Go Back

05/12/20

தோடுடைய செவியன் - பாடல் 1


தோடுடைய செவியன் - பாடல் 1



தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்

காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த

பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

விளக்கம்:

பிறக்கும் உயிர்கள் முதலில் அன்னையை உணர்ந்து பின்னரே, அன்னையால் சுட்டிக் காட்டப்பெறும் தந்தையை உணருகின்றன என்பதால் அன்னையை உணர்த்தும் சொல்லாக தோடு என்பதை முதலில் வைத்து, அத்தனை உணர்த்தும் சொல்லாகிய செவியன் என்பதை அடுத்து வைத்துள்ள பாங்கு ரசிக்கத்தக்கது. ஆகாயத்திலிருந்து எழும் நாதமே, மற்ற பூதங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருப்பதால் அந்த நாதத்தினை உள்வாங்கும் செவி முதலில் கூறப்பட்டுள்ளது. நமது உடலின் உறுப்புகளில், ஓம் என்ற எழுத்தினை உணர்த்தும் வடிவத்துடன் இருப்பது செவி என்பதால் செவி முதலாக கூறப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கின்றனர். நமது அகமும் புறமும் தூய்மையாக இருத்தல் அவசியம் என்பதை உணர்த்தும் வண்ணம் தூவெண் என்று கூறப்படுகின்றது. மேலும் தோடு என்ற அணிகலன் மங்கலத்தை குறிக்கும். எந்த பாடலையும் மங்கலச் சொல்லுடன் தொடங்குவது நமது முன்னோர்களின் வழக்கம்.

இந்த பாடலில் உணர்த்தப்படும் பொருட்கள், தோடு இடபம் வெண்மதி சுடலைப்பொடி, ஆகிய அனைத்தும் வெண்மை நிறம் படித்தவை. பிராட்டி பிள்ளையாருக்கு ஊட்டிய பாலும் வெண்மை நிறம் உடையது. மேலும் பாலுடன் கலந்து கொடுக்கப்பட்ட ஞானமும் வெண்மை நிறம் வாய்ந்தது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அறியாமையை இருளுக்கும் ஞானத்தை வெண்மைக்கும் ஒப்பிடுவது வழக்கம். வெண்மை நிறம் கொண்ட பாலினையும் வெண்மை நிறத்தால் உணர்த்தப்படும் ஞானத்தையும் உமையம்மை வாயிலாக பெற்ற சம்பந்தர்க்கு வெண்மை நிறப் பொருட்களே முதலில் அவரது கண்களில் பட்டது போலும். பெருமானின் அடையாளங்களாக, பாம்பு. ஏனக்கொம்பு, பெண் கலந்த உருவம், கங்கை நதி, ஆமை ஓடு, கோவண ஆடை, கங்கணம், செஞ்சடை, சிவந்த திருமேனி முதலியவை இருக்க, வெண்மையான நிறத்தில் உள்ள பொருட்களை மட்டும் தேர்ந்து எடுத்தது இந்த பாடலின் தனிச் சிறப்பு.

குணங்கள் பலவகையாக கூறப்பட்டாலும், அவை அனைத்தும் இராஜசம் தாமசம் சத்வம் என்ற மூன்றுள்ளே அடங்கும் என்று கூறுவார்கள். இவைகளை செம்மை, கருமை மற்றும் வெண்மை நிறத்தினால் குறிப்பிடுவது வழக்கம். வெண்மை நிறம் கொண்ட பால் ஊட்டப்பட்ட, சத்வ குணம் நிறைந்த குழந்தை வெண்மை நிறப் பொருட்களை முதலில் அடையாளமாக கண்டு கொண்டது இயல்பு தானே.

மேலே குறிப்பிட்டுள்ள பாடலில் முதல் அடியில் பத்து சொற்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது அடிகளில் ஒன்பது சொற்களும் நான்காவது அடியில் எட்டு சொற்களுமாக மொத்தம் முப்பத்தாறு சொற்கள் உள்ளதை நாம் உணரலாம். இந்த முப்பத்தாறு என்ற எண்ணிக்கை சைவ சமயத்திற்கே உரித்தான முப்பத்தாறு தத்துவங்களை குறிக்கும் என்றும் விளக்கம் கூறுவார்கள்.

செவி என்பதன் மூலம் அடியார்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வண்ணம் அவர்களது வேண்டுகோளை ஏற்கும் பேரருள் தன்மை உணர்த்தப் படுகின்றது. விடையினை வாகனமாக கொண்டுள்ள தன்மை, தன்வயத்தனாக இறைவன் இருக்கும் தன்மையை உணர்த்துகின்றது. தூவெண்மதி என்ற தொடரில் உள்ள தூ என்ற சொல் இறைவன் தூய உடம்பினனாக இருத்தலை உணர்த்துகின்றது மதி என்பதற்கு அறிவு என்ற பொருளும் பொருந்தும் என்பதால் மதி சூடி என்ற தொடர், இறைவனின் முற்றும் உணர்ந்தறியும் ஆற்றலை குறிப்பிடுகின்றது. பொடிபூசி என்ற தொடர் இறைவனின் வரம்பிலா இன்பமுடையவன் என்பதையும், உள்ளம் கவர் கள்வன் என்ற தொடர் இறைவன் இயற்கை உணர்வு உடையவனாக இருத்தலையும் இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவனாக இருத்தலையும் குறிக்கின்றது என்றும் பெரியோர்கள் கூறுவார்கள் இவ்வாறு பெருமானின் எண்குணங்களை உணர்த்தும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.

தருமதேவதை என்றும் அழியாது இருக்கும் நித்தியத்தன்மை வேண்டியதால், அதனை இடபமாக மாற்றி பெருமான் தனது வாகனமாக ஏற்றுக்கொண்டார் என்று கூறுவார்கள். எனவே இந்த செயல் பெருமானின் படைக்கும் தொழிலை உணர்த்துகின்றது; வெண்மதி சூடி என்று சந்திரனை அழியாமல் காத்த செய்கை, பெருமான் செய்யும் காக்கும் தொழிலை உணர்த்துகின்றது; சுடலைப் பொடி என்ற சாம்பல் பெருமானின் அழித்தல் தொழிலை குறிக்கின்றது. கள்வன், தான் திருடிய பொருளை வைத்திருப்பதை எவரேனும் பார்த்து விட்டதால் தான் அகப்பட்டு விடுவோம் என்று கருதி தான் திருடிய பொருளை முதலில் மறைத்து வைப்பான் என்பதால் உள்ளம் கவர் கள்வன் என்ற குறிப்பு மறைத்தல் தொழிலையும், பிரமனுக்கு அருள் செய்த தன்மை அருளும் தொழிலையும் குறிக்கின்றது என்று உணர்த்தி, பரமன் செய்யும் ஐந்து விதமான தொழில்களையும் சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் கூறுவார்கள். விடையேறி மதிசூடி என்ற தொடர்கள் இறைவன் உருவமாக இருக்கும் நிலையையும், பொடிபூசி என்பது தனது திருமேனியை மறைத்துக் கொள்வது பற்றி அருவுருமாக இருக்கும் தன்மையையும், கள்வன் மறைந்து நிற்பான் என்பதால் கள்வன் என்ற சொல் அருவமாக இருக்கும் தன்மையையும் குறிக்கின்றது என்று விளக்கம் கூறுகின்றனர்.

மணிவாசகர், திருவெம்பாவையின் கடைசிப் பாடலில் இறைவனது ஐந்து தொழில்களைக் குறிப்பிடுவதை காணலாம். அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு காரணமாக இருந்த பாதங்கள் என்று படைத்தல் தொழிலையும், அனைத்து உயிர்களையும் காக்கும் பூங்கழல்கள் என்று காத்தல் தொழிலையும், ஈறாம் இணையடிகள் என்று அழித்தல் தொழிலையும், நான்முகனும் மாலும் காணாத புண்டரீகம் என்றும் மறைத்தல் தொழிலையும், இறுதியாக யாம் உய்ய ஆட்கொண்டருளிய பொன்மலர்கள் என்று அருளுவதையும் குறிப்பிடுகின்றார். மேலும் எண்குணத்தவனான ஈசனுக்கு எட்டு முறை போற்றுதல்கள் கூறி வாழ்த்துவதையும், எட்டு மலர்கள் பிடித்த ஈசனுக்கு எட்டு போற்றி கூறி வழிபட்டதையும் நாம் உணரலாம்.

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழி நீராடலோர் எம்பாவாய்

இந்த விளக்கத்தில் பாடலின் பொருளினை நாம் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக சொற்கள் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பிரிக்கப்படாமல், சீர்கள் அமைந்துள்ள முறையில் பாடலை நாம் பார்த்தால், வேறு சில குறிப்புகள் உணர்த்தப்படுவதையும் நாம் காணலாம். இந்த பாடல் நான்கு அடிகளைக் கொண்டதாய் பெருமானை அடையும் சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு வழிகளையும் அதன் பயன்களை குறிப்பிடுகின்றது என்றும், ஒவ்வொரு அடியிலும் அமைந்துள்ள ஐந்து சீர்கள் ஐந்தொழிலையும், ஐந்தெழுத்தையும், ஐந்து மலங்களையும் (ஆணவம், கன்மம்,. மாயை, மாயேயம் மற்றும் திரோதனாம்) ஐந்து காரணக் கடவுளர்களையும் (பிரமன் திருமால் உருத்திரன் மகேசன் மற்றும் சதாசிவன்) குறிப்பதாக கூறுவார்கள். ஒவ்வொரு அடியிலும் மெய்யெழுத்து நீங்கலாக பதினெட்டு எழுத்துகள் இருக்கும் தன்மை பதினெண் வித்தைகளின் இயல்பையும் குறிப்பதாக கூறுவார்கள்.

தோடுடை யசெவியன்விடை யேறியோர் தூவெண் மதிசூடி

காடுடை யசுடலைப்பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன்

ஏடுடை யமலரான்முனை நாட்பணிந் தேத்த வருள்செய்த

பீடுடை யபிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே

தோடு விடை என்பன அஃறிணை; செவியன் என்பது உயர்திணை; எந்த தினையினைச் சார்ந்த உயிராக இருந்தாலும் இறைவனைப் பணிந்து வாழ்த்தி போற்றினால், அவனது அருள் கிடைக்கும் என்ற கருத்தும் இங்கே மொழியப்படுகின்றது. தோடு என்பதன் மூலம் பெண்மை உருவத்தையும் செவியன் என்பதன் மூலம் ஆண்மை உருவத்தையும் குறிப்பிட்டு மாதொரு பாகனாக இறைவன் உள்ள தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு இன்னும் பல விதமான விளக்கங்கள் பெரியோர்களால் அருளப்படும் வண்ணம் சிறந்த தன்மையில் அமைந்த பாடல் முதல் திருமுறையின் முதல் பாடலாக அமைந்த விதம், திருமுறைகளின் சிறப்புகளை உணர்த்துகின்றது என்று கூறுவார்கள். சுடலை= சுடுகாடு, சுடலைப்பொடி=சுடுகாட்டு சம்பல்; முற்றூழிக் காலத்தில் அனைத்துப் பொருட்களும் அனைத்து உயிர்களும் அழிந்த நிலையிலும், அழிவின்றி நிலையாக நிற்பவன் தான் ஒருவனே என்பதை உணர்த்தும் வண்ணம் பெருமான் சுடலைப்பொடி பூசி நிற்கின்றார் என்று கூறுவார்கள். ஏடுடைய மலர்=அடுக்காக இதழ்கள் அமைந்த தாமரை மலர்; பீடு=பெருமை; மேவிய=பொருந்திய; பண்டைய நாளில், படைப்புத் தொழிலை தான் சரிவர ஆற்றுவதற்கு இறைவன் அருளினை வேண்டி பிரமன் தவம் செயதமையால், இந்த தலத்திற்கு பிரமபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. பிரமபுரம் என்பது சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் முதலாவது திருப்பெயர். அந்த பெயரினை வைத்து முதல் பதிகம் பாடியதும் இந்த பதிகத்தின் மற்றொரு சிறப்பாகும்.

பொழிப்புரை:

ஒரு காதினில் தோட்டினையும் மற்றொரு காதினில் குழை ஆபரணத்தையும் அணிந்த பெருமான், இடபத்தை தனது வாகனமாகக் கொண்டும், தன்னிடம் சரணடைந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்ற வண்ணம், சுடுக்காட்டுச் சாம்பலினைத் தனது திருமேனி முழுதும் பூசியவராய் உள்ளார். அவர் எனது உள்ளத்தை கொள்ளை கொண்ட கள்வனாக விளங்குகின்றார்; இதழ்கள் அடுக்கடுக்காக அமைந்தள்ள தாமரை மலர் மேல் அமரும் பிரமன், பண்டைய நாளில் பெருமானைப் பணிந்து ஏத்த, பிரமன் தனது படைப்புத் தொழிலினை சரிவர செய்யும் வண்ணம் அருள் புரிந்தவர் சிவபெருமான்; இவரே பெருமை உடையதும் பிரமாபுரம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழி நகரினில் உறைபவரும் எனது பெருமை மிக்க தலைவனாகவும் இருக்கின்றார்.

Tag :

#thirugnanasambandhar thevaram thiruppiramapuram
#Thodudaya seviyan
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
தோடுடைய செவியன் - பாடல் 1


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: