Go Back

22/03/21

வண் தரங்கப் புனல்


முன்னுரை:

நனிப்பள்ளி தலத்தில் தொடங்கிய தனது இரண்டாவது தலையாத்திரையை திருமுல்லைவாயில் தலத்தில் முடித்துக் கொண்ட திருஞானசம்பந்தர், சீர்காழி திரும்பிய பின்னர், சீர்காழி தலத்து இறைவனைப் போற்றி தூய ஆணியாம் பதிகம் பாடினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இந்த பதிகம் யாது என்பது குறித்து இருவேறு விளக்கங்கள் சொல்லப் படுகின்றன. அன்ன மென்னடை அரிவை என்று தொடங்கும் பதிகத்தின் நான்காவது பாடலில் (2.102.4) ஆணிப்பொன் என்று ஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். எனவே இந்த பதிகம் தான் சேக்கிழாரால் தூய ஆணியாம் பதிகம் என்று குறிப்பிடப்படும் பதிகம் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

சிவக்கவிமணியாரும், வடக்குப்பட்டு செங்கல்வராயப் பிள்ளை அவர்களும் எம்பிரான் எனக்கு அமுதம் என்று தொடங்கும் பதிகமும், வண் தரங்கப் புனல் என்று தொடங்கும் பதிகமும், தூய ஆணியாம் பதிகம் என்று சேக்கிழாரால் குறிப்பிடப் படுகின்றன என்று கூறுகின்றனர். இந்த இரண்டு பதிகங்களின் சிறப்பு கருதி, ஏனைய பதிகங்களில் தரத்தை அறிந்து கொள்ள உதவும் உரைகல் என்று குறிப்பிட்டு, இந்த பதிகங்களையே சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார் என்று கூறுகின்றனர். இருவருமே, தேவாரப் பதிகங்களை நன்கு கற்று தேர்ந்து, ஆராய்ச்சி செய்துள்ளனர் என்பதால், இவர்களது கூற்றினை ஏற்றுக் கொள்வது பொருத்தமே. சுமார் பதினைந்து ஆண்டுகள் விரிவான ஆராய்ச்சி செய்து பெரிய புராண உரையினை ஏழு தொகுதிகள் கொண்ட பெரிய புத்தகமாக வெளியிட்டவர் சிவக்கவிமணியார் அவர்கள். மேலும் ஆங்காங்கே பெரிய புராணத்தில் குறிப்பிடப்படும் தேவாரப் பதிகங்களில் உள்ள அருஞ்சொற்களுக்கு குறிப்புகளும் அளித்துள்ளார். இவர் எழுதிய குறிப்புகள், இன்றும் பலர் தேவாரப் பதிகங்களின் பொருளை புரிந்து கொள்ள உதவியாக உள்ளன. செங்கல்வராய பிள்ளை அவர்கள், சுமார் இருபது வருடங்கள் அனைத்து தேவார திருவாசகப் பதிகங்களை ஆராய்ந்து தேவார ஒளிநெறி, திருவாசக ஒளிநெறி எனப்படும் ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும் பெரிய புராணத்தில் எங்கும், சேக்கிழார் நேரிடையாக இந்த இரண்டு பதிகங்களையும் குறிப்பிடவில்லை. எனவே தூய ஆணியாம் திருப்பதிகம் என்ற வரிசையில் இந்த இரண்டு பதிகங்களையும் சிந்தித்தல் பொருத்தமே.

ஆணியாம் பதிகம் என்று சேக்கிழார் குறிப்பிடும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. வேணி=சடை; செய்ய வேணி=சிவந்த சடை; போற்றிய விருப்பின் மிக்கார்= இறைவனைப் போற்றி பாடப் பாட, சலிப்பு ஏதுமின்றி, மேலும் அவரை தொடர்ந்து போற்றிப் பாட வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவராய்; இந்த நிலை சிவானந்த அனுபவத்தினால் வருவது; கூர்தல்=சிறத்தல்; சேணுயர் மாடம்=விண்ணினை நெருங்கும் வண்ணம் உயர்ந்து ஓங்கிய மாட வீடுகள்; திருஞான சம்பந்தர் இவ்வாறு தலங்கள் தோறும் சென்றும் பதிகங்கள் பாடியது, உயிர்கள் அந்த பதிகங்களை முறையாக பாடி, இறைவனது அருள் பெற்று தங்களது வாழ்வினில் உய்வினை அடையும் நோக்கத்துடன் தான், என்பதை உணர்த்தும் பொருட்டு, அருட்பெரு வாழ்வு பெற்ற என்று இந்த பாடலில் சேக்கிழார் உணர்த்துகின்றார்.

தோணி வீற்றிருந்தார் தம்மைத் தொழுது முன் நின்று தூய

ஆணியாம் பதிகம் பாடி அருட்பெருவாழ்வு கூரச்

சேணுயர் மாடம் ஓங்கும் திருப்பதி அதனில் செய்ய

வேணியார் தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார்

இந்த பதிகத்தின் கடைப் பாடலில் சிறப்பு வாய்ந்த பதிகம் என்று குறிப்பிடும் ஞானசம்பந்தர், இந்த பதிகத்தின் பாடல்களைப் பாடும் அடியார்கள் சிவலோகம் சேர்வார் என்றும் கூறுகின்றார். இந்த குறிப்புடன் அருட்பெருவாழ்வு கூர எனும் சேக்கிழாரின் குறிப்பு ஒத்துப் போவதை நாம் உணரலாம். மேலும் அகத்துறைப் பாடலாக விளங்கும் இந்த பதிகம், மற்ற அகத்துறைப் பதிகங்களினும் மிகவும் சிறந்ததாக அமைந்து, மற்ற பாடல்களுக்கு ஒரு உரைகல் போன்று சிறப்பாக உள்ள நிலையும் நாம் இங்கே உணரத் தக்கது. தோணிபுரம் என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. தோணிபுரத்து இறைவன் பால் தீராத காதல் கொண்டுள்ள ஞானசம்பந்தர், தன்னை ஒரு பெண்ணாக பாவித்துக் கொண்டு, தனது நிலையினை, பெருமான் பால் தான் தீராத காதல் கொண்டு அவனுடன் இணையமுடியாமல் ஏங்கும் நிலையினை, பெருமானுக்கு தெரிவிக்கும் நோக்கத்துடன் பலரையும் தூது அனுப்புவதாக அமைந்த பதிகம்.

இந்த பதிகத்தின் பாடல்களில், பொதுவாக சம்பந்தர் பதிகங்களில் காணப்படும் இராவணனின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம் மற்றும் சமணர்கள் பற்றிய குறிப்பு ஆகிய எதுவும், காணப்படவில்லை. அத்தகைய சம்பந்தர் பதிகங்கள் மிகவும் அரிதாக காணப்படுகின்றன. குருகாவூர் வெள்ளடை தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தில் ஐந்து பாடல்கள் (ஆறாவதிலிருந்து பத்தாவது பாடல் வரை) சிதைந்து இருப்பதால், சம்பந்தர் இயற்றியபோது அத்தகைய குறிப்புகள் இடம் பெற்றனவா அல்லது அல்லவா என்பது குறித்து நாம் ஏதும் சொல்லமுடியவில்லை. பரசு பாணியர் என்று தொடங்கும் பல்லவனீச்சரத்து பதிகத்தின் பாடல்களில் (3.112) மேற்குறித்த மூன்று குறிப்புகளும் காணப்படவில்லை. விண்ணவர் தொழுதெழு என்று தொடங்கும் சீர்காழி தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் பாடல்களிலும் மேலே குறிப்பிட்ட மூன்று குறிப்புகளும் காணப்படவில்லை. பைங்கோட்டு மலர்ப்புன்னை என்று தொடங்கும் செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகமும் வண்டரங்கப்புனல் என்று தொடங்கும் பதிகம் போன்று, அகத்துறையில் அமைந்து, மேல் குறிப்பிட்ட மூன்று குறிப்புகள் ஏதும் இல்லாமல் காணப்படுகின்றது. இவ்வாறு வழக்கமாக இடம் பெறுகின்ற மூன்று சம்பவங்களையும் தவிர்த்து, பதிகத்தின் பாடல்கள் அனைத்தும் ஆன்மாவின் ஏக்கத்தை உணர்த்தும் வகையில், ஆன்மாவை பெண்ணாக பாவித்து தனது நிலையை தூது மூலம் இறைவனுக்கு உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது இந்த பதிகத்தின் தனிச் சிறப்பாகும்.

இந்த பதிகத்தின் பாடல்களில் சம்பந்த நாயகி தான் பயலை நோயினால் வருந்துவதாகவும், பெருமானின் அருகாமை ஒன்றே தனது நோயினைத் தீர்க்கும் என்பதால், தான் பயலை நோயால் வருந்துவதை பெருமானுக்கு தெரிவிக்க வேண்டி தூது அனுப்புவதாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளது. காதல் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயற்றப்பட்ட சங்க இலக்கியத்துப் பாடல்கள் பலவும், தலைவனின் பிரிவாற்றாமை தாங்க முடியாமல் பயலை நோயால் தலைவி வருந்துவதாக கூறுகின்றன. பயலை, பசலை, பசப்பு ஆகியவை ஒரே பொருளை குறிக்கும் சொற்கள். அகநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை, கலித்தொகை, புறநானூறு, திருக்குறள், சீவக சிந்தாமணி, குறுந்தொகை, மணிமேகலை ஆகிய சங்க இலக்கியங்களும் பிற்காலத்திய கம்ப இராமாயணம் ஆகியவையும் தலைவியின் பிரிவாற்றாமையை குறிக்க மேற்கண்ட சொற்களை பயன்படுத்தி உள்ளன. தலைவனின் தொடுகைக்கு ஏங்கும் தலைவி, தலைவன் தன்னைப் பிரிந்து இருப்பதால், தனது உடல் பசலை நோய்க்கு ஆட்பட்டு நிறம் மாறியதாகவும். ஒளி குன்றியதாகவும் கூறும் வண்ணம் இந்த பாடல்கள் அமைந்துள்ளன. நீர்நிலைகளில் தேங்கியுள்ள நீர் பாசி படர்ந்து காணப்பட்டாலும், நாம் தொடும்போது விலகுவதும் நாம் விரலை எடுத்தவுடன் மீண்டும் சேரும் தன்மைக்கு பசலை நோயினை ஐங்குறுநூறு ஒப்பிட்டு, காதலனின் சேர்க்கையால், நீங்கும் பசலை, அவன் தலைவியை விட்டுப் பிரிந்ததும் உடனே தலைவியின் உடலுடன் ஒட்டிக் கொள்கின்றது என்பதை உணர்த்தும் வண்ணம், நீரினில் உள்ள பாசியின் தன்மை ஒப்பிடப்படுகின்றது. பசலை நோயின் காரணமாக தனது மேனி பொன் போன்று இளமஞ்சள் நிறத்தில் காணப்படுவதாகவும் சில சங்கப் பாடல்கள் உள்ளன. மக்களைப் பெரிதும் கவர்ந்திருந்த சங்கப் பாடல்களின் வழியை பின்பற்றி, சில தேவார, பிரபந்தப் பாடல்கள் அகத்துறை கருத்தினை பிரதிபலிக்கும் வண்ணம் உள்ளன். இறைவனை தலைவனாக பாவித்து, அந்த இறைவனைச் சென்று சேர முடியாமல் ஏந்தும் ஆன்மாவை, பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவியாக தன்னை பாவித்து, அப்பர் பிரான், சம்பந்தர், திருமங்கை ஆழ்வார் ஆகியோரும் தங்களது மேனியின் நிறம் ஏக்கத்தால் மெலிந்ததாகவும், துவண்டதாகவும், பசலை படர்ந்து நிறம் மாறியதாகவும் பல பாடல்களில் கூறியுள்ளனர். அத்தகைய பாடல்களைக் கொண்டுள்ள பதிகம் தான் ஞானசம்ன்பந்தர் பாடிய இந்த பதிகம்.

கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி பதிகத்தின் பாடல் ஒன்றிலும் பெருமான் பால் தீவிர காதல் கொண்டுள்ள அடியாள், பெருமானுடன் சேராத ஏக்கத்தால், தனது உடல் முழுவதும் பயலை நிறம் படர்ந்து மஞ்சள் நிறத்துடன் காணப்படுவதாக நக்கீரர் கூறுகின்றார். பீர்க்கு, பூசணி ஆகிய கொடிகளின் பூவே இங்கே பூ என்று குறிப்பிடப் படுகின்றது. காம்பு=மூங்கில்; ஆலித்தல்= ஒலித்தல், போர்த்து=போர்க்கப்பட்டு, காதலனைச் சேர்ந்தவுடன் பிரிந்து விடுவதால் பயலை நோய் நிரந்தரமானதல்ல, போர்வை போன்றது என்று நயமாக கூறப்படுகின்றது. பரிசு=தன்மை; மெய்= உடல்;

பேசும் பரிசு அறியாள் பேதை பிறர்கெல்லாம்

ஏசும் பரிசு ஆனாளே பாவம் மாசுனை நீர்

காம்பு அலைத்து ஆலிக்கும் காளத்தி என்றென்று

பூம்பயலை மெய்ம் முழுதும் போர்த்து

பாடல் 1:

வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்

ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே ஒளி மதியத்

துண்டரங்கப் பூண் மார்பர் திருத்தோணிபுரத்து உறையும்

பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே

விளக்கம்:

பண்டரங்கர்=பண்டரங்கம் ஆடிய பெருமான்; சிவபெருமான் ஆடிய நடனங்களை பல வகையாக பகுத்து கூறுகின்றனர். இந்த நடனம் திரிபுரத்து கோட்டைகளை அழித்த மகிழ்ச்சியில் பெருமான் ஆடிய நடனமாக கருதப் படுகின்றது. பஞ்ச தாண்டவங்கள் (ஆனந்த தாண்டவம், அஜபா தாண்டவம், ஞானசுந்தர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், பிரம தாண்டவம்) என்றும், சப்த தாண்டவங்கள் (ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், கஜ சம்ஹார தாண்டவம், கௌரி தாண்டவம், காளிகா தாண்டவம்) என்றும், சப்த விடங்க தாண்டவம் (உன்மத்த தாண்டவம், அஜபா தாண்டவம், வீசி தாண்டவம், குக்குட தாண்டவம், பிருங்க தாண்டவம், கமலா தாண்டவம், அம்சபாத தாண்டவம்) என்றும், நவ தாண்டவங்கள் (ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், புஜங்க தாண்டவ,, முனி தாண்டவம், பூத தாண்டவம், சுத்த தாண்டவம், சிருங்கார தாண்டவம்) என்றும், பன்னிரு தாண்டவங்கள் (ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், சிருங்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், முனி தாண்டவம், சம்ஹார தாண்டவம், உக்ர தாண்டவம், பூத தாண்டவம், பிரளய தாண்டவம், புஜங்க தாண்டவம், சுத்த தாண்டவம்) என்றும் பலவகையாக பிரிக்கப் பட்டுள்ளன. இவையன்றி நூற்றெட்டு தாண்டவ வகைகளையும் பெருமான் ஆடியதாக சொல்லப் படுகின்றது.

வண்டினை தூதாக அனுப்ப எண்ணும், சம்பந்த நாயகி, பெருமான் நடனம் ஆடுபவர் என்பதை வண்டுக்கு உணர்த்துகின்றாள். வண்டுகள் இசை பாடும் தன்மை உடையதால் வண்டினை இசைக் கலைஞனாக சம்பந்த நாயகி காண்கின்றாள். இசைக் கலைஞர்களுக்கும் நடனக் கலைஞர்களுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு இருப்பதை நாம் இன்றும் காண்கின்றோம். எனவே நடனமாடும் பெருமானிடம் தூது செல்வதற்கு வண்டினை விடவும் பொருத்தமானவர் எவரும் இல்லை என்று நினைத்தாள் போலும். மேலும் பெருமானின் அணிந்துள்ள மலர்களில் உள்ள தேனைப் பருகுவதற்கு வண்டுகள் பெருமான் இருக்கும் இடம் செல்வது பழக்கம் என்பதால், தயக்கம் ஏதும் இன்றி தூதுவனாக பெருமானை அணுகுவதற்கு வண்டுகள் மிகவும் தகுதி வாய்ந்தவை என்று நினைத்தாள் போலும். எனவே தான் தூது அனுப்புவது என்று முடிவு செய்த சம்பந்த நாயகி, முதல் வண்டினை தேர்ந்தேடுக்கின்றாள்.

வண்=வளமை; தரங்கம்=அலை; மது=தேன்; பெடை=பெண் வண்டு; துண்டர்+அங்க=துண்டரங்க; ஒண்=சிறந்த; அங்கம்=உடலின் ஒரு அங்கமாகிய எலும்பு; மாந்தி=வயிறார; அளி=வண்டு; அளி என்ற சொல்லுக்கு இன்பம் என்ற பொருளும் பொருந்தும் என்றாலும், இங்கே அளி அரசே என்று விளிப்பதால் வண்டினை உணர்த்துவதாகவே நாம் பொருள் கொள்ள வேண்டும். அளி என்ற சொல்லுக்கு அன்பு என்று பொருள் கொண்டு, தனது அன்பையே வண்டாக உருவகித்து, பெருமானிடம் தூதுக்கு அனுப்புகின்றாள் என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது. சீற்றம் ஏதும் இல்லாமல் சாதாரண நிலையில் இருக்கும் கடலின் அலைகள் மெதுவாக தவழ்ந்து வருவது கண் கொள்ளா காட்சியாக இருப்பதை நாம் உணர்கின்றோம். மேலும் கீழும் சென்று அலை மிதந்து வருவது போன்று வண்டுகள் இடும் ரீங்காரம் மேலும் கீழுமாய் அசையும் நடையில் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் மிருதுவாகவும் இருப்பதை ஒண் தரங்க இசை என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மதியத் துண்டு=சந்திரனின் ஒரு பகுதியாகிய ஒற்றைப் பிறைச் சந்திரன்; ஆண் வண்டும் பெண் வண்டும் இணைந்து இன்புற்றிருக்கும் தருணத்தில், குரல் கொடுத்து அவர்களுக்கு இடையூறாக தான் இருப்பதை, அவை பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் அரசே என்று உயர்வாக அழைப்பதை நாம் உணரலாம். மேலும் இறைவனாகிய ஆணிடம் ஒரு பெண்ணை தூது செல்ல அனுப்புவது முறையல்ல என்பதால் ஆண் வண்டு தூதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. மேலும் எதற்காக இந்த தூது என்பதை பெண் வண்டும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வுடன் தூதின் நோக்கமும் இங்கே உணர்த்தப் படுகின்றது. அல்லையேல், தனது காதலனிடமிருந்து தன்னைப் பிரிக்க முயற்சி செய்வதாக நினைத்து கோபம் கொள்ளும் பெண் வண்டு, ஆண் வண்டு தூது செல்வதை தடுக்கலாம் அல்லவா.

பொழிப்புரை:

வளமை மிகுந்த நீரலைகளின் நடுவே மலர்ந்த தாமரை மலர்களில் உள்ள தேனை, தனது துணையுடன் சேர்ந்து, வயிறார உட்கொண்ட களிப்பின் மிகுதியால் அலைகள் போன்று மேலும் கீழுமாய் அசைந்து இனிமையான குரலுடன் இசை பாடும் அரச வண்டே, ஒளி பொருந்திய ஒற்றைப் பிறைச் சந்திரனை அணிந்தவரும், உடலின் அங்கமாகிய எலும்புகளை மாலையாக மார்பினில் அணிந்தவரும், திருத்தோணிபுரத்தில் உறைபவரும், பண்டைய நாளில் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்த போது பண்டரங்கம் எனப்படும் கூத்தினை ஆடியவரும் ஆகிய இறைவரிடம் என் பொருட்டு தூது செல்வாயாக. அவ்வாறு செல்லும் போது, எனக்காக பரிந்து பேசி, அவருடன் சேர முடியாத நிலையினை எண்ணி நான் வருந்துவதை, ஒரு முறையேனும் பகர்வாயாக.

பாடல் 2:

எறி சுறவம் கழிக்கானல் இளம் குருகே என் பயலை

அறிவுறாது ஒழிவதும் அருவினையேன் பயன் அன்றே

செறி சிறார் பதம் ஓதும் திருத்தோணிபுரத்து உறையும்

வெறி நிறார் மலர்க் கண்ணி வேதியர்க்கு விளம்பாயே

விளக்கம்:

வண்டினை தூது அனுப்பிய சம்பந்த நாயகி தனது தூதுக்கு மறுமொழியாக ஏதும் செய்தி வாரததால், கவலை கொண்டு அதன் காரணத்தை ஆராயத் தொடங்குகின்றாள் போலும். துணையுடன் சேர்ந்து மது அருந்திய காரணமோ, அல்லது காதல் மயக்கத்தின் காரணமோ, வண்டு தூது செல்லவில்லையோ என்ற சந்தேகம் சம்பந்த நாயகிக்கு எழுகின்றது. இந்த பாடலில் இறைவனை வேதியர் என்று குறிப்பிட்டு, சீர்காழி தலத்தில் வேதங்கள் ஓதுவதை விரும்பி இரசிப்பவர் பெருமான் என்பதை உணர்த்துகின்றார். பதம்=வேத மந்திரச் சொற்கள்; சீர்காழி தலத்தில் எப்போதும் வேத கோஷங்கள் முழங்குவதை பல குழுக்களாக சிறுவர்கள் கூட்டமாக வேத மந்திரங்களை பயில்கின்றனர் என்று கூறுகின்றார். வேதங்களின் பின்னணி ஒலியில் வண்டின் மென்மையான ஒலி இறைவனுக்கு கேட்கவில்லை என்று நினைத்துக் கொண்டு சமாதானம் அடைகின்றாள். எனவே இந்த முறை பெரிய குரலை உடைய நாரையை தூது செல்ல வேண்டுகின்றாள்..

குருகு=நாரையில் ஒரு வகை; சுறவம்=சுறா மீன்கள்; எறி=எதிர்ப்பட்ட விலங்குகளை கொள்ளும் தன்மை உடைய சுறா; கழி=உப்பங்கழி; செறி சிறார்=கூட்டமாக கூடிய சிறுவர்கள்; வெறி நிறார்=நறுமணமும் கண்ணைக் கவரும் நிறமும்; தன்னைப் போன்று இளமை வயது உடைய குருகு தானே, தனது நிலையினை சரியாக புரிந்து கொண்டு, தனது நிலையினை பெருமானுக்கு உணர்த்த முடியும். எனவே தான் இளம் குருகினை சம்பந்த நாயகி தூதுக்கு தேர்ந்து எடுக்கின்றாள். ஒத்த வயதினை உடைய பெண்கள், மற்றொரு பெண்ணின் கவலைக்கும் துயரத்திற்கும் உள்ள காரணத்தை எளிதில் புரிந்து கொண்டு, அந்த துயரத்தை தீர்ப்பதற்கு உதவி செய்வதை நாம் இன்றும் காண்கின்றோம். எனவே தான் இளம் குருகு தனது வாட்டத்தை புரிந்து கொள்ளாமல் இருந்ததற்கு தனது வினையே காரணம் என்று முடிவுக்கு சம்பந்த நாயகி வருகின்றாள். அறியாமல் இருக்கும் நிலையினை குருகுக்கு பதிலாக பெருமானுடன் இணைத்து, பெருமான் தனது ஏக்கத்தையும் ஏக்கத்தால் விளைந்த பயனை நோயின் தன்மையையும் உணராது இருப்பது தனது கொடுவினையின் காரணமே என்று தலைவி தன்னையே பழித்துக் கொள்வது நயமாகவும் இயற்கையாகவும் உள்ளது. கண்ணி=தலை மாலை;

பொழிப்புரை:

எதிர்ப்பட்ட உயிர்களைக் கொல்லும் சுறா மீன்கள் நிறைந்த கடலின் அருகே உள்ள உப்பங்கழி சோலைகளில் உலவும் இளமையான குருகே, என்னைப் போன்று இளமை உடைய நீ, பிரிவாற்றாமையால் நான் வருந்தி பயலை நோயால் துன்பம் அடைவதை நீ அறியாது இருப்பதும் எனது கொடுவினையின் காரணம் தான் போலும்; சிறுவர்கள் கூட்டமாக கூடி வேத மந்திரங்களை பயிலும் தோணிபுரம் தலத்தில் உறைபவனும், நறுமணம் நிறைந்து கண்ணைக் கவரும் நிறத்துடன் விளங்கும் மலர் மாலைகளை தனது தலை மாலைகளாக சூட்டிக் கொண்டுள்ளவனும், வேதங்களை ஆர்வத்துடன் கேட்பவனும் ஆகிய இறைவனுக்கு, எனது நிலையினை நீ உணர்த்துவாயாக.

பாடல் 3:

பண் பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக்

கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறு பயலை

செண்பகம் சேர் பொழில் புடைசூழ் திருத்தோணிபுரத்து உறையும்

பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழியாமோ மொழியாயே

விளக்கம்:

பழனம்=வயல்; பண் பழனம்=பண்பட்ட வயல்; கோடு=கரை; சூட்டு=உச்சிக் கொண்டை; வாட்டம்= வருத்தம்; கண்பு=கோரை; அகத்தின்=நடுவில்; வாரணம்=சேவல்; முருகப் பெருமானை, கோழிக் கொடியோன் என்று உணர்த்தும் வண்ணம், வாரணத் த்வஜன் என்று வடமொழியில் அழைப்பார்கள்; பண்பன்=இனிய பண்புகளை உடையவன்; பரிசு=தன்மை; வண்டினையும் குருகினையும் தூது அனுப்பிய பின்னர், அதன் பலன் யாது என்பதை அறியாமல் திகைத்த சம்பந்த நாயகிக்கு ஒரு ஐயம் தோன்றுகின்றது. சம்பந்த நாயகி பால் பரிவு கொண்டு அவளுக்காக தூது சென்றால் தனக்கு ஏதேனும் பழி வருமோ என்று அஞ்சி வண்டும் குருகும் தூது செல்வதை தவிர்த்தன போலும் என்ற சந்தேகம் சம்பந்த நாயகிக்கு எழுகின்றது. எனவே தூது செல்லவிருக்கும் கோழியிடம் உனக்கு பழியேதும் வாராது என்பதை உறுதி செய்யும் விதமாக, பெருமானை பண்பன் என்று குறிப்பிட்டு, நல்ல பண்புகளை உடையவன் என்று இந்த பாடலில் கூறுகின்றாள்

பொழிப்புரை:

பண்பட்ட வளமான நெல்வயலில் வரப்புகளின் நடுவே முளைத்துள்ள கோரைப் புற்களின் இடையில் மகிழ்ச்சியுடன் வாழும் சிவந்த உச்சிக் கொண்டையை உடைய சேவலே, கொடிய வினையின் காரணமாக எனது தலைவனுடன் சேர முடியாமல் பிரிந்திருப்பதால் பயலை நோயுடன் நான் வருந்துகின்றேன்; செண்பக மரங்கள் நிறைந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருத்தோணிபுரம் தலத்தில் உறைபவனும், நற்பண்புகளை உடையவனும் ஆகிய எனது தலைவனாகிய சிவபிரானிடத்தில், எனது நிலையினை தூதுவனாக சென்று நீ உணர்த்தினால், உனக்கு பழி ஏதேனும் வரும் என்று அஞ்சுகின்றாயா, அத்தைய அச்சம் ஏதும் இருந்தால் என்னிடம் சொல்வாயாக; பெருமான் நற்பண்புகள் உடையவன் என்பதால் அத்தகைய அச்சம் ஏதும் நீ கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவே அச்சம் ஏதுமின்றி என் பொருட்டு பெருமானிடம் தூது செல்வாயாக.

பாடல் 4:

காண் தகைய செங்கால் ஒண் கழிநாராய் காதலால்

பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று வளர்

சேண் தகைய மணிமாடத் திருத்தோணிபுரத்து உறையும்

ஆண் தகையார்க்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே

விளக்கம்:

முதல் மூன்று பாடல்களில், பயலை என்றும் தனது நிலைமை என்றும் குறிப்பிட்டு தனது நிலையின் விவரங்களை சம்பந்த நாயகி தவிர்த்திருப்பதை நாம் உணரலாம். இயல்பாகவே பெண்களுக்கு உரிய நாணத்தின் காரணமாக விவரங்கள் தவிர்க்கப்பட்டன போலும்,. கோழியின் தூதும் (மூன்றாவது பாடல்) தான் விரும்பிய பயனை அளிக்கவில்ல என்பதால், தான் தூது அனுப்பிய பறவைகள் தனது நிலையினை சரியாக புரிந்து கொள்ளவில்லை போலும் என்ற சந்தேகம் சம்பந்த நாயகிக்கு எழுகின்றது. நாயகனைச் சென்று அடையாததால் ஏற்பட்ட வருத்தம் மிகவும் அதிகமாகவே, மார்பங்கள் மெலிந்து தனது உடல் பொன்னின் நிறமாக மாறியது என்பதை நாரைக்கு உணர்த்தி, தனது நிலையினையும், தனது நிலைக்கு காரணம், தான் பெருமான் மீது கொண்டுள்ள காதல் தான் என்பதையும் இறைவனுக்கு உணர்த்துமாறு வேண்டுகின்றாள். சத்திமுற்றத்துப் புலவர் எழுதிய சங்க காலத்துப் பாடல் (நாராய் நாராய் செங்கால் நாராய் என்று தொடங்கும் பாடல்) சம்பந்தரின் நினைவுக்கு வந்தது போலும். எனவே நாரை தனது வேண்டுகோளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை சம்பந்த நாயகிக்கு வருகின்றது. ஒண்=புகழ்; சங்கப் பாடலில் இடம் பெற்று புகழடைந்த செங்கால் நாரை; மேலும் இந்த தூது வேறொருவர் அறியாத வண்ணம் இருக்க வேண்டும் என்பதையும் சம்பந்த நாயகி விரும்பினாள் போலும்; அதனால் தான் மணிமாடங்கள் உடைய தோணிபுரம் என்று குறிப்பிட்டு, நீ மணி மாடத்தில் தங்கியிருந்து தகுந்த நேரம் பார்த்து இறைவனை சந்திக்க வேண்டும் என்று உணர்த்துகின்றாள் போலும். முந்தைய மூன்று பாடல்களில் சொல்வாய் என்று தூதிடம் சொல்லிய சம்பந்த நாயகி (பகராய், விளம்பாய், மொழியாய்) இந்த பாடலில், தனது நிலையினை பெருமான் முற்றிலும் உணரும் வண்ணம் தூது அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் உணர்த்தாய் என்று கூறுவதை நாம் காணலாம்.

அடி=காரணம்; காண் தகைய=பிறர் கண்டு களிப்பு அடையும் வண்ணம் அழகிய தோற்றம் கொண்ட; ஆண்தகை=ஆண்களில் சிறந்தவர்; பொன் பயந்தாள்=உடலில் பொன்னிறம் வரப் பெற்றாள்; பயலை நோயால் வருந்தும் பெண்களின் உடல் மஞ்சள் நிறமாக மாறும் என்று பல சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அப்பர் பிரானும் பல பாடல்களில் காதலனைச் சென்ற சேராத பெண்ணின் ஏக்கத்தால் அவளது உடல் பொன்னின் நிறமாக மாறியது என்று குறிப்பிடுகின்றார். அத்தகைய பாடல் ஒன்று (5.15.6) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடல் தோழிக் கூற்றாக அமைந்துள்ள அகத்துறைப் பாடலாகும். தோழிகளுடன் சேர்ந்து இறைவனின் திருநாமங்களைச் சொல்லியவாறு தனது மகள் காலம் கழிப்பதைக் கண்ணுற்ற அப்பர் நாயகியின் தாய், அருகில் சென்று தோழிகள் பேசிக் கொள்வதை கவனிக்கின்றாள் போலும். அங்கு சென்றபோது தோழிகள், தனது மகளை ஏளனம் செய்தவாறு இருந்ததை காண்கின்றாள். அவர்களின் பேச்சிலிருந்து அவ்வாறு ஏளனம் செய்வதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்கின்றாள். தோழிகள் செய்த அந்த ஏளனம் பாடலாக இங்கே மிளிர்கின்றது. இதழி=கொன்றை மலர், இங்கே கொன்றை மலர் போன்ற நிறம்,

மங்கை காணக் கொடார் மணமாலையை

கங்கை காணக் கொடார் முடிக் கண்ணியை

நங்கைமீர் இடைமருதர் இந்நங்கைக்கே

எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே

அப்பர் நாயகி, பெருமான் மீது கொண்டுள்ள காதல் கைகூடாததால், அந்த ஏக்கத்தில் தனது மேனி பசலை படிந்து காணப்படுகின்றாள். தலைவனின் தீண்டலுக்காக ஏங்கி நிற்கும் தலைவியின் மேனி பிரிவாற்றல் பொறுக்காத நிலையில் சற்று நிறம் மாறி இருப்பதை பசலை பூத்தது என்று இலக்கியத்தில் கூறுவது வழக்கம். அவ்வாறு பசலை பூத்த மேனி இளம் மஞ்சள் நிறத்தில் பொன் போன்று காணப்படுவதால், கொன்றை மலரின் நிறத்தினை ஒத்தது போல் தோன்றும். தலைவியின் மேனி பசலை பூத்து பொன்னிறத்தில் காட்சி அளிப்பதைக் கண்ணுற்ற தோழிகள், அந்த பொன்னிறத்து பசலையை, இறைவன் அளித்த கொன்றை மாலையாக கற்பித்து, தலைவியை கேலி செய்யும் விதமாக தோழிகள் இந்த நிறம் எப்படி வந்தது என்று ஏளனமாக விமர்சிக்கும் பாடல். ஏளனம் செய்வது போல் தோன்றினாலும், தங்களது தலைவியின் மேனியில் பூத்துள்ள பசலை நிறம், தங்களது மேனியில் தோன்றவில்லையே என்ற ஏக்கம் உள்ளூர தொனிப்பதையும் நாம் இந்த பாடலில் உணரலாம்.

பொழிப்புரை:

உப்பங்கழியில் வாழ்வதும் அழகான சிவந்த கால்களை உடையதும் ஆகிய சிறந்த புகழுடைய நாரையே, பெருமான் மீது வைத்துள்ள காதல் மிகுதியினால், பெருமானைச் சென்று சேர முடியவில்லையே என்று வருந்தும் அடியாள் மார்பகங்கள் மெலிந்து, பயலை நோயினால் உடலெங்கும் மஞ்சள் நிறம் பூத்து பொன்னின் நிறத்துடன் காணப்படுகின்றேன் என்று ஆண்களில் சிறந்தவராக திகழும் பெருமானுக்கு உணர்த்துவாயாக. நீ தூது செல்லவேண்டிய பெருமான் வானளாவ உயர்ந்துள்ள அழகிய மாடங்கள் நிறைந்த திருத்தோணிபுரத்து திருக்கோயிலில் உறைகின்றார். நீ, சிறிதும் தாமதம் செய்யாமல் இன்றே சென்று அவரை சந்தித்து, எனது நிலையையும், அந்த நிலைக்கு காரணத்தையும், அவர் அறிந்து கொள்ளும் வண்ணம் உணர்த்துவாயக.

பாடல் 5:

பாராரே எனை ஒரு கால் தொழுகின்றேன் பாங்கு அமைந்த

காராரும் செழு நிறத்துப் பவளக் கால் போதகங்கள்

தேர் ஆரும் நெடு வீதித் திருத்தோணிபுரத்து உறையும்

நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே

விளக்கம்:

பாராரே என்று பாடலின் முதல் அடியில் சம்பந்த நாயகி கூறுவது பெருமானைக் குறிப்பிடுகின்றது என்றும் இதுவரை தூது சென்ற பறவைகளை குறிக்கின்றது என்றும் இரண்டு விதமாக விளக்கங்கள் அளிக்கப் படுகின்றன. இரண்டுமே நயமாக இருப்பதை நாம் காணலாம். கபோதம்=மாடப்புறா; நீர்=கங்கை நதி; கபோதங்காள் என்று பன்மையில் கூறியமையால், இணையாக இருந்த மாடப்புறாக்களை சம்பந்த நாயகி அழைக்கின்றாள் என்று பொருள் கொள்ளலாம்.

வண்டு, நாரை, குருகு, கோழி ஆகியவற்றை தூதாக அனுப்பிய பின்னரும், எந்த தூதும் பயன் அளிக்கவில்லை என்பதை உணர்ந்து, சம்பந்த நாயகி மிகவும் வருத்தம் அடைகின்றாள். தான் அனுப்பிய தூதுக்கு மறுமொழி ஏதும் வரவில்லை என்பதை விடவும். பெருமான் ஒரு முறை கூட தன்னைப் பார்க்கவில்லை என்பது அவளுக்கு மிகவும் வருத்தம் தந்தது போலும். ஒரு முறையாவது பெருமான் தன்னைப் பார்த்திருந்தால் சம்பந்த நாயகியின் வாட்டம் சற்று குறைந்திருக்கும் போலும். பெருமான் தன்னை திரும்பியும் பாராததால், பெருமான் தன் மீது பரிவேதும் கொள்ளவில்லை என்பதை சம்பந்த நாயகி உணர்கின்றாள், இவ்வாறு தான் அடைந்த மிகவும் பெரிய வருத்தத்தை மாடப் புறாக்களிடம் குறிப்பிடும் சம்பந்த நாயகி, தான் இடைவிடாமல் தொடர்ந்து பெருமானைத் தொழுது கொண்டிருந்த போதிலும், பெருமான் தன்னை ஒருமுறையேனும் பாராமல் இருந்ததற்கு, காரணம், தனது நிலைமை சரியாக பெருமானுக்கு உணர்த்தப் படவில்லை என்ற முடிவுக்கு வருகின்றாள். எனவே தான், புறாக்களை தொழுத வண்ணம், தனது நிலையினை சரியாக பெருமானிடம் விளக்க வேண்டும் என்று இறைஞ்சுவதை நாம் இந்த பாடலில் உணரலாம். ஒருவரிடம் நமக்கு ஏதேனும் காரியம் ஆகவேண்டும் என்றால், அவரது காலைப் பிடித்தாவது நமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கின்றோம் அல்லவா. அத்தகைய செயலை சம்பந்த நாயகி செய்வதை நாம் இந்த பாடலில் உணரலாம். முதலில் புறாக்களை தொழுத சம்பந்த நாயகி, பின் அவை என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுகின்றாள்.

பொழிப்புரை:

அழகிய கருமை நிறத்தில் உடலையும், பவளம் போன்று சிவந்த நிறத்தில் கால்களையும் உடைய மாடப் புறாக்களே, உம்மை அடியாள் தொழுகின்றேன்; வண்டு, குருகு, சேவல், நாரை ஆகியவற்றை தூதாக அனுப்பியும், இன்று வரை பயன் ஏதும் இல்லை. என்ன நடந்தது என்பதை சொல்வதற்கு கூட எந்த பறவையும் இதுவரை தூது முடிந்த பின்னர், என்னை திரும்பியும் பாரக்கவில்லை; தனது சடையினில் கங்கை நீரை அணிந்திருப்பவரும், தேரோடும் நீண்ட வீதிகளை உடைய தோணிபுரம் தலத்தில் உறைபவரும் ஆகிய பெருமானுக்கு எனது நிலையினை, மாடப் புறாக்களே நீங்களாவது உணர்த்துவீராக.

பாடல் 6:

சேற்று எழுந்த மலர்க் கமலச் செஞ்சாலிக் கதிர் வீச

வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண் மறைகள்

தோற்றுவித்த திருத்தோணிபுரத்து ஈசன் துளங்காத

கூற்று உதைத்த திருவடியே கூடுமா கூறீரே

விளக்கம்:

தான் தொழுது வேண்டிய போதிலும், ஜோடியாக இருந்த புறாக்கள் அசையாமல் இருந்தன போலும்; அடுத்து யாரை தூதாக அனுப்பலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த சம்பந்த நாயகியின் கண்களில், நெல்வயல்களில் இருந்த தாமரை மலர் மீது வீற்றிருந்த அன்னம் தென்படுகின்றது. வளம் மிகுந்த வயலில் செழித்து வளர்ந்திருந்த நெற்கதிர்கள் காற்றில் அசையும் காட்சி, அன்னத்திற்கு சாமரம் வீசுவது போல் தோன்றியதால் அரச போகத்தில் வாழும் அன்னம் என்று உணர்த்துகின்றார். கூற்று உதைத்த பெருமான் என்று கூற்றுவனை குறிப்பிடுவதற்கு சுவையான விளக்கம் அறிஞர்களால் அளிக்கப்படுகின்றது. தன்னை வருத்தும் கொடிய பயலை நோயினை, சம்பந்த நாயகி கூற்றுவனுக்கு ஒப்பிடுவதாகவும், காலனை காலால் உதைத்த பெருமான், தன்னை காலனாக வருத்தும் பயலை நோயினை உதைத்துத் துரத்தும் வண்ணம் தன்னுடன் கூட வேண்டும் என்று விரும்புவதை குறிப்பாக உணர்த்தும் வண்ணம் கூற்றுவன் உதை பட்டதை குறிப்பிடுவதாக விளக்கம் கூறுகின்றனர். துளங்காத=அசையாத; விண்ணும் மண்ணும் என்று குறிப்பிட்டு பொருட் பிரபஞ்சத்தையும் மறை என்று குறிப்பிட்டு சொற்பிரபஞ்சத்தையும் தோற்றுவித்தவன் இறைவன் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பலரையும் தூதாக அனுப்பிய பின்னரும் தனது நோக்கம் நிறைவேறாததால், அன்னத்தை அழைத்த சம்பந்த நாயகி, தூதுச் செய்தி எதனையும் இந்த பாடலில் குறிப்பிடவில்லை போலும். அதற்கு பதிலாக பெருமானுடன் தான் இணைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்பதாக இந்த பாடல் அமைந்துள்ளது.

பொழிப்புரை:

நெல் வயல்களில் உள்ள சேற்றில் மலர்ந்த தாமரை மலர் மீது அமர்ந்திருந்து, செழுமையாக வளர்ந்துள்ள செஞ்சாலி நெற்கதிர்கள் காற்றில் அசைந்து சாமரம் வீசுவதைப் போன்ற தோற்றம் தர, அரச போகத்தில் திளைக்கும் அன்னமே, ஆகாயம் முதலாக நிலம் வரையில் உள்ள ஐந்து பூதங்களையும் நான்கு மறைகளையும் தோற்றுவித்த பெருமான் தோணிபுரத்தின் தலைவனாக விளங்குகின்றான். எவராலும் அசைக்க முடியாத வண்ணம் வலிமையுடன் விளங்கிய கூற்றுவனை உதைத்து வீழ்த்திய பெருமானின் திருவடிகளை அடியவள் சென்று அடைந்து சேரும் வழியினை எனக்கு உணர்த்துவீராக.

பாடல் 7:

முன்றில் வாய் மடல் பெண்ணைக் குரம்பை வாழ் முயங்கு சிறை

அன்றில்காள் பிரிவுறு நோய் அறியாதீர் மிக வல்லீர்

தென்றல் ஆர் புகுந்து உலவும் திருத்தோணிபுரத்து உறையும்

கொன்றை வார் சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே

விளக்கம்:

சம்பந்த நாயகிக்கு அன்னம் எந்த ஆலோசனையும் வழங்கவில்லை; மேலும் அன்னம் தூதாகவும் செல்லவில்லை; இவ்வாறு அன்னங்களால் பயன் ஏதும் அடையாதிருந்த சம்பந்த நாயகி, அடுத்து அன்றில் பறவைகளை அழைக்கின்றாள். பிரிவுறு நோய் அறியாத பறவைகள் என்று இந்த பாடலில் அன்றில் பறவைகள் குறிப்பிடப் படுகின்றன. தனது துணை இறந்த பின்னர், தான் தனித்து வாழாமல் உடனே இறந்து விடும் தன்மை கொண்டது அன்றில் பறவை என்று கூறுவார்கள். இந்த தன்மை தனது துணையின் மீது அன்றில் பறவை உயிரினை வைத்திருந்ததை நமக்கு உணர்த்துகின்றன. மேலும் தனது துணையுடன் கூடி வாழ்வதையே தனது குணமாகக் கொண்டுள்ள இந்த பறவைகளுக்குத் தனது தலைவனுடன் சேர விரும்பும் தலைவியின் ஏக்கம் நன்றாகவே புரியும் என்பதால், இந்த பறவைகளை விடவும் தனக்கு தூதாக செல்வதற்கு பொருத்தமானவர் வேறு எவரும் இல்லை என்ற எண்ணத்துடன், அன்றில் பறவைகளை தூது செல்லுமாறு சம்பந்த நாயகி வேண்டுகின்றார். குரம்பை=கூடு; கூர் பயலை; முயங்கு சிறை=தழுவி இருக்கின்ற சிறகுகள்; முன்றில்=வீடுகளின் முற்பகுதி; கொன்றை மாலையினை அணிந்த பெருமான் என்று குறிப்பிடுவதன் மூலம், பெருமானின் அணிந்துள்ள கொன்றை மாலையினை தான் சூடிக் கொள்வதற்கு விருப்பம் இருப்பதையும் இங்கே குறிப்பால் தெரிவிக்கின்றாள்.

பொழிப்புரை:

வீடுகளின் முற்பகுதியில் உள்ள மட்டைகளுடன் கூடிய பனை மரங்களில் கட்டிய கூடுகளில் தனது துணையின் சிறகுகளைத் தழுவிக்கொண்டு இன்பமாக இருக்கும் அன்றில் பறவைகளே, நீங்கள் பிரிவினை நோயினை அறியாமல் வாழ்கின்றீர்கள்; ஒருவரை ஒருவர் நேசிப்பதில் மிகவும் வல்லவர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள்; தென்றல் காற்று புகுந்துலவும் தோணிபுரம் தலத்தில் வாழ்கின்றவரும் கொன்றை மலர்கள் அணிந்த நீண்ட சடை உடையவரும் ஆகிய பெருமானுக்கு என்னை மிகவும் வருத்தும் பயலை நோயின் தன்மையையும் அதன் காரணத்தையும் நீங்கள் உணர்த்துவீராக.

பாடல் 8:

பானாறு மலர்ச் சூதப் பல்லவங்கள் அவை கோதி

ஏனோர்க்கும் இனிதாக மொழியும் எழில் இளம் குயிலே

தேனாரும் பொழில் புடைசூழ் திருத்தோணிபுரத்து அமரர்

கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே

விளக்கம்:

அன்றில் பறவைகள் இணையாக கூடி இன்பமாக இருந்தமையால் ஒன்றினை விட்டு மற்றொன்று பிரிவதை தவிர்க்கும் பொருட்டு, தூது செல்லாமல் இருந்தனவோ என்ற சந்தேகம் தலைவிக்கு வருகின்றது. அல்லையேல், அவை தூது சென்றும் பயனேதும் இல்லாத நிலையோ என்ற ஐயமும் அவளுக்கு எழுகின்றது; அன்றில் பறவைகளின் குரல் கேட்பதற்கு இனிமையாக இருக்காது. எனவே சம்பந்த நாயகிக்கு, குரல் வளமற்ற அன்றில் பறவைகளின் மொழியினை பெருமான் செவி மடுத்துக் கேட்கவில்லை போலும் என்ற ஐயம் எழுகின்றது. எனவே தான் குரல் இனிமை உள்ள குயிலை அடுத்து தேர்ந்து எடுக்கின்றாள் போலும்..

சூதப் பல்லவங்கள்=மாந்தளிர்கள்; குயில் மாந்தளிர்களை மிகுந்த விருப்பத்துடன் உட்கொள்ளும் என்பதால், மாந்தளிர்களை குறிப்பிடும் சம்பந்தர் இந்த குறிப்பு மூலம் தலத்தின் இயற்கை வளத்தினையும் உணர்த்துகின்றார். பானாறு=பால்மணம் கமழும்; குயில்களின் கூவல், வசந்தத்தின் வருகை என்று கூறுவார்கள். வசந்த காலத்தில் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைக்கும் குயில்கள் அடிக்கடி கூவும் பழக்கத்தை உடையது குயில். குயில் மேலும் குயிலின் கூவல், பிரிந்திருக்கும் காதலர்களுக்கு அவர்களின் துணையினை நினைவூட்டி, அவர்களுடன் கூடுவதற்கு நாட்டத்தை ஏற்படுத்தும் என்பார்கள். எனவே தான் குயிலை தூதாக அனுப்பாமல், குயிலைக் கூவுமாறு சம்பந்த நாயகி அழைக்கின்றாள் போலும். ஆண் குயில் தான் அழகிய குரலில் கூவும் என்று கூறுவார்கள். தான் விருப்பம் கொண்டுள்ள பெண் குயில் இருக்கும் இடத்திற்கு ஆண் குயில் செல்வதில்லை. கூவி, தான் இருக்குமிடத்தை உணர்த்தி, பெண் குயிலை தன்னருகே அழைத்துக் கொள்ளும் தன்மை உடையது ஆண் குயில். எந்த குயிலும், எந்த ஆன்மாவும் இறைவன் இருக்கும் இடத்தினை கண்டு கொள்ள முடியாது. இறைவன் தான் ஆன்மாவின் மீது கருணை கொண்டு, ஆன்மா இருக்குமிடம் நாடி வர வேண்டும் என்ற உண்மையை இங்கே இறைவன் வரக் கூவாய் என்று குறிப்பிட்டு உணர்த்துகின்றார். சிறிய வடிவினை உடைய குயில், பெரிய மரம் ஒன்றினில் எங்கோ ஒரு கிளையில் அமர்ந்து கொண்டு பாடுவதால், அதன் இருப்பிடத்தை எவரும் எளிதில் காண முடிவதில்லை, எனினும் அதன் குரலை கேட்க முடிகின்றது. அது போன்று, எண்சாண் உடலில் ஆன்மா எங்கே இருக்கின்றது என்பதை உணர்வது கடினம். ஆனால் அந்த ஆன்மா பொறி புலன்களில் சிக்குண்டு வாழ்க்கையை வீணாக கழிக்காமல், இறைவன் தன்பால் வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டு, அதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும் என்ற அறிவுரை அனைத்து உயிர்களுக்கும் இங்கே வழங்கப் படுகின்றது.

மணிவாசகப் பெருமானும், குயில் பத்து பாடல்களில், பெருமான் வரவேண்டும் என்பதற்காக குயிலைக் கூவுமாறு வேண்டுகின்றார். பதிகத்தின் முதல் பாடலில், பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கு அப்பால் என்றும் சோதி மணிமுடி சொல்லில் சொல்லிறந்து நின்ற தன்மை என்றும் பெருமானை அடையாளம் காட்டிய மணிவாசகர், இத்தகைய பெருமை உடைய பெருமான் வருவாரோ என்ற ஐயம் குயிலுக்கு வரக் கூடாது என்பதற்காக அந்தணனாக ஒரு முறை வந்தவர் பெருமான் என்பதை, பதிகத்தின் கடைப் பாடலில் சுட்டிக் காட்டும் நயம் உணர்ந்து ரசிக்கத் தக்கது. கொந்து=பூங்கொத்து; அணவும்=நெருங்கிய; தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்டுள்ள இறைவன், பல உரிமைகள் அளித்து உறவினனாகவும் ஏற்றுக் கொண்டுள்ளான் என்று இங்கே கூறுகின்றார். அவ்வாறு தனக்கு அருளிய இறைவனை, பெருந்துறையில் காட்சி கொடுத்து மறைந்து விட்ட இறைவனை, தான் மீண்டும் காணவேண்டும் ஏன்று ஏங்குவதால், இறைவன் வருவதற்காக குயில் பாடல் வேண்டும் என்று விரும்புகின்றார்.

கொந்தணவும் பொழில் சோலைக் கூங்குயிலே இது கேள் நீ

அந்தணனாகி ஆகி வந்து இங்கே அழகிய சேவடி காட்டி

எம் தமர் ஆம் இவர் என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளி

செந்தழல் போல் திருமேனித் தேவர் பிரான் வரக் கூவாய்

பொழிப்புரை:

பால்மணம் கமழும் மலர்களைக் கொண்ட மாமரத்தின் தளிர்களைக் கோதி உட்கொண்டு இனிய குரலில் பாடும் இளம் குயிலே, தேன் நிறைந்த மலர்கள் கொண்ட சோலைகள் சூழ விளங்கும் தோணிபுரம் தலத்தில் எழுந்தருளி இருப்பவரும், தேவர்களின் தலைவனாக விளங்குபவரும் ஆகிய பெருமான் நான் இருக்கும் இடத்தினை நாடி என்னருகே வருமாறு நீ ஒரு முறை கூவுவாயாக,

பாடல் 9:

நற்பதங்கள் மிக அறிவாய் நான் உன்னை வேண்டுகின்றேன்

பொற்பு அமைந்த வாய் அலகில் பூவை நல்லாய் போற்றுகின்றேன்

சொற்பதம் சேர் மறையாளர் திருத்தோணிபுரத்து உறையும்

விற்பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய்ப் பயலை விளம்பாயே

விளக்கம்:

பூவை=நாகணவாய்ப் பறவை; குயிலை, இறைவனை வரவழைக்கும் நோக்கத்துடன் கூவுமாறு வேண்டிய சம்பந்த நாயகி, என்ன செய்வது என்று அறியாம்ல் திகைத்த நிலையில், மீண்டும் எவரையேனும் தூதாக அனுப்பலாம் என்ற நோக்கத்துடன், நாகணவாய்ப் பறவைகளை அழைக்கின்றாள். பொற்பு=அழகு; சொற்பதம்=சொற்களாக அமைந்துள்ள வேத மந்திரங்கள்; இந்த பாடலிலும் தூது செல்லவிருக்கும் பறவைகளை புகழ்வதையும் வேண்டுவதையும் நாம் உணரலாம். நற்பதங்கள்=நல்ல சந்தர்ப்பங்கள்; பறவையை வேண்டுவது மட்டுமன்றி, பறவையின் வாய் மிகவும் அழகானது என்றும் சம்பந்த நாயகி புகழ்கின்றாள்; மெய்=உடல்; விகிர்தன்=ஏனைய தெய்வங்களிலிருந்து பல தன்மைகளில் மாறுபட்டவன்; இவ்வாறு இறைவன் மாறுபட்டிருக்கும் தன்மையும் அவனது தோளின் அழகும் தன்னைக் கவர்ந்ததை இங்கே சம்பந்த நாயகி உணர்த்துகின்றாள்.

பொழிப்புரை:

நல்ல சந்தர்ப்பங்கள் அறியும் ஆற்றல் உடைய பூவையே, அடியவள் உன்னிடம் வேண்டுவது யாதெனில், அழகிய வாயினையும் நற்பண்புகளையும் உடைய பூவைப் பறவையே, நான் உன்னை போற்றுகின்றேன்; மந்திரச் சொற்களை உள்ளடக்கிய வேதங்களில் வல்லவரும், திருத்தோணிபுரம் தலத்தில் உறைபவரும், வில் அழகாக பொலிந்து விளங்கும் தோளினை உடையவரும், ஏனைய தெய்வங்களிலிருந்து பல தன்மைகளில் மாறுபட்டவரும் ஆகிய இறைவனுக்கு எனது உடலினை பீடித்துள்ள பயலை நோயின் தன்மையை விளக்கமாக கூறுவாயாக.

பாடல் 10:

சிறை ஆரும் மடக்கிளியே இங்கே வா தேனொடு பால்

முறையாலே உணத் தருவன் மொய் பவளத்தொடு தரளம்

துறை ஆரும் கடல் தோணிபுரத்து ஈசன் துளங்கும் இளம்

பிறையாளன் திருநாமம் எனக்கு ஒரு கால் பேசாயே

விளக்கம்:

பல விதமான பறவைகளாய் தூதுக்கு அனுப்பியும் பயன் ஏதும் இல்லாததைக் கண்ட சம்பந்த நாயகி மிகவும் வருத்தம் அடைகின்றாள். குறைந்தது, பெருமானின் திருநாமத்தை எவரேனும் சொல்ல, தான் அதனைக் கேட்டால் தனது துன்பம் ஓரளவாது குறையும் என்ற நம்பிக்கையில் கிளியிடும் விடுக்கும் வேண்டுகோள் இந்த பாடலில் கொடுக்கப் பட்டுள்ளது. இறைவனின் திருநாமத்தைச் சொல்வதானால், கிளிக்கு தேனும் பாலும் தருவதாக ஆசை காட்டுகின்றாள். தனது தலைவி பலமுறை சொல்லக் கேட்ட இறைவனின் திருநாமங்களை சொல்வது கிளிக்கு மிகவும் எளிதான செயல் தானே. தருவன் என்ற சொல்லோடு மொய்ப் பவளம் தரளம் ஆகிய சொற்களைச் சேர்த்தும் பொருள் கொள்ளலாம். உண்பதற்கு தேனும் பாலும் அளிப்பது மட்டுமன்றி, இறைவனின் நாமத்தைச் சொல்லும் கிளிக்கு அழகு சேர்க்கும் வகையில் முத்தும் பவளமும் இணைத்து கட்டப்பட்ட மாலையும் சூட்டி அழகு பார்க்கத் துடிக்கும் நாயகியை நாம் இங்கே உணரலாம்., இறைவனின் பேரில் அவள் கொண்டுள்ள காதலின் சக்தி தான் என்னே.

இவ்வாறு சம்பந்தர் கிளியை வேண்டுவது நமக்கு மணிவாசகரின் திருத்தசாங்கம் பதிகத்தின் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. மணிவாசகரும், கிளியை நோக்கி, இறைவனை குறிக்கும் சொற்களாகிய எம்பெருமான், தேவர் பிரான், ஆரூரன், செம்பெருமான் ஆகிய சொற்களை சொல்லுமாறு வேண்டுகின்றார். தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு, தலைவனது பெயரைக் கேட்ட மாத்திரத்தில்,. அவனுடன் கூடி இணைந்தது போன்று மகிழ்ச்சி தோன்றுவது இயற்கை தானே. அதனால் தானே இறைவன் பால் காதல் கொண்டுள்ள அடியார்கள், இறைவனின் நாமங்களை தாங்கள் கேட்டு மகிழும் வண்ணம் கூறுமாறு மற்றவர்களை வேண்டுகின்றனர். வெண்மலரான் என்று பிரமனையும் பாற்கடலான் என்று திருமாலையும் குறிப்பிட்டு, அவர்கள் இருவரும் எங்களது தலைவனே, தேவர்கள் தலைவனே என்று அழைப்பதை குறிப்பிட்டு, பெருமானின் திருநாமத்தை எவரெல்லாம் விருப்பமுடன் சொல்கின்றனர் என்றும் இங்கே கூறுகின்றார்.

ஏரார் இளம் கிளியே எங்கள் பெருந்துறைக் கோன்

சீரார் திருநாமம் தேர்ந்து உரையாய் – ஆரூரன்

செம்பெருமான் வெண் மலரான் பாற்கடலான் செப்புவ போல்

எம்பெருமான் தேவர்பிரான் என்று

திருமங்கை மன்னனும், ஒரு தலைவி தான் வளர்க்கும் கிளி அரியின் நாமம் சொல்லக் கேட்டு, அந்த கிளியை கைகூப்பி வணங்கியதாக நெடுந்தாண்டகம் பாடல் ஒன்றில் கூறுகின்றார். இறைவனின் திருநாமங்களைச் சொல்வதிலும் கேட்பதிலும் தான் அருளாளர்களுக்கு எத்தனை இன்பம். திருக்குறுங்குடி, திருவரங்கம், திருத்தண்கா, திருவெக்கா என்பன வைணவத் திருத்தலங்கள்.;

முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்து

அப்பால் முதலாய் நின்ற

அளப்பு அரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர் தம்

சிந்தையானை

விளக்கொளியை மரகதத்தை திருத் தண்காவில் வெக்காவில் திருமாலைப்

பாடக் கேட்டு

வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக்கிளியை கை கூப்பி

வணங்கினாளே

பொழிப்புரை:

அழகிய சிறகுகளும் இளமையும் பொருந்திய கிளியே, நீ என்னிடம் வருவாயாக; நான் உனக்கு தேனும் பாலும் முறையாக உண்பதற்கு மீண்டும் மீண்டும் தருவேன்; சிறந்த பவளங்களையும் முத்துக்களையும் தனது அலைக் கரங்களால் கரையில் சேர்க்கும் கடலின் அருகில் உள்ள தோணிபுரம் என்ற தலத்தில் உறைபவனும், இளம்பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ளவனும் ஆகிய பெருமானின் திருநாமத்தை, நான் உள்ளம் குளிர்ந்து கேட்கும் வண்ணம் ஒரு முறையேனும் பேச மாட்டாயா.

பாடல் 11:

போர் மிகுத்த வயல் தோணிபுரத்து உறையும் புரிச்சடை எம்

கார் மிகுத்த கறைக் கண்டத்து இறையவனை வண் கமலத்

தார் மிகுத்த வரை மார்பன் சம்பந்தன் உரை செய்த

சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே

விளக்கம்:

போர்=வைக்கோல் போர்; கார்=கருமை; புரிசடை=முறுக்கேறிய சடை; வைக்கோல் போர் மிகுந்த நகரம் என்று குறிப்பிடப்பட்டு, நகரின் நிலவளம் மற்றும் செல்வ வளம் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

வைக்கோல் போர்களை மிகுதியாகக் கொண்ட வயல்கள் நிறைந்த தோணிபுரம் தலத்தில் உறைபவனும், முறுக்கேறிய சடையினையும் கருமை நிறம் பொருந்திய கழுத்தினையும் உடையவனும் ஆகிய இறைவனை, வளம் மிகுந்த தாமரை மலர் மாலைகளை அணிந்த அகன்ற மார்பினை உடைய ஞானசம்பந்தன், போற்றி உரைத்த புகழ் வாய்ந்த இந்த தமிழ் திருப்பதிகத்தை ஓதும் வல்லமை பெற்ற அடியார்கள் சிவலோகம் சேர்வார்கள்.

முடிவுரை:

சிறப்பு வாய்ந்த பதிகம் என்று திருஞானசம்பந்தரே கடைப் பாடலில் குறிப்பிட்டிருப்பதால் பதிகத்தின் சிறப்பு எத்தனை உயர்ந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். பதிகத்தின் பாடல்கள் அனைத்தும் ஆன்மாவின் உள்ளக் கிடக்கையை, இறைவனிடம் விரைவில் சென்று சேரவேண்டும் என்ற விருப்பத்தை வெளியிடுவதை நாம் உணரலாம். பொதுவாக சம்பந்தரின் பதிகங்களில் காணப்படும் மூன்று குறிப்புகள், இராவணனின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம் மற்றும் சமணர்கள் பற்றிய குறிப்பு, இந்த பதிகத்தில் விடுபட்டமை நாம் உணர்ந்து சிந்திக்கத் தக்கது. தனது உள்ளத்தைக் கவர்ந்த இறைவனின் நினைவுடன், அவனுடன் சேர வேண்டும் என்ற ஆவல் ஒன்றே தனது குறிக்கோளாக ஆன்மா எண்ணும் போது, இறைவனுடன் இணைவதால் பெறுகின்ற இன்ப உணர்ச்சியைத் தவிர்த்து வேறு ஏதும் தோன்றாது என்பதை உணர்த்தும் முகமாக, தனது வழக்கமான பாணியிலிருந்து சம்பந்தர் மாறுபடுவதையும் நாம் இங்கே உணரலாம்.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Vann Tharangap Punal
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

வண் தரங்கப் புனல்


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: