Go Back
22/03/21
சூலம்படை சுண்ணப்பொடி
சூலம்படை சுண்ணப்பொடி - பின்னணி:
தனது ஐந்தாவது தலயாத்திரையினை கண்ணார்கோயில் தலத்தில் தொடங்கிய சம்பந்தர் அங்கிருந்து புள்ளிருக்குவேளூர் (தற்போது வைத்தீஸ்வரன் கோயில் என்று அழைக்கப்படும் தலம்) சென்ற பின்னர் திருநின்றியூர், நீடூர், திருப்புன்கூர் சென்றதாக பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. திருநீடூர் தலத்தின் மீது காழிப் பிள்ளையார் அருளிய பதிகம் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. மற்ற இரண்டு தலங்களின் மீது அருளிய ஒவ்வொரு பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன.
நீடு திருநின்றியூரில் நிமலனார் நீள்கழல் ஏத்திக்
கூடிய காதலில் போற்றி கும்பிட்டு வண்டமிழ் கூறி
நாடு சேர் நீடூர் வணங்கி நம்பர் திருப்புன்கூர் நண்ணி
ஆடிய பாதம் இறைஞ்சி அருந்தமிழ் பாடி அமர்ந்தார்.
இந்த தலம் வைத்தீஸ்வரன்கோயில் மயிலாடுதுறை பாதையில், வைத்தீச்வரன்கோயில் தலத்திலிருந்து சுமார் ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரம் மயிலாடுதுறை இரயில் பாதையில் ஆனந்ததாண்டவபுரம் இரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கே சுமார் மூன்று கி.மீ, தொலைவில் உள்ளது. இலக்குமி வழிபட்டமையால் திருநின்றியூர் என்று பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக் கோயில். இந்த தலத்தின் மீது அருளிய நான்கு தேவாரப் பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. ஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரான் அருளிய ஒவ்வொரு பதிகமும் சுந்தரர் அருளிய இரண்டு பதிகங்களும் கிடைத்துள்ளன.
சுந்தரர் தான் பாடிய பதிகத்தின் பாடலில் (7.65.3), பரசுராமர் முன்னூறு வேதியர்களை கோயில் திருப்பணிக்கு நியமித்து, முன்னூற்று அறுபது வேலி நிலங்களையும் அளித்தார் என்று கூறுகின்றார். அவரே இந்த தலத்திற்கு நின்றியூர் என்று பெயரிட்டு அழைத்தார் என்றும் சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். மேலே குறிப்பிட்ட கொடையினை பரசுராமர், அழகிய பொற்கலசங்கள் கொண்டு நீர் வார்த்து இறைவனுக்கு அர்ப்பணம் செய்தார் என்றும் பரசுராமரின் பக்தியை மெச்சிய இறைவன் அவருக்கு தனது திருவடிகளை காட்டி அருளினார் என்றும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.
மொய்த்த சீர் முன்னூற்று அறுபது வேலி மூன்று நூறு வேதியரோடு
நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏத்தி ஓங்கு நின்றியூர் உனக்கு அளிப்பப்
பத்தி செய்த அப் பரசுராமற்குப் பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன்
சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வத் தென் திருநின்றியூரானே
வடமொழியில் இந்த தலம் வர்த்தி நிவாரணபுரம் என்று அழைக்கப்படுகின்றது. பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த ஒரு சோழ மன்னன் தினமும் இந்த தலத்திற்கு நள்ளிரவு பூஜையினை காண்பதற்காக வருவதை பழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் வேறு ஏதோ அலுவல் காரணமாக வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால், இந்த தலம் வந்த போது இரவுநேரம் தொடங்கிவிட்டது. இரவு நேரத்தில் இந்த கோயிலைக் காண முடியாமல் மன்னன் வருந்திய போது, சிவலிங்கத்திலிருந்து ஒரு ஜோதி தோன்றி அடையாளம் காட்டியதாக கூறுவார்கள். அந்த ஜோதியின் திரி இலிங்கத் திருமேனியின் மீது விழுந்ததால் பள்ளம் ஏற்பட்டது என்றும் தலபுராணம் கூறுகின்றது. இதனால் இந்த தலத்திற்கு திரிநின்றியூர் என்று பெயர் வந்தது என்றும் நாளடைவில் அந்த பெயர் திருநின்றியூர் என்று மாறியதாகவும் கூறுவார்கள். ஜமதக்னி முனிவர், அகத்தியர், பரசுராமர், இலக்குமி தேவி, பரசுராமன் ஆகியோர் வழிபட்ட தலம். இறைவனின் திருநாமம், மகாலக்ஷ்மீசர், பரிகேச்வரர்; இறைவியின் திருநாமம் உலகநாயகி.
பாடல் 1:
சூலம் படை சுண்ணப்பொடி சாந்தம் சுடு நீறு
பாலம் மதி பவளச் சடைமுடி மேலது பண்டைக்
காலன் வலி காலின்னொடு போக்கிக் கடி கமழும்
நீலம் மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே
விளக்கம்:
பாலம் என்ற சொல்லுக்கு பலவிதமாக பொருள் கொள்ளப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகின்றது. பாலம் என்ற தொடர் பால்+அம் என்று பிரிக்கப்பட்டு பால் போன்ற வெண்மை நிறத்தில் காணப் படும் அழகிய சந்திரன் என்பது ஒரு பொருள். பாலன் என்று சொல்லின் திரிபாக (எதுகை கருதி) எடுத்துக் கொண்டு, இளைய பிறைச் சந்திரன் என்பது மற்றொரு பொருள். பாலம் என்ற சொல்லுக்கு நெற்றி என்று பொருள் கொள்ளப்பட்டு பெருமானின் நெற்றியின் மீது உள்ள பிறைச் சந்திரன் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். சடைமுடி மேல் என்று பின்னர் வருவதால், நெற்றி என்று பொருள் கொள்வது பொருத்தமாக தோன்றவில்லை. நின்றியோர்=நிலையாக உறைபவர்; சுண்ணப் பொடி=வாசனைப் பொடி; சாந்தம்=குழைத்த சந்தனம்; பவளச்சடை=பவளம் போன்று செம்பட்டை நிறத்தில் அமைந்துள்ள சடைமுடி; பண்டைக் காலனின் வலிமையை போக்கினார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அதற்கு பண்டைய நாளில் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர முயற்சி செய்த காலன், அப்போது பெருமானிடம் உதை வாங்கி அழிந்த பின்னர், இயமன் சிவபெருமானது அடியார்கள் பால் செல்வதை தவிர்த்து விட்டான் என்ற பொருள் பட பண்டைக் காலன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் அளிக்கின்றனர்.
பொழிப்புரை:
சூலத்தைத் தனது படைக்கலமாக கொண்டுள்ள பெருமான், சுடுகாட்டு சாம்பலை நறுமணம் மிகுந்த வாசனைப் பொடியாகவும் குழைத்த சந்தனமாகவும் பாவித்து, தனது உடல் முழுவதும் பூசிக்கொண்டு, பால் போன்று வெண்ணிறத்தில் அமைந்துள்ள பிறைச் சந்திரனைத் தனது பவள நிறத்தில் உள்ள சடைமுடியில் மேலே வைத்துள்ளார். பண்டைய நாளில் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர முயற்சி செய்த இயமனின் வலிமையைத் தனது காலினால் இயமனை உதைத்து வீழ்த்திய பெருமான், நறுமணம் கமழும் நீல மலர்கள் நிறைந்த நீர்நிலைகள் கொண்டுள்ள நின்றியூரில் நிலையாக உறைகின்றார்.
பாடல் 2:
அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார்
நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்
நச்சம் மிடறு உடையார் நறுங்கொன்றை நயந்து ஆளும்
பச்சம் உடை அடிகள் திருப்பாதம் பணிவாரே
விளக்கம்:
நஞ்சம் என்பது எதுகை நோக்கி நச்சம் என்று திரிந்தது. பக்ஷம் என்ற வடமொழிச் சொல் பட்சம் என்று தமிழ்ச் சொல்லாக மாற்றப்பட்டுள்ளது. வேற்றுமை பாராட்டி ஒரு பாலாருக்கு பரிந்து செயல் புரிதல் என்று பொருள்; தீயவினைகள் அகற்றப் படுவதால் அத்தகைய தீவினைகள் விளையும் கேடும் அகற்றப் படுகின்றன. நித்தம் என்ற சொல்லும் எதுகை கருதி நிச்சம் என்று மாற்றப் பட்டுள்ளது. பெருமான் ஒருதலைப் நடந்து கொள்கின்றார் என்று சம்பந்தர் உணர்த்துவது, தனது அடியார்களுக்கு பல விதமான நன்மைகளை புரியும் பெருமான், அடியார் அல்லாதவர்களுக்கு அத்தகைய நன்மை புரியார் என்பதே ஆகும். இந்த தன்மையை அப்பர் பிரான் மிகவும் அழகாக நமச்சிவாயப் பதிகத்தில் சொல்வதை நாம் கீழ்க்கண்ட பாடல் மூலம் (4.11.6) உணரலாம். சலம்=வேறுபாடுள்ள தன்மை. சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ள நிலை. எப்போதும் ஒரே தன்மையுடன் தோன்றுபவன். உள்ளவன். சங்கரன்=இன்பம் அளிப்பவன்.
சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம்
குலமிலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே
உள்ளொன்றும் புறமொன்றுமாக இல்லாமல், எப்போதும் ஒரே தன்மையுடன் காணப்படும் சிவபெருமான், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு நன்மை செய்பவன்; சிவபிரான் தன்னைச் சாராதவர்களுக்கு நன்மை அளிக்காதவன். நற்குலத்தில் பிறவாதாரும், சிவபிரானின் நாமத்தை ஓதினால், அவர்களுக்கும் நற்குலத்தோர் அடையும் நன்மைகளை அளிப்பவன் சிவபெருமான், என்பதே மேற்கண்ட பாடலின் திரண்ட பொழிப்புரை. .
பெருமானது அடியார்கள் அச்சம் ஏதும் இல்லாதவராக இருப்பார்கள் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அனைவரிலும் வலியவனாக உள்ள பெருமான் துணையாக இருக்கையில் பெருமானின் அடியார்கள் எதற்காகவும் எவரிடமும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதை இங்கே உணர்த்துகின்றார். அவர் இவ்வாறு கூறுவது நமக்கு திருநாவுக்கரசர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவூட்டுகின்றது. தங்களுடன் இருந்த போது தீராத வயிற்று வலியால் வருந்திய தருமசேனர், திருவதிகைப் பெருமானின் அருளினால் தனது வயிற்றுவலி (சூலைநோய்) நீங்கப்பெற்று பெருமானின் அருளினால் சைவராக மாறியதை அறிந்த சமண குருமார்கள் இந்த மாற்றம் தங்களது மதத்தின் பால் மக்கள் வைத்திருந்த மதிப்பினை வேகமாக குறைத்துவிடும் என்று அச்சம் கொண்டு உண்மையை திரித்து மன்னனிடம் சொல்லவும், தருமசேனரை பழிவாங்கவும் முயற்சி செய்தனர். சைவ சமயத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த தனது தமக்கையாருடன் கூடுவதற்காக, தான் பொய்யாக உருவாக்கிக்கொண்ட சூலை நோய் தீரவில்லை என்ற நாடகம் நடத்தி, சூலை நோய் சமண சமய மருத்துவர்களால் தீர்க்கப்படவில்லை என்று சமண சமயத்திற்கு ஒரு இழுக்கினை ஏற்படுத்தி, சமணசமய குருமார்களுக்கான விதிகளை மீறியதும் அல்லாமல், சமண சமயத்தை மிகவும் இழிவாகவும் தருமசேனர் பேசினார், என்று மன்னனிடம் முறையிட்டனர். மன்னன் அவரை அழைத்துப் பேசி தக்க தண்டனை அளிக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். மன்னனும் தனது படைவீர்ர்களை அமைச்சர்களுடன் அனுப்பி, திருநாவுக்கரசரை (தருமசேனர் என்ற பெயர் பெருமானால் நாவுக்கரசர் என்று மாற்றப்பட்டது.) சிறை பிடித்து வருமாறு கட்டளையிட்டான். தன்னை அணுகிய அமைச்சர்களை நோக்கி நாவுக்கரசர், உமது மன்னனின் ஆணையினைக் கேட்டு அதன் வழியே உமது மன்னனைச் சாரும் நிலையில் தான் இல்லை என்று விடை அளித்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார்.
நாமார்க்கும் குடி அல்லோம் என்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன் குளிர்மதி வாழ் சடையானைத்
தேமாலைச் செந்தமிழின் செழும் திருத்தாண்டகம் பாடி
யாமாறு நீர் அழைக்கும் அடைவு இலம் என்று அருள் செய்தார்
மன்னனின் கட்டளை தனக்குப் பொருந்தாது என்று வீரமொழி பேசிய நாவுக்கரசர், அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை என்று கூறிய பாரதி உட்பட பல புலவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்ததை இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது. அந்த தருணத்தில் அப்பர் பிரான் அருளிய பதிகம் தான் நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் இந்த பதிகம் (6.98). இயமனுக்கும் அஞ்சமாட்டோம் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் அப்பர் பிரான் முழங்குவதை நாம் உணரலாம்.
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம்
நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே
எந்நாளும் துன்பம் இல்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க வெண்
குழை ஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடி
குறுகினோமே
சமண குருமார்களின் போதனையால் மதி மயங்கிய பல்லவ மன்னன், அப்பர் பிரானை சுண்ணாம்புக் காளவாயில் இடுமாறு கட்டளை இடுகின்றான். இறைவனின் அருளால் உயிர் பிழைத்த அப்பர் பிரானை இடறித் தள்ள பட்டத்து யானை ஏவப்படுகின்றது. அப்போது அருளிய பதிகத்தில், இறையவனின் அடிமையாக இருக்கும் தான் எதற்கும் அஞ்சுவதில்லை என்றும் தம்மை அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் ஏதும் நிகழாது என்றும் அப்பர் பிரான் மிகவும் உறுதியுடன் கூறுகின்றார். இந்த பதிகத்தின் (4.02) முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சாந்து என்ற சொல் இரண்டு சொற்களுக்குப் பொதுவாக வருகின்றது. சுண்ணவெண் சாந்து மற்றும் சந்தனச் சாந்து என்றும் பொருள் கொள்ளவேண்டும். வெண் சாந்து=வெள்ளை நிறமுடைய திருநீறு. தமர்=அடியவர். அகலம்=மார்பு, சுண்ணம்=பொடி, முரண்=போர்க்குணம் மிகுந்த. உரிவையுடை= உரித்துத் தனது உடலின் மேல் போர்த்துக் கொண்ட போர்வை, வண்ண உரிவை என்பதால் புலியின் தோலை குறிப்பதாக கொள்ளவேண்டும். திண்மை=வலிமை, இங்கே நதியின் தன்மையை குறிப்பதால், அகன்ற கெடில நதியைக் குறிக்கின்றது. அரண் முரண் ஏறு என்பதற்கு சிவபிரானை அடைந்தவர்க்கு அரணாகவும் அடையாதவர்க்கு முரணாகவும் இருக்கும் இடபம் என்றும் பொருள் கூறுவார்கள்.
சுண்ண வெண் சந்தனச் சாந்தும் சுடர்த் திங்கள் சூளாமணியும்
வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும்
திண் நல் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
பாவம் இலர் கேடும் இலர் என்ற தொடருக்கு, அடியார்கள் யான் எனது என்கின்ற செருக்குடன் கூடிய எண்ணம் இல்லாமல் இருப்பதால், அவர்களுக்கு ஆகாமிய வினைகளும் அவற்றால் விளையும் கேடுகளும் இருப்பதில்லை என்று விளக்கம் கூறுகின்றனர். பண்டைய வினைகளை நுகர்ந்து கழிக்கும் உயிர்கள், அந்த வினைகளால் ஏற்படும் துன்பங்களையும் இன்பங்களையும் அனுபவிக்கும் போது தாங்கள் செய்யும் செயல்களால், எண்ணும் எண்ணங்களால் மேலும் வினைகளை பெருக்கிக் கொள்கின்றன. அவ்வாறு வளரும் வினைகளை ஆகாமிய வினைகள் என்று கூறுவார்கள். இவ்வாறு மேலும் மேலும் வினைகளை பெருக்கிக் கொள்வதால், உயிர் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து, பழைய வினைகள் மற்றும் புதியதாக தோன்றும் ஆகாமிய வினைகள் ஆகியவற்றின் அழுத்தத்தால், விடுபட முடியாமல் தவிக்கின்றது, ஆனால் பெருமானின் அடியார்கள் அனைத்தும் இறைவனின் செயல் என்று ஏற்றுக்கொண்டு செயல்படுவதால், வினைகளால் மாற்றம் ஏதும் விளையாத தற்போத நிலையில் இருப்பதால், ஆகாமிய வினைகள் தோன்றுவதில்லை; அவற்றால் ஏற்படும் கேடுகளும் தவிர்க்கப் படுகின்றன.
பொழிப்புரை:
பெருமானின் திருப்பாதங்களைப் பணியும் அடியார்களுக்கு, அனைவரிலும் வல்லவனாகிய பெருமான் தகுந்த துணையாக இருப்பதால், அவர்கள் எதற்கும் அஞ்சாமல் இருக்கின்றனர். அவர்களது தீவினைகளை பெருமான் தீர்த்துவிடுவதால் பாவங்கள் அவர்களை அணுகுவதில்லை; பாவங்கள் விலகிப் போவதால் பாவங்களால் நாள்தோறும் விளையும் கெடுதிகளும் தவிர்க்கப் படுகின்றன. மேலும் மன நலனும் உடல் நலமும் வாய்க்கபெற்று அடியார்கள் இன்பமாக வாழ்வார்கள். இவ்வாறு தனது அடியார்களை பாதுகாக்கும் பெருமான், நிலையாக நின்றியூர் தலத்தில் உறைகின்றான். அவன் நஞ்சு தேக்கப்பட்டதால் கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடையவனாக உள்ளான்; நறுமணம் கொண்ட கொன்றை மாலைகளை அன்புடன் தனது திருவடிகளில் சாத்தும் அடியார்களை பெருமான் ஆட்கொண்டு அருள் புரிகின்றான். தன்னிடம் அன்பு பாராட்டாத மாந்தர்களை ஆட்கொள்ளாமல் பட்சபாதமாக நடந்து கொள்கின்றான்.
பாடல் 3:
பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவம் ஆர
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை
நிறையும் புனல் சடைமேல் உடை அடிகள் நின்றியூரில்
உறையும் இறை அல்லது என் உள்ளம் உணராதே
விளக்கம்:
திருக்கோயில்களில் சிறப்பு பூஜை நேரங்களில் சங்கு பறை இவற்றின் ஒலிகள் கலந்து ஆரவாரமாக காணப்படும். நேரங்களிலும் தான் மனம் ஒன்றி வழிபடுவதால் தனது மனம் எதையும் உணராது இறை சிந்தனையில் ஆழ்ந்திருப்பதாக ஞானசம்பந்தர் கூறுகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். உலகெங்கிலும் பல விதமான ஓசைகள் கலந்து நிற்கின்றன. ஆனால் இந்த ஓசைகளின் மூலம் எது என்பதை ஆராய்ந்தால், நமக்கு நாததத்துவம் புலப்படும். இறைவனின் கையினில் இருக்கும் உடுக்கையின் ஒலியே, இந்த சப்த பிரபஞ்சத்தின் மூலமாக திகழ்வதை சம்பந்தர் குறிப்பிடுகின்றார் எனும் விளக்கம் பொருத்தமாக தோன்றுகின்றது. பாங்கு ஆரவும் ஆர=பறை சங்கு ஆகிய ஒலிகளின் பக்கத்தில் தோன்றும் பல விதமான ஓசைகள்.
அனைத்து ஓசைகளின் பின்னணியில் இறைவன் இருப்பதாக பெரியோர்கள் உணருகின்றனர் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் திருவையாறு தாண்டகத்தின் முதல் பாடலை (6.38.1) நினைவூட்டுகின்றது. நமது மொழியில் உள்ள 247 எழுத்துக்களும் பொருளைத் தருவதில்லை. பொருள் தரும் எழுத்துகள் (பூ, மா, ஆ, பா, வா, போன்றவை) தவிர்த்த மற்று எழுத்துக்கள் வெறும் ஓசையை மட்டும் தருகின்றன. இந்த எழுத்துகள் தனித்து நிற்கும் போது பொருள் தராவிடினும் மற்ற எழுத்துக்களுடன் இணையும் போது பொருளைத் தருகின்றன. இவ்வாறு ஓசையாகவும் ஒலியாகவும் இருக்கும் எழுத்துகளாகவும், எழுத்துகளின் கூட்டாகிய சொற்களாகவும் இறைவன் உள்ள தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. தேசம்=உலகம்; தேச விளக்கு=உலகிலுள்ள ஒளிதரும் பொருட்கள் சூரியன், சந்திரன், கோள்கள், மற்றும் விண்மீன்கள்.
ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ
இந்த பாடலில் சம்பந்தர் இறைவனைத் தவிர்த்து வேறு எதையும் தனது உள்ளம் உணராது என்று கூறுவது நமக்கு திருவெண்காடு தலத்தின் மீது பாடிய பாடலை (2.48.9) நினைவூட்டுகின்றது. திருமால் மற்றும் பிரமன் காண முடியாமல் நெடிய தீப்பிழம்பாக நின்றவன் என்றும் ஐராவத யானைக்கு அருள் புரிந்தவன் என்று அவனது பெருமைகளை தங்களது உள்ளத்தில் நினைத்து உருகாத மாந்தர்களை உணர்வு உடையவராக கருதமாட்டோம் என்று கூறுகின்றார். கள்=தேன்; கிடந்தான்=படுத்து கிடப்பவன்; ஒள்ளாண்மை=சிறந்த ஆண்மைத் தன்மை; ஆடுதல் என்றால் நீராடுதல் என்று பொருள். உள்ளம் முழுவதும் பெருமான் குறித்த சிந்தைனைகளால் நீராட்டப்பட்டு நனைந்து நையவேண்டும் என்பதை உள்ளாடி என்று சம்பந்தர் உணர்த்துகின்றார்.
கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளல் கோடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான்
வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள்ளாடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே
திருஞானசம்பந்தர் தான் அருளிய ஆமாத்தூர் பதிகத்தின் (2.44.10) பாடலில் சம்பந்தர், ஈசனைத் தினமும் நினையாதார்களின் நெஞ்சம் நெஞ்சமாக கருதப்படாது என்று கூறுகின்றார். நித்தல் என்ற சொல் எதுகை கருதி நிச்சல் என்று மருவியுள்ளது. பெய்தல்=இடுதல்; பின் சார்தல்=பின்னே வருதல். கொச்சை=இழிவான; பிச்சைப் பெருமானாக (பிக்ஷாடனர்) வேடம் தரித்து தாருகாவனம் சென்ற சிவபிரானின் பின்னர், முனிவர்களின் மனைவியர் தொடர்ந்து வந்த செய்தி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. புலால் நாற்றம் வீசிய தோல் என்று குறிப்பதன் மூலம் அப்போது தான் உரித்த தோல் என்று உணர்த்தப்பட்டுள்ளது. யானையின் பச்சைத் தோல், உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று நம்பப்படுகின்றது. ஆனால் சர்வ வல்லமை படைத்த ஈசனை எந்த கேடும் அணுகமுடியாது. மதயானையின் தோல் உரிக்கப்படுவதை நேரில் கண்ட உமாதேவி அச்சம் அடைந்த நிகழ்ச்சியும் இங்கே கூறப்பட்டுள்ளது.
பிச்சை பிறர் பெய்யப் பின் சாரக் கோசாரக்
கொச்சை புலால் நாற ஈரிருவை போர்த்து உகந்தான்
அச்சம் தன் மாதேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்
நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே
நீறு அலைத்ததோர் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (5.98.6) அப்பர் பிரான் பெருமானை நினையாதவர்களின் நெஞ்சம் நெஞ்சமே அல்ல என்று கூறுகின்றார். முன்னுதல்=நினைத்தல்; முன் நெஞ்சம்=இறைவனை நினைக்கும் நெஞ்சம்; மூர்க்கர்=கொடியவர்; வன்=கொடிய; பெருமானை நினைக்காமல் தங்களது வாழ்க்கையை கழிப்பவர்கள், வீணான வாழ்க்கையை கழிக்கின்றார்கள் என்று இங்கே கூறுகின்றார். தம் நெஞ்சம் தமக்குத் தாமிலாதவர் என்று தங்களது நெஞ்சத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு பலன் அடையாமல் இருக்கும் வீணர்களை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மனிதப் பிறவி எடுத்துள்ள நாம் பெறற்கரிய பாக்கியம் செய்தவர்கள். இறைவன் நமக்கு அளித்துள்ள கருவி கரணங்களை நன்கு உபயோகித்து, மெய்ப் பொருளின் தன்மையை உண்மையாக உணர்ந்து, பழைய பிறவிகளிலிருந்து நாம் கொண்டு வந்துள்ள வினைகளை முற்றிலும் கழித்து, பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டு முக்தி நிலையினை அடைந்து என்றும் அழியாத இன்பத்தில் ஆழ்ந்திருப்பது தான், நாம் உயிருக்கு செய்யும் கைம்மாறு ஆகும். கண்ணிருந்தும் குருடனாக பொருட்களை பார்த்து அறியாமல் இருக்கும் மனிதனை மூடன் என்பது போல், நெஞ்சம் இருந்தும் அதனை சரிவர பயன்படுத்தாமல் இருப்பவர் மூடர் தானே.
முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்
தன் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்
வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லீரே
என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே
பொழிப்புரை::
பறை சங்கு முதலிய கருவிகளிலிருந்து எழுகின்ற ஓசை, மற்றும் அந்த கருவிகளின் அருகிலுள்ள ஏனைய வாத்தியங்களிளிருந்து ஒலிக்கும் ஒலிகளும் எங்கும் பரவி இருக்கும் சூழ்நிலையில், அந்த ஓசைகளின் அடிப்படைத் தன்மையில் இறைவன் இருப்பதை சான்றோர்கள் உணருகின்றனர். நிறைந்த நீரினை உடைய கங்கை நதியினைத் தனது சடையில் வைத்துள்ள இறைவன் நின்றியூர் தலத்தில் உறைகின்றான். அந்த ஒரு பொருளைத் தவிர்த்து வேறு எதனையும் எனது உள்ளம் உணராது.
பாடல் 4:
பூண்டவ் வரை மார்பில் புரிநூலன் விரி கொன்றை
ஈண்டவ் வதனோடும் ஒரு பாலம் மதி அதனைத்
தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில்
ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே
விளக்கம்:
தொழில் அல்லது=தொழுதால் அல்லது; ஈண்ட=நெருங்க; பாலம் மதி=பால்+அம்+மதி; பால் போன்று வெண்மை நிறத்துடன் அழகாக விளங்கும் சந்திரன்; வரை=மலை; பூண்ட=அணிந்த, அணிகலன்களை அணிந்த என்று சேர்த்து பொருள் கொள்ளவேண்டும்; கழல்=கழல்களை அணிந்த திருவடிகள்; சென்ற பாடலில் சப்தப்ரபஞ்சத்தின் ஆதாரமாக இறைவன் வைத்துள்ள உடுக்கை ஒலி இருக்கும் நிலையினை தனது உள்ளம் உணர்வதாக சம்பந்தர் கூறினார். ஆனால் பல்வேறு விதமான ஒலிகளை கேட்கும் அனைவர்க்கும் இந்த உணர்வு ஏற்படுவதில்லை. அதற்கு இறைவனின் அருள் வேண்டும் என்பதையே இந்த பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார்.
இறைவனின் திருவுருவக் காட்சியினைக் காண்பதற்கே அவனருள் வேண்டும். அவனுக்கு ஒப்பாக சொல்வதற்கு எவரும் இல்லை, அவன் ஓரூரில் உறைபவன் அல்லன்: அவனது உருவத்திற்கு உவமை ஏதும் இல்லை: எனவே இறைவனின் நிறம் இன்னது, அவனுக்கு உவமையாக இந்த பொருட்கள் உள்ளன என்று எவராலும் சொல்ல முடியாது என்ற கருத்தை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடலை நாம் இங்கே காணலாம் (6.97.10)
மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான்
என்னின் அல்லால்
ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன் ஓர் உவமனில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின்
அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக்
காட்ட ஒணாதே
இறைவனின் திருவுருவத்தைத் தங்கள் கண்ணால் கண்ட அருளாளர்கள் ஒரு சிலரே. அவர்கள் கூறிய அடையாளங்களைக் கொண்டு தான், நாம் இறைவன் இப்படியிருப்பான் என்று நமது மனதினில் உருவகித்துக் கொண்டு வழிபடுகின்றோம். அவ்வாறு இறைவனைக் கண்ட அருளாளர்களும் தாங்கள் கண்ட தோற்றத்தை முழுவதும் வார்த்தைகளில் வடிக்கவோ அல்லது சிற்பமாக செதுக்கவோ அல்லது ஓவியமாக வரையவோ திறன் படைத்தவர்களா என்றால் அதுவும் இல்லை என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு இருக்கையில், ஒரு குறிப்பிட்ட வடிவத்தின் வரையறைக்குள்ளே எப்படி நாம் இறைவனின் தோற்றத்தையோ குணத்தையோ அடக்க முடியும். அதனால் தான் அவனது அடையாளத்தையும் (குறி) குணத்தையும் யார் அறிய முடியும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த கருத்தினை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (4.77.2) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
கோவணம் உடுத்தவாறும் கோளரவு அசைத்தவாறும்
தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்தவாறும்
பூவணக் கிழவனாரைக் புலியுரி அரையனாரை
ஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே
இன்ன உருவத்தை உடையவன் இன்ன நிறத்தை உடையவன் என்று பெருமானின் திறத்தினை, நமது சிற்றறிவின் துணை கொண்டு அறிவது மிகவும் அரிதான செயல். அவனது கருணையும் அவனது அருளும் இருந்தால் தான் அவனது தன்மையை நாம் உணர முடியும். புண்ணியங்கள் அனைத்தும் தனது உருவம் என்று சொல்லும் வண்ணம் சிறந்த தவக்கோலத்தை உடையவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறும் திருவைகா தலத்து பாடலை (3.71.4) நாம் இங்கே காண்போம். அறிவதேல் அரிது=இறைவனின் அருளும் ஞானமும் இல்லையேல் அறிய முடியாதது; மிகுத்த தவன்=மிகுந்த தவத்தினை உடையவன்; நீதியொடு=அருளோடு; நீதி பலவும்= பலவாகிய புண்ணியங்களும்; வகையினால்=முறைமைப்படி முழுதுணர்ந்து; மன்ன=நிலை பெற்று; மருவி=அடைந்து;
இன்னவுரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும்
தன்ன உருவாம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம்
முன்னை வினை போய் வகையினால் முழுது உணர்ந்து முயல்கின்ற
முனிவர்
மன்ன இருபோதும் மருவித் தொழுது சேரும் வயல் வைகாவிலே
இன்ன தன்மையன் என்று ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத இறைவனை நாம் உணர்வினால் அவன் இருப்பதை புரிந்து கொண்டு அவனை வழிபட்டு வணங்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல் அவனது தன்மை யாது என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்குவது தவறு என்பதை உணர்த்தும் திருவாசகப் பாடலை இங்கே நாம் சிந்திப்பது பொருத்தமாகும். இந்த பாடலில் இறைவனை உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் கூறுகின்றார். எப்படி உண்மையாக இருக்கும் பொருள் இல்லாத பொருளாக மாற முடியும். நமது உணர்வினால் உணரப் படுபவன் இறைவன். எனவே அவன் உள்ளதை, அவன் இருக்கும் உண்மையை நாம் யாவரும் உணர்வால் அறிந்து உணர்கின்றோம். ஆனால் அதே இறைவனை நமது அறிவின் துணையால் இன்ன தன்மையன் என்று ஆராயத் தொடங்கினால் அவனை நாம் உணர முடியுமா. முடியாது என்பதே விடை. எனவே தான் அறிவினால் கண்டறியாத பொருள் என்று உணர்த்தும் பொருட்டு இன்மையுமாய் உள்ளவன் என்று கூறுகின்றார். உணர்வால் உணர முடியும் இறைவனை அறிவினால் உணர முடியாது என்பதை சுட்டிக் காட்டவே உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். வளி=காற்று; ஊன்=உடல்;
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாய் என் சொல்லி வாழ்த்துவனே
பொழிப்புரை:
தனது மலை போன்று பரந்த மார்பினில் அணிகலன்களை பூண்டவனும், முப்புரி நூலை அணிந்தவனும், நெருக்கமாக கட்டப்பட்ட விரிந்த கொன்றை மலர் மாலையினையும், பால் போன்று வெண்மை நிறத்துடன் அழகாக விளங்கும் பிறைச் சந்திரனையும் தனது சடையினில் அணிந்தவனும் ஆகிய பெருமான், வானத்தை தொடும் வண்ணம் உயர்ந்து வளர்ந்த சோலைகள் கொண்டுள்ள திருநின்றியூரில் உறைகின்றான். நம்மை ஆட்கொண்டு அருளும் அவனது திரு வடிகளைத் தொழுதால் அன்றி அவனது தன்மையை எவராலும் அரிய முடியாது.
பாடல் 5:
குழலின் இசை வண்டின் இசை கண்டு குயில் கூவும்
நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்
அழலின் வலன் அங்கை அது ஏந்தி அனலாடும்
கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகண்ணே
விளக்கம்:
களைகண்=பற்றுக்கோடு; ஒருவர் பாடுவதைக் கேட்கும் அடுத்தவருக்கும் பாடத் தோன்றுவது உலக இயல்பு. அந்த இயல்பினால் குழலின் இசையையும் வண்டின் இசையையும் கேட்கும் குயில்களும் பாடத் தொடங்குகின்றன என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.
பொழிப்புரை:
குழலின் இசையையும் வண்டின் இசையையும் கேட்டு தாமும் பாடத் தொடங்கும் குயில்கள் நிறைந்த சோலைகள், நிழலுடன் எழில் கொஞ்சும் வண்ணம் அமைந்துள்ளன. இத்தகைய சோலைகள் சூழ்ந்த நின்றியூர் தலத்தில், வலமாகச் சுற்றி எழும் தீப்பிழம்பினைத் தனது கையில் ஏந்தியவாறும், காலில் அணிந்துள்ள கழல்கள் ஒலிக்குமாறும் நடமாடும் இறைவன் நம் அனைவருக்கும் பற்றுக்கோடாகத் திகழ்கின்றான்.
பாடல் 6:
மூரன் முறுவல் வெண்ணகை உடையாள் ஒரு பாகம்
சாரன் மதி அதனோடுடன் சலவம் சடை வைத்த
வீரன் மலி அழகார் பொழில் மிடையும் திரு நின்றி
ஊரன் கழல் அல்லாது எனது உள்ளம் உணராதே
விளக்கம்:
சலவம்–கங்கை; மூரல் என்ற சொல் எதுகை கருதி மூரன் என்று மாறியுள்ளது. மூரல் முறுவல்= மிகவும் சிறிய புன்சிரிப்பு; சாரன்=சார்ந்து இருப்பவன்; பொழில்=சோலை; மிடையும்=நெருங்கி இருத்தல். இந்த பாடலில் ஞானசம்பந்தர் பெருமானது திருப்பாதங்களைத் தவிர்த்து வேறு எதனையும் தொழாத அறிவு உடையவனாக தான் இருப்பதாக கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது அவர் அருளிய பிறையணி படர்சடை என்று தொடங்கும் பதிகத்தின் பாடலை (1.19.4) நமது நினைவுக்கு கொண்டுவருகின்றது.. நறநிறை=நறவு என்ற சொல் குறைந்து நற என வந்துள்ளது; நறவு=தேன்;
முதிருறு கதிர் வளர் இளமதி சடையனை நறநிறை தலை தனில்
உதிருறு மயிர்பிணை தவிர் தசையுடை புலியதள் இடை இருள் கடி
கதிருறு சுடரொளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை
அதிருறு கழலடிகளதடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே
நமக்கு வழிகாட்டும் நல்லோராகிய நால்வரும் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் போற்றாது இருந்த தன்மையை அவர்களது வாழ்விலிருந்து நாம் அறிகின்றோம். அவர்களது இந்த கொள்கை அவர்களின் பல பாடல்களில் வெளிப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வாழாப்பத்து பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகர், பெருமானை அன்றி வேறு எவரையும் தனக்குத் துணையாக கருத மாட்டேன் என்றும் அவரைத் தவிர்த்து வேறு எவரையும் தொழமாட்டேன் என்றும் கூறுகின்றார். இந்த பாடலின் முதல் அடியில் கருணையே உருவமாக உள்ள பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று அடிகளார் கூறுகின்றார். பண்டைய நாளிலிருந்து இடைவிடாது தொடர்ச்சியாக அடியார்களுக்கு அருள் புரிந்து வரும் அன்னையை, குற்றம் ஏதும் இல்லாதவள் என்று அடியார்கள் புகழ்வதாக அடிகளார் கூறுகின்றார், இனியும் தொடர்ந்து வாழ்வதில் தனக்கு விருப்பம் ஏதும் இல்லாமையால், பெருமானே நீ என்னை விரைவில் அழைத்துக் கொள்வாயாக என்று விண்ணப்பம் வைக்கும் பாடல்.
பழுது இல் தொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று
இலேன் கண்டாய்
செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கு ஓர் துணை என நினைவனோ
சொல்லாய்
மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே
மேற்கண்ட பாடலில் பெருமானே உன்னைத் தவிர பற்றுக்கோடு வேறேதும் எனக்கு இல்லை என்று அறிவிக்கும் அடிகளார், தனது நிலையை பெருமானே நீ இன்னும் காணவில்லையா என்று கேட்கும் வகையில், கண்டாய் என்ற சொல்லை கையாண்டுள்ளார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பற்று நான் மற்றிலேன் கண்டாய் என்ற தொடர் வருகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடல், இந்த தொடர் உணர்த்தும் செய்தியை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றது. பெருமானே உன்னைத் தவிர வேறு பற்றுக்கோடு ஏதும் கொள்ளாமல் வாழும் எனக்கு அருள் புரியாமல் இருக்கின்றாயே இது நியாயமா என்று கேட்பது போன்று அமைந்துள்ள பாடல். பெருமான் ஒருவனே தனக்கு பற்றுக்கோடு என்பதால், அவனைத் தவிர வேறு எவரிடமும் சென்று முறையிடேன் என்று புலம்பும் அடிகளார், அவன் அருள் புரியாமல் இருப்பதால் அவன் மீது தான் கோபம் கொண்டாலும் அவனது அருளினை தொடர்ந்து வேண்டுவதையும் நாம் உணரலாம்.
பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருபெருந்துறை உறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலை ஆனால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே
தனது இடது கண்ணில் பார்வை வரப்பெற்று, வலது கண்ணில் பார்வை வேண்டி திருவாரூரில் வீற்றிருக்கும் இறைவனை வணங்கி பதிகம் பாடிய சுந்தரர், வேறு எவரையும் வேண்டாது தான் இருந்த நிலையினை மீளா அடிமை என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் (7.95.1) உணர்த்துகின்றார். இறைவனிடம் நாம் கொண்டுள்ள அடிமைத்திறம் நமது வாழ்நாள் முழுவதும் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த அடிமைத் தன்மையிலிருந்து நாம் வெளியே வாராமல் பெருமானுக்கு எப்போதும் திருத்தொண்டு செய்பவர்களாய். அடிமைத் திறத்திலிருந்து மீளாமல் இருக்க வேண்டும். மேலும் நமது தேவைகளையும் அவரிடமே முறையிட்டு பெறுதல் வேண்டும் அவ்வாறு இருந்ததால் தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் (7.95) சொல்லிக் கொள்கின்றார்.
மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே
மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே
மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலில், அப்பர் பிரான், சிவபெருமானுக்கு மீளாத அடிமையாக இருந்து, மெய்ப்பொருளாகிய சிவபெருமானை அடையாத மனிதர்களை, வீணான வாழ்க்கை வாழ்பவர்கள் என்று கூறுகின்றார். அறிவு வளர்ச்சி பெற்று, ஒரு வேலையில் அமர்ந்து பொருள் ஈட்டும் திறம் பெற்று, தனது காலில் நிற்கும் தன்மையை அடைந்த மனிதனை நாம் ஆளாகி விட்டான் என்று கூறுகின்றோம். ஆனால் அப்பர் பிரான் ஆளாக கருதுவது, பெருமானது அடியார்களைத் தான். ஏனென்றால் அவர்கள் தானே, நிலையான இன்பம் அளிக்கக் கூடிய முக்தி நிலைக்கு செல்வதற்கான வழியில் அடியெடுத்து வைத்தவர்கள். அவ்வாறு ஆளாகாத ஒருவன், சிவபெருமானின் அடியார் ஒருவரை அணுகி, ஆளாகும் நிலையினை அடைந்து உய்வினை அடைய வேண்டும் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.
ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர் செவி
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே
இவ்வாறு சம்பந்தர் கூறுவதை கருத்தினில் கொண்டு தான், பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றாரோ? சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகை பதிகத்தில் திருஞான சம்பந்தரைக் குறிப்பிடும் வரிகளை நினைவூட்டுகின்றது. வம்பறா வரிவண்டு மணம் நாற மலரும் மதுமலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான் சம்பந்தன் என்று கூறுகின்றார். கொன்றைசூடியின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் போற்றி வழிபடாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றார். அச்சிறுபாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில், கையில் மான்கன்றினை ஏந்திய பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத கருத்தினை உடையவன் என்று தன்னை திருஞான சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (1.77.11) உணரலாம். கருங்குவளை மலர்கள் பொழியும் தேனினை உட்கொள்ளும் தவளைகளின் வாய் நிறைந்துள்ள நிலையும், வாளை மீன்கள் துள்ளி விளையாடுவதால் புதியதாக மலர்ந்த மலர்களின் இதழ்கள் கிழியும் நிலையும் குறிப்பிடப்பட்டு சீர்காழி நகரின் நீர்வளமும் நிலவளமும் சம்பந்தரால் நமக்கு உணர்த்தப்படுகின்றது.
மைச்செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப் பொய்கையில்
புதுமலர் கிழிய
பச்சிற வெறி வயல் வெறி கமழ்ப் பதி அவர் அதிபதி கவுணியர் பெருமான்
கைச் சிறு மறியவன் கழல் அலால் பேணாக் கருத்துடை ஞான சம்பந்தன
தமிழ் கொண்டு
அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் அருவினை இலரே
இவ்வாறு சம்பந்தர் கூறுவது நமக்கு சுந்தரர் வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலை (7.86.7) நினைவூட்டுகின்றது. பெருமானை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப்படாது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார் மெய்ப்பொருளாய் இருப்பவனும் வெண்மையாக உள்ள திருநீற்றினை தனது உடல் முழுவதும் பூசுபவனும், வேதங்களின் தலைவனும், தனது கையினில் மான் மற்றும் மழு ஏந்தியவனும், அனைவரது வாழ்நாளினை முடிக்கும் காலனின் வாழ்நாளை முடித்தவனும், படத்தினை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் இறுகக் கச்சையாக கட்டி ஆட்டுபவனும், தனது அடியார்கள் அன்றி ஏனையோர் அறிய முடியாத வண்ணம் மறைத்துக் கொள்பவனும், எங்களது தலைவனும் ஆகிய இறைவனை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப் படாது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.
மெய்யன் வெண்பொடி பூசும் விகிர்தன் வேத முதல்வன்
கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம் அறுத்தான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்
ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவென்னே
மேலே குறிப்பிட்ட பாடல்களில் பெருமானை வழிபடாத அறிவு, அறிவு என்று கருதப்படாததை நாம் உணர்ந்தோம். மணிவாசகர் ஒரு படி மேலே சென்று, அத்தகைய அறிவு இல்லாத மூடர்களிடம் அச்சம் கொண்டு அவர்களுடன் பழகுவதை தவிர்ப்போம் என்று அச்சப்பத்து பதிகத்தினில் கூறுகின்றார். தறி=காட்டுத்தறி, தறியிலிருந்து விடுபடும் யானை மிகுந்த கோபத்துடன் வரும்; உழுவை=புலி; பெருமானின் சடை நறுமணத்துடன் கூடியது என்று அடிகளார் இங்கே கூறுகின்றார்,
தறி செறு களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன்
வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா
செறி தரு கழல்கள் ஏந்தி சிறந்து இனிது இருக்க மாட்டா
அறிவு இலாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறே
பொழிப்புரை:
சிறிய புன்முறுவலைத் தரும் வெண்மையான பற்களைக் கொண்டுள்ள உமையன்னையைத் தனது உடலில் ஒரு பாகத்தில் வைத்தவனும், முற்றிலும் அழிந்த நிலையில் தான் தொடர்ந்து வாழும் பொருட்டுத் தன்னைச் சார்ந்து நின்ற பிறைச்சந்திரனுடன் கங்கை நதியையும் சடையில் வைத்துள்ள வீரனும், அழகிய சோலைகள் நெருங்கி இருக்கும் நின்றியூரில் நிலை பெற்று உள்ளவனும் ஆகிய பெருமானின் திருப்பாதங்களைத் தவிர்த்து வேறு எதையும் எனது உள்ளம் உணராது.
பாடல் 7:
பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும்
பெற்றி அதுவாகித் திரி தேவர் பெருமானார்
சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும்
நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே
விளக்கம்:
பற்றி=பறித்து; பெற்றி=தன்மை; உலகத்தவர் உய்வதற்காக பலி ஏற்கும் பெருமான் இன்றும் தொடர்ந்து பலி ஏற்றுக் கொண்டு இருக்கின்றான். செம்பொன்பள்ளி பதிகத்தின் முதல் பாடலில் (5.36.1) பலி ஏற்கும் கொள்கையிலிருந்து தவறாமல் பலி ஏற்கின்றான் என்று நமக்கு அப்பர் பிரான் உணர்த்துகின்றார். கான்=நறுமணம்: வெண் தலை=தசை நீங்காத தலை; அறாத=நீங்காத
கான் அறாத கடி பொழில் வண்டினம்
தேன் அறாத திருச்செம்பொன்பள்ளியான்
ஊன் அறாததோர் வெண் தலையில் பலி
தான் அறாததோர் கொள்கையன் காண்மினே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.56.5), இறைவன் ஒவ்வொரு நாளும் பலி ஏற்கின்றான் என்று சம்பந்தர் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. எனவே பலி ஏற்பது அவனது தன்மை என்பதை நாம் உணர்கின்றோம்.
நச்சரவச் சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு
அச்சம் எழ விடை மேல் அழகார் மழு ஏந்தி நல்ல
இச்சை பகர்ந்து மிக இடுமின் பலி என்று நாளும்
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே
பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர் விளக்கம் (ஏழாம் தந்திரம், பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி=இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன்; நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்து இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்று கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான்.
பரந்து உலகேழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்
நிரந்தரமாக நினையும் அடியார்
இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே
பொழிப்புரை:
தனது கை நகத்தால் கிள்ளி எறிந்த பிரமனது தலையினைக் கையில் பற்றிக் கொண்டு பல இடங்களிலும் திரிவது, தேவர்களின் தலைவனாக விளங்கும் பெருமானின் இயல்பாகும். இவ்வாறு பலி ஏற்கும் பெருமான் தனது இடுப்பினில் புலித்தோலைச் சுற்றிக்கொண்டும், பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடிக் கொண்டும் தனது நெற்றியினில் ஒரு கண் உடையவராகவும் இன்றியோர் தலத்தில் நிலையாக உறைகின்றார்.
பாடல் 8: சிதைந்தது
பாடல் 9:
நல்லம் மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்
அல்லர் என ஆவர் என நின்றும் அறிவரிய
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரின் நிலையார் எம்
செல்வர் அடி அல்லாது என சிந்தை உணராதே
விளக்கம்:
தமது முன்னர் எழுந்த அழற்றூணின், இயல்பினை அறியமாட்டாது, பகைவரோ எவரோ என்று இன்னதொன்று அறியாத நிலையில் பிரமனும் திருமாலும் திகைத்து நின்ற நிலை, அல்லர் என ஆவார் என்ற தொடரால் குறிப்பிடப்படுகின்றது. மற்ற எவரும் உயிர்களுக்குத் தலைவர் அல்லர் தாம் ஒருவனே உயிர்களுக்குத் தலைவன் என்று செருக்குடன் நின்ற நிலையை குறிப்பிடுவதாக கொள்வதும் பொருத்தமே. அல்லர் என ஆவர் என நின்றும் என்ற தொடருக்கு வேறுவிதமாகவும் விளக்கம் அளிக்கப்படுகின்றது. தான் பெருமானின் திருமுடியைக் கண்டதாக பொய் பேசிய பிரமன் மற்றும் தன்னால் திருவடியைக் காண இயலவில்லை என்று உண்மை பேசிய திருமால் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. நல்ல மலர்=தாமரை மலர்; கண்ணனாக அவதாரம் செய்த போது, தனது மகன் மண்ணைத் தின்று விட்டானே என்ற கவலையில் அவனது வாயினைத் திறத்து யசோதை பார்த்தபோது, அவனது வயிற்றினில் உலகம் இருப்பதைக் கண்ட செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது.
மாறுபட்டு தங்களுக்குள் வாதம் செய்த தகவல் திருவாசகம் தோள்நோக்கம் பதிகத்தில் கூறப்பட்டுள்ளதை நாம் இங்கே காணலாம்.. இறந்து என்றால் கடந்து என்று பொருள். அளவு கடந்து நின்ற தன்மை இங்கே உணர்த்தப்பட்டுள்ளது.
பிரமன் அரி என்று இருவரும் தம் பேதமையால்
பரமம் யாம் பரம் என்று அவர்கள் பதைப்பொடுங்க
அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ
இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் திருமந்திரப் பாடலிலும், தானே பெரியவன் என்று இருவரும் ஒருவருக்கொருவர் வாதம் செய்தது குறிப்பிடப் படுகின்றது. பேதமை என்று அவர்களது அறிவற்ற செயல் உணர்த்தப்பட்டுள்ளது.
பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்
பிரமன் மால் தங்கள் தம் பேதமையாலே
பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க
அரனடி தேடி அரற்றி நின்றாரே
தங்களுக்குள்ளே யார் மேம்பட்டவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த பிரமன் மற்றும் திருமாலின் முன்னே எழுந்த தீப்பிழம்பினைக் கண்டு, அந்த தீப் பிழம்பின் இரண்டு புறத்திலும் நின்ற பிரமனும் திருமாலும் இறைவனைப் பணிந்த செய்தி, சொல்லப்படும் அப்பர் பிரானின் பாடல் (4.14.2) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பரம் ஒரு தெய்வம்=தங்களுக்கு அப்பாற்பட்ட பரமாகிய ஒரு தெய்வம்: தம்பம்=தூண்
நிரவொலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அதுவப்
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணியப்
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன்
பர முதலாய தேவர் சிவனாய மூர்த்தி அவனா நமக்கொர் சரணே
பொழிப்புரை:
நல்ல மலராகிய தாமரை மலரின் மேல் அமரும் பிரமனும், உலகினை உண்டவன் என்று கருதப்படும் திருமாலும் தங்களுக்குளே தானே தலைவன் என்றும் அடுத்தவர் தலைவன் அல்ல என்றும் வாதம் செய்து கொண்டிருந்த போது, அவர்கள் இருவரும் அடியையும் முடியையும் காண முடியாமல் தவித்து திற்கும் வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்றவன் பெருமான் .அத்தகைய பெருமான் நெல்வயல்கள் சூழ்ந்த நின்றியூர் தலத்தில் நிலையாக உறைகின்றார். அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்த முக்திச் செல்வதைத் தன்னிடம் வைத்துள்ள செல்வராகிய பெருமானின் திருவடிகளை தவிர்த்து வேறு எதையும் எனது சிந்தை உணராது.
பாடல் 10:
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை
அறிவில் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே
நெறி இல்லவர் குறிகள் நினையாதே நின்றியூரில்
மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே
விளக்கம்:
ஆதர்=கீழ்மக்கள்; நெறி=சைவ சமயநெறி; அயர்தல்=மயங்குதல்; இந்த பாடலில் பெருமானின் திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்தாக கருதப்படும் என்று சம்பந்தர் கூறுகின்றார். ஏனெனில் பொதுவாக வாழ்த்தொலிகளில் குறிப்படப்படும் அனைத்துப் புகழ் சொற்களுக்கும் முழுதும் பொருந்தும் வண்ணம் விளங்குபவன் பெருமான் ஒருவன் தான். எனவே ஏனையோரை புகழ்ந்து சொல்லப்படும் வாழ்த்துகள், வெறும் உபசார வார்த்தைகளே தவிர வேறொன்றுமில்லை என்று சம்பந்தர் இந்த பாடல் மூலம் உணர்த்துகின்றார்.
தொன்றுதொட்டு வரும் வைதீக நெறியினைச் சார்ந்த சைவசமயம் ஒன்றே பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற வழியினை உணர்த்தும் சமயம். ஏனைய புறச் சமயங்கள் இடையில் தோன்றியவை; மேலும் அந்த சமயங்கள் முக்தி நெறிக்கு வழிகாட்டுவதில்லை என்பதால் சைவ சமயம் தவிர்த்த மற்ற சமயங்களை புறக்கணிக்குமாறு சம்பந்தர அறிவுரை கூறுகின்றார். நிலையான முக்தி நெறிக்கு வழி வகுப்பதால் சைவசமயத்தை உண்மை நெறி என்றும் முத்திக்கு நிலைக்கு அழைத்துச் செல்லாத மற்ற சமயங்களை நெறியற்றவை என்றும் சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.
இந்த பாடல் நமக்கு சுந்தரர் புகலூர் மீது அருளிய பாடலை (7.34.2) நினைவூட்டுகின்றது. தகுதி அற்றவர்களை புகழ்ந்து பாடுவதால் நமக்கு ஏதும் கிடைக்காது என்பதால், தகுதி உள்ள ஒருவனாகிய பெருமானைப் புகழ்ந்து பாடுங்கள்; நீங்கள் வேண்டுவன பெற்று அமரர் உலகினை ஆளும் தகுதியும் பெறுவது திண்ணம் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.
மிடுக்கு இலாதனை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று
கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை
பொடிக் கொள் மேனி எம் புண்ணியன் புகலூரைப் பாடுமின் புலவீர்காள்
அடுக்கு மேல் அமர் உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே
பொழிப்புரை:
தொன்றுதொட்டு மாறுபாடின்றி வரும் சைவ சமய நெறியை பயில்வதால் நாம் உணர்வதும், நிலையாக என்றும் பெயராமல் இருப்பதும் ஆகிய முழுமுதல் கடவுளாகிய நினையாத அறிவினை உடைய அறிவற்ற கீழ்மக்கள் ஆகிய சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்களை கேட்டு, மயங்காமலும், தமக்கென்று உண்மையான முக்தி நிலைக்கு வழிகாட்டும் நெறியற்ற புறச் சமயங்களின் அடையாளங்களை நினையாமலும், நின்றியூரில் வாழ்பவனும் மான் கன்றினை தனது கையில் ஏந்தியவனும் ஆகிய பெருமானை புகழ்ந்து பேசும் வாழ்த்துரைகளே உண்மையான வாழ்த்து ஆகும்.
பாடல் 11:
குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவாக
நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை
நன்றார் தரு புகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன்
குன்றாத் தமிழ் சொல்லக் குறைவின்றி நிறை புகழே
விளக்கம்:
பொதுவாக பதிகத்தின் கடைக் காப்பினில் இராவணன் குறித்த நிகழ்ச்சி குறிப்பிடப் படுவதில்லை. இந்த பதிகத்தின் எட்டாவது பாடல் சிதைந்ததால், இராவணின் வலிமையை அடக்கிய தன்மையும் நமக்கு கிடைக்கவிலையே என்ற குறை தீரும் பொருட்டு இந்த குறிப்பு அமைந்துள்ளதோ என்று தோன்றுகின்றது. தமிழ் என்பது இங்கே தேவாரப் பதிகங்களை குறிக்கும். குன்றாத் தமிழ்= பலன்களை அளிப்பதில் பாடிய நாள் முதல் முதல் என்றும் மாறாது விளங்கும் தேவாரப் பதிகங்கள்;
பொழிப்புரை:
கயிலை மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்த அரக்கன் இராவணனின் உடலும் தோள்களும், கயிலை மலையின் கீழே அமுக்குண்டு நொறுங்கும் வண்ணம், தனது கால் பெருவிரலை மலையினின் மீது ஊன்றிய பெருமானை, நின்றியூர் தலத்தில் உறையும் பெருமானின் புகழினைப் போற்றி, தன்னை வந்தடையும் அடியார்களுக்கு நன்மை அளிக்கும் புகலித் தலத்தில் தோன்றியவனும் தமிழ் மொழியில் எல்லையற்ற ஞானம் உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் சொல்லிய இந்த பத்து பாடல்களை, ஓதுவோருக்கு அன்றைய நாள் முதல் குன்றாத பலன்களை அளிக்கும் வல்லமை பெற்ற இந்த பாடல்களை, முழு மனதுடன் பக்தி வைத்து சொல்லும் வல்லமை பெற்ற அடியார்கள் வாழ்வினில் குறையேதும் இன்றி நிறைவான புகழினை பெற்று விளங்குவார்கள்.
முடிவுரை:
பதிகத்தின் முதல் பாடலில் பண்டைய நாளில் தனது அடியானின் உயிரைக் கவர்ந்து செல்ல முயற்சி செய்த இயமனின் வலிமையை வீழ்த்தி மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. இந்த நிகழ்ச்சியின் விளைவாக அன்று முதல் பெருமானின் அடியார்கள் அச்சம் இன்றி வாழ்வதாக இரண்டாவது பாடலில் சம்பந்தர் குறிக்கின்றார். மூன்றாவது பாடலில் அனைத்து ஒலிகளுக்கும் ஆதாரமாக இறைவனின் உடுக்கையிலிருந்து எழுந்த ஒலி இருப்பது உணர்த்தப் படுகின்றது. நான்காவது பாடலில் இறைவனைத் தொழும் அடியார்கள் மட்டுமே இறைவனின் தன்மைகளை உணரமுடியும் என்பது சொல்லப் பட்டுள்ளது. ஐந்தாவது பாடலில் இறைவன் ஒருவனே அனைத்து உயிர்களுக்கும் பற்றுக்கோடு என்று உணர்த்தி நாம் இறைவனைத் தொழ வேண்டிய அவசியத்தை சம்பந்தர் கூறுகின்றார். அவ்வாறு இறைவன் ஒருவனே பற்றுக்கோடு என்பதை உணர்ந்ததால் தனது மனம் அவனது திருவடிகளையன்றி வேறெதையும் உணராது என்று தனது தன்மையை எடுத்துரைத்து நமக்கு வழிகாட்டும் பாங்கினை ஆறாவது பாட்டினில் நாம் உணரலாம். உயிர்கள் உய்ய ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டுத் பலியேற்று திரிவதை என்றும் மாறாத இயல்பாக பெருமான் கொண்டுள்ள தன்மை ஏழாவது பாடலில் சொல்லப் பட்டுள்ளது. இவ்வாறு என்றும் மாறாத கருணை உள்ளம் கொண்ட பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து தனது சிந்தை வேறெதையும் உணராது என்று ஒன்பதாவது பாடலில் கூறுகின்றார்.
நாம் புகழ்ந்து கூறும் சொற்களுக்கு தகுதி படைத்தவனாக இறைவன் ஒருவன் மட்டுமே இருப்பதால், அவனைப் புகழ்ந்து கூறும் சொற்களே உண்மையான வாழ்த்து என்று பத்தாவது பாடலில் குறிப்பிடும் சம்பந்தர், தேவாரப் பதிகங்கள் அன்று முதல் இன்று வரை பலன்கள் அளிப்பதில் குறையாத தன்மையுடன் விளங்குகின்றன என்று கூறுகின்றார். நாமும் சம்பந்தர் காட்டிய வழியில் சென்று, இறைவனைத் தவிர்த்து வேறு எதையும் நமது உள்ளத்தால் உணராது, அவனது திருவடிகளைத் தொழுது அவனது தன்மைகளை முழுவதும் அறிந்து கொண்டு, அவனையே பற்றுக்கோடாக நினைத்து வாழ்ந்து, அவனது திருவடிகளையே எப்போதும் சிந்தனை செய்து, உரிய முறையில் அவனை வாழ்த்தி, தேவார திருவாசக பதிகங்களை ஓதி, என்றும் குறையாத பெருமானின் அருள் பெற்று நிறைவாக வாழ்வோமாக.
Tag :
#thirugnanasambandhar thevaram
#Soolam Padai Chunna
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram
Written by:
என். வெங்கடேஸ்வரன்