றும் இல்லத்துப் பெரியோர் பற்றிய நினைவையே அவன் இழந்து விட்டனன் என்பதும் ஆகும்.

குறிப்பு: ஒன்று முதலாக ஐந்து முடியவுள்ள இச் செய்யுட்கள் எல்லாம் கற்பின்கண் நிகழ்ந்தவை காட்டுவன; 'தன்கண் தோன்றிய இசைமை பொருளாகப் பிறந்த பெருமிதம்' என்னும் மெய்ப்பாட்டினைப் புலப்படுத்துவன; பிரிவுத் துயரினை ஆற்றியிருந்த தலைவியின் பெருந்தகுதிப் பாட்டை, குலமகளிரின் நிறைவான மாண்பினைக் கூறுதலான பயனைக் காட்டுவன எனலாம். 'இல்லவள் மாண்பானால்' என வள்ளுவர் கூறும் பெருமாண்பும் இதுவேயாம்.

6. வேந்து பகை தணிக!
துறை: களவிற் பலநாள் ஒழுகி வந்து, வரைந்து கொண்ட தலைமகன், தோழியோடு சொல்லாடி, 'யான் வரையாது ஒழுகுகின்ற நாள், 'நீயிர் இங்கு இழைத்திருந்த திறம்யாது?' என்றாற்கு, அவள் சொல்லியது.

[து-வி: விரைவிடை வைத்துப் பிரிந்து சென்றவன், திரும்பி வந்து முறையாகத் தலைவியை வரைந்து, அவளோடே மணமும் கொண்டு, அத் தலைமகளோடே இல்லறமும் பேணி இன்புற்றிருக்கின்றனன். அதுகாலை, அவன் தோழியிடம், தான் வரையாது காலம் நீட்டித்த அந்தப் பிரிவுக் காலத்தே, அவர்கள் எவ்வாறு நினைந்திருந்தனர் என்பது பற்றிக் கேட்க, அவள் அவனுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது. வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தே கொள்ளும் தலைவியின் பிரிவுத் துயரம் குறிஞ்சித் திணையின்பாற் படுவது; எனினும், இது இல்லறமாற்றும் காலத்தே உசாவிக் கேட்கச் சொன்னதான கற்பறக் காலத்ததாதலின் மருதத் திணையிற் கொளற்கும் உரித்தாயிற்று என்க; மருதக் கருப்பொருள் பயின்று வருதலையும் நினைக்க.]

'வாழி ஆதன்; வாழி அவினி!
வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக!
என வேட்டோளே, யாயே; யாமே,
'மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்துறை யூரன் வரைக
எந்தையும் கொடுக்க' என வேட்டேமே!
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! வேந்தன் பகை தணிவானாக; இன்னும் பல ஆண்டுகள் நலனோடு வாழ்வானாக!' என விரும்பி வேண்டினள் தலைமகள். யாமோ 'அகன்ற பொய்கையிடத்தே, தாமரையின் முகைகளும் தோன்றும் குளிர்ந்த நீர்த்துறையுடைய ஊருக்குரியவனாகிய தலைமகன் வரைந்து வருவானாக; எம் தந்தையும் இவளை அவனுக்குத் தருவானாக' என வேண்டியிருந்தோம்.

கருத்து: நின்னை எதிர்பட்ட போதே, 'நீ வரைந்தாய், எனத் தலைவி உளங்கொண்டனள்; ஆதலின், இல்லறத்திற்கு வேண்டுவனவே விரும்பி வேண்டியிருந்தனள். யாமோ, 'தலைமகன் விரைவில் வரைந்து வருவானாக; என் தந்தையும் கொடுக்கத் தலைவியை மணந்து, என்றும் பிரியாது இன்புறுத்தி வாழ்வானாக' என நின்வரவையே வேண்டியிருந்தோம்.

சொற்பொருள்: நந்துக - பெருகுக. முகைதல் - அரும்புதல். எந்தை - எம் தந்தை; தலைமகளின் தந்தையே, உரிமை பற்றி இவ்வாறு தோழியும் தந்தையெனவே குறித்தனள்.

விளக்கம்: 'நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவுமாகும்' (தொலை பொருள் 43) என்னும் மரபின்படி இவை நினைக்கப்படுகின்றன. 'வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக' என்றலின், இப் பிரிவினை வாளாண் பிரிவாகக் கொள்ளுதலும் பொருந்தலாம்.

உள்ளுறை: மலராது முகையளவாகவே தோன்றினும், தோன்றிய தாமரை முகை பலராலும் அறியப்படுதலே போல, அவள் களவைப் புலப்படுத்தாது உளத்தகத்தே மறைந்தே ஒழுகினும், அஃது பலராலும் அறியப்பட்டு அலராதலும் கூடும் எனவும்; ஆகவே விரைந்து மணங்கோடல் வாய்க்க வேண்டும் எனவும் வேண்டினேம் எனக் கூறியதாகக் கொள்க.

மேற்கோள்: 'அற்றமில்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும்' (தொல். கற்பு 9, இளம்). என்பதன் உரையில், களவொழுக்கம் புலப்பட ஒழுகுதல் எல்லாத தலைவியைத் தலைவன் வரைந்து கோடல் குறித்துப் பரவிய தெய்வம் அதனை முடித்தலின், அப்பரவுக் கடன் கொடுத்தல் வேண்டும் எனத் தலைவற்குக் கூறுமிடத்துத், தோழிக்கு இவ்வாறு கூற்று நிகழும் என்றும் உரைப்பர். ஆகவே, வேண்டிய தெய்வம் வேண்டியது அருளினமையால், அதற்குப் பரவுக் கடன் தரவேண்டும் என்று தோழி கூறியதாகவும் கொள்ளலாம்.

பிற பாடம்: துறைக் குறிப்பில், 'நீயிர் இழைத்திருந்த திறம்' என்னுமிடத்து, 'நீயிர் நினைத்திருந்த திறம்' எனவும் பாட பேதம் கொள்வர்.

குறிப்பு: 'மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்துறை ஊரன்' என்றதும், மலர்ந்து மணம் பரப்பும் மலர்களையுடைய தாமரைப் பொய்கையிடத்துத் தானே முகைகளும் முகிழ்த்துத் தோன்றுமாறு போல, கற்பறம் பேணி வாழும் மகளிரிடையே, தலைவியும் மணம் பெறாத முகை போல மணமற்றுத் தோன்றுகின்றனள் என்று உள்ளுறை பொருள் கூறலும் கூடும். முகை விரிந்து மணம் பரப்பலே போலத் தலைவியும் மணம் பெற்றுக் கற்பறத்தால் சிறப்பெய்த வேண்டும் என்பதாம்.

7. அறம் நனி சிறக்க!
துறை: இதுவும் மேற்செய்யுளின் துறையே யாம்.

'வாழி ஆதன்; வாழி அவினி!
அறம் நனி சிறக்க; அல்லது கெடுக!'
என வேட் டோளே, யாயே; யாமே,
'உளைப்பூ மருதத்துக் கிளைக்குருகு கிருக்கும்
தன்துறை யூரன் தன்னூர்க்
கொண்டனன் செல்க' என வேட்டேமே!
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க' அறவினைகள் மிகுதியாக ஓங்குக; அறம் அல்லனவாகிய தீச்செயல்கள் இல்லாதேயாகி முற்றவும் கெடுவதாக' எனத் தலைமகள் விரும்பி வேண்டி இருந்தனள். யாமோ, 'உளை பொருந்திய பூக்களைக் கொண்ட மருத மரத்தினிடத்தே, குருகுகள் தன் இனத்தோடே அமர்ந்திருக்கும் குளிர்ந்த நீர்த் துறையுள்ள ஊருக்குரியவனான தலைவன், இவளைத் தன்னூர்க்குத் தன் மனையாளாக்கிக் கொண்டு செல்வானாகுக' என விரும்பி வேண்டியிருந்தோம்.

கருத்து: தலைமகளோ, நாடெல்லாம் நன்மையாற் செறிவுற்று வாழ்தலையே விரும்பி வேண்டினள்; யாமோ, அவள் நின்னை மணந்து மனையறம் பேணிக் கொள்ளலையே விரும்பி வேண்டியிருந்தோம்.

சொற்பொருள்: அல்லது - அறம் அல்லாதது; தீவினை. உளைப்பூ - உளை கொண்டதனா பூ; உளை - உட்டுளை. குருகு - நீர் வாழ் பறவை; நெய்தற்குரிய இதனை மருதத்துக் கூறினர். 'எந்நில மருங்கின் பூவும் புள்ளும்' என்னும் விதியால் (தொலை. பொ. 19) என்க.

விளக்கம்: 'அறம் நனி சிறக்கவே அல்லது கெடும்' எனினும், அதனைத் தனித்து 'அல்லது கெடுக' என்றது, தீவினை முற்றவுமே இல்லாதாதலை நினைவிற் கொண்டு கூறியதாம்.

உள்ளுறை: 'கிளைக்குருகு உளைப்பூ மருதத்து இருக்குமாறு போலத் தலைமகளும் நின் மனையாட்டியாக நின் இல்லத்தே இருந்து, தன் மனைக்கடன் ஆற்றுவாள் ஆகுக' என வேண்டினேம் என்பதாம்.

8. அரசு முறை செய்க!
துறை: இதுவும் மேற் செய்யுளின் துறையே கொண்டது.

'வாழி ஆதன்; வாழி அவினி!
அரசு முறை செய்க; களவு இல்லாகுக!'
எனவேட் டோளே, யாயே; யாமே,
'அலங்குசினை மா அத்து அணிமயில் இருக்கும்
பூக்கஞல் ஊரன் சூள், இவண்
வாய்ப்பதாக என வேட்டேமே!
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! அரசு முறை செய்வதாகுக; களவு எங்கணும் இல்லாது ஒழிக' என வேண்டினள் தலைமகள். யாமோ, 'அசையும் கிளைகளோடு கூடிய மாமரத்திலே அழகான மயில் இருப்பதாகின்ற, பூக்கள் நிறைந்த ஊருக்குரிய தலைவன், முன்னர்ச் செய்த சூளுறவானது இப்போது மெய்யாகி விளைவதாக' என வேண்டியிருந்தோம்.

கருத்து: அவளோ, நாட்டின் பொதுநலனையே வேண்டியிருந்தாள்; யாமோ அவள் திருமணம் விரைவில் வாய்ப்பதனையே வேண்டியிருந்தோம்.

சொற்பொருள்: முறை செய்க - நீதி வழங்குக; 'ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யாவர் மாட்டும், தேர்ந்து செய்வஃதே முறை' (குறள். 541) என்பதனை நினைவிற் கொள்க. களவு - வஞ்சித்தால் பிறர் பொருளைக் கொள்ளக் கருதுதல். அலங்கு சினை - அசையும் கிளை. மா - மாமரம். சூள் - தெய்வத்தை முன்னிறுத்தி ஆணையாகக் கூறல்; 'கொடுஞ்சுழிப் புகா அர்த் தெய்வம் நோக்கி அருஞ்சூள் தருகுவன' (அகம். 110) என வரும், 'நின்னைத் துறந்து வாழேன்' என்றாற் போல்வதான உறுதிமொழி இது.

விளக்கம்: மன்னன் முறை செய்யானெனின் நாடு கெடும்; களவு பிற தீவினைகளும் மலியும், ஆதலின், தலைமகள் அரசு முறை செய்தலையும், களவு இலையா தலையும் வேண்டினள். 'சூள் வாய்ப்பின் அவள் இன்புறுவள்' ஆதலின், யாம் அதனை வேட்டனம் என்கின்றாள்.

உள்ளுறை: 'அலங்கு சினை மாஅத்து அணிமயில் இருக்குமாறு போல, நின் வளமனையிலே தலைவியாகத் தலைமகள் அமைந்து, நின்குடிக்கு அழகு செய்வாளாக என்பதாம்.

குறிப்பு: சூள் பொய்த்தானைத் தெய்வம் வருத்தும்; சூள் பொய்ப்படின் தலைவியும் உயிர் கெடுவள்; ஆதலின், அவன் பொய்யாதானாகியும், அவள் மணம் பெற்று ஒன்று கூடியும் இன்புறுக என்று வேண்டியதுமாம்.

9. நன்று பெரிது சிறக்க!
துறை: இதுவும் முற்செய்யுளின் துறையே அமைந்தது.

'வாழி ஆதன்; வாழி அவினி!
நன்று பெரிது சிறக்க; தீது இல்லாகுக!'
என வேட் டோளே, யாயே; யாமே,
'கயலார் நாரை போர்விற் சேக்கும்
தண்துறை யூரன் கேண்மை
அம்பல் ஆகற்க' என வேட் டேமே.
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! நன்மைகள் பெரிதாகப் பெருகுவதாகுக; தீவினைகள் யாதும் இல்லாமற் போக' என விரும்பி வேண்டினாள், தலைமகள். 'கயல் மீன்களை உண்ட நாரையானது, நெற்போரிலே சென்று தங்கும் குளிர்ந்த நீர்த்துறையையுடைய ஊருக்குரிய வனின் உறவானது, பிறர் பழிக்கும் 'அம்பல்' ஆகாதிருப்பதாக' என யாம் வேண்டினேம்.

கருத்து: 'தலைவன் வரைந்து வந்த மணந்து கொள்ளும் வரையும், இவள் உறவு அம்பலாகாது இருப்பதாக' என்பதாம்; ஆகவே, அவன் விரைவில் வரைந்து வந்து மணங்கொள்க என்பதுமாம்.

சொற்பொருள்: நன்று - நன்மைச் செயல்கள். கயல் - கயல் மீன். போர்வு - நெற்போர்; வைக்கோற்போர் என்பர் சிலர்; பெரும்பாலும் வயலிடங்களில் நெற்போரே நிலவும் என்று அறிக. கேக்கும் - தங்கும். அம்பல் - சொல் நிகழாதே முணுமுணுத்து நிகழும் பழிப்பேச்சு (நக்கீரர் - இறையனார் களவியுலுரை).

விளக்கம்: நன்மை மிகுதியாக நாட்டிலே பெருகுதலையும், தீமை அறவே இல்லாது ஒழிதலையும் வேண்டுகின்றாள் தலைமகள், அந்நிலையே அவள் அறவாழ்வுக்கு ஆக்கமாதலின்.

உள்ளுறை: தலைவியின் நலனுண்டவனாகிய தலைமகன், அவளை முறையே மணந்து வாழ்தலைப் பற்றி எண்ணாதே, தன் மனையகத்தே வாளாவிருந்தனன் என்பதனை, 'கயலார் நாரை போர்விற் சேக்கும்' என்றதால் உணரவைத்தனள்.

நெற்போரிடைத் தங்கினும், கயலார் நாரை புலால் நாற்றத்தை வெளிப்படுத்துமாறு போல, அவன் தன் வீட்டிலேயே தன் களவுறவை மறைத்து ஒழுகினும், அது புறத்தார்க்குப் புலப்பட்டு அம்பலாதலை அவனாலும் மறைக்க வியலாது; ஆதலின், விரைவில் வந்து மணங்கொள்வானாக என வேண்டினேம் என்பதும் ஆம்.

10. மாரி வாய்க்க!
துறை: இதுவும் முற்செய்யுளின் துறையே.

'வாழி ஆதன்; வாழி அவினி!
மாரி வாய்க்க; வளம்நனி சிறக்க!'
என வேட் டோளே, யாயே; யாமே,
'பூத்த மாஅத்துப் புலால்அம் சிறுமீன்
தண்துறை யூரன் தன்னொடு
கொண்டனன் செல்க' என வேட்டேமே.
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! மாரி இடையறவின்றிக் காலத்தே தப்பாமல் வாய்ப்பதாக; அதனால் வளமையும் மிகுதியாகப் பெருகுவதாக!' என வேண்டினள் தலைமகள். யாமோ, பூத்த மாமரத்தினையும், புலால் நாறும் 'சிறுமீன்களையும் கொண்ட தண்ணிய நீர்த்துறைக்கு உரியவனான தலைமகன், தலைவியை மணந்து, தன்னோடும் தன்னூர்க்கு அழைத்துச் சென்று, மனையறம் பேணுவானாக' என வேண்டினேம்.

கருத்து: 'தலைவியோ நாட்டு வளமையினையே விரும்பி வேண்டினள்; யாமோ, அவளது மனையற வாழ்வு விரைவிற் கைகூடுவதனையே விரும்பினோம்.'

சொற்பொருள்: மாரி - மழை; பருவமழையும் ஆம். புலால் அம் சிறுமீன் - புலான் நாற்றத்தையுடைய சிறு மீன். வளம் - நாட்டின் வளம்.

விளக்கம்: 'பூத்த மாமரங்களையும் புலால்நாறும் மீன்களையும் உடைய ஊரன்' என்றனள். 'அவ்வாறே தலைவியை உடன் அழைத்துப் போதலால் அவர் எழுமேனும், அவர்கள் உடனுறை மணவாழ்வால் கற்பறம் நிலைபெறும்' என்று சுட்டிக் கூறியதாம் என்றும் கொள்ளலாம். அப்போது உடன் போக்கினை நிகழ்விக்கத் தோழி தலைவனிடம் வற்புறுத்தியதும் ஆகும்.

குறிப்பு: 'ஆதன்' என்பதற்கு அனைத்தும் ஆதலை நிகழ்வித்த பேரருளாளன் எனப் பொருள் கொண்டு. 'வாழி ஆதன்' என்பதனை இறைவாழ்த்தாகவும், 'வாழி அவினி' என்பதனை அரச வாழ்த்தாகவும் கொள்ளலும் பொருந்தும். தன்னலம் மறந்து கற்புக் கடனே நினையும் பழந்தமிழ்நாட்டுத் தலைவியின் சால்பையும், அவள் நலனையே விரும்பி வேட்கும் தோழியரின் அன்புள்ளத்தையும் இதனாற் காணலாம்.

மேலும், தலைமகன் நாடுகாவற் பொறுப்புடையவன் என்பதும், அவனைக் காதலித்த தலைவியும் அதற்கேற்ப அவன் தலைவியாகும் நிலையிலே நாட்டின் நலனையே வேட்பாளாயினள் என்பதும் பொருளாகப் பொருந்துவதாம்.

கடமை மறந்து காமத்தால் அறிவிழக்கும் தளர்ச்சி ஆடர்தம் இழுக்குடைமையாக மட்டுமே விளங்கிற்று; பெண்டிரோ, தன்னை மணந்தானையன்றிப் பிறரைக் கனவினும் நினையாகக் கற்பினரகாவும், அவன் கொடுமையைப் பொறுத்து மீளவரும்போது ஏற்றுப்பேணும் கடமையுணர்வினராகவும் அன்றும் விளங்கினர் என்பதையும் இங்கே நினைக்க வேண்டும்.

2. வேழப் பத்து


'வேழப் பத்து' என்னும் இப்பகுதியின் பத்துச் செய்யுட்களிலும், 'வேழம்' என்னும் சொல் தவறாமல் வருகின்றது. இதனை 'வேழக் கரும்பு', 'கொறுக்கைச்சி', 'கொறுக்காந்தட்டை' என்றெல்லாம் வழங்குவர். இதன் தண்டு உள்ளே துளையுடையது. இதன் பூக்கள் வெண்மையாகக் கரும்பின் பூப்போலத் தோன்றும். மூங்கிற் சிமிழ்போலவே, இதன் தண்டையும் முறையாக நறுக்கி அஞ்சனம் பெய்து வைப்பதும் சிறுமியர் வழக்கம் ஆகும். இதன் தண்டுகள் கனமற்றவை யாதலின், அவற்றை வெட்டி ஒன்றாக இணைத்துக் கட்டி, மிதவையாக நீரிலிட்டு அதனைப் பற்றிப் புணையாகக் கொண்டு நீராடுவர். மருத நிலத்தே, நீர் வளம் மிகுந்திருக்கும் ஆற்றோரம் குளத்தோரங்களில் இது முகுதியாக வளர்ந்து அடர்ந்து காணப்படும். ஆற்றுக் கரையோரம் நீரரிப்பு ஏற்படாதிருக்க, இதனை மக்களே இட்டு வளரச் செய்வதும் உண்டு.

11. நல்லனும் அல்லனும்!
துறை: பாணன் முதலாயினார்க்குத் தலைமகனது கொடுமை கூறி வாயின்மறுத்த தலைமகள், கழறிய பாங்கற்கு, வாயில் நேர்வாள் கூறியது. (1) 'தலைவன் எவ்வாறு தப்பி ஒழுகினும், அவன் கொடுமை நின்னாற் புலப்படுதல் தகாது, என்று கழறிய பாங்கிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். (2).

(து.வி: (1) முதற்கண் தலைவன் பொருட்டாகத் தூதுவந்தாரான பாணன் முதலாயினார்க்குத் தான் மறுப்புரை செய்து போக்கினாள் தலைமகள்; ஆனால், பின் வந்து வாயில் வேண்டிக் கூறிய பாங்கனுக்குத் தன் இசைவினைப் புலப்படுத்துகின்றாள்; அவள் கூறுவதாக அமைந்தது இச் செய்யுள். (2) 'தலைவன் ஒழுக்கம் தவறுதலுடையனாயினும், அது நின்னாலே வெளிப்படல் தகாது' என்று சொன்னாள் பாங்கி; அவளுக்குத் தலைமகள் தன்னிலையை தோன்றச் சொல்லியதாகவும் இது அமையும்.)

மனைநடு வயலை வேழம் சுற்றும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
'நல்லன்' என்றும், யாமே;
'அல்லன்' என்னும், என் தடமென் தோளே!
தெளிவுரை: மனையிலே நடப்பெற்று வளர்ந்துவரும் வயலைக் கொடியானது, கொடிவீசிப் படந்து சென்று, புறத்தேயுள்ள வேழத்தினைச் சுற்றிப் படர்கின்ற துறை பொருந்திய ஊருக்குரியவன் தலைவன். அவன் செய்த கொடுமையானது அயலாருக்கும் புலனாகி அலராவதற்கு நாணினமாய், 'அவன் எமக்கு நல்லவன்' என்றே யாம் வாயாற் கூறுவோம். அப்படிக் கூறினாலும், எம் பெரிய மென்தோள்கள், தம் மெலிவாலே, ''அவன் நல்லவன் அல்லன்' என்னும் உண்மையைப் பிறரும் நன்றாக அறியுமாறு புலப்படுத்தி விடுமே!

கருத்து: யான், அவன் எனக்குச் செய்துவரும் கொடுமையை மறைப்பினும், என் தோள்கள் தம் மெலிவாலே பிறர் அறியுமாறும், பழித்துப் பேசுமறும் காட்டிவிடும் என்பதாம். ஆகவே, என் துயர் அடக்க அடங்கும் அளவினதன்று என்பதாம்.

சொற்பொருள்: வயலை - வசலைக் கீரை; பசலைக் கீரை எனவும் கூறுவர்; இது கொடி வகை; 'இல்லெழுவயலை' (நற் 179) என்பதும் காண்க. கொடுமை - பரத்தைமை நச்சிச் சென்ற ஒழுக்கத்தால், தன்னைப் பிரிவுத் துயருட்படுத்தி நலியுமாறு செய்திட்ட தொடிய செயல். கேழ் - பொருந்திய; கெழு என்பது உகரம் கெட்டும், எகரம் நீண்டும் 'கேழ்' ஆயிற்று (தொல் குற்றிய லுகரம் 76 உரை).

விளக்கம்: தலைவனின் பரத்தைமை நாடலாகிய போற்றாப் புறவொழுக்கம், மனத்துயரையும் உடல் நலிவையும் தலைவியிடத்தே மிகுவித்தல் உண்மையேனும், அதனைப் பிறர் அறியப் புலப்படுத்தாதே மறைத்து ஒழுகுவதே அவள் கற்பற நிலைக்குரிய தகுதியாகும் என, அவள் அடக்க முயல்கின்றாள். ஆயின், அவளைக் காண்பார், தாமே அவள் நலிவறிந்து உண்மையினைக் கண்டுணர அவள் தோள்கள் மெலிவு காட்டும் என்பதாம். 'சுற்றும்' - தான் படர்தற்கான மொழுகொம்பாகக் கொண்டு சுற்றிப் படரும். தன்னையும் தன்தோளையும் வேறுபடுத்தி உரைக்கும் பேச்சுநயமும் காண்க.

உள்ளுறை: மனைநடு வயலைக் கொடியானது, தான் சுற்றிப் படர்தற்கு வாய்ப்பான உறுதியான பந்தர் அருகேயே இருந்தும், அதனைவிட்டு மனைப்புறத்தே படர்ந்து சென்று, உள்ளீடும் வலிமையும் அற்ற வேழத்தைப் பற்றிச் சுற்றுவது போல, தலைவனும், தலைவி தன் மனைக்கண் தன் அருகே பெருமையும் பெண்மையும் ஒளிவீசும்படி இருக்கவும், அவளைக் கைவிட்டுப் புறத்தேயுள்ள சேரியிடத்துப் புல்லிய பரத்தையரை நாடிப் போவானாயினான் என்பதாம்.

மேற்கோள்: கற்பின்கண் தலைவனை நீங்கி, மிகத் தனிமையுற்று அலமரல் பெருகிய காம மிகுதியின்கண், தலைவிக்குக் கூற்று நிகழ்தற்கு இளம்பூரணரும் (தொல் - கற்பு); இதனுள் முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றும் கூறலின் நாடக வழக்கும், தலைவனைத் தலைவி கொடுமை கூறல் உலகியலாதலின் உலகியல் வழக்கும் உடன் கூற்றிற்' என நச்சினார்க்கினியரும் (தொல். அகத். 53) எடுத்துக் காட்டுவர். முதற் பொருள் - மருதம்; கருப்பொருள் - வேழமும் வயலையும்; உரிப் பொருள் - வாயில் நேர்தல்.

12. ஆற்றுக தோற்க!
துறை: உழையர் நெருங்கிக் கூறிய திறமும், தனது ஆற்றாமையும் நினைந்து, வாயில் நேரக் கருதிய தலைமகள், 'பரத்தையர்க்குப் பின்பும் அவன் சிறப்புச் செய்தான்' என்பது கேட்டுப், பொருளாய்க் கருத்தழிந்து, தன்னுள்ளேயே சொல்லியது.

(து.வி: அவன் தனக்காற்றிய கொடுமைகளை மறந்து, அவனை மீண்டும் ஏற்று உறவாடத் துணிந்தனள் தலைவி. அவ்வேளையிலே, அவன் மீண்டும் பரத்தையரை நாடினான் எனக் கேட்டு, அதனால் மனம் மிகவும் வெதும்பித் தன்னுள்ளேயே வருந்திச் சொல்லியதாக அமைந்தது இது.)

கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்
துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல, யாமே;
தோற்க தில்ல, என் தடமென் தோளே!
தெளிவுரை: கரையோரத்தே பொருந்தியிருக்கும் வேழமானது, வயலகத்தேயுள்ள கரும்பினைப் போலவே வெண் பூக்களைப் பூக்கின்றதான துறை பொருந்திய ஊரன் தலைவன். அவனது கொடுமையினை யாம் பெரிதும் பொறுத்தேமாய் ஆற்றியிருப்பேம்; எம் பெருமையும் மென்மையும் கொண்ட தோள்களோ, தாம் அப்பிரிவை ஆற்றவியலவாய்த் தோற்றுத் தாம் மெலிவதாயின், அவை அவ்வாறே மெலிவதாகுக!

கருத்து: அவன் கொடுமையை யாம் உளத்தகத்தேயே அடக்கினும், எம் தோள்கள் தம் மெலிவாற் புறத்தார்க்குத் தோன்றுமாறு புலப்படுத்தி விடுகின்றவே! அதனையும் என்னால் தடைப்படுத்த இயலாது என்பதாம்.

சொற்பொருள்: கொடுமை - கொடிதான செயல். நன்றும் - பெரிதும். நன்றும்; 'உம்'; அசை நிலை 'தில்'; விழைவுப் பொருளில் தன்மையிடத்து வந்தது. தோற்க - மெலிக; மெலிவால், தொடிகளைத் தாமும் இழந்து போக என்பதாம்; தழுவிக் களித்த தோள்கள் இப்போது மெலிந்து சோர்க என்றனளுமாம்.

விளக்கம்: அவளைப் பிரிவால் வாடச் செய்தது மட்டுமன்றி, அவள் தரும் இன்பத்திலும் பரத்தையஅரிற் பெறும் இன்பமே சிறந்ததாமென மயங்கியும் திரிந்தமையின், தலைவனின் இப்போற்றா ஒழுக்கத்தினைக் 'கொடுமை' என்றனர். உரிமயுள்ள தனக்குக் கொடுமை செய்துவிட்டுப் பொருளழித்துப் புல்லிய பரத்தையரை அதனை நாடிப் போகும் தலைவனின், அறமறந்த செயலால் புண்பட்ட மனநிலைமையினள் தலைவி என்பதும் இதனால் உணரப்படும்.

உள்ளுறை: 'இழந்த வேழம் கரும்பிற் பூக்கும்' என்றது, பூத்தலான இயல்பிலே அவற்றிற்குள் இழிவு உயர்வு என்பதேதும் இல்லை. அஃதேபோலத் தலைமகனுக்கு, யாமும் பரத்தையரும் இன்பம் கோடற்குரிய பெண்டிரென்று மட்டுமே சமமாகத் தோன்றினதன்றி, எம் உயர்வும், பரத்தையர் தாழ்வும் உணரும் தெளிவு இல்லை என்பதாம்.

மேற்கோள்: 'கருப்பொருளாகிய 'வேழம்' தானே உவமமாய் அமைந்து உள்ளுறை பொருள் தந்தது' எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். அகத்: 46). இதனுள், தலைமகன் கொடுமை கூறியதல்லது, அக்கொடுமைக்கு ஏதுவாகியதென்று விளங்கக் கூறியதிலள். ஆயினும், 'இழந்த வேழம் உயர்ந்த கரும்பிற் பூக்கும்' எனவே, அவற்றிற்கும் இழிவு உயர்வாம் என்பது ஒன்றில்லை; எல்லாரும் தலைமகற்கு இன்பம் கோடற்கு உரியர் என்றமையின் அவை கூறினாள் என்பது' என்று கூறி, எடுத்துக் காட்டுவர் பேராசிரியர் (தொல். உவம. 25). ஆகவே, இதனை பயவுவமப் போலி என்பர் அவர்.

13. யாமத்தும் துயிலறியார்!
துறை: 'வாயிலாப் புக்கார்க்குத், தலைமகள், 'அவன் பெண்டிர் நள்ளென் யாமத்தும் துயிலார்; அவர் அறியாமல் அவன் வரும் திறம் யாது?' எனச் சொல்லி, வாயில் மறுத்தது.

(து.வி: வாயில் வேண்டி வந்தார்க்கு, அவன் மனம் தெளிந்திலன்; பரத்தையர் வீடே கதியாகத் துயில்பவன் எனக்கூறி, வாயில் மறுத்தது இதுவாகும்.)

பரியுடை நன்மான் பொங்குளை அன்ன
அடைகரை வேழம் வெண்பூப் பகரும்
தண்துறை ஊரன் பெண்டிர்,
துஞ்சு ஊர் யாமத்தும், துயிலஅறி யலரே!
தெளிவுரை: விரைந்து செலவினையுடைய நல்ல குதிரையின் தலைக்கணிந்த வெண்ணிறக் கவரியைப் போல, அடைகரைக் கண்ணே படர்ந்துள்ள வேழமானது வெண்ணிறப் பூக்களைக் கொடுத்திருக்கும், தண்ணிய நீர்த் துறையினைக் கொண்ட ஊரன் தலைவன். அத் தலைவனின் பெண்டிர், ஊரே அயர்ந்து துயிலும் இரவின் நடுயாமத்தினும், தாம் மட்டும் துயிலினை அறியாரா யிருப்பரே!

கருத்து: ஆகவே, அவரைப் பிரிந்து அவன் எம்பால் மீள்வான் என்பதும், எம்மோடு அன்புடன் கூடிவாழ்வான் என்பதும், இனி நடக்காததொன்றாம் என்று சொல்லி வாயில் மறுத்தனள் என்க.

சொற்பொருள்: பரி - குதிரைச் செலவு; பொங்கு உளை - பொங்கிக் கிடந்து நெற்றியிற் புரளும் தலைக்கு அணி. அடைகரை - அடையும் கரை; இரு பெயர் ஒத்துப் பண்புத் தொகை. பகரும் - ஒத்தலர்ந்து பிறரைக் கவர்ந்து அழைத்திருக்கும். பெண்டிர் - பரத்தையர்; இழிவாகச் சுட்டியது. அவன் பெண்டிர் - அவனோடும் உறவுடையாரான பரத்தையர்; இவர் பலராக, இவன் ஒரு வீட்டில் இருப்பப் பிறர் துஞ்சாராவர் என்று கொள்க. கூடாமுன்பு அவன் கூட்டம் வாய்ப்பதனைக் குறித்து நினைந்து ஏங்கியும், கூடிய பின்னர் அடுத்துத் தொடரும் அவன் பிரிவைக் கருதியும், அவர் துயிலறியாராயிருப்பர் எனக் கொள்க.

விளக்கம்: 'பரியுடை நன்மான் பொங்குளை' என்றது, அக்குதிரை ஓடுங்காலத்தே, தலையணியான உளையானது மேலெழுந்து அசைந்தாடுவதைக் குறிக்கலாம். அவ்வாறே, வேழத்தின் வெண்பூக்களும் காற்றிலே அசைந்தாடியபடி தோன்றும். இதுபற்றியே 'பகரும்' என்றனர். 'ஊரன் பெண்டிர்' என்றது அவனுக்கே உரியவரான காதற்பரத்தை, உரிமைப் பரத்தை போன்றாரை என்பதும் பொருந்தும்.

உள்ளுறை: 'வேழத்தின் வெண்பூவானது பரியுடை நன்மானின் உளைபோல் தோற்றும் அடைகரை' என்றனர்; அவ்வாறே பரத்தையரும் தலைவனக்குக் குலமகளிர் போலவே நலமுடையவராகக் காணப்படுவர் என்பதாம்.

மேற்கோள்: 'இஃது ஊடல் நிமித்தம்' என்பர் நச்சினார்க்கினியர் (தோல். அகத்: 14).

14. பனித்துயில் செய்யும்!
துறை: தலைமகள் புணர்ச்சி வேட்கையைக் குறிப்பினான் உணர்ந்த தோழி, 'அவன் கொடுமை நினையாது, அவன் மார்பை நினைந்து ஆற்றாய் ஆகின்றது என்னை?' என்றாள். அவட்கு, 'அவன் கொடியனே ஆயினும், அவன் மார்பு குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை உடைத்து; அதனாற் காண்' எனச் சொல்லியது.

(து.வி: அவன் கொடுமையறிந்திருந்தும் தலைவிக்கு அவனிடத்தே மனம்போக, அது குறித்துத் தோழி வினவுகின்றாள். அவட்குத் தலைமகள், தன் மனநிலையை இவ்வாறு புலப்படுத்துகின்றாள். 'நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்' என்றாற்போல்வது இது.)

கொடிப்பூ வேழம் தீண்டி, அயல
வடிக்கொள் மாஅத்து வண்தளிர் நுடங்கும்
அணித்துறை ஊரன் மார்பே
பனித்துயில் செய்யும் இன்சாயற்றே!
தெளிவுரை: வேழத்தின் நீண்ட வெண்பூவானது தீண்டுதலாலே, வடுக்கள் கொண்ட மாமரத்தின் வளவிப தளிர்கள் அசையும். அழகிய நீர்த் துறையினையுடையவன் தலைவன். அவன் மார்பானது, க உளிர்ந்த துயிலினைச் செய்யும் இனிய சாயலையும் உடையதாகுமே!

கருத்து: அது பற்றியே என் உள்ளமும் அதனை நாடிச் சென்றது என்பதாம்.

சொற்பொருள்: கொடி - ஒழுங்கு; நீட்சி. வடி - வடு - பிஞ்சு. வணிதளிர் - வளவிய தளிர். நுடங்கும் - அசையும். அணித் துறை - அழகிய துறை; 'மணித்துறை' பாடமாயின் நீலமணி போல் தெளிந்த நீர் கொண்டது துறையெனக் கொள்க. பனி - குளிர்ச்சி. சாயல் - அழகு; மென்மை.

விளக்கம்: வேழம் தீண்ட வளவிய மாந்தளிர் அசைதல் போல, தலைவன் பொருட்கொடையால் அணுகப் பரத்தையரும் அவனுக்கு இசைந்தாராகும் தளர்ந்த இயல்பினராவர் என்று கூறியதாகக் கொள்க. பனித்துயில் - குளிர்ச்சியான துயில்; கூடியின்புற்ற களிப்பிலே, அவன் மார்பே பாயலாகக் கொண்டு அயர்ந்து கிடந்து துயிலல்; இன்சாயல் - சாயல் காட்சிக்கும் கருத்துக்கும் இனிமை தருவது என்பதும் ஆம்.

உள்ளுறை: வேழப்பூத் தீண்டலால் வடிக்கொள்மாஅத்து வண்தளிர் அசைதல்போல, அவன் அவர்பாலே செல்லும் மனத்தனாகத் தலைவியின் உள்ளம் மெலிவுற்று ஆற்றாமை கொண்டது' என்பதாம்.

மேற்கோள்: தோழியிடத்துத் தலைவனைத் தலைவி உவந்து கூறியது என்பர் நச்சினார்க்கினியர் (தொல். கற்பு - 6).

15. ஊரன் அல்லன்!
துறை: சேணிடைப் பிரிந்து வந்து உடன் உறைகின்றனன் தலைவன்; அவனுக்குப் புறத்தொழுக்கம் உளதாகின்றது என்று குறிப்பினால் உணர்ந்து தலைமகள் வேறுபட்டாளாக, தோழி அதனை அறியாது, அவன் உடனுறையவும் வேறுபடுகின்றது என்னை?' என்றாட்கு, அவள் சொல்லியது.

(து.வி: 'அவன் உடனுறையும் போதும், பரத்தையர் உறவை நாடுகின்ற மனத்தனாகவே உள்ளனன்' என்று அவனது போக்கினைக் குறிப்பால் உணர்ந்த தலைமகள், தோழியிடம் இப்படிக் கூறுகின்றனள்.)

மணலாடு மலிர்நிறை விரும்பிய, ஒண்தழை,
புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும், ஊரன்அல் லன்னே.


தெளிவுரை: மணலை அலைத்துச் செல்லும் நீர்ப் பெருக்கினிடத்தே, விரும்பிய ஒள்ளிய தழையுடைகளை உடுத்தவராகப் புலனாட்டு அயர்வர் மகளிர். அவ்வாறு அயரும் மகளிர்க்குப் புணர் துணையாக அமைந்து உதவுகின்றவன் வேழம் நிறைந்த மூதூரனாகிய ஊரன். அவன் நம்மோடிருப்பதனாலே நம்மூரினிடத்தேயே உள்ளவன் என்றாலும், புறம்போன நெஞ்சத்தால், அவன் நம் ஊரம் அல்லன்காண்!

கருத்து: அவன் மனம் மாறினானே போலக் காட்டினும், முற்றவும் தன் பரத்தமையைக் கைவிடத் திருந்தினவன் அல்லன்.

சொற்பொருள்: மணலாடு - மணலை அலைத்தல்; வெள்ளம் மிகும்போது அதன் வேகத்தால் மணல் அரிக்கப்பட்டுப் போவது இது; 'ஆட்டு' என்பது 'ஆடு' என்று வந்தது. மலிர் நிறை நிறைந்து பெருகிச் செல்லும் நீர்; 'மலர்நிறை' பாடமாயின், மலர்களை வாரிக் கொண்டுவரும் புது வெள்ளம் என்க. ஒண்தழை - ஒள்ளிய தழையாடை; ஒண்மையான தளிர்களையும் மலர்களையும் கொய்து ஆடையாக்குவது இயல்பு; 'வெண்தழை' என்பதும் பாடம். துணை - துணையாகும் பொருள். வேழம் - வேழத்தண்டால் அமைந்த புணை; இது நீர் விளையாட்டுக்கு ஏற்ற மிதவையாக உதவுவது; 'வேழ வெண்புனை தழீஇ' என அகத்தும் வரும் (அகம் - 6). அல்லன் - அல்லாதவன்; ஊரிடத்தானாயினும் மனம் ஒன்றிக் கலவாமையால், அருகே இருந்தும் இல்லானாயினன் என்பதாம்.

விளக்கம்: 'புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும் வேழ மூதூர் ஊரன்' என்பதற்கு, புனலாட்டயரும் மகளிர்க்குத் துணையாக அவரோடு சேர்ந்து தானும் நீராடி அமைந்து உதவும்' வேழமிகுதியுடைய ஊரன்' என்பதும் பொருந்தும். 'மலரார் மலிர்ந்திறை வந்தெனப் புனலாடு புணர்துணை ஆயினள் எமக்கே' (ஐந். 72) எனத் தலைவன் கூற்றாக வருவதும், தலைமகன் இவ்வாறு பரத்தையரோடு சேர்ந்து புனலாடிக் களித்ததலைக் காட்டும்.

உள்ளுறை: வேழம்புணையானது புனலாடும் மகளிர்க்குப் பற்றும் துணையாகி விளங்குதலே போலத் தலைவனும் பற்றும் துணையாகி ஒழுகுதலால், அவன் அவர்பாற் செல்லும் மனத்தினனன்றி, நம்பாற் கலந்த உளத்தன் ஆகாமையின் 'ஊரன் அல்லன்' என்கின்றாள்.

16. கண் பொன் போர்த்தன!
துறை: வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி, 'அவன் வரவையே நினைத்து இவள் கண்ணும் பசந்தன; இனி அவன் வந்து பெறுவது என்னை?' எனச் சொல்லி, வாயில் மறுத்தது.

(து.வி: 'அவனை நினைந்து நினைந்தும், அவன் வரவை நோக்கி நோக்கியும் சோர்ந்து தளர்ந்ததனால், இவள் கண்களும் பண்டை ஒளியற்றுப் பொன்னிறப் பசலை படர்ந்தன; இனி அவன் வந்துதான் இவள் பெறுவது என்னவோ?' எனக் கூறி மறுத்துரைத்தது இது.)

ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக்கஞல் ஊரனை யுள்ளிப்
பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே.
தெளிவுரை: 'ஓங்கி உயர்ந்தெழுந்த பூவையுடைய வேழத்தின், துளையுடைய திரண்ட தண்டினிடத்தே, சிறுமியரான ஏவல் மகளிர்கள், தம் கண்ணுக்கு இடுதற்குரிய அஞ்சனத்தைப் பெய்து வைப்பர். அத்தன்மையுடைய பூக்கள் நிரம்பிய ஊரனையே நினைதலால், இவளுடைய குவளைப் பூப் போலும் மையுண்ட கருங்கண்களும், பொன்னிறப் பசலையினைப் போர்த்தவை ஆயினவே!'

கருத்து: 'இவளுடைய கண்ணொளியானது கருமை கெட்டுப் பொன்போற் பசலையும் படர்ந்ததன் பின்னர், அவன் மீண்டும் வந்துதான் இவட்குப் பயன் என்னையோ' என்று கூறி வாயில் மறுத்தனள் என்பதாம்.

சொற்பொருள்: தூம்பு - உள்ளே துளையுடைமை சிறு தொழு மகளிர் - குற்றேவல் செய்யும் சிறு மகளிர்; இவர், தம் அஞ்சனச்சிமிழாக வேழத்தின் திரண்ட தண்டினை ஏற்றபடி அறுத்துப் பயன்படுத்துவர். பூக்கஞல் ஊரன் - பூக்கள் மலிந்துள்ள ஊரன். பொன் - பொன்னிறப் பசலை.

விளக்கம்: 'சிறு தொழு மகளிரே தம் கண்ணழகினைப் பேணுதற்கான அஞ்சனத்தை வேழத்தண்டுச் சிமிழிலிட்டுப் பேணிவைக்கும் போதிலே, பூப்போல் உண்கண்ணுடையாளான தலைவியோ, நின்னை நினைந்து நினைந்து தன் கண்கள் பொன் போர்த்த நிலையினளாயினள்; இத்தகு கொடுமை செய்தவன் இனி வந்து அருள் புரிந்துதான் பயன் என்னையோ?' என்பதாம். கண் 'பொன்போற் பசத்தலை', 'உண்கட்கு மெல்லாம் பெரும் பொன் உண்டு' எனவும், 'பொன்னெனப் பசந்த கண்' எனவும் வரும் கலித்தொகையடிகளாலும் காணலாம். (கலி - 64, 77).

உள்ளுறை: வேழத்தண்டு சிறுதொழு மகளிரின் கண்ணழகு கெடாமைக்கான அஞ்சனச் சிமிழாகப் பயன்படுதலே போலத், தலைவனும், பரத்தையரின் அழகு கெடாதவாறு உடனுறைந்து இன்புறுத்தி அவரைக் களிப்பிப்பான் ஆயினன் என்பதாம். தனக்குரிய அவனைப் பிரிந்து, தன் கண்ணழகினையும் இழந்தாள் தலைவி; இனி அவனால் அவளைப் பண்டுபோல் அழகுண்டாக்க இயலாது; ஆகவே, அவன் வரவை இனி விரும்போம் என்பாதம்; அதனாற் பயனேதுமில்லை என்றதுமாம்.

17. நெஞ்சு வறிதாகின்றது!
துறை:'தலைமகன். பரத்தையிற் பிரிந்தவழி, 'இவ்வாறு ஒழுகுதலும் ஆடவர்க்கு இயல்பு அன்றே; நீ இதற்கு நெஞ்சு அழிகின்றது என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

(து.வி: 'ஆடவரின் இயல்பே இவ்வாறு தலைவியரைப் பிரிவாலே வருந்தி வாடச் செய்து, பரத்தையரின் மயக்கிலே கட்டுண்டு திருவதுதானே! இதற்காக, நீயும் நொந்து நெஞ்சழியலாமோ?' என்று சொல்லித் தேற்ற முயலுகின்றாள் தோழி. அவட்குத் தலைவி சொல்வது இது.)

புதல்மிசை நுடங்கும் வேழ வெண்பூ
விசும்பாடு குருகின் தோன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின்,
வறிதா கின்றென் மடங்கெழு நெஞ்சே.
தெளிவுரை: 'புதரின் மேலாகச் சென்று அசைந்தாடும் வேழத்தின் வெண்பூவானது, விசும்பிடத்தே பறந்து செல்லும் வெண்குருகே போலத் தோன்றும் ஊருக்குரியவன் தலைவன். அவன், இதுகாறும் செய்த கொடுமைகட்கும் மேலாக, இப்போதும், புதியரான பரத்தையரையே வதுவை செய்தற்கு விரும்புகின்றவனாக உள்ளனன். ஆதலினாலே, என் மடமை நிரம்பிய நெஞ்சமானது அறவே நம்பிக்கைழியந்து, மிகமிக வறுமையாகின்றது!

கருத்து: இனி, அவன் நம்பால் அன்புடையனாவான் என்னும் நம்பிக்கையினையே முற்றவும் இழந்து விட்டேன் என்பதாம்.

சொற்பொருள்: புதல் - புதர்; சிறு தூறு. நுடங்கும் - அசையும். குருகு - நாரைபோலும் வெண்ணிற நீர்ப் பறவை. புதுவோர் - புதியவரான பரத்தையர்; புதிதாகப் பரத்தைமைத் தொழில் மேற்கொண்டோர். மேவலன் - விரும்புதலை உடையான்; விருப்பம் - அவரை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல். மடம் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமையாகின்ற பெண்மைப் பண்பு; அது கற்பறம் பேணிக் காப்பதும் ஆம். வறிதாகின்றது - வறுமைப் பட்டதாகின்றது; வறுமை, கணவனைப் பரத்தை கொள்ளத்தான் அவனை இழந்துவிடலான நிலை.

விளக்கம்: அவன், நம்மை இப்போது மறந்து திரியினும், என்றாவது நம்பால் அன்புடையனாகி மீள்வான் என்று நம்பியிருந்தோம். அவனோ, நாளும்நாளும் புதுவோரை வதுவை மேவலே தன் நினைவாகத் தொடர்ந்து திரிகின்றமையின், என் நெஞ்சம் அவனன்பை இழந்ததாகவே கொண்டு வறுமையுற்றது என்பாதம். புதர் வானம் போலக் கரிதாகவும், அதன்மேல் அசையும் வேழவெண்பூ வானிற் பறக்கும் குருகு போலவும் தோற்றும் என்க. 'வறிதாகின்று' என்றது, கொஞ்சம் உணர்விழந்து நினைப்பொழிந்து மகிழ்வழிந்து செயலற்றது என்றற்காம்.

உள்ளுறை: புதன்மிசை ஆடும் வேழ வெண்பூவானது, விசும்பாடு குருகு போலத் தோன்றுமாறு போல, சேரிக்கண்ணே திரியும் பரத்தையரும், தலைமகனுக்கு, நம்போற் குலமகளிராகவே தோன்றுவர் என்று கூறியதாகவும் கொள்க.

புதன்மிசை நுடங்கும் வேழவெண்பூப் போலத் தலைவன் மிக அண்மையானாயினும், நம்மளவில் விசும்பாடும் குருகே போலச் சேணோன் ஆயினன் என்று வருந்திச் சொல்வதாகவும் கொள்ளலாம்.

நனவிலே வானவெண்குருகாக நமக்கு எட்டானாயினும், கனவிலே புதன்மிசை வேழ வெண்பூப்போல அணியனாகத் தோன்றி நம்மை மயக்கி, மேலும் நலிவிப்பவன் என்பதும் ஆம். நனவிலே அன்பாற்றானாயினும், கனவிலே அன்புடையனாகத் தோன்றி நம்மை நலிவிப்பான் என்பதும் ஆம்.

மேற்கோள்: தலைவனைப் பிரிந்ததற்கண்ணே தோழியிடத்துத் தலைவிக்குக் கூற்று நிகழ்ந்ததற்கு எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். கற்பு - 6).

18. கண் அழப் பிரிந்தனன்!
துறை: பரத்தையிற் பிரிந்து வந்து, தெளித்துக் கூடிய தலைமகற்குப், பின் அவ்வொழுக்கும் உளதாயவழி, அவன் வரவிடுத்த வாயில்கட்குத் தலைமகள் சொல்லியது.

(து.வி: பரத்தைமையாற் பிரிந்தவன் இல்லத்திற்கு மீண்டு வந்து, தலைவிக்குச் சமாதானம் கூறிக் கூடியிருந்தான். பின்னரும், முன்போலவே விட்டுப் பிரிந்தவன், மீண்டும் தலைவியை விரும்பித் தன் வாயில்கள் மூலம் செய்தியனுப்ப, தலைமகள் மறுத்துச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி யூரன்
பொருந்து மலர் அன்ன, என் கண்அழப்
பிரிந்தனன் அல்லனோ, 'பிரியலென்' என்றே.
தெளிவுரை: கருங்கோரையைப் போன்ற செருந்தியோடு, வேழமும், கரும்பைப் போலக் காற்றினால் அசைந்தாடும் கழனிகளையுடைய ஊரன் தலைவன். அவன் என்னைத் தெளிவித்துக் கூடியபோது, 'இனிப் பிரியேன்' என்று உறுதிமொழி கூறியவன். இப்போதில், இணைமலர் போன்ற என் கண்கள் அழும்படியாக என்னைப் பிரிந்து போயினான் அல்லனோ!

கருத்து: அவன் சொல்லை அந்நாள் மெய்யெனக் கொண்டதற்கே இப்போது நோவேன்.

சொற்பொருள்: இருஞ்சாய் - பஞ்சாய்க் கோரை; கருநிறத் தண்டுடைமை பற்றி 'இருஞ்சாய்' என்றனர். செருந்தி - நெட்டிக் கோரை, தண்டாங் கோரை, வாட்கோரை எனக் கூறப்படும் கோரை; இதன் தண்டு சற்றுப் பெரியது; கனம் அற்றது; ஆகவே 'நெட்டிப் புல்' எனவும் சில பகுதியினர் கூறுவர். பொருந்து மலர் - இணையாக விளங்கும் மலர்; அழகு பொருந்திய மலரும் ஆம். 'நெருந்தி' என்றொரு மரமும் உள்ளது; அது நெய்தல் நிலத்து மரம். 'கரும்புபோல அசைந்தாடும் என்றது, அவரும் தலைவனின் உரிமை மகளிர் போலவே தம்மைக் காட்டித் திரிவர் என்றற்காம்.'

உள்ளுறை: வேழம் செருந்தியோடு சேர்ந்து, காற்றிற் கரும்பு போல அசைந்தாடும் என்றது, தலைவனின் ஆதரவால் பரத்தையர் தம் தோழியரோடும் கூடியவராக, ஊர்க் கண்ணே செருக்கித் திரிகின்றனர் என்றும் கூறியதாம். பிரியெலன் என்றவன் பிரிந்தனனாகி அவர்பாற் சென்றனன்; - ஆதலின் தகுதியற்ற புல்லியரான அவரும் தருக்கித் திரிகின்றனர் என்றதாம்.

19. கண் பனி யுகுமே!
துறை: "பன்னாள் அவன் சேணிடைப் பிரியவும் ஆற்றயுளையாகிய நீ, சிலநாள் அவன் புறத்து ஒழுகுகின்ற இதற்கு ஆற்றாயாகின்றது என்னை?" என்ற தோழிக்கு, 'எதிர்பாடு இன்றி ஓர் ஊர்க்கண்ணே உறைகையினாலே ஆற்றேனாகின்றேன்' எனத் தலைமகள் சொல்லியது. வாயிலாய்ப் புகுந்தார் கேட்டு, நெருக்காது மாறுதல் கருத்து.

(து.வி.: முன்னர், அவன் வேற்றுப்புலம் போயவழி, நெடுங்காலம் அவன் பிரிந்திருந்ததனைப் பொறுத்திருந்ததனை, இப்போது நேரும் சிறு பிரிவுக்கு மட்டும் எதனால் ஆற்றாயாய்த் துடிக்கின்றாய்?' என்று கேட்கின்றாள் தோழி. அதற்கு தலைவி, ஒரே ஊரிலே இருந்து கொண்டும், என்பால் வராதிருக்கும் அந்தக் கொடுமையைப் பொறுக்க இயலவில்லையே' என்று கூறிப் புலம்புகின்றாள்.)

எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்ம்மணம் கமழும் தண்பொழில்
வேழ வெண்பூ வெள்ளுளை சீக்கும்
ஊரன் ஆகலின், கலங்கி
மாரி மலரிற் கண்பனி யுகுமே!
தெளிவுரை: எக்கரிடத்தேயுள்ள மாமரத்திலே புதிதாகப் பூத்துள்ள பெரிய அரும்புகள், தலைவரைப் புணர்ந்தோரின் மெய்யிடத்தே நின்றும் எழுகின்ற மணம் கமழ்கின்றதான குளிர்ச்சியான பொழிலினிடத்தே, வேழத்தின் வெள்ளிய பூவாகிய வெண்மையான உளை போன்ற மலரானது எழுந்து, அம் மணத்தைத் தோன்றாவாறு துடைக்கும் ஊரன், தலைவன். ஆதலினாலே, கலக்கமுற்று, மாரிக் காலத்தே மழையிற்பட்ட மலரிலிருந்து துளிகள் வீழ்தல் போலக் கண்களினின்றும் கண்ணீர் துளிகள் விழுவேமாயினேம் யாம்.

கருத்து: அவன்பால் நம்பிக்கை இழந்தோம் என்பதாம்.

சொற்பொருள்: எக்கர் - இடுமணலால் அமைந்த மணல் மேடு; நெய்தற்கண் கடலலைகளாலும், மருதத்தின் கண் ஆற்று வெள்ளத்தாலும் இத்தகைய மணல்மேடுகள் அமையும்; புதுப்பூம் பெருஞ்சினை -- புதிதாகப் பூத்துள்ள பெரிய பூவரும்புகள்; புதுப்பூக்கள் உடைய பெரிய கிளையும் ஆம். புணர்ந்தோர் - கூடிக் கலந்தோர். வெள்ளுளை - வெள்ளிய உளைபோல்வதான வேழப்பூ. சீக்கும் - கெடுக்கும்; போக்கும். மாரிமலர் - மாரியிற் பட்ட மலரினின்றும் உதிரும் நீரைக் குறித்துக் கூறியது.

விளக்கம்: கலந்தோர் மேனியிலேயிருந்து எழுகின்ற கலவியால் தோன்றிய புதுமணத்திற்கு மாவரும்பின் நறுமணத்தைப் பொருத்தமாக உவமித்தனர். வண்டினமும் இதன்பால் மயங்கி வந்து மொய்க்கும் என்பதனை, "பொறிகிளர் ஆகம் புல்லத், தோள் சேர்பு, அறுகாற் பறவை அளவில் மொய்த்தலின், கண்கோளாக நோக்கிப் 'பண்டும் இனையையோ?' என வினவினாள் யாயே" என வரும் நற்றிணையாலும் அறியலாம் (நற். 55). கண்பனி உகும் - கண்துளி சிதறும்.

உள்ளுறை: மாம்பூவின் நறுமணத்தைத் தன் தீமணத்தால் வேழவெண்பூ ஒழித்தலேபோல, தலைவன் என்னோடு இல்லறமாற்றி இன்புறுத்திய தண்ணளியைப், பரத்தையர் தமது அன்பற்ற பொய்ம் முயக்கத்தாலே ஒழித்தன் என்பதாம்.

மாம்பூ, புணர்ந்தோர் மெய்ம்மணம் கமழும் தண் பொழிலின் இனிமையினை, வேழ வெண்பூ தோன்றிக் கெடுத்தாற்போல, எம் இல்லறத்தின் இனிய வாழ்வினைத் தலைவனின் புறவொழுக்கம் சிதைத்தது என்பதும் ஆம்.

'வேழ வெண்பூவின் தீமணம் மாவின் நறுமணத்தை அழுக்குமாறு போலப், பரத்தையரின் பொய்ச் சாகசங்கள் என் பெருமையைத் தலைவனுக்கு மறைப்பவாயின என்பதும் ஆம்.'

குறிப்பு: பரத்தையரின் புணர்குறியோடு இல்வந்தானைக் கண்டதனாலே வெதும்பிக் கலங்கிக் கண்ணீர் உகுத்தனள் என்பதும், அன்னவனோடு மீண்டும் ஒன்றுபடுதல் இலையென்று வாயின் மறுத்தாள் எனவும் கொள்த 'பெருஞ்சினைப் புரணர்ந்தோர்' என்பதற்கு, பெருஞ்சினையின் நீழற்கண்ணே கூடினோர் எனவும் பொருள்கொள்வது ஏலுமேனும், அது களவுப் புணர்ச்சியாகலின், பொருள் சிறவாமையாகி விடும்.

20. நெகிழ்பு ஓடும் வளை!
துறை: தலைமகளை வாயில் நேர்வித்தற் பொருட்டாக, 'காதலர் கொடுமை செய்தாராயினும், அவர் திறம் மறவாது ஒழிதல் வேண்டும்' என்று முகம் புகுகின்ற தோழிக்கு, 'என் கைவளை நில்லாதாகின்றது அவரை நினைந்ததன் பயன் அன்றே; இனி அமையும்' எனத் தலைமகள் சொல்லியது.

(து.வி: 'காதலர் செயல் கொடியதே யாயினும், அவர், நமக்கு முன் செய்த தண்ணளியை நாம் மறத்தல் கூடாது; அவரை மீண்டும் ஏற்பதே நின் கற்பறக் கடமை' என்கின்றாள் தோழி. அவளுக்கு, 'அவரை நெஞ்சிற்கொண்டதன் பயன் கைவளைகள் இதோ கழன்றோடுகின்றன காண்' என்று கூறுகின்றாள் தலைவி.)

அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்
காம்பு கண் டன்ன தூம்பிடை, வேழத்துத்
துறைநணி யூரனை உள்ளி, என்
இறையோர் எல்வளை நெகிழ்போ டும்மே.
தெளிவுரை: ஆறாகிய சிறிய கால்களையும் அழகிய சிறையையும் உடைய தும்பியானது, நூறு மடல்களை யுடைய தாமரப் பூவின் கண்ணே இட்டுள்ள முட்டைகளைச் சிதைக்கும், மூங்கிலைக் கண்டாற் போன்ற உள்ளே துளையினையுடைய வேழம் செறிந்த துறைக்குரிய ஊரன், தலைவன். அவனை நினைந்து, என் முன்கையிற் பொருந்திய, அழகும் ஒளியும் உடைய வளைகளும் நெகிழ்ந்து கழன்று தாமே வீழ்கின்றனவே!

கருத்து: 'அவனை இனி யாம் ஏற்பதுதான் எதன் பொருட்டோ?' என்பதாம்.

சொற்பொருள்: சில் - சிறிய. சிறை - சிறகு. தும்பி - வண்டு வகை. சினை - தும்பியின் சினை. நூற்றிதழ்த் தாமரை - உயர்வகைத் தாமரை; இதசைன் சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ் நூற்றிதழ் அலர் (புறம் - 27) என்பதாலும் காண்க. காம்பு - மூங்கில். இறை - முன்கை. நெகிழ்பு ஓடும் - தாமே நெகிழ்ந்து கழன்று ஓடா நிற்கும்.

உள்ளுறை: தாமரைப் பூவிடத்துள்ள தும்பிச் சினையை, வேழப் பூவானது மோதிச் சிதைப்பது போல, தலைவி மாட்டு மீண்டும் வந்தானான தலைவனைப், பரத்தையர் மீளவும் நெருங்கிப் பிரித்துத் தம்பாற் கொண்டேகுவர் என்பதாம்.

வேழம், தாமரப் பூவிடத்துத் தும்பிச்சினையைச் சிதைக்குமாறு போல, தலைவன், தன் பொருத்தாச் செயலால், தலைவியின் இல்லற வாழ்வைச் சிதைப்பானாயின் என்பதும் ஆம்.

விளக்கம்: அறுசில் கால அஞ்சிறைத் தும்பியானது நூற்றிதழ்த் தாமரயிடத்தே தேனையுண்டு இன்புற்ற தேனும், அடுத்துத் தன் கால்களால் அப்பூவின் சினைகளையும் சிதைக்கின்ற கொடுமையையும் செய்யும் ஊரம் அவன். ஆதலின், அவனை இன்புறுத்திய நம் நலனையே அவனும் கொடுமை செய்து சிதைப்பானாயினான் என்பதும் ஆம்.

பாடபேதம்: 'நிறையே போல் வளை' என்பதாம். இதற்கு, நிறுப்ப நில்லாது அவன்பால் நெகிழ்ந்து செல்லும் என் நிறையினைப் போலவே, என் கைவளையும் நிறுப்ப நில்லாதே தானே கழன்றோடும்' என்று பொருள் கொள்க.

3. களவன் பத்து


'களவன்' என்பது கண்டு, இது ஒரு மருத நிலக் கருப்பொருள்; இப்பத்துப் பாடல்களினும், 'களவன்' பற்றிய செய்தி பயின்று வருவதால், இது 'களவன் பத்து' எனப் பெற்றது. 'களவன்' 'கள்வன்' எனவும், 'அலவன்' எனவும் வழங்கும். தமிழ்த் தொகை நூல்களில் நண்டினைப் பலரும் நயமுடன் எடுத்துக்காட்டி உவமித்துள்ளனர். அச்சமுடைய தாயினும், இறுகப்பற்றினால், பற்றிய பற்றை எதனாலும் சேரவிடாத வன்மையும் இதற்கு உண்டு என்பர்.

21. கண் பசப்பது ஏனோ?


துறை: 'புறத்து ஒழுக்கம் எனக்கு இனியில்லை' என்று தலைமகன் தெளிப்பவும், 'அஃது உளது' என்று வேறுபடும் தலைமகட்குத், தோழி சொல்லியது.

(து.வி.: தான் பரத்தமையைக் கைவிட்டு விட்டதாக உறுதி கூறித், தலைவியைத் தெளிவிக்கின்றான் தலைவன். அவளோ, அவன் கூறிய உறுதிமொழியை நம்பாதவளாக, 'அஃது அவன்பால் உளது' என்றே சொல்லி, அவனோடும் மீண்டும் புலந்து வேறுபடுகின்றாள். அவட்குத் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும்
தண்துறை யூரன் தெளிப்பவும்
உண்கண் பசப்பது எவன்கொல்? அன்னாய்!
தெளிவுரை: ''அன்னையே! முள்ளிச் செடிகள் உயரமாகப் படர்ந்துள்ளதும், பழைய நீரினைக் கொண்டதுமான அடைக்கரைக் கண்ணே, புள்ளிகளையுடைய நண்டானது ஆம்பலின் தண்டினை ஊடுபுகுந்து அறுக்கின்ற, குளிர்ந்த நீர்த் துறையமைந்த ஊருக்குரியவன் தலைவன். அவன் உறுதி கூறித் தெளிவிக்கவும் தெளியாதே, நின் மையுண்ட கண்கள் இவ்வாறாகப் பசந்து வேறுபடுவதுதான் எதனாலோ?''

கருத்து: 'அவன் தெளிவித்த பின்பும், தெளியாதே கலங்குவது ஏன்?'

சொற்பொருள்:முள்ளி - நீர்முள்ளி. புள்ளிக் களவன் - புள்ளிகளையுடைய நண்டு. தெளிப்பவும் - நின் கவலைக்குக் காரணமாய் பரத்தைமையைத் தான் அறவே கைவிட்டதாக உறுதி கூறுவதன் மூலம், நின் மனத்துயரைப் போக்கித் தெளிவு கொள்ளச் செய்யவும். பசத்தல் - பொன்னிறங் கொள்ளல். முதுநீர் - என்றும் வற்றாதேயிருக்கும் பழைய நீர்; 'கட்டுக்கிடைநீர்' எனலும் ஆம்.

விளக்கம்: முள்ளியும் ஆம்பலும் நண்டும் நீரிடத்தே யுள்ளன. எனினும், நண்டானது தன் குறும்பினாலே ஆம்பல் தண்டினை அறுத்தெறிந்து விளையாடிக் களிப்படையும் இயல்பு சொல்லப்பட்டது. அத்தகைய ஊருக்கு உரியவன் தலைவன் என்றனர். அவன்பாலும் அவ்வியல்பு உளதென்று உணர்த்தற்கு.

உள்ளுறை: களவன் ஆம்பலை அறுக்கும் 'தண்துறையூரன்' என்றது, அவ்வாறே, தலைவனும் தன்னுடைய கரை க டந்த காமத்தினாற் கொண்ட மடமையினாலே, இல்லறத்தின் இனிமையான மனைவாழ்வைச் சிதைத்தனன் என்பதாம். எனவே, தலைவி, அவன் தெளிப்பவும் தெளியா மருட்கையாளாகித் தான் மெலிந்தனள் என்பதுமாம்.

மேற்கோள்: 'இறுதியடி இடையடி போன்று நிற்கும் அகப்பாட்டு வண்ண'த்துக்குப் பேராசியிரிரும் 9 தொல். செய், 224); ''ஆய் என்று இற்ற ஆசிரியம்'' என யாப்பருங்கல விருத்தி உரைகாரரும் எடுத்துக் காட்டுவர். (யா.வி.செய் - 16).

22. நீயேன் என்றது ஏனோ?


துறை: களவினிற் புணர்ந்து, பின்பு வரைந்து கொண்டு ஒழுகாநின்ற தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்றாக, ஆற்றாளாகிய தலைமகள், தோழிக்குச் சொல்லியது.

(து.வி.: தலைவனின் பேச்சினை எடுத்துச் சொல்லி, அப்படி சொன்னது வேறு க உறிப்பினாற்றானே? எனத் தன் தோழியிடம் கவலையோடு உசாவுகின்றாள் தலைவி.)

அள்ளல் ஆடிய புள்ளிக் களவன்
முள்ளி வேரளைச் செல்லும் ஊரன்
நல்ல சொல்லி மணந்து, இனி
'நீயேன்' என்றது எவன்கொல்? அன்னாய்!
தெளிவுரை: ''அன்னையே! சேற்றிலே அளைந்தாடிய புள்ளிகளையுடைய நண்டானது, முள்ளிச் செடியின் வேர்ப் புறத்தான தன் வளையினிடத்தே சென்று தங்கும் ஊருக்குரியவனான தலைவன், நன்மையான சொற்களை நாம் தெளியுமாறு சொல்லி, நம்மையும் முன்னர் மணந்து கொண்டனன்; இப்போதும், 'நின்னைப் பிரியேன்' என்று அவன் சொன்னதுதான் எதனாலோ?''

கருத்து: 'அவன் சொன்னது, அவன் பிரியும் - குறிப்புக் கொண்ட மனத்தினன் என்பதைக் காட்டுகின்றதேயாம்.'

சொற்பொருள்: அள்ளல் - சேறு. அளை - வளை. நீயேன் - நீத்துச் செல்லேன். அன்னாய்: தோழியைக் குறித்தது. முன்னர்த் தோழி தலைவியை அன்னாய் என்றனள். இவ்வாறு பெண்களை 'அம்மா' என்று அழைப்பது தமிழர் மரபாகும்.

உள்ளுறை: களவன் அள்ளாடிச் சேறுபட்டதை நினையாதே, முள்ளி வேரளைக் கண்ணுள்ள தன் உளையிற் புகுந்தாற்போலத், தலைவனும் பரத்தையோடு இன்புற்றதன் அடையாளத்தோடேயே, தன் மனைக்கண்ணும் வந்து புகுவானாயினன்; அதுகண்டு ஐயுற்றாளை, 'நீயேன்' எனத் தேற்றுவானாயினன் என்பதாம்.

'யோறாடிய களவன் முள்ளி வேரளைச் செல்லும்' என்றது, பிறர் கூறிய அலர் கேட்டும் அஞ்ஞாது, தலைவன், பரத்தையர் மனைக்கண் தொடர்ந்து செல்வானாவான் என்றதாம்.

23. தாக்கணங்கு ஆவது ஏனோ?


துறை: இதுவும் அதே துறை.

முள்ளி வேரளைக் களவன் ஆட்டிப்
பூக்குற்று, எய்திய புனல் அணி யூரன்
தேற்றம் செய்து, நப் புணர்ந்து, இனித்
தாக்கணங் காவது எவன்கொல்? அன்னாய்!
தெளிவுரை: முள்ளிச் செடியின் வேர்ப்பக்கத்துள்ள தான அளையிடத்தேயுள்ள அலவனை ஆட்டி அலைத்து விளையாடியும், பூக்களைப் பறித்தும், எய்திய புனலானது அழகுடன் விளங்கும் ஊருக்கு உரியவனாகியவன் தலைவன். அவன் நாம் தெளியத் தகுவன செய்து முன்னர் நம்மைக் கூடினான். இப்போது, நம்மைத் தாக்கி வருத்தும் அணங்கினைப் போல வருத்திக் காட்டுவதுதான் எதனாலோ?

கருத்து: 'அவன் நடத்தையிலே மாற்றம் புலப்படுவது, அவன் மேற்கொண்டு ஒழுஙுகின்ற ஒழுக்கத் தவறினாலேதான்.'

சொற்பொருள்: களவன் ஆட்டு - அலவனாட்டு. பூக்குற்று - பூப்பறித்து. இவை மகளிர் விளையாட்டுகள். 'நம்'; தனித்தன்மைப் பன்மை. தாக்கணங்கு - தீண்டி வருத்தும் தெய்வம்; நம்மை உறவோடு க ஊடிக் கலந்தவன், இப்போது வெறுத்து வருத்தும் கொடுமையாளன் ஆயினனே என்பதாம்.

விளக்கம்: அலவனாட்டலும், பூப்பறித்தலும், இளமகளிரின் நீர் விளையாட்டுக்கள்; 'அலவனாட்டுவோள்' என்று பிறரும் கூறுவர் (நற். 363). 'சுனைப் பூக்குற்று' என்பதும் நற்றிணை (நற். 173).

உள்ளுறை: 'மகளிர் அலவனை அலைத்துப் பூக்குற்று எய்திய புனல் அணி ஊரன்' என்றது, 'தலைவன் தன் மனைவியைத் துன்புறுத்திப் பரத்தையர் உறவிலே திளைத்து இன்பங் காண்பவன்' என்று குறிப்பினாற் சொன்னதாம்.

'அலவனாட்டியும் பூப்பறித்தும் இளமகளிர் விளையாட்டயர்ந்த நீர் அழகு செய்யும் ஊரன்' எனவே, அந்நீர்தான் தெளிவிழந்ததாய்க் கலங்கித் தோன்றுமாறு போல, எம் இல்லறமும், அவன் எம்மைப் பிரிவினாலே நோயுறச் செய்து வருத்தியும் பரத்தையரோடு இன்புற்றுப் பழி விளைத்தும் வரும் கொடுமையால், அமைதியும், பெருமையும் தெளிவுமிழந்து கலங்கலுறுவதாயிற்று என்பதுமாம்.

24.நலங்கொண்டு துறப்பது ஏன்?


துறை: பரத்தையருள்ளும் ஒருத்தியை விட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான் என்பது கேட்ட தோழி, வாயிலாய் வந்தார் கேட்பத், தலைமகட்குச் சொல்லியது.

(து.வி: பரத்தையொருத்தி மேற்கொண்ட காம மயக்கத்தினால் மட்டுமே அவன் நின்னைப் பிரிந்தான் அல்லன். அங்கும் ஒருத்தியை உறவாடித் துய்த்தபின் கழித்துவிட்டு, மற்றொருத்தியைப் புதிது புதியாகத் தேடிச் செல்லும் இயல்பினனே தலைவன் என்று, தோழி தலைவிக்குச் சொல்கிறாள். தலைமகனின் ஏவலர் கேட்பச் சொல்லியதால், வாயில் மறுத்ததும் ஆம்.)

தாய்சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்
எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன்,
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலம் கொண்டு துறப்பது எவன்கொல்? அன்னாய்!
தெளிவுரை: 'அன்னாய்! தன் தாய்சாவத் தான் பிறக்கும் புள்ளிகளையுடைய நண்டினோடு, தன் பிள்ளையையே தான் தின்னும் முதலையையும் உடையது அவன் ஊர். அவ்வூரவனான நம் தலைவன் இவ்விடத்தே இன்னமும் வந்தனன் இல்லையோ? அவன், தம் பொற்றொடிகள் ஒலிக்கத் தன்னைத் தழுவிய பெண்களின் நலத்தினைக் கவர்ந்து கொண்டு, பின் அவரைப் பிரிவுத் துயராலே வருந்தி நலனிழியுமாறு கைவிடுவதுதான் எதனாலோ?'

கருத்து: நினக்கு மட்டுமே கொடுமை செய்தான் அல்லன்; தன்னைத் தழுவிய பெண்களை எல்லாம் நுகர்ந்தபின் அவர் வருந்தக் கைவிடுவதே அவன் இயல்பாகும். இதுதான் எதனாலோ? என்பதாம்.

பொருள்: 'தாய் சாப் பிறக்கும் களவன்' - தாய் சாவத் தான் பிறப்பெடுக்கும் நண்டு; 'கூற்றமாம் நெண்டிற்குத் தன்பார்ப்பு' என்பர் பிறரும் (சிறுபஞ். 11). 'பிள்ளை தின்னும் முதலை' - தன் பிள்ளையைத் தானே கொன்று தின்னும் முதலை; 'தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை' எனப் பின்னும் கூறுவார் (ஐங். 41). மகிழ்ந்ன் - மருதநிலத் தலைவன். தெளிர்ப்ப - ஒலிசெய்ய. நலம் - பெண்மை நலம். முயங்கியவர் - தழுவிய பெண்டிர்; பரத்தையரைக் குறித்தது.

விளக்கம்: தலைவனின் ஊர் எப்படிப்பட்ட அன்புன்ச செறிவையுடையது தெரியுமா? தான் பிறக்கத் தன் தாயையே சாகடிக்கும் நண்டையும்; தான் பெற்ற பிள்ளையையே கொன்று தின்னும் கொடிய முதலையையும் உடையது. ஆகவே, அவ்வாரனான அவனிடத்தே அன்பும் பாசமும் நிரம்பியிருக்குமென எதிர்பார்த்தது நம் மடமையேயன்றி அவன் தவறன்று என்கிறாள் தோழி. 'மகிழ்நன், பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கி, அவர் நலம் கொண்டு, துறப்பது எவன்கொல்?' என, அவன் பிறர்மாட்டுச் செய்துவரும் கொடிய செயல்களையும் அவன் இயல்பாகவே இணைத்துக் கூறலும் பொருந்தும்.

உள்ளுறை: தாய் சாவப் பிறக்கும் களவனையும், தன் பிள்ளை தின்னும் முதலையையும் உடைய கொடுமையான ஊரினனாதலால், அவன் விரும்பிய மகளிரை முயங்குதலும், நலன் உண்ணலும், பின் அன்பற்றுத் துறத்தலும் அவனுக்கும் உரிய அருளற்ற கொடுந்தன்மையேயாம் என்று கூறுவதாகக் கொள்க.

மேற்கோள்: 'தலைவன் கொடுமை கூறினமையின் உள்ளுறை யுவமம் துனியுறு கிளவியாயிற்று. தவழ்பவற்றின் இளமைக்குப் 'பிள்ளை' என்னும் பெயர் உரியது' என்பார் பேராசிரியர் (தொல். உவம. 28, மரபு. 5) தோழி, காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாற்றால் உள்ளுறை உவமம் கூறியது என்றும் அவர் கூறுவர். (தொலை. உவம. 31, பேர்).

25. இழை நெகிழ் செல்லல்!
துறை: மேற்பாட்டின் துறையே.

புயல் புறந்தந்த புனிற்றுவளர் பைங்காய்
வயலைச் செங்கொடி களவன் அறுக்கும்
கழனியூரன் மார்பு பலர்க்கு
இழை நெகிழ் செல்லல் ஆக்கும் அன்னாய்!
தெளிவுரை: ''அன்னாய்! புயலானது புறத்தேயாகத் தூக்கித் தள்ளிவிட்ட, முற்றாத இளம்பிஞ்சுக் காய்களையுடைய வயலையின் சிவந்த கொடியினைக், களவன் புகுந்து அறுத்துப் போடும் கழனியைக் கொண்ட ஊருக்கு உரியவன் தலைவன். அவன் மார்பானது, நின் ஒருத்திக்கே அல்லாமல், மகளிர் பலருக்கும் இழைநெகிழச் செய்யும் துன்பத்தைத் தருவதாகும்.''

கருத்து: நின்னையன்றியும், அவனாலே துயரினைக் கண்டவர், மகளிர் பலராவர்!

சொற்பொருள்: புறந்தந்த - பந்தரினின்றும் இழுத்துக் கீழே தரையில் தள்ளிய. புனிற்றுவளர் பைங்காய் - இளம்பிஞ்சாக இருக்கும் பசுங்காய். செங்கொடி - சிவந்த கொடி, பசலையுள் ஒருவகை இது. செல்லல் - துயரம். இழை - அணிகலன்கள்; வளையும் தாடியும் போல்வன. புயல் - புயற் காற்று; அயல எனவும் பாடம்.

விளக்கம்: புயலிலே தன் பற்றுக் கோட்டினை விட்டுத் தரையிலே இழுத்தெறியப்பட்ட இளம் பிஞ்சுகளைக் கொண்ட வயலைக் கொடியினை, தானும் அருளின்றி அறுத்துக் களிக்கும் களவன் போலவே, தன்மேற் காதலால் தம் தாயாரின் தடையையும் மூறிவந்து கூடிய மகளிருக்கு ஊறுவிளைத்து, அவர் எவ்வகைப் பற்றுக்கோடும் இல்லாதவராகத் துடிப்பக் கண்டு களிக்கும் கொடிய மனத்தினன் ஊரன் என்பதாம். 'வயலைச் செங்கொடி' என்றது, அதன் மென்மைமிகுதியை உணர்த்தற்கு. ஈன்றணிமை கொண்ட மகளிரும் பசலைக் கொடி போல மென்மையுடையார் என்பது பற்றி அவரையும் பசலையுடம் புடையார் என்பதும் நினைக்க.

உள்ளுறை: 'வயலையின் பசுங்காய் சிதைய, புயலாலே வீழ்த்தப் பெற்ற அதன் கொடியை, அலவன் தானும் அறுத்துக் களித்தாற் போன்று, மகப்பெற்று வாலாமை கழியாதே மனையிடத்திற்கும் நம் நலத்தினைச் சிதைத்து, நம் புதல்வனுக்கும் கேடிழைக்கின்றான். நம் தலைவன்' என்பதாம்.

களவன் வயலைச் செங்கொடியை அறுத்தலால், விளைந்து முற்றிப் பயன்தர வேண்டிய, காய் பல காய்க்கும் செடிவாடி அழிந்தாற் போல, தலைவன் ஒருத்தியோடு ஒன்றி வாழ்தலான பண்பினை அறுத்துப் பரத்தமை பேணலால், அப் பெண்டிர் பலருக்கும் துயரம் செய்வான் ஆயினன் என்பதும், அம் மயக்கால் புதல்வனைக் காத்துப் பேணும் பொறுப்பையும் மறந்தனன் என்பதும் ஆம்.

26. இன்னன் ஆவது எவன்கொல்?


துறை: தலைமகற்கு வாயிலாகப் புகுந்தார், 'நின் முனிவிற்கு அவன் பொருந்தா நின்றான்' என்ற வழி. 'அவன்பாடு அஃதில்லை' என்பதுபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

(து.வி: தலைமகனுக்காகப் பரிந்துரை செய்யச் சென்றவர், 'நின் சினத்திற்கு அவன் பொருந்தவே நடந்து, நினக்குக் கொடுமையே செய்தான்' என்று, தலைவியின் புலவிக்கு இசைவது போலத் தலைவனைப் பழித்துச் சொல்லுகின்றனர். அவ்விடத்தே, 'அவன் இயல்பு அஃதில்லையே? எப்படி இவ்வாறு அவன் ஆயினான்? என்று தலைவி, தோழியிடத்தே அவனைப் போன்றிச் சொல்வதாக அமைந்தது. இச்செய்யுள்.)

கரந்தையஞ் செறுவில் துணைதுறந்து, களவன்
வள்ளை மென்கால் அறுக்கும் ஊரன்
எம்மும், பிறரும், அறியான்;
இன்னன் ஆவது எவன்கொல்? - அன்னாய்!
தெளிவுரை: ''அன்னையே! கொட்டைக் கரந்தையையுடைய அழகிய வயலினிடத்தே, தன் துணையான பெட்டை நண்டைத் துறந்து களவன் செல்லும், அப்படிப் போகும் களவன், அயலேயுள்ள வளவளைக் கொடியினது. மெல்லிய தண்டினையும் அறுத்துப் போகின்ற ஊருக்கு உரியவன் தலைவன். அவன், எம் இயல்பையும், பரத்தையரின் இயல்பையும் அறியாத தெளிவற்ற நிலையினனாயினான். அவன் இங்ஙனம் தீச் செயலுடையனாவதற்குக் காரணந்தான் யாதோ?''

கருத்து: 'அவன் இவ்வாறு புறத்தொழுக்கிலே செல்லுதற்கும், பலர்க்கும் தீச்செயலே செய்தற்கும், யாதுதான் காரணமோ?' என்பதாம். அது அவன் நட்பாகக் கூடினார் கெடுத்த கேடு என்பது கருத்து.

விளக்கம்: பொதுவாக, வாயிலோர் தலைவனைப் போற்றிக் கூறுதலே அல்லாது, அவன் கொடுமை கூறிப் பழிப்பது என்பது கிடையாது. ஆனால், மனைவிக்கு உறுதி கூறுமிடத்து, இவ்வாறு தலைவனைக் குற்றம் கூறுதலும் உண்டு என்பர் (தொல். பொ. 166) இனி, பண்போடு நடக்கும் தலைவனுக்கேகூடத், தன்னிடத்தே உளம் அழிந்தாகொருத்தியை அடங்கக் காட்டுதலான செயலிடத்தே, புறத்தொழுக்கம் உளதாவதும் இயல்பு என்பதும் விதியென்பர் (தொல். பொ. 150). அவ்விதிப்படி நடந்தானோ என்று தலைவி ஐயுற்றதாகவும் நினைக்க.

சொற்பொருள்: கரந்தை - ஒரு வகைக் குத்துச் செடி: கொட்டைக் கரந்தை எனவும், கொட்டாங்கரந்தை எனவும் கூறப்படும், வெள்ளைக் கரந்தை, சிவகரந்தை, தரையிற்படரும் சிறுகரந்தை போல்வன இதன் வேறுபல வகைகள். துணை - துணையாகிய பெட்டை. வள்ளை - வள்ளைக் கொடி. மென்கால் - மெல்லிய தண்டு. இன்னாவது - இத்தன்மையன் ஆவது; இன்னான் ஆவது என்பதும் பாடம்.

உள்ளுறை: கரந்தைச் செறுவிலே துணைதுறந்து சென்ற களவன், மெல்லிய வள்ளைத் தண்டினை அறுத்து எறியும் என்றது, அவ்வாறே இல்லத்து மனையாளைத் துறந்து போயின தலைவன், பரந்தையர் மாட்டும் இன்புற்றுத் துறந்து அவரையும் வாடவிட்டு நலிவிக்கும் கொடுமையினைச் செய்வானாயினன் என்பதாம்.

ஈன்றணிமை உடையாளைத் துறந்து வாழ்வதற்கு நேர்ந்த மனவெறுமையே, பரத்தையர் மாட்டுச் சென்றொழுகி, அவரை வருந்தச் செய்யும் கொடுமைக்குக் காரணமாயிற்றுப் போலும் என்பதும் ஆம். 'துணை துறந்து' போகாதிருப்பின், அக் கொடுமை நிகழாது போலும் என்பதும் கொள்க.

27. அல்லல் உழப்பது ஏனோ?


துறை: தலைமகன் மனைக்கண் வருங்காலத்து வாராது தாழ்த்துழி, 'புறத்தொழுக்கம் உளதாயிற்று'எனக் கருதி வருந்தும் தலைமகட்குத், தோழி சொல்லியது.

(து.வி: தலைவன் வரவேண்டிய காலத்தே முறையாக இல்லத்திற்கு வந்தான் அல்லன்; அதனால், 'அவன் புறத்தொழுக்கத்தே புகுந்தான்' என்று நினைந்து வருந்துகின்றாள் தலைவி. அவளுக்குத் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

செந்நெலம் செறுவிற் கதிர் கொண்டு, களவன்
தண்ணக மண்ணளைச் செல்லும் ஊரற்கு
எல்வளை நெகிழச் சாஅய்,
அல்லல் உழப்ப தெவன்கொல்? அன்னாய்!
தெளிவுரை: 'அன்னையே! செந்நெல் விளையும் விளைவயலிடத்தே கதிரைக் கவர்ந்து கொண்டு செல்லும் நண்டானது, குளிர்ச்சியான உள்ளிடம் கொண்ட தன் மண்ணளையிடத்தே அதனோடு சென்று புகும் ஊருக்கு உரியவன் தலைவன். அவன் பொருட்டாக, நீதான், நின் ஒளிவளைகள் நெகிழ்ந்தோட, மெலிந்து துயரப்படுவதுதான் எதற்காகவோ?'

கருத்து: 'அவனைக் குறித்துப் பிழைபட நினைத்து மனம் கவலை கொள்ளாதே! அவன் விரைந்து வந்து சேர்வான்!' என்பதாம்.

சொற்பொருள்: செந்செல் - சிவப்பு நெல், 'செஞ்சம்பா' என்பதும், 'செஞ்சாலி' என்பதும் இது. செறு - வயல் தண்ணக - குளிர்ந்த உள்ளிடத்தையுடைய. எல்வளை - ஒளி செய்யும் வளை. சாஅய் - மெலிந்து.

உள்ளுறை: அலவன் செந்நெற்கதிர் கொண்டு தன் மண்ணளை புகுமாறு போலத், தலைவனும், வினையாற்றுதலால் தேசிய பொருளைக் கொண்டானாய்த் தன் இல்லத்திற்கு விரைந்து மீள்வானாவன் என்பதாம். கற்புக் காலத்தே பொருள் வயிற் பிரிந்து சென்று, திரும்பி வரக் குறித்த காலம் தாழ்த்தஃதானைக் குறித்துச் சொல்லியது இதுவாகக் கொள்க.

மேற்கோள்: ''புறத் தொழுக்கத்தை உடையவனாகிய தலைவன் மாட்டு மனம் வேறுபட்ட தலைவியைப், 'புறத்து ஒழுக்கமின்றி நின்மேல் அவர் அனைபுடையர்' என, அவ்வேறுபாடு நீங்கத் தோழி நெருங்கிக் கூறியது; இதன் உள்ளுறையாற் பொருள் உணர்க'' என்பார் நச்சினார்க்கினியர் (தொல். கற்பு. 9). 'கதிர்... செல்லும் ஊரன்' என்பதற்கு உள்ளுறைப் பொருளாவது, 'வேண்டிய பொருளைத் தொகுத்துக் கொண்டு இல்லிற்கு வருவான் என்பது' எனவும் அவர் கூறுவர்.

28. தோள் பசப்பது ஏனோ?


துறை: இற்செறிவித்துத் தலைமகட்கு எய்திய வேறுபாடு கண்டு, 'இது தெய்வத்தினான் ஆயிற்று' என்று தமர் வெறி எடுப்புழி, அதனை விலக்கக் கருதிய தோழி, செவிலிக்கு அறத்தொடு நிற்றது.

(து.வி: இது துறையமைதியால் 'குறிஞ்சி'த் திணையது எனினும், 'களவன் வரிக்கும்' எனவந்த கருப்பொருளால் 'மருதம்' ஆயிற்று. 'வெறிவிலக்கல்' என்னும் குறிக்கோளோடு, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்று, தலைவியின் களவுறவை உணர்த்தியதாகவும் கொள்க.)

உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின்,
தண்சேறு களவன் வரிக்கும் ஊரற்கு
ஒண்தொடி நெகிழச் சாஅய்,
மென்தோள் பசப்பது எவன்கொல்? - அன்னாய்!
தெளிவுரை: ''அன்னையே! 'நீருண்டும் துறையிடத்தேயுள்ள அணங்குதான் இவளிடத்தே நீங்காது தங்கியிருக்கும் நோய்க்குக் காரணம் என்று நீயும் நினைப்பாய்' என்றால், ஒள்ளியதொடியானது நெகிழ்ந்துபோக மெலிவுற்று, இவளது மென்மையான தோள் பசந்து நிறம் வேறுபடுத்தும் எதனாலோ?''

கருத்து: இது, உளத்தே கொண்ட காதல் நோயின் வெம்மைத் தாக்குதல் என்பதாம்.

சொற்பொருள்: உண்துறை - நீருண்ணும் துறை; உஃணு நீர் எடுக்கும், நீர்த்துறை. நீர்த்துறையிடத்தே அணங்கு உளதாதலைப் பிறரும் கூறுவர். (முருகு, 224; அகம், 146, 240). உறைநோய் - செயலற்றவளாக நீங்காதே தங்கியிருக்கும் காமநோய்; 'உறுநோய்' என்பதும் பாடம். வரிக்கும் - கோலம் செய்யும். 'தொடி நெகிழத் தோள் சாய்' என்பதனை, 'தொடி நெகிழ்ந்தனவே, தோள் சாயினவே' (குறுந். 239) என்பதனாலும் அறிக. தோள் பசத்தலைப் பிறரும் கூறுவர்: 'தாம் பசந்தன என் தடமென் தோளே - (குறுந், 121.)'

விளக்கம்: 'உண்டுறை யணங்கு இவளுறை நோயாயின்' என்றது, அன்னையும் பிறரும் கொண்ட முடிவைத் தான் எடுத்துச் சொல்லி மறுக்க முனைவதாகும். 'தோள் பசப்பது' நோக்கி, இவள் நோய் காமநோயாதலை உணர்க எனக்குறி, வெறிவிலக்கி, அறத்தொடு நின்றனள் தோழி என்க.

உள்ளுறை: அலவன் வரித்தலாலே தன் சேறும் அழகுற்றுத் தோன்றுமாப்போலே, தலைவன் வரைந்து வந்து இவளை கோடலால் இவளும் இந் நலிவின் நீங்கிப் புதுப் பொலிவு அடைவாள் என்பதாம்.

29. நின் மகள் பசலை ஏனோ?


துறை: வரைவெதிர் கொள்ளார் தமர், அவண் மறுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

(து.வி.: தலைமகனுக்கு உரியார் வரைந்து வரவும், தலைவியின் தமராயினார் அதனை ஏற்காது மறுத்தனர். அப்போது தோழி, தலைவியின் களவு உறவைச் செவிலித் தாய்க்குப் புலப்பட உரைத்து, அறத்தொடு நிற்கின்றதாக அமைந்த செய்யுள் இது.)

மாரி கடிகொளக், காவலர் கடுக,
வித்திய வெண் முளை களவன் அறுக்கும்
கழனி ஊரன் மார்புற மரீஇத்,
திதலை அல்குல் நின்மகள்
பசலை கொள்வது எவன்கொல்? அன்னாய்!
தெளிவுரை: ''அன்னையே! மாரியும் மிகுதியான பெயலைச் செய்ய, காவல் செய்வோரும் விரைவாக வந்து பார்வையிட, விதைத்த வெள்ளிய முளைகளை அலவன் அறுத்துத் திரியும் கழனிகளையுடையவன் ஊரன்! அவன் மார்பினைப் பொருந்தத் தழுவி இன்புற்றதன் பின்னும், தேமற் புள்ளிகள் கொண்ட அல்குல் தடத்தை உடையவளான நின் மகள்தான், பசலை நோயினைத் தன்பாற் கொள்வதும் எதனாலோ?''

கருத்து: அவனையே அவளுக்கு மணமுடித்தல் அறத்தொடுபட்ட நெறியாகும்.

சொற்பொருள்:மாரி - கால மழை. கடிகொளல் மிக்குப் பெய்தல். கடுக - விரைவாக வர; மழை நின்ற வேளையிலே காவலர் வித்திய வயல் நோக்கி விரைந்து வந்தது பெருமழையால் வித்திய வித்துச் சேதமாதலைத் தடுத்தற் பொருட்டாக என்க. வெண்முளை - வெள்ளிய முளை; வித்தை முளைகட்ட விட்டு விதைப்பதே இன்றும் சேற்று விதைப்பினர் மரபு. அறுக்கும் - கெடுக்கும். மார்பு உறமரீஇ - மார்பு பொருந்தத் தழுவி; 'மார்புற அறீஇ' என்றும் பாடம். சிதலை - மேற்புள்ளிகள்; துத்தி என்பர்; திதலை அல்குல்' என்பர் பிறரும் (குறந். 27, அகம். 54). பசலை - பசத்தலாகிய காமநோய்க் க ஊறு.

விளக்கம்: இதுவும் கருப்பொருள் நோக்கி மருதமாகக் கொள்ளற்கு உரிய செய்யுளே. அறத்தொடு நிற்றலே இதன் துறையாவதும் அது குறிஞ்சிக்கு உரியதும் நினைக. இஃது 'உண்மை செப்பல் என்பர்'

உள்ளுறை: 'வித்திய விதையிடத்தே தோன்றும் முளையினை, அவ்வயலிடத்தே வாழ்தலை உளதான களவன் அறுக்கும் ஊரன்' என்றது, அவ்வாறே தம் மகளிடத்தே எழுந்த இல்லறக் கடமையின் செவ்வியான கற்பு மேம்படுதலை வரைவெதிர் கொள்ளாதே வரைவுடன் படற்கு மறுத்தாராய்த் தமரே இதைக்கின்றனர் என்பதாம்.

30. பெருங்கவின் இழப்பது ஏன்?


துறை; இதுவும் மேற்காட்டிய துறைச் செய்யுளே.

வேம்புநனை அன்ன நெடுங்கண் களவன்
தண்ணக மண் அளை நிறைய, நெல்லின்
இரும்பூ உறைக்கும் ஊரற்கு இவள்
பெருங்கவின் இழப்பது எவன்கொல்? - அன்னாய்!
தெளிவுரை: ''அன்னையே! வேம்பின் பூவரும்பைப் போன்ற நெடுங்கண் களையுடைய அலவனின் குளிர்ந்த நிறையும்படியாக, நெற்பயிரின் மிகுதியான பூக்கள் உதிர்ந்துகிடக்கும் விளைவயல்களையுடைய ஊரன் தலைவன். அவன் பொருட்டாக, நின் மகள் தன் பேரழகினை இழப்பதுதான் எதனாலோ?''

கருத்து: அவனே, இவளது கணவன் ஆதற்குரியன்; அதனால் வரைவுக்கு உட்படுதலைச் செய்வீராக.

சொற்பொருள்: வேம்புநனை - வேம்பின் பூவரும்பு; இது நண்டின் கண்ணுக்கு நல்ல உவமை; 'வேம்பு நனை அன்ன இருங்கண் நீர் ஞெண்டு' என்று அகமும் இதனைக் கூறும் (அகம், 176) உறைக்கும் - உதிர்ந்து கிடக்கும். கவின் - பேரழகு; காண்பார் உணர்வு முற்றும் தன்பாலதாகவே கவியுறுமாறு மயக்கும் வசியப் பேரெழில்.

விளக்கம்: அலவனின் கண்ணுக்கு வேம்பு நனையை உவமை கூறியது, வேம்பு பூக்கும் காலம் மணம் செய்தற்குரிய நற்காலமும் ஆகும் என்று புலப்படுத்துதற்காம்.

மேற்கோள்: மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது; தோழி அறத்தொடு நின்றது எனக் காட்டுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் (தொல். அகத். 12).

உள்ளுறை: 'அலவனின் மண்ணளை நிறைய வயலிடத்தின் நெற்பூ உதிர்ந்து கிடத்தலைப் போலவே, தலைவனின் மனையகத்தே, தீதின்றி வந்த குடியுரிமையான பெருஞ்செல்வம் நிரம்பிக் கிடக்கும்' என அவன் செல்வப் பெருக்கத்தினைக் கூறி வரைவுடம்படக் கூறியதாகவும் கொள்க.

4. தோழிக்கு உரைத்த பத்து


இப் பத்துச் செய்யுட்களும், கேட்போளாகிய தோழி பொருளாகத் தொகை பெற்றுள்ளன. 'அம்ம வழி தோழி' என்றே ஒவ்வொரு செய்யுளும் விளியோடு தொடங்குகின்றது. இங்குப் பேசுவோர் பலராயினும் கேட்பவள் தோழியே. தோழியருள்ளும் பலரிடம் கூறியிருத்தல் என்றல் பொருந்துமேனும், ஒருமையிற் கூறுதல் இலக்கிய மரபு நோக்கி என்க.

31. கடனன்று என்பானோ?


துறை: முன் ஒருநாள், தன்னோடு புதுப்புனல் ஆடுழி, 'இனிப் புறத்தொழுக்கம்விரும்பேன்' என ஆயத்தாரோடு சூளுற்ற தலைமகன், பின்பும் பரந்தையரோடு புனலாடத் தொடங்குகின்றான் என்பது கேட்ட தலைமகள், அவன் உழையர் கேட்ப, தோழிக்குச் சொல்லியது.

(து.வி.: முன்னோரு தடவை தலைவியோடு சென்று புதுப்புனல் ஆடினான் தலைமகன். அப்போது, அவளும் அவள் தோழியரும் கூடியிருக்கும் இடத்தே, 'இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்' எனச் சூளுரையும் விரும்பிச் செய்தான் அவன். பின்னாளில், பரந்தையரோடு புனலாட்டயர்கின்றான் என்பது கேட்டாள் தலைமகள். அவள் நெஞ்சம் பெரிதும் வேதனைப்படுகின்றது. தோழியிடம் சொல்வாள் போலத் தலைவனின் நெருக்கமான ஏவலர் பிறரும் கேட்கச் சொல்வதாக அமைந்தது இச் செய்யுள்.)

அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
கடனன் றென்னும் கொல்லோ - நம்மூர்
முடமுதிர் மருதத்துப் பெருந்துறை
உடனாடு ஆயமோடு உற்ற சூளே!
தெளிவுரை: ''தோழி, ஒன்று சொல்வேன் கேட்பாயாக: நம் ஊரிடத்தே வளைந்து முதிர்ந்த மருத மரங்கள் நிறைந்துள்ள பெருந்துறைக்கண்ணே, நம்மோடும் புனலாட்டு அயர்ந்தவரான ஆயத்தாரும் அறியும்படி, நம் தலைவன் செய்த சூளுரையினைப் போற்றிக் காத்தல், தனக்குரிய கடனன்று என்று அவன் இப்போது சொல்வானோ?''

கருத்து: 'அச் சூளுரை பொய்த்து, அவன் பரத்தையரோடும் கூடிப் புதுப்புனலாட்டு அயர்தல் உடையன் என்று' நாம் கேட்கின்றோமே என்பதாம்.

சொற்பொருள்: 'அம்ம' என்பது கேட்பிக்கும் பொருட்கண் வந்த இடைச்சொல்; சங்க நூற்களுள் பலவிடங்களிற் காணப்படும்; 'அம்ம கேட்பிக்கும்' (தொல். சொல். 276). மகிழ்நன் - தலைவன்; மருதநிலத் தலைவனின் பெயர்; பெயரே மகிழ்வே குறியாகத் திரியும் இயல்பை உணர்த்துவது காணலாம்; முடம் - வளைவு; பெருந்துறை போல்வது. உழையர் - பக்கம் இருப்பார். கடன் - கடப்பாடு; போற்றியே ஆக வேண்டியதான உறுதிப்பாடு. உடனாடு ஆயம் - தோழியரும், தன்னுடன் நீராட்டயர்தற்கு உரிமையுள்ளவருமான ஆய மகளிர்.

விளக்கம்: உழையர் கேட்பக் கூறியது, அவர்தாம் அவனுக்கு உணர்த்தித் தெளிவித்தலும் கூடும் என்னும் கருத்தால், 'சூள்' தெய்வத்தை முன்னிறுத்திக் கூறும் உறுதி மொழியாதலின், அங்ஙனம் கூறினான். பொய்ப்பின் தெய்வம் அவனைப் பற்றி வருத்துதல் தவறாதாதலின், தன்னை மறப்பினும், அதனையேனும் நினைந்து போற்றானோ எனக் கவலையுற்றுச் சொல்லுகின்றாள் எனவும் கொள்ளலாம்.

மேற்கோள்: 'அம்ம' என்னும் சொல் கேட்பித்தற் பொருளில் வரும் என்பதற்கு மேற்கோள் காட்டுவர் (தொல். இடை - 29) உரையாசிரியர்கள்.

32. எழுநாள் அழுப என்ப!
துறை: வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

(து.வி: தலைமகள், தன் புறத்தொழுக்கத்தாலே தன்னோடும் ஊடிச் சினந்திருப்பதனை எண்ணி, அவளைத் தெளிவித்துத் தன்னுடன் உறவாடச் செய்யும் பொருட்டுத், தலைவன், தன் பாணர் பாங்கர் முதலியோரை ஏவுகின்றான். அவர்கள் கேட்டுத் திரும்புமாறு, தலைவி, தோழிக்குச் சொன்னாற்போல அமைந்த செய்யுள் இது.)

அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
ஒருநாள் நம்மில் வந்ததற்கு, எழுநாள்
அழுப என்ப, அவன் பெண்டிர்
தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே!
தெளிவுரை: 'தோழி, நீ வாழ்வாயாக. மகிழ்நன் ஒருநாள் நம் இல்லத்திற்கு வந்தானாக, அதற்கே, அவன் பெண்டிர், தீயிற்பட்ட மெழுகினைப் போல விரைய உள்ளம் உருகினராய் ஏழு நாளளவும் அழுதிருந்தனர் என்று சொன்னார்களே!'

கருத்து: 'யாம் அவன் பிரிவை ஆற்றும் திறலுடையேம்; ஆற்றாது உருகும் அவரிடத்தேயே சென்று அவன் தலையளி செய்வானாக' என்பதாம்.

சொற்பொருள்: 'நம்' - தனித்தன்மைப் பன்மை. என்ப - என்பார்; அசையும் ஆம். ஒன்றுக்கு ஏழென்று மிகுத்துக் கூறுதல் இலக்கிய மரபு (குறள் 1269). 'அவன் பெண்டிர்' என்றது பரத்தையர் என்பார்களே! ஆதலின், அவரிடத்தேயே சென்று, தலைவன் அவருக்கே மகிழ்வு தருவானாகுக' என்றது மனவெறுப்பாலே, கூறியதாம். தன்போல் உரிமையற்றாரும், அவன் தரும் பொருளே கருதி அவனுக்கு இன்பம் அளிப்பாரும் ஆயினவரான பரத்தையர், அவ்வாறு நெஞ்சழிதல் இலர் என்பதே இதன் உட்கருத்தாம். பிறரிடத்தே தோன்றிய சிறுமை பொருளாகப் பிறந்த மருட்கை இது என்க.

33. தலைத்தலைக்கொள ஆடுவான்!
துறை: இதுவும் மேற்பாட்டின் துறையே யாகும்.

அம்ம வாழி, தோழி, மகிழ்நன்
மருதுயர்ந் தோங்கிய விரிபூம் பெருந்துறைப்
பெண்டிரொ டாடும் என்ப; தன்
தண்தார் அகலம் தலைத்தலைக் கொளவே!
தெளிவுரை: ''தோழி! வாழ்வாயாக! மருத மரங்கள் மிகுந்தும் ஓங்கியும் வளர்ந்திருப்பதான, இதழ்விரிந்த பூக்களையும் மிகுதியாகவுடைய, பெரிய நீர்த்துறையிடத்தே, நம் தலைவன், குளிர்ந்த தாரணிந்த தன் மார்பினைப் பரத்தையர் தலைக்குத் தலை ஒவ்வொருவரும் புணையாகப் பற்றிக் கொண்டு நீராடி இன்புற்று மகிழுமாறு தந்து, அவருடன் கூடிக் களிப்புடன் நீராட்டயவர்வான் என்பார்களே!''

கருத்து: 'அவ்வாறு பலராலும் விரும்பித் தழுவப்படும் நம் தலைவனுக்கு, நம்முடையதான உறவுதான் இப்போதிலே தேவையற்றதல்லவோ' என்று கூறி, வாயில் மறுத்ததாம்.

சொற்பொருள்: 'தலைத்தலைக் கொள்' என்றது, தலைக்குத் தலை வந்து பற்றிக் கொள்ள. அவன் அதனால் களிப்பும், எவர்க்குத் துணையாவது என்றில்லாது பற்றினார்க்கெல்லாம் துணையாகும் இன்ப மயக்கமும் கொள்வான் என்றற்காம். 'விரிபூம் பெருந்துறை' என்றது, கரைக்கண் மரங்கள் உதிர்த்த பூக்களும், நீராடுவார் கழித்த பூக்களுமாகப் பெருகிப் பரந்து, நீரையே மேற்புறத்தே மூடிக் கொண்டிருக்கும் தன்னையுடைய பெரிய நீராடுதுறை என்றற்காம். இதனால், இவன் ஆடிய ஆட்டத்தை ஊராட் பலரும் காண்பர் என்பதும், அவன் அதனையும் நினையாத நாணிலியாயினான் என்று நொந்தததும் கொள்க. 'வவ்வு வல்லார் புணையாகிய மார்பினை' என்று அவருள், பிறரை ஒதுக்கிப் பற்றிக் கொள்ளும் வல்லமையுள்ளவளுக்குப் புணையாக மகிழும் மார்பினை உடையனாயினை என்று, பரிபாடல் இவ்வாறு ஒரு காட்சியை மேலும் நயப்படுத்தும் (பரி. 6).

34. ஆம்பல் வண்ணம் கொண்டன!
துறை: இதுவும் மேற்செய்யுளின் துறையே!

அம்ம வாழி, தோழி, நம் ஊர்ப்
பொய்கைப் பூத்த புழைக்கால் ஆம்பல்
தாதோர் வண்ணம் கொண்டன
ஏதிலா ளர்க்குப் பசந்த, என் கண்ணே!
தெளிவுரை: தோழி, கேட்பாயாக; நம்மிடத்தே அன்பற்றவனாகவே ஒழுகிவரும் தலைவனின் பொருட்டாகப் பசப்புற்று என் கண்கள், பொய்கையிடத்தே பூத்த, புழை பொருந்திய தண்டினையுடைய ஆம்பற் பூவின் தாதுபோலும் நிறத்தையும் கொண்டனவே! அதுதான் ஏனோ?''

கருத்து: நம்மை மறந்தானை மறக்கமாட்டாதே நாம் ஏங்கிச் சோரும் நிலையான இதுதான் என்னையோ? என்பதாம்.

சொற்பொருள்: பொய்கை - நீர்நிலை. 'மானிடரால் ஆக்கப்படாது தானாகவே அமைந்த நீர்நிலை' என்பர் நச்சினார்க்கினியர். புழை - துளை. கால் - தண்டு; ஆம்பலின் தண்டு உள்ளே துளையுடையது என்பதனை, 'நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள் கால்' என்று (நற். 6) பிறரும் காட்டுவர். ஏர்; உவம உருபு. வண்ணம் - நிறம்; அது பொன்னிறம்.

விளக்கம்: 'பிழைக்கால் ஆம்பல்' என்று சொன்னது, அவ்வாறே உள்ளத்தே உள்ளீடான வலுவற்ற தன்மையன் தலைவன் என்று நினைந்து கூறியதும் ஆம். ஊர்ப் பொய்கை ஆம்பலின் தாது நாடி வரும் வண்டினத்துக் கெல்லாம் இனிமை தருவது போல, தலைவனும் தன்னை நாடிய பரத்தையர்க் கெல்லாம் இன்பம் அளிப்பானாயினான் என்பதுமாம்.

35. மாமைக் கவினும் பசந்ததே!
துறை: வாயிலாய்ப் புகுந்தார், தலைமகன் குணம் கூறிய வழி, 'அவனுக்கு இல்லாதனவே கூறுதலால், இப்பொழுது காண் என் மேனி பசந்தது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது இது.

(து.வி: ஊடியிருப்பாளிடம், தலைவனுக்குப் பரிந்து பேசச் சென்றவர்கள், தலைவனின் சிறப்பினைப் பலவாகக் கூறி நிற்க, அதுகேட்டுப் பொறாதாளான தலைவி, 'இப் பொய்யுரை கேட்டேபோலும் என் மேனி பசந்தது' எனத் தன் தோழியிடம் கூறுவாள் போல, அவர்கள் பேச்சையும் மறுக்கின்றனள்.)

அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்
பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால்
நிறத்தினும் நிழற்றுதன் மன்னே!
இனிப் பசந்தன்று, என் மாமைக் கவினே!
தெளிவுரை: 'தோழி, வாழ்வாயாக! நம் ஊர்ப் பொய்கையிடத்தே யுள்ள ஆம்பலின், நார் உரிக்கப் பெற்ற மெல்லிய தண்டினுங் காட்டில் ஒளியுடையதாக முன்னர் இருந்தது என் மேனியுன் மாமைக் கவின். அதுதான், இப்போது, இவர் கூறும் பொய்யுரை பலவும் கேட்கவுந்தான் கெட்டழிய, அழகழிந்து பசந்ததே!'

கருத்து: 'அவன் பொய்ப் பேச்சினை எல்லாம் வாய்ம்பையே எனக் கொண்டு மயங்குதல் இனியும் இலேம்' என்பதாம்.

சொற்பொருள்: 'ஆம்பல் நார் உரி மென்கால் நிறம் மாமைக் கவினின் நிறத்துக்கு உவமையாகலின், இதனைச் செவ்வாம்பல் தண்டு என்று கொள்க. 'மன்' : கழிவிரக்கப் பொருளது. நற்றிணையிலும், 'நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால், நார் உரித்தன்ன மாமைக் கவின்' (நற்-6) என வருவது காண்க. கவின் - பேரெழில். பசந்தன்று - பசந்தது.'

விளக்கம்: நாருரிக்கப் பெற்ற சிவப்பு ஆம்பலின் தண்டு, பேரெழிலும் ஒளியும் உடையதேனும், அதனைக் கவிந்து பேணிக் காக்கும் நாரினை இழந்தமையாலே விரைவில் அழகழிந்து வாடிப்போவது போல, அவன் செய்யும் கொடுமையால், என் மாமைக் கவினும் காப்பாரின்றிக் கெட்டது என்பதாம். மாமைக் கவின் - மாந்தளிரின் எழில் கொண்ட மேனியின் வனப்பு.

36. நாம் மறந்திருத்தலும் கூடும்!
துறை: 'தான் வாயில் நேரும் குறிப்பினளாயினமை அறியாது தோழி வாயில் மறுத்துழி, அவள் நேரும் வகையால், அவட்குத் தலைமகள் சொல்லியது.'

(து.வி: தலைவன் பரத்தைமை ஒழுக்கத்துப் புறம்போனானாயினும், தலைவியால் அவனை மறக்க முடியவில்லை. தோழி வாயிலோர்க்கு இசைவு தருவதற்கு மறுத்தவிடத்து, அவள் தான் அவனை ஏற்கும் குறிப்பினளாதலைத் தெரிவிக்குமாறு சொல்லி, அத் தொழியிடம் தன்னடைய மனநிலையும் இவ்வாறு புலப்படுத்துகின்றனள்.)

அம்ம வாழி, தோழி! ஊரன்
நம் மறந்து அமைகுவன் ஆயின், நாம் மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே.
கயல்எனக் கருதிய உண்கண்
பயலைக்கு ஒல்கா வாகுதல் பெறினே.
தெளிவுரை: ''தோழி வாழ்வாயாக! தலைவன் நம்மை மறந்து இருப்பவனாயின், கயல் போலும் மையுண்ட நம் கண்கள், அது குறித்துப் பசலை அடையாதிருப்பதற்கு வேண்டிய உறுதிப்பாட்டினைப் பெற்றனவானால், அவனை நினையாதேமாய் மறந்து இருத்தல் நமக்கும் இயல்வதாகுமே!''

கருத்து: எம் கண்கள் பிரிவுத் துயரால் பசலையடையாதிருக்கப் பெற்றோமில்லையே; ஆகவே, அவனை ஏற்பதே செய்யத்தக்கது என்பதாம்.

சொற்பொருள்: 'அமைகுவானாயின்' எற்து, பரத்தையிடத்தேயே தங்கியிருக்கும் ஒழுக்கத்தனாயின் என்பதாம். ஒல்காவாகுதல் - தளராதிருத்தலைப் பெறுதல்.

விளக்கம்: அவன் பரத்தை வீட்டிலேயே தங்கிவிட்டாலும், தலைவியின் நெஞ்சம் அவனையே, அவனுறவையே தேடிப்போதல், அவள் கற்பறத்தின் செம்மையால் என்று கொள்க.

37. பொய்த்தல் வல்லன்!
துறை: 'தலைமகளைச் சூளினால் தெளிந்தான்' என்பது கேட்ட காதற் பரத்தை, தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது.

(து.வி.: 'தலைமகளைச் சூளுரை கூறித் தெளிவித்து, அவளுடன் கலந்து உறவாடி இன்புற்றான் தலைவன்' என்பதனைக் கேட்டாள் அவன் காதற்பரத்தை. அவள் உள்ளம் அதனாலே துடிக்கின்றது. தலைமகளின் தோழியர் கேட்குமாறு, தன் தோழிக்குச் சொல்வதுபோல, இவ்வாறு வெதும்பிக் கூறுகின்றாள். அவள், தலைவனிடத்தே கொண்டிருந்த நம்பிக்கையும் இதனால் நன்கு விளங்கும்.)

அம்ம வாழி, தோழி, மகிழ்நன்
நயந்தோர் உண்கண் பசந்துபனி மல்க
வல்லன் வல்லன் பொய்த்தல்
தேற்றான் உற்ற சூள்வாய்த் தல்லே!
தெளிவுரை: ''தோழி! வாழ்வாயாக! மகிழ்நன், தான் செய்த சூள் பொய்யாத வகையில் நடந்து கொள்ளுதலையே என்றும் அறியமாட்டான். தன்னை விரும்பிய மகளிரின் மையுண்ட கண்கள் பசலை படர்ந்தவாய், நீர்த்துளிகளை மிகுதியாகச் சொரியும் வண்ணம், தான் அவர்க்குச் செய்த சூளுறவினைப் பொய்த்து, அவரை வருந்தச் செய்வதற்கே அவன் வல்லவன்!''

கருத்து: தலைவன், செய்த சூளினைப் பேணாது ஒழுகும் வாய்மையற்ற தன்மையன் என்பதாம்.

சொற்பொருள்: நயந்தோர் - விரும்பியோர்; காதலித்த மகளிர். பயந்து பசலைபூத்து; பசந்து என்பதும் பாடம். பனிமல்க - நீர் நிறைய. தேற்றான் - அறியான்; தன்வினைப் பொருளது. சூள்வாய்த்தல் - உரைத்த சூளுரை பொய்யாகாதபடி பேணி அவ்வண்ணமே நடத்தல்.

விளக்கம்: 'காதற் பரத்தை' சேரிப் பரத்தையின் மகளாயினும், ஒருவனையே மனம் விரும்பி அவனோடு மட்டுமே உறவு கொண்டு, அவன் உரிமயாளாக மட்டுமே வாழ்பவள். 'வல்லவன் வல்லவன்' என்று அடுக்கி வந்தது. அவன் சூள் பொய்த்தலே இயல்பாகக் கொண்டவன் என்றற்காம்; 'இனியும் இச்சூளும் பொய்ப்பன்; மீண்டும் தலைவியைப் பிரிந்து எம்மை நாடியும் வருவான்' என்று சொன்னதுமாம்.

38. தன் சொல் உணர்ந்தோர் அறியலன்!
துறை: 'தலைமகன் மனைவயிற் போகக் கருதினான்' என்பது சொல்லிய தன் தோழிக்குப், பரத்தை சொல்லியது.

(து.வி: 'தலைமகன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போவதை நினைக்கின்றான்' என்று தோழி வந்து, அவன் பரத்தையிடம் சொல்லுகின்றாள். அவளுக்கு, அப் பரத்தை தான் கருதுவதைக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.)

அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
தன்சொல் உணர்ந்தோர் அறியலன்; என்றும்
தண்தளிர் வௌவும் மேனி,
ஒண்தொடி முன்கை, யாம்அழப் பிரிந்தே.
தெளிவுரை: தோழி, வாய்வாயாக! குளிர்ச்சியான மாந்தளிரைப் போன்ற மேனியினையும், ஒள்ளிய வளைகள் அணிந்த முன்னங் கையினையும் உடையரான யாம், அவன் பிரிவினுக்கு ஆற்றாதே அழுகின்ற வண்ணமாக, அவன் எம்மைப் பிரியக் கருதினான் என்பாய். தலைவன் தான் தெளிவிக்கக் கூறிய சொற்களை வாய்ம்மையாக ஏற்றுக் கொண்டு தன்பால் அன்பு செலுத்திய மகளிரின் உளப்பாங்கினை அறிகின்ற அறிவானது என்றைக்கும் இல்லாதவனே யாவான்!

கருத்து: ஆகவே, அவன் அப்படிப் பிரிந்து போதலும் அவனது இயல்பேயாகும் என்று ஆற்றியிருப்பேம் என்பதாம்.

சொற்பொருள்: தன்சொல் - தெளிவித்து முதற்கண் கூடியபோது, தான் சொல்லிய உறுதிமொழிகள். உணர்ந்தோர் - வாய்மையாகக் கொண்டோர்.

விளக்கம்: தன்மாட்டு அன்புடையாரைப் பிரிதலால், அவர் அடையும் மனத்துயரங்களைப் பற்றி எல்லாம் அறியும் அறிவற்றவன் தலைவன். ஆதலால், அவன் செயலைக் குறித்து யாம் ஏதும் நோதற்கில்லை; நம் பேதைமைக்கே வருந்துதல் வேண்டும் என்பதாம். தளிர் மேனி வண்ணம் கெடும்; ஒண்தொடி முன்கை மெலியத் தொடிகள் சுழன்றோடும்; என்பதனைக் குறிப்பால் உணர்த்தவே, அவை சுட்டிக் கூறினாள். இவளைக் காதற் பரத்தையாகவோ, உரிமைப் பரத்தையாகவோ கொள்வதும் பொருந்தும்.

39. பிரிந்தாலும் பிரியலன்!
துறை: ஒருஞான்று தலைவன் தன் மனைக்கண் சென்றது கொண்டு, அவன் பெண்மை நலம் எல்லாம் துய்த்துக் காதல் நீங்கிப் பிரிந்தான் என்பது தலைவி கூறினாள் எனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்பத், தன் தோழிக்குச் சொல்லியது.

(து.வி: தலைவன் வீடு திரும்பியதால், தலைவி அவன் உறவைப் பெற்று ஆறுதலும் பெற்றாள்; 'பெண்மை நலமெல்லாம் விரும்பியவாறு அவன் துய்த்து விட்டான்; இனி அறக்கடன் மேல் தன் மனஞ்செல்லாலே நம்பால் வந்தான்; இனி நம்மைப் பிரியான்' என்று அவள் தோழியரிடம் கூறினாள். இதனைக் கேள்விப்பட்ட பரத்தை, தன் தோழியிடம் சொல்வது போலத், தலைவிக்கு நெருங்கியோர் கேட்டுக் கலங்குமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

அம்ம வாழி, தோழி! ஊரன்
வெம்முலை அடைய முயங்கி, நம்வயின்
திருந்திழைப் பணைத்தோள் நெகிழப்
பிரிந்தன னாயினும், பிரியலன் மன்னே!
தெளிவுரை: தோழி வாழ்வாயாக! ஊரனானவன், விருப்பந்தரும் நம்முடைய மார்பகங்கள் அழுந்துமாறு முற்றத் தழுவி இன்புற்றனன். அவன் நம்மிடத்திலிருந்தும், திருத்தமான அணிகளணிந்த நம் பெருத்த தோள்கள் நெகிழும்படியாகப் பிரிந்தனன் என்றாலும், விரைவில் நம்பால் மீள்வானாதலின், முற்றவும் நம்மைப் பிரிந்தவன் அல்லன்காண்!

கருத்து: அவன் மீண்டும் நம்பால் விரைய வருவான் என்பதாம்.

சொற்பொருள்: வெம்முலை - விருப்பத்தை விளைக்கும் கவின்பெற்ற மார்பகம். அடைய - முற்றவும் அழுந்தும்படி. பிரியலன் - புறத்தே பிரிந்தாலும், எம் நெஞ்சைவிட்டு என்றும் பிரிந்திலன்; இப்போது சில நாட்கள் பிரிந்தாலும், மீளவும் வரும் இயல்பினனாதலின் முற்றப் பிரிந்திலன் என்பதும் ஆம். நெகிழ்தல் - நழுவுதல்.

விளக்கம்: இதனைத் தன் பாங்காயினார் சொல்லக் கேட்கும் தலைவி, தன் நம்பிக்கை நிலையாதோவென்னும் ஏக்கத்தினளாவாள் என்பதாம். இதுவே பரத்தையின் விருப்பமும் ஆம்.

40. ஊரிறை கொண்டனன் என்ப!
துறை: ''உலகியல் பற்றித் தலைவன், தன் மனைக்கண் ஒருஞான்று போனதே கொண்டு, 'அவ்வழிப் பிரியாது உறைகின்றான்' என்று அயற்பரத்தையர் பலரும் கூறினார்'' என்பது கேட்ட காதற் பரத்தை, அவர் பாங்காயினார் கேட்பத் தான் தன் தோழிக்குச் சொல்லியது.

(து.வி.: உலகியலிலே செயற்குரியதான ஒரு செயலை முடிக்கக் கருதித், தலைவன், ஒரு சமயம் தன் மனைக்குப் போகின்றான். அதனை, அவன் தன் காதற் பரத்தையை முற்றவும் பிரிந்து தன் வீட்டிற்கே திரும்பினன். அங்கேயே மனைவியைப் பிரியாது இன்புற்றும் வாழ்கின்றனன்' என்று அயற்பரத்தையர் பலரும் தம்முள் பேசிக் கொள்கின்றனர். இதனைக் கேள்வியுற்ற அவன் காதற்பரத்தை, அந்த அயற் பரத்தையரின் பாங்காயினார் கேட்குமாறு, தன் தோழிக்குச் சொல்வாள்போல அமைந்த செய்யுள் இது.)

அம்ம வாழி, தோழி, மகிழ்நன்
ஒண்டிதொடி முன்கை யாம்அழப் பிரிந்து, தன்
பெண்டிர் ஊர்இறை கொண்டனன்' என்ப.
கெண்டை பாய்தர அவிழ்ந்த
வண்டுபிணி ஆம்பல் நாடுகிழ வோனே.
தெளிவுரை: 'தோழி, வாழ்வாயாக! கெண்டை மீன் பாய்ந்தலினாலே கட்டவிழ்நுது மலர்ந்த, வண்டு விரும்பும் ஆம்பல் பூக்களையுடைய நாட்டினன் தலைவன். அவன், ஒள்ளிய தொடியணிந்த முன்கையினையுடைய யாம் அழும்படியாக, எம்மைப் பிரிந்து சென்று, தன் பெண்டாகிய மனையாளின் வீட்டிலேயே, அவளைப் பிரியாதேயே தங்கி இன்புற்றிருக்கின்றனன் என்பார்களே! அதுதான் என்னையோ!'

கருத்து: அவர் அவ்வாறு சொல்வது நடவாது; அவன் என்பால் மீண்டும் விரைவில் வருவான் என்பதாம்.

சொற்பொருள்: பெண்டிர் - மனைவியைக் குறித்தது; இற்பெண்டிர் என்பது வழக்கு. இறைகொள்ளல் - நிலையாகத் தங்கியிருத்தல். பாய்தர - பாய.

விளக்கம்: 'உலகியல்பற்றி' என்றது, தேவவழிபாடு, சமுதாய விழா நிகழ்ச்சிகள் போன்றவற்றை. இவற்றுள், தலைவன் கலவாதவழி ஊரும் உறவும் பழிக்கும் ஆதலின், அவன் தன் மனைவியோடு தன் வீட்டில் சென்று தங்கியிருப்பானாயினன் என்பதாம். இது இன்றைக்கும் சமுதாயத்தில் நிகழ்ந்துவரும் ஒரு மரபாகவே இருப்பதைக் காணலாம். அவ்வாறு தன் வீடு சென்றவன், தன் மனைவியின் பெருமையையும், தன் சிறுமையையும், அவளின்றித் தன் குடிப்பெருமை சிறவாமையையும் நினைந்தானாகி, அங்கேயே தங்கி, அவளைத் தெளிவித்து இன்புற்றிருந்தனன் என்பதும் பொருந்தும்.

உள்ளுறை: கெண்டை பாய்தற்கு ஆம்பல் மலரினும், அதுதான் வண்டினைப் பிணைந்து நிற்பதேயன்றிக் கெண்டையை அல்லவாதல் போல, உலகியல் பற்றி அவன் தன் மனை சென்றானாயினும், அவன் அன்பு எம்மிடத்தேயே என்றும் மாறாதபடி நிலவுவதாகும் என்பதாம்.

5. புலவிப் பத்து!
புலவி பொருளாக அமைந்த செய்யுட்கள் ஆதலால், 'புலவிப் பத்து' என்றனர். 'புலவி' - சிறு காலம்.

'துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று' என்று, திருக்குறள், புலவியை வேண்டுவதும் நினைக.

'புலவி' என்பது புணர்ச்சியான் வந்த மகிழ்ச்சி குறைபடாமற், காலம் கருதிக் கொண்டு பயப்பதோர் உள்ள நெகிழ்ச்சி' என்பர் பேராசிரியர்.

தலைமகள் கூறுவதும், அவள் பொருட்டாகத் தோழி கூறுவதுமாக இவை அமைந்துள்ளன.

41. பொன்போற் செய்யுள் ஊரன்!
துறை: கழறித் தெருட்டற் பாலராகிய அகம்புகல் மரபின் வாயில்கள் புகுந்துழி, தலைவனையும் பாணன் முதலிய பக்கத்தாரையும் இகழ்ந்து தலைவி கூறியது.

(து.வி: தலைவிக்கு அறிவுரை கூறித் தெளிவிக்கும் உரிமையுடையவராகிய வாயில்கள் வந்து, 'தலைவனின் செயலை மறந்து, அவன் மீண்டும் இல்லத்துக்கு வரும்போது அன்புடன் ஏற்றுக் கடமை பேணுமாறு' அவளுக்குச் சொல்லுகின்றனர். அப்போது, உள்ளத்துத் துயரவேகத்தைத் தாங்காதாளான தலைமகள், தலைவனையும், அவனது பரத்தமை ஒழுக்கத்துக்கு உதவியாக அமைந்த பாணன் முதலியோரையும் இகழ்ந்து சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

'தன் பார்ப்புத் தின்னும் அன்பு இல் முதலையொடு
வெண் பூம் பொய்கைத்து, அவன் ஊர்' என்ப; அதனால்
தன் சொல் உணர்ந்தோர் மேனி
பொன்போற் செய்யும் ஊர் கிழவோனே!
தெளிவுரை: தானீன்று பார்ப்பினையே தின்னும் கொடுங் குணமுடைய முதலையொடு, வெண்மையான பூக்களும் நிறைந்த பொய்மையினை உடையது தலைவனின் ஊர்' என்பார்கள். அதனாலே, தன் சொல் உணர்ந்து அன்பு செய்தாரின் மேனியைத் தன் பிரிவாலே பொன்போலும் பசப்பினை அடைவிக்கும் கொடுமையினை அவனும் செய்கின்றான்!

கருத்து: 'அவன் பேச்சை நம்பும் மடமையாள் அல்லேன்' என்று வாயில் மறுத்ததாம்.

சொற்பொருள்: அன்பில் - அன்பில்லாத, வெண்பூ - ஆம்பற்பூ. தன்சொல் உணர்ந்தோர் - அவன் சொல்லை (பிரியேன் என்ற சூளுரையை) உண்மையெனக் கொண்டு, அவனுக்குத் தம் காதலை உரிமையாக்கிய மகளிர். 'மேனி' - மேனியின் நிறத்தினை. 'பொன் போற் செய்தல்' - பிரிவுத் துயரால் மேனியிற் பொன்னிறப் பசலை பூக்கச் செய்தல்.

விளக்கம்: முதலை தன் பார்ப்பைத் தின்னும் கொடுமையது என்பது முன்னும் கூறப் பெற்றது (ஐங். 24). பொய்கைத்து - பொய்கையை உடையது; மருதத்திலே வற்றாத நீர்வளம் கொண்ட நீர் நிலையை இதனால் காட்டுகின்றனர்.

உள்ளுறை: தானீன்ற பார்ப்பைத் தின்னும் கொடுங் குணமுடைய முதலையினைக் கொண்ட பொய்கையூரன் ஆதலின், தானே விரும்பி மணந்து கொண்ட தன் அன்பு மனையாளையும் வருந்தி நலிவித்து நலன் அழியச் செய்யும் கொடியவன் ஆயினான் என்று குறித்ததாகக் கொள்க.

தன் பார்ப்புத் தின்னும் முதலையும், வெண்பூவும் ஒருங்கிருக்கும் பொய்கையுடைய ஊரன் என்றது, தன்னை விரும்பி வருவாரையே பொன்னும் நலனும் உறிஞ்சிக் கெடுக்கும் பரத்தையரையும், மனைநலம் பேணும் குலமகளிரையும் ஒருங்கே ஒப்பாகக் கருதுபவனும் அவன் என்பதாம்.

மேற்கோள்: 'போல' என்பது உருவுவமத்திற்கு உரிய சொல்லலாம் என இளம் பூரணனாரும் (தொல். உவம - 16); தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை என்பது இன்னும் தலைமகனது கொடுமைக்கு உவமையாயிற்று; வெண்பூம் பொய்கைத்து அவனூர் என்பது தலைமகள் பசப்பு நிறம் பற்றி உவமையாயிற்று என்றும் கூறுவர். தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை என்பது தோழி கூற்று; என்னை! அவற்றின் செய்கையெல்லாம் அறியாளன்றே, தலைமகள் பெரும் பேதையாதலின் என்றும், பேராசிரியர் விளக்குவர். இவ்வாறு தோழி கூற்றாகக் கொள்வதே நயமுடைத்து ஆகும்.

''தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலையொடு வெஏண்பூம் பொய்கைத்து அவனூர் என்ப'' என்றாற்போலத் தலைவன் கொடுமையும் தலைவி பேதைமையும் உடனுவமம் கொள்ள நிற்கும்'' என்பர் நச்சினார்க்கினியர். அவர் கருத்தும் தோழி கூற்று என்பது இதனால் காணப்படும் (தொல். பொ. 230 உரை). தலைவியான குலமகள் இத்தகைய உயிரியல்புகள் எல்லாம் கண்டறியும் அளவுக்கு வெளிப்போந்து செல்லும் மரபினள் ஆகாள் என்னும் உயர்நிலை கருதியே, இருபெரு உரையாசிரியர்களும் இவ்வாறு தோழி கூற்றாகக் கூறினர் எனலாம்.

42. சிறப்ப மயங்கினள் போலும்?


துறை: தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை, 'தலைவன் பிற பரத்தையருடன் ஒழுகினான்' என்று புலந்தாளாக, அதனை அறிந்த தலைவி, அவன் தன் இல்லத்துப் புகுந்துழி, தான் அறிந்தமை தோன்றச் சொல்லியது.

(து.வி: பரத்தையுறவிலேயே களித்திருஃதானாகிய தலைவன், ஒருநாள் தலைவியின் நினைவு மேல் எழுந்ததாக, தன் வீட்டிற்கும் வருகின்றான். அவளிடம், 'தன்னைப் பரத்தையர் உறவுடையவனாக நினைப்பதே தவறு எனவும், வேறு வேறு செயல் நிமித்தமாகவே தன் வருகை இடையீடு படலாயிற்று' எனவும் பலப்பல பொய்கூறி அவளைத் தெளிவித்து, அவளுடன் மகிழ முயல்கின்றான். அப்போது அவள், அவனைக் குறித்துத் தான் கேட்டறிந்த நம்பும்படியான செய்தியொன்றைக் கூறி, அவனுக்கு இசைய மறுப்பதாக அமைந்த செய்யுள் இது.)

மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ
யாணர் ஊர! - நின் மாண்இழை அரிவை?
காவிரி மலிர்நிறை அன்னநின்
மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே!
தெளிவுரை: ''புது வருவாயினை உடைய ஊரனே! நினக்கு உரியவளும், மாண்பமைந்த அணிகள் பூண்டோளுமான அரிவையானவள், காவிரிப் பேராற்றின் நீர்ப் பெருக்குப்போல விளங்கும் நின் மார்பினை மிகுதியாக விலக்கத் தொடங்கினாளே! அவள் க்கஃளுண்டதன் களிப்பானது மென்மேலும் பெருகியதனாலே அப்படி மயக்கங் கொண்டனள் போலும்?''

கருத்து: அவள் குடிமயக்கால் நின்னை விலக்கியிருப்பாள், தெளிந்ததும் நின்னைத் தேடுவாள் என்பதாம்.

சொற்பொருள்: மகிழ்மிக - மது மயக்கம் மிகுதியாக. யாணர் ஊர - புதுவருவாய் உடைய ஊரனே! மலிர்நிறை - புதுவெள்ளம்; 'செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர்நிறை காவிரி' என்று பதிற்றுப்பத்தும் கூறும் (பதிற். 50). தொடங்கியோள் - தொடங்கினாள்.

விளக்கம்: 'யாணர் ஊர' என்றது, நின் ஊர் என்றும் புது வருவாயினைக் கொண்டதாதலேபோல, நீயும் என்றும் புதிதாகக் கொள்ளும் பரத்தமை உறவினை உடையை' என்று குறிப்பால் சொல்லிப் பழித்ததாம். 'மாண் இழை அரிவை' என்று பரத்தையைக் குறித்தது, அவை தலைவனின் கொடையால் அமைந்ததே என்று கூறற்கும், தான் அவையற்று விளங்கும் எளிமையினைக் காட்டற்கும் ஆம். 'மலிர்நிறையன்ன மார்பு' என்றது, புதுவெள்ளம்போலப் பரத்தையர் பலரும் விரும்பிக் கலந்து ஆடிக் களித்து இன்புறுதற்குரியதாக நிலை பெற்ற மார்பு என்பதாம். விலக்கல் - தடுத்து ஒதுக்கல்.

''நீ பிறளான பரத்தையைக் கூடியதறிந்தே நின்னை விலக்குபவள், நீ இங்கு வந்தமையும் அறிந்தால் இன்னும் சினவாளோ? ஆதலின், நீதான் அவளிடத்தேயே மீளச் செல்வாயாக'' என்று மறுத்ததாகக் கொள்க.

மேற்கோள்: ஆசிரியர் நச்சினார்க்கினியார், இதனைத் தோழி சொல்வதாகக் கொண்டு உரைப்பர் (தொல். பொருள். 240). ''காவிரிப் பெருக்குப் போலத் தலைவியை நோக்கி வருகின்ற மார்பினைத் தான் விலக்குமாறு என்னை?'' எனத் தலைவியை உயர்த்துக் கூறித், தலைவனை ஏற்றுக் கொள்ள வேண்டுகின்றாள் தோழி'' என்று அப்போது கொள்க.

43. நின்னும் பொய்யன் நின் பாணன்!
துறை: பாணன் வாயிலாகப் புகுந்து தெளிப்ப, மறுத்த தலைமகள், பாணனோடு தலைவன் புகுந்து தெளித்துழிச் சொல்லியது.

(து.வி: தலைவனுக்காகப் பரிந்து பன்முறை இரந்து வேண்டிய பாணனிடம், தான் இசையாமையே சொல்லிப் போக்கினாள் தலைமகள். ஒருநாள், அப் பாணனோடு தலைவனும் சேர்ந்துவந்து, பலப்பல கூறித், தலைமகளின் புலவியைத் தணிவிக்க முயல்கின்றனன். அப்போது, தலைவி, தலைவனை நோக்கிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

அம்பணத் தன்ன யாமை ஏறிச்
செம்பின் அன்ன பார்ப்புப்பல துஞ்சும்
யாணர் ஊர! நின்னினும்
பாணன் பொய்யன்; பல சூளினனே!
தெளிவுரை: 'மரக்காலைப் போலத் தோன்றும் தாய் ஆமையின் முதுகின் மீது, சிறு செம்பினைப் போன்றவான அதன் பார்ப்புகள் பலவும் ஏறிக்கிடந்தபடி உறங்கியிருக்கும், புது வருவாயினை உடைய ஊரனே! நின்னைக் காட்டினும், நின் ஏவலோடு வந்தானான நின் பாணன் பொய்யன்; பல பொய்ச் சூளினன்!'

கருத்து: பொய் கூறலிலும், உரைத்தலிலும், நின்னினும் நின் பாணனே வல்லவன் என்பதாம்.

சொற்பொருள்: அம்பணம் - மரக்கால்; தரகர் அளக்கும் மரக்கால் என்பர் அடியார்க்கு நல்லார் (சிலம்பு 14, 209-10). செம்பு - சிறு செப்புப் பாத்திரம், ஆமைப் பார்ப்பிற்கு உவமை; செம்புசொரி பானையின் மின்னி' என்பது நற்றிணை (நற். 153) சூள் - தெய்வம் சார்த்திக் கூறும் உறுதிமொழி.

விளக்கம்: 'பாணன் தலைவனின் உயர்வே கூறித் தலைவியை இரந்து நின்று சூளுரைப்பான்' என்பதால், தலைவனைக் காட்டிலும் அவன் சொற்களில் பொய்ம்மை மிகுதியாகவும், பொய்ச்சூள் பலவாகவும் விளங்கித் தோன்றிம் என்க. தலைவன் தலைவியின் இசைவு பெறுதற்குத் தாழ்ந்தும், குறையேற்றுப் பொறுத்தருளவும் வேண்டலும் கூடும். இவை பாணற்கு மரபன்று என்க.

உள்ளுறை: 'ஆமைப் பார்ப்புகள் அவற்றின் தாய் முதுகின்மேற் கிடந்து உறங்கும் வளமிகுந்த ஊரன்' என்றது, அவ்வாறே அவன் புதல்வனும் தன் தாயின் மார்பிற்கிடந்து உறங்குதலை அறிந்துவைத்தும், குலநலமும், இல்லறக் கடனும், மனைவிக்கு மகிழ்வளித்தலும் மறந்து, தன் காமவின்பமே போற்றிப் பரத்தையர்பால் மயங்கிக் கிடப்பானாயினான் தலைவன் என்றதாம்.

44. அறிந்தனையாய் நடப்பாயாக!
துறை: பரத்தையரின் மனைக்கண்ணே பன்னாள் தங்கித் தன் மனைக்கண்ணே வந்த தலைமகற்குத் தோழி கூறியது.

(து.வி: பரத்தையரின் வீடே கதியாகப் பலநாள் தங்கியிருந்த தலைவன், அதுவும் வெறுத்ததாகத் தன் மனைக்கு ஆவலோடு வருகின்றான். அவன் செயலைக் குறித்துப் பழித்து, அவன் வரவை மறுக்கும் தோழி, அவனிடம் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

தீம்பெரும் பொய்கை யாமை இளம்பார்ப்புத்
தாய்முகம் நோக்கி வளர்ந்திசினாஅங்கு
அதுவே ஐய, நின் மார்பே;
அறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே.
தெளிவுரை: ஐயனே! இனிய நீரையுடைய பெரிய பொய்கையினிடத்தேயுள்ள ஆமையின் இளம் பார்ப்பானது, தன் தாயின் முகத்தை நோக்கியே வளர்வதுபோல, நின் மார்பை நோக்கியே வாழ்பவள் தலைவி. அதனை அறிந்தாயாய் நடந்து கொள்வாயாக! நினக்குரிய அறமும் அதுவேயாகும்!

கருத்து: நீதான் அறத்தையும் மறந்தாய்; அன்பினையும் துறந்தாய் என்பதாம்.

சொற்பொருள்: தீம் பெரும் பொய்கை - இனிய நீருடைய பெரிய பொய்கை. தாய்முகம் நோக்கி - தாயின் முகத்தைப் பார்த்துப் பார்த்து. 'மார்' ; அசைநிலை.

விளக்கம்: இனிதான பெருமையுடைய குடும்பத்தினளான நின் மனைவி நின் மார்பினை நோக்கி நோக்கி மகிழும் அந்த மகிழ்வாலேயே உயர்வாழ்பவள் என்கின்றனள். அதனை அவளுக்கு மறுத்த நின் செயல் மடமையானது, அறத்தொடும் பொருந்தாதது என்றும் கூறுகின்றனள். அதனால் தலைவி நலிய நின் இல்லற மாண்பும் வளங்குன்றும் என்றனளுமாம்.

45. பசப்பு அணிந்த கண்!
துறை: நெடுநாள் பரத்தையர் இடத்தனாய் ஒழுகிய தலைமகள், மனைவியின் சென்றுழித், தோழி சொல்லியது.

(து.வி: நெடுநாள் பரத்தையர்பால் மயங்கிக் கிடந்து வீட்டை மறந்திருந்த தலைவன், அவள் ஒதுக்கியதும், தன் வீட்டிற்கு வர, அவனுக்குத் தோழி சொல்லியது இதுவாகும். அவன் பொருந்தாச் செயலை எள்ளிக்கூறும் நயம் கொண்டதும் இச்செய்யுள் ஆகும்.)

கூதிர் ஆயின் தண்கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணிநிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று, நின் ஊரே;
பசப்பு அணிந்தனவால் - மகிழ்ந! - என் கண்ணே.
தெளிவுரை: தலைவனே! கூதிர்க் காலத்திலே தண்மையோடு கலங்கிய நீராய் விளங்கியும், வேனிற்காலத்திலே நீலமணியின் நிறத்தினைக் கொண்டும் விளங்கும் ஊற்றினாலே நின் ஊரானது அழகு பெற்றது. என் கண்களோ, எஞ்ஞான்றும் நீ இழைத்த கொடுமையால் பசலைநோயே பெற்றன!

கருத்து: கண்ணொளி கெட்டுக் கலங்கியவ ளாயினேன் என்பதாம்.

சொற்பொருள்: கூதிர் - ஐப்பசி கார்த்திகை மாதங்கள். வேனில் வைகாசி ஆனி மாதங்கள். முன்னது மழைக்கலாம்; பின்னது கோடைக் காலம். மழைக்காலப் புதுவரால் நீர் கலங்கலாகத் தோன்றும்; வேனிலிற் புதுவரவற்றமையால் தெளிந்து நீலமணி போலத் தோன்றும். அந்த ஆறால் அழகு பெற்றது நின் ஊர் என்பாள், 'ஆறு அணிந்தன்று' என்றனள்.

விளக்கம்: கூடலும் பிரிதலும் என்று இல்லாமல், என்றும் பிரிதலே நின் செயலாதலால், இவள் கண்கள் பசலை நோய் உற்றுத் தம் அழகு கெட்டன. நின் ஊர் ஆற்றுக்குக் கலங்களும் தெளிதலும் காலத்தான். உண்டு; எனக்கு எப்போதும் கலக்கமே என்பதாம். இதனைத் தலைவி கூற்றாகவும் கொள்ளலாம்.

46. எமக்கும் இனிதே!
துறை: மனைக்கண் வருதல் பரத்தை விலக்க விலங்கி, பின்பு, உலகியல் பற்றி அவள் குறிப்பினோடும் வந்தமை அறிந்த தோழி, தலைமகளைப் புலந்து சொல்லியது.

(து.வி: மனைநோக்கி வர நினைந்தாலும், பரத்தை அதனைத் தடுத்துக் கூறுதலாலே வராது நின்றான் தலைவன். அவன், பின்பொருநாள், உலகியல் பற்றி அவன் (பரத்தை) நினைவோடும் வீடு வந்தனன்; அப்போது அவனைச் சினந்து தோழி சொல்லியதாக அமைந்தது இது.)

நினக்கே அன்றுஃது எமக்குமார் இனிதே -
நின் மார்பு நயந்த நன்னுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை யாகி
ஈண்டு நீ யருளாது ஆண்டுறை தல்லே.
தெளிவுரை: நின் மார்பினைத் தழுவியின் புறுதலை விரும்பியவளான, நல்ல நெற்றியையுடையவளுமான அரிவையானவள் விரும்பிய குறிப்பின்படியே நீயும் நடப்பவனாகி, இவ்விடத்திற்கு எம்மிடத்தேயும் வந்தருளுதலைக் கைவிட்டு, அவள் வீடான அங்கேயே நீ நிலையாகத் தங்கிவுடுதல் நினக்கு மட்டும் இனிதாவதன்று; அதுவே எமக்கும் இனிதாவதாகும் என்பதாம்.

கருத்து: பரத்தை குறிப்பிற்கேற்ப நடந்து கொண்டு, அவள் நினைவாகவே மயங்கியிருக்கும் நீ, இங்கு இடையிடையே வராதிருத்தலே எமக்கு இனிது என்பதாம்.

சொற்பொருள்: நயந்த - விரும்பிய. அரிவை - பரத்தையைக் குறிக்கும். நன்னுதல் என்றது, அவள் இளமையெழில் சுட்டுதற்கு; எள்ளற் சுட்டாகவே கொள்க. 'ஆண்டு' என்றது அவள் வீடாகிய அவ்விடத்தேயே என்றற்கு.

விளக்கம்: தொல்காப்பிய உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டுமாறு போலத் தலைவி சொன்னதாகவே பொருள் கொள்ளலும் பொருந்தும். 'எமக்குமார் இனிது' என்றது? எமக்குப் பிரவுத் துயரம் பகழிப் போனது; அதனால், யார் வருந்துதல் இலம்; ஆனால், இங்கு நீதான் வந்து போவதற்கு, அவள் வருந்தி நின்னை விலக்கின், நீதான் அதனைப் பொறுக்க மாட்டாய்; அதனுடன் அவள் நுதலழகும் கெடும் என்பதாம்.

மேற்கோள்: ''பிறள் மாட்டுத் தங்கிய ஒழுக்கத்துக் கிழவனைத் தாழ்ந்து, 'எங்கையர்க்கு உரை' என வேண்டிக் கோடற் கண்ணும் தலைவிக்கும் கூற்று நிகழும்'' என, இளம் பூரணனார் காட்டுவர் (தொல். கற்பு. 6).

''பரத்தையர் மாட்டு ஒழுகிக் கொடுமை செய்த தலைவன், தலைவி அடிமேல் வீழ்ந்து வணங்குழி, 'எங்கையர் காணின் இது நன்றெனக் கொள்ளார்' எனக் குறிப்பால் இகழ்ந்து கூறிக் காதலமைந்து மாறிய மாறுபட்டின்கண், தலைவிக்குக் கூற்று நிகழும் என்று நச்சினார்க்கினியர் காட்டுவர் (தொல். கற்பு. 6)''

47. நின் பொய் ஆயம் அறியும்!
துறை: பாணற்கு வாயில் மறுத்த தலைமகள், பின், அப்பாணனோடு தலைமகன் புகுந்து, தன் காதன்மை கூறியவழிச் சொல்லியது.

(து.வி: பரத்தைமை விருப்பினாலே தலைவியைப் பிரிந்திருந்தான் தலைவன். அவன், மீண்டும் தலைவி பாற் செல்வதற்கு விரும்புகின்றான். செய்த குற்றம் தலைவி மறுப்பாளென்ற அச்சத்தையும் கூடவே எழுப்புகின்றது. ஆகவே, தலைவியைத் தன் சினம் விட்டுத் தன்னை ஏற்குமாறு செய்துவரத் தன் பாணனை அவளிடம் தூது அனுப்புகின்றான். அவனை மறுத்துப் போக்கிய தலைமகள், பின்னர் அப்பாணனோடு தலைவனும் வந்து நின்று, தலைவிபால் தன் அன்புடைமை பற்றிப் பலபடியாகக் கூறத், தன் மனம் வெதும்பிச் சொல்லியதாக அமைந்தது இது.)

முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய, மனையோள்
அரிகாற் பெரும்பயறு நிறைக்கும் ஊர!
மாணிழை யாயம் அறியும் - நின்
பாணன் போலப் பலபொய்த் தல்லே!
தெளிவுரை: முள்ளின் முனைபோலும் கூர்மையான பற்களையுடையவள் பாண்மகள். அவள் இனிய கெடிற்று மீனைக் கொணர்ந்து சொரிந்த அகன்ற பெரிய வட்டி நிறையுமாறு, மனையோளானவள், அரிகாலிடத்தே விதைத்துப் பெற்ற பெரும் பயற்றை இட்டுக் கொடுத்து அனுப்புவாள். அப்படித் தந்து அனுப்புகின்ற தன்மையுடைய மகளிரையுடைய ஊரனே! நின் பாணனே போல நீயும் பலப்படப் பொய்யே கூறுதலைச், சிறந்த இழையணிந்த பேச்சை மெய்யாகக் கொள்வேன்? நின்னையும் உவந்து ஏற்பேன்?

கருத்து: நின் பரத்தைமைதான் ஊரறிந்த செய்தியாயிற்றே என்பதாம்.

சொற்பொருள்: முள்ளெயிற்றுப் பாண்மகள் - முள்ளைப் போலக் கூர்மையான பற்களையுடையவளான பாண்மகள்; கெடிறு - ஒருவகை மீன்; 'கெளிறு' என்பார்கள் இந்நாளில், வட்டி - கடகப் பெட்டி. சொரிதல் - கொணர்ந்து கொட்டுதல். அரிகாற் பெரும்பயறு - நெல் அரிந்த தாளடியிலே வித்திப் பெற்ற பெரும்பயறு. ஆயம் - பாங்கியர். பாணன் - பாண்மகன்; தலைவனின் ஏவலை ஏற்றுச் செய்வோன்; அவன் பரத்தமைக்கு உதவியாகவும் நின்று செயற்படுவோன்.

விளக்கம்: 'முள்ளெயிற்றுப் பாண்மகள்' என்றது, அவள் சின்னஞ்சிறுமி என்பது தோன்றச் சொல்லியதாம். அவள், 'அகன்பெரு வட்டி நிறையக் கெளிறு கொணர்ந்து சொரிந்து, அதற்கு ஈடாகப் பெரும்பயிறு அதே வட்டி நிறையக் கொண்டு செல்வள்' என்றது, அவ்வூரவரின் பெருவளம் நிரம்பியதும், கொடைப் பண்பு சிறந்ததுமான மனைப்பாங்கை உணர்த்துவதாம். பெரும்பயிறு - பயறுவகையுள் ஒன்று; இன்றும் அரிகாலில் உளுந்து, பயறு, எள்ளு, கொள்ளு முதலியன விதைப்பது வழக்கம். அவை தாமே முளைத்துக் காய்த்துப் பயன் தந்து விடுதல் மனையாளின் பெருமித மனத்தையும் உணர்த்தும். மாணிழை - சிறந்த அணிவகைகள்.

உள்ளுறை: ''மீன் சொரிந்த வட்டி நிறையுமாறு பெரும்பயறு பெய்தனுப்பும் மனையோள் நிரம்பிய ஊராதலின், எமக்கு நீதான் சிறுமையே செய்தனையேனும், எம் பெருந்தகவால் நின்னை மீண்டும் ஏற்கும் நெகிழ்ந்த அன்பு மனத்தினர் யாமும் ஆவோம்'' எனக் குறிப்பால் தன் இசைவு புலப்படுத்தியதும் ஆம்.

'கெடிறு சொரிந்த வட்டி நிறைய மனையோள் பெரும் பயறு நிறைக்கும் ஊர' என்றது, நீ நின் காதல் சொல்லிப் பொருளொடு பாணனை விடுத்திட, அவரும் அதனையேற்று, அதற்கீடாகத் தம் சிறந்த காதலைச் சொல்லி வரவிடப் பெறுவாய்' என, அவன் பரத்தைமை ஒழுக்கத்தைச் சுட்டியதும் ஆம்.

குறிப்பு: 'மாணிழை' தலைவியைக் குறிக்கும் எனக் கொண்டனமானால், இதனைத் தோழி வாயின் மறுத்துக் கூறியதாகவே கொள்ளலாம்.

48. நின் வரவினை வேண்டேம்!
துறை: பரத்தையர் மாட்டு ஒழுகா நின்று, தன் மனைக்கண் சென்று தலைமகற்குத், தலைமகள் சொல்லியது.

(து.வி: பரத்தையரின் உறவிலேயே சிலகாலம் மயங்கிக் கிடந்த தலைவன், ஒருநாள் தன் மனையிடத்தேயும் செல்ல, அப்போது அவனுக்குத் தலைமகள் புலந்து கூறுகின்ற பாங்கில் அமைந்த செய்யுள் இது.)

வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்
வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள்
யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர!
வேண்டேம் பெரும! - நின் பரத்தை
ஆண்டுச்செய் குறியொடு ஈண்டு நீ வரலே.
தெளிவுரை: விலைவாசி மீன்பிடிக்கின்ற தொழிலிலே வல்லவனான பாண்மகனின், வெண்மையான பற்களையுடைய இளையமகள், வரால் மீனைக் கொணர்ந்து சொரிந்த வட்டியினுள்ளே, வீட்டுத் தலைவியானவள், ஆண்டு கழிந்த பழைய வெண்ணெல்லை நிறைத்து விடுக்கும் ஊருக்கு உரியோனே! நின் பரத்தையானவள் அவ்விடத்தே செய்த புணர்குறிகளோடே நீதான் இவ்விடத்துக்கு வருதலை, யாம் வேண்டுவோம் அல்லேம்!

கருத்து: 'அவளிடமே நீ மீண்டும் செல்வாயாக' என்பதாம்.

சொற்பொருள்: வலைவல் - வலைவீசிச் செய்யும் மீன்பிடி தொழிலிலே வல்லவனான; பாண்மகன் - பாணன். இதனால் நெய்தல் நிலத்துப் பரதவரேபோல, மருதநிலத்து நீர்நிலைகளிலே மீன்பிடித்து விற்கும் தொழிலினர் பாணர் குடியினர் என்பதும் காணப்படும். யாண்டுகழி வெண்ணெல் - அறுவடை செய்து ஓராண்டு கழிந்த பழைய வெண்ணெல்; ஆண்டு கழிந்த நெல்லையே பயன்படுத்துதல் இன்றும் பெருங்குடி வேளாளர் மரபு. அதனை வாரி வழங்கினள் எனவே, அவர்தம் மனையின் பெருகிய நெல்வளம் விளங்கும்.

விளக்கம்: 'வரால் சொரிந்த வட்டியுள் யாண்டுகழி நெல் பெற்று வரும் பாண்மகளிர்போல, நீ தரும் பொருளுக்கு எதிராகப் பரத்தையரின் தோள்முயக்கினை நின் பாணன் நினக்குப் பெற்றுத் தருவான்' என்பதாம். 'என்ன குறை செய்யுனும், யாம் நின்னை விழைந்து நெகிழ்கின்ற நெஞ்சத்தேம்' என்பது ஒருவாற்றான் உண்மையாயினும், நீதான் நின் பரத்தை அவ்விடத்தே செய்த புணர்குறியோடு இங்கு வந்தமையால், நின்னை ஏற்க விரும்பேம் என்பதுமாம். அவர் உறவினை நீ முற்றக் கைவிட்டுப் பின்னர் மனையிலேயே தங்குவோனாக எம்பால் வருவாயாயின், யாம் நின்னை உவந்து ஏற்பேம் எனக் குறிப்பாகக் காட்டிக் கூறியதாகவும் கொள்க.

49. யார் நலன் சிதையப் பொய்க்குமோ?


துறை: பாணன் வாயிலாகப் பரத்தையோடு கூடினான் என்பது கேட்ட தலைமகள், தனக்கும் பாணனால் காதன்மை கூறுவிப்பான் புக்க தலைமகற்குச் சொல்லியது.

(து.வி: 'பாணனின் வழியாகவே தலைமகன் ஒரு பரத்தையோடு உறவு பெற்று, அவளைக் கூடியிருப்பானு மாயினான்' என்று தன் தோழியர் வந்து சொல்லக் கேட்டாள் தலைமகள். தனக்கும், அவ்வாறே தன் காதல் உடைமையைச் சொல்வதற்கு, அதே பாணனைத் துணையாகக் கொண்டு வந்த தலைமகனுக்கு, உளம் நொந்து அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
சின்மீன் சொரிந்து பன்னெற் பெறூஉம்
யாணர் ஊர! நின் பாண்மகன்
யார்நலம் சிதையப் பொய்க்குமோ, இனியே?
தெளிவுரை: அழகிய சிலவாகிய கூந்தலையும், தலைச் சுமையின் பாரத்தாலே அசைந்ததசைந்து நடக்கும் நடையையும் கொண்டவளான பாண்மகள், சிலவான மீன்களைச் சொரிந்து பலவான நெல்லைப் பெற்றுச் செல்லும் வளமிகுந்த புது வருவாய் நிரம்பிய ஊரனே! நின் பாண்மகன், இனி யார்யார் நலமெல்லாம் சிதைந்து போகுமாறு பொய்யுரைத்துத் திரிவானோ?

கருத்து: 'அவன் இன்னும் தன் பொய்யால் யாரைக் கெடுப்பானோ?' என்பதாம்.

சொற்பொருள்: அஞ்சில் ஓது - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய. அசைநடை - அசைந்து அசைந்து நடக்கும் ஒருவகைத் தளர்நடை நலம் - பெண்மை நலம்.

விளக்கம்: 'சின்மீன் சொரிந்து பன்னெற் பெறும் பாண்மகள்' போல, நின் பாணனும் பொய்யாகச் சில சொற்களை நயமாகக் கூறி, எம் இசைவைப் பெறுதலிலே, எம் அத்தகுவண்மை, அதாவது சின்மீனுக்கு எதிராகப் பன்னெல் வழங்கும் பேருள்ளம் கருதிய நம்பிக்கையாளன் போலும்' என்று எள்ளினரும் ஆம். 'இனி யார்நலம் பொய்க்குமோ?' என்றது, இவனியல்பு ஊரே முற்றவும் அறிந்தது ஆதலின், இனி இவன் பேச்சைப் பரத்தையர் சேரியுள்ளேயும் எவரும் வாய்மையாக ஏற்று நம்பார்கள் என்பதாம்.

உள்ளுறை: 'சின்மீன் சொரிந்து பன்னெற் பெறூஉம் பாண்மகளே போல, நின் பாணனும் தன் சிறுமைமிக்க பொய்ச் சொற்களைச் சொரிந்து, இன்னும் பல பரத்தையரின் உறவினை நினக்குத் தேடிக் கூட்டுவான்' என்று குறிப்பாகத் தலைவன் செயலைப் பழித்ததாம். சின்மீனுக்கு நிகராகப் பன்னெற் கொண்டேகும் பாண்மகளே போல, நீயும் சிலசொல் பொய்யாகக் கூறிப், பெண்டிரின் நலத்தை அதற்கீடாகப் பெறமுயல்வாய் என்றதும் ஆம்.

50. தஞ்சம் அருளாய் நீயே!
துறை: மலையின் நீங்கிப் பரத்தையிடத்துப் பன்னாள் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.

(து.வி: தன் மனையாளைப் பிரிந்து, பல நாட்களாகப் பரத்தையின் வீட்டிலேயே தங்கியிருந்தவன், மீண்டும் தன் மனையாளை நாடியவனாகத் தன் வீட்டிற்கும் வருகின்றான். அவனுக்குத் தோழி மறுத்துச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும் -
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர!
தஞ்சம் அருளாய் நீயே; நின்
நெஞ்சம் பெற்ற இவளுமா ரமுமே!
தெளிவுரை: வஞ்சி மரங்கள் மிகவும் உயரமாக வளர்ந்திருக்கும் புதுவருவாயினைக் கொண்ட ஊரனே! நின்னையே தன் நெஞ்சத்திலே கொண்டு வாழ்பவளான தலைவியும், நின் அன்பின்மைச் செயலாலே இப்போது மிகுதியாக அழுவாளாயினாள். ஆதலினாலே, அவள் படும் துயர் மிகுதி கண்டு மனமிடிந்த யாங்களும், இல்லறக் கடனாற்றுதலின் பொருட்டாக நின் துணையோராகிய நின்பால் அன்பு கொண்ட பிறரும், பயன் பெறுதலின்றி வருந்தா நிற்கின்றேமே!

கருத்து: நின் அன்பை இழந்தாளான இவள் வருந்தி மெலிந்து அழுதவாறே இருப்பாளாயினள்; நின் நெருக்கம் இழந்த துணைவரும் இவளுக்கு நீ செய்த கொடுமை கண்டு வாடுவாராயினர்; நின் பெருஞ்செல்வமும் இவள் மனவூக்கமிழந்ததாலே, யார்க்கும் பயன்படுதலின்றிப் பாழே கிடக்கின்றது; நின் பெருமையிலே இவள் வாழ்வு சிறக்குமென்று கருதி, நினக்கு இவளைக் கூட்டி வைத்தலிலே ஆரம்ப முதல் உதவி செய்த யாமும் வருந்துகிறோம். ஆகவே, எமக்குத் தஞ்சம் அருள்வதற்கு இரக்கமுற்று முற்படுவாயாக என்பதாம்.

சொற்பொருள்: துணையோர் - ஆயத்தார்; இவர் தலைவிக்குப் பலவகையானும் ஏவற் கடமைகளைச் செய்து, அவளது மனைவாழ்வின் செம்மைக்குத் துணையாக அமைந்து விளங்குவோர். யாமும் - தோழியராகிய யாமும்; இவர் தலைவியோடு நெருங்கிப் பழகி உயிர்குகியிரான அன்பு பூண்டிருப்பவர். செல்வம் - மனையிடத்துள்ள பலவான பொன்னும் பொருளும் ஆகும் வளமை. வஞ்சி = ஒருவகை மரம்; மருதத்திற்கு உரியது. துணையோர் - தலைவனுக்குத் துணையாகி அமைந்தும், அவன் துணை பெற்றும், பொருள் செய்து கொள்ளும் செய்வினைக் கூட்டுறவுப் பான்மையோர் என்பதும் ஆம். அவன் அக்கடமையும் மறந்து பரத்தனாகவே மயங்கித் திரிதலால், அவர் ஈட்டும் செல்வநலமும் குன்றலாக, அவரும் அதனாலே நொந்து வருந்துவராயினர் என்பதாம்.

விளக்கம்: 'வஞ்சி ஓங்கிய யாணர் ஊர' என்றது, வஞ்சி மரங்கள் உயரமாக வளர்ந்திருக்கும் புது வருவாய் மிக்க ஊரன் என்பதுடன், 'வஞ்சி, கொடியுமாதலால்' எமன் கொடி போலும் 'வஞ்சியரின் புகழாலே சிறப்புற்றிருக்கும் இல் வளமுடைய ஊரன்' எனவும் பொருள்தந்து, தலைவனின் அறத்திற்கு மாறான புறவொழுக்கத்தைப் பழித்தலும் ஆகும். நின் நெஞ்சம் தனதாகவே முன்பெற்றிருந்த இவளும் அதனைத் தானிழந்தாளாகி மிகுதியாக அழிவாயினள்; ஆதலின் நீதான் இவட்குத் தஞ்சமாக அமைந்து அதனை மீளவும் தந்து அருள்வாயாக' என்று வேண்டியதாகவும் கொள்ளப்படும்.

© Om Namasivaya. All Rights Reserved.