Go Back

22/03/21

முந்தி நின்ற வினைகள்


முந்தி நின்ற வினைகள் - பின்னணி


வைத்தீச்வரன் கோயில் (தேவாரப் பதிகங்களில் புள்ளிருக்குவேளூர் என்று அழைக்கப்படும் தலம்) சென்று வைத்தியநாதரை, கள்ளார்ந்த என்று தொடங்கும் பதிகம் பாடி போற்றி வணங்கிய பின்னர் திருஞானசம்பந்தர், திருநின்றியூர் திருநீடூர் மற்றும் திருப்புன்கூர் தலங்கள் சென்று பெருமானை வணங்கி பதிகங்கள் பாடியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் தெரிவிக்கின்றார். நீண்ட புகழ் வாய்ந்த திருநின்றியூர் சென்று ஆங்கே வீற்றிருக்கும் நிமலனாரின் திருவடிகளைத் தொழுது பெருமான் மீது காதல் கொண்டு அவரைப் போற்றி சிறந்த தமிழ்ப்பதிகம் பாடிய ஞானசம்பந்தர், சிறப்பு வாய்ந்த திருநீடூர் தலம் சென்று பெருமானை வணங்கிய பின்னர் திருபுன்கூர் தலம் சென்று நடனம் ஆடும் பெருமானின் திருப்பாதங்களை சிறப்பித்து அவனது அருளை இறைஞ்சி பதிகம் பாடினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய, சூலம்படை சுண்ணப்பொடி என்று தொடங்கும் பதிகத்தினை (1.18) சிந்தித்த நாம் இப்போது திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தை சிந்திப்போம். திருநீடூர் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லை. திருப்புன்கூர் தலத்தின் மீது, சம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பதிகங்கள் தலா ஒவ்வொன்று நமக்கு கிடைத்துள்ளது.

இந்த தலம் நந்தனார் சரித்திரத்துடன் தொடர்பு கொண்டது. திருக்கோயிலின் உள்ளே செல்லாமல் புறத்தே கோபுர வாயிலிலிருந்து நந்தனார் வழிபட்ட போது, இலிங்கத் திருமேனியை நந்தி மறைத்தால் காண முடியாமல் அவர் வருந்தினார். அவரது வருத்தத்தைப் போக்க திருவுள்ளம் கொண்ட பெருமான் நந்தியை சற்று விலகுமாறு கட்டளையிட்டார் என்று பெரிய புராணம் கூறுகின்றது. இன்றும் அந்த நந்தி சற்று விலகிய நிலையில் இருப்பதை நாம் காணலாம். பிராகாரத்தின் தென்கிழக்கு மூலையில் நந்தனாரின் சன்னதி உள்ளது. சுந்தரர் தனது பதிகத்தின் பாடலில் (7.55.2) இந்த தலத்துடன் ஏயர்கோன் கலிக்காமர் தொடர்பு கொண்டுள்ள நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். ஒரு சமயம் உலகெங்கும் மழை இன்றி தவித்தபோது மழை பெய்தால் பன்னிரு வேலி நிலம் திருக்கோயிலுக்கு தருவதாக வேண்டிக்கொள்ள, பெருமழை பெய்து வெள்ளமாக ஓடியது. பின்னர் அந்த மழையினை நிறுத்த, மேலும் பன்னிரு வேலி நிலம் தருவதாக வேண்டிக்கொள்ள மழை நின்றது என்று சுந்தரர் இந்த பதிகத்தில் கூறுகின்றார். வைத்தீஸ்வரன்கோயிலிருந்து அணைக்கரை வழியாக மணல்மேடு செல்லும் பாதையில் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு மேற்கே சுமார் மூன்று கி,மீ, தூரத்தில் அமைந்துள்ள தலம். கும்பகோணம் மணல்மேடு பேருந்து, சீர்காழி மணல்மேடு பேருந்து, மற்றும் மயிலாடுதுறை நகரப் பேருந்து இந்த தலம் வழியாக செல்கின்றன. இறைவனின் திருநாமம்=சிவலோகநாதர்; இறைவியின் பெயர்=சொக்க நாயகி. திருக்கோயிலில் உள்ள குளம், ஒரே இரவில் விநாயகப் பெருமானின் உதவியுடன் நந்தனார் வெட்டியதாக கூறப்படுகின்றது.

பாடல் 1:

முந்தி நின்ற வினைகள் அவை போக

சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்

அந்தம் இல்லா அடிகள் அவர் போலும்

கந்தம் மல்கு கமழ் புன்சடையாரே

விளக்கம்:

தலத்து இறைவனின் திருநாமம் சிவலோகநாதர் என்பது சிவனார் என்று சொல்லின் மூலம் உணர்த்தப் படுகின்றது. எந்த உயிரும் தான் கொண்டிருந்த உடலை விட்டு நீங்கிய பின்னர், தன்னுடன் பிணைந்துள்ள எஞ்சிய வினைகளைக் கழித்துக் கொள்ளும் பொருட்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க நேரிடுகின்றது. எஞ்சியுள்ள வினைகளின் தன்மை பற்றியே, அடுத்து எடுக்கவிருக்கும் உடலின் தன்மை இறைவனால் தீர்மானிக்கப் படுகின்றது. இவ்வாறு பிறவி எடுக்கும் முன்னமே, வினைகள் முன்னமே சென்று அந்த பிறவியின் தன்மையை நிர்ணயிப்பதையும் தக்க தருணத்தில், புதிய உடலுடன் பிணைந்துள்ள அந்த உயிர்கள், வினைகளை நுகர்ந்து கழிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் நாம் காண்கின்றோம். இவ்வாறு வினைகள் இருக்கும் நிலையினையே முந்தி நின்ற வினைகள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த வினைகளை அனைத்து உயிர்களும் அனுபவித்தே கழிக்க வேண்டிய நிலையில் பொதுவாக இருந்தாலும், சிவபெருமான் கருணையால் பக்குவப்பட்ட உயிர்களின் வினைகள் முற்றிலும் நீக்கப்படுகின்றன. அத்தகைய பக்குவம் பெறுவதற்கான முதற்படி பெருமானை வணங்கி வழிபடுதல். எனவே தான் சம்பந்தர் இந்த பாடலில், தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். பதிகத்தின் பத்தாவது பாடலில் காபாலி வேடத்தைக் கண்டு களித்து, பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் நமது மலங்களை இட்டு, உய்வினை அடையுமாறு அறிவுரை கூறுகின்றார்.

உயிர்கள் இணைந்திருக்கும் உடல் அழிகின்றது: அதனால் எஞ்சிய வினைகளை கழித்துக் கொள்ள உயிர் மீண்டும் பிறப்பு எடுக்க நேரிடுகின்றது. ஆனால் பெருமானோ அழிவின்றி என்றும் நிலையாக இருப்பவன். அவனுக்கு இறப்பு என்பதே இல்லை; மேலும் அவன் மலங்களின் கலப்பற்றவன். எனவே மலங்களைக் கழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. அதனால் இறந்த பின்னர் மற்றவர்களுக்கு ஏற்படும் பிறப்பும் அவனுக்கு ஏற்படுவதில்லை. இவ்வாறு அழிவின்றி, அழிவினால் ஏற்படும் பிறப்பின்றி இருக்கும் பெருமான் ஒருவனே நம்மை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிக்க வல்லவன் என்பதை உணர்த்தும் வண்ணம் அந்தமில்லா அடிகள் என்று குறிப்பிடும் சம்பந்தர், இவ்வாறு அந்தமில்லா அடிகளாக இறைவன் இருப்பதால் அவனைத் தொழ வேண்டும் என்றும் நமக்கு அறிவுரை கூறுகின்றார். பிரமன் திருமால் உட்பட அனைத்து தேவர்களும் பிறப்பிறப்புச் சுழற்சியுடன் பிணைக்கப்பட்டு பிறந்தும் இறந்தும் இறந்த பின்னர் மீண்டும் பிறந்தும் உழல்பவர்கள். இந்த சங்கிலியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாதவர்கள் எவ்வாறு அந்த விடுதலையை மற்றவர்க்கு அளிக்க முடியும். எனவே தான் பெருமான் ஒருவன் மட்டுமே பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆற்றல் படைத்தவன் என்று திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன.

பொழிப்புரை:

ஒரு உடல் பிறக்கும் முன்னமே, அந்த பிறவியில் அனுபவித்து கழித்துத் தீர்க்கவேண்டிய வினைகள், அந்த உடலையும் உயிரினையும் வருத்த காத்திருகின்றன. இவ்வாறு காத்திருக்கும் வினைகளை நீங்கள் முற்றிலுமாக கழித்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் திருப்புன்கூர் தலத்தில் வீற்றிருக்கும் சிவலோகனாதரை சிந்திப்பீர்களாக. அழிவு என்பதே இல்லாமல் என்றும் நிலையாக இருக்கும் சிவபெருமான், நறுமணம் கமழும் செம்பட்டை நிறத்தில் உள்ள சடையை உடையவர் ஆவார்.

பாடல் 2:

மூவராய முதல்வர் முறையாலே

தேவர் எல்லாம் வணங்கும் திருப்புன்கூர்

ஆவர் என்னும் அடிகள் அவர் போலும்

ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே

விளக்கம்:

ஏ=அம்பு; அல்லார்=வேதநெறியில் சாராது வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்கள்; மூன்றாவது அடியில் உள்ள சொற்களை அடிகள் ஆவர் என்னும் என்று மாற்றி அமைத்து பொருள் காண வேண்டும். எயில்=மதில்; பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவருடன் இணைந்திருந்து அவர்கள் தந்தம் தொழில்களைச் செய்வதற்கு துணையாக இருப்பவன் பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் மூவராய முதல்வன் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். ஒரே தண்டினில் மூன்று கிளைகளாக பிரிந்துள்ள மூவிலைச் சூலத்தினை பெருமான் ஏந்துதல், நான்முகன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் தானே என்பதையும் மூன்று தொழில்களும் செய்பவன் தானே என்பதையும் உணர்த்தும் பொருட்டு என்று ஓற்றியூர் ஒருபா ஒருபது பதிகத்தின் ஆறாவது பாடலில் பட்டினத்து அடிகள் (பதினோராம் திருமுறை) கூறுகின்றார்.

மூவிலை ஒரு தாள் சூலம் ஏந்துதல்

மூவரும் யான் என மொழிந்தவாறே

மூன்று தொழில்களைச் செய்யும் மூவிலைச் சூலம் என்று அப்பர் பிரானும் ஒரு பொதுப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.89.3) கூறுகின்றார். தொழில் மூன்றும் ஆயின என்ற தொடரினை மூவிலைச் சூலம் என்ற தொடருடன் கூட்டி, பெரியபுராண விளக்கம் நூலின் ஆசிரியர் சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் விளக்கம் கூறுகின்றார். வடமொழி ஆகமத்தில் ஜனனி ரோதயித்திரி ஆரணி ஆகிய மூன்று சக்திகளை உடையது பெருமானின் மூவிலைச் சூலம் என்று கூறப்படுகின்றது. பிரணவ மந்திரமே மூவிலைச் சூலத்தின் தண்டாக விளங்குகின்றது என்று கூறுவார்கள்,

மூன்று மூர்த்தியுள் நின்றியலும் தொழில்

மூன்றும் ஆயின மூவிலைச் சூலத்தன்

மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்

மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே

பதிகத்தின் முதல் பாடலில் பெருமானை வணங்கி நமது வினைகளை தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறும் ஞானசம்பந்தர், இந்த பாடலில் பெருமான் எவ்வளவு உயர்ந்தவர் என்பதை நமக்குச் சுட்டிக் காட்டும் பொருட்டு, தேவர்களும் அவரை வணங்குவதாக குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவருடன் இணைந்து இருந்து அவர்கள் தத்தம் தொழில்களை செய்யும் வண்ணம் இயக்கி அந்த மூவருக்கும் முதல்வனாகத் திகழும் பெருமானை தேவர்கள் அனைவரும் முறையாக வணங்குகின்றனர். திருப்புன்கூர் தலத்தில் எழுந்தருளி இருக்கும் அவரே, வேதநெறியைச் சாராமல் நின்று பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவர் ஆவார்.

பாடல் 3:

பங்கயம் கண் மலரும் பழனத்துச்

செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர்க்

கங்கை தங்கு சடையர் அவர் போலும்

எங்கள் உச்சி உறையும் இறையாரே

விளக்கம்:

உச்சி=துவாத சாந்தத் தாமரை; பழனம்=வயல்கள்; பங்கயம்=தாமரை; பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் பெருமானை வணங்க வேண்டிய அவசியத்தையும் அவரது உயர்வினையும் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த இரண்டு நிலைகளையும் கருதி, பெருமானை தியானித்து தனது துவாதசாந்தப் பெருவெளியில் அவரை நிறுத்தியதாக கூறுகின்றார்.

பொழிப்புரை:

திருப்புன்கூர் வயல்களில் தாமரை மலர்கள் மலர்கின்றன; செழுமையான கயல் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. இத்தகைய நீர் வளம் நிறைந்த வயல்கள் மலிந்த திருப்புன்கூர் தலத்தில் உறையும் இறைவர் கங்கையைத் தனது சடையினில் ஏற்றவர் ஆவார். எங்களது தலைவராகிய அவர் எங்களது தலையுச்சியின் மேல் துவாதசாந்தப் பெருவெளியிலும் உறைகின்றார்.

பாடல் 4:

கரை உலாவு கதிர் மாமணி முத்தம்

திரை உலாவு வயல் சூழ் திருப்புன்கூர்

உரையின் நல்ல பெருமான் அவர் போலும்

விரையின் நல்ல மலரச் செவடியாரே

விளக்கம்:

இந்த பாடலில் பெருமானின் திருவடிச் சிறப்பு கூறப்பட்டு அதனைப் பற்றிக்கொண்டு உய்வினை அடையுமாறு உணர்த்தப் படுகின்றது. பெருமானின் திருவருளின் வடிவமாக திருவடி கருதப் படுகின்றது. உரை=புகழ்; சென்ற பாடலில் தலத்தின் நீர்வளத்தினை உணர்த்தியவர், இந்த பாடலில் தலத்தின் செல்வ வளத்தினை உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

வயலின் கரைகளில் ஒளிவீசும் மாணிக்கக் கற்கள் சிதறிக் கிடக்க, வயலின் நீரினில் முத்துக்கள் உலாவும் செல்வச் செழிப்பு வாய்ந்த வயல்களை உடைய திருப்புன்கூர் தலத்தில், மிகுந்த புகழினை உடைய பெருமான் உறைகின்றார். நறுமணம் மிகுந்த மலர் ;போன்ற சிவந்த பெருமானின் திருவடிகளை கண்டு தொழுது வணங்குவீராக.

பாடல் 5:

பவள வண்ணர் பரிசார் திருமேனி

திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர்

அழகர் என்னும் அடிகள் அவர் போலும்

புகழ நின்ற புரிபுன் சடையாரே

விளக்கம்:

சென்ற பாடலில் திருவடிகளின் தன்மையை எடுத்துரைத்த சம்பந்தர் இந்த பாடலில் பெருமானின் திருமேனியில் தன்மையை உணர்த்தி, பெருமான் அழகே வடிவானவர் என்று கூறுகின்றார். பரிசு= தன்மை; புரிசடை=முறுக்குண்ட சடை; புன்சடை=செம்பட்டை நிறத்தில் அமைந்துள்ள சடை; சொக்கவைக்கும் அழகு உடைய பெருமானை, பொருத்தமாக மதுரை தலத்தில் சொக்கன் என்று அழைப்பது நமது நினைவுக்கு வருகின்றது.

பொழிப்புரை:

பவளத்தின் வண்ணம் போன்று சிவந்து காணப்படும் ஒளிவீசும் திருமேனியை உடைய பெருமான் என்றும் நீங்காது உறையும் தலம் திருப்புன்கூர்; சிறந்த அழகர் என்று பலரும் புகழும் வண்ணம் வீற்றிருக்கும் பெருமான், முறுக்குண்டு பொன்னின் நிறத்தில் காணப்படும் சடையை உடையவர் ஆவார்.

பாடல் 6:

தெரிந்து இலங்கு கழுநீர் வயல் செந்நெல்

திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர்

பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும்

விரிந்து இலங்கு சடை வெண்பிறையாரே

விளக்கம்:

தெரிந்து இலங்குதல்=மிகுந்த ஒளியுடன் கூடி இருத்தல்;

பொழிப்புரை:

மிகுந்த ஒளியுடன் கூடிய செங்கழுநீர் பூக்கள் மலரும் வயல்களும், ஒரே சீராக உயர்ந்து வளர்கின்ற நெற்கதிர்கள் நிறைந்த வயல்களும் சூழ்ந்த திருப்புன்கூர் தலத்தில் நிலையாக பொருந்தி உறைபவர் சிவபெருமான். அவர் தனது விரிந்த சடையில் வெண்மை நிறத்தில் உள்ள பிறைச் சந்திரனை அணிந்துள்ளார்.

பாடல் 7:

பாரும் விண்ணும் பரவித் தொழுது ஏத்தும்

தேர் கொள் வீதி விழவார் திருப்புன்கூர்

ஆர நின்ற அடிகள் அவர் போலும்

கூர நின்ற எயில் மூன்று எரித்தாரே

விளக்கம்:

முந்தைய மூன்று பாடல்களில் பெருமானின் திருவடி, திருமேனி, சடைமுடி ஆகியவற்றின் அழகினை உணர்த்திய சம்பந்தர், இத்தகைய அழகு மிளிர பெருமான் வீதிவலம் வந்த காட்சியை மனதினில் நினைத்தார் போலும். அவ்வாறு வீதிவலம் நடைபெறும் தெருக்களின் அகலத்தை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பாரும்=உலகத்தில் உள்ளவர்கள்; விண்ணும்=விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள்; ஆர=பொருந்த; க்ரூரம் என்ற வடமொழிச் சொல்லை மூலமாகக் கொண்டு எழுந்த சொல்லாக கருதப் படுகின்றது. க்ரூரம்=கொடுமை; தங்களின் விருப்பம் போன்று பல இடங்களுக்கு பறக்கும் கொட்டைகளில் பறந்து சென்று, திடீரென்று கீழே இறங்கி கோட்டைகளின் கீழே அகப்பட்ட அனைத்து உயிர்களையும் கொன்ற செயலின் கொடுமைத் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

நிலவுலகத்தில் உள்ள மனிதர்களும் விண்ணுலகத்தில் உள்ள தேவர்களும் பெருமானைத் தொழுது போற்றும் வண்ணம், தேரோடும் அகன்ற வீதிகளைக் கொண்டதும் எந்நாளும் திருவிழாக்களால் சிறப்பிக்கப்படுவதும் ஆகிய திருப்புன்கூர் தலத்தில் பொருந்தி உறையும் இறைவனார், கொடுமையான முறையில் அனைவரையும் வருத்திய திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த மூன்று பறக்கும் கோட்டைகளும் ஒருங்கே பற்றி எரியும் வண்ணம் அம்பு எய்தி எரித்தவராவர்.

பாடல் 8:

மலையதனார் உடைய மதில் மூன்றும்

சிலை அதனால் எரித்தார் திருப்புன்கூர்த்

தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை

மலை அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே

விளக்கம்:

மலையதனார்=மலையது அன்னார், மலை போன்று வலிமை உடையவர்கள்; அடர்த்தல்= நெருக்குதல்; மலைதல் என்ற சொல்லுக்கு சண்டை போடுதல் என்று ஒரு பொருளும் உள்ளது. தேவர்களுடன் போரிட்ட திரிபுரத்து அரக்கர்கள் என்றும் பொருள் சிலர் கொள்கின்றனர். மலைத்தல் என்றால் மலைத்து திகைத்து இருத்தல் என்று ஒரு பொருள். இந்த அடிப்படையில் தங்களது பகைவர்கள் திகைத்து நிற்கும் வண்ணம் வலிமை கொண்ட திரிபுரத்து அரக்கர்கள் என்றும் பொருள் கூறப்படுகின்றது.

பொழிப்புரை:

மலை போன்று வலிமை பொருந்திய திரிபுரத்து அரக்கர்கள் கொண்டிருத்த மூன்று பறக்கும் கோட்டைகளையும், மேருமலையினை வளைத்து செய்யப்பட்ட வில்லில் கூரிய அம்பினைப் பொருத்தி எரித்தவர் சிவபெருமான். அவரே திருப்புன்கூர் தலத்தின் தலைவராக திகழ்கின்றார். வலிமை வாய்ந்த அரக்கன் இராவணன் மிகுந்த செருக்குடன், கயிலாய மலையினைப் பேர்த்து எடுப்பேன் என்ற எண்ணத்துடன் முயற்சி செய்த போது, அந்த கயிலை மலையின் மீது தனது கால் பெருவிரலை அழுத்தி, மலையின் கீழே அரக்கனை நெருக்கி அவனது வலிமையை அழித்து, பின்னர் அரக்கனின் சாமகானத்தை கேட்டு மகிழ்ந்து பல வரங்கள் அளித்தவர் பெருமான்.

பாடல் 9:

நாட வல்ல மலரான் மாலுமாய்த்

தேட நின்றார் உறையும் திருப்புன்கூர்

ஆட வல்ல அடிகள் அவர் போலும்

பாடல் ஆடல் பயிலும் பரமரே

விளக்கம்:

நாடவல்ல மலரான் என்று பிரமனை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பிரமனுக்கு நான்கு திசைகளையும் ஒரே சமயத்தில் நோக்கும் வண்ணம் நான்கு முகங்கள் உள்ளன். எனவே தான் தேடும் எந்த பொருளையும் எளிதில் கண்டறியும் ஆற்றல் படைத்தவன். இந்த தன்மையை, எதையும் எளிதில் நாடி உணரும் திறமையை குறிப்பிடும் பொருட்டு நாட வல்லவன் என்று இங்கே கூறுகின்றார். நாட வல்லவனாக இருந்தும், பெருமானின் திருமுடியைத் தேடி காண முடியாமல் திகைத்து நின்ற தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பெருமான் எப்போதும் வேத கீதங்களை பாடியவண்ணம் இருக்கின்றார் என்று பல திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன.

அழகன் வீரன் கருணையாளன் என்று பல விதமாக பெருமானை வர்ணித்த சம்பந்தர், கலைகளில் வல்லவன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். பாடலில் வல்லவனாக வேதங்களை ஓதும் பெருமான் ஆடலில் வல்லவனாக ஐந்தொழில்களும் புரிகின்றான். பாடலையும் ஆடலையும் பயிலும் பெருமான் அதே சமயத்தில் வேதங்களை அருளியும், படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்து செயல்களையும் செய்தும் உயிர்களை உய்யவைக்கும் கருணைத் திறம் தான் என்னே.

பொழிப்புரை:

நான்கு முகங்களைக் கொண்டு எதனையும் எளிதில் தேடிக் கண்டுபிடிக்கும் ஆற்றல் வாய்ந்த பிரமனும் திருமாலும், தனது அடியையும் முடியையும் காண முடியாமல் திகைத்து நிற்கும் வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்ற பெருமான் திருப்புன்கூர் தலத்தில் உறைகின்றான். அவரே ஆடவல்லானாக திகழ்கின்றார். அவர் இடைவிடாது ஆடலும் பாடலும் பயின்றவண்ணம் உயிர்களுக்கு பல விதங்களிலும் அருள் புரிகின்றார்.

பாடல் 10:

குண்டு முற்றிக் கூறை இன்றியே

பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கேளேல்

வண்டு பாட மலரார் திருப்புன்கூர்

கண்டு தொழுமின் கபாலி வேடமே

விளக்கம்:

குண்டு=பருத்த உடல்; முற்றி=மிகுந்து; கீழான தன்மை மிகுந்து; கூறை=உடை, துணி; பிண்டம்= சோற்றுக்கவளம்; பிராந்தர்=மயங்கிய அறிவினை உடையவர்; என்றும் நிலையாக இருக்கும் பெருமானை கருதமால், மற்ற நிலையற்ற பொருட்களை நிலையாக கருதுவதால் சமணர்களை மயக்க அறிவினை உடையவர்கள் என்று அழைத்தார் போலும், பெருமான் மிகவும் குறைந்த ஆடையை உடையவராக இருப்பதால் நக்கர் என்று அழைக்கப் படுவதை நாம் அறிவோம். பெருமான் பலி ஏற்பதையும் நாம் அறிவோம். சமணர்களும் ஆடையேதும் இன்றி பல இடங்களிலும் திரிந்து மற்றவர் தரும் உணவினை ஏற்று வாழ்வதால், நக்கனாக பலியேற்றுத் திரியும் பெருமானுடன் அவர்களை ஒப்பிடுவது தவறு என்பதை உணர்த்தும் வண்ணம், சமணர்கள் மயங்கிய அறிவினை உடையவர்கள் என்று சம்பந்தர் குறிப்பிடுவதாக சிவக்கவிமணியார் விளக்கம் அளிக்கின்றார். கையில் கபாலம் ஏந்தி பலி ஏற்க வரும் பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் நமது மலங்களை இட்டு, உள்ளத்தில் உள்ள மருள் நீங்கப் பெற்றவராக. பெருமானைத் தொழுது உய்வினை அடைய வேண்டும் என்று உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

பருத்த உடல் உடையவர்களாய், கீழ்மைத் தன்மை மிகுந்து உடலில் ஆடை ஏதுமின்று பல வீதிகளிலும் திரிந்து பிச்சை ஏற்றுண்பவர்களும், மயக்கம் தரும் அறிவினை உடையவர்களும் ஆகிய சமணர்களின் சொற்களை பொருட்டாக கருதாதீர்கள். மலர்ந்த மலர்களில் உள்ள தேனை உண்பதற்காக கூட்டமாக வரும் வண்டுகளின் இசை நிறைந்த திருப்புன்கூர் தலம் சென்று ஆங்குள்ள இறைவனைக் கண்டு தொழுவீர்களாக. கபாலியாக வேடம் கொண்டு பலியேற்கும் இறைவனைத் தொழுது அவனது பிச்சைப் பாத்திரத்தில் உங்களது மலங்களை இட்டு, மலங்கள் நீங்கியவர்களாக இறைவனின் திருவடிகளைச் சென்று அடைவீர்களாக.

பாடல் 11:

மாடம் மல்கு மதில் சூழ் காழிமன்

சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர்

நாட வல்ல ஞானசம்பந்தன்

பாடல் பத்தும் பரவி வாழ்மினே

விளக்கம்:

இந்த பதிகத்தின் கடைக்காப்பு மற்ற பதிகங்களிலிருந்து மாறுபட்டது. இந்த பாடலில் இந்த பதிகம் பாடுவதால் நாம் அடையவிருக்கும் பலன் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் பாடி வாழ்வீர்களாக என்று சம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் பெருமானின் தன்மைகளையும் பண்புகளையும் கருணைத் திறனையும் குறிப்பிட்ட சம்பந்தர், அந்த பாடல்கள் குறிப்பிடும் கருத்தினை உள்வாங்கி, அவற்றை பின்பற்றி, பெருமானை வணங்கித் தொழுது நாம் அனைவரும் வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று சம்பந்தர் விரும்புகின்றார் போலும். அதனால் தான் பதிகத்தின் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடி வாழ்வீர்களாக என்று கூறுகின்றார். நாடவல்ல=ஆராய்ந்து அறியும் வல்லமை வாய்ந்த;

பொழிப்புரை:

உயர்ந்த மாடவீடுகள் நிறைந்ததும் உயர்ந்த மதிற்சுவர்களைக் கொண்டதும் ஆகிய சீர்காழி தலத்தின் தலைவன் ஆகிய ஞானசம்பந்தன், சான்றோர்களும் செல்வர்களும் வாழும் திருப்புன்கூர் தலத்து இறைவனின் தன்மைகளை ஆராய்ந்து அறியும் ஆற்றலை வெளிப்படுத்திய பாடல்கள் பத்தையும் பாடி வாழ்வீர்களாக.

முடிவுரை:

இந்த பதிகத்தின் மூன்று பாடல்களில் திரிபுரத்தை எரித்த நிகழ்ச்சி குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு ஒரே பதிகத்தின் பல பாடல்களில் திரிபுரம் எரித்த நிகழ்ச்சி குறிப்பிடப்படுவது அரிது. திருப்புன்கூர் கோயிலில் உள்ள நடராஜர் சன்னதியில் ஒரு பூதகணம் பஞ்சமுக வாத்தியம் வாசிப்பதாகவும் மற்றொரு பூதகணம் மத்தளம் (குடமுழா) வாசிப்பதாகவும் சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பத்தைக் கண்ட ஞானசம்பந்தர்க்கு, பெருமான் திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று சிவனடியார்களை தனது இரண்டு காவல்காரர்களாகவும் குடமுழா வாசிப்பவனாகவும் நியமித்து பெருமான் கருணை புரிந்த செயலும் அதற்கு முன்னோடியாக அமைந்த திரிபுர தகனமும் நினைவுக்கு வந்தது போலும். அதனால் தான் பதிகத்தின் மூன்று பாடல்களில் திரிபுரம் எரித்த வீரச் செயலை குறிப்பிட்டார் போலும்.

சுந்தரர் தனது பாடல் ஒன்றினில் (7.54.8) பெருமான் திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று அடியார்களுக்கு அருள் புரிந்ததை குறிப்பிடுகின்றார். தாரகாட்சன் கமலாக்ஷன் வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்களும், தாங்கள் பின்பற்றி வந்த சிவநெறியை கைவிட்டு புத்தர்களாக மாறி சிவநிந்தனையும் வேதநிந்தனையும் செய்யத் தொடங்கினார்கள். மக்கள் அனைவரும் தங்களது மன்னனை பின்பற்றி புத்த மதத்திற்கு மாறிய போதிலும் சுதன்மன் சுசீலன் சுபுத்தி ஆகிய மூவர் சிவநெறியைக் கைவிடாமல் வாழ்ந்து வந்தனர். பெருமானிடம் தொடர்ந்து அன்பு பூண்டு அவர்கள் வாழ்ந்து வந்தமையால் பெருமான் இவர்கள் மூவரும் அழியாமல் காத்து, திரிபுரத்தை எரித்தார். மேலும் மூவரில் இருவரை தனது கோயிலில் வாயில் காவலராகவும் ஒருவரை மத்தளம் முழக்குவராகவும் மாறும் வண்ணம் அருள் புரிந்தார் என்று காஞ்சிப்புராணம் கூறுகின்றது. அவர்களே இந்த திருக்கோயிலில் வாயில் காப்பாளராக இருப்பதாக நம்பப்படுகின்றது. பொதுவாக வாயில் காப்பாளர்கள் நுழைவாயிலைப் பார்த்த வண்ணம் நிற்பதைக் காண்கின்றோம். ஆனால் இந்த கோயிலில் அவர்கள் இருவரும் பெருமானின் சன்னதியை நோக்கிய வண்ணம் சற்று தலை சாய்த்து நிற்பதை நாம் காணலாம். காவலராக இருப்பினும் பெருமானைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று அந்த திரிபுரத்து அடியார்கள் விரும்பினர் போலும். செற்ற=வெற்றி கொண்ட; ஞான்று=நாளில்; முழா=மத்தளம்; ஏவுதல்=கட்டளை இடுதல்;

மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின்

திருக்கோயிலின் வாய்தல்

காவலாளர்கள் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரி காடு

அரங்காக

மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ மணிமுழா முழக்க அருள் செய்த

தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர்

உளானே

பதிகத்தின் முதல் பாடலில் ஆதி அந்தம் இல்லாத பெருமானாக விளங்கும் அவர் ஒருவர் தாம், நமது வினைகளை முற்றிலும் அழித்து, அதன் விளைவாக பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நம்மை விடுவிக்க முடியும் என்று குறிப்பிட்ட சம்பந்தர் அடுத்த பாடலில் தேவர்கள் அனைவரும் அவரை வணங்குவதாக குறிப்பிடுகின்றார். மூன்றாவது பாடலில் அவரது உயர்வினைக் கருதி, அவரை தியானித்த தான் அவரைத் தனது தலை உச்சியின் மேல் உள்ள துவாதசாந்தப் பெருவெளியில் வைத்திருப்பதாக கூறுகின்றார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொள்ளுமாறு நான்காவது பாடலில் அறிவுரை கூறப்படுகின்றது. நான்காவது பாடலில் பெருமானின் திருவடிகளின் தன்மையை குறிப்பிட்ட சம்பந்தர் ஐந்தாவது பாடலில் பெருமான் திருமேனி அழகு வாய்ந்து என்றும், ஆறாவது பாடலில் அவரது சடைமுடியின் அழகினையும் குறிப்பிடுகின்றார். முந்தைய மூன்று பாடல்களில் குறிப்பிட்ட அழகினை உடைய பெருமான் வீதிவலம் வரும் திருப்புன்கூர் வீதிகளின் சிறப்பு ஏழாவது பாடலில் குறிப்பிடப்படுகின்றது. எட்டாவது பாடலில், அழகராக விளங்கும் பெருமான் வீரமும் கருணையும் கொண்டவராக திகழ்வது எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்படுகின்றது.

அனைவரும் மலைத்து நிற்கும் வண்ணம் ஆற்றல் பொருந்திய திரிபுரத்து அரக்கர்களை அழித்தமை பெருமானது வீரத்தையும், தனது இருப்பிடத்தையே பேர்த்து எடுக்க முயற்சி செய்தவன் என்பதையும் பொருட்படுத்தாது அரக்கன் இராவணனுக்கு பல வரங்கள் அளித்தமை பெருமானின் கருணையையும் உணர்த்துகின்றது. இவ்வாறு அழகும் வீரமும் கருணையும் பொருந்திய பெருமான் ஆடல் பாடல் கலைகளில் வல்லவராக விளங்கும் தன்மை ஒன்பதாவது பாடலில் குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு முதல் ஒன்பது பாடல்களில் பெருமானின் தன்மை, அழகு, கருணை வீரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, பெருமானை நாம் சென்று அடையவேண்டும் என்ற ஏக்கத்தினை நம்மில் ஏற்படுத்தும் சம்பந்தர், பதிகத்தின் பத்தாவது பாடலில் நமது ஏக்கத்தினைத் தீர்த்துக் கொள்ளும் வழியினை காட்டுகின்றார். காபாலியாக வரும் பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் நமது மலங்களை இட்டு, மலங்கள் நீங்கியவர்களாய், விருப்பு வெறுப்பு அற்றவர்களாய் வாழ்ந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு அவனது திருவடிகளைச் சென்று அடையவேண்டும் என்று உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் கடைப்பாடல் மற்ற பதிகங்களின் கருத்திலிருந்து மாறுபட்டு இருப்பது இந்த பதிகத்தின் தனிச் சிறப்பாகும். பதிகத்தின் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடவேண்டும் என்று கூறுவதன் மூலம், பாடல்கள் உணர்த்தும் பொருட்களை புரிந்து கொண்டு அதனை நாம் அனைவரும் பின்பற்றவேண்டும் என்று உணர்த்தும் சம்பந்தர் காட்டிய வழியில் சென்று இறைவனை வணங்கித் தொழுது அவனது புகழினைப் பாடி வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Munthi Ninra Vinaigal
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

முந்தி நின்ற வினைகள்


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: