Go Back

22/03/21

ஊருலாவு பலி கொண்டு


ஊருலாவு பலி கொண்டு - பின்னணி:


தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக வலஞ்சுழி சென்ற திருஞானசம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு பழையாறை, சத்திமுற்றம், பட்டீச்சரம், இரும்பூளை முதலான தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், பின்னர் அரதைப் பெரும்பாழி தலம் செல்கின்றார். அதன் பின்னர் திருச்சேறை, திருநாலூர், குடவாயில், நறையூர் சித்தீச்ச்சரம், தென்திருப்புத்தூர் ஆகிய தலங்கள் சென்றதாக பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய மூன்று பதிகங்களும் சுந்தரர் அருளிய ஒரு பதிகமும் நமக்கு கிடைத்துள்ளன. தலத்தின் பெயர் நறையூர் திருக்கோயிலின் பெயர் சித்தீச்சரம். தலத்தின் பெயரையும் திருக்கோயிலின் பெயரையும் இணைத்து நறையூர் சித்தீச்சரம் என்று தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. குடமூக்கு (இந்நாளில் கும்பகோணம் என்று அழைக்கப்படும் தலம்) சென்று இருந்த அப்பர் பிரான் அங்கிருந்து நாலூர், குடவாயில், மற்றும் நறையூர் சித்தீச்சரம் தலங்கள் சென்றதாக பெரிய புராணத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த தலங்கள் மீது அப்பர் பிரான் அருளிய பதிகங்கள் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை.

பாடும் அரதைப் பெரும்பாழியே முதலாகச்

சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்

நாடிய சீர் நறையூர் தென்திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி

நீடு தமிழ்த் தொடை புனைந்து அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார்

இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும், திருஞானசம்பந்தர், தனது நெஞ்சத்தை விளித்து சித்தீச்சரம் செல்வாய் என்றும், நினைவாய் என்றும், சென்றடைவாய் என்றும், தெளிந்து நினைவாய் என்றும், பல பாடல்களில் குறிப்பிடுவதால், இந்த தலம் செல்லும் வழியில் அருளிய பதிகமாக கருதப் படுகின்றது.

பாடல் 1:

ஊருலாவு பலி கொண்டு உலகு ஏத்த

நீருலாவு நிமர் புன்சடை அண்ணல்

சீருலாவு மறையோர் நறையூரில்

சேரும் சித்தீச்சரம் சென்றடை நெஞ்சே

விளக்கம்:

உலகேத்த என்ற சொல், பலி ஏற்கும் செயல் மற்றும் கங்கை நதியை சடையில் ஏற்றுக் கொண்ட செயல் ஆகிய இரண்டு செயல்களுக்கு இடையே குறிப்பிடப்படுவதால், இரண்டு செயல்களுக்கு உரிய அடைமொழியாக கருதுவது சிறப்பு. ஊருலாவு=பல ஊர்கள் சென்று; தான் இதற்கு முன்னம் சென்ற தலைச்சங்காடு, வெண்காடு, குடவாயில் முதலான பல தலத்து அந்தணர்களை சிறப்பித்து உணர்த்திய திருஞானசம்பந்தர், இந்த தலத்து அந்தணர்களையும் சிறப்பித்து இந்த பதிகத்தை தொடங்குகின்றார். அந்நாளில் பல தலங்களில் அந்தணர்கள், பெருமானை போற்றி வழிபாடு செய்த நிலையை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. அண்ணல்=தலைவன்

பொழிப்புரை:

பல ஊர்கள் சென்று திரிந்து பலியேற்கும் சிவபெருமானை, வானிலிருந்து கீழே வேகமாக இறங்கிய கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றுக் கொண்ட தலைவனாகிய சிவபெருமானை உலகம் புகழ்ந்து போற்றுகின்றது. கங்கை நதி உலாவுகின்ற பெருமானின் புன்சடை நிமிர்ந்து நிற்கின்றது. அனைவர்க்கும் தலைவராக விளங்கும் பெருமான் எழுந்தருளியுள்ள சித்தீச்சரம் தலத்தினை, சிறப்பு வாய்ந்த மறையோர்கள் வாழும் சித்தீச்சரம் தலத்தினை, நெஞ்சமே நீ சென்றடைந்து, அந்த தலத்தினில் உறையும் பெருமானை வணங்கி வழிபடுவாயாக.

பாடல் 2:

காடு நாடும் கலக்கப் பலி நண்ணி

ஓடு கங்கை ஒளிர் புன்சடை தாழ

வீடுமாக மறையோர் நறையூரில்

நீடும் சித்தீச்சரமே நினை நெஞ்சே

விளக்கம்:

வீடுமாக=வீடுபேற்றினை விரும்பியவர்களாக; வீடுபேற்றினை விரும்பும் அந்தணர்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுவது மதுரை (ஆலவாய்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலை (3.52.1) நமக்கு நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் நான்கு அடிகளிலும் ஆலவாய் என்ற தலத்தின் பெயர் வரும் வண்ணம் இயற்றி இருந்தாலும், கடை அடியில் மட்டுமே ஆலவாய் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீடலாலவாயிலாய் என்ற சொல்லினை வீடு அலால் அவா இலாய் என்று பிரித்து, வீடுபேற்றினை அடைவதைத் தவிர்த்து வேறு எந்த ஆசையும் இல்லாத தொண்டர்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். விழுமியார்=சிறந்த தொண்டர்கள்; பாடால வாயிலாய் என்ற தொடரை பாடு அலால் அவா இலாய் என்று பிரித்து பொருள் காண வேண்டும். சிறந்த தனது தொண்டர்கள் பாடும் பாடல்களைக் கேட்பதைத் தவிர்த்து வேறு எதனையும் கேட்பதற்கு விருப்பம் அற்ற பெருமான் என்று குறிப்பிட்டு தனது தொண்டர்கள் புகழ்ந்து போற்றி பாடல்கள் பாடுவதை விரும்பி ஏற்றுக்கொண்டு நிற்கும் பெருமான் என்பது இந்த அடியின் பொருள். பெருமான் தனது இருப்பிடமாக காட்டினை, சுடுகாட்டினை ஏற்றுக் கொண்டுள்ள தன்மை மூன்றாவது அடியில் குறிப்பிடப் பட்டுள்ளது. நான்காவது அடியில் கூடல் என்றும் ஆலவாய் என்று அழைக்கப்படும் தலத்தினை, அன்பு பாராட்டி போற்றுகின்ற பெருமானின் கொள்கை தான் என்னே என்று ஞானசம்பந்தர் வியக்கின்றார். சுடுகாடினைத் தனது இருப்பிடமாக பெருமான் ஏற்றுக் கொண்டு இருந்தாலும், ஆலவாய் நகர் பால் மிகுந்த விருப்பம் கொண்டு, தந்து உறைவிடமாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்று குறிப்பிடுகின்றார். .

வீடலாலவாயிலாய் விழுமியார்கள் கை தொழ

பாடாலவாயிலாய் பரவ நின்ற பண்பனே

காடலாலவாயிலாய் கபாலி நீள் கடிம்மதில்

கூடாலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே

உயிர்களுக்கு வீடுபேறு அளிக்கும் தன்மை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து அந்த உயிர்களுக்கு அளிக்கும் விடுதலை அல்லவா. எனவே பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற அடியார்கள், வீடுபேற்றினை விரும்புகின்றனர் என்று தானே பொருள். பல அடியார்களும் தாங்கள் வீடுபேறுத் தன்மையை வேண்டுவதைத் தங்களது பாடல்களில் குறிப்பிடுகின்றனர். காரைக்கால் அம்மையார் கயிலாயம் சென்று பெருமானை சந்திக்கின்றார். அப்போது பெருமான் அம்மையார் வேண்டும் வரம் யாது என்று கேட்க, அம்மையார் அளித்த பதில், பெரியபுராணத்தின் ஒரு பாடலாக வெளிப்படுகின்றது. இந்த பிறவியில், தான் இறக்கும் வரையில் பெருமான் மீது தான் கொண்டுள்ள அன்பு குறையாமல் இருக்கவேண்டும் என்று கோரும் அம்மையார் அடுத்து பிறவாமை வேண்டும் என்பதை வரமாக கேட்கின்றார். அம்மையார் கூற்றாக இதனை உணர்த்தும் பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம்.

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி

அறவா உன் அடியின் கீழ் நான் இருக்க என்றார்

திருச்சேறை தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.73.2) அப்பர் பிரான், அனைத்துப் பிணிகளினும் பெரியதும் கொடியதும் ஆகிய பிறவிப்பிணியை தீர்த்து அருள் புரிந்த பெருமான் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். தன்னைப் பிடித்திருந்த சூலை நோயினை விடவும் பெரிதாக விளங்கிய, உண்மையை உணராத சமணர்கள் தந்த மயக்க நோயினையும், அதனிலும் பெரியதான பிறவிப் பிணியையும் நீக்கிய பெருமான் என்று கூறுகின்றார். சமணர்களுடன் இணைந்து வாழ்ந்திருந்த தன்னை, அந்த இடத்திலிருந்து பெயர்த்து சிவநெறியில் ஆழ்த்தியவர் பெருமான் என்றும் இங்கே குறிப்பிடுகின்றார். ஓர்த்து=ஆராய்ந்து: உளவாறு=உள்ளவாறு; குண்டர்= சமணர்கள்; வான் பிணிகள்=பெரிய பிணிகள்;

ஓர்த்து உளவாறு நோக்கி உண்மையை உணராக்குண்டர்

வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில் வீழ்ந்து

அழுந்துவேனை

பேர்த்து எனை ஆளாக் கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம்

தீர்த்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.62.2) அப்பர் பிரான், ஆலவாய் அப்பனை நோக்கி, பேர்த்தினிப் பிறவா வண்ணம் அன்பனே அருள் செய்வாய் என்று வேண்டுகின்றார். ஏசற்று=காமம் முதலான விகாரங்களை அகற்றி; புலன்களின் வழியே சென்று திரியாமல், அந்த வழியிலிருந்து தன்னை பேர்த்தெடுத்து ஆட்கொண்ட பெருமான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞானமூர்த்தீ

என் பொனே ஈசா என்றென்று ஏத்தி நான் ஏசற்று என்றும்

பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனிப் பிறவா வண்ணம்

அன்பனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

தனது பிறவிப்பிணியை நீக்கிக் கொள்வதற்காக தான் என்னவெல்லாம் செய்தேன் என்று சுந்தரர் ஆமாத்தூர் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.45.10) கூறுகின்றார். உற்றார் மீது தான் கொண்டிருந்த பாசப் பிணைப்பினை நீக்கிய தான் அவர்களை விட்டு விலகிவிட்டேன் என்றும், தனது உள்ளத்தில் உறைகின்ற பொருளாகிய பெருமானை உறுதியாக பற்றிக்கொண்டேன் என்றும், பெருமானின் தாமரை மலர் போன்று திருவடிகளை சென்று அடையும் நோக்கத்துடன் அவற்றை உறுதியாக பற்றிக்கொண்டேன் என்றும், பெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொண்டதால் துன்பங்கள் நீங்கப் பெற்றேன் என்றும், ஆமாத்தூரில் பொருந்தி இருக்கும் பெருமானின் அடியார்களுக்கு அடியானாக இருக்கும் பெருமை மிகுந்த தன்மையைப் பெற்றேன் என்றும் குறிப்பிட்டு, இந்த செயல்களை எல்லாம் தான், என்றும் நிலையாக பிறவாமைப் பிணியினை நீக்கிக்கொள்வதன் பொருட்டே என்று கூறுகின்றார்.

உற்றனன் உற்றவர் தம்மை ஒழிந்து உள்ளத்துள் பொருள்

பற்றினன் பற்றினன் பங்கயச் சேவடிக்கே செல்ல

அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆள்

பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே

கழுமலம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (7.58.6) சுந்தரர், பிறவாமைப் பேற்றினைப் பெற்றேன் என்று பெருமையாக கூறுகின்றார். கொன்றை மலர் சூட்டிக்கொண்டுள்ள பெருமானை, எப்போதும் மறவாமல் நினைக்கின்ற மனத்தினை தான் பெற்றதால், பெருமானை வளைத்துப் பிடித்துள்ள அடியேன், இறைவன் என்னை விட்டுப் பிரிந்து செல்லாத வண்ணம் என்னுடன் பிணைத்துக் கொண்டுவிட்டேன் என்று குறிப்பிடும் சுந்தரர், மிகவும் பெருமையாக, இந்த நிலையிலிருந்து தான் தவறாமல் இருப்பேன் என்றும், வேறு எவருக்கு கிடைக்காத பிறவாமை என்ற வரத்தினை தான் பெற்றதாக கூறுகின்றார்.

மழைக்கு அரும்பும் மலர்க்கொன்றையினானை வளைக்கலுற்றேன்

மறவாமனம் பெற்றேன்

பிழைத்து ஒருகால் இனிப்போய் பிறவாமைப் பெருமை பெற்றேன்

பெற்றதார் பெருகிற்பார்

குழைக் கருங்கண்டனைக் கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று

கூடவும் வல்லேன்

கழைக் கரும்பும் கதலிப் பல சோலைக் கழுமல வளநகர்

கண்டுகொண்டேனே

புக்கொளியூர் அவினாசி தலத்தின் மீது அருளிய பாடலில் (7.92.3) சுந்தரர், பிறவாமைத் தன்மையை இறைவனிடம் வேண்டுகின்றார்.

எங்கேனும் போகினும் எம்பெருமான் நினைந்தக்கால்

கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறலைப்பார் இலை

பொங்காடு அரவா புக்கொளியூர் அவிநாசியே

எங்கோனே உனை வேண்டிக்கொள்வேன் பிறவாமையே

திருவாசகம் திருச்சதகம் பதிகத்தின் கடைப்பாடலில் மாணிக்கவாசகர், பெருமானிடம் வீடுபேறு தந்து அருளுமாறு வேண்டுகின்றார். போது=தாமரை மலர்; இறைவனே, நான் உன்னைப் பாடுதல் வேண்டும்; பாடிப்பாடி மனம் அழிந்து கரைய வேண்டும்; உடல் நெகிழ்ந்து கூத்தாட வேண்டும்; திருச்சிற்றம்பலத்தில் நடனம் ஆடுகின்ற பெருமானே உனது மலர்ப்பாதங்களை நான் வந்தடைந்து கூடி நிலையாக ஆங்கே இருக்கவேண்டும்; புழுக்களுக்கும் மலங்களுக்கும் இடமாக விளங்கும் எனது அற்பமான உடலினை விட்டு எனது உயிர் நீங்கி, பொய்யான இந்த உலகத்து உயிர்கள் மற்றும் பொருட்களின் மீது நான் கொண்டிருக்கும் பற்றினை முற்றிலும் விட்டு விட்டு, வீடுபேறு நிலையினை அடைந்து, நிலையான ஆனந்தத்தில் நான் நிலைக்கவேண்டும் என்று இந்த பாடல் மூலம் அடிகளார் தனது விருப்பத்தை தெரிவிக்கின்றார்.

பாடவேண்டும் நான் போற்றி நின்னையே பாடி நைந்து நைந்து உருகி

நெக்கு நெக்கு

ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து ஆடு நின்கழல் போது

நாயினேன்

கூட வேண்டும் நான் போற்றி இப்புழுக் கூடு நீக்கெனைப் போற்றி

பொய்யெலாம்

வீட வேண்டும் நான் போற்றி வீடுதந்து அருளு போற்றி நின்மெய்யர்

மெய்யனே

காடும் நாடும் கலக்க என்ற தொடரினை கங்கை நதிக்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாக கருதி, காட்டிலும் நாட்டிலும் ஓடும் கங்கை நதி என்ற விளக்குமும் அளிக்கப் படுகின்றது. அனால் இதனை விடவும் சிறந்த விளக்கங்களும் சான்றோர்களால் அளிக்கப்படுகின்றது. காடும் நாடும் கலக்க என்ற தொடருக்கு சிவக்கவிமணியார் ஒரு வித்தியாசமான விளக்கம் தருகின்றார். பிரளய காலத்தில், உயிரிலிருந்து பிரிக்கப்பட்ட உடல்கள் எங்கும் சிதறி சுடுகாடு போன்று காணப்படும் இடங்கள், பெருமான் மீண்டும் உலகினைத் தோற்றுவிக்க திருவுள்ளம் கொள்ளும் போது நாடாகவும் நகரங்களாகவும் மாறி விடுகின்றன அல்லவா, அந்த தன்மையையே காடும் நாடும் கலக்கச் செய்கின்றவன் இறைவன் என்று உணர்த்தப் படுகின்றது என்று கூறுகின்றார். காடும் நாடும் என்ற தொடருக்கு, காடுகளில் உள்ள, முனிவர்கள் வாழ்கின்ற இல்லங்களும் நாட்டினில் உள்ள வேறு பல இல்லங்களும் சென்று, பல இடங்களும் கலந்து சென்று பலி ஏற்கும் இறைவன் என்றும் பலராலும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. தாருகவனம் சென்று ஆங்கே உள்ள முனிவர்களின் இல்லங்களில் பலியேற்ற பெருமான் அல்லவா. எனவே நாட்டில் வாழும் மனிதர்களும் பயனடைய வேண்டி, நாட்டிலும் பலி ஏற்கின்றார் என்று பொருள் கொள்வது பொருத்தமாகவும் உள்ளது.

பொழிப்புரை:

காடு நாடு ஆகிய பல இடங்களுக்கும் கலந்து சென்று, காட்டில் உள்ள முனிவர்களின் இல்லங்கள் மற்றும் நாட்டில் உள்ள இல்லறத்தாரின் இல்லங்கள் ஆகிய பல இடங்களிலும் பலி ஏற்கின்ற பெருமான், மிகுந்த நீர்ப்பெருக்கின் காரணத்தால் விரிந்து ஓடும் தன்மை வாய்ந்த கங்கை நதியைத் தனது ஒளி மிகுந்த புன்சடையில் தேக்கி வைத்துக் கொண்டுள்ள பெருமான், அந்த சடை தாழும் வண்ணம் நடனம் ஆடும் பெருமான், வீடுபேற்றினைத் தவிர்த்து வேறு எதனிலும் ஆர்வம் கொள்ளாத மறையோர்கள் வாழ்கின்ற நறையூரில் உள்ள நீண்ட புகழினை உடைய சித்தீச்சரம் திருக்கோயிலில் உறைகின்றார். அந்த பெருமானை, நெஞ்சமே நீ நினைவாயாக. ,

பாடல் 3:

கல்வியாளர் கனகம் அழல் மேனி

புல்கு கங்கை புரி புன்சடையான் ஊர்

மல்கு திங்கள் பொழில் சூழ் நறையூரில்

செல்வர் சித்தீச்சரம் சென்றடை நெஞ்சே

விளக்கம்:

புல்கு=பொருந்திய; கல்வியாளர் என்ற தொடரினை, தலத்தில் உள்ள மக்களுக்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாக கருதி பொருள் கொள்வது சிறப்பாகும். சிறப்பு வாய்ந்த மறையோர்கள் என்று முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், அடுத்த பாடலில் அந்த மறையோர்களின் சிறப்புத் தன்மையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் தலத்து மக்கள், கல்வியாளர்களாக திகழ்ந்த தன்மையை குறிப்பிடுகின்றார். சிவநெறியைக் கற்று, அதனில் ஒழுகும் அடியார்களையே கற்றவர் என்று தேவார முதலிகள் கருதுவதால், கல்வியாளர்களாக விளங்கிய தலத்து மக்கள், பெருமானின் அடியார்களாக, பெருமானின் அருட்செல்வம் பெற்றவர்களாக விளங்கிய தன்மை செல்வர் என்பதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. கல்வியாளர் என்ற சொல்லினை பெருமானை குறிக்கும் சொல்லாக கருதி, அனைத்துக் கலைகளிலும் தேர்ந்தவர் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இதே வகையில் செல்வர் என்ற சொல்லையும் பெருமானை குறிப்பதாக பொருள் கொண்டு, சிறந்த செல்வமாகிய முத்திச் செல்வத்தை உடையவர் பெருமான் என்று பொருள் கொள்வதும் சிறப்பே.

காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.5.9) திருஞானசம்பந்தர் கற்றவர் தொழுதேத்த நின்றான் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். இறைவனுக்கு ஆட்பட விரும்பும் நாம் முதலில் அவனது திருப்பாதங்களைத் தொழ வேண்டும் என்று, இந்த பதிகத்தின் முந்திய பாடலில் வழி காட்டும் திருஞானசம்பந்தர், அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பாடலில் கூறுகின்றார். நமது பேச்சுகள் அனைத்தும் அவனைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்றும் அவனது புகழினை அல்லால் வேறு எதனையும் நாம் பேசாமல் இருக்க வேண்டும் என்பதையும் இந்த பாடலில் கூறுகின்றார். செற்றவர்=பகைவர்; அரணம்=கோட்டை; உற்றவர்= மலபரிபாகம் அடைந்த அடியார்கள்; பெருமானை குறித்த ஞானம் ஒன்றே வீடுபேறு அடைவதற்கு உரிய வழி. எனவே அந்த ஞானத்தை அடைவதற்கு உயிர் விருப்பம் கொள்ள வேண்டும். இவ்வாறு ஞானவேட்கை உடையவர்க்கே ஞானம் பயன் தரும். உயிர் ஞானவேட்கை அடையாத வண்ணம், ஆணவமலம் தடுக்கின்றது. எனவே என்றும் அழியாது இருக்கும் ஆணவமலத்தின் வலிமையை குறைத்து, புலன்களின் விருப்பத்தில் நாட்டம் கொள்ளாது, உண்மையான மெய்ப்பொருள் குறித்து அறிந்து கொள்ள, உயிர்கள் தலைப்பட வேண்டும். ஆணவ மலத்தின் வலிமையை உயிர்கள் குறைப்பதற்கு உதவி செய்யும் பொருட்டு, இறைவன் கன்மம் மாயை ஆகியவற்றை உயிர்களுடன் கூட்டி, இன்ப துன்பங்களை நுகரச் செய்கின்றான். இவ்வாறு நுகரும் தருணத்தில் உயிர்கள் இருவினையொப்பு நிலையினை அடைந்து மேலும் வினைகள் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஆணவ மலத்தின் வலிமையை படிப்படியாக குறைத்து, அதன் வலிமையை மெலியச் செய்வதை மலபரிபாகம் என்று கூறுவார்கள். இந்த மலபரிபாகம் அடைந்த நிலையில் உயிர்கள் மெய்ஞானம் பெறுகின்ற தன்மையை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உணர்வு எய்தல்=மீண்டும் பிறவாமைக்கு அடிகோலும் வகையில் மெய்ஞானத்தை அறிந்து கொள்ள வாய்ப்பினை அளிக்கும் மானிடப் பிறப்பின் சிறப்பினை உணர்ந்து, அந்த நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவது.

செற்றவர் தம் அரணம் அவற்றைச் செவ்வழல் வாயெரி ஊட்டி நின்றும்

கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி

உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற

பெற்று அமரும் பெருமானை அல்லால் பேசுவது மற்றொர் பேச்சிலோமே

கல்வியாளர் வாழ்கின்ற சித்தீச்சரம் என்று குறிப்பிட்டது போன்று, கற்றவர் வாழும் திருவல்லம் என்று, திருவல்லம் தலத்து பதிகத்தினில் (1.113.11) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஈசனின் பொற்பாதங்களை பற்றிக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் செய்ய வேண்டியது திருமுறை பாடல்களை பாடுவது தான் என்று திருஞானசம்பந்தர் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார்.

கற்றவர் திருவல்லம் கண்டு சென்று

நற்றமிழ் ஞானசம்பந்தன் சொன்ன

குற்றமில் செந்தமிழ் கூற வல்லார்

பற்றுவர் ஈசன் பொற்பாதங்களே

சாத்தமங்கை தலத்தின் மீது அருளிய பாடலில் (3.58.4) திருஞானசம்பந்தர் கற்றவர்கள் நிறைந்த தலம் என்று குறிப்பிடுகின்றார். மற்றவில்=எதிரிகளின் வில்லுக்கு மாற்றாக, அவற்றை வெல்கின்ற தன்மை கொண்ட வில்; மால் வரை=பெரிய மலை, மேரு மலை; பொற்பு=அழகு; கல்விக்கு அழகு கசடற மொழிதல் என்றபது முதுமொழி. பெருமான் ஒருவனே உண்மையான மெய்ப்பொருள் என்பதும், அவனே ஒருவனே முக்திநிலையை அளிக்கும் ஆற்றல் வாய்ந்தவன் என்பது தானே என்றும் மாறாமல் நிலையாக இருக்கும் கருத்து. எனவே இந்த கருத்தினை உணர்ந்தவர்களாக, சிவநெறியை பின்பற்றி வாழ்ந்து வந்த தலத்து மக்களை, கற்றவர்கள் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சாத்தமங்கை என்று தலத்தின் பெயரையும் அயவந்தி என்று திருக்கோயிலின் பெயரையும் இங்கே குறிப்பிடுகின்றார். பெருமானைத் தங்களது கைகள் கூப்பித் தொழுகின்ற தலத்து மாந்தர்கள், பாவம் அற்றவர்களாக இருக்கும் தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

மற்றவில் மால் வரையா மதில் எய்து வெண்ணீறு பூசிப்

புற்றரவு அல்குலாளோடு உடனாவதும் பொற்பதுவே

கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச் செய்த பாவம்

அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே

உலகத்து உயிர்களும் பொருட்களும், பாசப்பற்றினில் உயிர்களை ஆழ்த்தி, பல விதமான வினைகளை சேர்த்துக் கொள்வதற்கு இடமாக விளங்குகின்றன என்பதையும் அந்த பற்றுகளை நீக்கும் தன்மையை நாம் சிவபெருமானின் அருளால் தான் பெறமுடியும் என்பதையும் உணர்ந்த அடியார்களை கற்றவர்கள் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் (4.56.3) உணர்த்துகின்றார். உற்ற நோய்=உயிருக்கு உற்ற நோய், வினைத் தொகுதிகள் மற்றும் அவற்றால் விளையும் தொடர்ந்த பிறப்பு இறப்புகள்: செற்றவர்=பகைவர்: செறுதல்=வெல்லுதல்: கலந்து=உள்ளமும் உயிரும் இறை உணர்வுடன் கலத்தல்: உலத்தல்=பாசப் பற்றுகளை அறுத்தல்: அலத்தல்=பாசப் பற்றுகளால் துயர் உறுதல்: அற்றவர்=பாசப் பற்றுகளை அறவே ஒழித்து பக்குவம் அடைந்த அடியார்கள்: அலத்தல் என்பதற்கு விரதம் முதலியவற்றால், உடலை வருத்திக் கொள்ளுதல் என்றும் பொருள் கொள்ளலாம். உயிரினை, அதனை பீடித்துள்ள வினைத் தொகுதிகளின் பிடியிலிருந்தும் மூன்று மலங்களின் பிடியிலிருந்தும் மீட்டு, பிறப்பு இறப்புச் சுழற்சியில், மறுபடியும் சிக்காத வண்ணம் உயிருக்கு உறுதுணையாக இருந்து காக்கும் வல்லமை படைத்தவர். சிவபெருமான். அவர் தேவர்களுக்கு பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களை அவர்கள் வாழ்ந்து வந்த கோட்டைகளுடன் எரித்து வென்றவர். பாசப் பற்றுகளால் துயருற்று, படிப்பினையைப் கற்றுக்கொண்ட கற்றவர்கள், ஒன்று கூடி, தங்களது பாசப் பற்றுகளை முற்றிலும் அறுத்தும், தங்களது உள்ளமும் உயிரும் இறையுணர்வுடன் கலக்குமாறும், சிவபெருமானைத் தொழுது புகழ்ந்து பாடுகின்றார்கள். அவ்வாறு பாசப் பற்றுகளை விட்டொழித்த அடியார்களுக்கு அன்பராக, ஆவடுதுறையில் உறையும் இறைவன் திகழ்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை ஆவர் போலும்

செற்றவர் புரங்கள் மூன்றும் தீயெழச் செறுவர் போலும்

கற்றவர் பரவி ஏத்திக் கலந்து உலந்து அலந்து பாடும்

அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே

கற்றவர்கள் என்றால் மெய்ப்பொருளை உண்மையாக உணர்ந்தவர்கள்; உண்ணுதல்=அனுபவித்தல்; கனி=பயன், அற்றவர்கள்=சிவபிரானைத் தவிர வேறு எந்தப் பற்றும் இல்லாதவர்கள்‘ கதி= முக்திப்பேறு; கற்றவர்கள் உண்டு அனுபவிக்கும் கனியாக பெருமானை அபப்ர் பிரான் குறிப்பிடும் பாடல், ஒரு திருவாரூர் திருத்தாண்டகத்தின் முதல் பாடலாகும் (6.32.1). உண்மையான மெய்ப்பொருளாக உன்னை உணர்ந்தவர்கள் உன்னை நினைத்து அதன் பயனாக வீடுபேறு நிலையினை அடைய உதவுபவனே, உனது திருவடிகளைச் சார்ந்தவர்கள் அடையும் முக்தி என்னும் நற்பேற்றினை அடையுமாறு செய்யும் பெருமானே, உன்னை அல்லாமல் வேறு அனைத்துப் பற்றுக்களையும் துறந்தவர்களுக்கு இனிக்கும் அமுதமே, எனது துயரங்களைத் தீர்த்து ஆட்கொண்ட ஆண்டவனே, வேறு எவரும் உனக்கு ஒப்பாக இல்லாதவனே, வானவர்கள் போற்றும் மருந்தே, பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களின் நகரங்களை எரித்த சிவபிரானே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன் என்று அப்பர் பிறன் பெருமானை போற்றும் பாடல்..

கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும்

கதியே போற்றி

அற்றவர்கட்கு ஆரமுதமானாய் போற்றி அல்லலறுத்து அடியேனை

ஆண்டாய் போற்றி

மற்று ஒருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும்

மருந்தே போற்றி

செற்றவர் தம் புரம் எரித்த சிவனே போற்றி திருமூலட்டானனே

போற்றி போற்றி

கற்றவர்களாக விளங்கி, பெருமானை இடைவிடாது தொழுது போற்றும் அடியார்களே, தாங்கள் பிறவி எடுத்ததன் பயனை அடைந்தவர்கள் என்று நாகைக் காரோணம் தலத்து பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் (4.71.8) குறிப்பிடுகின்றார். நாம் பிறந்ததன் நோக்கமே உண்மையான மெய்ப்பொருளாகிய பெருமானைக் கும்பிட்டு, நமது வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு இறைவனது திருவடிகளைச் சென்று சார்ந்து, பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்துக் கொள்வது தானே. எனவே தான், அவ்வாறு திகழாமல் இருப்பவர்களை பிறந்த பயனை அடையாதவர்கள் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தெற்றினர்=மாறுபட்ட திரிபுரத்து அரக்கர்கள்: செற்ற=அழித்த:

தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால்

செற்ற வெம் சிலையர் வஞ்சர் சிந்தையுள் சேர்விலாதார்

கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதி ஏத்தப்

பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்திலாரே

சிவபெருமானை, கற்றவர் விழுங்கும் கனியாக உருவகிக்கும் திருவிசைப்பா பாடல் (வீழிமிழலை தலத்தின் மீது சேந்தனார் அருளியது) இங்கே நினைவு கூரத்தக்கது.

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணை

மாகடலை

மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி

விளக்கைச்

செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை திருவீழிமிழலை

வீற்றிருந்த

கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம் குளிர என் கண்

குளிர்ந்தனவே

திருமூலரும், திருமந்திரப் பாடல் ஒன்றில், அனைத்து உலகங்களுக்கும் முதற்பொருளாக இருக்கும் சிவபிரான், அனைத்து உயிர்கட்கும் உயிராக இருக்கின்றார் என்றும், அந்த சிவபிரானை உணர்த்தும் நமச்சிவாய என்னும் சொல்லாகிய கனியை உண்ட தான், அந்த கனி இனிப்பாக இருந்ததை உணர்ந்தேன் என்றும் கூறுகின்றார். இவ்வாறு இறைவனையும் இறைவனது நாமத்தையும் பழத்திற்கு உருவகப்படுத்தி, இறைவனை உணரும் அடியார்கட்கும் அந்த நினைப்பே இனிப்பாக உள்ளதாக பல அருளாளர்கள் கூறியுள்ளார்கள்.

ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும்

ஒன்று கண்டீர் உலகுக்கு உயிராவது

நன்று கண்டீர் இனி நமச்சிவாயப் பழம்

தின்று கண்டேற்கு இது தித்தவாறே

திருவையாறு தலத்தின் பாடலில் (6.38.6) கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்ற பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வள்ளுவப் பெருந்தகை கூறுவது போல், நாம் கற்ற கல்வியின் உண்மையான பயன் இறைவனைத் தொழுதல் தான். அதனால் தான் பல பாடல்களில் அருளாளர்கள் இறைவனை தொழுது ஏத்துபவர்களை கற்றவர்கள் என்றும் மற்றவரை கல்லாதவர் என்றும் குறிப்பதை காணலாம். எனவே தான் அப்பர் பிரான் கற்றவர் என்று இங்கே இறைவனை தொழுபவர்களை குறிப்பிட்டு, அவர்களுக்கு சிவபிரான் கற்பகமாய் இருப்பான், அதாவது வேண்டுவன எல்லாம் தருவான் என்று கூறுகின்றார்.

உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கோர் சுற்றமாய்

நின்றாய் நீயே

கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கோர் கற்பகமாய்

நின்றாய் நீயே

பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என்மேல்

வைத்தாய் நீயே

செற்றிருந்த திருநீலகண்டன் நீயே திருவையாறு அகலாத

செம்பொன் சோதீ

இன்னம்பர் தலத்தின் பாடல் ஒன்றினில் (6.89.7) அப்பர் பிரான், கற்றவர்களின் துன்பத்தைக் களையும் பிரான் என்று குறிப்பிட்டு, சிவநெறியைக் கற்பதால் நாம் அடையவிருக்கும் பலனை உணர்த்துகின்றார். பல்லார் தலை=பற்கள் நிறைந்த தலை; பற்கள் நிறைந்த பிரமனின் மண்டை ஓட்டில் பலி ஏற்று உண்பவரும், தனது அடியார்களின் சித்தத்தில் இருப்பவரும், உண்மையான மெய்ந்நூல்களை கல்லாதவர்கள் காண்பதற்கு மிகவும் அறியவராக விளங்குபவரும், அத்தகைய நூல்களைக் கற்று உணர்ந்தவர்களின் துன்பங்களை களைபவரும், கொடுமை மிகுந்த பூதப் படைகளை உடையவரும், அலைகள் நிறைந்த ஏழு கடல்களாகவும் ஏழு மலைகளாகவும் இருப்பவரும், உலகத்தவர் அனைவராலும் புகழப் படுபவரும் ஆகிய இறைவன் இன்னம்பர் திருத்தலத்தில் தான்தோன்றி ஈசனாக எழுந்தருளி உள்ளார் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.

பல்லார் தலையோட்டில் ஊணார் போலும் பத்தர்கள் தம் சித்தத்து

இருந்தார் போலும்

கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும் கற்றவர்கள் ஏதம் களைவார்

போலும்

பொல்லாத பூதப் படையார் போலும் பொருகடலும் ஏழ்மலையும்

தாமே போலும்

எல்லாரும் ஏத்தத் தருவார் போலும் இன்னம்பர் தான்தோன்றி

ஈசனாரே

சுந்தரரும் தனது நமச்சிவாயப் பதிகத்தில் கற்றவர் தொழுது ஏத்தும் நற்றவா என்று சிவபிரானை அழைக்கின்றார். நமச்சிவாய என்று தொடர்மொழியாய் சொல்லும்போது, சிவனுக்கு வணக்கம் என்று ஒரு பொதுவான பொருளினைத் தருவதால் இந்த ஐந்தெழுத்து தூல பஞ்சாக்கரம் என்று சொல்லப்படுகின்றது

மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்

பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்

கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி

நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

கல்வியாளர்களாக விளங்கி பெருமானின் அருட்செல்வம் பெற்றவர்களாக திகழ்ந்த அடியார்களை, செல்வர்கள் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். சீர்காழி என்று அழைக்கப்படும் சிரபுரம் தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் பாடலில் (1.47.1) பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய பழமையான வேதங்கள், வேதங்களை சரியாக முறையாக அறிந்து கொள்ள உதவும் ஆறு அங்கங்கள் மற்றும் பிற கலைகள் கற்றுணர்ந்த செல்வர்கள் என்று தலத்து அந்தணர்களை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். செல்லடைந்த=சென்று அடையும்

பல்லடைந்த வெண் தலையில் பலி கொள்வதும் அன்றியும் போய்

வில்லடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே

சொல்லடைந்த தொன் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம்

செல்லடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே

செல்வம் என்ற சொல்லுடன் தொடர்பு கொண்ட சொற்களை மிகவும் அதிகமாக பயன்படுத்தி, தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பாடலில், ஞானசம்பந்தர் பெருமானின் புகழினைப் பாடுவதே சிறந்த செல்வம் என்று குறிப்பிடுகின்றார். செல்வ வளம் நிறைந்த மாடங்கள் கொண்ட வீடுகள் ஆகாயத்தை அளாவும் வண்ணம் உயர்ந்த நிலையில் இருக்க, வானில் உலவும் அழகிய சந்திரன் அந்த வீட்டு மாடங்களில் தோய்கின்றது. இத்தகைய செல்வவளம் நிறைந்த வீடுகள் கொண்ட தில்லை நகரில் வாழும் மனிதர்கள் ஞானத்தில் சிறந்து விளங்குகின்றனர். இந்த ஞானச் செல்வர்கள், வேறு எவரிடமும் இல்லாததும் அழிவில்லாததும் ஆகிய முக்திச் செல்வத்தை உடைய சிறந்த செல்வனாகிய பெருமானின் திருப்பாதங்களை புகழ்ந்து பாடுவதால் ஏற்படும் ஒப்பிலாத அருள் செல்வத்தை உடையவர்களாக விளங்குகின்றார்கள் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.

செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்

செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற

செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய

செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே

சேய்ஞலூர் தலத்தினை குறிப்பிடும் ஒரு பாடலில், திருஞானசம்பந்தர் (1.48.6) அந்த தலத்து செல்வர்களை, பெருமானனின் அருள் பெற்ற சிறப்பினை பெற்ற செல்வர்கள் என்று பெருமை படுத்துவதை நாம் உணரலாம். கோடு=தந்தம்; மால்களிறு=பெரிய ஆண் யானைகள். சிறந்த யானைப் படையை உடைய கோச்செங்கட்சோழன் என்று குறிப்பிடுகின்றார். களிற்றுக் கோச்செங்கணான் என்ற தொடருக்கு சென்ற பிறப்பின் தொடர்பாக யானையின் மீது எப்போதும் பகை கொண்டவனாக திகழ்ந்த கோச்செங்கட்சோழன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணமாகி வந்து

வேடு அடைந்த வேடனாகி விசயனொடு எய்தது என்னே

கோடு அடைந்த மால் களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள் செய்

சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே

பொழிப்புரை:

பொன்னையும் கொழுந்து விட்டெரியும் தீப்பிழம்பினையும் ஒத்த திறத்தில் திருமேனி உடையவனும், கங்கை நதி பொருந்தியதும் முறுக்கேறியதும் சுருண்டதும் ஆகிய சடையை உடையவனும் ஆகிய பெருமானின் ஊர், சந்திரன் தங்கும் வண்ணம் உயர்ந்த மரங்கள் கொண்ட சோலைகளால் சூழப்பட்டதும் கல்வியாளர்களாக விளங்கி செல்வர்களாக திகழ்ந்த அடியார்கள் நிறைந்ததும் ஆகிய சித்தீச்சரம் தலமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் சென்றடைந்து, நெஞ்சமே நீ பெருமானை வழிபடுவாயாக.

பாடல் 4:

நீடவல்ல நிமிர் புன்சடை தாழ

ஆடவல்ல அடிகள் இடமாகும்

பாடல் வண்டு பயிலும் நறையூரில்

சேடர் சித்தீச்சரமே தெளி நெஞ்சே

விளக்கம்:

பதிகத்தின் முதல் மூன்று பாடல்களில் தலத்து அந்தணர்கள் மற்றும் மக்களின் பெருமையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், தலத்துப் பெருமானும் சிறந்த பெருமையை உடையவர் என்று குறிப்பிடுகின்றார். சேடர்=பெருமை வாய்ந்தவர்; நீடவல்ல=மேலும் மேலும் நீண்டு வளரவல்ல; சேடர் என்ற சொல்லினை, முதல் மூன்று பாடல்களில் குறிப்பிட்டது போன்று, தலத்து மக்களின் தன்மையை குறிப்பிடுகின்றது என்று பொருள் கொள்வதும் சிறப்பே.

பொழிப்புரை:

மேலும் மேலும் நீண்டு வளர்வதும் நிமர்ந்து நிற்பதும் ஆகிய சடை தாழ்ந்து தொங்கும் வண்ணம் நடனம் ஆடும் திறமை கொண்ட தலைவரின் இடமாக நறையூர் விளங்குகின்றது. சிறந்த முறையில் ரீங்காரமிட்டு பாடும் வல்லமை வாய்ந்த வண்டுகள் தொடர்ந்து பாடும் நறையூர் தலத்தில் உள்ளதும், சிறந்த பண்புகள் உடைய தலத்து மக்களால் போற்றப்படுவதும் ஆகிய சித்தீச்சரம் தலத்தினை, நெஞ்சமே, நீ தெளிந்து சிந்தனை செய்வாயாக.

பாடல் 5:

உம்பராலும் உலகின் அவராலும்

தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர்

நண்பு உலாவு மறையோர் நறையூரில்

செம்பொன் சித்தீச்சரமே தெளி நெஞ்சே

விளக்கம்:

உம்பர்=மேலுலகில் வாழும் தேவர்கள்; தேவர்கள் உட்பட்ட அனைத்து உயிர்களும் ஆன்ம போதத்தால் கட்டுண்டு காணப்படுகின்றன, உலகம், உலகத்தில் உள்ள பொருட்கள், மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் பற்றிய அறிவு, ஆன்ம போதம் என்றும் பசுபோதம் என்றும் பசு அறிவு என்று அழைக்கப்படும். இந்த அறிவு நிலையற்ற பொருட்களை அறிய உதவும் அறிவு என்பதால், நிலையான பெருமானையோ அவனது பெருமையையோ அறிய உதவாது. வேதங்களே பெருமானது பெருமையை முழுவதுமாக சொல்ல முடியாது என்று திருஞானசம்பந்தர் உணர்த்தும் பாடல் நமது நினைவுக்கு (1.98.8) வருகின்றது. பலதரப்பட்ட விஷயங்களை சொல்லி, வாழ்க்கை நெறியினை உணர்த்தும் வேதங்களே முழுமையாக சொல்ல முடியாத புகழினை உடைய பெருமான் என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம். இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணாதவன் என்றும் சொற்களைக் கடந்தவன் என்று பெருமானின் இயல்புகள் பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டு வருகின்றது. வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நெறிகளையும் எடுத்துரைக்கும் வேதங்கள் சொல்லாத செய்தியே இல்லை என்று பொதுவாக கூறுவார்கள். ஆனாலும் பல செய்திகளையும் தத்துவங்களையும் விளக்கமாக உரைக்கும் வேதங்களும், அருளாளர்கள் இயற்றிய பாடல்களும், பெருமானின் ஒரு சில செய்கைகளையே சொல்ல முடிகின்றது என்று உணர்த்தி, பெருமானின் பெருமை சொற்களையும் கடந்தது என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் அருட்செய்கைகளும் வீரச் செயல்களும் பலவாக விரிந்து கொண்டே இருப்பதால், அவற்றை சொல்வதற்கு வேதங்களாலும் கீதங்களாலும் இயலவில்லை என்று உணர்த்துகின்றார்.

மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன் தன்

தலை கலனாகப் பலி திரிந்து உண்பர் பழி ஓரார்

சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்

சிலவல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே

பொழிப்புரை:

தேவர்களாலும், நிலவுலகில் வாழும் மக்களாலும் அளக்கமுடியாத பெருமையை உடையவன் சிவபெருமான்; எனவே அவரது தன்மையை முழுவதும் அளந்து சொல்வது எவர்க்கும் இயலாது. அத்தகைய பெருமை வாய்ந்த பெருமான் வாழ்கின்ற ஊராகிய நறையூர், நட்புத் தன்மையில் மேம்பட்ட மறையோர்கள் வாழும் ஊராகும். இத்தகைய பெருமை உடைய நறையூர் தலத்தினில் உள்ள சித்தீச்சரம் திருக்கோயிலில் உள்ள செம்பொன் போன்று உயர்ந்தவராகிய பெருமானை, நெஞ்சமே நீ தெளிந்து உணர்ந்து வழிபடுவாயாக.

பாடல் 6:

கூருலாவு படையான் விடையேறி

போருலாவு மழுவான் அனலாடி

பேருலாவு பெருமான் நறையூரில்

சேரும் சித்தீச்சரமே இடமாமே

விளக்கம்:

விடை=இடபம்; திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் செல்லும்போது தேவர்கள் படையாக சூழ்ந்து வர தேரினில் அமர்ந்த வண்ணம் சிவபெருமான் முதலில் போருக்கு செல்கின்றார். பின்னர் பெருமானின் பாரத்தைத் தாங்க முடியாமல் தேரின் அச்சு முரிந்துவிடவே, திருமால் விடையாக மாறி பெருமானை தாங்கிக்கொள்ள, தேவர்கள் படையாக புடைசூழ, போரினில் பெருமான் பங்கேற்ற தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. பேர்=புகழ்;

பொழிப்புரை:

கூர்மையான சூலப் படையை உடையவனும், இடபத்தின் மீது அமர்ந்து கொண்டு படைகள் சூழ, திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்றவனும் செல்பவனும், போரில் பயன்படும் மழுவாள் படையை உடையவனும், அனலில் நின்று நடனம் ஆடுபவனும், அனைத்து உலகங்களிலும் புகழ் பெற்று விளங்குபவனும், ஆகிய சிவபெருமான் நறையூர் தலத்தில் உள்ள சித்தீச்சரம் திருக்கோயிலில் உறைகின்றார். அந்த இடமே நாம் அனவைரும் சென்று சேர்ந்து இறைவனை வழ்பட வேண்டிய இடமாகும்.

பாடல் 7:

அன்றி நின்ற அவுணர் புரம் எய்த

வென்ற வில்லி விமலன் விரும்பும் ஊர்

மன்றில் வாச மணமார் நறையூரில்

சென்று சித்தீச்சரமே தெளி நெஞ்சே

விளக்கம்:

அன்றி=வேறுபட்டு; சிவநெறியிலிருந்து மாறுபட்டு நின்ற; அவுணர்=அரக்கர்கள், திரிபுரத்து அரக்கர்கள்; மன்றில்=பொது அரங்குகள்;

பொழிப்புரை:

சிவமாகிய அன்பு நெறியிலிருந்து மாறுபட்டு அனைவர்க்கும் பகைவர்களாக திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒருங்கே எரித்து வீழ்த்திய அம்பினைச் செலுத்திய வில்லினை உடையவனும், இயற்கையாகவே மலங்களிலிருந்து நீங்கியவனும் ஆகிய பெருமான் விரும்பும் ஊர், நிலையாக நறுமணம் நின்று கமழும் பொது அரங்குகளை உடைய நறையூர் தலமாகும். நெஞ்சமே, இந்த தலம் சென்றடைந்து ஆங்கே உள்ள சித்தீச்சரம் என்ற திருக்கோயிலில் உள்ள பெருமானை வழிபாட்டு, உனது கலக்கங்கள் நீங்கப்பெற்று தெளிந்த மனத்துடன் இருப்பாயாக.

பாடல் 8:

அரக்கன் ஆண்மை அழிய வரை தன்னால்

நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர்

பரக்கும் கீர்த்தி உடையார் நறையூரில்

திருக்கொள் சித்தீச்சரமே தெளி நெஞ்சே

விளக்கம்:

பரக்கும் கீர்த்தி=மேலும் மேலும் பரவுகின்ற புகழ்; திரு=சிவஞானம்;

பொழிப்புரை:

கயிலாய மலையின் பெருமையை உணராது, அந்த மலையை பேர்த்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு, தனது பயணத்தைத் தொடரலாம் என்ற எண்ணத்துடன், கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் ஆண்மை அழியும் வண்ணமும், அவனது உடல் உறுப்புகள் கயிலாய மலையின் கீழே அகப்பட்டு நொறுங்கும் வண்ணம், ஊன்றப்பட்ட கால் பெருவிரலை உடைய பெருமான், விரும்புகின்ற ஊர் நறையூர் ஆகும். மேலும் மேலும் பரவுகின்ற புகழினை உடைய மக்கள் வாழ்கின்ற நறையூர் தலத்தினில் அமைந்துள்ள, சிவஞானம் அளிக்கவல்ல சிறந்த சிறப்பினை உடைய சித்தீச்சரம் திருக்கோயிலை நினைத்து, மனமே நீ தெளிவினை அடைவாயாக.

பாடல் 9:

ஆழியானும் மலரில் உறைவானும்

ஊழி நாடி உணரார் திரிந்து மேல்

சூழு நேட எரியாம் ஒருவன் சீர்

நீழல் சித்தீச்சரமே நினை நெஞ்சே

விளக்கம்:

ஆழி=சக்கரப்படை; ஊழி=நீண்ட காலம்; சூழும்=சுற்றிலும்;

பொழிப்புரை:

சக்கரப்படை உடைய திருமாலும், தாமரை மலர் மேல் அமரும் பிரமனும், நீண்ட நெடுங்காலம் தங்களின் முன்னே தோன்றிய தீப்பிழம்பினைச் சூழ்ந்துள்ள இடங்களில் தேடியும் அவர்களால், அவர்களால் அந்த தீப்பிழம்பின் அடியையோ முடியையோ காணமுடியாமல் திகைத்தனர். இவ்வாறு அவர்கள் திகைத்து நிற்கும் வண்ணம், எரியுருவமாக ஓங்கி நின்ற ஒப்பற்ற பெருமானின் சிறப்பு வாய்ந்த இடமாக திகழும் நறையூர் சித்தீச்சரம் திருக்கோயிலை, நெஞ்சமே நீ நினைத்து வழிபடுவாயாயக.

பாடல் 10:

மெய்யின் மாசர் விரிநுண் துகிலார்

கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்

உய்ய வேண்டில் இறைவன் நறையூரில்

செய்யும் சித்தீச்சரமே தவமாமே

விளக்கம்:

மாசர்=அழுக்கு உடையவர்; கழறும்=சொல்லும்; சித்தீச்சரம் சென்று செய்யப்படும் வழிபாடு தவமாக கருதப் படுவதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தவம் செய்வது எதற்காக, உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு முக்திப் பேற்றினை அடைவதற்காகத் தானே. அத்தகைய முக்திப் பேறு எளிதாக கிடைக்கும் வேறு வழி இருப்பின் நாம் நமது உடலினை வருத்திக் கொண்டு தவம் செய்வதைத் தவிர்க்கலாம் அல்லவா. நீராடுவதை தவிர்ப்பதாலும் நுண்ணிய ஆடைகளை அணிவதைத் தவிர்ப்பதாலும் உடலில் மாசு உடையவர்களாக விளங்கும் சமணர்களின் பேச்சினை பொருட்படுத்தாமல் இருக்குமாறு அறிவுரை கூறும் ஞானசம்பந்தர், வாழ்க்கையில் உய்வினை அடைய வேண்டும் என விரும்புவோர் நறையூர் சித்தீச்சரம் சென்று வழிபடவேண்டும் என்று கூறுகின்றார். அத்தகைய வழிபாடே, சிறந்த தவமாக பெருமானால் கருதப்பட்டு முக்தி நெறி வாய்க்கும் என்று கூறுகின்றார். பெருமானை வழிபடுதலும், தேவாரப் பாடல்களை பாடுதலும் தவத்திற்கு இணையாக கருதப்படுவதாக மூவர் முதலிகள் உணர்த்துகின்றனர். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்பது பொருத்தம்.

புளமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.16.11), சந்தங்களுடன் பொருத்தி தேவாரப் பாடல்களை பாடியும் ஆடியும் பெருமானைக் கொண்டாடுவது தவம் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். அதாவது தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு காட்டினில் உறைந்து தங்களது புலன்களை அடக்கி ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து தவம் செய்வதால், பண்டைய நாட்களில் முனிவர்கள் பெற்ற பலனை நாம் எளிதில் அடையும் வழி தேவாரப் பதிகங்களை முறையாக ஓதுவது என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். கலியுகத்தில் பெருமானை நினைத்து அவனது திருநாமங்களை சொல்வதே பெரிய பலன்களைத் தேடித் தரும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். நால்வர் பெருமானார்களும் தங்களது பாடல்களில் எத்தைகய செயல்கள் தவத்திற்கு சமமாக இறைவனால் மதிக்கப்பட்டு நமக்கு பலன்களைத் தரும் என்று கூறுகின்றனர்.

பொந்தின் இடைத் தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை

அந்தண் புனல் வருகாவிரி ஆலந்துறை அரனைக்

கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன்

சந்தம் மலி பாடல் சொலி ஆடத் தவமாமே

திருவண்ணாமலை பதிகத்தின் கடைப் பாடலில் (1.10.11) அண்ணாமலை குறித்து ஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதிகத்தினை முறையாக ஓதும் வல்லமை பெற்ற அடியார்களின் திருவடிகளைப் பேணிப் போற்றுதல் தவம் என்று சொல்லப் படுகின்றது. கதிரவனின் ஒளி உள்ளே புகாத வண்ணம், நெருங்கியும் அடர்ந்தும் மரங்கள் வளர்ந்துள்ள மலைச் சாரல் உடையது திருவண்ணாமலை என்று கூறுகின்றார். கொம்பு வாத்தியங்களிலிருந்து எழும் இனிய ஓசை கேட்கும் குயில்கள் தாங்களும் பதிலுக்கு கூவி இனிய ஒலி எழுப்பும் தலம் சீர்காழி தலம் என்று கூறுகின்றார்.

வெம்புந்திய கதிரோன் ஒளி விலகும் விரி சாரல்

அம்புந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனைக்

கொம்பு உந்துவ குயில் ஆலுவ குளிர் காழியுள் ஞான

சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே

தூங்கானை மாடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.59.1) ஞானசம்பந்தர், தவம் செய்வதற்கு தகுந்த இடம் தேடி அலையும் மனிதர்களே, நீங்கள் தூங்கானைமாடம் (இன்றைய நாளில் பெண்ணாகடம் என்று அழைக்கப் படுகின்றது) தலம் சென்று பெருமானை வழிபட்டு தவத்தின் பயனை அடைவீர்கள் என்று அறிவுரை கூறுகின்றார், பிணியாக கருதப் படுவதும் உயிருடன் ஓடுங்கி இருந்து தக்க சமயத்தில் வெளிப்பட்டு துன்பங்களை விளைவிக்கும் வினைகளும், இவ்வாறு வினைகளை அனுபவிப்பதற்கு காரணமான பிறவியும், இறப்பு மற்றும் இறப்பினுக்கு முன்னே அனுபவிக்க வேண்டிய பல துன்பங்களையும் ஒழித்து விட்டு, பிறப்பிறப்பு இல்லாத பேரின்பம் அடைய வேண்டும் என்ற விருப்பத்துடன் தவம் செய்வதற்கு உரிய இடத்தினைத் தேடி நிற்கும் மனிதர்களே, நீங்கள் அனைவரும் பெருமானின் திருவடி நிழலில் தங்கும் வாய்ப்பினைப் பெற்று அவனது கருணைக்கு ஆளாக விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய ஒரு இடத்தினை நான் உங்களுக்கு உணர்த்துகின்றேன், பெண்ணாகடம் என்று அழைக்கப்படும் தலத்தினில் உள்ள தூங்கானைமாடம் திருக்கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு நீங்கள் விரும்பிய தன்மையை பெறுவீர்களாக என்று இந்த பாடலில் கூறுகின்றார்,

ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்தாய வாழ்க்கை

ஒழியத் தவம்

அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழற்கீழ்

ஆளாம் வண்ணம்

கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழுமனைகள் தோறும்

மறையின் ஒலி

தொடங்கும் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம்

தொழுமின்களே

பண்டைய நாட்களில் முனிவர்கள் தவம் புரிந்தது எதற்காக, நிலவுலக வாழ்க்கையைக் கடந்து என்றும் அழியாத முக்தி உலகத்தினை பெரும் நோக்கத்துடன் தானே, அவர்கள் தவம் புரிந்தனர். உயிர்க்கு சலிப்பினை ஏற்படுத்தும் பிறப்பு, இறப்பு மீண்டும் இறப்பதற்காக பிறப்பு என்ற தன்மையை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தூங்கானை மாடம் சென்று பெருமானை தொழுவீர்கள் என்று, இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் ஞானசம்பந்தர் கூறுகின்றார். தவம் செய்யும் முறையினை அறியாமல் இருப்பதால் உங்களுக்கு இருக்கும் குறையினை நீக்கும் வழியினை நான் சொல்கின்றேன் கேட்பீர்களாக என்று தூங்கானை மாடம் சென்று இறைவனை வழிபட்டு பயன் அடையுமாறு வழிகாட்டுகின்றார். இதே அறிவுரை இந்த பதிகத்தின் நான்காவது, ஏழாவது, எட்டாவது ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களிலும் கூறப்படுகின்றது

சாநாளும் வாழ்நாளும் தோற்றம் இவை சலிப்பாய வாழ்க்கை

ஒழியத் தவம்

ஆமாறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவில்லை

ஆனேறு உடைப்

பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த

புன்சடையினான் உறையும்

தூ மாண் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம்

தொழுமின்களே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடல் (1.102.8) ஒன்றினில் பெருமானின் புகழினை குறிப்பிட்டு அவனது திருநாமங்களை சொல்லித் தொழும் தன்மை தவத்திற்கு ஒப்பாகும் என்று கூறுகின்றார். பாடலின் முதல் இரண்டு அடிகளில், சீர்காழி நகரினில் கடல் வாணிபம் செழித்து வளர்ந்திருந்த தன்மையை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இலங்கை அரசன் இராவணனை முதலில் வருத்தி, பின்னர் அவனது நிலைக்கு இரக்கம் கொண்டு அருள் செய்த மன்னவனே என்றும் மிகவும் வேகமாக கீழே இறங்கி வந்த கங்கை நதியினைத் தனது சடையில் தாங்கிய வல்லமை உடைய அரசே என்றும் பெருமானைப் புகழ்ந்து பணிவதே தவம் என்று இந்த பாடலில் ஞானசம்பந்தர் கூறுகின்றார், உலம்=வலிய; ஆர்கலி=ஆரவாரம் செய்யும் கடல்; ஓதம்=அலை;

உலம் கொள் சங்கத்தார் கலி ஓதத்து உதையுண்டு

கலங்கள் வந்து கார் வயலேறும் கலிக்காழி

இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த

சலம் கொள் சென்னி மன்னா என்னத் தவமாமே

தேவாரப் பதிகங்களை பலமுறை மனதினில் எண்ணிப் பெருமானை புகழ்ந்து வணங்குதல் தவம் என்று பருப்பதம் தலத்தின் பாடலில் (1.118.11) ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். பெருமானின் உருவத்தினை நாம் மனதினில் கற்பனை செய்து தியானிக்கும் வண்ணம், பெருமானின் திருவுருவச் சிறப்புகள் அருளாளர்களால் பல பாடல்களில் சொல்லப் படுகின்றன.

வெண் செநெல் விளை கழனி விழவொலி கழுமலத்தான்

பண் செலப் பல பாடலிசை முரல் பருப்பதத்தை

நன்சொலினால் பரவு ஞானசம்பந்தன் நல்ல

ஒண் சொலின் இவை மாலை உருவெணத் தவமாமே

கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில் (3.38) தலத்து அடியார்களிடம் சில வினாக்களை தொடுத்து, பெருமானின் தன்மைகளை தனக்கு விளக்குமாறு திருஞானசம்பந்தர் கேட்கின்றார். இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில் தலத்து அடியார்களை, உயர்வாய தவம் பேணும் அடியார்கள் என்று குறிப்பிடுகின்றார். மிகு மங்கையாள்=தவத்தினில் மேம்பட்ட பார்வதி தேவி; உமையன்னைக்கும் கங்கைக்கும் உள்ள வேறுபாடு மிகவும் அழகாக இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமானையே மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தவம் செய்து தனது அன்பினால் பெருமானைக் கவர்ந்து அவனது உடலில் இடம் பெற்றவள் உமையன்னை. கங்கையின் நிலையோ வேறு; அவளது செருக்கினை அடக்கும் பொருட்டு, தனது சடையினில் கங்கை நதியினை சிறை வைக்கின்றார் பெருமான்.

உள்ளவாறு எனக்கு உரை செய்ம்மின் உயர்வாய மாதவம் பேணுவீர்

கள்ளவிழ் பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை காதலான்

பிள்ளை வான்பிறை செஞ்சடைம் மிசை வைத்ததும் பெரு நீரொலி

வெள்ளம் தாங்கியது என் கொலோ மிகு மங்கையாள் உடன் ஆகவே

களர் எனப்படும் தலத்தின் மீது அருளிய பாடல்களை முறையாக ஓதும் அடியார்கள் தவம் செய்தவர்களாக கருதப் படுவார்கள் என்று அந்த பதிகத்தின் கடைப் பாடலில் (2.51.11) ஞானசம்பந்தர் கூறுகின்றார். செந்து என்பது தமிழ் பண் வகைகளில் ஒன்று. அந்த பண் போன்று இனிய மொழியினை உடைய மகளிர் திருக்களர் தலத்தில் வாழ்ந்து வந்ததாக சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அந்தி வானம் போன்று சிவந்த மேனி உடையவனும் தேவர்களின் தலைவனாக விளங்குபவனும் ஆகிய பெருமானை ஞானசம்பந்தன் அருளிய பத்து பாடல்களையும் முறையாக பாடுதல் தவத்திற்கு ஒப்பான செயலாகும்.

இந்து வந்தெழு மாட வீதி எழில் கொள் காழிந் நகர்க் கவுணியன்

செந்து நேர் மொழியார் அவர் சேரும் திருக்களருள்

அந்தி அன்னதோர் மேனியானை அமரர் தம் பெருமானை ஞானசம்

பந்தன் சொல்லிவை பத்தும் பாடத் தவமாமே

கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.105.10), பெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குதல் தவம் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நாம் சிவபெருமானை வணங்கிப் போற்றுவதை விரும்பாத பலர் நம்மை திசை திருப்ப முயற்சி செய்வதை நாம் இன்றும் காண்கின்றோம். அன்றும் இந்த நிலை இருந்ததை தேவாரப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. குறிப்பாக சமணர்களும் புத்தர்களும், இந்து மதத்தின் பெருமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்த பல செயல்களை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். அத்தகையோரின் பேச்சினில் மயங்கி அறிவிழந்து தமது நிலையிலிருந்து தடுமாறாமல் தொடர்ந்து சிவபெருமானின் திருவடிகளை போற்றி வழிபடுதல் சிறந்த தவம் என்று இங்கே ஞானசம்பந்தர் கூறுகின்றார். சீறுதல்=அழித்தல்; முடி அழிக்கப்பட்டு மழித்த தலையை உடைய சமணர்கள்; கொடியன்=கொடியினை உடையவன்; வீறு=பெருமை; ஏதம்=குற்றம்; பேறு=ஆன்மாக்கள் அடையவேண்டிய சிவானந்தப் பேறு.

சீறுலாவிய தலையினர் நிலையிலா அமணர்கள் சீவரார்

வீறிலாத வெஞ்சொல் பல விரும்பன்மின் சுரும்பமர் கீழ்வேளூர்

ஏறுலாவிய கொடியனை ஏதமில் பெருந்திருக்கோயில் மன்னு

பேறுலாவிய பெருமையன் திருவடி பேணுமின் தவமாமே

காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடலில் (3.29.8) நமது தலையினைத் தாழ்த்தி, உணர்வு பூர்வமாக, பெருமானின் பெருமையையும் நமது சிறுமையையும் நினைத்து, ஒன்றிய மனத்துடன் இறைவனை வணங்குதல் தவம் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். சிலை=வில்; கலை=மலை; புறவு=முல்லை நிலம்; ஒவ்வொரு பிரளயத்திலும் கயிலாய மலை தான் அழியாமல் இருப்பது மட்டுமன்றி சற்று வளரும் தன்மை உடையது என்றும் கூறுவார்கள். அதனை உணர்த்தும் பொருட்டு சிறப்புடைய கயிலாய மலை என்று ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.

சிலை தனால் முப்புரம் செற்றவன் சீரினால்

மலை தனால் வல்லரக்கன் வலி வாட்டினான்

கலை தனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி

தலை தனால் வணங்கிடத் தவமது ஆகுமே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (3.48.8) மழபாடி மன்னனைத் தங்களது தலையினைத் தாழ்த்தி தொழும் அடியார்கள் தவப்பலனை பெறுவார்கள் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். வேதநெறி மற்றும் சிவநெறியை பின்பற்றும் அடியார்களுடன் சேராத தன்மையை உடைய திரிபுரத்து அரக்கர்களை மருவார் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். உலகில் தோன்றும் பொருட்கள் அனைத்தும் கலை நயத்துடன் திகழ்வதும், அந்த பொருட்களுடன் இறைவன் இணைந்து இருப்பதையும் கலையினான் என்ற சொல் மூலம் ஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

கலையினான் மறையான் கதி ஆகிய

மலையினான் மருவார் புரம் மூன்று எய்த

சிலையினான் சேர் திருமழபாடியைத்

தலையினால் வணங்கத் தவம் ஆகுமே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.120.6) அமைச்சர் குலச்சிறையாரை தவம் புரிந்தவர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அமைச்சராக பணி புரிந்தவர் எத்தகைய தவத்தினை செய்திருக்க முடியும். பெருமானின் அடியர்களைக் கண்டபோது, அவர்களது நாடு, குலம், கோத்திரம், குணம் ஆகியவற்றை ஆராயாது, அனைவரையும் வழிபட்ட செய்கையே இங்கே தவம் என்று குறிப்பிடப்படுகின்றது.

நலமிலராக நலமதுண்டாக நாடவர் நாடறிகின்ற

குலமிலராக குலமதுண்டாகத் தவம் பணி குலச்சிறை பரவும்

கலை மலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன்

அலைமலி புனல்சேர் சடைமுடி அண்ணல் ஆலவாயாதும் இதுவே

பெருமானின் திருவடிகளைத் தங்களது மனதினில் தியானிப்பவர்களின் செயல் தவமாக மதிக்கப்பட்டு, அவர்கள் தவத்தின் பயனை அடைவார்கள் என்று சீர்காழி (வெங்குரு என்பது சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்து பாடல் ஒன்றினில் (3.94.5) ஞானசம்பந்தரால் உணர்த்த படுகின்றது. மிக்கவர்=அன்பின் மிக்கவர்; அக்கு=எலும்பு; தவம் செய்யப்படுவது வீடுபேறு அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமானின் திருவடிகளை தியானித்தால் மட்டுமே, வீடுபேற்றினை அடையலாம் என்பதால், பெருமானின் திருவடி வழிபாடு தவமாக மதிக்கப் படுகின்றது.

மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய

அக்கினொடு அரவு அசைத்தீரே

அக்கினொடு அரவு அசைத்தீர் உமது அடியிணை

தக்கவர் உறுவது தவமே

சிறுகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.97.6) பெருமானை வாழ்த்தும் அடியார்கள் தவப்பேறு உடையவர்கள் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். அவர்கள் எதனைக் கண்டும் அச்சம் கொள்ளாதவர்களாகவும் பல நலன்கள் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.

செங்கயல் புனல் அணி சிறுகுடி

மங்கையை இடம் உடையீரே

மங்கையை இடம் உடையீர் உமை வாழ்த்துவார்

சங்கை அது இலர் நலர் தவமே

பெருமானை முறையாகத் தொழுவதே தவம் என்று திருவையாறு தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (5.27.8) அப்பர் பிரான் கூறுகின்றார். முன்னையாறு=முன்+நையாறு, நையாறு=துன்ப நெறி; துன்பம் அளிக்கும் பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டு, அதினின்று விடுதலை தேடும் மனிதர்கள்; பேதைகாள்=அறிவிலிகள் உயிர்கள்; பின்னையாறு=பின்+நையாறு; மன்னையாறு= மன்+ஐயாறு, மன்=நிலை பெற்ற; ஆறு=முறை, பெரியோர்கள் வகுத்த வழிமுறை; பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டு அந்த நிலை தரும் துன்பங்களில் உழன்று எத்துணை முயற்சி செய்தாலும் வெளியே வர முடியாமல் தவிக்கும் மாந்தர்களே, நான் உங்களுக்கு தீர்வினை சொல்கின்றேன் கேட்பீர்களாக; சிவபெருமானை நோக்கி, பெருமானே இந்த துன்பச் சுழலிலிருந்து என்னை பிரித்து ஆட்கொள்வாயாக என்று நீங்கள் வேண்டுவீர்களாக. நிலையான திருவையாறு தலத்தில் உறைபவனும், பெரிய தவத்தோனாகவும் திகழ்கின்ற பெருமான் தன்னை முறையாக அடியார்கள் தொழுவதை தவமாக ஏற்றுக்கொண்டு அருள் புரிகின்றான் என்று அப்பர் பிரான் உணர்த்துவதாக அமைந்த பாடல்.

முன்னையாறு முயன்று எழுவீர் எலாம்

பின்னையாறு பிரி எனும் பேதைகாள்

மன்னையாறு மருவிய மாதவன்

தன்னையாறு தொழத் தவமாகுமே

கொண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில், நமது தலையினைத் தாழ்த்தி இறைவனை வணங்குவதே தவம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நிலையினார் வரை=ஊழிக்காலத்திலும் அழியாது நிற்கும் கயிலாய மலை; விறல்=வலிமை;

நிலையினர் வரை நின்று எடுத்தான் தனை

மலையினால் அடர்த்து விறல் வாட்டினான்

குலையினார் பொழில் கொண்டீச்சுரவனைத்

தலையினால் வணங்கத் தவமாகுமே

மருகல் பெருமானை வணங்குவதே தவம் என்று திருமருகல் தலத்தின் மீது அருளிய பாடலில் (5.88.1) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இறைவனின் திருவடிகளை வாழ்த்தி வணங்கினால் தவம் பெருகும் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இதன் மூலம் இறைவனின் திருவடிகளை வாழ்த்தி வணங்குவதே தவம் என்று நமக்கு உணர்த்துகின்றார்,

பெருகலாம் தவம் பேதமை தீரலாம்

திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்

பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்

மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே

சிவனடியார்களின் வேடம் கண்டு அவர்களை அடையாளம் ;புரிந்து கொண்டு மகிழ்வுடன், அவர்களைத் தலைவராக மதித்து, அவர்களது திருப்பாதங்களை விளக்கி பின்னர் பலவிதமாக தொண்டுகள் செய்து, அவர்களது கால்களைக் கழுவிய நீரினைத் தலையினில் தெளித்துக் கொள்ளுதல் பெரிய தவத்திற்கு ஒப்பானது என்று திருமூலர் கூறுகின்றார். இந்த செயலை செய்யும் பழக்கத்தினை ஒருவரது இளைய வயதினிலே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றார்.

அறியாப் பருவத்து அரன் அடியாரைக்

குறியால் அறிந்து இன்பம் கொண்டு அது அடிமை

குறியார் சடை முடி கூட்டி நடப்பார்

மறியார் புனல் மூழ்க மாதவமாமே

மேற்கண்ட பாடல்கள், மனம் ஒன்றி உணர்வு பூர்வமாக பெருமானைத் தலை தாழ்த்தி வணங்குதலும், இறைவன் குடிகொண்டிருக்கும் திருத்தலங்கள் சென்று அவனை வழிபடுவதும், பெருமானின் திருநாமங்களையும் அவனது பெருமையையும் சொல்லி அவனை வழிபடுவதும், தேவாரப் பாடல்களை பாடும் அடியார்களின் திருவடிகளைப் பேணிப் போற்றுவதும், திருமுறை பாடல்கள் மூலம் பெருமானின் திருவுருவத் தன்மையை அறிந்து கொண்டு அவற்றை மனதினில் நிலைநிறுத்தி தியானம் செய்து வழிபடுவதும், தேவாரப் பாடல்களை பொருள் உணர்ந்து முறையான பண்ணுடன் இசைத்து மனம் ஒன்றி பாடி இறைவனை வழிபடுவதும், பெருமானின் திருவடிகளை வணங்கிப் போற்றுவதும், பெருமானின் அடியார்களது திருப்பாதங்களை கழுவிய நீரினை புனித நீராக கருதி தங்களது தலையில் தெளித்துக் கொண்டு போற்றுவதும் தவத்திற்கு சமமான செயல்கள் என்று அருளாளர்கள் கூறியுள்ளனர். இந்த செயல்கள் அனைத்தும் மிகவும் எளிய செயல்கள் என்பதால், அவற்றை பின்பற்றி நாமும் பெருமானின் அருளின் துணை கொண்டு தவப்பயனை அடைவோமாக.

பொழிப்புரை:

நீராடுவதைத் தவிர்ப்பதால் அழுக்கு சேர்ந்த உடலினை உடையவராக, விரித்து கட்டும் நுண்ணிய ஆடைகள் இல்லாதவர்களாக, மற்றவர் இடும் பிச்சையை கைகளில் ஏற்றுக்கொண்டு உண்ணும் தன்மை உடையவராக பல இடங்களிலும் திரியும் சமணர்கள், பெருமானைப் பழித்து கூறும் சொற்களை, உலகத்தவரே நீங்கள் பொருட்படுத்தாது விலக்குங்கள். நீங்கள் வாழ்வினில் உண்மையாகவே உய்வினை அடையவேண்டும் என்று விரும்பினால், நறையூரில் உறைகின்ற சித்தீச்சரம் திருக்கோயில் சென்று பெருமானை வழிபடுவீர்களாக. இந்த செயல் சிறப்பான தவமாக கருதப்பட்டு, தவத்தின் பயனை உங்களுக்கு பெற்றுத் தரும்.

பாடல் 11:

மெய்த்துலாவு மறையோர் நறையூரில்

சித்தன் சித்தீச்சரத்தை உயர் காழி

அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்

பத்தும் பாடப் பறையும் பாவமே

விளக்கம்:

மெய்த்து=உண்மையான வாழ்க்கை வாழ்ந்து; அத்தன்=தந்தை; இந்த பாடலில் சித்தன் என்று இறைவனை ஞானசம்பந்தர் அழைக்கின்றார்.

பொழிப்புரை:

வாய்மையே பேசி உண்மையான வாழ்க்கை நடத்தும் மறையவர்கள் நிறைந்த நறையூர் தலத்தினில் உள்ள சித்தீச்சரம் திருக்கோயிலில் உறையும் சித்தன் ஆகிய பெருமானை, பல வகையிலும் உயர்ந்த காழி நகரத்தைச் சாந்தவனும், தனது தந்தையாக கருதி சிவபெருமானின் திருப்பாதங்களைத் தனது தலை மீது அணிகலனாக விளங்கும் வண்ணம் பெருமானின் திருவடிகளை வணங்குபவனும் ஆகிய, ஞானசம்பந்தன் அருளிய இந்த பத்து பாடல்களையும் பாடியும் அடியார்களின் பாவங்கள் முற்றிலும் மறைந்துவிடும்.

முடிவுரை;

இந்த பதிகத்தின் பல பாடல்களில் தலத்து அடியார்களின் சிறப்பு எடுத்துரைக்கப் படுகின்றது. பதிகத்தின் முதல் பாடலில் ஊர்தோறும் தெரிந்து பலியேற்று உயிர்களுக்கு அருள் புரிபவன் என்று கூறுகின்றார். காடுகளில் உள்ள முனிவர்களின் இல்லங்களும் சென்று பலியேற்ற இறைவன் என்று தாருகவனத்து நிகழ்ச்சியை இரண்டாவது பாடலில் கூறுகின்றார். கனகம் அனைய திருமேனியை உடைய பெருமான் என்று பெருமானின் திருமேனியை சிறப்பித்து மூன்றாவது பாடல் குறிப்பிடுகின்றது. சடைகள் தாழும் வண்ணம் நடனம் ஆடும் பெருமான் என்று நான்காவது பாடலில் உணர்த்துகின்றார். எவராலும் அளக்க முடியாத பெருமை உடையவன் என்று ஐந்தாவது படாலில் குறிப்பிடும் சம்பந்தர், ஏழுலகும் புகழும் வண்ணம் திகழ்பவன் பெருமான் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார்.

திரிபுரங்களை எரித்து அழித்த அம்பினை விடுத்த வில்லினை உடைய பெருமான் என்று ஏழாவது பாடலில் உணர்த்தும் சம்பந்தர், அரக்கன் இராவணனின் ஆண்மையை வெற்றி கொண்டவர் என்று எட்டாவது பாடலில் கூறுகின்றார். திருமாலும்
பிரமனும் நீண்ட நேரம் தேடியும் காண முடியாத திருவடிகளையும் திருமுடியையும் கொண்ட பெருமான் என்று ஒன்பதாவது பாடலில் இறைவனின் சிறப்பினை உணர்த்திய பெருமான், மாற்று மதத்தவர்கள் பெருமானின் தன்மைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் அவனை இழித்து கூறுவதை பொருட்படுத்த வேண்டாம் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், இந்த பதிகத்தை முறையாக ஓதும் அடியார்களின் பாவங்கள் மறைந்து விடும் என்று கூறிகின்றார். பலதரப்பட்ட சிறப்புகள் வாய்ந்த நறையூர் தலத்தினில் உள்ள சித்தீச்சரம் திருக்கோயிலில் உறைகின்ற பெருமான் சிறப்புகளை ஞானசம்பந்தரின் பதிகம் மூலம் அறிந்து கொண்ட நாம், இந்த பதிகத்தை முறையாக ஓதியும், இந்த தலம் சென்றடைந்து பெருமானை வணங்கியும் உயர்ந்த தவத்தின் பயனை அடைந்து, இம்மையிலும் மறுமையிலும் இன்பமுடன் வாழ்வோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Oorulaavu Bali Kondu
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

ஊருலாவு பலி கொண்டு


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: