Go Back
22/03/21
பூவார் கொன்றை - பாடல் 9
பூவார் கொன்றை - பாடல் 9
ஆற்றல் உடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றிக் காழியார்
ஏற்றம் ஏறு அங்கு ஏறும் அவர் போலாம்
கூற்றம் மறுகக் குமைத்த குழகரே
விளக்கம்:
இந்த பாடலில் திருமாலையும் பிரமனையும் ஆற்றல் உடையவர்கள் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். திருமாலின் வலிமை அனைவரும் அறிந்ததே. நெடிய உருவம் கொண்ட திருவிக்ரமனாக அவதாரம் எடுத்து, இரண்டு அடிகளால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் அளந்த வல்லமை படைத்தவர் திருமால்; மேலும் வராகமாக அவதாரம் எடுத்து கடலின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பூமியையும் மீட்டெடுத்த வல்லமை படைத்தவர் திருமால். இத்தகைய வல்லமை படைத்த திருமால் பன்றியாக ஊடுருவி நீண்ட தூரம் சென்ற போதிலும், அவரால் பெருமானின் திருவடியை காண முடியவில்லை. எப்போதும் வேதங்களைப் படித்தவாறு படைத்தல் தொழிலில் எடுபடும் பிரமனும் ஆற்றல் மிக்கவர். எனினும் அவராலும் பெருமானின் திருமுடியைக் காண முடியவில்லை. எனவே ஆற்றல் மட்டும் எந்த விதத்திலும் இறைவனைக் காண்பதற்கும் உணர்வதற்கும் உதவாது; இறைவனின் அருளும் வேண்டும். இந்த கருத்தினை மிகவும் அழகாக அப்பர் பிரான், இறைவனின் அருளே கண்ணாகக் காணின் அல்லால், அவனது திருவுருவத்தை நாம் அறிய முடியாது என்று கூறும் பாடலையும் நாம் இங்கே காண்போம். மேலும், அவனுக்கு ஒப்பாக சொல்வதற்கு எவரும் இல்லை, அவன் ஓரூரில் உறைபவன் அல்லன்: அவனது உருவத்திற்கு உவமை ஏதும் இல்லை: எனவே இறைவனின் நிறம் இன்னது, அவனுக்கு உவமையாக இந்த பொருட்கள் உள்ளன என்று எவராலும் சொல்ல முடியாது என்ற கருத்தை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடல் (6.97.10) இது
மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான்
வார்சடையான் என்னின் அல்லால்
ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன் ஓர்
உவமனில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே
கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன்
என்றெழுதிக் காட்ட ஒணாதே
பொழிப்புரை:
மிகுந்த ஆற்றல் உடைய திருமாலும் பிரமனும் காண முடியாத வண்ணம் நீண்ட அழலாக நின்ற பெருமானின் தன்மை, அவர்கள் இருவரது ஆற்றலையும் வெற்றி கொண்டது. சிறப்பு மிக்கதாக கருதப்படும் இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளவனும், சீர்காழி நகரத்தில் உறைபவனும் ஆகிய இறைவன், கூற்றுவனையும் வெற்றி கொண்டு, சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் காப்பாற்றியவர்; அவர் அழகும் இளமையும் ஒருங்கே கொண்டவர் ஆவார்.
Tag :
#thirugnanasambandhar thevaram
#poovar konrai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram
Written by:
என். வெங்கடேஸ்வரன்