Go Back

22/03/21

வேதம் ஓதி வெண்ணூல்


பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருவியலூர், திருந்துதேவன்குடி, இன்னம்பர், வடகுரங்காடுதுறை முதலிய பல தலங்கள் சென்று இறைவனைப் புகழ்ந்து பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர், அடுத்து திருப்பழனம் தலம் சென்றதாக பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். பங்கயம்=தாமரை பூக்கள்; அழல் நக்க பங்கயப் பூக்கள்=கொழுந்து விட்டெரியும் தீப்பிழம்பின் நிறத்தையும் பழித்து தோற்கடிக்கும் வண்ணம் சிவந்த செந்தாமரை பூக்கள்; விழை=விழையும், விரும்பும்; வாவி=குளம்;

பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில்

உடை புக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையாராகி

விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார்

அழல் நக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார்

இந்த தலம் கும்பகோணம் திருவையாறு சாலையில் திருவையாற்றிலிருந்து நான்கு கி.மீ, தூரத்தில் உள்ளது. பழனம் என்றால் வயல் என்று பொருள். அழகிய வயல்கள் நிறைந்த தலம் என்பதால் பழனம் என்பதே ஊரின் பெயராக அமைந்துவிட்டது என்று கூறுவார்கள். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் ஒன்றும், அப்பர் பிரான் அருளிய ஐந்து பதிகங்களும் இதுவரை நமக்கு கிடைத்துள்ளன. இறைவனின் பெயர் ஆபத்சகாயேச்வரர், அமுத லிங்கேஸ்வரர், சுதாலிங்கமூர்த்தி, சோதி வானவன்; அம்பிகையின் திருநாமம் பெரியநாயகி. இறைவன் சுயம்பு லிங்கம். உயர்ந்த பாணம் கொண்ட அழகிய மூர்த்தம். சந்திரன், கௌசிக முனிவர், குர்சர் முனிவர், திருமகள், திருமால், சூரியன் சிறுவன் சுசரதன், ஆகியோர் வழிபாட்டு பயனடைந்த தலம். கௌதம முனிவர் தனக்கு கிடைத்த அமுதத்தால் செய்யப்பட்ட இலிங்கத்திற்கு அமுதலிங்கம் என்று பெயர் வந்தது என்றும் கூறுவார்கள். பங்குனி மற்றும் புரட்டாசி மாதங்களில், பௌர்ணமி தினத்திற்கு முன்தினம் மற்றும் அடுத்த நாளில் சந்திரனின் கதிர்கள் மூலவர் மீது விழுவதை சந்திரன் செய்யும் வழிபாடு என்று கூறுவார்கள். சந்திரன் வழிபட்டமையால் பிறையானேசுவரர் என்று அழைக்கப்பட்ட திருநாமம், பிரயாணேசுவர் என்று மாறியதாகவும் கூறுகின்றனர்.

சுசரிதன் எனும் சிறுவன் தனது சிறுவயதில் பெற்றோர்களை இழந்தான். அவனது தாய் இறக்கும் சமயத்தில், தனது மகனின் தொடையில் தலை வைத்து படுத்துக் கொண்டு இருந்த போது, மகனை நோக்கி இனிமேல் சிவபெருமான் தான் அவனுக்கு தாயும் தந்தையுமாய் இருந்து காப்பாற்றுவார் என்று உணர்த்தி, பல சிவ தலங்கள் சென்று இறைவனைப் பணிந்து வணங்குமாறு ஆலோசனை கூறினாள். தாயின் சொற்படி பல தலங்கள் சென்று வணங்கிய சுசரிதன், ஒரு நாள் திருப்பழனம் வந்தடைந்தான். இறைவனைக் கண்டு வணங்கிய பின்னர் இந்த தலத்தில் தங்கி உறங்கினான். நடு இரவில் யாரோ கதவு தட்டும் ஓசை கேட்கவே, சிறுவன் எழுந்து கதவைத் திறந்த போது, அவன் எதிரே காலதேவன் இருப்பதைக் கண்டான். கன்னங்கரிய உடலுடன், மடித்த உதடுகளுடன் அனல் கக்கும் விழிகளுடன் தோன்றிய, இயமன், சிறுவனிடம் சிறுவனது ஆயுட்காலம் அடுத்த ஐந்து நாட்களில் முடிவடைந்துவிடும் என்று கூறினான். இயமனைக் கண்டு அச்சம் கொள்ளாமல், அவனது சொற்களைக் கேட்ட சிறுவன், தனக்கு மரணம் நேரிடும் என்ற வார்த்தையைக் கேட்ட போது வருந்தினான். அவனது வருத்தம் இறப்பினைப் பற்றி அறிந்ததால் அல்ல. தனது தாய் அறிவுரை கூறிய வண்ணம், சிவபெருமான் உறையும் பல தலங்களை காணாமல், இறந்து விடுகின்றோமே என்பது தான். பெருமானைத் தவிர்த்து தனக்கு உறவு என்று சொல்லிக் கொள்வதற்கு வேறு எவரும் இல்லாததால், இறைவனிடம் சென்று முறையிட விரும்பினான்.

மறுநாள் காலை எழுந்தவுடன், பழனத்தில் உள்ள திருக்கோயில் சென்று, தனது மன வருத்தத்தை இறைவனிடம் சொல்லி அந்த சிறுவன் அழுததை, செவி சாய்த்த பெருமான், சிறுவனிடம் திருவையாறு சென்று ஐயாரப்பரை வழிபடுமாறும், தக்க சமயத்தில் தான் தோன்றி காப்பதாகவும் சிறுவனுக்கு ஆறுதல் கூறினார். திருவையாறு தலத்திற்கு பயணம் செய்யுமாறு பணித்த இறைவனை, தான் தக்க சமயத்தில் தோன்றி காப்பாற்றுவதாக வாக்கு அளித்த இறைவனை, பிரயாண நாதேசுவரர் என்றும் ஆபத்சகாயர் என்றும் அழைக்கின்றனர். சோதி வடிவத்தில் அந்த சிறுவனுக்கு, திருப்பழனம் மற்றும் திருவையாறு தலங்களில் காட்சி கொடுத்தமையால், இறைவனுக்கு சோதி வானவர் என்ற பெயரும் வந்தது.

இறைவனின் கட்டளைப் படியே, சிறுவன் சுசரிதன் திருவையாறு சென்று தெற்கு கோபுர வாயிலில் அமர்ந்து சிவபெருமானின் திருநாமங்களை எப்போதும் தியானம் செய்த வண்ணம் இருந்தான். முன்னமே சொல்லிய வண்ணம் ஐந்தாவது நாள் இரவு நேரத்தில், இயமன் திருவையாறு அடைந்து சிறுவனின் உயிரைக் கவர நினைத்த போது, சிவபெருமான் அப்போது தோன்றி இயமனை காலால் உதைத்து சிறுவன் பல்லாண்டுகள் வாழும் வண்ணம் அருள் புரிந்தார். சிறுவனும் பல தலங்கள் சென்று இறைவனை வழிபட்டு மகிழ்ந்தான். திருவையாறு கோயிலில் தெற்கு வாயிலில் உள்ள மூர்த்தத்திற்கு ஆட்கொண்டார் என்று பெயர். அமுதம் உட்கொள்வோரின் ஆயுளை நீட்டிப்பதைப் போன்று சிறுவனின் ஆயுட்காலத்தை நீட்டித்ததால், இறைவனுக்கு அமுத லிங்கேஸ்வரர் என்ற பெயரும் சுதாலிங்க மூர்த்தி என்ற பெயரும் வந்ததாக கூறுவார்கள்.

தான் மரணத்தை எதிர்நோக்கிய தருணத்திலும், மரணம் ஏற்படுவதையும் பொருட்படுத்தாமல் இடைவிடாது பெருமானின் திருநாமத்தைச் சொல்லியவாறு இருந்ததால், சுசரிதன் என்ற சிறுவனுக்கு பெருமானின் அருள் கிடைத்ததைப் ஒன்று தனக்கும் பெருமானின் அருள் கிட்டவேண்டும் என்ற ஆசையுடன், அப்பர் பிரான், பல பாடல்களில் தான் இறக்கும் தருவாயில் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கும் வண்ணம் பெருமான் அருள் புரியவேண்டும் என்று வேண்டுகின்றார். அத்தகைய பாடல் ஒன்று இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகம் ஒன்றினில் காணப்படுவது பொருத்தமாக உள்ளது. இறக்கும் காலம் என்பதனை கண் துஞ்சி மறையும் காலம் என்று மங்களகரமாக கூறுகின்றார். உயிர் போகும் தருவாயில் அனைத்து அங்கங்களும் ஒடுங்கிய நிலையில், எவரும் அந்நாள் வரை செய்து வந்த வழிபாட்டினைத் தொடரமுடியாமல் போவது உலக இயற்கை. ஆனால் அப்பர் பிரான் அந்த தருணத்திலும், தான் சிவபெருமானைத் தொழவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி, அந்த ஆசையினையே தனது வேண்டுகோளாக இறைவனிடம் சமர்பிப்பிக்கும் அழகினை இந்த பதிகத்தின் (4.12) பாடலில் நாம் காணலாம். அன்றாடம் சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபடும் வழக்கம் கொண்ட அடியார்கள், பூஜை முடிந்த பின்னர் சிவபெருமானை பெட்டகத்தில் வைக்கும்போது ஓதவேண்டிய பாடலாக இந்த பாடல் கருதப் படுகின்றது.

மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மா தீர்த்த வேதியர்க்கும்

விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை

பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என்

கண் பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனோ

இந்த மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கும், தூய்மையான வேதியர்களுக்கும், மற்றும் விண்ணுலகத்தில் வாழும் தேவர்களுக்கும் முக்திநிலை அளிக்கக்கூடிய சிவபிரானை, அவனது அடியார்கள் பண்ணோடு பொருந்திய பாடல்களைப் பாட அதனைக் கேட்டு இன்பமுறும் பழனத்து அப்பனை, நான் இறக்கும் தருவாயில் நினைக்காமல் போய்விடுவேனோ என்று அஞ்சுகின்றேன். அவ்வாறு ஏதும் ஏற்படாதவாறு, நான் அந்த சமயத்திலும் உன்னை நினைக்குமாறு நீ அருள் புரிய வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாடல் 1:

வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப்

பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரி தோலார்

நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று

பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே

விளக்கம்:

இந்த பாடலில் ஞானசம்பந்தர் நம்பன் என்று இறைவனை அழைக்கின்றார். நம்பன் என்றால் விரும்புவதற்கு உரிய தகுதி படைத்தவன் என்று பொருள். இறைவன் நமக்கு பல விதங்களிலும் நன்மை செய்தும், நமது பல வேண்டுகோளை நிறைவேற்றியும் அருள் புரிவதால், நாம் விருப்பம் கொள்வதற்கு அவனை விடவும் அதிகமான தகுதி படைத்தவர் வேறு எவரும் இல்லை அல்லவா. இந்த பாடலில் நாதா என்றும் நம்பா என்றும் நக்கா என்றும் தன்னை அழைத்து, தனது திருவடிகளைத் தொழுது நிற்கும் அடியார்களின் பாவங்களை முற்றிலும் தீர்த்து நன்மை புரிபவர் பழன நகரத்தின் இறைவன் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நம்பன் என்று இறைவனைக் குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்துவதில் திருஞானசம்பந்தருக்கு நாட்டம் இல்லாமல் இருந்தது. எனினும், வேதநெறி தழைத்து ஓங்க அவதாரம் செய்த அவர், வேதநெறியில் குறிப்பிடப்படும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வது தவறு அவரது தந்தையாரும் மற்ற பெரியோர்களும் குறிப்பிட்டு வற்புறுத்தவே, தனக்கு முழு விருப்பம் இல்லாதபோதிலும், திருமணம் செய்து கொள்வதற்கு ஞானசம்பந்தர் இசைகின்றார். நல்லூர் பெருமணம் என்று அழைக்கப்பட்ட தலத்தில் (இன்றைய பெயர் ஆச்சாள்புரம்) திருமணம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. திருமண நாளன்று, திருஞானசம்பந்தர் இறைவனை நோக்கி, இறைவனே உன்னிடம் நான் எப்போதும் மணவாழ்க்கை அமையவேண்டும் என்று வேண்டவில்லையே, எனது பதிகங்கள் எனது உண்மையான விருப்பத்தை உனக்கு தெரிவிக்கவில்லையா, ஏன் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து செய்யப்படும் திருமண வாழ்க்கையை எனக்கு நேரிடும் வண்ணம் செய்தாய் என்று இறைவனிடம் தனது கோரிக்கையை விடுக்கின்றார். தனது விருப்பங்கள் (பிறரின் நலனுக்காக விடுத்த வேண்டுகோள் பலவற்றையும் நிறைவேற்றிய பெருமானை நம்பானே என்று இந்த பாடலில் அழைக்கின்றார். நம்பனே என்ற சொல் நம்பானே என்று நீண்டது. கல்லூர்ப் பெருமணம் என்று தொடங்கும் இந்தப் பதிகம் (3.125) பாடி முடிக்கப் பட்ட பின்னர் வானிலிருந்து எழுந்த ஒரு அசரீரி வாயிலாக பெருமான், ஞானசம்பந்தர் விடுத்த வேண்டுகோளினை ஏற்று கொண்டதை தெரிவிக்கின்றார். திருமணம் முடிந்ததும், திருக்கோயிலில் தோன்றும் ஒரு சோதியின் வழியே உட்புகுந்து, தன்னை வந்து அடையுமாறு ஞானசம்பந்தரை பணிக்கின்றார். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் முன் செல்ல, ஞானசம்பந்தர் தனது மனைவியுடன் அந்த சோதியின் உள்ளே புகுந்து, சிவலோகம் சென்றடைந்தார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு அடியார்கள் விடுக்கும் வேண்டுகோளினை நிறைவேற்றும் பெருமானை, விரும்புவதற்கு உரியவன் என்று அழைப்பது தானே பொருத்தம்.

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்

பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய் ஆய்த்தில

சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர்

நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே

கள்ளில் என்ற தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.119.6) பெருமான் ஏற்கும் பலியினை திருஞானசம்பந்தர் மக்களுக்கு நலம் பயக்கும் பலி என்று குறிப்பிடுகின்றார். மேற்கண்டவாறு அப்பர் பிரான் சிவபிரான் பலி ஏற்பது நம்மிடம் உள்ள தீய குணங்களை, மலங்களை அவனது பிச்சை பாத்திரத்தில் இட்டு நாம் தூய்மை அடைவதற்காகத் தான். இந்த கருத்தினை உள்ளடக்கி, மக்களுக்கு நன்மைகள் ஏற்பட பலியேற்கும் கொள்கை உடையவன் சிவபெருமான் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் நன்மை புரிய காத்திருக்கும் சிவபெருமானை நமது விருப்பத்திற்கு உரியவன் என்று அழைத்து நாம் அவனை ஏன் விரும்பவேண்டும் என்பதையும் நமக்கு சம்பந்தர் உணர்த்துகினார். தன்னை அடைய விரும்பி தவம் புரிவோர்க்கு சிவபெருமான் அத்தகைய அடியார்களின் மலங்களை நீக்குவான் என்றும் இங்கே கூறுகின்றார்.

நலனாய பலி கொள்கை நம்பான் நல்ல

வலனாய மழுவாளும் வேலும் வல்லான்

கலனாய தலை ஓட்டான் கள்ளின் மேயான்

மலனாய தீர்த்து எய்து மாதவத்தோர்க்கே

எண்ணற்ற பல பிறவிகளில் செய்த செயல்கள் காரணமாக, உயிர்கள் சேர்த்துக் கொண்டுவரும் வினைகளை, வலிமையாக உயிருடன் பற்றியுள்ள வினைகளை, உயிர்கள் நுகர்ந்து தான் கழித்துக் கொள்ள முடியும். ஆனால் மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து அந்த வினைகளை நுகர்ந்து கழிக்கும் முயற்சியில், உயிர்கள் மேலும் பல புதிய வினைகளை (ஆகாமிய வினைகள் என்று சொல்வார்கள்) சேர்த்துக் கொள்வதால், புதியதாக சேர்ந்த அந்த வினைகளை கழிக்கும் முயற்சியில் மேலும் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றன. இவ்வாறு பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு மீளமுடியாமல் தவிக்கும் உயிர்கள் தங்களின் வினைகளை எளிதில் தீர்த்துக் கொள்வதற்கு உள்ள ஒரே வழி சிவபெருமானை வழிபடுவது தான் என்பதால், உயிர்கள் விரும்புவதற்கு உரியவனாக சிவபெருமான் இருக்கின்றார் என்று உணர்த்தும் பாடல் ஈங்கோய் மலை தலத்தின் மீது அருளப்பட்ட பாடலாகும் (1.70.7). வேறு எவராலும் தீர்க்கமுடியாத வினைகளை தீர்க்கும் வல்லமை வாய்ந்தவர் சிவபெருமான் என்பதால், அவரை விகிர்தா என்று சம்பந்தர் இங்கே அழைக்கின்றார். விகிர்தர் என்றால் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர் என்று பொருள். தனையார்=பூக்களில் சிறந்த பூவாக இருப்பதால், தலைமையான பூ என்று தாமரை மலரை குறிப்பிடுகின்றார். மறுவாழ்வு அளித்தமையால் சந்திரன் விரும்பும் தன்மையில் உள்ள பெருமான், தீர்க்க முடியாத வலிய வினைகளைத் தீர்ப்பதால், உயிர்கள் விரும்பும் தகுதி படைத்தவனாக உள்ளான் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன் விரி

கொன்றை

நனையார் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நல மல்கு

தனையார் கமல மலர் மேல் உறைவான் தலையோடு

எனை ஆளுடையான் உமையாளோடும் ஈங்கோய்

மலையாரே

அனைவரும் விரும்புவதற்கு தகுதி வாய்ந்தவராக விளங்கும் பெருமானின் தன்மையை புரிந்து கொள்ளாமல், அவரை விரும்பித் தொழுவதற்கு பதிலாக, சிரித்து ஏளனம் செய்யும் சமணர்கள் மற்றும் புத்தர்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் பரிதாப நிலையினை இந்த பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார். சிக்கார்=சிக்கு பிடித்த உடை; தட்டு=ஓலைத் தடுக்கு; சிறிய ஓலைத் தடுக்கையே தங்களது உடையாகக் கொண்ட சமணர்கள்; பெருமானின் தன்மையை புரிந்து கொண்டு, மறைகளை ஓதி, வேள்விகள் செய்தும் மிகுந்த விருப்பத்துடன் பெருமானை வழிபடும் வீழி மிழலை அந்தணர்கள், தகுதி வாய்ந்தவர்களாக உலகினில் மேம்பட்டவர்களாக வாழும் நிலையும் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. அலர்=வீண்பழி;

சிக்கார் துவராடைச் சிறுதட்டு உடையாரும்

நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில்

தக்கார் மறை வேள்வித் தலையாய் உலகுக்கு

மிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே

அனைவரின் விருப்பத்துக்கு உரியவனாக விளங்கும் பெருமானின் திருவடிகளின் சிறப்பினை நாள்தோறும் சொல்லாத மனிதர்களின் குற்றங்கள் தீரா என்று அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றனில் (1.83.3) ஞானசம்பந்தர் கூறுகின்றார். உயிரின் குற்றமாக கருதப் படுவது, உயிருடன் பிணைந்துள்ள வினைகளும் அவற்றின் தன்மையால் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் நிலையும் தான். எனவே பிறவிப் பிணியினைத் தீர்த்துக் கொள்வதற்கு நாம் வழிபட வேண்டியது சிவபெருமான் தான் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. ஊனம் என்பதற்கு பழி பாவம் என்று பொருள் கொண்டு, சந்திரன் சிவபெருமானை வழிபட்டு, தனது பாவங்களைத் தீர்த்துக் கொண்டது போன்று நாமும் பயனடைய வேண்டும் என்று சம்பந்தர் உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. குற்றம் நீங்கிய சந்திரனை செல்வ மதி என்று கூறுகின்றார். நரையார் விடை=வெண்மையான இடபம்;

திரையார் புனலொடு செல்வ மதி சூடி

விரையார் பொழில் அம்பர் மாகாளம் மேய

நரையார் விடையூரும் நம்பான் கழல் நாளும்

உரையாதவர்கள் மேல் ஒழியா ஊனமே

நம்பான் மேய நன்னகர் போலும் குற்றாலம் என்று உணர்த்தும் பாடல் மூலம் (1.99.1, நமது நம்பிக்கைக்கு உரியவன் பெருமான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வம்பு=புதுமை; எத்தனை முறை கண்டாலும் புதுமையுடன் விளங்கும் குற்றாலம் என்று கூறுகின்றார். வம்பு என்பதற்கு நறுமணம் என்று பொருள் கொண்டு, நறுமணம் கமழும் குற்றாலம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. கொம்பு=கிளைகள், இங்கே வேங்கை மரத்தின் கிளைகள். அம் என்ற சொல்லினை ஆடல் என்ற சொல்லுடன் பொருத்தி, அழகிய நீராடல் என்று பொருள் கொள்ள வேண்டும். கோல வண்டு=அழகிய வண்டுகள்; இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் பெருமானை, ஞானசம்பந்தர் நம்பான் என்று அழைக்கின்றார். குறும்பலா என்று குறிப்பிட்டு குற்றாலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.71) இரண்டு பாடல்களிலும், பெருமானை நம்பான் என்று சம்பந்தர் அழைக்கின்றார்.

வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர் வேங்கைக்

கொம்பார் சோலைக் கோல வண்டு யாழ் செய் குற்றாலம்

அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை

நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்

நாலூர் மயானம் என்ற தலத்தின் மீது பாடிய பாடல் ஒன்றிலும் (2.46.5) பெருமானை நம்பான் என்று குறிப்பிட்டு, அவனது திருவடிகளையே நினைத்து மயங்கும் அடியார்கள் மேல் பிறவி என்ற குற்றம் படியாது என்று கூறுகின்றார். பால் ஊரும்=பக்கத்தினில் ஊர்ந்து செல்லும்; மேலூரும்= மேலே பொருத்தப்பட்ட; மால்=மயக்கம்; பெருமான் பால் நாம் வைத்துள்ள அன்பு மயக்கமாக மாற வேண்டும் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

பாலூரும் மலைப் பாம்பும் பனி மதியும் மத்தமும்

மேலூரும் செஞ்சடையான் வெண்ணூல் சேர் மார்பினான்

நாலூர் மயானத்து நம்பான் தன் அடி நினைந்து

மால் ஊரும் சிந்தையர் பால் வந்து ஊரா மறுபிறப்பே

சிவபெருமான் பால் கொண்டுள்ள அன்பு மயக்கமாக மாறும் வண்ணம் ஆழ்ந்த அன்பு உடைய அடியார்கள் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுவது, மணிவாசகர் அருளிய ஆனந்தமாலை பதிகத்தின் மூன்றாவது பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. செறிவு=அன்பு; மிகவும் இழிந்த நிலையில் இருந்த மணிவாசகர், தன் பால் ஆழ்ந்த இன்பம் கொள்ளும் வண்ணம் வழி காட்டியவர் சிவபெருமான் என்று இங்கே கூறப்படுகின்றது.

சீலம் இன்றி நோன்பு இன்றிச் செறிவே இன்றி அறிவு இன்றி

தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை

மாலும் காட்டி வழி காட்டி வாரா உலக நெறியேறக்

கோலம் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே

தன்னை அணுகும் அடியார்களின் வினைகளை நாசம் செய்யும் பெருமானை நம்பான் என்று அழைப்பது தானே பொருத்தம். நமது வினைகளை நாசம் செய்யும் பெருமான், நமக்கு செய்யும் மற்ற உதவிகளும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. நம்மை திருத்தும் வண்ணம் பல துன்பங்களை நமக்கு அளித்து நம்மை நல்வழிபட்டு திருத்தியும், நாம் துயரடையும் தருணங்களில் நமது துன்பங்களைத் தீர்த்தும் அருள் புரியும் இறைவன் இன்ப வடிவினாகவும் அன்பு வடிவினனாகவும் இருக்கின்றார். அவர், ஏழிசையின் நுணுக்கங்களை அறிந்து பாடல்களுக்கு உரிய பண்ணுடன் இசைத்துப் பாடிப் போற்றும் அடியார்களை பேணி பாதுகாக்கின்றார்.

துன்பானைத் துன்பம் அழித்து அருளாக்கிய

இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார்

அன்பானை அணிபொழில் காழி நகர் மேய

நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே

நமது விருப்பத்திற்கு உரியவன் சிவபெருமான் என்பதை உணர்த்து, அவனை நம்பா என்று அழைத்தால், நமக்கு பல விதங்களிலும் அருள் புரிபவன் சிவபெருமான் என்று உணர்த்தும் பாடல் முதுகுன்றம் தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பாடலாகும் (2.64.6). வம்பு=நறுமணம்; மொய்ம்பு=நெருக்கம்; நறுமணம் நிறைந்த கொன்றை வன்னி ஊமத்தை முதலிய மலர்களை தனது திருமேனியின் மீது தூவி, நம்பா என்று தன்னை அழைத்து தொழும் அடியார்களுக்கு தனது அருளினை நல்கும் பெருமானாகிய இறைவன் உறையும் திருக்கோயில் உடைய தலம், கிளைகளை உடைய குரா மரமும் கொகுடி முல்லை கொடிகளும் எங்கும் பரந்து வளர்வதால் நெருக்கமாக உள்ளதும் வண்டுகள் இடைவிடாது பாடுவதும் ஆகிய சோலைகள் உடையதும் ஆகிய முதுகுன்றம் ஆகும்

வம்பார் கொன்றை வன்னி மத்த மலர் தூவி

நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில்

கம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும்

மொய்ம்பார் சோலை வண்டு பாடு முதுகுன்றே

மேற்கண்ட பாடல்கள் உணர்த்தும் வண்ணம், நாம் விரும்புவதற்கு தகுதி படைத்தவனாக விளங்கும் பெருமானை, தான் நனவிலும் கனவிலும் மனம் ஒன்றி விரும்பி வழிபட்டு மறவாது இருந்த நிலையினை திருவாவடுதுறை தலத்து பாடல் ஒன்றில் (3.4.3) ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். மனவினும்=மனம் ஒன்றி; தனது தந்தையார் வேள்வி செய்வதற்காக வேண்டிய பொருளை நாடி இறைவனிடம் ஞானசம்பந்தர் விண்ணப்பம் வைக்கும் பதிகம் இந்த பதிகம். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், பெருமானின் அருளினைப் பெறுவதற்கு தான் தகுதி வாய்ந்தவன் என்பதை குறிப்பிடுகின்றார்.

நனவினும் கனவினும் நம்பா உன்னை

மனவினும் வழிபட மறவேன் அம்மான்

புனல் விரி நறுங்கொன்றை போது அணிந்த

கனல் எரி அனல் புல்கு கையவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.13.3) அப்பர் பிரான் இறைவனை நம்பான் என்று அழைக்கின்றார். நணியான்=அருகில் இருப்பவன்: சேயான்=தொலைவில் இருப்பவன்; சமணர்கள் இழைத்த பல கொடுமைகளிலிருந்தும் தன்னைக் காத்த பெருமானை, தீர்க்க முடியாத கொடிய சூலை நோயிலிருந்து காப்பாற்றிய பெருமானை, கயிலைக் காட்சி அளித்தது போன்று பல விதங்களிலும் அருள் புரிந்த பெருமானை, அப்பர் பிரான் விரும்பியது இயற்கை தானே. தான் சைவ மதத்திற்கு திரும்பி வந்த பின்னரே, வாழ்வினில் உய்வினை அடைந்ததாகவும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்

துணியானே தோலானே சுண்ண வெண்ணீற்றானே

மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணி தீர்க்கும்

அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

திருவாரூர்ப் பெருமானைக் காண்பதே தனது கருத்தாக இருந்தது என்று உணர்த்தும் பதிகத்தின் பாடலின் (4.20.10) நம்பான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பிரமனும் திருமாலும் காணமாட்டாத தழலாக விளங்கிய பெருமானை நாம் எங்கு காண முடியும் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் தெரிவிக்கின்றார். சிவபெருமானைப் புகழ்ந்து இசைப் பாடல்கள் பாடும் அடியார்களின் சித்தத்தினுள்ளே இறைவன் இருப்பதைத் தான் தேடிக் கண்டு கொண்டதாக இங்கே கூறுகின்றார். இறைவன் பேரில் பல பதிகங்கள் பாடிய அப்பர் பிரான், தன்னுள்ளே இறைவன் இருப்பதை, அனுபவ பூர்வமாக உணர்ந்ததை பல பாடல்களில் தெரிவித்துள்ளார். தங்களது அறிவு ஆற்றல் ஆகியவை மீது நம்பிக்கை வைத்து நாடினால் காண முடியாத, பெருமான் பால் மிகுந்த அன்பு வைத்து நாம் அழைத்தால் அவன் அருள் புரிவான் என்பதால் பல அடியார்களும் அவனைப் புகழ்ந்து போற்றி பல்லாண்டு பாடுகின்றனர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன்

நாடிக் காண மாட்டாத் தழலாய நம்பானைப்

பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறு பத்தர்கள் சித்தத்துள்

புக்குத்

தேடிக் கண்டு கொண்டேன் திருவாரூர் அம்மானே

திருவெண்ணெய்நல்லூரில் தன்னை ஆட்கொண்ட இறைவன், விரும்பத்தக்கவன் என்று, தான் இரண்டு கண்களின் பார்வையை இழந்து கோலை ஊன்றி நடந்த நிலையிலும் சுந்தரர் அழைப்பதை நாம் திருமுல்லைவாயில் பதிகத்தில் (7.69.8) காணலாம். சம்பு என்ற வடமொழி சொல்லுக்கு இன்பம் உண்டாக்குபவன் என்று பொருள். நச்சரவு ஆட்டிய நம்பன் என்று மணிவாசகர் திருவண்டப்பகுதி அகவலில் குறிப்பிடுகின்றார்.

நம்பனே அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை

ஆட்கொண்ட

சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சுண்ட கண்டா

செம்பொன் மாளிகை சூழ் திருமுல்லை வாயில் தேடி

யான் திரிதர்வேன் கண்ட

பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே

பொழிப்புரை:

வேதங்களை ஓதிக் கொண்டும் மார்பினில் வெண்ணூல் அணிந்து கொண்டும் வெள்ளை எருதினைத் தனது வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் செல்லும் பெருமான், பூதங்கள் தன்னைச் சூழ்ந்து வரும் வண்ணம் பொலிவுடன் செல்கின்றார். அவர், தாருகவனத்து முனிவர்களால் தன் மீது ஏவப்பட்ட புலியினைக் கொன்று, அதன் தோலினைத் தனது ஆடையாக உடுத்தியுள்ளார். எங்களது தலைவனே என்றும், குறைந்த உடையணிந்து எளிமையுடன் திகழும் நக்கா என்றும், நாங்கள் விரும்பும் பெருமானே என்றும் மனம் ஒன்றி அழைத்து, தனது திருவடிகளைத் தொழும் அடியார்களின் பாவங்களை தீர்க்கும் பெருமான் பழன நகரினில் உறைகின்றார்.

பாடல் 2:

கண் மேல் கண்ணும் சடை மேல் பிறையும் உடையார் காலனைப்

புண் ஆறு உதிரம் எதிர் ஆறு ஓடப் பொன்றப் புறந்தாளால்

எண்ணாது உதைத்த எந்தை பெருமான் இமவான் மகளோடும்

பண்ணார் களி வண்டறை பூஞ்சோலைப் பழன நகராரே

விளக்கம்:

புண் ஆறு=புண் வழியாக; எண்ணாது=ஒரு பொருட்டாக மதிக்காது; பொன்ற=இறக்க; புண் ஆர் உதிரம்=புண்ணின் வழியாக வெளிவந்த இரத்த ஆறு; சிறுவன் சுசரிதனுக்காக காலனை உதைத்த செயல் என்று பெரியோர்களால் விளக்கம் அளிக்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி ஆபத்சகாயர் என்று இந்த தலத்து பெருமானுக்கு பெயர் வந்த காரணத்தை உணர்த்தும் நிகழ்ச்சியாகும். கண் மேல் கண்=அனைவர்க்கும் இயல்பாக உடைய இரண்டு கண்களுக்கு மேலாக நெற்றிக் கண் ஒன்றினை உடைய பெருமான்;

பொழிப்புரை:

அனைவர்க்கும் இயல்பாக உடைய இரண்டு கண்களுக்கு மேலாக நெற்றியில் ஒரு கண்ணினை உடையவனும், தனது சடையில் பிறைச் சந்திரனை அணிந்தவனும் ஆகிய பெருமான், சிறுவன் சுசரிதனின் உயிரைக் கவர வந்த காலனை, ஒரு பொருட்டாக மதியாது, புறந்தாளால் உதைத்து, அவனது காயத்திலிருந்து இரத்தம் ஆறாக ஓடும் வண்ணம் செய்து, அவனை அழித்தவர் ஆவார். இத்தகைய ஆற்றல் உடையவரும் எமது தந்தையும் ஆகிய பெருமான், இமவானின் மகளாகிய பார்வதி தேவியுடன் சேர்ந்து எழுந்தருளும் தலம், மது உண்ட களிப்பினில் வண்டுகள் பண்ணுடன் ரீங்காரம் இடும் சோலைகள் நிறைந்த பழன நகராகும்.

பாடல் 3:

பிறையும் புனலும் சடை மேல் உடையார் பறை போல் விழிகள்

பேய்

உறையும் மயானம் இடமா உடையார் உலகர் தலைமகன்

அறையும் மலர் கொண்டு அடியார் பரவி ஆடல் பாடல் செய்

பறையும் சங்கும் பலியும் ஓவாப் பழன நகராரே

விளக்கம்:

பறை போல் விழி=ஆந்தை போன்று உருண்டு திரண்ட; ஓவா=இடைவிடாது; அறையும்=ஒலிக்கின்ற;

பலி=பெருமானுக்கு அளிக்கப்படும் நைவேத்திய பிரசாதங்கள்; ஆறு காலங்களிலும் முறையாக பூஜை செய்யப்பட்டு இந்த தலத்து பெருமானுக்கு நைவேத்தியங்கள் அளிக்கப்பட்டமை இங்கே ஞானசம்பந்தரால் உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை:

பிறைச் சந்திரனையும் கங்கை நதியினையும் தனது சடை மேல் உடையவனும், ஆந்தை போல் உருண்டு திரண்ட விழிகளை உடைய பேய்கள் வாழும் மயானத்தைத் தனது இருப்பிடமாக உடையவனும் ஆகிய சிவபெருமான், உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தலைவர் ஆவார். இத்தகைய தன்மைகள் உடைய பெருமானின் திருவடிகளில், தனது நறுமணத்தால் வண்டுகளைக் கவர்ந்து வண்டுகள் இசைத்துப் பாடி சூழ்ந்திருக்கும் நல்ல மலர்களை அடியார்கள் தூவி ஆடியும் பாடியும் இறைவனைப் போற்ற, அந்த பாடல்களின் பின்னணியில் இடைவிடாது சங்குகள், பறை, வாத்தியங்கள் ஒலிக்க, ஆறு காலங்களிலும் பெருமானுக்கு முறையாக பூஜை செய்து நைவேத்தியங்கள் சமர்ப்பிக்கப்படும் பழனம் தலத்தினில் பெருமான் உறைகின்றார்.

பாடல் 4.

உரம் மன்னு உயர் கோட்டு உலறு கூகை அலறும் மயானத்தில்

இரவில் பூதம் பாட ஆடி எழிலார் அவர் மேலைப்

பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும்

பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே

விளக்கம்:

நறவம்=குருதி, இரத்தம்; பரமன்=கடந்தவன்; பகவன்=ஆறு இறை குணங்கள் உடையவன்; பகவன் என்ற சொல்லுக்கு ஆறு விதமான குணங்களை உடையவன் என்று சிவக்கவிமணி விளக்கம் அளிக்கின்றார். ஐஸ்வர்யம், வீரம், புகழ், செல்வம், ஞானம், வைராக்கியம் ஆகிய குணங்களின் தொகுப்பு பகம் என்று அழைக்கப்படுகின்றது, இந்த ஆறு குணங்களை உடைய இறைவன் பகவன் என்று அழைக்கப் படுகின்றான் பரமேச்சுவரன்=அனைத்து தேவர்களுக்கும் தலைவன்; உரம்=வலிமை; உலறு கோட்டு=வற்றிய கிளைகள்; சுடுகாட்டில் உள்ள மரம் உலர்ந்து காணப்படும் தன்மை இங்கே உணர்த்தப்படுகின்றது. நறவம் என்ற சொல் பொதுவாக கள், தேன் ஆகியவற்றை குறிப்பிடும் என்றாலும், இங்கே பெருமான் ஏற்கும் உணவினை, அதாவது பலியை குறிப்பிடும் வண்ணம் கையாளப் பட்டுள்ளது. .

பகவன் என்ற இந்த சொல் பகவான் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். .பகவான் என்று கீதையில் வரும் சொல்லுக்கு பராசர முனிவர் ஆறு சிறந்த குணங்கள் உடையவன் என்று பொருள் கூறுகின்றார். முழு வலிமை, முழுதான புகழ், முழுமையான செல்வம், முழுமையான அறிவு, முழுமையான அழகு மற்றும் முற்றும் துறந்த தன்மை என்பவையே அந்த ஆறு குணங்கள் என்று கூறுவார்கள். தன்வயத்தன் ஆதல், முதல் இல்லாது ஆதியாக இருத்தல், உருவம் அற்றவனாக இருத்தல், எல்லா நலன்களும் உடையவனாக இருத்தல், எங்கும் பரவி இருத்தல், உலகில் நடக்கும் அனைத்துச் செயல்களுக்கும் காரணமாக இருத்தல் ஆகிய இந்த ஆறு செயல்களை உடையவன் என்றும் கூறுவார்கள். இந்த ஆறு செயல்களின் தன்மையை நாம் உணர்ந்தால், இந்த ஆறு தன்மைகள் கொண்டவன் பெருமான் ஒருவனே என்பதை நாம் அறிந்து கொள்வோம். எனவே பகவன் என்ற சொல் பெருமான் ஒருவனுக்கே உரிய பெயர் என்பதை நாம் உணர்வோமாக.

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (1.121.1) ஒன்றில் சம்பந்தர் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். நடைமரு திரிபுரம்=இயங்கும் தன்மை கொண்ட கோட்டைகள், பறக்கும் கோட்டைகள்; பொதுளிய=செறிந்த, அடர்ந்த; தீயினை உமிழும் படைக்கலம் என்று பெருமானின் மழுப்படையினை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மேகங்கள் தவழும் வண்ணம் மருதமரங்கள் உயர்ந்து காணப்படுகின்றன என்று குறிப்பிட்டு சம்பந்தர் தலத்தின் நீர் வளத்தினையும் நில வளத்தினையும் இங்கே கூறுகின்றார்.

நடைமரு திரிபுரம் எரி உண நகை செய்த

படை மரு தழல் எழ மழு வல பகவன்

புடை தரு மருது இளமுகில் வளம் அமர் பொதுளிய

இடைமருது அடைய நம் இடர் கெடல் எளிதே

இரும்பை மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.117) பாடலில் சம்பந்தர் இறைவனை பகவன் என்று அழைக்கின்றார். பிறைமதியைச் சூடிய வண்ணம் கூத்தாடும் பெருமான் வினைகளை அழிக்கும் வல்லமை உடையவர் என்றும், அனைவர்க்கும் மேலானவன் என்றும் தூய்மையான ஆறு குணங்களை உடையவன் என்றும் கூறும் சம்பந்தர், இரும்பை மாகாளத்தில் உள்ள மறையவர்கள் இறைவனைத் தொழுது வணங்கியதையும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். குறைவதாய=கலைகள் குறைந்த; குனித்தான்=கூத்தாடிய பெருமான்; பறைவது= அழிப்பது;

குறைவதாய குளிர் திங்கள் சூடிக் குனித்தான் வினை

பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை

இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை மாகாளம்

மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே

பூந்தராய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.1.11) இறைவனை பகவனார் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இறைவனைப் போற்றி பாடிய இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் பாட வல்ல அடியார்கள் தங்களின், தீவினைகள் அகன்று நல்வினைகள் கூடப் பெறுவார்கள் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல் வாய்ப்

புகலி ஞானசம்பந்தன் எழில் மிகு பூந்தராய்ப்

பகவனாரைப் பரவு சொன்மாலை பத்தும் வல்லார்

அகல்வர் தீவினை நல்வினையோடு உடன் ஆவாரே

கொச்சைவயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.83.5), பகவன் என்று குறிப்பிடும் சம்பந்தர் இனியன அல்லாதவற்றையும் இனியதாக ஏற்றுக்கொள்ளும் பெருமான் என்று கூறுகின்றார். இந்த தன்மைக்கு ஆலகால விடத்தை உட்கொண்டதும், பாம்பினை அணிகலனாக ஏற்றதும் சான்று ஆகும். இந்த பாடலில் குபேரனை தோழனாக இறைவன் கொண்டுள்ள தன்மை குறிப்பிடப் படுகின்றது. அந்நாளில் சீர்காழி நகரில் இருந்த மறையவர்கள் வளர்த்த வேள்வியிலிருந்து எழுந்த புகை வானளாவச் சென்று வானையும் சந்திரனையும் மறைத்ததாக கூறுகின்றார். குனிமதி=வளைந்த பிறையை உடைய சந்திரன்.

பனிவளர் மாமலைக்கு மருகன் குபேரனோடு தோழமைக்

கொள் பகவன்

இனியன அல்லவற்றை இனிதாக நல்கும் இறைவன் இடம்

கொள் பதிதான்

முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம்

ஓடி அணவிக்

குனிமதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற

கொச்சைவயமே

பிரமபுரத்தின் மீது அருளிய பதிகத்தின் மூன்றாவது பாடலில் (3.67) ஞானசம்பந்தர் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பெருமானின் திருவடிகள் பிரகாசமான நாகமணி போன்று ஒளி வீசுவதாகவும் விரிந்த செந்தாமரை மலர் போன்று மென்மையாகவும் அழகாகவும் இருப்பதாக கூறுகின்றார். முகம் என்ற சொல் பார்வை என்ற பொருளில் இங்கே வருகின்றது. பெருமான் வாய் திறந்து ஏதும் பேசாமல் மௌனமாக இருந்தவாறே தனது திருவருள் நோக்கத்தால் அருள் புரிந்து சனகாதி முனிவர்களுக்கு வேதங்களுக்கு விளக்கம் அளித்தார் என்று கூறுகின்றார். நகமணி=நாகமணி; முகை–விரிந்த

பகலொளி செய் நகமணியை முகை மலரை நிகழ் சரண அகவு

முனிவர்க்கு

அகல மலி சகல கலை மிக உரை செய் முகமுடைய

பகவன் இடமாம்

பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக

அருள நிகரில் இமையோர்

புக உலகு புகழ எழில் திகழும் அலர் பெருகு புகலி நகரே

கொட்டையூர் மற்றும் வலஞ்சுழி தலங்களின் மீது அருளிய பதிகத்தின் (6.73) பாடலில் அப்பர் பிரான், பெருமானை பகவன் என்று குறிப்பிடுகின்றார். அணவுதல்=எட்டுதல், எட்டுதற்கு அரியவனாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பணம்=பாம்பின் படம். அவனது அருளின் உதவியாலன்றி எட்டுதற்கு அரியவனாக உள்ளவனும், இயல்பாகவே மலங்களிலிருந்து நீங்கியவனும், என்றும் அழியாத தன்மை உடையவனும், உலகங்கள் எங்கும் பரந்து நிற்பவனும், அழகான படத்தையும் பெரிய மணியினையும் கொண்டுள்ள பாம்பினை அணிகலனாக உடையவனும், பண்டரங்க கூத்து எனப்படும் கூத்தினை ஆடுபவனும், அளவற்ற செல்வம் முதலான ஆறு தன்மைகளை கொண்டவனும், மணலினை வாரிக் கொண்டு வரும் பொன்னி நதியின் கரையில் அமைந்த வலஞ்சுழி தலத்தின் இறைவனும், திருமாலுக்கும் பிரமனுக்கும் அவர்கள் விரும்பும் அதிகாரத்தினை வரமாக அருளுபவனும், நற்குணங்கள் வாய்க்கப் பெற்ற அடியார்கள் வாழும் கொட்டையூர் தலத்தில் கோடீச்சரம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் தலைவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ காண்பாயாக, என்று தனது நெஞ்சத்திற்கு கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பதிகம்.

அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவினாசி கண்டாய்

அண்டத்தான் கண்டாய்

பணமணி மாநாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய்

பகவன் கண்டாய்

மணல் வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்

மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்

குணமுடை நல்லடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சரத்து

உறையும் கோமான் தானே

திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.92.2) அப்பர் பிரான் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். பல்லாடு தலை=பற்கள் வெளியே தோன்றும் பிரம கபாலம்; என்பறாக் கோலம்=எலும்பு மாலைகள் நீங்காமல் எப்போதும் அணிந்திருக்கும் தன்மை;

பல்லாடு தலை சடை மேல் உடையான் தன்னைப் பாய்புலித்

தோல் உடையானைப் பகவன் தன்னை

சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னைச் சுடருருவில்

என்பறாக் கோலத்தானை

அல்லாத காலனை முன் அடர்த்தான் தன்னை ஆலின் கீழ்

இருந்தானை அமுது ஆனானை

கல்லாடை புனைந்தருளும் காபாலியைக் கற்பகத்தைக் கண்ணாரக்

கண்டேன் நானே

தில்லைச் சிதம்பரத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் கடைப் பாடலில் (6.2) அப்பர் பிரான் பகவனார் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். பாரிடங்கள்=பூத கணங்கள்; பெருமான் இடையில் தான் உடுத்தியுள்ள பட்டாடையின் மேல் கச்சாக பாம்பினை இறுகக் கட்டிக் கொண்டும், பூத கணங்கள் சூழவும், தீயினைக் கையில் ஏந்தியவாறும், நடனக் கலையில் வல்லவராக நடனம் செய்கின்றார் என்று பாடலின் முதல் இரண்டு அடிகளில் கூறும் அப்பர் பிரான், அந்த பெருமானை தில்லை நகர் சென்று காணுமாறு நம்மை பணிக்கின்றார். அவ்வாறு நடனம் ஆடும் பெருமானை தேடிக் கொண்டு செல்லும் நாம் அவனை அடையாளம் கண்டு கொள்வதற்காக, அவனது அடையாளங்களை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஒளியுடன் விளங்கும் சூலம், மார்பினில் திகழும் வெண்ணூல், ஓதும் வேதம், கையில் வீணை மற்றும் கட்டங்கம் என்று குறிப்பிட்டு இறுதியில் வேறு எவருக்கும் இல்லாத நீலக்கறை படிந்த கழுத்து என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். விட்டு=ஒளிவீசும்; சிட்டர்=மேலானவர், நடனக் கலையில் வல்லவர் என்று பொருள் கொள்ளவேண்டும். அருவுருவமாக, இலிங்க வடிவத்தில் அனைத்து தலங்களிலும் காட்சி அளிக்கும் பெருமானின் அடையாளங்கள் எதற்காக திருமுறை பாடல்களில் குறிப்பிடப்படுகின்றன என்ற ஐயம் நமக்கு எழலாம். இந்த அடையாளங்கள், பெருமானின் கருணை, வீரச்செயல்கள் மற்றும் அவரது தன்மை ஆகியவற்றை நமக்கு உணர்த்துவதால், அந்த அடையாளங்களை நமது மனக் கண்ணினால் கண்டு, பெருமானின் தன்மையை நாம் சரிவர புரிந்துகொள்ள வேண்டும் என்பதே நால்வர் பெருமானர்களின் விருப்பம்.

பட்டுடுத்து தோல் போர்த்துப் பாம்பு ஒன்று ஆர்த்துப் பகவனார்

பாரிடங்கள் சூழ நட்டம்

சிட்டராய் தீ ஏந்திச் செல்வார் தம்மைத் தில்லை சிற்றம்பலத்தே

கண்டோம் இந்நாள்

விட்டு இலங்கு சூலமே வெண்ணூல் உண்டே ஓதுவதும் வேதமே

வீணை உண்டே

கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம்

கபாலியார்க்கே

கங்கை கொண்ட சோளேச்சரம் தலத்தின் மீது பாடிய பதிகத்தில் கருவூர்த் தேவர் பெருமானை பகவன் என்று குறிப்பிடும் பாடலை (9.13.5) நாம் இங்கே காண்போம். சுருதி=வேதம்; பருதி= சூரியன்; வேதங்கள் ஓதும் பிரமனாகவும், திருமாலாகவும், சுவர்க்க லோகத்தை ஆளும் இந்திரனாகவும், வானில் உலவும் சூரியனாகவும், உள்ள பெருமான், மூன்று கண்களை உடையவனாக, சிறந்த ஆறு குணங்களை உடையவனாக, அனைத்து உடலிலும் உள்ளே இருக்கும் உயிரினுக்கு அமுதம் போன்று இனியவனாகவும் இருப்பதாக இங்கே கூறுகின்றார். இவ்வாறு இருக்கும் பெருமான், கருதுவார் கருதும் உருவமாகவும் இருக்கின்றான் என்று பாடலை முடிக்கின்றார்

சுருதி வானவனாம் திருநெடுமாலாம் சுந்தர விசும்பின்

இந்திரனாம்

பருதி வானவனாம் படர்சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு

அமுதாம்

எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனாம்

பின்னும்

கருதுவார் கருதும் உருவமாம் கங்கை கொண்ட

சோளேச்சரத்தானே

திருமந்திரம் ஆதார ஆதேயம் தந்திரத்தில், பெருமானை பகவன் என்று குறிப்பிடும் திருமூலர், பிராட்டி என்றும் பகவானுடன் பிரியாது நிற்கும் நிலையினை உணர்த்துகின்றார். அத்தகைய சக்தியை, தமது உள்ளத்தில் நிலை நிறுத்தி வழிபடும் அடியார்களின் உள்ளங்கள் அழுக்கு நீங்கிய நிலையில் உள்ள வெண்ணிற ஆடையினைப் போன்று, ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மூன்று மலங்களும் நீங்கப் பெற்று தூய்மையாக விளங்கும் என்று கூறுகின்றார்.

மாது நல்லாளும் மணாளன் இருந்திடப்

பாதி நல்லாளும் பகவனும் ஆனது

சோதி நல்லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்

வேதனை தீர்தரும் வெள்ளடையாமே

மாகேசுர பூஜை என்ற தந்திரத்தில் வரும் பாடலில் திருமூலர் பெருமானை பகவன் என்று குறிப்பிடுவதை நாம் இங்கே காண்போம். தமது உள்ளமே பெருங்கோயிலாக திகழ்வதை உணர்ந்து கொண்டு, தமது உள்ளத்தில் உள்ள சிவனை போற்றி வழிபடு செய்யும் அடியார்கள் நடமாடும் கோயிலாகத் திகழ்கின்றனர் என்றும், அத்தகைய அடியார்களை நோக்கி செய்யப்படும் வழிபாடு இறைவனைச் சென்று சாரும் என்று இங்கே திருமூலர் குறிப்பிடுகின்றார். ஆனால் திருக்கோயிலில் உள்ள பெருமானுக்கு செய்யப்படும் வழிபாடு, நடமாடும் உயிர்களின் உள்ளே இருக்கும் சிவனைச் சென்று சாராது என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் அடியார்களை நோக்கி செய்யப்படும் வழிபாடு பெருமானை நோக்கி செய்யப்படும் வழிபாட்டினும் சிறந்தது என்பதை திருமூலர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். படமாடக் கோயில்=கொடிகள் ஆடும் திருக்கோயில்கள்; நடமாடும் கோயில்=நடமாடும் உயிர்களின் உள்ளத்தில் இணைந்து நிற்கும் பெருமான் உள்ள இடம்.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின்

படமாடக் கோயில் பகவற்கு அதாமே

பகவான் என்ற சொல் திருமுறை பாடல்களில் காணப்படவில்லை, அதற்கு பதிலாக பகவன் என்ற சொல்லே காணப்படுகின்றது. நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (2.24.4) ஞானசம்பந்தர், பகவா என்று அழைத்து இறைவனைப் போற்றினால், நம்மைப் பற்றியிருக்கும் வலிமையான வினைகள் நீங்கிவிடும் என்று கூறுகின்றார். நகு=விளங்கும்; தகு=தகுந்த; வார் சடை=நீண்ட சடை; நகுவார் பொழில்=பல்லைக் காட்டி சிரிப்பது போன்று வெண்மையான இதழ்கள் விரிந்து பூத்த மலர்கள் கொண்ட சோலைகள்; தளவம்=பிச்சிப்பூ என்றும் செம்முல்லை என்றும் அழைக்கப்படும் மலர்;

நகுவான் மதியோடு அரவும் புனலும்

தகுவார் சடையின் முடியாய் தளவம்

நகுவார் பொழில் நாகேச்சுர நகருள்

பகவா என வல்வினை பற்று அறுமே

பொழிப்புரை:

வலிமை பொருந்தியதும் உயரத்தே உள்ளதும், உலர்ந்ததும் ஆகிய மரக் கிளைகளில் அமர்ந்த வண்ணம் ஆந்தைகள் அலறும் மயானத்தில், நள்ளிருளில் பூதங்கள் பாடியும் ஆடியும் களிப்படையும் வண்ணம், அந்த பூதங்களின் பாடலுக்கு ஏற்ப நடமாடும் சிவபெருமான், அழகிய தாமரை மலர் மேல் அமரும் பிரமனின் மண்டையோட்டினில் பலி ஏற்பவராக பல இடங்களிலும் திரிகின்றார். இத்தகைய பெருமான், எம்மை ஆட்கொண்ட தலைவர் ஆவார்; அவர் ஆறு சிறந்த குணங்களை உடையவர்; அனைத்து தேவர்களுக்கும் மேலானவர்; அவர் பழன நகரத்தினில் உறைகின்றார்.

பாடல் 5.

குல வெஞ்சிலையால் மதில் மூன்று எரித்த கொல்லேறு

உடை அண்ணல்

கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி

நலம் மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதி கொண்டு எதிர்

உந்திப்

பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே

விளக்கம்:

குதி கொண்டு–குதிப்பது போன்று; குல=உயர்ந்த; கயிலாயம், மந்த்ரம், விந்தியம், நிடதம், ஹேமகூடம், நீலம், கந்தமாதனம் ஆகியவை சிறந்த ஏழு மலைகளாக புராணங்களில் கருதப்படுகின்றன. மேருமலை இமய மலையின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. வெஞ்சிலை=கொடிய மலை; மேருமலை வில்லாக வளைக்கப்பட்டு திரிபுரத்து பறக்கும் கோட்டைகளை அழிப்பதற்கு பயன்படுத்தப் பட்ட செய்கை இங்கே குறிப்பிடப்படுகின்றது. கலவம்=தோகை; நலம்=மேன்மை, பெருமை; மனசு=அழகு;

பொழிப்புரை:

உயர்ந்த ஏழு மலைகளில் ஒன்றாக கருதப்படும் மேருமலையினை வில்லாக வளைத்து, நெருப்புப் பொறிகளை கக்கும் கொடிய அம்பினை அந்த வில்லினில் பூட்டி, எப்போதும் வானில் பறந்து திரிந்து கொண்டிருக்கும் மூன்று கோட்டைகளுக்கும் தீமூட்டி அழித்தவன் சிவபெருமான்; அவன் கொல்லும் தன்மை உடையதும் வீரம் மிகுந்ததும் ஆகிய காளையினை தனது வாகனமாகக் கொண்டுள்ள தலைவன் ஆவான்; தோகை உடைய மயில்கள் தொடர்ந்து ஆடியும், குயில்கள் இன்னிசை பாடியும் வாழும் தலமாக விளங்குவதும், கடல் போன்று அகன்ற நீர்ப்பரப்பினை உடைய காவிரி நதி, பெருமை உடையதும் அழகு நிறைந்ததும் நறுமணம் உடையதும் ஆகிய மாங்கனிகள் குதித்து குதித்து வருவது போன்று அடித்துக் கொண்டு வந்து இரண்டு கரைகளிலும் சேர்க்கும் காவிரி நதி, பலாக் கனிகளையும் தனது அலைக் கரங்களில் ஏந்தி வருகின்றது. இவ்வாறு நீர்வளம் பொருந்திய காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள பழன நகரத்தில் சிவபெருமான் உறைகின்றார்.

பாடல் 6.

வீளைக் குரலும் விளிச் சங்கொலியும் விழவின் ஒலி ஓவா

மூளைத் தலை கொண்டு அடியார் ஏத்தப் பொடியா மதிள்

எய்தார்

ஈளைப் படுகில் இலையார் தெங்கில் குலையார் வாழையின்

பாளைக் கமுகின் பழம் வீழ்ச் சோலைப் பழன நகராரே

விளக்கம்:

வீளைக் குரல்–பருந்தின் குரல் போன்று சிள் என்று ஒலிப்பது; பேரிரைச்சல் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே; விளி சங்கொலி=பல அடியார்களையும் திருக்கோயிலுக்கு அழைக்கும் வண்ணம் ஒலிக்கப்படும் சங்கின் ஒலி; மூளைத்தலை=முன்னர் மூளையின் இருப்பிடமாக இருந்த தலை, பிரம கபாலம்; ஈளைப் படுகு=ஈரமாக உள்ள மருத நிலம்; விளித்தல்=கூவி அழைத்தல்; விழவு=திருவிழா; மதிள்=கோட்டை;

பொழிப்புரை:

பருந்தின் குரல் போன்று கீச்சுக் குரலில் அமைந்த சீழ்க்கை ஒலியும், அடியார்களை வருக என்று அழைக்கும் வண்ணம் எழுப்பப்படும் சங்கின் ஒலியும் கலந்து ஓயாது ஒலிக்க இரைச்சலுடன் திருவிழா ஆரவாரங்கள் நிறைந்த திருப்பழனம் தலத்தில் உறைபவனும், பிரமனின் உடலுடன் பொருந்தியிருந்த போது மூளையின் இருப்பிடமாக இருந்த மண்டையோட்டில் பலி ஏற்பவனும் ஆகிய இறைவனை, அடியார்கள் போற்றிப் புகழ்கின்றனர். அவர் பறக்கும் கோட்டைகளையும் சாம்பல் பொடியாக மாறும் வண்ணம், ஒரே அம்பினை எய்தி வீழ்த்தியவர்; காவிரியின் நீர் வளத்தினால் சேறாக காணப்படும் நிலத்தில் மட்டைகளுடன் பொருந்திய தென்னம் குலைகளும், வாழைக் குலைகளும், பாளைகளுடன் கூடிய பாக்கு பழங்களும் வீழ்ந்து காணப்படும் சோலைகள் நிறைந்த பழன நகரமே, இந்த இறைவனின் இருப்பிடமாகும்.

பாடல் 7.

பொய்யா மொழியார் முறையால் ஏத்திப் புகழ்வார் திருமேனி

செய்யார் கரிய மிடற்றார் வெண்ணூல் சேர்ந்த அகலத்தார்

கையாடலினார் புனலால் மல்கு சடை மேல் பிறையோடும்

பையாடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே

விளக்கம்:

பொய்யாமொழி=வேதங்கள் கை ஆடலினார்=கை வீசு ஆடுபவர்; துடி அசைக்கும் கை என்றும் அனல் ஏந்திய கை என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே; உடனே=ஒருங்கே; மிடற்றார்= கழுத்தினை உடையவர்; பை=படம்; இயற்கையாக பகை கொண்டுள்ள சந்திரனையும் பாம்பினையும் ஒருங்கே வைப்பதன் மூலம் தனது சன்னதியில் பகை உணர்வுக்கு இடமில்லை என்று சிவபெருமான் உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

எப்போதும் உண்மையே பேசும் அடியார்களால் முறையாக பாடல்கள் பாடி புகழப்படும் இறைவன், சிவந்த திருமேனியை உடையவர்; அவர் தான் உட்கொண்ட விடத்தினைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடையவர்; தனது அகலமான மார்பினில் வெண்ணூல் அணிந்தவர்; அவர் தனது கைகளை வீசி நடனம் ஆடுகின்றார்; கங்கை நதியினை அடக்கியுள்ள சடையினில், பிறைச் சந்திரனையும் படம் எடுத்தாடும் பாம்பினையும் ஒருங்கே வைத்தவர் ஆவார்; இத்தைகய தன்மைகள் உடைய பெருமான் பழன நகரத்தில் உறைபவர் ஆவார்.

பாடல் 8.

மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறா எடுத்தான்

தோள்

அஞ்சோடு அஞ்சும் ஆறு நான்கும் அடர ஊன்றினார்

நஞ்சார் சுடலைப் பொடி நீறு அணிந்த நம்பான் வம்பாரும்

பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே

விளக்கம்:

நஞ்சார்=நைஞ்சார், நைந்தார் என்பதன் மருவு; பைந்தாமரை=பசுமையான தாமரை மலர்கள்; அஞ்சோடு அஞ்சும் ஆறு நான்கும்=இருபது; அடர=நெருங்க; மலையின் கீழே அமுக்குண்டு தோள்கள் குழைந்து ஒன்றுடன் ஒன்று கலந்து இருக்கும் நிலை; மஞ்சு=மேகம், இங்கே மேகங்கள் பொருந்திய ஆகாயம்; மாறா=மாறுபட்டு; கயிலை மலையினைக் காணும் அனைவரும் அந்த மலையின் புனிதத்தைக் கருத்தில் கொண்டு, மலையை வலம் வந்து வணங்குவது வழக்கம். ஆனால் அரக்கன் இராவணனோ, தான் செல்லும் வழியில் குறுக்கிட்ட மலை என்று கருதி, அந்த மலையினை பேர்த்து வேறொரு இடத்தில் வைத்துவிட்டுத் தனது பயணத்தைத் தொடரும் நோக்கத்துடன் அந்த மலையை பேர்க்க முயற்சி செய்தான். இந்த வேறுபாட்டினை குறிப்பிடும் வண்ணம் மாறா எடுத்தான் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். வம்பு=நறுமணம்; நஞ்சார்= நச்சுத் தன்மை பொருந்திய; சுடலை=சுடுகாடு; மஞ்சோங்கு உயரம் என்பதனை மலை என்ற சொல்லுடன் இணைத்து பொருள் கொள்ள வேண்டும்.

பொழிப்புரை:

மேகங்கள் படர்ந்த ஆகாயத்தை எட்டும் வண்ணம் உயர்ந்த கயிலாய மலையினை, அரக்கன் இராவணன், கயிலை மலையின் புனிதம் கருதி அதனை வணங்கி வலம் செய்யும் ஏனையோரின் இயல்புக்கு மாறுபட்டு, கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்தான்; அவ்வாறு முயற்சி செய்த அரக்கனின் இருபது தோள்களும் ஒன்றோடொன்று நெருங்கி கூழாக மாறும் வண்ணம், தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவர் சிவபெருமான்; நச்சுத்தன்மை பொருந்திய சுடுகாட்டினில் உள்ள சாம்பல் பொடியைத் தனது திருமேனியெங்கும் பூசியவன் சிவபெருமான்; அவர் நறுமணம் நிறைந்த பசுமையான தாமரைகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த பழனம் நகரத்தில் உறைகின்றார்.

பாடல் 9.

கடியார் கொன்றைச் சுரும்பின் மாலை கமழ் புன்சடையார் விண்

முடியாப் படி மூவடியால் உலகம் முழுதும் தாவிய

நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடிக் காணாத

படியார் பொடியாடு அகலம் உடையார் பழன நகராரே

விளக்கம்:

படியார்=தன்மையினார்; கடியார்=நறுமணம் கமழும்; சுரும்பு=வண்டு; படி=உலகம்; முடி=உச்சி;

பொழிப்புரை:

நறுமணம் கமழ்வதும், வண்டுகளால் மொய்க்கப்படுவதும் ஆகிய கொன்றை மாலை திகழும் சுருண்ட சடையினை உடையவர் சிவபெருமான்; ஆகாயத்தைத் தனது உச்சியாக கொண்டுள்ள நிலவுலகத்தைத் தனது, மூன்று அடிகளில் ஓரடியாகத் தாவி அளந்த திரிவிக்ரமனாக அவதாரம் எடுத்த திருமாலும், தாமரை மலரைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரமனும் தேடியும் காணாத வகையில் திருவடியையும் திருமுடியையும் உடையவன் சிவபெருமான். அவன் திருநீறு பூசிய அகன்ற மார்பினை உடையவன் ஆவான். இத்தகைய தன்மை உடைய பெருமான், திருப்பழனம் நகரினில் உறைகின்றார்.

பாடல் 10:

கண் தான் கழுவா முன்னே ஓடிக் கலவைக் கஞ்சியை

உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார் பாராட்ட

வண் தாமரையின் மேல் நறவம் மதுவாய் மிக உண்டு

பண் தான் கெழும வண்டி யாழ் செய்யும் பழன நகராரே

விளக்கம்:

இரவினில் தூங்கி காலையில் எழும்போது நமது கண்களில் காணப்படும் புளிச்சையில் உள்ள கிருமிகளை அகற்றவதால், ஒரு உயிரினுக்கு தீங்கு நேரிடும் என்பதால், சமணர்கள் தங்களது கண்களில் உள்ள புளிச்சையைக் களையாமல், பண்டைய நாட்களில் இருந்தனர் என்று கூறுவார்கள்; கலவை=கலந்த; நறவம்=தேன்; கெழும=பொருந்த;

பொழிப்புரை:

தங்களது கண்களையும் கழுவாமல், ஓடிப்போய் கலந்த கஞ்சியை தமது உணவாக உட்கொள்ளும் சமணர்களின் பொருளற்ற புன்மொழிகளை ஒரு பொருட்டாக கருதாத அடியார்கள் பாராட்டும் வண்ணம் பழன நகரத்தில் பெருமான் உறைகின்றார். வளம் மிகுந்த தாமரை மலர்கள் மேல் அமர்ந்த வண்ணம் தங்களது வாயினால் மலரில் உள்ள தேனை மிகவும் அதிகமாக உறிஞ்சிய மகிழ்ச்சியில் வண்டுகள், பண்ணுடன் பொருத்தி யாழின் இன்னிசை போன்று இசைக்கும் சோலைகள் நிரந்த பழன நகரமே சிவபெருமான் வீடிரிருக்கும் நகரமாகும்.

பாடல் 11:

வேய் முத்து ஓங்கி விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள்

நா உய்த்தனைய திறலான் மிக்க ஞானசம்பந்தன்

பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை

வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே

விளக்கம்:

வேய்=மூங்கில்; விரை=நறுமணம்; உய்த்தனைய=செய்யவல்ல, செலுத்தவல்ல; இங்கே நாவுடன் இணைந்து வருவதால் சொல்லவல்ல என்று பொருள் கொள்ளவேண்டும்.

பொழிப்புரை:

தன்னிடம் முத்துகள் கொண்ட மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்து நறுமணம் பரப்பும் வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தில் பிறந்தவனாகிய ஞானசம்பந்தன், தனது நாவினால் இனிய பாடல்களை பாடும் வல்லமை பெற்ற ஞானசம்பந்தன், திருப்பழனத்து தலத்தில் உறையும் பெருமானைப் புகழ்ந்து பாடிய இந்த பாடல்களை, ஓதுவதற்கு இனிய பாடல்களை, தனது வாயினால் மொழிந்த பத்து பாடல்களையும் முறையான இசையுடன் பாடும் வல்லமை பெற்ற அடியார்கள் நல்லவர்களாக விளங்குவார்கள்,

முடிவுரை:

பெருமானின் அடையாளங்களை குறிப்பிட்டு நமக்கு பெருமானின் தோற்றத்தினை பதிகத்தின் முதல் பாடல் மூலம் உணர்த்தும் ஞானசம்பந்தர், பெருமானின் திருநாமங்களை சொல்லி அழைப்பதால், நமது பாவங்கள் முற்றிலும் தீர்ந்துவிடும் என்று அதே பாடலில் கூறுகின்றார். இரண்டாவது பாடல் மூலம், மரணம் நெருங்கிய தருணத்திலும் இடைவிடாது தன்னை தியானம் செய்த சிறுவனின் உயிரைக் கவர வந்த காலனை உதைத்து, சிறுவன் சுசரிதனுக்கு நீண்ட ஆயுள் கொடுத்தவர் சிவபெருமான் என்று நமக்கு, இந்த தலத்து பெருமான் அருள் புரிந்த தன்மையை உணர்த்துகின்றார். பாவங்களை தீர்த்தும், ஆயுளை நீட்டித்தும் அடியார்களுக்கு அருள் புரியும் பெருமான் தன்னையும் ஆட்கொண்டதாக, மூன்றாவது பாடலில் குறிப்பிடும் ஞானசம்பந்தர், இந்த குறிப்பு மூலம் நம்மையும் பெருமான் ஆட்கொள்ளவேண்டும் என்ற விருப்பத்துடன் அவனை பணிந்து வணங்க வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். ஐந்தாவது மற்றும் ஆறாவது பாடல்களில், திரிபுரங்களை எரித்த அவனது ஆற்றல் குறிப்பிடப்படுகின்றது. ஏழாவது பாடலில் பெருமான் சன்னதியில் பகை உணர்ச்சிக்கு இடமில்லை என்று உணர்த்தும் ஞானசம்பந்தர், எட்டாவது ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில், தனது வழக்கமான பாணியை பின்பற்றி, அரக்கன் இராவணனின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம் மற்றும் சமணர்களின் தன்மை பற்றிய குறிப்பு என்பவற்றை கூறுகின்றார். இந்த பதிகத்தை முறையாக ஓதும் அடியார்கள், தங்களின் தீய குணங்களும் குற்றங்களும் நீங்கப்பெற்று, நல்லவர்களாக அனைவரும் புகழும் வண்ணம் வாழ்வார்கள் என்று கடைப்பாடலில் கூறுகின்றார். இந்த பதிகத்தின் மூலம் பெருமானின் பெருமையையும் கருணைச் செயல்களையும் உணர்ந்த நாம், திருப்பழனம் சென்று இந்த பதிகத்தை முறையாக ஓதி, உரிய பயனை அடைவோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Vedham Oathi Vennool
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

வேதம் ஓதி வெண்ணூல்


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: