Go Back
22/03/21
பிறையணி படர்சடை
பிறையணி படர்சடை - பின்னணி:
அப்பர் பிரான் திருஞானசம்பந்தரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு பல சோழ நாட்டுத் தலங்களை தரிசிப்பதற்கு சென்ற பின்னர், ஞானசம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்து பல வித்தியாசமான பதிகங்கள் பாடினார் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து உணர்கின்றோம். மொழிமாற்று, மாலைமாற்று, திருவெழுகூற்றிருக்கை. ஏகபாதம், ஈரடி மேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு, திருவிருக்குக்குறள், ஈரடி, வழிமொழி விராகம் ஆகிய வகைகளில் பல பதிகங்கள் இயற்றினார். இந்த பதிகங்களில் பல பதிகங்களை நாம் இதுவரை சிந்தித்தோம். அத்தகைய பதிகங்களில் ஒரு வகை தான் முடுகும் இராகம் எனப்படும் வகையில் உள்ள பதிகம். முடுகிய சந்தம் என்பதற்கு வேகமாக பாடும் வகையில் அமைந்த பண் கொண்ட பாடல் என்று பொருள். அத்தகைய பதிகம் தான் நாம் இப்போது சிந்திக்கவிருக்கும் இந்த பதிகம். இந்த பதிகம் வேறொரு சிறப்பினையும் உடையது. இந்த பதிகத்தின் நான்காவது அடியில் உள்ள கடைச் சொல்லின் கடை எழுத்தினைத் தவிர வேறெங்கும் நெடிலெழுத்தே வருவதில்லை. மற்ற அனைத்து எழுத்துக்களும் குறில் எழுத்துக்கள் உள்ளன. இவ்வாறு நான்கு பதிகங்கள் உள்ளன. தடநிலவிய மலை என்று தொடங்கும் வீழிமிழலைப் பதிகம் (1.20), புவம்வளிகனல் என்று தொடங்கும் சிவபுரம் பதிகம் (1.21) மற்றும் சிலைதனை நிறுவி என்று தொடங்கும் திருமறைக்காடு பதிகம் (1.22) ஆகியவை மற்ற மூன்று பதிகங்கள்.
இந்த நான்கு பதிகங்களிலும் ஐ என்ற உயிரெழுத்துடன் இணைந்த பல உயிர்மெய் எழுத்துக்கள் வருவதை நாம் காணலாம். ஐ என்ற உயிரெழுத்து நெடிலாக கருதப் பட்டாலும் ஐ என்ற எழுத்துடன் இணையும் உயிர்மெய் எழுத்துக்கள் குறில் எழுத்துகள் என்று தொல்காப்பியம் நன்னூல் ஆகிய இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. இரண்டு மாத்திரை அளவுள்ள ஐ எழுத்து, உயிர்மெய் எழுத்தாக வரும்போது இரண்டுக்கும் குறைந்த மாத்திரையுடன் வருவதால், அவை குறில் எழுத்துகளாக கருதப் படுகின்றன. இத்தகைய நுட்பமான விவரங்களையும் கருத்தில் கொண்டு பதிகங்கள் இயற்றிய சம்பந்தரின் புலமை நம்மை வியக்க வைக்கின்றது. அகத்தியருக்கு தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுத்த பெருமானின் அருளால் பதிகங்கள் பாடத் தொடங்கிய ஞானசம்பந்தர், வல்லமை வாய்ந்த புலவராக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை.
பாடல் 1:
பிறை அணி படர் சடை முடி இடை பெருகிய புனல்
உடையவன் இறை
இறை அணி வளை இணை முலையவள் இணைவனது
எழில் உடை இட வகை
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம்
அமர் கனல் உருவினன்
நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல்
தொழல் மருவுமே
விளக்கம்:
பெருகிய புனல்=வெள்ளமாக பெருகி கீழே இறங்கி வந்த கங்கை நதி; இறை=முன்கை; இணை முலை=தேவியின் இணையான இரண்டு மார்பகங்கள்; ஞானமே வடிவமாக தேவி இருப்பதாக கடுதப்படுவதால், தேவியின் இரண்டு மார்பகங்களும் பரஞானத்தையும் அபர ஞானத்தையும் குறிப்பிடுவதாக கூறுவார்கள். விரை=நறுமணம்; இணைவன்=இணைபவன்; இணை முலைகள் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். பிராட்டியின் மார்பகங்களின் அழகுக்கு வேறு எதனையும் ஒப்பாக சொல்ல முடியாது என்பது உணர்த்தும் வண்ணம், பிராட்டியின் ஒரு மார்பகமே மற்றொரு மார்பகத்திற்கு இணையாக இருக்க முடியும் என்று அழகாக சம்பந்தர் கூறுகின்றார். கறை=இருள்; மரங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நெருக்கமாக காணப்படுவதால், சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் உள்ளே புக முடியாத வண்ணம் நெருங்கி காணப்படுவதால், சோலைகள் இருள் நிறைந்து காணப்படுவதாக சம்பந்தர் கூறுகின்றார். நெருக்கமாக வளத்துடன் மரங்கள் இருப்பது சோலைகளுக்கு அழகு சேர்ப்பதால் இங்கே இருளினை சோலைக்கு அணிகலனாக சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நறை=தேன்; நறுவிரை=நறுமணம்; நல்கு=கலந்து பொருந்திய;
பொழிப்புரை:
அழியும் தன்மையில் ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் சரணடைந்த சந்திரனின் ஒற்றைப் பிறையினை, தனது படர்ந்த சடையில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், அந்த சடையின் இடையே மிகுந்த வெள்ளப் பெருக்குடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியினை தேக்கியவர் ஆவார்; தனது முன் கையில் வளையல்களை அணிந்தவளும், அழகில் ஒன்றுக்கொன்று இணையான மார்பகங்களை உடையவளும் ஆகிய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் இணைத்துக் கொண்டவனும் ஆகிய சிவபெருமான் இருக்கும் அழகிய இடங்களில் ஒரு இடமாவது, நெருங்கி இருக்கும் தன்மையால் இருளினை ஒரு அணிகலனாகக் கொண்டுள்ள சோலைகள் நிறைந்த கழுமலம் நகரமாகும். இவ்வாறு அழகிய சோலைகளும் வளம் வாய்ந்த வயல்களும் கொண்டுள்ள கழுமலம் நகரத்தில் அமர்ந்துள்ள இறைவன், கொழுந்து விட்டெரியும் தீப்பிழம்பின் நிறத்தில் திருமேனி உடையவன் ஆவான். தேன் உடையதும் நறுமணம் வீசுவதும் ஆகிய மலர்கள் இந்த பெருமானின் திருவடிகளில் கலந்து பொருந்தி உள்ளன. தன்னை வணங்கித் தொழும் அடியார்களுக்கு பலவிதமான நன்மைகள் விளைவிக்கும் அந்த திருவடிகளைச் சார்ந்து தொழுது வணங்கி நலன்கள் பெறுவீர்களாக.
பாடல் 2:
பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது
பெருகிய திரை
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன்
அவிர் சடை மிசை
தணி படு கதிர் வளர் இள மதி புனைவனை உமை
தலைவனை நிற
மணி படு கறை மிடறனை நலம் மலி கழல் இணை
தொழல் மருவமே
விளக்கம்:
முதல் பாடலில் நன்மைகள் விளைவிக்கும் திருவடிகள் என்று குறிப்பிடும் சம்பந்தர், இந்த பாடலில் அந்த நன்மை யாது என்பதை உணர்த்துகின்றார். கடலால் சூழப்பட்டுள்ள சீர்காழி நகரத்தின் தன்மை, பிறவிக் கடலில் மூழ்கி தத்தளிக்கும் உயிரின் நிலையை சம்பந்தருக்கு நினைவூட்டியது போலும். பிறப்பெடுக்கும் தன்மைக்கு கடலினை உதாரணமாக சொல்வது வழக்கம். பிறவிக்கடல் என்றே சான்றோர்கள் குறிப்பிடுகின்றனர், அலைகள் ஒன்றன் பின் ஒன்று தொடர்ச்சியாக வருவது போன்று, வாழ்க்கையில் வினைகளின் விளைவால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து உயிர்களை அலைக்கழிக்கின்றன. இந்த இன்பங்களையும் துன்பங்களையும் நுகரும் உயிர்கள் மேலும் வினைகளை சேர்த்துக் கொண்டு, தங்களது வினைகளை முற்றிலும் கழித்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றன. எனவே தான் பல வகையான பிணிகளுடன் (துன்பங்களுடன்) தொடர்பு கொண்டுள்ள பிறவிக்கு, தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வரும் அலைகள் கொண்டுள்ள கடலினை உவமையாக குறிப்பிடுவார்கள். விரிந்து பரந்துள்ள கடலினைப் போன்று நமது உயிரும் எண்ணற்ற பிறவிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. தன்னிடம் அகப்பட்டுக் கொண்ட பொருட்களை விடாமல் பற்றிக்கொண்டு அந்த பொருட்கள் வெளியே செல்லாத வண்ணம் தடுக்கும் அலைகள் போன்று வினைகளும் தன்னிடம் பிடிபட்டுள்ள உயிர்களை விடாமல் வருத்துவதோடன்றி, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து வெளியே செல்லாத வண்ணம் தடுக்கின்றன.
பிணி என்று பிறவிகளுடன் இணைந்துள்ள வினைகளை குறிப்பிடுகின்றார். எனவே தான் இந்த பிறவிகளை பிணிபடு பிறவிகள் என்று சம்பந்தர் அழைக்கின்றார். இந்த பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வெளியே வருவது மிகவும் கடினமாக தோன்றினாலும், அவ்வாறு வெளியே விடுபட்டு வருவது மிகவும் எளிதான செயல் என்று சம்பந்தர் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல் இது. அவிர்சடை=விரிந்த சடை; ஒற்றைப் பிறையுடன் சந்திரன் சரண் அடைந்ததை இளமதி என்றும், பெருமானிடம் சரண் அடைந்த பின்னர் தக்கனது சாபத்தால் ஏற்பட்ட அழிவினின்று மீண்டு வளரத் தொடங்கிய நிலையினை வளர்மதி என்றும் இங்கே குறிப்பிடுகின்றார். தண்படு கதிர்=குளிர்ச்சி பொருந்திய கதிர்கள்; மலி=மலிந்த, மிகுதியாக உடைய; நலமலி=நன்மைகள் புரியும் குணத்தினை மிகுதியாக உடைய; நலம்=வீடுபேறு. தக்கனது சாபத்தால் அழியும் நிலையிலிருந்து மீட்டு சந்திரனுக்கு அருளியது போன்று வினைக் கடலில் அகப்பட்டு தவிக்கும் உயிர்களை மீட்கும் வல்லமை வாய்ந்தவன் இறைவன் என்பது இங்கே குறிப்பாக உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
கடலின் அலைகள் போன்று பல பிறவிகளை தொடர்ந்து அளித்து உயிரினுக்கு துன்பங்களை விளைவிக்கும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு நிலையான இன்பம் அடைவது மிகவும் எளிதான செயலாகும். அது யாதெனின் சொல்லுகின்றேன் கேட்பீர்களாக. பெரிய அலைகள் நிறைந்த கடலினை அணிகலனாகக் கொண்டுள்ள சீர்காழி நகரத்தினில் மிகுந்த விருப்பத்துடன் அமர்ந்துள்ளவனும், கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்ற நிறத்தினை உடைய திருமேனியை உடையவனும், விரிந்த சடையின் இடையே நாளும் வளர்ந்து கொண்டிருப்பதும் குளிர்ந்த கதிர்களை உடையதும் ஆகிய பிறைச் சந்திரனை அணிந்தவனும், கழுத்தினில் நீலமணி அணிந்தது போன்று தோன்றும் வண்ணம் விடத்தை அடக்கியதால் ஏற்பட்ட கறையினை உடையவனும் ஆகிய பெருமானின், நலன்கள் விளைவிக்கும் இணையான இரண்டு திருப்பாதங்களையும் சார்ந்து தொழுது, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடைவதை மிகவும் எளிதான செயலாக மாற்றிக் கொள்வீர்களாக.
பாடல் 3:
வரியுறு புலி அதள் உடையினன் வளர்பிறை ஒளி கிளர்
கதிர் பொதி
விரியுறு சடை விரை புரை பொழில் விழவொலி மலி
கழுமலம் அமர்
எரியுறு நிற இறைவனது அடி இரவொடு பகல்
பரவுவர் தம
தெரியுறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி
நினைவு எய்து மனமே
விளக்கம்:
முதல் பாடலில், நன்மை விளைவிக்கும் கழல்கள் என்றும் இரண்டாவது பாடலில் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து உயிரினை விடுவிக்கும் கழல்கள் என்றும் குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் நமது நினைவுகள் எப்போதும் இறைவனைச் சுற்றியே இருக்க வேண்டும் என்று விரும்பினால், நாள்தோறும் இரவும் பகலும் அவனைப் புகழ்ந்து பாட வேண்டுமென்று கூறுகின்றார். எரியுறு நிற=அழல் வண்ணன்; ஒளி கிளர்=ஒளி திகழும்; நனி=மிகவும் அதிகமாக, எப்போதும்
பொழிப்புரை:
வரிவரியாக கோடுகள் உடைய புலித்தோலினை ஆடையாகக் கொண்டவனும், ஒளியுடன் திகழ்வதும் வளரும் நிலையினை அடைந்ததும் ஆகிய பிறைச் சந்திரனின் கதிர்கள் பொதிந்த சடையினை உடையவனும், நறுமணம் நிறைந்த சோலைகள் உள்ளதும் திருவிழாக்களின் ஆரவாரங்கள் நிறைந்ததும் ஆகிய கழுமலம் என்று அழைக்கப்படும் தலத்தில் விரும்பி எழுந்து அருள் புரிபவனும் ஆகிய இறைவனின், அழல் வண்ணனாக திகழும் இறைவனின், திருவடிகளை இரவும் பகலும் புகழ்ந்து வணங்கும் அடியார்களை வருத்தும் வினைகள் சூரியனின் ஒளி பொருந்திய கதிர்கள் முன்னே இருள் அழிந்து விடுவதைப் போன்று அழிந்துவிடும்; மேலும் அத்தகைய அடியார்கள் எப்போதும் இறை நினைவுடன் இருப்பார்கள்.
பாடல் 4:
வினை கெட மன நினைவது முடிகெனில் நனி
தொழுதெழு குல மதி
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது
உரி புதை உடலினன்
மனை குடவயிறு உடையன சில வரு குறள் படை
உடையவன் மலி
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினனது
அதிர் கழல்களே
விளக்கம்:
முடிகெனில்=முடிக+எனின்; முடிய வேண்டும் என்று விரும்பினால்; தொழுதெழு என்ற தொடர் மூலம், தரையில் விழுந்து இறைவனை வணங்கி பின்னர் எழும் நிலையினை குறிப்பிடுகின்றார். புனை கொடியிடை என்ற தொடரினை, பிறைச்சந்திரனுடன் இணைத்து கொடியிடையாளாகிய கங்கை நதி என்றும் பொருள் கொள்ளலாம். அதே தொடரினை உடலுடன் தொடர்பு கொண்டு, பெருமானின் உடலில் பாதியில் விளங்கும் உமையன்னை என்றும் பொருள் கொள்ளலாம். தாருகவனத்து முனிவர்கள் அபிச்சார ஹோமம் என்று அழைக்கப்படும் ஒரு வகை யாகத்தினை செய்து, பல பொருட்களை தீயினில் இட்டு அந்த தீயிலிருந்து ஓர் காட்டு யானையினை எழுப்பி, பெருமான் மீது ஏவியதை குறிப்பிடும் வண்ணம், பொருள் படுதரு களிறு என்று கூறுகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். பொருள் தரு என்ற தொடரினை கொடியிடை என்ற சொல்லுடன் இணைத்து, அன்னையைத் தனது உடலின் ஓர் அங்கமாக, பொருளாக ஏற்றுக்கொண்ட இறைவன் என்ற விளக்கமும் பொருத்தமே. கதிர்=சூரியன்
பொழிப்புரை:
உலகத்தவரே, உங்களைப் பிணைந்துள்ள வினைகள் முற்றிலும் கெட்டு அழிந்துவிட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நீங்கள் செய்யவேண்டியது யாது என்பதை நான் கூறுகின்றேன்; கேட்பீர்களாக. தனது களங்கங்கள் நீங்கப் பெற்று உயர்ந்த நிலையினை அடைந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனும், கொடி போன்ற இடையினை உடைய உமை அன்னையைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டவனும், தாருகவனத்து முனிவர்களால் அபிசார ஹோமத்திலிருந்து எழுப்பப்பட்டு தன் மீது ஏவப்பட்ட மதம் கொண்ட ஆண் யானையின் தோலை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்டவனும், நமது இல்லங்களில் பயன்படுத்தப்படும் குடம் போன்று பருத்த வயிற்றினை உடையதும் குள்ளமான உருவத்தினை உடையதும் ஆகிய பூத கணங்களை படையாக உடையவனும், இடைவிடாது ஒலிக்கின்ற அலைகள் உடைய கடலால் சூழப்பட்ட கழுமலம் நகரினில் மிகுந்த விருப்பமுடன் வீற்றிருப்பவனும், சூரியனையும் சந்திரனையும் தனது இரு கண்களாக உடையவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை, ஒலிக்கும் கழல்கள் அணிந்த திருவடிகளை நன்றாக தொழுது எழுவீர்களாக. அவ்வாறு செய்தால் உங்களது வினைகள் முற்றிலும் அழிந்துவிடும்.
பாடல் 5:
தலை மதி புனல் விட அரவு இவை தலைமையது ஒரு
சடை இடை உடன்
நிலை மருவ ஒரிடம் அருளினன் நிழல் மழுவினொடு
அழல் கணையினன்
மலை மருவிய சிலை தனில் மதில் எரியுண மனம்
மருவினன் நல
கலை மருவிய புறவு அணி தரு கழுமலம் இனிதமர்
தலைவனே
விளக்கம்:
தலைமதி=பிள்ளை மதி, முதற்பிறைச் சந்திரன்; ஒற்றைப்பிறைச் சந்திரன் என்பதை தலைமதி என்று கூறுகின்றார். தலை என்ற சொல்லினை புனல் அரவு ஆகிய சொற்களுடன் இணைத்து, நீரினில் தலையாய கங்கை என்றும் பாம்பினால் தலையாய நல்லபாம்பு என்றும் பொருள் கொள்ளலாம். தலைமையது சடை=பெருமை மிக்க சடை; நிழல் மழு=ஒளிவீசும் மழுப்படை; மனம் மருவுதல்=மனமதில் எண்ணுதல்; புறவு=காடு; மூன்று புறங்களை எரித்த நிகழ்ச்சியின் தத்துவம், பெருமான் உயிர்களைப் பிணைத்துள்ள மூன்று மலங்களையும் எரித்து அழிக்கும் வல்லமை வாய்ந்தவன் பெருமான் என்று உணர்த்துகின்றது என விளக்கம் அளிக்கும் திருமூலர் பாடலை நாம் இங்கே காணலாம். பெருமான் மூன்று கோட்டைகளையும் அழித்த நிகழ்ச்சியினை புராணங்கள் வாயிலாக அறிந்து கொள்ளும் மனிதர்கள், பெருமானின் வீரச் செயலை புகழ்கின்றனர். ஆனால் அவர்கள் அந்த நிகழ்ச்சி உணர்த்தும் முக்கியமான கருத்தினை புரிந்து கொள்வதில்லை. உயிர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மூன்று மலங்களின் வலிமையை அடக்கி, உயிர்களை அந்த மூன்று மலங்களின் பிடியிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் படைத்தவன் பெருமான் என்பதை நாம் உணர்ந்து, அவனை வேண்டி, அவனது அருளின் உதவியால், அந்த மூன்று மலங்களின் வலிமையையும் அடக்கி, வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு முக்தி நிலையினை அடைய வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்தும் செய்தி என்பதே இந்த திருமந்திரப் பாடலின் பொழிப்புரை ஆகும்.. பதிகத்தின் நான்காவது பாடலில் பெருமானின் திருவடிகளை மீண்டும் மீண்டும் தொழும் வண்ணம் நம்மை பணிக்கும் சம்பந்தர், பெருமானின் வல்லமையை இங்கே குறிப்பிட்டு, பெருமானின் திருவடிகள் நமது மலங்களை அடக்கி. முக்திநிலைக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றார்.
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறிவாரே
பொழிப்புரை:
ஒற்றைப் பிறைச் சந்திரனையும், நதிகளில் தலையாய கங்கை நதியையும், பாம்புகளில் முதன்மையான விடம் உடைய நல்ல பாம்பினையும் ஒருங்கே, பெருமை வாய்ந்த தனது சடையினில் நிலையாக இருக்கும் வண்ணம் இடம் அளித்த பெருமான், ஒளி வீசும் மழுப்படையை உடையவன்; அவன் தீக்கடவுள் இடம் பெற்ற வெம்மை மிகுந்த அம்பினைக் கொண்டு, மேரு மலையினை வில்லாக வளைத்து அதனில் பொருத்தி, திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் நெருப்பினில் வெந்து அழியவேண்டும் என்று முடிவு செய்தவனாக தனது முடிவினை செயல்படுத்தினான்; இத்தகைய வல்லமை உடைய பெருமான், நமது மலங்களின் கட்டினை அழித்து முக்தி நிலைக்கு வழிவகுக்கும் பெருமான், அழகிய கலைமான்கள் அழகு சேர்க்கும் காடுகளை உடைய கழுமலம் என்ற நகரினில் மிகுந்த விருப்பத்துடன் அமர்ந்து உள்ளான்.
பாடல் 6:
வரை பொருது இழி அருவிகள் பல பருகொரு கடல்
வரி மணலிடை
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர்
கனல் உருவினன்
அரை பொரு புலியதள் உடையினன் அடியிணை தொழ
வருவினை எனும்
உரை பொடிபட உறுதுயர் கெட உயருலகு எய்தலொரு
தலைமையே
விளக்கம்:
வருவினை என்ற சொல் பொடியாக மாறிவிடும் என்று கூறுவதன் மூலம், வினைகளும் பொடிபொடியாக மாறி வலிமை இழந்துவிடும் என்று சம்பந்தர் குறிப்பாக உணர்த்துகின்றார்.. மலையில் தோன்றும் அருவிகள் பல கற்களுடன் மோதி அவற்றை உடைத்து மணல் பொடிகளாக கடலின் அருகே கொண்டு வந்து சேர்க்கும் தன்மை, சம்பந்தர்க்கு பெருமானின் திருவடிகள் வினைகளை பொடியாக்கும் தன்மையை நினைவூட்டியது போலும். சென்ற பாடலில் பெருமானின் வல்லமையை குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் அந்த வல்லமை நம்மை முக்தி உலகுக்கு அழைத்துச் செல்லும் என்று இங்கே கூறுகின்றார். பருகொரு கடல் என்று அனைத்து நதிகளின் நீரும் இறுதியில் கடலினைச் சென்று அடையும் நிலையை குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
மலைகளில் உள்ள கற்களில் மோதி கீழே இறங்கும் பல அருவிகள் நதிகளாக மாறி கடலினைச் சென்று அடைவதன் முன்னம், அந்த கடலின் கரையினில் வரிவரியாக மணலினை கொணர்ந்து சேர்க்கின்றன. இந்த மணற்கரையினில் பல முறையும் மோதும் அலைகளைக் கொண்ட கடலின் கரையில் அமைந்துள்ள கழுமலம் என்ற தலத்தினில் மிகுந்த விருப்பமுடன் பெருமான் உறைகின்றான். அவன் கொழுந்து விட்டெரியும் தீயின் நிறத்தில் திருமேனியை உடையவனாகவும், தனது இடுப்பினில் புலித்தோலை உடையாக அணிந்தவனாகவும் காட்சி தரும் பெருமானின் திருவடிகளை தொழுவதால், நம்மை பிணித்துள்ள வினைகள் பொடியாக அழிந்து, அந்த வினைகளால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் தடுக்கப்பட்டு, உயர்ந்த உலகமாகிய சிவலோகத்தில் இடம் பெறுகின்ற வாய்ப்பு நமக்கு ஏற்படும்.
பாடல் 7:
முதிருறு கதிர் வளர் இளமதி சடையனை நறநிறை
தலை தனில்
உதிருறு மயிர்பிணை தவிர் தசையுடை புலியதள்
இடை இருள் கடி
கதிருறு சுடரொளி கெழுமிய கழுமலம் அமர் மழு
மலி படை
அதிருறு கழலடிகளதடி தொழும் அறிவு அலது அறிவு
அறியமே
விளக்கம்:
இந்த பாடலில் ஞானசம்பந்தர் பெருமானது திருப்பாதங்களைத் தவிர்த்து வேறு எதனையும் தொழாத அறிவு உடையவனாக தான் இருப்பதாக கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது அவர் அருளிய மற்றொரு பதிகத்தின் முதல் பாடலை (3.44.1) நினைவூட்டுகின்றது. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு, தென்முகக்கடவுள் வடிவத்தில் அறம் உரைத்த பெருமானை அன்றி வேறு எந்த தேவரையும் நல்லார் பேணார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நல்லார் என்பதற்கு உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்த ஞானியர் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது.
கல்லால் நீழல்
அல்லாத் தேவை
நல்லார் பேணார்
அல்லோம் நாமே
நமக்கு வழிகாட்டும் நல்லோராகிய நால்வரும் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் போற்றாது இருந்த தன்மையை அவர்களது வாழ்விலிருந்து நாம் அறிகின்றோம். அவர்களது இந்த கொள்கை அவர்களின் பல பாடல்களில் வெளிப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வாழாப்பத்து பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகர், பெருமானை அன்றி வேறு எவரையும் தனக்குத் துணையாக கருத மாட்டேன் என்றும் அவரைத் தவிர்த்து வேறு எவரையும் தொழமாட்டேன் என்றும் கூறுகின்றார். இந்த பாடலின் முதல் அடியில் கருணையே உருவமாக உள்ள பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று அடிகளார் கூறுகின்றார். பண்டைய நாளிலிருந்து இடைவிடாது தொடர்ச்சியாக அடியார்களுக்கு அருள் புரிந்து வரும் அன்னையை, குற்றம் ஏதும் இல்லாதவள் என்று அடியார்கள் புகழ்வதாக அடிகளார் கூறுகின்றார், இனியும் தொடர்ந்து வாழ்வதில் தனக்கு விருப்பம் ஏதும் இல்லாமையால், பெருமானே நீ என்னை விரைவில் அழைத்துக் கொள்வாயாக என்று விண்ணப்பம் வைக்கும் பாடல்.
பழுது இல் தொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான்
மற்று இலேன் கண்டாய்
செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை
உறை சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கு ஓர் துணை என
நினைவனோ சொல்லாய்
மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று
அருள் புரியாயே
மேற்கண்ட பாடலில் பெருமானே உன்னைத் தவிர பற்றுக்கோடு வேறேதும் எனக்கு இல்லை என்று அறிவிக்கும் அடிகளார், தனது நிலையை பெருமானே நீ இன்னும் காணவில்லையா என்று கேட்கும் வகையில், கண்டாய் என்ற சொல்லை கையாண்டுள்ளார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பற்று நான் மற்றிலேன் கண்டாய் என்ற தொடர் வருகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடல், இந்த தொடர் உணர்த்தும் செய்தியை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றது. பெருமானே உன்னைத் தவிர வேறு பற்றுக்கோடு ஏதும் கொள்ளாமல் வாழும் எனக்கு அருள் புரியாமல் இருக்கின்றாயே இது நியாயமா என்று கேட்பது போன்று அமைந்துள்ள பாடல். பெருமானே ஒருவனே தனக்கு பற்றுக்கோடு என்பதால், அவனைத் தவிர வேறு எவரிடமும் சென்று முறையிடேன் என்று புலம்பும் அடிகளார், அவன் அருள் புரியாமல் இருப்பதால் அவன் மீது தான் கோபம் கொண்டாலும் அவனது அருளினை தொடர்ந்து வேண்டுவதையும் நாம் உணரலாம்.
பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான்
மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருபெருந்துறை
உறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட
நீ அருளிலை ஆனால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று
அருள் புரியாயே
தனது இடது கண்ணில் பார்வை வரப்பெற்று, வலது கண்ணில் பார்வை வேண்டி திருவாரூரில் வீற்றிருக்கும் இறைவனை வணங்கி பதிகம் பாடிய சுந்தரர், வேறு எவரையும் வேண்டாது தான் இருந்த நிலையினை மீளா அடிமை என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் (7.95.1) உணர்த்துகின்றார். இறைவனிடம் நாம் கொண்டுள்ள அடிமைத்திறம் நமது வாழ்நாள் முழுவதும் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த அடிமைத் தன்மையிலிருந்து நாம் வெளியே வாராமல் பெருமானுக்கு எப்போதும் திருத்தொண்டு செய்பவர்களாய். அடிமைத் திறத்திலிருந்து மீளாமல் இருக்க வேண்டும். மேலும் நமது தேவைகளையும் அவரிடமே முறையிட்டு பெறுதல் வேண்டும் அவ்வாறு இருந்ததால் தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் (7.95) சொல்லிக் கொள்கின்றார்.
மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே
மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல்
சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே
மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலில், அப்பர் பிரான், சிவபெருமானுக்கு மீளாத அடிமையாக இருந்து, மெய்ப்பொருளாகிய சிவபெருமானை அடையாத மனிதர்களை, வீணான வாழ்க்கை வாழ்பவர்கள் என்று கூறுகின்றார். அறிவு வளர்ச்சி பெற்று, ஒரு வேலையில் அமர்ந்து பொருள் ஈட்டும் திறம் பெற்று, தனது காலில் நிற்கும் தன்மையை அடைந்த மனிதனை நாம் ஆளாகி விட்டான் என்று கூறுகின்றோம். ஆனால் அப்பர் பிரான் ஆளாக கருதுவது, பெருமானது அடியார்களைத் தான். ஏனென்றால் அவர்கள் தானே, நிலையான இன்பம் அளிக்கக் கூடிய முக்தி நிலைக்கு செல்வதற்கான வழியில் அடியெடுத்து வைத்தவர்கள். அவ்வாறு ஆளாகாத ஒருவன், சிவபெருமானின் அடியார் ஒருவரை அணுகி, ஆளாகும் நிலையினை அடைந்து உய்வினை அடைய வேண்டும் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.
ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர் செவி
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே
இவ்வாறு சம்பந்தர் கூறுவதை கருத்தினில் கொண்டு தான், பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றாரோ? சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகை பதிகத்தில் திருஞான சம்பந்தரைக் குறிப்பிடும் வரிகளை நினைவூட்டுகின்றது. வம்பறா வரிவண்டு மணம் நாற மலரும் மதுமலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான் சம்பந்தன் என்று கூறுகின்றார். கொன்றைசூடியின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் போற்றி வழிபடாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றார். அச்சிறுபாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில், கையில் மான்கன்றினை ஏந்திய பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத கருத்தினை உடையவன் என்று தன்னை திருஞான சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (1.77.11) உணரலாம். கருங்குவளை மலர்கள் பொழியும் தேனினை உட்கொள்ளும் தவளைகளின் வாய் நிறைந்துள்ள நிலையும், வாளை மீன்கள் துள்ளி விளையாடுவதால் புதியதாக மலர்ந்த மலர்களின் இதழ்கள் கிழியும் நிலையும் குறிப்பிடப்பட்டு சீர்காழி நகரின் நீர்வளமும் நிலவளமும் சம்பந்தரால் நமக்கு உணர்த்தப்படுகின்றது.
மைச்செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப்
பொய்கையில் புதுமலர் கிழிய
பச்சிற வெறி வயல் வெறி கமழ்ப் பதி அவர் அதிபதி
கவுணியர் பெருமான்
கைச் சிறு மறியவன் கழல் அலால் பேணாக் கருத்துடை
ஞான சம்பந்தன தமிழ் கொண்டு
அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர்
அருவினை இலரே
இவ்வாறு சம்பந்தர் கூறுவது நமக்கு சுந்தரர் வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.86.7) பெருமானை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப்படாது என்று கூறுகின்றார் மெய்ப்பொருளாய் இருப்பவனும் வெண்மையாக உள்ள திருநீற்றினை தனது உடல் முழுவதும் பூசுபவனும், வேதங்களின் தலைவனும், தனது கையினில் மான் மற்றும் மழு ஏந்தியவனும், அனைவரது வாழ்நாளினை முடிக்கும் காலனின் வாழ்நாளை முடித்தவனும், படத்தினை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் இறுகக் கச்சையாக கட்டி ஆட்டுபவனும், தனது அடியார்கள் அன்றி ஏனையோர் அறிய முடியாத வண்ணம் மறைத்துக் கொள்பவனும், எங்களது தலைவனும் ஆகிய இறைவனை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப் படாது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.
மெய்யன் வெண்பொடி பூசும் விகிர்தன் வேத
முதல்வன்
கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம் அறுத்தான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன்
பனங்காட்டூர்
ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவென்னே
நறநிறை=நறவு என்ற சொல் குறைந்து நற என வந்துள்ளது; நறவு=தேன்; மேலே குறிப்பிட்ட பாடல்களில் பெருமானை வழிபடாத அறிவு, அறிவு என்று கருதப்படாததை நாம் உணர்ந்தோம். மணிவாசகர் ஒரு படி மேலே சென்று, அத்தகைய அறிவு இல்லாத மூடர்களிடம் அச்சம் கொண்டு அவர்களுடன் பழகுவதை தவிர்ப்போம் என்று அச்சப்பத்து பதிகத்தினில் கூறுகின்றார். தறி=காட்டுத்தறி, தறியிலிருந்து விடுபடும் யானை மிகுந்த கோபத்துடன் வரும்; உழுவை=புலி; பெருமானின் சடை நறுமணத்துடன் கூடியது என்று அடிகளார் இங்கே கூறுகின்றார்,
தறி செறு களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை
அஞ்சேன்
வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண
மாட்டா
செறி தரு கழல்கள் ஏந்தி சிறந்து இனிது இருக்க
மாட்டா
அறிவு இலாதவரைக் கண்டால் அம்ம நான்
அஞ்சுமாறே
பொழிப்புரை:
தனது ஒளிக்கதிர்கள் மூலம் பயிர்களை வளர்க்கும் தன்மை உடைய பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றவனும், தேன் நிறைந்த மலர்கள் இருக்கும் திருமுடியை உடையவனும் ஆகிய பெருமான், உதிரும் தன்மை உடைய மயிர்கள் நிறைந்ததும் தசைகள் நீங்கப் பெற்றதுமான புலித் தோலினை உடையாக இடுப்பினில் அணிந்தவனும், இருளினை நீக்கும் கதிரவனின் கதிர்கள் போன்று ஒளிவீசும் மழுப் படையை ஏந்தியவனும் ஆகிய பெருமான், மிகுந்த விருப்பத்துடன் கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் எழுந்தருளியுள்ளான். அத்தகைய பெருமானின், ஒலிக்கும் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளை தொழுது போற்றி வணங்கும் அறிவன்றி வேறு அறிவு ஏதும் இல்லாதவனாக அடியேன் இருக்கின்றேன்,
பாடல் 8:
கடலென நிற நெடு முடியவன் அடு திறல் தெற
அடி சரணென
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன்
அணி கிளர் பிறை
விடநிறை மிடறு உடையவன் விரி சடையவன் விடை
உடையவன் உமை
உடனுறை பதி கடல் மறுகுடை உயர் கழுமல வியன்
நகரதே
விளக்கம்:
அடுதல்=அழித்தல், வருத்துதல்; அடுதிறல்=பிறரை வருத்தும் வலிமை; தெற=தொலையும் வண்ணம்; அடல்=வலிமை;
பொழிப்புரை:
கடலின் கருமை நிறம் கொண்டவனும் நீண்ட முடிகளை உடையவனும் ஆகிய அரக்கன் இராவணனின், பிறரை வருத்தும் வலிமை தொலையும் வண்ணம் அவனை கயிலை மலையின் கீழே அழுத்தி நெருக்கியவன் சிவபெருமான். அவ்வாறு அழுத்தப்பட்டதால் தனது உடல் வலிமை குன்றிய நிலையில் அரக்கன் இராவணன் பெருமானின் திருவடிகளை சரணடைய, அவனுக்கு பரிசாக வல்லமை வாய்ந்த படைக்கலங்களை அருளியவன் சிவபெருமான்; அனைவரும் புகழத் தக்க வகையில் விடமுடைய பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக கட்டி ஆட்டுபவனும், ஒளி வீசும் கதிர்களை உடைய பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவனும், விடத்தினை தேக்கியதால் கருமை நிறம் அடைந்த கழுத்தினை உடையவனும், விரிந்த சடையை உடையவனும், இடபத்தை வாகனமாக உடையவனும் ஆகிய பெருமான், உமையம்மையுடன் உறைவது கழுமலம் நகரமாகும். அத்தகைய பெருமை வாய்ந்த கழுமலம் நகரம், பிரளய காலத்தில் கடல் பொங்கி எழுந்து னித்து உலகத்தினையும் மூழ்கடித்த போதிலும். தான் மூழ்காத வண்ணம் உயர்ந்து நின்ற தலமாகும்.
பாடல் 9:
கொழு மலர் உறை பதி உடையவன் நெடியவன் என
இவர்களும் அவன்
விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர்
பொழிலணி விழவமர்
கழுமலம் அமர் கனல் உருவினன் அடியிணை தொழும்
அவர் அருவினை
எழுமையும் இல நிலவகை தனில் எளிது இமையவர்
வியனுலகமே
விளக்கம்:
கொழு=அழகு; அவன்=சிவபெருமான்; விழுமை=பெருமை. சிறப்பு; இறை என்ற சொல்லினை அளவு அறிகிலர் என்ற சொற்களுடன் முன்னர் வைத்து பொருள் காண வேண்டும். இறை அளவு அறிகிலர்=சிறிதும் அறியாமல்; விரை=நறுமணம்; புணர்=கலந்த;
பொழிப்புரை:
சிறந்த தாமரை மலரினைத் தனது இருப்பிடமாக உடைய பிரமனும், நெடியவனாக வளர்ந்து மூவுலகங்களையும் அளந்த திருமாலும் ஆகிய இருவரும், பெருமானின் சிறப்பினையும் பெருமையினையும் சிறிதளவும் அறியாததால், அவனது திருமுடியையும் திருவடிகளையும் காண்பதற்கு முயற்சி செய்து, அவற்றை காண முடியாமல் திகைத்தனர்; நறுமணம் கலந்த அழகிய சோலைகள் சூழ்ந்ததும், திருவிழாக்கள் இடைவிடாது நடைபெறுவதும் ஆகிய கழுமலம் நகரினில் உறைபவனாகிய பெருமானின் இணையான இரண்டு திருவடிகளை வணங்கும் அடியார்கள், வல்லமை வாய்ந்த வினைகளால் ஏற்படும் ஏழு வகையான பிறப்புகளில் ஏதும் அவர்களை அணுகாது. எனவே அவர்கள் மீண்டும் நிலவுலகில் பிறவாமல் இமையவர் உலகினை அடையும் தன்மையை மிகவும் எளிதில் பெறுவார்கள்.
பாடல் 10:
அமைவன துவர் இழுகிய துகில் அணியுடையினர்
அமண் உருவர்கள்
சமையமும் ஒரு பொருளெனும் அவை சல நெறியன
அறவுரைகளும்
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி
பரவுவர் தமை
நமையல வினை நலன் அடைதலில் உயர்நெறி நனி
நணுகுவர்களே
விளக்கம்:
அமைவன=பொருந்துவன; இழுகிய=தோய்ந்த; நமையல=வருத்தம் உண்டாக்காது; சல நெறி= வஞ்சக நெறி; உண்மையான மெய்ப்பொருளாகிய இறைவனை உணர்ந்து அவனை நாடிச் சென்று வணங்கி அவனது அருளினால் முக்தி நிலை பெறுவதற்கு வழி வகுப்பது, வேதங்களும் ஆகமங்களும் உணர்த்தும் சைவநெறியாகும். அந்த வழியினில் நாம் செல்வதைத் தடுப்பதால் சமணர்கள் மற்றும் புத்தர்களின் கொள்கைகள் வஞ்சக நெறிகள் என்று கூறப்படுகின்றன.
பொழிப்புரை:
தமக்கு பொருந்தும் வண்ணம் துவர் நிறம் தோய்க்கப்பட்ட ஆடையினை அணியும் புத்தர்களும், உடையேதும் இல்லாமல் அம்மணமாக திரியும் சமணர்களும் பின்பற்றும் மதங்கள், பொருள் என உணர்த்தும் கொள்கைகள் வஞ்சக நெறிக்கு உயிரினை அழைத்துச் செல்லும் வழிகளாகும். அவர்களது அறிவுரைகளும் வஞ்சகம் நிறைந்த மொழிகள். ஆனால், விண்ணவரும் தொழும் வண்ணம் கழுமலம் நகரில் வீற்றிருக்கும் பெருமானது திருவடிகளைத் தொழும் அடியார்களின் வினைகள் அவர்கள் வருத்தாத வண்ணம் பெருமான் அருள் செய்வதால், அத்தகைய அடியார்கள் வினைகளின் தன்மைகள் நீங்கப்பெற்று உயர்ந்த முக்திநெறியினை சென்று அடைவார்கள்.
பாடல் 11:
பெருகிய தமிழ் விரகினன் மலி பெயரவன் உறை
பிணர் திரையொடு
கருகிய நிற விரி கடலடை கழுமலம் உறைவிடம்
எனநனி
பெருகிய சிவனடி பரவிய பிணைமொழியன ஒரு
பதுமுடன்
மருவிய மனமுடையவர் மதியுடையவர்
விதியுடையவர்களே
விளக்கம்:
மலி=நிறைந்த; பெயர்=புகழ்; பெருகிய தமிழ்=பல வகையான எண்ணற்ற நூல்களைக் கொண்டு வளர்ந்த தமிழ் மொழி; விரகினன்=மிகவும் ஆழமாகக் கற்று உணர்ந்தவன்; உரை=நீர்த்துளி
பொழிப்புரை:
எண்ணற்ற நூல்களைக் கொண்டு பரந்து விரிந்த தமிழ் மொழியினை ஆழமாகக் கற்று உணர்ந்து நிறைந்த புகழுடன் விளங்கும் ஞானசம்பந்தன், நீர்த்துளிகள் கலந்த அலைகள் உடைய கடல், நீல நிறத்துடன் விரிந்து பரந்து விளங்கும் கடலினை அடுத்துள்ள கழுமலம் நகரினில் உறையும் சிவபெருமானது திருவடிகளை பெருமையுடன் பாடிய இந்த பதிகத்தின் பத்து பாடல்களை, ஒன்றிய மனத்துடன் பாடும் அடியவர்கள் இம்மையில் கல்விச் செல்வமும் பொருட்செல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்த பின்னர், பெருமானின் திருவடிகளை அடைந்து நிலையான இன்பத்துடன் வாழ்வார்கள்.
முடிவுரை:
பதிகத்தின் முதல் பாடலில் நன்மை விளைவிக்கும் திருவடிகள் என்று உணர்த்தி, அந்த திருவடிகளைச் சார்ந்து நலம் பெறுமாறு சம்பந்தர் நம்மைத் தூண்டுகின்றார். கடினமான செயலாக தோன்றும், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதை, மிகவும் எளிய செயலாக மாற்றி நன்மை புரிவான பெருமானின் கழல்கள் என்று இரண்டாவது பாடலில் கூறுகின்றார். பெருமானின் திருவடிகளை நாள்தோறும் புகழ்ந்து வணங்கும் அடியார்கள், இறைவனைப் பற்றிய சிந்தனையில் எப்போதும் ஆழ்ந்து இருப்பார்கள் என்று மூன்றாவது பாடலில் கூறுகின்றார். நமது வினைகளை முற்றிலும் கழித்துக் கொள்ள விரும்பினால் நாம் செய்ய வேண்டியது யாது என்பதை நான்காவது பாடலில் உணர்த்துகின்றார். ஐந்தாவது பாடலில் பெருமானின் வல்லமையை நமக்கு உணர்த்தும் சம்பந்தர் ஆறாவது பாடலில் அந்த வல்லமை நமது வினைகளை பொடிபொடியாக மாற்றி நாம் முக்தி உலகுக்கு செல்ல வழி வகுக்கும் என்று கூறுகின்றார்.
ஏழாவது பாடலில் பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாதவன் என்று தன்னைக் குறிப்பிட்டு, நாமும் அவரை பின்பற்றும் வண்ணம் நம்மை தூண்டுகின்றார். எட்டாவது பாடலில் கழுமலம் நகரம் முற்றூழிக் காலத்திலும் அழியாது உயர்ந்து நின்றது என்று தலத்தின் சிறப்பினை குறிப்பிடுகின்றார். ஒன்பதாவது பாடலில் அவனது திருவடிகளைத் தொழும் அடியார்கள், ஏழு வகையான பிறப்புகளிலிருந்து விடுதலை பெற்று மேலான உலகத்தை அடைவார்கள் என்று கூறுகின்றார். பத்தாவது பாடலில், பெருமானைத் தொழும் அடியார்கள் முக்தி நிலையினை அடிவார்கள் என்று கூறும் சம்பந்தர் பதிகத்தின் கடைப் பாடலில் பதிகத்தை ஓதும் அடியார்கள் அறிவுச்செல்வமும் பொருட்செல்வமும் பெற்று விளங்குவார்கள் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தினை ஒன்றிய மனத்துடன் ஓதி, இம்மையில் கல்வியும் செல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மறுமையில் பெருமானின் திருவடிகளைச் சென்றடைந்து நிலையான இன்பத்துடன் வாழ்வோமாக.
Tag :
#thirugnanasambandhar thevaram
#Piraiyani Padarchadai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram
Written by:
என். வெங்கடேஸ்வரன்