Go Back

22/03/21

நூலடைந்த கொள்கையாலே


நூலடைந்த கொள்கையாலே- பின்னணி


புறம்பயம் சென்று பொருளாழம் மிகுந்த பதிகம், மறம்பய மலைந்தவர் என்று தொடங்கும் பதிகம் — 2.30) பாடி இறைவனைத் தொழுத திருஞானசம்பந்தர், அங்கிருந்து புறப்பட்டு சேய்ஞலூர் தலம் செல்கின்றார். அவ்வாறு செல்லும் வழியில் திருவியலூர் மற்றும் திருந்துதேவன்குடி ஆகிய தலங்கள் சென்றதாகவும் கூறுவார்கள். சேய்ஞலூர் தலத்து அந்தணர்கள் ஞானசம்பந்தர் வருவதை முன்னமே அறிந்தவர்களாய், மறையொலி முழங்க மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, அவரை ஊரெல்லையில் எதிர்கொண்டு வரவேற்றனர். திருஞானசம்பந்தரும், பெருமானின் தலை சிறந்த தொண்டர்களின் தலைவராக விளங்கி அவரால் கொன்றை மாலை சூட்டப் பெற்ற சண்டீசர் வாழ்ந்த பதி என்ற சிறப்பினை கருதி, சிவிகையிலிருந்து கீழே இறங்கி தலத்தை வணங்கினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். தொடையல்=மாலை; நாயனார் என்ற சொல் சண்டீசரை குறிப்பிடுகின்றது. யானம்=சிவிகை; நித்திலம்=முத்து; பிள்ளையார்=இறைவன் சண்டீசரை தனது மகனாக ஏற்றுக் கொண்டமை குறிப்பிடும் வகையில் சேக்கிழார் பிள்ளையார் என்று கூறுகின்றார். பான்மை=நியதி;

ஞானசம்பந்தரும் நாயனார் சடைத்

தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார்

பான்மையில் வரும் பதி என்று நித்தில

யானம் முன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினர்

திருஞான சம்பந்தர் வருகையை, சண்டீசர் மீண்டும் தங்களது ஊருக்கு வந்ததாக கருதிய மக்கள், மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆடியும் பாடியும் வரவேற்ற மக்கள், புனித நீரினை தெளித்தும் பொரிகளையும் மலர்களையும் தூவியும், கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக அவரை வரவேற்றனர். மிகுந்த அன்புடன் திருக்கோயிலை அடைந்த சம்பந்தர், பெருமானின் திருவடிகளை வணங்கிய பின்னர் பதிகம் பாடிய போது சண்டீசரின் செய்கைக்கு இறைவன் பரிசு அளித்ததை குறிப்பிட்டார் என்று சேக்கிழார் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களிலும் பெருமான் புரிந்த வியத்தகு கருணைச் செயல்களை குறிப்பிட்டு பெருமானை சம்பந்தர் பணிகின்றார். இந்த தன்மையை கருணை போற்றுவார் என்று சேக்கிழார் குறிப்பிடும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

வேதியர் சேய்ஞலூர் விமலர் தம் கழல்

காதலில் பணிந்து அவர் கருணை போற்றுவார்

தாதை தாள் தடிந்த சண்டீசப் பிள்ளையார்

பாதகப் பயன் பரிசு பாடினார்

சண்டீசரின் தந்தை பிறப்பாலும் ஒழுக்கத்தாலும் வேதியராகத் திகழ்ந்தவர். எனவே ஒரு அந்தணருக்கு, காலை வெட்டி தீங்கு செய்தமையால் பிரம்மஹத்தி தோஷமும் தந்தை என்பதால் பித்ருஹத்தி தோஷமும் சண்டீசரை பற்றியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்ததது சிவபூஜைக்கு நேரவிருந்த இடையூறை தடுக்கும் நோக்கத்துடன் என்பதால் பாதகச் செயலாக கருதப் படவில்லை. தந்தையின் காலை வெட்டியிருந்தாலும் எந்த நோக்கத்திற்காக வெட்டினார் என்பதைக் சிந்திக்கும்போது தான் நாம் சண்டீசரின் பெருமையை உணர முடியம். சிவபூஜைக்கு இடைஞ்சல் செய்ததைக் கண்டு பொறாத அரும் குணம் என்பதால் இவரது செய்கை போற்றப் பட்டது. இதனை நேர்த்தியாக அப்பர் பிரான் ஆரூர் பதிகத்தில் கூறுகிறார். சிவனின் தியானத்தைக் கலைக்க முயற்சி செய்தவன் மன்மதன், அவன் பயன்படுத்தியது மென்பொருள் ஆகிய கரும்பு வில் தான். இருந்தாலும் அவனது நோக்கம் கருதி அவனுக்கு தண்டனையும் சண்டீசரின் நோக்கம் கருதி அவருக்கு புகழும் பதவியும் அளித்தமை குறிக்கும் பாடல் இது தான்.

கரும்பு பிடித்தவர் காயப்பட்டார் அங்கு ஓர் கோடலியால்

இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார் இவர்கள் நிற்க

அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த

பெம்மான்

விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை

வேண்டுவனே

மாணிக்க வாசகரும் தனது தோணோக்கம் பதிகத்தில் சிவபூசனைக்கு இடையூறு செய்த தந்தையின் கால்களை வெட்டியது தவறான செய்கை அல்ல என்று கூறுவது இங்கு நினைவுறத் தக்கது. திருமூலரும், தனது திருமந்திரப் பாடலில் சண்டீசர் குறித்து பாடல் இயற்றி இருக்கின்றார். கண்ணப்பர், சண்டீசர் இருவருமே, திருமூலராலும், மணிவாசகப் பெருமானாலும் குறிப்பிடப்படும் பேறு பெற்ற அடியவர்களாக திகழ்கின்றனர். சோறு=முக்தி உலகம்;

தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்

சாதியும் வேதியன் தாதை தனைத் தாள் இரண்டும்

சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்

பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்

பாதகத்திற்கு பரிசு என்று சேக்கிழார் குறிப்பிடுவது நமக்கு திருப்பல்லாண்டு பதிகத்தின் பத்தாவது பாடலை நினைவூட்டுகின்றது. அண்டம்=வானுலகம்; போனகம்=தான் உண்டு எஞ்சிய உணவு; பொன்=அழகு; தாமம்=கொன்றை மாலை;

தாதையைத் தாள் அற வீசிய சண்டிக்கு அண்டத்தொடும்

உடனே

பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமும்

அருளிச்

சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு

நாயகமும்

பாதகத்துக்கே பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே

தந்தையின் கால்களை வெட்டிய சண்டீசர் என்று மேற்குறித்த பாடல்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும் பெரிய புராணத்தில் சண்டீசர் வரலாறு ஒரு சிறிய மாறுதலுடன் கொடுக்கப் பட்டுள்ளது. தான் மணலில் பிடித்து வழிபட்டு வந்த இலிங்கத்திற்கு நீராட்டும் பொருட்டு பால் வைத்திருந்த பாற்குடங்களை காலால் இடறிய எச்சத்தத்தன் செய்கையால் பால் கீழே சிந்தியது என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். பால் சிந்தியதைக் கண்ட விசாரசருமன் (சண்டீசரின் இயற்பெயர்) மேலும் அத்தகைய இழிசெயல்கள் நடப்பதை தடுக்கும் நோக்கத்துடன், தனது தந்தை என்று அறிந்த பின்னரும், அருகில் இருந்த கொம்பு ஒன்றினை எடுத்து தந்தையின் கால்கள் மீது வீசினார். ஆனால் அந்த கொம்பு மழு ஆயுதமாக மாறி அவரது தந்தையின் கால்களை வெட்டியது. எனவே கொம்பு மழு ஆயுதமாக மாறியது இறைவன் திருவுள்ளம் பற்றியதால் என்பதையும் தனது தந்தையின் கால்களை வெட்டுவது சண்டீசரின் நோக்கம் அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சி சிவபூஜைக்கு இடையூறு செய்பவர்களுக்கு இறைவன் உடனே தண்டனை அளிப்பார் என்பதையும் உணர்த்துகின்றது. தான் செய்து வந்த பூஜைக்கு ஏற்பட்ட இடையூறு நீங்கிய பின்னர், தனது வழிபாட்டினைத் தொடர்ந்து செய்வதற்கு விசாரசருமன் முனையும் போது இறைவன், விடை மேல் அமர்ந்தவராய் தேவியோடும் காட்சி கொடுத்தார். பெருமானைக் கண்ட விசாரசருமர் அவரது திருப்பாதங்களில் விழுந்து வணங்க, பெருமான் அவரை எடுத்து நோக்கி என் பொருட்டு உனது தந்தை விழுமாறு கொம்பு எறிந்த உமக்கு அடுத்த தாதை இனியுனக்கு நாம் என்று சொல்லியவாறு, சிறுவனை எடுத்து உச்சி மோந்து மகிழ்ந்தார். இவ்வாறு பெருமானே நீ எனது மகன் என்று சண்டீசரை அழைத்தமை உணர்த்தும் பொருட்டு பெரிய புராணப் பாடலில் பிள்ளையார் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

தொடுத்த இதழி சூழ் சடையார் துணைத் தாள் நிழல் கீழ்

விழுந்தவரை

எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ

எறிந்தாய்

அடுத்த தாதை இனியுனக்கு நாம் என்று அருள் செய்து

அணைத்து அருளி.

மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள

வாழ்க அந்தணர் வானவர் எனத் தொடங்கும் பதிகத்தில் ஒரு பாடலில் (3.54.7) சண்டீசரைப் பற்றி குறிப்பிடும் போது, சிவனின் பூஜைக்கு இடையூறு செய்த கால் வெட்டப்பட்டது என சம்பந்தர் கூறுகிறார். சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப் போற்றி, நல்ல பசுவின் பால் கொண்டு மணல் இலிங்கத்திற்கு திருமுழுக்காட்ட, அதனைக் கண்ட அவரது தந்தை பால் வீணாக்கப்படுவதை கண்டு பொறுக்காமல் கோபம் கொண்டு பாற்குடங்களை இடற, சிவபூஜைக்கு இடையூறு செய்த கால் மீது அருகிலுள்ள கோல் கொண்டு சண்டீசர் வீசியெறிய, அந்த கோல் மழு ஆயுதமாக மாறி அவரது தந்தையின் காலை வெட்ட, நடந்ததைக் கண்டு மகிழ்ந்த முக்கண் பெருமான் சண்டீசருக்கு தனது திருவடிபேற்றினை அருளியதை அனைவரும் அறிவோம் அல்லவா என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார்

கடி சேர்ந்த போது மலர் ஆன கை கொண்டு நல்ல

படி சேர்ந்த பால் கொண்டு அங்கு ஆட்டிடத் தாதை பண்டு

முடி சேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி

அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொலக் கேட்டும் அன்றே

மகனாக வரித்துக் கொண்ட பின்னர் அந்த மகன் உண்பதற்கும் உடுப்பதற்கும் வேண்டிய தேவைகளை நிறைவேற்றுவது தந்தையின் கடமை அல்லவா. எனவே தான் அடுத்து, நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காக என்று பெருமான் கூறியதையும் நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். இன்றும் நாம் சிவாலயங்களில் பெருமானின் சன்னதிக்கு இடது புறத்தில் சண்டீசர் சன்னதி இருப்பதை காணலாம். தனக்கு வரும் பொருட்களை பெருமான், தனது வலது கையால் சண்டீசர் இருக்கும் பக்கம் தள்ளி, தந்தையாகிய தனது கடமையை செய்வதாக ஐதீகம். இதனை உணர்த்தும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்து

நாம்

உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச்

சண்டீசனுமாம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொற்றட

முடிக்குத்

துண்ட மதி சேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்

இந்த தலம் கும்பகோணம் திருப்பனந்தாள் சாலையில் ஆடுதுறைக்கு அருகே அமைந்துள்ள தலம். சேங்கனூர் என்று இந்நாளில் அழைக்கப்படுகின்றது. கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தலம். இறைவன் பெயர் சத்யகிரீசுவரர்; இறைவியின் பெயர் சகிதேவி; இந்த தலத்து இறைவன் குறித்து திருஞானசம்பந்தர் பாடிய இந்த ஒரு பதிகமே இதுவரை கிடைத்துள்ளது. சிவபிரானின் குழந்தை (சேய்) ஆகிய முருகப்பெருமான் வழிபட்ட தலம் என்பதால் சேய்நல்லூர் (சேய் + நல்லூர்) என்ற பெயர் பெற்றது. இந்த பெயர் நாளடைவில் சேய்ஞலூர் என்று மருவி விட்டது. முருகப்பெருமான் கயிலை மலையிலிருந்து வீரமகேந்திரபுரம் செல்லும் வழியில் மண்ணியாறு தாண்டிச் செல்லும் போது மாலை நேரம் ஆகியதால், இங்கே படைவீடு அமைத்து தங்கியதாக கந்த புராணம் குறிப்பிடுகின்றது. சேக்கிழாரும் இந்த தகவலை பெரிய புராணத்தில் தருகின்றார்.

பூந்தண் பொன்னி எந்நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு

வாய்ந்த மண்ணித் தென் கரையில் மன்ன முன்னாள் வரை கிழிய

ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை

கடக்கும்

சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வச் சேய்ஞலூர்

பாடல் 1:

நூல் அடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு

மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை

ஆல் அடைந்த நீழல் மேவி அருமறை சொன்னது என்னே

சேல் அடைந்த தண்கழனி சேய்ஞலூர் மேயவனே

விளக்கம்:

நூல்=வேதம் மற்றும் சிவ ஆகமங்கள்; மால்=ஐயப்பாடு; மால் என்ற சொல்லுக்கு காதல் மயக்கம் என்று ஒரு பொருளும் உள்ளது. என்னே, வியப்புக் குறிச்சொல். பெருமானின் கருணைத் திறத்தினை வியந்து சொல்லியது. நல்லறம்=சிவதன்மம்; நால்வர்=சனந்தனர், சனத்குமாரர், சனாதனர், சனகர் ஆகியோர்; பிரமனின் மனதிலிருந்து தோன்றியவர்கள் என்பதால் மானச புத்திரர்கள் என்று கூறுவார்கள்.

பொழிப்புரை:

வேதங்கள் ஆகமங்கள் ஆகிய பல நூல்களைக் கற்ற பின்னரும், பெருமானின் திருவடியை கூறும் மார்க்கம் தெளிவாக புரியாமல், தங்களது அஞ்ஞானம் நீங்காததால், உண்மை யாது என்று புரிந்து கொள்ள முடியாமல் மயக்க நிலையில் இருந்த சனகர் சனாதனர் சனந்தனர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களும் தங்களது ஐயப்பட்டினை விளக்க வேண்டும் என்று பெருமானிடம் வேண்ட, அதற்கு இசைந்த பெருமானும் ஆலமரத்தின் நிழலில் பொருந்தி அமர்ந்தவாறு அரிய மறைகளின் பொருளை விளக்கிய அவரது கருணைத் திறம் மிகவும் வியக்கத்தக்கது. அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் சேல் மீன்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான்.

பாடல் 2:

நீறு அடைந்த மேனியின் கண் நேரிழையாள் ஒரு பால்

கூறு அடைந்த கொள்கை அன்றிக் கோல வளர் சடை மேல்

ஆறு அடைந்த திங்கள் சூடி அரவம் அணிந்து என்னே

சேறு அடைந்த தண்கழனி சேய்ஞலூர் மேயவனே

விளக்கம்:

சேறு அடைந்த என்று தலத்தின் நீர்வளம் குறிப்பிடப்படுகின்றது. நேரிழை=அழகிய அணிகலன்களை அணிந்தவள். இங்கே பார்வதி தேவி; கோலம்=அழகு. கங்கை நங்கை பிறைச் சந்திரன் மற்றும் பாம்பு ஆகிய மூன்றையும் ஒருங்கே சடையில் வைத்துள்ள தன்மை வியப்புக்கு உரியது என்று சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் திருவாரூர் பாடல் (4.53.2) ஒன்றினை நினைவூட்டுகின்றது. நங்கை=பார்வதி தேவி: மஞ்ஞை=மயில்: வேழம்=யானை: ஆகம்=உடல்: நிமிர்தல் செய்யா=நிமிர்ந்து நில்லாமல் வளைந்து காணப்படும் பிறை கொண்ட சந்திரன்: உரிவை= தோலாடை:

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று

வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து

பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சி

ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே

சடையில் சந்திரனைக் கண்ட நாகம், சந்திரனை விழுங்கக் கருதி மிகவும் வேகமாக வருகின்றது அந்த சமயத்தில், மயில் போன்ற சாயலை உடைய கங்கையை கண்டு, தன்னைக் கொத்தித் தின்ன மயில் வந்து விட்டதோ என்ற அச்சத்தில், தனது வேகத்தைத் தவிர்க்கின்றது. இதனிடையே, பாம்பினைக் கண்டு பயந்த, சந்திரன் பெருமான் அணிந்திருக்கும் யானைத் தோலின் அடியில் புகுந்து கொள்வதும், பாம்பு சென்று விட்டதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அடிக்கடி வெளியே எட்டிப் பார்கின்றது. அவ்வாறு எட்டிப் பார்க்கும் பொழுது, சந்திரன் முழுமையாகத் தெரியாமல், மேகத்தின் இடையே தோன்றும் மின்னல் கீற்று போன்று காணப்படுவதால், மின்னல் என்று நினைத்து, பாம்பு அடங்கி விடுகின்றது. வானத்தில் மின்னல் தோன்றினால், மயில்கள் மிகவும் மகிழ்ந்து நடமாடும். எனவே மின்னலும் இடியும், மயில்கள் வெளியே வந்து நடமாடும் செய்கைக்கு அறிகுறி என்று கருதி பாம்பு ஒதுங்கியது என்று உணர்த்துகின்றார். இயல்பாக பாம்பினைக் காணும் எவரும் அச்சம் கொள்வார்கள் அல்லவா. அது போன்று உமையும் அச்சம் கொண்டதாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்டு இருத்தல் தான், இவர்கள் மூவரும் அடங்கிக் கிடக்கும் நிலையை ஏற்படுத்தியது என்று நகைச்சுவையாக கூறினாலும், இறைவனின் சன்னதியில் பகைமை உணர்ச்சி நீங்கப் பெற்று, கங்கை எனும் நங்கை, பாம்பு, சந்திரன் ஆகியவை பகையின்றி சிவபெருமானின் சடையில் உலாவும் தன்மையை நமக்கு உணர்த்துகின்றார்

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் (4.10.8), பெருமானது சடையில் உள்ள பொருட்களின் மீது தனது கற்பனையை ஏற்றி, அந்த காட்சியைக் காணும் தலைமாலை நகைக்கின்றது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபெருமானின் சடையில் உள்ள பாம்பு அசைகின்றது: சடையில் அடக்கி வைக்கப்பட்டுள்ள கங்கை அசைகின்றது: அந்த கங்கை நீரினில் தோய்ந்த சந்திரன் ஆடுகின்றது. அவரது தலை மாலையில் உள்ள மண்டையோடு தனது பற்களை இழந்த நிலையில் சிரிப்பது போன்று காட்சி அளிக்கின்றது. இந்த காட்சிகளைக் காணும் அப்பர் பிரானின் கற்பனை விரிகின்றது. அந்த கற்பனைக் காட்சி தான் இந்த பாடலில் விளக்கப் படுகின்றது.

கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுறக்

கிடந்த பாம்பு அவளையோர் மயில் என்று ஐயுறக்

கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே

கிடந்தது தான் நகு தலை கெடில வாணரே

சிவபெருமானின் சடையில் உள்ள பாம்பு அசைவதைக் கண்டு, அருகில் இருக்கும் கங்கை நங்கை அச்சம் அடைகின்றாள். அச்சத்தால் அவள் உடல் நெளியவே, அவளது கரிய கூந்தல் ஆடுவதைக் கண்ட பாம்பு, அவளை மயில் என்று தவறாக நினைத்து பயப்படுகின்றது. தங்களது பகைமையை அடக்கி, தன்னையும் பாம்பையும் தனது சடையில் இறைவன் ஏற்றதால் அந்நாள் வரை அச்சமின்றி சடையில் உலாவிய சந்திரன், தனது பகைவனாகிய பாம்பு அசைவதைக் கண்டு, ஒரு கால் பாம்பு தன்னை விழுங்குவதற்காக வருகின்றதோ என்று பயம் கொள்கின்றது. இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொள்வதைக் கண்ட, தலை மாலையில் உள்ள மண்டையோடு சிரிக்கின்றது. இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்ட சூழ்நிலையை உருவாக்கி, அந்த சூழ்நிலையைக் கண்டு நகைக்கும் மண்டையோட்டினை மாலையாக அணிந்துள்ள கெடில வாணரின் தோற்றம் மிகவும் வியப்புக்கு உரியது என்பதே மேற்கண்ட அப்பர் பிரானின் பாடலின் திரண்ட கருத்து.

பொழிப்புரை:

திருநீறு பூசப்பட்ட திருமேனியின் ஒரு பாகத்தில் அழகிய அணிகலன்களை அணிந்துள்ள உமை அன்னையை தனது உடலில் ஏற்றுக் கொள்வதை ஒரு கொள்கையாகக் கொண்டு அதனை கடைப்பிடிக்கும் பெருமான் அழகாக நீண்டு வளர்ந்த சடையில் கங்கை ஆற்றினையும் தன்னிடம் சரண் அடைந்துள்ள பிறைச் சந்திரனையும் பாம்பினையும், இந்த மூன்றினுக்கு இடையே இருந்த பகையினைத் தீர்த்து ஒருங்கே சூடிக் கொண்டுள்ள தன்மை பெரிதும் வியப்புக்கு உரியது. இத்தகைய பெருமான் சேறு நிறைந்து குளிர்ந்து காணப்படும் வயல்கள் உடைய சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான்.

பாடல் 3:

ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து

கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே

மான் அடைந்த நோக்கி காண மகிழ்ந்து எரியாடல் என்னே

தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே

விளக்கம்:

நோக்கி=நோக்கம் உடையவள்; பொதுவாக மருண்ட பார்வை பெண்களுக்கு அழகினை அளிக்கும் என்று கூறுவார்கள். மருண்ட பார்வைக்கு மானின் பார்வையை உதாரணமாக சொல்வது இலக்கிய மரபு. தருமபுர ஆதீனத்தின் வலைத்தளத்தில் மான்னோக்கி என்ற தொடருக்கு சுவையான விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. மான் பார்வையை கற்றுக் கொள்வதற்காக உமையன்னை அருகே வந்து, அன்னையின் பார்வை அழகினை பார்த்தது கற்றுக் கொள்வதாக உரையாசிரியர் கூறுகின்றார். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகியவை பெண்களுக்கு உரிய நான்கு சிறந்த குணங்களாக பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன. வரவிருக்கும் அபாயம் குறித்தும் எந்த அவப்பெயரும் தனக்கு தனது வாழ்வினில் வாராமல் வாழவேண்டும் என்ற எண்ணத்தினாலும் பெண்களுக்கு ஏற்படும் ஒருவகையான மனக் கலக்கம் அச்சம் என்று சொல்லப்படுகின்றது. தனக்கு தெரிந்த விஷயத்தையும் நாலு பேர் முன்னிலையில் தனக்கு தெரிந்ததாக காட்டிக் கொள்ளாமல் அடக்கமாக இருத்தல் மடம் என்று சொல்லப்படுகின்றது. வெட்கம் என்ற பண்பே நாணம் என்று சொல்லப் படுகின்றது. கணவனைத் தவிர்த்து வேறொரு ஆண்மகனின் தொடுதல் ஏற்படுத்தும் ஒருவகையான கூச்சம் பயிர்ப்பு என்று சொல்லப் படுகின்றது.

பேய்களுடன், நடனம் ஆடுவது, காட்டினில் நடனம் ஆடுவது, கையினில் தீப்பிழம்பு ஏந்தி நடனம் ஆடுவது ஆகிய மூன்றுமே எவருக்கும் அச்சமூட்டும் காட்சிகள் ஆகும். அத்தகைய காட்சியினை பொதுவாக மென்மையான உள்ளம் கொண்ட பெண்கள் காண்பது வியப்புக்கு உரியது. மேலும் அந்த பெண்மணியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த நடனத்தை காண்பது பெரும் வியப்பினை ஏற்படுத்தும் அல்லவா. இறைவனின் நடனத்தைக் கண்டு மகிழ்ச்சி அடையும் அன்னைக்கு எந்த சூழ்நிலையும் தடையாக இருக்க முடியாது அல்லவா. இருப்பினும் அச்சமூட்டும் சூழ்நிலையில் நடனம் ஆடுவது ஏன் என்ற கேள்வியை சம்பந்தர் இங்கே பெருமானை நோக்கி கேட்கின்றார்.

பொழிப்புரை:

உலர்ந்து வெண்ணிற நிறத்துடன் இருப்பதும் தசைகள் ஒட்டி இருப்பதும் ஆகிய பிரமனின் தலையினை கையில் ஏந்தியவாறு பலி ஏற்பதற்கு பல இடங்களில் திரிவதும். காட்டில் வாழும் பேய்கள் மற்றும் பூத கணங்களோடு கலந்து நடனமாடுவதும், அந்த நடனத்தை மருண்ட பார்வையினை உடைய பார்வதி அன்னை காணும் வண்ணம் ஆடுவதும், அவ்வாறு நடனம் ஆடும் சமயத்தில் தனது உள்ளங்கையினில் தீப்பிழம்பு ஏந்திக் கொண்டு மகிழ்ச்சியுடன் ஆடுவதும் ஆகிய பொதுவாக வேறு எவரும் செய்யாத செயல்களை பெருமானே நீ செய்வதன் காரணம் யாது. இவ்வாறு வியப்புறும் வண்ணம் நடனம் ஆடும் பெருமான் தேன் நிறைந்த மலர்கள் கொண்ட சோலைகள் நிறைந்த சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான்.

பாடல் 4:

வீண் அடைந்த மும்மதிலும் வில் மலையா அரவின்

நாண் அடைந்த வெஞ்சரத்தால் நல் எரி ஊட்டல் என்னே

பாண் அடைந்த வண்டு பாடும் பைம்பொழில் சூழ்ந்து அழகார்

சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே

விளக்கம்:

பாண்=இசை; சேண்=ஆகாயம். வீண் அடைந்த=பயனற்றுப் போன; திரிபுரத்தவர்களின் கோட்டைகளை எரித்து அவர்கள் செய்து வந்த தீவினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தமையால் நல்லெரி என்று சம்பந்தர் கூறுகின்றார். அந்நாள் வரை எவரும் நினைத்தும் பார்க்காத செயலை, மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் வீழ்த்துவது என்ற செயலை, பெருமான் ஒரு நொடியில் செய்து முடித்தமை வியப்பு ஊட்டும் செயலாக இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. இந்த மூன்று கோட்டைகளும் ஒரே நேர்கோட்டினில் வரும் நிகழ்ச்சி மிகவும் அபூர்வமாக எப்போதோ ஒரு முறை நிகழ்வதால், இந்த கோட்டைகள் ஒன்றுக்கொன்று துணையாக இருந்து வந்தன. ஆனால் பெருமான் இந்த நிலையினையும் தகர்த்தெறிந்து, கோட்டைகள் ஒன்றுக்கொன்று துணையாக இருந்த நிலை பயனற்று போகுமாறு செய்தார். இந்த செய்தியே இங்கு பயனற்றுப் போன மும்மதில்கள் என்ற பொருள் பட, வீண் அடைந்த மும்மதில்கள் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகள் ஒன்றுக்கொன்று துணையாக இருந்த நிலை பாழாகும் வண்ணம், மேரு மலையினை வில்லாக வளைத்து வாசுகி பாம்பினை நாணாக அதில் பூட்டி கொடிய தீச்சுடர்கள் வெளிப்படும் வண்ணம் அம்பினை கோத்து மூன்று கோட்டைகளுக்கும் நெருப்பு மூட்டி, உலகத்தவரின் துயரினை போக்கி நன்மை புரிந்த பெருமானின் செயல் மிகவும் வியப்புக்கு உரியது. அத்தகைய வல்லமை வாய்ந்த இறைவன், பண்ணோடு பொருந்திய இசை மிழற்றும் வண்டும் நிறைந்த பசுமையான சோலைகளால் சூழப்பட்டு அழகுடன் விளங்குவதும் ஆகாயத்தை எட்டும் அளவு உயர்ந்த மாடங்களும் உடைத்தும் ஆகிய சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான்.

பாடல் 5:

பேய் அடைந்த காடு இடமாப் பேணுவது அன்றியும் போய்

வேய் அடைந்த தோளி அஞ்ச வேழம் உரித்தது என்னே

வாய் அடைந்த நான்மறை ஆறு அங்கமோடு ஐ வேள்வி

தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே

விளக்கம்:

வாய் அடைந்த=எழுதப் படாமல் வாய் வழியே தலைமுறை தலைமுறையாக வந்த வேதங்கள்; இந்த தன்மை கருதியே எழுதாக் கிளவி என்ற பெயரும் எழுந்தது. குரு சீடன் என்ற சங்கிலி வழியாக வேதங்கள் கற்றுக் கொடுக்கப் பட்டு வந்தன. ஐ வேள்வி=ஐந்து யாகங்கள்; அந்தணர்கள் தினமும் செய்ய வேண்டிய ஐந்து செயல்களை ஐந்து வேள்விகள் என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. தேவயக்ஞம், பிரம்மயக்ஞம், பூதயக்ஞம், மனித யக்ஞம் மற்றும் பித்ருயக்ஞம் என்பன இந்த ஐந்து வேள்விகள். வேள்வி வளர்த்து சமித்துக்களாலும் அன்னத்தாலும் ஹோமம் செய்வது தேவயக்ஞம் என்று அழைக்கப் படுகின்றது. தான் கற்ற வேதத்தை ஓதுவது பிரம்மயக்ஞம் என்று அழைக்கப்படுகின்றது. தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் ஜீவராசிகளுக்கு அன்னம் வைத்தல் பூதயக்ஞம் என்று அழைக்கப்படுகின்றது. அதிதிகளுக்கு விருந்து அளித்தல், விருந்தோம்புதல் மனிதயக்ஞம் என்று அழைக்கப்படுகின்றது. இறந்த மூதாதையர்க்கு அன்னம் அல்லது தீர்த்தம் அளித்தல் பித்ருயக்ஞம் என்று அழைக்கப் படுகின்றது.

சிட்சை, வியாகரணம், நிருத்தம், ஜோதிடம், கல்பம், சந்தஸ் என்பன ஆறு அங்கங்கள். வாய்மொழியாக தலைமுறை தலைமுறையாக குருவிடமிருந்து அவரது சீடனுக்கு சொல்லப்பட்டு பரவிய வேதங்களுக்கு இந்த ஆறு அங்கங்கள் அரணாக இருந்து தவறாக வேதங்கள் ஓதப்படுவதை தவிர்த்தன. எனவே தான் வேதங்களையும் அங்கங்களையும் ஒன்றாக கற்றுக்கொள்வது அவசியமாக கருதப் பட்டது. இந்த ஆறு அங்கங்களில் ஒன்று ஊனமடைந்தாலோ அல்லது ஒன்று இல்லாமல் போனாலோ, ஓதப்படும் வேதம் குறைபாடு உடையதாக மாறுகின்றது. எனவே இந்த ஆறு அங்கங்களும் முறையாக இருக்குமாறு வேதங்கள் ஓதப் படவேண்டும். இந்த ஆறு அங்கங்களும் எவ்வாறு உதவுகின்றன என்பதை நாம் இப்போது பார்ப்போம்.

சிட்சை என்றால் எழுத்து என்று பொருள். வேதத்திற்கு அழகு சேர்ப்பது சிட்சை எனப்படும் அங்கமாகும். ஒரு மனிதனுக்கு அவனது மூக்கு அழகு சேர்ப்பதைப் போன்று சிட்சை அழகு சேர்ப்பதால், இதனை வேத புருடனின் மூக்கு என்றும் கூறுவார்கள். மூக்கும் முழியுமாக இருப்பதைத் தானே அழகாக இருப்பதாக நாம் கருதுகின்றோம். மூக்குக் குழாய் பழுதடைந்தால், நமது சொற்களின் உச்சரிப்பு சரியாக இருப்பதில்லை. ஜலதோஷம் பாதிக்கும் போது நமது குரல் கெட்டுப்போவதை நாம் உணருகின்றோம். ஒவ்வொரு எழுத்தினையும் அதற்கு உரிய முறையில் உச்சரித்தால் தான் வேதம் கேட்பதற்கு அழகாகவும் முறையாகவும் தவறில்லாமலும் இருக்கும்.

சிட்சைக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக கருதப்படுவது வியாகரணம். வியாகரணம் என்றால் இலக்கணம் என்று பொருள். வழக்கத்தில் உள்ள பல சொற்கள், சற்று மாறுபட்டு பாடல்களில், இலக்கியங்களில் கையாளப்படுவதை நாம் காண்கின்றோம். இலக்கியங்களில் நாம் காணும் பல சொற்கள் காலப்போக்கில் திரிந்து, இன்று நாம் பயன்படுத்தும் நிலையில் உள்ளதைக் காண்கின்றோம். ஆனால் அத்தகைய இலக்கியச் சொற்கள், கவிதைகளின் இலக்கணத்திற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதை, சற்று ஆராய்ந்தால் நாம் உணரலாம். அவ்வாறே வேதத்தில் காணப்படும் பல சொற்கள் இன்றும் நாம் நடைமுறையில் கையாளும் வடமொழிச் சொற்களிலிருந்து மாறுபட்டு இருக்கின்றன. அத்தகைய வேதச் சொற்கள், இன்றைய நடைமுறைச் சொற்களிலிருந்து வேறுபட்டாலும் இலக்கண ரீதியில் சரியாக இருப்பதை, நாம் உணரலாம். இவ்வாறு பல சொற்களின் பயன்பாட்டினை நமக்கு உணர்த்தும் வியாகரணம், வேதத்தில் அமைந்திருக்கும் சொற்களை பாதுகாக்கின்றன. எனவே வியாகரணத்தை வேதத்தின் மெய்க்காப்பாளன் என்றும் வேத புருடனுக்கு வாய் என்றும் கூறுவார்கள். மேலும் ஒரே சொல்லுக்கு பல பொருட்கள் உள்ளதை நாம் தமிழ் மொழியில் காண்பது போல், வடமொழியிலும் காணலாம். சொற்களை பயன்படுத்தும் முறையும் வியாகரணத்தில் விளக்கப் படுகின்றது.

வேதங்களில் கூறப்படும் பல மந்திரங்களுக்கு உரிய முனிவர்கள், சந்தம், தேவதை ஆகியவற்றின் பெயர்களை சொன்ன பின்னரே அந்த மந்திரங்களைச் சொல்ல வேண்டும் என்பது விதி. சந்தம் என்பது அந்தந்த மந்திரங்களில் அமைந்துள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். மந்திரங்களில் உள்ள எழுத்துக்களில், ஒரு எழுத்தைக் குறைத்தோ அல்லது கூட்டியோ சொல்வதைத் தவிர்ப்பதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தணர்கள் தினமும் சொல்லவேண்டிய காயத்ரி மந்திரத்தில் இருபத்து நான்கு எழுத்துகள் இருப்பதாக வேதம் கூறுகின்றது. சந்தஸ் என்று வடமொழியில் அழைக்கப்படும் இந்த அங்கம், மூன்றாவது முக்கிய அங்கமாக கருதப்படுகின்றது. இந்த அங்கம் வேத புருடனின் பாதமாக கருதப் படுகின்றது.

அடுத்த அங்கம் நிருக்தம் என்று அழைக்கப்படுகின்றது. நிருக்தம் என்றால் விளக்கிச் சொல்லுதல் என்று பொருள். பல பொருள்களைக் கொண்ட சொற்கள், வேதங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இந்த விளக்கத்தினைத் தெரிந்து கொண்டால் தான், அந்தந்த இடங்களுக்கு ஏற்ப, வேதத்தின் பல சொற்கள் உணர்த்தும் சரியான பொருளை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும். இவ்வாறு சரியான விளக்கங்களை அறிந்து கொள்வதற்கு வியாகரணமும் உதவி செய்கின்றது. எனவே சொற்களின் விளக்கம், இலக்கணம் ஆகியவற்றை அறிந்து கொண்டால் தான், சரியான உச்சரிப்புடன் பல வேத மந்திரங்களை நாம் சொல்ல முடியும். இந்த அங்கம் வேத புரடனின் காதுகளாக கருதப் படுகின்றன.

அடுத்ததாக சொல்லப்படும் ஜோதிடம் என்ற அங்கம், வேத புருடனின் கண்ணாக கருதப் படுகின்றது. இது கணித ஸ்கந்தம் என்றும் ஹோரா ஸ்கந்தம் இரண்டு பிரிவாக உள்ளது. முதல் பகுதியில் கால தத்துவங்கள் சொல்லப்படுகின்றன. மேலும் அந்தந்த காலங்களில் செய்ய வேண்டிய கடமைகள், காரியங்கள் ஆகியவற்றை குறிப்பிடுகின்றன, மேலும் பல சுப மற்றும் அசுப நிகழ்ச்சிகள், வேள்விகள், பூஜைகள் செய்ய வேண்டிய காலங்களை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதையும் விளக்குகின்றன. இரண்டாவது பிரிவான ஹோரை, ஜாதகங்களின் மூலம் நடந்த நிகழ்ச்சிகள், நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை அறிய உதவுகின்றன.

கல்பம் என்றால் பிரயோகம் என்று பொருள். வேள்வி முதலான பல சடங்குகளை, பல விதமான மந்திரங்களை பயன்படுத்தும் முறை இந்த அங்கத்தில் சொல்லப்படுகின்றது. மேற்கூறிய விளக்கங்கள் எவ்வாறு அங்கங்கள், வேதங்களை ஓதுவதிலும், வேதத்தின் பொருளை புரிந்து கொள்வதிலும், வேத மந்திரங்களை பயன்படுத்துவதிலும் எவ்வாறு நமக்கு உதவியாக உள்ளன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த அங்கத்தை வேத புருடனின் கைகள் என்று கருதுகின்றனர். எனவே வேதங்களை முற்றும் கற்றால் மட்டும் போதாது, வேதங்களின் அங்கங்களையும் முறையாக கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தினை நாம் உணர்கின்றோம். மேலும் இந்த அங்கங்கள் மூலம், உணர்வதற்கு மிகவும் அரியனவாக காணப்படும் வேதங்களை நாம் அறிந்து கொள்ள அங்கங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம்.

பொழிப்புரை:

பேய்கள் நாடமாடும் காட்டினை சிறந்த இடமாக கருதி தான் உறையும் இடமாகவும் நடமாடும் இடமாகவும் கொண்டு பேணிப் பாதுகாப்பதும், மூங்கில் போன்று அழகான தோள்களை உடைய அன்னை அச்சம் கொள்ளும் வண்ணம் தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலினை உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டதும், இறைவன் செய்த வியப்பூட்டும் செயல்கள் ஆகும். இவ்வாறு மற்றவரை வியப்பு அடையச் செய்யும் இறைவன், எழுதிப் படிக்காமல் வாய்மொழியாக ஒருவருக்கு ஒருவர் தலைமுறை தலைமுறையாக வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் கற்றுக் கொண்டு, ஐந்து வகையான வேள்விகளை தினமும் செய்யும் அந்தணர்கள், தீமூட்டி வேள்வி செய்யும் சிவந்த கைகளை உடைய அந்தணர்கள் வாழும் சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான்.

பாடல் 6:

காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணமாகி வந்து

வேடு அடைந்த வேடனாகி விசயனொடு எய்தது என்னே

கோடு அடைந்த மால் களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள் செய்

சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே

விளக்கம்:

களிற்றுக் கோசெங்கணான்=சென்ற பிறப்பின் தொடர்பாக யானையின் மீது எப்போதும் பகை கொண்டவனாக திகழ்ந்த கோச்செங்கட்சோழன்; அதன் விளைவாகவே எழுபத்திரண்டு மாடக் கோயில்கள், யானை புகா வண்ணம் கட்டினான் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பாசுரத்திலும் திருமங்கை ஆழ்வார் இந்த செய்தியை குறிப்பிடுகின்றார். சேடு=பெருமை; காடு அடைந்த ஏனம்=பாண்டவர்கள் வனவாசம் சென்று இருந்த காலத்தில், தனது ஒற்றர்கள் மூலம் பாண்டவர்களை துரியோதனன் கண்காணித்துக் கொண்டே இருந்தான். அதனால் அவனுக்கு பாசுபதம் அத்திரம் பெறுவதற்காக அர்ஜுனன் தவம் செய்வதற்காக வேறோர் காட்டுக்கு சென்றதை அறிந்தான். தனது நண்பன் முகன் என்று அழைக்கப்பட்ட அசுரனை அழைத்து தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனை தாக்கி கொன்றுவிடுமாறு திட்டமிட்டான். முகனும் காட்டுப் பன்றி வேடம் தரித்து அர்ஜுனன் தவம் செய்து கொண்டிருந்த இடம் சென்றடைந்து அவனை தாக்கி கொல்ல தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். தனது அடியவன் அர்ஜுனனை காக்கும் பொருட்டு பெருமான் அந்த காட்டுப்பன்றியை கொல்லவும் அர்ஜுனனுக்கு பாசுபதம் அத்திரம் அளித்து அருள் புரியவும் திருவுள்ளம் கொண்டார். இந்த நிகழ்ச்சி தான் இங்கே கூறப்படுகின்றது. அர்ஜூனன் இருக்கும் இடத்தை தேடிச்சென்ற பன்றி என்பதை குறிப்பிடும் வண்ணம் காடு அடைந்த ஏனம் என்று இங்கே சம்பந்தர் குரிப்பிடுகின்றார். சிவபெருமான் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் எய்த அம்பு பன்றியின் உடலின் மீது ஒரே சமயத்தில் பாயவே, எவர் எய்த அம்பு பன்றியை கொன்றது என்பதில் இருவரும் மாறுபடவே அவர்களுக்குள் சண்டை மூண்டது. வேடு அடைந்த= வேடுவக் கோலம் பூண்ட; கோடு=கொம்பு; மால்=பெரிய; சேய்ஞலூர் திருக்கோயில் சற்று அகலம் குறைந்த படிக்கட்டுக்களை கொண்டது. யானை ஏற முடியாத நிலையில் அமைந்துள்ள இந்த கோயிலைக் கண்டதும் சம்பந்தருக்கு, யானை செல்ல முடியாத வண்ணம் பல மாடக் கோயில்கள் கட்டிய கோச்செங்கட் சோழனின் நினைவு வந்தது போலும். சோழ மன்னன் கட்டிய எழுபத்திரண்டு மாடக் கோயில்களில் இதுவும் ஒன்று என்று கூறுவார்கள்.

பொழிப்புரை:

தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனை கொல்லும் நோக்கத்துடன் காட்டுப்பன்றி வேடம் எடுத்து காடு நோக்கிச் சென்ற மூகாசுரனை கொன்று அர்ஜுனனை காக்கும் பொருட்டு, வேடுவக் கோலம் தாங்கி சென்ற பெருமான் அர்ஜுனனுடன் போர் புரிந்த காரணம் தான் என்னே. தன்னுடன் போர் புரிந்த அர்ஜுனனுக்கு பாசுபத அத்திரம் அளித்த செயல் வியப்புக்கு உரியது அல்லவா. இத்தகைய வியப்பிற்கு உரிய வண்ணம் கருணைச் செயல் புரிந்த பெருமான், முந்தைய பிறவியில் யானையுடன் தான் கொண்டிருந்த பகையினை நினைவு கூர்ந்து பல மாடக் கோயில்கள் கட்டிய கோச்செங்கட் சோழனுக்கு அருள் செய்த செல்வராகிய பெருமான் பெருமை வாய்ந்த சேய்ஞலூர் தலத்தில் உறைகின்றார்.

பாடல் 7:

பீர் அடைந்த பாலது ஆட்டப் பேணாத வன் தாதை

வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர்த்தடிந்தான் தனக்குத்

தார் அடைந்த மாலை சூட்டிச் தலைமை வகுத்தது என்னே

சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே

விளக்கம்:

பீர்=தானாகவே சுரந்த பால்; வன் தாதை=வலிய நெஞ்சம் கொண்ட தந்தை, வன்னெஞ்சம் கொண்ட தந்தை; வேர்=வழிபாட்டின் வேராகிய பால்; வேர் அடைந்து சினத்தால் வேர்த்து என்று பொருள் கொண்டு விளக்கம் சிலர் அளிக்கின்றனர். பேணாத=பசுக்கள் தாமாகவே சொரிந்த பால் கொண்டு, மணலால் அமைக்கப்பட்ட இலிங்கம் நீராட்டப் பட்டதை புரிந்து கொள்ளாது பால் வீணாக மணலில் சிந்தப்படுகின்றது என்று எண்ணிய தந்தை;

மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்ற விசாரசருமர், மாடுகள் மேய்ந்து முடிந்து நிழலில் கூடிய சமயத்தில், பசுக்களின் நான்கு முலைக் காம்புகளில் ஒன்றினைத் தொட, தனது கன்று தீண்டியதைப் போன்ற உணர்வினை அடைந்த பசுக்கள், தாமே பாலை சொரிந்தன என்று சேக்கிழார் கூறுகின்றார். நான்கு முலைக் காம்புகளில் ஒன்றினையே விசாரசருமர் தொட்டார் என்று குறிப்பிடுவதன் மூலம், பசுக்களின் உரிமையாளர்க்கும் கன்றினுக்கும் பால் குறையாமல் கிடைக்கும் வண்ணம் செய்தார் என்பதை நாம் உணரலாம். அவ்வாறு சொரிந்த பால் ஒன்பது குடங்கள் நிறைய சொரிந்தன என்று சேக்கிழார் கூறுகின்றார். மேலும் இவ்வாறு பசுக்கள் தாமே பால் சொரிந்த போதிலும், உரிமையாளர்க்கு முன்பு போல் குறைவின்றி பால் கிடைத்தன என்பதும் பெரிய புராணத்தில் உணர்த்தப் படுகின்றது.

நல்ல நவ கும்பங்கள் பெற நாடிக்கொண்டு நாணல் பூங்

கொல்லை இடந்தும் குறை மறைவும் மேவும் கோக்கள்

உடன் கூட

ஒல்லை அணைந்து பால் ஆக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக

எதிர்

செல்ல அவையும் கனைத்து முலை தீண்டச் செழும்பால்

பொழிந்தனவால்

பொழிப்புரை:

தாமாகவே பசுக்கள் பொழிந்த பாலினைக் கொண்டு சிறுவன் விசாரசருமன் மணல் இலிங்கத்தை நீராட்ட, இவ்வாறு பால் பரமனுக்கு நீராட்ட பயன்படும் சிறப்பினை உணராது வலிய நெஞ்சம் கொண்டவனாக விளங்கிய எச்சதத்தன் (சண்டீசரின் தந்தை பெயர்) கோபத்துடன் பாய்ந்து பாற்குடத்தினை இடற, தனது தந்தை என்றும் பாராமல் அவனது கால்களை துண்டித்த சிறுவனுக்கு தான் அணிந்திருந்த கொன்றை மலர் மாலையினை சூட்டி அவருக்கு சிவகணங்களுக்கு தலைவனாக இருக்கும் பதவியையும் அளித்த பெருமானது கருணைச் செயல் மிகவும் வியப்புக்கு உரியதாகும். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் சேய்ஞலூர் தலத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த திருக்கோயிலில் அமர்ந்துள்ளான்.

பாடல் 8:

மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன் தன்

நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே

பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும்

சே அடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே

விளக்கம்:

சே=இடபம்; மா=குதிரை; பொதுவாக தேர்கள் என்றால் குதிரைகளால் இழுக்கப்படும் என்பதை நாம் அறிவோம். இராவணன் பயன்படுத்திய தேர், புட்பக விமானம், வானில் பறந்து செல்லும் ஆற்றல் படைத்தது என்பதால் குதிரைகள் தேவைப்படாத தேராக விளங்கியது. என்றாலும் தேரின் பொதுத் தன்மை கருதி மா அடைந்த தேர் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு அரசனாகிய இராவணன் தேர்ப்படை குதிரைப்படை உடையவனாக விளங்கினான் என்று உணர்த்தும் வண்ணம் மாவடைந்த தேர் என்று குறிப்பிட்டார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பூசுரர்=அந்தணர்;

பொழிப்புரை:

குதிரை பூட்டிய தேர்களை படையாக உடைய அரக்கன் இராவணனின் வலிமையை குறைத்து அடக்கிய பெருமான், பின்னர் அந்த அரக்கன் தனது வாயினால் சாமகீதம் இசைத்த போது அதனைக் கேட்டு மகிழ்ந்து, அவன் முன்னர் செய்த கொடிய செயலையும் பாராட்டாது (கயிலை மலையினை பேர்க்கத் துணிந்தது) மிகுந்த விருபத்துடன் அருள் புரிந்தது வியக்கத் தக்க செயலாகும். இவ்வாறு பகைவனுக்கும் அருள் புரிந்த இறைவன், தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்ட நான்முகன் போன்ற அந்தணர்கள் போற்றும் வண்ணம் இடபத்தை தனது வாகனமாகக் கொண்டவன், சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான்.

பாடல் 9:

கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும்

பார் அடைந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார்

சீர் அடைந்து வந்து போற்றச் சென்று அருள் செய்தது என்னே

தேர் அடைந்த மா மறுகில் சேய்ஞலூர் மேயவனே

விளக்கம்:

கார்=கருமை நிறம்; கனகம் அனையான்=பொன்னிற மேனியை உடைய பிரமன்; பார் அடைந்தும்=கீழே தோண்டியும்; சீர் அடைந்து=தமது செருக்கு ஒழிந்து பணிந்த தன்மையுடன் தாமே பரம் என்ற எண்ணத்துடன் ஓருவருக்கொருவர் வாதம் செய்து கொண்டிருந்த நிலையினைத் தவிர்த்து, தங்களுக்கு மேலாகிய பரம்பொருள் சிவபெருமான் என்பதை உணர்ந்த நிலை, இங்கே சீர் அடைந்த என்ற தொடரால் குறிப்பிடப்படுகின்றது. முந்தைய பாடலில் இராவணின் தேரினை குறிப்பிட்ட சம்பந்தர்க்கு சேய்ஞலூர் தலத்தின் அகன்ற வீதிகள் நினைவுக்கு வந்தன போலும். சோழ அரசர்கள் முடி சூட்டிக் கொள்ளும் ஐந்து பதிகளில் சேய்ஞலூர் ஒன்றாகும். காவிரிப்பூம்பட்டினம், உறையூர், கரூர், தில்லை, மற்றும் சேய்ஞலூர் என்பனவே இந்த ஐந்து ஊர்களாகும். இந்த தகவல் சேக்கிழாரால் பெரிய புராணத்தில் தரப்படுகின்றது. இந்த பாடலில் குறிப்பிடப்படும் அரசன் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆவான்.

சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் தில்லைத் திரு

எல்லை

பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி

காக்கும்

மன்னர் பெருமான் அநபாயன் வரும் தொல் மரபின் முடி

சூட்டும்

தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய நீடும் தகைத்து அவ்வூர்

பொழிப்புரை:

கருமை நிறமுடைய திருமாலும் பொன்னின் நிறத்தில் மேனியை உடைய பிரமனும், முறையே பன்றியாக கீழே தோண்டியும் அன்னமாக மேலே பறந்தும் பெருமானின் திருவடிகளையும் முடியையும் காணாமல் பதைத்து நின்று, தங்களின் முயற்சியால் கண்டு விடலாம் என்று செருக்கினை ஒழித்து பணிவுடன் இறைவனைப் போற்ற, தானே முன் சென்று அவர்களுக்கு காட்சி கொடுத்து பெருமான் அருள் புரிந்தது வியக்கத்தக்க செயலாகும். இத்தகைய பெருமையினை உடைய பெருமான், தேர்கள் ஓடும் அகன்ற வீதியினை உடைய சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான்.

பாடல் 10:

மாசு அடைந்த மேனியாரும் மனம் திரியாத கஞ்சி

நேசடைந்த ஊணினாரும் நேசம் இலாதது என்னே

வீசடைந்த தோகை ஆட விரை கமழும் பொழில் வாய்த்

தேசடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே

விளக்கம்:

வீசடைந்த=வீசுதலும் ஆடுதலும், நீராடும் பழக்கம் இல்லாத சமணர்களை மாசு அடைந்த மேனியர் என்று இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மனம் திரியாத=வெறுப்பு ஏதும் கொள்ளாமல் கஞ்சி உணவினை ஏற்றுக் கொண்ட தன்மை; தேசு=தேஜஸ் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்.

பொழிப்புரை:

நீராடும் பழக்கம் இல்லாததால் மாசு படிந்த மேனியை உடைய சமணர்களும், வெறுப்பு ஏதும் கொள்ளாமல் கஞ்சி உணவினை விருப்பத்துடன் உணவாக ஏற்றுக் கொள்ளும் புத்தர்களும் பெருமானிடம் அன்பு கொள்ளாமல் இருப்பதன் காரணம் யாது. அவர்களது தீய வினைகளே அவர்களை நல்வழியில் செல்லாமல் தடுக்கின்றது. தங்களது தோகைகளை வீசி ஆடுகின்ற மயில்கள் நிறைந்ததும் நறுமணம் கொண்ட பூக்கள் கமழ்வதும், ஒளி வீசும் வண்டுகள் பாடுவதும் ஆகிய சோலைகள் நிறைந்த சேய்ஞலூர் தலத்தில் பெருமான் அமர்ந்து உறைகின்றான்.

பாடல் 11;

சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவித்

தோய் அடைந்த வண் வயல் சூழ் தோணிபுரத் தலைவன்

சாயடைந்த ஞானம் மல்கு சம்பந்தன் இன்னுரைகள்

வாயடைந்து பாட வல்லார் வானுலகு ஆள்பவரே

விளக்கம்:

சேய்=பெருமானின் குழந்தையாகிய முருகப்பெருமான். தோயம்=நீர்; தோயம் என்ற சொல் தோய் என்று இங்கே எதுகை கருதி மாறியுள்ளது. சாய்=சார்பு; வண் வயல்=வளமை உடைய வயல்கள்

பொழிப்புரை:

பெருமானின் குழந்தையாகிய முருகப் பெருமான் சூரபதுமனுடன் போருக்கு செல்லும் வழியில் படைவீடு அமைத்து தங்கிய போது இறைவனை வழிபட்ட தலமும் நீர்வளம் மிகுந்து வளமையான வயல்களால் சூழப்பட்டதும் ஆகிய சேய்ஞலூரில் அமர்ந்துள்ள செல்வனாகிய பெருமானின் சிறப்பான வியப்பூட்டும் செயல்களை குறிப்பிட்டு புகழ்ந்து, தோணிபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரின் தலைவனும் உமையன்னை ஊட்டிய ஞானப்பாலினால் ஞானம் வந்து அடையவே ஞானவொளி பெற்றவனும் ஆகிய சம்பந்தன் சொன்ன இனிய உரைகளாகிய இந்த பத்து பாடல்களை வாய் திறந்து பாடும் திறமை பெற்றவர்கள் வானுலகினை ஆளும் தகுதியினை பெறுவார்கள்.

முடிவுரை;

தனது சிவிகையிலிருந்து கீழே இறங்கி சம்பந்தர் நடந்ததிலிருந்து சேய்ஞலூர் தலத்தின் பெருமையையும் சண்டீசர் பால் அவர் வைத்திருந்த பெருமதிப்பினையும் நாம் உணரலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் நாமும் சென்றடைந்து பெருமானையும் சண்டீசரையும் வணங்கி அவர்கள் இருவரது அன்பினையும் பெறுவோமாக. இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் உடைய என்ற சொல் வேறுவேறு பொருள்களைத் தரும் வகையில் அழகுடன் கையாளப்பட்டுள்ளது. முதல் பாடலில் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து நால்வருக்கு வேதத்தின் பொருளை விளக்கிய செயலும், இரண்டாவது பாடலில் பிறைச் சந்திரன் கங்கை மற்றும் பாம்பு ஆகியவைகளுக்கு இடையே இருந்த பகையை நீக்கி ஓரே இடத்தில் வைத்ததும், சுடுகாட்டினில் ஆடும் தன்மை மூன்றாவது பாடலிலும், திரிபுரத்து மும்மதில்களை எரித்த செய்கை நான்காவது பாடலிலும், தன்னை எதிர்த்து வந்த யானையின் தோலை உரித்து அச்சம் ஏதுமின்றி அந்த யானையின் தோலினை தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட செய்கையை ஐந்தாவது பாடலிலும், அர்ஜுனனுக்கு நேரவிருந்த ஆபத்திலுருந்து அவனைக் காப்பாற்றி அவனுடன் போர் செய்த திருவிளையாடல் ஆறாவது பாடலிலும், சண்டீசருக்கு பல விதமான பேறுகள் அளித்து அவரைத் தனது மகனாக ஏற்றுக்கொண்ட தன்மை ஏழாவது பாடலிலும், இராவணனின் வலிமையை குன்றச் செய்து பின்னர் அவன் சாமகானம் படிய போது வரங்கள் அளித்த கருணைச் செயல் எட்டாவது பாடலிலும், பிரமனும் திருமாலும் தங்களது செருக்கு நீங்கிய நிலையில் பணிந்து வணங்கியபோது அருளிய தன்மை ஒன்பதாவது பாடலிலும், குறிப்பிடத் சம்பந்தர் இத்தகைய பெருமையும் புகழும் வாய்ந்த பெருமானை எவரேனும் வழிபடாமல் இருந்தால் அதற்கு அவர்களது பழைய வினைகளே காரணம் என்பதை பத்தாவது பாடலில் உணர்த்தி அதற்கு உதாரணமாக புத்தர்களையும் சமணர்களையும் குறிப்பிடுகின்றார். நாம் புத்தர்களையும் சமணர்களையும் பின்பற்றாது, சம்பந்தர் குறிப்பிட்டுள்ள பெருமானின் சிறந்த செயல்களை நன்கு புரிந்து கொண்டு, சம்பந்தர் காட்டிய வழியில் நாமும் பெருமானின் பலவிதமான புகழ்ச் செயல்களை பாடி, அவனது அருள் பெற்று உய்வோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Nooladaintha Kolgaiyaalae
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

நூலடைந்த கொள்கையாலே


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: