Go Back

22/03/21

பூவார் கொன்றை - முடிவுரை:


பூவார் கொன்றை - முடிவுரை


தோடுடைய, நறவநிறை வண்டு, என்று தொடங்கும் இரண்டு பதிகங்கள் மற்றும் இந்த பதிகத்தில் காணப்படும் முதல் பத்து பாடல்களில் பெருமானின் பெருமை உணர்த்தப் படுகின்றது, தேவர்கள் காவாய் என்று இறைவனை வேண்டிப் புகழ அவர் திரிபுரத்து அரக்கர்களை அழித்து அவர்களுக்கு அருள் புரிந்தார் என்று பதிகத்தின் முதல் பாடலிலும், எமது தந்தையே என்று தன்னிடம் சரணடைந்த வானோர்களை காக்கும் பொருட்டு ஆலகால விடத்தை உண்ட பெருமான் ஒரு மாலை நேரத்தில் நடனம் ஆடினார் என்று இரண்டாவது பாடலிலும், நமது மனதினை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு உதவும் பெருமான் என்று மூன்றாவது பாடலிலும், தனது அடியவன் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த இயமனை காலால் உதைத்து வீழ்த்தி சிறுவனுக்கு அருள் புரிந்தவர் என்று நான்காவது பாடலிலும் பறக்கும் திரிபுரத்து கோட்டைகளை எரித்தவர் என்று ஐந்தாவது பாடலிலும், பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றவர் என்று ஆறாவது பாடலிலும், சுடுகாட்டினில் நடனம் ஆடுவதன் மூலம் தான் ஒருவனே என்றும் நிலையானவன் என்பதை உலகுக்கு உணர்த்துபவன் என்று ஏழாவது பாடலிலும், இசைப் பாடலுக்கு இரங்கி அருள் புரியும் தன்மையாளன் என்று எட்டாவது பாடலிலும், உயிர்கள் தங்களது ஆற்றலால் அவனை அறிந்து கொள்ள முடியாது என்றாலும் அவனது கருணையின் துணையோடு அவனை நாம் அறிந்து கொள்ளலாம் என்று ஒன்பதாவது பாடலிலும், நான்கு வேதங்களிலும் நிறைந்துள்ள பெருமான் என்று பத்தாவது பாடலிலும் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

பாடல்களில் பெருமானைத் தொழுவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் எங்கும் நேரிடையாக குறிப்பிடப்படவில்லை. எனினும் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் தன்மைகள் விளைவாக பல அடியார்கள் அடைந்த நன்மைகளை நாம் புரிந்து கொள்ளலாம். பதிகத்தின் கடைப்பாடலில், இந்த பதிகத்தினை சொல்லி பெருமானைத் தொழும் அடியார்கள் பெறுகின்ற பயன் கூறப்பட்டுள்ளது. பெருமானின் பெருமையை தன்மையை உணரும் மாந்தர்கள், எவரும் சொல்லாமலே, பெருமானைத் தொழுது பயன் அடைவார்கள் என்பது சம்பந்தரின் திருவுள்ளக் கருத்து போலும். நாம் அவரது திருவுள்ளக் கருத்தினை புரிந்து கொண்டு, பெருமானைத் தொழுது பயன் அடைவோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#poovar konrai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

பூவார் கொன்றை - முடிவுரை:


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: