Go Back

22/03/21

நன்றுடையானை


பின்னணி:

தனது ஐந்தாவது தலப்பயணத்தின் ஒரு பகுதியாக, பண்டைய நாளில் சோழர்களின் தலைநகராக விளங்கிய மூக்கீச்சரம் (உறையூர்) சென்ற திருஞானசம்பந்தர், அதன் பின்னர் அருகில் உள்ள சிராப்பள்ளி தலத்திற்கு சென்றதாக பெரியபுராணம் உணர்த்துகின்றது. இதனை உணர்த்தும் பெரிய புராணத்து பாடலை நாம் இங்கே காண்போம். கைம்மலை=யானை, மலை போன்ற பருத்த உடலும் தும்பிக்கையும் உடைய விலங்கு; திருஞானசம்பந்தர் மகிழ்ச்சியினால் தனது உடல் பூரிக்க, உள்ளம் குளிர, நாவினால் தமிழ்மாலை பாடி இறைவனுக்கு அணிவித்தார் என்று கூறுவதன் மூலம், மனம் வாக்கு காயம் ஆகிய மூன்று கருவிகளையும் இறை வழிபாட்டினில் அவர் ஈடுபடுத்திய நிலையை சேக்கிழார் இங்கே உணர்த்துகின்றார். விளங்கிய மாலை என்று குறிப்பிட்டு புகழுடன் விளங்கும் பதிகம் என்று கூறுகின்றார்,

செம்மணி வாரி அருவி தூங்கும் சிராப்பள்ளி மேய செழுஞ்சுடரை

கைம்மலை ஈருரி போர்வை சாத்தும் கண்ணுதலாரைக் கழல்

பணிந்து

மெய்ம் மகிழ்வெய்தி உளம் குளிர விளங்கிய சொற்றமிழ் மாலை

வேய்ந்து

மைம்மலர் கண்டர்தம் ஆனைக்காவை வணங்கும் விருப்போடு

வந்தணைந்தார்.

இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய ஒரு பதிகமும் அப்பர் பிரான் அருளிய ஒரு பதிகமும் நமக்கு கிடைத்துள்ளன. இந்த திருக்கோயில் கோட்டை என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. இந்த மலையில் மூன்று சிகரங்கள் இருப்பதாலும் இராமயணத்து பாத்திரம் திரிசரன் வழிபட்டதாலும் திருச்சிராப்பள்ளி என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர். ஆனால் தேவாரப் பதிகங்கள் சிராப்பள்ளி என்று குறிப்பிடுவதால், திரு என்ற அடைமொழி கொடுக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி என்று அழைக்கப்படுகின்றது என்று கொள்வது பொருத்தமாக உள்ளது. சமணர்கள் தங்கி இருந்ததால் பள்ளி என்று அழைக்கப்பட்டது என்றும் கூறுவார்கள். உச்சி பிள்ளையார் கோயிலின் பின்னே ஐந்தாம் நூற்றாண்டில் சமணர்கள் படுக்கையாக பயன்படுத்திய அவர்களது உறைவிடங்கள் உள்ளன. அங்கே சிரா என்று ஒரு சமணத் தலைவர் தங்கியதாக குறிப்பு காணப்படுகின்றது. எனவே அந்த சமணத் தலைவரின் பெயரால் சிராப்பள்ளி என்று அழைக்கப் பட்டதாகவும் கருதுவர். அப்பர், சம்பந்தர் காலங்களில் இந்த தலம் மக்கள் வழக்கில் சிராப்பள்ளி என்றே அழைக்கப்பட்டது. வாயுவுக்கும் ஆதிசேடனுக்கும் இடையே நடந்த போட்டியில் சிதறிய மேரு மலையின் மூன்று பாகங்கள், திருச்சி, காளத்தி, திருகோணமலை ஆகிய மலைகள் என்று கூறுவார்கள். மலையின் உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளது. இறைவனின் பெயர் மாத்ருபூதேஸ்வரர், தாயுமானவர்; இறைவியின் திருநாமம் மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை;

ஒரு தாமரை மலர் மேல் சிறு குழந்தையாக இருந்த உமையன்னையைக் கண்ட காத்யாயனர் என்ற முனிவர் அந்த குழந்தையை எடுத்து வளர்த்தார். குழந்தையின் கூந்தல் இயற்கையாகவே நறுமணம் வீசியதால், அந்த குழந்தைக்கு மட்டுவார்குழலி என்று அழைத்து வளர்த்தார். மட்டுவார்குழலி வளர்ந்த பின்னர் சிவபெருமானை மணந்து கொள்ளவேண்டும் என்ற விருப்புடன் தவம் செய்ய, அந்த தவத்தினால் மகிழ்வடைந்த பெருமான் காத்யாயனியை மணம் செய்து கொள்கின்றார் என்று தல புராணம் கூறுகின்றது. செவ்வந்தி புராணம் என்பது இந்த தலத்தின் புராணம்.

காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த ரத்னகுப்தன் எனும் வணிகருக்கு ரத்னாவதி என்று ஒரு பெண். அவர் தனது பெண்ணை, தனகுப்தன் எனும் திருச்சியில் உள்ள வணிகருக்கு மணம் முடித்துக் கொடுக்கிறார். ரத்னாவதி எனும் செட்டி பெண் கருவுற்ற போது உதவிக்கு தனது தாய் வருவாள் என்று காத்திருந்தாள். சிவனை எப்போதும் துதிக்கும் இந்த பெண்ணுக்கு பேறு காலம் நெருங்கியபோது காவிரியில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பெண்ணின் தாயார் தனது மகளுக்கு பேறு காலத்தில் உதவ வரமுடியாமல் போய் விட்டது. நதியில் ஓடிய பெருவெள்ளம் காரணமாக, ஏழு நாட்கள் அடுத்த கரையில் தங்கிய போது, பெண்ணின் தாயாரால் வரமுடியாமல் போயிற்று. ஆனால் பெருமான், அந்த பெண்ணின் தாயார் வேடம் தாங்கி செட்டி பெண்ணுக்கு எந்த இடையூறும் இன்றி ஆண் குழந்தை பிறக்கும் வரை இருந்து உதவி செய்தார். வெள்ளம் வடிந்த பின்னர் மகளைக் காண்பதற்காக வந்த தாய், அங்கே தன்னை போலவே வேறு ஒருத்தி தன் மகளுக்கு உதவி செய்ததை கண்டு வியந்தாள். சிவன் தாய் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் காட்சி அளிக்கவே நடந்த அதிசயத்தை இருவரும் உணர்ந்தனர். செவ்வந்தி நாதர் என்று அழைக்கப்பட்ட இறைவன் அன்று முதல் தாயுமானவர் என்று அழைக்கப்பட்டார். மகப்பேறு காலத்து மகளிரின் இல்லத்தில் இருக்கும் எவரேனும் இந்த தலத்தின் மீது அருளப்பட்ட பதிகங்களை முறையாக ஓதி வந்தால், இயல்பான முறையில் பிரசவம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

செவ்வந்திநாதர் என்று இந்த தலத்து இறைவன் அழைக்கப்படும் காரணத்தை நாம் இப்போது காண்போம். சாரமாமுனிவர் ஒரு அழகான நந்தவனம் அமைத்து அதில் செவ்வந்தி மலர்களும் மற்ற மலர்களும் வளர்த்து நாள்தோறும் அந்த மலர்களை மலைக் கோட்டையில் உள்ள இறைவனுக்கு படைத்து வந்தார். இந்த தலத்து இறைவனை அப்போது மலைக்கொழுந்து அடிகள் என்று அழைத்து வந்தனர். செவ்வந்தி மலர்களின் அழகில் மனதை பறிகொடுத்த சோழ அரசி ஒருத்தி, அந்த மலரை தனக்கு தருமாறு கேட்க சாரமாமுனிவர் மறுத்துவிட்டார். பிராந்தகன் எனும் மன்னனின் சேவகன் முனிவர் அறியாமல், இந்த மலர்களை திருடி அரசிக்கு அளித்து வந்தான். மலர்கள் திருடு போவதை அறிந்த முனிவர் காரணத்தை கண்டுபிடித்தபின் ஒன்றும் செய்யமுடியாமல் திண்டாடினார். அரசி இந்த திருட்டுக்கு உடைந்தையாக இருந்ததால் அரசனிடம் முறையிட்டால் பயன் ஏதும் இருக்காது என்று கருதி இறைவனாகிய தாயுமானவரிடம் முறையிட்டார். கோபம் உற்ற இறைவன் தனது கண் திறந்து உறையூர் திசையை நோக்க மண் மாரி பொழிந்து ஊர் மொத்தம் புதையுண்டது என்று செவ்வந்தி புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் லிங்கம் கிழக்கு திசையை பார்த்து இருந்ததாகவும், இதற்கு பின்னர் தான் மேற்கு திசை நோக்கி லிங்கம் இருப்பதாகவும் கூறுவர். சன்னதிக்கு பின்புறம் கொடிமரமும் பிரதான வாசலும் அமைந்துள்ள தன்மை, இந்த செய்திக்கு ஆதாரமாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செவ்வந்தி நாதர் என்று இறைவன் அழைக்கப்படலானார். மலையே சிவனாக கருதப்படுவதால் நந்தி அடிவாரத்தில் உள்ளது.

தாயுமானவர் கோயிலுக்கு செல்லும் வழியில் மகேந்திர வர்ம பல்லவன் அமைத்த குடைவரை கோயில் ஒன்று உள்ளது. இந்த குடவரையில் கங்காதரர் உருவச் சிலை புடைச் சிற்பமாக காணப்படும். லளிதாங்குர பல்லவேச்வர க்ரகம் என்ற பெயர் கொண்ட குடவரை இது. லளிதாங்குரன் என்பது மகேந்திர வர்மனின் பெயர்களில் ஒன்று. கம்பீரமான தோற்றத்துடன் சிவபிரான் கங்கையை சடையில் அடக்கிக் கொண்டு நிற்க, அவரை தொழும் தேவர்களையும், உமை அம்மையையும் அருகில் காணலாம். கங்கை நதி சிறு ஆறுகளாக சடையிலிருந்து விடுபடுவதையும் காணலாம். இந்த சிற்பம் கலை நயம் வாய்ந்த ஒன்றாகும். இந்த குடவரையில் வடமொழியிலும் தமிழிலும் சுவர் முழுக்க கல்வெட்டுகள் உள்ளன. தமிழில் உள்ள கல்வெட்டுக்களில் அந்தாதி வகையில் அமைந்த 104 செய்யுள்கள் அடங்கும். அப்பர் பிரானின் வாழ்க்கையில் நடந்த அதிசயங்களைக் கண்ட வர்ம பல்லவன், சிவனாக மாறிய பின்னர் எழுப்பிய குடவரைக் கோயில்.

உமை அம்மை, பிரமன், இந்திரன், சடாயு, அகத்திய முனி, விபீஷணன், அர்ஜுனன், இராமர், அனுமன், சப்த ரிஷிகள், திரிசிரன், சாரமாமுனிவர், சேக்கிழார், மௌனகுரு, தாயுமானவர், செட்டிப் பெண் ரத்னாவதி, ஆகியோர் வழிபட்ட தலம். அம்மன் சன்னதியின் சுற்றுச் சுவர்களில் சௌந்தர்யலஹரி பாடல்கள் (முதல் 41 பாடல்கள் மட்டுமே) வடமொழியில் செதுக்கப் பட்டுள்ளன. தாயுமானவர் கோயிலில் விசாலமான முன் மண்டபம் உள்ளது. உயரமான வரிசையில் அறுபத்து மூவர் சிலைகளும் வாயில் முகப்பில் கம்பத்தடி விநாயகர், ஆறுமுகர் சன்னதிகள் உள்ளன. உள்ளே அறுபத்து மூவர் உற்சவ சிலைகளும் செவ்வந்தி விநாயகரும் காட்சி தருகின்றனர். அம்பாள் சன்னதிக்கு மேல் உள்ள கட்டுமானத்தில் தான் இறைவன் சன்னதி உள்ளது. மூலவர் கம்பீரமாக காட்சி தரும் பருத்த திருமேனி, மேற்கு பார்த்த சன்னதி. சுயம்பு உருவம். தென்முகக் கடவுளின் சன்னதியில் எட்டு முனிவர்களை நாம் காணலாம். சனகாதி முனிவர்கள், சிவயோக மாமுனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் திருமூலர் என்று கூறுவார்கள்.

சாதாரணமாக வெவ்வேறு திசைகளை நோக்கி இருக்கும் நவகிரகங்கள் இந்த கோயிலில் அனைத்து கிரகங்களும் சூரியனைப் பார்த்து இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளன. சூரியனை அவரது மனைவி உஷா தேவியுடன் காணலாம். பிரமன் இரு மனைவியருடன் இருப்பதையும் காணலாம் சித்திர மண்டபத்தில் ஒன்பது வளையங்கள் கொண்ட கல்லால் ஆன சங்கிலி ஒன்றை காணலாம்.

பாடல் 1:

நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு

ஒன்று உடையானை உமை ஒரு பாகம் உடையானைச்

சென்று அடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்

குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே

விளக்கம்:

கோயிலை சார்ந்த குளங்கள் நன்றுடையான், தீயதிலான் என்று பெயர். இந்த பெயர்களை உள்ளடக்கி சம்பந்தர் பதிகத்தின் முதல் பாடலில் பாடியுள்ளார். நன்றுடையான், தீயதில்லான் என்ற குளங்கள் தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்திற்கு பின்னர் தோன்றியவை என்பர். அனைத்து வேதங்களும். இறைவனை முக்கியமான இரண்டு குணங்கள் உடையவனாக சித்தரிக்கின்றன. முதல் குணம், வரம்பிலா இன்ப வடிவினனாக இருத்தல், இரண்டாவது இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கி இருத்தல். அதாவது துன்பங்களுக்கு காரணமான மலங்கள் நீங்கி இருக்கும் நிலை. பாசம் என்று தானே மலங்களை திருமூலர் தனது பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த இரண்டு குணங்களும், நன்றுடையான், தீயதில்லான் என்ற தொடர்களால் குறிக்கப்படுகின்றன.

இயல்பாகவே செல்வம் உடையவன் சிவபிரான் என்பதால் செல்வத்தைத் தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லாதததால் சென்று அடையாத திரு உடையான் என்று சிவபிரான் இந்த பதிகத்தில் குறிக்கப்படுகிறார். அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்த செல்வம் வீடுபேறு என்பதால், திரு என்ற சொல்லுக்கு வீடுபேறு என்று பொருள் கொண்டு, வீடுபேறு எனப்படும் செல்வம் உடையவன் சிவபிரான் என்றும் அவனது அருள் இருந்தால் தான் அந்தச் செல்வத்தை அடைய முடியும் என்றும் பொருள் கூறுவர். இறைவனை பகவன் என்று கூறுவார்கள். பகவன் என்றால் இயல்பாகவே ஆறு தன்மைகளை உடையவன் என்று பொருள். அவற்றுள் முதலாவதாக ஐஸ்வர்யம் (சொல்லப்படுகின்றது) வீர்யம், கீர்த்தி, செல்வம், ஞானம், வைராக்கியம் என்பன. எனவே ஐஸ்வர்யம் முதலான ஆறு குணங்களை ,இயல்பாகவே கொண்டுள்ள இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. சென்றடையாத=பெருமானின் அருளின்றி எவரும் செல்ல முடியாத முக்தி உலகம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

இந்த மலை தெற்கு திசையிலிருந்து பார்க்கும் போது ஒரு கோணத்தில் ரிஷபம் போலவும், ஒரு கோணத்தில் யானை (முதுகில் அலங்கரிக்கப்பட்ட ஆசனம் உடைய) போலவும் தோன்றும். இந்த தோற்றத்தை ரசித்துக் கொண்டு வந்த காரணம் தானோ, தனது முதல் பாடலில் யானை, யானை என்று சொற்கள் வருமாறு சம்பந்தர் பாடியுள்ளார். கிழக்கில் இருந்து பார்க்கும் போது விநாயகர் போலும், வடக்கில் இருந்து காணும் போது நடம் ஆடும் மயில் போலவும், மேற்கிலிருந்து பார்க்கும்போது நங்கூரம் பாய்ச்சப்பட்ட கப்பல் போலவும் தோன்றும். நரை வெள்ளேறு= மிகுதியாக வெண்மை நிறத்தை கொண்டுள்ள இடபம்; குளிர்தல்=உள்ளம் மகிழ்ச்சி அடைதல்;

பொழிப்புரை:

வரம்பிலாத இன்பம் உடையவனும் இயல்பாகவே ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்களிலிருந்து நீங்கியவனும், நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனும், தீய குணங்கள் ஏதும் இல்லாதவனும், மிகவும் அதிகமான வெண்மை நிறம் கொண்டுள்ள இடபத்தைத் தனது வாகனமாக உடையவனும், உமையன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் உடையவனும், அவனது அருளின்றி எவரும் செல்ல முடியாத வீடுபேறு எனப்படும் ஒப்பற்ற சொல்லப்படும் உயர்ந்த செல்வத்தை உடையவனும், சிராப்பள்ளி குன்றினை தனது இருப்பிடமாக உடையவனும் ஆகிய பெருமானின் திருநாமங்களை சொல்வதால் எனது உள்ளம் குளிர்கின்றது

பாடல் 2:

கைம்மகவு ஏந்திக் கடுவனோடு ஊடிக் கழை பாய்வான்

செம்முக மந்தி கருவறை ஏறும் சிராப்பள்ளி

வெம்முக வேழத்து ஈருரி போர்த்த விகிர்தா நீ

பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே

விளக்கம்:

இயற்கை காட்சிகளைக் காணும் சம்பந்தர் அந்த காட்சிகளின் காரணத்திற்கு, தமிழ்ப் பண்பாட்டின் அம்சத்தையும் ஏற்றி சுவை பட கூறுவதையும் நாம் இந்த பதிகத்தில் காணலாம். குட்டியுடன் மலை உச்சிக்குச் செல்லும் ஒரு தாய்க்குரங்கினைக் காணும் சம்பந்தருக்கு கணவனுடன் ஊடல் கொண்டு தனது குழந்தையையும் அழைத்துக்கொண்டு மலை உச்சிக்கு தற்கொலை செய்து கொள்ள செல்லும் பெண்ணின் நிலை நினைவுக்கு வருகின்றது. இரண்டையும் இணைத்து கூறும் சம்பந்தர் அந்த காலத்தில் இருந்த மகளிரின் பண்பாட்டையும் நமக்கு விளக்குகின்றார்.

இந்த பாடலில் பெருமான் பாம்புடன் பிறைச் சந்திரனை தனது சடையில் வைத்துள்ள தன்மை குறிப்பிடப்பட்டு, அந்த செய்கையினால் இறைவனுக்கு பழி ஏதும் இல்லை என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். பாம்பும் சந்திரனும், இயற்கையாகவே தங்களின் இடையே பகை கொண்டவை. எனினும் இவை இரண்டும் பெருமானின் சடையில் அடங்கி இருக்கும் தன்மைக்கு காரணம் இறைவனின் சன்னதியில் பகை உணர்ச்சிக்கு இடமில்லை என்பது தான். எனவே தான் இந்த செய்கையால் இறைவனுக்கு பழியேதும் இல்லை என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். மாறாக இந்த தன்மை இறைவனுக்கு மேலும் பெருமை சேர்க்கும் செயலாக அமைந்துள்ளது என்பதை உணர்த்துகின்றார். வலஞ்சுழி தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய குறுந்தொகை பாடல் (5.66.6) நமது நினைவுக்கு வருகின்றது. படமெடுத்து ஆடும் பாம்பும் பிறைச் சந்திரனும், தங்களது பகை உணர்ச்சியை மறந்து, அடங்கி இருக்கும் வண்ணம் இருவரையும் வாழ வைத்தவன் பெருமான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். அடியார்களுக்கு தான் அடிமை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தம்பிரான்=தலைவன்;

படம் கொள் பாம்பொடு பான்மதியம் சடை

அடங்க வாழ வல்லான் உம்பர் தம்பிரான்

மடந்தை பாகன் வலஞ்சுழியான் அடி

அடைந்தவர்க்கு அடிமைத் திறத்து ஆவனே

திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.99.2) அப்பர் பிரான், பெருமானை பாம்போடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் என்று கூறுகின்றார். அங்கம்=உயிரற்ற உடலின் பாகங்கள், எலும்பு, எலும்புக்கூடு. எலும்பு மாலை. உலகமெல்லாம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் ஊழிக் காலத்தின் போது பிரமனும், திருமாலும், தங்கள் கடமைகள் முடிந்தன என்று இறக்க, அவர்கள் இருவரது எலும்புக் கூடுகளை, அணிந்தவனாய் பெருமான் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல்

நிழலாய் ஆனேறு ஊர்ந்தாய்

பங்கம் ஒன்றில்லாத படர் சடையினாய் பாம்போடு திங்கள்

பகை தீர்த்து ஆண்டாய்

சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின்

நஞ்சுண்டு சாவா மூவாச்

சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன் திருப்புகலூர் மேவிய

தேவதேவே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.44.10), சந்திரன் அஞ்சாது இருக்கும் வண்ணம் பாம்புடன் சேர்த்துத் தனது சடையில் வைத்தவன் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சாடும்=சிதைக்கும், இருளை நீக்கி ஒளி கொடுக்கும் சந்திரனின் தன்மை: தேன் அஞ்சு=தேனுடன் கலந்த பஞ்சாமிர்தம்: பலவிதமான பழங்களைக் கலந்து இறைவனுக்கு அபிடேகம் செய்வது வழக்கம். அவ்வாறு கலக்கப்படும் பழங்களுடன் தேனையும் கலந்து அபிடேகம் செய்வது வழக்கம் இங்கே குறிப்பிடப் படுகின்றது. பெருமானுக்கு இளநீரால் அபிடேகம் நடைபெறுவதும் இங்கே குறிப்பிடப்படுகின்றது.

வானம் சாடும் மதி அரவத்தொடு

தான் அஞ்சாது உடன் வைத்த சடையிடைத்

தேன் அஞ்சு ஆடிய தெங்கிள நீரொடும்

ஆனஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே

சந்திரனும் பாம்பும் பல அம்சங்களிலும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. மேலும் அவைகளின் இடையே பகையும் உண்டு. சந்திரன் பலர் காண இரவில் ஆகாயத்தில் பவனி வருவது; பாம்போ மற்றவர் தன்னைக் காணாதவாறு புற்றில் பதுங்கி இருப்பது: உடலுக்கு வெம்மை தரும் கொடிய விடம் கொண்டது பாம்பு; உடல் வெப்பத்தைத் தணிக்கும் குளிர்ச்சியைத் தருவது சந்திரன்; காண்போர் அனைவரையும் நடுங்க வைப்பது பாம்பு, தன்னைக் காணும் அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைப்பது சந்திரன்: பெரும்பாலான பாம்புகள் கருமை நிறத்தில் காணப்படுகின்றன; சந்திரனோ பால் வெள்ளை நிறம். பாம்பின் உடலைக் கொண்டது இராகு கோள்; பாம்பின் தலையைக் கொண்டது கேது கோள்; இந்த இரண்டு கோள்களும் சூரியனையும் சந்திரனையும் பிடிக்கும் நாட்கள் கிரகணம் என்று அழைக்கப் படுகின்றது. எனவே சந்திரன், பாம்பினிடம் எப்போதும் பயத்துடன் இருப்பதாக கருதப் படுகின்றது. இந்த இரண்டு பகைவர்களும் ஒருவருக்கொருவர் அச்சம் கொள்ளாமல் இருப்பது அதிசயம் தானே. சர்வ வல்லமை பொருந்திய ஈசனின் சந்நிதானத்தில், பகைமை உணர்வுகளுக்கு இடம் ஏது? அதனால் தான், தங்களுக்கு இடையே உள்ள பகையை மறந்து, இருவரும் இறைவனின் சடையில் உலாவுகின்றார்கள் என்று இங்கே அப்பர் பிரான் தெரிவிக்கின்றார்.

ஒன்றுக்கொன்று பகைமை கொண்ட பாம்பினையும் சந்திரனையும், அவர்களுக்கு இடையே உள்ள பகையைத் தீர்த்து ஒரே இடத்தில் வைக்கும் திறமை சிவபெருமானைத் தவிர வேறு எவருக்கும் இல்லை என்பதை உணர்த்தும் வண்ணம் வாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.76.5) சுந்தரர் கூறுகின்றார். பரிசு என்றால் தன்மை என்று பொருள். பைதல்=இளைய; கூவிள மாலை=வில்வ மாலை: கைதை=தாழம் பூ

மைகொள் கண்டர் எண்தோளர் மலைமகள் உடன் உறை வாழ்க்கைக்

கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர்

கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள்

பைதல் வெண்பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே

இவ்வாறு பாம்பும் திங்களும் தங்களின் இடையே உள்ள பகையை மறந்து சடையில் இருக்கும் நிலைக்கு, தனது கற்பனையை ஏற்றி, காரணத்தை குறிப்பிடும் அப்பர் பிரானின் பாடல் திருவாரூர் பதிகத்து பாடலாகும் (4.53.2). நங்கை=பார்வதி தேவி: மஞ்ஞை=மயில்: வேழம்=யானை: ஆகம்=உடல்: நிமிர்தல் செய்யா=நிமிர்ந்து நில்லாமல் வளைந்து காணப்படும் பிறை கொண்ட சந்திரன்: உரிவை= தோலாடை: சடையில் சந்திரனைக் கண்ட நாகம், சந்திரனை விழுங்கக் கருதி மிகவும் வேகமாக வருகின்றது அந்த சமயத்தில், மயில் போன்ற சாயலை உடைய கங்கையை கண்டு, தன்னைக் கொத்தித் தின்ன மயில் வந்து விட்டதோ என்ற அச்சத்தில், தனது வேகத்தைத் தவிர்க்கின்றது. இதனிடையே, பாம்பினைக் கண்டு பயந்த, சந்திரன் பெருமான் அணிந்திருக்கும் யானைத் தோலின் அடியில் புகுந்து கொள்வதும், பாம்பு சென்று விட்டதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அடிக்கடி வெளியே எட்டிப் பார்கின்றது. அவ்வாறு எட்டிப் பார்க்கும் பொழுது, சந்திரன் முழுமையாகத் தெரியாமல், மேகத்தின் இடையே தோன்றும் மின்னல் கீற்று போன்று காணப்படுவதால், மின்னல் என்று நினைத்து, பாம்பு அடங்கி விடுகின்றது. வானத்தில் மின்னல் தோன்றினால், மயில்கள் மிகவும் மகிழ்ந்து நடமாடும். எனவே மின்னலும் இடியும், மயில்கள் வெளியே வந்து நடமாடும் செய்கைக்கு அறிகுறி என்று கருதி பாம்பு ஒதுங்கியது என்று உணர்த்துகின்றார். இயல்பாக பாம்பினைக் காணும் எவரும் அச்சம் கொள்வார்கள் அல்லவா. அது போன்று கங்கையும் அச்சம் கொண்டதாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்டு இருத்தல் தான், இவர்கள் மூவரும் அடங்கிக் கிடக்கும் நிலையை ஏற்படுத்தியது என்று நகைச்சுவையாக கூறினாலும், இறைவனின் சன்னதியில் பகைமை உணர்ச்சி நீங்கப் பெற்று, கங்கை எனும் நங்கை, பாம்பு, சந்திரன் ஆகியவை பகையின்றி சிவபெருமானின் சடையில் உலாவும் தன்மையை நமக்கு உணர்த்துகின்றார்

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று

வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து

பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சி

ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே

பெருமானின் சடையில் உள்ள நாகம், பிறைச் சந்திரனுக்கு தீங்கு ஏதும் செய்யாத நிலைக்கு ஞானசம்பந்தர் வேறொரு காரணத்தை சுவையாக கூறுவதை நாம் ஆலங்காடு தலத்து பதிகத்தின் பாடல் (1.45.5) ஒன்றில் காணலாம். ஒற்றைப் பிறைச் சந்திரன் நன்றாக வளர்ந்து முழு நிலவாக மாறவேண்டும் என்று எதிர்பார்த்து பாம்பு காத்திருக்கின்றது என்று கூறுகின்றார்.

ஈர்க்கும் புனல் சூடி இளவெண் திங்கள் முதிரவே

பார்க்கும் அரவம் பூண்டு ஆடி வேடம் பயின்றாரும்

கார்க்கொள் கொடி முல்லை குருந்தம் ஏறிக் கருந்தேன் மொய்த்து

ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

கைம்மகவு=தனது கையினில் குட்டிக் குரங்கு; கடுவன்=ஆண் குரங்கு; மந்தி=பெண் குரங்கு; கழை=மூங்கில் மரங்கள்; வரை=மலை; வெம்முகம்=கொடுமையான முகம்; வேழம்=யானை; விகிர்தன்=ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவன்; தனது குட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடும் பெண் குரங்கின் முகம் சிவந்த நிறத்துடன் காணப்படுவதாக ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். புலவர் நடராஜன் அவர்கள் தனது உரையில், சமீபத்தில் குழந்தையை ஈன்ற குரங்கின் முகம் சிகப்பாக இருக்கும் என்ற தன்மையை கவனித்த ஞானசம்பந்தர் அந்த உண்மையை இங்கே கூறுவதாக குறிப்பிடுகின்றார். விகிர்தன் என்று பெருமானை ஞானசம்பந்தர் குறிப்பிடுவதையும் நாம் உணரலாம். யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது அந்நாளில் நிலவி வந்த நம்பிக்கை. மான்தோல் புலித்தோல் வேங்கையின் தோல் போன்றவற்றை பலரும் வைத்திருப்பதை காணும் நாம், யானைத் தோல் வைத்திருக்கும் எவரையும் காண்பதில்லை. சங்க இலக்கியமாகிய சீவக சிந்தாமணி, இரத்தப் பசை உடைய யானையின் தோல் நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று உணர்த்துகின்றது. வாரணத்தின் ஈருரி போல் கோளிமிழ்ப்பு என்பது சிந்தாமணித் தொடர். தன்னைச் சாரும் பொருட்களின் தன்மையை மாற்றும் வல்லமை வாய்ந்த பெருமான், நஞ்சின் தன்மையையும் மாற்றியவர், வெறிகொண்ட மான் கன்றின் தன்மையை மாற்றிவர், யானைத் தோலின் தன்மையையும் மாற்றி தனது உடலுக்கு எந்தவிதமான கேடும் அடையாமல் இருந்ததால் அவரை, விகிர்தன் என்று இங்கே குறிப்பிட்டார் போலும். யானை பொதுவாக சாந்த குணம் உடைய விலங்கு. ஆனால் மதம் கொண்ட யானை வெறியுடன் ஓடி வரும் போது அந்த யானையின் முகத்தில் சாந்தம் அகன்று ஒருவிதமான கொலைவெறித்தன்மை வெளிப்படும் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

மேலும் பெருமான் போர்த்துக் கொண்ட யானையின் தோல் உலர்ந்த தோல் அல்ல; அந்த தோல் உலராத தசையையும், ஈரம் மிகுந்த இரத்தப் பசை உடையதாக விளங்கியது என்று குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம். இழிந்த புலால் மணம் வீசிய ஈரப்பசை மிகுந்த தோல் என்று ஆமாத்தூர் பதிகத்து பாடலில் (2.44.10) ஞானசம்பந்தர் கூறுகின்றார். நித்தல் என்ற சொல் எதுகை கருதி நிச்சல் என்று மருவியுள்ளது. பெய்தல்=இடுதல்; பின் சார்தல்=பின்னே வருதல். கொச்சை=இழிவான; பிச்சைப் பெருமானாக (பிக்ஷாடனர்) வேடம் தரித்து தாருகாவனம் சென்ற சிவபிரானின் பின்னர், முனிவர்களின் மனைவியர் தொடர்ந்து வந்த செய்தி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. புலால் நாற்றம் வீசிய தோல் என்று குறிப்பதன் மூலம் அப்போது தான் உரித்த தோல் என்று உணர்த்தப்பட்டுள்ளது. கோ=தலைமைப் பதவி; தலைமைப் பதவியை பெருமான் எப்போதும் நாடியதில்லை. ஆனால் அவரது தன்மையை உணர்ந்த ஏனையோர், அவரைத் தங்களது தலைவராக ஏற்றுக்கொள்ளவே, தலைமைப் பதவி அவரை நாடி வந்து சேர்ந்தது என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இத்தகைய தன்மை வாய்ந்த பெருமானை தினமும் நினையாதவர்களின் நெஞ்சம் நெஞ்சமாக கருதப்படாது என்றும் இந்த பாடலில் கூறப் படுகின்றது.

பிச்சை பிறர் பெய்யப் பின் சாரக் கோசாரக்

கொச்சை புலால் நாற ஈரிருவை போர்த்து உகந்தான்

அச்சம் தன் மாதேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்

நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே

அறையணிநல்லூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (2.77.7) யானையின் ஈரமாகிய உரிவை போர்த்தவர் என்று பெருமானை, ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வீரமாய வேதியர்=வீரமும் ஞானமும் ஒருங்கே பொருந்திய சிவபெருமான்; வேகமா=வேகத்துடன் எதிர்த்துச் செல்லும் வண்ணம் தாருக வனத்து முனிவர்களால் ஏவப்பட்ட மதயானை; களி=மதக்களிப்பில் திளைத்த யானை; அரிவை=பார்வதி தேவி; ஆரம்=மாலை; வாரம்=அன்பு;

வீரமாகிய வேதியர் வேகமா களி யானையின்

ஈரமாகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம்மிறை

ஆரமாகிய பாம்பினார் அண்ணலார் அறையணிநல்லூர்

வாரமாய் நினைப்பார்கள் தம் வல்வினை அவை மாயுமே

அரசிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.95.2) திருஞானசம்பந்தர், தன்னை எதிர்த்து வந்த யானையை உதைத்துக் கொண்டு, அதன் தோலுடன் இணைந்துள்ள வெண்புலால் தனது உடலுடன் கலக்கும் வண்ணம், தனது உடல் மீது போர்த்தவர் என்று பெருமானை குறிப்பிடுவதை நாம் உணரலாம். இளமையும் மதமும் உடையதாக விளங்கிய ஆண் யானை தன்னை எதிர்த்து வந்த போது, அதனை உதைத்துக் கொன்ற பின்னர்,. அதன் தோலை தனது உடல் மீது போர்த்துக் கொண்டதாக கூறுகின்றார்.

ஏறு பேணி அதேறி இளமதக் களிற்றினை எற்றி

வேறு செய்து அதன் உரிவை வெண்புலால் கலக்க மெய் போர்த்த

ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல்லொளி கொள்

ஒண்சுடராம்

ஆர் சேர் தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே

பயற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.32.1) பெருமான் உதிரம் ஆறாக ஓடும் வண்ணம், தன்னை எதிர்த்து வந்த யானையின் தோலினை உரித்து, தனது உடல் மீது போர்வையாக விரித்திட்டார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அலக்கம்=நடுக்கம்; எயிறு=பல்; உதிரம்=இரத்தம்;

உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட

விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கல்

நோக்கித்

தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலராகித் தாமும்

சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்றூரனாரே

இந்த பாடலில் யானையின் தோலை உரித்தபோது தேவி நடுங்கியதாக அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமான் யானையுடன் போருக்குச் சென்றது பற்றியோ, யானையின் தோலை கிழித்தது பற்றியோ உமையம்மை கவலை கொள்ளவில்லை; தான் கொன்ற யானையின் தோலைத் தனது உடலின் மீது பெருமான் போர்த்துக் கொண்டது பற்றியே உமையம்மை கவலை கொண்டதாக இந்த பாடலில் கூறப்படுகின்றது. யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று நம்பப் படுகின்றது. எனவே தான் யானையின் தோலைத் தனது உடலின் மீது போர்த்திக் கொண்ட பெருமானின் உடலுக்கு கேடு ஏதேனும் விளையுமோ என்று அன்னையின் நெஞ்சம் அச்சம் கொள்கின்றது. ஆனால் கொடிய நஞ்சே, பெருமானின் உடலுக்கு எந்த விதமான கேட்டினையும் விளைவிக்காத போது, யானையின் பசுந்தோல் எவ்வாறு பெருமானின் உடலுக்கு கேடு விளைவிக்க முடியும். எனவே தான், இந்த உண்மையினை மறந்து, தான் பெருமான் மீது கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அன்னை அச்சம் கொண்டது குறித்து பெருமான் ஏளனமாக, தனது பற்கள் தோன்ற சிரித்ததாகவும், அம்மையின் அச்சத்தினைக் கண்டு சிறிது நேரம் கழித்து தான் தரித்திருந்த யானைத் தோல் போர்வையை பெருமான் கழற்றினார் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். கைம்மகவு=கைக்குழந்தை;

பொழிப்புரை:

தனது கையினில் கைக்குழந்தையை ஏந்திக் கொண்டுள்ள பெண் குரங்கு தனது துணையுடன் கொண்ட ஊடலின் காரணமாக தனது உயிரினை மாய்த்துக்கொள்ளும் முடிவுடன் கீழே காணப்படும் மூங்கில் புதரின் மீது பாயும் நோக்கத்துடன் மிகவும் வேகமாக கரிய நிறம் கொண்ட மலையின் மீது ஏறிச்செல்லும் காட்சியினை உடைய சிராப்பள்ளி தலத்தினில் உறையும் சிவபெருமான், பொதுவாக சாந்த குணம் உணர்த்தும் தன்மையை விட்டு நீங்கி, கொலை வெறி கொண்ட கொடிய முகத்துடன், தன்னை கொல்வதற்காக ஓடி வந்த மதயானையின் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக் கொண்ட பெருமான், ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்ட தன்மையை உடையவர் ஆவார். படமெடுத்து ஆடும் பாம்பினைத் தனது சடையில் வைத்துள்ள அவர் அதனருகே பாம்பு தனது பகையாக கருதும் பிறைச்சந்திரனையும் வைத்துள்ள தன்மை அவருக்கு பழியை உண்டாக்கும் செயல் அல்ல; மாறாக அவருக்கு மேலும் பெருமை சேர்க்கின்றது.

பாடல் 3:

மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல்

செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி

சந்தம் மலர்கள் சடை மேல் உடையார் விடையூரும்

எந்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே

விளக்கம்:

மந்தம்=குறைந்த ஒலியுடன் இசைக்கப்படும்; முழவம்=மத்தளம் போன்ற இசைக்கருவி; வரை= மலை; மழலை=பொருள் விளங்காத வண்ணம் பேசும் குழந்தையின் இனிமையான சொற்கள்; சந்தம்=சந்தனம் போன்ற நறுமணம் வீசும் மலர்கள்; நிழல்=அடிவாரம்;

பொழிப்புரை:

குறைந்த ஒலியுடன் (கீழ் ஸ்தாயியில்) இசைக்கப்படும் மத்தளம், பொருள் விளங்காத மழலை போன்று இனிமையாக ஒலிக்கும் மலையின் அடிவாரத்தில் குளிர்ச்சி பொருந்தி செழிப்பாக வளர்ந்த வயல்களாலும் சுனைகளாலும் சூழப்பட்ட சிராப்பள்ளி தலத்தில் வீற்றிருக்கும் பெருமான், நறுமணம் நிறைந்த மலர்களைத் தனது சடையில் சூட்டிக் கொண்டவரும், இடபத்தைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டவரும் ஆகிய சிவபெருமானின் அடியார்களுக்கு துன்பம் என்பதே இல்லை.

பாடல் 4:

துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்திடை வைகிச்

சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக்

கறை மல்கு கண்டன் கனல் எரியாடும் கடவுள் எம்

பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே

விளக்கம்:

தும்பி=பெண் வண்டு; கறை=ஆலகால விடத்தினை தேக்கியதால், பெருமானின் கழுத்தில் ஏற்பட்ட கருமை நிறம் கொண்ட கறை; சிறை=இறக்கை; மல்கு=நிறைந்த, பொருந்திய; இவ்வாறு ஆண் வண்டுகளும் பெண் வண்டுகளும் சூழ்ந்து பாடும் நிலை, சிராப்பள்ளி நகரில் உள்ள ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக இந்த தலத்து இறைவனை வழிபடுவதற்கு செல்லும் தன்மையை உணர்த்துகின்றது என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. துறை=வழிகள்;

பொழிப்புரை:

பல வழிகள் உடைய மலைச் சாரலை உடைய மலையின் அடிவாரத்தில் உள்ள சுனைகளில் நிறைந்து பூத்திருக்கும் நீல மலர்களில் தங்கும் சிறகுகள் உடைய வண்டுகளும் தும்பிகளும் பாடும் ஒலிகள் நிறைந்த சிரப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் இறைவன், ஆலகால விடத்திலிருந்து தேவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன், அந்த விடத்தை உட்கொண்டு தனது கழுத்தில் தேக்கியதால் கருமையான கறையினை தனது கழுத்தினில் உடையவன் ஆவான்; அவன் பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் உலகப் பொருட்களும் அழிந்த பின்னர் ஊழித்தீயினில் நடமாடுபவன்; அவன் ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் தன்னிடம் சரணடைந்த சந்திரனைத் தனது சடையில் அணிந்து கொண்டு, அந்த சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்தவன். இத்தகைய ஆற்றலும் கருணையும் உடையவனே, எங்கள் பெருமைக்கு உரிய தலைவன் ஆவான்.

பாடல் 5:

கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்

சிலை வரையாகச் செற்றனர் ஏனும் சிராப்பள்ளித்

தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்

நில வரை நீலம் உண்டதும் வெள்ளை நிறமாமே

விளக்கம்:

இதே பதிகத்தின் இன்னொரு பாடலில், சம்பந்தர் சிவபிரானை தனக்கொரு தலைவர் இல்லாத தன்மையாளர் என்று கூறுகின்றார். இந்தப் பாடலில் சிவபிரான் செய்த மூன்று அருஞ்செயல்கள் கூறப்பட்டுள்ளன. திரிபுரங்களை எரித்தமை, மேரு மலையை வில்லாக வளைத்தமை, நஞ்சு உண்டமை. இந்த மூன்று செயல்களுமே வேறு எவரும் செய்யாத, செய்யமுடியாத செயல்களாகும். இத்தகைய அரிய செயல்களை செய்தவரை தலைவர் என்று அழைப்பது பொருத்தமான ஒன்று தானே. வரையாத என்றால் நீக்காத என்று பொருள்.

இந்த உலகத்தில் நாம், மற்றவர்களின் பெருமையை உணர்ந்து மதித்து அவர்கள் நம்மை விட பெருமையிலும், குணத்திலும், ஆற்றலிலும் பெரியவர்களாக இருந்தால் அவர்களை நாம் தலைவராக ஏற்றுக் கொள்கின்றோம். சிவபிரானை விட ஆற்றலில் மிக்கவர்களும், பெருமையில் சிறந்தவர்களும், குணவான்களும் எவரும் இல்லாத காரணத்தால், சிவபிரான் எவரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளும் நிலை காணப்படுவதில்லை. அதனால் தனக்குத் தலைவர் என்று ஒருவர் இல்லாத ஒப்பற்ற தலைவராக சிவபிரான் விளங்குகின்றார். இந்தக் கருத்து தான் தலைவர் அல்லாமை என்ற தொடரால் விளக்கப் பட்டுள்ளது. தனக்குத் தலைவராக எவரும் இல்லாத காரணத்தால், சிவபிரான் எவரையும் வணங்க வேண்டிய அவசியமும் இல்லை. எனவே அவரது கைகளுக்கு, சேர்ந்து இருப்பது என்ன என்பதே தெரியாது. அதனால் தான் மணிவாசகப் பெருமான் இவரை, சேர்ந்தறியாக் கையன் என்று நயமாக உரைக்கின்றார். (திருவம்மானை)

கையார் வளை சிலம்ப காதார் குழையாட

மையார் குழல் புரளத் தேன் பாய வண்டொலிப்பச்

செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்தறியாக்

கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியானை

ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானாய்

இதே கருத்து திருமூலரின் பாடலிலும் காணப்படுகின்றது. பிறங்க=விளங்க

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை என்னப்

பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி

என்னால் தொழப்படும் எம் இறை மற்று அவன்

தன்னால் தொழப்படுவார் இல்லை தானே

சிவபெருமானின் வீரச் செயல்களில் தலை சிறந்த வீரச் செயலாக விளங்குவது திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் மூன்று கோட்டைகளை எரித்தது தான். வேறு வேறு திசைகளில் எப்போதும் பறந்து கொண்டிருப்பதால், திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டினில் வருவது என்பது மிகவும் அரிதான செயல். மேலும் ஒரே நேர்க்கொட்டினில் வரும் தருணத்தில் தான் அந்த கோட்டைகள் அழிக்கப்பட முடியும் என்ற வரத்தைப் பெற்றிருந்ததால், அந்த அரக்கர்கள் ஒரே நேர்க்கோட்டினில் வாராத வண்ணம், வேறு வேறு திசையில் பறந்து கொண்டிருந்தனர். பெருமான் பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் அழித்தார் என்று பல திருமுறைப் பாடல்களும் புராணங்களும் குறிப்பிடுகின்றன. ஒரே கோட்டினில் வரும் தருணத்தில் தாங்கள் அழிவதற்கு வாய்ப்பு இருப்பதை நன்கு அறிந்த திரிபுரத்து அரக்கர்கள் அவ்வாறு ஒரே கோட்டினில் வருவதை தவிர்ப்பார்கள் அல்லவா. எனவே பெருமான் திரிபுரத்து கோட்டைகளை அழித்த போது அந்த கோட்டைகள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டினில் வந்த நிலை அரக்கர்களின் செயலால் அல்ல என்பது தெளிவாகின்றது. எனவே திரிபுரத்து அரக்கர்களை அழிக்கத் திருவுள்ளம் கொண்ட இறைவன், அந்த மூன்று கோட்டைகளையும் ஒரே நேர் கோட்டினில் வரும் வண்ணம் செய்த பின்னர், அந்த கோட்டைகளை ஒரே அம்பினால் எரியூட்டி அழித்தார் என்பது புலனாகின்றது. இந்த செய்தியையே ஞானசம்பந்தர், இணையாது இருந்த கோட்டைகள் இணைக்கப்பட்டன என்பதை உணர்த்தும் அன்பில் ஆலந்துறை பதிகத்தின் முதல் பாடலை (1.33.1) நாம் இங்கே காண்போம். பிணை=தங்களது துணையோடு சேர்ந்து இருக்கும்; மட=இளமை வாய்ந்த: கணை=அம்பு; நீடு எரி=நீண்டு எரியும்; மால்=திருமால்; வரை=மலை; இணையா=வேறு வேறு திசைகளில் எப்போதும் கொண்டிருப்பதால், எப்போதும் சேராமல் இருக்கும் நிலை.

கணை நீடு எரி மால் அரவம் வரை வில்லா

இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்

பிணை மாமயிலும் குயில் சேர் மட அன்னம்

அணையும் பொழில் அன்பில் ஆலந்துறையாரே

திருப்பூவணம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.64.02) திருஞானசம்பந்தர், மூன்று கோட்டைகளையும் ஒன்ற வைத்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மருவார்=பகைவர்கள்; உம்பர் பிரான்=தேவர்கள் தலைவன்; சாலி=ஒருவகை நெல்; ஆலை=கரும்பு; பாண்டிய மன்னன், அரசியார் மங்கையர்க்கரசி, குலச்சிறையார் ஆகியோருடன் பாண்டிநாட்டுத் தலங்கள் அனைத்தும் சென்ற, திருஞானசம்பந்தர், பாண்டிய மன்னர் குடிமக்களை பாதுகாத்த செய்தியை இங்கே குறிப்பிடுகின்றார் போலும்.

மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மாமலையான் மடந்தை

ஒருபால் பாகமாகச் செய்த உம்பர் பிரான் அவன் ஊர்

கருவார் சாலி ஆலை மல்கிக் கழல் மன்னர் காத்தளித்த

திருவால் மலிந்த சேடர் வாழும் தென் திருப் பூவணமே

நெடுங்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.52.07) திருஞானசம்பந்தர் மூன்றையும் ஒன்றாகக் கூட்டிய இறைவன் என்று குறிப்பிடுகின்றார். மூன்றையும் என்ற சொல், திருமால் அக்னி வாயு ஆகியவற்றை குறிப்பிடுகின்றது என்று பலரும் பொருள் கொண்டாலும், மூன்று என்ற சொல் திரிபுரத்து கோட்டைகள் என்று சொல்வதும் பொருத்தமாக உள்ளது. அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டதை கூறு கொண்டாய் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அனைவரும் சைவநெறியினை பின்பற்றிய தருணத்தில், மாறுபட்டு விளங்கிய திரிபுரத்து அரக்கர்களை மாறுகொண்டார் என்று உணர்த்துகின்றார். பெருமானுக்கு அபிடேகம் செய்த திருநீற்றினை அடியார்கள் மிகுந்த விருப்பத்துடன் அணிந்து கொள்வதும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது.

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றா கூட்டி ஓர் வெங்கணையால்

மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல்

ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த

நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

மேலும் ஒரே அம்பினால் மூன்று கோட்டைகளையும் துளைத்து எரித்தால் தான் கோட்டைகளை அழிக்க முடியும் என்பது திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்த வரம்; முதலில் தென்படும் கோட்டையை எரித்த அம்பு அங்கேயே தங்கி விட்டால், அடுத்த கோட்டையை அழிக்க முடியாது அல்லவா. எனவே தான் முதல் கோட்டையைத் துளைத்துச் சென்று இரண்டாவது கோட்டையை அடைந்து அந்த கோட்டையையும் துளைத்து எரித்து மூன்றாவது கோட்டையை அம்பு சென்று அடையும் வண்ணம் வல்லமை படைத்த அம்பினை எய்து மூன்று கோட்டைகளையும் எரிக்க வேண்டிய நிலை பெருமானுக்கு ஏற்பட்டது. எனவே தான் மூன்று கோட்டைகளையும் ஊடுருவிச் சென்று அழிக்கும் வல்லமை படைத்த அம்பினை தேர்ந்தெடுத்து பெருமான் அந்த மூன்று கோட்டைகளையும் அழித்தார் என்பதை திருஞானசம்பந்தர் வலம்புரம் தலத்து பதிகத்தின் முதல் பாடலில் (3.103.1) உணர்த்துகின்றார். சிலை=வில்; குனி=வளைத்த, மேரு மலை வில்லாக வளைக்கப்பட்ட நிலையினை குறிப்பிடுகின்றது. வெஞ்சிலை=கொடியவில்; துடி=உடுக்கை; மேதி=எருமைகள்; நீர்வளம் மிகுந்ததால் செழிப்பாக வளர்ந்து எருமைகளும் அழகாக காணப்பட்டன என்று கூறுகின்றார். மதில் என்றால் நகரத்திற்கு அரணாக விளங்கும் மதிற்சுவர் என்று பொருள். ஆனால் மூன்று கோட்டைகளும் ஒரே நேர்கொட்டினில் வரும் தருணத்தில் தான் இந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்பதால், ஒவ்வொரு கோட்டையும் மற்ற இரண்டு கோட்டைகளுக்கு வலிமை வாய்ந்த அரணாக திகழ்ந்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. இசைந்து=மனமொன்றி, கூடி; துதைந்து=பிரியாமல் எப்போதும் கூடியே இருத்தல்; வடிவு=அழகு; இடிபட=பேரொலி எழும் வண்ணம்; ஊடுருவ=கோட்டைகளை துளைத்துக் கொண்டு; ஊடுருவிச் சென்ற;

கொடியுடை மும்மதில் ஊடுருவக் குனி வெஞ்சிலை தாங்கி

இடி பட எய்த அமரர் பிரான் அடியார் இசைந்து ஏத்தத்

துடி இடையாளை ஒர் பாகமாகத் துதைந்தார் இடம் போலும்

வடிவுடை மேதி வயல் படியும் வலம்புர நன்னகரே

இத்தகைய வீரச் செயலை, வேறு எவரும் செய்ய முடியாத செயலை, செய்து முடித்த பெருமானைத் தவிர்த்து தலைவர் என்ற பதவிக்கு பொருத்தமானவர் வேறு எவரும் இல்லை அல்லவா. அவ்வாறு இருக்க, சிவபெருமானை தலைவராக ஏற்றுக்கொள்வதற்கு ஏன் தயங்குகின்றீர் என்று உலகத்தவரை பார்த்து ஞானசம்பந்தர் இந்த பாடல் மூலம் கேள்வி கேட்கின்றார். எவராலும் அழிக்க முடியாத மூன்று பறக்கும் கோட்டைகளையும் பெருமான் எரித்து அழித்த பின்னரும், அவரைத் தவிர்த்து வேறு ஒருவரை எவ்வாறு தலைவராக ஏற்றுக் கொள்ள முடியம் என்று சொன்ன ஞானசம்பந்தருக்கு ஒரு சந்தேகம் தோன்றியது போலும். சான்று காட்ட முடியாததால் சிலர், சிவபெருமானைத் தலைவராக ஏற்றுக் கொள்வதற்கு தயங்குகின்றனர் போலும் என்பதே அந்த சந்தேகம்.

அத்தகைய ஐயப்பாடு ஏதேனும் இருப்பின் அதனையும் நீக்கிவிடலாம் என்ற எண்ணத்துடன், பெருமான் நஞ்சுண்ட செய்தியை இங்கே குறிப்பிடுகின்றார். தான் உட்கொண்ட நஞ்சு தனது வயிற்றினில் சென்றால், ஊழிக்காலத்தில் ஒடுங்கும் உயிர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படலாம் என்பதால் அதனைத் தவிர்க்கும் வண்ணம், அந்த நஞ்சினை தனது கழுத்தினில் அடக்கியவர் சிவபெருமான். கொடிய ஆலகால விடம் என்பது தெரிந்த பின்னரும், தேவர்கள் அமுதம் பெறுவதற்காக, நஞ்சினைத் தானே ஏற்றுக்கொண்டவர் சிவபெருமான். இதனை விடவும் உயர்ந்த தியாகத்தினை வேறு எவரும் செய்யமுடியாது என்பதால் தான் தியாகராஜன் என்று பெருமானை அழைக்கின்றனர். அந்த நீல நிறம் உங்களது கண்களுக்கு தென்படவில்லையா, பெருமானின் கழுத்து வெள்ளை நிறமாக இருந்தால் தானே, நீங்கள் சிவபெருமானை தலைவராக ஏற்றுக்கொள்ள தயக்கம் கொள்ளவேண்டும்; அவரது கழுத்தினில் உள்ள கறை உங்களது கண்களுக்கு வெள்ளையாக தோன்றுகின்றதா என்று மிகுந்த கோபத்துடன், ஞானசம்பந்தர் கேள்வி கேட்பதை நாம் உணரலாம். வெளிறு என்றால் வெறும் உரை, பொய்யுரை என்று பொருள். வெள்ளை நிறத்தையும் வெளிறு என்று சொல்வது உண்டு. சிவபிரானை தலைவராக ஏற்றுக்கொள்ளதவர்களை நோக்கி கடை இரண்டு வரிகள் அமைக்கப்பட்டுள்ளன. கழுத்தில் உள்ள நீல நிறம் ஆலகால விடத்தை உண்டு அனைவரையும் காத்ததற்கு அடையாளமாக உள்ளதை கண்ட பின்னரும், சிவபிரானைத் தலைவராக ஏற்றுக்கொள்ள தயக்கம் ஏன் என்று கேட்கின்றார். நீல நிறம் வெளிறாக, வெள்ளை நிறமாக தோன்றவில்லையே என்று இந்தப் பாடலை முடிக்கின்றார்.

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.33.6) அப்பர் பிரான் ஆலகால விடத்தினை அமுதமாக கருதி உட்கொண்ட தெய்வம் வேறேதும் உள்ளதோ என்று கேள்வி கேட்கின்றார். பாற்கடலிலிருந்து ஆலகால விடமும் பொங்கி எழுந்தது, பின்னர் அமுதமும் பொங்கி எழுந்தது. அமுதத்தை தேவர்களின் பங்காக வைத்துவிட்டு தனது பங்காக நஞ்சினை எடுத்துக் கொண்ட செயல், நயமாக இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஆதி அந்தம் இல்லாத இறைவனுக்கு, தனது வாழ்நாளை நீட்டிக் கொள்வதற்கு அமுதம் தேவையில்லை; மேலும் பல ஊழிகள் தாண்டி இருப்பவனை நஞ்சு தான் என்ன செய்யமுடியும். தொங்கி=துவங்கி; தங்கி=மனம் ஒன்றுபட்டு;

பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினைப்

பங்கி உண்டதோர் தெய்வம் உண்டோ சொலாய்

தொங்கி நீ என்றும் சோற்றுத் துறையர்க்கே

தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே

தனது பல பாடல்களில், சமணர்கள் மற்றும் புத்தர்களை குறிப்பிடும் ஞானசம்பந்தர், அவரது உரைகளால் மதி மயங்கி திசை மாறிப் போகாமல் இருப்பீர்களாக என்றும், அவர்களது வீணான பழிச் சொற்களை புறக்கணிப்பீர்களாக என்றும் உலகத்தவர்க்கு அறிவுரை கூறுகின்றாரே தவிர, எங்கும் சமணர்களை நேரிடையாக கேள்வி கேட்கவில்லை என்பதை நாம் அவரது பாடல்களை ஆராய்ந்து பார்த்தால் உணரலாம். திருச்சிராப்பள்ளி தலம் வந்த சம்பந்தர், பிள்ளையார் கோயிலுக்கு பின்புறத்தில் உள்ள சமணர்களின் படுக்கைகளை கண்டார் போலும், அதனால் தான் அவர்களை நேரிடையாக கேள்வி கேட்கும் வண்ணம் இந்த பாடலை இயற்றினாரோ என்று தோன்றுகின்றது.

நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறமாமே என்ற தொடர் பழமொழி நானூறு நூலில் உள்ள ஒரு பாடலின் கருத்தை ஒட்டி (பாடல் எண்: 94) அமைந்துள்ளதாக தருமையாதீனக் குறிப்பு உணர்த்துகின்றது. நீல நிறத்திற்கு உரிய இயல்பு இங்கே குறிக்கப்படுகின்றது. நீலநிற சாயம் ஊட்டப்பட்ட துணியினை மீண்டும் வெண்மை நிறத்திற்கு மாற்ற இயலாது. அதைப் போன்று இறைவனைத் தலைவர் என்று ஏற்றுக்கொள்ளாத மூர்க்கர்களின் கொள்கையையும் மாற்ற முடியாது என்று ஞானசம்பந்தர் உணர்த்துவதாக விளக்கம் அளிக்கப்படுகின்றது. மிகவும் அருமையான விளக்கம். பழமொழி நானூறு பாடலை நாம் இப்போது காண்போம். ஆராய்ந்து வைத்த கருத்தும் உண்மையை அறியும் அறிவும் அறியாத மூர்க்கர்களுக்கு ஒரு பொருளையும் சொல்லாது விடுப்பீர்களாக. நீலம் உண்டது பிறிதாக, வேறு வண்ணம் உடையதாக மாறது. நீல நிறத்தை உண்ட பொருள் வேறொரு நிறத்தை காட்டுதல் இயலாது. அது போல் மூர்க்கன் தான் மேற்கொண்டதனையே மனதின் கண் கொண்டு, அதனை விடாமல் பற்றிக்கொண்டு இருப்பான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத

மூர்க்கர்க்கு உறுதி மொழியற்க — மூர்க்கன் தான்

கொண்டதே கொண்டு விடான் ஆகும் ஆகாதே

உண்டது நீலம் பிறிது

பொழிப்புரை:

தாங்கள் செய்து வந்த கொலைத் தொழிலை நீக்காது தொடர்ந்து செய்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், எங்கெங்கோ பறந்து கொண்டிருந்த கோட்டைகளை ஒன்றாக ஒரே நேர்க்கொட்டினில் வரும் வண்ணம் இணைத்து, பெரிய மேரு மலையினை வில்லாக வளைத்து அந்த வில்லினில் பொருத்தப்பட்ட அம்பின் மூலம், மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தவர் சிவபெருமான். செயற்கரிய இந்த செயலைச் செய்தவரும் சிராப்பள்ளித் தலத்தினில் உறைபவரும் ஆகிய சிவபெருமானை தலைவராக ஏற்றுக் கொள்ள ஏன் தயங்குகின்றீர்கள். தலைவராக விளங்கும் சிவபெருமானை, தலைவரல்லர் தலைவரல்லர் என்று நாளும் சொல்லிக் கொண்டு திரிகின்றீர்களே, மற்றவரை காப்பாற்றும் நோக்கத்துடன் தன்னையே தியாகம் செய்து கொண்டு நிலமெங்கும் பரவி நின்ற ஆலகால விடத்தை உட்கொண்டு தேக்கியதால் தனது கழுத்தினில் நீல நிறத்தில் கறை உடையவராக காட்சி அளிக்கும் பெருமானின் கழுத்தினில் உள்ள கறை உங்களுக்கு வெள்ளை நிறமாகத் தோன்றுகின்றதா, விடை கூறுவீர்களாக. அவரது கழுத்து வெள்ளை நிறமன்றி நீலமாக தோற்றம் அளிப்பதால், உங்களது உரை வெற்றுரை என்பதை உணர்வீர்களாக.

பாடல் 6:

வெய்ய தண் சாரல் விரிநிற வேங்கைத் தண் போது

செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்

தையலார் பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலையோட்டில்

ஐயமும் கொள்வர் ஆர் இவர் செய்கை அறிவாரே

விளக்கம்:

இந்த பாடலில் குறிப்பிட்டுள்ள செயல்கள் மூன்றும், (தையலை தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றல், நஞ்சு உண்ணுதல், தலை ஓட்டில் பிச்சை எடுத்தல்) சாதாரணமாக எவரும் செய்யாத செயல்கள் என்பதால் சிவபிரானின் செய்கையை நம்மால் அறியமுடியாது என்று சம்பந்தர் கூறுகின்றார். இங்கே குறிப்பிட்டுள்ள செயல்கள் ஒன்றுக்கொன்று ஒவ்வாத செயல்களாக இருப்பதால் அவரது செய்கையின் தன்மையை எவரும் அறிய முடியாது என்று கூறுகின்றார். எனினும் இந்த செய்கைகளுக்கு விளக்கம் பல தேவாரப் பாடல்களில் அருளப் பட்டுளள்ளது.

பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டமை, பிராட்டி வேறு தான் வேறு அல்ல இருவரும் ஒருவரே என்பதை உலகுக்கு உணர்த்தவே. நஞ்சனை உட்கொண்டதாக பல பாடல்களில் கூறப்பட்டாலும், அவ்வாறு கூறுவது ஒரு உபசார வழக்கே தவிர, பெருமானை நெஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கிக் கொண்டார் என்பதை நாம் அறிவோம். மேலும் இந்த செய்கை பாற்கடலிலிருந்து பொங்கி வந்த ஆலகால் நஞ்சினால் உலகம் அழிந்து விடாமல் காக்கும் பொருட்டு, நஞ்சு பெருமானால் அருந்தப் பட்டது என்பதும் பல பாடல்களில் கூறப் படுகின்றது. அன்று ஆலகால விடத்தினை பெருமான் உட்கொள்ளாமல் இருந்திருந்தால் அனைத்து உலகங்களும் அழிந்து போயிருக்கும் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் (4.14.1) இங்கே சிந்திக்கத் தக்கது. பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட விடத்தால் தேவர்கள் எரிந்து போகாமல் உயிருடன் இருப்பதற்காக, தான் நஞ்சினை உண்டு அருள் புரிந்த சிவபிரான் என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வெண்மையாக இருந்த திருமாலின் நிறம் கருநிறமாக மாறியதே ஆலகால விடத்தின் தாக்கத்தினால் தான் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்பர் பிரானும் திருமாலின் நிறத்தை அழித்த விடம் என்று இங்கே கூறுகின்றார். பருவரை=மந்தரமலை: பிதிகாரம்=பிரதிகாரம் எனும் வடமொழியின் திரிபு, கழுவாய்: அரவம் கைவிட்ட இமையோர்=கடையப்பட்டதால் ஏற்பட்ட துன்பம் தாளாத வாசுகி பாம்பு விடத்தை வெளியிட, அதனால் பயந்து பாம்பினைப் பிடித்துக் கொண்டிருந்த கைகளை எடுத்து ஓடிய வானவர்கள்: பாம்பின் வாலினைத் தங்கள் கைகளால் பிடித்துக் கொண்டு தாங்கள் கடைந்து கொண்டிருந்ததை விட்டுவிட்டு ஓடிய வானவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். எரியாமல்=தேவர்கள் கடுமையான விடத்தால் எரிந்து போகாமல் தடுத்த: நெடுமால் நிறத்தை, திருமாலின் நிறம் என்றும் திருமாலின் மேனி என்றும் இருவிதமாக பொருள் கொண்டு விளக்கம் கூறுவார்கள். கரிய நிறம் கொண்ட திருமாலின் நிறத்தையும் தோற்கடிக்கும் நிலையில் மிகவும் கருமையான நிறம் கொண்ட ஆலகால விடம் என்றும், திருமாலின் மேனி நிறத்தை அழிக்கும் வண்ணம் பொங்கி எழுந்த விடம் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். ஆகாயத்தையும் சுட்டெரிப்பது போன்று மிகவும் வேகமாக அனைத்து இடங்களிலும் பரவிய விடம் என்றும் இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார்.

பருவரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர்

இரிந்து பயமாய்த்

திருநெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து

விசை போய்ப்

பெருகிட மற்று இதற்கோர் பிதிகாரம் ஒன்றை அருளாய்

பிரானே எனலும்

அருள் கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர்

அண்டர் அரசே

உலகம் அழிந்துவிடாமல் உறுதியான நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக சிவபெருமான் நஞ்சினை உட்கொண்டார் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் (6.45.1), திருவொற்றியூர் தலத்தின் மீது அருளப்பட்டது. பெருமானையே எப்போதும் நினைத்திருந்த அப்பர் பிரான் கனவினில் பெருமானின் நடனக் காட்சியைக் கண்டார் போலும் மிகவும் வேகமாக நடனம் ஆடிய பெருமானின் நடனக் காட்சி, அவருக்கு எண்ணற்ற தோள்கள் உடையவராக பெருமானின் தோற்றம் இருந்ததாக உணர்த்தியது போலும். சர்வ வியாபியாக பெருமான், தனது கைகள் அண்டத்தின் திசைகளை தொடுமாறு ஆடிய காட்சியை இங்கே, பெருமான் பால் காதல் கொண்ட பெண்ணின் வாய்மொழியாக இங்கே விவரிக்கின்றார்.

வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மதமத்தம் சேர் சடை

மேல் மதியம் சூடி

திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடமாடிச்

சிவலோகனார்

உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய

ஒளி வண்ணனார்

கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என் கடும் பிணியும் சுடும்

தொழிலும் கைவிட்டனவே

கடும் பிணி=பிரிவாற்றாமையால் ஏற்பட்ட கொடிய நோய்; சுடும் தொழில்=காதலனைப் பிரிந்த ஏக்கத்தில், பொதுவாக குளிர்ச்சி ஊட்டும் நிலவு போன்ற பொருட்களும் சுடும் தன்மை உடைய பொருட்களாக தோன்றும் தன்மை. மேலே குறிப்பிட்ட பாடலில் கடும் பிணி. சுடும் தொழில் என்ற தொடர்களுக்கு, அகத்துறை வழியாக பொருள் காணாமல், வேறு விதத்தில் பொருத்தமாக பொருள் காண்பதையும் நாம் இங்கே சிந்திக்கலாம். கடும் பிணி=பிறவிப் பிணி; சுடும் தொழில்=இறந்த பின்னர் உடலை சுடுகாட்டில் வைத்து எரிக்கும் நிலை. இறைவனை, தனது கனவில் கண்ட ஆன்மா, தான் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று வாழ்வினில் உய்வினை அடைந்ததையும், அதனால் பிறவிப்பிணி என்கிற கடும் நோய் தீர்ந்ததையும், இனிமேல் எடுக்கவிருந்த பிறவிகளில் இணையும் உடல்கள் இறந்து பட்ட பின்னர் சுடுகாட்டில் இடப்பட்டு எரிக்கப்படும் நிலையிலிருந்து விடுதலை அடைந்ததையும், மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றது.

பொங்கி வந்த ஆலகால விடம் உலகத்தவரை அழிக்காமல் காப்பாற்றிய பெருமான், அந்த விடத்தின் தன்மையால் எவர்க்கும் எப்போதும் ஊறு நேராத வண்ணம் தனது கழுத்தினில் ஒளித்து வைத்து என்றென்றும் உயிர்களை காக்கும் தன்மை உடையவனாக, ஒரு தலைவனுக்கு உரிய பண்புடன் பெருமான் இருப்பதை உணர்த்தும் பாடல் கண்டியூர் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடலாகும் (4.93.10) மண்டி=நெருங்கி சென்று; தண்டி=சுற்றாக சுற்றி; நண்ண=அருகில் வந்து, வானவன்= தலைவன்.

மண்டி மலையை எடுத்து மத்தாக்கி அவ்வாசுகியைத்

தண்டி அமரர் கடைந்த கடல்விடம் கண்டருளி

உண்ட பிரான் நஞ்சொளித்த பிரான் அஞ்சியோடி நண்ணக்

கண்ட பிரான் அல்லனோ கண்டியூர் அண்ட வானவனே

அதே போன்று பெருமான் பிச்சை ஏற்பது, தனது உணவுத் தேவைக்காக அல்ல என்பதையும் பக்குவப்பட ஆன்மாக்கள் தங்களது மலங்களை பெருமான் ஏற்றுள்ளப் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு கழித்துக் கொண்டு தாங்கள் முக்தியுலகம் செல்வதற்கு தகுந்தவர்களாக தங்களை மாற்றிக் கொள்ளும் பொருட்டு என்பதும் பல திருமுறை பாடல்களில் கூறப்படுகின்றது. பல இல்லங்கள் சென்று ஐயம் ஏற்ற பெருமான், அந்த பிச்சையை எப்போதும் உண்டதில்லை என்றும், பெருமான் உண்டது நஞ்சு தான் என்றும் நகைச்சுவையாக அப்பர் பிரான் கூறும் பாடல் (4.65.5), திருவாலவாய் (மதுரை) தலத்தின் மீது அருளியது. தனது வாழ்க்கையின் முற்பகுதியில் சிவபிரானை நினைக்காது, அப்பர் பிரான், தான் சமண சமயம் சார்ந்திருந்ததை எண்ணி வருத்தம் தெரிவிக்கும் பாடல் இது. பளகு என்றால் குற்றம் என்று பொருள். சமண சமயம் சார்ந்திருந்ததை குற்றம் என்று ஒப்புக்கொண்டு அப்பர் பிரான் இறைஞ்சுகின்றார். அவ்வாறு இருந்ததற்காக சிவபெருமான் தன்னை புறக்கணித்து விட்டு அருள் செய்யமால் இருக்கக் கூடாது என்ற வேண்டுகோள் தொனிக்கும் பாடல்.

வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும்

உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப்

பண்டுனை நினைய மாட்டாப் பளகனேன் உளமது ஆர

அண்டனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

மேற்கண்ட பாடலில் சிவபெருமான் பலி ஏற்றார் ஆனால் அந்த உணவினை அவர் உட்கொள்ளவில்லை என்ற பொருளில், பலி கொண்டு என்றும் உண்டதுமில்லை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தான், எனது என்ற அகந்தையைத் தான் அவர் பிச்சைப் பொருளாக ஏற்கின்றார் என்று அப்பர் பிரான் கூறும் பாடல் (4.53.6) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

வானகம் விளங்க மல்கும் வளம்கெழு மதியம் சூடித்

தானகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்

ஊனகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளிகொள் நஞ்சம்

ஆனகத்து அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே

பொதுவாக பிச்சை ஏற்பவர் பெறும் பயன், பிச்சை இடுவோர் பெறும் பயனை விட அதிகமாகவே இருக்கும். ஆனால் சிவபெருமான் பிச்சை ஏற்பது, தான் பயன் அடைவதற்காக அல்ல. அவருக்கு பிச்சை இடுவோர்கள் தங்களது அகங்காரம் (மலங்கள்) அழியப் பெற்று நலம் பெறுவதற்குத் தான். இந்த உண்மை அப்பர் பெருமானால் இந்த பாடலில் விளக்கப்படுகின்றது. பிச்சை ஏற்கும் பெருமான் உண்பது நஞ்சு என்று பாடலின் மூன்றாவது அடியில் கூறும் அப்பர் பிரான், சிவபெருமான் பிச்சை ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல என்பதையும் தெளிவு படுத்துவதை நாம் இங்கே காணலாம். உயிர்கள் உய்வதற்காகத் தான் சிவபெருமான் பிச்சை எடுக்கின்றார் என்ற கருத்து குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தில் சேக்கிழாரால் கூறப்படுகின்றது.

ஊர்தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே

பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்

சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்

ஆர் தரு காதல் கூற அடியவர்க்கு உதவும் நாளில்

வெய்ய=விரும்பத்தக்க; தண்=குளிர்ந்த; நிறம்=அழகு; போது=மலர்கள்; ஐயம்=பிச்சை;

பொழிப்புரை:

அனைவரும் விரும்பும் குளிர்ச்சியை உடைய சிராப்பள்ளி மலைச் சாரலில், விரிகின்ற அழகினை உடைய வேங்கை மரத்தின் குளிர்ந்த மலர்கள், செம்பொன்னின் நிறத்தினை உடையதாக நிலத்தில் சிந்தி இருக்கும் தன்மை, நிலமெங்கும் பொன் உதிர்ந்தது போன்ற காட்சியை தருகின்றது. இத்தகைய இயற்கை வளம் கொண்ட சிராப்பள்ளி தலத்தினில் பொருந்தி உறையும் செல்வராகிய சிவபெருமான், உமை அன்னையைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டவராக மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார். அவர் பாற்கடலிலிருந்து பொங்கி எழுகின்ற நஞ்சினையும் உட்கொள்வார், மேலும் பிரமனின் தலையோட்டினைத் தனது கையில் ஏந்திக்கொண்டு ஊரூராக திரிந்து பிச்சையும் ஏற்றுக்கொள்வார். அவரது செய்கைகளின் தன்மையை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள இயலாது.

பாடல் 7:

வேயுயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்

சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார்

பேய் உயர் கொள்ளி கை விளக்காகப் பெருமானார்

தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே

விளக்கம்:

தாயும் ஆனவரான பெருமான் பிறர் அஞ்சத்தக்க சூழ்நிலையில் நடனம் ஆடலாமா என்று சம்பந்தர் இறைவனை நோக்கி உரிமையுடன் கேட்பதை காணலாம். ஊகம் என்றால் குரங்கு என்று பொருள். வேய்=மூங்கில்; சேய்=தொலைவில், மேய=விருப்பத்துடன் பொருந்தி; இந்த பாடலில் சர்வ சங்காரக் கூத்து. பொதுவாக உமை காண நடம் ஆடுவதாகவும், உமை பாட நடமாடுவதாகவும் அருளாளர்கள் குறிப்பிடுவார்கள். ஆனால் இந்த பாடலில் உமை அன்னை குறிப்பிடப் படவில்லை. உமை அன்னையும் அப்பனுடன் ஒடுங்கியுள்ள நிலை. அனைத்து உயிர்களையும் தன்னுள் ஒடுக்கிய பெருமான், உயிர்களுக்கு தேவையான இளைப்பாற்றலும் அளித்த பின்னர், இறைவன் மீண்டும் உலகினைப் படைத்து, தன்னுள் ஒடுங்கியிருக்கும் உயிர்கள் தங்களது வினைகளை கழித்துக் கொள்ள ஒரு வாய்ப்பினை அளிக்கத் திருவுள்ளம் கொள்கின்றான். அந்த எண்ணத்துடன் ஆடும் கூத்தின் நோக்கம், மீண்டும் உலகினை தோற்றுவிப்பது தானே. உலகங்களை உளவாக்கி ஈடேற்றும் திருவுள்ளக் குறிப்பு என்று சிவக்கவிமணியார் பெரியபுராணம் விளக்கம் நூலில் குறிப்பிடுகின்றார். திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே என்ற தொடருக்கு தருமையாதீனக் குறிப்பு வேறோர் விளக்கத்தை அளிக்கின்றது. பெருமான் மேலே குறிப்பிட்ட வண்ணம் ஊழிக்காலம் முடிந்த பின்னரும் நடனம் ஆடுவதன் பின்னணியை புரிந்து கொள்ளாத தலைவி, தீயினில் ஆடும் பெருமானை சென்று அடைவதற்கு அச்சம் கொண்டு தயங்கி நிற்கின்றாள் என்று பொருள் கொள்ளும் வண்ணம், இந்த குறிப்பு உள்ளது.

பொழிப்புரை:

உயர்ந்து ஓங்கி வளர்ந்த மூங்கில் மரங்கள் நிறைந்த மலைச்சாரலில், கரிய விரல் கொண்ட குரங்குகள் விளையாடும் சிராப்பள்ளி மலைச்சாரலில், விண்ணினை எட்டும் அளவு உயர்ந்த சிராப்பள்ளி திருக்கோயிலில் விருப்பத்துடன் பொருந்தி உறையும் பெருமானார், பேய்கள் உயர்த்திப் பிடிக்கும் எரிகின்ற கொள்ளிக் கட்டைகளையே விளக்காகக் கொண்டு, கொழுந்து விட்டெரியும் நெருப்பினில் நின்ற வண்ணம் நடனமாடுவது எதனை உணர்த்துகின்றது. உயிர்கள் பால் கருணை கொண்டுள்ள பெருமான், மீண்டும் உலகினை தோற்றுவித்து உயிர்களுக்கு மற்றொரு வாய்ப்பினை தங்களது வினைகளைக் கழித்துக் கொள்ள அளிப்பது தான் அவன் உணர்த்தும் திருக்குறிப்பு ஆகும். அந்த குறிப்பினை உணரும் அம்பிகை, அந்த எண்ணத்தை செயல்படுத்துகின்றாள்.

பாடல் 8:

மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன் தன்

தலை கலனாகப் பலி திரிந்து உண்பர் பழி ஓரார்

சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்

சிலவல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே

விளக்கம்:

மல்கு=பொருந்திய; இந்த பாடலில் பழியினையும் பொருட்படுத்தாமல் பெருமான் தொடர்ந்து பலி ஏற்கின்றான் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதை உணராத சிலர் பெருமான் பிச்சை ஏற்பதை இழித்துக் கூறினும், அத்தகைய பழிச் சொற்களை பொருட்படுத்தாமல், பிச்சை ஏற்பதன் மூலம் பல பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு உய்வினை அளிப்பதை தொடர்ந்து இறைவன் செய்து வருகின்றார். இந்த தன்மையே இங்கே உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு இறைவன் தொடர்ந்து பலி ஏற்கின்றார் என்று உணர்த்தும் இரண்டு தேவார பாடல்களை நாம் இங்கே காண்போம்.

எல்லாரும் தன்னை இகழ்வதையும் பொருட்படுத்தாமல் இறைவன் பண்டைய நாளிலும் பலியேற்றார் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் (6.86.7) ஆலம்பொழில் தலத்து மீது அருளப்பட்டது. குற்றங்கள் மிகுந்த எனது உடலில் புகுவதற்கு தீர்மானம் செய்த பெருமான், பல சோதனைகளை அளித்து என்னை சோதித்து எனது மனிதினை தூய்மை செய்தவன் தூய்மையே வடிவமான பெருமான் ஆவான். எல்லோரும் தன்னை இகழ்ந்ததையும் பொருட்படுத்தாமல் அந்நாளில், பலி இடுவீர்களாக என்று தாருகாவனத்து முனிவர்களின் இல்லங்களுக்கு சென்று திரிந்தவனும், தனது புகழினையும் திருநாமத்தையும் சொல்லாத மாந்தர்களை நினையாதவனும், தொடர்ந்து தனது பொன்னான திருவடிகளைப் பேணும் அடியார்களுக்கு பரிசாக, அவனது அருளால் அன்றி வேறு எவராலும் செல்ல முடியாத முக்தி நிலைக்குத் தனது அடியார்கள் செல்லுமாறு உதவி செய்பவனும், ஆலம்பொழில் என்ற இடத்தில் உள்ள திருக்கோயிலில் உறைபவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ சிந்திப்பாயாக என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு உணர்த்தும் பாடல் இது. .

பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னைப் புறம்புறமே

சோதித்த புனிதன் தன்னை

எல்லாரும் தன்னை இகழ அந்நாள் இடு பலி என்று அகம்

திரியும் எம்பிரானைச்

சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானைத் தொடர்ந்து தன்

பொன்னடியே பேணுவாரைச்

செல்லாத நெறி செலுத்த வல்லான் தன்னைத் திருவாலம்

பொழிலானை சிந்தி நெஞ்சே

கயிலாயம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.68.10) சமணர்களும் சாக்கியர்களும் தன்னை இகழ்ந்து கூறும் சொற்களை பொருட்படுத்தாமல், பிச்சை ஏற்கும் பெருமான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். பொருது=போர், இங்கே சொற்போர்; பண்டைய நாளில் சமணர்கள், வேறு மதத்தவரை வாதுக்கு அழைத்து, அவர்களை வாதினில் தோற்கடித்து, அவரையும் அவரது தொண்டர்களையும் தங்களது மதத்தில் இணைத்துக் கொள்வது பழக்கமாக இருந்ததை நாம் நாவுக்கரசரின் வரலாற்றிலிருந்து அறிகின்றோம். அத்தகைய வாதங்களில் சிவபெருமானைக் குறித்து இழிவாக பேசியமை இங்கே உணர்த்தப் படுகின்றது.

விருது பகரும் வெஞ்சொல் சமணர் வஞ்சச் சாக்கியர்

பொருது பகரும் மொழியைக் கொள்ளார் புகழ்வார்க்கு

அணியராய்

எருது ஒன்று உகைத்திங்கு இடுவார் தம் பால் இரந்துண்டு

இகழ்வார்கள்

கருந்தும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே

இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணாதவன் என்றும் சொற்களைக் கடந்தவன் என்று பெருமானின் இயல்புகள் பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டு வருகின்றது. வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நெறிகளையும் எடுத்துரைக்கும் வேதங்கள் சொல்லாத செய்தியே இல்லை என்று பொதுவாக கூறுவார்கள். ஆனாலும் பல செய்திகளையும் தத்துவங்களையும் விளக்கமாக உரைக்கும் வேதங்களும், அருளாளர்கள் இயற்றிய பாடல்களும், பெருமானின் ஒரு சில செய்கைகளையே சொல்ல முடிகின்றது என்று உணர்த்தி, பெருமானின் பெருமை சொற்களையும் கடந்தது என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் அருட்செய்கைகளும் வீரச் செயல்களும் பலவாக விரிந்து கொண்டே இருப்பதால், அவற்றை சொல்வதற்கு வேதங்களாலும் கீதங்களாலும் இயலவில்லை என்று உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

மலை போன்று பருத்தும் வலிமை வாய்ந்ததும் ஆகிய தோள்கள் பொருந்திய அரக்கன் இராவணனின் வலிமை கெடும் வண்ணம், அவனது உடலை கயிலை மலையின் கீழே அடர்த்து நொறுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலாய மலையின் மீது ஊன்றியவர் சிவபெருமான்; அவர், பிறரது பழிச்சொற்களையும் பொருட்படுத்தாமல், பிரம கபாலத்தை ஏந்தியவராக பல ஊர்கள் திரிந்து தொடர்ந்து பலி ஏற்கின்றார். பெருமானின் பெருமையினை எடுத்து உரைக்கும் வல்லமை வாய்ந்த வேதங்களும் அருளாளர்களின் கீதங்களும், முழுமையாக அவரது வீரச்செயல்கள் மற்றும் கருணைச் செயல்களின் தன்மையை சொல்லும் ஆற்றல் இல்லாமல் நிற்கின்றன. அவைகளால் ஒரு சில செயல்களையோ ஒரு சில தன்மைகளையோ தான் சொல்ல முடிகின்றது.

பாடல் 9:

அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்

கரப்புள்ளி நாடிக் கண்டிலர் ஏனும் கல் சூழ்ந்த

சிரப்பள்ளி மேய வார்ச்சடைச் செல்வர் மனை தோறும்

இரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே

விளக்கம்:

பெருமான் பல இல்லங்கள் சென்று பலியேற்பது அவரது இயலாமையால் அல்ல. ஆற்றலில் எவர்க்கும் குறைந்தவர் அல்லாத பெருமான், என்பதை உணர்த்தும் வண்ணம், பிரமனும் திருமாலும், நெடும் தீப்பிழம்பாக நின்ற பெருமானின் அடியையும் முடியையும் காண முடியாமல் திகைத்த செய்தி இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. எனினும் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் சிலர் பெருமானை பழித்து கூறுவதை ஞானசம்பந்தரின் குழந்தை உள்ளம் ஏற்றுக் கொள்ள முடியாமல் வருந்தும் தன்மை இந்த பாடலில் வெளிப்படுகின்றது. கரப்பு=மறைத்துக் கொள்ளுதல்; அரப்பள்ளியான்=பாம்பினைத் தான் பள்ளி கொள்ளும் படுக்கையாக உடைய திருமால்; உள்ளி=காரணத்தை நினைத்து;

பொழிப்புரை:

பாம்பினைத் தனது படுக்கையாக கொண்டுள்ள திருமாலும் தாமரை மலரில் உறைகின்ற பிரமனும், அடுத்தவரை விடவும் தாங்கள் வல்லமை உடையவர் என்பதை உணர்த்தும் வண்ணம், தங்கள் எதிரே தோன்றிய தீப்பிழம்பின் அடியையும் முடியையும் தேடிக் கண்டறியும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டபோதும், அவர்கள் இருவரும் காண முடியாத வண்ணம் நீண்ட தழற்பிழம்பாக நின்ற ஆற்றலை உடைய பெருமான், சிராப்பள்ளி மலைச்சாரலில் உள்ள திருக்கோயிலில் பொருந்தி எழுந்தருளி இருக்கும் பெருமான், நீண்ட சடையினை உடைய பெருமான், இல்லங்கள் தோறும் சென்று இரந்தால், அந்த காட்சியைக் காணும் அயலார்கள், இறைவனது தன்மையை அறியாததால் இகழ்வார்கள் அல்லவா. அவ்வாறு இருக்கையில் பெருமானே நீர், இரத்தலை தவிர்க்க வேண்டும். ,

பாடல் 10:

நாணாது உடை நீத்தோர்களும் கஞ்சி நாட்காலை

ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்களும் உரைக்கும் சொல்

பேணாது உறு சீர் பெறுதும் என்பீர் எம் பெருமானார்

சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே

விளக்கம்:

பேணாது=போற்றாது, பொருட்படுத்தாது; நீத்தல்=துறத்தல், விட்டொழித்தல்;

பொழிப்புரை:

சிறிதும் நாணமின்றி ஆடை அணிவதை விட்டொழித்து திரியும் சமணர்களும், தினமும் காலையும் பகலும் உணவாக கஞ்சி உட்கொண்டு, தங்களது நூலாகிய பிடகத்தை ஓதும் புத்தர்களும், சிவபெருமானைக் குறித்து சொல்லும் சொற்களை சிறிதும் மதியாது சிறப்பினை அடைவோம் என்று என்னும் மனிதர்களே, நீங்கள் விண்ணளவு உயர்ந்து காணப்படும் சிராப்பள்ளி தலத்து திருக்கோயிலைச் சென்றடைந்து பெருமானை வழிபட்டு பயன் அடைவீர்களாக.

பாடல் 11:

தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானைத் திரை சூழ்ந்த

கானல் சங்கேறும் கழமல ஊரில் கவுணியன்

ஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவை வல்லார்

வான சம்பந்தத்து அவரொடும் மன்னி வாழ்வாரே

விளக்கம்:

கானல்=கடற்கரைச் சோலைகள்; வான=உயர்ந்த; வான சம்பந்தத்தவர்=சிவகணங்கள்;

பொழிப்புரை:

தேனை உட்கொண்டு சிறந்த இசை பாடும் வண்டுகள் நிறைந்த சிராப்பள்ளி தலத்தினில் உரையும் பெருமானைப் புகழ்ந்து, கடல் அலைகளால் சூழப்பட்டு, கடல் அலைகளால் அடித்துக் கொண்டு வரப்படும் சங்குகள் நிறைந்த கடற்கரைச் சோலைகள் உடைய கழுமலம் (சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) நகரத்தைச் சார்ந்தவனும், கவுணிய கோத்திரப் பிரிவினைச் சார்ந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய பத்து பாடல்களை, நலம் அளிக்கும் பாடல்களை பாடுவதில் வல்லவராக விளங்கும் அடியார்கள், உயர்ந்த சிவலோகத்தை அடைந்து பெருமானுடன் இணைந்து நிலைத்த புகழுடன் வாழ்வார்கள்.

முடிவுரை:

சிராப்பள்ளி குன்றுடையான் என்று அவனது திருநாமத்தைச் சொல்லும் போதே, தனது உள்ளம் குளிர்கின்றது என்று பதிகத்தின் தொடக்கப் பாடலில் குறிப்பிடுவதன் மூலம், நமது உள்ளம் குளிர வேண்டும் என்று நாம் விரும்பினால் நாமும் பெருமானின் திருநாமத்தை சொல்ல வேண்டும் என்று ஞானசம்பந்தர் நம்மையும் தூண்டுகின்றார். பெருமான் பால் நாட்டம் கொள்வதற்கு முதல் படி அவனது திருநாமத்தை சொல்லுதல். அந்த தன்மையில் நம்மை ஈடுபடுத்திய சம்பந்தர் அடுத்து வரும் பாடல்களில் பெருமானின் தன்மைகளை நமக்கு உணர்த்தி, ஆர்வத்துடன் நாமும் பெருமானை வழிபட்டு பயனடைய வேண்டும் என்று நம்மை உந்துகின்றார். மூன்றாவது பாடலில் பெருமானின் அடியார்களுக்கு அல்லல் இல்லை என்று உணர்த்தி, தமது துன்பங்களை நீக்கிக் கொள்ள விரும்புவோர் பெருமானை வழிபடவேண்டும் என்று கூறுகின்றார். மேலும் சந்திரனுக்கு அபயம் அளித்த செய்கை நான்காவது பாடலில் குறிப்பிடப்பட்டு பெருமானைச் சரணடைந்தால் நமது துன்பங்கள் தீரும் என்று உணர்த்தப் படுகின்றது இவ்வாறு பெருமானின் தன்மைகளை நமக்கு உணர்த்தும் ஞானசம்பந்தர், பெருமானின் சில சிறப்பான செயல்களை உணர்த்தி, அந்த செயல்கள் உணர்த்தும் செய்திகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றார். சந்திரனையும் பாம்பையும் ஒரே இடத்தில் வைத்திருக்கும் தன்மை, பெருமானின் சன்னதியில் பகை உணர்ச்சிக்கு இடமில்லை என்பதை உணர்த்துகின்றது என்று இரண்டாவது பாடலில் கூறுகின்றார். ஒப்பற்ற வீரச்செயலான திரிபுரத்தை எரித்த செய்கை ஒன்றே, அவரை தலைவர் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள போதுமானது என்று ஐந்தாவது பாடலில் கூறுகின்றார். பலி ஏற்கும் செய்தியை ஆறாவது பாடலில் குறிப்பிட்டு, உயிர்கள் முக்தி அடைவதில் பெருமான் அளவற்ற ஆர்வம் காட்டுகின்றார் என்பதை உணர்த்துகின்றார். தாயுமானவராக விளங்கும் பெருமான், நெருப்பினில் நின்றவண்ணம் நடனமாடி அடியார்களின் மனதில் அச்சத்தை உண்டாக்குதல் தகுமா என்று பெருமானை கேள்வி கேட்கும் பாடலாக ஏழாவது பாடல் அமைந்துள்ளது. வேதங்களுக்கும் எட்டாத தன்மையன் என்று அவனது பெருமை எட்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமானை அடுத்தவர் இகழ்வதைக் கண்டு மனம் வருந்தி உரிமையுடன் பெருமானை கேள்வி கேட்பதாக ஒன்பதாவது பாடல் அமைந்துள்ளது. மாற்று மதத்தார் சொல்லும் வீணான பழிச்சொற்களை புறக்கணித்து, இறைவனைப் பணிந்து வணங்கி சிறப்பினை அடியுமாறு அறிவுரை பத்தாவது பாடலில் கூறப்பட்டுள்ளது. இந்த பதிகத்தை முறையாக பாடும் அடியார்கள் மறுமையில் சிவலோகம் சென்று சேர்வார்கள் என்று கடைப் பாடலில் பதிகம் ஓதுதலின் பலன் உணர்த்தப் படுகின்றது. இந்த பதிகம் மூலம், பெருமானின் தன்மைகளை புரிந்து கொண்ட நாம், திருச்சிராப்பள்ளி நகரம் சென்று தாயுமானவரைப் பணிந்து வணங்கியும், நம்மால் இயன்றவரை பதிகத்தை பாடியும் பெருமானின் அருள் பெறுவோமாக. பெற்றோர்களின் உடல் நிலை சீரடையவும், இல்லத்து பெண்களுக்கு இயல்பான முறையில் பிரசவம் ஏற்பட்டு தாயும் சேயும் நலமாக இருக்கவும், விரைவில் வீடு கட்டி முடிக்கவும், இந்த பதிகத்தை ஓதி பயன் பெறலாம் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Nanrudaiyaanai Theeyathilaanai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

நன்றுடையானை


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: