Go Back

22/03/21

கொட்டும் பறை சீரால்


பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி சென்ற திருஞான சம்பந்தர், அந்த ஊரிலிருந்த மூன்று தேவாரத் தலங்களுக்கும் (மூக்கீச்சரம், சிராப்பள்ளி, ஆனைக்கா) சென்று, இறைவனைப் பணிந்து வணங்கி பதிகங்கள் பாடிய பின்னர், பாற்றுறை, நெடுங்களம், காட்டுப்பள்ளி, ஆலம்பொழில், பூந்துருத்தி, கண்டியூர், சோற்றுத்துறை, வேதிகுடி வெண்ணியூர் சக்கரப்பள்ளி புள்ளமங்கை ஆகிய தலங்கள் சென்ற பின்னர் நல்லூர் சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். நெல்வாயில் அரத்துறை பெருமானின் அருளால் முத்துச் சிவிகை கிடைத்த பின்னர், அந்த சிவிகையில் திருஞானசம்பந்தர், பல தலங்களுக்கும் சென்றமை பெரிய புராணத்து குறிப்புகளிலிருந்து அறியப்படுகின்றது. அத்தகைய குறிப்பு தான் கீழக்கண்ட பெரிய புராண பாடலிலும் உள்ளது. ஞானசம்பந்தர் நல்லூர் சென்றபோது, ஆங்கிருந்த மறையவர்கள் மங்கலப் பொருட்கள் கொண்டு வேதங்கள் ஓதி அவரை வரவேற்றனர் என்று சேக்கிழார் கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. துழனி=ஓசை; இங்கே வேதவொலி என்று பொருள் கொள்ள வேண்டும். தன்னை வரவேற்ற அந்தணர்களை பின் தொடர்ந்து ஞானசம்பந்தர் திருக்கோயில் செல்ல, அவருடன் வந்த அடியார்களும், பயணத்தில் திருத்தொண்டு செய்யும் பரிசனங்களும் திருக்கோயில் செல்கின்றனர். திருக்கோயிலை வலம் வந்த ஞானசம்பந்தர், மாடக் கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த திருக்கோயிலின் சன்னதி சென்றங்கு, ஆனந்தக் கண்ணீர் உடலெங்கும் வழிய இறைவனைத் தொழுது வணங்கிய போது பாடிய பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்று. நல்லூர் தலத்தில் பல நாட்கள் தங்கியிருந்த ஞானசம்பந்தர் பலமுறை இன்னிசைப் பதிகங்கள் பாடினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். ஆனால் நமக்கு ஞானசம்பந்தர் அருளிய மூன்று பதிகங்களே கிடைத்துள்ளன. இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய இரண்டு பதிகங்களும் நமக்கு கிடைத்துள்ளன. கலயநல்லூர் சென்ற சுந்தரர், சோற்றுத்துறை செல்லும் வழியில், குடமூக்கு, வலஞ்சுழி மற்றும் நல்லூர் தலம் சென்றதாக பெரிய புராணத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் நமக்கு சுந்தரர் இந்த தலத்தின் மீது அருளிய பதிகம் ஏதும் கிடைக்கவில்லை. திருஞானசம்பந்தர் நல்லூர் தலம் சென்றதை குறிப்பிடும் பெரியபுராணப் பாடலை நாம் இங்கே காண்போம்.

மன்றல் அங்கழனி சூழ் திரு நலூர் மறைவலோர்

துன்று மங்கள வினைத்துழனியால் எதிர்கொளப்

பொன் தயங்கு ஒளிமணிச் சிவிகையில் பொலிவுறச்

சென்றணைந்து ஆறினார் சிரபுரச் செம்மலார்

கும்பகோணம் தஞ்சாவூர் பாதையில் பாபநாசம் தலத்திற்கு கிழக்கே உள்ள தலம். வலங்கைமான் வழியாகவும் செல்லலாம். சுந்தரபாண்டியபுரம் என்ற ஊருக்கு மிகவும் அருகில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. இறைவனின் திருநாமம் கல்யாண சுந்தரேசுவரர். சுயம்பு லிங்கம்; காலையிலிருந்து மாலை வரை இடைப்பட்ட பன்னிரண்டு மணி நேரத்தில், ஆறு நாழிகைக்கு ஒரு முறை பெருமானின் நிறம் ஐந்து முறை மாறுகின்றது. தாமிர நிறம், இளஞ்சிவப்பு நிறம், உருக்கிய தங்கத்தின் நிறம், நவரத்தினப் பச்சை நிறம், மற்றும் சொல்ல முடியாத வண்ணம் என்று ஐந்து நிறங்களில் காட்சி அளிக்கும் பெருமானை கருத்தில் கொண்டே, நிறங்கள் ஓர் ஐந்துடையாய் என்று மணிவாசகர் திருவாசகம் சிவபுராணத்தில் பாடினாரோ என்று தோன்றுகின்றது. ஐந்து வண்ணங்களில் மாறித் மாறித் தோன்றுவதால் இறைவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். சென்னைக்கு அருகில் உள்ள தக்கோலத்திலும், திருச்சி நகரில் உள்ள உறையூர் தலத்திலும் (மூக்கீச்சரம்) தலத்திலும் பெருமானின் நிறம் மாறுவதை நாம் காணலாம். பிரதான லிங்கத்தின் ஆவுடையில் தென்பக்கத்தில் சிறிய லிங்கம் ஒன்று உள்ளது. இந்த லிங்கம் அகத்தியர் வழிபட்ட இலிங்கம் என்று சொல்லப் படுகின்றது. பிரதான லிங்கத் திருமேனியில் சிறிய துவாரங்கள் உள்ளன. பிருங்கி முனிவர் வழிபட்ட தலம் என்று கூறுவார்கள். சாலிகிராமத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை அழகாக உள்ளது. அகத்தியருக்கு திருமணக் கோலக் காட்சி கொடுத்தருளிய தலம். கருவறையில் பெருமானின் திருமணக் கோலம் புடைச் சிற்பமாக உள்ளது. இந்த சிற்பத்தில் நாம் திருமாலையும் பிரமனையும் வழிபடும் நிலையில் அகத்திய முனிவரையும் காணலாம். எனவே மும்மூர்த்திகளையும் ஒரே சமயத்தில் காணும் வண்ணம் அமைந்துள்ள சன்னதி. அமர்நீதி நாயனாருக்கு அவரது குடும்பத்தாருக்கும் முக்தி அளித்த தலம். பிராகாரத்தில் அவரது குடும்பத்தினர் உருவச்சிலைகள் (கல் மற்றும் செப்பு உற்சவ மூர்த்தங்களாக) உள்ளன. நுழைவாயிலைத் தாண்டியவுடன், கோயிலின் தெற்கு பகுதியில் அமர்நீதியார் அமர்ந்த துலா மண்டபம் உள்ளது. இறைவியின் திருநாமம், கிரி சுந்தரி, கல்யாணசுந்தரி; சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் நுழைவாயிலின் அருகே தெற்கு நோக்கிய சன்னதி அம்பாள் சன்னதி. அம்பாள் சன்னதி மற்றும் சுவாமி சன்னதிக்கு, படிகள் ஏறி மேல் செல்லவேண்டும்.

சத்திமுற்றம் தலத்தில், பெருமானின் பாதச்சுவடு தனது தலையின் மீது பதிக்கப்பட வேண்டும் என்று வேண்டிய திருநாவுக்கரசரை, பெருமான் நல்லூர் வாவா என்று அழைத்த பெருமான், திருநாவுக்கரசர் பெருமானை வணங்கி மகிழ்ந்து எழுந்த போது, உன்னுடைய நினைப்பதனை முடிகின்றோம் என்று சொல்லியவாறு தனது திருப்பாதத்தை திருநாவுக்கரசரின் தலையின் மீது வைக்கின்றார். இவ்வாறு அப்பர் பிரானுக்கு திருவடி தீட்சை வழங்கியதை நினைவூட்டும் வண்ணம், இந்த கோயிலில், அடியார்களுக்கு சடாரி சாத்தப்படுகின்றது. அந்த சடாரியை இறைவனின் திருவடியாக பாவித்து நாம் பக்தியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிவபெருமானின் திருக்கோயில்களில் சடாரி சாத்தப்படும் திருக்கோயில் இது ஒன்று தான். வாயு பகவானால் கொண்டு வரப்பட்ட கயிலை மலையின் இரு பகுதிகளில் ஒன்று. மற்றொரு பகுதி ஆவூர் பசுபதீச்சரம் தலத்தில் உள்ளது என்பார்கள்.

அகத்தியமுனிவர், பிருங்கி முனிவர், நரசிம்மர், பாண்டவர்களின் அன்னை குந்தி தேவி, கண்ணன், பாண்டவர்கள், முசுகுந்த சக்ரவர்த்தி ஆகியோர் வழிபட்ட தலம். குந்தி தேவியின் சிலை இந்த கோயிலில் உள்ளது. தனது மகன் கர்ணனை, ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்ட பாவத்திற்கு கழுவாய் தேடும் வகையில் தௌம்ய முனிவரின் ஆலோசனைப் படி, இந்த தலம் வந்தடைந்த குந்திதேவி, இந்த தலத்தில் இருந்த உரோமச முனிவரை சந்தித்தாள்; உரோமச முனிவர், மாசி மகத்தன்று ஏழு கடல்களில் நீராடி இறைவனை வழிபடுமாறு ஆலோசனை சொன்னார். ஏழு கடல் சென்று ஒரே நாளில் எவ்வாறு நீராடுவது என்று குந்தி கேட்டபோது, முனிவர் தனது சக்தியால் ஏழு கடல்களின் நீரினை இந்த தலத்தில் உள்ள ஏழு கிணறுகளில் வரும் வண்ணம் செய்தார். இந்த கிணறுகள் ஒரு தொகுப்பாக சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப் படுகின்றன. குந்தி தேவியும், இந்த ஏழு கிணறுகளையும் ஏழு கடல்நீராக பாவித்து நீராடி, இறைவனை வழிபட்டு, தனது பாவத்தைத் தீர்த்துக் கொண்டாள் என்று கூறுவார்கள். இந்த கிணறுகளை புனிதப்படுத்த, பிரமன் நான்கு வேதங்களையும் (ரிக் வேதம் கிழக்கே, யசுர் வேதம் தெற்கே, சாமவேதம் மேற்கே மற்றும் அதர்வண வேதம் வடக்கே வைத்து நடுவில் சப்தகோடி மந்திரங்களால் ஆவாகனம் செய்யப்பட்ட தீர்த்தத்தை வைத்து பெருமானை வழிபட்டார் என்று கூறுவார்கள். முசுகுந்த சக்ரவர்த்தி, இந்திரனிடமிருந்து ஏழு சோமாஸ்கந்த மூர்த்தங்களைப் பெற்றுக் கொண்டு திருவாரூர் திரும்பிய பின்னர் மூன்று நாட்கள் இங்கே தங்கி இறைவனை வழிபட்டார் என்று தலபுராணம் சொல்கின்றது. இந்த தலத்தில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி, திருவாரூரில் உள்ள தியாகராஜ, சோமாஸ்கந்த மூர்த்திக்கு சமமாக கருதப்படும் சிறப்பு வாய்ந்தது. மாசி மகப் பெருவிழாவில் ஐந்தாம் நாள், தியாகராஜப் பெருமான் மூல லிங்கத்தின் முன்னர் அமர்ந்து, தன்னைத் தானே பூஜித்து வழிபட்ட பின்னர், படிகளின் வழியே கீழே இறங்கும் போது, அடியார்கள் இருபுறமும் சூழ்ந்து வெண்சாமரம் வீசியபோதிலும் பெருமானின் முகத்தில் வியர்வை துளிர்ப்பதை நாம் காணலாம். ஏழு கடல்களின் நீரும் இங்கே கிணறுகளில் இருப்பதால், இங்கே நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பாக கருதப் படுகின்றது. மாலிக்காபூர் படையெடுப்பின் போது, இந்த திருக்கோயிலின் கல்யாண சுந்தரர் பஞ்சலோகச் சிலை ஒரு புற்றினில் வைக்கப்பட்டதாகவும், பின்னர் அதனை எடுக்க முடியாமல் போனதாகவும் கூறுவார்கள். இப்போது உள்ள சிலை, பின்னர் செய்யப்பட்டது. எட்டு கரங்கள் கொண்ட நடராஜப் பெருமானின் உருவத்தையும் எட்டு கரங்கள் கொண்ட காளியையும் நாம் இங்கே காணலாம். காளியம்மனின் சன்னதி மிகவும் பிரசத்தி பெற்றது. நவகிரக சன்னதி இல்லாத தலம்.

பாடல் 1:

கொட்டும் பறை சீரால் குழும அனலேந்தி

நட்டம் பயின்று ஆடு நல்லூர்ப் பெருமானை

முட்டின்று இரு போது முனியாது எழுந்து அன்பு

பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே

விளக்கம்:

பறை=தோலால் இறுகிக் கட்டி மூடப்பட்ட இசைக்கருவி; சீரால்=முறையாக; கொட்டும்=இசைக்கப் படும்; குழும=சூழ; பயின்று ஆடு=தொடர்ந்து ஆடும்; முட்டின்று=இடையூறு இல்லாமல்; முனியாது=வெறுப்பு ஏதுமின்றி; தயக்கம் தளர்ச்சி என்ற பொருளும் பொருந்தும்; பாவம் அறியார்=

அடியார்களின் சிந்தனை பண்படுத்தப்பட்டு பாவம் விளைவிக்கும் செயல்களை தவிர்ப்பார்கள் என்று பொருள் கொள்ளவேண்டும்.

பொழிப்புரை:

தன்னைச் சூழ்ந்துள்ள பூதகணங்கள் பறை எனப்படும் இசைக் கருவியை முறையாக முழக்க, அந்த இசைக்கு ஏற்ப இடைவிடாது தொடர்ந்து நடனமாடும் நல்லூர்ப் பெருமான், தனது கையில் தீப்பிழம்பினை ஏந்தியவாறு நடனம் ஆடுகின்றார். தினமும் இடையூறு ஏதுமின்றி, தயக்கம் வெறுப்பு தளர்ச்சி ஏதுமின்றி, தங்களது மனதினில் அன்பு நிறைந்தெழுந்த வண்ணம் நல்லூர்ப் பெருமானை வழிபடும் அடியார்களின் சிந்தனை பண்படுத்தப்படுவதால், அவர்கள் பாவம் விளைவிக்கும் தீய செயல்கள் ஏதும் செய்யாதவர்களாக இருப்பார்கள்.

பாடல் 2:

ஏறில் எருதேறும் எழில் ஆயிழையோடும்

வேறும் உடனுமாம் விகிர்தர் அவர் என்ன

நாறும் மலர்ப் பொய்கை நல்லூர் பெருமானைக்

கூறும் அடியார்கட்கு அடையா குற்றமே

விளக்கம்:

ஆயிழை=சிறந்த அணிகலன்களை அணிந்த பார்வதி தேவி; விகிர்தர்=மற்ற தேவர்களிலிருந்து மாறுபட்ட தன்மை உடையவர்; ஏறில்=ஏறினால்; பெருமான் எருதினைத் தவிர்த்து வேறு எதனையும் தனது வாகனமாக ஏற்றுக் கொள்ளாத தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. சென்ற பாடலில் பெருமானின் அடியார்களின் மனம் பண்பட்டு காணப்படுவதால் தீயசெயல்கள் எதனையும் செய்யாது இருப்பார்கள் என்று உணர்த்திய ஞானசம்பந்தர், அதன் தொடர்ச்சியாக அத்தகைய அடியார்கள் குற்றம் ஏதும் இல்லாதவர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றார்.

இந்த பாடலில் விகிர்தர் என்று குறிப்பிட்டு, பெருமான் மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டவன் என்று குறிப்பிடுகின்றார். எவ்வாறு பெருமான் மாறுபடுகின்றார் என்பதை இரண்டு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகின்றார். பெருமான் தனது மனைவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்திருக்கும் தன்மையும், யானை குதிரை தேர் முதலிய வாகனங்களைத் தவிர்த்து எருதினைத் தனது வாகனமாக பெருமான் ஏற்றுக்கொண்ட தன்மையும், மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட செய்கை தானே. பெருமான் எருதினைத் தனது வாகனமாக ஏற்றுகொண்டது குறித்து திருவாசகம் திருச்சாழல் பதிகத்தின் பாடல் நமது நினைவுக்கு வருகின்றது. யானை தேர் குதிரை ஆகியவற்றை வாகனமாகக் கொள்ளாமல் ஏன் எருதினை வாகனமாக ஏற்றான் என்ற கேள்விக்கு விடையாக, திருமால் ஒரு சமயத்தில் இறைவனை விடை உருவில் தாங்கிய வரலாற்றை நினைவூட்டும் வண்ணம் எருதினை வாகனமாகக் கொண்டுள்ளான் என்று இங்கே கூறப்படுகின்றது.

கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாமே

இடபம் உகந்து ஏறியவாறு எனக்கு அறிய இயம்பேடீ

தடமதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில்

இடபமதாய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ

மிகவும் எளியவராக காட்சி தரும் பெருமான் விடையினைத் தனது வாகனமாக ஏற்றுக்கொண்டு இருப்பதால் எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை என்றும், அவருக்கு அந்த செய்கையால் எந்த விதமான குறையுமில்லை என்பதை மிகவும் நயமாக அப்பர் பிரான் விளக்கும் பாடலை (6.09.8) நாம் இங்க காண்போம். நிறை=அடக்க குணம்; ஒற்றியூர்=அடமானம் வைக்கப்பட்ட ஊர். ஒன்றாலும் குறைவில்லை என்ற தொடர் மூலம் சிவபிரான் குறையேதும் இல்லாதவர் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தேர், குதிரை, யானை போன்ற வாகனங்கள் இல்லை என்ற குறையோ (வாகனம், எருது), உயர்ந்த பட்டாடைகள் இல்லை என்ற குறையோ (உடை, கோவணம் மற்றும் தோலாடை), பொன்னாபரணம் இல்லை என்ற குறையோ (அணிகலன்கள், நாகம் மற்றும் எலும்பு மாலை), உயர்ந்த மாலைகள் இல்லை என்ற குறையோ (எலும்பு மாலை அல்லது தலைமாலை), வாசனை தரும் பொடிகள் பூசவில்லை என்ற குறையோ (மேனியில் பூசுவது திருநீறு), தமது தலமாகிய ஒற்றியூர், அடமானம் வைக்கப்பட்டு உள்ளது என்ற குறையோ இல்லாமல் இருப்பவர் சிவபெருமான் என்று உணர்த்தப்படுகின்றது.

ஒன்றாலும் குறைவில்லை ஊர்தி வெள்ளேறு ஒற்றியூர் உம்

ஊரே உணரக் கூறீர்

நின்று தான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி

நிறையும் கொண்டீர்

என்றும் தான் இவ்வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி

அறிந்தோம் ஏகம்போ

அன்றித் தான் போகின்றீர் அடிகள் எம்மோடு அழகியரே ஆமாத்தூர்

ஐயனாரே

இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் பெருமான், தன்னிடம் ஏதும் இல்லாத காரணத்தால் எருதினை வாகனமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். உருள்=சக்கரம்; கோதை=மாலையின் ஒரு வகை. சக்கரங்களை உடைய தேர், குதிரை, யானை போன்றவற்றை குறைவறப் பெற்றிருப்பினும் தனது வாகனமாக வெண்மை நிறம் கொண்ட காளையையே, ஈசன் பயன்படுத்துகின்றார். நஞ்சம் உண்டதால் கறுத்த கண்டத்தை உடைய இவர், செந்தீயின் வண்ணத்தவர். வானோர்கள் தொழுதேத்தும் இவர், தான் பலி தேடிப் போனாலும், தனது அடியார்களுக்கு அவர்கள் வேண்டுவன அனைத்தையும் கொடுப்பதால், இவரை பொருள் உள்ளவர் என்றும் சொல்ல முடிவதில்லை, பொருள் அல்லாதவர் என்றும் சொல்ல முடிவதில்லை. புலித்தோலை ஆடையாகக் கொண்டுள்ள இவரை பூதங்கள் சூழ்ந்து இருக்கின்றன. அடியார்களுக்கு அருளும் தன்மை படைத்த ஆமாத்தூர் தலைவர், தனது மார்பினில், கோதை எனப்படும் வகையைச் சார்ந்த மாலையினை அணிந்து மிகவும் அழகியவராக காணப்படுகின்றார் என்பதே இந்த பாடலில் திரண்ட பொழிப்புரை;

உருளுடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவில்லை

ஊர்தி வெள்ளேறு

இருளுடைய கண்டத்தர் செந்தீவண்ணர் இமையவர்கள் தொழுதேத்தும்

இறைவனார் தாம்

பொருளுடையர் அல்லர் இலரும் அல்லர் புலித்தோல் உடையாகப்

பூதம் சூழ

அருளுடைய அம் கோதை மாலை மார்பர் அழகியரே ஆமாத்தூர்

ஐயனாரே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.40.1) அப்பர் பிரான், பெருமான் எருதினைத் தவிர்த்து வேறு எதனையும் வாங்கனமாகக் கொண்டு ஊர்வதில்லை என்று கூறுகின்றார். தான்=இறைவன்; உலகம்=உலகத்தில் உள்ள பொருட்களின், உலகத்து உயிர்களின் இயக்கம்; அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற முதுமொழி உணர்த்தும் கருத்தே தானலாது உலகம் இல்லை என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. சகம்=உலகத்தில் உள்ள அனைத்து ஆன்மாக்கள்; வான்=வீடுபேறு; பெருமான் உதவியன்றி, உலகங்கள் நிலையாக இருப்பதில்லை என்றும் விளக்கம் கூறப்படுகின்றது. வான் என்ற சொல்லுக்கு முக்தி மற்றும் மழை, ஆகாயம் என்று பல பொருள்கள் உள்ளன. வானிலிருந்து பொழியும் மழை, கைம்மாறு ஏதும் கருதாமல் பொழிவதைப் போன்று இறைவனும் தனது அடியார்களுக்கு கைம்மாறு ஏதும் கருதாமல் உதவி செய்கின்றான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

தானலாது உலகம் இல்லை சகமலாது அடிமை இல்லை

கான் அலாது ஆடல் இல்லை கருதுவார் தங்களுக்கு

வான் அலாது அருளும் இல்லை வார்குழல் மங்கையோடும்

ஆன் அலாது ஊர்வது இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

அச்சிறுப்பாக்கம் தலத்தின் மீது அருளிய பாடலில், ஒப்பற்ற வாகனமாகிய எருதினைத் தவிர்த்து வேறெதிலும் அமராதவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஒன்று=ஒப்பற்ற; தருமதேவதையே இடபமாக இருப்பதால் தனிச்சிறப்பு வாய்ந்தது அல்லவா எருது வாகனம். மேலும் இதன் சிறப்பு கருதி, திருமாலும் இடபத்தின் வடிவத்தை மேற்கொண்டு, திரிபுரத்து அரக்கர்களுடன் நடைபெற்ற போரினில் பெருமானைத் தாங்கினார் அல்லவா. அதனால் தான் ஞானசம்பந்தர் இங்கே, எருது வாகனத்தை ஒப்பற்றது என்று கூறுகின்றார். தேன் பல நாட்கள் வைத்திருந்தால் கசப்புத் தன்மை உடையதாக மாறும். மேலும் ஒரு அளவுக்கு மேல் உட்கொண்டால், நமக்கு முதலில் அளித்த இனிய சுவையினைத் தராது, திகட்டத் தொடங்கும். ஆனால் பெருமானின் நினைவுகள் அவ்வாறல்ல. அவரது நினைவுகள் மேலும் மேலும் அவரைப் பற்றியே நினைக்கத் தூண்டி தெவிட்டாத சிவானந்தத்தில் ஆழ்த்தும் என்பதால் தேனினும் இனியர் என்று கூறினார் போலும். திருநீற்றினை பாலுக்கு ஒப்பிடுகின்றார். பாலும் திருநீறும் வெண்மை நிறம் கொண்டவை என்பதால் மட்டும் பால் போன்ற நீறு என்று சொல்லப்படவில்லை. பால் உடலுக்கு வலிமை தருகின்றது. சிறிய குழந்தை முதல் முதியவர் வரை, எவர் அருந்தினாலும் எளிதில் ஜீரணம் ஆவதால் சிறந்த உணவாகவும் பயன்படுகின்றது. மேலும் இனிய சுவை உடையதாகவும் விளங்குகின்றது. திருநீறு உடலுக்கு ஒரு அழகினைத் தருகின்றது; அணிவோரின் மனம் பண்பட்டு வலிமையுடன் விளங்க உதவுகின்றது; மருந்தாக பயன்படுகின்றது. எந்த வயதினராக இருந்தாலும் அவர்களுக்கு மேற்கண்ட பலன்களைத் தருகின்றது. எனவே தான் பாலன நீற்றர் என்று கூறினார் போலும். நமக்கு பல நன்மைகள் புரிவதால் இனிய கரும்பு போன்று பெருமான் திகழ்கின்றார். ஊன் நயந்து உருக என்ற தொடரினை உவகைகள் என்ற சொல்லுடன் கூட்டி பொருள் கொள்வது மிகவும் சிறப்பாக உள்ளது. தனது திருவடிகளைத் தொழும் அடியார்களின் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் பெருமான் அளிப்பதால், அத்தகைய அடியார்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். இத்தகைய அடியார்கள் தங்களது உச்சியில், துவாதசாந்தப் பெருவெளியில் இறைவன் உறைவதை உணர்கின்றனர். வயம்=வெற்றி; வானகம் இறங்கி=தேவர் உலகத்தைக் கடந்து; பெருமான் வானுலகத்தில் பொருந்தி உறையாமல் நிலவுலகில் பல கோயில்களில் குடிகொண்டிருக்கும் தன்மை;

தேனினும் இனியர் பாலன நீற்றர் தீங்கரும்பு அனையர் தம்

திருவடி தொழுவார்

ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர்

ஒன்று அலாது ஊரார்

வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பதோர்

வடிவினை உடையார்

ஆனையின் உரிவைபோர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது

ஆட்சி கொண்டாரே

பருப்பதம் (இந்நாளில் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலம்) தலத்தின் மீது அருளிய பாடலில் (1.118.1) திருஞானசம்பந்தர், இரு புறங்களிலும் மணிகள் தொங்கவிடப்பட்டு அழகாக இருக்கும் யானையைத் தனது வாகனமாகக் கொள்ளாமல், எருதினை வாகனமாகக் கொண்டவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். சுடுமணி=ஒளி மிகுந்த மாணிக்கம்; அரை=இடுப்பு; இடுமணி= இருபுறமும் தொங்கும் மணிகள்; ஏறலன்=ஏறாமல் தவிர்ப்பவன்; மேவிய=பொருந்திய; நெடுங்கோட்டு=உயர்ந்த சிகரங்கள்; படு=ஆங்காங்கே இருக்கும்;

சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்

இடுமணி எழில் ஆனை ஏறலன் எருதேறி

விடமணி மிடறு உடையான் மேவிய நெடுங்கோட்டு

படுமணி விடு சுடரார் பருப்பதம் பரவுதுமே

பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.64.10) திருஞானசம்பந்தர், மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவனாக இருக்கும் பெருமான், மற்றவர்கள் ஏறும் சிறப்பு வாய்ந்த தேர், யானை குதிரை ஆகியவற்றை விடுத்து, எருதினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளார் என்று கூறுகின்றார். புற்றேறும்=தங்கள் மீது புற்றுகள் படரும் வண்ணம்; உணங்குதல்=உடல் மெலியும் வண்ணம் தவம் செய்தல்; ஆடைகளுக்கு சாயம் ஏற்ற சாயக்கலவையை காய்ச்சி, துணிகளுடன் கலப்பதால், ;புகை அடர்ந்த துகில் என்று குறிப்பிட்டு அதனை அணியும் புத்தர்களை உணர்த்துகின்றார். சொற்றேறல்=சொல்+தேறல்; சொற்களை நல்லச் சொற்கள் என்று தேர்ந்தெடுத்து பின்பற்றுதல்; சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்கள் தேர்ந்தெடுத்து கொண்டாடப்படும் தகுதியற்றவை என்று உணர்த்துகின்றார். மற்றேரும்=மல்+தேறும், சிறப்பு வாய்ந்த தேர்; பரிமா=குதிரை; களிறு=ஆண் யானை; பெற்றம், பெற்று=எருது; .

புற்றேறி உணங்குவார் புகை ஆர்ந்த துகில் போர்ப்பார்

சொற்றேற வேண்டா நீர் தொழுமின்கள் சுடர்வண்ணம்

மற்றேரும் பரிமாவும் மதகளிரும் இவை ஒழியப்

பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.116) பதிகத்தின் முதல் பாடலில், என்றும் பெருமான் ஏறுவது இடவமே என்று குறிப்பிட்டு, பெருமான் இடபத்தை மட்டுமே வாகனமாகக் கொண்டுள்ள தன்மை, திருஞானசம்பந்தரால் குறிப்பிடப் படுகின்றது. ஒரே சொல் இரண்டு வேறுவேறு பொருட்களில் வரும் வண்ணம் ஒவ்வொரு அடியும் உள்ள பாடல். நஞ்சடையதே என்ற தொடரை நம் சடையதே என்றும் நஞ்சு அடையதே என்று பிரித்தால் வேறுவேறு பொருள் தோன்றுகின்றன. மான்=மான்கன்று, மான் போன்று அழகிய பெண்; கல்லின் மான்=இமவானின் புதல்வியாகிய பார்வதி தேவி; இடக்கையதே=இடது கையில், உடலின் இடது பாகத்திலே; இடவமே=இடபமே என்ற சொல்லின் திரிபு, பலி இடுவதற்கு வருவீர்; உள்ளுமே=உள்ளே, உள்குமே என்ற சொல்லின் திரிபு. துன்று கொன்றை=நெருங்கிய கொன்றை மலர்கள் கொண்ட மாலை; கண்டம்=கழுத்து;

துன்று கொன்றை நஞ்சடையதே தூய கண்டத்து நஞ்சடையதே

கன்றின் மான் இடக்கையதே கல்லின் மான் இடக்கையதே

என்றும் ஏறுவது இடவமே என்னிடைப் பலி இடவமே

நின்றதும் மிழலை உள்ளுமே நீர் எனைச் சிறிதும் உள்ளுமே

காரைக்கால் அம்மையாரும் இரட்டைமணிமாலை பதிகத்தின் பதினெட்டாவது பாடலில், பெருமான் ஏறிச் செல்வதற்கு எருது தவிர்த்து மற்றோர் வாகனம் இல்லையே என்று அங்கலாய்க்கின்றார். வேறோர் நாகம் என்று படம் எடுத்தாடியவாறு பெருமானின் தலையில் இருக்கும் பாம்பு, விடத்தை கக்கிய வாசுகி பாம்பு தவிர்த்து வேறொரு பாம்பு என்று கூறுகின்றார். அமரர் சூழ்ந்த என்று, தேவர்களும் அமர்களும் ஒன்று கூடி பாற்கடலைக் கடந்த போது தோன்றிய விடம் என்று உணர்த்துகின்றார். .

ஏறலால் ஏற மற்று இல்லையே எம்பெருமான்

ஆறெலாம் பாயும் அவிர்சடையார் வேறோர்

படம் குலவு நாகம் உமிழ் பண்டமரர்ச் சூழ்ந்த

தடங்கடல் நஞ்சு உண்டார் தமக்கு

பொழிப்புரை:

எருது ஒன்றினையே தனது வாகனமாகக் கொண்டவனும், அழகிய நகைகள் அணிந்துள்ள உமையன்னையுடன் இணைந்து மாதொருபாகனாகவும் தனியாகவும் இருப்பதன் மூலம், மற்ற தெய்வங்களிருந்து வேறுபட்ட விகிர்தராக விளங்கும் பெருமான் என்று நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த பொய்கைகளைக் கொண்ட நல்லூர் தலத்தில் உறைகின்ற பெருமானைப் புகழ்ந்து கூறும் அடியார்கள், திருந்திய சிந்தனையுடன் வாழ்வதால், அவர்கள் குற்றங்கள் நீங்கியவர்களாக இருப்பார்கள்.

பாடல் 3:

சூடும் இளந்திங்கள் சுடர் பொன் சடை தாழ

ஓடு உண்கலனாக ஊரூர் இடு பிச்சை

நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்

பாடும் அடியார்கட்கு அடையா பாவமே

விளக்கம்:

பெருமானின் அடியார்கள் பாவம் அறியார்கள் என்றும் அவர்களைக் குற்றங்கள் சென்று அடையா என்றும் பதிகத்தின் முதல் இரண்டு பாடல்கள் உணர்த்திய திருஞானசம்பந்தர், அத்தகைய அடியார்களை பாவங்கள் சென்று அடையா என்று இந்த பாடலில் கூறுகின்றார். சிவசிந்தனை மேலோங்கி இருப்பதால், பண்பட்ட உள்ளத்துடன் குற்றங்கள் நீங்கிய உள்ளத்துடன் இருக்கும் அடியார்கள் தீயசெயல்களை இயல்பாகவே தவிர்ப்பார்கள் என்பதால் அவர்களை பாவங்கள் சென்று அடையாது அல்லவா. பிச்சை நாடும் நெறியான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தங்களது மலங்களைக் கழித்துக் கொள்வதற்கும் வினைகளை முற்றிலும் நீக்கிக் கொள்வதற்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு தங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளதை உயிர்கள் அனைத்தும் உணர்ந்து, செயல்பட்டால் தான், அவைகளால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வெளியே வரமுடியும், அனுபவித்துத் தான் வினைகளை கழித்துக் கொள்ளவேண்டும் என்றால், நாம் இதுவரை சேர்த்துள்ள வினைகளை கழிப்பதற்கே எண்ணற்ற பிறவிகள் நமக்கு தேவைப்படும் இந்த நிலையில், நாம் இந்த பிறவிகளில் மேலும் சேர்த்துக் கொள்ளும் வினைகள் நாம் எடுக்க வேண்டிய பிறவிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து விடுகின்றன. இவ்வாறு தான் நமது வினைகளைக் கழித்துக் கொள்ளும் நாள் எட்டாத கானல் நீராக நம்மிடமிருந்து மேலும் மேலும் விலகிச் செல்லும் நிலையில், பிச்சை பெருமானாக நம் முன்னே வந்து நின்று, நமது மலங்களைத் தான் தனது கையில் வைத்திருக்கும் பிரமகபாலத்தினில் நாம் அனைவரும் இட்டு உய்வினை அடைவதற்கு ஏதுவாக, உலகெங்கும் திரிவதை நாம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு நாம் நன்னெறி அடைவதற்காக பெருமான் பிச்சை ஏற்பதால், பிச்சை நாடும் பெருமான் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பெருமான் இன்றும் பலியேற்பதாக திருஞானசம்பந்தர் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (3.56.5), கூறுகின்றார். நாம் நமது ஊனக்கண்களால் இறைவன் இவ்வாறு வருவதை நாம் காணமுடியாது: எனினும் இறைவன் வருவார் என்பதை எதிர்பார்த்து, விருப்பு வெறுப்பு ஏதுமின்றி நாம் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களை ஒரே மாதிரியாக பாவித்து, நமது பழைய மலங்களை அவரிடம் சமர்ப்பிப்பதற்கு தயாராக இருந்தால், அவர் நமது பழைய வினைகளை முற்றிலும் கழித்து, நம்மைப் பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுவிப்பார் என்ற செய்தி இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது.

நச்சரவச் சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு

அச்சம் எழ விடை மேல் அழகார் மழு ஏந்தி நல்ல

இச்சை பகர்ந்து மிக இடுமின் பலி என்று நாளும்

பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே

இறைவன் பலி ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல; உலகில் உள்ள ஆன்மாக்கள் தங்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை, இறைவன் ஏற்றிருக்கும் கபாலத்தில் இட்டு, மாயைகளை ஒழித்து உய்வினை அடைய வேண்டும் என்பதற்காகத் தான், என்ற உண்மையை குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் பாடலில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபிரானை குறிப்பிட்டு உணர்த்துகின்றார். பெருமான் பலி ஏற்பது நமக்கு அருள் புரிவதற்காக என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுவது, திருமூலரின் கருத்தினை பின்பற்றியே.

ஊர்தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே

பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்

சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்

ஆர் தரு காதல் கூற அடியவர்க்கு உதவும் நாளில்

பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர் விளக்கம் (ஏழாம் தந்திரம், பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி=இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன்; நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைத்து இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்று கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான். இந்த நிலை வாழ்க்கைக்கு அப்பர் பிரான் ஒரு சிறந்த உதாரணம். சமணர்கள் கொடுமைகளால், பல துன்பங்கள் அனுபவித்த போதும், எல்லாம் ஈசன் செயல் என்று ஏற்றுக் கொண்ட அவர், இன்பங்களை அனுபவித்த போதும் ஈசனது செயல் என்றே செயல்பட்டார். புகலூரில் உழவாரப் பணி செய்து வருகையில், தரையில் கிடந்த விலை மதிப்பில்லாத மணிகளையும் குப்பைகளாக கருதி, கல்லுடன் மண்ணுடன் கலந்து அவற்றையும் அப்புறப் படுத்தினார். மேலும் அரம்பையர்கள் அவரின் முன்னே வந்து நடனமாடி, அவரது கவனத்தைத் தங்கள் பால் ஈர்க்க முயற்சி செய்த போதும், மனம் பேதலிக்காமல், அவர்களை எனது வழியிலிருந்து விலகிச் செல்லுங்கள், அல்லையேல் திருவாரூர் பெருமான் உங்களை தண்டிப்பார் என்று எச்சரிக்கை விடுத்து, அகன்றார்.

பரந்து உலகேழும் படைத்த பிரானை

இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்

நிரந்தரமாக நினையும் அடியார்

இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே

பெருமான் ஏற்கும் பலியினை திருஞானசம்பந்தர் மக்களுக்கு நலம் பயக்கும் பலி என்று கள்ளில் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.119.6) குறிப்பிடுகின்றார். மேற்கண்டவாறு சிவபிரான் பலி ஏற்பது நம்மிடம் உள்ள தீய குணங்களை, மலங்களை அவனது பிச்சை பாத்திரத்தில் இட்டு நாம் தூய்மை அடைவதற்காகத் தான். இந்த கருத்தினை உள்ளடக்கி, மக்களுக்கு நன்மைகள் ஏற்பட பலியேற்கும் கொள்கை உடையவன் சிவபெருமான் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் நன்மை புரிய காத்திருக்கும் சிவபெருமானை நம்பன் என்று அழைத்து நாம் அவனை நம்பவேண்டும் என்பதை நமக்கு சம்பந்தர் உணர்த்துகினார். தன்னை அடைய விரும்பி தவம் புரிவோர்க்கு சிவபெருமான் அத்தகைய அடியார்களின் மலங்களை நீக்குவான் என்றும் இங்கே கூறுகின்றார்.

நலனாய பலி கொள்கை நம்பான் நல்ல

வலனாய மழுவாளும் வேலும் வல்லான்

கலனாய தலை ஓட்டான் கள்ளின் மேயான்

மலனாய தீர்த்து எய்து மாதவத்தோர்க்கே

பெருமானுக்கு நாம் இடும் பலி, அறம் வேண்டி (புண்ணியம் கருதி) இடப்படுவதால் இதனை அறப்பலி என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடும் கூறும் பாடல் (3.63.9) செங்காட்டங்குடி தலத்து பதிகத்தில் உள்ளது. இந்த பாடல் அகத்துறை வகையில் அமைந்த பாடல். நறவு=தேன் நறப்பொலி=தேன் நிறைந்த; நவில்–வாழ்கின்ற; குருகு=பறவை; உழல்வார்=திரிபவர்; அலர்=பழிச்சொல்; தான் பழிச்சொல்லுக்கு ஆளாகும் வகையில் பெருமான் தன்னுடன் இணையாமல் இருப்பது பெருமானுக்கு அழகா என்ற கேள்வியை இந்த பாடலில் தலைவி எழுப்புகின்றாள். தான் பெருமானிடம் ஆழமான காதல் கொண்டிருப்பதை அனைவரும் அறிந்த நிலையில், தான் பெருமானுடன் இணையாமல் இருந்தால் ஊரார் தன்னை தூற்றுவார்கள் என்றும் அந்த நிலை ஏற்படும் முன்னமே பெருமான் தனது காதலை ஏற்றுக்கொண்டு பெருமான், தன்னை அவனுடன் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று சம்பந்த நாயகியின் கூற்றாக அமைந்த பாடல் இது. பிறப்பிலியாகிய பெருமானின் நாமத்தை எப்போதும் பிதற்றும் தான் பெருமைக்குரிய நலன்களை இழப்பது தகுமா என்று தலைவி இறைவனை நோக்கி கேட்பதாக அமைந்த பாடல். இந்த பாடலின் உட்கருத்து, தலைவியாக உருவகபடுத்தப்பட்டுள்ள உயிர், பெருமானுடன் தான் இணையவேண்டும் என்ற விருப்பத்தை வெளியிடுகின்றது.

நறப்பொலி பூங்கழிக் கான் நவில் குருகே உலகெல்லாம்

அறப்பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே

சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய

பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ எம் பெருநலமே‘

பொழிப்புரை:

தனது சடையினில் இளம் பிறையினைச் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், பொன் போன்று ஒளி வீசும் தாழ்ந்த சடைகள் உடையவனாக, பிரமனின் கபாலத்தைத் தனது உண்கலனாக ஏந்திய வண்ணம், பல இடங்களுக்கும் சென்று ஊரார் இடும் பிச்சையை நாடும் உயர்ந்த தன்மை உடையவனாக திகழும் பெருமானை, நல்லூர் தலத்தினில் குடி கொண்டிருக்கும் பெருமானை, போற்றி வணங்கி அவனது புகழினைப் பாடும் அடியார்களை பாவங்கள் சென்று அடையா.

பாடல் 4:

நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை

நாத்த நெறியானை நல்லூர் பெருமானைக்

காத்த நெறியானைக் கைகூப்பித் தொழுது

ஏத்தும் அடியார்கட்கு இல்லை இடர் தானே

விளக்கம்:

ஞாத்த என்ற சொல் நாத்த என்று திரிந்தது. ஞாத்த என்றால் வகுத்த என்று பொருள். வேதங்கள் நாம் எவ்வாறு நாம் நமது வாழ்க்கையினை நடத்த வேண்டும் என்று வாழ்க்கை நெறிமுறைகளை உணர்த்துகின்றன. வேதங்களை முதன்முதலில் உலகுக்கு உணர்த்தியவன் பெருமான் என்பதால், வாழ்க்கை நெறிமுறைகளையும் நமக்கு உணர்த்தியவனாக பெருமான் விளங்குகின்றார். இந்த தன்மையே நாத்த நெறியான் என்ற சொல் மூலம் உணர்த்தப்படுகின்றது. இந்த நெறிமுறைகள், உண்மையான மெய்ப்பொருளை உணரவைத்து அந்த மெய்ப்பொருளின் திருப்பாதங்களை சென்றடைந்து சேரும் வழியில் நம்மை அழைத்துச் செல்வதால், இவற்றை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் முக்தி உலகினையே தனது வசம் கொண்டுள்ள பெருமானுக்கு இந்த நெறிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை அல்லவா; எனவே இந்த நெறிகளை அவன் பின்பற்றுவதில்லை என்ற செய்தியை உணர்த்தும் முகமாக நீத்த நெறியான் என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:

இயற்கையாகவே பந்த பாசங்களிலிருந்து நீங்கிய பெருமான், உலகியல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால், அவற்றை பின்பற்றாமல் விடுத்தவனும், இடைவிடாது என்றும் தவம் செய்தவண்ணம் இருப்பவனும், நாம் நமது வாழ்க்கையை எவ்வாறு நடத்தவேண்டும் என்று நெறிமுறைகளை வகுத்து அவற்றை உள்ளடக்கிய வேதங்களை அருளியவனும், அத்தகைய நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து வாழும் அடியார்களை பாதுக்கப்பதை தனது கொள்கையாக உடையவனும், நல்லூர் தலத்தினில் பொருந்தி உறைபவனும் ஆகிய பெருமானைத் தங்களது கைகளைக் கூப்பித் தொழும் அடியார்களுக்கு துன்பங்கள் ஏதும் நேராது.

பாடல் 5:

ஆகத்து உமை கேள்வன் அரவச்சடை தாழ

நாகம் அசைத்தானை நல்லூர் பெருமானைத்

தாகம் புகுந்து அண்மித் தாள்கள் தொழும் தொண்டர்

போக மனத்தராய் புகழத் திரிவாரே

விளக்கம்:

ஆகம்=மேனி; பெருமானைத் தொழும் அடியார்களுக்கு இடர்கள் ஏற்படாது என்று முந்திய பாடலில் உணர்த்திய திருஞானசம்பந்தர், இந்த பாடலில் இன்பங்கள் விளையும் என்று கூறுகின்றார். தாகம் புகுந்து=வேட்கை மிக்கவர்களாக; அண்மி=அணுக, நெருங்க; நமக்கு தாகம் எடுக்கும்போது நாம் தாகம் தீரும் வரை தண்ணீர் பருகுகின்றோம். அதே போன்று இறைவனை நெருங்கி, இறைவனது புகழினைப் பாடி போற்ற வேண்டும் என்ற உணர்வு நமது மனதில் எழவேண்டும் என்பதையே தாகம் நமது மனதினில் புகவேண்டும் என்று இங்கே கூறுகின்றார். அப்போது நாம் இறைவனை நினைத்து தொழுவோம் அல்லவா. போகம்=இன்பம்;

பொழிப்புரை:

தனது உடலின் ஒரு பகுதியில் தனது மனைவி உமையம்மையை வைத்துக் கொண்டிருக்கும் பெருமான், பாம்பணிந்த சடைகள் தொங்கித் தாழும் தோற்றத்துடன், பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக கட்டிக் கொண்டு தனது விருப்பம் போன்று அந்த பாம்பினை அசைப்பவனும், நல்லூர் தலத்தின் உறைபவனும் ஆகிய பெருமானை, வேட்கை மிகுந்தவர்களாக, அவன் இருக்குமிடத்தை நெருங்கி அவனது திருப்பாதங்களைத் தொழும் அடியார்கள், தங்களது மனதினில் இன்பம் நிறைந்தவர்களாக பலரும் புகழும் வண்ணம் உலகினில் வாழ்வார்கள்.

பாடல் 6:

கொல்லும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச

நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்

செல்லு நெறியானைச் சேர்ந்தார் இடர் தீரச்

சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே

விளக்கம்:

களியானை=மத யானை; உரி=தோல்; நல்ல நெறியான்=நன்னெறிகளை பின்பற்றி நடப்பவன்; செல்லு நெறியான்=அனைத்து உயிர்களும் சென்றடைய விருப்பும் முக்தி நெறியை உடையவன்;

பொழிப்புரை:

தாருகவனத்து முனிவர்களால் தன்னை அழிப்பதற்காக ஏவிவிடப்பட்ட மதயானை, தன்னை நோக்கி மிகுந்த வேகத்துடன் வருவதைக் கண்ட சிவபெருமான் அந்த மத யானையை அடக்கி, அதன் தோலை உரித்து தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக் கொண்டவர் ஆவார். இவ்வாறு இரத்தப்பசை நிறைந்த யானைத் தோலினைத் தனது உடலின் மீது அணிந்து கொண்ட சிவபிரானின் உடலுக்கு யானையின் தோல் ஏதேனும் கேடு விளைவிக்குமோ என்று பார்வதி தேவி அச்சம் கொண்டதையும் பொருட்படுத்தாமல் யானைத் தோலைத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டதன் மூலம், எந்த பொருளும் தனக்கு எந்தவிதமான கேட்டினையும் உண்டாக்காது என்பதையும், தேவியின் அச்சம் தேவையற்றது என்பதையும் உணர்த்தியவர் சிவபெருமான். நல்ல நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், அனைவர்க்கும் முன்மாதிரியாக விளங்கும் பெருமான், நல்லூர் தலத்தினில் உறைகின்றார். அந்த பெருமானை, உயிர்கள் தாங்கள் செல்லவேண்டும் என்று விரும்பும் முக்தி நெறியினை உடையவனை, சார்ந்து அவனது திருவடிகளை வணங்கும் அடியார்கள் அவனது புகழினை சொல்லும் அடியார்கள், தங்களது வாழ்வினில் எதிர்கொள்ளும் இடர்கள் நீங்கப்பெற்று, துன்பங்கள் அகற்றப்பட்டு, அதனால் வருத்தம் ஏதும் இல்லாதவராக விளங்குவார்கள்.

பாடல் 7:

எங்கள் பெருமானை இமையோர் தொழுது ஏத்தும்

நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லாத்

தம் கை தலைக்கு ஏற்றி ஆள் என்று அடி நீழல்

தங்கு மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே

விளக்கம்:

பெருமான் என்றால் பெருமைக்கு உரிய மகன் என்று பொருள். தலைவன் என்ற பொருளிலும் பயன்படுத்தப் படுகின்றது. இந்த பாடலில் அடியார்கள் பெருமானை, நீ எங்களை ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டுவதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு, என்றும் அவருக்கு மீளா அடிமையாக இருப்பதையே அடியார்களும் அருளாளர்களும் விரும்புகின்றனர். பல தேவாரப் பாடல்களில் தங்கள் மீளா அடிமையாக இருப்பதை உணர்த்தி, அடியார்கள் பெருமானுக்கு மீள் அடிமையாக இருக்க வேண்டும் என்பது உணர்த்தப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

பெருமான் தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்டு சூலைநோய் தீர்த்ததும் அன்றி, தனக்கு திருநாவுக்கரசு என்ற பெயரையும் சூட்டியதால் பெருமான் தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்டதை அப்பர் பிரான் உணர்ந்தார். தான் உணர்ந்ததை, அப்பர் பிரான் பல்லவ மன்னனின் ஆணையுடன் வந்த மந்திரிக்கு மறுமொழியாக உரைப்பதை நாம், அவரது மறுமொழித் தாண்டகத்தின் முதல் பாடலில் (6.98.1) உணரலாம். இந்தப் பாடலின் இறுதி வரியில் அப்பர் பிரான் மீளா ஆளாய், இறைவனது சேவடிக் கீழ் தஞ்சம் அடைந்ததாக கூறுகின்றார். இறைவனிடம் அன்பு பூண்ட அருளாளர்கள் தங்களை மீளா அடிமை என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமை அடைகின்றார்கள். இவ்வாறு இறைவனால் தான் ஆட்கொள்ளப் பட்டதை, மிகவும் பெருமையுடன் இறைவனது மீளா ஆளாக தான் இருக்கும் நிலையினை குறிப்பிட்டு அப்பர் பிரான் இந்த பதிகத்தைத் தொடங்குகின்றார்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில்

இடர்ப்படோம் நடலையில்லோம்

ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே

எந்நாளும் துன்பம் இல்லை

தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க வெண்

குழை ஓர் காதில்

கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடி

குறுகினோமே

திருநாரையூர் பதிகத்தின் கடைப் பாடலிலும் (6.74.10) அப்பர் பிரான் தன்னை மீளாத ஆள் என்று குறிப்பிடுகின்றார். வெளி செய்த வழிபாடு என்றால் அறிவொளியால் செய்த வழிபாடு என்று பொருள்.

மீளாத ஆள் என்னை உடையான் தன்னை வெளி செய்த வழிபாடு

மேவினானை

மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன்கூற்றின் உயிர்

மாள உதைத்தான் தன்னை

தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும்

தொலைவித்து ஆங்கே

நாளோடு வாள் கொடுத்த நம்பன் தன்னை நாரையூர் நன்னகரில்

கண்டேன் நானே

சிவபிரானுக்கு மீளாத அடிமையாக மாறுவது தான், அடியார்கள் இறைவனுக்கு செய்யக் கூடிய கைம்மாறு என்று உணர்த்தும் அப்பர் பிரான் நம் அனைவரையும் சிவபிரானுக்கு மீளா அடிமையாக மாறச் சொல்வதை நாம், திருவையாறு (4.40.7) பதிகத்தின் ஒரு பாடலில் காணலாம். பூங்கொத்துகள் மலர்கின்ற வசந்த காலத்திற்கு அரசன் என்று மன்மதனை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

கீள் அலால் உடையும் இல்லை கிளர்பொறி அரவம் பைம்பூண்

தோள் அலால் துணையும் இல்லை தொத்தலர்கின்ற வேனில்

வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா

ஆள் அலால் கைம்மாறு இல்லை ஐயன் ஐயாறனார்க்கே ,

சுந்தரமூர்த்தி நாயனாரும் தனது முதல் பதிகத்தில், தான் இறைவனுக்கு அடிமை என்பதை உணர்த்தும் வண்ணம். உனக்கு அடிமையாக நான் இல்லை என்று இனிமேலும் கூறலாமோ என்று பொருள்பட உனக்கு ஆளாய் அல்லேன் இனி எனலாமோ என்று பொருள் பட பதிகத்தின் (7,1) முதல் ஒன்பது பாடல்களையும் முடிப்பதை நாம் உணரலாம். பதிகத்தின் கடைப் பாடலில், ஆரூரன் பெருமாற்கு ஆள் அல்லேன் எனலாமே என்று முடிக்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா

எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை

வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர்

அருட்துறையுள்

அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

இறைவனிடம் அடிமைத்திறம் கொண்டுள்ள நாம், நமது வாழ்நாள் முழுவதும், அந்த அடிமைத் திறத்திலிருந்து மீளாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்ததால் தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் (7.95) சொல்லிக் கொள்கின்றார். இந்த பாடலில், மற்ற தெய்வங்களைத் தான் வேண்டாது இருந்த நிலையினையும், தனக்கு எத்தனை இடர்கள் வந்த போதிலும் சிவபெருமானுக்கு அடிமையாக இருந்த தனது நிலையிலிருந்து தான் மீளாது இருந்த தன்மையையும் சுந்தரர் கூறுகின்றார். தனது கண்பார்வையை இறைவன் பறித்ததால் தனது நெஞ்சம் மிகவும் வருந்துவதையும், அதனால் முகம் மிகவும் வாடி இருப்பதையும் கூறும் சுந்தரர், தான் ஏதும் கூறாமலே சிவபிரான் தனது வருத்தத்தின் காரணத்தை புரிந்துகொண்டு ஆவன செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்ததால் (தோழமை நிமித்தம்) தான் தனது குறையை சொன்ன பின்னரும் சிவபிரான் ஏதும் செய்யாமல் இருந்த நிலை சுந்தரரை மிகவும் கோபம் கொள்ளச் செய்தது போலும். நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் ஒருவரை நாம் அணுகும்போது, நமக்கு உதவக்கூடிய நிலையில் இருந்தும் அவர் நமக்கு உதவி செய்ய மறுத்தாலோ, தாமதம் செய்தாலோ, நாம் அவர் பால் கோபம் கொண்டு, நீர் எனக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, நன்றாக வாழுங்கள் என்று நாம் பல சமயங்களில் கூறுகின்றோம் அல்லவா. இதே மன நிலையில் இருந்த சுந்தரர், சிவபெருமானை, எமக்கு உதவி செய்யாத நீர் வாழ்ந்து போதீரே என்று சொல்கின்றார்.

மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே

மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி

ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்

வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலில், அப்பர் பிரான், சிவபெருமானுக்கு மீளாத அடிமையாக இருந்து, மெய்ப்பொருளாகிய சிவபெருமானை அடையாத மனிதர்களை, வீணான வாழ்க்கை வாழ்பவர்கள் என்று கூறுகின்றார். அறிவு வளர்ச்சி பெற்று, ஒரு வேலையில் அமர்ந்து பொருள் ஈட்டும் திறம் பெற்று, தனது காலில் நிற்கும் தன்மையை அடைந்த மனிதனை நாம் ஆளாகி விட்டான் என்று கூறுகின்றோம். ஆனால் அப்பர் பிரான் ஆளாக கருதுவது, பெருமானது அடியார்களைத் தான். ஏனென்றால் அவர்கள் தானே, நிலையான இன்பம் அளிக்கக் கூடிய முக்தி நிலைக்கு செல்வதற்கான வழியில் அடியெடுத்து வைத்தவர்கள். அவ்வாறு ஆளாகாத ஒருவன், சிவபெருமானின் அடியார் ஒருவரை அணுகி, ஆளாகும் நிலையினை அடைந்து உய்வினை அடைய வேண்டும் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.

ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்

தோளாத சுரையோ தொழும்பர் செவி

வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

பட்டி என்ற சொல்லுக்கு மீளா அடிமை என்று பொருள். சோற்றுத்துறை மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (5.33.3) தனது நெஞ்சத்திற்கு, பட்டியாய் சிவபெருமானுக்கு பணி செய் மட நெஞ்சமே என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இது நமக்கு உணர்த்தும் அறிவுரையாகும். தனது நெஞ்சத்திற்கு சொல்வது போல் நமக்கு அறிவுரை கூறுவது அப்பர் பிரானின் பாணி. நமது உயிருடன் ஒட்டி இருக்கும் பிறவிப்பிணி எனப்படும் நோயினையும் உயிருடன் பிணைந்து இருக்கும் வினைகளையும், நாம் கழிக்க வேண்டும் என்று விரும்பினால், பெருமானின் திருவடிகளை மனதினால் தொட்டு இறைவனுக்கு அடிமையாக மாறி அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

ஒட்டி நின்ற உடலுறு நோய் வினை

கட்டி நின்ற கழிந்து அவை போயறத்

தொட்டு நின்றும் அச் சோற்றுத்துறையர்க்கே

பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே

இறைவனைத் தொழும் நிலையில் நமது உடல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மணிவாசகர் திருச்சதகம் பதிகத்தின் முதல் பாடலில் சொல்வதைப் போன்று பொருத்தமாக வேறு எவராலும் சொல்ல இயலாது. கைகள் கூப்பி, வாயினால் தோத்திரங்களை உச்சரித்தாலும், நமது மனம் நமது கட்டுப்பாட்டில் இராமல் எங்கோ சஞ்சரித்தால், நாம் செய்யும் வழிபாட்டில் உருக்கம் ஏற்படாது. மனம் ஒன்றி செய்யப்படும் வழிபாடு தான், மனதினை நெகிழ்வித்து உள்ளம் உருகும் நிலைக்கு வழி வகுக்கும். அந்த நிலையில் உடலில் பல மாறுதல்கள் ஏற்படும், உடல் புளகாங்கிதம் அடைதல், கண்ணீர் ததும்புதல், பேச்சு எழாத நிலை ஏற்படுதல், உடல் நடுங்குதல், பொய்யான வெளித்தோற்றங்களைத் தவிர்த்தல், முதலானவை அந்த மாறுதல்கள். இத்தகைய மாறுதல்கள் ஏற்படும் வண்ணம், தான் உள்ளம் உருகி இறைவனை வழிபடுவதாக குறிப்பிடும் மணிவாசகர், இவ்வாறு வழிபடும் தன்னை இறைவன் அடிமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த பாடலில் இறைஞ்சுகின்றார். அரும்பி=புளகாங்கிதம் கொண்டு, விரை=நறுமணம்; ததும்பி=இமைகள் வழியாக வழியும் அளவு நிரம்பி; உடையாய்=என்னை அடிமையாக உடையவனே; கண்டு கொள்ளே=எனது இயல்பினை கண்டு அடிமையாக ஏற்றுக் கொள்வாயாக

மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரை ஆர் கழற்கு என்

கை தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்

பொய் தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும்

கை தான் நெகிழவிடேன் உடையாய் என்னை கண்டு கொள்ளே

பொழிப்புரை:

பெருமைக்குரிய எங்களது தலைவனும், தேவர்களால் தொழுது வணங்கப்படும் எமது தலைவனும் ஆகிய எங்கள் பெருமானை, நல்லூர் தலத்தினில் என்றும் பிரியாமல் இருப்பவனும் ஆகிய சிவபெருமானை, தமது கைகளை தலையின் மேலே தூக்கி வைத்துக் கொண்டு, தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு அருள் புரிவாயாக என்று வேண்டிய வண்ணம், பெருமானின் திருவடி நிழலில் தங்குவதற்கு விருப்பம் கொண்டவர்களாகத் திகழும் அடியார்களுக்கு மனதினில் எந்த விதமான தடுமாற்றமும் இருக்காது.

பாடல் 8:

காமன் எழில் வாட்டி கடல் சூழ் இலங்கைக் கோன்

நாமம் இறுத்தானை நல்லூர்ப் பெருமானை

ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர்

தீப மனத்தார்கள் அறியார் தீயவே

விளக்கம்:

நாமம்=புகழ்; இறுத்தல்=உடைத்தல், முறித்தல், கெடுத்தல்; ஏமம்=பாதுகாப்பு; தீபம்=ஒளி, இங்கே ஞானவொளி; .

பொழிப்புரை:

அழகில் சிறந்தவன் என்ற புகழ் படைத்த மன்மதனின் அழகான உடல் அழியும் வண்ணம் அவனை எரித்து அழித்தவனும், கடலால் சூழப்பட்ட இலங்கை தீவுக்கு மன்னன் இராவணன், கயிலாய மலையனை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, அளவற்ற வலிமை உடையவன் என்ற அவனது புகழ் கெடும் வண்ணம் அவனை கயிலாய மலையின் கீழே நெருக்கியவன் சிவபெருமான். அத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான் நல்லூர் தலத்தினில் உறைகின்றார். அவரை விடவும் சிறந்த பாதுகாப்பு நமக்கு ஏதுமில்லை என்ற எண்ணத்துடன், எந்த விதத்திலும் அவரை இகழாது, அவரது புகழினை எடுத்துரைக்கும் அடியார்கள், ஞானம் பெற்றவர்களாக, கெடுதல் விளைவிக்கும் செயல்கள் எவை என்பதையும் அறியாதவர்களாக விளங்குவார்கள்.

பாடல் 9:

வண்ண மலரானும் வையம் அளந்தானும்

நண்ணல் அரியானை நல்லூர்ப் பெருமானைத்

தண்ண மலர் தூவித் தாள்கள் தொழுது ஏத்த

எண்ணும் அடியார்கட்கு இல்லை இடுக்கணே

விளக்கம்:

வண்ணம்=சிறந்த செம்மை வண்ணம்; நண்ணல்=நெருங்குதல்; அன்பு கொண்ட மனத்தவர்களாக பெருமானை நெருங்கும் அடியார்களால் அவனை உணரமுடியும்; பெருமான் மீது அன்பு வைக்காமல், தங்களது வலிமையில் நம்பிக்கை கொண்டவர்களாக பெருமானின் அடியையும் முடியும் தேடும் முயற்சியில் ஈடுபட்டதால் தான் பிரமன் மற்றும் திருமாலால் தங்களது முயற்சியில் வெற்றி பெறமுடியவில்லை.

பொழிப்புரை:

சிறந்த செம்மை வண்ணத்தில் அமைந்துள்ள செந்தாமரை மலர் மீது உறையும் பிரமனும், தனது இரண்டு திருவடிகளால் மூவுலகினையும் அளந்த திருமாலும், தங்களது முயற்சியால் பெருமானின் திருமுடியையும் திருவடியையும் கண்டு அளந்துவிடலாம் என்று முயன்ற போதிலும், அவர்களால் நெருங்க முடியாத வண்ணம் நெடுந்தழலாக நிமிர்ந்து நின்றவன் சிவபெருமான். இத்தகைய ஆற்றல் உடைய பெருமான் நல்லூர் தலத்தினில் உறைகின்றான். இந்த பெருமானின் திருமேனி மீது குளிர்ந்த மலர்களைத் தூவி அவனது திருவடிகளைத் தொழுது புகழ்ந்து வணங்கி தியானம் செய்யும் அடியார்களுக்கு இடுக்கண் ஒருபோதும் ஏற்படாது.

பாடல் 10:

பிச்சக் குடை நீழல் சமணர் சாக்கியர்

நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை

நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை

எச்சும் அடியார்கட்கு இல்லை இடர் தானே

விளக்கம்:

பிச்சக்குடை=மயிற்பீலியால் அமைந்த குடை; நிச்சம்=தினமும், எப்போதும்; அலர்=வீண் பழிச் சொற்கள்; மிடறு=கழுத்து; ஏச்சும் என்ற சொல் எதுகை கருதி எத்தும் என்று திரிந்தது.

பொழிப்புரை:

மயிற்பீலியால் அமைந்த குடையின் நிழலில் திரியும் சமணர்கள் மற்றும் சாக்கியர்கள், எப்போதும் சிவபெருமான் மீது வீணான பழிச் சொற்கள் தூற்றுவதையே தங்களது தொழிலாகக் கொண்டுள்ளனர். நீர் அனைவரும் அந்த சொற்களை புறக்கணிப்பீர்களாக. உலகத்தவரைக் காப்பாற்றும் பொருட்டு, ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கியவனும், நல்லூர் தலத்தினில் உறைபவனும் ஆகிய சிவபெருமானை புகழ்ந்து கூறும் அடியார்களுக்கு, அவர்களது வாழ்க்கையில் துன்பம் ஏதும் ஏற்படாது.

பாடல் 11:

தண்ணம் புனல் காழி ஞான சம்பந்தன்

நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை

வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார்

விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே

விளக்கம்:

தண்ணம்=குளிர்ந்த; புனல்=நீர்நிலைகள்; வண்ணம்=தன்மைகள்; புனை மாலை=எடுத்துச் சொன்ன பாமாலை;

பொழிப்புரை:

குளிர்ந்த நீரால் சூழப்பட்ட சீர்காழி நகரினைச் சார்ந்த ஞானசம்பந்தன், நீர்நிலைகளை வேலியாக உடைய நல்லூர் தலத்தினில் உறையும் பெருமானைப் புகழ்ந்து, இறைவனது தன்மைகளை உள்ளடக்கி இயற்றிய பாமாலைகளை தினமும் பாடி, இறைவனைப் புகழும் அடியார்கள், விண்ணோர்களும் மண்ணோர்களும் புகழும் வண்ணம் புகழுடன் விளங்குவார்கள்.

முடிவுரை:

மனம் ஒன்றி முறையாக தொடர்ந்து பெருமானை வணங்கி வழிபடுவோரின் சிந்தனை திருத்தப்பட்டு, தெளிவான சிந்தைனயுடன் அவர்கள் இருப்பார்கள் என்பதை பல அருளாளர்களும் கூறியுள்ளனர். அதன் விளைவாக பண்பட்ட மனத்துடன் வாழும் அடியார்கள் எத்தகைய தன்மை உடையவர்களாக இருப்பார்கள் என்றும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் யாவை என்பதையும் இந்த பதிகத்தின் பாடல்களில் திருஞானசம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். முதல் பாடலில் இறைவன் பால் அன்பு நாள்தோறும் தவறாமல் இரண்டு பொழுதிலும் வணங்கும் அடியார்கள், பாவச்செயல்கள் என்ன என்பதை அறியாதவர்களாக பாவங்கள் செய்யாமல் இருப்பார்கள் என்றும், குற்றமற்றவர்களாக இருப்பார்கள் என்று இரண்டாவது பாடலிலும், அவர்களை பாவம் சென்று அடையாது என்று மூன்றாவது பாடலிலும், அவர்கள் செய்ய முயலும் செயல்களில் இடையூறு ஏற்படாது என்று நான்காவது பாடலிலும், அவர்களுக்கு துன்பம் ஏதும் நேராமல் இருப்பதால், எப்போதும் இன்பத்தையே அனுபவித்து புகழுடன் விளங்குவார்கள் என்று ஐந்தாவது பாடலிலும், துன்பம் நேராமல் இருப்பதால் துக்கம் என்ன என்பதை அறியாதவர்களாக இருப்பார்கள் என்று ஆறாவது பாடலிலும், அவர்களது மனதினில் தடுமாற்றம் ஏதும் இன்றி உறுதியான சிந்தனையுடன் இருப்பார்கள் என்று ஏழாவது பாடலிலும், ஞானம் பெற்ற மனத்துடன் திகழும் அவர்கள் தீய செயல்கள் குறித்து அறியாதவர்களாக இருப்பார்கள் என்றும் எட்டாவது பாடலிலும், அவர்கள் துன்பமற்ற வாழ்வு வாழ்வார்கள் என்று ஒன்பதாவது பாடலிலும், அவர்களது வாழ்வினில் எந்தவிதமான இடையூறும் குறுக்கிடாது என்று பத்தாவது பாடலிலும் குறிப்பிட்டு, பெருமானைத் தொழுவதால் நம்மிடம் ஏற்படும் நல்ல மாற்றங்களை திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில் பதிகத்தினை முறையாக பாடும் அடியார்கள் மண்ணோரும் விண்ணோரும் புகழ வாழ்வார்கள் என்று கூறுகின்றார். இந்த பதிகம் மூலம் பெருமானின் அடியார்களின் தன்மைகளையும், அத்தகைய தன்மைகளால் அவர்கள் அனைவரும் புகழும் வண்ணம் வாழ்வதையும் புரிந்து கொள்ளும் நாம், தொடர்ந்து பெருமானை வழிபாட்டு, ஞானசம்பந்தர் காட்டும் பாதையில் சென்று இம்மையில் இன்பமாக வாழ்ந்து மறுமையில் முக்தி உலகம் சென்றடைந்து, அழியாத பேரின்பத்தோடு இருப்போமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Kottum Parai cheeraal
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

கொட்டும் பறை சீரால்


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: