Go Back

22/03/21

அடையார்தம் புரங்கள்


முன்னுரை:

தனது இரண்டாவது தலையாத்திரையை நனிபள்ளி தலத்தில் தொடங்கிய ஞானசம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு, தலைச்சங்கை மற்றும் வலம்புரம் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் பூம்புகார் சென்றார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. பன்னகம்=பாம்பு; பூண்=ஆபரணம். பல்லவனீச்சரம், சாய்க்காடு ஆகிய இரண்டு தலங்களும் பூம்புகார் நகரத்தில் உள்ளவை. முதலில் பல்லவனீச்சரம் சென்றதாக கூறுவதால் நாம் முதலில் பல்லவனீச்சரத்து பதிகங்களை சிந்தித்த பின்னர் சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகங்களை சிந்திப்போம். இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய இரண்டு பதிகங்களே கிடைத்துள்ளன.

பன்னகப் பூணினாரைப் பல்லவனீச்சரத்துச்

சென்னியால் வணங்கி ஏத்தித் திருந்திசைப் பதிகம் பாடிப்

பொன்னி சூழ் புகாரில் நீடு புனிதர் தம் திருச்சாய்க்காட்டு

மன்னு சீர் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர் கொள்ளப் புக்கார்

இந்த தலம் சீர்காழியிலிருந்து பதினாறு கி.மீ, தொலைவில் உள்ள தலம். காவிரி நதி கடலில் இடத்திற்கு மிகவும் அருகில் உள்ள திருக்கோயில். சங்க காலச் சோழர்களின் தலைநகரமாக மற்றும் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரம். பகைவர்கள் புகுவதற்கு அச்சம் கொண்டு இந்த நகரினில் புகுவதைத் தவிர்ப்பார்கள் என்று பொருள் பட புகார் என்ற பெயர் எழுந்தது. பல்லவ மன்னன் ஒருவனால் கட்டப்படமையால் பல்லவனீச்சரம் என்ற பெயர் வந்தாதாக கூறுவார்கள். எந்த மன்னனால் கட்டப்பட்டது என்பதை அறிவதற்கு சரித்திரச் சான்றுகள் ஏதும் இல்லை. பட்டினத்தார் மற்றும் இயற்பகை நாயனார் வாழ்ந்த தலம். கம்பீரமாக காட்சி தரும் மூலவர் இலிங்கம் பல்லவனீச்வரர் என்றும் சங்கமுகேஸ்வரர் என்றும் அழைக்கப் படுகின்றார். இறைவியின் திருநாமம், சௌந்தரநாயகி. நடராஜர் சன்னதி தில்லையில் உள்ள அமைப்பில் காணப் படுகின்றது.

சிவநேயர் என்ற வணிகரின் மகனாக பிறந்த வெண்காடர் என்பவர், ஞானம் பெற்ற பின்னர், காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி பல தலங்களுக்கும் சென்றவர் இறுதியில் திருவொற்றியூர் நகரினை வந்தடைந்து அங்கே முக்தி அடைந்தார். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து வந்தமையால், இவருக்கு பட்டினத்து அடிகள் என்ற பெயர் ஏற்பட்டது. இவர் அருளிய பாடல்கள் பதினோராம் திருமுறையில் வைக்கப் பட்டுள்ளன.

இயற்பகை நாயனார் என்பவர் இந்த ஊரில் வாழ்ந்து வந்த சிவனடியார். அடியார்கள் எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் இயல்பினை கொண்டவராக வாழ்ந்து வந்ததால் இவரை இயற்பகை நாயனார் என்ற பெயர் வந்தது. மனித இயல்புக்கு மாறுபட்டு வாழ்ந்தவர் என்று பொருள். ஒரு நாள் ஒரு அடியவர் இவர் முன் தோன்றி, இவரது மனைவியை தனக்கு கொடையாக அளிக்குமாறு கேட்டார். தன்னிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் சிவபெருமான் அளித்தது என்ற சிந்தனையுடன் வாழ்ந்து வந்த நாயனார், தயக்கம் ஏதுமின்றி வந்த அடியாரிடம் மனைவியை ஒப்படைத்து விடுகின்றார். அவரது மனைவியும் தனது கணவரின் கட்டளையை ஏற்றுக் கொண்டு அடியாருடன் செல்லத் தொடங்குகின்றார். இந்த நிலையில் நாயனாரது தகாத செய்கை தங்கள் குலத்திற்கு இழுக்கினைத் தேடித் தந்துள்ளது என்று சொல்லியவாறு அவரது உறவினர்களும் நண்பர்களும், இயற்பகை நாயனாரின் மனைவியை வந்த அடியாருடன் செல்ல விடாமல் தடுத்தனர். ஆனால் நாயனாரோ, தனது செய்கையை எதிர்த்த அனைவரையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் முதியவரையும் தனது மனைவியையும் ஊரெல்லை வரை பத்திரமாக அழைத்துச் சென்று, மூவருமாக சாய்க்காடு எல்லை அடைந்த பின்னர், முனிவர் இயற்பகையாரை உமது இருப்பிடம் செல்லலாம் என்று கூறினார். வந்த முதியவரையும், அந்நாள் வரை தமது மனைவியாக இருந்த பெண்மணியையும் வணங்கி அவர்களிடமிருந்து இயற்பகை அடிகள் விடைபெற்றார். ஆனால் அவர் சிறிது தூரம் சென்ற பின்னர், வந்த முதியவர், அபயம் அபயம் என்று ஓலமிட்டார். அவரது ஓலக் குரலை கேட்ட, உம்மை தடுப்பவர் வேறு எவரேனும் உளரோ என்று கேட்டவாறு, அவ்வாறு எவரேனும் இருந்தால் அவர்களையும் வெட்டி வீழ்த்துவேன் என்று சொல்லியவாறு தனது உடைவாளினை உருவிக் கொண்டு திரும்பினார். அப்போது அவரால் முதியவரை காணமுடியவில்லை. முதியவர் மறைய தனது மனைவி மட்டும் தனியாக இருந்ததைக் கண்டார். மேலும் சிவபெருமான், இடப வாகனத்தில் அன்னையுடன் அமர்ந்தவாறு வானில் காட்சி அளித்தார். என் பால் இத்தகைய அன்பு வைத்த பழுதிலா அன்பரே என்று அழைத்து நீரும் உமது மனைவியும் சிவலோகம் வந்து அடைவீர்களாக என்று அருள் புரிந்தார். இந்த அடியார் இவ்வாறு அருள் பெற்றதை குறிப்பிடும் பெரிய புராணத்து பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

சென்றவர் முனியைக் காணார் சேயிழை தன்னைக் கண்டார்

பொன் திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின் மேல் பொலிந்தது என்னத்

தன் துணையுடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார்

நின்றிலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தினின்று எழுந்தார் நேர்ந்தார்

விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை

எண்ணிய உலகு தன்னில் இப்படி நம் பால் அன்பு

பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய்

நண்ணிய மனைவியோடு நம்முடன் போதுக என்று

பாடல் 1:

அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆரழலில் அழுந்த

விடையார் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேய இடம்

கடையார் மாட நீடி எங்கும் கங்குல் புறம் தடவப்

படையார் புரிசைப் பட்டினம் சேர் பல்லவனீச்சரமே

விளக்கம்:

அடையார்=வேதநெறியிலிருந்து தவறி அனைவர்க்கும் பகைவர்களாக விளங்கி துன்பம் இழைத்து வந்த திரிபுரத்து அரக்கர்கள்; ஆரழல்=தாங்க முடியாத தீ; திரிபுரத்து அரக்கார்களுடன் பெருமான் போருக்கு சென்ற போது, சிவபெருமான் ஏறிச் செல்லவிருந்த தேரினில், தேவர்கள் பலவிதமாக பங்கேற்றனர் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. நான்கு வேதங்களும் நான்கு குதிரைகளாகவும் பிரமன் தேரினை ஓட்டும் சாரதியாகவும் பிரவண மந்திரம் குதிரைகளை ஓட்ட உதவும் சாட்டையாகவும் சூரிய சந்திரர்கள் தேரின் சக்கரமாகவும், விந்திய மலை அச்சாகவும் பூமி தேரின் தட்டாகவும் ஆகாய தேரின் மேற்கூரையாகவும் பங்கேற்க, மந்திர மலை வில்லாகவும், வாசுகி பாம்பு வில்லின் நாணாகவும், அக்னி அம்பின் கூரிய நுனியாகவும், திருமால் அம்பின் தண்டாகவும் வாய் அம்பின் இறக்கைகளாகவும் பங்கேற்றன. தங்களின் உதவியுடன் பெருமான் போரிடச் செல்கின்றார் என்று அவர்களில் சிலர் நினைத்து இறுமாப்பு அடைந்தனர். அவர்களின் இறுமாப்பு தவறு என்பதை அவர்களுக்கு உணர்த்த பெருமான் எண்ணம் கொண்டார். அவர் தனது திருவடியை தேர்த்தட்டின் மீது வைத்த போது, அவரது உடலின் எடையைத் தாங்க உடியாமல் தேரின் அச்சு முறிந்தது. அப்போது திருமால் உடனே காளையாக மாறி தன்னை வாகனமாக ஏற்றுக்கொண்டு போர் புரியுமாறு வேண்டினார். பெருமானும் அருள் கூர்ந்து அவரை தனது காளை வாகனமாக ஏற்று அதன் மீது அமர்ந்து சென்றார் என்று புராணம் கூறுகின்றது. இதுதான் விடை மீது அமர்ந்த வண்ணம் திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்ற வரலாறு. இந்த செய்தியை விடையார் மேனியராய் சீறிய வித்தகர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். வித்தகர்=திறமை மிகுந்த செயலைச் செய்தவர்; மூன்று கோட்டைகளையும் ஊடுருவிச் சென்று நெருப்பினை ஊட்ட வல்ல அம்பினை செலுத்தும் திறன் மிகவும் அரியது அல்லவா. கடையார்=கடைகள் மிகுந்த கடை=சாளரங்கள்; கங்குல்=ஆகாயம்; புரிசை=மதிற்சுவர்கள்; படையார்=படைகள் பொருந்திய; அடையார் என்ற சொல்லுக்கு, தங்களது செய்கைகளால் கோபம் கொண்ட சிவபெருமான் தங்கள் மீது படையெடுத்து வருவதை அறிந்த பின்னரும், பெருமானிடம் சரணடைந்து உய்வினை தேடிக் கொள்ளாமல் இருந்த அரக்கர்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

வேதநெறியை சென்று அடைந்து வாழாமல், பலருக்கும் துன்பம் அளித்து பகைவர்களாய் வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், தாங்குதற்கு அரிய நெருப்பினில் மூழ்கடிக்கும் வண்ணம், இடபத்தினைத் தனது வாகனமாக ஏற்ற பெருமான் சீற்றம் அடைந்தவராக, அம்பினை எய்த திறமையாளர் ஆவார். அத்தகைய ஆற்றலை உடைய பெருமான் பொருந்தி அமர்ந்துள்ள இடம் யாதெனின், சாளரங்கள் நிறைந்து ஆகாயத்தை தொடும் வண்ணம் உயர்ந்த மதில்கள் படைகளுடன் பொருத்தப்பட்டு நீண்ட மதில் சுவர்களால் சூழப்பட்ட காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலமாகும்.

பாடல் 2:

எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தை பிரான் இமையோர்

கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்ணுதல் நண்ணுமிடம்

மண்ணார் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்திப்

பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே

விளக்கம்:

எண்ணார்=வேதநெறியையும் சிவநெறியையும் நினைத்து அதன் வழியே வாழ்க்கையை நடத்தாமல் அந்த வழிமுறைக்கு புறம்பாக நடந்து கொண்ட திரிபுரத்து அரக்கர்கள்; எயில்= கோட்டை; நுதல்=நெற்றி; கண்ணுதல்=தனது நெற்றியில் கண்ணினை உடைய பெருமான்; கோல= அழகிய; மண்ணார்=மண்ணில் பொருந்திய; வைகலும்=நாள்தோறும்; எண்ணார் என்ற சொல்லுக்கு தேவர்களுக்கும் மனிதர்களுக்கு தீய செயல்கள் புரிவதையே தனது எண்ணமாகக் கொண்டு வாழ்ந்த அரக்கர்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஐந்து பூதங்கள் தாமே உலகின் பல விதமான வளங்களுக்கும் நின்று, உலகினையும் உலகத்தவர்களையும் வாழ வைக்கின்றன. அத்தகைய பூதங்களாகிய தேவர்களுக்கு கண்ணாக இருந்து அவர்களை காப்பதன் மூலம் பெருமான், உலகினையும் உலகில் உள்ள உயிர்களையும் வாழவைக்கின்றான் என்பது இந்த பதிகத்தின் உட்கருத்து.

பொழிப்புரை:

வேதநெறியையும் சிவநெறியையும் நினைத்து அதன் வழியே வாழ்க்கையை நடத்தாமல் அந்த வழிமுறைக்கு புறம்பாக நடந்து கொண்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் சீற்றம் கொண்டு அழித்த பெருமான் எமக்கு தந்தையாவார். தங்களது கண்கள் போன்று மிகவும் அரியவர் என்று இமையோர்களால் பாராட்டப்படும் அவர் உலகத்தினையும் உலகத்தில் உள்ளவர்களையும் காப்பற்றுகின்றவர் ஆவார். அவர் தனது நெற்றியில் கண் உடையவராக விளங்குகின்றார். இவ்வாறு அனைவரையும் காக்கின்ற பெருமான் பொருந்தி உறைகின்ற இடம் யாதெனின், செழித்து வளத்துடன் பூமியில் பொருந்தி விளங்கும் சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனினை உண்ட மகிழ்ச்சியால் பாடல்கள் பாடும் தன்மையை உடைய காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலமாகும்

பாடல் 3:

மங்கை அங்கோர் பாகமாக வாள் நிலவு வார் சடை மேல்

கங்கை அங்கே வாழ வைத்த கள்வன் இருந்த இடம்

பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்

பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே

விளக்கம்:

வாள்நிலவு=ஒளி பொருந்திய பிறைச் சந்திரன்; வார் சடை=நீண்ட சடை; இந்த பாடலில் சம்பந்தர் இறைவனை கள்வன் என்று கூறுகின்றார். தான் திருடிய பொருளினை மற்றவர் அறியாத வண்ணம் ஒளித்து வைப்பது கள்வனின் செயல் என்பதை நாம் தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தின் விளக்கத்தில் கண்டோம். அந்த பாடலில் தனது உள்ளத்தை கொள்ளை கொண்டதால் கள்வன் என்று கூறிய சம்பந்தர், கங்கை நதியினை தனது சடையினில் மறைத்து தேக்கி வைத்ததால் இறைவனை கள்வன் என்று நயமாக கூறுகின்றார். அயம்=பள்ளம்; புணரி= கடல்; பங்கயம்=தாமரை மலர்கள்; உயர் பொய்கை=கடலில் நீர் மிகுந்த காணப்படுவதால் நீர்நிலைகளிலும் தண்ணீர் மேல் உயர்ந்து காணப் படுகின்றது என்று கூறுகின்றார்.

கங்கையை வாழவைத்த கள்வன் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். வால்மீகி இராமயணத்தில் கங்கை நதி பூமிக்கு வந்த வரலாற்றினை விஸ்வாமித்திரர் இராமபிரானுக்கு சொல்வதாக அமைந்துள்ளது. அயோத்தி நகரை ஆண்டு வந்த சகரன் என்ற மன்னன் அஸ்வமேத யாகம் செய்ய நினைத்து, தனது பட்டத்து குதிரையை பல நாடுகளுக்கும் அனுப்பினான். பல நாட்கள் சென்ற பின்னரும் பட்டத்து குதிரை திரும்பி வராததைக் கண்ட சகரன் தனது அறுபதினாயிரம் மகன்களை குதிரையைத் தேடிக் கொண்டு வருமாறு பணித்தான். அஸ்வமேத யாகம் தடையேதும் இன்றி முடிந்தால், தன்னை விடவும் சகரன் மிகுந்த புகழினை அடைந்துவிடுவான் என்று எண்ணிய இந்திரன், குதிரையை திருடிக்கொண்டு போய், பாதாள உலகினில் மறைத்து வைத்தான். குதிரையை தேடிக் கொண்டு பாதாள உலகம் சென்ற சகரனின் மைந்தர்கள், குதிரை பாதாளத்தில் திரிந்து கொண்டிருப்பதையும் அதன் அருகினில் நாராயணனின் அம்சமாகிய கபில முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதையும் கண்டனர். கபில முனிவர் தான், குதிரையை கடத்திக் கொண்டு சென்று, பாதாளத்தில் ஒளித்து வைத்த பின்னர், தவம் செய்வது போன்று நடிக்கின்றார் என்று தவறாக நினைத்த அவர்கள், முனிவரை தாக்க நினைத்தனர். தனது தவம் கலைந்ததால் கோபத்துடன் விழித்த முனிவரின் கண்களிலிருந்து பொங்கி வந்த கோபம், அறுபதினாயிரம் பேரையும் சுட்டெரித்து சாம்பலாக மாற்றியது. தனது புத்திரர்கள் வராததைக் கண்ட சகர மன்னன், தனது பேரன் அம்சுமானை குதிரையை தேடி மீட்டு வர அனுப்பினான். அறுபதினாயிரம் பேர் சென்ற வழியில் சென்ற அம்சுமான் பாதாளத்தில் அறுபதினாயிரம் பேரும் சாம்பலாக இருப்பதையும் அந்த சாம்பல் குவியலின் அருகே குதிரை திரிந்து கொண்டு இருப்பதையும் கண்டான். அப்போது அங்கே தோன்றிய கருடன், நடந்ததை விவரித்ததும் அன்றி, தேவலோகத்தில் இருக்கும் கங்கை நீரினால் இறந்தவர்களின் சாம்பல் கரைக்கப்பட்டால் அவர்கள் நற்கதி அடைவாரகள் என்றும் கூறியது. குதிரையை மீட்டுச் சென்ற அம்சுமான், அனைத்து விவரங்களையும் தனது பாட்டனாராகிய மன்னனிடம் கூறினான். சகரன், அம்சுமான், அவனது மகன் திலீபன் ஆகியோர் எத்தனை கடுந்தவம் செய்தும் அவர்களால் கங்கையை கீழே கொண்டு வர முடியவில்லை. திலீபனின் மகன் பகீரதன்.

பகீரதன் பிரமனை நோக்கி தவம் செய்து, கங்கை நதியினை வானிலிருந்து கீழே வரவழைத்து, சாம்பல் குவியலாக மாறி இருக்கும் தனது மூதாதையரின் மீது பாயவைத்து அவர்கள் நற்கதி அடையச் செய்ய வேண்டும் என்று விரும்பினான். கங்கை நதிக்கு பூலோகம் இறங்கி வர விருப்பம் இல்லாததால், வேகத்துடன் கீழே இறங்கி வரும் தன்னைத் தாங்கும் வல்லமை படைத்தவர் வேண்டும் என்ற சாக்கு சொல்லவே, பகீரதன் பெருமானை நோக்கி தவமியற்றி, பெருமான் கங்கை நதியைத் தாங்குவதற்கு ஏற்பாடு செய்தான். இதனால் கங்கையின் கோபம் மேலும் பெருகியது; சிவபெருமானையும் அடித்துக் கொண்டு, பூவுலகினையும் அடித்துக் கொண்டு பாதாளத்தில் சென்று சேர்க்கும் நோக்கத்துடன் மிகவும் வேகமாக கீழே இறங்கியது. அவ்வாறு இறங்கிய கங்கையை பெருமான் தனது சடையினில் தாங்கி அடக்கியது பல தேவாரப் பாடல்களில் கூறப் படுகின்றது. மிகவும் வேகமாக இறங்கிய கங்கை நதியினை, அப்பர் பிரான் குறிப்பிடும் பாடலை (4.65.7) நாம் இங்கே காண்போம். மையறு மனத்தன்=குற்றமில்லாத மனத்தை உடையவன்; பகீரதன் இழிதல்=இறங்குதல்; இவ்வாறு வேகமாக இறங்கிய கங்கை நதியை கட்டுப்படுத்தும் ஆற்றல் சிவபிரான் ஒருவருக்கே இருந்தமையால், பகீரதன் சிவபிரானை வேண்ட, சிவபிரானும் கங்கையைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு பின்னர் மெதுவாக கங்கை நதியை விடுவதற்கு சம்மதித்தார். சிவபிரான் ஏற்றக்கொள்ள இசைந்ததால், தேவர்கள் பயம் ஏதுமின்றி கங்கை நதி கீழே இறங்குவதை வேடிக்கை பார்த்தனர்.

மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட

ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிர முகமதாகி

வையகம் நெளியப் பாய்வான் வந்து இழி கங்கை என்னும்

தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே

இவ்வாறு கங்கை நதியினை பெருமான் தனது சடையினில் தாங்கிய பின்னர் சிறிது சிறிதாக வெளியேற்றினார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு பெருமான் கங்கை நதியைத் தாங்காது இருந்தால், கங்கை நதி பூமியையும் புரட்டிக் கொண்டு பாதாளத்தில் சேர்த்து தானும் பாதாளத்தில் கலந்திருக்கும். அவ்வாறு நேரிடுவதை பெருமான் தவிர்த்தார் என்பதை குறிப்பிடும் வண்ணம் கங்கை வாழவைத்த கள்வன் என்று சம்பந்தர் கூறுகின்றார் போலும்.

பொழிப்புரை:

பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக வைத்துள்ள பெருமான், பிறைச் சந்திரனையும் ஏற்றுள்ள தனது நீண்ட சடையினில் கங்கை நதியினை ஒளித்து வைத்து, கங்கை நதியை வாழவைத்த கள்வனாக காணப்படுகின்றான். இத்தகைய பெருமான் உறையும் இடம் யாதெனின், ஆழம் மிகுந்த கடல் நீரின் வெள்ளத்தால், உயர்ந்த நீர் மட்டம் கொண்டவையாக விளங்கும் குளங்களும் மற்ற நீர் நிலைகளும் விளங்க, அந்த நீர் நிலைகளில் தாமரை மலர்கள் பூத்துப் பொழியும் காட்சியினை உடைய காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலமாகும்.

பாடல் 4:

தாரார் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பகலம்

நீரார் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம்

போரார் வேற்கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால்

பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே

விளக்கம்:

தயங்க=போல் விளங்க; தார்=மாலை; ஆர்கின்ற என்ற சொல்லுக்கு உலகம் இன்பமடைதல் என்று பொருள் கொண்டு, அடியார்கள் பாடும் இசைப் பாடலினை கேட்கும் உலகத்தவர்கள் இன்பம் அடைகின்றனர் என்று சொல்வதும் பொருத்தமே. மைந்தர்=வலிமை வாய்ந்தவர்கள்; புகார் என்ற பெயருக்கு ஏற்ப வலிமை மிகுந்த வீரர்கள் வாழ்ந்த தலமாக காவிரிப்பூம்பட்டினம் இருந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது.

பொழிப்புரை:

பொன் போன்று காணப்படும் கொன்றை மலர்களால் தொடுத்த மாலையினை உடைய பெருமானின் பரந்த மார்பு நீரினில் குழைத்த திருநீறு சந்தனம் போல் பூசப்பெற்று பொலிவுடன் விளங்குகின்றது. இயற்கையாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து நீங்கிய பரமன் உறையும் இடம் யாதெனின், போருக்கு மிகவும் அவசியமான வேற்படை போன்று கண்களை கொண்டுள்ள மாதர்களும் அவர்களின் துணையாக விளங்கும் வல்லமை வாய்ந்த இளைஞர்களும் கோயிலில் புகுந்து ஒன்று கூடி இசையுடன் பொருந்திய பாடல்களை உலகம் அதிரும் வண்ணம் பாட, அத்தகைய பாடல்களைக் கேட்பதற்காக உலகத்து மக்கள் திரளும் காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலமாகும்

பாடல் 5:

மை சேர் கண்டர் அண்ட வாணர் வானவரும் துதிப்ப

மெய் சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம்

கை சேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே

பை சேர் அரவார் அல்குலார் சேர் பல்லவனீச்சரமே

விளக்கம்:

மை சேர்=கருமை நிறம் பொருந்திய; மை சேர் என்று கூறுவதன் மூலம், பெருமானின் கழுத்தும் உடல் போன்று செம்மை நிறத்துடன் பண்டைய நாளில் விளங்கியது என்றும், பின்னாளில் ஆலகால விடத்தைத் தேக்கியதால் கருமை நிறம் வந்து சேர்ந்தது என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. மேவி=விருப்பம் கொண்டு; வாணர் என்ற சொல் வாழுநர் என்ற சொல்லின் திரிபு என்று கூறுவார்கள். அண்ட வாணர்=பல விதமான அண்டத்தில் வாழ்வோர்கள்; பொடி=திருநீறு; பை சேர்=பை போன்று; பை=பாம்பின் படம்; விழைவு=பற்று, அன்பு;

பொழிப்புரை:

ஆலகால விடத்தினை தேக்கியதால் கருமை நிறம் வந்து சேர்ந்த கழுத்தினை உடைய பெருமானை, பல அண்டங்களில் வாழ்வோரும் வானவர்களும் துதித்து போற்றுகின்றனர். இவ்வாறு அனைவராலும் போற்றப்படும் பெருமான், தனது உடல் முழுதும் திருநீறு பூசியவனாக , அடியார்கள் அவனது தன்மையை புகழ்ந்து பாட, விரும்பி அமர்ந்துள்ள இடம் பல்லவனீச்சரம் தலமாகும். தங்களது கைகளில் மிகவும் அதிகமாக வளையல் கொண்டவர்களும் பாம்பின் படம் போன்று புடைத்து காணப்படும் மார்பினை உடையவர்களும் உடைய இளமகளிர், பெருமான் பால் கொண்டுள்ள பற்று மற்றும் அளவு கடந்த காதலால், அவனது திருவடிகளை வழிபட ஒன்று சேர்கின்ற காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலமே இறைவன் உறையும் தலமாகும்.

பாடல் 6:

குழலின் ஓசை வீணை மொந்தை கொட்ட முழவதிரக்

கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள் இருந்த இடம்

சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண்டிரை மொண்டு எறியப்

பழியிலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சரமே

விளக்கம்:

மொந்தை=பறை போன்ற இசைக்கருவி; ஆர்க்க=ஒலிக்க; கழி=உப்பங்கழி; தெண்டிரை=தெண்+திரை;, தெளிந்த நீரினை உடைய அலைகள்; குழவம்=மத்தளம்; ஓதம்=நீர்; மொண்டு=முகந்து;

பொழிப்புரை:

குழலின் ஓசைக்கு பொருந்தும் வண்ணம் வீணை மொந்தை ஆகிய இசைக் கருவிகள் முழங்கவும், மத்தளம் அதிர்ந்து ஒலிக்கவும், தனது கால்களில் பொருந்திய கழல்கள் நடனத்திற்கு ஏற்ப, ஆராவரித்து ஒலிக்க நடனம் ஆடும் கடவுள் இருக்கும் இடம் பல்லவனீச்சரம் தலமாகும். சுழிகள் பொருந்திய கடல் நீரினில், காவிரி நதி தெளிந்த நீரினை முகந்து எறியும் வண்ணம் விளங்குவதும், பழியின்றி ஒழுக்கமான வாழ்க்கையை தொடர்ந்து நடத்தும் நன்மக்கள் வாழ்வதும் ஆகிய காவிரிப்பூம்பட்டினத்து நகரில் உள்ளது பல்லவனீச்சரம் தலம்.

பாடல் 7:

வெந்தலாய வேந்தன் வேள்வி வேரறச் சாடி விண்ணோர்

வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம்

மந்தலாய மல்லிகையும் புன்னை வளர் குரவின்

பந்தல் ஆரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே

விளக்கம்:

வெந்தல்=தகுதியற்ற கூட்டம்; தலைவன் தவறு செய்யும் போது, அந்த தவற்றினை சுட்டிக் காட்டி திருத்த வேண்டியது அவனைச் சூழ்ந்திருக்கும் மக்களின் கடமை. தக்கன் தவறான வழியில், சிவபெருமானை புறக்கணித்து வேள்வி செய்ய முடிவு செய்தபோது, தக்கனை சூழ்ந்து இருந்த எவரும் அவ்வாறு சுட்டிக் காட்டமையால், வெந்தல் என்று அந்த கூட்டத்தை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மந்தல்=மென்மை; பந்தல் ஆரும்=பந்தல்கள் படர்ந்துள்ள; மைந்தன்=வல்லமை வாய்ந்தவன்; வெந்தல் என்ற சொல்லுக்கு அழியும் தன்மை என்று பொருள் கொண்டு, வைதீக முறையில் செய்யப்படும் வேள்வி முதலான சடங்குகள் அழியும் வண்ணம் வேள்வி செய்ய முயற்சி செய்தமை குறிப்பிடப்படுகின்றது என்றும் விளக்கம் அளிக்கின்றனர். தலத்து தலமரமாகிய மல்லிகை இங்கே குறிப்பிடப்படுகின்றது.

பொழிப்புரை:

தான் தவறு செய்த போது அதனை சுட்டிக் காட்டி திருத்தும் வல்லமையின்றி தகுதியற்ற கூட்டத்தால் சூழப்பட்டுள்ள வேந்தன் தக்கன், பெருமானைப் புறக்கணித்து வேதநெறிக்கு புறம்பாக செய்த வேள்வியை வேரோடும் அழித்த வல்லமை வாய்ந்த பெருமானை, தேவர்கள் அனைவரும் அவனது இருப்பிடம் சென்றடைந்து போற்றி வழிபடுகின்றனர். இத்தகைய வீரம் வாய்ந்த பெருமான் மகிழ்ந்து உறையும் இடம் யாதெனின், மென்மையான தன்மை கொண்ட மல்லிகைக் கொடி, புன்னை மற்றும் குராமரம் ஆகியவற்றில் படர்ந்து அமைத்த பந்தல்கள் நிறைந்த காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலமாகும்

பாடல் 8:

தேரரக்கன் மால் வரையைத் தெற்றி எடுக்க அவன்

தார் அரக்கும் திண்முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர்

கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலமெலாம் உணரப்

பார் அரக்கம் பயில் பல்லவனீச்சரமே

விளக்கம்:

சங்கரன் என்ற சொல்லுக்கு இன்பம் தருபவன் என்றும் சம்ஹாரம் செய்பவன் என்றும் இரண்டு விதமான பொருள்கள் கூறப்படுகின்றன. தேவாரத் திருப்பதிகங்களில் பெருமானை சங்கரன் என்று பல இடங்களிலும் மூவர் பெருமானர்கள் பல இடங்களில் அழைக்கின்றனர். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

எந்த இடத்தில் பிறந்தாலும், எந்த விதமாக பிறந்தாலும் தனது அடியார்களாக இருந்தால், அங்கே சென்று அவர்களுக்கு அருள் புரியும் தன்மையாளன் சங்கரன் என்று சம்பந்தர் கூறுகின்ற பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கொங்கு ஏயும் என்றால் நறுமணம் பொருந்திய என்று பொருள். இந்த பாடல் பிரமபுரம் தலத்தின் மீது சம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடல் (2.40.6).

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன் அடியார்க்கு

இங்கே என்று அருள் புரியும் எம்பெருமான் எருது ஏறி

கொங்கு ஏயும் மலர்ச் சோலை குளிர் பிரமபுரத்து உறையும்

சங்கே ஒத்து ஒளிர்மேனிச் சங்கரன் தன் தன்மைகளே

கரவீரம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.58.2) சம்பந்தர் சங்கரனின் திருப்பாதங்களை வழிபடும் அடியார்களிடம் வினைகள் தங்காது என்று கூறுகின்றார். இன்பம் தருபவன் என்ற பொருள் அழகாக பொருந்துவதை நாம் இங்கே காணலாம்.

தங்குமோ வினை தாழ்சடை மேலவன்

திங்களோடு உடன் கூடிய

கங்கையான் திகழும் கரவீரத்து எம்

சங்கரன் கழல் சாரவே

சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் நமச்சிவாய பதிகத்தின் ஆறாவது பாடலில் (4.11.6) அப்பர் பிரான் தன்னைச் சார்ந்தவர்களுக்கு நன்மை புரிந்தும் சாராதவர்களுக்கு அருள் புரியாமலும் இருக்கும் சங்கரன், என்றும் அதே கொள்கையுடன் இருக்கின்றார் என்று கூறுகின்றார். சலம்= மாறுபாடு இல்லாத தன்மை; மேலும் அவர் குலத்தின் அடிப்படையில் எவரையும் நோக்காமல், அடியார்களின் பக்தி அடிப்படையில் நன்மை அளிப்பதால், தாழ்ந்த குலத்தில் பிறந்தவராக இருந்தாலும், நமச்சிவாய மந்திரத்தை சொல்லும் அன்பர்களுக்கு உயர்ந்த குலத்தில் பிறந்தோர் அடையும் நற்பயன்களை சங்கரன் கொடுக்கின்றார் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்

நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம்

குலமிலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்

நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.77.4) தனது சடையில் வைத்து, அழிந்த நிலையில் இருந்த பிறைச் சந்திரனை காத்து இன்பம் அளித்தவன் என்ற பொருள் பட, சந்திரன் சடையில் வைத்த சங்கரன் என்று குறிப்பிடுகின்றார். மேலும் நமச்சிவாய என்ற மந்திரத்தைச் சொல்லி திருநீறு அணிந்தால், நமது நோய்களும் வினைகளும் நெருப்பில் இடப்பட்ட விறகு போல் வெந்து சாம்பலாக மாறிவிடும் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.

சந்திரன் சடையில் வைத்த சங்கரன் சாம வேதி

அந்தரத்து அமரர் பெம்மான் நல் வெள்ளூர்தியான் தன்

மந்திர நமச்சிவாயவாக நீறு அணியப் பெற்றால்

வெந்து அறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகு இட்டன்றே

திருப்பூவணம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (7.11.6) சுந்தரர், தன் மீது அன்பு வைப்போர்க்கு இன்பம் விளைவித்தும் தன்னை விரும்பாதவர்களுக்கு துன்பம் இழைத்தும், சங்கரன் என்ற பெயருக்கு ஏற்ப நடந்து கொள்ளும் இறைவன் பொன் நிறத்த மேனியனாக விளங்குகின்றான் என்று கூறுகின்றார்.

மின்னனையாள் திருமேனி விளங்க ஓர்

தன்னமர் பாகமது ஆகிய சங்கரன்

முன் நினையார் புரம் மூன்று எரி ஊட்டிய

பொன்னனையான் உறை பூவணம் ஏதோ

கச்சி அனேகதங்காவதம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (7.10.9) சுந்தரர், உமையன்னை மகிழும் வண்ணம் சுடுகாட்டில் நடனம் ஆடும் சங்கரன் என்று கூறுகின்றார். தளவு=முல்லை அரும்பு; ஏல்=போன்ற; விராவுதல்=கலந்திருத்தல்; பெருமான் மீது ஐயப்பாடு ஏதுமின்றி அவனை வணங்கித் தொழுதால் தான் அவனது சேவடிகளைச் சென்றடையமுடியும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. முல்லை அரும்பு போன்ற சிரிப்பினை உடையவள் என்றும், எப்போதும் பெருமானுடன் கலந்திருக்கும் சிறப்பினைப் பெற்றவள் என்றும் உமையன்னையை சுந்தரர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அங்கையவன்=உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தனக்கு தெளிவாக விளங்குபவன் பெருமான் என்று சுந்தரர் இங்கே கூறுகின்றார். ஒலி மிகுந்ததும் அகன்றதும் ஆகிய மழுப் படையினை உடையவன் என்றும் கூறுகின்றார்.

சங்கையவர் புணர்தற்கு அறியான் தளவு ஏல் நகையாள் விரா மிகு சீர்

மங்கையவள் மகிழச் சுடுகாட்டிடை நட்ட நின்றாடிய சங்கரன் எம்

அங்கையவன் அனல் ஏந்துபவன் கனல் சேர் ஒளியன்னதொர் பேர்

அகலம்

தம் கையவன் உறைகின்ற இடம் கலிக்கச்சி அனேகதங்காவதமே

திருவாசகம் தோணோக்கம் பதிகத்தின் பாடலில், மணிவாசகர் திருமாலுக்கு சக்கரம் அருளி மகிழச் செய்தவன் என்ற பொருள் பட, சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்கு அருளியவாறு என்று குறிப்பிடுகின்றார். பங்கயம்=தாமரை மலர்கள்; இடந்து=பேர்த்து;

பங்கயம் ஆயிரம் பூவினில் ஓரு பூக் குறையத்

தம் கண் இடந்து அரன் சேவடி மேல் சாத்தலுமே

சங்கரன் எம் பிரான் சக்கரம் மாற்கு அருளியவாறு

எங்கும் பரவி நாம் தோணோக்கம் ஆடாமோ

திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தில் பெருமான் பற்றிய நினைப்பே தனது மனதில் அமுதம் போல் ஊறுகின்றது என்று மணிவாசகர் கூறுகின்றார். நினைத்தாலே இனிய உணர்வுகளை உண்டாக்கும் பெருமானை சங்கரன் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாகவே உள்ளது அல்லவா. சட்டோ=செம்மையாக, நன்றாக, முழுவதுமாக; சிட்டாய=அறிவுடைப் பொருளாகிய, நுட்பமாக; தொழும்பர்கள்=இழிவான தன்மை உடையவர்கள்; பெருமானை நினையாத இழிந்த மனிதர்களை தான் அருவருத்து வெறுப்போம் என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார்.

சட்டோ நினைக்க மனத்து அமுதாம் சங்கரனைக்

கேட்டேன் மறப்பேனோ கேடு படாத் திருவடியை

ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உரு அறியோம்

சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

தெற்றி=கைகளை பின்னி எடுக்க; தார் அரக்கும்=மாலைகள் அழுத்தும், மாலைகள் பதிந்த; கார்=மேகங்கள்; கார் அரக்கும்=மேகங்கள் அழுத்தி கடல் நீரினை முகரும்; கடல் கிளர்ந்த காலம்=கடல் பொங்கி எழுந்து உலகினை மூழ்கடிக்கும் பிரளய காலம்; பாராரக்கம்=பாரார்+அக்கம்; பாரார்=உலகத்தவர்; அக்கம்= உருத்திராக்கம்; பயில்=பூண்டு போற்றி;

பொழிப்புரை:

சிறந்த புட்பக விமானத்தை உடைய அரக்கன் இராவணன், பெருமை மிகுந்த கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, மாலைகள் பதிந்த அவனது வலிமை மிகுந்த தலைகள் பத்தினையும் கயிலை மலையின் கீழே அமுக்குண்டு வருந்துமாறு தனது கால் விரலை கயிலை மலையின் மீது ஊன்றிய சங்கரன், பின்னர் அந்த அரக்கன் தனது தவறினை உணர்ந்து சாமகானம் பாடி தன்னைப் போற்றி புகழ்ந்த போது, சங்கரன் என்ற தனது பெயருக்கு ஏற்ப, அவனுக்கு பல நன்மைகள் புரிந்து அருள் செய்தார். மேகங்கள் அழுந்தி முகர்க்கும் நீரினை கொண்டுள்ள கடல் பொங்கி எழுந்து உலகினை மூழ்கடிக்கும் பிரளய காலத்திலும் அழியாது உணரப்படும் சிறந்த தன்மை உடையதும், உருத்திராக்கத்தின் சிறப்பினை உணர்ந்து மக்கள் அதனைப் போற்றி வாழும் மக்கள் வாழும் பெருமையினை உடையதும் ஆகிய காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலமே, அடியார்கள் இன்பமடையும் வண்ணம் பல நன்மைகள் புரியும் தலமாகும்.

பாடல் 9:

அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன் நெடுமால்

தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம்

வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடலைப்ப

பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சரமே

விளக்கம்:

பெருமானை மனதினில் தியானித்து கருத்தினால் உணர்ந்து தேடாமல் தங்களது கண்களால் தேடிய தன்மையை இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். வங்கம்=கப்பல்கள்; சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் என்பன வேதங்களை பாதுகாக்கும் ஆறு அரண்களாக விளங்குகின்றன. வாய்மொழியாக தலைமுறை தலைமுறையாக கற்கப் பட்டு வந்த வேதங்களை தவறுகள் ஏதும் இன்றி சொல்லும் வண்ணம் இந்த அங்கங்கள் உதவுகின்றன. வேதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்களைப் பற்றி கூறுவது சிக்ஷை எனப்படும் பகுதி. எழுத்துக்கள் ஒலிக்கப்பட வேண்டிய முறை, மாத்திரை அளவுகள், மற்றும் அந்தந்த எழுத்துக்களுக்கு உரிய தேவதைகள் முதலிய பல விவரங்கள் அடங்கிய பகுதிகள் சிக்ஷை என்று அழைக்கப்படும். பல எழுத்துக்களால் உருவான சொற்களைப் பற்றி கூறுவது வியாகரணம். சந்தஸ் என்பது வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மந்திரங்களின் எழுத்து எண்ணிக்கையை குறிக்கும் பகுதியாகும். நிருக்தம் என்றால் விளக்கிச் சொல்லுதல் என்று பொருள். வேதங்களில் வரும் சொற்றொடர்களுக்கும், சொற்களுக்கும் விளக்கம் அளிக்கும் வேதத்தின் பகுதிகள் நிருக்தம் என்று அழைக்கப்படுகின்றன. ஜோதிடம் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியான கணிதத்தில், கால தத்துவங்கள், வருடம், அயனம், திதி, வாரம், மாதம், வளர்பிறை/தேய்பிறை விவரங்கள் மற்றும் அந்தந்த காலங்களில் செய்யக்கூடிய காரியங்கள் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியான ஹோரையில், இதுவரை நடந்த சம்பவங்கள், தற்போது நடக்கும் சம்பவங்கள், இனி நடக்க இருக்கும் சம்பவங்கள் என்பவை கோள்களின் பயணத்தின் அடிப்படையில் கணித்து சொல்லப்படுகின்றன. கல்பம் என்றால் பிரயோகம் என்று பொருள்; வேதங்களில் சொல்லப் பட்டுள்ள கர்மாக்களை செய்யவேண்டிய வழிமுறைகள் அடங்கிய பகுதிகள் கல்பம் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த பாடலிலும் சங்கரன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். திருமாலும் பிரமனும் அடிமுடி தேட முயற்சி செய்த போது அவர்களால் காண முடியாமல் நின்ற பெருமான், அவர்கள் இருவரும் இறைஞ்சிய போது அவர்கள் இருவரும் இன்புறும் வண்ணம் அவர்களுக்கு காட்சி அளித்தவன் பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம், சங்கரன் என்ற சொல் இங்கே கையாளப் பட்டுள்ளது.

பொழிப்புரை:

ஆறு அங்கங்களையும் வேதங்களையும் ஓதும் பிரமனும் திருமாலும், பெருமானை தியானித்து கருத்தாலும் அகக்கண்களாலும் தேடுவதை விடுத்து, தங்களது புறக் கண்களால் பெருமானது அடியையும் முடியையும் தேடிய போது அவர்களால் காண முடியாத வண்ணம், நீண்ட நெடும் தழலாக நின்றவன் சங்கரன். பின்னர் அவர்களுக்கு காட்சி தந்து அருள் புரிந்து இன்பம் அளித்த பெருமான் உறையும் இடமாவது, மரக்கலங்களையும் முத்து மற்றும் சிப்பி ஆகிய பொருட்களை தனது அலைக் கரங்களால் அலைக்கழிக்கும் கடலினை உடையதும், குற்றமற்ற வாழ்க்கையை வாழும் மக்கள் நிறைந்ததும் ஆகிய காவிரிப்பூம்்பட்டினத்து பல்லவனீச்சரம் தலமாகும்

பாடல் 10:

உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார்

கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டறியாத இடம்

தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார்

பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சரமே

விளக்கம்:

இடுக்கண்=துன்பம்; உடுக்கை=உடை மற்றும் உடுக்கை வாத்தியம்; கண்டறியாத இடம் என்று குறிப்பிட்டு சமணர்களும் புத்தர்களும் இறைவனை தரிசித்து மகிழும் வாய்ப்பினை இழந்தவர்கள் என்பதை சம்பந்தர் சுட்டிக் காட்டுகின்றார் போலும். பயில்வார் என்ற சொல் இறைவனை குறிப்பதாக பொருள் கொண்டு பல இசைக் கருவிகளின் இசைக்கும் பொருந்தும் வண்ணம் நடமாடும் பெருமானார், பண்டைய நாளிலிருந்தே தனது அடியார்களின் இடர்களை தீர்த்து வருகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

வயிறார உண்டும் ஆடை ஏதும் இன்றியும் ஊரார் நகைக்கும் வண்ணம் திரியும் சமணர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாமல் தங்களது உடலில் ஆடையை போர்த்த வண்ணம் திரியும் புத்தர்களும் கண்டறியாத இடம் பல்லவனீச்சரம் தலமாகும். தண்டு உடுக்கை தாளம் தக்கை ஆகிய கருவிகள் எழுப்பும் இசைக்கு பொருந்த நடனம் பயிலும் அடியார்களின் துன்பங்களை, பண்டைய காலத்திலிருந்தே தீர்த்து அருள் புரியும் பெருமான் உறையும் இடம் காவிரிப்பூம்்பட்டினத்து பல்லவனீச்சரம் தலமாகும்

பாடல் 11:

பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்து எம்

அத்தன் தன்னை அணிகொள் காழி ஞானசம்பந்தன் சொல்

சித்தம் சேர செப்பு மாந்தர் தீவினை நோய் இலராய்

ஒத்தமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவரே

விளக்கம்:

அத்தன்=தந்தை; ஒத்தமைந்த=தங்களது இயல்புகளுக்கு ஒத்த: அணிகொள்=அழகு நிறைந்த: பத்தர் என்ற சொல்லுக்கு பத்து குணங்களை உடையவர் என்றும் பக்தர் என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம். அடியார்களின் செய்கை பத்து வகைப் பட்டது என்று குறிப்பிடும் அப்பர் பிரானின் பாடல் (4.18.10) நமது நினைவுக்கு வருகின்றது.

பத்து கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்

பத்து கொலாம் எயிறும் நெரிந்து உக்கன

பத்து கொலாம் அவர் காயப் பட்டான் தலை

பத்து கொலாம் அடியார் செய்கை தானே

சிவனடியார்களிடம் இருக்க வேண்டிய குணங்களை அக குணங்கள் என்றும் புறக் குணங்கள் என்றும் பிரிக்கின்றனர்.. பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும்.

பொழிப்புரை:

பத்து சிறந்த குணங்களை உடைய அடியார்கள் போற்றும் காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் உறையும் எனது தந்தையாகிய பெருமானை, அழகு நிறைந்த சீர்காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இந்த பத்து பாடல்களை, தங்களது சித்தத்தில் நிறுத்தி பாடும் அடியார்கள் தங்களது தீவினைகள் முற்றிலும் களையப்பெற்று, தங்களது இயல்புக்கு ஏற்ப அமைந்த தேவர்கள் வாழும் உலகினை அடைந்து உயர்வாக வாழ்வார்கள்.

முடிவுரை:

சங்கரன் என்ற பெயர் பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப் பட்டாலும் ஒரே பதிகத்தின் இரண்டு பாடல்களிலும் அவ்வாறு குறிப்பிடப்படுவது மிகவும் அரியதாக உள்ளது. அத்தகைய குறிப்புக்கு ஏற்ப பெருமானின் அருட்செயல்களால் இன்பம் அடைந்த பல நிகழ்ச்சிகள் இங்கே குறிப்பிடப் படுகின்றன. முதல் பாடலில் முப்புரத்து கோட்டைகளை அழைக்கப் பட்டதால், தேவர்கள் தங்களது துன்பம் தீர்க்கப்பெற்று மகிழ்ந்தனர் என்று கூறுகின்றார். இரண்டாவது பாடலில், பெருமான் கண்ணாக இருந்து உலகத்தை காப்பதால், நாம் அனைவரும் இன்பமடைதல் குறிப்பிடப் படுகின்றது. மூன்றாவது பாடலில், பார்வதி தேவி மற்றும் கங்கை நங்கை பெருமானது உடலில் பங்கேற்று மகிழ்ந்திருக்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. நான்காவது பாடலில் நின்மலனாக இறைவன் இருக்கும் தன்மையை குறிப்பிடும் சம்பந்தர், ஐந்தாவது பாடலில் காவிரிப்பூம்பட்டினத்து மகளிர், பெருமான் பால் காதல் கொண்டு அவனைப் போற்றி துதித்து மகிழும் தன்மையை குறிப்பிடுகின்றார். ஆறாவது பாடலில் பல இசைக் கருவிகள் ஒலிக்க இறைவன் நடமாடும் தன்மையும் ஏழாவது பாடலில் தக்கனது வேள்வி அழிக்கப்பட்டதும் குறிப்பிடப் பட்டுள்ளன. எட்டாவது பாடல் இராவணன் மகிழ்ந்த தன்மையும் ஒன்பதாவது பாடல் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் மகிழ்ந்த தன்மையும் குறிப்பிடப்படுகின்றன. பத்தாவது பாடலில் தன்னைப் போற்றி புகழும் பாடல்களுக்கு ஏற்ப நடமாடும் அடியார்களின் துன்பங்களை தீர்ப்பவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். கடைப்பாடல், இந்த பதிகத்தை ஓதும் அடியார்கள் தங்களது தீவினைகள் தீரப்பெற்று மகிழ்வார்கள் என்று குறிப்பிடுகின்றார். நாமும் இந்த பதிகத்தை முறையாக ஓதி, இறைவனது அருளினால் நமது தீவினைகள் தீர்க்கப் பெற்று இன்பமான வாழ்க்கை நடத்துவோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Adaiyaar tham Purangal
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

அடையார்தம் புரங்கள்


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: