Go Back

05/12/20

தோடுடைய செவியன் - பாடல் 3


தோடுடைய செவியன் - பாடல் 3


நீர் பரந்த நிமிர் புன்சடை மேல் ஓர் நிலா வெண்மதி சூடி

ஏர் பரந்த இன வெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்

ஊர் பரந்த உலகின் முதலாகிய ஓர் ஊர் இது என்னப்

பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

விளக்கம்:

நீர்=கங்கை நதி; ஏர்=அழகு; இன=நல்ல இனத்தைத் சார்ந்த; வெள்வளை=வெண்மை நிறம் உடைய வெண்முத்து வளையல்; நிமிர்=நிமிர்ந்த; புன்சடை=பொன்னின் நிறத்தில், அதாவது செம்பட்டை நிறத்தில் அமைந்த சடை; ஒர் நிலா வெண்மதி=பிறைகள் அனைத்தும் அழிந்து ஒற்றைப் பிறையுடன் சரணடைந்த சந்திரன்; சோர=நழுவ; பிரளய காலத்திலும் அழியாமல் இருந்தமையால், மற்ற ஊர்களுக்கு முந்திய தலமாக, முதலாகிய தலமாக கருதப் படுகின்றது.

தன்னை நாயகியாக பாவித்துக் கொண்டு சம்பந்தப் பெருமான் அருளிய அகத்துறைப் பதிகம்; தனது உள்ளத்தைக் கவர்ந்த காதலன் பெருமான் என்று பதிகம் முழுவதும் சொல்வதை நாம் உணரலாம். பெருமானை அடைய வேண்டும் என்ற ஏக்கத்தினால் தனது உடல் மெலிய, உடல் மெலிந்ததால் வளையல்கள் கைகளில் நில்லாமல் கழன்று விழுந்தமைக்கு காரணமாகிய பெருமானை, வளையல் கவர்ந்த கள்வன் என்று கூறுகின்றார். தனது தலைவனைக் கூடாத ஏக்கத்தில், தங்களது வளையல் கழலும் தன்மையில் இருப்பதை பெண்கள் உணர்த்துவதையும், அதற்கு காரணமாக இருந்த தலைவனை குற்றம் சாட்டுவதையும் நாம் சங்க இலக்கியங்களில் வெகுவாக காணலாம். ஊழிக் காலத்திலும் அழியாத நின்ற தன்மையால் இந்த தலத்திற்கு தோணிபுரம் என்ற பெயர் வந்ததை, பேர் பரந்த என்ற தொடர் மூலம் சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். பேர் என்பதற்கு புகழ் என்று பொருள் கொண்டு, சீர்காழியின் புகழ் உலகெங்கும் பரந்து நின்றமை குறிப்பிடப் பட்டுள்ளது என்றும் பொருள் கொள்ளலாம்.

பொழிப்புரை:

கங்கை நீர் பரந்ததும் செம்பட்டை நிறத்தில் அமைந்ததும் நிமிர்ந்து நிற்பதும் ஆகிய தனது சடையின் மேல், தக்கனது சாபத்தினால் முற்றிலும் அழிந்த நிலையில் ஒற்றைப் பிறையுடன் தன்னைச் சரணடைந்த சந்திரனை, வெண்மை நிறத்தில் உள்ள பிறைச் சந்திரனை சூடிக் கொண்டவர் பெருமான். அவரது அழகினில் பெருமையில் நான் மயங்கி அவர் மீது காதல் கொண்டேன். நான் அவர் மீது கொண்டுள்ள காதலின் தீவிரத்தால், அவரைப் பிரிந்து நிற்பதை தாங்கமுடியாத ஏக்கத்தில் எனது உடல் மெலிய எனது கையில் இருந்த வளையல்கள் நழுவி விட்டன; அவர் எனது உள்ளத்தையும் கவர்ந்து விட்டார். இத்தகைய தன்மைகள் கொண்டுள்ள பெருமான், பிரளய காலத்திலும் அழியாமல் நின்றமையால் பரந்த உலகத்தின் முதலாவது ஊராக கருதப்படும் பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் உறைகின்ற பெருமான் ஆவார். அவரே எனது பெருமைக்கு உரிய தலைவன்.

Tag :

#thirugnanasambandhar thevaram thiruppiramapuram
#Thodudaya seviyan
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
தோடுடைய செவியன் - பாடல் 3


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: