Go Back

22/03/21

செய்யருகே புனல் பாய


செய்யருகே புனல் பாய - பின்னணி:


திருக்காட்டுப்பள்ளி என்ற பெயரில் இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. திருவெண்காடு தலத்தின் அருகே உள்ள தலம், கீழை திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்டு காவிரி வடகரைத் தலங்களின் வரிசையில் சேர்க்கப்பட்டு உள்ளது. திருத்துறைப்பூண்டியின் அருகே உள்ள தலம் மேலை திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்டு காவிரி தென்கரைத் தலங்களின் வரிசையில் உள்ளது. இந்த இரண்டு தலங்களுமே திருஞானசம்பந்தர் அருளிய பாடல்கள் கொண்டவை. இங்கே குறிப்பிடப்படும் தலம் திருவெண்காடு தலத்தின் மேற்கு கோபுரத்தின் அருகே ஒரு கி,மீ, தொலைவில் அமைந்துள்ளது. விருத்திராசுரனை கொன்ற பாவம் தீரும் பொருட்டு, இந்திரன் சிவபெருமானை வழிபட்ட தலம் என்று கூறுவார்கள். சுயம்புலிங்கம். இறைவனின் திருநாமம், ஆரணிய சுந்தரர்; இறைவியின் திருநாமம், அகிலாண்ட நாயகி; ஆரண்ய முனிவரும் மகாகாள முனிவரும் வழிபட்ட தலம். கோஷ்டத்தில் இந்த இரண்டு முனிவர்களின் சிற்பங்கள் உள்ளன. ஆரணிய முனிவர் பூஜை செய்வது போன்றும் மகாகாளர் சங்கு ஊதுவது போன்றும் இந்த சிற்பங்கள் உள்ளன. பிரமன் இங்கே பத்து இலிங்க மூர்த்தங்களை பிராகாரத்தில் நிறுவி வழிபட்டதாக கூறுவார்கள். ஆனால் இப்போது ஏழு இலிங்கங்களே உள்ளன. முனியீசர், பிரம்மேசர், அகத்தீஸ்வரர், புலச்தீஸ்வரர், வியாக்ரபாதேஸ்வரர், சக்ரேஸ்வரர், கபாலீச்வார் ஆகியவை இந்த ஏழு இலிங்கங்கள். நண்டாக மாறிய ஒரு கந்தர்வன், இங்கே விநாயகப் பெருமானை வழிபாட்டு மீண்டும் தனது உருவத்தை பெற்றதாக தலபுராணம் கூறுகின்றது. இங்கே விநாயகரின் சன்னதியில் மூஞ்சுறு இல்லை. நண்டு தான் உள்ளது.

தென் திருமுல்லைவாயில் சென்ற சம்பந்தர், அருகிலிருந்த தலங்களையும் சென்று தரிசனம் செய்தததாக பெரியபுராணம் குறிப்பிடும் தலங்களில் இந்த தலமும் ஒன்றாக இருக்கலாம் என்று கருதப் படுகின்றது. இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகம் தவிர்த்து ஏனைய பதிகங்கள் நமக்கு கிடைக்கவில்லை. அப்பர் பிரான் மற்றும் சுந்தரர் ஆகிய இருவரும், திருவெண்காடு தலம் சென்று பதிகங்கள் அருளிய போதும், மிகவும் அருகில் உள்ள இந்த தலம் சென்றதாக பெரிய புராண குறிப்பு ஏதும் இல்லை.

பாடல் 1:

செய் அருகே புனல் பாய ஓங்கிச் செங்கயல் பாயச் சில மலர்த் தேன்

கை அருகே கனி வாழை ஈன்று கானல் எல்லாம் கமழ் காட்டுப்பள்ளி

பை அருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பணையான் பணைத்

தோளி பாகம்

மெய் அருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேலுலகே

விளக்கம்:

இந்த பாடலில் திருமாலையும் பார்வதி தேவியையும் தனது உடலின் ஒரு பாகத்தில் பெருமான் வைத்துள்ளவனாக சம்பந்தர் கூறுகின்றார். பல தேவாரப் பாடல்கள் பிராட்டியைத் தனது மேனியின் ஒரு பாகத்தில் வைத்திருப்பதாக கூறுவது போன்று, திருமாலை பெருமான் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்திருப்பதாகவும் உணர்த்துகின்றன. ஒரே பாடலில் தேவியையும் திருமாலையும் பெருமான் தனது உடலில் வைத்திருப்பதாக குறிப்பிடும் தேவாரப் பாடல்கள் மிகவும் அரிதாகும். அத்தகைய பாடல்கள் சிவலற்றை நாம் இங்கே காண்போம்.

புறவம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.97.2) ஞானசம்பந்தர் மாதொரு பாலும் மாலொரு பாலும் மகிழ்கின்ற நாதன் என்று கூறுகின்றார். புன்னை மலர்கள் உதிர்க்கும் மகரந்தத் தூள்கள், மஞ்சள் வண்ணத்தில் பொன் பொடிகள் கீழே சிந்துவது போன்றிருக்கும் தன்மையை, பொன் கொடுக்கும் புன்னைகள் நிறைந்த புறவம் பதி என்று கூறுகின்றார். திருமாலையும் பிராட்டியையும் தனது உடலின் ஒரு பகுதியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏந்தியுள்ள பெருமான் என்று அடியார்கள் புகழ்வதாக சம்பந்தர் இந்த பாடல் கூறுகின்றார். பரன்=மேலான கடவுள்;

மாதொரு பாலும் மாலொரு பாலும் மகிழ்கின்ற

நாதன் என்று ஏத்து நம்பரன் வைகும் நகர் போலும்

மாதவி மேய வண்டு இசை பாட மயில் ஆடப்

போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவம்மே

தில்லைப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.22.4) அப்பர் பிரான், மை படர்ந்த கண்ணாளாகிய தேவியுடன் திருமாலையும் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று கூறுகின்றார். அசைத்த=தளரச் செய்த; பை அரவு=பாம்பின் படம்; பெண்களின் மார்பகத்தை, பாம்பின் படத்திற்கு ஒப்பிடுவது இலக்கிய மரபு. பல தேவாரப் பதிகங்களில், உமை அம்மையின் மார்பகங்கள், பாம்பின் படத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அப்பர் பெருமான் இங்கே பாம்பு வருந்துவதாக கூறுகின்றார். அல்குல்=மார்பகம், இங்கே அழகிய மார்பகத்தை உடைய பெண்ணைக் குறிக்கின்றது. சடையில் தாங்கியுள்ள சந்திரனுடன் இணைத்து சொல்லப்பட்டிருப்பதால், இங்கே அழகிய பெண்மணி என்று கங்கை நதியை குறிப்பதாகக் கொள்ளவேண்டும். கங்கையின் மார்பகத்தின் அழகுக்கு முன்னால் தனது படத்தின் அழகு எடுபடாமல் இருப்பதால் வருத்தமுற்று பாம்பு தளர்ந்து இருப்பதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

பை அரவு அசைத்த அல்குல் பனிநிலா எறிக்கும் சென்னிச்

மையரிக் கண்ணியாளும் மாலுமோர் பாகமாகிச்

செய்யரி தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே

கையெரி வீசி நின்று கனல் எரி ஆடுமாறே

அப்பர் பிரான், திருப்பழனத்துப் பதிகத்தின் (4.87) ஒரு பாடலிலும் இதே கருத்தினை கூறுகின்றார்.

மற்று வைத்தாய் அங்கு ஓர் மால் ஒரு பாகம் மகிழ்ந்து உடனே

உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே

பற்றி வைத்தாய் பழனத்து அரசே அங்கோர் பாம்பு ஒரு கை

சுற்றி வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே

திருப்பயற்றூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் (4.32.7) அப்பர் பிரான், தேவியையும் திருமாலையும் தனது உடலில் பெருமான் வைத்துள்ளதாக கூறுகின்றார். ஆவி=வேள்விகளில் வெளிப்படும் புகை; அவி=வேள்விகளில் தேவர்களுக்கு அளிக்கப்படும் ஆகுதி; வேள்விகள் செய்யப்பட வேண்டிய முறை மற்றும் அப்போது சொல்லவேண்டிய மந்திரங்கள் ஆகியவை வேதங்களில் காணப்படுகின்றன. காவியங்கண்ணாள் என்பது திருப்பயற்றூர் தலத்தில் உறையும் தேவியின் திருநாமம்.

ஆவியாய் அவியுமாகி அருக்கமாய்ப் பெருக்கமாகிப்

பாவியர் பாவம் தீர்க்கும் பரமனாய்ப் பிரமனாகிக்

காவியங் கண்ணளாகிக் கடல் வண்ணமாகி நின்ற

தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற்றூரனாரே

பல திருமுறை பாடல்களில் திருமாலைத் தனது உடலின் இடது பாகத்தில் பெருமான் ஏற்றுள்ள செய்தி காணப்படுகின்றது. மேலும் மாதொரு பாகனாக விளங்கும் பெருமானின் இடது பாகத்தில் தேவி உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இந்த இரண்டு நிலைகளையும் ஒருங்கே சிந்திக்கும் போது, நமக்கு திருமாலும் தேவியும் ஒன்றே என்ற நிலை புலப்படும். இந்த உண்மையைத் தான் அரி அலால் தேவி இல்லையென்று அப்பர் பிரான் உணர்த்துகின்ற பாடல் (4.40.5) திருவையாறு தலத்தின் மீது அருளிய பாடலாகும்..

எரி அலாது உருவம் இல்லை ஏறு அலாது ஏறல் இல்லை

கரி அலால் போர்வை இல்லை காண் தகு சோதியார்க்குப்

பிரிவிலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும்

அரி அலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

திருவையாறு தலத்தில் உள்ள நாயகி, அறம் வளர்த்த நாயகியின் தோற்றத்தைக் காண்பவர்க்கு இந்த நிலை புலப்படும் வண்ணம், அம்பிகை நான்கு கரங்களுடன், மேல் இரண்டு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியவளாய், வலது கீழ்க்கரம் அஞ்சேல் என்று அபயமுத்திரை காட்ட, இடது கீழ்க்கரம் தொடையின் மீது படிந்திருப்பதை நாம் காணலாம். விளமர் தலத்தில் உள்ள தேவியின் தோற்றமும் இவ்வாறே உள்ளது. மேலும் திருவையாறு தலத்தில் வெள்ளிக்கிழமை இரவுகளில் அம்பாள் சன்னதியில் இலக்குமி சிலை வந்து நிற்க தேவிக்கு தீபாராதனை நடைபெறும். இந்த நிகழ்ச்சி, இலக்குமி தேவி திருமாலை வந்து வணங்கும் அடிப்படையில் இருப்பதாக கருதப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியும் திருமாலும் தேவியும் வேறுவேறு அல்ல என்பதை உணர்த்துகின்றது.

திருமாலின் அம்சமாக பார்வதி தேவி விளங்குகின்றாள் என்று ஆதி சங்கரர் தனது சிவானந்த லஹரியின் எண்பத்திரண்டாவது பாடலில் கூறுகின்றார். திரிபுரத்து அரக்கர்களுடன் இறைவன் தொடுத்த போரினில் அம்பாகவும், தேரின் அச்சு முறிந்த நிலையில் இறைவன் அமரும் இடப வாகனமாகவும், பார்வதி தேவியாக உடலின் இடது பாகத்திலும், பன்றியாக திருவடியை காண முயற்சி செய்தவராகவும், மோகினி வடிவில் தோழியாகவும், பிரதொஷ கால நடனத்தில் மிருதங்கம் வாசிப்பவராகவும் இருந்த திருமால், தனது கண்ணினை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தார் என்று ஆதி சங்கரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

பாணத்வம் வ்ருஷபத்வம் அர்த்தவபுஷா பார்யாத்வம் ஆர்யாபதே

கோணித்வம் ஸஹிதா ம்ருதங்கவஹதா சேத்யாதி ரூபம் ததௌ

த்வத்பாதே நயனார்ப்பணஞ்ச க்ருத்வா த்வத் தேஹோ பாகோ ஹரி

பூஜ்யாத் பூஜ்யதரஸ் ஸ ஏவ ஹி ந சேத் கோ வா ததன்யோ திக

செய்=வயல்கள்: கை அருகே=கைக்கு எட்டும் உயரத்தில்; கானல்=காடு; பை=நச்சுப்பை; அழல் வாய்=நெருப்பினைப் போன்று கொடிய விடத்தினை கக்கும்; ஐவாய்=ஐந்து தலைகளை உடைய; பாம்பணையான்=பாம்பினைத் தனது தலையணையாகவும் படுக்கையாகவும் கொண்டுள்ள திருமால்; –பணைத்தோளி=மூங்கில் போன்று அழகிய தோள்களை உடைய தேவி; விண்டவர்= விட்டவர், பெருமான் மீது வைத்துள்ள பற்றினைத் தவிர்த்து மற்றைய பற்றுக்களை விட்டவர்; உள்கி=நினைத்து; மேலுலகம்=அனைத்திலும் உயர்ந்ததாக விளங்கும் வீடுபேறு; பாம்பணையான் என்ற சொல்லினை பணைத்தோளி என்ற சொல்லுடன் இணைத்துப் பொருள் கொண்டால், பெருமான் திருமாலையும் பிராட்டியையும் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ளார் என்ற பொருள் பட வருகின்றது. அப்போது உள்கி என்ற வினைச்சொல்லுக்கு அடியார்கள் என்ற எழுவாய் பொருந்துகின்றது.

பாம்பணையான் என்ற சொல்லுடன் உள்கி என்ற சொல்லினை இணைத்து, திருமால் பெருமானை நினைத்து உருகியதை குறிப்பிடுவதாகவும் விளக்கம் கூறுகின்றனர். பெருமானை தனது மனதிலே தியானித்து எப்போதும் அவரையே நினைத்துக் கொண்டு இருப்பதாகவும் அவரது மூச்சுக் காற்றின் அசைவுக்கு ஏற்ப பெருமான் நடனம் ஆடுவதாகவும், அந்த நடனமே அஜபா நடனம் என்று அழைக்கப்படுவதாகவும் திருவாரூர் தலபுராணம் கூறுகின்றது. சிதம்பரம் தலத்தில் பெருமானின் நடனக் காட்சியை வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் காண்பதற்கு காரணமாக இருந்ததும் பெருமானை தியானித்தவாறு திருமால் இருந்தது நமது நினைவுக்கு வருகின்றது. ஒரு நாள் பாற்கடலில் திருமாலைத் தாங்கிக் கொண்டிருந்த ஆதிசேஷன், திருமாலின் எடை சற்று அதிகரித்தது போன்று தோன்றவே, ஆதிசேஷன், திருமாலுடன் அதற்கான காரணம் கேட்டான். அதற்கு திருமால், முன்னர் தான் மோகினியாக பெருமானுடன் தாருகவனம் சென்றபோது, அங்கே அவர் ஆடிய நடனக் காட்சியை நினைவு கூர்ந்ததால், தனது உடல் மகிழ்ச்சியால் சற்று பெருத்ததாக கூறினார். அதனைக் கேட்ட ஆதிசேஷன் தானும் பெருமானின் நடனத்தைக் காண விருப்பம் கொண்டுள்ளதாக கூறவே, திருமால் ஆதிசேஷனை தில்லைச் சிதம்பரம் செல்லுமாறு ஆலோசனை கூறவே, பதஞ்சலியாக ஆதிசேஷன் சிதம்பரம் வந்தடைந்தார் என்பது தில்லையின் தலபுராண வரலாறு. மேற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்ச்சிகளும் திருமால் சிவபெருமானை நினைத்து தியானம் செய்து வந்தார் என்பதை உணர்த்துகின்றது. உள்கி என்ற சொல்லினை திருமாலுடன் பொருத்தி பொருள் கொண்டால், திருமால் போன்று பெருமான் மீது அன்பு வைத்து உருகும் அடியார்கள் என்று, அடியார்கள் பெருமான் மீது வைத்துள்ள அன்பின் தரத்தினை சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று தோன்றுகின்றது. இருவகையாக பொருள் கொண்டாலும் சுவையாக இருப்பதை நாம் உணரலாம்.

திருவெம்பாவை பதிகத்தின் எட்டாவது பாடலில் ஆழியான் அன்புடைமை என்று மணிவாசகர் திருமால் சிவபெருமான் பால் வைத்திருந்த அன்பு மிகவும் உயர்ந்த ஒப்புமைப் பொருளாக, சிறந்த அளவுகோலாக, கருதப் பட்ட தன்மையை குறிப்பிடுகின்றார். அனைவரும் ஒருங்கே சென்று நீராடுவதற்காக ஒரு தோழியை அழைத்துச் செல்ல அவளது இல்லத்தின் முன்னர் கூடிய தோழிகள், உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் தோழியைப் பார்த்து பரிகாசம் செய்வதாக அமைந்த பாடல். விழித்திருக்கும் போது, திருமால் பெருமானிடம் வைத்துள்ள அன்பு போன்றது எனது அன்பு என்று பெருமையாக பேசிய தோழியே, இப்போது படுக்கையின் மீது அன்பு கொண்டவளாக இன்னும் படுத்துக் கொண்டு இருக்கின்றாயே, இது தான் திருமால் பெருமான் பால் வைத்திருந்த அன்பின் நிலையா என்று பரிகாசமாக கேட்கின்றனர். குருகு=நாரை; ஏழில்=ஏழு துளைகளை உடைய இசைக் கருவி; கேழில்=ஈடு இணையற்ற; வாய்=வாயில்; ஆழியான்=ஆழியைத் தனது ஆயுதமாகக் கொண்ட திருமால்; ஏழை=உமையன்னை;

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ

வாழி ஈது என்ன உறக்கமோ வாய் திறவாய்

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ

ஊழி முதல்வானாய் நின்ற ஒருவனை

ஏழைப் பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்

பொழிப்புரை;

வயல்களின் அருகே உள்ள வாய்க்கால்களில் நீர்ப் பெருக்கு மிகவும் அதிகமாக பாய, அதனால் களிப்படைந்த செங்கயல் மீன்கள் உயரமாக துள்ளி குதிக்க, துள்ளிக் குதிக்கும் மீன்களின் அசைவினால் அதிர்ந்த சில மலர்கள் தேன் சிந்தவும், கைக்கு எட்டும் உயரத்தில் வாழை மரங்கள் முதிர்ந்த வாழைப்பழக் குலைகளை அளிக்க, காடெல்லாம் தேனின் மணமும் பழுத்த வாழைகளின் மணமும் கலந்து கமழ விளங்கும் காட்டுப்பள்ளி தலத்தில் பெருமான் உறைகின்றார். நச்சுப் பையின் அருகே நெருப்பு போன்று கொடிய விடத்தினை கக்கும் பற்களை உடைய ஐந்து தலைப் பாம்பினைத் தனது தலையணையாகவும் படுக்கையாகவும் வைத்துள்ள திருமாலையும், மூங்கில் போன்று அழகிய தோள்களை உடைய பார்வதி தேவியையும் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள சிவபெருமானை தியானித்து, இறைவன் மீது கொண்டுள்ள பற்றினை மற்றும் உடையவர்களாக, அந்த பற்றினைத் தவிர்த்து ஏனைய உலகப் பற்றுக்களை அறவே விலக்கிய அடியவர்கள், மறுமையில் முக்தி உலகினை அடைவார்கள்.

பதிகத்தின் இரண்டாவது பாடல் சிதைந்தது

பாடல் 3:

திரைகள் எல்லா மலரும் சுமந்து செழுமணி முத்தொடு பொன்

வரன்றிக்

கரைகள் எல்லாம் மணி சேர்ந்து உரிஞ்சிக் காவிரி கால் பொரு

காட்டுப்பள்ளி

உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார்

உலகில்

அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல்

அறுக்கலாமே

விளக்கம்:

தாங்கள் உலகப் பொருட்களின் மீதும் உலகத்திலுள்ள உயிர்கள் மீதும் வைத்துள்ள பற்றினைத் துறந்து, பெருமானை தியானிக்கும் அடியார்கள் மறுமையில் வீடுபேற்றினை அடைவார்கள் என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில் பெருமானுக்கு தொண்டு செய்யும் அடியார்கள் இம்மையில் துன்பம் ஏதுமின்றி வாழ்வார்கள் என்று கூறுகின்றார். தனது இடுப்பினில் கோவண ஆடையினையும் அதன் மேல் நாகத்தையும் கச்சாக அணிந்துள்ள பெருமானை செல்வர் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். உயர்ந்த செல்வமாகிய வீடுபேற்றினை அளிக்க வல்லவர் என்று முதல் பாடலில் குறிப்பிட்டு, அந்த வீடுபேற்றினை உடையவர் பெருமான் என்று உணர்த்தியதை நாம் கண்டோம். இந்த உயர்ந்த செல்வத்தை உடையவரை செல்வர் என்று அழைப்பது தானே பொருத்தம். திரைகள் என்று காவிரியின் வாய்க்காலில் உள்ள அலைகளை குறிப்பிடுகின்றார். வரன்றி=வாரிக்கொண்டு வந்து; உரிஞ்சி=உராய்ந்து கொண்டு; காவிரி கால்=காவிரி நதியின் வாய்க்கால்கள்

பொழிப்புரை;

தனது அலைக் கரங்களால் எல்லா வகையான மலர்களையும் சுமந்தும் செழுமையான மணிகள், முத்து, பொன் ஆகியவற்றை வாரிக்கொண்டு வந்து சேர்த்தும் இரு கரைகளையும் அழகாக உராய்ந்து கொண்டு வரும் காவிரி நதியின் வாய்க்கால்கள் வளம் சேர்க்கும் காட்டுப்பள்ளி தலத்தில் பெருமான் உறைகின்றான். வேதங்கள் புராணங்கள் முதலான உயர்வான நூல்களை நன்கு கற்றுணர்ந்து, அவை சொல்லும் கருத்துக்களை வாழ்க்கையில் பின்பற்றி உத்தமராக வாழும் அடியார்கள், தனது இடுப்பினில் பாம்பினை கச்சையாக இறுகக் கட்டிய செல்வராகிய சிவபெருமானுக்கு தொண்டராக வாழ்ந்து, சிவத் தொண்டுகளைப் புரிந்து, வாழ்வில் தாங்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் துன்பங்களையும் நீக்கிக்கொண்டு இன்பமாக வாழ்கின்றனர்.

பாடல் 4

தோலுடையான் வண்ணப் போர்வையினான் சுண்ண வெண்ணீறு

துதைந்து இலங்கு

நூலுடையான் இமையோர் பெருமான் நுண்ணறிவால் வழிபாடு

செய்யும்

காலுடையான் கரிதாய கண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி

மேலுடையான் இமையாத முக்கண் மின்னிடையாளொடும்

வேண்டினானே

விளக்கம்:

இமையோர் பெருமான்=இந்திரன்; விருத்திராசுரனைக் கொன்றதால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு, இந்திரன் பெருமானை வழிபட்டு பயன் அடைந்த தலபுராண வரலாறு இங்கே உணர்த்தப் படுகின்றது. கால்=திருவடிகள்; நுண்ணறிவு=சிவ ஞானம். தோல்=புலித்தோல், போர்வை=யானைத்தோல்; இமையோர் பெருமான் என்ற தொடர் தேவர்களுக்கு தலைவனாக சிவபெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடுவதாகவும் விளக்கம் கூறுகின்றனர். துதைந்து=செறிந்து, இங்கே மிகவும் அதிகமாக பூசிக்கொண்டு என்று இங்கே பொருள் கொள்ள வேண்டும். முந்தைய இரண்டு பாடல்களில் காட்டுப்பள்ளிப் பெருமானை நினைத்து உருகி வணங்கும் அடியார்கள் முக்தி நிலையை அடைவார்கள் என்றும், தங்களது துன்பங்களிலிருந்து விடுதலை அடைவார்கள் என்றும் உணர்த்திய சம்பந்தர், அவ்வாறு தனது அடியார்களுக்கு உதவும் பொருட்டே, தானாகவே விருப்பம் கொண்டு இந்த தலத்தில் உறைகின்றான் என்று கூறுகின்றார். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, நாமும் இந்த தலத்து இறைவனைப் பணிந்து வணங்கி பயனடையவேண்டும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை;

புலித்தோலை ஆடையாக உடுத்தியவனும், யானைத் தோலினை அழகிய போர்வையாக தனது உடல் மீது போர்த்துக் கொண்டவனும், வெண்மை நிறமுடைய திருநீறு மிகவும் அதிகமாக பூசப்பட்ட மார்பினில் பூணூல் பொலிந்து விளங்க தோற்றம் அளிப்பவனும், தேவர்களின் தலைவனாக விளங்குபவனும், பல அடியார்கள் சிவஞானம் கைவரப்பெற்று வணங்கிப் போற்றும் திருவடிகளை உடையவனும், தேவர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஆலகால விடத்தைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவனும் ஆகிய பெருமான், மிகுந்த விருப்பத்துடன் காட்டுப்பள்ளி தலத்தின் மீது அன்பு வைத்துள்ளான். இமையாத மூன்று கண்களை உடையவனாகிய பெருமான், மின்னல் போன்று மெலிந்த இடையினை உடைய பிராட்டியுடன், உறைவதை தானாகவே விரும்புகின்றான். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு நாம் இறைவனைப் பணிந்து வணங்கி, நாம் வாழ்க்கையில் உய்வினை அடைவோமாக.

பாடல் 5:

சலசல சந்து அகிலோடும் உந்திச் சந்தனமே கரை சார்த்தி எங்கும்

பலபல வாய்த் தலை ஆர்த்து மண்டிப் பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்

வாய்க்

கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளிச்

சொலவல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலன் வல்லான் கழல்

சொல்லுவோமே

விளக்கம்:

அடியார்களுக்கு பல விதத்திலும் நன்மை புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் காட்டுப்பள்ளி தலத்தில் இறைவன் வீற்றிருக்கின்றான் என்று நான்காவது பாடலில் நமக்கு உணர்த்திய சம்பந்தர் இந்த பாடலில், அதனை உணர்ந்துகொண்டு இறைவனின் திருப்பாதங்களைப் போற்றி புகழ வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். சந்து=சந்தனம்; பாங்கரின் வாய்=பக்கத்தில்;

பொழிப்புரை;

சலசல என்ற ஒலியுடன் சந்தனம் மற்றும் அகில் கட்டைகளைத் தள்ளிக் கொண்டு வரும் காவிரி நதி, சந்தனக் கட்டைகளை இரு கரையிலும் கொண்டு வந்து சேர்க்க, அதன் நீர்ப்பெருக்கு பல கால்வாய்களாக பிரிந்து ஆரவாரத்துடன் பாயும் வயல்களின் அருகே உள்ள திருக்கோயிலில், அதிரும் வீரக்கழல்கள் அணிந்தவனாக இருக்கும் பெருமான் மிகுந்த விருப்பத்துடன் உறைகின்றான். அந்த பெருமானின் புகழினை உணர்ந்து சொல்லும் வல்லமை படைத்த அடியார்கள் அவனைப் புகழ்ந்து ஏத்த நிற்பவனும், சூலத்தை தனது கையில் ஏந்தியவனும் ஆகிய பெருமானின் திருவடிகளின் பெருமையை நாமும் புகழ்ந்து சொல்வோமாக.

பாடல் 6:

தளை அவிழ் தண்ணிற நீல நெய்தல் தாமரை செங்கழு நீரும்

எல்லாம்

களை அவிழும் குழலார் கடியக் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளித்

துளை பயிலும் குழலி யாழ் முரலத் துன்னிய இன்னிசையால்

துதைந்த

அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல்

அறுக்கலாமே

விளக்கம்:

தளை=பூவின் இதழ்கள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி அரும்பாக கட்டுண்டு இருக்கும் நிலை; களை கடி=நறுமணம்;

பொழிப்புரை;

அரும்பாக ஒன்றுடன் ஒன்று நெருங்கி கட்டுண்ட நிலையிலிருந்து விடுபட்ட குளிர்ந்த நீலோற்பல மலர்களூம், நறுமணம் வீசும் நெய்தல் தாமரை மற்றும் செங்கழுநீர் மலர்களும் நெல்வயல்களில் களைகளாக விளங்க, அவற்றை பிடுங்கி எறியும் உழவப் பெண்மணிகள் தங்களது கூந்தல் அவிழ்ந்து தொங்குவதையும் பொருட்படுத்தாமல் தங்களது வேலையினைத் தொடர்ந்து செய்யும் வயல்கள் உடைய காட்டுப்பள்ளி தலம் பலராலும் விரும்பப்படுகின்றது. துளைகளின் வழியாக தொடர்ந்து காற்றினை செலுத்தி வாசிக்கப்படும் குழல் மற்றும் யாழ் இசைக்கருவிகள் இடைவிடாமல் இன்னிசை முழங்க, அந்த இன்னிசையில் தோய்ந்த வண்ணம், தனது இடுப்பினில் பாம்பினை கச்சையாக இறுகக் கட்டியவரும் சிறந்த செல்வரும் ஆகிய பெருமான் இந்த காட்டுப்பள்ளி தலத்தில் உறைகின்றார், அவரது தொண்டராக மாறி அவருக்கு திருப்பணிகள் செய்யும் அடியார்கள், தங்களது துயரங்களிலிருந்து விடுதலை அடைவார்கள்

பாடல் 7:

முடி கையினால் தொடும் மோட்டுழவர் முன்கைத் தருக்கைக்

கரும்பின் கட்டிக்

கடி கையினால் எறி காட்டுப்பள்ளி காதல் செய்தான் கரிதாய

கண்டன்

பொடி அணி மேனியினானை உள்கிப் போதொடு நீர் சுமந்து ஏத்தி

முன் நின்று

அடி கையினால் தொழவல்ல தொண்டர் அருவினையைத்

துறந்து ஆட்செய்வாரே

விளக்கம்:

முந்தைய பாடலில் உழவக்குடிப் பெண்கள் வயலில் களையெடுக்கும் காட்சியை நமது கண் முன்னே கொண்டு வந்த சம்பந்தர், இந்த பாடலில், தலத்தின் உழவர்கள் செய்யும் செயலை நமக்கு உணர்த்துகின்றார். முடி=நாற்றுமுடிகள்; மோட்டுழவர்=வலிமையான உடல் கொண்ட உழவர்கள்; மோடு என்பதற்கு பெருமை என்று பொருள் கொண்டு, பெருமை படைத்த உழவர்கள் என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற சிறப்பினைப் பெற்றது உழவுத் தொழில் அல்லவா. தருக்கு=தினவு; வலிமையான உடல் கொண்ட உழவர்களின் கைகள், வேலையேதும் செய்யாமல் இருந்தால் தினவெடுப்பதாக, உழவர் குல மக்கள் உழைப்பாளிகளாக திகழ்ந்த தன்மையை சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். கடி=உடைத்து; உடல் வலிமை உடைய உழவர்கள் என்று குறிப்பிடும், நாற்று முடிகளைத் தொடுவதாக இங்கே குறிப்பிடுகின்றார். வளர்ந்த நாற்றுகளை, நிலத்திலிருந்து எடுக்கும் போது, மிகவும் பக்குவமாக வேர் அறுபடாமல் எடுக்க வேண்டும். அதனை நன்கு உணர்ந்தவர்களாக உழவர்கள் விளங்கிய தன்மை, இங்கே கையினால் தொடும் என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. அருவினை= அருவமாக கண்ணுக்கு புலப்படாமல் உள்ள வினை. பொடியணி மேனியினானை உள்கி (மனம்) போதொடு நீர் சுமந்து (மெய்) ஏத்தி (மொழி) என்று மனம் மொழி மெய்யால் செய்யப்படும் வழிபாடு இங்கே உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை;

வயலில் விளைந்த நெல் நாற்றின் முடிகளைத் தங்களது கைகளால், நாதரின் வேர்கள் அறுபடாமல், பக்குவமாக எடுக்கும் உழவர்கள், உடல் வலிமை உடையவர்களாக விளங்குவதால் தங்களது மணிக்கட்டின் தினவை போக்கிக் கொள்வதற்காக வெல்லக் கட்டிகளை உடைத்து எறிபவர்களாகத் திகழும் காட்டுப்பள்ளி தலத்தினை மிகவும் விரும்பி, தனது உறைவிடமாக ஏற்றுக் கொண்ட பெருமான், கருமை நிறம் உடைய கழுத்தினை உடையவன் ஆவான். அத்தகைய பெருமானை, உடல் முழுவதும் திருநீற்றினைப் பூசிய பெருமானை, தியானித்து, அன்று அலர்ந்த பூக்களையும் நீரினையும் சுமந்தவர்களாய் அவனது சன்னதி சென்றடைந்து, அவனது திரு முன்பு நின்றவாறு அவனது திருவடிகளை தங்களது கையினால் தொழும் அடியார்கள், எளிதில் நீக்குதற்கு அரியதாகத் திகழும் வினைகள் நீங்கியவர்களாக அவனுக்கு ஆட்பட்டு அவனுக்கு பல திருத்தொண்டுகள் செய்வார்கள்.

பாடல் 8:

பிறையுடையான் பெரியோர்கள் பெம்மான் பெய் கழல் நாடொறும்

பேணி ஏத்த

மறையுடையான் மழுவாள் உடையான் வார்தரு மால் கடல்

நஞ்சம் உண்ட

கறையுடையான் கனலாடு கண்ணால் காமனைக் காய்ந்தவன்

காட்டுப்பள்ளிக்

குறையுடையான் குறட்பூதச் செல்வன் குரை கழலே கைகள்

கூப்பினோமே

விளக்கம்:

பதிகத்தின் ஆறாவது மற்றும் ஏழாவது பாடல்களில் காட்டுப்பள்ளி இறைவனுக்கு ஆட்பட்டு நமது துன்பங்களை போக்கிக் கொள்ளலாம் என்றும் நமது வினைகளை நீக்கிக் கொள்ளலாம் என்றும் அறிவுரை கூறும் சம்பந்தர், இறைவனுக்கு ஆட்பட விரும்பும் நாம் முதலில் என்ன செய்யவேண்டும் என்பதை இந்த பாடலில் கூறுகின்றார். பொதுவாக தனது பதிகங்களின் எட்டாவது பாடலில் இராவணின் கயிலாய நிகழ்ச்சியை குறிப்பிட்டு, அன்று வரை பல குற்றங்களைப் புரிந்தவனாக அரக்கன் இராவணன் இருந்த போதிலும், சாமகானம் பாடி இறைவனிடம் இறைஞ்சியபோது, அவனது குற்றங்களை பொருட்படுத்தாமல் அவனுக்கு பல அருள்கள் புரிந்தவர் பெருமான் என்று பெரும்பாலான பதிகங்களிலும் குறிப்பிட்டு, இந்நாள் வரை பல குற்றங்கள் புரிந்த நாம் பெருமானின் அருளினைப் பெறுவதற்கு தகுதியானவரா என்று தாழ்வு மனப்பான்மை கொண்டு தயக்கத்தினால் பெருமானை வழிபடாமல் நிற்கும் நிலையிகிருந்து மாறி, தயக்கம் ஏதும் கொள்ளாமல், இறைவனை வழிபட்டு பயனடையவேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் குறிப்பிடும் சம்பந்தர் அந்த பாணியிலிருந்து வழுவுவதை நாம் இந்த பதிகத்தில் உணரலாம். மற்ற இரண்டு குறிப்புகள், அண்ணாமலை சம்பவம் மற்றும் சமணர் குறித்த குறிப்புகள் ஆகியவை இந்த பதிகத்தின் பத்தாவது பாடலில் காணப்படுகின்றன. இவ்வாறு இராவணனைக் குறிப்பிடாமல், மற்ற இரண்டு நிகழ்சிகளைக் குறிப்பிடும் அரிய பதிகங்களில் இந்த பதிகம் ஒன்றாகும். பெம்மான்= பெருமைக்கு உரிய தலைவன்; வார்=நீண்ட; குரை கழல்=ஒலி எழுப்பும் பாதங்கள்; குறையுடையான் என்பதற்கு அடியார்கள் தங்களது நேர்த்திக் குறையினை நிறைவேற்றிக் கொள்வதற்காக வரும் தலம் காட்டுப்பள்ளி என்று உணர்த்துவதாக சிலர் விளக்கம் கூறுகின்றனர். குறை என்பதற்கு எஞ்சிய என்று பொருள் கொண்டு எக்காலத்திலும் அழியாமல் எஞ்சி நிற்கும் தன்மை படைத்த பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை;

பிறைச்சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டவனும், பெரியோர்களால் தங்களது தலைவன் என்று பெருமையுடன் கொண்டாடப் படுபவனும், பெரியோர்களால் நாள்தோறும் போற்றப்படும் வீரக்கழல்கள் பொருந்திய திருப்பாதங்களை உடையவனும், வேதங்களை அருளியவனும், மழுவாட் படையினை உடையவனும், திரிவிக்ரமனாக நீண்டு நெடிது உயர்ந்து மூவுலகினையும் தனது இரண்டு அடிகளால் அளந்த திருமால் பள்ளி கொள்கின்ற பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சினை உட்கொண்டு கழுத்தினில் தேக்கியதால், கருமை நிறம் பொருந்திய கழுத்தினை உடையவனும், தனது தவத்தைக் கலைக்க முயற்சி செய்தான் என்பதற்காக கோபம் கொண்டு நெருப்புப் பொறிகளை உமிழும் நெற்றிக் கண்ணினால் மன்மதனை எரித்தவனும், அன்பர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தனது குறையாக ஏற்றுக்கொண்டு அவற்றை தீர்ப்பவனும், குறுகிய கால்களை உடைய பூதகணங்களைத் தனது படையாகக் கொண்டவனும் ஆகிய இறைவன் காட்டுப்பள்ளி தலத்தில் உறைகின்றான். ஒலி எழுப்பும் கழல்களை அணிந்த அவனது திருப்பாதங்களை, நாம் கைகள் கூப்பி வணங்குவோமாக.

பாடல் 9:

செற்றவர் தம் அரணம் அவற்றைச் செவ்வழல் வாயெரி ஊட்டி நின்றும்

கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி

உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற

பெற்று அமரும் பெருமானை அல்லால் பேசுவது மற்றொர் பேச்சிலோமே

விளக்கம்:

இறைவனுக்கு ஆட்பட விரும்பும் நாம் முதலில் அவனது திருப்பாதங்களைத் தொழ வேண்டும் என்று வழி காட்டும் திருஞனசம்பந்தர், அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பாடலில் கூறுகின்றார். நமது பேச்சுகள் அனைத்தும் அவனைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்றும் அவனது புகழினை அல்லால் வேறு எதனையும் நாம் பேசாமல் இருக்க வேண்டும் என்பதையும் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் அங்கமாலை பதிகத்தின் பாடலை (4.9.5) நினைவூட்டுகின்றது.

வாயே வாழ்த்து கண்டாய் – மத

யானை உரி போர்த்துப்

பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை

வாயே வாழ்த்து கண்டாய்

பெருமானைப் பற்றி பேசுவதன்றி வேறு பேச்சு இல்லாதவர்களாக இருப்போம் என்று நமக்கு அறிவுரை கூறும் ஞானசம்பந்தர், இன்னும் ஒர் படி மேலே சென்று பெருமானின் புகழினைப் பேசாத நா நாவல்ல என்று கூறுவதை நாம் ஆமாத்தூர் பதிகத்தின் பாடலில் (2.44.7) காணலாம். யாவராலும் ஒழிக்கப்படாத வலிமை உடையவனாக திகழும் கூற்றுவனின் வலிமையை அடக்கி வீழ்த்தியவனும், மலைமகள் வேறு தான் வேறு என்றில்லாமல் இருவரும் ஒன்றே என்பதை மாதொருபாகன் வேடத்தின் மூலம் உலகினுக்கு உணர்த்தியவனும், என்றும் தணியாத தீயினில் நின்று ஆடுபவனும் ஆகிய இறைவன் என்று பெருமானின் சிறப்பினை சம்பந்தர் பேசுகின்றார்.

மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை

வேறாக நில்லாத வேடமே காட்டினான்

ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்

கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தில், அப்பர் பிரான், தான் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை, சிவபிரானை வாழ்த்தி துதிக்காமல் கழித்து விட்டதை நினைந்து மனம் வருந்துவதை நாம் உணரலாம். சிவபெருமானை அந்நாள் வரை நினைக்காது இருந்ததால் தனது மனம் அறியாமையில் மூழ்கி இருந்தது என்பதை உணர்த்தும் வகையில் மடநெஞ்சம் என்று அப்பர் இங்கே குறிப்பிடுகின்றார்.

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்

தாழ்த்த சென்னியும் தந்த தலைவனைச்

சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே

வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே

வன்பார்த்தன் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.86.4) சுந்தரர் பெருமானின் புகழினைப் பேசாதாரின் பேச்சுக்களை பேச்சாக மதியோம் என்று கூறுகின்றார். பெற்று=இடப வாகனம்; கோணாதார்=நேர் வழியில் நடப்பவர், நல்லொழுக்க நெறியிலிருந்து வழுவாமால் இருக்கும் மனிதர்கள்;

நெற்றிக்கண் உடையானை நீரேறும் திருமேனிக்

குற்றமில் குணத்தானைக் கோணாதார் மனத்தானைக்

பற்றிப் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்

பெற்று ஒன்று ஏறும் பெருமானைப் பேசாதார் பேச்சு என்னே

தில்லைத் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் (6.1) அனைத்துப் பாடல்களிலும், அப்பர் பிரான், பெரும்பற்றப் புலியூர் என்று அழைக்கப்படும் தில்லைச் சிதம்பரத்தில் உறையும் பெருமானைப் பற்றி பேசாத நாட்களை எல்லாம் தான் பிறவாத நாளாக கருதுவதாக கூறுகின்றார். இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்று முடிக்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். அரியான்= அரியவன், தங்களது முயற்சியால் அறிந்து விடலாம் என்று நினைப்பவர், அவர் எத்தைகைய தகுதி படைத்தவராயினும், அவர்களால் அறிய முடியாதவன் என்று பொருள். கல்விக்கு அதிபதியாக விளங்கும் பிரமனும், செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் திருமாலும், அன்னமாகப் பறந்தும், பன்றியாக ஆழ்ந்தும் முயற்சி செய்த போது அவர்களால் காணமுடியாத நிலையில் இருந்ததை நாம் இங்கே நினைவு கூரலாம். இறைவன் மீது நாம் வைத்துள்ள பக்தி, அன்பு என்ற கருவிகளால் மட்டும் தான் நாம் அவனை அறிய முடியும்.

அரியானை அந்தணர் தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை

அணுவை யார்க்கும்

தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள்

தம் கோனை மற்றைக்

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக்

குலவரையை கலந்து நின்ற

பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம்

பிறவா நாளே

அந்தணர்=தில்லை வாழ் அந்தணர்கள்; பரம்பரை பரம்பரையாக, தங்களை ஆடவல்லானின் திருப்பணியில் ஈடுபடுத்திக் கொண்ட அந்தணர்கள். கரி=சாட்சி; கரியான்=சாட்சியாக உள்ளவன்; கரியான்=திருமால் (மற்றொரு பொருள்); பிறவா நாள்=இறந்த நாள், வாழாத நாள் என்பதை மங்களகரமாக பிறவா நாள் என்று எதிர்மறையாக சொல்லுகின்றார். திருமாலும் பிரமனும் தேடியும் காணமுடியாத அரியவன், மிகவும் எளிமையான முறையில் அந்தணர்களின் சிந்தையில் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் பட்டுள்ளது, தேவர்களும் காணமுடியாத அரியவனாக உள்ள இறைவன் என்று நாம் மலைத்து விடாமல், அவனிடம் பக்தி கொண்டு அவனை வழிபட்டால் நமக்கு மிகவும் எளியவனாக மாறுவான் என்னும் கருத்து சொல்லப்படுவதால், இந்த பதிகம் அடியார்களால் மிகவும் விரும்பப் படுகின்றது என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். கனை கடல்=ஒலிக்கின்ற கடல். அளவிட முடியாத பெரிய உருவத்தினனாக இருக்கும் சிவபிரான், மிகவும் நுண்ணியனாகவும் உள்ளான் என்பதை அணுவை யார்க்கும் தெரியாத தத்துவன் என்ற தொடர் மூலம் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே என்ற திருவாசக சொற்றொடர் நமது நினைவுக்கு வருகின்றது.

செற்றவர்=பகைவர்; அரணம்=கோட்டை; உற்றவர்=மலபரிபாகம் அடைந்த அடியார்கள்; பெருமானை குறித்த ஞானம் ஒன்றே வீடுபேறு அடைவதற்கு உரிய வழி. எனவே அந்த ஞானத்தை அடைவதற்கு உயிர் விருப்பம் கொள்ள வேண்டும். இவ்வாறு ஞானவேட்கை உடையவர்க்கே ஞானம் பயன் தரும். உயிர் ஞானவேட்கை அடையாத வண்ணம், ஆணவமலம் தடுக்கின்றது. எனவே என்றும் அழியாது இருக்கும் ஆணவமலத்தின் வலிமையை குறைத்து, புலன்களின் விருப்பத்தில் நாட்டம் கொள்ளாது, உண்மையான மெய்ப்பொருள் குறித்து அறிந்து கொள்ள, உயிர்கள் தலைப்பட வேண்டும். ஆணவ மலத்தின் வலிமையை உயிர்கள் குறைப்பதற்கு உதவி செய்யும் பொருட்டு, இறைவன் கன்மம் மாயை ஆகியவற்றை உயிர்களுடன் கூட்டி, இன்ப துன்பங்களை நுகரச் செய்கின்றான். இவ்வாறு நுகரும் தருணத்தில் உயிர்கள் இருவினையொப்பு நிலையினை அடைந்து மேலும் வினைகள் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஆணவ மலத்தின் வலிமையை படிப்படியாக குறைத்து, அதன் வலிமையை மெலியச் செய்வதை மலபரிபாகம் என்று கூறுவார்கள். இவ்வாறு மலபரிபாகம் அடைந்த நிலையில் உயிர்கள் மெய்ஞானம் பெறுகின்ற தன்மையை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உணர்வு எய்தல்= மீண்டும் பிறவாமைக்கு அடிகோலும் வகையில் மெய்ஞானத்தை அறிந்து கொள்ள வாய்ப்பினை அளிக்கும் மானிடப் பிறப்பின் சிறப்பினை உணர்ந்து, அந்த நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவது.

பொழிப்புரை;

தேவர்களுக்கு பகைவர்களாக விளங்கிய முப்புரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளுக்கு சிவந்து கொழுந்து விட்டெரியும் நெருப்பினை ஊட்டி வீரச்செயல் புரிந்த பெருமான், கற்றவர்கள் தொழுது புகழும் வண்ணம் திகழும் பெருமான், காட்டுப்பள்ளி தலத்தின் மீது அதிகமான விருப்பம் கொண்டவராக, ஆங்கே வீற்றிருக்கின்றார். மலபரிபாக நிலையினை அடைந்து மெய்ஞானம் கைவரப் பெற்ற சான்றோர்கள், தேவர்களும் தொழுது புகழும் வண்ணம் விளங்கும் பெருமானை, இடபத்தினை வாகனமாகக் கொண்ட பெருமானின் புகழினை குறிப்பிடும் பேச்சுகளைத் தவிர்த்து மற்றைய பேச்சுகளை பேசுவதில்லை.

பாடல் 10:

ஒண் துவரார் துகிலாடை மெய் போர்த்து உச்சி கொளாமை உண்டே

உரைக்கும்

குண்டர்களோடு அரைக் கூறை இல்லார் கூறுவதாம் குணமல்ல

கண்டீர்

அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான் உறை காட்டுப்பள்ளி

வண்டமரும் மலர்க் கொன்றை மாலை வார்சடையான் கழல்

வாழ்த்துவோமே

விளக்கம்:

பெருமானை குறிப்பிடும் பேச்சுகளை அன்றி, மற்றைய பேச்சுகளை தவிர்ப்போம் என்று முந்தைய பாடலில் உணர்த்திய ஞானசம்பந்தருக்கு, பேச்சு என்று பொதுவாக கூறியதை தவறாக எடுத்துக் கொண்டு சமணர்களையும் புத்தர்களையும் பின்பற்றி அவர்கள் பெருமானை குறித்து பேசுவதைப் போன்று எவரும் பேசலாகாது என்ற நோக்கத்துடன், இந்த பாடலில் சமணர்களும் புத்தர்களும் பெருமானை குறிப்பிட்டு பேசுவன குணமற்றவை என்று விளக்கம் அளிக்கின்றார். துவர் ஆர் துகில்=காவி ஆடை, துவர் நிறத்து சாயத்தில் தோய்க்கப்பட்டஆடை; கொளாமை=வயிறு ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் அதிகமாக உணவு உட்கொண்டு; அரை=இடுப்பு; கூறை= ஆடை; அண்ட மறையவன்=உலகங்களைப் படைக்கும் பிரமன்; வார்சடை=நீண்ட சடை;

பொழிப்புரை;

ஒளிவீசும் வண்ணம் துவர்ச் சாயத்தில் தோய்க்கப்பட்ட துவராடையை, தங்களது உடலின் மீது போர்த்துக் கொண்டு, உச்சி வேளையில் தங்களது வயிறு ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உணவினை உட்கொண்டு பருத்த உடலுடன் காணப்படும் புத்தர்களும், தங்களது இடுப்பினில் ஆடை ஏதும் அணியாமல் திரியும் சமணர்களும் பேசும் பேச்சுகள் நல்ல குணமற்ற [பேச்சுகள்; அத்தகைய பேச்சுகளால் நற்பயன்கள் ஏதும் விளையா; எனவே அத்தகைய பேச்சுகளை கேட்பதையும் பேசுவதையும் தவிர்ப்பீர்களாக. உலகங்களை படைக்கும் ஆற்றல் கொண்ட மறையவனாகிய பிரமனும் திருமாலும் காணாத வண்ணம் நெடிய தீப்பிழம்பாக உயர்ந்து நின்றவனும், பிரமன் திருமால் உட்பட அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக திகழ்பவனும், நீண்ட சடையினை உடையவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை போற்றி வாழ்த்துவோமாக.

பாடல் 11:

பொன்னியல் தாமரை நீல நெய்தல் போதுகளால் பொலிவு எய்து

பொய்கைக்

கன்னியர் தாம்குடை காட்டுப்பள்ளிக் காதலனைக் கடற்காழியர்

கோன்

துன்னிய இன்னிசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல

தன்னிசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ்

தாங்குவாரே

விளக்கம்:

பொன்=செல்வம்; பொன்னியல்=செல்வத்திற்கு அதிபதியாக கருதப்படும் இலக்குமி தேவி; துன்னிய=செறிந்த, சூழப்பட்ட, இங்கே பொருந்திய என்று பொருள் கொள்ளவேண்டும். தன்னிசை= தன்னிச்சையாக பாடிய பாடல்; புகழ்=மறுமையில் வீடுபேறு அடைவதற்கு தகுதி உடையவராக இருக்கும் நிலை; இம்மைப் பயனும் மறுமைப் பயனும் குறிப்பிடப்படும் கடைக் காப்பு பதிகம். பொன்னியல் தாமரை நீல நெய்தல் பொலியும் பொய்கை என்று குறிப்பிட்டு, ஈசனின் சிவந்த திருமேனியையும் தேவியின் திருமேனியின் நிறத்தையும் சம்பந்தர் குறிப்பிடுவதாக விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் நமக்கு திருவெம்பாவை பதிகத்தின் பதின்மூன்றாவது பாடலை நினவு படுத்துகின்றது.

பைங்குவளை கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

தங்கள் மலம் கழுவார் வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எம் கோனும் போன்று இசைந்த

பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்து நம்

சங்கம் சிலம்ப சிலம்பு கலந்து ஆர்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

தங்களது விருப்பம் போன்று மணாளன் அமையவேண்டும் என்று பாவை நோன்பு நோற்கும் பெண்கள், ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்டு நீராடச் செல்கின்றனர். தாங்கள் நீராடவிருக்கும் பொய்கையினைக் கண்ட அவர்களுக்கு மாதொரு பாகனின் தோற்றம் தான் நினைவுக்கு வருகின்றது. கருநீல குவளை மலர்கள் பிராட்டியின் திருமேனியின் நிறத்தை ஒத்திருப்பதால், ஆங்கே காணப்படும் சிவந்த தாமரை மலர்களுடன் கூடி, பெருமானும் பிராட்டியும் ஒன்றாக இணைந்திருக்கும் கோலத்தை அவர்களுக்கு நினைவூட்டுகின்றது. வெண்மை நிறத்தில் உள்ள நீர்ப்பறவைகள் பிராட்டியின் கை வளையல்களையும் பின்னிக் கொண்டிருக்கும் பாம்புகள் பெருமானின் திருமேனியில் அணிகலனாக திகழும் பாம்புகளையும் நினைவுக்கு கொண்டுவர அந்த பொய்கையே அவர்களுக்கு சிவசக்தி சொரூபமாக தோன்றுகின்றது. மேலும் அங்கு வரும் சான்றோர்கள், பெருமானின் துணையோடு தங்களது மும்மலங்களைக் கழுவ வந்தவர்களாகவே அவர்களுக்கு தோன்றுகின்றனர். எனவே அந்த பொய்கையை அவர்கள் சிவமும் சக்தியும் இணைந்து இருக்கும் சன்னதியாக பாவித்து மகிழ்வதில் வியப்பு ஏதும் இல்லை.

பொழிப்புரை;

செல்வத்திற்கு அதிபதியாகத் திகழும் இலக்குமி தேவி உறையும் தாமரை மலர்கள், நீல மலர்கள், நெய்தல் மலர்கள் ஆகியவை பூத்து மிகவும் பொலிவுடன் விளங்கும் குளங்களில், கன்னிப் பெண்கள் குடைந்து ஆடி மகிழும் காட்டுப்பள்ளி தலத்தினை விரும்பி குடிகொண்டுள்ள இறைவனைக் குறிப்பிட்டு, கடலால் சூழப்பட்டுள்ள சீர்காழி தலத்தின் தலைவனாகிய, ஞானசம்பந்தன், இனிமையான இன்னிசையுடன் பொருந்தும் வண்ணம் முழு விருப்பத்துடன் தானாகவே பாடிய இந்த பத்து மாலைகளையும் தங்களது மனதினில் தரித்து பாடும் வல்லமை பெற்ற அடியார்கள், வீடுபேறு அடைவதற்கு தகுதி படைத்தவர் என்று இம்மையில் புகழப்படுவார்கள்.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் திருமாலையும் தேவியையும் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டுள்ள பெருமானை தியானம் செய்யும் அடியார்கள் என்றும், தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமானை திருமால் அன்புடன் தியானிப்பது போன்று பெருமானை தியானம் செய்யும் அடியார்கள் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளும் வகையில் நயத்துடன் உணர்த்தும் சம்பந்தர் அத்தகைய அடியார்கள் மறுமையில் வீடுபேற்றினை அடைவார்கள் என்று உணர்த்துகின்றார். மறுமையில் அடியார்கள் அடையும் பயனை முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், மூன்றாவது பாடலில் அத்தகைய அடியார்கள் இம்மையில் துன்பம் ஏதுமின்றி வாழ்வார்கள் என்று கூறுகின்றார். காட்டுப்பள்ளி தலத்தில் உறையும் பெருமானை வழிபடும் அடியார்கள் அடையும் பயனை முதல் பாடலிலும் மூன்றாவது பாடலிலும் குறிப்பிட்ட சம்பந்தர், பெருமான் தானாகவே இந்த காட்டுப்பள்ளி தலத்தில் விரும்பி உறைகின்றான் என்று குறிப்பிட்டு, பெருமான் அடியார்களுக்கு நன்மைகள் புரியும் நோக்கத்துடன் இங்கே உறைகின்றான் என்பதை நமக்கு பதிகத்தின் நான்காவது பாடலில் உணர்த்துகின்றார். பெருமான் காட்டுப்பள்ளி தலத்தில் உறையும் நோக்கத்தினை புரிந்து கொண்ட நாம், அவனது திருவடிகளின் பெருமையை புகழ்ந்து பேசுவோம் என்று ஐந்தாவது பாடலில் கூறுகின்றார். காட்டுப்பள்ளி காதலனுக்கு அடிமையாக மாறி ஆட்படும் அடியார்கள் தங்களது துயரங்களிலிருந்து விடுதலை அடைவார்கள் என்று பதிகத்தின் ஆறாவது பாடலில் கூறுகின்றார். மலரும் நீரும் சுமந்து கொண்டு சென்று இறைவனை வழிபட்டும் அடியார்கள் தங்களை பீடித்துள்ள அரிய வினைகள் நீங்கப் பெற்றவர்களாக இறைவனுக்கு ஆட்செய்வார்கள் என்று ஏழாவது பாடலில் கூறுகின்றார். பதிகத்தின் எட்டாவது பாடலில் ஒலிக்கும் கழல்கள் அணிந்த அவனது திருப்பாதங்களை நாம் கைகள் கூப்பி வணங்குவோம் என்று அறிவுரை கூறுகின்றார். ஒன்பதாவது பாடலில், பெருமானின் புகழினைப் பேசுவதன்றி வேறு எதனையும் பேசாதவர்களாக நாம் இருக்க வேண்டும் என்று கூறுகின்றார். பத்தாவது பாடலில், சமணர்கள் மற்றும் புத்தர்கள் பெருமானைக் குறித்து இழிவாகப் பேசும் பேச்சுகளை புறக்கணித்து விட்டு, பெருமானின் திருப்பாதங்களை புகழ்ந்து போற்றுவோம் என்று அறிவுரை கூறுகின்றார். கடைக்காப்புப் பாடலில், இந்த பதிகத்தை ஓதும் அடியார்கள் இம்மையில் புகழுடன் வாழ்ந்து மறுமையில் வீடுபேறு எய்துவார்கள் என்று சம்பந்தர் உணர்த்துகின்றார். பெருமானை எவ்வாறு போற்றி வணங்குவது என்பதை புரிந்துகொண்ட நாம், காட்டுப்பள்ளிக் காதலனைக் கண்டு பணிந்து வணங்கி, அவனது திருப்பாதங்களைத் தொழுதும், மலரும் நீரும் சுமந்து கொண்டு சென்று சமர்ப்பித்தும், அவனது பெருமைகளைப் பாடிப் புகழ்ந்தும் இம்மையில் புகழினை உடையவர்களாக வாழ்ந்து மறுமையில் வீடுபேறு அடைவதற்கு தகுதி உள்ளவர்களாக மாறுவோமாக.

திருமுல்லைவாயில், குருகாவூர் வெள்ளடை, மயேந்திரப்பள்ளி மற்றும் அருகிலுள்ள பல தலங்களுக்கு தனது மூன்றாவது தலயாத்திரையாக சென்ற திருஞானசம்பந்தர், சீர்காழி திரும்பிய சின்னாட்கள் கழித்து, எருக்கத்தம்புலியூரைச் சார்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியார் மதங்க சூளாமணியாரும் சீர்காழி வந்தடைந்தனர். அவர்கள் இருவரது வருகையை அறிந்த திருஞானசம்பந்தர், அவர்களை எதிர்கொண்டு வரவேற்றார். அவர்கள் இருவரும் ஞானசம்பந்தரைப் பணிந்து வணங்கினார்கள். அனைவருமாக கோயிலுக்கு செல்ல, ஞானசம்பந்தர் யாழ் இசைத்து பாடுமாறு அவர்களை இருவரையும் கேட்டுக் கொண்டார். யாழிசையுடன் பொருந்திய அவர்களது குரலின் இனிமையைக் கேட்டு ஞானசம்பந்தர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் சம்பந்தர் அவர்கள் இருவரும் தங்கியிருப்பதற்கு தனியிடம் அமைத்துக் கொடுத்து, அவர்களுக்கு சிறப்பான விருந்தையும் அளித்தார். ஞானசம்பந்தர் பாடிய பல பதிகங்களை ஆங்குள்ளவர் சொல்லக் கேட்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியாரும், சம்பந்தர் அருளிய பல பதிகங்களை யாழில் இசையமைத்துப் பாடினார்கள். மேலும், இனியும் சம்பந்தரை விட்டுப் பிரியாது அவருடனே அவர் செல்லும் பல தலங்களும் சென்று அவர் இயற்றும் பதிகங்களை யாழில் இசைத்துப் பாடும் பேற்றினை தங்களுக்கு அருள வேண்டும் என்றும் அவர்கள் வேண்டினார்கள். திருஞானசம்பந்தரும் அவர்களது வேண்டுகோளுக்கு இசைந்தார்; பாணரும் அனைத்தும் பெருமானின் திருவருள் என்று பெருமானைப் போற்றி வணங்கினார். அன்றைய நாள் முதல், திருநீலகண்ட யாழ்ப்பாணர் சம்பந்தரை விட்டு பிரியாமல் இருந்ததை நாம் பெரியபுராணத்திலிருந்து உணர்கின்றோம். மேலும், பாணர் குலத்தைச் சார்ந்தவர் என்பதை பொருட்படுத்தாமல், ஞானசம்பந்தர் அவருடன் பழகியதையும் பெரியபுராணம் நமக்கு உணர்த்துகின்றது. அவர்கள் இருவரும் அகலா நண்புடன் இருந்தனர் என்று சேக்கிழார் கூறும் பாடலை நாம் இங்கே காண்போம்.

மற்று அதற்குப் பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருளப்

பெற்றவர் தாம் தம்பிரான் அருள் இதுவே எனப் பேணிச்

சொற்றமிழ் மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே

அற்றை நாள் போல் என்றும் அகலா நண்புடன் அமர்ந்தார்

Tag :

#thirugnanasambandhar thevaram
#Cheyyaruge Punal
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

செய்யருகே புனல் பாய


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: