Go Back

22/03/21

காரார் கொன்றை


காரார் கொன்றை - பின்னணி


தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருவானைக்கா சென்ற திருஞானசம்பந்தர் ஆங்கே சில நாட்கள் தங்கியிருந்து மூன்று பதிகங்கள் பாடிய பின்னர், அருகில் உள்ள தவத்துறை மற்றும் பல தலங்கள் சென்றதாக பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. இந்நாளில் இலால்குடி என்று அழைக்கப்படும் தலமே பண்டைய நாளில் தவத்துறை என்று அழைக்கப்பட்டது. ஆனால் இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகம் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. பெரிய புராணப் பாடலில் குறிப்பிடப்படும் மற்ற தலங்களின் விவரமும் நமக்கு தெரியவில்லை. அதன் பின்னர், திருப்பாற்றுறை திருவெறும்பியூர் மற்றும் பல தலங்கள் சென்ற ஞானசம்பந்தர் நெடுங்களம் சென்றார் என்று சேக்கிழார் கூறுகின்றார். திருவெறும்பியூர் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய இரண்டு பதிகங்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன, ஞானசம்பந்தர் அருளிய பதிகம் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை; ஏறு உயர்த்தார்=விடைக் கொடியைத் தாங்கியுள்ள சிவபெருமான்; சண்பை ஆளியார்=சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி நகரின் தலைவர், திருஞானசம்பந்தர்; இந்த பாடலில் குறிப்பிடப்படும் வேறு தலங்கள் என்பவை என்ன என்பது தெரியவில்லை.

ஏறு உயர்த்தார் திருப்பாற்றுரையும் எறும்பியூர் மாமலையே முதலா

வேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழ

ஈறில் புகழ்ச் சண்பை ஆளியார் தாம் எண்திசையோரும் தொழுது

இறைஞ்ச

நீறணி செம்பவளப் பொருப்பில் நெடுங்கள மாநகர் சென்று சேர்ந்தார்

திருச்சியிலிருந்து கல்லணைக்கு, திருவானைக்கா மற்றும் திருவளர்சோலை வழியாக செல்லும் பேருந்தில் சென்று பனையபுரம் என்ற நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லவேண்டிய தலம். இறைவனின் திருநாமம் மூல நாதர், ஆதிமுதல்வர்; சுயம்பு மூர்த்தம். இறைவியின் திருநாமம் நித்ய கல்யாணி, மேகலாம்பிகை; நான்கு கரங்களுடன் அம்பிகை தெற்கு நோக்கிய சன்னதியில் காட்சி தருகின்றாள். இந்நாளில் பாலத்துறை என்று அழைக்கப்படும் இந்த தலத்திற்கு பாற்றுறை என்ற பெயர் வருவதற்கு இரண்டு காரணங்கள் செவிவழிச் செய்தியாக சொல்லப் படுகின்றன. மார்க்கண்டேயர் இந்த தலத்திற்கு வந்த போது இலிங்கத்தை அபிஷேகம் செய்வதற்கு அவருக்கு, திருக்கோயிலைச் சுற்றியுள்ள இடங்களில் பால் கிடைக்கவில்லை. இறைவனை அவர் வேண்டிய போது, இலிங்கத்தின் தலையிலிருந்து பால் தானாகவே பொங்கி வழிந்து சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனால் பாற்றுறை என்று பெயர் வந்ததாக கூறுவார்கள்.

இந்த பகுதியை ஆண்டு வந்த ஒரு சோழ மன்னன், இங்கே இருந்த புதரின் அருகே அதிசயமான பறவை ஒன்றைக் கண்டான். அந்த பறவையின் மீது அம்பு எய்த போதிலும் அந்த பறவை தப்பிவிட்டது. மீண்டும் ஒருநாள் அந்த பறவை புதரின் அருகே பறப்பதைக் கண்ட மன்னன், புதரினை விலக்கினால் பறவையை பிடித்துவிடலாம் என்று எண்ணி, புதரினை வெட்டினான். ஒரு புற்று தென்படவே அந்த புற்றினைத் தோண்டிப் .பார்த்தபோது பாலின் வாசனை வீசியது, மேலும் தோண்டவே பால் பீறிட்டு வந்தது. மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், பால் வெளிப்பட்ட இடத்தில் தான் இலிங்கமாக இருப்பதாக கூறவே, மன்னன் இலிங்கத்தை வெளிக்கொணர்ந்து கோயில் கட்டி வழிபட்டான். பால் பொங்கி பீறிட்ட இடத்தில் கிடைத்த இலிங்கம் என்பதால் பாற்றுறை நாதர் என்று அழைத்து வழிபட்டான். புரட்டாசி மற்றும் பங்குனி மாதத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமியின் மீது சூரிய ஒளி நேரடியாக படர்வதை காணலாம். மூன்று நிலை கோபுரம் கொண்ட தலம். நந்தியும் பலிபீடமும் கோயிலுக்கு வெளியே உள்ளன. கருவறைச் சுற்றுச் சுவரினில் நின்ற நிலையில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியை காணலாம். அவருக்கு அருகே சீடர்கள் எவரும் இல்லை. வீணையின் இசைக்கு ஏற்ப நடனமாடும் கோலத்தில், அவரது இடது கால் சற்று மடங்கி நளினமாக காணப்படுகின்றது. இசைக் கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் சிறப்பு வழிபாடு செய்து இவரை வழிபடுகின்றனர். இவருக்கு அருகே பிட்சாடனர் உருவத்தையும் நாம் காணலாம். கருவறைக்கு பின்னர், இலிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் சங்கரநாராயணரை நாம் காணலாம். பிராகாரத்தில் ருக்மிணி மற்றும் சத்யபாமையுடன் வேணுகோபாலர் சன்னதியையும் நாம் காணலாம். அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன், நான்கு தூண்களுடன் காணப்படும் இடத்தினை தேவசபை என்று அழைக்கின்றனர், இங்கிருந்து பெருமான், மன்னன் போன்று உலகினை ஆட்சி செய்வதாக கருதப் படுகின்றது. குழந்தைகளின் நல்வாழ்க்கை மற்றும் புத்திரப் பேற்றினை வேண்டுவோர், இந்த தலத்து இறைவனையும் இறைவியையும் வழிபாட்டு பயனடையலாம் என்ற நம்பிக்கை நிலவுகின்றது,

இந்த பதிகத்தின் பல பாடல்கள் அகத்துறை கருத்துகளை வெளிப்படையாக சொல்லும் வண்ணம் உள்ளன. எனவே இந்த பதிகத்தினை அகத்துறை பதிகமாக கருதி பொருள் கொள்வது சிறப்பு என்று தோன்றுகின்றது. திருவானைக்கா தலத்து இறைவன் பால் தனக்கிருந்த ஆறாத அன்பினை வெளிப்படுத்தி மழையார் மிடாறா என்று தொடங்கும் பதிகத்தினை பாடிய ஞானசம்பந்தர், அந்த பதிகத்தின் பாடல்களில் இறைவனை பல்வேறு நாமங்களை சொல்லி புலம்புவதாக சம்பந்த நாயகியின் தாய் கூறுவதாக பாடல்களை அமைத்துள்ளார். எனவே தான் சம்பந்த நாயகியின் உணர்வுகள் எண்ணங்கள் அந்த பதிகத்து பாடல்களில் வெளிப்படவில்லை போலும். இந்த பதிகத்தின் பாடல்களில் சம்பந்த நாயகி தனது உணர்வுகளை மிகவும் அழகாக உணர்த்துவதை நாம் உணரலாம்.

பாடல் 1:

காரார் கொன்றை கலந்த முடியினர்

சீரார் சிந்தை செலச் செய்தார்

பாரார் நாளும் பரவிய பாற்றுறை

ஆரார் ஆதி முதல்வரே

விளக்கம்:

காரார்=கார் காலத்தில் அதிகமாக பூக்கும் கொன்றை மலர்கள்; எங்கெங்கோ திரிந்து கொண்டிருந்த தனது சிந்தையை திருத்தி, தன் பால் செல்ல வைத்தவர் பெருமான் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற திருவாசகத் தொடர் நமது நினைவுக்கு வருகின்றது. ஆதி என்பது ஆத்தி மலரை குறிக்கும் என்று விளக்கம் அளிக்கப்பட்டு, ஆத்தி மலரைச் சூடிய இறைவன் என்று பொருள் கூறப்படுகின்றது. ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் என்பது இறைவனின் திருநாமங்கள். ஆத்திச்சூடி கடவுள் வாழ்த்தினில் ஔவையார் ஆத்திச்சூடி என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். தனது சிந்தனை சென்று கொண்டிருந்த பாதையை மாற்றி, செம்மையான வழியில் செல்லும் வண்ணம் திருத்தியவர் பெருமான் என்று சம்பந்த நாயகி கூறுவதை நாம் உணரலாம். பல தேவார திருவாசகப் பாடல்களில் மயங்கிய நிலையினில் இருக்கும் சிந்தனையை நல்வழிப்படுத்துபவர் பெருமான் என்று குறிப்பிடப் படுகின்றது.

ஆனைக்கா தலத்தின் மீது அருளிய பாடலில் (3.53.2) திருஞானசம்பந்தர், ஆனைக்கா அண்ணலை வணங்கி வழிபடும் அடியார்கள், தாங்கள் உலகப் பொருட்கள் பால் கொண்டுள்ள பற்றின் காரணத்தால் மயக்கம் மிகுந்த சிந்தனை உடைய மற்ற மனிதர்களிலிருந்து மாறுபட்டு வேறுபட்ட சிந்தையர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றார். நுண்=சிறிய; துறை=வழி, இங்கே வாய்க்கால் என்று பொருள் கொள்ள வேண்டும்; சேணுலா=நெடும் தொலைவிலிருந்து பாய்ந்து வரும் காவரி ஆறு; பதி ஞானம் என்பது இறைவனைப் பற்றிய அறிவு. பசு ஞானம் என்பது உலகம் உலகப் பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் பற்றிய அறிவு. பொதுவாக மனிதர்களில் பெரும்பாலோர் பதிஞானத்தை விடவும் பசுஞானத்தை அதிகமாக பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் பெருமானின் அடியார்களாக விளங்குவோர், மாறுபட்ட சிந்தையராக, பதி ஞானம் அதிகமாக உள்ளவர்களாக இருப்பார்கள் என்று இங்கே ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.

சேறுபட்ட தண்வயல் சென்று சென்று சேணுலா

ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார்

நீறுபட்ட மேனியார் நிகரில் பாதம் ஏத்துவார்

வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே

திருப்பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பாடலிலும் (3.14.7) ஞானசம்பந்தர் தனது தன்மையை மாற்றிய பெருமான் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடல் அகத்துறை வகையைச் சார்ந்தது என்று கூறுவார்கள். பெருமானைக் கண்டதால் தனது மனதில் ஏற்பட்ட மாறுதலை உணர்ந்த சம்பந்த நாயகி, இறைவன் அவ்வாறு செய்ததன் காரணம் தான் யாது என்று தனது வியப்பினைத் தெரிவிக்கும் முகமாக அமைந்த பாடல். தோடுடைய என்று தொடங்கும் தனது முதல் பதிகத்தின் பாடல்களில், உள்ளம் கவர்ந்த கள்வன் என்று பெருமானை அழைத்த திருஞானசம்பந்தர், தனது மனதினில் மாற்றத்தை விளைவித்து இறை வழிபாட்டினால் தன்னை ஈடுபடுத்தியவன் இறைவன் என்பதை இங்கே உணர்த்துகின்றார். ஜீவனாகத் திகழ்ந்த தன்னை சிவமாக மாற்றிய இறைவனின் கருணையை நினைத்து ஞானசம்பந்தர் உள்ளம் நெகிழ்ந்து கூறுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

தூயவன் தூய வெண்ணீறு மேனி மேல்

பாயவன் பாய பைஞ்ஞீலி கோயிலா

மேயவன் வேய்புரை தோளி பாகமா

ஏயவன் எனைச் செயும் தன்மை என் கொலோ

திருந்து தேவன்குடி என்ற தலத்தில் உறையும் தேவன் தன்னை வழிபடும் அடியார்களின் சிந்தனையைத் திருத்துவதால், அந்த தேவனை மக்களின் சிந்தனையை திருத்துபவர் என்பதை உணர்த்தும் வண்ணம், திருந்து தேவன் என்றே ஞானசம்பந்தர் இந்த பதிகத்தின் முதல் பாடலில் (3.25.1) என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் மற்றைய பாடல்களில் தேவன்குடி என்றே இந்த தலம் அழைக்கப்படுகின்றது.. திருந்துதேவன்குடி தலத்து பெருமானது அடையாளங்களாகிய திருநீறு உருத்திராக்கம் மற்றும் சடைமுடி ஆகியவற்றை கண்ணால் கண்டாலும் அல்லது மனதினால் நினைத்தாலும் ஏற்படும் பயன் யாதென்பதை இங்கே கூறுகின்றேன், கேட்பீர்களாக; இந்த அடையாளங்கள், தங்களது நோய்களை தீர்த்துக் கொள்ள விரும்பும் அடியார்களுக்கு மருந்தாகவும், ஐந்தெழுத்து மந்திரம், வேத மந்திரங்கள் மற்றும் திருமுறை பாடல்கள் ஆகியவற்றை சொல்ல விரும்பும் அடியார்களுக்கு அத்தகைய மந்திரங்களாகவும், சிவ புண்ணியங்கள் செய்ய விரும்பும் அடியார்களுக்கு, அத்தகைய புண்ணியங்கள் அளிக்கும் பயன்களாகவும் விளங்குகின்றன, இத்தகைய வேடங்களை தனது அடையாளமாகக் கொண்டுள்ள இறைவன், தேவதேவன் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கும் தலம் திருந்துதேவன்குடி என்பதாகும். இந்த பெருமானின் திருவேடங்களை, அரிய தவம் புரியும் முனிவர்கள் தியானித்து தொழுகின்றனர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை

புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை

திருந்து தேவன்குடித் தேவர் தேவு எய்திய

அருந் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே

தெளிவான சிந்தனை நமக்கு வாய்க்க வேண்டும் என்று விரும்பினால் சிவபெருமானைத் தொழ வேண்டும் என்று திருஞானசம்பந்தர் உணர்த்தும் திருநாரையூர் தலத்து பாடல் (2.86.9) நமது நினைவுக்கு வருகின்றது. வினைகள் உயிரின் விருப்பத்திற்கு மாறுபட்டு செயல்படுவதால், வினைகளை உயிரின் பகை என்று கூறுகின்றார். வேறுயர் வாழ்வு=பிறப்பிறப்புக்கு மாறுபட்டு பேரின்பம் தரும் முக்தி நிலை; கரவு=தன்னை மறைத்துக் கொள்ளும் இறைவனின் தன்மை; திகழும்=இறைவனின் அருட்சக்தி வெளிப்பட்டு திகழும் நிலை; பிறந்து இறந்து மீண்டும் பிறந்து பிறப்பிறப்புச் சுழலில் சிக்கி வாழும் வாழ்க்கைக்கு மாறுபட்டு நிலையான பேரின்ப வாழ்வு பெறுவதற்கான தகுதியை பெற்று, உயிருடன் பிணைந்திருந்தாலும் உயிரின் விருப்பத்துக்கு மாறாக பகையாக செயல்பட்டு துக்கத்தினை விளைவிக்கும் வினைகளை ஒழித்து, தெளிவான சிந்தனை பெற்று மெய்ப்பொருளின் உண்மை நிலையினை உணர்ந்து, இறை உணர்வினை மறைக்கும் மாயையை ஒழித்து, இறைவனின் அருட்சக்தியை உணர வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், சேற்றிலிருந்து தோன்றும் தாமரையில் பொருந்தி விளங்கும் நான்முகனும் மற்றும் திருமாலும் தேடிய போது சீறியெழுந்து நீண்டு சிவந்த தழற்பிழம்பாக நின்றவனாகிய சிவபெருமான் உறையும் செல்வச் செழிப்பு வாய்ந்த திருநாரையூர் தலத்தினை கைகளால் தொழுது வணங்குவீர்களாக என்று ஞானசம்பந்தர் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

வேறுயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும்

மேய உடலில்

தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவைக் கரந்து

திகழும்

சேறுயர் பூவின் மேய பெருமானும் மற்றைத் திருமாலும் நேட

எரியாய்ச்

சீறிய செம்மையாகும் சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை

தொழவே

சிவபிரானது திருப்பாதங்களை நினைப்பதற்கும் அவனது திருவருள் கூட வேண்டும் என்று மணிவாசகப் பெருமான் திருவாசகம் (அவன் அருளாலே அவன் தாள் வணங்கி) சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான் தனது வாழ்வில் சிவனருள் கூடாத போது நடந்ததையும், பின்னர் அவனருள் கூடியபோது நடந்த நிகழ்சிகளையும் நினைத்துப் பார்க்கின்றார். அதனால் சிவபிரான் அருள் செய்யாவிடில் தான் செய்யக்கூடியது ஏதும் இல்லை என்ற முடிவினுக்கு வந்தவராக, உனக்கு அடிமையாக இருக்க நான் விரும்புகின்றேன்; நீ அதற்கு அருள் புரிய வேண்டும் என்று இங்கே இறைஞ்சுகின்றார். எனது தந்தையாகிய சிவபெருமானே, எனது சிந்தையில் திகைப்பு ஏதும் ஏற்பாடாவண்ணம், எனது மனதினில் நிறைந்த அன்புடன் நான் உனக்கு அடிமைத் தொழில் செய்வதற்கு, உனது திருவருள் கூடவேண்டும் என்று அப்பர் பிரான் இறைவனிடம் வேண்டும் பாடல் (4.23.4) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஓவாது=இடைவிடாது. செந்தீ என்பது எதுகை கருதி செந்தி என குறுகியது. செறிவு=நிறைந்த அலசுதல்=வருந்துதல், சோர்வு அடைதல்

சிந்தையைத் திகைப்பியாதே செறிவுடை அடிமை செய்ய

எந்தை நீ அருளிச் செய்யாய் யாது நான் செய்வது என்னே

செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே

அந்தியும் பகலும் ஆட அடியிணை அலசும் கொல்லோ

மத்தால் கடையப்பட்டு கலங்கும் தயிர் போன்று, புலன்கள் நெருப்பு போன்று தனது மனதினைப் பற்றிக் கொள்வதால் தனது சிந்தை கலங்குகின்றது, என்பதை பெருமானுக்கு உணர்த்தி, தனது சிந்தனையின் மயக்கத்தை பெருமான் தான் தீர்த்தருளவேண்டும் என்று சத்திமுற்றத்து தலத்தின் மீது அருளிய பாடல் (4.96.3) ஒன்றினில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொத்து=ஓட்டை; பொத்தார்=ஓட்டைகளை உடைய; குரம்பை=உடல்; ஐவர்=மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகள்; மறுக்கு=மயக்கம்; மத்தார் தயிர்=மத்தால் கடையப் படும் தயிர் போல்

பொத்தார் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகலழிப்ப

மத்தார் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி

அத்தா அடியேன் அடைக்கலம் கண்டாய் அமரர்கள் தம்

சித்தா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

மாறுபடும் சிந்தைனையில் உள்ள மாறுபாட்டினை ஒழித்து செம்மைப்படுத்தி சிவானந்த அனுபவத்தை ஊறச் செய்யும் பெருமான் என்று ஆனைக்கா தலத்தின் மீது அருளிய பாடலில் ஒன்றினில் அப்பர் பிரான் (5.31.2) கூறுகின்றார்.

திருகு சிந்தையைத் தீர்த்துச் செம்மை செய்து

பருகி ஊறலைப் பற்றிப் பதம் அறிந்து

உருகி நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே

அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே

ஞானசம்பந்தர் கூறியே கருத்தே, அப்பர் பிரானால் திருமருகல் தலத்தின் மீது அருளப்பட்டுள்ள குறுந்தொகைப் பதிகத்தின் முதல் பாடலில் சொல்லப்படுகின்றது. நமது சிந்தனை திருந்தவேண்டும் என்று நாம் நினைத்தால் மருகல் பெருமானை வழிபடுவது ஒரு தான் தீர்வு என்று இந்த பாடலில் (5.88.1) கூறுகின்றார். மாறுபட்ட எண்ணங்கள் நமது மனதினில் இருந்தால் அத்தகைய சிந்தனைகள் நீக்கப்பட்டு நெஞ்சம் தூய்மை அடையும் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், பெருமானை வழிபடுவதால் நாம் அடையவிருக்கும் வேறு பலன்களையும் இங்கே குறிப்பிடுகின்றார். மருகல் எனப்படும் தலத்தில் உறையும் இறைவனின் திருவடிகளை வாழ்த்திப் பாடி வணங்கினால், தவம் செய்வதால் ஏற்படும் நல்ல பயன்கள் நமக்கு கிடைக்கும்; மேலும் நமது உயிரைப் பிணைத்துள்ள ஆணவ மலத்தினால் நமக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமை நீங்கும்: உண்மையான மெய்ப்பொருளை நாம் உணர்ந்து உலகப் பொருட்களால் நமக்கு ஏற்படும் மாயையிலிருந்து விடுபடலாம்; வேறு ஏதேனும் மாறுபட்ட எண்ணங்கள் நமது மனதினில் இருந்தால் அந்த சிந்தனைகள் நீக்கப்பட்டு நெஞ்சம் தூய்மை அடையும்; பரம்பொருளாகிய சிவபெருமானைத் தியானம் செய்து அதன் மூலம் நமக்கு ஏற்படும் பரமானந்தத்தை, சிவானந்தத் தேனை நாம் பருகலாம் என்பதே இந்த பாடலில் பொழிப்புரை. .

பெருகலாம் தவம் பேதமை தீரலாம்

திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்

பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்

மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே

மற்ற ஒளிகளைப் போன்று புற இருளைத் தீர்ப்பது மட்டுமல்லாமல் உள்ளத்தின் அக இருளைப் போக்கி சிந்தனயில் உள்ள மயக்கங்களைத் தீர்க்கும் பேரொளி படைத்தவன் பெருமான் என்று தில்லைத் திருத்தாண்டகத்தின் பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். கார் ஒளிய=கரிய உடல் ஒளியை உடைய திருமால்; ஏரொளி=தோன்றும் ஒளி; மற்ற ஒளிகள் இருட்டை நீக்கி வெளிச்சம் மட்டும் அளிக்கும் தன்மை உடையன. ஆனால் இந்த ஒளி, மனதில் இருக்கும் அறியாமை ஆகிய இருளை நீக்கி ஞானத்தை அளிப்பதால் மயக்கம் தீர்க்கும் ஒளி என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றா

காரொளிய திருமேனிச் செங்கண் மாலும் கடிக்கமலத்து

இருந்தவனும் காணா வண்ணம்

சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழொளியைச்

சிந்தை தனை மயக்கம் தீர்க்கும்

ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும் ஏழுலகும் கடந்து

அண்டத்தப்பால் நின்ற

பேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம்

பிறவா நாளே

செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.84.4) அப்பர் பிரான் தனது மயங்கி கிடந்த சிந்தனையை மயக்கத்திலிருந்து விடுவித்து திருவருள் புரிந்தவன் பெருமான் என்று கூறுகின்றார். கன்னி=கங்கை நதி; பன்னிய=தானே சொல்லிய; இந்த பாடலில் பெருமான் தான் தன்னை, அவனது புகழினை உணர்த்தும் பதிகங்கள் பாடவைத்தவன் என்றும், எதனால் அவ்வாறு பாட வைத்தான் என்றும், அவ்வாறு பாடியதால் தனக்கு ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையும் அப்பர் பிரான் கூறுகின்றார். தெரிவை=பார்வதி தேவி; பெண்களை அவர்களது வயதிற்கு தக்கவாறு ஏழு பிரிவுகளாக தமிழ் இலக்கியங்கள் பிரிக்கின்றன. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்பன இந்த ஏழு பிரிவுகள். 25 வயதிலிருந்து 30 முப்பது வயதுக்கு வயதுக்கு உட்பட்ட பெண்களை தெரிவை என்று பிங்கள நிகண்டு குறிப்பிடுகின்றது. என்றும் மூப்பு அடையாமல் ஓரே நிலையில் இளமையாக இருக்கும் இறைவனுக்கும் இறைவிக்கும் ஏது வயது. வயது நிலைகளை கடந்த அன்னையை, மங்கை என்றும் மடந்தை என்றும் அரிவை என்றும் தெரிவை என்றும் பலவாறு தேவார ஆசிரியர்கள் அழைக்கின்றனர். மணி என்பது இங்கே மரகத மணியை குறிக்கும். தேவியின் உடல் வண்ணத்திற்கு மரகத மணி உவமையாக சொல்லப்படுகின்றது. சராசரம்=சரம் மற்றும் அசரம்; அசையும், இயங்கும் உயிர்கள் மற்றும் இயங்காமல் ஒரே இடத்தில் இருக்கும் உயிர்கள், பன்னிய தமிழ் மாலை=முன்னோர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிய இலக்கண விதிகள்;

கந்தமலர் கொன்றையணி சடையான்தன்னைக் கதிர்விடு மாமணி

பிறங்கு கனகச் சோதிச்

சந்த மலர்த் தெரிவை ஒரு பாகத்தானைச் சராசர நல் தாயானை

நாயேன் முன்னைப்

பந்தம் அறுத்து ஆளாக்கப் பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல்

தமிழ்மாலை பாடுவித்து என்

சிந்தை மயக்கு அறுத்த திருவருளினானைச் செங்காட்டங்குடியதனில்

கண்டேன் நானே

செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய இந்த பதிகத்தின் பாடலில் தமிழ்மாலை பாடுவித்து என் சிந்தை மயக்கு அறுத்த பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பன்னிய நூல் என்றால் இலக்கண முறைப்படி அமைந்த பாடல்கள் என்று பொருள். இந்த பாடல்களைப் பாடியதால் தனது மனதில் இருந்த மயக்கும் சிந்தைகள் அறுந்தன என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அப்பர் பிரானின் பாடல்களை, மற்ற அருளாளர்கள் அருளிய திருமுறைப் பாடல்களை, பொருள் உணர்ந்து ஓதினால், நாமும் நமது சிந்தைகளில் உள்ள மயக்கங்களை அறுத்துத் தூய்மை பெறலாம் என்ற செய்தி இங்கே உணர்த்தப்படுகின்றது. தன்னை எதற்காக பாடவைத்தான் என்பதையும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். முன்னை பந்தம் அறுத்து ஆளாக்க, தன்னை பதிகம் பாட வைத்தவன் என்று கூறுகின்றார். தான் அதற்கு முன்னர் உலகப்பொருட்களின் மீதும் உலகத்தவர் மீதும் வைத்திருந்த பற்றினை அறுத்து, எப்போதும் பெருமானுக்கே திருப்பணி செய்யும் வண்ணம், இறைவன் பாடவைத்தான் என்று பாடவைத்த காரணத்தையும் இந்த பாடலில் கூறுகின்றார்.

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.57.3) சுந்தரர், தனது தடுமாற்றத்தை அறுத்த தேவதேவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். வேதங்களில் உள்ள அறம் மற்றும் திருமால் விடையாக மாறி பெருமானின் வாகனமாக இருக்கும் நிலை வேதமால் விடை என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுவதாக சிவக்கவிமணியார் பெரிய புராண விளக்கம் நூலில் உணர்த்துகின்றார்.

வெந்தநீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற

வல்லானை

அந்தம் ஆதி அறிதற்கு அரியானை ஆறலைத்த சடையானை

அம்மானைச்

சிந்தை என் தடுமாற்று அறுப்பானைத் தேவதேவனை என்

சொல் முனியாதே

வந்தென் உள்ளம் புகும் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து

என்னினைக்கேனே

திருவாசகம் கண்டப்பத்து பதிகத்தின் முதல் பாடலில் மணிவாசகர், தனது சிந்தனையை தெளிவாக்கி, தன்னுள் இருந்த சிவத்தன்மையை வெளிப்படுத்தி ஆட்கொண்ட பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அந்தரம்=பல புவனங்கள்; இந்திரியங்களின் வயப்படும் உயிர்கள், தனது விருப்பத்திற்கு மாறாக இந்திரியங்களால் இழுத்துச் செல்லப்பட்டு, மேலும் மேலும் வினைகளை சேர்த்துக் கொள்வதால் அவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் வினைகளை கழிப்பதற்காக மேலும் மேலும் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றது. இந்த தன்மையே இறப்பதற்கு காரணமாகி அந்தரமே திரிந்து போய் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. அந்த நிலைக்கு செல்லாமல் தன்னை அந்தமிலா ஆனந்தம் தரும் முக்தி நிலைக்கு அழைத்துச் செல்பவன் பெருமான் என்று இந்த பாடலில் அடிகளார் கூறுகின்றார்.

இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்

அந்தரமே திரிந்து போய் அருநரகில் வீழ்வேனை

சிந்தை தனை தெளிவித்து சிவமாக்கி எனையாண்ட

அந்தமில்லா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே

நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் ஒரு பாடலில் மணிவாசகர், மத்தால் கடைந்து கலக்கப்படும் தயிர் கலங்குவது போல், புலன்கள் நெருப்பு போல் என்னைப் பற்றிக்கொள்வதால் எனது மனம் கலங்கி இருக்கின்றது. அதனால் மேலும் பல பிறவிகளுக்கு வழிகோலும் செயல்களைச் செய்யும் என்னை விட்டுவிடாதீர் என்று வேண்டுகின்றார். வித்துறுவேன்=அடுத்த பிறவிக்கு அடிகோலுபவன்; மிலைச்சுதல்=தலையில் சூடுதல். தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய வெண்தலை தன்னைக் கொல்ல வந்த போது அதனைத் தனது திருக்கரத்தால் பிடித்துத் தனது சடையினில் சிவபிரான் தரித்தார் என்பது வரலாறு. கொத்துறு போது=கொத்தாக உள்ள பூக்கள்.. குடர் நெடுமாலை=சரபமாக மாறி நரசிம்மரின் திறனை அடக்கியபோது, நரசிம்மரின் குடலை மாலையாக அணிந்து கொண்ட நிகழ்ச்சி புராணத்தில் சொல்லப் பட்டுள்ளது. தத்துறு நீறு=உடலில் பரந்து பூசப்பட்ட திருநீறு. ஆரம்=சந்தனக் கட்டை.

மத்துறு தண்தயிரில் புலன் தீக்கதுவக் கலங்கி

வித்துறுவேனை விடுதி கண்டாய் வெண்தலை மிலைச்சிக்

கொத்துறு போது மிலைந்து குடர் நெடு மாமாலை சுற்றித்

தத்துறு நீறுடன் ஆரச் செஞ்சாந்து அணி சச்சையனே

ஆரார்=தெவிட்டாதவர்; தன்னை பெருமான் பால் தீவிரமாக காதல் கொண்ட பெண்ணாக உருவகித்து, ஞானசம்பந்தர், தனது சிந்தனை அனைத்தும் பெருமான் பால் செல்வதாக கூறுகின்றார். காதல் வயப்பட்ட தலைவியின் சிந்தனை தலைவனை நோக்கியன்றி வேறெங்கும் செல்லாது அல்லவா. மேலும் அந்த சிந்தனை எவ்வளவு நேரம் நீடித்தாலும் தெவிட்டாத சிந்தனையாக இருக்கும் அல்லவா. அந்த பண்புகள் தாம் இந்த பதிகத்தில் குறிப்பிடப்படுகின்றன. அவ்வாறு தனது சிந்தனையை முழுவதுமாக ஆட்கொண்டவர் யார் என்பதையும் சம்பந்த நாயகி இந்த பாடலில் உணர்த்துகின்றாள். காரார் கொன்றை கலந்த முடியினரும் பாற்றுறை உறையும் ஆரார் முதல்வருமே அந்த தலைவன் என்று உணர்த்துகின்றாள். தெளிவாக சிந்திக்கும் சிறப்பினைத் தருவது, இறைவன் பால் செல்வது என்பதால், அத்தகைய தன்மை உடைய சிந்தையை சீரார் சிந்தை என்று அடைமொழி கொடுத்து சிறப்பிக்கின்றார். தலைவி தோழியிடம் தனது மனதினைக் கவர்ந்த தலைவனை அடையாளம் காட்டும் வண்ணம் அமைந்த பாடல் என்றாலும், உலகத்தில் உள்ள ஆன்மாக்கள், உயிர்களின் தலைவனாகிய சிவபெருமானையே எப்போதும் நினைத்த வண்ணம் இருக்கவேண்டும் என்பதையும் அத்தகைய நினைவு தெவிட்டாத இனபத்தினை அளிக்கும் என்பதையும் இந்த பாடல் உணர்த்துகின்றது.

பொழிப்புரை:

கார் காலத்தில் அதிகமாக காணப்படும் கொன்றை மலர் மாலைகளை சூட்டிக் கொண்ட திருமுடியை உடையவரும், தம்மை நோக்கி எனது சிறப்பான சிந்தனைகள் இருக்கும் வண்ணம் எனது சிந்தனையை மாற்றியவரும், உலகத்து மக்களால் நாள்தோறும் புகழ்ந்து போற்றப் படுபவரும், அடியேனை தன்பால் ஆராத காதல் வைக்கச் செய்தவரும் ஆகிய இறைவன் பாற்றுறை தலத்தினில் வீற்றிருக்கும் ஆதி முதல்வர் ஆவார்.

பாடல் 2:

நல்லாரும் அவர் தீயர் எனப்படும்

சொல்லார் நன்மலர் சூடினார்

பல்லார் வெண்தலைச் செல்வர் எம் பாற்றுறை

எல்லாரும் தொழும் ஈசரே

விளக்கம்:

இந்த பாடலில் சம்பந்த நாயகி பெருமானை வெண்தலைச் செல்வர் என்று குறிப்பிடுகின்றாள். வெண்தலை என்று பிரமகபாலம் உணர்த்தப்படுகின்றது. பெருமான் கபாலத்தைத் தனது கையில் ஏந்திய வண்ணம் ஊரூராக பிச்சைக்கு செல்வது இங்கே கூறப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவர் எவ்வாறு செல்வராக இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். உலகங்கள் அனைத்தையும் தனது உடமையாக உடையவர், எவரிடமும் இல்லாத முக்திச் செல்வத்தை உடையவர் பெருமான் ஒருவர் தாமே. எனவே செல்வர் என்று அழைக்கப்படுவதற்கு அவரை விடவும் பொருத்தமானவர் வேறு எவரேனும் உளரோ. இல்லை அல்லவா. எனவே தான் பிச்சை எடுத்த போதிலும் பெருமான் செல்வர் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

திருச்சிராப்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடலில் (1.98.9) திருஞானசம்பந்தர் பெருமானை நோக்கி, செல்வந்தராக இருக்கும் நீர் மனைதோறும் சென்று இறந்தால், உமது தன்மையை அறியாதவர்கள் உம்மை இகழுவார்களே என்று கேட்கின்றார். ஞானசம்பந்தரின் குழந்தை உள்ளம், பெருமானை மற்றவர் இகழ்வதை தாங்கமுடியாமல் வருந்தியது போலும், அதனால் தான் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி, பெருமானை பார்த்து மற்றவர் இகழ்வதை தடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டு அதற்காக ஆவன பெருமான் செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றார் போலும்..

அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்

கரப்புள்ளி நாடிக் கண்டிலர் ஏனும் கல் சூழ்ந்த

சிரப்பள்ளி மேய வார்ச்சடைச் செல்வர் மனை தோறும்

இரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே.

பெரும்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றிலும் (2.67.3), செல்வராக இருக்கும் பெருமான் கபாலம் ஏந்தி பிச்சை எடுப்பதைத் தனது தொழிலாகக் கொண்டவராக இருக்கின்றார் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பிள்ளை மதி=இளம் பிறைச் சந்திரன்; கள்ளம்=பொய்; திருமாலை விடவும் தான் அதிகமான ஆற்றல் உடையவன், அதனால் திருமாலை விடவும் பெரியவன் என்று நிரூபிக்கவேண்டும் என்ற முனைப்புடன் அன்னமாக உருவெடுத்து பறந்து சென்று பெருமானின் முடியினைக் காண்பதற்கு பெருமுயற்சி செய்தும் காண முடியாமல் போகவே, பெருமானது சடையிலிருந்து கீழே விழுந்த தாழம்பூவினை சாட்சியாக வைத்துக் கொண்டு பெருமானது முடியினைத் தான் கண்டதாகக் பொய் கூறியதை உணர்த்தும் வகையில் கள்ளம் மதித்த கபாலம் என்று இங்கே சொல்லப் பட்டுள்ளது. பிரமனின் கபாலத்தை தனது கையினில் ஏந்தியவராகிய பெருமான், துள்ளி குதித்தும் நின்றும் நடனம் ஆடுபவராக, உயிர்களுக்கு உய்வினை அளிக்கும் நோக்கத்துடன், பக்குவம் வாய்ந்த உயிர்கள் அளிக்கும் மலங்களைத் தனது கலனில் ஏற்றுக் கொள்ளும் நோக்கத்துடன், பிச்சை ஏற்கும் தொழிலைத் தொடர்ந்து சிவபெருமான் செய்து வருகின்றார். என்பதை உணர்த்தும் பொருட்டு தொழிலர் என்று குறிப்பிடுகின்றார். பிச்சை எடுப்பதே அவரது தொழிலாக உள்ளதால் தொழிலர் என்று குறிப்பிடப் படுகின்றது. அருமையான சொல்லாட்சி. .

கள்ளம் மதித்த கபாலம் கை தனிலே மிக ஏந்தித்

துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர்

வெள்ள நகு தலை மாலை விரிசடை மேல் மிளிர்கின்ற

பிள்ளை மதிப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் பாடலில் (4.41.3) அப்பர் பிரான், செல்வராக உள்ள பெருமான், பற்கள் இல்லாத வெண்தலையினைத் தனது கையில் ஏந்திய வண்ணம் பல இல்லங்கள் சென்று பிச்சை எடுக்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். கல்=மேரு மலை; மேரு மலையை வில்லாக வளைத்து திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. இலம்=இல்லம் என்பதன் திரிபு. சொல்=வேதங்கள்: வேதங்களில் காணப்படும் சொல்லாகவும் அந்த சொற்களின் பொருளாகவும் உள்ள தன்மை

கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே

எல்லியும் பகலும் முன்னே ஏகாந்தமாக ஏத்தும்

பல்லில் வெண்தலை கையேந்திப் பல் இலம் திரியும் செல்வர்

சொல்லு நன் பொருளும் ஆவார் திருச்சோற்றுத்துறையனாரே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.58.8) அப்பர் பிரான், செல்வராகிய பெருமான் வெள்ளை விடையின் மீது ஏறியவராக பல இல்லங்கள் சென்று, தனது கையில் கபாலம் ஏந்தி பிச்சை கேட்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். பாரிடம்= பூதகணம்; பாணி செய்ய=தாளமிட; பிஞ்ஞகன்=அழகிய தலைக் கோலம் உடையவன். கார்=மேகம்; காருடைக் கண்டர்=மேகம் போன்று கரிய நிறத்தினை உடைய கழுத்தினைக் கொண்ட பெருமான்;

பேரிடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்

காருடைக் கண்டராகிக் கபாலம் ஓர் கையில் ஏந்திச்

சீருடைச் செங்கண் வெள்ளேறு ஏறிய செல்வர் நல்ல

பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே

நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (5.52) முதல் பாடலில், செல்வராக உள்ள பெருமான், பற்களற்ற ஓட்டினை ஏந்தியவராக பல இல்லங்கள் சென்று பலி ஏற்கின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். விடம் கொண்டுள்ள தன்மையால் அனைவரையும் அச்சுறுத்தும் பாம்பு நல்ல குணமுடைய நாகம் என்று இந்த பாடலில் கூறப்படுகின்றது. இறைவனின் சன்னதியில் நல்லன அல்லாத பொருட்களுக்கு இடம் ஏது.

நல்லர் நல்லதோர் நாகம் கொண்டு ஆட்டுவர்

வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்

பல் இல் ஓடு கை ஏந்திப் பலிதிரி

செல்வர் போல் திரு நாகேச்சரவரே

திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.19.7) சுந்தரர், பெருமானை, தலை ஓட்டில் பொருந்துகின்ற பிச்சையை வேண்டி இல்லங்கள் தோறும் திரிகின்ற தன்மை உடைய செல்வர் என்று கூறுகின்றார்,

தலையிடையார் பலி சென்று அகந்தோறும் திரிந்த செல்வர்

மலையுடையாள் ஒரு பாகம் வைத்தார் கல் துதைந்த நன்னீர்

அலையுடையார் சடை எட்டும் சுழல அருநடம் செய்

நிலையுடையார் உறையும் இடமாம் திருநின்றியூரே

முந்தைய பாட்டினில், தனது உள்ளத்தை அவர் கொள்ளை கொண்டதால் தனது சிந்தனை எப்போதும் அவரைப் பற்றியே இருக்கின்றது என்று கூறிய சம்பந்த நாயகி, தனது உள்ளத்தினை அவர் கவர்வதற்கு காரணமாக இருந்த அவரது பண்புகளை குறிப்பிடுகின்றார். தீயர் என்பதற்கு தீயினைத் தனது கையில் ஏந்தி நடமாடுபவர் என்றும் தீயவர் என்று இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். நல்லவருக்கு நல்லவராக இருக்கும் அவர் தீயவர்களுக்கு தீயவராக, அவர்கள் அஞ்சி நடுங்கும் வண்ணம் வீரம் உடையவராக இருப்பதை குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம். தனது உள்ளம் கவர்ந்த தலைவன் வீரம் மிகுந்தவராக இருப்பது தனக்கு சிறந்த அரணாக இருக்கும் என்பதால், அத்தகையவரை பெண்கள் விரும்புது இயற்கை தானே. ஈசர்=தலைவர்; எல்லாரும் தொழும் ஈசர் என்பதற்கு, மனிதர்கள் மட்டுமன்றி தேவர்கள் அசுரர்கள் முனிவர்களாலும் தொழப் படுபவர் என்றும், மனிதர்களன்றி மற்ற உயிர்க் கூட்டங்களாலும் தொழப்படுபவர் என்றும், பக்குவமடைந்த ஆன்மாக்கள் பக்குவம் அடையாத ஆன்மாக்கள் என்று அனைவராலும் தொழப்படுபவர் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. சொல்லார் நன்மலர் சூடினார் என்று நன்பொருளை உணர்த்தும் சொற்கள் கொண்ட தோத்திரங்கள் பாடல்கள் ஆகியவற்றை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டவர் என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது.

பொழிப்புரை:

எனது சிந்தையைத் தம்மிடம் செல்லச் செய்த அவர், பல நல்ல பண்புகள் உடையவராக, தீயவர்களுக்குத் தீயவராக, இருக்கும் அவர் பலராலும் சிறப்பாக புகழ்ந்து பேசப்படும் சொற்களுக்கு உரித்தானவர் ஆவார். பற்கள் பொருந்திய வெண்தலையினைத் தனது கையினில் ஏந்தி பல இல்லங்கள் சென்று பலி ஏற்பதால் அவரை தாழ்வாக நினைத்து விடாதீர்கள். உண்மையில் அவர் சிறந்த செல்வர். பலரும் வணங்கித் தொழும் வண்ணம் தலைவராக விளங்கும் அவரே பாற்றுறை எனப்படும் இந்த தலத்தினில் உறைகின்றார்.

பாடல் 3:

விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்

எண்ணார் வந்தென் எழில் கொண்டார்

பண்ணார் வண்டினம் பாடல் செய் பாற்றுறை

உள் நாள் நாளும் உறைவரே

விளக்கம்:

தனது சிந்தனையை எப்போதும் ஆட்கொண்டவர் என்றும் பலரும் போற்றும் வண்ணம் பல அரிய நற்பண்புகளை உடையவர் என்றும் முதல் இரண்டு பாடல்களில் தனது உள்ளம் கவர்ந்த பெருமானை குறிப்பிட்டு அறிமுகப்படுத்தும், சம்பந்தர் நாயகி, இந்த பாடலில், தனது எழிலினை, அழகை, உடல்நலத்தினை கவர்ந்த கள்வன் என்று குறிப்பிட்டு, அவனைப் பிரிந்து தான் வருந்தி ஏங்குவதை, உணர்த்துகின்றாள். தலைவனுடன் சேராத ஏக்கத்தால் வருந்தும் தலைவியின் உடல் மெலிந்தும் உடலின் மீது பசலை படிந்தும், தலைவி தனது அழகு குன்றி காணப்படுகின்றாள் என்று சொல்வது அகத்துறை இலக்கியங்களின் மரபு. அந்த மரபினைப் பின்பற்றி சம்பந்தரும், தனது நாயகி எழில் குறைந்தவளாக காணப்படுகின்றாள் என்றும் அவ்வாறு எழில் குறைந்தமைக்கு காரணம், தலைவியுடன் சேராத தலைவன் என்பதால், அவனே தலைவியின் அழகினை கொள்ளை கொண்டுவிட்டான் என்று நயமாக இங்கே கூறுகின்றார். எண்ணார்= தலைவியின் எண்ணத்தில் இருப்பவர். எப்போதும் தனது சிந்தனை தலைவன் பால் செல்கின்றது என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட, தலைவி அந்த தன்மையை மீண்டும் குறிப்பிட்டு உறுதி செய்கின்றாள். விண்ணார்=ஆகாயத்தில் பொருந்திய; நுதல்=நெற்றி என்றாலும் இங்கே சடை என்று பொருள் கொள்வது பொருத்தம். நாள் நாளும்=எப்போதும்; வந்து என் எழில் கொண்டார் என்று சொல்வதன் மூலம், பெருமான் தனது இடம் வந்து பேசியதாக நாயகி கற்பனை செய்கின்றாள். பொதுவாக நாம் அனைவரும், உலகம் மற்றும் உலகப் பொருட்கள் குறித்து கொண்டுள்ள அறிவையே சிறந்த அறிவாக கருதுகின்றோம். அத்தகைய அறிவு நமக்கு அழகு என்றும் நினைக்கின்றோம். பெருமான் பால் மிகுந்த அன்பு கொண்டுள்ள அடியார்கள், உலகப் பொருட்கள் குறித்த அறிவினை விடவும் (பசுபோதத்தை விடவும்) இறைவனைப் பற்றிய அறிவையே (பதிபோதம்) சிறந்த அறிவாக கருதுகின்றனர். இந்த மாற்றம் இறைவனது அருளால் நடைபெறுகின்றது. அழகு என்று கருதப்படும் பசுபோதத்தை கவர்ந்து கொண்ட பெருமான் அதற்கு பதிலாக பதிபோதத்தை அளித்த தன்மையே, இங்கே இறைவனைக் குறித்து ஏங்கும் ஆன்மாவிடம் உள்ளது என்ற கருத்தினை ஞானசம்பந்தர் உணர்த்துவதாக அமைந்த பாடல் என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

பிரிவு என்பது எப்போது தோன்றுகின்றது. கூடினால் தானே பிரிவு தோன்றும். தானும் பெருமானும் கூடியிருந்ததாக கற்பனை செய்யும் நாயகி, பெருமான் தன்னுடன் தொடர்ந்து கூடி இருக்காமல், பிரிந்ததால் தான் பிரிவாற்றாமையால் வருந்துவதாக இங்கே கூறுகின்றாள். வந்து என்ற சொல் பெருமானும் தானும் கூடியிருந்ததாக சம்பந்த நாயகி செய்த கற்பனையையும் எழில் கொண்டார் என்ற தொடர், பிரிந்ததால் தான் அடைந்த ஏக்கம் மற்றும் வருத்தம் தனது உடல் மெலியச் செய்தது என்பதையும் உறுதிப் படுத்துகின்றது.

பொழிப்புரை:

ஆகாயத்தில் உலவும் சந்திரனைத் தனது சடையில், பிறைச் சந்திரனாக ஏற்றுக் கொண்டவரும் எனது எண்ணத்தில் எப்போதும் நிறைந்து நிற்பவரும் ஆகிய பெருமான், நான் இருக்கும் இடம் வந்து என்னுடன் கூடியிருந்தார்; பின்னர் என்னை விட்டு பிரிந்ததால், அவரது பிரிவாற்றலைத் தாளாது எனது உடலின் எழில் குறைந்தது. இவ்வாறு எனது எழிலினைக் கவர்ந்து கொண்ட பெருமான், பண்ணுடன் கலந்த இசையுடன் பாடுவது போன்று முரலும் வண்டுகள் நிறைந்த இடமாகிய பாற்றுறை தலத்தினில் எப்போதும் உறையும் இறைவர் ஆவார்.

பாடல் 4:

பூவும் திங்கள் புனைந்த முடியினார்

ஏவின் அல்லார் எயில் எய்தார்

பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை

ஒ என் சிந்தை ஒருவரே

விளக்கம்:

ஏ=அம்பு. ஆவின்=அம்பினைக் கொண்டு; அல்லார்=சிவநெறியைச் சாராத திரிபுரத்து அரக்கர்கள்; எயில்=கோட்டை, இங்கே பறக்கும் கோட்டைகள்; ஓ=அதிசயம் நடந்ததை வெளிப்படுத்தும் குறிச்சொல்; தனது சிந்தையில் இருந்த மயக்கம் தீர்க்கப்பட்டு தனது சிந்தை முழுவதும் பரவி நின்ற பெருமான் என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடும் சம்பந்த நாயகி, தனது சிந்தனையில் பெருமான் ஒருவரே நிறைந்து நிற்கின்றார் என்று கூறுகின்றாள். இந்த பாடலில் ஒரே அம்பினால் திரிபுரத்து மூன்று கோட்டைகளை எரித்த நிகழ்ச்சி குறிப்பிடப்படுகின்றது. இதனை உணர்த்தும் திருமந்திரப்பாடல் நமது நினைவுக்கு வருகின்றது.

மூன்று மலங்களையும் எரித்து, மும்மலக் கட்டிலிருந்து நம்மை விடுவிக்கும் வல்லமை படைத்தவன் பெருமான் என்று திருமூலர் கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. முப்புரங்களை எரித்த பெருமானின் செயல் உணர்த்தும் செய்தியினை அறியாமல், பெருமான் முப்பரம் எரித்தான் என்று சொல்பவர் மூடர்கள் என்று திருமூலர் இந்த பாடலில் கூறுகின்றார். மூன்று மலங்கள் தாம் முப்புரங்கள் என்று நமக்கு உணர்த்தி, நமது மலக் கட்டுகளை சுட்டெரித்து, நம்மை மலங்களிலிருந்து விடுவிப்பவர் பெருமான் என்பதை உணர்த்தும் பாடல். முப்புரத்தை எரித்தது பண்டைய நாளில் என்பதால், அதனை அறிந்தவர் எவரும் இல்லை என்று கூறும் திருமூலர், உயிர்களின் மூன்று மலங்களையும் தொடர்ந்து இறைவன் அழித்துக் கொண்டு இருப்பதால், நாம் இதனை உணரலாம் என்று இங்கே கூறுகின்றார்.

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள்

முப்புரமாவது மும்மல காரியம்

அப்புரம் எய்தமை ஆர் அறிவாரே

இதே கருத்தினை உணர்த்தும் வண்ணம் மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்த இறைவனை தியானிக்கும் அடியார்களுக்கு வினைகள் இல்லை என்று மாறிவிடும் என்று ஞானசம்பந்தர் உணர்த்தும் பாடலையும் (2.21.9) நாம் இங்கே காண்போம்.

நல நாரணன் நான்முகன் நண்ணலுறக்

கனல் ஆனவனே கழிப்பாலை உளாய்

உன வார்கழலே தொழுது உன்னும் அவர்க்கு

இலதாம் வினை தான் எயில் எய்தவனே ,

பொழிப்புரை:

கொன்றை மலர்களையும் பிறைச் சந்திரனையும் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், சிவநெறியை விட்டு நீங்கி பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த வந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரே அம்பினைக் கொண்டு வீழ்த்தினார். அத்தகைய ஆற்றல் வாய்ந்த இறைவனே, அடியார்களின் பாவங்களைத் தீர்க்கும் குளத்தினை உடைய பாற்றுறை தலத்தினில் உறைகின்றார். அவரே எனது சிந்தையில் நிறைந்து நிற்கின்றார்.

பாடல் 5:

மாகம் தோய் மதி சூடி மகிழ்ந்து எனது

ஆகம் பொன்னிறம் ஆக்கினார்

பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை

நாகம் பூண்ட நயவரே

விளக்கம்:

மாகம்=ஆகாயம்; இறைவன் தன்னை மகிழ்ந்து ஆட்கொண்டார் என்று குறிப்பிடும் சம்பந்த நாயகி, அதே தலைவன் தன்னை விட்டு பிரிந்தமையால் தான் அடைந்த மிகுதியான வருத்தத்தால் தனது மேனி பொன்னிறமாக மாறியது என்று கூறுகின்றாள். இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் சம்பந்த நாயகி செய்த கற்பனை, இந்த பாடலில் தொடர்கின்றது. இந்த குறிப்பு நமக்கு அப்பர் பிரான் இடைமருது தலத்தின் மீது அருளிய பாடலை (5.15.6) நினைவூட்டுகின்றது. இந்த பாடல் தோழிக் கூற்றாக அமைந்துள்ள அகத்துறை பாடலாகும். தோழிகளுடன் சேர்ந்து இறைவனின் திருநாமங்களைச் சொல்லியவாறு தனது மகள் காலம் கழிப்பதைக் கண்ணுற்ற அப்பர் நாயகியின் தாய், அருகில் சென்று தோழிகள் பேசிக் கொள்வதை கவனிக்கின்றாள் போலும். அங்கு சென்றபோது தோழிகள், தனது மகளை ஏளனம் செய்தவாறு இருந்ததை காண்கின்றாள். அவர்களின் பேச்சிலிருந்து அவ்வாறு ஏளனம் செய்வதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்கின்றாள். தோழிகள் செய்த அந்த ஏளனம் பாடலாக இங்கே மிளிர்கின்றது. இதழி=கொன்றை மலர், இங்கே கொன்றை மலர் போன்ற நிறம்,

மங்கை காணக் கொடார் மணமாலையை

கங்கை காணக் கொடார் முடிக் கண்ணியை

நங்கைமீர் இடைமருதர் இந்நங்கைக்கே

எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே

தலைவியின் தோழிகள் செய்த ஏளனத்தின் காரணத்தை நாம் சற்று சிந்திக்கலாம். அப்பர் நாயகி, பெருமான் மீது கொண்டுள்ள காதல் கைகூடாததால், அந்த ஏக்கத்தில் தனது மேனி பசலை படிந்து காணப்படுகின்றாள். தலைவனின் தீண்டலுக்காக ஏங்கி நிற்கும் தலைவியின் மேனி பிரிவாற்றல் பொறுக்காத நிலையில் சற்று நிறம் மாறி இருப்பதை பசலை பூத்தது என்று இலக்கியத்தில் கூறுவது வழக்கம். அவ்வாறு பசலை பூத்த மேனி இளம் மஞ்சள் நிறத்தில் பொன் போன்று காணப்படுவதால், கொன்றை மலரின் நிறத்தினை ஒத்தது போல் தோன்றும். தலைவியின் மேனி பசலை பூத்து பொன்னிறத்தில் காட்சி அளிப்பதைக் கண்ணுற்ற தோழிகள், அந்த பொன்னிறத்து பசலையை, இறைவன் அளித்த கொன்றை மாலையாக கற்பித்து, தலைவியை கேலி செய்யும் விதமாக தோழிகள் இந்த நிறம் எப்படி வந்தது என்று ஏளனமாக விமர்சிக்கும் பாடல். ஏளனம் செய்வது போல் தோன்றினாலும், தங்களது தலைவியின் மேனியில் பூத்துள்ள பசலை நிறம், தங்களது மேனியில் தோன்றவில்லையே என்ற ஏக்கம் உள்ளூர தொனிப்பதையும் நாம் இந்த பாடலில் உணரலாம். அந்த ஏக்கம் பொறாமையாக மாறுகின்றது. அப்பர் பெருமானின் தீவிரமான பக்தி, அடுத்தவர்கள் கண்டு தாங்கள் அந்த நிலையினை இன்னும் எட்டவில்லையே என்று ஏக்கத்தில் பொறாமைப் படும் வகையில் அமைந்துள்ளதை உணர்த்துகின்றது. நாமும் அப்பர் பிரான் போன்று, அடுத்தவர் கேலி செய்வதையும் பொருட்படுத்தமால், இறைவன் பால் நாம் வைத்துள்ள அன்பினை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இறைவனின் அருள் பெற்று வாழ்வினில் உய்வடைவோமாக.

நயவர்=நலம் உடையவர்; இந்த பாடலில் பார்வதி தேவியைத் தனது உடலில் வைத்திருக்கும் பெருமான் என்று சம்பந்த நாயகி குறிப்பிடுகின்றாள். பார்வதி தேவியின் விருப்பத்தை மதித்து எப்போதும் தேவியைத் தன்னுடன் வைத்திருக்கும் பெருமான், பெண்ணாகிய தனது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்று விட்டாரே என்ற ஏக்கம் இந்த குறிப்பினில் தென்படுகின்றது. மேலும் அருளின் வடிவமாகிய அன்னையைத் தன்னுடன் வைத்திருக்கும் பெருமான், அவரது நினைவினால் ஏங்கும் தனக்கு அருள் புரியாது இருப்பது தகுமோ என்ற கேள்வியை எழுப்பும் விதமாகவும் அமைந்துள்ளது.

பொழிப்புரை:

ஆகாயத்தில் உலாவி மேகங்களில் தோயும் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டவராகிய பெருமான் என்னுடன் கூடி மகிழ்ந்திருந்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. பெருமான் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அவர் பிரிந்து சென்றதால் ஏற்பட்ட வருத்தத்தினை தாங்க முடியாமல் எனது மேனி பசலை பூத்தது. இவ்வாறு எனது பசலை பூத்து பொன்னிறமாக மாறியதற்கு அவரே காரணம். தனது உடலின் ஒரு பாகத்தில் பார்வதி தேவியைத் தாங்கும் பெருமான் அருள் வடிவமாக இருக்கின்றார். தனது திருமேனியில் பல இடங்களில் நாகம் பூண்டவராக காணப்படும் பெருமான், அனைத்து உயிர்களுக்கும் நலம் பயப்பவராக விளங்கும் பெருமான், பாற்றுறை தலத்தில் பொருந்தி உறைகின்றார்.

பாடல் 6:

போது பொன்திகழ் கொன்றை புனைமுடி

நாதர் வந்தென் நலம் கொண்டார்

பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை

வேதம் ஓதும் விகிர்தரே

விளக்கம்:

நலம்=அழகு; மூன்றாவது மற்றும் ஐந்தாவது பாடல்களில் கூறப்பட்டுள்ள கருத்து இங்கே மீண்டும் சொல்லப்பட்டு வலியுறுத்தப்படுகின்றது. விகிர்தர்=மாறுபட்ட தன்மையை உடையவர்; போது=மலர்; நாதர்=தலைவர்; சிவஞானம் மேலிட, உயிர் தனது உடலினை அலங்காரம் செய்து கொள்வதிலும், உடலைப் பேணி பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் உணவு உட்கொள்வதும் தவிர்க்கும் நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை:

பொன்னைப் போன்று திகழும் கொன்றை மலர்களைத் தனது சடைமுடியில் அணிந்து கொள்ளும் தலைவராகிய பெருமான், என்னருகில் வந்து என்னுடன் கூடியிருந்தார். என்னை விட்டு பிரிந்த போது, எனது அழகையும் கொள்ளை கொண்டு சென்று விட்டார். தொண்டர்கள் தனது திருப்பாதங்களை புகழ்ந்துப் போற்றித் தொழும் வண்ணம், பாற்றுறை தலத்தினில் வீற்றிருக்கும் பெருமான், வேதங்களை ஓதுபவராகவும், மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டவராகவும் விளங்குகின்றார்.

பாடல் 7:

வாடல் வெண்தலை சூடினர் மால்விடை

கோடல் செய்த குறிப்பினார்

பாடல் வண்டினம் பண் செயும் பாற்றுறை

ஆடல் நாகம் அசைத்தாரே

விளக்கம்:

கோடல்=கொள்ளுதல்; மால்=திருமால், மயக்கம்; விடை=இடபம், விடை பெற்றுச் செல்லுதல்; தன்னுடன் இருந்த பேசிக் கொண்டிருந்த தலைவர், அவரது வாகனமாகிய இடபம் தனதருகில் வந்த போது, அதனை வாகனமாக ஏற்றுக்கொண்டு பிரிந்து சென்றதாக கற்பனை செய்யும் குறிப்பிடும் தலைவி, தலைவன் தன்னை விட்டு பிரிவதற்கு காரணமாக இருந்த இடபத்தை தனக்கு மயக்கம் அளித்த இடபம் என்று குறிப்பிடுவது நயமாக உள்ளது. மால் விடை கோடல் செய்தவர் என்ற தொடருக்கு, உயிர்கள் கொண்டிருக்கும் மயக்கம், அறியாமை, உயிர்களிடமிருந்து விடைபெற்று செல்லும் வண்ணம் விரட்டி அடிப்பவர் என்று தத்துவப் பொருளாகவும் கொள்ளலாம்.

பொழிப்புரை:

தாருகவனத்து முனிவர்கள் ஏவிய வாடிய வெண்தலையைத் தனது கையால் பற்றித் தனது தலையில் தலைமாலையாக சூட்டிக் கொண்ட பெருமான் என்னுடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அவரது இடப வாகனம் அருகில் வரவே அதன் மீது ஏறிச் சென்ற அவர், எனது அழகையும் கவர்ந்து சென்றுவிட்டார். படம் எடுத்தாடும் பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சாக தனது விருப்பம் போன்று ஆட்டுவிக்கும் பெருமான், பாடல்கள் பலவற்றை ரீங்காரமிட்டு சிறந்த பண்களுடன் பொருத்திப் பாடும் வண்டுகள் நிறைந்த பாற்றுறை தலத்தினில் உறைகின்றார். ,

பாடல் 8:

வெவ்வ மேனியராய் வெள்ளை நீற்றினர்

எவ்வம் செய்தென் எழில் கொண்டார்

பவ்வ நஞ்சடை கண்டர் எம் பாற்றுறை

மவ்வல் சூடிய மைந்தரே

விளக்கம்:

வழக்கமாக ஞானசம்பந்தர் பதிகங்களில் காணப்படும் இராவணனுடன் தொடர்பு கொண்ட கயிலை நிகழ்ச்சியும் சமணர்கள் பற்றிய குறிப்பும் இந்த பதிகத்தின் பாடல்களில் காணப்படவில்லை. ஆனால் ஒன்பதாவது பாடலில் பிரமனுக்கும் திருமாலுக்கும் இறைவன் அழல் தூணாக காட்சியளித்த சம்பவம் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு அண்ணாமலை நிகழ்ச்சியை மட்டு குறிப்பிட்டு, மற்ற இரண்டு நிகழ்ச்சிகளை குறிப்பிடாமல் விட்ட திருஞானசம்பந்தரின் பதிகங்கள் எட்டு உள்ளன. அந்த விவரங்களை நாம் இங்கே காணலாம்.

பதிகத்தின் தொடக்கச்சொற்கள் தலம்

மண்ணுமோர் பாகம் பெரும்புலியூர்

வானார் சோதி மன்னு கானூர்

காரார் கொன்றை பாற்றுறை

ஒளிரிளம் பிறை சென்னி விளநகர்

பவனமாய் சோடையாய் திருவாரூர்

தளிரள வளரென திருவாய்மூர்

மாது ஓர் கூறு உகந்து ஆடானை

சுடு கூர் எரி மாலை வடுகூர்

மவ்வல்=காட்டு முல்லை; மைந்தர்=வலிமை உடையவர்; எவ்வம்=துன்பம்; பவ்வம் என்பது பௌவம் என்ற சொல்லின் திரிபு; எதுகை கருதி திரிந்தது. பௌவம்=கடல்; தன்னை விட்டு பிரிந்ததால் தனக்கு துன்பம் செய்த பெருமான் என்றும் சம்பந்த நாயகி குறிப்பிடுகின்றாள். அந்த துன்பத்தின் காரணமாக தான் உடல் மெலிந்து அழகு இழந்ததன் காரணத்தை, பெருமான் பால் ஏற்றி, பெருமான் தான் தனது அழகினைக் கவர்ந்தவர் என்று குற்றம் சாட்டுவதை நாம் உணரலாம். துன்பத்தை வெப்பத்தினுக்கும் இன்பத்தை குளிர்ந்த தன்மைக்கும் ஒப்பிடுவது நமது மரபு. அந்த மரபினை பின்பற்றி, பெருமான் வெப்பம் உடையவராக இருந்தார் என்று சம்பந்த நாயகி கூறுகின்றாள். சுடுகாட்டு சம்பல் வெப்பம் உடையது தானே. அவரது பிரிவு தரும் துன்பத்தையும் பொருட்படுத்தாமல், அனைத்து உயிர்களும் அவர் பால் அன்பு கொள்ளவேண்டும் என்று சம்பந்த நாயகி உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ள பாடல்.

பொழிப்புரை:

வெப்பத்தை வெளிப்படுத்தும் சுடுகாட்டுச் சாம்பலைத் தனது உடலெங்கும் பூசி, வெண்மை நிறம் படைத்த மேனியராக காட்சி தரும் பெருமான், என்னை விட்டுப் பிரிந்து சென்று எனக்கு துன்பம் இழைத்தார். அவரது பிரிவு தந்த துன்பத்தை தாங்க முடியாத எனது உடல் இளைத்து அழகினை இழந்தது; இவ்வாறு எனது உடல் அழகினைக் கொள்ளை கொண்ட பெருமான், பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்டு தனது கழுத்தினில் தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவராக விளங்குகின்றார். அவர் காட்டு முல்லைப் பூவினைத் தனது சடையில் சூடியவராக, வல்லவராக, பாற்றுறை தலத்தினில் உறைகின்றார்.

பாடல் 9:

ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி

ஆன வண்ணத்தெம் அண்ணலார்

பானலம் மலர் விம்மிய பாற்றுறை

வான வெண்பிறை மைந்தரே

விளக்கம்:

ஏனம்=பன்றி; பானல்=நீலோற்பல மலர்; பெருமான் பால் அன்பு கொண்டு அவரை அணுக வேண்டும் என்று சென்ற பாடலில் உணர்த்திய சம்பந்த நாயகி, அவர் பால் அன்பு கொள்ளாமல் தங்களது ஆற்றல் நம்பிக்கை உடையவர்களாக அவரது அடியையும் முடியையும் தேடிச் சென்ற காண முடியாமல் திகைத்த பிரமன் மற்றும் திருமாலை சுட்டிக் காட்டியும், அவர் பால் நம்பிக்கை வைத்து அவரைச் சரணடைந்த சந்திரன் பெற்ற நன்மையை சுட்டிக் காட்டியும், பெருமானை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதை உணர்த்துகின்றாள்.

பொழிப்புரை:

பன்றியாக நிலத்தை தோண்டிக் கொண்டு கீழே வெகு தூரம் சென்ற திருமாலும், அன்னமாக மேலே பறந்து வெகு தூரம் சென்ற பிரமனும், முறையே பெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண முடியாமல் சோர்ந்து, தங்களது முயற்சியினை கைவிட்டனர். இத்தகைய முயற்சியில் அவர்கள் ஈடுபடும் வண்ணம், தங்கள் இருவரில் யார் உயர்ந்தவன் என்று தங்களின் இடையே வாதம் செய்து கொண்டிருந்த திருமால் மற்றும் பிரமனின் எதிரே, நீண்ட நெடிய தீப்பிழம்பாக தோன்றியவர் சிவபெருமான். முற்றிலும் தேய்ந்து அழியும் நிலையில் ஒற்றைப் பிறைச் சந்திரனாக தன்னிடம் சரணடைந்த சந்திரனுக்கு அபயம் அளித்து, ஒற்றைப் பிறையைத் தனது சடையில் அணிந்து கொண்டவராக, அவனை அழிவிலிருந்து காப்பாற்றி மறுவாழ்வு அளித்தவர் சிவபெருமான். இத்தகைய வல்லமை உடைய அவர், நீலோற்பல மலர்கள் பூத்துக் குலுங்கும் பாற்றுறை தலத்தினில் உறைகின்றார்.

பாடல் 10:

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்

வந்தென் நன்னலம் வௌவினார்

பைந்தண் மாதவி சூழ் தரு பாற்றுறை

மைந்தர் தாம் ஓர் மணாளரே

விளக்கம்:

வேல்=மூவிலை வேல்; மைந்தர்=வல்லமை மிக்கவர்; வௌவுதல்=கவர்தல்; பெருமான் தன்னருகே வந்து தன்னுடன் இருந்ததாகவும் தன்னை விட்டு பிரிந்ததாகவும் கற்பனை செய்யும் சம்பந்த நாயகி, பிரிவாற்றாமையால் தனது உடல் மெலிந்து நலம் குன்றியதற்கு அவரே காரணம் என்று சுட்டிக் காட்டுகின்றாள். அவர் தாம் ஓர் மணாளரே என்ற தொடர் மூலம் பார்வதி தேவியை பெருமானை முன்னமே மணந்து கொண்டதை தானும் அறிவேன் என்று தலைவி இங்கே உணர்த்துகின்றாள். பல உயிர்களுக்கும் பதியாக இருக்கும் தன்மையால் பசுபதி என்ற பெயரினை உடைய பெருமான், எண்ணற்ற உயிர்களை ஆட்கொண்டு, சாயுஜ்ஜிய பதவி அளித்து தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளான் என்பதை குறிப்பிடும் விதமாக, மேலும் மேலும் பக்குவமடைந்த உயிர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்வதில் பெருவிருப்பம் அடையும் பெருமான் என்ற கருத்தினை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது என்றும் விளக்கம் கூறுவார்கள்.

பொழிப்புரை:

நெருப்பினில் இடப்பட்டு வெந்த திருநீற்றினை தனது உடல் முழுவதும் அணிந்தவரும், மூவிலைச் சூலம் ஏந்தியவரும், தனது மார்பினில் முப்புரி நூல் அணிந்தவரும் ஆகிய பெருமான், என்னுடன் வந்து கூடியிருந்தார். யாது காரணம் பற்றியோ அவர் என்னை விட்டு பிரிந்து விடவே, பிரிவுத் துன்பத்தில் மூழ்கிய எனது உடல் நலம் குன்றியது. குளிர்ச்சியும் பசுமையும் நிறைந்த குருக்கத்தி மலர்கள் சூழ்ந்த பாற்றுறை தலத்தில் இருப்பவரும் வல்லமை மிகுந்தவரும் ஆகிய பெருமான் உமையன்னையின் மணவாளர் ஆவார்.

பாடல் 11:

பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய

பத்து நூறு பெயரனைப்

பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ்

பத்தும் பாடி பரவுமே

விளக்கம்:

பத்தர் என்ற சொல்லுக்கு பக்தர், பத்து சிறந்த குணங்களை உடையவர் என்று இரு விதமாக பொருள் கொள்ளலாம். சிவனடியார்களிடம் இருக்க வேண்டிய குணங்களை அக குணங்கள் என்றும் புறக் குணங்கள் என்றும் பிரிக்கின்றனர்.. பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும். மன்னிய=நிலையாக பொருந்திய;

பொழிப்புரை:

சிவனடியார்களுக்கு உரிய சிறந்த பத்து குணங்களைக் கொண்டவர்கள் நிலையாக உறையும் பாற்றுறை தலத்தில் உறைபவனும், எண்ணற்ற திருநாமங்களை உடையவனும் ஆகிய பெருமானைப் புகழ்ந்து, அவனது அடியானாகிய ஞானசம்பந்தன் பாடிய இனிய தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாடி, பெருமானை புகழ்ந்து பணிவீர்களாக.

முடிவுரை:

ஆன்மாவின் நிலை, பக்குவம் அடைந்த ஆன்மாவின் நிலை இந்த பதிகத்தின் பாடல்களில் சொல்லப் படுவதாக பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். பக்குவம் அடைந்த ஆன்மாக்களின் சிந்தனை எப்போதும் இறைவன் பால் உள்ள தன்மை முதல் பாடலில் கூறப்பட்டுள்ளது. இரண்டாவது பாடலில் அத்தகைய ஆன்மாக்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களைத் தான் ஏந்திவரும் பிச்சைப் பாத்திரத்தில் பிச்சையாக இட்டு உய்வினை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் என்றும் ஊரெங்கும் திரிந்து பெருமான் பலியேற்பது குறிப்பிடப் படுகின்றது. மேலும் அத்தகைய ஆன்மாக்களின் பசுபோதத்தை பறித்துக் கொள்ளும் இறைவன், பதிபோதத்தை அளிக்கின்றான் என்று மூன்றாவது பாடலில் விளக்கப் படுகின்றது. அத்தகைய ஆன்மாக்களின் சிந்தனை வேறெங்கும் செல்லாத வண்ணம் அந்த ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் சுட்டெரித்த இறைவன், அந்த ஆன்மாக்களின் தன்னையன்றி வேறெதையும் சிந்திக்காத வண்ணம் பாதுகாக்கின்றான் என்று நான்காவது பாடலில் கூறப்படுகின்றது. ஐந்தாவது பாடல், இறைவன் பக்குவமடைந்த உயிர்களைத் தன்னுடன் முக்தி உலகினில் பொருத்தி இணைத்துக் கொண்டு, அந்த உயிர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி தானும் மகிழ்ச்சி அடைகின்றான் என்றும் அருட்சக்தியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ள இறைவன், எப்போதும் உயிர்களுக்கு அருள் புரியத் தயாராக இருக்கின்றான் என்பதையும், உயிர்கள் அந்த வாய்ப்பினை பயன்படுத்துக் கொள்வதற்கு முயற்சி செய்யவேண்டும் என்றும் உணர்த்தப் படுகின்றது. தன்னை விரும்பும் உயிர்களுடன் கலந்திருந்து தெவிட்டாத இன்பம் அளிப்பதால், அந்த உயிர்கள், பெருமான் தங்களை விட்டு பிரிய நேரிட்டால் வருத்தம் அடைகின்றன என்று குறிப்பிடுவதன் மூலம், பெருமானை விட்டு என்றும் தாங்கள் பிரியாது இருப்பதற்கான முயற்சிகளை உயிர்கள் எடுக்கவேண்டும் என்பது ஆறாவது பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. உயிர்கள் கொண்டுள்ள மயக்கம், அறியாமை ஆகியவை உயிர்களிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் வண்ணம் அவற்றை விரட்டி அடிப்பவர் சிவபெருமான் என்று ஏழாவது பாடல் உணர்த்துகின்றது. நீறணிந்த மேனியர் என்று குறிப்பிட்டு, அவர் ஒருவர் தான் என்றும் அழியாமல் நிலையாக இருக்கும் தன்மை படைத்தவர் என்பதை உணர்த்தி, நாம் ஏன் அவரை நமது தலைவராக ஏற்றுக் கொண்டு அவர் பால் அன்பு செலுத்தவேண்டும் என்பது பதிகத்தின் எட்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமான் பால் அன்பு கொள்ளாமல் தங்களது ஆற்றல் நம்பிக்கை உடையவர்களாக அவரது அடியையும் முடியையும் தேடிச் சென்ற காண முடியாமல் திகைத்த பிரமன் மற்றும் திருமாலை சுட்டிக் காட்டியும், அவர் பால் நம்பிக்கை வைத்து அவரைச் சரணடைந்த சந்திரன் பெற்ற நன்மையை சுட்டிக் காட்டியும், பெருமானை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதை பதிகத்தின் ஒன்பதாவது பாடல் உணர்த்துகின்றது. உள்ளத்தினில் பெருமானது நினைவுகளை சுமந்து, சிவானந்தத்தில் மூழ்கி திளைத்த உயிர், அத்தகைய ஆனந்தம் இன்றி வாழவே முடியாது என்ற தன்மையை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது பதிகத்தின் பத்தாவது பாடல். பல உயிர்களுக்கும் பதியாக இருக்கும் தன்மையால் பசுபதி என்ற பெயரினை உடைய பெருமான், எண்ணற்ற உயிர்களை ஆட்கொண்டு, சாயுஜ்ஜிய பதவி அளித்து தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளான் என்பதை குறிப்பிடும் விதமாக, மேலும் மேலும் பக்குவமடைந்த உயிர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்வதில் பெருவிருப்பம் அடையும் பெருமான் என்ற கருத்தினை உணர்த்தும் விதமாகவும் இந்த பதிகத்தின் பத்தாவது பாடல் அமைந்துள்ளது. பெருமானது உயர்ந்த பண்புகளையும், உயிர்களை ஆட்கொண்டு உயிர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்வதில் பெருமானுக்கு உள்ள ஆர்வத்தினையும், அந்த ஆர்வத்தினை பயன்படுத்திக் கொண்டு பெருமானுடன் இணைவதற்கான முயற்சிகளை உயிர்கள் மேற்கொள்ளவேண்டும் என்று இந்த பதிகத்தின் பாடல்களில் உணர்த்திய ஞானசம்பந்தருக்கு, தனியாக இந்த பதிகத்தினை ஓதுவதால் அடியார்கள் பெறுகின்ற பலன் இன்ன தன்மையது என்று குறிப்பிட மனம் வரவில்லை போலும். மீண்டும் மீண்டும் இந்த பதிகத்தின் பாடல்களை ஓதி, பெருமானின் புகழ் மற்றும் கருணையை குறிப்பிட்டு, அவன்பால் வைத்துள்ள அன்பினை பெருக்கிக் கொள்ளுமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். நாமும், சம்பந்த நாயகி அடைந்துள்ள பக்குவ நிலையினை அடைய இயலாது என்பதை உணர்ந்தவர்களாக இருப்பினும், அவன் பால் நாம் வைத்துள்ள அன்பினை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு, எப்போது அவனைப் பற்றிய சிந்தனையுடன் நமது வாழ்வினைக் கழித்து, இம்மையிலும் மறுமையிலும் அவனது அருளினைப் பெறுவதற்கு தகுதி படைத்தவர்களாக மாறுவோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Kaaraar Konrai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

காரார் கொன்றை


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: