Go Back

22/03/21

குரவம் கமழ் நறுமென்


குரவம் கமழ் நறுமென் - பின்னணி


தனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக கோடிகா, கஞ்சனூர், மாங்குடி, திருமங்கலக்குடி ஆகிய தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர் பின்னர் வியலூர் சென்றார் என்று பெரியபுராணம் உணர்த்துகின்றது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு திருந்துதேவன்குடி தலம் சென்றார் என்பதையும் நாம் கீழ்க்கண்ட பெரிய புராணப் பாடலிலிருந்து தெரிந்து கொள்கின்றோம். இந்த தலத்து பதிகத்தின் ஐந்தாவது பாடலில், திருஞானசம்பந்தர், கண்ணார் தரும் உருவாகிய கடவுள் என்று கூறியதை ஆதாரமாகக் கொண்டு சேக்கிழார், பெருமான் தனது அருள்வேடம் சம்பந்தருக்கு காட்டினர் என்று கூறியுள்ளார் போலும். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது.

வெங்கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளைப் போற்றித்

தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப் பதிகத் தொடை சாத்தி

அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்டத் தொழுது

செங்கண் மாலுக்கு அரியார் தம் திருந்துதேவன்குடி சேர்ந்தார்

இந்த தலம் கும்பகோணத்திலிருந்து ஏழு கி.மீ தூரத்தில் உள்ளது. இந்நாளில் திருவிசைநல்லூர் என்று அழைக்கப்படுகின்றது. கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்து வசதியும் ஆட்டோ வாகன வசதியும் உள்ளது. வியல் என்றால் அகலம் என்று பொருள். இந்த தலத்தில் ஓடும் காவிரி நதி மிகவும் அகன்று ஓடுவதால் வியலூர் என்ற பெயர் வந்தது போலும். சூரியனார் கோயில் தலத்திலிருந்து வேப்பத்தூர் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் இந்த தலம் உள்ளது. இறைவனின் பெயர்; சிவயோகிநாதர், யோகாநந்தேசுவரர்; அம்பிகையின் திருநாமம்: சாந்தநாயகி, சௌந்தரநாயகி. ஸ்ரீதர அய்யாவாள், தனது இல்லத்தில், பெருமானின் அருளினால், கங்கை பொங்கி வரச்செய்த தலம். ஜடாயு, அகத்தியர், சூரியன் மற்றும் பிரமன் வழிபட்டு பயன் பெற்ற தலம். நான்கு யுகங்களையும் கடந்த தலம். க்ருத யுகத்தில் புராதனேசுவரர் என்றும், திரேதா யுகத்தில் வில்வாரண்யேசுவரர் என்றும் துவாபர யுகத்தில் யோகாநந்தேசுவரர் என்றும் கலியுகத்தில் சிவயோகி நாதர் என்றும் அழைக்கப்பட்டதாக தல புராணம் கூறுகின்றது. பிரமன், ஆறு சகோதரர்களுடன் ஒரு அந்தணனாக பிறந்து பெருமானை வழிபட்டார் என்றும், ஒரு சிவராத்திரி நன்னாளில் ஏழு பேருக்கும் பெருமான் தரிசனம் அளித்தார் என்றும், அந்த எழுவரும் சோதி வடிவமாக பெருமானுடன் கலந்தனர் என்றும் கூறுவார்கள். இந்த ஏழு பேரும் இறைவனுடன் கலந்ததை உணர்த்தும் வண்ணம் இலிங்கத்தின் உச்சியில் ஏழு முடிக்கற்றைகள் இருப்பதாக கூறுவார்கள். சித்திரை மாதத்து முதல் மூன்று நாட்களில், சூரியனது கிரணங்கள் நேரே கருவறை சென்று அடைவதை, சூரியன் செய்யும் வழிபாடாக கருதுகின்றனர்.

நான்கு கால பைரவர்கள் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஞானகால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர். ஒரு மனிதனின் வாழ்நாளில் உள்ள நான்கு பகுதிகளிலும் அவனது தேவைக்கு ஏற்ப அருள் புரியும் பைரவர்கள், அவர்கள் அளிக்கும் பயன்களை குறிப்பிடும் வண்ணம் அவரது பெயர்கள் அமைந்துள்ளன என்று கூறிவார்கள். வாழ்க்கையின் முதல் பகுதியில் ஞானம் பெறுவது மனிதனின் குறிக்கோளாகவும் இரண்டாவது பகுதியில் செல்வம் சேர்ப்பது குறிக்கோளாகவும், மூன்றாவது பகுதியில் விரோதிகள் மற்றும் கடன் தொல்லைகள் இல்லாமல் இருப்பது குறிக்கோளாகவும், நான்காவது பகுதியில் யோகங்கள் பெறுவது குறிக்கோளாகவும் இருப்பதை நாம் உணர்கின்றோம். இந்த பைரவர்களைத் தொழுதால் நான்கு விதமான பேறுகளையும் பெற்று இன்பமாக வாழலாம் என்ற நம்பிக்கை உள்ளது. பைரவர்களின் சன்னதி அருகே, பைரவரை தனது குருவாக கருதும் சனீசுவரர், வெள்ளை ஆடை அணிந்து பால சனீசுவரராக காட்சி தருகின்றார்.

பாடல் 1:

குரவம் கமழ் நறுமென் குழல் அரிவை அவள் வெருவப்

பொரு வெம் கரி பட வென்று அதன் உரிவை உடல் அணிவோன்

அரவும் அலை புனலும் இளமதியும் நகு தலையும்

விரவும் சடை அடிகட்கு இடம் விரிநீர் வியலூரே

விளக்கம்:

குரவம்=குராமலர்; அரிவை=இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட பெண்களைக் குறிக்கும் சொல். அம்பிகை என்றும் மூப்பு அடையாமல், இளமையும் அழகும் ஒரு சேர வாய்க்கப் பெற்று இருப்பதால் தேவியை அரிவை என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். பொரு= போருக்கு சென்ற; கயாசுரன் என்ற அரக்கன், யானை உடலைக் கொண்டவனாக இருந்தவன், சிவபெருமானுடன் போருக்குச் சென்றான். சிவபெருமானால் அவனுக்கு மரணம் நேரும் என்பதை பிரமதேவன் எடுத்துச் சொல்லியிருந்த போதும், அதனை பொருட்படுத்தாமல், தேவர்களுக்கு அடைக்கலம் தந்த காரணத்திற்காக பெருமான் மீது சினங்கொண்டு, போருக்கு சென்றதையே, பொருவெங்கரி என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பட=இறந்து பட உரிவை=தோல்;

விரவும்=ஒன்றாக கலந்திருத்தல்; ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களும் தங்களுக்குள்ளே பகையும் கொண்டுள்ள பொருட்கள் தங்களது பகையினை மறந்து, பெருமானின் சடையினில் இருப்பதை இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமானின் சன்னதியில் பகைமை உணர்ச்சிக்கு இடமேது. இந்த பாடலில் சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் திருவாரூர் பாடல் (4.53.2) ஒன்றினை நினைவூட்டுகின்றது. நங்கை=பார்வதி தேவி: மஞ்ஞை=மயில்: வேழம்=யானை: ஆகம்=உடல்: நிமிர்தல் செய்யா=நிமிர்ந்து நில்லாமல் வளைந்து காணப்படும் பிறை கொண்ட சந்திரன்: உரிவை= தோலாடை:

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று

வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து

பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சி

ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே

சடையில் சந்திரனைக் கண்ட நாகம், சந்திரனை விழுங்கக் கருதி மிகவும் வேகமாக வருகின்றது அந்த சமயத்தில், மயில் போன்ற சாயலை உடைய கங்கையை கண்டு, தன்னைக் கொத்தித் தின்ன மயில் வந்து விட்டதோ என்ற அச்சத்தில், தனது வேகத்தைத் தவிர்க்கின்றது. இதனிடையே, பாம்பினைக் கண்டு பயந்த, சந்திரன் பெருமான் அணிந்திருக்கும் யானைத் தோலின் அடியில் புகுந்து கொள்வதும், பாம்பு சென்று விட்டதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அடிக்கடி வெளியே எட்டிப் பார்கின்றது. அவ்வாறு எட்டிப் பார்க்கும் பொழுது, சந்திரன் முழுமையாகத் தெரியாமல், மேகத்தின் இடையே தோன்றும் மின்னல் கீற்று போன்று காணப்படுவதால், மின்னல் என்று நினைத்து, பாம்பு அடங்கி விடுகின்றது. வானத்தில் மின்னல் தோன்றினால், மயில்கள் மிகவும் மகிழ்ந்து நடமாடும். எனவே மின்னலும் இடியும், மயில்கள் வெளியே வந்து நடமாடும் செய்கைக்கு அறிகுறி என்று கருதி பாம்பு ஒதுங்கியது என்று உணர்த்துகின்றார். இயல்பாக பாம்பினைக் காணும் எவரும் அச்சம் கொள்வார்கள் அல்லவா. அது போன்று உமையும் அச்சம் கொண்டதாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்டு இருத்தல் தான், இவர்கள் மூவரும் அடங்கிக் கிடக்கும் நிலையை ஏற்படுத்தியது என்று நகைச்சுவையாக கூறினாலும், இறைவனின் சன்னதியில் பகைமை உணர்ச்சி நீங்கப் பெற்று, கங்கை எனும் நங்கை, பாம்பு, சந்திரன் ஆகியவை பகையின்றி சிவபெருமானின் சடையில் உலாவும் தன்மையை நமக்கு உணர்த்துகின்றார்

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் (4.10.8), பெருமானது சடையில் உள்ள பொருட்களின் மீது தனது கற்பனையை ஏற்றி, அந்த காட்சியைக் காணும் தலைமாலை நகைக்கின்றது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபெருமானின் சடையில் உள்ள பாம்பு அசைகின்றது: சடையில் அடக்கி வைக்கப்பட்டுள்ள கங்கை அசைகின்றது: அந்த கங்கை நீரினில் தோய்ந்த சந்திரன் ஆடுகின்றது. அவரது தலை மாலையில் உள்ள மண்டையோடு தனது பற்களை இழந்த நிலையில் சிரிப்பது போன்று காட்சி அளிக்கின்றது. இந்த காட்சிகளைக் காணும் அப்பர் பிரானின் கற்பனை விரிகின்றது. அந்த கற்பனைக் காட்சி தான் இந்த பாடலில் விளக்கப் படுகின்றது.

கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுறக்

கிடந்த பாம்பு அவளையோர் மயில் என்று ஐயுறக்

கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே

கிடந்தது தான் நகு தலை கெடில வாணரே

சிவபெருமானின் சடையில் உள்ள பாம்பு அசைவதைக் கண்டு, அருகில் இருக்கும் கங்கை நங்கை அச்சம் அடைகின்றாள். அச்சத்தால் அவள் உடல் நெளியவே, அவளது கரிய கூந்தல் ஆடுவதைக் கண்ட பாம்பு, அவளை மயில் என்று தவறாக நினைத்து பயப்படுகின்றது. தங்களது பகைமையை அடக்கி, தன்னையும் பாம்பையும் தனது சடையில் இறைவன் ஏற்றதால் அந்நாள் வரை அச்சமின்றி சடையில் உலாவிய சந்திரன், தனது பகைவனாகிய பாம்பு அசைவதைக் கண்டு, ஒரு கால் பாம்பு தன்னை விழுங்குவதற்காக வருகின்றதோ என்று பயம் கொள்கின்றது. இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொள்வதைக் கண்ட, தலை மாலையில் உள்ள மண்டையோடு சிரிக்கின்றது. இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்ட சூழ்நிலையை உருவாக்கி, அந்த சூழ்நிலையைக் கண்டு நகைக்கும் மண்டையோட்டினை மாலையாக அணிந்துள்ள கெடில வாணரின் தோற்றம் மிகவும் வியப்புக்கு உரியது என்பதே மேற்கண்ட அப்பர் பிரானின் பாடலின் திரண்ட கருத்து.

பொழிப்புரை:

குரா மலரின் நறுமணம் கலந்து கமழ்வதும், இயற்கையாகவே தனக்குள்ள நறுமணத்துடன் இருப்பதும் ஆகிய கூந்தலை உடைய அழகிய பெண்மணியான உமையன்னை அஞ்சும் வண்ணம், தன்னுடன் சினங்கொண்டு போர் புரிய வந்த கயாசுரனின் தோலை உரித்து தனது உடல் மீது போர்த்துக் கொண்டவன் சிவபெருமான். பாம்பு, அலைகள் வீசும் கங்கை நதி மற்றும் பிறைச் சந்திரன் ஆகியவை ஒன்று சேர்ந்து கலந்து உறையும் நிலையினைக் காணும் சடைமுடியில் உள்ள தலையும் தனது வாயினை திறந்து கொண்டு நகைக்கின்றது. இத்தகைய காட்சியினை உடைய சடைமுடி கொண்டுள்ள பெருமான் உறையும் இடம் நீர்வளம் மிகுந்த வியலூர் தலமாகும்.

பாடல் 2:

ஏறு ஆர்தரும் ஒருவன் பல உருவன் நிலையானான்

ஆறார் தரு சடையன் அனல் உருவன் புரி உடையான்

மாறார் புரம் எரியச் சிலை வளைவித்தவன் மடவாள்

வீறார் தர நின்றான் இடம் விரிநீர் வியலூரே

விளக்கம்:

ஏறு=இடபம்; நிலையானான்=எல்லா உயிர்களிலும் கலந்து நிலையாக இருப்பவன்; அழிவு என்பது இல்லாமல் என்றும் நிலையாக இருப்பவன் என்று கொள்வதும் பொருத்தமே. ஆர்தருதல்=ஊர்தல், பொருத்துதல்; புரிவுடையான்=அன்புடையவன்; உயிர்களிடம் அன்பு செலுத்துவதற்கு காரணம் ஏதும் இல்லாது இருப்பினும் பெருமான் அனைத்து உயிர்களிடமும் அன்பாக இருப்பது இங்கே குறிப்பிடப் படுகின்றது. மாறார்=வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கு மாறாக கொள்கை கொண்ட திரிபுரத்து அரக்கர்கள்; வீறு=ஒப்பேதுமின்றி பெருமிதம் அடையும் நிலை; இந்த பாடலில் பல உருவன் என்று சிவபெருமான் பல மூர்த்தங்களாக உள்ள செய்தியும் உணர்த்தப் படுகின்றது. பொதுவாக கருதப்படும் இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களும் சிவபிரானின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவை என்று பெரியோர்கள் கூறுகின்றனர். ஈசான முகத்திலிருந்து தோன்றிய மூர்த்தங்கள், சோமாஸ்கந்தர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர் மற்றும் நடராஜர்: தத்புருட முகத்திலிருந்து தோன்றியவை, பிக்ஷாடனர், காமாரி (காமனை அழித்தவர்), காலாரி (காலனை உதைத்தவர்), ஜலந்தராரி (ஜலந்தரனை அழித்தவர்), திரிபுராரி (திரிபுரங்களை அழித்தவர்) ஆகும். சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றியவை, இலிங்கோத்பவர், சுகாசனர், உமை மகேஸ்வரர், அரியர்த்தர் (சங்கர நாராயணர்), மற்றும் அர்த்த நாரீஸ்வரர் ஆகும். அகோர முகத்திலிருந்து தோன்றியவை, கஜ சம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதர் (பாசுபத மூர்த்தி) மற்றும் நீலகண்டர். வாமதேவ முகத்திலிருந்து தோன்றியவை, கங்காளர், சக்ரதானர், கஜமுகானுக்ரகர் (ஐராவதத்திற்கு அருள் புரிந்தவர்), சண்டேச அனுக்ரகர் மற்றும் ஏகபாதர் ஆகும். இந்த பாடலில், ரிஷபாரூடர், திரிபுராரி ஆகிய இரண்டு கோலங்கள் குறிப்பிடப்படுகின்றன. பதிகத்தின் முதல் பாடலில் கஜசம்ஹாரர், மூன்றாவது பாடலில் பிக்ஷாடனர், ஆறாவது பாடலில் பாசுபதர், ஒன்பதாவது பாடலில் இலிங்கோத்பவர், கடைப் பாடலில் சந்திரசேகரர் ஆகிய மூர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன.

பொழிப்புரை:

எருதினை தனது வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் ஊர்ந்து செல்பவனும், ஒப்பற்ற தனி ஒருவனாக இருப்பவனும், அடியார்களின் பக்குவம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப பல வேடங்கள் தாங்கி அடியார்களுக்கு காட்சி கொடுப்பவனும், தனது நிலையிலிருந்து மாறாமல் என்றும் அனைத்து உயிர்களுடன் கலந்து நின்று அவற்றை இயக்குபவனும், கங்கை நதி தனது சடையினில் பொருந்தும் வண்ணம் தேக்கியவனும், கொழுந்து விட்டெரியும் தீப்பிழம்பு போன்று சிவந்த நிறத்தில் திருமேனியை உடையவனும், காரணம் ஏதுமின்றி உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் கருணையாளனும், வேதநெறியிலிருந்து மாறுபட்டு நின்ற திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் தீயினில் வெந்து அழியும் வண்ணம் வில்லை வளைத்து அம்பு எய்தவனும், ஒப்புமை இல்லாத வண்ணம் மிகுந்த பெருமிதத்துடன் உமையன்னை இருக்கும் வண்ணம் பல விதமான சிறப்புகளை உடையவனும் ஆகிய சிவபெருமான் உறையும் இடம் நீர் வளம் மிகுந்த வியலூர் தலமாகும்.

பாடல் 3:

செம்மென் சடை அவை தாழ்வுற மடவார் மனை தோறும்

பெய்ம்மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடமாம்

உம்மென்று எழும் அருவித்திரள் வரை பற்றிட உரை மேல்

விம்மும் பொழில் கெழுவும் வயல் விரிநீர் வியலூரே

விளக்கம்:

பெய்தல்=இடுதல்; மடவார்=பெண்கள்; இங்கே தாருகவனத்து முனிவர்களின் மனைவிகள்;

உம்=ஒலிக்குறிப்பு; வரை=மலை, இங்கே குடகு மலை; உரை=சொற்கள், புகழ்ச்சொற்கள்;

பொழிப்புரை:

சிவந்த நிறத்தில் உள்ளதும் மென்மையானதும் ஆகிய சடைகள் தாழும் வண்ணம் காட்சியளித்த பெருமான், வேதங்களின் பாடல்களை இசையுடன் பாடிய வண்ணம், தாருகவனத்து முனிவர்களின் இல்லங்கள் தோறும் சென்று பலி இடுவீர்களாக என்று கேட்டு அருள் புரிந்த பெருமான், உறையும் இடம் திருவியலூர் ஆகும். இந்த தலம், உம் என்ற ஒலியுடன் குடகு மலைச்சாரலில் எழும் அருவிகள் ஒன்று திரண்டு காவிரி நதியாக வர, அந்த நீரினால் பலரும் புகழ்ந்து பேசும் வண்ணம் செழித்து வளரும் வயல்கள் பொருந்திய நீர் வளம் மிகுந்த வியலூர் தலமாகும்.

பாடல் 4:

அடைவாகிய அடியார் தொழ அலரோன் தலை அதனில்

மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடமாம்

கடையார் தரு அகிலார் கழை முத்தம் நிரை சிந்தி

மிடையார் பொழில் புடைசூழ் தரு விரிநீர் வியலூரே

விளக்கம்:

கழை=மூங்கில்; நன்கு முற்றிய மூங்கில், பாம்பின் கழுத்து, யானையின் மத்தகம் ஆகிய இடங்கள் முத்துகள் தோன்றும் இடம் என்று கூறுவார்கள்; அடைவு=முறை என்று சிலரால் பொருள் கூறப்பட்டாலும் சரணடைதல் என்ற பொருள் மிகவும் பொருத்தமாக உள்ளது. கடையார்= உழவர்கள்; கடையார் என்ற சொல்லுக்கு அழகிய கடைகள் என்று பொருள் கொண்டு, இந்த தலத்து கடைகளில் அகில் கட்டைகள் மற்றும் முத்துகள் விற்கப்பட்டன என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர்.

பொழிப்புரை:

பிரம கபாலத்தில் தாருகவனத்து மகளிர் இட்ட பலியை விரும்பி ஏற்றுக்கொண்ட பெருமான், தனது அடியார்கள் சரணம் என்று திருவடிகளைப் பணிந்து தொழ உறைகின்ற இடம் வியலூர் தலம் ஆகும். காவிரி நதி அடித்துக் கொண்டு வரும் அகில் கட்டைகள் சேரும் வயல்களில் உழவர்கள் வரிசையாக நட்ட மூங்கில் மரங்கள் வெடித்து அதிலிருந்த முத்துகள் வரிசையாக சிந்தி நெருங்கிய மரங்களின் இடையே காட்சி அளிக்கும் சோலைகள் சூழ்ந்து நீர்வளம் மிகுந்து காணப்படும் தலம் வியலூர் ஆகும்.

பாடல் 5:

எண்ணார் தரு பயனாய் அயன் அவனாய் மிகு கலையாய்ப்

பண்ணார் தரு மறையாய் உயர் பொருளாய் இறை அவனாய்க்

கண்ணார் தரும் உருவாகிய கடவுள் இடம் எனலாம்

விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரிநீர் வியலூரே

விளக்கம்:

எண்=எண்ணம் என்ற சொல்லின் திரிபு; தியானம் என்ற பொருளில் இங்கே கையாளப் பட்டுள்ளது; தன்னை நினைத்து தியானம் செய்யும் அடியார்களுக்கு தியானத்தின் பயனாக விளங்குபவன் இறைவன்; இறை=தலைவன்; கண்ணார் தரு உரு=பார்ப்போரின் கண்கள் நிறையும் வண்ணம் அழகாக இருக்கும் இறைவனின் உருவம் அத்தகைய அடியார்களின் மனதினில் என்றும் நீங்காது பதிந்து நிற்கும் என்று சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் ஒருவன் பல உருவன் என்று சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் கண்டோம். ஒப்பற்ற ஒருவனாக விளங்கும் பெருமான், தனது அடியார்களுக்கு பல உருவத்தில் காட்சி அளித்த விவரங்களை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். பல அடியார்களின் தன்மையை உலகுக்கு உணர்த்திய பின்னர், திருநீலகண்ட குயவனார், இயற்பகையார், இளையான்குடி மாறனார், அமர்நீதியார், ஏனாதிநாதர், மானக்கஞ்சாறார், அரிவாட்டாயார், ஆனாயர், திருக்குறிப்புத் தொண்டர், சாக்கிய நாயனார், சிறுத்தொண்டர், அதிபத்தர் ஆகிய அடியார்களுக்கு, விடையின் மேல் அமர்ந்த வண்ணம் பிராட்டியுடன் பெருமான் காட்சி கொடுத்ததை நாம் பெரிய புராண சரித்திரத்திலிருந்து உணர்கின்றோம். இலிங்கத்திலிருந்து ஒரு கை எழுந்து, தனது மற்றோர் கண்ணினையும் பேர்க்கத் துணிந்த கண்ணப்பரை தடுத்ததையும், சண்டீசருக்கு கொன்றை மாலை சூட்டியதையும், கயிலை மலையில் உமையன்னையுடன் அமர்ந்த நிலையில் காட்சியளித்து காரைக்கால் அம்மையாருக்கு வரம் அருளியதையும், பைரவ கோலத்துடன் சிறுத்தொண்டரது இல்லத்திற்கு உணவு உட்கொள்ளச் சென்றதையும், கயிலை மலையில் சுந்தரருக்கும் சேரமான் பெருமாளுக்கும் காட்சி அளித்ததையும், தனது கழுத்தினை அறுத்து தனது உடலிலிருந்து வெளிவரும் குருதியை இட்டு விளக்கேற்ற முயற்சி செய்த கலியரின் கையினைப் பிடித்து தடுத்து அருள் செய்ததையும், அவர்களது புராணத்தில் காண்கின்றோம்.

கயிலாய மலை நோக்கி சென்று கொண்டிருந்த அப்பர் பிரானுக்கு வேதியராக காட்சி அளித்ததையும், பெருமானது திருக்குறிப்பினை சரியாக புரிந்து கொள்ளாது இருந்தமை குறித்து வருந்திய அப்பர் பிரானுக்கு முதியவராக தோன்றி வாய்மூர் அழைத்துச் சென்றதையும், பைஞ்ஞீலி செல்லும் வழியில் அப்பர் பிரானின் வரவினை எதிர்பார்த்து பொதி சோற்றுடன் காத்திருந்து அளித்தமையும், திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் இடம் பெறுகின்றன. திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியாருக்கும், நீலநக்கர் மற்றும் நமிநந்தி அடிகள் ஆகியோருக்கு கனவின் கண் காட்சி அளித்தமையை நாம் பெரிய புராணத்திலிருந்து உணர்கின்றோம். விடையின் மேல் அமர்ந்தவாறு கீழே வந்திறங்கி, அழுது கொண்டிருந்த குழந்தைக்கு பால் ஊட்டுமாறு பணித்து காட்சி கொடுத்தமை, திருவாய்மூர் தலத்தில் சம்பந்தர் அப்பர் ஆகிய இருவருக்கும் நடனக்காட்சி காட்டி அருளியமை, வியலூர் முதலான பல தலங்களில் தனது உருவத்தை காட்டி அருளியது ஆகிய நிகழ்ச்சிகளை திருஞான சம்பந்தரின் வாழ்க்கையில் காண்கின்றோம். பைஞ்ஞீலி தலத்தில் தனது கங்காள வடிவினை சுந்தரருக்கு காட்டிய பெருமான், ஐந்து முறை அந்தணர் வேடத்தில் அவருக்கு காட்சி கொடுத்தமையை அவரது சரித்திரத்தில் காண்கின்றோம். நடக்கவிருந்த திருமணத்தினை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் ஓலை கொண்டு வந்த முதியவராகவும், திருவதிகை சித்த மடத்தில் தனது காலினை சுந்தரரின் முகத்தில் இருமுறை படுமாறு வைத்து திருவடி தீட்சை அருளிய முதியவராகவும், குருகாவூர் செல்லும் வழியில் தயிர் சாதமும் குடிநீரும் வைத்துக் கொண்டு காத்திருந்த முதியவராகவும், திருமுதுகுன்றம் செல்லவிருந்த சுந்தரரை தடுத்து கூடலையாற்றூர் அழைத்துச் சென்ற முதியவராகவும், திருக்கச்சூர் தலத்தில் உள்ள பல இல்லங்களில் நடுப்பகலில் சென்று இரந்து அமுது கொண்டு வந்து ஈந்த அந்தணராகவும் பெருமான் காட்சியளித்த போதும், அவ்வாறு வந்து அருள் புரிந்தவர் பெருமான் தான் என்பதை சுந்தரர் முதலில் உணரவில்லை. சங்கிலி நாச்சியாரை மணமுடிக்க வந்த போதும், பரவை நாச்சியாருடன் பிணக்கினைத் தீர்க்க வந்த போதும், வந்தவரை யார் என்றும் சுந்தரர் அறிந்து கொண்டதையும் நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். இவ்வாறு பல உருவம் கொண்டு வந்து அடியார்களுக்கு அருள் புரிந்தமை இங்கே உணர்த்தப் பட்டு, அந்த சமயங்களில் அடியார்களின் கண்கள் கண்ட காட்சி அவர்களது மனதினில் பதிந்து இருந்தமையும் கண்ணார் தரும் உருவம் என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

பொழிப்புரை:

தன்னை நினைத்து தியானம் செய்யும் அடியார்களுக்கு தியானைத்தின் பயனாக விளங்குபவனும், பிரமனாக உலகத்தினை படைப்பவனாகவும், எண்ணற்ற கலைகளாகவும், சந்த இசையோடு கூடிய வேதத்தின் பாடல்களாகவும், அனைவரிலும் உயர்ந்த பொருளாகவும், அனைவர்க்கும் தலைவனாகவும், பார்ப்போரின் கண்கள் நிறைந்து வண்ணம் அழகாக இருப்பவனும் ஆகிய கடவுள் உறையும் இடமாவது, தேவர்களும் நிலவுலகத்தாரும் தொழுவதும் நீர்வளம் நிறைந்து காணப் படுவதும் ஆகிய வியலூர் தலமாகும்.

பாடல் 6:

வசைவில் கொடு வரு வேடுவன் அவனாய் நிலை அறிவான்

திசை உற்றவர் காணச் செரு மலைவான் நிலையவனை

அசையப் பொருது அசையா வணம் அவனுக்கு உயர் படைகள்

விசையற்கு அருள் செய்தான் இடம் விரிநீர் வியலூரே

விளக்கம்:

அடியார்களுக்கு பல வேடங்களில் வந்து அருள் புரிபவன் இறைவன் என்று முந்தைய பாடலில் கூறிய சம்பந்தருக்கு விஜயனுக்கு பாசுபதம் ஈந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது போலும். அப்போது பெருமான் கொண்டிருந்த வேட்டுவ வேடத்தினை இந்த பாடலில் நினைவூட்டுகின்றார். தவத்தினில் ஆழ்ந்திருந்த அர்ஜுனன், இறைவனுடன் சண்டைக்கு செல்லவில்லை. அர்ஜுனனுடன் சண்டை போடுவதற்கு ஒரு காரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இறைவன், தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனை தாக்கவந்த ஒரு காட்டுப்பன்றியின் மீது ஒரு அம்பினை தொடுத்தான். காட்டுப்பன்றி தன்னைத் தாக்க வந்ததை உணர்ந்த அர்ஜுனனும் அந்த பன்றியின் மீது அம்பினை எய்தான். இருவரும் எய்த அம்புகள் பன்றியின் உடலைத் துளைக்கவே, எவரது அம்பு முதலில் பன்றியின் உடலைத் தைத்தது என்ற விவாதம் அவர்களுக்குள்ளே எழுந்து, அதுவே அவர்களின் இடையே சண்டை மூள்வதற்கும் காரணமாக இருந்தது. இந்த நிலையினை உணர்த்தும் வண்ணம் பெருமானை செரு மலைந்தான் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இவர்கள் இருவருக்கும் இடையே எழுந்த சண்டையைக் காண பலரும் வானில் குழுமினார்கள். நிலையவன்=தவத்தினில் உறைந்து நின்ற அர்ஜுனன்; வசைவில்=வளைந்த வில்; வசை என்ற சொல்லுக்கு பழி என்று பொருள் கொண்டு, உயிர்க்கொலை புரிவதற்கு கருவியாக இருக்கும் பழியினை உடைய வில் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. செரு=சண்டை; மலைதல்=போரிடுதல்; அசைதல்= போரில் களைப்படைந்து வருந்துதல்;

பொழிப்புரை:

வளைந்த வில்லினைக் கொண்டு வேடுவ வேடம் தாங்கி, அர்ஜுனனின் ஆற்றலை உமையம்மை தானே நேரில் பார்த்து அறிந்து கொள்ளும் வண்ணம் உமையன்னையுடன், தவத்தில் அர்ஜுனன் ஆழ்ந்திருந்த இடத்திற்கு வந்த இறைவன், அர்ஜுனனை சண்டைக்கு வலிய அழைத்தான். இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற சண்டையைக் காண எண்திசையில் உள்ளோரும் வானோரும் குழுமினார்கள். பல சண்டைகளில் வெற்றி கொண்டு தோல்வி அடையாதவன் என்ற புகழினைக் கொண்டிருந்த அர்ஜுனன் களைப்படைந்து சோர்வடைந்து வருந்தும் வண்ணம் அர்ஜுனனை வெற்றி கொண்ட பெருமான், பின்னர் அவனுக்கு இரங்கி, பின்னாளில் வரவிருந்த பாரதப் போரினில் களைப்படையாமல் போரிடும் வண்ணம் உயர்ந்த பாசுபதக் கருவியினையும், எடுக்க எடுக்க குறையாமல் வரும் அம்பறாத்தூணியையும், அர்ஜுனனுக்கு அளித்து அருள் புரிந்தான். இத்தகைய வல்லமையும் கருணையும் கொண்ட பெருமான் உறையும் இடம் நீர்வளம் கொண்ட வியலூர் தலமாகும்.

பாடல் 7:

மானார் அரவு உடையான் இரவு உடையான் பகல் நட்டம்

ஊனார் தரும் உயிரான் உயர்வு இசையான் விளை பொருள்கள்

தானாகிய தலைவன் என நினைவார் அவர் இடமாம்

மேனாடிய விண்ணோர் தொழும் விரிநீர் வியலூரே

விளக்கம்:

இரவு=இரத்தல் தொழிலை உடையவன், பலி ஏற்பவன்; இசை=புகழ்; உயர்விசை=உயர்ந்த புகழ்; தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உயர்வான நிலை; நாடுதல்=விரும்புதல்;

பொழிப்புரை:

மான் கன்றினைத் தனது இடது கையிலும், பாம்பினைத் தனது உடலின் பல இடங்களிலும் ஏந்திய பெருமான், பல ஊர்கள் திரிந்து பலி ஏற்பதைத் தனது தொழிலாகக் கொண்டவன் ஆவான். பகலில் நடனம் ஆடும் பெருமான், பல உடல்களில் உயிராக நிலைபெற்று விளங்குகின்றான். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என்று உயர்ந்த புகழினை உடைய இறைவன், உலகினில் தோன்றும் அனைத்துப் பொருட்களுமாக இருப்பவன் என்றும் தங்களது தலைவன் என்றும் அனைவராலும் தங்களது தலைவன் என்று நினைக்கப் படுபவனும் ஆகிய இறைவன் உறையும் இடம் வியலூர் தலமாகும். முந்திய பிறவியினில் தாங்கள் செய்த நற்செயல்களின் பயனாக மேலுலகம் அடைந்து இன்பும் துய்க்கும் விண்ணோர்கள் தொழும் சிறப்பினை உடையது நீர்வளம் மிகுந்த வியலூர் தலமாகும்.

பாடல் 8:

பொருவார் எனக்கு எதிர் ஆர் எனப் பொருப்பை எடுத்தான் தன்

கருமால் வரை கரம் தோள் உரம் கதிர் நீண்முடி நெரிந்து

சிரம் ஆயின கதறச் செறி கழல் சேர் திருவடியின்

விரலால் அடர்வித்தான் இடம் விரிநீர் வியலூரே

விளக்கம்:

பொருவார்=எதிராக சண்டையிடுவார்; பொருப்பு=மலை, கயிலை மலை; அரக்கன் இராவணனின் வலிமையுடன் தன்னை வெல்பவர் எவரும் இல்லை என்ற அவனது செருக்கும் அடக்கப்பட்டது என்று நயமாக சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை:

தனக்கு எதிராக சண்டை போடுவார் எவரும் இல்லை என்ற செருக்குடன் கயிலை மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்த அரக்கன் இராவணனின் கரியமலை போன்ற வலிமையான தோள்கள், கைகள், ஒளிவீசும் நீண்ட கிரீடங்கள் ஆகியவை நொறுங்கும் வண்ணமும், அவனது பத்து தலைகளும் மலையின் அழுத்தத்தை தாங்க முடியாமல் வருந்தி கதறும் வண்ணமும், வீரக்கழல் அணிந்த தனது கால் பெருவிரலால் கயிலை மலையை அழுத்திய பெருமான் உறையும் இடம் நீர்வளம் நிறைந்த வியலூர் தலமாகும்.

பாடல் 9:

வளம் பட்டு அலர் மேல் அயன் மாலும் ஒரு வகையால்

அளம் பட்டு அறிவொண்ணா வகை அழலாகிய அண்ணல்

உளம் பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஒரு உருவம்

விளம் பட்டு அருள் செய்தான் இடம் விரிநீர் வியலூரே

விளக்கம்:

அளம் படுதல்=வருந்துதல்; விளம்பட்டு=வெளிப்பட்டு தோன்றி; வளம் பட்டு அலர்=செழிப்பாக வளர்ந்து மலர்ந்த; ஒரு வகையால்=ஒரு வகையாகிய உடன்பாட்டினால், தங்களின் எதிரே தோன்றிய தீப்பிழம்பின் அடியையும் முடியையும் எவர் காண்கின்றனரோ அவரே தங்களில் உயர்ந்தவர் என்ற உடன்பாட்டுடன், இருவரும் அடியையும் முடியையும் காணும் முயற்சியில் ஈடுபட்டமை இங்கே குறிப்பிடப்படுகின்றது. ஒரு வகையால் என்று சொல் இருவரும் வேறு வேறு வழிகளில் தங்களது முயற்சியில் ஈடுபட்டனர் என்பதை குறிக்கும் வண்ணம் அமைந்துள்ளது என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். பிரமன் அன்னமாக உயரப் பறந்தும் திருமால் பன்றியாக கீழே தோண்டிய, மாறுபட்ட இருவேறு முயற்சிகள் என்றும் பொருள் கொள்ளலாம். விள்ளப்பட்டு என்ற சொல் எதுகை நோக்கி விளம்பட்டு என்று திரிந்ததாக கொண்டு பிரமன் திருமால் ஆகிய இருவரும் செருக்கு விள்ளப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது.

பொழிப்புரை:

செழித்து வளர்ந்து மலர்ந்த தாமரை மேல் உறையும் பிரமனும் திருமாலும் தங்களில் இருவரில் யார் பெரியவன் என்று தொடர்ந்து செய்து கொண்டிருந்த வாதத்தினை ஒரு வகையாக முடிக்கும் பொருட்டு தங்களின் எதிரே தோன்றிய தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காண்பவரே தங்களில் உயர்ந்தவர் என்ற உடன்பாட்டுடன், அன்னமாகவும் பன்றியாகவும் மாறி தங்களது முயற்சியில் ஈடுபட்டனர். தங்களை வருத்திக் கொண்டு கடுமையான முயற்சியில் அவர்கள் இருவரும் ஈடுபட்ட போதும் வெற்றி காண முடியாமல் வருந்தும் வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்ற அண்ணல், செருக்கு நீங்கிய மனத்தராக இருவரும் வழிபாட்டு இறைஞ்சிய போது, அந்த தழல் தூணின் நடுவே இலிங்கமாக வெளிப்பட்டு அருள் புரிந்தார். அத்தகைய இறைவன் உறையும் இடம், நீர்வளம் வாய்ந்த வியலூர் தலமாகும்.

பாடல் 10:

தடுக்கால் உடல் மறைப்பார் அவர் தவர் சீவர மூடிப்

பிடக்கே உரை செய்வாரொடு பேணார் நமர் பெரியோர்

கடல் சேர் தரு விடம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள் செய்த

விடை சேர் தரு கொடியான் இடம் விரிநீர் வியலூரே

விளக்கம்:

தடுக்கு=ஓலைப்பாய்; பிடக்கு=பிடகம் எனப்படும் புத்தர்களின் புனித நூல்; சீவரம்=பழுப்பு அல்லது காவி நிறம் ஊட்டப்பெற்ற ஆடை;

பொழிப்புரை:

பனை ஓலைத் தடுக்குகளால் தங்களது உடலை மறைத்துக் கொள்ளும் சமணர்களையும், பழுப்பு அல்லது காவி நிறம் தோய்க்கப்பட்ட ஆடையைத் தங்களது உடலின் மீது போர்த்துக் கொண்டு பிடகம் எனப்படும் நூலின் கருத்துகளை உரைத்து திரியும் புத்தர்களையும் ஒரு பொருட்டாக கருதி அவர்களுடன் நட்பு கொள்வதைத் தவிர்த்து வாழும் நமது பெரியோர்கள், கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினைத் தான் உட்கொண்டு அதன் பின்னர் வந்த அமுதத்தை தேவர்களுக்கு வழங்கி அருள் செய்தவனும், விடையினைத் தனது கொடியில் சித்திரமாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய பெருமானை வணங்கி வழிபடுகின்றனர். இவ்வாறு வழிபடப்படும் பெருமான் உறையும் இடம் நீர்வளம் மிகுந்த வியலூர் தலமாகும்.

பாடல் 11:

விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரைத்

தளம் கொண்டதொர் புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன்

துளங்கில் தமிழ் பரவித் தொழும் அடியார் அவர் என்றும்

விளங்கும் புகழ் அதனோடு உயர் விண்ணும் உடையாரே

விளக்கம்:

விகிர்தன்=ஏனையோரிலிருந்து மாறுபட்ட சாமர்த்தியம் உடையவன். தக்கனது சாபத்தினால் நாளுக்கு ஒரு பிறையாக குறைந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் இருந்த சந்திரனைக் காப்பாற்றுவார் எவரும் இல்லாத நிலையில், சந்திரன் பிரமனை அணுகி தான் பிழைக்கும் வழி யாது என்று கேட்டபோது, பிரமன் சிவபெருமான் ஒருவரே தக்கனது சாபத்திற்கு மாறான வழி சொல்லும் வல்லமை படைத்தவர் என்று கூற, சந்திரன் பெருமானிடம் சரண் அடைந்தான். அந்த ஒற்றைப் பிறையினைத் தனது சடையில் அணிந்து கொண்ட பெருமான் சந்திரனை அழிவிலிருந்து காத்ததை உணர்த்தும் வண்ணம், ஏனையோரிலிருந்து மாறுபட்ட சதுரப்பாடு உடையவன் என்று பொருள் பட விகிர்தன் என்று சம்பந்தர் இங்கே அழைக்கின்றார். தளம்=இடம்; துளங்குதல்=நடுக்கம் கொள்ளுதல், அச்சப் படுத்தல், தளர்வடைதல் என்று பலபொருள்கள் உள்ளன. சோர்வு அடையாமல் என்றும் வளத்துடன் திகழும் தமிழ் என்றும், அச்சம் நடுக்கம் சோர்வு ஆகியவற்றை நீக்கும் தமிழ்ப் பாடல்கள் என்றும் இருவகையாக பொருள் கொள்ளலாம். உயர் விண் என்று கூறியமையால், விண்ணுலகத்தை விடவும் உயர்ந்த இடத்தை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் என்பது தெளிவாகின்றது. அத்தகைய இடம் சிவலோகம் ஒன்று தானே.

பொழிப்புரை:

தனது சடை மேல் பொலிந்து விளங்கும் பிறைச் சந்திரனை உடையவனும், ஏனையோரிலிருந்து மாறுபட்ட சதுரப்பாடு உடையவனும் ஆகிய வியலூர் இறைவனை, புகலி நகரினைத் தனது இடமாகக் கொண்டுள்ள தமிழ் அறிஞன் ஞானசம்பந்தன் சொன்ன, என்றும் வளமுடன் விளங்கும் தமிழ்ப் பாடல்களை பாடி இறைவனைத் தொழுது புகழ்ந்து போற்றும் அடியார்கள், நிலையான புகழோடு இம்மையில் வாழ்ந்து, மறுமையில் உயர்ந்த சிறப்பு வாய்ந்த சிவலோகம் அதனைத் தனது இடமாகக் கொண்டவர்களாக விளங்குவார்கள்.

முடிவுரை;

பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் சன்னதியில் பகைமை உணர்ச்சிக்கு இடமில்லை என்று குறிப்பிட்டு, பாம்பு, கங்கை நதி, சந்திரன் ஆகியோர் தம்மிடையே உள்ள பகையை மறந்து சடையில் உறைவதாகவும் அந்த காட்சியைக் கண்டு தலைமாலையில் உள்ள தலை நகைப்பதாகவும் நகைச்சுவை உணர்வு தோன்ற ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஒப்பற்ற ஒருவனாக விளங்கும் பெருமான், பல திருவிளையாடல்கள் புரிந்து இருபத்தைந்து மூர்த்தங்களாகவும் அறுபத்துநான்கு மூர்த்தங்களாகவும் விளங்கும் நிலை இரண்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. மூன்றாவது பாடலில், தாருகவனத்து முனிவர்களின் இல்லங்கள் தோறும் பலி கேட்டுச் சென்ற பெருமான் என்று குறிப்பிட்டு முனிவர்களின் போக்கினை மாற்றி அருள் புரிந்தமை உணர்த்தப் படுகின்றது. நான்காவது பாடலில் அடியார்கள் தொழ பிச்சையேற்கும் பெருமான் என்று குறிப்பிட்டு இன்றும் பெருமான் பிச்சை ஏற்று உலகெங்கும் திரிகின்றான் என்றும் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு நமது மலங்களை அவனது பிச்சைப் பாத்திரத்தில் இட்டு நாம் உய்வினை அடையவேண்டும் என்ற செய்தி குறிப்பால் உணர்த்தப் படுகின்றது. ஐந்தாவது பாடலில் தன்னை தியானிக்கும் உயிர்களுக்கு அந்த தியானத்தின் பயனாக இறைவன் விளங்கும் நிலை குறிப்பிடப்பட்டு இறைவனை நாம் தியானித்து பயனடைய வேண்டும் என்ற அறிவுரை கூறப்படுகின்றது. இறைவனை நோக்கி தியானம் செய்த அர்ஜுனன் பெற்ற பயன் ஆறாவது பாடலில், முந்தைய பாடலில் அடங்கிய செய்திக்கு எடுத்துக்காட்டாக சொல்லப் படுகின்றது. ஏழாவது பாடலில் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களாக விளங்கி சர்வ வியாபியாக இறைவன் இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது. எட்டாவது மற்றும் ஒன்பதாவது பாடல்கள் இராவணன், பிரமன் திருமால் ஆகியோர் தமது செருக்கு நீங்கி வழிபட்ட போது இறைவன் அவர்களுக்கு அருளிய தன்மை குறிப்பிடப்பட்டு, செருக்கு ஏதுமின்றி இறைவனை நாம் வழிபடவேண்டும் என்று சம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். பத்தாவது பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்கள் கூறும் தவறான உரைகளை பொருட்படுத்தாமல் பெரியோர்கள் இருப்பார்கள் என்று குறிப்பிட்டும், இந்நாளில் மாற்று மதத்தவர்கள் பெருமானைக் குறித்து சொல்லும் இழி சொற்களை நாம் பொருட்படுத்தாமல், சிவபெருமானைத் தொடர்ந்து தொழவேண்டும் என்றும் ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். ஏனையோரிலிருந்து எவ்வாறு இறைவன் மாறுபட்டவன் என்று கடைப்பாடலில் உணர்த்தும் சம்பந்தர், இந்த பதிகத்தை ஓதி இறைவனின் புகழினைப் பாடும் அடியார்கள் சிவலோகம் சென்று சேர்வார்கள் என்று கூறுகின்றார். வியலூர் விகிர்தனின் வித்தியாசமான அருட்குணங்களை அறிந்து கொண்டு, பெருமானை போற்றி வணங்கி, இம்மையில் புகழுடன் வாழ்ந்து மறுமையில் சிவலோகம் சென்று சேர்வோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Kuravamkamazh Narumen
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

குரவம் கமழ் நறுமென்


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: